Category: அறிவியல்

  • அமெரிக்க ஐக்கிய மாநில விடுதலைப் போர் நினைவு நூற்றாண்டில், ஃபிரெஞ்ச் நிபுணர் அமைத்த சுதந்திர தேவிச் சிலை

    Statue of Liberty -1A

    American War of Independence Centennial

    Statue of Liberty

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    ++++++++++++++

    இதந்திரு மனையின் நீங்கி,
    இடர்மிகு சிறைப்பட்டாலும்,
    பதந்திரு இரண்டும் மாறி,
    பழிமிகுந்து இழிவுற்றாலும்,
    விதந்தரு கோடி இன்னல்
    விளைந்தெனை அழித்திட்டாலும்,
    சுதந்திர தேவி! நின்னைத்
    தொழுதிடல் மறக்கிலேனே.

    ++++++ 

    மேற்றி சைப்பல நாட்டினர் வீரத்தால்
    போற்றி நின்னைப் புதுநிலை எய்தினர்!
    கூற்றி னுக்குயிர் கோடி கொடுத்தும் நின்
    பேற்றினைப் பெறுவே மெனல் பேணினர்!
    தேவி ! நின் ஒளி பெறாத
    தேய மோர் தேய மாமோ ?

    +++++++++++

    மகாகவி பாரதியார் (சுதந்திர தேவியின் துதி)

    Statue of Liberty -10

    “அமெரிக்காவும் பிரான்சும் ‘இரண்டு சகோதரிகள் ‘ என்று உறவாடினர்! அமெரிக்க விடுதலை அடைந்து நூற்றாண்டு விழாக் கொண்டாட இன்னும் பத்தாண்டுகள் உள்ளன.  விடுதலை நூற்றாண்டு விழாவுக்கு பிரெஞ்ச் மக்கள் ஓர் உயர்ந்த நினைவுச் சின்னத்தை நன்கொடையாக அளித்தால் எத்தனை சிறப்பாக இருக்கும் ,”

    எடோவெர்டு லாபெளலே [Edoward Rene Lefebrve de Laboulaye] பிரெஞ்ச் புரட்சித் தலைவர்.

    முன்னுரை: அமெரிக்காவின் நியூ யார்க் தலைவாயிலில் தீப்பந்தம் ஏந்தி, புலம்பெயர்ந்து நுழையும் கோடிக் கணக்கான வெளிநாட்டு மாந்தருக்கு ஒளிகாட்டி, வழிகாட்டி வரவேற்கும் சுதந்திர தேவி, நியூ யார்க் தீவில் நிறுவமாகி அதன் நூற்றாண்டுப் பிறந்த நாள் விழா 1986 ஜூலை மாதம் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது! விடுதலைப் போரில் பிரிட்டனுடன் சண்டை யிட்டு, வெற்றி பெற்று அமெரிக்கா 1776 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி சுதந்திர நாடானதைப் பாராட்டி, நூற்றாண்டு விழா வாழ்த்துப் பரிசாய் 1886 இல் பிரான்ஸ் அளித்த உலகிலே உயரமான சிற்பச் சிலை அது! 151 அடி உயர்ந்த [தரைமுதல் மேல் நுனி வரை : 305 அடி] விடுதலைச் சிலையைப் படைத்த பிரான்ஸின் புகழ் பெற்ற சிற்பி ஃபிரடெரிக் அகஸ்தி பார்தோல்டி [Frederic Auguste Bartholdi (1834-1904)]. சுதந்திர தேவியின் இரும்பு எலும்புக் கூட்டை டிசைன் செய்த பொறியியல் மேதை, பிரான்ஸின் ஆயிர அடி உயர ஐஃபெல் கோபுரத்தைப் [Eiffel Tower] படைத்த அலெக்ஸாண்டர் கஸ்டாவ் ஐஃபெல் [Alexandre Gustav Eiffel (1832-1923)]! நூறாண்டுகள் தாண்டி அமெரிக்கா 87 மில்லியன் டாலர் செலவு செய்து 1986 இல் புதுப்பிக்கப் பட்டது, விடுதலைச் சிலை. நியூ யார்க் நகரின் உள்ளும் புறமும் விடுதலை மாதின் நூறாண்டுப் பிறந்த நாள் விழா நான்கு தினங்கள், கோலாகலமாக வான வேடிக்கைகளுடன் கொண்டாடப் பட்டது.

    Statue of Liberty -4

    சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் [Liberty, Equality, Fraternity] என்னும் மூன்று குடியாட்சிச் சுலோகங்களை முதலில் முழக்கிய புரட்சி எழுத்தாள மேதைகள் வால்டேர், ரூஸ்ஸோ [Voltaire (1694-1778), Rousseau (1712-1778)] ஆகியோர் பிரான்ஸில் வாழ்ந்து முடிந்த காலம் அது! முடி ஆட்சியி லிருந்து விடுபட பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பிரான்ஸின் மேதைகளும், பெரும்பான்மையான மக்களும் விடுதலைத் தாகம் மிக்கவராக இருந்ததை இங்கே குறிப்பிட வேண்டும்! 1776 அமெரிக்கச் சுதந்திரப் போரின் சமயத்தில், ஜார்ஜ் வாஷிங்டன் போர்ப் படைகளுக்கு ஆயுதங்கள், கப்பல்கள், நிதி உதவிகள், படைகள் அளித்து, விடுதலை அடைய பிரான்ஸ் மிக்க ஆதரவாய் இருந்தது. பிரெஞ்ச் போர் வீரர் மார்குவிஸ் தி லஃபாயட் [Marquis De Lafayette] போன்றோர், போர்த் தளபதியாக ஜார்ஜ் வாஷிங்டன் ஆணைக்குக் கீழ் பணியாற்றி யுள்ளார்கள்! சுதந்திரப் போரில் அமெரிக்கா அடைந்த வெற்றியே பின்னால் பிரெஞ்ச் புரட்சிக்கும் அடிப்படையாகி, பிரான்ஸ் முடி ஆட்சியிலிருந்து விடுதலை அடைய வழி காட்டியது!

    Statue of Liberty -7

    உலகிலே உயர்ந்த உலோகச் சுதந்திரப் பதுமை உதித்த வரலாறு

    அமெரிக்க விடுதலைப் போரில் பிரான்ஸ் உதவி செய்திரா திருந்தால், தளபதி ஜார்ஜ் வாஷிங்டன் பிரிட்டன் ஏகாதிபத்தியத்தை வென்று 1774 இல் சுதந்திர நாட்டை உருவாக்கி இருக்க முடியாது! சுமார் 100 ஆண்டுகள் தாண்டிய பின் முப்பத்தியொரு வயதான பிரெஞ்ச் சிற்பி பார்தோல்டி, 1865 இல் நடந்த பின்வரும் வரலாற்று முக்கிய உரையாடலைக் கூறுகிறார். மூன்றாம் நெப்போலியன் [Napoleon III] எதேச்ச ஆதிக்க ஆட்சியை எதிர்க்கும் பலதிறப்பட்ட மேதைகள், சுதந்திர அமெரிக்காவின் குடியரசு ஆட்சியை மெச்சி, உள்நாட்டுப் போருக்குப் பின் [Civil War] ஆபிரகாம் லிங்கன் அடிமை விலங்குகளை அகற்றியதைப் பாராட்டி டின்னர் பார்டியின் போது அளவளாவிக் கொண்டிருந்தனர். அக்குழுவில் பிரென்ச் இலக்கிய மேதையும், விடுதலைப் போராட்ட அதிபரான எடோவெர்டு லாபெளலே [Edoward Rene Lefebrve de Laboulaye] கலந்து கொண்டிருந்தார்.

    Statue of Liberty -14

    லாபெளலே அமெரிக்க முறையில் இயங்கும் குடியரசைப் பிரான்ஸில் அமைக்க விரும்பியவர். சரித்திர பூர்வமாக இருநாடுகளுக்கும் இடையே இருந்த விடுதலைத் தாகத்தை எடுத்துக் காட்டி, அமெரிக்காவும் பிரான்சும் ‘இரண்டு சகோதரிகள் ‘ என்று உறவாடினர்! அமெரிக்க விடுதலை அடைந்து நூற்றாண்டு விழாக் கொண்டாட இன்னும் பத்தாண்டுகள் உள்ளன என்று அப்போது நினைவு படுத்தி, அதிபர் லாபெளலே ‘விடுதலை நூற்றாண்டு விழாவுக்கு பிரெஞ்ச் மக்கள் ஓர் உயர்ந்த நினைவுச் சின்னத்தை நன்கொடையாக அளித்தால் எத்தனை சிறப்பாக இருக்கும் ‘ என்று வியந்தார். அக்குழுவில் யாவரும் முடிவு செய்து அப்போது சிற்பி பார்தோடியின் நெஞ்சில் உதயமான சின்னம்தான், இப்போது ஓங்கி உயர்ந்து நியூ யார்க் துறைமுகத்தில் ஒளிகாட்டும் சுதந்திரச் சிலை!

    Sculptor Bartholdi & His Model

    விடுதலைச் சிலையை உருவாக்கிய சிற்ப மேதை பார்தோல்டி

    பிரான்ஸில் கால்மர் [Colmar] என்னும் நகரில் ஃபெரடிரிக் ஆகஸ்தி பார்தோல்டி 1834 ஆகஸ்டு 2 ஆம் தேதி சீரும் சிறப்பும் மிக்கச் செல்வந்த இடைவகுப்புக் குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு இரண்டு வயதாகும் போது தந்தையார் காலமாகவே, சிறுவன் ஆகஸ்தி விதவைத் தாய் சார்லெட் பார்தோல்டியால் கடுமையான ஒழுக்கமுடன் வளர்க்கப் பட்டவர்! அமெரிக்கச் சுதந்திரச் சிலையின் முகம், ஆகஸ்தியின் தாய் சார்லெட் முகம் போன்று உள்ளது என்று பலர் கருதுகிறார்கள். சிலர் எகிப்து சிலை ஒன்றுக்காக அவரது புதல்வன் வரைந்த ஒரு படத்தை ஒத்துள்ளது என்று கூறுகிறார்கள்! ஆயினும் ஆகஸ்தி பார்தோல்டி படைத்த சுதந்திர மாதின் முகம் யாருடைய முகத்தைப் போன்றுள்ளது என்பது இன்னும் புதிராகவே இருந்து வருகிறது!

    Statue of Liberty -16

    ஆகஸ்தி பார்தோல்டி முதலில் ஓர் ஓவியராகத்தான் தனது ஆக்கப் பணியைத் துவங்கினார். பிறகு சிற்பக் கலை ஆர்வம் அவரைப் பற்றிக் கொண்டது. ஆனால் அவர் சிற்பியாக மாறி சிற்பக்கலை உருவங்களைப் படைத்த பின்னரே அவரது புகழ் பரவ ஆரம்பித்தது. நெபோலியன் போனபார்டின் [Napoleon Bonaparte] அதிபதிகளில் ஒருவரான ஜெனரல் ஜான் ராப்பின் [General Jean Rapp] பனிரெண்டு அடி உயர உருவச் சிலையைப் பதினெட்டு வயதில் பார்தோல்டி வடித்த போது, அவரது பெயர் பிரான்ஸ் எங்கும் பரவியது. அது முதல் தேசீயப் பிரமுகர்களின் சிலையை மிதமிஞ்சிய அளவில் படைப்பதற்குப் பார்தோல்டியே பிரான்ஸில் தேடப்பட்டார்.

    Statue of Liberty -19

    பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈரோப்பில், பூர்வீக கிரேக்க ரோமானியச் சிற்பங்கள் போன்று மிதமிஞ்சிய உயரத்தில் சிலைகளைப் படைப்பது ஒரு சவாலான கலையானது! கிரேக்க, ரோமானியச் சிற்பங்களின் கலை நுணுக்கத்தை அறிந்த பார்தோல்டி எகிப்துக்குச் சென்று, அங்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப் பட்ட பிரமிக்கத் தக்க பிரமிடுகளைப் [Pyramids] பார்வை யிட்டார். பேருவில் படுத்திருக்கும் சிங்கத் தலை ‘ஸ்ஃபிங்க்ஸ் ‘ [Sphinx] இதிகாச விலங்கின் பூத வடிவைக் கண்டு வியப்படைந்தார். அந்தச் சமயத்தில் எகிப்தில் சூயஸ் கால்வாயை வெட்டத் திட்டமிட்டு பணிபுரியும் ஃபெர்டினென்ட் லெஸ்ஸெப்ஸ் [Ferdinand de Lesseps] என்னும் பிரெஞ்ச் கட்டமைப்பு மேதையைச் சந்தித்தார்.

    Statue of Liberty

    சூயஸ் கால்வாய் முடியும் தருவாயில் அங்கே கலங்கரை விளக்கமாக அமைக்க, 1867 ஆண்டு பார்தோல்டிக்கு ‘முன்னேற்றச் சிலை ‘ [Progress] ஒன்றை உருவாக்க ஆசை எழுந்தது. எகிப்தின் குடியான மாது ஒருத்தி போர்த்திய ஆடையுடன், ஒளிவீசும் தலைப்பட்டை அணிந்து, வலது கரத்தில் தீப்பந்தம் ஏந்தி யுள்ளது போல் ஒரு சிற்ப மாடலைத் தயாரித்தார். ‘ஆசியாவுக்கு எகிப்த் ஏந்தும் விளக்கு ‘ [Egypt Carrying the Light to Asia] என்னும் பெயரிட்டுத் திட்டச் சிலை மாடலை, 1869 இல் எகிப்தின் அதிபர் இஸ்மாயில் பாஷாவுக்குச் சமர்ப்பித்தார். ஆனால் ஏதோ சில அரசியல் காரணங்களால் அத்திட்டச் சிலை நிறுவகமாக அங்கீரம் அடையவில்லை. தற்போதுள்ள அமெரிக்காவின் விடுதலைச் சிலை பல வடிவங்களில் எகிப்து விளக்குச் சிலைபோல் உள்ளது என்று பலர் கருதுகிறார்கள்!

    பிரென்ச் விடுதலைத் தளபதி எடோவெர்டு லாபெளலே ஆலோசனையின் பேரில் பார்தோல்டி 1871 ஜன் 8 ஆம் தேதி அமெரிக்காவுக்குப் பயணம் செய்து, நியூ யார்க் துறைமுகத்தில் சுதந்திரச் சிலைக்கு உரிய ஓர் உன்னத இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அதுதான் அழகிய சிறு பெட்லோ தீவு [Bedloe Island]! பார்தோல்டி முதல் ஆலோசனையின்படிப் பல்லாண்டுகள் கழித்து, இப்போது (1960 முதல்) ‘விடுதலைத் தீவு ‘ [Liberty Island] என்று அழைக்கப் படுகிறது!

    Statue of Liberty -17

    அடுத்து அமெரிக்க சுதந்திரப் போரில் ஜார்ஜ் வாஷிங்டன் படையில் ஒரு தளபதியாகப் பணியாற்றிய பிரென்ச் இராணுவ வீரர் மார்குவிஸ் லஃபாயட்டுக்கு உருவச் சிலை ஒன்றை வடித்து 1876 இல் நியூ யார்க் நகருக்கு அன்பளிப்புச் செய்தார். கனடாவுக்கு விஜயம் செய்து, மான்ட்ரியாலில் [Montreal, Canada] இருமுறைச் சந்தித்த ஜீன் எமிலியை [Jeanne Emilie Baheux] பார்தோல்டி 1876 டிசம்பர் 20 ஆம் தேதி மணந்து கொண்டார்.

    பிரான்சில் நிதி திரட்டி  அமெரிக்கச் சுதந்திரச் சிலை அமைப்பு

    விடுதலைச் சிலை வடிக்கும் நிதிச் செலவைப் பிரான்சும், அதை ஏற்றி அமர்த்தும் பீடத்தைக் கட்டும் செலவை அமெரிக்காவும் ஏற்றுக் கொள்வதாக ஆரம்ப காலத்திலே இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. பிராங்க் அமெரிக்கன் யூனியன் ஒன்று ஏற்படுத்தப் பட்டு, பிரான்சில் அமெரிக்கச் சிலை வடிக்க நிதி திரட்டப் பட்டது. அம்முயற்சியில் 1879 ஆண்டு முடிவில் 250,000 பிராங்க் [சுமார் 250,000 டாலர்] நிதி சேர்ந்தது! சிற்ப வடிவங்களைப் படைக்க ‘ரிப்போஸா முறை ‘ [Art of Repousse] கையாளப்பட்டது. அந்த முறையில் வடிவங்கள் கல்லில் செதுக்கப் பட்டோ அல்லது வெண்களி மண்ணில் வடித்து சுடப்பட்டோ [Plaster of Paris or Calcium Sulphate], தாமிரத் தகடுகளில் [Copper Plates] அச்செடுக்கப் பட்டு பின்னால் இணைக்கப் படுகின்றன. தீப் பந்தத்தைக் கையில் ஏந்தி 151 அடி உயரமான விடுதலை மாதின் சிக்கலான சிரமான ஆக்கப் பணியை பார்தோல்டி எடுத்துக் கொண்டு, சிலையின் இரும்பு எலும்புக் கூட்டை டிசைன் செய்ய, புகழ் பெற்ற பொறியியல் நிபுணர் அலெக்ஸாண்டர் கஸ்டாவ் ஐஃபெல்லை நியமித்தார். அவர்தான் பாரிஸில் பெயர் பெற்ற ஐஃபெல் கோபுரத்தை [Eiffel Tower] டிசைன் செய்து 1889 இல் நிறுவியவர்.

    ast

    பிரெஞ்ச் பணியாட்கள் 300,000 பேர் சிலை முடிவு பெறுவதை மேற்பார்வை செய்ய கூலிக்கு அமர்த்தப் பட்டனர். நுணுக்கமான சிலை அங்கங்களை வடிக்க 20 சிறப்புப் பணியாட்கள் வாரம் முழுவதும் அனுதினமும் 10 மணி நேரம் வேலை செய்தனர்! முதலில் முடிந்த தீப்பந்தம் ஏந்திய 30 அடி நீளமான கரம் 1876 ஆகஸ்டில் அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்டது. 50 சென்ட் கட்டணத்தில் ஏணியில் ஏறி இறங்கிப் பார்க்கும்படி, கரம் பிளடல்ஃபியாவில் [Philadelphia] காட்சிப் பொருளாகத் தற்காலியமாக வைக்கப் பட்டது! அங்குதான் 1752 இல் வார்க்கப் பட்ட சரித்திரப் புகழ் பெற்ற ‘விடுதலை வெங்கல மணி ‘ [Liberty Bell] தொங்குகிறது. தலைக் கிரீடம் அணிந்த சுதந்திர மாதின் 17 அடி நீளச் சிரசு 1878 மே மாதம் தயாரிக்கப் பட்டுப் பாரிஸில் நடந்த உலக வணிகக் கண்காட்சித் தளத்தில் சிறிது காலம் வைக்கப் பட்டது!

    Statue of Liberty -23

    1884 ஜூன் 15 ஆம் தேதி சிலை இறுதித் திருத்தங்கள் செய்யப்பட்டு, 1885 இல் பிரெஞ்ச் பிரதம மந்திரி ஜூல்ஸ் ஃபெர்ரியால் [Jules Ferry] கோலாகலமாகக் கொண்டாட்டங்களுடன் அமெரிக்காவுக்குப் பிரெஞ்ச் கப்பல் ‘இஸரியில் ‘ [Isere] 214 பெட்டிகளில் சிலை உறுப்புகள் அனுப்பப் பட்டன. ஆனால் அதைத் தாங்கும் பீட மேடை [Pedestal] அப்போது நியூ யார்க்கில் தயாராக இல்லை! 1885 இல் விடுதலைச் சிலையின் காரண கர்த்தா, எடோவெர்டு லாபெளலே சிலை நியூ யார்க் துறைமுகத்தில் நிறுவப்படும் முன்பே பிரான்ஸில் காலமானார். அமெரிக்காவில் சிலை நிறுவப்படும் 90 அடி உயரப் பீடத்தைக் கட்டவும், அதற்கு 65 அடி ஆழ அடித்தளம் அமைக்கவும் நிதி திரட்டி ஆரம்பிக்கக் காலதாமதம் ஆனது. அமெரிக்க உள்நாட்டுப் போரில் [Civil War] பங்கெடுத்த ஹங்கேரியன் புலப்பெயர்ச்சிப் பத்திரிக்கைப் பதிப்பாளி ஜோஸஃப் புளிட்ஸர் [Joseph Pulitzer] 1883 இல் முன்வந்து 100,000 டாலருக்கு மேலாக பொது மக்களிடமிருந்து கொடையாகச் சேமித்தார்.

