Author: முனைவர் நா.கணேசன்

  • இந்த வார வல்லமையாளர் (271)

    நா. கணேசன்

     

    இந்த வார வல்லமையாளராக ‘சிவசிவா’ வி. சுப்பிரமணியன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    ’தமிழும், சைவமும் நமதிரு கண்கள்’ என்றார்  யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ ஆறுமுக நாவலர். விவிலியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் வாழ்வின் முதல் பாகத்தில் ஐரோப்பியரிடம் பணியாற்றிய பின்னர், உரைநடை எழுதுவதற்கான பயிற்சியைப் பெற்று, சைவ சமயத்தினையும், தமிழ் இலக்கண நூல்களையும் நல்ல உரைநடையில் நாவலர் பெருமான் தமிழுக்குத் தந்தார். நல்ல அச்சகங்களும், பள்ளிகளும் அமைத்தார். இலங்கைத் தீவில் நாவலரின் தொண்டினால், சைவம் பிழைத்தது, இந்தியாவுக்கு வெளியே நாவலர் வழியில் சிவத்தொண்டு செய்வோர் பலராவர்.

    இந்நாளில், மரபுக் கவிதை இயற்றும் பயிற்சி குறைந்துகொண்டு வருகிறது. மரபுச் செய்யுள் இலக்கணத்தைக் கற்று, ஐயங்களைக் களைந்துகொள்ள நல்ல குழுமமாக ‘சந்தவசந்தம்’ குழு பல ஆண்டுகளாக இயங்கிவருகிறது. கவிமாமணி இலந்தை சு. இராமசாமி, அதன் தலைவர். அக்குழுவில் ஏராளமான சைவபரமான, திருமுறைகளை ஒத்த பாடல்களை இயற்றி அளிப்பவர், ‘சிவசிவா’ சுப்பிரமணியன் ஆவர். இவர் பொறியியலும், பின்னர் மேலாண்மைப் பட்டமும் (MBA, IIM) பெற்று நியூ ஜெர்சியில் பல ஆண்டுகளாகக் கணித்தொழில் நுட்பத் துறையில் பணி செய்து வருகிறார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிவ சிந்தனையில் மரபுச் செய்யுள்களைச் செய்து தருகிறார். அவரது வலைத்தளம்: http://madhisudi.blogspot.com .

    ஏராளமான விருத்தங்களும், நிறையத் திருப்புகழை ஒத்த சந்தப் பாட்டுகளும், சில அந்தாதிகளும் இயற்றியுள்ளார். யாப்பிலக்கணத்திலும், சைவம் பற்றியும் கேள்விகள் கேட்டால் ஆழ்ந்த அறிவுபூர்வமான விடைகளை அளிக்கும் விடையவன், இந்த வார வல்லமையாளர்.

    இந்த வாரத்தில் மூவலூர் மீது விருத்தங்கள் எழுதிவருகிறார். எடுத்துக்காட்டாக,

    காவலிங் காரெனக் கவல்வது நீங்கிடக் கருது நெஞ்சே
    சேவலங் கொடியுடைச் சேந்தனைப் பெற்றவன் செருந்தி கொக்கின்
    தூவலும் சூடிய தூயவன் இமையவர் துயர மாற
    மூவரண் எய்தவன் முக்கணன் மேவிய மூவ லூரே

    நகைச்சுவையாக,

    சிவனுக்கும் இட்டலிக்கும் சிலேடை:

    பொடியோடும் சேருமே பொங்குமா மேலும்
    வடிவாகும் ஒத்திருக்கும் பூவை அடிமேலே
    ஆகுமே ஆவியுள் நிற்குமே இட்டலி
    ஆகுலம்தீர் ஈசன் அறி.

    ஏழை என்ற சொல்லை வைத்த மடக்கணிச் செய்யுள்:

    ஏழை மனமே! இறைஞ்சி அடிதொழாய்!
    ஏழை பணக்காரன் என்னாமல் ஏழை
    இடமிருக்கும் எம்பெருமான் வந்தருள்வான் விண்ணில்
    இடமிருக்கும் இங்குமுண்டு இன்பு!

    தமிழர்களிடையே என்றும் பெருஞ்சமயமாய் சைவம் இலங்குகிறது. 1500 ஆண்டுகளுக்கும் மேலாக, பக்தி இலக்கியம் பிரவாகமாய் தமிழ் இலக்கியங்களில் உருவாகியுள்ளது. அம்மரபின் தொடர்ச்சிக்கு, இந்தக் கணினி இணையக் காலத்தில் ‘சிவசிவா’ சுப்பிரமணியன் போன்றோர் உதவுகிறனர். சிவசிவாவைப் பாராட்டி மகிழ்கிறோம். அவருடனும் ஏனை சந்தவசந்தக் கவிகளிடமும் மரபுக்கவிதை கற்க வாருங்கள் என அன்புடன் அழைக்கிறோம்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • கம்பனில் ஓர் சொல்: அலங்கல் = குதிரையின் அலங்கு உளை (பிடரிமயிர்)

    நா. கணேசன்

    அலைத்தல் என்ற வினைச்சொல்லை விரிவாக்கி அலங்கு/அலக்கு என்ற சோடிச்சொற்கள் தோன்றியுள்ளன.

    இதுபோன்ற தன்வினை/பிறவினைத் தொகுதிகள் தமிழில் மிகப் பல:

    (1) உலங்கு/உலக்கு < உலை-,
    (2) வணங்கு/வணக்கு < வளை-,
    (3) திரங்கு/திரக்கு < திரை-, (திரக்கு = crunch time)
    (4) அணங்கு/அணக்கு (= அணுங்கு/அணுக்கு) < அழு-/அணு-
    அணு என்னும் பெயர்ச்சொல் வடமொழிக்கு த்ராவிடமொழி தந்தது.

    அழுங்கல் = அணுங்கல். (கிறித்துவநூல்களில் ஒன்று, கித்தேரியம்மாள் அழுங்கல் அந்தாதி).
    அணுங்கு (அ) அழுங்கு = Indian pangolin http://en.wikipedia.org/wiki/Indian_pangolin
    அணங்கு/அணுங்கு – வருத்துவது. சங்கத் தமிழர் சமயம் அரசன் – பெண் – தலித் என்னும் மும்முனைகளைக் (triad) கொண்டது. சங்க இலக்கியத்தில் உள்ள ஒரு மிக முக்கியமான சொல்லான அணங்கு இந்த மும்முனைக் கோட்பாட்டுடன் இயங்கியுள்ளது. காலப்போக்கில் அந்தணன் என்ற தமிழ்ச்சொல் அடையும் மாற்றங்கள் ஹிந்து சமயத்தின் வளர்ச்சியை ஆராயப் பயன்படும்.

    (5) விடங்கு/விடக்கு < விடை- (விடைத்தல், விறைத்தல். விதை/விரை). விடங்கர் (> இடங்கர்) என்ற சொல் சிந்து-கங்கை முதலைக்கும், சிவனுக்கும் ஆதல்பற்றி கட்டுரைகள் அச்சாகியுள்ளன. விடங்கர்/விடக்கர் > இடங்கர்/இடக்கர் சொற்றொகுதி இந்தியாவில் இலிங்க வழிபாட்டின் தோற்றுவாய், காமனுக்கு விடங்கர் (மகரம்) துவஜம் என்பன பற்றி அறிய உதவுவன.

    (6) கலங்கு/கலக்கு < கலை-
    ….

    அலங்கல் = அலங்குதல் = அசைதல். எனவே,அலங்கல் மாலை, அலங்கல் கோதை, அலங்கல் தொடலை, அலங்கல் கண்ணி, … என்றெல்லாம் இலக்கியத்தில் மாலையை வருணிப்பது அலங்கல் = அசைதல் என்பதால்தான். “அலங்கல் மாலை” = அசையும் மாலை. சீவக சிந்தாமணி: ’பிறங்கு இணர் அலங்கல் மாலை – விளங்கும் பூங்கொத்துக்களையுடைய அசையும் மாலை’. அலங்கல் = அலங்குதல் என்னும் தொழிலால் பிறக்கும் பெயர்ச்சொல். அசையும் மாலை எனப் பொருள். அழகர் அந்தாதி, அரங்கத்தந்தாதி உரைகளில் வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியர் விளக்கியுள்ளார்கள்: ”அலங்கல் – தொங்கியசைதல்: மாலைக்குத் தொழிலாகுபெயர்; இதில், அல் – கருத்தாப்பொருள்விகுதி யெனினும் அமையும்.” அலைக்கும் தொழிலால் அலங்கல் என்பதே மாலைக்கு ஒரு தொழிலாகுபெயர் ஆகிவிட்டது. ஏராளமான இடங்களில் ’அலங்கல் மார்பன்’ என்றிருக்கும். மாலையுடைய மார்பன் என்று அங்கே பொருள்.

