Author: மு. இளங்கோவன்

  • தெருக்கூத்துக் கலைஞர் பட்டுக் கவுண்டர்!

    -முனைவர் மு.இளங்கோவன்

    நான் பணிபுரியும் அலுவலகத்திற்கு இரண்டு நண்பர்கள் அண்மையில் வந்தனர். ஒருவர் முன்பே அறிமுகம் ஆனவர். அவரின் பெயர் திரு. குணசேகரன் என்பதாகும். பொ.தி.ப. சாந்தசீல உடையார் அலுவலகத்தில் கணக்கராகப் பணிபுரிந்தவர். உடன் வந்தவர் அவரின் தம்பி திரு. சரவணன் ஆவார். வந்தவர்கள் பலபொருள்குறித்து என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் எங்களின் பேச்சானது தெருக்கூத்து நோக்கி நகர்ந்தது.

    புதுச்சேரியில் மிகுதியான தெருக்கூத்துக் கலைஞர்கள் இருந்துள்ளமையையும் அவர்களைப் பற்றிய போதிய பதிவுகள் இல்லாமல் உள்ளதையும் அவர்களிடம் தெரிவித்தேன். என்னுடன் உரையாடிய சரவணன் தெருக்கூத்துக் கலைஞர் என்பதையும், கலைமாமணி கோனேரி இராமசாமி அவர்களின் கலைக்குழுவில் உள்ளவர் என்பதையும் அறிந்து மகிழ்ந்தேன்.

    சரவணன் அவர்களிடம், தங்களுக்குத் தெரிந்த மூத்த தெருக்கூத்துக் கலைஞர்கள் புதுவையில் உள்ளனரா? என்று வினவினேன். கல்விப் புலத்திலிருந்து தங்கள் கலையை நோக்கி வினவுபவர் உள்ளாரே என நினைத்து, ஆர்வமுடன் உரையாடலை அவரும் தொடர்ந்தார். தங்கள் உறவினர்கள் பலர் கூத்துக்கலைஞர்கள் எனவும், தங்கள் உறவினருள் அகவை முதிர்ந்த கூத்துக்கலைஞர் ஒருவர் இப்பொழுதும் உள்ளார் எனவும் தெரிவித்தார். அன்றுமுதல் அகவை முதிர்ந்த அந்தக் கூத்துக் கலைஞரைச் சந்திப்பதற்குத் திட்டமிட்டேன்.

    கூத்துக்கலைஞர் சரவணன் தம் வாழ்க்கையை நடத்துவதற்கு உரிய தொழிலாகத் திருமணக்கூடங்கள், விழா மேடைகள் ஆகியவற்றை ஒப்பனைப்படுத்தும் கலைஞராகவும் கூடுதல் பணிகளைச் செய்வது உண்டு. திருமண நாளில் மண்டபங்களில் மணமேடையை அழகுப்படுத்துவது, அதனைப் பிரித்தெடுத்து மீண்டும் அடுத்த மண்டபத்துக்குக் கொண்டு செல்வது, அங்குப் பணி முடிந்த பிறகு வீட்டுக்குக் கொண்டுவருவது என்று எப்பொழுதும் பணி அழுத்தமாக இருப்பவர். நான் அழைக்கும்பொழுது இதனைக் கூறி, விலகிக்கொள்வார். அவர் அழைக்கும்பொழுது நான் அலுவலகத்தில் உழன்றுகொண்டிருப்பேன்; அல்லது அயலகப் பயணங்களில் இருப்பேன். இருவரும் சந்திக்கும்பொழுது ஒளி ஓவியர் எங்களுடன் இணையமுடியாதபடி சூழல் இருக்கும்.

    இன்று(04.03.2017) மாலை ஒளி ஓவியர், கூத்துக்கலைஞர், நான் மூவரும் ஒருபுள்ளியில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டுப் புதுவையின் கடைசி எல்லைப்பகுதியில் இருந்த நாவற்குளம் பகுதியை அடைந்தோம். ஒருகாலத்தில் நாவல் மரங்கள் நிறைந்திருந்த பெரும் தோப்புகளும், பனந்தோப்புகளும், பொன்விளையும் பூமியுமாக இருந்த நாவற்குளம் என்ற செம்மண் நிலம் இன்று, சிமெண்டு மாளிகைகள் எழுப்பப்பெற்று, சமூகத்தில் முதன்மையானவர்கள் வாழும் இடமாக மாறிவிட்டது.

    எங்களின் வருகைக்குக் குணசேகரனும் சரவணனும் காத்திருந்தனர். சாலையை ஒட்டிய ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். வீட்டின் முன்பகுதியில் ஒரு அகவை முதிர்ந்த பெரியவர் அமர்ந்திருந்தார். என்னை அழைத்துச் சென்று அந்தப் பெருமகனாரிடம் அறிமுகம் செய்தனர். முன்பு என்னைப் போல் மூவர் சென்று உரையாடித் திரும்பியுள்ளனர். அவர்களின் செயலால் சோர்வுற்று இருந்த பெரியவர் என்னையும் அந்தப் பட்டியலில் இணைத்து, நினைத்ததில் தவறு ஒன்றும் இல்லை. மனச்சோர்வுடன்தான் பேசினார்.

    குடும்பத்தில் இருந்தவர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தனர். அகவை முதிர்ந்த அந்தக் கூத்துக்கலைஞரை உள்ளே அழைத்து, விளக்கொளியில் அமரச் செய்து உரையாடத் தொடங்கினோம். “பேட்டி”காணும் செய்தியாளர்கள் என்ற பெயரில் யாரேனும் வந்திருந்தால் வந்த வேகத்தில் திரும்பியிருப்பார்கள். ஐயாவை எங்களின் வழிக்குக் கொண்டு வருவதற்குப் பெரும் பாடுபட்டோம்.

    என் பெயர் பட்டுக் கவுண்டர். அப்பா பெயர் பெரியதம்பி, அம்மா பெயர் காத்தாயி. இப்பொழுது எனக்குத் தொண்ணூற்றெட்டு வயது ஆகிறது என்றார். பிறந்து வளர்ந்தது, படித்தது, வாழ்ந்தது எல்லாம் இந்த ஊரில்தான். தாய் மாமன் சு. இராஜகோபால் அவர்களிடம் தெருக்கூத்துப் பாடல்களையும், நாடகப் பாடல்களையும் கற்றுக்கொண்டேன் என்றார். இந்தத் தகவலைப் பெறுவதற்குள் பெரும் முயற்சி எனக்குத் தேவைப்பட்டது. நான் கத்திக் கதறி விவரங்களை வாங்குவதற்குள் அக்கம் பக்கம் இருந்தவர்கள் கூடினர். அகவை தொண்ணூற்று எட்டு என்றாலும் இன்னும் கண்ணாடியில்லாமல் செய்தித்தாளைப் படிக்கின்றார்.

    திரு. பட்டுக் கவுண்டர் அவர்கள் பெருகிய நிலங்களைக் கொண்ட வளமான வாழ்க்கை வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தாத்தா அந்நாளைய பிரெஞ்சு அரசுக்குத் துப்பாக்கிக்குப் பயன்படும் பொருள்களைச் செய்து வழங்கியுள்ளார். அதனால் புதுவையின் ஒதுக்குப்புறமாக இருந்த இவர்களின் நிலங்கள் வரை புதுச்சேரியின் எல்லையைப் பிரெஞ்சியர் அமைத்தனர் என்பதை அறியமுடிந்தது. சற்றுத் தொலைவில் ஆங்கிலேயர்களின் முகாம்(கேம்ப்) இருந்துள்ளதையும் உரையாடலில் அறிந்தேன்.

    Pattu2பட்டுக் கவுண்டர் தம் வீட்டை ஒட்டிய பகுதியில் அக்காலத்து இளைஞர்களாக இருந்த உறவினர்களை ஒன்றிணைத்துத் தெருக்கூத்தினைக் கற்றுள்ளார். இவர்களுக்கு ஆசிரியராக இருந்து, இராஜகோபால் என்பவர் தெருக்கூத்துக் கலையை அனைவருக்கும் பயிற்றுவித்துள்ளார். பலநாள் பயிற்சி எடுத்து, அரங்கேறிய தெருக்கூத்துக் கலைஞர்கள் கோவில் திருவிழாக்களிலும், கோடைக் காலங்களிலும் அந்தநாளில் தெருக்கூத்து ஆடியுள்ளனர். பக்கத்து ஊர்களிலிருந்து தெருக்கூத்துக்குத் தேவையான இசைக்கருவிகள், ஒப்பனை செய்வதற்குரிய அணிகலன்கள், கட்டைகள் வாடகைக்கு அமர்த்திப் பயன்படுத்தியுள்ளனர். அருகில் உள்ள ஊர்களுக்கும் சென்று தெருக்கூத்து ஆடியுள்ளனர்.

    பட்டுக் கவுண்டர் தருமன், கண்ணன், நாரதன், வசிஷ்டர், அபிமன்யு என்று பல்வேறு பாத்திரங்களில் ஆர்வமாக நடித்தவர். இன்றும் மெல்லிய குரலில் இந்தப் பாத்திரங்கள் பாடும் பாடல்களைப் பாடிக்காட்டித் தம் இளமைக்காலத் தெருக்கூத்து அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பாடல்களைப் பாடும்பொழுது அடிக்கடி களைப்படைந்துவிடுகின்றார். நினைவுக்குச் சில பாடல்களையும் உரையாடல்களையும் ஒளிப்பதிவு செய்துகொண்டோம். இருபத்தைந்து வயதில் தெருக்கூத்து ஆடத் தொடங்கிய பட்டுக் கவுண்டர் 60 வயது வரையும் தெருக்கூத்தின் உச்ச நிலையைத் தொட்ட கலைஞராக விளங்கியுள்ளார். தெருக்கூத்துக் கலைஞர்கள் சிலரிடம் புகுந்துள்ள மது, புலால் உண்ணுதல் என்ற பழக்கங்கள் இல்லாதவராகவும், அறச்சிந்தனை கொண்டவராகவும் விளங்கும் பட்டுக் கவுண்டர் அவர்கள் போற்றி மதிக்கத்தக்க கலைஞர் என்பதில் ஐயமில்லை.

    பட்டுக் கவுண்டர் அவர்களின் மகன் பெருமாள்சாமியும் தெருக்கூத்துக் கலைஞர். இப்பொழுது பகலில் தச்சுத்தொழிலும், இரவில் தெருக்கூத்துப் பணியுமாக உள்ளார். பட்டுக் கவுண்டரின் பெயரன் பற்குணன் கணினி வரைகலையில் பயிற்சிபெற்று வருகின்றார். இவரும் இளம் அகவையிலையே தாத்தாவுடன் இணைந்து தெருக்கூத்தினைப் பார்ப்பது, பாரதக் கதை கேட்பது என்று விருப்பத்துடன் இருந்து, தெருக்கூத்தில் கண்ணன் வேடம் அணிந்து, பாட்டிசைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுவருபவர். மூன்று தலைமுறைக் கூத்துக்கலைஞர்களை ஓரிடத்தில் சந்தித்த மன நிறைவு எனக்கு ஏற்பட்டது. மூவரின் பாடலையும் ஒளிப்பதிவு செய்தோம்.

    நாவற்குளம் பகுதி வளர்ச்சி அடைவதற்குச் சாலை அமைக்கவும், பள்ளிக்கூடம் கட்டவும், கோயில் கட்டவும் கோடிக்கணக்கான மதிப்புடைய தம் நிலங்களை அன்பளிப்பாக வழங்கிய கொடை நெஞ்சர் பட்டுக் கவுண்டர் என்பதை அறிந்து கைகுவித்து வணங்கித் திரும்பினேன்.

    Share
  • பெருஞ்சித்திரனாரின் பாடல்களில் குமுகச் சிந்தனைகள்

    -முனைவர் மு.இளங்கோவன்

     ‘மாந்தரை மீமிசை மாந்தராக மலர்த்துவன பாடல்களாகும். பாட்டுஉணர்வு உணர்வுகளின் உயர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே நம் முன்னோர்கள் சிறந்த பாட்டுணர்ச்சி உடையவர்களாகவும் இசையீடுபாடு கொண்டவர்களாகவும் விளங்கியுள்ளனர்’ என்ற கருத்தினைக் கொண்டவர் பெருஞ்சித்திரனார் ஆவார். மேம்பட்ட பாட்டுணர்வால், இருபதாம் நூற்றாண்டுப் பாட்டிலக்கிய வரலாற்றில் தமக்கெனத் தனித்த இடத்தைப் பெற்றவராக இவர் விளங்குபவர். இவரின் பாடல்களில் பொதிந்துள்ள குமுகச் சிந்தனைகளை இக்கட்டுரை முன்வைக்கின்றது.

    amu

    பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை. மாணிக்கம் என்பதாகும். சேலம் மாவட்டத்தில் பிறந்த இவர் உலக ஊழியர், தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார், மொழிஞாயிறு பாவாணர் உள்ளிட்ட அறிஞர்களிடம் தமிழ் கற்கும் வாய்ப்பினைப் பெற்றவர். இப்பெருமக்கள் யாவரும் இயல்பிலேயே தமிழறிவும், தமிழ் உணர்வும் தழைத்தவர்களாக விளங்கியவர்கள். இவர்களிடம் கற்ற பெருஞ்சித்திரனார் பின்னாளில் தமிழ் இலக்கிய உலகில் போற்றப்படும் முன்னோடிப் பாவலராக மலர்ந்தவர்.

    பெருஞ்சித்திரனார் இளம் அகவையிலேயே பாடல் எழுதவும், பாவியம் புனையவுமான பேராற்றல் கொண்டிருந்தவர். தம் பதின்மூன்றாம் அகவையிலேயே பூக்காரி என்னும் பாவியம் வரைந்தவர். கையெழுத்து ஏடுகள் நடத்தியவர். புதுச்சேரி அஞ்சல் துறையில் பணியில் இணைந்த இவருக்குப் பாவேந்தரிடம் அமைந்த தொடர்பு, பாட்டுத்துறையில் மிகப்பெரிய ஈடுபாட்டை உருவாக்கியது. பணிமாறுதலால் கடலூருக்கு இவர் சென்றபொழுது அங்குத் தென்மொழி என்னும் இலக்கிய ஏட்டினைத் தொடங்கி(1959) நடத்தியவர். இக்காலகட்டத்தில் தென்மொழி ஏட்டிலும் தமிழகத்தில் வெளிவந்த பிற ஏடுகளிலும் தமிழுணர்வு தழைக்கும் பாடல்களை இயற்றி இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் தமிழுணர்வை ஊட்டும் பணியில் ஈடுபட்டவர்.

    பெருஞ்சித்திரனார் ஐயை,  கொய்யாக்கனி,  பாவியக்கொத்து உள்ளிட்ட பாவியங்களையும், கனிச்சாறு, பள்ளிப் பறவைகள், நூறாசிரியம் உள்ளிட்ட பாட்டுத் தொகுதிகளையும் இயற்றியவர்.

    பெருஞ்சித்திரனார் காலத் தமிழக நிலை

    பெருஞ்சித்திரனார் பிறந்து (1933)  வளர்ந்த காலகட்டம் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க காலகட்டமாகும். பெரியாரின் தன்மதிப்புச் சிந்தனைகள், பகுத்தறிவுப் பார்வை,  ஆரிய,  புராண, இதிகாச எதிர்ப்புகள் நாடெங்கும் சுடர்விட்டு நின்றன. தவத்திரு மறைமலையடிகளாரின் தனித்தமிழ்ப் பார்வை தமிழகத்தில் நல்ல வளர்ச்சி பெற்ற சூழல் நிலவியது. பாவாணரின் மொழி, இன மீட்சி ஆய்வுகள் மக்களிடம் பரவலாக அறிமுகம் பொற்றிருந்தன. சமற்கிருத மேலாண்மை, கட்டாய இந்தித் திணிப்பு, ஆங்கில வல்லாதிக்கம் மேலோங்கியிருந்த காலகட்டத்தில் பெருஞ்சித்திரனாரின் இலக்கியப் பணி தொடங்கியது. தமிழகத்தில் நிலவிய இச் சூழலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கல்வி உலகத்தில் கருத்துடையோர் இருந்தமையையும் இங்குக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

    வடமொழிச் சார்பாளர்களும், அம்மொழியிலிருந்தே தமிழுக்கு அனைத்தும் வந்தன என்போரும், வடமொழிச் சார்பின்றித் தமிழ் தனித்து இயங்காது என்போரும் அக்காலத்தில் மிகுந்திருந்தனர். தமிழ்ப் பேராசிரியர்கள் சிலரும் இக் கருத்துகளைக் கொண்டிருந்தனர். மேலும் கொச்சைத் தமிழ்தான் தமிழ் என்றும், தூய தமிழ் காலத்துக்கு உதவாது என்றும், இந்தி படிப்பது நன்மை தரும் என்றும் சில அறிஞர்கள் கருத்தினை முன்வைத்தனர். இவற்றை எதிர்க்கும் போர்முரசமாகப் பெருஞ்சித்திரனாரின் பாட்டுக்குரல் ஒலித்துள்ளது. தமிழீழப் போராட்டம் வேர்விட்டுப் பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருந்த காலம் பெருஞ்சித்திரனாரின் இயக்கப்பணிக் காலமாகும். இதனால் இயக்க ஈடுபாடுள்ள இளைஞர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பவராகவும் பெருஞ்சித்திரனார் விளங்கினார்.