    அமெரிக்கச் சுதந்திரச் சிலையின் படைப்பு அம்சங்கள்

    அமெரிக்கன் கட்டடக் கலைஞர் ரிச்சர்டு மாரிஸ் ஹன்ட் [Richard Morris Hunt] சமர்ப்பித்த பீடம் 1884 இல் ஒப்புக் கொள்ளப் பட்டு, மேற்படி வேலைகள் ஆரம்பமாயின. 1886 மே மாதம் அடித்தளமும், பீடமும் முடிந்து, சிலையின் அங்கங்கள் பீடத்தின் மீது இணைக்கப் பெற்றன. பார்தோல்டியின் கற்பனைச் சிற்ப நங்கை வெறும் இரும்புச் சட்டங்களைச் சுற்றி, உருவங்களில் பிரதி எடுக்கப்பட்ட தாமிர உலோகத் [Copper Metal] தட்டுகள் இணைக்கப்பட்டு ஆக்கப்பட்ட சிலை! அதற்கு வடிவ மாடலாக அவரது மனைவி எமிலி பார்தோல்டி நின்றாக அறியப் படுகிறது! நார்வே தேசத்திலிருந்து 32 டன் எடை யுள்ள 300 தாமிரத் தட்டுகள் வர வழைக்கப் பட்டு வார்ப்பு அங்கங்களில் நெளிக்கப் பட்டுச் சிலை இறுதியில் இணைக்கப் பட்டது. தீப்பந்தம் விளக்கொளி வீசும்படி அமைக்கப் பட்டுள்ளது. அடித்தளத்தின் ஆழம்: 65 அடி. சுதந்திர மாது ஓங்கி நிற்கும் பீடம் 89 அடி உயரம். பீடத்தின் தளபரப்பு 91 அடிச் சதுரம். பாதங்கள் நிற்கும் மேற்தளப் பரப்பு 65 அடிச் சதுரம். அமெரிக்கக் கட்டடக் கலைஞர் நிறுவிய 89 அடி பீடம், 65 அடி ஆழத்தில் 23,500 டன் காங்கிரீட் ஊற்றிய அடித்தள மீது நிற்கிறது! மின்சக்தி இயக்கும் தூக்கிகள் [Elevators], பீடத்தில் இயங்கி வருகின்றன. சிலையின் பாதத்தி லிருந்து சிரசிற்கு ஏறி இறங்க 171 சுழலும் மாடிப்படிகள் [Spiral Staircase] நடுவே உள்ளன.

    விடுதலைச் சிலையின் முழு எடை: 225 டன்! அதன் இரும்புக் கூட்டின் எடை: 125 டன்! இரும்புக் கூட்டைச் சுற்றிப் போர்த்திய சிற்பத் தாமிரத் தகடுகளின் எடை: 90 டன்! சுதந்திர தேவியின் தீப்பந்தம் தளத்திலிருந்து 305 அடி உயரம். விடுதலைக் குமரியின் உயரம் பாதத்திலிருந்து தீப்பந்த உச்சி வரை 151 அடி. சிலையின் உயரம் பாதம் முதல் சிரசு வரை 111 அடி. ஓங்கி உயர்ந்த வலது கரத்தின் நீளம்: 42 அடி. வலக்கரத்தின் மிகையான தடிப்பு 12 அடி. விடுதலை மாதின் தலையின் உயரம்: 17 அடி. மூக்கின் நீளம்: 4.5 அடி. வாயின் அகலம்: 3 அடி. குமரியின் இடுப்புச் சுற்றளவு: 35 அடி. இடது கரத்தின் 16 அடி 5 அங்குலம். சுட்டு விரல் 8 அடி நீளம். பாதத்தில் போட்டிருக்கும் மிதியடி: 25 அடி. சுதந்திர தேவியின் கிரேக்க, ரோமானிய மாடல் தலைக் கிரீடத்தில் உள்ள சாளரங்கள்: 25. அந்த சாளரங்கள் வழியே, ஒளி வீசும் விளக்குகள் ஒளியைப் பாய்ச்சும். கிரீடப் பட்டையில் உள்ள ஈட்டிகள்: 7 [உலகின் ஏழு கடல்கள்]. இடது கரம் பிடித்திருக்கும் சாசனப் பட்டயத்தில் எழுதி இருப்பது: ஜூலை 4, 1776 [சுதந்திர அறிவிப்பு நாள்].

    The Head Making

    பிரென்ச் டிசைன் எஞ்சினியர் கஸ்டாவ் ஐஃபெல் அமைத்த விடுதலைக் குமரியின் 151 அடி உயர எலும்புக் கூடான இரும்புச் சட்டங்கள், நியூ யார்க் கடலில் பொதுவாக மணிக்கு 50 மைல் வீதம் அடிக்கும் காற்றை எதிர்த்துச் செங்குத்தாய் நிற்பவை! பத்தொன்பதாம் நூற்றாண்டு பொறியியல் நுணுக்க மாயினும், எப்போதாவது சில மணிநேரம் தாக்கும் சூறாவளிப் புயல் மணிக்கு 125 மைல் வேகத்தில் அடிப்பினும், சுதந்திரச் சிலை முறிந்து விடாமல் நிமிர்ந்து நிற்க டிசைன் செய்யப் பட்டது! மணிக்கு 50 மைல் வீதம் அடிக்கும் காற்றில் 42 அடி நீளக் கரத்தில் ஏந்திய தீப்பந்தம் 5 அங்குலம் ஆடும்! 151 அடிச் சிலை 3 அங்குலமே அசையும்! ஒழுங்காகப் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டு வந்தால், சுதந்திர தேவி இன்னும் 500 ஆண்டுக்கு மேலாகப் பிரச்சனைகள் இன்றி நீண்ட காலம் நிமிர்ந்து நிற்பாள்!

    சுதந்திரச் சிலைப் பீடமேடை

    அமெரிக்காவை இல்லமாக ஏற்றுக் கொண்ட விடுதலை மாது!

    1886 அக்டோபர் 21 ஆம் தேதி நியூ யார்க்கில் வந்திறங்கிய ஆகஸ்தி பார்தோல்டி, அவரது மனைவி எமிலி பார்தோல்டி, சூயஸ் பனாமா கால்வாய்கள் கட்ட பெரும்பங்கு ஏற்ற ஃபெர்டினென்ட் தி லெஸ்ஸெப்ஸ், மற்றும் பிரென்ச் அரசாங்கப் பிரதிநிதி ஆகிய நால்வரும் விடுதலைக் குமரி திறப்பு விழாவுக்கு விஜயம் செய்தனர். விழா நாளான அக்டோபர் 28 விடுமுறைத் தினமாக விடப்பட்டது. தீப்பந்தம் ஒளிவீச 8 விளக்குகளை ஏற்றும்படி பார்தோல்டி ஏற்பாடு செய்தார். நவம்பர் முதல் தேதி தீப்பந்தம் ஒளி வீசியது. நியூ யார்க் துறைமுகத்தில் 250 கப்பல்களும், படகுகளும் நிரம்பி வழிய பொதுமக்கள் குழுமி யிருந்தனர். பார்தோல்டி சுதந்திரச் சிலையின் தலைக்குள் தனியே நின்று முக விளக்குகளின் பட்டனைத் தட்டி முதலில் ஏற்றி வைத்தார்!

    Statue of Liberty -18

    பாண்டு வாத்திய இசைகள் ஒலித்து, பீரங்கிகள் இடி முழக்கி, நியூ யார்க்கில் விடுதலைச் சிலை உயிர் பெற்று எழுந்தது! அப்போது அதைப் படைத்த சிற்ப மேதை பார்தோல்டி, ‘கனவு பலித்ததம்மா ‘ என்று புளதாங்கிதம் அடைந்தார்! ஒரு மில்லியன் மக்கள் கலந்து கொண்ட விழாவில் அமெரிக்க அதிபதி குரோவர் கிலீவ்லண்டு [Twice American President (1885)(1893)], ‘சுதந்தர தேவி இப்போது அமெரிக்காவைத் தன் இல்லமாக ஏற்றுக் கொண்டு விட்டாள் என்பதை நாம் மறக்க மாட்டோம்! மேலும் அவளும், அவளுக்குத் தேர்ந்தெடுத்த பீடமும் புறக்கணிக்கப் படாமல் பாதுகாக்கப் படும்! ‘ என்று துவக்க விழாவில் உரையாற்றினார். அவரது கூற்றுப்படி நூறாண்டுகள் தாண்டிய பின்னும் இதுவரை சுதந்திர தேவியோ, அவள் இருக்கையான பீடமோ புறக்கணிக்கப் படவில்லை!

    Edward Moran Paintings 1886

    இருபதாம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்ட விடுதலைப் பதுமை

    305 அடி உயரத்தில் நிற்கும் உலோகச் சிலை உலகத்திலே பெரிய சிற்பப் படைப்பாகக் கருதப் படுகிறது! 1886 இல் நிறுவப்பட்ட காலத்தில் நியூ யார்க்கின் மிக உயரச் சிற்பமாக இருந்தாலும், இப்போது அதைவிட உயர்ந்த கட்டடங்கள் அங்கே முளைத்து விட்டன! 1903 ஆம் ஆண்டில் பீடத்தின் உட்சுவர் ஒன்றில் பித்தளைப் பட்டயத்தில் பொறித்த எம்மா லாஸரஸ் 1883 இல் எழுதிய ‘பூதச் சிலை ‘ என்னும் கவிதை [Poem The Colossus By Emma Lazarus (1849-1887)] ஒன்று தொங்கவிடப் பட்டது. அரசியல் கொந்தளிப்பில் துரத்தப்பட்டு அமெரிக்காவின் தலைவாசலில் கால்வைக்கும் ஆயிரக் கணக்கான அகதிகளுக்கு எழுதப்பட்ட அனுதாபக் கவிதை அது! இப்போது பூதச் சிலைக் கவிதையும், விடுதலை மாதும் பிரிக்க முடியாதவாறு ஒன்றாய்ப் பிணைந்து விட்டன!

    1916 இல் 30,000 டாலர் நன்கொடை நிதி திரட்டப்பட்டு, இரவில் வெளிச்சம் குவிந்தடிக்க வெள்ள மின்விளக்குகள் [Flood Lights] அமைக்கப் பட்டன. 1931 இல் 1000 வாட் மெர்குரி ஆவி விளக்குகள் பீடத்திலும், தீப்பந்தக் கூண்டிலும் மாட்டப் பட்டன. 50 ஆண்டு பொன்விழாவைக் கொண்டாட 1936 இல் அமெரிக்க அதிபதி ரூஸவெல்ட், பிரென்ச் பிரதிநிதி லாபெளயேல் [De Labouyale, Grandson of Liberty Statue Promoter], மற்றும் 3500 பிரமுகர் கலந்து கொண்டனர். 1960 ஜூன் 30 ஆம் தேதி சுதந்திர தேவி நிற்கும் பெட்லோ தீவு, ‘விடுதலைத் தீவு ‘ [Liberty Island] என்று பெயரிடப் பட்டது. 1981 ஆம் ஆண்டு பிரென்ச் அமெரிக்கக் குழு ஒன்று அமைக்கப் பட்டு, நிதி திரட்டி விடுதலைச் சிலைப் புதுப்பிப்புப் பணிகள் திட்டமிடப் பட்டன. 1986 இல் சிலை நூற்றாண்டு விழாவுக்காக அப்புதுப்பிப்பு வேலைகள் ஆரம்பிக்கப் பட்டன. திரட்டிய நன்கொடை நிதி [1986] 277 மில்லியன் டாலர்! சிலையைப் புதுப்பிக்கச் செலவானது 87 மில்லியன் டாலர். புதுப்பிக்கப் பட்ட தீப்பந்த தாமிரத் தட்டுகளில் தங்கமுலாம் பூசப்பட்டது. துருப் பிடித்த இரும்புத் தளவாடங்கள் நீக்கப்பட்டு, ஸ்டெயின்லஸ் ஸ்டால் உலோகத்தில் மாற்றப் பட்டன. கஸ்டாவ் ஐஃபெல் படைத்த இரும்புச் சட்டங்களின் அளவுகள் எடுக்கப் பட்டு, விடுதலைச் சிலையின் கம்பியூட்டர் மாடல் தயாரிக்கப் பட்டு, வலுவிழந்த கம்பங்கள் உறுதியாக்கப் பட்டன.

    அமெரிக்க விடுதலைச் சிலையின் நூற்றாண்டு விழா

    அமெரிக்கா விடுதலை அடைந்து இரண்டு நூற்றாண்டுகளும், சுதந்திரச் சிலை நிலைநாட்டி முதல் நூற்றாண்டும் முடிந்து விட்டது! 1986 ஜலை 4 ஆம் தேதி, புதுப்பிக்கப் பட்ட நூறாண்டு வயதுச் சிலை முன்பாக அமெரிக்க அதிபதி ரோனால்டு ரீகன் உரை ஆற்றினார்: ‘விடுதலைக் கனலைப் பாதுகாப்பவர் நாம்! அந்தக் கனலை உலகம் காண ஓங்கி உயர்த்திக் காட்டுகிறோம் நாம்! ‘ அந்தி மயங்கும் வேளையில் அதிபர் ரீகன் ஒரு பட்டனை அழுத்தவும் இருள் நீங்கி, ஒளிமயமாகி மாபெரும் சுதந்திரச் சிலையின் மகத்தான முழுத் தோற்றம் காட்சி அளித்தது! வண்ண வண்ண தீப்பொறிகளில் வான வேடிக்கைகள் இடி முழக்கி விண்ணில் எழில் தோரணங்களைத் தெளித்தன! அமெரிக்க மக்கள் அக்காட்சியைக் கண்டு களித்ததுபோல், 1.5 பில்லியன் உலக மாந்தரும் டெலிவிஷனில் பார்த்து மகிழ்ந்தனர்! சிற்ப மேதை பார்தோல்டியும், அதை நிறுவக் காரண கர்த்தாவான அரசியல் மேதை லாபெளலேயும், விடுதலைச் சிலை அன்று ஏற்றிய வரலாற்று முக்கிய ஒளிமயத்தை எவ்விதப் பெருமிதமுடன் அனுபவிப்பார் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாது!

    தகவல்கள்:

    1. Liberty Her Lamp Relit By: National Geographic [July 1986]

    2. The New American Desk Encyclopedia [1989]

    3. History of Statue of Liberty [2001]

    4. Statue of Liberty -First 100 Years [2001 Report]

    5. Liberty Torch Chronology & Facts [www.endex.com/gf/buildings/liberty]

    6. The Statue in America [www.north-america.de]

    7. Statue of Liberty History By PageWise Inc.[2002]

    8. Lady Liberty Restored [July 1986]

    9. The New Colossus Poem By: Emma Lazarus (1849-1887)

    10.  http://twistedsifter.com/2013/05/rare-photos-of-the-statue-of-liberty-under-construction/  [May 22, 2013]

    11.  https://www.google.com/culturalinstitute/exhibit/the-construction-of-the-statue-of-liberty/QRWHcXMU?hl=en&position=5%2C8

    12.  https://en.wikipedia.org/wiki/Statue_of_Liberty  [April 28, 2016]

    *****************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] April 28, 2018  [R-1]

    Share
  • நைல் நதி நாகரீகம், பிரமிடைக் காண வந்த பிரெஞ்ச் போர்த் தளபதி நெப்போலியன், சூயஸ் கால்வாய்த் திட்டம் – 10

     

    image1

     

    -சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 

    பிரமிடுகள் காலத்தில் தோன்றிய கால்வாய்
    பெரோஸ், பெர்ஸியர் தோண்டிய கால்வாய்
    கிரேக்கர், ரோமர் கைவிட்ட கால்வாய்
    நெப்போலியன் திட்டம் துவங்கிய கால்வாய்
    பிரெஞ்ச் நிபுணர் இறுதியில் பூர்த்தி செய்த
    பெருநீளக் கடல்மட்ட சூயஸ் கால்வாய்.

    ++++++++

    ‘மகா பிரமிட் கூம்பகம் நான்கு திசை முனைகளுக்கு [Four Cardinal Points: North, South, East & West] ஒப்பி நேராகக் கட்டப் பட்டிருந்தது! கூம்பு வழியாக வரையப்படும் நேர்குத்து அச்சு [Meridian] பிரமிடை இணையாகச் சரி பாதி பிரித்தது! மேலும் அக்கோடு நைல் நதி பாயும் சங்கம அரங்கையும் [Nile River Delta Region] சரி பாதியாகப் பகுத்தது. ‘

    நெப்போலியன் தளவியல் வரைவுக் குழு [Napolean Survey Team (1798)]

    image2

     

    முன்னுரை: கி.மு.2650 ஆண்டு முதலே எகிப்தின் வல்லமை படைத்த கல் தச்சர்கள் பிரமிடுகள் [Pyramids] மற்றும் பலவித பிரம்மாண்டமான சிற்பப் பொறியியல் அற்புதங்களைப் படைத்ததற்குச் சான்றுகள் இப்போதும் அங்கே உள்ளன! நைல் நதியின் மேற்குக் கரையில் கட்டப்பட்ட பிரமிக்கத் தக்க பிரமிடுகள், இறந்தவரைப் புதைக்க அமைத்த கற்கோபுரங்கள்! நாற்புறச் சம கோணச் சாய்வு வடிவான பிரமிடுகள் கல் தச்சர்களின் வரைக் கணித ஞானத்தையும் [Geometrical], கூரிய நிபுணத்துவத்தையும் காட்டுகின்றன. சிற்பக் கலையும், ஓவியக் கலையும் உன்னத நிலையில் இருந்ததற்கு எகிப்தின் பிரமிட் கோபுரங்கள், கால வெள்ளம் அடித்துச் செல்லாதபடி நிலைத்த சரிதைகளாய் நிமிர்ந்து நிற்கின்றன! ஆனால் பெரோ மன்னர்கள் முதலில் தோண்டிய கடல் இணைப்புக் கால்வாய் பலமுறைச் சிதைந்து, பல்வேறு வல்லுநர்களால் பலவித வடிவங்களில் பலமுறை மாற்றமாகி இப்போது புது உருவம் பெற்றுள்ளது!

    image3

     உலகிலே நீண்ட சூயஸ் கால்வாயிக்கு நெப்போலியன் திட்டம்

    முதல் நைல் நதிக் கால்வாய் மூன்றாம் துத்மோஸிஸ் [Tuthmosis III] மன்னரால் தோண்டப் பட்டாலும், கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆண்ட மன்னன் பெரோ நெக்கோ [Pharaoh Necho] கட்டியதாகத்தான் சரித்திரச் சான்றுகள் கிடைத்துள்ளன. பின்னால் எகிப்தைக் கைப்பற்றிய பெர்ஸிய மன்னன் முதலாம் தாரியஸ் [Darius I] வெட்டப்பட்ட கால்வாயை முடிக்குமாறு உத்தரவிட்டதாக அறியப் படுகிறது. அந்தக் காலத்தில் கட்டிய கால்வாய், இரட்டை அமைப்பாடுகளைக் கொண்டது. முதலாவது, பெரிய பிட்டர் ஏரியை [Bitter Lake] சூயஸ் வளைகுடாவுடன் இணைத்தது; இரண்டாவது கட்டத்தில் பிட்டர் ஏரியை நீள நைல் நதிச் சங்கமப் பிரிவுகள் ஒன்றுடன் சேர்ப்பது. கால்வாயைக் கட்டும் பணியில் சுமார் 120,000 எகிப்திய பாமரர் மாண்டதாக அறியப்படுகிறது! புகழ்பெற்ற டாலமி காலத்தில் [Ptolemaic Era (323-30 B.C.)] கால்வாய் நீளமாக்கப்பட்டுச் சீரிய முறையில் இருந்ததாக வரலாறுகளில் உள்ளது. அதன் பின்னால் கால்வாய் சிதைவுற்றதை ரோமாபுரிப் பேரரசர் டிராஜன் [Roman Emperor Trajan (A.D.98-117)] சீர்ப்படுத்தினார்! பிறகு அரேபிய மன்னர் அமர் இபன்-அல்-ஆஸ் [Amr Ibn-Al-Aas] கால்வாயைச் செம்மைப் படுத்தினார்.

    image4

    எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு கால்வாய் மறுபடியும் செப்பமிட முடியாத நிலையில் சிதைந்து கிடந்தது! 1671 இல் புகழ்பெற்ற ஜெர்மன் கணித மேதை லெப்னிட்ஸ் [Leibnitz (1646-1716)] தனது எகிப்து விஜயத் திட்டத்தின் போது, பிரென்ச் மன்னர் பதினான்காம் லூயியிடம் [Louis XIV] கடல்களை இணைக்கும் அத்தகைய கால்வாயைப் பற்றி உரையாடியதாகத் தெரிகிறது. தற்போதைய கால்வாய் முயற்சியில் சுல்தான் மூன்றாம் முஸ்தபா [Sultan Mustafa III (1757-1773)], அடுத்து நெப்போலியன் ஆரம்பிக்க தள ஆய்வு வேலைகள் ஆரம்பமாயின. அவ்வாறு எகிப்து நாகரீகத்தில் பிறந்து, பல மன்னர்களின் வசப்பட்ட ஒரு பண்டைக் கால்வாய், பல்லாயிரம் ஆண்டுகள் தாண்டி கி.பி.1869 ஆம் ஆண்டில் பிரென்ச் நிபுணர்களால் புத்துயிர் பெற்றுப் பூர்த்தியானது ஒரு சுவையானப் பொறியியல் வரலாறு! ஈரோப்பிற்கும் இந்தியாவுக்கும் எகிப்து கால்வாய் வழியாக சுருக்குப் பாதை அமைக்க முதன்முதல் ஆலோசனை கூறியவர் பிரென்ச் அதிபதி நெப்போலியன்! நூறு மைல் நீளம், 200 அடி அகலமுள்ள சூயஸ் கால்வாய், ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில், மனிதரால் படைக்கப் பட்ட மகத்தான ஒரு பொறியியல் பூதக் கால்வாயாகக் கருதப்படுகிறது!

