ஔவையார் எழுதிய புகழ்பெற்ற அறநூல்களில் ஒன்று ’ஆத்திசூடி’ என்பது அனைவரும் அறிந்ததே. ஆயினும், அதில் ஆத்திசூடியாகக் குறிக்கப்படுபவர் யார் என்பதில் அறிஞர் பெருமக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதுகுறித்து ஓர் சுவையான கருத்தாடல் நிகழ்த்தி ஆத்திசூடி குறித்த பல புதிய தகவல்களை வாசகர்களுக்கு அறியத் தரலாமே என்ற எண்ணத்தின் வெளிப்பாடே ‘ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்’ எனும் இப்பகுதி.
இதில் அறிஞர்கள் பலர் பங்கேற்று ’ஆத்திசூடி’ பற்றித் தங்கள் கருத்துக்களை, விளக்கங்களை நம்முன் படைக்க இருக்கின்றார்கள்.
முதலில், ’ஆத்திசூடி’ என்பது சமண சமயத்தைச் சேர்ந்த தீர்த்தங்கரர் ஒருவரைக் குறிப்பதாகும் என்று நிறுவ வருகின்றார் முனைவர் நா. கணேசன் அவர்கள்.
இனி அவருடைய கருத்துக்கள் நம் சிந்தனைக்கு…
“ஆத்திசூடி அமர்ந்த தேவன்” என்று சமணர்கள் கொண்டாடும் தேவர், பார்சுவநாத தீர்த்தங்கரர். அவர் ஒரு வரலாற்று நாயகர். பார்சுவநாதர், நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சமணர்களின் 23-ஆவது தீர்த்தங்கரராகப் போற்றப்படுபவர்.
அரச குலத்தில் தோன்றிய பார்சுவநாதர் நூறு ஆண்டுகள் உயிர்வாழ்ந்தார். தம் வாழ்நாளில் 30 ஆண்டுகள் இல்லறத்தை மேற்கொண்டும், 70 ஆண்டுகள் துறவறத்தை மேற்கொண்டும் சிறப்புற்றார். உயிர்க்கொலை, சாதிப் பாகுபாடு ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தவர் அவர்.
போதி மர நீழலில் புத்தர் ஞானம் பெற்றதுபோல, ஆத்தி (வடமொழியில் தாதகி என்பர்) மர நீழலில் தவஞ்செய்து ஞானம் அடைந்தவர் பார்சுவநாதர். புத்தரும், பார்சுவநாதரும் காசி அருகே மகத மண்டலத்திலே சமகாலத்தில் வாழ்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.
ஔவைக் குரத்தியார் தாம் எழுதிய ஆத்திசூடி என்ற நூலின் கடவுள்வாழ்த்துப் பாடலில்,
”ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே” என்று ஆத்திமர நீழலில் அமர்ந்து ஞானம் பெற்ற பார்சுவநாதரையே குறிப்பிடுகின்றார். ஏனெனில் ’சூடுதல்’ என்றால் ’அணிதல்’ என்ற பொருள்மட்டுமின்றிச் சூழ்ந்து கவிந்திருத்தல் என்ற பொருளும் உண்டு. அந்த அடிப்படையில் ஔவையால் ’ஆத்திசூடி’யாகச் சுட்டப்படுவர் பார்சுவநாதரே எனக் கொள்வதில் தவறேதுமில்லை.
அலங்காரமான ஆத்தி/தாதகி நீழலில் அமரும் தேவன்:
’சூடுதல்’ என்ற சொல்லுக்குச் சூழ்ந்து கவிந்திருத்தல் என்ற பொருள் இருப்பதைச் சென்னை தமிழ்ப் பேரகராதியும் உறுதிசெய்கின்றது.
Madras Tamil Lexicon:
சூடு¹-தல் cūṭu-
To surround, envelope; கவிதல்.
இதற்கான சான்றுகள் சில சங்க நூல்களிலிருந்தும் கீழே தரப்பட்டுள்ளன:
சான்று 1:
புறநானூறு 35
நளியிரு முந்நீ ரேணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்…
உரை: நளியிரு முந்நீர் ஏணியாக – நீர் செறிந்த பெரிய கடல்
எல்லையாக; வளியிடை வழங்கா – காற்று ஊடு போகாத; வானம்
சூடிய மண்திணி கிடக்கை – வானத்தைச் சூடிய மண்செறிந்த
உலகத்தின்கண்; தண் தமிழ்க் கிழவர் – குளிர்ந்த தமிழ்நாட்டிற்
குரியராகிய;
சான்று 2:
வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும்பாண். 409).
இதற்கு நச்சினார்க்கினியரின் உரை:
409-10: புலவு கடல் உடுத்து வானம் சூடிய மலர்தலை உலகத்துள்ளும்-புலால் நாற்றத்தையுடைய கடல்சூழ்ந்த ஆகாயங்கவிந்த அகன்ற இடத்தையுடைய உலகத்து நகரில் விசேடித்தும்,
சான்று 3:
வான்கவிந்த வையகமெல்லாம்” (நாலடி.பொறை.10)
சான்று 4:
ஐங்குறுநூறு 209
அன்னாய் வாழிவேண் டன்னை நீமற்று
யான்அவர் மறத்தல் வேண்டுதி யாயின்
கொண்டல் அவரைப் பூவின் அன்ன
வெண்டலை மாமழை சூடித்
தோன்றல் அனாதுஅவர் மணிநெடுங் குன்றே.
இவையல்லாது, ஆத்திமரத்தின் கீழ் அமர்ந்த தீர்த்தங்கரர் (பார்சுவநாதர்) மீதான பாடல் தமிழிலக்கண நூலான வீரசோழியத்தில் உள்ளது. மேலும் ஒரு பாடல் அகத்துறையாய்ச் சோழ மன்னன் மீதும் இருக்கிறது. பார்சுவநாதரது அடியாராகிய ஒரு குரவடிகள் சோழமன்னர்களுக்கு ஆத்தியைக் குலமரமாகப் பரிந்துரைத்திருக்கலாம் என்று எண்ணுதற்கும் இடமுண்டு.
’ஆத்திசூடி’ சிவபெருமானைக் குறித்தது என்று கருதுவோரும் உளர். ஆனால் அதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. ஆத்தியைச் சிவனது திருமேனியிலே காட்டும் சிற்பங்களோ, தேவாரமோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பல சிற்பங்களில் ஆத்தி தாவரமும், நாகக் குடையும் கொண்டு பார்சுவநாத தீர்த்தங்கரரே விளங்குகிறார்.
சுமார் 1500 வருடப் பழமை வாய்ந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று கர்நாடகாவில் கிடைத்துள்ளது. தீர்த்தங்கரசாமிமேல் முழுவதும் ஆத்தி தாவரம். அந்த அலங்காரத்தின் உச்சியில் ஒரே ஓர் அரவம். இந்த உச்சி நாகத்தால்தான் அந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் பார்சுவர் என அடையாளம் தெரிகின்றது.
எனவே, ஆத்திசூடி நூலின் கடவுள்வாழ்த்தில் ’ஆத்திசூடி’யாகக் குறிப்பிடப்படுவர் சமண தீர்த்தங்கரராகிய ‘பார்சுவநாதரே’ என்பது ஐயத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது.



Leave a Reply