    அலங்கல் = அசைதல், சில சங்ககால உதாரணங்கள்:
    (I) அகநானூறு 262-ஆம் பாடல் பார்ப்போம்
    http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=262&y=195&bk=82&z=l1270634.htm

    அழாஅம் உறைதலும் உரியம் பராரை
    அலங்கல் அஞ்சினைக் குடம்பை புல்லெனப்
    புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந் தாங்கு 25

    23-7. பரு அரை அலங்கல் அம் சினைக் குடம்பை புல்என – பருத்த அரையிற் கிளைத்த அசையும் அழகிய கிளையிலுள்ள தன் கூடு பொலிவற்றொழிய, புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு – தான் பெயர்ந்து போக எண்ணிய புலத்தடத்துப் பறவை புறப்பட்டுச் சென்றாற் போல,

    (II) குறுந்தொகை 76:

    http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=76
    ”சிலம்பிற் சேம்பின் அலங்கல் வள்ளிலை”

    (ப-ரை.) தோழி—, சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை – மலைப் பக்கத்திலுள்ள சேம்பினது அசைதலையுடைய வளவிய இலையை

    (III) குறுந்தொகை 79:
    ”பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை அலங்கல் உலவை யேறி ”
    பொரிதாள் ஓமை – பொரிந்த அடியையுடைய ஓமைமரத்தினது, வளிபொரு நெடுசினை அலங்கல் உலவை – காற்று அடிக்கும் நெடிய கிளையினது அசைதலையுடைய வற்றற்கொம்பில் ஏறி

    (IV) சிலம்பில் போகிய செம்முக வாழை அலங்கல் அம்தோடு, அசைவளி உறுதொறும், பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும் நல்வரை நாடனொடு … (அகநானூறு 302)

    சிலம்பில் போகிய செம்முக வாழை – மலையில் நீண்ட வளர்ந்த செவ்வாழையின், அலங்கல் அம் தோடு – அசையும் அழகிய இலைகள்

    —————-

    அசையும் தொழிலால் அலங்கல் = மாலை. இதே போல, நெற்கதிர் முற்றிக் காற்றில் அசைதலால் அலங்கல் = நெற்கதிர் என்று அகநானூற்றில் காண்கிறோம்:
    ”கழனி நெல்லின் கவை முதல் அலங்கல் ”- வயல் நெல்லின் பலவாகக் கிளைத்த முதலிலிருந்து தோன்றிய நெற்கதிர்,

    சென்னைப் பேரகராதி:
    அலங்கல் alaṅkal , n. < அலங்கு-. 1. Wreath, garland; பூமாலை. (பிங்.) 2. Wreath for the hair; மயிர்ச்சூட்டுமாலை. (பிங்.) 3. Sprout; தளிர். (பிங்.) 4. Waving ear of corn; அசையுங் கதிர். (அகநா. 13, உரை.) 5. Regularity, arrangement, order; ஒழுங்கு. (குருபரம். ஆறா. 121.)

    அலங்கல் என்னும் சொல்லுக்கு இப் பொருள்களுடன் குதிரையின் அலங்கு உளை (= பிடரிமயிர்) என்றும் சேர்த்தலாம். இப்பொருளில் கம்பர் பாடியிருக்கிறார்.
    ஆயிரம் தேரை, ஆடல் ஆனையை, அலங்கல் மாவை,
    ஆயிரம் தலையை, ஆழிப் படைகளை, அறுத்தும், அப்பால் .

    கடுமையான போர் நடக்கிறது. அப்போது மாலை அணிந்து குதிரைகள் இருக்கமாட்டா. போரின் உச்சகட்ட வேகத்தைக் காட்ட குதிரைகளின் பிடரி மயிர் அசைதலைப் பாடுகிறான் கம்பன். புரவிகளுக்கு அழகே பிடரியில் அலங்கும் மயிர் உளை தான். இதனைச் சங்க காலத்திலிருந்து எல்லா இலக்கியங்களும் பாடுகின்றன. அலங்கல் மா = அலங்கு உளைப் புரவிகள்.

    “அலங்குசெந்நெற் கதிர்வேய்ந்த ஆய்கரும்பின் கொடிக்கூரை”- புறநானூறு. எனவே, அலங்கல் = அசைகிற நெற்கதிர் என்று சங்க இலக்கியங்களில் பாடப்படுகிறது. அதுபோல, அலங்கு மயிர்ப் புரவி என்று பற்பல பாடல்களில் உள்ளதால், ’அலங்கல் மா’ என்பதற்கான பொருள் ’அலங்கு உளை (பிடரிமயிர்) கொண்ட குதிரை’ என்றால் சாலவும் பொருத்தமாய் அமையும்.

    ahor

    ​குதிரையின் ராஜலக்ஷணங்களில் ஒன்று: அலங்கு உளை (பிடரிமயிர்) அலங்கல் மா = mane of horse. அழகான குதிரைகளும், அதன் அலங்கல்களும் (mane) இங்கே பாருங்கள்:

    https://www.google.com/search?espv=2&biw=1280&bih=923&tbm=isch&sa=1&q=mane+of+a+horse&oq=mane+of+a+horse&gs_l=img.3..0.2896.9197.0.9440.19.14.0.5.5.0.49.546.13.13.0.msedr…0…1c.1.60.img..1.18.545.3G92PrhubG8

    ​அலங்கு செந்நெல் கதிரை அலங்கல் என்றே சொல்கிறது சங்க இலக்கியம். அலங்கும் காந்தளை அலங்காந்தள் என்பது கலித்தொகை. தோளிலே அலங்கும் மலர்மாலையை அலங்கல் என ஆயிரக்கணக்கான இடங்களில் தமிழ் குறிக்கிறது. தமிழனின் வாழ்க்கையில் ஒவ்வொரு மலருக்கும் ஒரு code உண்டு, வாகை என்றால் வெற்றி, உழிஞை என்றால் போர், … Flower semiotics and symbolism தமிழிலே பெரிது. வடமொழிக்கு உள்ளுறையும், இறைச்சியும் தொனி என்ற கோட்பாடாகக் கொடுத்த மொழி தமிழ்.

    ahorse

    அலங்கு உளை (பிடரிமயிர்) = அலங்கல்
    குதிரைகளின் அலங்கல் உளையை/பிடரிமயிரை விவரிக்கும் இலக்கிய வரிகள் சில:

    (1)
    ”அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ” (புறநானூறு 2):
    http://www.tamilvu.org/slet/l1281/l1281per.jsp?sno=2&file=l1281a16

    (2) ”குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி” (அகநானூறு 4)
    http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=13&y=16&bk=4&z=l1270949.htm

    (3) ”நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்.
    பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி” (புறநா. 4).

    (4) ”அலங்கு உளை அணி இவுளி
    நலங் கிள்ளி நசைப் பொருநரேம்” (புறநானூறு 382)
    http://www.tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=382&file=l12806c4.htm

    (5) கந்தபுராணம்:
    மாறு இலா அருக்கன் நாப்பண் வைகிய பரமனே போல்
    ஆறு மா முகத்து வள்ளல் அலங்கு உளைப் புரவி மான் தேர்
    ஏறினான் வீரவாகு இலக்கரோடு எண்மர் ஆகும்

    (5) கொங்குவேளிர் பெருங்கதை:
    அலங்குமயிர் எருத்தின்
    வயமாப் பண்ணி வாய்க்கயிறு பிணித்துக்
    அசையாநின்ற மயிரினையுடைய பிடரியினை உடையதொரு சிறந்த புரவியைப் பண்ணுறுத்தி வாய்க்கயிறிட்டுக் கட்டி .

    (6) பெருங்கதை:

    http://www.tamilvu.org/slet/l3600/l3600son.jsp?subid=3613

    உதயண குமரன் உரிமை தழீஇ
    35 அடல்பேர் யானையும் அலங்குமயிர்ப் புரவியும்
    படைக்கூழ்ப் பண்டியும் பள்ளி வையமும்
    நடைத்தேர் ஒழுக்கும் நற்கோட்டு ஊர்தியும்
    இடைப்படப் பிறவும் இயைந்தகம் பெய்து

    “அடல்பேர் யானையும், அலங்குமயிர்ப் புரவியும்” எனக் கொங்குவேள் சொல்வதை
    சில நூற்றாண்டுகள் சென்றபின் கம்பர் “ஆடல் ஆனையை, அலங்கல் மாவை” என்கிறார்.

    alion

    கம்பன் வழியில் ஆண் சிங்கத்தை “அலங்கல் அரிமா” எனலாம்.

    நா. கணேசன்

    Share
  • சங்ககாலப் பாண்டியர் நாணயங்களில் மகரவிடங்கர்

    — டாக்டர் நா. கணேசன், ஹ்யூஸ்டன், டெக்சாஸ்.

    1. ஆதிகாலப் பாண்டியர்களின் வெள்ளி முத்திரை நாணயங்கள்:
    சங்க காலத்தில் தமிழகத்தை மூன்று அரச குடியினர் ஆண்டனர். சேர, சோழ, பாண்டியர்களில் மூத்தகுடி பாண்டியர்கள் தாம் என்ற வரலாற்றை அவர்கள் வெளியிட்ட கர்ஷபணம் (Punch Marked Coins) எனப்படும் வெள்ளி முத்திரைக் காசுகளால் அறிகிறோம். சேரர்களும் சோழர்களும் முத்திரைக் காசுகளை அச்சிட்டு வெளியிடவில்லை.  இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து அழகான ஒளிப்படங்கள், கோட்டோவியங்களுடன் புத்தகங்களாக வெளியிட்டு சங்ககால வரலாற்றை அறியச் செய்த முனைவர் ரா. கிருஷ்ணமூர்த்தியின் நாணய ஆய்வுச் சேவைக்குத் தமிழர்கள் நன்றிக்கடன் கொண்டுள்ளனர். தமிழக நாணயங்களில் மிகப் பழையவற்றை பல ஆண்டுகளாகத் தமிழகம் எங்கும் தேடித் தெளிவான படங்களுடன் நூல்கள் எழுதிய தினமலர் ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தொகுப்பில் பாண்டியர்களின் கர்ஷபணக் காசுகள் பல உள்ளன. அவற்றின் பின்னர் அரசாண்ட சங்க மன்னர்களின் காசுகளும், அப்போது தமிழகத்துக்கு வந்த கிரேக்க, ரோமானிய யவனர் காசுகளும் சங்க காலத்தைக் கணிக்கப் பலவகைகளில் புதிய ஒளி ஊட்டுகின்றன.

    செழியன், பெருவழுதி என்ற பெயர்கள் தமிழ் பிராமி எழுத்தில் எழுதிய பல நாணயங்கள் கிடைத்துள்ளன. பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னரைச் சங்க இலக்கியங்களும், வேள்விக்குடிச் சாசனங்களும் குறிப்பிடுகின்றன. நெற்றி, மார்பில் சாத்தும் சாந்து வடமொழியில் சந்தனம் என்று அழைக்கப்படுகிறது. அதுபோல், யாமை (ஆமை) வாகனமாகப் பெற்ற நதி யமுனா என்று வடமொழியில் வழங்குகிற தமிழ்ப் பெயராகும். யமுனைக்கு ஆமை வாகனம் போல, கங்காதேவி விடங்கர் என்னும் முதலையை வாகனமாகக் கொண்டவள். பாணினியில் இலக்கணத்துக்கு மகாபாஷ்ய உரை எழுதிய பதஞ்சலி யமுனைக் கரையில் உள்ள மதுரை நகரத்தின் பெயரை விளக்கியுள்ளார். பண்டு என்றால் பழுத்த பழம் என்ற பொருள். பழம் போன்ற நிறம் கொண்ட பாண்டியர்களுக்கும், மகாபாரதப் பாண்டவர்களுக்கும் உள்ள உறவையும் மகாபாஷ்யத்தில் காண்கிறோம். பண்டு என்றே இலங்கை இலக்கியங்கள் வடமதுரையில் இருந்து இரும்பு, குதிரை (அய்யனார்) முதலியவற்றை அறிமுகப்படுத்தித் தமிழகமும், இலங்கையும் வந்தோரைக் குறிப்பிடுகின்றன. பாண்டுக்கல் என்று மெகாலிதிக் நாகரிகச் சின்னங்கள் குறிப்பிடப்படுகின்றன.

    பழனி அருகே பொருந்தல் என்னும் ஊரில் ஈமச்சின்னத்தில் கி.மு. நான்காம் நூற்றாண்டின் தாழியும், புரிமணையும், தாழியில் “வயிர” என்னும் எழுத்தும் 2 கிலோ நெல்லும் கிடைத்துள்ளன. பால்:வால் மாற்றம் போல, பயிரன் என்பது வயிர என்றாகியிருக்கலாம். பண்டுவின் மகள் என்பதற்காக மதுரை மீனாக்ஷி ’பாண்டேயா’ என்று கிரேக்கர்கள் குறித்துள்ளனர், வடமதுரையில் இருந்த பாண்டவர்களின் உறவின் நினைவாக, மதுரை என்ற பெயரால் பாண்டியர்கள் தங்கள் தலைநகரின் பெயரை இட்டனர். இரண்டுக்குமே மதில் சூழ்ந்த நகரம் என்பது பொருள். யமுனை நதிக்குப் பெயர் அளித்த ஆமை (சங்கத் தமிழில் யாமை) வழிபாடும், அவை வாழும் குளங்களும், அக் குளக்கரைகளில் நடந்த அசுவமேத யாகங்களையும் மிகப் பல பாண்டியர் முத்திரைக் (கர்ஷபணம்) காசுகளில் காண்கிறோம்.

    இக்கட்டுரையில் சங்ககாலப் பாண்டியர் சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியாக மகர விடங்கர் (முதலை) நாணயங்கள் வெளியிட்ட தொல்லியலை ஆராய்வோம். மெகாலித்திக் காலத்தில் இருந்த விடங்கர் வழிபாடும், எழுத்தும் வெள்ளி முத்திரை நாணயங்களில் தொடர்கிறது. சங்ககாலத்தின் தொடக்க கட்டமாக இருந்த நிலை இது. பின்னர் விடங்கர் – முதலை வழிபாட்டுச் செய்திகள் அனேகமாக மறைந்து விடுவதைச் சங்க இலக்கியம் காட்டுகிறது. மகர விடங்கர் சங்க இலக்கியத்தில் அணங்கு வருணன் என்று குறிக்கப்பட்டுப் பின்னர் சிவ வழிபாட்டுடன் சேர்ந்துவிடுகிறது. மிகப் பழைய சில்ப சாத்திரமாகிய விஷ்ணுதர்மோத்தரம் முதலை வாகனத்துடனும் மனைவி கௌரியுடனும் வருணதேவன் சித்திரங்கள், சிலைகள் செய்யும் விதி அளிக்கிறது.

    2. சிந்துசமவெளி தமிழ்நாடு தொடர்புகள் காட்டும் விடங்கர் கொற்றவை வழிபாடு:
    செம்பு உலோகப் பயன்பாட்டுக் காலமாகிய சிந்து நாகரீகத்தில் முதலை வடிவில் விடங்கரும் – கொற்றவை (துர்க்கை) வழிபாடு இருந்துள்ளது (படம் 1) . அத் தம்பதியரைக் காட்டும் சிந்து முத்திரை படம் 2-ல் காண்கிறோம்.

    படம் 1. சிந்து சமவெளியில் மகர விடங்கர்
    படம் 1. சிந்து சமவெளியில் மகர விடங்கர்
    படம் 2. சிந்து சமவெளி மகரவிடங்கர் - கொற்றவை தம்பதி சம்யோகம்
    படம் 2. சிந்து சமவெளி மகரவிடங்கர் – கொற்றவை தம்பதி சம்யோகம்

    சிந்து எழுத்தில் மீனும், முதலையும் இருக்கின்றன. விடங்கர் முதலை எழுத்தைப் படம் 1-ல் சிவப்பு வளையமாகக் காணலாம். 4500 ஆண்டுக்கு முந்தைய இந்தியர்களுக்கு நீர்வாழ் உயிரிகளில் இருந்து மீனும் முதலையும் சமயச் சின்னங்களாக ஆகியுள்ளன. மீன் விண்மீன்களைக் காட்டவும், முதலை கொற்றவையின் கணவரைக் காட்டவும் சிந்து நாகரிகத்தில் பயன்பட்டுள்ளன. அவ்வெழுத்துக்களைச் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள கொங்குநாட்டுச் சூலூர்க் மண்கிண்ணம், சென்னிமலை அருகே கொடுமணல்,  சாணூரில் கிடைத்துள்ள பானை ஓடு (படம் 3 – இடப்புறம்), செம்பியன் கண்டியூரில் கிடைத்துள்ள கல்லால் ஆன மழு – இவைகளில் காண்கிறோம்.

    படம் 3. சாணூர்ப் பானை ஓட்டில் மகரவிடங்கர் எழுத்து
    படம் 3. சாணூர்ப் பானை ஓட்டில் மகரவிடங்கர் எழுத்து

    அண்மையில் பேரா. கா. ராஜன் மாணவர்கள் இருவர் திருப்பரங்குன்றத்தில் கோவில் குளக்கரையில் மிக அழகான தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். கொடுமணலில் பானை ஓடுகளில் கிடைக்கும் தமிழ் பிராமி எழுத்துக்கள் அசோகன் பிராமியை விட ஒரு நூற்றாண்டு காலமாவது மூத்தது என்று ரேடியோகார்பன் பரிசோதனைகள் நிரூபித்துள்ளன. இலங்கையின் பழைய தலைநகர் அனுராதபுரத்தில் கிடைத்த பிராமி எழுத்துக்களும் கி.மு. நான்காம் நூற்றாண்டாகப் பழமை இருப்பதாகத் தெரிகிறது. கங்கை நதியில் இன்றும் வாழும் கடியால் (Gharial) முதலையின் கால்கள் சிறியன, வலுவற்றவை. நதிக்கரைகளில் நகர்ந்து செல்லும். எனவே, நகர் என்றே வட இந்தியாவில் இம்முதலைக்குப் பேர் வழங்குகிறது.