    பெருஞ்சித்திரனார் தமிழில் நல்ல புலமையும், தமிழியச் சிந்தனையும் கொண்டவராக விளங்கித் தமக்கெனத் தனித்த கொள்கைகளை வகுத்துக்கொண்டு செயல்படத் தொடங்கியவர். தமிழினத்தின் பெருமையையும் அவர்களின் மொழிச் சிறப்பையும் இடைக்காலத்தில் தமிழுக்கு நேர்ந்த கேடுகளையும் வரலாற்று வழியாக உணர்ந்திருந்த பெருஞ்சித்திரனார் தமிழர்களையும் தமிழ்மொழியையும் மேம்படுத்தும் நோக்கில் தம் படைப்புகளை வழங்கத் தொடங்கினார். தம் கொள்கைகளை நிலைநாட்டவும், தம் எதிர்ப்புகளை வெளிப்படுத்தவும் இவர் எழுதிய எழுத்துகள் இவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தமை போல் எதிர்ப்புகளையும், சிறைத்தண்டனைகளையும் பெற்றுத் தந்துள்ளமையை இவர் வரலாற்றைக் கற்கும்பொழுது அறியமுடிகின்றது.

    தமிழ்நாடு என்பது இன்றுள்ள கன்னியாகுமரிக்குத் தென்பகுதியில் இருந்த பெருநிலபரப்பு; பண்டைக்காலத்தில் இது இலெமூரியாக் கண்டமாக விளங்கியது; இந்த நிலப்பரப்பில்தான் முதல் மாந்தன் தோன்றினான்; அவன் பேசியமொழி தமிழ்; இத்தமிழ் மொழியே உலக மொழிகளுக்குத் தாய்; ஆரியத்திற்கு மூலம்; இங்கு வாழ்ந்த மக்களே உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர்; காலப் பழைமையால் இவர்கள் பேசும் மொழிகளில் திரிபுகள் உண்டாயின எனத் தம் ஆசிரியர் பாவாணர் கொள்கைகளை முழுவதும் கொண்டவர் பெருஞ்சித்திரனார். மேலும் மதம் வழியாகப் பின்னப்பட்டுள்ள சமூக இழிவுகளிலிருந்து தமிழர்கள் விடுபட்டு, கலை, இலக்கியப் பண்பாட்டில் மேம்பட்டவர்களாக வாழவேண்டும் என்ற கொள்கையையும் வரித்துக்கொண்டவர்; ‘கெஞ்சுவதில்லை பிறர்பால்; அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை” என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தவர். எனவே இக்கருத்துகளை நிலைப்படுத்தவும்,  பரவலாக்கவும், தம் கொள்கைகளுக்கு முரண்பட்டவர்களை எதிர்த்துக் கருத்துரைக்கவும் அஞ்சாதவராகப் பெருஞ்சித்திரனார் விளங்கியவர். இக்கொள்கைகளை நிலைநாட்ட எழுத்தாலும் பேச்சாலும், இயக்கத்தாலும் பாடுபட்டவராகப் பெருஞ்சித்திரனாரை மதிப்பீடு செய்யலாம்.

    பெருஞ்சித்திரனாரின் படைப்புகளில் தமிழ்க் குமூகத்தில் உள்ள சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள், புலவர்கள் அரசியல் தலைவர்கள், தொழிலாளர்கள், இதழாளர்கள் என அனைவரும் தமிழ்ப்பணியாற்ற வேண்டும், இழந்த பெருமையை மீட்க வேண்டும்; பகையை நீக்குவதற்குப் பாடுபட வேண்டும் என்பன உள்ளடக்கமாக அமைந்துள்ளன. மொழி வழியாகவே குமுகம் கட்டமைக்கப்படுகின்றது. அனைத்துக்கும் ஊற்றுக்கண்ணாக இருப்பது மொழி என்று உணர்ந்து சாதியாலும் மதத்தாலும் பிரிந்துகிடக்கும் தமிழர்களை ஒன்றிணைக்க முனைந்தார். சாதி ஒழிப்புப் பாடல்கள் பலவற்றை எழுதியவர். தமிழர்களை ஒன்றுபடுத்தும் பல பாடல்களும் இவரால் படைக்கப்பட்டுள்ளன.

    “என்மொழி என்னினம் என்நாடு நலிகையில்
    எதனையும் பெரிதென எண்ணமாட்டேன் – வேறு
    எவரையும் புகழ்ந்துரை சொல்லமாட்டேன்! – வரும்
    புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
    பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்!- இந்த(ப்)
    பூட்கையில் ஓரடி தள்ளமாட்டேன்!

    என்று கொள்கை வாழ்க்கை வாழ்ந்தவர் பெருஞ்சித்திரனார்.

    “மூச்சுள்ள வரைக்கும் – உலகத் தமிழின
    முன்னேற்றம் ஒன்றே பேசுவேன் – அதில்
    ஏச்சுகள் பேச்சுகள் ஆயிரம் வரினும்
    எதிர்நின் றிருகை வீசுவேன்…….”

    என்று பாடிய இவர்,

    “எந்தக் கட்சியில் நீயிருந்தாலும்
    இனத்தை மறந்துவிடாதே! தமிழா
    இனத்தை மறந்துவிடாதே!’

    என்று பிளவுபட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றுபடுத்த விழைந்து எழுதியுள்ளார்.

    தமிழகத்தில் தமிழைக் கற்போரும் கற்பிப்போரும் பேசுவோரும் கணக்கின்றி உள்ளனர். வெற்று ஆரவாரக் கூச்சல்களால் பயன் இல்லை எனவும், ஒவ்வொருவரும் தமிழ்ப்பற்றுடன் விளங்கவேண்டும் எனவும் பெருஞ்சித்திரனார் விரும்பியவர். கல்வி நிலையங்கள் தமிழ்ப்பற்றை ஊட்டும் இடமாக விளங்கவேண்டும்; ஆசிரியர்கள் வகுப்பறைகளில் தமிழ்ப்பற்றை ஊட்டும் பணியைத் திறம்படச் செய்தல் வேண்டும்; மாணவர்கள் தமிழ்ப்பற்றுடன் இருக்க வேண்டும்; நாட்டை ஆளும் தலைவர்கள் தமிழ்ப்பற்றுடன் விளங்கி ஆக்கப்பணிகளில் முன்னிற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுத் தமிழ்ப்பற்றுக்கு வழிகாட்டியவர். இத்தகு வைர வரிகளை மனத்துள் தேக்கிய மாணவர்களும், ஆசிரியர்களும், தலைவர்களும் கூடி இந்தி எதிர்ப்புப் போரில் வினையாற்றி வெற்றி வாகை சூடியமையை இங்கு எண்ணிப்பார்த்தல் வேண்டும். இந்தி எதிர்ப்புப்போரில் ஈடுபட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவர்களின் தமிழ்ப்பற்றுக்குக் காரணமாகப் பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் அக்காலத்தில் விளங்கின.

    தமிழ்த்தொண்டு  செய்வோரின் கடமையைப் பின்வருமாறு குறிப்பிடுவார்.

    “தமிழ்ப்பற்றை ஊட்டாத தமிழ்க்கல்வி
    தமிழர்க்குத் தீங்கு செய்யும்!
    தமிழ்ப்பற்றை எழுப்பாத கணக்காயர்
    தருந்தமிழால் தமிழர் தாழ்வர்!
    தமிழ்ப்பற்றை வளர்க்காத மாணவரால்
    தமிழ்நாட்டைக் கேடு சூழும்!
    தமிழ்ப்பற்றுக் கொள்ளாத தலைவரெல்லாம்
    தமிழ்நாட்டுப் பகைவ ராமே!”               (1960, கனிச்சாறு, தொகுதி 1)

    பேராயக் கட்சியினரும் அக்கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட அறிஞர்கள் சிலரும் வடவெழுத்துகளை வகைதொகையின்றிக் கலந்து எழுதினால்தான் தமிழ் வளரும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். தமிழ்ச்சுவையறியாத  எளிய நிலை மக்களும் இக்கருத்தை மொழிவது உண்டு. இதனைப் பெருஞ்சித்திரனார்,

    “சந்தோஷம் என்பதற்கு ‘ஷ’ வேண்டுமாம்;
    ஜனநாயகத்திற்கு ‘ஜ’ தேவையாம்;
    சிந்தித்துப் ‘புஸ்கத்’தை ‘அக்ஷரத்’தைச்
    சொல்லுங்கால் ‘ஸ’ வேண்டும் ‘க்ஷ’ வும் வேண்டும்!
    இந்தவெழுத் தெல்லாம்நம் தமிழில் சேர்ந்தால்,
    இந்நாட்டைத் தமிழ்ஆளத் தகுதி யாகும்!
    விந்தையல்ல! ஆராய்ச்சி! மொழியாராய்ச்சி!
    வெள்ளெலும்பு கண்டார், வெள்ளெலும்பே கண்டார்!
    குழுமுடிவைக் கேட்டிருந்த அமைச்சரெல்லாம்
    ‘கோணல் முடிவல்ல’ ‘நல்ல முடிவே’ என்றார்!…
    …………………………..    ………………..        நம்மனோர்க்குக்
    கழுநீரா ஓடுவது உடலில்! தீங்கைக்
    கண்டபின்னும் பிணம்போல இருப்பதற்கே! (1960, கனிச்சாறு, தொகுதி 1)

    என்று கடிந்து எழுதியுள்ளார். தமிழ் மொழியில் பிற எழுத்தோ, பிற சொல்லோ கலந்தால் அதன் தூய்மை கெடும் என்பதை அறியாமல் அக்காலத்தில் ஆட்சியில் இருந்தோர் எடுத்த முடிவுகளைப் பெருஞ்சித்திரனார் துணிவுடன் கண்டித்துள்ளதை இந்தப் பாடல் நமக்கு உணர்த்துகின்றது.

     தனித்தமிழ் இயக்க அறிஞர்களின் தொடர்ந்த செயல்பாடுகளால் வடவெழுத்து, வடசொற்கலப்பு தடுத்து நிறத்தப்பட்டு எங்கும் தூய தமிழ் நிலைபெற்றமை வரலாறாகும். ‘அபேட்சகர்’ என்பது வேட்பாளர் எனவும், ‘அக்கிரசனாதிபதி’ என்பது தலைவர் எனவும், ‘ஸ்டேஷன்’ என்பது நிலையம் எனவும், ‘வந்தனா உபசாரம்’ என்பது வரவேற்புரை எனவும் வழக்கிற்கு வந்தமைக்குத் தனித்தமிழ் அறிஞர்களின் உழைப்பு பெரிய அளவில் பயன்பட்டுள்ளது.

    இளைஞர்களுக்குத் தமிழ்ச்சிறப்பை எடுத்துரைத்து அவர்களைத் தமிழ் மறவர்களாக மாற்றும் பணியைப் பெருஞ்சித்திரனார் பாடல்கள் செய்துள்ளன. தமிழ்ச்சிறப்பு எடுத்துரைத்தல், தமிழ்ப்பகைவர்களை அடையாளம் காட்டல், பகைமுடித்து மொழிகாத்தல் என நெறிப்படுத்தும் பணியைப் பெருஞ்சித்திரனார் பாடல்கள் செய்துள்ளன.

    “மொழிப்போர் புரி! செழிப்பாந் தமிழ்
    மொழிப்பால் குடிப்பாய்! – இனிப்
    பழிப்பார் உனை; அழிப்பார் பினை;
    விழிப்பாய் தமிழா!

    அறப்போர் புரி! சிறப்பாந் தமிழ்
    மறப்போர் புரிவாய்! – உயிர்
    துறப்பார்க் கினிப் பிறப்பார் வயின்
    இறப்பே தடடா!

    சிறுத்தாய் என ஒறுத்தார்; துயர்
    பொறுத்தாய் பலநாள்! – உயர்(வு)
    அறுத்தார்; குரல் மறுத்தார்; நிலை
    நிறுத்தாய் நெடுந்தோள்!”                   (1963, கனிச்சாறு, தொகுதி 1)

    என்று எழுதியுள்ள வரிகள் பெருஞ்சித்திரனாரின் தமிழ்ப்பற்றினையும் இன மேன்மைச் சிந்தனையையும் எடுத்துரைப்பதுடன் அவர்க்கு அமைந்திருந்த யாப்பாளுமையையும் புலமைச்செறிவையும் நமக்குப் புலப்படுத்துகின்றன.

    பெருஞ்சித்திரனார் 1965 ஆம் ஆண்டு அளவில் இந்தி எதிர்ப்புப் பாடல்களைத் தம் இதழ்களில் எழுதி மாணவர்களுக்கும் மக்களுக்கும் தமிழ் உணர்வூட்டியதால் அரசால் சிறைசெய்யப்பெற்று, வேலூர்ச் சிறையில் தளைப்படுத்தப்பட்டார். அப்பொழுது மார்கழி மாதம் என்பதால் திருவெம்பாவை, திருப்பாவைப் பாடல்களைப் பெண்டிர் பாடுவதை அறிந்த பெருஞ்சித்திரனார் பாவைப் பாடல்களின் அமைப்பில் பாடல்களை எழுதிப் பெண்குலத்தைத் தமிழ்காக்கும் பணிக்கு அழைத்துத் தம் பங்களிப்பை வழங்கியுள்ளார். 30 பாடல்களைக் கொண்ட இப்பாடல்கள் ‘செந்தமிழ்ப்பாவை’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது.

    “கற்றவரோ செந்தமிழால் காசுபணம் சேர்க்கின்றார்!
    மற்றவரைக் கேட்பானேன்! மான்விழியே! நாட்டுநலம்
    உற்றசிலர் நின்று உரிமைதரக் கேட்டாலோ
    கொற்றவரும் அன்னார் குரலை நெரிக்கின்றார்!
    குற்றமென்று கூறிக் கொடுஞ்சிறையுள் தள்ளுகின்றார்!
    முற்றும் தமிழரினம் மூங்கையதாப் போகுமுன்
    பெற்ற குலத்தோரே பேருரிமை காக்கவல்லார்!
    பொற்றொடியே துஞ்சல் புரையேலே ரெம்பாவாய்!

    மேற்கண்ட பாடலில் கற்றவர்களின் நிலையையும், அரசாட்சியில் இருப்பவர்களின் நிலையையும் எடுத்துரைத்துத் தமிழினம் அழியும் முன்பாக இவ்வினத்தைக் காப்பதற்குப் பெண்குலத்தோர் முன்வரவேண்டும் என்று குறிப்பிடுவதை இங்குக் கவனித்தல் வேண்டும்.

    “செந்தமிழுக்குத் தீதோ? தெளிதேனில் வெங்கசப்போ?
    எந்தமிழர் செந்நாவுக் கிந்தியோ? ஏலோம் யாம்!
    கந்தை உடுப்போம்! கிழங்குண்போம் கான்செல்வோம்!
    இந்தி படிக்க இசையோம் யாம்” என்பதனை
    வெந்த உளத்தோடும் வெல்கின்ற வீறோடும்
    இந்தத் தமிழ் நிலத்தின் ஏந்திழையார் கூறுவரேல்
    வந்து புகுமோ? வடக்குமொழி? வார்குழலாய்!
    முந்தி எழுந்தே முழங்கேலோ ரெம்பாவாய்!

    இந்தப் பாடலில் பழைய வடிவத்தை எடுத்துக்கொண்டு காலத்தேவைக்கு ஏற்ற கருத்தைப் பொதியவைத்து எழுதியுள்ள திறம் போற்றுதலுக்கு உரியது. குமுகத்தில் பெரும்பான்மைப் பெண்கள் பக்திவயப்பட்டவர்களாக இருப்பதும், சமய, மத நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதும் கண்கூடு. இவர்களைச் சென்று சேரவேண்டிய கருத்துகளை இவர்களுக்கு அறிமுகமான வடிவத்தில் பெருஞ்சித்திரனார் வழங்கியுள்ளமை மிகச் சிறந்த உத்தியாகக் கொள்ள வேண்டும்.

    மொழியியல் பேராசிரியர்கள் சிலர் எழுதுவதெல்லாம் இலக்கியம் என்று கூறும் கருத்தைப் பெருஞ்சித்திரனார் மறுத்து,

    “யாழிசைப்போனுக்கு யாழ்ப் பயிற்சி வேண்டும்!
    பாழாய் இசைப்போன் பழிக்கப்படுவான்;
    நாட்டியங் கற்பரே நாட்டியம் ஆடலாம்!
    பாட்டுப் புலவனும் பண்கள் பயிலுவான்!” (1965, கனிச்சாறு முதல்தொகுதி, பக்கம், 46)

    என்று இலக்கியம் எழுதுவோர் நல்லறிவு பெற்றவராகவும் மொழிநலம் பேணுபவராகவும் இருக்க வேண்டும் என்று கடிந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறைப் பேராசிரியரை இடித்து எழுதியுள்ளமை இவரின் மொழிக்காப்பு முயற்சிக்குச் சான்றாக அமைந்துள்ளது.

    தமிழகத்தில் வெளிவரும் தாளிகைகள், இதழ்கள் யாவும் தமிழ்ப்பெயரின்றி வருகின்றன; தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரான கருத்துகளையும்  படங்களையும் தாங்கி வருகின்றன. இதனைக் கண்டித்துப் பல பாடல்களை  எழுதியுள்ளார். மிகுதியான மக்கள் படிக்கின்றனர் என்றோ, இதழ் நடத்துபவர்கள் தமிழ்ப்பற்று உடையவர்கள் என்றோ சிறிதும் எண்ணாமல் தம் மொழிக்கு ஊறு ஏற்படுத்தும் வேலைகளை யார் செய்தாலும் அறச்சீற்றம் கொண்ட அரிமாவாகப் பெருஞ்சித்திரனார் பாடியுள்ளார்.

    “தமிழரசின் அவைத்தலைவர்
    செய்தித்தாள் நடத்துகின்றார்;
    ‘தினத்தந்தி’ ‘ராணி’ என்றே!
    உமிழ்கின்ற கொச்சைநடை;
    உடை களையும் புகைப் படங்கள்;
    ஊர்கெடுக்கும் உரைகள்; காட்சி!
    தமிழ் நாட்டின் இளைஞர்கை
    மிளிர் தலெல்லாம் ‘பேசும்படம்’
    ‘குமுதங்’கள் இழிந்த நூல்கள்! (1967, கனிச்சாறு, தொகுதி 1,பக்கம் 52)

    எனவும்,

    “அவாள் இவாள் என்னும் ஆனந்த விகடன்
    கவர்ச்சி ஓவியக் கழிசடைக் குமுதம்”  (கனிச்சாறு, முதல்தொகுதி, பக்கம் 46)

    எனவும் தமிழ்ப் பண்பாட்டைக் குலைக்கும் ஏடுகளைப் பெருஞ்சித்திரனார் கண்டித்து எழுதியுள்ளார். இவர் எழுதுவது போன்றே இவ்வேடுகளின் இதழ்ப்பணிகள் இருந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு ஏடுகள் வகைதொகையின்றித் தொடக்கத்தில் சமற்கிருதச் சொற்களைக் கலந்து எழுதுவதையும், தமிழ் மக்களின் அறிவை மழுங்கடிக்கும் செய்திகளைப் பரப்பியதையும், தமிழர் தலைவர்களின் செயல்பாடுகளை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்தமையையும் இவண் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும் இந்த ஏடுகள் அட்டைப்படங்களை வெளியிட்டு வருகின்றமை கவர்ச்சியைத் தந்து வணிகம் செய்யும் இழிசெயல் தொடர்வதை நாகரிகக் குமுகம் தம் ஆதரவு நல்கலைத் தவிர்த்தல் வேண்டும் என்கின்றார்.

    ‘தமிழ் வாழ்க தமிழ் வாழ்க’ என்று வெற்றுரை முழங்குவதால் தமிழ் வாழாது என்று கண்டு உணர்ந்து, இன்றைய அரசியல், பொதுமக்கள் நிலையினைத் தமிழ் வாழ வேண்டுமா? என்ற தலைப்பில் பெருஞ்சித்திரனார் பதிவு செய்துள்ளார்.

    “பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது;
    பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது;
    எட்டிநின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை
    எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி னாலும்
    தட்டி, சுவர், தொடர்வண்டி, உந்துவண்டி
    தம்மிலெல்லாம் “தமிழ் தமிழ்” – என்றெழுதி வைத்தே
    முட்டி நின்று தலையுடைத்து முழங்கி னாலும்
    மூடர்களே, தமிழ்வாழப் போவ தில்லை!

    என்று கூறி தமிழறிஞர்களைப் பாதுகாப்பதன் வழியாகவும், இழந்த பெருமைகளை மீட்பதன் வழியாகவும் தமிழ் வளர்க்க முடியும் என்கின்றார் (1970, கனிச்சாறு,1: 55).

    பெருஞ்சித்திரனார் பாடல்களில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய தாய்மொழி வழிக்கல்வி குறித்த செய்திகள், தமிழ் வழிபாடு (கனிச்சாறு 1: 83), தமிழக அரசு செய்யவேண்டிய தமிழ்ப்பணிகள், பொதுமக்கள் செய்ய வேண்டிய தமிழ்ப்பணிகள், மாணவர்கள் ஆசிரியர்கள் செய்யவேண்டிய தமிழ்ப்பணிகள் யாவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கண்ணெதிரே தமிழுக்கு நேர்ந்துவரும் அழிவுகளைக் கண்டு நேர்க்கூற்றாகவும், தாயின் கூற்றாகவும், பிறர்கூற்றாகவும் பாடல்களைத் தந்துள்ளார்.

    “கனித்தமிழ் நிலத்தில்
    கண்ணெனும் தமிழில்
    கற்பதுதானே சரி!
    தனித்தமிழ் மொழியைத்
    தாழ்த்திய பகையைத்
    தணலிட்டே, உடன்எரி !” (கனிச்சாறு, தொகுதி 1, பக்கம்,58)

    என்று பாடியுள்ளமை இதற்குக் காட்டாகும்.

    சுனிதிகுமார் சட்டர்சி என்னும் வடநாட்டு அறிஞர் சமற்கிருத உதவியின்றித் தமிழ் இனிது இயங்காது என்றும், சமற்கிருதத்தின் தயவில் தமிழ் வளர்ந்தது என்றும் கூறியமையைக் கண்டிக்கும் பெருஞ்சித்திரனார், அறிஞர் தொ.பொ.மீ. உள்ளிட்டோர் இக்கருத்துக்கு உடன்பட்டு இருந்ததையும் கண்டிக்கத் தயங்கவில்லை. (கனிச்சாறு, தொகுதி 1: 60)

    ஆங்கில இதழ் நடத்துவோர் அதில் பிழையின்றி நடத்த வேண்டும் என்று கூறிக்கொண்டு, தமிழில் இதழ் நடத்தும்பொழுது அதில் பிழை மலிய எழுதுவதைப் பெருஞ்சித்திரனார் கண்டித்துள்ளார் (கனிச்சாறு 1:62).

    தமிழர்கள் கட்சியிலும், சாதியிலும் தம்மை இணைத்துக்கொள்வதை விடுத்து மொழியடையாளம் கொண்டு “தமிழர்” என்று கூற வேண்டுமெனப் பல பாடல்களில் எழுதியுள்ளார் (கனிச்சாறு 1: 62). தமிழ் இளைஞர்களும் பெண்களும் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனவும் கூறுகின்றார். தமிழ்ப் பற்றில்லாதவர் எழுதும் நூல்களை ஒதுக்கும்படி வேண்டுகின்றார். தமிழ் நன்கு பயன்படுத்தாத திரைப்படங்கள், வானொலிகளைத் தவிர்க்க வேண்டும் என்கின்றார். தமிழர்களையும் தமிழர் பெருமைகளையும் இழிவுசெய்யும் வரலாற்று நூல்களைத் தவிடுபொடியாக்கி நீக்க வேண்டும் என்கின்றார். பணந்திரட்டும் நோக்கில் நடத்தப்படும் ஏடுகளின் இழிதொழிலை எடுத்துப் பாடியுள்ளார் (கனிச்சாறு1:74). காமச்செய்திகளைக் கவினார்ந்த சொற்களால் வெளிப்படுத்தும் கயவர்களை இனங்கண்டு ஒதுக்க வேண்டும் என்கின்றார் (கனிச்சாறு 1: 71).

    தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் என்னும்பெயரில் தமிழ் அழிப்பு முயற்சி இருபதாம் நூற்றாண்டில் பலரால்  முன்னெடுக்கப்பட்டு அவ்வப்பொழுது அறிஞர் பெருமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியைக் கடிந்து எழுதும் பெருஞ்சித்திரனார் நாட்டில் சாதி, மதம் காரணமாகவும், இன்னும் பல இழிவுகள் காரணமாகவும் மக்கள் பல்வேறு இன்னல்களை  அடைந்து வருகின்றனர். அந்த நிலைகளை மாற்றாமல் எழுத்துச் சீர்திருத்தம் என்ற மாற்றம் வேண்டுகின்றனரே என்று கடிந்து கூறுவதைத்,

    “தொத்துபிணி யெனுஞ்சாதி இனுந்தொலைய வில்லை;
    தொல்லைமதக் கேடுகளும் வளர்ந்துவரும் நாட்டில்!
    செத்துசெத்துப் பிழைக்கின்றார் ஏழையரிம் மண்ணில்;
    சிறுகுடிலும் வாய்க்காமல் தெருக்களில்வாழ் கின்றார்.
    ஒத்துவராக் கொள்கையினால் உழைப்பாளர் கூட்டம்
    ஓயாத தொல்லைகளால் நலிகின்றார்! இன்னும்
    எத்தனையோ சீர்திருத்தம் இங்கிருக்கப் பண்டை
    எழுத்துக்களைத் திருத்தவந்தார், எளிமையது வென்றே! (கனிச்சாறு 1:79)

    என்று பாடியுள்ளார்.

    இன்று தமிழ்கற்றவர்களின் நிலையை நினைத்துப் பெருஞ்சித்திரனார் கவலை தோய்ந்து எழுதியுள்ளார். இலக்கண இலக்கியத் தேர்ச்சி இல்லை எனவும், புலமையில்லை எனவும், கொள்கைத் தோய்வு இல்லை எனவும் நேர்மை, ஒழுங்கு, மானம் முதலிய பண்புகள் இல்லை எனவும் கூறி, பெரியோரைச் சேர்தல், கிளையினைப் புரக்கும் இயல்பு யாவும் அற்றவர்களாக உள்ளனர் எனக் கூறி அற்றைநாள் புலவரைப் போல் ஒருவரும் இல்லை என்று குறிப்பிட்டுவிட்டு,

    “மண்டுபே ரறிவால் மல்கு
    மறைமலை யடிக ளைப்போல்
    பண்டித மணிபோல், சோம
    சுந்தரப் பாவ லர்போல்
    விண்டுசெந் தமிழ்வ ளர்த்த
    விறல்மிகு திறமை மிக்கோர்
    உண்டெனில் அன்றோ நந்தம்
    ஒண்டமிழ் வளரும் கண்டீர்! (கனிச்சாறு 1:81)

    என்று நாட்டில் பெரும்புலமை வாய்த்த அறிஞர்கள் இருத்தல் வேண்டும் என்று தம் விருப்பத்தைப் பதிந்துள்ளார்.

    நிறைவுரை

    தமிழர்களின் உயர்வுக்குத் தமிழ்மொழியே அடிப்படையானது என்று பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அம்மொழியைக் காப்பதன் வழியாகவும், அம்மொழியினர் ஒன்றுபடுவதன் வழியாகவும் தமிழ்க் குமுகம் மேம்படும் என்ற கருத்தினையும் முன்வைத்துள்ளன. பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருந்த தமிழ்க் குமுகம் பலநிலைகளில் தாழ்வுற்றிருப்பதைப் பெருஞ்சித்திரனார் பாடல்கள் எடுத்துரைத்துத் தமிழர்களும் தமிழ்மொழியும் மேம்பாடு உறுவதற்கான வழிமுறைகளையும்  தீர்வுகளையும் சொல்லியுள்ளன. இருபதாம் நூற்றாண்டில் நிலவிய பிறமொழி வல்லாண்மை எதிர்ப்பு, தனித்தமிழ்க் காப்பு, சாதியெதிர்ப்பு, பெண்ணுரிமை, அரசியல் உள்ளிட்ட குமுகச் சிக்கலை நடுவணாகக் கொண்டு பல பாடல்களைத் தந்த பெரும்பாவலராகப் பெருஞ்சித்திரனார் விளங்கியுள்ளார்.

    குறிப்பு: என் கட்டுரையை எடுத்தாள விரும்புவோர் இசைவுபெறுக. நூல் எழுதுவோர், வெளியிடுவோர் எடுத்த இடம் சுட்டுக.

    நன்றி: தமிழ்த்துறை, சமால் முகமது கல்லூரி, திருச்சிராப்பள்ளி

    Share
  • “வெட்டிக்காடு” சுயுபுனைவின் வெளிப்பாடு

    -முனைவர் மு.இளங்கோவன்

    இலக்கிய வடிவமும் பாடுபொருளும் படைப்போரும் ஒவ்வொரு காலத்திலும் வேறுபட்டு வந்துள்ளமையை இலக்கிய வரலாற்றின் தொடர்ச்சியைக் கவனிக்கும்பொழுது அறியமுடிகின்றது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் இலக்கியப்போக்குகளில் புதுப்புது மாற்றங்களைக் காணமுடிகின்றது. அதில் ஒன்று சுயபுனைவு (Auto Fiction) என்னும் வெளியீட்டு முறை. தன் இளமைக்கால வாழ்க்கையைப் புனைவுகளை இணைத்து வெளிப்படுத்தும்பொழுது அரிய படைப்பாக இலக்கியம் உருவாகிறது.

    raviதம் இளமைக்கால வாழ்க்கையைப் படைப்பாக்குவதில் மேற்குலகப் படைப்பாளிகள் முன்னின்றதைத் திறனாய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். 1977இல் சுயபுனைவு என்னும் சொல்லை வழங்கியவர் செர்ஜ் தூப்ரோவ்ஸ்கி (Serge Doubrovsky). குறிப்பாகப் பிரெஞ்சுத் தேசத்தில் வாழ்ந்த படைப்பாளிகள் மிகச்சிறந்த புனைவு இலக்கியங்களைத் தந்துள்ளனர். ஹினெர் சலீமின் ‘அப்பாவின் துப்பாக்கி’ என்னும் புனைவு இலக்கியம் குர்தீஸ்தான் விடுதலைப் போரை மிக அழகிய வடிவில் தந்துள்ளது. சலீம் சுயபுனைவாகத் தம் படைப்பை உருவாக்கினாலும் குர்தீஸ்தானின் பழைய வரலாறு, பண்பாட்டுச்சிறப்பு, வாழ்க்கை முறை என அனைத்தையும் நுட்பமாகப் பதிவுசெய்திருப்பார்.

    சுயபுனைவு வடிவில் தமிழில் நிறைய படைப்புகள் சிறுகதையாகவும், புதினமாகவும், திரைப்படமாகவும், கவிதைகளாகவும் வந்துள்ளன. கி.ரா.வின் ’பிஞ்சுகள்’ என்ற குறுநாவல் சுயபுனைவுக்கு நல்ல சான்று. பேராசிரியர் த. பழமலய் அவர்களின் ’சனங்களின் கதை’ குறிப்பிடத்தக்க படைப்பு. சேஷாசலத்தின் ’ஆகாசம்பட்டு’, சிற்பியின் ’கிராமத்து நதி’ குறிப்பிடத்தக்க கவிதை இலக்கியங்களாகும். கிராமப்புறத்து நிகழ்வுகள், கதைமாந்தர்கள், சொல்லாட்சிகள் கொண்டு புதிய இலக்கியப் போக்காக இத்தகு நூல்கள் வெளிவந்த பிறகு பல்வேறு படைப்புகள் தமிழில் வெளிவந்தன. குறிப்பாக நடுநாட்டு இளைஞர்கள் தங்கள் படைப்புகளில் தங்கள் வாழ்க்கை, பழக்க வழக்கம், குடும்ப அமைப்பு, ஊர், உறவு, தெய்வம் என அனைத்தையும் உள்ளடக்கிய படைப்புகளை வழங்கினர். தங்கர்பச்சானின் ’ஒன்பதுரூபாய் நோட்டு’, ’வெள்ளைமாடு’, ’கொடிமுந்திரி’ உள்ளிட்ட படைப்புகளைச் சொல்லலாம். கி. தனவேல் இ.ஆ.ப. அவர்களின் ’செம்புலச் சுவடுகள்’ நூலில் புதுக்கூரைப்பேட்டை (இன்றைய நெய்வேலியின் பகுதி) மக்களின் வாழ்க்கைச் சுவடுகள் பதிவாகியுள்ளன.

    vettikkatu-inayam’வெட்டிக்காடு’ என்னும் தம் ஊர்ப்பெயரில் பொறியாளர் இரவிச்சந்திரன் எழுதியுள்ள நூல் சுயபுனைவு வடிவில் வந்துள்ள சிறந்த நூலாக புலப்படுகின்றது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலர் நல்ல மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதன்மை பெற்றுப் பாராட்டுப் பெறுவதை ஆண்டுதோறும் காண்கிறோம். இப்படித் திறன் படைத்த மாணவ மாணவியர் பிற்பாடு என்ன ஆனார்கள் என்பதை அவர்களே சொன்னால்தான் உண்டு. இந்நூல் பள்ளியில் பத்தாம் வகுப்பில் மாநில முதன்மைபெற்ற கிராமத்து மாணவரான இரவிச்சந்திரன் கல்வி தனக்கு ஏற்றம் தந்ததை விளக்கும் நூல்.

    இரவிச்சந்திரன் இப்போது உலகளாவிய அளவில் முன்னோடித் தொலைத்தொடர்பு கட்டமைப்புத் திட்டங்களில் (Telecommunications Network) மின்னணுப் பொறியாளராக பணியாற்றுகிறார். மிகச் சிறந்த எழுத்தாளராகவும் மலர்ந்துள்ள இவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்று, பணியின் காரணமாகச் சிங்கப்பூரில் வசித்துவருகிறார். ஒவ்வொரு நாளும் அலுவல் காரணமாகக் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கிறார். வானுலக வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் தாம் பிறந்த வெட்டிக்காடு என்னும் சிற்றூரின் நினைவு இவரைப் பேயைப் போல் பிடித்தாட்டியதால் தம் அனுபவங்களை 2003 முதல் எழுதத் தொடங்கினார்.