    image5

    image6

    கி.மு.1920 ஆண்டில் எகிப்து பெரோஸ் மன்னர்கள் [Pharaos] காலத்திலே மத்தியதரைக் கடலையும், செங்கடலையும் கால்வாய் மூலம் இணைக்கும் முன்னோடிப் பணிகள் முதலில் ஆரம்பிக்கப் பட்டன என்று எகிப்து சூயஸ் கால்வாய்ப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் மம்தோவ் ஹம்ஸா [Dr.Mamdouh Hamza] அறிவிக்கிறார். டாக்டர் ஹம்ஸா நிலவியல் யந்திரப் பொறியியல் நிபுணர் [Civil Engineer, Soil Mechanics]. நீள நைல் நதியின் கடல் சங்கமப் பகுதியில் ஒரு கால்வாயை வெட்டி, இரண்டு கடல்களையும் சேர்த்ததாக வரலாறுகளில் அறியப் படுகிறது. முற்காலத்தில் ஈரோப்பிலிருந்து இந்தியாவுக்கு வர நைல் நதியின் வழியாகக் கப்பல்கள் முதலில் பயணம் செய்து, கால்வாய் மூலமாகக் கடலை அடைந்ததாகத் தெரிகிறது. அதன் பின்பு கால்வாய் கவனிப்பாரற்று அடுத்து கிரேக்க, ரோமாபுரி வேந்தர்களால் பல தடவைத் தோண்டப் பட்டு மீண்டும் புறக்கணிக்கப் பட்டது! எகிப்து நாடு அரேபியர் கைவசம் ஆன பிறகு, மறுபடியும் கால்வாய் தோண்டப்பட்டு, நிரப்பப் படாமல் பல்லாண்டுகள் கிடந்தது! பின்னால் கால்வாயில் நீர் நிரப்பப்பட்டது.

    image7

    எகிப்த் மீது படையெடுத்த நெப்போலியன்

    1798 மே மாதம் 19 ஆம் தேதி பிரெஞ்ச் மாவீரன் நெப்போலியன் போனபார்ட் தென் பிரான்ஸின் டொவ்லான் [Toulon] கடற்கரையிலிருந்து 328 கப்பல்களில் 35,000 படைவீரர்களுடன் எகிப்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் கிளம்பினார். அப்போது நெப்போலியனுக்கு 29 வயது! பிரிட்டாஷ் இந்தியாவை அடுத்துப் பிடிக்க ஓர் பாதை அமைக்கவே நெப்போலியன் எகிப்தை முதலில் தன்வசப் படுத்தப் போர்தொடுத்ததாகத் தெரிய வருகிறது! மேலும் பிரெஞ்ச ஆதிக்கம் உலக அரங்கில் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும் என்ற பேராசையில் புறப்பட்டதாகும் வரலாறு கூறுகிறது! அந்தக் காலத்தில் எகிப்த் நாடு ஐரோப்பிய பேராசைப் போர்வாதிகளுக்கு ஒரு முக்கிய குறிவைப்பு நாடாகக் கருதப் பட்டது! பிரிட்டனுக்கும், இந்தியாவுக்கும் நடுப்பட்ட ராணுவக் குறுக்கு நாடாக எண்ணப் பட்டது! சிறப்பாக அப்படை எடுப்புக்கு சாவந்த் [Savants] எனப்படும் பிரெஞ்ச் ஞானிகள் 175 பேரைத் திரட்டி நெப்போலியன் தயார் செய்தார் என்று அறியப் படுகிறது! அவர்கள் யாவரும் எகிப்தின் பூர்வீக நாகரீகக் கலாச்சாரத்தை ஆழமாக அல்லது ஓரளவு அறிந்தவாராக இருந்தனர்! அவர்கள் மகா பிரமிட்கள், மற்ற எகிப்தின் பூர்வீகக் களஞ்சியங்களைத் தோண்டிக் காணும் பணிக்கு அழைத்து வரப்பட்டவர்!

    image8

    image9

    அப்போது எகிப்தை துருக்கியின் சுலதான் ஆண்டு வந்தார். ராணுவக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்தால், நெப்போலியன் எகிப்தியப் படையெடுப்பு ஒரு படுதோல்வி முயற்சி என்று சொல்லப் படுகிறது. பாலை வனத்தின் மணல் மீது தாங்க முடியாத தீப்பறக்கும் நடு வேனிற் காலத்தில் பிரெஞ்ச் படை போய் இறங்கியது! பிரமிடை நெருங்கிய பிரெஞ்ச் படையினரைச் சுமார் 10,000 எகிப்தியக் குதிரை வீரர்கள் [Mameluke Horsemen] தாக்கினர். அதே எகிப்தியப் படைகள்தான் கெங்கிஸ் கானுடன் [Genghis Khan] போரிட்டு எதிர்த்து நின்றவர். ஆனால் அந்த உள்நாட்டுப் படை வீரர்கள், பிரெஞ்ச் வீரர்கள் கூரிய துப்பாக்கி ரவைகள் முன்பு தாக்க முடியாமல் அடிபட்டுப் போயின! இரண்டு மணி நேரத்திற்குள் 10,000 எகிப்தியர் சுடப்பட்டு மடிந்தனர்! வடக்கே மேற்புறத்தில் வெற்றி பெற்றாலும், நெப்போலியன் படை தெற்கே கீழ்ப்பகுதியில், மாமிலூக் குதிரை வீரர்கணின் கொரில்லாச் சூழ்ச்சிப் போரில் தோற்றுக் கைதி செய்யப் பட்டார்! அதே சமயத்தில் பிரெஞ்சின் பெரிய கடற்படை பிரிட்டன் கடற்படைத் தளபதி நெல்ஸனால் பேரளவு சிதைந்து போய், நெப்போலியன் சிறைப் பட்டார்! 1801 ஆம் ஆண்டில் எகிப்த் பிரெஞ்ச் வசமிருத்து மீட்கப் பட்டது!

    image10

    நெப்போலியன் படையெடுப்பு எகிப்தின் புதையல் ஆய்வுகளுக்கு வழியிட்டது!

    பல நூற்றாண்டுகளாய் எகிப்தின் கலாச்சார நாகரீகம் ஐரோப்பியருக்கு ஒரு பெரும் புதிராகவே இருந்து வந்தது. பொதுவாக கிறிஸ்துவர்கள் எகிப்தில் அந்தக் காலங்களில் வரவேற்கப் படுவதில்லை! ஐரோப்பிய அறிஞர்கள் எகிப்தில் கால்வைப்பதற்கு முன்பு, கிரேக்க ரோமானியர் எகிப்தின் களஞ்சியங்களை எடுத்துச் சென்று, துல்லியமற்ற அறிக்கைகளை வெளியிட்டனர்! நெப்போலியன் எகிப்த் நாடு முழுவதையும் கைப்பற்ற முடியாமல் போனாலும், அவர்தான் பூர்வீக எகிப்தியக் கலாச்சார நாகரீகத்தை வெளி உலகுக்கு முதன்முதல் அறிவித்தவர்! அதன் பிறகுதான் விஞ்ஞான முறையில் எகிப்தியர் பிரமிட்களும், ஆலயங்களும் ஆராயப் பட்டன! எகிப்தின் படை யெடுப்பைத் திட்டமிட்ட நெப்போலியன்தான், அதன் நாகரீகம் சரிவர ஆராய்ந்து பதிவு செய்யப் படவில்லை என்று கண்டறிந்தவர்! நெப்போலியன் அழைத்துச் சென்ற சாவந்த் ஞானிகள், படைவீரர் நுழைந்து சென்ற தளங்கள் எல்லாம் பின்தொடர்ந்து, பூதளவியல், வரலாறு, கலாச்சாரம், தொல்பொருள் சம்பந்தப் பட்ட, ஏராளமான தகவல்கள் [Description de l ‘Egypte] சேர்த்ததாக அறியப் படுகிறது! 12 நூலடுக்குகள் [Volumes] கொண்ட அவற்றில் ஏராளமான படங்கள் (910 Plates) வரையப் பட்டிருந்தன! 1809-1828 ஆண்டுகளில் அவை யாவும் சீரிய முறையில் பதிப்பில் வந்தன.

    image11

     

    (முற்றும்)
    https://youtu.be/Zj4O560cHaU
    https://youtu.be/MJ85Fkz-VaE

    தகவல்:

    1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)
    2. Atlas of the World History By: Harper Collins (1998)
    3. The Ancient World, Quest for the Past (1984)
    4. How in The World By: Reader ‘s Digest (1990)
    5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)
    6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)
    7. The History of Art for Young People By: H.W. Janson.
    8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)
    9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)
    10.  Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]
    11.  The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)
    12.  Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)
    13.  Egyptian Art & Paintings [Several Websites]
    14.  Egypt: Art & Architecture [Several Websites]
    15.  Egyptian Art [ http://www.artchive.com/artchive/E/egyptian.html%5D From ‘The Story of Art ‘ By: Ernest Hans Gombrich.
    16.  History of Western Art, Nature in Egyptian Art By: Lynn Salerno University of North Carolina [http://home.sprynet.com/~bdsalern/egyptart.htm]
    17.  Egyptian Dancers [From Websites].
    18. The Art of the Amarna Period By: Magaera Lorenz.
    19. Egyptian Architecture: Pyramids, Tombs, Temples, Statues & Monuments. [Articles: 1992, 1996]
    20. Egyptian Architecture, Pyramids & Temples [www.oldandsold.com/articles10/fameous_buildings-1.shtml]
    21. The Geometry & Mathematics of the Great Pyramid By: Karl-H [Homann ‘s Manuscript (1996)]
    22. Secrets of the Great Pyramid By: Peter Tompkins (1978)
    23. History Topic: An Overview of Egyptian Mathematics.
    24. The Ancient Egyptian Number System By: Caroline Seawright (March 19, 2001)
    25. Parameter A & The Egyptian Decans By: Andrew Bourmistroff.
    26. The Great Pyramids – The Library of Xalexandria.
    27. Ancient Egyptian Astronomy By: David Noll.
    28. Time, The Egyptians & The Calendar By: Deborah Houliding.
    29. Napoleon ‘s Expedition to Egypt [1798]
    30. The Age og Enlightment: Napoleon ‘s Invasion of Egypt (Secrets of the Great Pyramids) By: Peter Tomkins.
    31. Suez Canal Thinnai Article [http://www.thinnai.com/sc0422043.html] By the Author.
    1.  http://napoleon.lindahall.org/learn.shtml
    2.  http://www.historyofwar.org/articles/wars_french_egypt.html
    3.  https://en.wikipedia.org/wiki/French_campaign_in_Egypt_and_Syria[April 16, 2016]

    **************************

    1. Jayabarathan [jayabarathans@gmail.com]  (April 19, 2016)  [R-1]

     

    Share
  • தென் அமெரிக்காவின் ஈகுவடார் & ஜப்பான் நாடுகளில் நேர்ந்த பூதப் பூகம்பத்தால் பலர் மரணம், பேரிடர்ச் சேதாரங்கள்

    — சி. ஜெயபாரதன்.

    equador-earthquake

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    ________________________________
    https://youtu.be/NR7nOjgRH38
    https://youtu.be/8UazDAbztM0
    https://youtu.be/Ywx55DC4wTs
    https://youtu.be/c-iZFJF8eBc
    http://bcove.me/i7cv1bbc
    https://youtu.be/YjBPJx7ehiU
    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2tjIczIHkkA
    http://www.youtube.com/watch?v=_YENHB0Im2I&feature=player_embedded
    ________________________________


    பூமகள் சற்று தோளசைத்தாள் !
    தாமாக வீழ்ந்தன
    மாட மாளிகைகள் !
    புதைபட்டார், பலர் மாண்டார்;
    சிதைவுகளில்
    சிக்கினர் ! கத்தினர் ! செத்தனர் !
    கடற் தட்டுகள்
    தடம்மாறிக் கால் உதைத்தால்
    உடனே சுனாமி எழும் !
    பூகம்ப ஆட்டம் நகர்த்திடும்
    பூகோள அச்சை !
    காலம் மாறும் ! பருவம் மாறும் !
    நாளின் நீட்சி மாறும் !
    கனற்பிழம்பு உட்கருவில் அழுத்தமாகிக்
    குப்பென எழும் எரிமலை !
    சூழ்வெளியும் நாசமாகிப்
    பாழாய்ப் போக
    ஆழ்ந்த பூமிக் குள்ளும்
    ஊழல் கூழ்த் திரவம்
    சூழ்ந்துள்ளது !
    எங்கெங்கு வாழினும்
    இன்ன லப்பா !
    ஏழு பிறப்பிலும் புவியில்
    தொல்லை யப்பா !
    ஊழிக் கூத்தின்
    பிரளயத் தாண்டவம் அடுத்தடுத்து
    அரங்கே றுதப்பா !
    முடுக்கி விட்ட பூகோளம்
    உடுக்கடிக்கும்
    ஊழியின் மேளம் !

    ________________________________

    உலுக்கிச் செல்லும் ஊழியின் கை
    உலுக்கி உலுக்கி மேற் செல்லும் !
    அழுதாலும், தொழுதாலும் ஓயாதவன் கை !
    குலுக்கிய பின் மீண்டும் குலுக்க வரும் !
    —  புதிய உமர் கையாம்

    தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை நீட்சி ஒரு பூகம்பப் பூத அரங்கம்
    பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற பூகம்பங்கள் அடிக்கடி நேர்ந்து வீடுகள், மாட மாளிகைகள் இடிந்து, ஆயிரக் கணக்கான மக்கள் மடிந்து, பேரிடர் அளித்து வரும் பூத அரங்கு தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை நீட்சிப் பகுதியே ! இந்த அரங்கு பூகம்பம் அடிக்கடி விளையாடும் உலக அக்கினி வளையத்தின் [Ring of Fire] உக்கிர அரங்காகக் கருதப்படுகிறது.

    2016 ஏப்ரல் மாதத்தில் அக்கினி வளையத்தின் இருபெரும் அரங்குகளில் அடுத்தடுத்து பூகம்பங்கள் நேர்ந்து மக்களுக்கு பேரளவு மரணங்களும், பேரழப்புகளும் நிகழ்ந்துள்ளன ! ஏப்ரல் 16 இல் ஜப்பான் தென் பகுதித் தீவு கியூசூவில் [Kyushu] உள்ள மினாமியாசோ [Minamiaso] நகரை 6.4 & 7.3 மதிப்பளவு இரு வலிமை மிக்க பூகம்பங்கள் தாக்கியுள்ளன ! அதன் விளைவு இதுவரை [ஏப்ரல் 22] 42 பேர் மரணம். 1000 பேர் காயமடைந்தனர். நிலச்சரிவாலும், பாதைகள், வீதிகள், பாலங்கள் முறிவாலும் 12,000 பேர் தனித்துப் போயினர். அதே ஏப்ரல் 16, 2016 இல் தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கையில் உள்ள ஈகுவடார் நாட்டில் 7.8 ரிக்டர் மதிப்பளவு நிலநடுக்கம் ஏற்பட்டு அதன் வணிக பூமி மாண்டா [Manta] நகரம் மாட மாளிகைகள், கூட கோபுர அடுக்கு வீடுகள் குப்புற வீழ்ந்து முறிந்தன. உடனே அடுத்தோர் பூகம்பம் 6.1 மதிப்பளவில் ஆட்டம் செய்து மக்களுக்கு அச்சத்தை ஊட்டி, இயற்கையின் சீற்றத்தயும் வல்லமையும் காட்டி யுள்ளது ! இதுவரை [ஏப்ரல் 22] ஈகுவடாரில் மரணம் 570 பேர், 163 பேர் இன்னும் காணப்பட வில்லை. 4065 பேர் காயமுற்றார். 23,500 பேர் குடியிருக்கும் வீடிழந்தார் !

    2015 செப்டம்பர் 16 ஆம் தேதி புதன்கிழமை இரவில் மக்கள் தூங்கும் போது சில்லி நாட்டின் வடபகுதியில் உள்ள ஸாண்டியாகோ நகருக்கு அருகில் இல்லாபெல் என்னும் ஊரில் [Illapel, Chile] 8.3 ரிக்டர் அளவில் ஒரு பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு 11 பேர் மரித்தார் [2015 செப்டம்பர் 17 அறிவிப்பு]. 34 பேர் காயமடைந்தார். சுமார் ஒரு மில்லியன் மக்கள் வீட்டை விட்டு நீங்க வேண்டியதாயிற்று. 240,000 பேர் மின்சாரப் பரிமாற்றம் இழந்தார். அடுத்து சிறிய சுனாமிப் பேரலை 4.5 மீடர் [15 அடி] உயரத்தில் எழுந்து, கடற் கரையில் உள்ள பல்வேறு சிற்றூர்கள் கடல் நீரில் முங்கிக் குளித்தன. இல்லாபெல் ஸாண்டியாகோவுக்கு வடக்கில் 280 கி.மீ. தூரத்தில் உள்ளது. நிலநடுக்க மையம் [Epic Center] இல்லாபெல் ஊருக்கு 55 கி.மீ. தூரத்தில் இருந்ததாகக் கணக்கிடப் படுகிறது. இல்லாபெல்லைச் சுற்றியுள்ள ஜனத் தொகை : சுமார் 35,000. முதல் நடுக்கத்துக்குப் பிறகு அடுத்தடுத்து 6 முதல் 7 ரிக்டர் வரை நில அதிர்வு ஆட்டங்கள் நேர்ந்தன. முதல் நடுக்கம் 3 நிமிடம் நீடித்தது. சில்லியின் நீண்ட பசிபிக் கடற்கரைப் பகுதி ஊர்கள் அனைத்துக்கும் சுனாமிப் பேரலை அடிப்பு எச்சரிக்கை அறிவிக்கப் பட்டது. உடனே பொதுமக்கள் பலர் உள் நாட்டுக்குள் ஓடியும், சிலர் வாகனங்களில் ஏறியும் புலம் பெயர்ந்து தப்பிக் கொண்டனர்.

    சில்லி நாடு உலகிலேயே பூகம்பங்கள் தாக்கும் நாடுகளில் முதன்மை நாடாகக் கருதப்படுவது. காரணம், சில்லி கடற்கரைக்கு அப்பால் நாஸ்கா அடித்தட்டு, [Nazca Tectonic Plate] தென்னமெரிக்க அடித்தட்டின் கீழ் நகர்ந்து, ஆண்டிஸ் மலைத்தொடர் சிகரத்தை மென்மேலும் உயர்த்துகிறது. சென்ற வருடம் சில்லி நாட்டின் வட புறத்தில் வாழும் மக்கள் பேரளவு சிதைவுகள் செய்த வெள்ளத்தின் அடிப்பாலும், தெற்குப் பகுதியில் காட்டுத் தீக்கள் எரிப்பாலும், இரண்டு எரிமலைகள் வெடிப்பாலும் இடருற்றார். இதுவரை உலகிலே வலுமிக்க அசுர நிலநடுக்கம் 9.5 ரிக்டர் அளவு, சில்லியில் 1960 ஆம் ஆண்டில் நேர்ந்தது. அதில் பலியானவர் 5000 மேற்பட்டவர். 2010 இல் நேர்ந்த 8.8 ரிக்டர் பூகம்பத்தில் எழுந்த சுனாமிப் பேரலையில் நூற்றுக் கணக்கான பேர் [சுமார் 500] உயிரிழந்தார். அந்த அசுர நில நடுக்கத்தில் பூமியின் சுழற்சியே சிறிது மாறி, 24 மணிநேர நாட் பொழுது இம்மி அளவு குன்றியது !


    ஜப்பான் கியூசூ தீவு வீடுகள்


    ஜப்பான் தென்பகுதித் தீவு வீடுகள்


    ஜப்பான் தென்பகுதித் தீவு அடுக்கு வீடுகள்

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2tjIczIHkkA
    http://www.youtube.com/watch?v=_YENHB0Im2I&feature=player_embedded
    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=qAqubO0R4Z0
    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kg67JKzoXmY
    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ERVa7MZP87Y
    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E426goB47kE
    http://www.bbc.com/news/world-latin-america-26862237

    தென் அமெரிக்காவை அருகிய பசிபிக் கடற்தள அடித்தட்டு “நாஸ்கா” [Nazca Tectonic Plate] ஆண்டு ஒன்றுக்குச் சராசரி 3 அங்குல நகர்ச்சியில் பிறழ்ச்சி அடைகிறது. முதல் நடுக்கத்திற்குப் பிறகு அடுத்த ஓரிரு வாரங்கள் தொடரப் போகும் “பின்னதிர்ச்சியே” [Aftershocks] மிக்கச் சேதாரம் அளிக்க வல்லது. அதுபோல் ஓரிரு வாரங்களுக்கு முன்பே பூகம்பம், அதே தளத்தில் நேர்ந்த முதல் நடுக்கத்துக்கு முன்னதிர்ச்சியாய் [Beforeshocks] வந்துள்ளதையும் குறிப்பிட வேண்டும்.

    பீட்டர் ஸ்பாட்ஸ் [கிறிஸ்டியன் விஞ்ஞானக் கண்காணிப்பு வெளியீடு]

    “உலகில் நிகழும் மாபெரும் நில நடுக்கங்கள் பல்நூறு கி.மீடர் பாறைகளைப் பூமிக்குள் நகட்டிப் பூகோளத்தின் பளுச் சமன்பாட்டை வேறிடத்துக்குத் தள்ளிவிடும். அதன் விளைவால் பூமியின் சுழற்சி பாதிக்கப்படும். (சில்லியின் 8.8 ரிக்டர் அளவுப் பூகம்பத்தில்) ஒரு நாளின் நீட்சி 1.26 மைக்ரோ விநாடி குன்றி விட்டது. பூகோள அச்சு பளுவைச் சமப்படுத்த 2.7 மில்லியார்க் விநாடி ( 8 செ.மீடர்) (3 அங்குலம்) சரிந்து விட்டது.”

    ரிச்சர்டி கிராஸ் (Richard Gross, Geophysicist NASA Jet Propulsion Lab, California)

    “இந்து மாக்கடலில் 2004 ஆண்டில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு இந்தோனேசியப் பூகம்பத்தில் மாபெரும் சுனாமி எழுந்து ஒரு நாளின் நீட்சியை 6.8 மைக்ரோ விநாடிகள் குன்ற வைத்துப் பூகோள அச்சும் 2.3 மில்லியார்க் விநாடி (milliarc-sec) (7 செ.மீ) (2.5″) மாற்றம் அடைந்தது.”

    நாசா விஞ்ஞானிகள் அறிக்கை

    தென்னமெரிக்காவின் சில்லி நாட்டில் மீண்டும், மீண்டும் பேரிடர்ப் பூகம்பங்கள் !
    2014 ஏப்ரல் முதல் தேதியன்று 8.2 ரிக்டர் அளவுப் பூகம்பம் இரவில் ஏற்பட்டு, 7 அடி [2 மீடர்] உயரச் சுனாமியும் எழுந்து, அரசாங்கம் எச்சரிக்கை விடுத்து, கடற்கரை நகரான லிகுயிக் [[Lquique] பகுதியில் 900,000 மக்கள் இடப் பெயர்ச்சி செய்ய நேர்ந்தது. அடுத்து 24 மணி நேரத்தில் அதே பகுதியில் 7.6 ரிக்டர் அளவு பின்னதிர்ச்சியாய் [Aftershocks] 14 மைல் கடல் ஆழத்தில் தாக்கியது ! 8.2 அளவு முதல் பூகம்பம் 12.5 மைல் கடல் ஆழத்தில் நேர்ந்தது. லிகுயிக் நகரின் ஜனத்தொகை : 200,000. விபத்தில் ஆறு பேர் உயிழந்தார். நிலநடுக்கத்தில் 2600 இல்லங்களுக்கு மேலாகச் சேதாரம் ஏற்பட்டது. 40,000 பேருக்கு மின்சாரப் பரிமாற்றம் தடைப்பட்டது. வட கரைப் பகுதிகளில் மீனவர் படகுகள் பல தகர்க்கப் பட்டன.

    அந்த நிகழ்ச்சி நேர்வதற்கு முன்பு அதே தொடர் முறிவுப் பகுதியில் உள்ள பனாமா, காலிஃபோனியா பூதளங்களில் நிலநடுக்கம் உண்டானது. பனாமா கால்வாய் போக்குவரத்து இயங்கும் பகுதியில் 6.2 ரிக்டர் அளவும், லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலும் பூகம்பம் உண்டாகி யுள்ளது. 2010 ஆண்டு சில்லியில் நேர்ந்த 8.8 ரிக்டர் பூகம்பத்தில் சுமார் 700 பேர் மாண்டனர். அப்போதைய கோர நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட பண விரையம் : 30 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப் படுகிறது ! இப்போதைய சேதாரத்தால் நிதியிழப்பு இத்தனை அளவு பெருந் தொகை இல்லை என்று தெரிகிறது.

    சில்லி பெரு நடுக்கத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே 7.6 அளவில் ஒரு முன்னதிர்ச்சியும் [Beforeshocks], நேர்ந்த 24 மணி நேரத்துக்குள் 6.1 அளவில் பின்னதிர்ச்சியும் [Aftershocks] நிகழ்ந்ததும் குறிப்பிடத் தக்கவை. பின்னதிர்ச்சி பசிபிக் கடலில் கரையிலிருந்து 14 மைல் தூரத்தில், 12 மைல் கடல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாய்க் கணிக்கப் படுகிறது. 1960 இல் சில்லியில் நேர்ந்த 9.5 அளவு மிகப்பெரும் பூகம்பத்தில் 1655 பேர் மாண்டனர் !

    நிலநடுக்கம் நேர்ந்த இம்மூன்று பகுதிகளும் [காலிஃபோர்னியா, பனாமா, சில்லி நகர்ப் புறங்கள்] பூகம்ப அரங்குகள் கொண்ட “தீக்கனல் வளையத்தில்” [Ring of Fire] படிந்துள்ளன. உலகில் ஏற்பட்ட 90% நில நடுக்கங்கள் [எண்ணிக்கை : 81] இந்த தீக்கனல் வளையத்தில்தான் நேர்ந்துள்ளன என்று அமெரிக்கன் பூதளவியல் அளப்பகம் [United States Geological Survey] கூறுகிறது ! சில்லியில் நேர்ந்த நிலநடுக்கம் பசிபிக் கடற்தள அடியில் உள்ள 7000 மைல் நீளமுள்ள நாஸ்கா அடித்தட்டு முறிவில் [Nazca Tectonic Fault Plate] ஏற்பட்டுள்ளது.

    உலகில் மிகப்பெரும் பூகம்பப் பேரிடர்கள் கடல் சூழ்ந்த அடித்தட்டுப் பெயர்ச்சித் தளங்களிலேதான் நிகழ்கின்றன ! அந்த அடித்தட்டுப் பிறழ்ச்சிகளின் இடையே நசுக்கப்படும் நீர் மண்டலம் அழுத்தமாகிப் பிளவுச் சேதாரங்களில் பன்மடங்கு அதிகமாகின்றன. 2010 பிப்ரவரி 27 இல் நேர்ந்த சில்லி மாபெரும் பூகம்பத்தைப், பூதளவியல் ஆராய்ச்சி மைய ஜெர்மன் விஞ்ஞானிகள் ஆய்ந்து, அடித்தட்டுகளுக்கு இடையே நிரம்பி நேரும் நீரழுத்தம் சிதைவுகளில் பெரும்பங்கு ஏற்றுள்ளதாகக் கண்டுள்ளார்கள்.

    “பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது ! பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் பிளவுபட்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை பெயர்ச்சி ஆகியுள்ளன! பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crusts] பூமியின் உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மிதந்து மெதுவாக நிலப் பெயர்ச்சி அடைகின்றன! கண்டங்களின் நிலப் பெயர்ச்சிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்சிக்கும் [Continental Drift & Plate Tectonics] பூர்வப் படிவப் பதிவுகள் [Fossil Records] சான்றுகள் காட்டி நிரூபணமும் அளிக்கின்றன”.

    டாக்டர் ஆல்ஃபிரெட் வெஜினர், ஜெர்மன் பூதளவாதி [Dr. Alfred Wegener (1880-1930)]

    சில்லியின் பூகம்பத்தால் பூகோளத்தின் அச்சு நகர்ந்திருக்கலாம் !

    தென்னமெரிக்காவின் சில்லியில் பிப்ரவரி 27 இல் நேர்ந்த 8.8 ரிக்டர் அளவு அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்து ஒரு நாளின் மணிக்கணக்கைக் குறைத்திருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கணினிப் போலி மாடலின் (Computer Simulation) மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். “உலகில் நிகழும் மாபெரும் நில நடுக்கங்கள் பல்நூறு கி.மீடர் பாறைகளைப் பூமிக்குள் நகட்டிப் பூகோளத்தின் பளுச் சமன்பாட்டை வேறிடத்துக்குத் தள்ளிவிடும். அதன் விளைவால் பூமியின் சுழற்சி பாதிக்கப்படும். (சில்லியின் 8.8 ரிக்டர் அளவுப் பூகம்பத்தில்) ஒரு நாளின் நீட்சி 1.26 மைக்ரோ-செகண்டு குன்றி விட்டது. பூகோள அச்சு பளுவைச் சமப்படுத்த 2.7 மில்லியார்க் விநாடி (milliarc-sec) ( 8 செ.மீடர்) (3 அங்குலம்) சாய்ந்து விட்டது.” என்று நாசா ஜெட் உந்துக்கணை பூதளவியல் விஞ்ஞானி, ரிச்சர்டி கிராஸ் கூறுகிறார்.

    இம்மாதிரிப் பூகம்ப மாடல்களைக் கணினிப் போலி மாடல் மூலம் காணலாம். ஆனால் அந்த மிகச் சிறிய பூகோள விளைவுகளை கருவிகள் மூலம் உளவி அளப்பது மிகச் சிரமமானது. சில மாறுதல்கள் மட்டும் வெளிப்படையாகத் தெரிபவை. “அருகில் உள்ள சில தீவுகள் நகட்டப் படலாம்,” என்று பாதிக்கப் பட்ட தளங்களை உளவு செய்த பிரிட்டன் லிவர்பூல் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆன்டிரியாஸ் ரியட்பிராக் (Andreas Rietbrock) கூறுகிறார். சில்லியின் மிகப் பெரிய நகரம் கன்செப்ஷன் (Concepcion) கரைக்கு அப்பால் உள்ள ஸான்டா மரியா தீவு (Santa Maria) பூகம்பத்தால் 2 மீடர் (6 அடி) உயர்ந்திருக்கும் என்றும் கூறுகிறார். தீவில் காணப்படும் பாறைகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட பூகம்பங்களால் நேர்ந்த மேல்மட்ட நகர்ச்சியை நோக்கிக் காட்டின என்றும் கூறுகிறார்.

    பூகம்பத்தின் பனிவழுக்கு விளைவு என்றால் என்ன ?
    பிரிட்டிஷ் புவியியல் தள ஆய்வு நிபுணர் டேவிட் கெர்ரிட்ஜ் (David Kerridge) இதைப் ‘பனி வழுக்கு விளைவு’ (Ice Skater Effect) என்று குறிப்பிடுகிறார். அதாவது பனி வழுக்குத் தளத்தில் வட்டமிடும் ஒரு பெண் தன் கரங்களை உள்ளே இழுத்துக் கொள்ளும் போது அவளது சுற்று வேகம் மென்மேலும் மிகையாகிறது. அதுபோல் பூகோளம் சுற்றும் போது அதன் உட்பளு நகர்வதால் அதன் சுழற்சி வேகம் மாறுகிறது என்று டேவிட் கெர்ரிட்ஜ் கூறுகிறார்.

    “பூகம்ப மானது ஐயமின்றிப் (பளுவை நகர்த்தி) பூகோளத்தை ஒரு வளையமாக்கி ஓர் ஆலய மணி போல் ஆக்கி விட்டது,” என்று உதாரணம் கொடுக்கிறார். ஆலய மணியின் நடுத் தண்டு இங்குமங்கும் நகரும் போது மணிச் சிமிழும் அதற்கேற்பச் சாய்கிறது. மணிச் சிமிழின் அச்சும் சரிகிறது. “இந்து மாக்கடலில் 2004 இல் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு இந்தனேசியப் பூகம்பத்தில் மாபெரும் சுனாமி எழுந்து ஒரு நாளின் நீட்சியை 6.8 மைக்ரோ விநாடிகள் குன்ற வைத்துப் பூகோள அச்சும் 2.3 மில்லி வளைவி விநாடி (7 செ.மீ) (2.5″) மாற்றம் அடைந்தது.” என்று நாசா அறிக்கை ஒன்று கூறுகிறது. இம்மாதிரி மாற்றங்கள் பூமியில் விளைந்து அடுத்து மாறுவது வரை அப்படியே தொடர்கின்றன ! மேலும் பூமியில் அத்தகைய சிறு மாறுபாடுகள் சூழ்வெளி வாயு மண்டலத்தில் நேரும் பெரும் மாறுபாடுடன் இணைந்து கொள்கின்றன என்று அறியப் படுகின்றது.

    சில்லியின் நில நடுக்கம் எவ்விதம் புவி அச்சை மாற்றியது ?
    சமீபத்தில் சில்லியில் நேர்ந்த 8.8 ரிக்டர் அளவுப் பூகம்பம், உட்தளப் பளுவை உள்ளே தள்ளி இருந்தால் அம்மாற்றம் புவி அச்சை நகர்த்தி இருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார். ஆலய மணி அடிக்கும் போது மணித் தண்டு மையத்தை நோக்கி வரும்போது மணிச் சிமிழும் சாய்கிறதல்லவா ? அதை மூட்டி விடுவது பூமியின் ‘அடித்தட்டு நகர்ச்சி இயக்கமே’ (Plate Tectonics Interactions). வெவ்வே றான அடித்தட்டுப் பளுக்களின் தனித்துவ நகர்ச்சியே நில நடுக்கத்தை உண்டாக்குகிறது. மெதுவாகப் புவி அச்சு பம்பரம் போல் வட்டமிடுவதே ‘அச்சு நகர்ச்சி’ என்று கூறப்படுகிறது. (The Shift of the Earth’s Axis is called “Precession”). பூமி தன்னைத் தானே சுற்ற 24 மணி நேரம் ஆகிறது. பூமியின் சாய்ந்த அச்சு நகர்ச்சியால் மெதுவாக ஒரு வட்டமிட சுமார் 25800 ஆண்டுகள் ஆகின்றன. அச்சு நகர்ச்சி புவிச் சுற்றில் அடித்தட்டு ஆட்டப் பளுத் தள்ளுதலால் நிகழும் ‘நெம்பு மாறுபாட்டால்’ (Change in Torque) உண்டாகிறது. அதனால் புவி அச்சுக் கோண வேகமும் (Angular Velocity) மாறுகிறது.

    உதாரணமாக இரண்டு மெல்லட்டைப் புத்தகங்களை எதிர் எதிரே வைத்து ஒன்றை ஒன்று நெருங்கச் செய்வோம். சில சமயம் புத்தகத் தாள்கள் ஒன்றுக்கு அடியில் ஒன்றாய்ச் சுமுகமாகச் சொருகிக் கொள்ளலாம். அல்லது ஒன்றுக்குள் ஒன்று நுழைய முடியாது கட்டுத் தாள்கள் சுருட்டிக் கொண்டு புத்தக இடத்தை மாற்றலாம். இந்தப் புத்தகங்களே புவிக்குப் பளுவாய் அமைந்துள்ள அடித்தட்டுகள் (Tectonic Plates) என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்விதம் அடித்தட்டுகள் நெருங்கும் போது பூமியின் உட்பளு இடம் மாறுகிறது.

    சில்லி நாட்டின் பல மைல்களுக்குக் கீழே நாஷ்கா அடித்தட்டு, தென் அமெரிக்க அடித்தட்டு (Nazca Plate & South American Plate) என்று இரண்டு அடித்தட்டுகள் ஆண்டுக்கு 7 செ.மீடர் வேகத்தில் ஒன்றை ஒன்று நெருங்கி வருபவை. அவை ஒன்றின் மேல் ஒன்று குதிரை ஏறும் போது நில நடுக்கம் உண்டாகிறது. அப்படி ஏறும் போது மேலும் கீழும் ஆடும் ஸ்பிரிங் போல் (Spring Wire) அடித்தட்டுகள் குதிக்கின்றன. அந்த அதிர்வலைகளே நில நடுக்கமாக பூமியின் தளப்பகுதியில் மேலும் கீழும் தாவி அல்லது பக்க வாட்டில் எதிர் எதிராய் நகர்ந்து வீடுகளை இடிக்கிறது, பாலங்களை உடைக்கிறது, வீதிகளைப் பிளக்கிறது !

    பூகோள அதிர்ச்சிகளில் என்ன நிகழ்கின்றன ?
    பூகம்பத்தின் போது பொதுவாக நேரும் விளைவுகள் :

    1. புவி அடித்தட்டுகள் நகர்ச்சி : நாஷ்கா தென் அமெரிக்க அடித்தட்டுகள் மோதி ஒன்றின் மேல் ஒன்று ஏறுதல் அல்லது, அடித்தட்டுகள் எதிர் எதிர் உராய்வு. அல்லது அடித்தட்டுகள் மேல் கீழ்ச் சரிவு.

    2. அசுரப் பூகம்பம் ஏற்படுதல் : உதாரணம் சில்லியின் 8.8 ரிக்டர் அளவுத் தீவிரம். (பிப்ரவரி 27, 2010)

    3. பூமியின் உட்பளு தள்ளப்படுதல் : பளுக் கடத்தல் நில நடுக்கத் தீவிரத்தைச் சார்ந்தது.

    4. புவி அச்சு சாய்வு : பளுவைப் பொருத்தும், இட நகர்ச்சியைப் பொருத்தும் அச்சின் சரிவு மாறுபடும்.

    5. புவி அச்சுக் கோணத்தின் வேகம் மாறுபடுதல் (Angular Velocity Changes).

    சுருங்கச் சொன்னால் பூகம்பத்தின் போது நேரும் பளுத் தள்ளல், இடமாறுபாடு, வேகம் ஆகியவை ஈடுபாடு கொண்டு புவி அச்சைத் திரிபு செய்கின்றன. பூகம்பங்கள் ஏற்படும் போது இவ்விதம் பன்முறைப் பூமியின் வரலாற்றில் புவி அச்சின் சரிவு மாறுபட்டுள்ளது.

    இமாலய மலைச் சரிவுகளை ஆட்டிய நில அதிர்ச்சிகள்:
    விடுதலை அடைந்த பிறகு 2005 அக்டோபர் 8 ஆம் தேதி முதன்முதல் வரலாற்றில் மிகக் கோரமான ஓர் அசுரப் பூகம்பம் பாகிஸ்தான் வடகிழக்குப் பகுதியை 7.6 ரிக்டர் உச்ச அளவில் குறைந்தது 140 தடவைகள் குலுக்கி ஆட்டி பெரும் காங்கிரீட் கட்டிடங்களைக் கூட கீழே தள்ளிச் சிதைத்து விட்டது! பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20, 2005] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது. குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவித்தார்கள்! இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது. 2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது! 2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர்! அரை மில்லியனுக்கு மேற்பட்டவர் தமது இல்லங்களை இழந்தனர். 1991 ஆம் ஆண்டு அடித்த சூறாவளிப் பேய்மழையில் பங்களா தேசப் பகுதிகளில் மட்டும் சுமார் 140,000 மக்கள் மடிந்தனர் என்று அறியப்படுகிறது.

    நிலையற்று நடுங்கும் இமய மலைத் தொடர்ச்சிகள்:
    பூகோளத்தில் உள்ள நீர்ப் பரப்பில் அட்லாண்டிக் கடலின் அகற்சி நீளமாகி வருகிறது! பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது! நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆ·ப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது! ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன! வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன! அமெரிக்காவில் காலி·போர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டி ருக்கிறது! இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன! தென்புறத்தில் உள்ள இந்தியக் கடற்தட்டும், வடக்கில் இருக்கும் யுரேசியத் தட்டுடன் முட்டி மோதிக் குதிரை ஏறி, நிலநடுக்கம் உண்டாவது அடிக்கடி நேர்ந்து வரும் இயற்கையின் அபாயத் திருவிளை யாடல்கள்!

    அந்த நகர்ச்சி நியதியில் இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 1.6 அங்குலம் [40 மில்லி மீடர்] வடபுறம் நோக்கித் தள்ளப்படுகிறது! இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிருக்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது! அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன. இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத் தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது! இந்த நியதிதான் “தட்டுக் கீழ்நுழைவு” [Plate Subduction] என்று சொல்லப்படுகிறது. இரண்டு தட்டுகளுக்கு இடையே நிகழும் இந்த குவியழுத்த நகர்ச்சியால் [Compressive Motion] இடை நழுவல் [Slip] ஏற்பட்டுப் பூகம்பங்கள் உண்டாக்கும் புவித்தட்டு உந்துப் பழுதுகள் [Thrust Faults] அமைகின்றன. அவற்றில் நமக்கு நன்கு அறிமுகமான முப்பெரும் பழுதுகள்: 2004 இல் சுனாமி உண்டாக்கிய இந்தோனேசியா கடற்தட்டுப் பழுது, கலி·போர்னியாவின் ஆண்டிரியா பழுது, இமயமலைத் தொடரின் இமயப் பழுது ஆகியவை முக்கியமானவை.

    உலகத்தில் நேர்ந்த பேரிடர் நிலநடுக்கங்கள்

    2010 ஆண்டில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் குடிமக்கள் வசிக்கும் உலகப் பகுதிகளில் பல நில நடுக்கங்கள் நேர்ந்துள்ளன. நமக்கு வரலாறு அறிந்த காலம் முதல் உலகில் ஏற்பட்ட எரிமலைகள், நில நடுக்கங்கள் செய்த கோர விளைவுகளைப் பதிவு செய்து வந்திருக்கிறோம். சைனா கிங்கை மாநிலத்தில் (Qinghai) ஏப்ரல் 14 இல் 6.9 ரிக்டர் அளவில் ஒன்று, எப்ரல் 5 இல் மேற்கு மெக்ஸிகோவில் 7.2 ரிக்டர் அளவில் ஒன்று, ஜனவரி 13 இல் ஹெய்தியில் 7.0 ரிக்டர் அளவில் ஒன்றும், பிப்ரவரி 17 இல் சில்லியில் 8.8 ரிக்டர் அளவில் ஒன்றும் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவை. சில்லியின் கடற்கரைப் பகுதியில் மட்டும் 1973 முதல் 7 ரிக்டர் அளவை மிஞ்சிய 13 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன ! இவை அனைத்தும் பூமியின் உட்பளுவை அங்குமிங்கும் நகர்த்திப் புவி அச்சில் திரிபுகளை உண்டாக்கி வந்துள்ளன ! இவற்றால் நாளின் நீட்சி குன்றியும் மிஞ்சியும் போகலாம் ! அதைத் தவிர பூமிக்கு வேறென்ன சூழ்வெளி மாற்றங்கள் நேரும் என்று இன்னும் நாசா விஞ்ஞானிகள் விளக்கமாய் அறிவிக்கவில்லை !

    அசுரப் பூகம்பம் ஒன்று வரப் போகிறது என்று சில மணிநேரங்களுக்கு முன்பாக மக்களுக்கு அபாய முன்னறிவிப்பு செய்யும் சாதனம் ஒன்று இன்னும் கண்டு பிடிக்கப்பட வில்லை ! இப்போது உள்ள கருவிகள் சில விநாடிகளுக்கு முன் (20 -30 sec) மட்டும் அறிவிக்கக் கூடியவை. அவை மக்களுக்குப் பாதுகாப்பளிக்கப் போதா ! எரிமலை வெடிப்பு எழுவதற்கு முன்பு எரிமலை வாயிலில் புகை மண்டலம் எழுகிறது ! சுனாமி ஊர்ந்து கடற்கரை நோக்கி வருவதற்குள் பூதள ஆட்டத்தையோ அல்லது அலைகள் பொங்கி எழுவதையோ உளவுக் கருவிகள் மூலம் ஒருவாறு உணர்ந்து இப்போது முன்னெச்சரிக்கை செய்ய முடிகிறது ! ஆனால் பூகம்பம் ஏற்படுவதற்குச் சில மணிநேரம் முன்னால் குடிமக்களுக்கு முன்னறிப்பு செய்யும் அபாய அறிவிப்புச் சாதனம் ஒன்று 21 ஆம் நூற்றாண்டில் இன்னும் உருவாக்கப் படவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஞ்ஞானக் குறைபாடாகும் !

    (தொடரும்)

    தகவல்:
    1. Time Magazine Article, “Nightmare in the Mountains,” By: Tim McGrik (Oct 24, 2005)
    2. The Kashmir Earthquake By Washington Post (Oct 12, 2005)
    3. Himalayan Tectonic Setting Earthquake Program.
    4. Earthquake History & Seismicity in the Northwest Region of Indian Sub-continent. [http://asc-india.org/seismic/pakistan.htm]
    5. New York Times -As Pakistan Reels, Musharraf Pleads for International Aid By: Somini Sengupta (Oct 8, 2005)
    6. Quake Homeless in Urgent Need of Tents By: Martin Regg Cohn, Asia Bureau (Oct 17, 2005)
    7. (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401222&format=html(Earthquake in Gujarat)
    7 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401292&format=html(Earthquake in Mexico City)
    7 (d) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401082&format=html(Major Earthquake in Iran
    7 (e) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40510211&format=html(Earthquake in Himalayan Zone) (October 21, 2005)
    7 (f) https://jayabarathan.wordpress.com/2009/04/09/earthquake-in-italy/ (Italian Earthquake 2009)
    8. Techtonics in Italian Earthquake By Chris Rowan Geologist (April 6 2009)
    9. Italian Earthquake Death Toll Rises to 260 & 28,000 Homeless By Reuters Alertnet (Apr 8, 2009)
    10. BBC News Aftershock Hits Italy Quake Zone (April 7, 2009)
    11. Rescue Workers Preparing for Surgical Operation on Buildings (April 7, 2009)
    12. News Desk – Italy Earthquake 2009 -Worst Quake Since 1980 (April 7 2009)
    13. Guardian UK : Italy Earthquake : Stricken L’Quila Suffers Again as Aftershocks Hit By John Hooper (April 7, 2009)
    14. Precession of the Earth’s Axis Coming to Light
    15. BBC News : Chile Counts Costs as Tsunami Ebs (Feb 28, 2010)
    16. Business Week : Chilean Quake Likely Shifted Earth’s Axis, NASA Scientist Says By : Alex Morales (March 1, 2010)
    17. BBC News : Hundreds Die in West China Quake (April 14, 2010)
    18. How the Chile Earthquake Changed the Earth’s Axis By : A.W. Berry (Mar/April 2010)
    19. http://www.bbc.com/news/world-latin-america-26862237 [April 3, 2014]
    20. http://www.cnn.com/2014/04/01/world/americas/chile-earthquake/ [April 2, 2014]
    21. http://en.wikipedia.org/wiki/2010_Chile_earthquake [April 2, 2014]
    22. http://rt.com/news/chile-earthquake-aftershock-evacuated-025/ [April 3, 2014]
    23. http://www.livescience.com/39110-japan-2011-earthquake-tsunami-facts.html [August 22, 2013]
    24. http://www.eurasiareview.com/04042014-ring-of-fire-fears-following-earthquakes-in-california-chile-and-panama/ [April 4, 2014]
    25. http://rt.com/usa/eathquakes-ring-fire-pacific-145/
    26. http://earthsky.org/earth/powerful-earthquakes-japan-ecuador-april-2016 [April 17, 2016]
    27. http://www.abc.net.au/news/2016-04-17/ecuador-earthquake-7.8-magnitude/7332852 [April 16, 2016]
    28. https://en.wikipedia.org/wiki/2016_Ecuador_earthquake [April 17, 2016]
    29. http://www.thestar.com/news/world/2016/04/18/us-troops-aircraft-in-japan-join-earthquake-aid-effort.html [April 18, 2016]
    30. https://en.wikipedia.org/wiki/List_of_earthquakes_in_2016 [April 20, 2016]
    31. https://en.wikipedia.org/wiki/2016_Kumamoto_earthquakes [April 20, 2016]
    32. http://www.680news.com/2016/04/20/ecuador-buries-dead-as-hope-for-survivors-fade/ [April 20, 2016]
    33. https://en.wikipedia.org/wiki/Cascadia_subduction_zone [April 21, 2016]
    34. http://www.newsmax.com/Newsfront/death-toll-japan-earthquake/2016/04/16/id/724272/ [April 22, 2016]

    ********************

    [S. Jayabarathan] jayabarathans@gmail.com (April 22 , 2016)

    Share
  • நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்ற கலைத்துவப் படைப்புகள் -6

    aj

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    எத்தனை கோடி இன்பம் வைத்தாய், எங்கள்

    இறைவா! இறைவா! இறைவா!

    சித்தினை அசித்துடன் இணைத்தாய், அங்கு

    சேரும் ஐம்பூதத்து வியனுல கமைத்தாய்!

    அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம்

    ஆகப் பலபல நல் அழகுகள் சமைத்தாய்!

    மகாகவி பாரதியார்

    Statue carvings

    ‘ஒவ்வோர் அங்கமும் தனித்து நீங்கி, தனது முழுமையற்ற குறை நிலையிலிருந்து தப்பிச் சென்று, வேறோர் முழு தோற்றத்தைத் தேடிப் பிடித்து அந்த வடிவத்தை நிரப்பிக் கொள்கிறது! ‘

    ‘கலைஞன் கூட்டத்தில் கலந்து தன் சிந்தனைக் குவிப்பைச் சிதறவிடக் கூடாது! ஆனால் இயற்கை உலகின் முழுச் சீரியற் பண்பில் மூழ்கும் வாழ்வை மேற்கொள்ள வேண்டும். அவ்விதம் வாழ்ந்து இயற்கையின் வெளிப்புறத் தோற்றத்தில் நுழைந்து, அதன் உட்புறக் கருவைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ‘

    ஓவியக்கலை மேதை: லியனார்டோ டவின்ஸி

    முன்னுரை: எகிப்து என்னும் பெயர் நம் செவிகளில் பட்டதுமே பிரம்மாண்டமான பிரமிட்கள்தான் நமது கண்கள் முன்பாகத் தோன்றுகின்றன! குன்று போல் குவிக்கப்பட்ட அந்தப் பாறைக் கட்டிகள் தேய்து போன எகிப்தின் நாகரீகச் சின்னங்களாகத் தெரிந்தாலும், அவை அனைத்தும் வரலாற்றுச் சிற்பங்களாய், வண்ணப் படங்களாய் எகிப்தியரின் ஒப்பற்ற நுணுக்கத் திறமைகளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்ப் பறைசாற்றி வருகின்றன! அந்த மாபெரும் சின்னங்களைப் புரிந்து கொள்ளச் சற்று மர்மமாய், சிரமமாய் இருந்தாலும், அவை எகிப்தியரின் தனித்துவப் பண்பை, கலாச்சாரத்தை நமக்கு அழுத்தமாகக் கூறி வருகின்றன! அந்த நாகரீகப் படைப்புகள் யாவும் நூதனக் கணித வடிவில், பொறி நுணுக்க முறைகளில் சீரான கட்டுமானப் பணிகளில் உருவாக்கப் பட்டுள்ளன! எண்ணற்ற அவ்வரிய கலைக் களஞ்சியப் படைப்புக்களை ஆக்கியவன் ஒற்றை ஃபாரோ அரசன் மட்டும் அல்லன்! ஃபாரோ பரம்பரையின் ஆற்றல் மிக்க, செல்வம் செழித்த, கடவுளாக மதிக்கப் பட்ட அரசர்கள் பலர், பல நூற்றாண்டுகளாய்த் திட்டமிட்டுக் கட்டியவை! ஆயிரக் கணக்கான பணியாட்களும், அடிமைகளும் அரசரின் நேரடிக் கண்காணிப்பில் அல்லும், பகலும் ஒழுக்க நெறியில் பல்லாண்டுகள் இயங்கிப் படைத்தவை!

    எகிப்தியரின் இயற்கையுடன் ஒத்த கலைத்துவப் படைப்புகள்

    இயற்கை வனப்புகளும், வடிவங்களுமே எகிப்தியரின் கலைத்துவப் படைப்புகளில் பெரும்பான்மையாகக் காணப் பட்டன. எகிப்தின் பற்பல வண்ண ஓவியங்களிலும், கட்டட மாளிகைகளிலும் இயற்கை மற்றும் இயற்கை மயமான இயக்கங்களின் சின்னங்களைக் கண்டு களிக்க முடிகிறது. எகிப்தியரின் அன்றாட இயற்கை வழங்கிய வாழ்க்கை முறைகளை அவற்றில் அறிகிறோம். நைல் நதியைச் சுற்றிலும் விதைக்கப் பட்டு, மலர்ச்சியும், வளர்ச்சியும் பெற்ற அந்தக் கலை வடிவான நாகரீகம், நைல் நதியின் நீர் வெள்ள ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப, ஒருமைப்பாடுடன் பிணைந்து ஆண்டு தோறும் மாறி வந்தது!

    Statue 1

    நைல் நதியின் நீரோட்டம் சீராக நிலவிய போது, எகிப்தியர் வேளாண்மையைத் தொடர்ந்து விருத்தி செய்தார்கள். பருவ காலங்களில் நதியில் வெள்ளம் பெருகிக் கரை மீறி நிலங்களை மூழ்க்கி வேளாண்மை வேலைகள் தடைபடும் போது, குடியானவர் அனைவரும் ஃபாரோ மன்னர் கட்டும் பிரமிட்கள் அல்லது ஆலயப் பணிகளில் பங்கு கொண்டதாக அறியப் படுகிறது! அத்தகைய இயற்கை மரபு ஒட்டிய வாழ்க்கையை எகிப்தியர் கடைப்பிடித்து ஒழுகி வந்தது அவரது ஓவியப் படைப்புகளில் தெளிவாகத் தெரிகிறது.

    பண்டை கால எகிப்தில் மக்களின் மதமும், கலாச்சாரமும் இயற்கையுடன் பிணைந்து கலந்திருந்தன. எகிப்தியர் ‘ரே ‘ எனப்படும் சூரியக் கடவுளை [Sun God: Re] வணங்கி வந்தனர். அத்துடன் பாரதத்தின் விநாயக மூர்த்தி போல, விலங்கினத்தின் தலை கொண்ட அநேக தெய்வங்கள் எகிப்தியரின் கலை, கலாச்சார, மத விழாக்களில் வணங்கப் பட்டன. ஃபாரோ பரம்பரையின் நான்காவது இனவாரி மன்னர் ‘ஸ்ஃபிங்ஸ் ‘ [Spinx] எனப்படும் பிரமிக்கத் தக்க மனிதத் தலைச் சிங்கத்தை வடித்தார். அன்னங்கள் போன்ற வண்ண வாத்துக்கள் ஒயிலாக நடக்கும் சுவர்ப்படப் படைப்புகளை [Frieze: Geese of Meidum (கி.மு.2530)] எகிப்து பிரமிட்களிலும், மற்ற ஆலயச் சுவர்களிலும் காணலாம். விலங்குகளும், பறவைகளும் மதிப்புடனும், பரிவுடனும் நடத்தப்பட்டன என்பது அவரது ஓவியப் படங்களிலும், எழுத்துப் படைப்புகளிலும் தெரிகிறது. அவரது ‘பறவை வளர்ப்புக் காட்சி ‘ [Fowling Scene (கி.மு.1450)] ஓவியத்தில் எகிப்தின் பலவிதப் பறவைகள் பரிவாக நடத்தப்பட்டதைக் காணலாம். இயற்கையின் அம்ச அமைப்புகளை அமென்-மத்-கொன்ஸூ ஆலயத்தில் [Temple: Amen-Met-Khonsu (கி.மு.1370)] பாபிரஸ் செடி, தாமரைப் பூச் சூடிய போன்ற தூண்கள் ஏந்தியுள்ளன.

    Paintings-7

    எகிப்தியரின் கட்டடக் கலைத்துவம்

    நைல் நதியின் கரைகளில் பாறைக் குன்றுகள் நிரம்பிய மலைச் சரிவுப் பாலைவனம் பல மைல்களுக்குப் பரவி யுள்ளன! பாறை அரங்குகளில் கட்டிகளை வெட்டி எடுத்து அவையே கோடான, கோடிச் செங்கற்கள் போல பிரமிட்களில் பயன்படுத்தப் பட்டன! வடிவங்களை உருவங்களாகச் செதுக்கி வடிக்கப் பாறை வெட்டுத் துண்டுகளே உபயோக மாயின. பாறை வெட்டுகள் குன்றுகளில் குடைந்து துண்டாக்கப் பட்டு, கட்டுமர மிதப்பிகள் மூலம் நைல் நதியில் கடத்திக் கொண்டு வரப்பட்டதாக அறியப் படுகின்றது. கடினப் பாறைகள், சுண்ணக் கற்கள், மென்மைக் கற்கள் [Granite, Limestone, Sandstone] எனப்படும் பலவிதப் பாறைகள், கற்கள் சிற்பப் பணிகளுக்கும், கட்டிட வேலைகளுக்கும் பெருந் துண்டங்களாய் வெட்டி எடுக்கப் பட்டன. கட்டிடக் கலைஞர் காரை என்னும் சுண்ணக் கலவையைப் [Mortar] பயன்படுத்தாமல், பாறைத் துண்டுகள் துல்லியமாக மட்டம் செய்யப்பட்டு ஒன்றுடன் ஒன்று பிணைத்துக் கொள்ளும்படி வெகு அற்புதமாய் அடுக்கப்பட்டுக் கட்டப் பட்டுள்ளன!

    Bird Watching -1

    மாளிகைகளின் கனமான மட்டநிலை மேற்தளத் தட்டுகளை [Terrace Stone Plates] யானைத் தூண்கள் தாங்கும்படி நிறுத்தப் பட்டன. எகிப்தின் கார்னாக் ஆலயத் தூண்கள் [Karnak Temple Pillars], காண்போர் தலை சுற்றும்படிப் பிரமிக்கத் தக்க வடிவில் நிறுத்தப் பட்டவை! அந்தத் தூண்களின் மேலே ஏறிச் செல்லவும், பாறைத் தட்டுகளைத் தூக்கிக் கொண்டு செல்லவும் செங்கற்களை வைத்துச் சாய்வுத் தளம் [Ramp] கட்டப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. சில தூண்கள் ஒருவித வேலைப்பாடு இல்லாமல் உள்ளன. சில தூண்களில் சிற்ப ஓவியங்கள் நுணுக்கமாகக் கீறப்பட்டு உள்ளன. ஃபாரோ மன்னன் மகுடம் சூடிப் பட்டம் ஏற்றக் கொண்டபின், அவனுக்குத் தனிப்பட்ட புதைப்புப் பிரமிட் கட்டும் பெரும்பணி திட்டமிடப் படுகிறது. கட்டடக் கலைஞர்களும், ஓவியச் சிற்பக் கலைஞர்களும் சேர்ந்து ஃபாரோவின் பிந்தைய நாட்கள் முழுவதும் பணி செய்கிறார்கள். ஃபாரோ மன்னன் மரணம் அடைந்த பின் பிரமிட் வேலைகள் அனைத்தும் நிறுத்தம் அடைகின்றன!

    எகிப்தியரின் அடிப்படைப் பணிகள் கலைப் படைப்பாயின

    பண்டைக் கால எகிப்தியரின் கலைகள் [ஓவியங்கள், சிற்பங்கள், பாறைக் கீறல் படங்கள், நடனங்கள்] யாவும் பெரும்பான்மையாக அவரது மீன் பிடித்தல், படகு ஓட்டல், வாணிபம் செய்தல், ரொட்டி தயாரித்தல், கூட்டுக் குழு விழா போன்ற அனுதின வாழ்க்கைப் போக்கின் ஒவ்வொரு பழக்கத்தையே பிரதிபலித்தது. பிரமிட் உள்ளறைச் சுவர்கள், புதையறைச் சுவர்கள், ஆலய மதில்கள் ஆகியவற்றில் வரையப் பட்ட ஓவியங்கள் அவரது அனுதின வாழ்க்கை நிகழ்ச்சிகளைத்தான் காட்டின. அந்தக் கால மாந்தரின் நடை, உடை, பிழைப்பு, தொழில், நடனம் ஆகியவை சுவர்களில், தூண்களில் வரையப் பட்டுள்ளன.

    Statue 2

    இறந்தவர் அணிந்திருந்த விலை மதிப்பற்ற வண்ணக் கற்கள் பதித்த தங்க நகைகள், ஒளியோடு புதைப் பேழையில் கிடந்தன. பயன்படுத்தப் பட்ட அரச கலசங்களில் விலங்குகளின் படங்கள், வண்ண ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன.

    எகிப்தியரின் பிரமிட் மதில், ஆலயச் சுவர், தூண்கள் மீது வெகு நுணுக்கமாக வரையப்பட்ட படங்கள், ஓவியக் கீறல்கள் யாவும் உலகப் புகழ் பெற்ற வரலாற்றுச் சின்னங்கள். செத்தவர் கடவுளைக் காணச் சென்று, நீடித்த சொர்க்கபுரி வாழ்க்கை பெற அவர் செய்த நற்பணிகளும், அந்த வரை படங்களும் உதவி செய்யும் என்று எகிப்தியர் நம்பினர். அவரது உணவு, உடை, பணியாட்கள், அடிமைகள் ஆகியோரின் படங்கள் வரையப் பட்டு புதை பேழைக்குள் வைக்கப் பட்டுள்ளன.

    சிற்பக் கலைஞர், பானைக் குயவர் புரிந்த பணிகள்

    சிற்பக் கலைஞர்கள் பண்டை எகிப்தில் மிகவும் தேவையான வல்லுநராகக் கருதப் பட்டனர். நாட்டின் ஃபாரோ மன்னர், அவரது மனைவிமார், அரச வரலாறு பதிப்பாளி, ஆண், பெண் கடவுள்கள், விலங்குகள் ஆகிய வடிவங்களின் சிற்பங்களைச் செதுக்க வேலைக்கு வைத்துக் கொள்ளப் பட்டார்கள். கருங்கற்கள் சிற்பங்கள் போல, வேறு அலபாஸ்டர் எனப்படும் ஒளி மங்கி ஊடுறுவும் பளிங்குக் கற்களும் [Alabaster, a White Translucent Stone] பானைகள், கலங்கள் செய்யவும், சிற்ப வேலைகளுக்கும் பயன்படுத்தப் பட்டன. பானைப் பண்டங்கள் செய்ய செராமிக்ஸ் [Ceramics], களிமண் உபயோக மாயின. அப்பாண்டங்களில் தாதுக் கற்கள் [Mineral Beads] பலவித வண்ணங்களில் கலைத்துவ முறையில் பதிக்கப் பட்டன. கைக்கலை வடிப்பாளிகள் தங்கம், வெள்ளி, தாமிரம், ஈயம் போன்ற உலோகங்களை உபயோகித்து நகைகள், கத்திகள், ஆயுதங்கள், ஈட்டிகள் செய்தனர்.

    எகிப்தியரின் இலக்கியத்தில் மதம் பெரும் பங்கு வகிக்கிறது! பிரார்த்தனைப் பாடல்களும், துதிப்பாக்களும் கடவுளை உயர்த்தி எழுதிப் படைக்கப் பட்டவை! அவற்றில் யாவற்றையும் விட முக்கியமான நூல்: ‘மாண்டோரின் சுவடி ‘ [The Book of the Dead] அந்நூலில் செத்தோர் பிற்காலத்தால் மேலுலகில் நீண்ட நெறி வாழ்வை அடைவதற்கு வேண்டிய 200 துதிப் பாசுரங்கள், மந்திர விதிகள் எழுதப் பட்டுள்ளன. எகிப்தியர் மேலும் துணிச்சல் கதைகள், தேவதைக் கதைகள், காதல் கதைகள், பழமொழிகள், பாடல்கள், பொன்மொழிகள், புனைந்துரைக் கதைகள் ஆகியவையும் ஆக்கியதாக அறியப்படுகிறது.

    (தொடரும்)

    தகவல்:

    1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

    2. Atlas of the World History By: Harper Collins (1998)

    3. The Ancient World, Quest for the Past (1984)

    4. How in The World By: Reader ‘s Digest (1990)

    5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

    6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

    7. The History of Art for Young People By: H.W. Janson.

    8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

    9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)

    10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]

    11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)

    12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)

    13 Egyptian Art & Paintings [Several Websites]

    14 Egypt: Art & Architecture [Several Websites]

    15 Egyptian Art [ http://www.artchive.com/artchive/E/egyptian.html%5D From ‘The Story of Art ‘ By: Ernest Hans Gombrich.

    16 History of Western Art, Nature in Egyptian Art By: Lynn Salerno University of North Carolina [http://home.sprynet.com/~bdsalern/egyptart.htm]

    17 Egyptian Dancers [From Websites].

    18. http://www.crystalinks.com/egyptart.html

    19. http://www.visual-arts-cork.com/ancient-art/egyptian-sculpture.htm

    20.  https://en.wikipedia.org/wiki/Art_of_ancient_Egypt   [April 8, 2016]

    ************************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (April 8, 2016)  [R-1]

    Share
  • நைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவக் காட்சிகள் – 5

    –சி. ஜெயபாரதன்.

    Ancient Great Egyptian Painting

    (Ancient Great Egyptian Paintings)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

     

    ‘ஓவியன் எல்லா வித மாந்தரையும் விட உன்னதப் படைப்பு அதிபதி! … உயர்ந்த மலைத் தொடுப்பிலிருந்து, புல்வெளிச் சாய்தளம் கடற்கரை நோக்கிச் சரியும் காட்சியை வரைய விழைந்தால், அந்த வேட்கைக்கும் அவனே அதிபதி! பிரபஞ்சத்தில் எந்த ஓர் உருவமும் மகத்துவத்தில், தோற்றத்தில், கற்பனையில் உதயமாகி நிலைத்தாலும், முதலில் ஓவியன் தன் மனதில் படம் பிடித்த பிறகுதான் கையால் வரையத் துவங்குகிறான்! ‘

    ஓவிய மேதை: லியனார்டோ டவின்ஸி

     

    ஓவியக் கலை வடிப்பில் அற்புதர்

    கற்பாறை செதுக்கிய வல்லுநர்

    ஆலய வடிப்பில் உன்னத வித்தகர்

    சிற்பம், சிலைகள், சித்திரச் சிற்பிகள்

    நைல் நதி நாகரிகப் பிறவிகள்

    +++++++++++++

    Egyptian Paintings -1

    பூர்வீக உலகில் மலர்ந்த கலைத்துவப் புரட்சிகள்!

    5000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, மெஸோபொடாமியா, இந்தியா, சைனா போன்ற நாடுகளின் பூர்வீக நாகரீகங்கள் செழிப்பான நைல் நதி, டைகிரிஸ் நதி, யுஃபிராடிஸ் நதி, சிந்து நதி, மஞ்சள் நதிக்கரைகளில் சீராகத் தலைதூக்கி விருத்தியாகி வந்துள்ளன. இங்குமங்கும் சிதறிய இனக்குழுக்கள் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து, வேளாண்மை செய்து பயிரினங்களை விதைத்துத் தளிர்க்க வைத்துச் சிற்றூர் ஆட்சி முறை நிலைபெற்றுப் பல இடங்களில் சிற்றரசர்களும், சில தளங்களில் பேரரசர்களும் சிறப்பாக ஆண்டு வந்திருக்கிறார்கள். நூற்றுக் கணக்காக கிராமங்களும், நகரங்களும் பெருகி, மக்கள் அறிவு வளர்ச்சி அடைந்து சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டடக்கலை, காவியம், நாடகம், நாட்டியக் கலைகளும் தழைத்து வந்துள்ளன.

    புரட்சிகரமான அந்தப் புதிய நாகரீகம், கற்காலத்திற்குப் பிறகு குப்பென தோகை விரித்தது. வலுப் பெற்ற வல்லரசுகள், பலமற்ற மெல்லரசுகளை நசுக்கி அவரது நாடுகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டன! போர்வாள் இட்ட விதிகளே சட்டங்களாய் நிலவி வந்தன. ஆரம்ப நாகரீக வரலாறுகளில் சமயவாதிகளும், ஜோதிட வானியல் ஞானிகளும், திறமைசாலிகளும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் தோன்றினர். எழுத்துத் திறம் சிறப்புற்று எகிப்து, கிரேக்க [மெஸோபொடமியா] எழுத்தாள ஞானிகள் தமது நாகரீக வரலாறுகளை எழுதிப் பதிவு செய்து வைத்துள்ளது பண்டைய இனங்களின் வரலாறுகளை அறிய உதவி நமக்கு செய்கின்றன.

    நைல் நதி நாகரீக ஓவியப் படைப்புகளின் அம்சங்கள்

    3000 ஆண்டுகளாக பண்டை காலத்திய எகிப்தியக் கலைஞர்கள் தமது தனித்துவ ஓவியச் சிற்பக் கட்டிடக் கலைகளில் முனைந்திருந்தனர். அவையே பின்னால் எகிப்திய நாகரீகச் சின்னங்களாக அவரது வரலாற்றையும் வாழ்க்கை முறைகளையும் நமக்கு காட்டிக் கொண்டிருக்கின்றன. அந்த 3000 ஆண்டுகளில் எகிப்தியர் கையாண்ட ஓவியப் பாணிகள் அனைத்திலும் வண்ணங்கள், வடிவ அமைப்புகள் யாவும் ஓர் உயர்ந்த ஒருமைப்பாடு கொண்டிருந்தன. எகிப்தியர் ஒரு தனித்துவக் கலவை நிறங்களைப் பயன்படுத்தினர். அவரது ஒவ்வொரு வண்ணமும், மாந்தரின் வெவ்வேறு பண்பைச் சுட்டிக் காட்டியது! ஓவியத்தில் பண்டை எகிப்தியர் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள், கருமை, வெண்மை ஆகிய ஆறு நிறங்களைப் பயன்படுத்தினர். அவற்றின் குறிப்பிடத் தக்க சிறப்பு என்னவென்றால் அவ்வண்ணத் திரவங்கள் யாவும் உலோகவியத் தாதுக் கலவைகளிலிருந்து [Mineral Compounds] எடுக்கப் பட்டவை! நீர் கலந்த நிறக் கலவைகள் அல்ல!

    Egyptian Paintings -3

    வண்ணங்கள் அனைத்தும் உலோகவியக் கலவையாக இருந்ததால்தான் ஓவியங்கள் இன்னும் பழுதடையாமல், அழிந்து போகாமல் 3000 ஆண்டுகளாக நம்முடன் உரையாடிக் கொண்டிருக்கின்றன! பச்சை நிறம் பசுமை, செழுமை, வளர்ச்சி, பயிரினம் ஆகியவற்றைக் காட்டின. மரணக் கடவுளான ஓஸிரிஸ் [Osiris, God of the Dead] பச்சை நிற மேனி கொண்டதாக வரையப் பட்டிருந்தது! சிவப்பு நிறம் ஆற்றலை வலியுறுத்தும். ஆதிக்கம், ஆணவம், ஆங்காரம், வெற்றி, தீக்கனல் ஆகியவற்றைக் காட்டவும் செந்நிறம் கையாளப் பட்டது! கடவுள் இஸிஸ் [God Isis] அதன் குருதி இரண்டும் சிவப்பு நிறத்தில் வரையப் பட்டன. சாத்தான் என அழைக்கப்படும் சேத் தெய்வமான [God Set] கெட்ட துர்காவுக்குச் செந்நிறம் அளிக்கப் பட்டது. சேத் எனப்படும் துர்கா கேடுகளை விளைவிப்பதுடன், எகிப்தில் பெரும் மணற் புயலை [Sand Storms] உண்டாக்கும் தெய்வமாகவும் அஞ்சப்பட்டது! நீல நிறம் நீர்வளத்தைக் காட்டியது. அத்துடன் உலகப் படைப்பு, சொர்க்கபுரி ஆகியவற்றைக் காட்ட நீல நிறம் பயன்பட்டது.

    Egyptian Paintings -4

    படைப்புக் கடவுளாகக் கருதப்படும் எகிப்திய பிரம்மா, அமுன் [God Amun, The Creator] நீல நிற முகத்துடன் உள்ளதாக வரையப் பட்டிருக்கிறார். மஞ்சள் வண்ணத்தில் காட்டப் பட்ட அத்தனையும் அழிவற்ற நிரந்தர நிலையுறும் சிறப்பு பெற்றவை! தங்கத்தின் நிறம் மஞ்சள். பரிதியின் நிறம் மஞ்சள். ஆனால் பரியின் கனல் சிவப்பு. கடவுளாகக் கருதப்படும் ஃபாரோ மன்னர்கள் மஞ்சள் நிறத்தில் வரையப் பட்டனர். மரணத்தின் நிறம் கருமை. இரவைக் குறிக்கவும், அடித்தளப் பூமியைக் காட்டவும் கருமை நிறம் பயன்படுத்தப் பட்டது. ஓஸிரிஸ் மரணக் கடவுள், இறப்பிற்குப் பிறகு அடையும் வாழ்க்கை ஆகியவைக் கருமை வடிவில் வர்ணிக்கப் பட்டன. வெண்மை நிறம் புனிதம், தூய்மை, புண்ணிய பணிகள், தெய்வாம்சம் ஆகியற்றைக் காட்டியது. ஆலயப் பூசாரிகள் பயன்படுத்தும் பண்டங்கள், கருவிகள் வெள்ளை நிறத்தில் வரையப் பட்டன.

    Egyptian Paintings -6

    எகிப்திய ஓவியங்களில் காணப்படும் உருவங்கள்

    பன்னிற வண்ணங்கள் எகிப்தின் தனித்துவப் பண்புகளைக் குறிப்பிட்டதைப் போல, உருவங்களின் அமைப்புகள் தனித்துவ அம்சங்களைக் காட்டின. சுவர், தூண் ஓவிய வடிவங்கள் அசையாமல் நேராக நின்றன. அல்லது நடந்தன. மற்றும் சில பொது அமைப்புகளை எகிப்திய ஓவியங்களில் நாம் காண முடிகிறது. ஓவிய மாந்தரின் முகங்கள் ஒரு கண் தெரியும்படிக் பக்க வாட்டில் வரையப் பட்டுள்ளன. மாந்தரின் கை, கால்கள் முழுவதும் காட்டப் பட்டன. மனித வடிவத்தின் நடுவுடல் எப்போதும் முன்நோக்கியே இருந்தது. ஃபாரோ மன்னரின் உடம்பைக் காட்டும் போது, அவரது தெய்வீக அம்சத்தையும், உன்னத நிலையைப் போற்றவும் மற்ற நாட்டு மாந்தரைவிட ஓவியத்தில் பெரிதாகக் காட்டினார்கள்.

    எகிப்தியர் தமது கலை ஓவியங்களில் வாழ்க்கையின் ஒவ்வொரு போக்கைக் காட்டினார்கள். தமது ஆலயச் சுவர்களிலும், மரணக் கல்லறைகளிலும் தாம் வாழ்ந்த அன்றாட நிகழ்ச்சிகளை வரைந்தார்கள். தமது நாட்டு மனித இனம், தம்மிடம் வளரும் விலங்கினங்கள் ஆகியவற்றை ஓவியங்களாகவும், சிற்ப வடிவங்களாகவும் வடித்தார்கள். தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை ஆகிய உலோகங்களில் மானிட, விலங்கின வடிவங்கள், நகைகள், பயன்படுத்திய கலன்கள், ஆயுதங்கள் போன்றவற்றைச் செய்தார்கள். எல்லாவற்றிலும், அவரது சுவர் ஓவியங்களும், தூண் ஓவியங்களும் எழிலானவை. பலரும் அறிந்து புகழப் பெற்றவை. அந்த அரிய ஓவியங்களில் எகிப்திய மாந்தர் அனுதினமும் செய்யும் உணவு தயாரிப்புகள், வாணிபங்கள், மீன் பிடிப்பு, படகோட்டல், கப்பல் மிதப்பு, குடும்பச் சந்திப்பு ஆகிய சிலவற்றைக் குறிப்பிடலாம்.

    அந்த ஓவியங்களில் சில மரண மடைந்தோர் மேலுலகில் அழியாத நிரந்தர நிலை பெறுவதற்கு வேண்டிய உதவிகளும் செய்பவை. மரணப் பேழையில் வைக்கப்படும் உயிர் பிரிந்த உடலைச் சுற்றிலும், அவர் புரிந்த நற்பணிகள் எழுதப்பட்டுப் பதிவாதி புதைக்கப் படுகின்றன. மாண்ட பின்பு ஆன்மாவுக்கு வழிகாட்டி உதவ செய்யப் பல தகவல் மரணப் பெட்டிக்குள் வைக்கப் பட்டன! அத்துடன் செத்தவரின் மனைவி, பிள்ளைகள், பணியாட்கள் ஆகியோரின் ஓவியப் படங்களும், அவரது உணவு, உடை போன்றைகளும் உள்ளே புதைக்கப் பட்டன. அப்படி எகிப்தியர் செய்ததின் காரணம் என்ன ? மரண மடைந்த நபர் உயிரோடு உள்ள போது, அவருடன் வாழ்ந்தோரும், அவருக்குத் தேவைப் பட்டவையும், அவரது மரணத்திற்குப் பிறகும் வேண்டி யுள்ளன என்பது பண்டைக் கால எகிப்தியரின் நம்பிக்கை.

    எகிப்தியர் தீட்டிய அரிய ஓவியங்கள்

    பலவித நோக்கமைப்புகள் [Perspectives] இணைந்து எகிப்தியர் தமது ஓவியங்களைத் தீட்டி யுள்ளார்கள். பெரும்பான்மையாக பக்க வடிவுத் தோற்றங்களே [Side View] பல ஓவியங்களில் காண முடிகிறது! மரணம் எய்திய ஒரு மாந்தரின் வரலாற்றை, சிவப்பு, ஆரஞ்ச், நீலம், வெண்மை நிறங்களில் ஒளிரும் வண்ண ஓவியங்களாக வரைந்து, அவரது உடலுடன் வைத்தார்கள். முதலில் ஓவியக் கலைஞன் கரித் துண்டால் பானை ஒன்றின் மீது வரைந்து, பயிற்சி அடைந்த பிறகு அதைப் பெரிதாக்கிச் சுவரில் மறுபடியும் கரியில் வரைகிறான். முதலில் தெளிவற்று வரையவும், அழிக்கவும், மீண்டும் சிறப்பாக்கவும் கரித்துண்டு மிகவும் ஏதுவானது. பிறகு வண்ணக் கலவைகள் சுவர் ஓவியங்களில் படக் கோடுகளின் உள்ளே நிரப்பப் படுகின்றன. எகிப்தியர் பயன்படுத்திய தூரிகை எவ்விதம் செய்யப் பட்டது ? நார் நாரான மரக் குச்சிகளின் முனை தூரிகையாகக் கலைஞனுக்கு உபயோக மானது. சுவர்கள் முதலில் மண்ணில் கட்டப்பட்டுப் பிறகு சுண்ணத்தால் பூசப்பட்டவை. ஃபாரோ மன்னர் காலத்திய ஓவியர்கள் வண்ண அலைகளை வரைந்து, அடுக்கடுக்கான விளைவுகளைக் காட்டினர். மேலும் சுவர் ஓவியங்களைப் பாதுகாக்க எகிப்தியர் ஒருவித வர்ணக் காப்பு ஆயிலைப் [Varvish] உபயோகித்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அது எதிலிருந்து உண்டானது அல்லது எப்பண்டங்கள் சேர்ந்து கலக்கப் பட்டது என்பது அறிய முடியாமல் ஒரு புதிராகவே உள்ளது!

    Egyptian Paintings -5

    அடுத்து எகிப்தியரின் ஒப்பற்றக் கட்டிடக் கலைத்துவம் பற்றிக் காண்போம்.

    (தொடரும்)

    தகவல்:

    1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

    2. Atlas of the World History By: Harper Collins (1998)

    3. The Ancient World, Quest for the Past (1984)

    4. How in The World By: Reader ‘s Digest (1990)

    5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

    6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

    7. The History of Art for Young People By: H.W. Janson.

    8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

    9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)

    10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]

    11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)

    12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)

    13 Egyptian Art & Paintings [Several Websites]

    14 Egypt: Art & Architecture [Several Websites]

    15 Egyptian Art [ http://www.artchive.com/artchive/E/egyptian.html%5D From ‘The Story of Art ‘ By: Ernest Hans Gombrich.

    ****

    jayabarathans@gmail.com [S. Jayabarathan] (April 5, 2016)

    Share
  • நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலய ஓவியங்கள் – 4

    –சி. ஜெயபாரதன்.

    பிரமிட்

    (Paintings in The Great Abu Simbel Temples of Egypt)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

     

    ஓ! உறங்குகிறாய் நீயோ!

    உறக்கம் என்ப தென்ன ?

    இறப்பின் எதிர்ப் பிம்பம் அது!

    சிறப்பாக உன்னதப் படைப்புகள்

    பிறக்கட்டும்,

    மறைந்த பிறகு நின் பிம்பம்

    இறவாத ஓர் நிரந்தரம் நிலை

    பெறுவதற்கு!

    ஓவிய மேதை: லியனார்டோ டவின்ஸி

    ‘உன் மண்டை ஓட்டை எடு; எலும்புகளை சேகரி; மற்ற உடற் கூறுகளையும் சேர்த்து ஒட்டியுள்ள மண்ணை உடற் சதையிலிருந்து உலுக்கி விட்டு நீக்கு! …. உந்தன் கரங்களைப் பற்றி உன்னை சொர்க்க புரிக்கு அழைத்துப் போக, வாசல் காப்போன் உன்னை நோக்கி வெளியிலிருந்து வருகின்றான்! ‘

    பண்டைப் பேராட்சிப் பிரமிட் வாசகம்

     

    5000 ஆண்டுகளுக்கு முன்பாக இயற்கையான பாறைக் குன்றுகளைக் குடைந்து பிரமிக்கத் தக்க முறையில் பேரெழிலுடன் செதுக்கிய ஆபூ சிம்பள் ஆலயங்கள் [Abu Simbel Temples] போன்று உலகிலே வேறு எந்த நாட்டிலும் காண முடியாது! அப்பெரும் இரண்டு ஆலயங்களை ஃபாரோ வேந்தன் ராம்ஸிஸ் [Ramses II] கி.மு.(1279-1213) ஆண்டுகளில் தனது பராக்கிரமத்தையும், தெய்வீக உணர்ச்சியையும் எடுத்துக் காட்ட ரா-ஹாராக்டே [Ra-Harakhte] ஞாபகமாகவும், மனைவி நெஃபர்டாரி [Nefertari] நினைவாகவும் அமைத்ததாக அறியப்படுகிறது. 1813 ஆம் ஆண்டில் எகிப்தின் நைல் நதி நாகரீகத்தைக் காண வந்த ஜே.எல் புர்காரெட் [J.L. Burckhardt] என்பவர் நைல் நதியைக் கடந்து குன்றுகளைப் பார்வை யிட்ட போது, மணல் மூடிய அழகிய ஓர் ஆலயத்தை நவீன சூடான் எல்லைப் பகுதியில் கண்டுபிடித்தார். நைல் நதியில் அமைக்கப் பட்டுள்ள உலகப் பெரும் அணைகளில் ஒன்றான அஸ்வான் உயர்ந்த பேரணையிலிருந்து சுமார் 170 மைல் தூரத்தில் வரலாற்றில் புகழ் பெற்ற அப்பெரும் இரண்டு ஆலயங்கள் கட்டப் பட்டிருக்கின்றன.

    Abu Simble Paintings -2

    ராம்ஸிஸ் வேந்தர் தனக்காகக் கட்டிய முதல் ஆபூ சிம்பள் ஆலயத்தின் வாசலில் 67 அடி உயரமுள்ள நான்கு பூத வடிவான சிற்பச்சிலை மன்னர் வீற்றிருக்கும் கம்பீரமான காட்சி காண்போரைப் பெரு வியப்பில் தள்ளிவிடும்! ஆலய முகப்பில் சிற்பச் சிலைகள் வீற்றிருக்கும் தளப்பகுதி மட்டும் 120 அடி அகலமும், 100 அடி உயரமும் கொண்டது! வேந்தரின் இரண்டு கற்சிலைகள் வலது புறமும், அவற்றைப் போல் இரண்டு கற்சிலைகள் இடது புறமும் பிரம்மாண்டமாக அமர்ந்துள்ளன. நான்கு பூதச் சிலைகளில் இடப்புறத்தில் உள்ள ஒன்று மட்டும் பூகம்பத்தால் உடைந்து போனதாக அறியப் படுகிறது! அந்த ஆலயம் கிழக்கு நோக்கி நிற்கிறது. சூரியக் கடவுளின் சிற்பம் தலை வாயிலின் மேலே உயரத்தில் செதுக்கப் பட்டிருக்கிறது. கோயில் நேரமைப்பு [Temple Alignment] முதலில் துல்லியமாக நகர்த்தப் பட்டு, ஆண்டுக்கு இருமுறை பரிதி கடக்கும் போது, அதன் ஒளிக்கதிர்கள் உள்ளிருக்கும் சன்னிதியில் இருக்கும் தெய்வங்கள் மீது நேராக விழும்படி நூதனப் பொறியியற் திறமையுடன் கட்டப் பட்டுள்ளது!

    ஆபூ சிம்பளின் அடுத்த ஆலயம் ஹாதுர் [Hathur] என்னும் எழில் தேவதைக்கு அர்ப்பணம் செய்யப்பட்டு உள்ளது. அதை ராமெஸிஸ் வேந்தன் காதல், எழில் தேவதையான ஹாதுருக்கு [Hathur] அர்ப்பணம் செய்ததோடு, தனது மனைவி நெஃபர்டாரி நினைவாகவும் கட்டியதாக அறியப்படுகிறது. காதலிசை ஆலயத்தின் முன்பு 33 அடி உயரத்தில் பிரமிக்கத் தக்க ஆறு சிற்பச் சிலைகள் செதுக்கப்பட்டு கம்பீரமாக நிற்கின்றன! அப்பெரும் சிற்பங்களின் கீழே அவரது குழந்தைகளின் வடிவச் சிலைகளும் அமைக்கப் பட்டுள்ளன. அந்த இரண்டு கோயில்கள் சூடானின் எல்லையில் இருப்பதால் பல நூற்றாண்டுகள் பலரும் அறியாத வண்ணம் 1813 ஆண்டுவரை மறைந்தே இருந்து விட்டன. 1817 இல் இரண்டு ஆலயங்களையும் இத்தாலிய எகிப்திய புதைச் சின்னவாதி [Egyptologist] கியோவன்னி பாட்டிஸ்டா பெல்ஸானி [Giovanni Batissta Belzoni] என்பரால் துருவி ஆராயப் பட்டு ஃபாரோ அரசர், அரசிகளின் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டன. சிற்பங்கள், சிலைகள், சித்திரங்கள் யாவும் சீராக்கப் பட்டு, உலகிலே மிக உன்னத நாகரீகச் சின்னக் களஞ்சியங்களாய்ப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன!

    Abu Simble Paintings -3

    ஆபூ சிம்பளில் உள்ள பேராலயம்

    ஃபாரோ பரம்பரை மன்னன் இரண்டாம் ராம்ஸெஸ் கட்டிய ஆபூ சிம்பள் ஆலயங்களைப் பின்வந்த மதங்கள் எவையும் மாற்றமோ அல்லது சிதைவோ செய்யவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 2001 மே 2 ஆம் தேதி ஆஃப்கானிஸ்தானில் மூடத்தனமான தாலிபான் மூர்க்கர்கள் உலகப் பெரும் உயரம் கொண்ட 2000 ஆண்டு வயது கடந்த புத்தச் சிலையை இஸ்லாமுக்குப் புறம்பானது என்று இகழ்ந்து தகர்த்துச் சிதைத்தது வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு வன்மை நிகழ்ச்சியாகும்! ஆபூ சிம்பள் ஆலய முகப்பின் சிகரத்தில் வரிசையாக ஆஃப்ரிகன் குரங்குகளின் சிலைகள் சூரியோதயத்தை வரவேற்றுச் சிரிப்பவை போல அமைக்கப் பட்டுள்ளன! ஆலயக் கதவின் அருகே அரசரின் பெயர் ‘செர்மாத்ரா ‘ [Ser-Ma ‘at-Ra] என்று எழிலுடன் எழுதப் பட்டிருக்கிறது. முகப்புக்கு அருகில் வீற்றிருக்கும் பிரம்மாண்டமான இரண்டாம் ராம்ஸெஸ் சிலையின் கால்களுக்கிடையே சிறு சிறு சிலைகளாக அவரது அன்னை முத்தூய் [Mut-tuy], மனைவி நெஃபர்டாரி, [Nefertari] புதல்வர், புதல்வியர் ஆக்கியோர் சிலைகளும் அமைந்துள்ளன. ராம்ஸெஸ்ஸின் திருமண நிகழ்ச்சிகள், அவரது போர் முறைகள் கூட சித்திரங்களாகச் சுவர்களில் பொறிக்கப் பட்டுள்ளன. ஹிட்டைட்ஸ் மன்னனின் மகளை ஃபாரோ வேந்தன் ராம்ஸெஸ் [King of the Hittites] திருமணம் புரிந்த நிகழ்ச்சி கூட ஒரு சுவரில் வரையப் பட்டிருக்கிறது.

    ஆலய வாசற் படிகளைத் தாண்டி உள்ளே நுழைந்தால், எட்டுத் தூண்கள் தாங்கிய பெரு மண்டபம் ஒன்று எதிர்ப்படுகிறது. எட்டுத் தூண்களிலும் இரண்டாம் ராம்ஸெஸ்ஸின் சிலைகள் ஃபாரோ பரம்பரை மன்னரின் மரணக் கடவுளான, ‘ஓஸிரிஸ் ‘ [Osiris, God of the Dead] வடிவத்தில் செதுக்கப் பட்டுள்ளன! ஃபாரோ பரம்பரை மன்னர்களின் முதலான தெய்வம் சூரியக் கடவுள் என்று அறியப் படுகிறது. அதுபோல் மன்னர்கள் மரணக் கடவுளான ஓஸிரிஸ் தெய்வத்தின் மீதும் மதிப்பு வைத்திருந்தது காணப்படுகிறது. பண்டைக் கால எகிப்தில், ஃபாரோ மன்னர்கள் உள்பட ஏனைய எகிப்தியர்களும் மரணக் கடவுளையும் தொழுது வந்ததாகத் தெரிகிறது. புராண எகிப்து மத நூல்களில் ஓஸிரிஸ் தேவன் மனிதனாக இருந்து, மண்ணிலே வாழ்ந்து எப்படியோ மனித ஆற்றலுக்கும் மேலான ஓர் அசுர சக்தியைப் பெற்று, மரணத்துக்குப் பிறகு மாபெரும் பிரதேசத்தை ஆண்டதாகவும், அவரைப் போல் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தோர் அனைவரும் தமது மரணத்திற்குப் பிறகு அவரது பிரதேசத்தில் வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது!

    அந்த எழில் உள் மாளிகைச் சுவர்களில் இரண்டாம் ராம்ஸெஸ் கதேஷ்ப் போரில் [Battle os Kadesh] ஹிட்டைட்ஸ் மன்னருடன் புரிந்த போர் ஓவியமாக வரையப் பட்டிருக்கிறது. ராம்ஸெஸ் பெரிய மாளிகையைத் தாண்டி இன்னும் உள்ளே சென்று சிறு மாளிகைக்குள் நுழைந்தால், அங்கே நான்கு சதுரத் தூண்களைக் காணலாம். அந்த சிறு மாளிகை ‘கோமகனார் மாளிகை ‘ [Hall of the Nobles] என்று குறிப்பிடப் படுகிறது. இறுதியில் சன்னதியின் புனித இடத்திற்கு வருகிறோம். அங்குதான் ரா-ஹாரக்டே, பிரா, அமுன்-ரா, ராம்ஸெஸ் வேந்தர் [Ra-Harakhte, Prah, Amun-Ra, King Ramses] ஆகிய நான்கு சிலைகள் உள்ளன. அபூ சிம்பள் முதல் ஆலயத்தின் சிறப்பு: ஆண்டுக்கு இரண்டு முறைகள் [பிப்ரவரி 21, அக்டோபர் 22] பரிதியின் ஒளி நேரடியாகப் புனிதச் சன்னதியின் மேல் படுகிறது. அந்த தேதிகளின் முக்கியத்துவம் என்ன ? பிப்ரவரி 21 ஆம் தேதி ராம்ஸெஸ் மன்னர் பிறந்த நாள்! அடுத்து அக்டோபர் 22 ஆம் தேதி மன்னர் மகுடம் சூடிய நாள்.

    Abu Simble Paintings -1

    ஆபூ சிம்பளில் உள்ள சிற்றாலயம்

    இரண்டாம் ராம்ஸெஸ் தனக்குக் கட்டிய பேராலயத்திற்கு வடக்கில் சிற்றாலயத்தைத் தன் எழில் மனைவி நெஃபர்டாரிக்குக் கட்டியுள்ளதாக அறியப் படுகிறது. ஆலயம் காதல் எழில் தேவதையான ஹாதுருக்கு [Hathur] அர்ப்பணம் செய்யப்பட்டது! ஆலய முன் முகப்பில் ஆறு சிலைகள் கம்பீரமாக நிற்கின்றன. அவற்றில் நான் கு சிலைகள் இரண்டாம் ராம்ஸெஸ் மன்னருக்கும், இரண்டு சிலைகள் அவரது மனைவி நெஃபர்டாரிக்கும் செதுக்கப் பட்டிருக்கின்றன. ஆலயத்தின் உள்ளே நுழைந்தால் ஆறு தூண்கள் நிற்கும் ஒரு மாளிகைக் காணலாம். ஆறு தூண்களிலும் ஹாதுர் பெண் தேவதையின் தலைகள் அமைந்துள்ளன. கிழக்குத் திக்கில் உள்ள சுவரில் ராம்ஸெஸ் மன்னன் ரா-ஹாரக்டே, அமுன்-ரா தேவர்கள் முன்பாக எதிரிகளைத் தாக்கி வீழ்த்தும் காட்சி வரையப் பட்டிருக்கிறது! மற்றுள்ள சுவர்களில் ராம்ஸெஸ் மன்னனும், மனைவி நெஃபர்டாரியும் தெய்வங்களுக்குப் பூசை செய்து தொழும் நிகழ்ச்சி காட்டப் பட்டுள்ளது. உள்ளே சன்னதியில் மாபெரும் ஹாதுர் பெண் தெய்வச்சிலைக் காண்போரைப் பிரமிக்க வைக்கிறது. அதன் மேலேதான் மனிதன் செதுக்கிப் படைத்த, மிக உயர்ந்த செயற்கையான வளை கோபுரம் அற்புதமாய்ப் பார்ப்போரை ஊர்ந்திடும் எறும்புகளாக ஆக்குகிறது!

    Abu Simbel Small Temple

    அடுத்து எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவம் பற்றியும், ஒப்பற்றக் கட்டிடக் கலைத்துவம் பற்றியும் காண்போம்.

    (தொடரும்)

    1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

    2. Atlas of the World History By: Harper Collins (1998)

    3. The Ancient World, Quest for the Past (1984)

    4. How in The World By: Reader ‘s Digest (1990)

    5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

    6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

    7. The History of Art for Young People By: H.W. Janson.

    8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

    9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)

    10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]

    11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)

    12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)

    13. http://witcombe.sbc.edu/sacredplaces/abusimbel.html

    14. http://www.ancient.eu/Abu_Simbel/

    15. https://en.wikipedia.org/wiki/Abu_Simbel_temples [March 3, 2016]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] (April 3, 2016) [R-1]

    Share
  • ஆண்டாண்டு தோறும் பருவ காலத்தில் அமெரிக்க மாநிலங்களைத் தாக்கிப் பேரழிவு செய்யும் அசுரச் சூறாவளிகள் [Tornadoes]

     

    aj

    சிஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Pt5JlFVhSqg 

    [New HD 2013 Tornado video compilation – All video no pictures !] 

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=SVDD5kxDoAo 

    [Largest tornado ever recorded? 2.5 miles wide! Hallam,

    Nebraska 2004]

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=8aSbQ_I8-jA

    [April 17th, 2013 Tornado Near Lawton, Oklahoma] 

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G15Vg-5Q7c0

    [Moore, Oklahoma Tornado – May 20, 2013]

     

     1999 Oklahoma Tornado

     

    முன்னுரை :  அமெரிக்காவின் சில மாநிலங்களில் ஆண்டுதோறும் யுத்தக் குண்டுகள்போல் விழுந்து பேரழிவுகளை விளைவித்து வரும் பருவ காலச் சூறாவளிகள் தவிர்க்க முடியாத, தடுக்க இயலாத, தாங்கிக் கொண்டு தவிக்க வைக்கும் இயற்கையின் மாபெரும் வெப்ப விளைவுக் கொடுஞ் சீற்றமே !  தற்காலத் துணைக்கோள்கள் பற்பல அவற்றின் வருகையை அரை மணிக்கு முன்பு எச்சரிக்கை செய்யினும், ஓரளவு மனித உயிர்கள் தப்பலாமே தவிர, அவற்றின் கோர விளைவுகளைத் தவிர்க்க முடிய வில்லை. இந்தப் பேய்ச் சூறாவளிச் சுற்றுப் புயல்கள் ஆண்டு தோறும் அடித்துத் தாக்கும் நாடுகள் பல : வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடப் பகுதி, நடுப் பகுதி, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸீலாந்து, தென் கிழக்கு ஐரோப்பா ஆகியவை சூறாவளிப் பேய்க் காற்றின் பாதிப்பு நாடுகளாகக் குறிப்பிடப் படுகின்றன.  1999 ஆண்டு மே மாதத்தில் அமெரிக்காவின் ஓக்லஹோமா, கான்சஸ் மாநிலத்தில் அடித்த அசுரச் சூறாவளியால் 50 பேர் மாண்டனர் ! பொருடுட் சேத நிதி மதிப்பீடு : 1.5 பில்லியன் டாலர் ! சூறாவளியின் உச்ச ஆற்றல் EF-5 [Enhanced Fujita Scale] அளவீடாக மதிப்பிடப் பட்டது.

    2013 May Tornado Deaths

    அந்த சமயத்தில் [1999] மூன்று நாட்களில் மட்டும் 140 சூறாவளிகள் அமெரிக்க மாநிலங்கள் [ஓக்லஹோமா, கான்சஸ், ஆர்க்கென்ஸாஸ், அலபாமா, டெக்ஸஸ், டென்ன்ஸி] பலவற்றைத் தாக்கியுள்ளன !  அவற்றில் EF-5 ஆற்றலில் கோரமாய்த் தாக்கிய ஓக்லஹோமா சூறாவளியின் வேகம் 300 mph [500 km/h] வரை அளக்கப் பட்டுள்ளது ! பேய்ச் சூறாவளி உண்டாக்கிய கட்டடப் பொருட் சேதாரங்கள் சுமார் 40 மைல் தூரம், 1 மைல் அகலம் பரவின.  முற்றிலும் அழிந்த வீடுகள் : 1780; சிதைந்த வீடுகள் : 6550; வாணிப நிறுவகச் சேதாரம் : 127. அதுபோல் கோரமாய்ச் சமீபத்தில் தாக்கிய [2013 மே மாதம் 20] அசுரச் சூறாவளி ஓக்லோஹோமா மூர் நகரைச் சின்னா பின்னம் ஆக்கியது !  சூறாவளியின் தீவிரம் : EF-5, வேகம் : 200 mph, சேதாரப் பகுதி 20 மைல் நீளம், சுமார் 2 மைல் அகலம் !  உயிரிழந்தோர் எண்ணிக்கை : 51. காயம் அடைந்தோர் : 120. பொருட் செலவுத் தொகை இன்னும் கணிக்கப் பட வில்லை.

    2013 Tornado Wreck -1

    அசுரச் சூறாவளிகள் ஆண்டு தோறும் எப்படி உருவாகின்றன ?

    டொர்னாடோ என்பது பெரு வேகத்தில் சுற்றும் ஓர் இடிமின்னல் கோரப் புயல் தூண் !  சுழலும் அந்தத் தூண் புயல் மேலே குடைக் காளான் வடிவில் சேமித்து வரும் இடிமின்னல் மழை முகிலைப் பூமியோடு சேர்த்து வேகமாய் நகர்வது ! புயலின் உச்சவேகம் 100 mph முதல் 300 mph மேலாய் மிகையாகிறது ! சூறாவளி ஓரிரு மைல் அல்லது 300 அடி-500 அடி அகலத்தில் சுமார் 30-50 மைல் தூரம் பயணம் செய்து பாதையில் பெருமளவுச் சிதைவுகளை, பாதிப்புகளை விளைவிக்கும். இவற்றை ஆங்கிலத்தில் [Tornadoes, Twisters, Mesacyclones, Mesovortices] என்றும் குறிப்பிடுகிறார். ஹர்ரிக்கேன் வேறு, டொர்னாடோ வேறு. ஹர்ரிக்கேன் உண்டாக்கும் பேரழிவுகள், பெரு வெள்ளம், மரணங்கள், டொர்னாடோ விளைகளை விடப் பன்மடங்கு.  ஹர்ரிக்கேனிலிருந்து பற்பல சூறாவளிகள் கிளம்பலாம் !

    2013 Tornado Wreck -6

    இடிமின்னல் முகில்கள் திரளவும், சூறாவளிகள் உருவாகவும் பல முன்னடி நிகழ்ச்சிகள் நேர வேண்டும். அந்தப் பகுதிகளில் பேரளவுத் தணிவு நிலை நீர்மை [Low Level Moisture] முதலில் தேவைப்படும். உண்டாகும் நிலப்பரப்புக்கு ஒருபுறம் குளிர்முகக் காற்றும், மறுபுறம் வெப்பக் காற்றும் வீச வேண்டும்.  வட அமெரிக்கக் கண்டம் தென் புறத்தில் மெக்ஸிகோ வெப்ப வளைகுடாவைக் கொண்டுள்ளது. வடக்கே கனடாவின் குளிர்க் காற்று தென்திசை நோக்கி அடிக்கிறது. இரு முகக் காற்றுகளும் சேர்ந்து கடல் நீராவியைச் சுமந்து இணையும் போது, பூமியின் சுழற்சியால் மழைமுகில் சுற்ற ஆரம்பிக்கிறது. மேகத்தில் அயனிகள் சேர்ந்து இடிமின்னல் உண்டாகும். வெப்பக் கடல் நீராவியைச் சேர்த்த மழைமுகில் இடிமின்னல் மேகமாய்த் திரண்டு கடிகார நேர் சுழற்சியுடன் மேலே ஏறுகிறது !

    இடிமுகிலுக்குக் கீழே குடைக் காளான் போல் தூண் முளைத்து பூமியைத் தொடுகிறது !  அதுவே அதி வேகத்தில் நகர்ந்து சூறாவளி ஆகிறது.  சூறாவளிக்கு இப்படி மையத்தைச் சுற்றும் ஒரு சுழற்சிக் கோர வடிவம் எப்படி உருவாகிறது என்பது கால நிலை விஞ்ஞானி களுக்கு இன்னும் ஒரு புதிராகவே உள்ளது !

    2013 Tornado Wreck -8

     

    உருவாகும் பல்வேறு முறைச் சூறாவளித் தோற்றங்கள்          

     

    1. 1.   அசுரத் திரட்சி சூறாவளிகள் [Supercell Tornadoes]:  அதி தீவிரப் பாதிப்புகள் செய்யும் பயங்கரச் சூறாவளிகள் அசுரத் திரட்சி இடிமின்னல் முகில் மூட்டத்தில் தோன்றுகின்றன.  அசுரத் திரட்சி இடிமுகில் மின்கொடை அயனிகள் சேர்ந்து, நீண்ட காலம் நீடிக்கும் சுழற்சிக் கரு மேகங்கள் இவை.  இந்த விதப் பயங்கரச் சூறாவளிகள் சில சமயம் பனித்துண்டு மழையைப் பொழிய வைக்கும் !  அசுரத் திரட்சி இடிமுகில்களில் பாதிதான் சூறாவளியை உண்டாக்கும்.
    1. 2.   சூடான மெக்ஸிகோ வளைகுடா இடிமுகில் திரட்ட நீராவி கொடுக்கிறது.  வரண்ட காற்றைத் தென்மேற்குப் பாலை வனமும், ராக்கி மலைத் தொடர்களும் பரிமாறிப் பெரும் கொந்தளிப்பை [Instability] உண்டாக்குகின்றன. ஈரக் காற்றும் வரண்ட காற்றும் கூடி இணையும் போது ஒருவித அசுரத் திரட்சிகள் [Supercells] தனிப்பட்ட முறையில் உருவாகலாம்.

    2013 Tornado Wreck -2

    1. 3.   கடல் நீர்த்தாரைகள் அல்லது எழுநீர் ஊற்றுகள் [Water Spouts]  : கடல் நீர்த்தாரைகள் அல்லது எழுநீர் ஊற்றுகள் தீவிரமற்ற சூறாவளிகள்.  அவை விளைவிக்கும் தீங்குகள் பெரிதல்ல. சுமார் 150 அடி அகலம் கொண்டவை. இந்த விதச் சூறாவளி கடலில் உண்டாகி, கரைத் தளத்துக்கு வந்ததும் மறைந்து போய் விடுகிறது.  இதற்குப் பூமியைத் தொடும், சுற்றுப் புனல் வடிவப் புயலோட்டம் [Spiraling Funnel-Shaped Wind Current] உண்டு.
    1. 4.   நில நீர்த்தாரைகள் [Land Spouts]  : இவ்விதச் சூறாவளிகள் ஆற்றல் குன்றியவை. இவற்றின் மேகங்களில் அதிகமாய் நீர்மை உண்டாவதில்லை.
    1. 5.   குப்பைச் சூறாவளி [Gustnado]  : நிலத்தில் உண்டாகி குப்பைக் கூளங்களை அள்ளிக் கொண்டு நகரும் பேய்க் காற்று.
    1. 6.   பன்முகச் சுழற்சி சூறாவளி [Multiple Vortex Tornado]  : சில சமயங்களில் ஓர் இடிமின்னல் முகிலிலிருந்து, பற்பல சுழற்சிச் சூறாவளிகள் கிளம்பி வேறு திசைகளில் செல்லலாம்.

     

    May 2013 Tornado

    வட அமெரிக்காவில் உள்ள சூறாவளி அரங்கம் [Tornado Alley]

    வட அமரிக்காவின் மைய மாநிலங்கள் சிலவற்றில் அசுரச் சூறாவளிகள் ஆண்டுதோறும் பருவ காலங்களில் தவறாமல் தாக்கிப் பேரளவில் சேதாரம் விளைவித்து வருகின்றன.  அமெரிக்காவில் 90% எண்ணிக்கைச் சூறாவளிகள் இந்த மாநிலப் பகுதிகளைத் தாக்கி, உயிரிழப்பும், பெரும் நிதிச் செலவும் கொடுத்து வருகின்றன. இந்த மாநிலங்களைச் “சூறாவளி அரங்கம்” [Tornado Alley] என்று காலநிலை நிபுணர் குறிப்பிடுகிறார்.

