மார்ச் 30, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு  முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள்

 

kalyan2

தொல்காப்பியம்நச்சினார்கினியர் உரையின், பொருளதிகாரம்: அகத்திணையியல் (பாகம் 1) யும், பொருளதிகாரம்: புறத்திணையியல் (பாகம் 2) யும் மார்ச் 27, 2015 அன்று 500 வது தமிழிலக்கிய மின்னூலாக வெளியிட்டு மிகவும் பாராட்டத்தக்க எல்லையை எட்டியுள்ளது இணையத்தின் “மதுரைத்திட்டம்” (Project Madurai). இந்த மின்னாக்கப் பணியைத் துவக்கி, வழிநடத்தி, இந்த சாதனை எல்லையைத் தொட்டவர் முனைவர் கு. கல்யாணசுந்தரம் அவர்கள். அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக்குழுவினர் பெருமை அடைகிறோம்.

projectmadurai

முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள், “மதுரைத் திட்டம்” என்னும் பெயரில் இணையத்தில் தமிழ் இலக்கியங்களையும் இலக்கண நூல்களையும் மின்னிமப்படுத்தி , அவற்றை மின்நூல்களாக மாற்றி உலகத்தமிழினம் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் விலையின்றி வழங்கும் நோக்கில் மின்னாக்கப்பணியைத் துவக்கி, கடந்த 17 ஆண்டுகளாக தன்னையொத்த பலநூறு தமிழார்வலர்களையும் இப்பணியில் பங்கு பெறச் செய்து வழிநடத்தியும் வருகிறார். மதுரைத் திட்டம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியின்றி, வணிக நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ முயற்சி. 1998-ம் ஆண்டு பொங்கல் அன்று தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் சற்றேறக்குறைய 400 தமிழார்வலர்கள் இந்நாட்களில் பங்கு பெறுகிறார்கள். காப்புரிமை சிக்கலில்லாத நூல்களை தட்டச்சுவது ஒரு சிலர், மெய்ப்புப் பார்ப்பவர் மற்றும் சிலர், இணையத்தில் மின்னூலாக வெளியிட உதவுபவர் வேறு சிலர் என பலர் வெவ்வேறு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்தபடியே, தங்கள் கணினி மூலம் இணையவழித் தொடர்பு கொண்டு, படநகல்களாக கிடைத்துள்ள தமிழிலக்கியங்களை தட்டச்சி உள்ளிட்டும், பிழைதிருத்தியும் கூட்டு முயற்சியில் 500 மின்னூல்கள் என்ற எல்லையைத் தொட்டது பாராட்டத் தக்க ஒரு பணியாகும். இத்தகையப் பணிக்காக தன்னார்வத் தொண்டு செய்த தமிழார்வலர்கள் அனைவருக்கும், திட்டத்தின் தலைவரான கல்யாணுக்கும் தமிழர்கள் யாவரும் கடமைப்பட்டுள்ளோம். வெள்ளுரை (eText) வகையில் அமைந்துள்ள நூல்களே இணையத் தேடல்களின் வழி கிடைப்பதற்கும், ஆய்விற்கும் உதவும் என்பதால் இப்பணியின் இன்றியமையாமையும் தெளிவாகும்.

சங்க கால நூல்கள், நீதிநெறி நூல்கள், இலக்கண நூல்கள், பக்தி நூல்கள் (சைவ, வைணவ, இஸ்லாமிய, கிருத்துவ சமய நூல்கள்) காப்பியங்கள், பிரபந்த வகை நூல்கள், 20-ம் நூற்றாண்டின் தமிழ் நாட்டு ஆசிரியர் நூல்கள், ஈழத் தமிழர், மலேசியத் தமிழர் நூல்கள், மற்ற பிற நூல்கள் என சங்க கால நூல்கள் முதல் தற்காலத் தமிழ்நூல்கள் வரை அனைத்தும் மதுரைத்திட்டத்தின் வழி வெளியிடப்படுகிறது. படிமக்கோப்புகளாகவும் (PDF), ஒருங்குகுறி (Unicode)எழுத்துருக்கோப்புகளாகவும், இணையப்பக்கங்களாகவும் (web pages)தமிழிலக்கியங்கள் மதுரைத்திட்டத்தின் வழியாகக் கிடைக்கின்றன. தமிழக அரசின் பொதுவுடமையாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் ஜெயகாந்தன், கவிப்பேரரசு வரைமுத்து ஆகியோர் தாங்களே காப்புரிமை நீக்கி வழங்கிய நூல்கள் என பல தற்கால நூல்களும் மதுரைத் திட்டத்தின் சேகரிப்பில் இடம் பிடித்துள்ளன.

thiruvalluvar-thirukkural

1990 களின் மத்தியில் தமிழ்க்கணினி வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட கல்யாண் முதல் முயற்சியாக திருக்குறளை தட்டச்சி இணையத்தில் ஏற்றி அனைவரும் பயன்படுத்தும் வழி இலவசமாக அளித்தார். இவரையொத்த ஆர்வம் கொண்டவர் பலரும் இணைந்ததில் உருவான மதுரைத் திட்டத்திற்காக இவரே தனது செலவில் பலநூல்களை தேடிப்பிடித்து வாங்கியும், நகலெடுத்தும் உள்ளார். தற்பொழுது ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ள, “சிவபுரம்” என்ற தலைப்பில் 1902 ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட நூல் ஜி. யு. போப் அவர்களால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நூலகத்திற்கு வழங்கப்பட்டதை அறிந்து, அங்கு சென்று நூலை படநகல்களாக எடுத்து அவற்றை மின்னாக்கம் செய்துள்ளார்.

kalyan3தன்னை தமிழறிஞர் என்றோ தமிழ்க்கல்விப் பணியைச் சார்ந்தவர் என்றோ இனம் காண முடியாது, தான் ஒரு தமிழ் ஆர்வலர் மட்டுமே என்று கூறும் முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள் சுவிச்சர்லாந்தின் லாசன்னே நகரில் உள்ள “சுவிஸ் தேசிய தொழில்நுட்ப நிலையத்தில்” (Swiss Federal Institute of Technology, Lausanne, Switzerland) வேதியியல் பேராசிரியராகவும், ஆய்வாளராகவும் 36 ஆண்டுகளாகப் பணி புரிந்து வருகிறார். சூரிய மின்கலங்களைப் பற்றிய ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் லயோலா கல்லூரி மாணவரான கல்யாண், அமெரிக்க பல்கலைக்கழகமொன்றில் வேதியலில் முனைவர் பட்டத்தையும், இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றில் வேதியலில் முதுமுனைவர் பட்டத்தையும் பெற்றவர்.

பல இயங்குதளங்களிலும் பயன்படுத்த உதவும் வகையில் “மயிலை” என்ற எழுத்துருவை 1980 களில் உருவாக்கி அனைவரும் இலவசமாகப் பயன்படுத்த உதவிய முன்னோடி எனவும், இணையத்தின் ஆரம்ப நாட்களில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட “தமிழ் மின்நூலகத்தை” (Tamil Electronic Library) உருவாக்கியவர் எனவும், “உத்தமம்” என்றழைக்கப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (International Forum for Information Technology in Tamil – INFITT) தலைவர் மற்றும் நிறுவனர்களில் ஒருவராகவும், ‘தமிழ் மரபு அறக்கட்டளை’(Tamil Heritage Foundation) நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் எனவும் பல வகைகளில் தன்னை பல தமிழ்ப்பணிகளில் இணைத்துக் கொண்டவர் கல்யாண். இவரது பணிகளைப் பாராட்டி 2008 ஆம் ஆண்டு கனடா தமிழிலக்கிய கழகத்தின் மதிப்புமிக்க “சுரா” (Canadian Tamil’s initiative TAMIL LITERARY GARDEN’s Sundara Ramasamy Award for Tamil Information Technology – Sura) விருது வழங்கப்பட்டது. கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகமும் இவரது இணையத் தமிழ்ப்பணியை பாராட்டி விருது வழங்கியுள்ளது.

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெயரைச் சூட்டி, மதுரைத் திட்டம் என்ற ஒன்றைத் துவக்கி, தன்னார்வத் தொண்டர்களான சில நூறு தமிழார்வலர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி இந்தச் சாதனையைச் செய்துள்ள முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள், தனது பணியை மேலும் தொடர்ந்து நடத்தி தமிழ் நூல்கள் பலவற்றை இணையத் தேடலில் கிடைக்கும் வகையில் வெள்ளுரைகளாக மாற்றி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்து, வல்லமைக் குழுவினர் அவரை இவ்வார வல்லமையாளராக பாராட்டி மகிழ்கிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

மேலும் தகவலுக்காக:
Dr. K. Kalyanasundaram
kalyan.geo@yahoo.com
www.projectmadurai.org
https://groups.yahoo.com/neo/groups/pmadurai/info

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. அன்பு நண்பர், வல்லமையாளர் கல்யாண் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    மதுரைத் திட்டம், தமிழில் இத்தகைய முயற்சிகளுக்கு ஒரு முன்மாதிரியாக இன்றும் திகழ்கிறது. இந்தத் திட்டத்தில் பங்களிக்கும் தன்னார்வலர்கள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

  2. வல்லமையாளர் விருது பெற்ற திரு.கல்யாண் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  3. வாழ்த்துக்கள் சகோதரரே!

    வாழும் தமிழ் 
    சொல்லும் உன் பெயரை
    செல்லும் காலம் 
    வெல்லும்!!

    தமிழுக்கு 
    அமுது படைத்த
    மதுரையின் பெயரில்
    மகத்தான திட்டம்
    ஒரு தமிழ் பெட்டகம்!

    தமிழின் தலை
    தரணியில் நிமிர்வதற்கு
    உன் போன்றோர்தான்
    உன்னதக் காரணம்!!

    வாழி நீ பல்லாண்டு!  தமிழ்போல்!!

  4. you are a real model for all of us to follow.  vaztha vayadhu illai – vannakkukirom.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *