— கவிஞர் காவிரிமைந்தன்

 

பருவம் எனது பாடல் … – ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக – கவிஞர் வாலியின் வரிகள்!!

 

பருவம் எனது பாடல்.. இப்படத்தில் முதல் பாடல்! முத்தான பாடல்! குழுவினர் நடனத்தோடு அந்தக் குதூகலம் அரங்கேறுகிறது! மாடமாளிகையின் மைய மண்டபம்.. சித்திரம்போல் எழுதிவைத்த சிங்காரியின் வருகையை கலைநுணுக்கங்களோடு கண்ணுக்கு விருந்தாக்கிப் படைக்கிறது! இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் கற்பனை காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆம்.. அதோ வருகிறாள் கதையின் நாயகி.. அறிமுகக் கட்டத்தை இப்படி ஆராதிக்க ஒரு கவிஞனால் மட்டுமே முடியும் என்று கருதிதான் பாடல்காட்சியாக அமைக்கப்பட்டிருக்கிறது. வரிகளை வரிந்து கட்டிக்கொண்டு எழுதியிருக்கிறார் கவிஞர் வாலி வண்ணத்தமிழில் வசந்தவிழா எடுக்க.. எண்ணங்களில் கோலம்வரைந்த இயக்குனர் கைவண்ணம் நம் கண்களில் விரிகிறது! அழகு மயிலொன்று ஆடிவருகிறது!

பருவம் எனது பாடல்..
பார்வை எனது ஆடல்..
கருணை எனது கோயில்..
கலைகள் எனது காதல்!

முதல் நான்கு வரிகளுக்கு முத்திரை பதிக்கும் காட்சிப்படிமங்கள்!

கன்னித்தீவின் இளவரசி.. கட்டழகுப் பெட்டகமாய்.. கலைகளையெல்லாம் கற்றுக் காத்திருக்கிறாளோ.. கதையின் நாயகன் வருகைக்காக!

50 வருடங்களுக்குப் பிறகும் அன்று பூத்தமலர்போல வாடாமல் இருக்கிற பவளமல்லிகை.. தமிழ்த்திரையிசைப் பாட்டுச்சுரங்கத்துள் கொட்டிக்கிடக்கும் முத்துமாலை! காதுகளை மட்டுமல்ல! இதயங்களையும் கவனமாக வைத்துக் கேளுங்கள்! எப்படியும் களவாடப்பட்டிருக்கக்கூடும் உங்கள் இதயம்!

பருவம் எனது பாடல்…

பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில்
கலைகள் எனது காதல்
கருணை உனது கோயில்
கலைகள் உனது காதல்

இதயம் எனது ஊராகும்
இளமை எனது தேராகும்
மான்கள் எனது உறவாகும்
மானம் எனது உயிராகும்
மான்கள் உனது உறவாகும்
மானம் உனது உயிராகும்
தென்றல் என்னைத் தொடலாம் –
குளிர்த்திங்கள் என்னைத் தொடலாம்
மலர்கள் முத்தம் தரலாம் –
அதில்மயக்கம் கூட வரலாம்
(பருவம்)

சின்னஞ்சிறிய கிளி பேசும்
கன்னங்கரிய குயில் கூவும்
பறவையினங்கள் துதி பாடும்
பாவை எனக்குத் துணையாகும்
பறவையினங்கள் துதி பாடும்
பாவை உனக்குத் துணையாகும்
பழகும் விதம் புரியும் –
அன்பின்பாதை அங்கு தெரியும்
பயணம் அதில் தொடரும் –
புதுவாழ்க்கை அங்கு மலரும்

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *