Author: முனைவர் கி. இராம்கணேஷ்
-
நமது நம்பிக்கை
– முனைவர் கி.இராம்கணேஷ்,
உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
பொள்ளாச்சி.-642 107
துவண்டு கிடக்கும் சட்டையும்
உன் தோள்பட்டால் மிடுக்குப் பெறும்…
வாசலில் கிடக்கும் செருப்பும்
உன் பாதம்பட்டால் பீடுநடை போடும்…
வெளுத்து வாங்கும் வெயிலும்
உன் வேகம்கண்டால் வியர்த்துப்போகும்…
சுருண்டு கிடக்கும் பாயும்
உன் உடல்கண்டால் விரிந்து கொள்ளும்…
தோல்வி உன்னைக் கண்டால்
தோள்வலிமை கண்டு ஓடிப்போகும்…
வீசும் தென்றலும் வீறுடன் நடந்தால்
உனக்குக் கவரி வீசும்…
வாசிப்பை உன் வசிப்பிடமாக்கி
வசந்தத் தேரில் உலாப்போ…
வெற்றிடமான வாழ்க்கையை
வெற்றியின் இடமாக மாற்று…
சோம்பல் என்னும் துரோகியை
சாம்பலாக்கிச் சாகசம் செய்…
முயற்சி கொண்டு பயிற்சிபெறு
முடிவில்லா சுகம்பெறு…
-
பொம்மை
முனைவர் கி. இராம்கணேஷ்
என்னால் சொல்ல முடியவில்லை
எப்பொழுதும் என் அங்கங்களை
நோட்டமிடும் கழுகுப்பார்வைகள்
என் அனுமதியில்லாமல் அன்றாடம்
என்னைத் தீண்டும் கைகள்…
வீசிய காற்றின் வேகத்தில்
விலகிய ஆடையில்
மார் பார்க்கும் பார்வைகள்
பேசாமல் மௌனியாய்
ஏதோ ஒரு திசையில்
பார்த்துக்கெண்டிருக்கிறேன்
சிலநேரங்களில்
கோடையில் வீசும் தென்றலாய்
தொட்டுச் செல்லும் குழந்தைகளின் ஸ்பரிசங்கள்
இரணமான உடலுக்கு மயிலிறகின் மென்மை
இப்படித்தான் என் வாழ்க்கை
சுழன்று கொண்டிருக்கிறது…
புத்தாடையுடுத்தி புதுப்பொலிவுடன்
பார்க்க அழகாய்த் தெரிகிறேன்.
நின்று நின்று கால்களும் நோகின்றன.
நான் போட்டிருக்கும் ஆடையைப்
பிடுங்கிச் செல்லத்தான்
பலரும் போட்டியிடுகிறார்கள்
பொம்மையாய் இருந்தாலும்
நானும் பெண்தானே…