    நகர் என்னும் தமிழ்ச் சொல் நாக்ரா என்று பிராகிருதத்தில் ஆகி, மூத்த நாக்ரா என விடங்கரும், கொற்றவை மூத்த சக்தி என அவர் மனைவியும் குறிப்பிடப்படும் திருப்பரங்குன்றத் தமிழ் பிராமிக் கல்வெட்டு விடங்கர்-கொற்றவை வழிபாட்டைத் தமிழ்க் கல்வெட்டில் காட்டும் ஆதாரமாகும். விடங்கர்-கொற்றவை வழிபாடு குறிப்பிடுவதால் இக் கல்வெட்டு கி.மு. மூன்றாம் நூற்றாண்டு எனக் கணிக்கலாம். அப்போதுதான் பாண்டியர்களின் கர்ஷபண வெள்ளிக்காசுகளில் விடங்கர் வழிபாடு காட்டப்படுவதும் இக் காலக்கணிப்பிற்கு அரண்செய்கிறது. சிந்து சமவெளி விடங்கர் – கொற்றவை வழிபாட்டின் தொடர்ச்சியை ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளில் பானைச் சிற்பமாகவும் (கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு), திருப்பரங்குன்றில் எழுத்தாகவும் (கி.மு. 3 அல்லது 2-ஆம் நூற்றாண்டு) தொல்லியல் அகழ்வுகள் காட்டுகின்றன. தமிழ் மாதப் பேர்களில் 11 மாதங்கள் பிராகிருதப் பெயர்களாக இருக்கவே, தை என்ற மகரத்தின் பெயர் மாத்திரம் தமிழாக இருப்பது விடங்கர்-கொற்றி வழிபாட்டின் தொன்மையை முரசறைகிறது.

    படம் 4. சிந்து நாகரிகத் தொடர்ச்சி - விடங்கர் (கி. மு. 1500, ஹரியானா)
    படம் 4. சிந்து நாகரிகத் தொடர்ச்சி – விடங்கர் (கி. மு. 1500, ஹரியானா)
    படம் 5. ஆதிச்சநல்லூர் (கி. மு. 500) – மகரவிடங்கர் – கொற்றவை
    படம் 5. ஆதிச்சநல்லூர் (கி. மு. 500) – மகரவிடங்கர் – கொற்றவை

    3. சங்ககாலப் பாண்டியர்களின் காசுகளில் மகரவிடங்கர்:
    ‘தினமலர்’ ரா. கிருஷ்ணமூர்த்தி தமிழகத்தில் கண்டெடுத்துள்ள பாண்டியர் காசுகளில் முதலை வடிவில் மகரவிடங்கரும், அக் கடவுளுக்கு நடந்த அசுவமேத யாகங்களும் வடிக்கப்பட்டுள்ளன. ஆனால், சிந்து சமவெளியிலிருந்து தொடர்ச்சியாக இருந்துவரும் விடங்கர் – கொற்றவை வழிபாடு பற்றிய ஆய்வுச் செய்திகள் இன்னும் பரவலாகத் தெரியவில்லை. எனவே, முதலை வடிவத்தை பல்வேறு காசுகளில் இனங்காணாமல் எழுதியுள்ளார். அக் காசுகளில் சில காண்போம். சிந்து சமவெளியில் ஏராளமான முத்திரைகளில் மீனைக் கவ்வும் முதலை உண்டு. அதே சின்னம் உள்ள பாண்டியரின் கர்ஷபணம் படம் 6-ல் பார்க்கவும்.

    படம் 6. பாண்டியர் கர்ஷபணம். முதலை மீனைக் கவ்விக்கொண்டுள்ளது (தவறாக, நாய் முயலைக் கவ்விக் கொண்டுள்ளது என வரையப்பட்டுள்ளது)
    படம் 6. பாண்டியர் கர்ஷபணம். முதலை மீனைக் கவ்விக்கொண்டுள்ளது
    (தவறாக, நாய் முயலைக் கவ்விக் கொண்டுள்ளது என வரையப்பட்டுள்ளது)
    படம் 7. மகர விடங்கர் தலையைத் தூக்கிக்கொண்டும், வாலை நிமிர்த்தியும் உள்ள பாண்டியன் பெருவழுதி காசு.
    படம் 7. மகர விடங்கர் தலையைத் தூக்கிக்கொண்டும், வாலை நிமிர்த்தியும் உள்ள பாண்டியன் பெருவழுதி காசு.

    குளக்கரையில் முதலையும், குளத்தில் ஆமையும் அதன் முன்னர் அசுவமேத யாகத்துக்குக் கட்டப்பட்ட குதிரையும் காணலாம். இந்த முதலையை ரா. கிருஷ்ணமூர்த்தி Triskle என்னும் சின்னம் என்கிறார். ஆனால், Triskle  வடிவம் வேறு. அதைவிட முதலை என்று கொள்தல் சிறப்பாகப் பொருள் தருகிறது.

    படம் 8.  பாண்டியர் நாணயம் - குளத்தில் முதலை, பக்கத்தில் ஆற்றில் மீன்கள்.
    படம் 8. பாண்டியர் நாணயம் – குளத்தில் முதலை, பக்கத்தில் ஆற்றில் மீன்கள்.
    படம் 9. குளக்கரையில் முதலை (மகரம்). காளை, யானைகளுடன் அளவை ஒப்பிட்டால், திரு. கிருஷ்ணமூர்த்தி சங்கு என்று குறிப்பிடுவது பிழை எனத் தோன்றுகிறது.
    படம் 9. குளக்கரையில் முதலை (மகரம்). காளை, யானைகளுடன் அளவை ஒப்பிட்டால், திரு. கிருஷ்ணமூர்த்தி சங்கு என்று குறிப்பிடுவது பிழை எனத் தோன்றுகிறது.

    சிந்து சமவெளி நாகரீகத்தில் கொற்றவையின் கணவராக விளங்கும் விடங்கர் முதலை வழிபாடு தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் மெகாலித்திக் காலத்திலும் கலை, நாணயம், எழுத்துக்களின் வாயிலாக இருக்கின்றன என்று கண்டோம். இவற்றை மேலும் ஆராய்ந்தால் சங்ககாலத்துக்கு முற்பட்ட தமிழகத்துக்கும், சிந்து நாகரிகத்துக்கும் தொடர்ச்சியாக 2000 ஆண்டுகள் தொடர்புகளை அறியத் துணைசெய்யும். சிந்து எழுத்துக்களின் உட்கருத்தைக் கண்டுபிடிக்கப் படிக்கல்லாக அவ்வகை ஆய்வுகள் அமையும்.

    Share
  • ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்

    ஔவையார் எழுதிய புகழ்பெற்ற அறநூல்களில் ஒன்று ’ஆத்திசூடி’ என்பது அனைவரும்  அறிந்ததே. ஆயினும், அதில் ஆத்திசூடியாகக் குறிக்கப்படுபவர் யார் என்பதில் அறிஞர் பெருமக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதுகுறித்து ஓர் சுவையான கருத்தாடல் நிகழ்த்தி ஆத்திசூடி குறித்த பல புதிய தகவல்களை வாசகர்களுக்கு அறியத் தரலாமே என்ற எண்ணத்தின் வெளிப்பாடே ‘ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்’ எனும் இப்பகுதி.

    இதில் அறிஞர்கள் பலர் பங்கேற்று ’ஆத்திசூடி’ பற்றித் தங்கள் கருத்துக்களை, விளக்கங்களை நம்முன் படைக்க இருக்கின்றார்கள்.

    முதலில், ’ஆத்திசூடி’ என்பது சமண சமயத்தைச் சேர்ந்த தீர்த்தங்கரர் ஒருவரைக் குறிப்பதாகும் என்று நிறுவ வருகின்றார் முனைவர் நா. கணேசன் அவர்கள்.

    இனி அவருடைய கருத்துக்கள் நம் சிந்தனைக்கு…

    “ஆத்திசூடி அமர்ந்த தேவன்” என்று சமணர்கள் கொண்டாடும் தேவர், பார்சுவநாத தீர்த்தங்கரர். அவர் ஒரு வரலாற்று நாயகர். பார்சுவநாதர், நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சமணர்களின் 23-ஆவது தீர்த்தங்கரராகப் போற்றப்படுபவர்.

    அரச குலத்தில் தோன்றிய பார்சுவநாதர் நூறு ஆண்டுகள் உயிர்வாழ்ந்தார். தம் வாழ்நாளில் 30 ஆண்டுகள் இல்லறத்தை மேற்கொண்டும், 70 ஆண்டுகள் துறவறத்தை மேற்கொண்டும் சிறப்புற்றார். உயிர்க்கொலை, சாதிப் பாகுபாடு ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தவர் அவர்.