    இரவி 17 வயது வரை தஞ்சை மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு ஊரில் வாழ்ந்து, சராசரி உழவர் குடும்பத்தின் அனைத்து வகையான மேடுபள்ளங்களையும் கடந்து, கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணுப் பொறியியல் படித்து, தெற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைப் பட்டம் (எம்.பி.ஏ) பெற்றவர். பத்தாம் வகுப்பில் மாநில அளவில் தர முதன்மை பெற்று, இந்திய அரசின் உதவித் தொகைபெற்றுப் பொறியியல் கல்வி பெற்றவர்.  இவரின் உள்ளம் கிராமத்து இளைஞனின் உள்ளம். பதினேழு வயதுவரை வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் ஆழ்மனத்துள் புதைந்து கிடந்து, நேரமும் சூழலும் உந்தித் தள்ள அவை சிறுகதை, கவிதை, எழுத்துரை எனப் படைப்புகளாக வெளிவந்துள்ளன.

    தம் கிராமத்து இளமைக்கால நினைவுகளையும் சில உண்மை நிகழ்வுகளையும் அவ்வப்பொழுது கட்டுரையாக்கிய இவர், இவற்றைத் தொகுத்து வெட்டிக்காடு என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார். வெட்டிக்காடு, காடுவெட்டி என்னும் ஊர்ப்பெயர்கள் பண்டைக்காலத்தில் மக்கள் காடு கரம்புகளை அழித்து ஊராக்கிய வரலாற்றைச் சொல்கின்றன. அந்த வகையில் வயலும் வயல்சார்ந்த பகுதியுமாக விளங்கும் வெட்டிக்காடு என்னும் சிற்றூரில் வாழ்ந்த சோமு ஆலம்பிரியர் என்னும் நெல்வணிகரின் மகனாகப் பிறந்து, படிப்புடன் ஊடுதொழிலாக ஆடுமாடுகளை மேய்ப்பது, ஏரோட்டுவது, பனங்காய் வெட்டுவது, நாவல்பழம் பறிப்பது என்று கிராமத்துக்குரிய அனைத்துப் பொழுதுபோக்குகளையும் பயின்ற ஒரு பட்டிக்காட்டுச் சிறுவனின் இளமைக்கால நிகழ்வுகள்தான் இந்த வெட்டிக்காடு நூலின் உள்ளடக்கமாக விரிந்து நிற்கின்றது.

    வெட்டிக்காடு நூலில் கரைந்த எழுத்தாளர் வேல. இராமமூர்த்தி, முனைவர் ம.இராசேந்திரன், நீதியரசர் நாகமுத்து ஆகியோரின் அணிந்துரைகள் நூலின் சிறப்புகளை இனங்காட்டியுள்ளன. இரவிச்சந்திரனின் இன்றைய வளர்ச்சி நிலையையும், கடந்துவந்த பாதைகளையும் வியப்புடன் பார்த்து மகிழும் அணிந்துரை அறிஞர்கள் தங்கள் இளமைக்கால நிகழ்வுகளையும் கிராமப்புறங்கள் நாகரிக வளர்ச்சியால் அடையாளங்களை இழந்து வருவதையும் மறவாமல் பதிவுசெய்துள்ளனர்.

    சமூக, பொருளாதார மேல்சாதிக்காரர்களால் வரலாறு எழுதப்படும் சூழலில் அடித்தட்டு மக்களின் வரலாறு (Subaltern History) எழுதப்பட்டு வருவதை வரவேற்கும் சுந்தர்ராஜ் மாணிக்கம் போன்றவர்களை நினைக்கும்பொழுது வெட்டிக்காடு நூலின் முக்கியத்துவம் விளங்கும்.

    பன்னிரண்டு தலைப்புகளில் அமையும் வெட்டிக்காடு நூல் உழைக்கும் மக்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளது.

    வெட்டிக்காடு என்னும் முதல் தலைப்பில் ஊர் அமைவிடம், உழவுத்தொழில் செய்யும் மக்களின் நிலை, ஊரின் காலைக்காட்சி உள்ளிட்ட, தாம் பதினேழு ஆண்டுகள் வாழ்ந்த ஊரின் சிறப்புகளை இரவி பதிவுசெய்துள்ளார். உழுதல், விதைத்தல், பறித்தல், நடுதல், அறுத்தல் என்று ஆறுமாதம் ஊர் அமர்க்களப்படும். இங்கு நடவுப்பாடல் வழியாகவும், தெருக்கூத்துகள் வழியாகவும் இசைத்தமிழ் வளர்ந்ததை இரவிச்சந்திரன் குறிப்பிடுகின்றார். மாடுமேய்த்தலும், ஆடுமேய்த்தலும் கிராமங்களின் தேசியத்தொழிலாகும். கபடி விளையாடுதல், ஓரியடித்தல், கிளிகோடு பாய்தல், பந்தடித்தல், பட்டம் விடுதல் போன்ற கிராமத்து விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

    வெட்டிக்காட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி பெருந்தலைவர் காமராசரின் கல்விக்கொடையால் கிடைத்தது. இரண்டு ஆசிரியர்களுடன் எழுபத்தைந்து மாணவர்களைக் கொண்டு பீடுநடைபோட்ட பள்ளி அது. இரவிச்சந்திரன் நான்காம் வயதில் அடம்பிடித்துப் பள்ளிக்குச் சென்றது முதல் சுப்பிரமணியன் ஆசிரியரிடம் அகரம் பயின்றது வரையிலான செய்திகளைப் படிக்கும்பொழுது கிராமத்து மனிதர்கள் அனைவரும் தங்களின் இளமை வாழ்க்கைக்குக் கட்டாயம் திரும்புவார்கள். ஒன்றாம் வகுப்பில் (1973) சேர்ந்தது தொடங்கி தம் வாழ்க்கைக் குறிப்புகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார் இரவி. வேப்பங்குச்சியில் பல்துலக்கியது, கிராமத்து ஏரிகளில் குளித்தமை பற்றி விளக்கும் இரவிச்சந்திரன் பேஸ்ட், பிரஷ், சோப் நாங்கள் பார்க்காதது என்கின்றார். பழைய சோறும் தயிரும் உணவாக அமைந்த கிராமத்து வாழ்க்கையில் இட்டிலி, தோசை போன்ற உணவுகள் பொங்கல் தீபாவளியில்தான் கிடைக்கும் என்கின்றார். நம் உணவு, பழக்க வழக்கம், பண்பாட்டு மாற்றங்கள் எவ்வாறு மாற்றங்களைச் சந்தித்துள்ளன என்பதை எதிர்காலத் தலைமுறைகள் அறிந்துகொள்வதற்கு இந்த நூல் ஒரு சமூக ஆவணம்.

    அக்கா திருமணத்தன்றும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்ததைப் பாராட்டிய சுப்பிரமணியன் சாரின் பேருள்ளம் இந்த நூலில் பதிவாகியுள்ளது. பள்ளிக்கு நாள்தோறும் செல்லும் பழக்கத்தை நினைவூட்டும் இரவி, பின்னாளில் இரண்டு முறை விடுப்பெடுக்க நேர்ந்தமைக்கான காரணத்தையும் கூறத் தயங்கவில்லை, பன்னிரண்டு ஆண்டு பள்ளி வாழ்க்கையில் மஞ்சள் காமாலை நோயும், கடுங்காய்ச்சலும் விடுப்பெடுக்க வைத்ததைக் குறிப்பிடுகின்றார் (பக்கம் 42). எட்டுக் கிலோ மீட்டர் தொலைவிலிருந்த மன்னார்குடிப் பள்ளிக்குப் பேருந்தில் செல்லக் காசு இல்லாதபொழுது, நடந்தே சென்றுள்ளதையும் காலில் செருப்பில்லாமல் நடந்துபோனதால் தார் காலில் படிந்து சுட்ட நிலையையும் படிக்கும்பொழுது இரவியின் வறுமை வாழ்க்கை கண்ணீர்வரச் செய்கின்றது.

    அரசுப்பள்ளிகள் ஆதரிப்பார் இன்றிக் கிடக்கும்பொழுது, இன்றைய கான்வென்டு கல்விக்கூடங்கள் வேன்களிலும் ஆட்டோக்களிலும் கிராமத்துப் பிள்ளைகளைச் சீருடைகளில் அள்ளிக்கொண்டு போவதைக் காணும்பொழுது தமிழகக் கல்வி வரலாறு இருவேறு துருவங்களில் பயணம் செய்வதை உணரலாம். ‘எருமை மாடு மேய்க்கிறவனுக்கும் மாட்டுக்கறி திங்கிறவனுக்கும் படிப்பு வராது” என்று சுப்பிரமணியன் ஆசிரியர் சொன்னதை நினைத்த இரவி மாடுமேய்க்க மறுத்த நிகழ்வும் பதிவாகியுள்ளது. எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இளமை வாழ்க்கையைத் திறந்து காட்டியுள்ள இரவியின் எழுத்துகள் தமிழ்க் கல்வி வரலாற்றை அறிய விரும்புவர்களுக்குப் பேருதவி புரிவன.

    கிண்டி பொறியியல் கல்லூரியில் சேரும் தம் பதினேழாம் வயதுவரை மாடுமேய்த்த வரலாற்றை நினைவுகூர்ந்துள்ளார். படிப்பறிவு இல்லாத அம்மாவுக்கு மாடுமேய்ப்பதைச் செய்யாத மகன்மேல் எப்பொழுதும் கோபம்தான். எழுதிய நோட்டுகளைக் கிழித்தமை, நான்காம் வகுப்பில்தான் ஏபிசிடி படிக்கத் தொடங்கியது, ஐந்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் பெயர் எழுதியது என்று பூர்வாசிரம வரலாறு பதிவாகியுள்ளது. ஆங்கிலத்தில் 36 மதிப்பெண் வாங்கியதற்குத் திட்டித் தீர்த்த இந்திரா டீச்சர், “பர்ஸ்ட் ரேங் மாணவன் சீனிவாசன் ஆங்கிலத்தில் 98… நீயெல்லாம் கிராமத்துல மாடு மேய்க்கதான் லாயக்கு” (பக்கம் 52) என்று கூறிய கண்டிப்புச் சொற்களும் அவமானச் சொற்களும்தான் இரவியை உயர்ந்த இடத்திற்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளன. அதே இந்திரா டீச்சர் இரவியின் மாநில முதன்மை மதிப்பெண் பார்த்து, வாழ்த்தியிருப்பது நெகிழ்ச்சி! தம் இளமைக்கல்விக்கு வித்திட்ட சுப்பிரமணியன் சார், முத்துக்கிருஷ்ணன் சார் இருவரையும் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

    பள்ளியைத் திறப்பது, கூட்டுவது, மணி அடிப்பது, உணவுக்குரிய பொருள்களை எடுத்துத் தருவது, உணவு சமைப்பது, பரிமாறுவது, ஆசிரியர்களுக்குத் தேநீர் வாங்கிவருவது, ஆசிரியர்களின் வயல்வேலைகளின்பொழுது அதற்குரிய குற்றேவல் செய்வது, ஆசிரியர்கள் வராதபொழுது வகுப்புகளை அமைதியாகப் பார்த்துகொள்வது, பள்ளியைப் பூட்டிச் செல்வது வரையிலான கிராமப்புறப் பள்ளிப் பணிகளை மனந்திறந்து எழுதியுள்ளார். இந்த வாழ்க்கையை இன்றைய மாணவர்கள் கேட்பதற்குக்கூட வாய்ப்பில்லை.

    தேர்வில் பார்த்து எழுதுவது தவறு என்பதை அடிப்படைக் கொள்கையாக வைத்திருந்த இரவி தம் கிண்டி பொறியியல் கல்லூரிச் சம்பவங்களை நினைவுப்படுத்தி, அங்கும் தான் பார்த்து எழுதாமல் நேர்மையாக எழுதியதைப் பதிவு செய்கின்றார். தவறு செய்வதற்குரிய வாய்ப்பு வந்தாலும் அங்கும் நேர்மையுடன் நடந்துகொள்ளும் உயர்பண்பே இவருக்கு வாழ்க்கையில் முன்னேற்றங்களைத் தந்தது என்கின்றார். வெட்டிக்காடு தொடக்கப்பள்ளியில் பெற்ற படிப்பு, நேரம் தவறாமை, ஏற்றுக்கொண்ட பொறுப்புகளைத் முழுமனத்துடன் திறம்படச் செய்தல், நேர்மை போன்ற பண்புகளே முன்னேற்றத்திற்குக் காரணம் என்கின்றார்.

    இந்நூலில் இடம்பெற்றுள்ள உன்னால்முடியும் தம்பி என்ற சிறுகதையில் சண்முகம் என்ற பாத்திரத்தின் வழியாக இரவி தம் இளமைக்கால வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார். வெட்டிக்காட்டுக்கு அருகில் உள்ள மூவாநல்லூர் கிராமத்தில் ஏழாம் வகுப்புப் படித்தபொழுது கடலைச்செடிக்குத் தண்ணீர் இறைத்திருக்கிறார். பெற்றோரோ கல்விக்கு ஆதரவு தரவில்லை. இந்நிலையில் ஆசிரியர் இராஜகோபால் என்பவர் கொடுத்த ஊக்கமும் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறத்து மாணவர்கள் கல்வி கற்பதில் உள்ள தடைகளையும் உதவிய ஆசிரியர்களின் செயல்பாடுகளையும் இரவி நினைவுகூர்ந்துள்ளார். வறுமையில் படித்து முன்னேறி, அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறியாளராக உயர்வு பெற்றுத் தாம்படித்த பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக வந்த நிலையை அழகிய கதையாக்கிக் காட்டியுள்ளார். கவிதை, கதை, உரைநடை என்று பல்வேறு வடிவங்களில் இந்தப் படைப்பை அமைத்துள்ளார்.

    அய்யனார்சாமி என்ற சிறுகதையில் புலவர் சவுந்தரராசன் பகுத்தறிவுக் கொள்கையுடையவர் எனவும், அச்சம் என்பதை அறியாதவர் எனவும் தவறு செய்யும் மாணவர்களைத் தண்டிப்பதில் தயக்கம் காட்டாதவர் எனவும் அறிமுகம் செய்கின்றார். அதே நேரத்தில் ஏழை மாணவர்களுக்குப் புத்தகம், குறிப்புச்சுவடி வாங்கித் தருவதுடன் தம் மன்னார்குடி வீட்டுக்கு விடுமுறை நாளில் வரச்செய்து உணவுகொடுத்துப் படிப்புச்சொல்லித் தருவார் என்றும் அவரின் பொறுப்பார்ந்த ஆசிரியப்பண்புச் சிறப்பையும் நமக்கு அறிமுகம் செய்துள்ளார். புலவர் ஐயா தம் இடுப்பில் கத்தியை எப்பொழுதும் செருகியிருப்பார் எனவும் ஒருமுறை விடுப்புத் தராத தலைமையாசிரியரின்  மேசைமீது கத்தியை எடுத்துக் குத்தி, மிரட்டியதையும் இக்கதையில் இரவி குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் செய்யும் குறும்புகளைக் கவனித்துப் புலவர் கடும் தண்டனை கொடுத்ததால் பல மாணவர்கள் பள்ளிக்கு வராமல் போனதையும் குறிப்பிடுகின்றார். கடைசி பெஞ்சு இராமமூர்த்தி அய்யனார்சாமி போல் அருள் சொன்னதை விளக்கியுள்ள காட்சி இரவியிடம் மிகச்சிறந்த எடுத்துரைப்பு ஆற்றல் உள்ளதை நமக்கு நினைவூட்டுகின்றது.

    ’கொட்டாப்புலிக் காளைகள்’ என்ற தலைப்பில் இரவி எழுதியுள்ள செய்திகள் படிப்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் நிகழ்வுகளாக விரிந்துள்ளன. அப்பா பட்டுக்கோட்டைச் சந்தையிலிருந்து வாங்கிவந்த கன்றுக்குட்டிகள் வளர்ந்து ஏரோட்டவும், வண்டியில் பூட்டவும் பழக்கிய நிகழ்ச்சிகளைக் கண்முன்கொண்டுவந்து இரவி நிறுத்துகின்றார். அப்பா, அம்மா, வீட்டு வேலையாள் நாகநாதன் மூவர்தான் அந்தக் கொட்டாப்புலிக் காளைகளைப் பிடிக்கமுடியும் என்ற நிலையில் ஊரில் சண்டியராக வலம்வந்த வேணு ஆலம்பிரியரை அந்த மாடுகள் முட்டி வேலியில் தள்ளியதையும் அம்மாவின் குரலுக்குப் பணிந்து அந்த மாடுகள் அம்மாவை நெருங்கி வந்ததையும் அறியும்பொழுது நமக்கு ஆச்சரியத்தை இந்தக் கதை ஏற்படுத்துகின்றது.

    வீட்டில் வளர்க்கப்படும் மாடுகள் அறிவுள்ளவையாகவும், மானமுள்ளவையாகவும், வீரமுள்ளவையாகவும் இருப்பதைக் கொட்டாபுலிக் காளைகள் கதை உணர்த்துகின்றன. ஒவ்வொரு நாளும் தம்மைக் கவனிக்கும் அம்மா, அப்பா, நாகநாதனைத் தவிர மற்றவர்களைத் தம்மை நெருங்கவிடாமல் செய்யும் கொட்டாபுலிக் காளைகளைப் போல் வரலாறு படைத்த பல காளை மாடுகள் தமிழகத்தின் கிராமங்களை ஆட்சிசெய்துள்ளதை ஒவ்வொரு உழவனும் தங்கள் வாழ்க்கையை எழுதும் பொழுது இதுவரை தமிழுக்குக் கிடைக்காத கதைக்கருக்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். தம் குடும்பத்தினருடன் வண்டிமாடுகளை இணைத்துப் புகைப்படம் எடுப்பதையும், மாடுகளின் அருகில் நின்று புகைப்படும் எடுப்பது, வண்டியோட்டுவதுபோல் புகைப்படம் எடுப்பது தமிழகத்து உழவர்களின் விருப்பமாகும்.

    ’கொள்ளிவாய்ப் பிசாசுகள்’ என்ற கதையில் கிராமங்களில் காலம் காலமாக நம்பப்படும் கொள்ளிவாய்ப் பிசாசுக் கதையைச் சொல்லி தம் அண்ணன் இந்திரஜித் மூலமாகப் பயம் தெளிந்த தம் அனுபவத்தை எழுதியுள்ளார்.

    ’நாவற்பழம்’ சிறுகதையில் பள்ளி நிகழ்வுகள் பேசப்படுகின்றன. மாரியப்ப கண்டியர் வீட்டின் நாவல்பழம் திருடித் தின்னும் நிகழ்வு தத்ரூபமாக காட்டப்பட்டுள்ளது. இரவி, உப்பிலி, இராதா மூவரும் நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறிப்பதும் இந்தக் கூட்டுக்கொள்ளையில் பங்கேற்காத இளஞ்செழியன் இரவியின் அப்பாவிடம் பற்றவைப்பதும், அப்பாவின் தண்டனையும் இந்தச் சிறுகதையைச் சுவையுடையதாக்குகின்றது. அன்று அப்பாவிடம் வாங்கிய அடிதான் முதலும் முடிவும் என்று கதையை இரவி முடித்துள்ளார்.

    ’பொங்கல்’ என்ற தலைப்பில் இரவிச்சந்திரன் எழுதியுள்ள எழுத்துரையில் கிராமங்கள் எவ்வாறு தம் பாரம்பரிய இயல்புகளை இழந்து, தனித்தன்மை கெட்டு மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன என்பதைப் பதிவு செய்துள்ளார். பொங்கல் திருவிழா உறவினர்கள் ஒன்றுகூடி நடத்தும் பெருவிழாவாக நடைபெற்று மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்த நிலைமாறிக் கிராமங்களில் பிரிவுகள் உண்டாகி, மனக் கசப்புகளால் பிரிந்து கிடக்கும் நிலையை எடுத்துரைத்துள்ளார். வழிபாட்டு முறைகள், உறவினரின் ஒன்றுகூடல், சிற்றூர்ப்புறப் பழக்க வழக்கங்கள், கிராமப்புற விளையாட்டுகள், சிற்றூர் வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், சடங்குகள், வேளாண்மை, பொழுதுபோக்கு உள்ளிட்ட நிகழ்வுகளை அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டும் எழுத்துரைகளாக இரவியின் எழுத்துரைகள் உள்ளன. ஒற்றுமையுடன் வாழ்ந்த கிராமத்து மக்கள் சண்டை சச்சரவுகளால் போலிஸ், கோர்ட்டுக்குச் செல்லும் நிலையில் உள்ளதைக் கவலையுடன் பதிவுசெய்துள்ள இரவியின் ஆதங்கம் ஒவ்வொரு எழுத்திலும் பதிவாகியுள்ளது.

    களவாணி திரைப்படம், குற்றப்பரம்பரை புதினம் குறித்த மதிப்பீடுகளையும் எழுதியுள்ளார்.

    அப்பா என்னும் தலைப்பில் எழுபது வயதுவரை வாழ்ந்து, இயற்கை எய்திய தம் தந்தையின் குணநலன்களை இரவி வரலாறாக்கியுள்ளார். ஒவ்வொரு மகனும் தந்தையின் வரலாற்றை எழுதும்பொழுது தமிழகப் பண்பாட்டு வரலாறு முழுமையடையும். அன்பின் வடிவமாகவும், பாசத்தின் உருவமாகவும் விளங்கிய தம் தந்தை சோமு ஆலம்பிரியர் குழந்தைகள் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர் என்பதைப் பல சான்றுகள் காட்டி விளக்குகின்றார். உழைப்பால் உயர்ந்த தன் தந்தை வெட்டிக்காட்டு மக்களும் சுற்றுவட்டார மக்களும் போற்றும்படியாக வாழ்ந்தவர் என்பதை ஒவ்வொரு கருத்துகளாக அடுக்கிக்காட்டி ஒரு சித்திரமாக நமக்கு வரைந்து காட்டுகின்றார். அப்பா பிள்ளைகளைப் படிக்க வைத்த பாங்கு, கூத்துக்கலையில் அவருக்கு இருந்த ஈடுபாட்டைக் காட்டி, சிலநாளில் குடிப்பது உண்டு என்று பதிவு செய்து நடுநிலையாளராக இரவி நமக்குக் காட்சி தருகின்றார்.

    சோமு ஆலம்பிரியர் நேர்மையாளர்; வணிகத்தை உயர்வாகப் போற்றியவர்; தொழில் தர்மம் கடைப்பிடித்தவர்; நம்பிக்கைக்குப் பெயர் பெற்றவர்; தம் பிள்ளைகளின் படிப்பு, பணிக்காக வீட்டிலிருந்த நகைகளை விற்றாலும் உழைத்து வாங்கிய நிலங்களை விற்க மறுத்தவர். தந்தை 69 ஆம் வயதில் இயற்கை எய்திய நேரத்தில் இரவியின் செமஸ்டர் தேர்வு தொடங்கியதால் அப்பாவின் இறப்புச் செய்தியைப் பத்துநாள் கழித்துதான் தெரிந்துகொண்டார்.” அமெரிக்கக் குடியுரிமை பெற்று இன்று நல்ல வேலையில் ஓரளவு வசதியான வாழ்க்கை. ஆனால் பார்க்கத்தான் அப்பா இல்லை!”(பக்கம் 124) என்று முடித்துள்ளமை நம் கண்ணில் கண்ணீர் வரச்செய்கின்றது.

    ’தேடுகிறேன்’ என்ற தலைப்பில் பிறந்து வாழ்ந்த வெட்டிக்காடு கிராமத்தில் இருந்த மக்களின் வாழ்க்கைமுறை, பண்பாடு, தொழில் யாவும் மாற்றமடைந்து புதிய தலைமுறை உருவாகிவிட்டதை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். உழவுமாடுகள், நடவு, அறுவடை, கதிரடிக்கும் காட்சிகள், ஏற்றம், முச்சந்தி உரையாடல், கோயில் திருவிழாக்கள், கூத்துகள், சிற்றூர் விளையாட்டுகள், உடையலங்காரம் யாவும் மறைந்து வெட்டிக்காடு புதிய வடிவம் பெற்ற்றுள்ளதைக் கண்டு, தாம் ஓடி விளையாண்ட கிராமம் எங்கே என்று கேட்கும் ஒரு கேள்வியில் நூறாண்டு  மாற்றம் அடங்கியுள்ளதை உணரலாம்.

    நூலில் உள்ள எழுத்துப் பிழைகள் சரிசெய்யப்பட வேண்டும்.

    சுய புனைவாகத் தெரியும் வெட்டிக்காடு நூல், தன் வரலாறாகவும், குடும்ப வரலாறாகவும், ஊர் வரலாறாகவும் தமிழர் பண்பாட்டு வரலாறாகவும் உயர்ந்து நிற்கின்றது.

    குறிப்பு: வெட்டிக்காடு நூல் 18.12.2016 மாலை தஞ்சையில் வெளியிடப்பட்ட து.

    ***

    நூல்:  வெட்டிக்காடு
    ஆசிரியர்: இரவிச்சந்திரன்
    பக்கம்: 128
    விலை: ரூ. 150 – 00
    கிடைக்குமிடம்:  சோ. இரவிச்சந்திரன், 14 ஏ, புளோரா சாலை,
    # 08-02அளாளியா பார்க், சிங்கப்பூர்  509 731
    மின்னஞ்சல்: vssravi@gmail.com

     

     

    Share
  • சென்னையில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஆய்வரங்கம்

    -முனைவர் மு. இளங்கோவன்

     

    tt

    தனித்தமிழ் இயக்கத்திற்கு அறிஞர்களின் பங்களிப்பு என்னும் தலைப்பில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஆய்வரங்கம் சென்னை, நீலாங்கரையில் 06.11.2016 (ஞாயிறு) காலை 10 மணிமுதல் மாலை வரை நடைபெறுகின்றது.

    திரு. இ. பி. கனகசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கவும், பாவலர் இரா. தேவதாசு அவர்கள் முன்னிலையுரையாற்றவும் பாவலர் செவ்வியன் அவர்கள் வரவேற்புரையாற்றவும் உள்ளனர்.

    காலை 10 மணிக்கு அமையும் முதல் அமர்வில் மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் க. தமிழமல்லன் அவர்களும், நீலாம்பிகையாரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் மறை. திரு. தாயுமானவன் அவர்களும் உரையாற்ற உள்ளனர்.

    பிற்பகல் 3 மணிக்கு அமையும் இரண்டாம் அமர்வில் தேவநேயப் பாவாணரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் மு.இளங்கோவன் அவர்களும் தமிழ் மறவர் பொன்னம்பலனாரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் பொற்கோ அவர்களும் உரையாற்ற உள்ளனர்.

    தமிழ்ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

    இடம்: அறிஞர் செவ்வியன் இல்லம், 311, 5 ஆம் தெற்குக் குறுக்குத் தெரு, கபாலீசுவரர் நகர், நீலாங்கரை, சென்னை- 600115

    நிறுத்தம்: நீலாங்கரை காவல் நிலையம் நிறுத்தம் எதிரில்.

    தொடர்புக்கு: 99624 61632 / 97916 29979

    Share
  • யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் – தொடக்க விழா, நூல்கள் வெளியீட்டு விழா!

    மு.இளங்கோவன்

    அன்புடையீர், வணக்கம்.

    av

    av1

    தமிழ் இலக்கியப் பரப்பினுள் ‘யாழ்’ குறித்துப் பரவியிருந்த செய்திகளைத் தொகுத்துத் தம் நுண்மாண் நுழைபுலத்தால் யாழ்நூல் என்னும் பெயரில் அரிய ஆய்வுநூல் வழங்கிய தவத்திரு விபுலாநந்த அடிகளார் அவர்கள் பன்முக ஆளுமைகொண்ட அறிஞராவார். இலங்கையில் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைத்தீவில் பிறந்த இவர் இராமகிருட்டின மடத்தின் துறவி; இராமகிருட்டின விசயம், வேதாந்த கேசரி, பிரபுத்த பாரதம், விவேகானந்தன் ஆகிய இதழ்களின் ஆசிரியர்; மொழிபெயர்ப்பாளர்; பாரதியின் படைப்புகளைக் கல்வியுலகில் முதலில் வரவேற்றுப் போற்றியவர்; இலங்கையில் பல்வேறு பள்ளிகளை உருவாக்கி அனைத்துத் தரப்பு மாணவர்களின் கல்விக்கண்களைத் திறந்த அறிவாசான்; சிறந்த சொற்பொழிவாளர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பேராசிரியர்; யாழ்நூல் இயற்றிய ஆராய்ச்சியாளர்; இத்தகு பெருமைக்குரிய அறிஞரின் வாழ்வும் பணிகளும் முற்றாக அறியப்படாமல் உள்ளதை உணர்ந்து அவற்றை ஆவணப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் தொடக்க விழாவில் புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் மாண்புமிகு வே. நாராயணசாமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். ஆவணப்படத் தொடக்க விழாவும் எம் பதிப்பக நூல்களின் வெளியீட்டு விழாவும் நிகழ்ச்சி நிரலில் காணும்வண்ணம் நடைபெற உள்ளன. இத்தகு இனிய விழாவுக்கு அனைவரையும் அன்புடன் அழைத்து மகிழ்கின்றோம்.

    அழைப்பில் மகிழும்

    வயல்வெளித் திரைக்களத்தினர்

    புதுச்சேரி – 605 003

    தொடர்புக்கு: 9442029053

    நாள்: 06.10.2016 (வியாழன்) மாலை 6 மணி முதல் 8 மணி வரை

    இடம்: செயராம் உணவகம்(Hotel Jayaram), காமராசர் சாலை, புதுச்சேரி

    நிகழ்ச்சி நிரல்

    தமிழ்த்தாய் வாழ்த்து: பைந்தமிழ்ப் பாவலர் இரா. இளமுருகன் அவர்கள்

    வரவேற்புரை: முனைவர் அரங்க. மு. முருகையன் அவர்கள்

    தலைமை: முனைவர் வி. முத்து அவர்கள்(தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்)

    முன்னிலை: புலவர் இ. திருநாவலன் அவர்கள், திரு. சிவ. வீரமணி அவர்கள்

    விபுலாநந்த அடிகளார் ஆவணப் படத்தைத் தொடங்கிவைத்தல்:

    மாண்புமிகு வே. நாராயணசாமி அவர்கள்

    முதலமைச்சர், புதுச்சேரி அரசு

    திருக்குறள், இணையம் கற்போம் நூல்களை வெளியிட்டு வாழ்த்துரை

     

    மாண்புமிகு வே. பொ. சிவக்கொழுந்து அவர்கள்

    (சட்டப்பேரவைத் துணைத்தலைவர், புதுச்சேரி சட்டப்பேரவை)

    நூலின் முதல் படியினைப் பெறுபவர்:

    திரு. கி. வா. கா. பெருமாள் அவர்கள்

    (துணைத்தலைவர், தில்லித் தமிழ்ச்சங்கம்)

    அயல்நாட்டு விருந்தினர்கள்:

    திரு. ம. மன்னர் மன்னன் அவர்கள் (மலேசியா)

    திரு. சிவம் வேலுப்பிள்ளை அவர்கள் (கனடா)

    வாழ்த்துரை

    முனைவர் கு. சிவமணி அவர்கள் (ஆய்வறிஞர்)

    முனைவர் க. இளமதி சானகிராமன் அவர்கள்(புதுவைப் பல்கலைக்கழகம்)

    முனைவர் ஒப்பிலா. மதிவாணன் அவர்கள் (சென்னைப் பல்கலைக்கழகம்)

    முனைவர் அரங்க பாரி அவர்கள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)

    முனைவர் போ. சத்தியமூர்த்தி அவர்கள் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)

    ஏற்புரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

    நன்றியுரை: முனைவர் உரு. அசோகன் அவர்கள்

    அனைவரும் வருக!

    Share
  • ‘பாவலர் மணி’ ஆ.பழநி அவர்கள்…

    ‘பாவலர் மணி’ ஆ.பழநி அவர்கள்…

    முனைவர் மு.இளங்கோவன்

               நான் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாக இருந்தபொழுது (1993) பாவலர் முடியரசனாரைச் சந்திப்பதற்குக் காரைக்குடி சென்றிருந்தேன். அப்பொழுது அனிச்ச அடி ஆசிரியர் ஆ. பழநி அவர்களைக் கண்டு உரையாடினேன். அதன் பிறகு காரைக்குடி செல்லும்பொழுதெல்லாம் அவரைச் சந்திப்பது வழக்கம். தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடும் காப்பியங்களைத் தேடிக் கற்கும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு ஆ.பழநியின் தமிழ்ப்பணிகள் கட்டாயம் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. தமிழில் மரபு நூல்களைப் படைப்பதிலும் தமிழ் இலக்கியங்களில் பொதிந்துகிடக்கும் நுட்பங்களை எடுத்துக்காட்டித் திறனாய்ந்து எழுதுவதிலும் இவர் வல்லவர். தமிழாசிரியராகப் பணியாற்றி, பணியோய்வுக்குப் பிறகும் தொடர்ந்து சிந்திப்பதும் எழுதுவதுமாக இவர் வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளார். தமிழைக் குலைப்போரும் சிதைப்போரும் எழுத்தாளர்களாகப் போற்றி விளம்பரப்படுத்தப்படும் இன்றைய தமிழுலகில் அமைதியாகவும் அடக்கமாகவும் தமிழ்ப்பணியாற்றிவரும் ஆ.பழநியின் தமிழ்ப்பணிகளை இங்கு நினைவுகூர்கின்றேன்.

               வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்து வறுமையிடையிட்ட நிலையில் தமிழ்க்கல்வி கற்று, கற்றோர் உலகில் தனக்கெனத் தனித்த இடம்பிடித்த ஆ.பழநி திராவிட இயக்கச் சிந்தனையாளர் ஆவார்; பகுத்தறிவுக் கொள்கையும் கடவுள் மறுப்புக் கொள்கையும் கொண்டவர். படைப்பு இலக்கியத்துறையில் பல நூல்களைத் தந்தவர். தமிழ் இலக்கியங்களில் பொதிந்துகிடக்கும் உண்மைகளைத் திறனாய்ந்து வெளிப்படுத்தும் வகையில் இவர் வழங்கியுள்ள நூல்கள் தமிழ் இலக்கிய உலகில் என்றும் போற்றத்தக்கன. இவர்தம் சிலப்பதிகார ஆய்வுகளும் கம்பராமாயண ஆய்வுகளும் கற்போர்க்குக் கழிபேருவகை விளைவிக்கும் தன்மையன.

               ஆ.பழநி எழுதிய அனிச்ச அடி செய்யுள் நாடகமும், சாலி மைந்தன் பாவியமும் கற்போர் உள்ளத்தில் கலந்துநிற்கும் நூல்களாகும்.

