தெரியாதவைகள்
பத்மநாபபுரம் அரவிந்தன்
வண்டுகள் தேனுறியும் போது
மலர்கள் ரசிக்குமா? துடிக்குமா?
பூமி துளையுற்று
ஊற்றுக்கண் உடைபட்டு
நீர் பொங்கி வழிகையில்
பூமி நடுங்குமா? பூரிக்குமா?
மலை தடவிச் செல்லும் மேகம்
உள்ளுள் சிலிர்க்குமா? அதைத்
தடையென்று நினைக்குமா?
ஆற்றின் கரையுடைத்துப்
பாய்ந்தோடும் புது வெள்ளம்
தன் சுதந்திரத்தை ருசிக்குமா?
ஆற்றை விட்டு வந்ததில்
சோகமாய்த் தவிக்குமா?
கூண்டுள் அடைபட்ட பறவைகள்
பெருவானை நினைக்குமா?
கூடேதான் வானமென்று கிடக்குமா?
இப்படித் தொடரும்
கேள்விகள் இன்றோடு முடியுமா?
தினந்தோறும் தொடருமா??