    போதி மர நீழலில் புத்தர் ஞானம் பெற்றதுபோல, ஆத்தி (வடமொழியில் தாதகி என்பர்) மர நீழலில் தவஞ்செய்து ஞானம் அடைந்தவர் பார்சுவநாதர். புத்தரும், பார்சுவநாதரும் காசி அருகே மகத மண்டலத்திலே சமகாலத்தில் வாழ்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.

    ஔவைக் குரத்தியார் தாம் எழுதிய ஆத்திசூடி என்ற நூலின் கடவுள்வாழ்த்துப் பாடலில்,

    ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
    ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே”
    என்று ஆத்திமர நீழலில் அமர்ந்து ஞானம் பெற்ற  பார்சுவநாதரையே குறிப்பிடுகின்றார். ஏனெனில் ’சூடுதல்’ என்றால் ’அணிதல்’ என்ற பொருள்மட்டுமின்றிச் சூழ்ந்து கவிந்திருத்தல் என்ற பொருளும் உண்டு. அந்த அடிப்படையில் ஔவையால் ’ஆத்திசூடி’யாகச் சுட்டப்படுவர் பார்சுவநாதரே எனக் கொள்வதில் தவறேதுமில்லை.

    அலங்காரமான ஆத்தி/தாதகி நீழலில் அமரும் தேவன்:

    Parsvanatha_Lodhruva

    ’சூடுதல்’ என்ற சொல்லுக்குச் சூழ்ந்து கவிந்திருத்தல் என்ற பொருள் இருப்பதைச் சென்னை தமிழ்ப் பேரகராதியும் உறுதிசெய்கின்றது.

    Madras Tamil Lexicon:
    சூடு¹-தல் cūṭu-
    To surround, envelope; கவிதல்.

    இதற்கான சான்றுகள் சில சங்க நூல்களிலிருந்தும் கீழே தரப்பட்டுள்ளன:

    சான்று 1:

    புறநானூறு 35

    நளியிரு முந்நீ ரேணி யாக
    வளியிடை வழங்கா வானஞ் சூடிய
    மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
    முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்…

    உரை: நளியிரு முந்நீர் ஏணியாக – நீர் செறிந்த பெரிய கடல்
    எல்லையாக; வளியிடை வழங்கா – காற்று ஊடு போகாத; வானம்
    சூடிய மண்திணி  கிடக்கை – வானத்தைச்  சூடிய  மண்செறிந்த
    உலகத்தின்கண்; தண் தமிழ்க் கிழவர் – குளிர்ந்த தமிழ்நாட்டிற்
    குரியராகிய;

    சான்று 2:

    வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும்பாண். 409).

     இதற்கு நச்சினார்க்கினியரின் உரை:

    409-10: புலவு கடல் உடுத்து வானம் சூடிய மலர்தலை உலகத்துள்ளும்-புலால் நாற்றத்தையுடைய கடல்சூழ்ந்த ஆகாயங்கவிந்த அகன்ற இடத்தையுடைய உலகத்து நகரில் விசேடித்தும்,

    சான்று 3:

    வான்கவிந்த வையகமெல்லாம்” (நாலடி.பொறை.10)

    சான்று 4:

    ஐங்குறுநூறு 209

    அன்னாய் வாழிவேண் டன்னை நீமற்று
    யான்அவர் மறத்தல் வேண்டுதி யாயின்
    கொண்டல் அவரைப் பூவின் அன்ன
    வெண்டலை மாமழை சூடித்
    தோன்றல் அனாதுஅவர் மணிநெடுங் குன்றே.

    இவையல்லாது, ஆத்திமரத்தின் கீழ் அமர்ந்த  தீர்த்தங்கரர் (பார்சுவநாதர்) மீதான பாடல் தமிழிலக்கண நூலான வீரசோழியத்தில் உள்ளது. மேலும் ஒரு பாடல் அகத்துறையாய்ச் சோழ மன்னன் மீதும் இருக்கிறது. பார்சுவநாதரது அடியாராகிய ஒரு குரவடிகள் சோழமன்னர்களுக்கு ஆத்தியைக் குலமரமாகப் பரிந்துரைத்திருக்கலாம் என்று எண்ணுதற்கும் இடமுண்டு.

     ’ஆத்திசூடி’ சிவபெருமானைக் குறித்தது என்று கருதுவோரும் உளர். ஆனால் அதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. ஆத்தியைச் சிவனது திருமேனியிலே காட்டும் சிற்பங்களோ, தேவாரமோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பல சிற்பங்களில் ஆத்தி தாவரமும், நாகக் குடையும் கொண்டு பார்சுவநாத தீர்த்தங்கரரே விளங்குகிறார்.

    சுமார் 1500 வருடப் பழமை வாய்ந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று கர்நாடகாவில் கிடைத்துள்ளது. தீர்த்தங்கரசாமிமேல் முழுவதும் ஆத்தி தாவரம். அந்த அலங்காரத்தின் உச்சியில் ஒரே ஓர் அரவம். இந்த உச்சி நாகத்தால்தான் அந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் பார்சுவர் என அடையாளம் தெரிகின்றது.

    parsuvanatha with one snake

    எனவே, ஆத்திசூடி நூலின் கடவுள்வாழ்த்தில் ’ஆத்திசூடி’யாகக் குறிப்பிடப்படுவர் சமண தீர்த்தங்கரராகிய ‘பார்சுவநாதரே’ என்பது ஐயத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது.

    Share
  • வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள்

    டாக்டர் நா. கணேசன் (naa.ganesan@gmail.com)

    தாலமி குறிப்பிடும் சாலியூர் (மருங்கூர்ப் பட்டினம்):

    காவிரி ஆறு கடலில் புகும் பூம்புகாரைக் காவேரிப் பூம்பட்டினம் என்கிறோம். பட்டினம் என்றால் கடற்கரையில் அமைந்த ஊர். கொங்குநாட்டில் மாளிகையின் புகுமுகம் (Portico) பூமுகம் ஆவதுபோலே, ஆறு கடலில் புகும் பட்டினம் பூம்பட்டினம். வையைப் பூம்பட்டினம் பாண்டிநாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, ஆனால் அது ராமேசுவரம் அருகே பெரிய ஊராகவோ, துறைமுகமாகவோ இன்றில்லை. வையை கடலில் புகும் பட்டினத்தின் சங்ககாலப் பெயர் மருங்கூர்ப் பட்டினம். மருங்கை என்றும் அழைத்தனர். தமிழரின் கடலாடு வணிகத்தைக் காட்டும் தொல்லியல் சான்றுகள் பல கிடைக்கும் ஊர் மருங்கூர்ப் பட்டினம். ஆனால், இன்று அழகன்குளம் என்று அழைக்கப்படுகிறது. கடல் சற்றே உள்வாங்கிவிட்டது; நதியும் வறண்டுபோய்க் கடலில் கலப்பதில்லை. ஆனால் சங்ககாலத்தில் ஏராளமான நீர்வரத்து வையைப் பூம்பட்டினத்தில் (= மருங்கூர்ப் பட்டினம்) இருந்ததென அறிகிறோம். இயற்கையைப் பேணாவிட்டால் இந்தியாவே வறண்ட பூமி ஆகிவிடும் என்பதற்கு மருங்கையின் வரலாறே சாட்சி.

    ஏராளமான தொல்லியல் சான்றுகள் அழகன்குளத்தில் கிடைப்பதால், வையை ஆறு கடலில் சங்க காலத்தில் சங்கமித்த இடமாக இவ்வூர்ப்பகுதி இருக்கவேண்டும். மருங்கூர்ப் பட்டினத்துக்கு ரோமானியக் கப்பல்கள் முதல் நூற்றாண்டில் வந்ததைத் தமிழ் ஓவியர் ஒருவர் பானை ஓட்டில் வரைந்துள்ளார் [1]. இதனைச் சங்க இலக்கியமும் பாடுவதைப் பார்ப்போம்.