               காரைக்குடியில் வாழ்ந்த திருவாளர் ஆண்டியப்பன், உமையாள் ஆகியோரின் ஒன்பதாவது பிள்ளையாக ஆ.பழநி பிறந்தவர் (07.11.1931). இவர்களின் குடும்பம் வேளாண்மைக் குடும்பமாகும். ஐந்தாம் வகுப்புவரை கல்வி பயின்றவர். இளமையில் இரண்டாண்டுகள் வட்டிக் கடையொன்றிலும் இரண்டாண்டுகள் துணிக்கடையிலும், பல்பொருள் அங்காடி ஒன்றில் ஓராண்டும் பணிபுரிந்தவர். அதன் பிறகு குடும்பத்தொழிலான வேளாண்மையில் எட்டாண்டுகள் ஈடுபட்டிருந்தவர். பல்வேறு தொழில்களைச் செய்யும்படி வாழ்க்கைநிலை இவருக்கு அமைந்தாலும் படிப்பதை மட்டும் தொடர்ந்து மேற்கொண்டிருந்ததால் நிறைபுலமை பெற்ற தமிழறிஞராக இவர் மிளிர்ந்தார்.

    •   1950 ஆம் ஆண்டளவில் தமிழகத்தில் கிளைபரப்பி வளர்ந்த திராவிட இயக்க உணர்வு நம் பாவலரையும் பற்றிக்கொண்டது. திராவிடநாடு, போர்வாள், திராவிடன் போன்ற ஏடுகளைத் தொடர்ந்து படித்துத் தம்மைத் திராவிட இயக்க உணர்வாளராக அமைத்துக்கொண்டவர். உள்ளத்தில் படிந்த திராவிட இயக்க உணர்வு இவரைத் தமிழ் இலக்கியங்களையும் தமிழ் வரலாற்றையும் படிக்கும் மாணவராக மேலைச்சிவபுரி கல்லூரிக்கு அனுப்பியது.

    •   ஆ.பழநி 1959 இல் மேலைச்சிவபுரி கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தபொழுது வால்குடல் அழற்சி நோயினுக்கு ஆளானவர். நோய் தணிக்க அறுவைப் பண்டுவம் செய்துகொண்டவர். அப்பொழுது நுரையீரல் பகுதியில் ஒரு கட்டி ஏற்பட்டு, அதனையும் அறுத்தெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இவ்வாறு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தேர்வை உரிய காலத்தில் எழுத முடியாமல், காலம் தாழ்ந்து, 1962 இல் புலவர் பட்டம் பெற்றவர்.

    •   1964 ஆம் ஆண்டு காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் ஆ.பழநி தமிழாசிரியராகப் பணியேற்றவர். அப்பள்ளியில் தமிழ் உணர்வு மிக்க பல மாணவர்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர். பாவலர் முடியரசன், பேராசிரியர் தமிழண்ணல் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களுடன் பழகவும் பணிபுரியவுமான சூழல் இவருக்கு அமைந்தது.

    •   1968 ஆம் ஆண்டு சென்னையில் அமைந்துள்ள சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டினை ஒட்டி நடத்திய திருக்குறள் புத்துரைப் போட்டியில் பரிசு பெற்றவர். 1973 இல் சை. நூ. கழகம் நடத்திய செய்யுள் நாடகப் போட்டியில் இவர் எழுதிய அனிச்ச அடி என்னும் செய்யுள் நாடகம் முதல்பரிசைப் பெற்றது. மேலும் தமிழகத் தமிழாசிரியர் கழகம் நடத்திய செய்யுள் நாடகப் போட்டியில் “அன்னி மகள்” என்ற நாடகம் எழுதி, மூன்றாம் பரிசினைப் பெற்றவர்.

    •   1983 இல் பண்டிதமணியின் நாடகத் தமிழ் என்னும் திறனாய்வு நூலினை இவர் எழுதியவர். 1985 இல் சாலிமைந்தன் என்னும் காப்பியத்தை எழுதி வெளியிட்டவர். இந்த நூல் தமிழகப் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக இருந்த பெருமைக்குரியது.

    •   1989 ஆம் ஆண்டு பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா? என்னும் ஒப்பீட்டு நூலை ஆ.பழநி எழுதி வெளியிட்டவர். 1980 இல் கானல்வரியா, கண்ணீர் வரியா என்ற திறனாய்வு நூல்வெளியானது. 1991 இல் இளங்கோவடிகள் காப்பியக் கலைத்திறன், கோவலன் வீட்சியும் இளங்கோ மாட்சியும் என்னும் நூல்களை வெளியிட்டவர்.

    •   இவர் சிலம்பில் சில மறைப்புகள் என்ற நூலினை 1993 இல் எழுதி வெளியிட்டவர். 2004 இல் இவரின் கம்பன் காட்டும் போரற்ற உலகம் என்ற திறனாய்வு நூல் வெளியானது. 2005 இல் காரல் மார்க்சு காப்பியம் வெளியாயிற்று. பாண்டியன் பரிசில் வரலாற்றுப் பார்வையும் – குறியீட்டுச் செய்தியும், களங்கண்ட கவிதைகள் முதலிய நூல்களையும் எழுதி வழங்கியவர்.

    •   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வழியாகச் சிலப்பதிகாரம் செம்பதிப்பு வெளியிடுவதற்கு இவர் பதிப்பாசிரியராக இருந்து அப்பணியை நிறைவு செய்து வழங்கியவர்.

    ஆ.பழநி பெற்ற சிறப்புகள்

    ஆ.பழநி

     

    •   நெல்லையில் இயங்கிவரும் தனித்தமிழ் இலக்கியக் கழகம் 1974 இல் அனிச்ச அடி நாடகத்திற்கு ஒரு திறனாய்வு அரங்கை நடத்திப் பாவலர்மணி என்னும் பட்டத்தினை ஆ. பழநிக்கு வழங்கியது.

    •   1980 இல் தவத்திரு குன்றக்குடி அடிகளார் பறம்புமலையில் நடத்திய விழாவில் இவருக்குக் கவிஞர்கோ என்னும் விருதளித்துப் பாராட்டினார்.

    •   தமிழ்நாடு அரசு பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி, ஆ. பழநியின் பாத்துறைப் பங்களிப்பைப் போற்றும் வகையில் பாவேந்தர் விருது வழங்கிச் சிறப்பித்தது.

    •   1997 இல் கோவில்பட்டித் திருவள்ளுவர் கழகம் இவருக்குத் திருவள்ளுவர் விருது வழங்கிச் சிறப்பித்தது. 1997 இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் பேரவை உறுப்பினராக இவரை நியமனம் செய்தது.

    •   1999 இல் காரைக்குடிச் சுழற்கழகம் ஆ.பழநிக்குப் புலவர் மாமணி என்னும் விருது வழங்கிப் பாராட்டியது.

    •   2002 இல் பாரதிதாசன் தமிழ்ப்பேரவை, தமிழ் நெறிச் செம்மல் விருது வழங்கியுள்ளது. 2003 இல் மதுரை மீனாட்சி அருள் தமிழ் மன்றம் பாராட்டும் பொற்கிழியும் வழங்கிப் பாராட்டியுள்ளது.

    •   2007 இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் பட்டமும் பொற்பதக்கமும் பொற்கிழியும் வழங்கிப் பாராட்டியுள்ளது.

    அனிச்ச அடி நூலின் சிறப்பு

    அனிச்ச அடி நூல்

               புலவர் ஆ. பழநியின் அனிச்ச அடி என்னும் நூல் மனோன்மணியம் செய்யுள் நாடகத்துக்கு அடுத்துத் தமிழில் வெளிவந்த முதன்மையான செய்யுள் நாடகம் ஆகும். திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில் மனோன்மணியம் சுந்தரனார் நாடகப் போட்டி 1971 ஆம் ஆண்டு நடைபெற்றது. தமிழகத்தின் புலவர் பெருமக்கள் பலர் செய்யுள் நாடகங்களை இயற்றிப் போட்டிக்கு அனுப்பினர். இவர் இயற்றிய அனிச்ச அடி நூல் முதல் பரிசான ஆயிரம் வெண்பொற்காசினைப் பெற்றது.

    கவியரசு முடியரசனார் இந்த நூலின் சிறப்பினைப்,

    பாட்டென்ற பேரால் பழுதுபட்ட சொற்றொடரைக்
    கேட்டென்ற னெஞ்சம் கிறுகிறுத்தேன் – வேட்டெழுந்து
    நாடகமாம் நன்மருந்தை நண்பன் பழநியெனும்
    பாடல்வலான் தந்தான் படைத்து

    தேன்கலந்து தந்தனனோ தெள்ளமுதந் தந்தனனோ
    நான்கலந்தே இன்புற்றேன் நாடோறும் – வான்பறந்தேன்
    வாட்டும் துயர்துறந்தேன் வையம் தனைமறந்தேன்
    பாட்டை அவன்படிக்கக் கேட்டு

    கூற்றமிலா வாழ்வு கொடுத்த தமிழ்த்தாயே
    ஏற்றவரம் இம்மகற்கும் ஈந்தருள்வாய் – சாற்றுக்
    கவிச்சுவையை விஞ்சும் கவிமாலை நின்றன்
    அனிச்சஅடிக் கீந்தான் அவன்

    என்று போற்றிப் பாடியுள்ளார்.

               பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் ஆய்வுரை நூலுக்கு அழகூட்டுகின்றது. ஆர். நடராசன் அவர்களின் The Story of Anicha Adi the Epic Drama என்னும் பெயரில் அமைந்த அறிமுக உரை, நூலாசிரியரின் முன்னுரை, பதிப்பகத்தாரின் பதிப்புரை இந்த நூலின் பெருமையை அறியப் பெரிதும் துணைசெய்கின்றன.

               குறுந்தொகையில் இடம்பெறும் 292, 72 என்னும் எண்ணிட்ட இரண்டு பாடல்களின் செய்திகளில் பெண்கொலை புரிந்த நன்னனைப் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. அதனையொட்டி, சங்க காலப் பின்புலத்தில் அனிச்ச அடி செய்யுள் நாடகம் புனையப்பட்டுள்ளது. ஐந்து அங்கங்களாக நாடகம் நடையிடுகின்றது.

    அனிச்ச அடியின் கதை மாந்தர்களாக,

    அருளாழி – சேரர் படைத் துணைத்தலைவன் (கதைத் தலைவன்),
    சுரும்பார் குழலி- அருளாழியின் மனைவி
    ஆய் எயினன் – சுரும்பார் குழலியின் தந்தை (போர்ப்படைத் தளபதி)
    அணிவளை – ஆய் எயினனின் மனைவி
    அனிச்ச அடி – கோசர் குலப் பெண்
    கணியன் கீரன் – அனிச்ச அடியின் தந்தை
    மிஞிலி – துளு நாட்டுப் படைத்தலைவன்
    நன்னன்– துளு நாட்டு அரசன்
    நார்முடிச்சேரல் – சேர மன்னன்
    சேரன் செங்குட்டுவன் – நார்முடிச் சேரல் இளவல்
    ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் – நார்முடிச் சேரலின் இளவல்
    பரணர் – சேரநாட்டுப் புலவர்
    மோசிகீரனார் – துளு நாட்டுப் புலவர்
    வேங்கைமுகன் – குறும்பர் தலைவன், பவளத்தீவின் அரசன்
    கோட்புலி – வேங்கை முகனின் மகன்

    முதலான கதை உறுப்பினர்கள் நம் நெஞ்சில் நிலைபெறுகின்றனர்.

               குழலியும் அவள் கணவன் அருளாழியும் நன்னனின் வெள்ளணி விழாவுக்குச் செல்லுதலும், அங்கு மிஞிலி என்பவனின் வஞ்சனையால் குழலி கொலைத்தண்டனை யுறுதலும், அருளாழி பகைவர்களை வீழ்த்துவதும், அருளாழியை அனிச்ச அடி விரும்புவதும் இறுதியில் அனிச்ச அடியும் அருளாழியும் இறப்பதும் கதைக்கூறுகளாக உள்ளன.

               ஆசிரியப்பாவின் வழியாகச் சங்க இலக்கியச் செறிவையும், அவலச் சுவையையும் இந்த நாடகச் செய்யுளில் ஆ. பழநி தந்து நாடகத்தைப் புனைந்துள்ளார். திருக்குறள் கருத்துகள், பழமொழிகள், இரட்டுறமொழிதல், உள்ளுறை முதலியவற்றை இடத்துக்கு ஏற்ப ஆண்டு, நாடகத்தை மிளிரும்படிச் செய்துள்ளார்.

               சுந்தரனாரின் மனோன்மணியம் மொழிபெயர்ப்பு நூல் எனவும், அனிச்ச அடி தமிழ்ப் பண்பு மிகுந்து நிற்கும் நூல் என்றும் இந்த நூலைக் குறித்து நம் பேராசிரியர் தமிழண்ணல் அரணிட்டு எழுதியுள்ளார்.

    “உறவினால் உறுவது ஒழிகலாத் துன்பமே
    இறவினால் வருவது எண்ணிலா இன்பமே”

    என்ற அனிச்ச அடியின் கூற்று நாடகத்தின் முத்தாய்ப்பான வரிகளாகும்.

    “திருந்திழாய்! நீயென் திரும்பியும் நோக்கியும்
    இருந்தும் எழுந்தும் எங்கே மனத்தினைப்
    போய்வர விடுத்தனை புகலுதி!”

    எனப் பாவியம் தொடங்குகின்றது.

    அனிச்ச அடி பாவியத்தில் காமமிக்க கழிபடர்க் கிளவியாக,

    கடலலையில் வருகயல்கள்
    கரையிலுனக் குணவுதர
    மடலவிழும் முடத்தாழை
    மரமுறங்கு மிளங்குருகே!
    படர்நலியத் தனியிருந்து
    பனியருவி விழிபொழிய
    இடர்வழங்கு மவருரையை
    இயம்பலுனக் கரிதலவே” (பக்கம் 25)

    விரிமலரில் உறைநறவம்
    விரும்பிநனி யருந்தியயற்
    பெரியமரச் சிறுகிளையிற்
    பிரசமிசை விழிவளரும்
    கரியநிறச் சிறையளியே
    கனலிடை யுறையுநிணம்
    இரிந்துருகு மெனவுருகும்
    எனதுநிலை சொலலரிதோ” ( பக்கம் 26)

    எனவரும் அனிச்ச அடியின் வரிகள் மரபுப்பாடல்களைச் சுவைப்பவர்களுக்குத் தேனொத்த வரிகளாகும்.

    சாலிமைந்தன் பாவியம்

    சாலிமைந்தன் பாவியம்

               மணிமேகலைக் காப்பியத்தில் படைக்கப்பட்டிருக்கும் மாந்தனான ஆபுத்திரன் வைதீக நெறிகளை எதிர்ப்பவன் ஆவான். அந்த ஆபுத்திரன் வரலாறுதான் சாலிமைந்தன் நூலின் காப்பியக் கதையாக விரிந்துள்ளது.

               ஆ. பழநி எழுதிய சாலிமைந்தன் பாவியம் 1985 இல் வெளிவந்தது. 1. கங்கைக் காண்டம், 2. குமரிக்காண்டம், 3. கூடற்காண்டம், 4. மணிபல்லவக் காண்டம் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது. 29 படலங்களைக் கொண்டு, 835 செய்யுள்களைக் கொண்ட நூல் இதுவாகும்.

               மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெறும் ஆபுத்திரன் வேள்விகளை எதிர்ப்பவன்; பசித்தவர்க்கு உணவு வழங்குவதில் பேரீடுபாடு கொண்டவன். எனவே நாடு நலம்பெற, வைதீக நெறிகளை எதிர்க்கும் பாத்திரமாக ஆபுத்திரனைக் காப்பியத் தலைவனாக்கி ஆ. பழநி பாவியம் புனைந்துள்ளார். சாத்தனாரின் ஆபுத்திரன் இக்காப்பியத்தில் ஆபுத்திரன், ஆமகன், ஆன்மகன், ஆன்மைந்தன், ஆவின்மைந்தன், சாலிமைந்தன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றான்.

    “சாலிக்குண்டோ தவறு”
    “பார்ப்பார்க்கொவ்வாப் பண்பின் ஒழுகி
    காப்புக்கடை கழிந்து”
    “அரும்பெறல் மனைவி யான்”

    எனவரும் மணிமேகலைத் தொடர்களை எடுத்துக்கொண்டு, ஆபுத்திரன், சாலியின் சிறப்புகளை விதந்து ஓதி, பாவியம் புனைந்தமைக்கான காரணங்களை நூலாசிரியர் தருக்கமுறையில் எடுத்துரைத்துள்ளமை போற்றும்படியாக உள்ளது.

    சாலிமைந்தன் நூலுக்குப் பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் காப்பிய அறிமுகம் என்னும் தலைப்பில் வரைந்துள்ள அணிந்துரை சிறப்பாக உள்ளது. மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்களின் மதிப்புரை நூலுக்கும் நூலாசிரியருக்கும் கிடைத்துள்ள மிகப் பெரும் மதிப்பளிப்பு என்று குறிப்பிடலாம். ஆ. பழநியைப் பற்றி, “கவியூற்றம், பகுத்தறிவியம், மரபிற் புரட்சி, இயற்கைப் புனைவு, ஒட்பநுட்பம், செந்தமிழூற்றம், கொள்கையெழுத்து என்றிணை நற்றிறன் இயல்பிலே வாய்ந்தவர் பழநியார்” என்று வ.சுப.மா. குறிப்பிட்டுள்ளமை பொருத்தமான சொற்களாகும் (பக்கம் 25).