     

    படம் 1: அழகன்குளம் – ரோமானியக் கப்பல் (கி.பி. முதல் நூற்றாண்டு)

    ”பச்சிறாக் கவர்ந்த பசுங்கட்காக்கை

    தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேர்க்கும்,

    மருங்கூர்ப்பட்டினத்து அன்ன,”  – நற்றிணை 258

    “பசும்பூண் வழுதி மருங்கை யன்ன, என்

    அரும் பெறல் ஆய் கவின் தொலைய,

    பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே” – நற்றிணை 358

    “கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர்

    விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்,

    இருங்கழிப் படப்பை மருங்கூர்ப்பட்டினத்து,

    எல் உமிழ் ஆவணத்து அன்ன,” – அகம் 227

    காவிரிப் பூம்பட்டினம் எவ்வாறு பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என விளங்கியதோ அதுபோன்றே இந்த வையைப் பூம்பட்டினமும் ஊணூர், மருங்கூர்ப் பட்டினமென இரு பகுதிகளாக விளங்கின. இந்த மருங்கூர்ப் பட்டினம் தோட்டங்களையும், காயல்களையும், செல்வம் கொழிக்கும் கடைத்தெருக்களையும் கொண்டு விளங்கியதை நக்கீரர் பாடியுள்ளார். காவிரிப்பூம்பட்டினத்தைப் போல் ஊணூரும் மதிலையும் அகழியையும் கொண்டு விளங்கியது (அகம் 227). மயிலை சீனி. வேங்கடசாமியின் ‘பழங்காலத் தமிழர் வணிகம்’ (பக். 95-96) நூலில் மருங்கை என வழங்கப்பெற்ற மருங்கூர்ப் பட்டினம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

    ஊணூரைச் சூழ்ந்து வயல்கள் இருந்ததை ‘முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும் நெல்லின் ஊணூர்’ என்று மருதன் இளநாகனார் அகம் 220-ல் குறிப்பிடுகிறார். “ஆடியற் பெரு நாவாய் மழை முற்றிய மலை புரையத் துறை முற்றிய துளங்கு இருக்கைத் தெண் கடற் குண்டகழிச் சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ! ” பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இந்த நெல்லின் ஊரை வென்றான் என்கிறது மதுரைக்காஞ்சி. மேலும், நச்சினார்க்கினியர் மதுரைக் காஞ்சி குறிப்பிடும் நெல்லின் ஊரின் பெயர் சாலியூர் என்கிறார்.       தாலமி குறிப்பிடும் சாலூர் (Salour) என்பது இந்தச் சாலியூரான ஊணூர் என்று முதலில் அறிவித்த வி. கனகசபையைத் தொடர்ந்து மயிலையார் குறிப்பிடுகிறார் [2].

    மருங்கூர்ப் பட்டினம்தமிழ் எண்கணிதத்தின் கலங்கரை விளக்கு:

    புகாரின் கீர்த்தி பாடும் சங்கத்தமிழ்ப் பட்டினப்பாலைக்குப் பின்னர் சமண சமயஞ் சார்ந்த கோவலன் கதையாகத் தமிழின் முதல் நாவல் பூம்புகார்ப் பட்டினத்தில் தொடங்குகிறது.  முத்தமிழ்த் தேசியக் காப்பியம் படைத்த இளங்கோ அடிகள் காவேரிப் பட்டினத்துக்கு  தன் நாவலால் அழியாப் புகழ் ஈந்தார். கோவலன் குடும்பம் போன்ற வணிகக் குடியினர்க்கு எண்கணிதம் முக்கியம் அல்லவா?

    சிரமண சமயத்தவர் எழுத்து மாத்திரம் இல்லாமல், எண்ணையும் இந்தியர்க்குக் கற்பித்தார்கள். அதனால் தான் வள்ளுவர் ”எண் என்ப ஏனை எழுத்தென்ப இரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” என்றும் ஔவை ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்றும் பகுத்தனர். இன்றும் 4-9 தமிழெண்களின் வடிவங்களில் வடமொழி எண்ணுப்பெயர்களின் முதல் அட்சரங்கள் இருப்பதைக் காண்கிறோம்.  இம் மரபு வடநாட்டுக் குகைக் கல்வெட்டுக்களில் உள்ள எண்களைச் சிரமண சமயத்தவர் மருங்கூர்ப் பட்டினம் போன்ற நகரங்களில் கொணர்ந்து தமிழர்க்குத் தந்ததைத் தொல்லியல் ஆய்வுகள் காட்டி நிற்கின்றன. தமிழரின் எண்கணித வரலாற்றுக்கு முக்கியச் சாட்சியாக வையைப் பூம்பட்டினமான இராமேசுவரம் அருகில் உள்ள அழகன்குளம் (சங்ககால மருங்கை)பானை ஓடு சான்றாக விளங்குகிறது.

     

    படம் 2: எஸ். ராமானுஜன் (பால் க்ரான்லண்ட் வடித்தது, 1984)

    எண்கணிதத் தேற்றத்தில் (Number Theory) உலகத்தில் வியப்பான முடிபுகளை அளித்தவர் ஈரோட்டில் அவதரித்த கணிதமேதை ராமானுஜன். அவர் நினைவாகச் சென்ற ஆண்டு எழுதிய கட்டுரையில் மருங்கூர்ப் பட்டினம் (இன்றைய அழகன்குளம்) பானை ஓட்டில் உள்ள பெரிய எண்ணை  விளக்கியுள்ளார் ஐராவதம் மகாதேவன் அவர்கள்:

    http://www.thehindu.com/arts/history-and-culture/article2755518.ece

     

    படம் 3: அழகன்குளம் (மருங்கூர்ப் பட்டினம்) பானை ஓட்டில் 804 எனும் எண்

    (ஒப்பீடு: 128 எண் உள்ள இலங்கை பிராமி (படம் 4) )

    மருங்கூர்ப் பட்டினத்துப் பானை ஓட்டில் உள்ளது 804 எண் ஆகும். ஐராவதம் மகாதேவனார் குறிப்பிட்டது போல இந்த எண் 408 அன்று. மருங்கை ஓட்டில் எண்சின்னங்களில் உள்ள ஹிந்து-அராபிக் எண் 804 எனத் தெரிந்துகொள்ள இலங்கை பிராமிக் கல்வெட்டுகளில் எண் சின்னங்கள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன என்று பார்ப்போம். வட இந்தியாவின் பிராமி கல்வெட்டுகள் யாவும், தமிழ்நாட்டின் சங்கத் தமிழ்க் கல்வெட்டுகளும்  இடமிருந்து வலமாக எழுதப்பெற்றவை. இதற்கு மாறுபாடாக, இலங்கையில் உள்ள பல பிராமிக் கல்வெட்டுகள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டுள்ளன. இது ஏன்? எழுதுவது என்னும் எண்ணம் செமிட்டிக் நாடுகளில் இருந்து வணிகத்தால் வந்தது என்ப. 1901-ல் ராயல் ஆசியாட்டிக் சொசைட்டி ஜர்னலில் விக்கிரமசிங்கே என்னும் அறிஞர் மத்திய கிழக்கு நாடுகளின் செமிட்டிக் மொழி எழுத்துக்கும், பிராமிக்கும் உள்ள பழந்தொடர்பு காரணம் என்று கருதுகிறார் [3]. விக்ரமசிங்கே ’செமிட்டிக் முறையில் எழுத்து வாசகங்கள் இலங்கை பிராமியில் வலமிருந்து இடமாக எழுதத் தொடங்கியதை இந்தியா ஏதோ காரணத்தால் இடமிருந்து வலமாக மாற்றிக் கொண்டாலும் கூட, எண்களை எழுதும்போது ‘செமிட்டிக்’ (Semitic) வலமிருந்து இடமாகத் தான் எழுதப்படுகின்றன. அந்த மிகப் பழைய மரபு இந்திய லிபிகளில் மத்யகிழக்கின் ஒரு தொடர்புக்குச் சான்று’ என்கிறார்: 128 என்ற எண்ணை எழுதும்போது வலக்கோடியில் சிறிய எண்ணான 8, அந்த 8-ன் இடப்புறம் 20 (விம்சதி), 20-ன் இடப்புறம் 100 (ஸதம்) என்று எழுதப்படுகிறது. பிராமி லிபியின் காலத்தில் தசம கணிதமுறை பிறக்கவில்லை என்பதையும் நினைவில் கொண்டால் இவ்வெண்களை வாசிப்பது எளிது.

        

    படம் 4: இலங்கை பிராமியில் 128 எனும் எண். வாமகதி முறையில் வலமிருந்து இடமாக                          

    அஷ்ட-விம்சதி-சதம். (ஒப்பீடு: படம் 3-ல் மருங்கையின் 804).

    சமணர்களின் மணிப்பிரவாள நூல் ஆகிய ஸ்ரீபுராணம் (சென்னைப் பல்கலைக்கழகம்) கல்வியின் தோற்றம் பற்றிய கதையொன்றைத் தருகிறது. ரிஷபநாத தீர்த்தங்கரர் இரு சிறுமியரை மாணவியராக ஏற்று எழுத்தையும், எண்ணையும் கற்பித்தார். அதில் பிராமி என்ற மாணவிக்கு வலக்கையில் எழுத்துக்களைச் சொல்லிக் கொடுத்ததால் இடமிருந்து வலமாக பிராமி எழுத்துக்கள் வளர்ந்தன. ஆனால், சுந்தரி என்னும் பெண்ணுக்கு இடக்கையில் எண்களைத் தீர்த்தங்கரசாமி கற்பித்தார். எனவேதான் எண்களை விவரிக்கும்போது வலமிருந்து இடமாக வளர்வதை இந்தியாவில் காண்கிறோம். தொல்லியல், இலக்கியம், கல்வெட்டு மூலமாக ஆய்வுலகம் காட்டும் இந்திய எண்களின் வளர்ச்சியைத் தான் ஸ்ரீபுராணக் கதையும் சொல்லிச்செல்கிறது. சமணர்களின் ஸ்ரீபுராணம்-ஆதி பர்வம் தரும் எழுத்து, எண் கல்வியின் தோற்றம்:

    “பகவான் இவ்வாறு சொல்லி அவர்களை ஆசிர்வாத வசனங்களால் வாழ்த்தித் தமது ஹிருதய கமலத்தெழுந்தருளியிருந்த ஸ்ருததேவியினை ஸ்வர்ணபட்டகத்தின் மிசை பூஜாபுரஸ்ஸரம் அதிவசிப்பித்து, ஸ்ரீஅஸ்தமிரண்டுனாலும் ஒரு முறையிலேயே எழுத்தினையும் எண்ணையும் அவர்கட்குக் காட்டியருளினர்.