    சாலிமைந்தன் கதையமைப்பு:

               கங்கையாறு பாயும் வாரணாசியில் ஆரண அறிஞர் அபஞ்சிகன் என்னும் அந்தணன், தன் பெற்றோர் வற்புறுத்தலுக்காக அழகு நிறைந்த சாலி என்பாளை மணம் செய்துகொண்டான். வேள்வித்தொழிலில் விருப்பம்கொண்டிருந்த அபஞ்சிகன் சாலியின் இளமைத்தன்மையை நெஞ்சில் தேக்காமல் இருந்தான். சோதிடத்துச் செய்தியை நம்பி, சாலியை வீட்டை விட்டு வெளியேற்றினான். உயிரைப் போக்கிக் கொள்ள கங்கையை அடுத்த காட்டில் இருந்த ஆலமரக் கிளையில் ஏறி, விழுதைத் தன் கழுத்தில் சுற்றி இறக்க முற்பட்ட பொழுது அவளுடன் வந்த ஒரு முதுநாய் குரைக்க, தென்னாட்டு வணிகன் இளஞ்சாத்தன் சாலியைக் காப்பாற்றினான். இளஞ்சாத்தனின் மேல்சாய்ந்த சாலி, அவனின் அன்புப் பிடியில் அடைக்கலமானாள்.

    “தழுவியதாற் புத்தின்பம் தன்னுடலிற் படர்ந்தாலும்
    வழுவியதாற் பெண்மையென வருநாணம் அறிவுறுத்தி
    எழுவதனால் அணைத்திருக்கும் இருகையால் சிறைநீக்கித்
    தொழுபவளாய்த் தனிநின்றாள்; பேச்சொன்றும் தோன்றாளாய் (பக்கம்,48)

    என்று சாலியின் நிலையைப் பாவலர் நம் கண்முன் பாட்டோவியமாகப் படைத்துக் காட்டுகின்றார்.

    சாலியை விடுத்து இளஞ்சாத்தன் வணிகத்தின் பொருட்டு சாவகத் தீவு செல்கின்றான்.

    சாலி கருவுற்றதை அறிந்த அந்தணர்கள் அவளுக்குப் பல்வேறு இடையூறுகளைச் செய்து வீட்டைவிட்டு வெளியேற்றினர். சாலி தெற்கு நோக்கி வருகின்றாள். தெற்கு நோக்கிச் செல்கையில் ஆயர் சேரியில் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள். ‘வயணங்கோடு’ என்ற ஊருக்கு அருகில் உள்ள ஒரு கொல்லையில் குழந்தையை விட்டுவிட்டு, மறைவாக நிற்கும்பொழுது பசு ஒன்று அக் குழந்தைக்குப் பால்கொடுத்தது.

    அந்த வழியில் வந்த இளம்பூதி – அஞ்சனை என்னும் இருவரும் குழந்தையைக் கண்டு, எடுத்துச் செல்கின்றனர். அக்குழந்தைக்கு ஆபுத்திரன் என்று பெயர்சூட்டி வளர்த்தனர். ஆபுத்திரன் எல்லாக் கலைகளையும் கற்று வளர்ந்தான்.

    அவ்வூரில் வாழும் அந்தணர்கள் வேள்வியில் பலியிடப் பசுக்களைத் தேடுகின்றனர். பசு இல்லாத சூழலில் இளம்பூதியின் வீட்டில் இருந்த பசுவை வேள்விக்கு வேண்டுகின்றனர். ஆபுத்திரனுக்குப் பால்கொடுத்த பசுவின் கன்று இதுவாகும். இளம்பூதி மறுக்கின்றான். ஆனாலும் அந்தணர்கள் பசுவைக் கவர்ந்து வேள்விக்கூடம் சென்றனர். ஆபுத்திரன் வேள்வியிலிருந்து பசுவை மீட்டுக் கொணர்ந்தான். அப்பொழுது அதமயன் என்னும் அந்தணன் ஆபுத்திரனைக் கோலால் தாக்க முயற்சி செய்கின்றான். அந்தப் பசுமாடு முட்டி, அதமயன் இறந்தான். வேதியர்கள் ஆபுத்திரனை வெறுத்து, அவன் பிறப்பைப் பழித்துப்பேசினர். அந்தணர்களின் வற்புறுத்தலுக்கு ஆளான இளம்பூதி ஆபுத்திரனை வீட்டிலிருந்து வெளியேற்றினான். ஆபுத்திரன் பசியுடன் மதுரைக்கு வருகின்றான். அங்குச் சாலியைச் சந்திக்கின்றான். பசியால் வருந்துபவர்களுக்குப் பசிபோக்குவதையும், கொலை வேள்வியைத் தடுத்து நிறுத்துவதையும் கொள்கையாகக் கொண்டு அங்குத் தங்கியிருந்தான்.

    பசுவை வெட்டி நடத்தும் வேள்வியை ஆபுத்திரன் தடுத்ததால் அனைத்து ஊர் அந்தணர்களும் அவனை எதிர்த்தனர். அதனால் அங்கிருந்து வேறு இடம் வந்தான். ஆபுத்திரன் இளஞ்சாத்தனைச் சந்திக்கின்றான். ஆபுத்திரன், இளஞ்சாத்தன், சாலி ஆகியோர் உறவு மூவருக்கும் தெரிகின்றது. சாவகத்தீவில் தொண்டு செய்ய நிறைய வாய்ப்பு உள்ளது என்று கூறி ஆபுத்திரனை இளஞ்சாத்தன் அழைக்கின்றான். ஆபுத்திரன் அவனுடன் சாவகம் செல்கின்றான். இடையில் மூலகன் என்பவன் சூழ்ச்சியால் குறுவாள் கொண்டு கப்பலின் பாயினை அறுத்தெறிந்தான். கப்பல் பயணம் தடைப்பட்டு அருகில் இருந்த மணிபல்லவத் தீவுக்கு அனைவரும் செல்கின்றனர். மணிபல்லவத் தீவில் மூலகன் ஆபுத்திரனைக் கொல்ல நினைகின்றான். ஆனால் எதிர்பாராத விதமாக பாம்பு தீண்டி, மூலகன் இறந்துவிடுகின்றான். ஆபுத்திரன் இல்லாமல் கப்பல் புறப்பட்டுச் சென்றபொழுது, இளஞ்சாத்தன் ஆபுத்திரனை ஏற்றிவர மீண்டும் மணிபல்லவத்துக்குக் கப்பலைத் திருப்பச் சொல்கின்றான். கப்பல் நிற்காமல் சாவகம் செல்கின்றது. இளஞ்சாத்தன் சாவகத்தில் ஆபுத்திரன் நினைவாக அறச்சாலை அமைப்பதுடன், மீண்டும் ஆபுத்திரனைத் தேடி, மணிபல்லவம் வருகின்றான்.

    மணிபல்லவத்திலிருந்து வேறு கலத்தின் வழியாக ஆபுத்திரன் சாவகம் செல்கின்றான். இளஞ்சாத்தன் அங்கு ஆபுத்திரன் பெயரில் அறச்சாலைகளை நிறுவியிருந்தமையைக் கண்டான். உண்மைநிலை உணர்ந்த ஆபுத்திரன் இளஞ்சாத்தனைச் சந்திக்க நினைக்கின்றான். மீண்டும் மணிபல்லவத் தீவினுக்கு வருகின்றான்.

    முன்பே ஆபுத்திரனைத் தேடி பணிபல்லவம் வந்த இளஞ்சாத்தன் அங்கிருந்த தீவதிலகையிடம் ஆபுத்திரனைக் குறித்து வினவியதும், அவள் காட்டிய முடங்கல் கண்டு, இளஞ்சாத்தன் வடக்கிருந்து உயிர் துறக்கின்றான். அங்கு இறந்த இளஞ்சாத்தனின் எலும்பு இருக்கின்றது. இதனைத் தீவதிலகை வழியாக அறிந்த ஆபுத்திரன்,

    “இன்புறுத்துஞ் செல்வநலம் மிகவுடையா யென்றாலும்
    என்பொருட்டா லுயிர்நீத்தாய் என்பதெற்கோர் வியப்பாமால்
    என்பொருட்டா லுயிர்நீத்தா யென்பதனைக் கண்டபின்பும்
    தன்பொருட்டால் யான்வாழ்தல் தாங்ககிலா வியப்பாமால்”

    என்று வருந்துவதைக் கவிஞர் சிறப்பாகப் பாடியுள்ளார்.

    “என்கதையைக் கேட்டந்நாள் இருவிழிநீர் கொட்டியவன்
    தன்கதையுள் என்கதையும் தழுவுமென அறியேனால்
    தன்கதையுள் என்கதையும் தழுவுமென அறிவேனேல்
    என்புகளின் குவைகண்டிங் கினைவுறுதல் செய்யேனால்” (பக்கம் 262)

    என்று இளஞ்சாத்தனின் உறவு நினைந்து ஆபுத்திரன் கலங்கும் வரிகளில் கற்போரைக் கரைந்துருகச் செய்யும் தன்மையன.

    இந்த நிலையில் சாலி அங்கு வந்தாள். இளஞ்சாத்தன் இறக்கும்பொழுது, “சாலியின்பால் எனக்குப் பிறந்த மகனே ஆபுத்திரன்” என்று தீவதிலகையிடம் கூறி இளஞ்சாத்தன் உயிர்துறந்துள்ளான். உண்மைநிலை உணர்ந்த சாலி, இறந்த இளஞ்சாத்தனை நினைத்து உயிர் விடுகின்றாள்.

    அந்த நிலையில் ஆபுத்திரன்,

    நாவூறும் இனியமொழி நாம்பேசிக் கூடாமல்
    சாவூரில் கூடவெனச் சதிசெய்த தவ்விதிதான்
    சாவூரில் கூடவெனச் சதிவிதிதான் செய்திலதேல்
    நீவேறு நான்வேறாய் நிற்போமா கூடலிலே” (பக்கம் 265)

    என்று புலம்பும் வரிகள் கதைநிகழ்வின் நிலையை நமக்கு எடுத்துரைக்கப் போதுமானவையாக உள்ளன.

    கருவாகி வரும்போதே கடுந்துயரந் தாய்க்கீந்தேன்
    உருவாக்கி வளர்த்தார்க்கும் உறுதுயரே யானீந்தேன்
    வருவாயென் றழைத்தானை வானுலகம் போக்கியுளேன்
    பொருவாரு மில்லாத புண்ணியர்யார் என்போலே” (பக்கம் 265)

    என்று கூறியவனாய், ஆபுத்திரன் தன் கையிலிருந்த பாத்திரத்தைக் கோமுகிப் பொய்கையில் எறிந்து, தாமும் உயிர்விடுவதாக ஆ. பழநி தம் பாவியத்தில் புனைந்துள்ளார்.

    இவ்வாறு துன்பத்தில் முடியும் ஆபுத்திரன் வரலாறு காலம் காலமாக சமூகத்தில் நிலவிய வேள்வி, மூடப் பழக்கவழக்கம், வருண வாழ்க்கை ஆகியவற்றை எடுத்துரைத்துச் சமூகச் சீர்திருத்தம் காட்டும் பாவியமாக நூலாசிரியரால் படைக்கப்பட்டுள்ளது.

    தமிழுக்குப் பாவிய அணிகலன் சூட்டியும், நல்லாய்வு நூல்கள் வழங்கியும் தமிழ் வாழ்வு வாழ்ந்துவரும் ஆ. பழநி தமிழர்களின் போற்றுதலுக்கு உரியவர்.

    ஆ.பழநியின் நூலடைவு:
    1. அனிச்ச அடி
    2. அன்னிமகள்
    3. சாலிமைந்தன்
    4. காரல் மார்க்சு
    5. களங்கண்ட கவிதைகள்
    6. பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா?
    7. பண்டிதமணியின் நாடகத் தமிழ்
    8. சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு
    அ. கானல்வரியா கண்ணீர் வரியா
    இ. கோவலன் வீழ்ச்சியும் இளங்கோ மாட்சியும்
    ஈ. சிலம்பில் சில மறைப்புகள்
    9. பாண்டியன் பரிசில் வரலாற்றுப் பார்வையும்- குறியீட்டுச் செய்தியும்
    10. கம்பன் காட்டும் போரற்ற உலகம்
    11. திருக்குறள்: உரைகளும் சில குறைகளும்

    ____________________________________________________________

    முனைவர் மு.இளங்கோவன்

    muelangovan@gmail.com

    *** இக்கட்டுரைக் குறிப்புகளையும், படத்தையும் எடுத்தாளுவோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

    ____________________________________________________________

    Share
  • பேராசிரியர் தமிழண்ணல் மறைவு!

    முனைவர் மு.இளங்கோவன்

    தமிழண்ணலுக்குக் கையறுநிலைப்பா!

    annal 2
    தமிழண்ணல்
    தமிழைத் தேக்கிய நெஞ்சமுடன்
    தரணி எங்கும் சுழன்றபடி
    கமழக் கமழ உரையாற்றி,
    கன்னித் தமிழைப் போற்றியவன்!
    கமழக் கமழ உரையாற்றி,
    கன்னித் தமிழைப் போற்றியவன்
    இமைகள் மூடிய கொடுஞ்செய்தி
    என்றன் நெஞ்சைத் தாக்கியதே!

    நிமையப் பொழுதும் தவறாது
    நிலைத்த பணிகள் செய்தவனாம்!
    தமிழின் அண்ணல் எனும்பெயரோ
    தமக்குப் பொருந்த வாழ்ந்தவனாம்!
    தமிழின் அண்ணல் எனும்பெயரோ
    தமக்குப் பொருந்த வாழ்ந்தமகன்,
    குமைந்து மக்கள் அரற்றும்படி,
    கூடல் நகரில் மாய்ந்தனனே!

    ஆய்வில் நுழைந்து தமிழுக்கு,
    அணிஅணி யாக நூல்தந்து,
    ஓய்வோ இன்றி உழைத்த மகன்
    உலகம் போற்றத் துயில்கொண்டான்!
    ஓய்வோ இன்றி உழைத்தமகன்
    உடலம் சுருங்கித், தளர்வுற்றுச்,
    சாய்ந்த செய்தி தமிழர்களைச்,
    சாய்த்த தென்றே நானுரைப்பேன்!

    பள்ளிக் கல்வி தமிழாக,
    பாடு கிடந்த புலவோர்க்கு,
    உள்ளம் இசைந்து தலைமையேற்ற
    ஒப்புயர் வில்லா மறவன்இவன்!
    உள்ளம் இசைந்து தலைமையேற்ற
    ஒப்புயர் வில்லா மறவன்இன்று
    வள்ளல் போல உயிர்துறந்து
    வையம் நீங்கிச் சென்றனனே!

    கோவில் தோறும் குடமுழுக்குக்
    குமரித் தமிழில் நடத்திடவே,
    ஆவல் கொண்ட பெரும்படைக்கே,
    அரசன் போல ஆணையிட்டான்!
    ஆவல் கொண்ட பெரும்படையின்
    அணியின் செயலை நேர்கண்ட,
    காவல் வீரன் நிகர்த்தமகன்
    கண்கள் துயின்றான்! கவலுகின்றோம்!

    புதுமை, பழைமை எனும்பெயரில்
    புரட்சி நடந்த ஆய்வுலகில்,
    மதிமை சான்ற தமிழண்ணல்
    மலர்ந்த கண்ணாய் இரண்டனையும்
    பொதிய மலையின் அகத்தியனாய்ப்
    போற்றித் தழுவிப் புகழ்புரிந்தான்.
    அதனால் இரண்டு குழுவுக்கும்
    அவனே இணைப்புப் பாலம்அம்மா!

    கற்றோர் அவையை அணிசெய்த
    கழகப் புலவன் ஒத்தமகன்!
    வற்றிய உடலம் கொண்டாலும்
    வரிப்புலி போன்றே தமிழ்காத்தான்!
    வற்றிய உடலின் வரிப்புலியோ
    வாழ்ந்து முடிந்து சென்றாலும்
    பற்றிய தீயாய் அவன்உணர்வு
    படர்ந்து தமிழகம் நிலவும்அம்மா!

    சிற்றூர் தன்னில் பிறந்தாலும்
    செயலால் உலகோர் உறவானான்!
    கற்ற மக்கள் உள்ளமெலாம்
    கல்லின் எழுத்தாய் நிலைபெற்றான்!
    கற்ற மக்கள் உள்ளமெலாம்
    கல்லின் எழுத்தாய் நிலைத்தவனின்
    பற்றில் திளைத்தோம்; பதறுகின்றோம்!
    போய்வா அண்ணலே, காத்திருப்போம்!

    பேராசிரியர் தமிழண்ணல்

    மூத்த தமிழறிஞரும், தமிழாய்வுலகில் தனக்கெனத் தனித்த இடத்தைப் பெற்றவருமான முனைவர் இராம. பெரியகருப்பன் (தமிழண்ணல்) ஐயா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். பேராசிரியர் தமிழண்ணல் ஐயா அவர்கள் உடல் நலம் குன்றி, தம் 88 ஆம் அகவையில் இயற்கை எய்தியுள்ளார். பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் உடல் நல்லடக்கம் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மதுரையில் நடைபெற உள்ளது.

    பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் தமிழ்ப்பற்றுடன் விளங்கிய தமிழ்ப் பேராசிரியர் ஆவார். தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி உண்ணாநோன்பு இருந்த தமிழறிஞர் குழுவுக்குத் தலைமையேற்றவர். தொல்காப்பியத்திற்கு முரணாக ஒரு தொல்காப்பியப் பதிப்பு வந்தபொழுது துணிச்சலுடன் நின்றெதிர்த்த பெரும்புலவர். இத்தகு காரணங்களால் இவர் தலைமையில் யான் திருமணம் செய்துகொண்டேன். என் சிற்றூருக்கு வருகை தந்து என் நூல்களை வெளியிட்டவர்(1995). சிலவாண்டுகளுக்கு முன் புதுச்சேரிக்கு வந்தபொழுது நம் இல்லம் வந்து எங்களின் எளிய விருந்தினை ஏற்றவர். மதுரை செல்லும்பொழுது யானும் தமிழண்ணல் ஐயா அவர்களைக் காண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். என் மீது அளவற்ற அன்புகாட்டியவர். என் குடும்பத்தின் மீது பரிவுகொண்டவர். இத்தகு அன்பால் எங்களைப் பிணைத்திருந்த பேராசிரியர் தமிழண்ணல் ஐயா அவர்களின் மறைவுச் செய்தி எனக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. எங்களின் கண்ணீர் வணக்கத்தை ஐயாவுக்குக் காணிக்கையாக்குகின்றோம்.

    பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் தமிழ் வாழ்க்கையை நினைவுப்படுத்துகின்றேன்.

    பிறப்பு

    தமிழண்ணல் அவர்கள் 12.08.1928 இல் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் பெரியகருப்பன் என்பதாகும். இவர்தம் பெற்றோர் இராமசாமி, கல்யாணி ஆச்சியாவர்.

    கல்வி

    மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று தமிழ் வித்துவான் பட்டம் பெற்றவர்(1948). பிறகு தன்முயற்சியால் கற்று, சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(பொருளியல்) (1948), முதுகலைத் தமிழ்(1961) ஆகிய பட்டங்களைப் பெற்றவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கிய மரபுகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்(1969). முனைவர் சி.இலக்குவனாரும், முனைவர் அ.சிதம்பரநாதனாரும் இவர்தம் ஆய்வு நெறியாளர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

    ஆசிரியர் பணி

    தமிழண்ணல் அவர்கள் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கியவர். இங்கு, தம் கல்லூரித் தோழர் கவிஞர் முடியரசனாருடன் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பதின்மூன்று ஆண்டுகள் இங்குப் பணிபுரிந்த பிறகு மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பத்தாண்டுகள் தமிழ்ப் பேராசிரியர் பணியாற்றியவர். இவர் தம் சங்க இலக்கியப் புலமையை அறிந்த ஆலை அரசர் கரு. முத்து. தியாகராசனார் இவருக்கு உள்ளன்போடு பணி வழங்கியதை அண்ணல் அவர்கள் நெகிழ்ந்து கூறுவார்கள்.

    1971 முதல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியும் பின்னர் இணைப்பேராசிரியர், அஞ்சல்வழிக் கல்விப் பேராசிரியர், தமிழியல்துறைப் பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் பணி என மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பல நிலைகளில் பணிபுரிந்துள்ளார். இவர்தம் பணிக்காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சிறப்பு நிதியுதவித் துறையாக உயர்வுபெற்றது.

    குடும்பம்

    தமிழண்ணல் அவர்களுக்கு 1954, ஆகத்து 30 இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குச் சோலையப்பன், கண்ணன், மணிவண்ணன் என்ற ஆண்மக்களும், கண்ணம்மை, அன்புச்செல்வி, முத்துமீனாள் என்ற பெண்மக்களும் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்.

    தமிழண்ணல் பெற்ற சிறப்புகள்

    1971 இல் குடியரசு நாளில் புதுதில்லி அனைத்து இந்திய வானொலி நிலையத்தில் நடைபெற்ற கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டு இவர் செல்வம் என்ற தலைப்பில் பாடிய கவிதை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப் பெற்ற சிறப்பிற்கு உரியது. மதுரை மீனாட்சியம்மை பற்றி இவர் பாடிய பாடல்கள் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் என்ற இவர் நூலும் பரிசுபெற்ற ஒன்றாகும். தமிழக அரசால் சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்ததெடுக்கப்பட்டார். 1985 முதல் ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் சங்க இலக்கியக்குறள் பீடத்தின் துணைத் தலைவராகவும் பணிபுரிந்தவர்.

    பல்கலைக்கழக நல்கைக்குழு தமிழண்ணல் அவர்களை 1981-82 ஆம் கல்வியாண்டில் தேசியப் பேராசிரியராகத் தேர்வு செய்து சிறப்புச்செய்தது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்கும் சென்று தமிழ் மொழியின் தொன்மை, சிறப்பு, இலக்கியக் கொள்கைகளைப் பற்றி சொற்பொழிவாற்றிப் பிற மொழியினருக்குத் தமிழின் சிறப்பை எடுத்துரைத்தவர்.

    இலங்கை, சப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று கருத்தரங்குகளில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர்.

    இவர் மேற்பார்வையில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். முனைவர் மு.தமிழ்க்குடிமகன் உள்ளிட்டவர்கள் இவரின் நெறிப்படுத்தலில் முனைவர் பட்டம் பெற்றவர்கள். தினமணி உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் புகழ்பெற்றவைகளாகும்.

    தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இவருக்கு 1989 ஆம் ஆண்டில் தமிழக அரசின் திரு.வி.க.விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

    மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெங்கடேசுவரா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். சிங்கப்பூர் அரசின் அழைப்பில் தமிழ்க்கல்விக்கு உரிய பாடநூல் எழுதும் பணியிலும் ஈடுபட்டவர்.

    தமிழகப்புலவர் குழுவின் உறுப்பினராக இருந்து திறம்படப் பணிபுரிந்து வந்தவர்.

    தமிழண்ணல் நூல்கள்

    தமிழண்ணல் தமிழ் இலக்கியம், இலக்கணம், திறனாய்வு, நாட்டுப்புறவியல், உரை, படைப்பு எனப் பல திறத்தில் அமையும் நூல்களை வழங்கியுள்ளார். அவற்றுள் சில :

    வாழ்வரசி புதினம்
    நச்சுவளையம் புதினம்
    தாலாட்டு
    காதல் வாழ்வு
    பிறைதொழும் பெண்கள்

    சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கியக் கொள்கைகள் (2003)
    சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கிய வகைகள்(2005)
    தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்(2004)
    புதியநோக்கில் தமிழ்இலக்கிய வரலாறு
    தமிழியல் ஆய்வு(இ.முத்தையாவுடன்)
    ஆய்வியல் அறிமுகம்(இலக்குமணனுடன்)
    ஒப்பிலக்கிய அறிமுகம்
    குறிஞ்சிப்பாட்டு இலக்கியத் திறனாய்வு விளக்கம்

    தொல்காப்பியம் உரை
    நன்னூல் உரை
    அகப்பொருள் விளக்கம் உரை
    புறப்பொருள் வெண்பாமாலை உரை
    யாப்பருங்கலக் காரிகை உரை
    தண்டியலங்காரம் உரை
    சொல் புதிது சுவை புதிது
    தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்
    தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?
    பேசுவது போல் எழுதலாமா? பேச்சுத் தமிழை இகழலாமா?
    பிழை திருத்தும் மனப்பழக்கம்
    உரை விளக்கு
    தமிழ் உயிருள்ள மொழி
    தமிழ் கற்பிக்கும் நெறிமுறைகள்
    தமிழ்த்தவம்
    உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்
    திருக்குறள் உரை
    இனிய தமிழ்மொழியின் இயல்புகள்

    முதலியன

    Share
  • இசையறிஞர் கலைமாமணி சு. கோபகுமார்

    முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி.

    கோபகுமார் 1புதுவை மாநில அரசு ‘அறுமுகனம்’ என்ற இசைக்கருவியைத் தம் மாநிலத்தின் அடையாளமாக அறிவித்துள்ளது. அந்தக் கருவியை உருவாக்கியவர் கலைமாமணி சு. கோபகுமார். புதுவை அரசின் பாரதியார் பல்கலைக்கூடத்தில் தண்ணுமை(மிருதங்க வித்துவான்) ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

    கலைமாமணி சு. கோபகுமார் அவர்கள் திருவனந்தபுரம் குளநட சிவராமகிருட்டின சுப்பிரமணிய ஐயர் – இராசம் ஆகியோரின் மகனாக 01.04.1965 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியைத் திருவனந்தபுரத்தில் உள்ள கரமன அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். இவரின் பெற்றோர்களுக்கு நான்கு குழந்தைகள். இவர்களுள் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் சு. கோபகுமார்.

    சு. கோபகுமாரின் தாய்வழிப் பாட்டனார் மிகச்சிறந்த வயலின் வித்துவான். அவர் பெயர் மணிக்குட்டி பாகவதர். மணிக்குட்டி பாகவதரின் மூத்த மகன் பிச்சாண்டி ஐயர் மிருதங்க வித்துவான். இவர் திருவிதாங்கூர் அரண்மனையில் அரண்மனை வித்துவனாக இருந்து இசைப்பணி செய்தவர். இவரின் மகள்தான் இராஜம்(சு. கோபகுமார் அவர்களின் தாய்). இராஜம் அவர்கள் அரசு பள்ளியில் இசையாசிரியராக இருந்தவர். மரபு வழியாக இசையாசிரியர் குடும்பத்தில் வந்ததால் சு. கோபகுமார் அவர்களுக்கும் இயல்பிலேயே இசைத்திறன் மிகுதியாக இருந்தது.

    சு. கோபகுமார் அவர்கள் வாய்ப்பாட்டைத் தாயாரிடம் கற்றவர். மிருதங்கம் வாசிப்பதிற்கு வெங்கட்ராமன், சிசீ இராசப்பா ஆகியோரிடம் தொடக்க காலத்தில் பயின்றவர். பின்னர்  கடனாடு வி. கே. கோபி, பாலக்காடு சி. எசு. கிருட்டினமூர்த்தி, பாரசாலா இரவி ஆகியோரிடம் சுவாதி திருநாள் இசைக்கல்லூரியில் முறையாக மிருதங்கம் பயின்றவர்.

    சு. கோபகுமார்  அவர்கள் கானபூசனம், கானப்பிரவீனா ஆகிய பட்டய வகுப்புகளில் ஏழு ஆண்டுகள் மிருதங்கம் பயின்றவர். இந்திய அரசின் உதவித்தொகையுடன் டாக்டர் டி. கே. மூர்த்தியிடம் இரண்டாண்டு குருகுலவாச முறையில் மிருதங்கம் பயின்றவர். அதன் பின்னர் திலக் மகாராட்டிரா பல்கலைக்கழகத்தில் முதுகலை மிருதங்கம் பயின்றவர். தமிழகத்தில் இருக்கும் தாள, இலய அறிஞர்களில் சு. கோபகுமார் குறிப்பிடத்தக்கவர். இவரின் தாள அறிவும், மிருதங்கம் எனப்படும் தண்ணுமையை வாசிக்கும் திறனும் கேட்போரை வியப்படையச் செய்யும். ஒருதுறையைத் தேர்ந்தெடுத்துக் கற்று, அதில் ஆராய்ச்சி செய்து, புதியனவற்றை உருவாக்கி, புதிய நுட்பங்களைக் கண்டுணர்ந்து வெளிப்படுத்தும் இசைவல்லுநர்கள்தான் உலகில் நிலைபெறமுடியும். அத்தகு முறையார்ந்த வழியில் வளர்ந்துள்ள சு.கோபகுமார் அவர்கள் தமிழகத்தின் தலைசிறந்த தண்ணுமைக்கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

    சு. கோபகுமார் அவர்கள் புதுச்சேரி அரசின் பாரதியார் பல்கலைக்கூடத்தில் 30.09.1988 இல் மிருதங்க விரிவுரையாளராகப் பணியேற்றார். தற்பொழுது துணைப்பேராசிரியராகப் பணியாற்றிவரும் சு. கோபகுமார் அவர்கள் மிருதங்கம் சார்ந்த பல்வேறு ஆய்வுகளிலும், புதிய கண்டுபிடிப்புகளிலுமாக ஈடுபட்டு வருகின்றார்.

    இதுவரை ஐந்துமுக வாத்தியங்கள்தான் தமிழகத்தில் அறிமுகமாகி இருந்தது. இவர் ஐந்தரை ஆண்டுகள் ஆய்வு செய்து அறுமுகனம் என்ற கருவியை வடிவமைத்தார். இக்கருவி தண்ணுமை, மத்தளம் போன்றவற்றில் வேறுபட்டு, அதுபோன்ற தன்மையைக் கொண்ட தாள இசைக்கருவியாகும். கைகளால் தட்டி ஒலி எழுப்பும்படியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.  இக்கருவி உயர வேறுபாடுகளாலும், இழுத்துக் கட்டப்பட்ட வார் அளவுகளாலும் வேறுபட்ட ஒலிகளை எழுப்பும் தன்மைகொண்டது. இதனை நாம் முழக்கும்பொழுது கூடுதல் ஆற்றல் செலவாகும். கையை உயர்த்தி இக்கருவியை இசைக்க வேண்டியிருக்கும்.

    கோபகுமார் 2

    இந்தக் கருவி 2001 டிசம்பர் 28 இல் புதுவை முதலமைச்சர் மாண்புமிகு நா. அரங்கசாமி முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.  அன்றைய தினமே புதுவை அரசின் இசைக்கருவியாக இது அறிமுகம் செய்யப்பட்டது. புதுவையில் இதனை வாசிப்பதற்குப் பல மாணவர்களைச் சு. கோபகுமார் உருவாக்கியுள்ளார். அரசு விழாக்களிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அயல்நாட்டிலும் இக்கருவி வாசிக்கப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

    சு. கோபகுமார்  அவர்கள் கண்பார்வையற்றவர்களும், வாய்பேசாதவர்களும், மன வளர்ச்சி குன்றியவர்களும் இதனை வாசிக்கும்படியாகப் பயிற்சியளித்துள்ளார். இசை என்பது மேட்டுக்குடி மக்களுக்கு மட்டும் என்று இருந்த நிலையை மாற்றி அனைத்துத் தரப்பு மக்களும் கற்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் பயிற்சியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

    இவரின் இசைப்பணியைப் பாராட்டிப் புதுவை அரசு 2004 இல் கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. தமிழகத்தின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் இவர் இணைந்து வாசித்துள்ளார்.

    ஹாங்காங்கு(1990), பிரான்சு(1990), மொரீசியசு, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், செர்மனி, இலண்டன், நியூகாலடேனியா(நிம்மியா) உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று இசையரங்குகளில் இசை முழக்கி வந்துள்ளார்.

    சு. கோபகுமார்  அவர்கள் திருக்குறளில் ஐம்பது அதிகாரங்களுக்குத் தம் இசைப்புலமை வெளிப்பட இசையமைத்துள்ளார்.

    மேடைகளில் குறிப்பிட்ட இசைக்கருவிகள் வாசிக்கப்படுவதே மரபாக உள்ளது. இதனை மாற்றி அனைத்துக் கருவியாளர்களையும் ஒன்றாக வைத்து இசையமைத்த பெருமைக்குரியவர். கீர்த்தனம்,  தில்லானா, புஷ்பாஞ்சலி, மல்லாரி, அலாரிப்பு,  ஆகியவற்றைத் தாமே எழுதியுள்ளார். பரதநாட்டியத்திற்கு உரிய வர்ணத்திற்கு உரிய ஜதியை வடிவமைத்துத் தந்துள்ளார். புதிய தாளங்களையும் இவர் வடிவமைத்துள்ளார். நவமிருதங்கம்(மிருதங்கத் தரங்கம்) வாசித்துள்ளார்.

    இவர் பரதநாட்டியத்துக்கு ஜதி சொல்லியபடியே மிருதங்கம் வாசிப்பதைத் தொடங்கிவைத்தவர். நகரா(தென்னக இசைக்கருவி) என்று சொல்லக்கூடிய இசைக்கருவியைத் திரு. முருகையன் அவர்களுக்குச் சொல்லித்தந்து, இன்று அக்கருவியின் இசை மேம்படுத்தப்பட்டுள்ளது.

    மின்னணு இசைக்கருவிகளை விடுத்து, மனித உறுப்புகளால் வாசிக்கப்படும் கருவிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கின்றார். மண்ணுக்கு ஏற்ற இசைக்கருவிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று சு. கோபகுமார்  அவர்கள் விரும்புகின்றார்.

    புள்ளி, கோடு, தொடுஉணர்வு முறையில் பல்வேறு இசைக்கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். அடையாளக் குறியீடுகளை (எளிய முறையில் தாள இசைக்கருவி கற்க) உருவாக்கியுள்ளார். மேலும் வரைபடத்தின் வழியாக இசைநுட்பங்களை மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறையையும் இவர் உருவாக்கியுள்ளார்.

    தமிழகம், புதுவை மாணவர்களேயன்றிப் பிரான்சு, செர்மனி, பெல்சியம் நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்து இவரிடம் இசைபயின்றுள்ளனர்.

    பொதிகைதொலைக்காட்சியில் இவர்தம் இசைப்பணி குறித்த நான்கு மணிநேர (தொடர்)ஒளிபரப்பு நடைபெற்றுள்ளது. இவரை ஆதரிப்பது தமிழிசையை ஆதரிப்பதற்குச் சமம்.

    முகவரி:
    கலைமாமணி சு. கோபகுமார் அவர்கள்
    எண் 98, ஆறாம் குறுக்கு,
    தந்தை பெரியார் நகர்,
    புதுச்சேரி- 605 005, இந்தியா

    செல்பேசி: 0091 94433 76671

     

    படம் உதவி:  http://muelangovan.blogspot.com/2014/06/blog-post_16.html
    நன்றி: http://muelangovan.blogspot.in/

    Share