    அங்ஙனம் காட்டி அவருள் பிராம்மியென்னும் பெண்ணிற்கு தக்ஷிண அஸ்தத்தால், ‘சித்தந்நம:’ என்றெடுத்துக் கொள்ளப்பட்ட மங்களத்தையும், அகராதி ஹகாராந்தமாகிய ஸ்வரம் வியஞ்சனமென்னும் இரண்டு பேதத்தினை உடைத்தாகியதும், அயோகவாகங்கள் இரண்டாகவுடையதுமாகிய அக்ஷரமாலையினையும், சம்யோகாக்ஷரங்களது பிறப்பினையும் உபதேசித்தனர்.

    சுந்தரியென்னும் பெண்ணிற்கு வாம அஸ்தத்தினால் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமுதலாக ஒன்றிற்கொன்று பதின்மடங்காகிய கணிதஸ்தானங்களையும். பெருக்குதல், ஈதல் முதலாகிய ஷோடச பரிகர்மங்களையும் உபதேசித்தருளினார். இங்ஙனம் ஸ்வாமி தமது தக்ஷிண அஸ்தத்தினால் எழுத்துக்களை உபதேசித்ததால் எழுத்துக்கள் வலமாக வளர்ந்தன; வாமஹஸ்தத்தினால் எண்களை உபதேசித்தருளியதால் எண்களது ஸ்தானம் இடமாக வளர்ந்தது. சகல சாஸ்திரங்களும் அக்ஷரங்களின்றி நிகழாவாதலின் பிரஜாபதி முந்துற அக்ஷரங்களை உபதேசித்தருளிப் பின்னும் இருவருக்கும் வியாகரணமும், சந்தோவிஸ்சித்தியும், அலங்காரமுமாகிய ஸ்பத சாஸ்திரங்களையும் உபதேசித்தருளினர். அவ்விருவரும் பிரக்ஞாபலத்தால் (புத்தி விசேஷத்தால்) பகவானால் உபதேசிக்கப்பட்ட சகலவித்தைகளையும் உணர்ந்தனர்.” [4]

    ஆக, சங்ககால மருங்கையின் பானை ஓட்டு எண்ணை வார்த்தைகளால் வர்ணிக்கும்போது ‘நான்கு தலையிட்ட எட்டின் நூறு’ என்பது பாரத எண் கணிதத்தின் வாமகதி மரபு. ஹிந்து-அரபி எண்ணாகப் பார்த்தால்,  மருங்கூர்ப் பட்டினப் பானை ஓட்டின் எண்ணின் மதிப்பு 804 தான், 408 இல்லை.  இதனைப் பரவலாக, பிராமிக் கல்வெட்டுகளில் இந்தியாவிலும், ஸ்ரீலங்காவிலும் (படம் 4) ஒப்பிடுதலின் வாயிலாகக் கண்டோம்.

    வலமிருந்து இடமாகப் பேரெண்களை வர்ணித்தல் (வாமகதி முறை):

    ஸ்ரீபுராணத்தில் வலப்பக்கத்தில் இருந்து எண்கள் வளர்ந்தன எனப்படும் கதையை பிராமிக் கல்வெட்டுக்கள், தமிழின் 2000 ஆண்டு இலக்கியங்கள் வழியாகப் பார்க்கலாம். பிராமியில் எண்களை எழுத வாமகதித் தத்துவம், அதாவது வலப்புறம் சிற்றெண்ணில் தொடங்கி பேரெண்களை ஒன்றன் பின் ஒன்றாக இடப்புறமாக எழுதிச் செல்லும் வழிமுறை பயன்படுகிறது. இப் பண்டைய வாமகதி முறையை “அங்காநாம் வாமதோ கதி” என்று சிற்றெண்ணை முதலில் வலப்புறம் எழுதி இடப்புறத்தில் அடுத்தடுத்த பெரிய எண்களை எழுதுதலை வடமொழி கணித சாஸ்திரங்களில் குறிப்பிடுகின்றனர். இந்த வாமகதி முறையைத்தான் ஸ்ரீபுராணத்தில் அழகான கதையாகச் சொல்லியுள்ளனர்.

    புள்ளி உள்ள தமிழ் எழுத்துக்களின் வடிவங்களின் சிறப்பம்சங்களைக் குறிப்பிடும் தொல்காப்பியர் தன் காலத்தில் புழங்கிய பேரெண்களை வாசிக்கும் வாமகதி முறையைப் பல சூத்திரங்களில் தந்துள்ளார்.  உதாரணமாக, தொல்காப்பியம் (புணரியல்) முதல் நூற்பா:

    ”மூன்று தலையிட்ட முப்பதிற்று எழுத்தின்

     இரண்டு தலையிட்ட முதலாகு இருபஃது

    அறுநான்கு ஈற்றொடு நெறி நின்று இயலும்”

    தொல்காப்பியர் காலத்தில் பூஜ்யம் இல்லை. தசமகணித முறையும் கண்டுபிடிக்கப் படாத காலம். ஆனால், 10, 100, 1000 இவற்றுக்குத் தனிச் சின்னங்கள் இருந்தன. 3 (10) 3 = 33. சிறிய எண் 3ஐ வலப்புறம் அமைத்து (மூன்று தலையிடுதல்), அதற்கு இடமாக 3(10) எழுதுதலைச் சுட்டுகிறார். அதுபோலவே,  2 (10) 2 = 22 என்பதையும் வாமகதி முறையில் தொல்காப்பியர் எழுதிக் காட்டியுள்ளார். தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல் நூற்பா ஒன்று பேரெண் 13699-ஐ வாமகதி முறையில் தருகிறது. வாமகதி முறையை அறிந்துகொள்ளாமல் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் பிழைபட எண்களைத் தம் உரைகளில் தருகின்றனர். ஆனால் தொல்காப்பிய முதல் உரைகாரர் இளம்பூரண அடிகளும் யாப்பருங்கல விருத்தியிலும் சமணர்கள் வாமகதி முறையைப் பயன்படுத்திக் காப்பியரின் 13699 எண்ணைச் சரியாக விளக்கியிருப்பது அறிந்து இன்புறத்தக்கது. யாப்பருங்கல விருத்தியின் மேற்கோள் வெண்பா (மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப்பிள்ள பதிப்பு) இதுதான்:

               ஆறிரண்டோ டைந்தடியை ஐந்நான் கிருதொடையான்
               மாறி நிலமைம்பத் தொன்றகற்றத் – தேறும்
               ஒருபதின்மூ வாயிரத்தோடொன்றூன மாகி
               வருமெழுநூ றென்னும் வகை.

    சீவக சிந்தாமணி, புறப்பொருள் வெண்பாமாலை, இலக்கணவிளக்கம் போன்ற பிற்கால நூல்களிலும் இந்த வாமகதி முறை உள்ளது. ’ஓரேழ் தலையிட்ட இருபான் மைந்தர் ’ – குசேலர் மைந்தர் 27  பேர் என 19-ஆம் நூற்றாண்டில் கூடக் குசேலோபாக்கியானம் குறிப்பிடுகிறது.  ”ஆறு தலையிட்ட அந்நாலைந்தும்” (= 26, தொல். செய்யுளியல், 310), “நாலைந்தும் மூன்று தலையிட்ட” (=23, தொல். சொல். 210)  – இவை போல வாமகதியில் எழுதும் பானையோடு கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து அழகன்குளம் என்ற கடற்கரைப் பட்டினத்தில் கிடைத்துள்ளது அருமை.  ஐராவதம் மகாதேவன் மருங்கூர்ப்பட்டினம் (அழகன்குளம்) அளித்த சங்ககாலப் பானையோட்டை இந்து நாளிதழில் 29.12.2011-ல் வெளியிட்டுள்ளார். அந்த ஓட்டில் (படம் 3), 804 என்ற எண் தான் எழுதப்பட்டுள்ளது என இலங்கை பிராமிக் கல்வெட்டு எண் மதிப்பை (படம் 4) வைத்துத் தெளிந்தோம்.  தொல்காப்பியம் அதன் பின்னர் எல்லா நூற்றாண்டுக் கல்வெட்டுகள், இலக்கியங்கள் தரும் எடுத்துக்காட்டுகளைப் பார்த்தால், மருங்கூர்ப் பட்டினப் பானையோட்டுப் பேரெண்ணை “நான்கு தலையிட்ட எட்டின் நூறு”(=804) என்று வாசிக்கவேண்டும். வலப்புறத்தில் நான்கு எனும் எண்ணை எழுதி அதற்கு இடப்புறமாக 8 (100) எழுதப்பட்டுள்ளது. 100 என்பதன் சின்னமாக ஸ (=ஸதம்) உள்ளது. ஐராவதம் வாமகதி முறையை விளக்கியுள்ளார். ஆனால், எண்ணின் மதிப்பு என்று பார்த்தால் 804 தான், 408 அன்று. இதற்கு ஆதாரம். தொல்காப்பியத்தின் நான்கு எடுத்துக்காட்டுகளும், படம் 4-ம் (விக்கிரமசிங்கே, 1901, JRAS). 1996-ல் ஐராவதம் அவர்கள் அரிகமேடு அகழாய்வில் பெரிய எண்களுடன் கிடைத்த பானை ஓடுகளை வெளியிட்டார்.  அருகமேட்டுப் பானையோட்டில் 855 = = ௮௱ ௫௰ ௫ என்ற எண் உள்ளது. அதை “ஐந்து தலையிட்ட ஐம்பதிற்று எண்ணூறு” என்று வாமகதி முறையில் எழுதி வாசிக்கவேண்டும்.

    வாமகதி முறையின் பிற்கால வளர்ச்சி:

    தென்னிந்தியாவில் கி.பி. 600-ல் இருந்து கி.பி. 1300 வரை செப்பேடுகளிலும், கல்வெட்டுக்களிலும் எண்கள் ஒவ்வொன்றுக்கும் பல பெயர்கள் அளிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக,  0=சூன்யம், 1=ஆதி, 2=லோசனம், 3=திரிகுணம், …. இந்த எண்சமானப் பெயர்களை வைத்து ஆண்டுகள் சுலோகங்களாக எழுதப்படுகின்றன. இயற்கைப் பொருள்களின் பெயர்களால் எண்களைக் குறிக்க வைக்கும் இம்முறையை பூதசங்கை (Word-numerals) என அழைத்தனர். வேத-அங்க-அப்தி-இந்து என்றால் 4-9-4-1. தற்கால நடைமுறை ஹிந்து-அரபி எண்ணாக அறிய வேண்டுமெனில் சக 1494-ஆம் ஆண்டு என்று திருப்பிப் படிக்க வேண்டும்.  ஸ்ரீபுராணம் சொல்லும் வழியில் வலமிருந்து இடமாக பெரிய எண்ணை வார்த்தைகளால் வர்ணிக்கும் இம்முறை பாரதநாடு முழுதும் 2000 ஆண்டுகளாக இருந்தது. எண்களுக்குத் தனித்தனி வார்த்தைகள் கொடுக்கும்  இந்தப் பூதசங்கை முறையில் யாப்புடன் பாடல்கள் எழுதுவது கடினம். எனவே, சம்ஸ்க்ருத நெடுங்கணக்கில் ஒவ்வோர் எழுத்துக்கும் ஓர் எண் என்றளிக்கும் கணித முறை தமிழகத்தில் நான்காம் நூற்றாண்டில் பிறக்கிறது. இக் கடபயாதி முறையிலே ஓர் எண்ணுக்குக் குறியீடாக பல எழுத்துக்கள் நெடுங்கணக்கில் இருக்கின்றன. எனவே நினைவில் கொள்ளும் வகையில் வாக்கியங்கள் அமைப்பதும், யாப்புடன் ஶுலோகங்கள் பாடுவதும் எளிதாகிவிடுகின்றன. சங்ககாலத் தமிழெண்கள், பூத சங்கை கடபயாதி சங்கை – என்ற இந்த மும்முறைகளிலும் பேரெண்களை வார்த்தைகளால் வர்ணிக்கும் போது  வலமிருந்து இடமாய்ச் சொல்வது பிராமி எழுத்துமுறைக்கும் மத்யகிழக்கின் ’செமிட்டிக்’ எழுத்துக்களுக்கும் உள்ள ஓர் தொடர்பு என்று கருதலாம். இன்றும் அரபியும், இஸ்ரேலில் ஹீப்ரு மொழியும் வலமிருந்து இடமாக எழுதுகிறார்கள் அன்றோ? ஸ்ரீரங்கத்தில் சதாசிவராயர் காலக் கல்வெட்டில் “சேதுவந்த்யம்” என்றுள்ளதற்கு ஸ=7, த=6, வ=4, ய=1. அதாவது சகவருஷம் 1467-ஆம் ஆண்டு. குருவாயூர் உண்ணிகிருஷ்ணன் பேரில் தமிழர் யாத்த பாகவத புராணத்தைச் சுருக்கி எழுதிய மேல்புத்தூர் பட்டதிரி நூல் எழுதி முடித்த நவம்பர் 27, 1587-ஐக் கடபயாதி சங்கையாய் ‘ஆயுராரோக்கிய சௌக்கியம்’ என்கிறார். திருக்கண்டியூரில் கோதைவர்மன் காலக் கல்வெட்டு கலியுக நாள் என்று 1-5-1-1-5-6-4 என கடபயாதிச் சொற்களாய் அளிக்கிறது.  அதாவது, எழுத்திலிருந்து ஹிந்து-அரபி எண்ணாக்கும்போது  கலிதினம் 465,115,1 என்றெடுத்து சக வருஷம் கணிக்க வேண்டும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இந்த வாமகதி முறை பழக்கத்தில் இருந்தது. தொல்காப்பியரும், அவர் பின்வந்தோரும் தமிழிலும் சிறிய எண்ணை முதலில் எழுதி, மேற்கொண்டு பேரெண்களை விரிப்பதை முன்னரே பல உதாரணங்களால் கண்டோம். அதை ஒத்ததே, (i) பூதசங்கை,      (ii) கடபயாதி சங்கை இரண்டிலும் வார்த்தைகளாக வரும் எண்களைத்  திருப்பிப்போட்டு ஹிந்து-அரபி எண்களைக் கண்டறிந்து வாசிக்க வேண்டும். 804 என்ற ஹிந்து-அரபி எண் மதிப்புடன் விளங்கும் அழகன்குளம் பானை ஓட்டுப் பேரெண்ணை “நான்கு தலையிட்ட எட்டின் நூறு” என வலமிருந்து இடமாக அக்கால முறையில் படிக்கலாம்.  தற்காலத்தில் கர்நாடக சங்கீதத்தின் 72 மேளகர்த்தா ராகப் பெயர்களும் கடபயாதி முறையில் அமைந்துள்ளன. ராகப் பெயர்களின் முதல் இரண்டு எழுத்துக்கள் அதற்கான இடத்தைக் காட்டிவிடும். கடபயாதி முறை கணினியியலின் இன்றைய ஹேஷிங் அல்காரிதத்துடன் உறவுடையது, நெடுங்காலமாகத் தமிழிலும், மற்ற இந்திய மாநிலங்களிலும் இருந்த எண்கணிதத்தின் (arithmetic) வாமகதி முறை அழிந்து இப்பொழுது தசம கணித முறை வேரூன்றி விட்டது. பேரெண்ணில் தொடங்கிக் கடைசியில் சிற்றெண்ணை நோக்கி இடமிருந்து வலமாக வாசிக்கும் முறைக்குத் தமிழ்க் கணிதம் பூஜ்யச் சின்னத்துடன் ஆங்கிலேயர் ஆட்சியில் சுமார் 200 ஆண்டு முன்னர் மாறிவிட்டது. கணினியும், இணையமும், அச்சுத் தொழிலும் நவீனமாக இயங்க இந்தியாவின் கணித வளர்ச்சிக்கும் முக்கியப் பங்குண்டு.

    ஆய்வுத்துணை:

    [1] Casson, L., 1992, ‘Ancient Naval Technology and the  Route to India’ in Rome and India: The ancient sea trade, ed. Vimala Begley and R. De Puma, N. Delhi, OUP, pp. 8-11.

    [2] V. Kanakasabai,  1904, “The chief town on this coast was “the far-famed port of Saaliyur, ever crowded with ships, which have crossed the perilous dark ocean, and from which costly articles of merchandise are landed, while flags wave on their mast-tops, and drums resound on the shore” (Madurai-k-kaanji), pg. 23, Tamils 1800 years ago.

    [3] De Zilva Wickremasinghe, Don M.,  1901 The Semitic Origin of the Indian Alphabet, The Journal of the Royal Asiatic Society, p. 301-305.

    [4]  I thank Sri. R. Banukumar, Tamil Jain scholar, for providing the Sripuranam textual material on how the Theerthankarar taught the science of letters and arithmetic to the girls, Brahmi and Sundari respectively.

    Share