    1950 முதல் 2009 ஆண்டுவரைச் சூறாவளி அரங்கில், அசுரச் சுழற் புயல்கள் அடித்த பத்து முக்கிய அமெரிக்க மாநிலங்கள் :

    1.    டெக்ஸ்ஸ் :  8049 [உச்ச எண்ணிக்கை]
    2.    கான்ஸஸ் :  3809
    3.    ஓக்லஹோமா : 3443
    4.    ஃபிளாரிடா : 3032
    5.    நெப்ராஸ்கா : 2595
    6.    ஐயோவா : 2368
    7.    இல்லினாய்ஸ் : 2207
    8.    மிஸ்ஸௌரி : 2119
    9.    மிஸ்ஸிஸிப்பி : 1972
    10.   அலபாமா : 1844 [நீச்ச எண்ணிக்கை]

    2013 Tornado Wreck -4

    அமெரிக்க அசுரச் சூறாவளியின் கோரப் பண்பாடுகள்

    ஆண்டு தோறும் அமெரிக்காவை சுமார் 1200 சூறாவளிகள் தாக்கிப் பேரழிவுகளைத் தவறாது விளைவித்து வருகின்றன. இந்த சராசரி எண்ணிக்கை 1950 ஆம் ஆண்டிலிருந்துதான் கணிக்கப் பட்டுள்ளது.  பருவ காலச் சூறாவளிகள் ஒவ்வோர் ஆண்டிலும் மே – ஜூன் மாதங்களில் தவறாமல் அடித்துக் கோரச் சிதைவுகளை உண்டாக்குகின்றன.  பூமியின் சுழற்சியால், பெரும்பாலும் சூறாவளிகள் தென்மேற்குத் திசையில் துவங்கி, வடகிழக்கு நோக்கி வளைந்து அடிக்கின்றன.    பூமியின் சுழற்சியால், பெரும்பாலும் சூறாவளிகள் தென்மேற்குத் திசையில் துவங்கி, வடகிழக்கு நோக்கி வளைந்து அடிக்கின்றன.

    பல்வேறு வடிவில் தாக்கும் பெரும்பான்மையான சூறாவளிகள், பெருத்த குடை போன்ற இடிமின்னல் முகிலிலிருந்து கண்ணுக்குப் புலப்படும், சுருங்கிய புனல் வடிவான சுற்றுத் தூணின் [Condensation Funnel Column] கீழ் முனை பூமியைத் தொட்டுக் கொண்டு வருவதைக் காணலாம்.

    2013 Tornado Wreck -10

    Tornado damage at Moore City

    பொதுவாக அவற்றின் வேகம் 100 mph, அகலம் 250 அடி, நகர்ந்து செல்வது சொற்ப மைல்கள்தான்.  சில அசுரச் சூறாவளிகள் 300 mph வேகத்தைத் திரட்டிக் கொண்டு 2 மைல் அகலத்தில் விரிந்து, 50 அல்லது 60 மை தூரம் சென்று நாசம் விளைவிக்கும்.

    சூறாவளிகளின் ஆற்றலைக் குறிப்பிட பல்வேறு அளவு கோல்கள் பயன்படுகின்றன.  அவற்றில் ஒன்று ஃபூஜிடா [Fujita] அளவுகோல்.  அந்த அளவுகோல் சூறாவளியின் நாச விளைவுகளை ஒப்பிடுவது. சில நாடுகளின் அது மேன்மைப் படுத்தப் பட்டு [Enhanced Fujita Scale (EF)] என்று மாற்றப் பட்டுள்ளது.  அதாவது F Scale à EF Scale ஆகி யுள்ளது. அந்த முறையில் EF-1, EF-2, EF-3, EF-4, EF-5 என்று ஐந்து வித அடுக்கில் ஒப்பிடப் படுகிறது. EF-1 குன்றிய சேதாரம். EF-5 பேரளவு சேதாரம், மரணம்.

    1999-2013 Totnado Paths Comparision

    அமெரிக்காவில் தொடரும் அசுரச் சூறாவளி ஆராய்ச்சிகள் :

    காலநிலை விஞ்ஞானிகளுக்குப் பருவ காலச் சூறாவளிகள் எப்படி உண்டாகி அசுரத் தாண்டவம் ஆடி வருகின்றன என்பது இன்னும் ஓர் புதிராக இருந்து வருகிறது.  பூமியைச் சுற்றிக் கண்காணிக்கும் காலநிலைத் துணைக்கோள்கள் சூறாவளி, ஹர்ரிகேன் உருவாகி வருவதை நோக்கினும், சூறாவளி தோன்றுவதை எச்சரிக்க சுமார் அரை மணிநேரம்தான் கிடைக்கிறது.  மேலும் அது தாக்கப் போகும் பாதையைத் தீர்மானிப்பதும் கடினமே !  சூறாவளி ஆராய்ச்சிக்கு கடந்த 160 வருட புள்ளி விவரம் இருப்பினும், சென்ற 60 வருட எண்ணிக்கைதான் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது. இயற்கையின் கோரக் கொலை ஆயுதங்களில் அசுரச் சூறாவளிகளின் தோற்றம், போக்குப் பாதை, ஆற்றல் இவற்றை முன்னதாக அறிந்து எச்சரிக்கை செய்வது கால நிலை நிபுணருக்கு இன்னும் ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது !

     Tornado Alley

    [தொடரும்]

     

    ++++++++++++++++++

    தகவல்:

     Discovery Channel DVD Raging Planet [Tornado] July 19, 1999.

    1.  http://en.wikipedia.org/wiki/1999_Oklahoma_tornado_outbreak
    2.  http://www.spacedaily.com/reports/Satellites_See_Storm_System_that_Created_Oklahoma_Tornado_999.html
    3. http://www.weather.com/encyclopedia/tornado/form.html
    4. http://redgreenandblue.org/2013/05/21/tornadoes-storms-and-superstorms-yes-its-global-warming/
    5. http://en.wikipedia.org/wiki/List_of_1999_Oklahoma_tornado_outbreak_tornadoes
    6. http://en.wikipedia.org/wiki/Tornado
    7. http://environment.nationalgeographic.com/environment/natural-disasters/tornado-profile/
    8. http://www.nssl.noaa.gov/education/svrwx101/tornadoes/
    9. http://www.mysearchresults.com/search?c=2402&t=01&ei=utf-8&q=tornadoes&cat=images
    10. http://www.solarnavigator.net/tornadoes.htm
    11. http://en.wikipedia.org/wiki/Tornado_Alley
    12. http://www.spc.noaa.gov/faq/tornado/
    13. http://abcnews.go.com/blogs/headlines/2013/05/live-updates-of-tornado-damage-in-oklahoma/

    ++++++++++++++++++++++++++++++++++

    Attachments area
    Preview YouTube video Largest tornado ever recorded? 2.5 miles wide! Hallam, Nebraska 2004

    Largest tornado ever recorded? 2.5 miles wide! Hallam, Nebraska 2004

    Preview YouTube video April 17th, 2013 Tornado Near Lawton, Oklahoma

    April 17th, 2013 Tornado Near Lawton, Oklahoma
    Share
  • நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க மனிதச் சிங்கம், ஆலயங்கள் -3

     unnamed

    Ramesses II

    (The Great Sphinx & Abu Simbel Temples of Egypt)

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

     

    https://youtu.be/SiiET2wVK6Q

    (https://www.youtube.com/watch?v=eVwaftPSRd0)

     

    சிரம் தூக்கிப் படுத்துள்ள மனிதச் சிங்கம்

    ஆபூ சிம்பெல் ஆலய விக்கிரகம்

    நைல் நதி நாகரிகத் தோரணம்

    மூவாயிரம்  ஆண்டு தாண்டிய ஆலயம்

    சிற்பம், சித்திரம் நிற்கும் களஞ்சியம்.

    கற்பாறை குடைந்து கட்டிய அற்புதம்.

    +++++++++++++++

    ‘உலகின் அற்புதங்களைக் காண்பதற்குப் பிற தேசங்களுக்குப் பயணம் செய்ய உங்களின் நட்பு எனக்கு வேண்டுமே தவிர, சோம்பித் திரிந்து கொண்டு வீட்டுக்குள்ளே முடங்கி மங்கிப் போய் முதுமையில் தேய்ந்து போக மாட்டேன். ‘

    வில்லியம் ஷேக்ஸ்பியர் [In Two Gentlemen at Verona]

    எகிப்தில் உள்ள உலகப் பெரும் மனித முகச் சிங்கம்

    1798 ஆம் ஆண்டில் நெப்போலியனின் படை வீரர்கள் எகிப்தின் குறுக்கே சென்ற போது, மகாப் பெரும் மனிதத் தலைச் சிங்கம் மண்மூடி இருப்பது மீண்டும் கண்டுபிடிக்கப் பட்டது. புராண சிங்கத்தின் கட்டுமானக் காலம் கி.மு.2540 என்றும், அதனைக் கட்டியவர் கீஸாவில் இரண்டாவது பிரமிட் அமைத்த ஃபாரோ வேந்தரான காஃபிரேவாக [Pharao King Khafre] இருக்கலாம் என்றும் கருதப் படுகிறது! வெஸ்ட், ஸ்கோக் என்பவர் இருவரும் [John Anthony West & Robert Schock] சிங்க வடிவில் நீர் அரித்த தடங்களைக் [Water Erosion Marks] கண்டுபிடித்து ஸ்ஃபிங்ஸ் (7000-10,000) ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப் பட்டிருக்கலாம் என்று மதிப்பிடுகிறார்கள்! ஸ்ஃபிங்ஸ் என்று சொல்லும் போது, பலர் எகிப்தின் மகாப் பெரும் மனிதத் தலை சிங்கம் ஒன்றைத்தான் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் எகிப்தில் மற்ற சிறு சிறு மனிதத் தலைச் சிங்கங்கள் பிற கிரேக்க, ரஷ்யக் கலாச்சாரங்களிலும் அவற்றைப் போல் இருப்பதாக அறியப் படுகிறது. 1854 இல் நினெவே என்னும் இடத்தில் [Nineveh (Assyria)] ஓர் அரண்மனையின் வாசல் புறத்தைத் தோண்டிய போது, 5 அடி நீளம், 5 அடி உயரமுள்ள இரண்டு அலபாஸ்டர் ஸ்ஃபிங்ஸ்கள் கண்டுபிடிக்கப் பட்டன என்று லேயார்டு [British Archaeological Pioneer, Austen Henry Layard] என்பவர் எழுதுகிறார். அந்த அதிசயச் சிங்கங்களுக்கு இறக்கைகள் இருந்ததோடு, ஆபரண மகுடமும், தாடி யில்லாமையும் தெரிந்தன!

    எகிப்தின் பல்வேறு முகச் சிங்கங்கள்

    மூன்று வித முகங்கள் கொண்ட சிங்கங்கள் எகிப்தில் இருந்ததை நாம் இப்போது அறிகிறோம். 1. கிரிஸோஃபிங்ஸ் என்னும் ஆட்டுத் தலைச் சிங்கம் [Crisophinx (Lion Body with Ram Head)] 2. ஹையரோஸ்ஃபிங்ஸ் என்னும் கழுகுத் தலைச் சிங்கம் [Hierocosphinx (Lion Body with Hawk Head)] 3. ஆன்ரோஸ்ஃபிங்ஸ் என்னும் மனிதத் தலைச் சிங்கம் [Androsphinx (Lion Body with Human Head)]. கோயில் வாசல்களில் பாதுகாப்பு வடிவங்களாய் வரிசையாக அமைக்கப் பட்டிருக்கும் சிங்கங்கள் சாதாரணமானவை. வரிசையாக அமர்ந்திருக்கும் ஆட்டுத் தலைச் சிங்கச் சிலைகளை எகிப்தின் லக்ஸர், கார்நாக் [Luxor & Karnak in Egypt] என்னும் இடங்களில் காணலாம். பல்லாயிரம் ஆண்டுகள் மணற்புயலில் மூழ்கிப் போன பண்டைய சிங்கச் சிலைகளும் புதிதாய்க் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

    1994 ஆம் ஆண்டில் ஜான் வெஸ் எம்பரர் [Jean Yves Empereur] அலெக்ஸாண்டிரா துறைமுகத்தின் கடற்தளத்தைத் தோண்டி ஆராய்ந்ததில் ஃபாரோ காலத்திய கலங்கரைக் கோபுரத்தின் [Light House Tower] சிதைவுப் பகுதிகளைக் கண்டெடுத்தார். அத்துடன் 26 ஸ்ஃபிங்ஸ் சிற்பங்களைப் [From: 12 Dynasty Sesostris III (B.C.1991-1786) To 26 Dynasty Psamtik III (B.C.525)] புதைகடலில் கண்டெடுத்தார். ஸ்ஃபிங்ஸ் என்றால் கிரேக்க மொழியில் ‘கழுத்தை முறி ‘ என்று அர்த்தம் கொடுக்கும். அகப்படும் விலங்குகளின் கழுத்தைத் திருகிக் கொல்லும் சிங்கத்தைக் குறிப்பிடவே, கிரேக்கர் அவ்விதம் பெயரிட்டுஅழைத்தனர்.

    பூத மனிதச் சிங்கத்தின் வயதும், வடிவமும்

    கெய்ரோவுக்கு ஆறு மைல் மேற்கே உள்ள எகிப்தின் கீஸா பீட பூமியில் எல்லாவற்றுக்கும் பெரிய மனித முகச் சிங்கம் கட்டப் பட்டிருக்கிறது. அது ஃபாரோ வேந்தர்களின் பண்டைய தலைநகரான மெம்ஃபிஸ் [Memphis] பகுதியிலே கிழக்கு நோக்கி உள்ளது. அங்குதான் கூஃபு, காஃபிரே, மென்கெளரா [Khufu, Khafre, Menkaura] எனப்படும் முப்பெரும் பிரமிட்கள் நிறுவகமாகி யுள்ளன. கீஸாதான் எகிப்தின் பண்பாட்டுக் கலாச்சார நாகரீகம் செழித்த பகுதியாகக் கருதப் படுகிறது. வேந்தருக்குரிய பெரிய பிரமிட்களின் அருகே அவரது பட்டதரசிகளின் சிறிய பிரமிட்களும் எழுப்பப் பட்டிருக்கின்றன.

    மகாப் பெரிய ஸ்ஃபிங்ஸ் உடல் ஆண் சிங்கத்தைப் போன்றும், சிரம் மனித முகத்தைப் பெற்றும், 241 அடி நீளம், 66 அடி உயரமும் கொண்டு பிரம்மாண்டமான தோற்றமுடன் படுத்திருக்கிறது. கீஸா பீட பூமியைத் தோண்டி, இயற்கையாக உள்ளமைந்த மென்மையான சுண்ணக் கல்லில் [Lime Stone] சிற்பமாய்ச் செதுக்கப் பட்டது. சிங்கத்தின் மனிதத் தலை மீது ஒரு காலத்தில் ‘நாக மகுடம் ‘ [Uraeus (Rearing Cobra Headpiece)] ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. கிளியோபாத்ராவின் கிரீடத்தில் உள்ளது போல் இருந்த தலை தூக்கிய சிங்கத்தின் நாகம், தீய சக்திகளிலிருந்து நாட்டைக் காப்பதற்கு வைக்கப் பட்டிருந்ததாகக் கருதப் படுகிறது. சிங்கத்தின் முன்பாக நீட்டிய கால்களுக்கிடையில் கி.மு.(1400-1390) ஆண்டில் ஆண்டு வந்த துத்மோஸ் [Thutmose IV] வேந்தனின் கல்வெட்டுத் தட்டு [Granite Stela] ஒன்று நிறுத்தப் பட்டுள்ளது. மேலும் கல்வெட்டுக்கு முன்பாக கி.மு.(1279-1213) இல் ஆண்ட வேந்தன் ராமிஸிஸ் [Rameses II] காலத்துக் கோயிற் பீடம் ஒன்றும் வரலாற்றுச் சின்னமாய் இருக்கிறது.

    கி.மு.2540 இல் ஃபாரோ மன்னர்களின் பரம்பரையான காஃபிரி வேந்தன் கீஸாவில் தனக்குரிய பிரமிடைக் கட்டியதோடு அருகே, பிரமிக்கத் தக்க அந்த மனிதச் சிங்கத்தையும் அமைத்தான் என்று எகிப்திய வரலாறு ஒன்று கூறுகிறது. பிரிட்டாஷ் பூதளவாதி அண்டனி வெஸ்ட் எகிப்தின் பல நூற்றாண்டு காலநிலைச் சீர்போக்குகளை ஆய்ந்து, பாலைவனத்தில் அடிக்கும் மணற்புயலால் [Sand Storm] ஏற்படாது, நீர் அரிப்பால் [Water Erosion] மனிதத் தலைச் சிங்கத்தின் வடிவம் சீர்குலைந்து போனது என்று குறிப்பிடுகிறார். அக்கூற்றைப் பூதளவாதி ராபர்ட் ஸ்கோக்கும் சரியென்றே ஒப்புக் கொள்கிறார். மேலும் வெஸ்ட், ஸ்கோக் இருவரும் பூத வடிவான ஸ்ஃபிங்ஸ் (7000-10,000) ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்னும் வேறுபட்ட ஒரு கருத்தையும் குறிப்பிட்டிருகிறார்கள்!

    பிரம்மாண்டமான ஆபூ சிம்பள் கற்குகை ஆலயங்கள்

    5000 ஆண்டுகளுக்கு முன்பாக இயற்கையான பாறைக் குன்றுகளைக் குடைந்து பிரமிக்கத் தக்க முறையில் பேரெழிலுடன் செதுக்கிய அபூ சிம்பள் ஆலயங்கள் [Abu Simbel Temples] போன்று உலகிலே வேறு எந்த நாட்டிலும் காண முடியாது! அப்பெரும் இரண்டு ஆலயங்களை ஃபாரோ வேந்தன் ராமெஸிஸ் [Ramesses II] கி.மு.(1279-1213) ஆண்டுகளில் தனது பராக்கிரமத்தையும், தெய்வீக உணர்ச்சியையும் எடுத்துக் காட்ட ரிஹாராக்தே [Reharakhte] ஞாபகமாகவும், மனைவி நெஃபிர்டாரி [Nefertari] நினைவாகவும் அமைத்ததாக அறியப்படுகிறது. 1813 ஆம் ஆண்டில் எகிப்தின் நைல் நதி நாகரீகத்தைக் காண வந்த ஜே.எல் பர்காரெட் [J.L. Burckhardt] என்பவர் நைல் நதியைக் கடந்து குன்றுகளைப் பார்வை யிட்ட போது, மணல் மூடிய அழகிய ஓர் ஆலயத்தை நவீன சூடான் எல்லைப் பகுதியில் கண்டுபிடித்தார். நைல் நதியில் அமைக்கப் பட்டுள்ள உலகப் பெரும் அணைகளில் ஒன்றான அஸ்வான் உயர்ந்த பேரணையிலிருந்து சுமார் 170 மைல் தூரத்தில் வரலாற்றில் புகழ் பெற்ற அப்பெரும் இரண்டு ஆலயங்கள் கட்டப் பட்டிருகின்றன.

    ராமெஸ்ஸிஸ் வேந்தர் தனக்காகக் கட்டிய முதல் ஆபூ சிம்பள் ஆலயத்தின் வாசலில் 67 அடி உயரமுள்ள நான்கு பூத வடிவான சிற்பச்சிலை மன்னர்கள் வீற்றிருக்கும் கம்பீரமான காட்சி காண்போரை பெரு வியப்பில் தள்ளிவிடும்! ஆலய முகப்பில் சிற்பச் சிலைகள் வீற்றிருக்கும் தளப்பகுதி மட்டும் 120 அடி அகலமும், 100 அடி உயரமும் கொண்டது! வேந்தரின் இரண்டு கற்சிலைகள் வலது புறமும், அவற்றைப் போல் இரண்டு கற்சிலைகள் இடது புறமும் பிரம்மாண்டமாக அமர்ந்துள்ளன. நான்கு பூதச் சிலைகளில் இடப்புறத்தில் உள்ள ஒன்று மட்டும் பூகம்பத்தால் உடைந்து போனதாக அறியப் படுகிறது! அந்த ஆலயம் கிழக்கு நோக்கி நிற்கிறது. சூரியக் கடவுளின் சிற்பம் தலை வாயிலின் மேலே உயரத்தில் செதுக்கப் பட்டிருக்கிறது. கோயில் நேரமைப்பு [Temple Alignment] முதலில் துள்ளயமாக நகர்த்தப் பட்டு, ஆண்டுக்கு இருமுறை பரிதி கடக்கும் போது, அதன் ஒளிக்கதிர்கள் உள்ளிருக்கும் சன்னிதியில் இருக்கும் தெய்வங்கள் மீது நேராக விழும்படி நூதனப் பொறியியற் திறமையுடன் கட்டப் பட்டுள்ளது!

    நவீன உலகில் நைல் நதி தீரத்தில் அஸ்வான் உயரப் பேரணை [Aswan High Dam] கட்டப்பட்ட சமயத்தில் (1960-1970) நாஸர் ஏரியில் [Lake Nasser] நீர் மட்டம் உயர்ந்து, உலகப் புகழ்பெற்ற அவ்விரு புராதனக் கோயில்களையும் நிரந்தரமாய் மூழ்க்கிவிடப் பயமுறுத்தியது! உடனே எகிப்தின் அரசாங்கம் ஆலயத்தை மாற்றி அமைக்க ஐக்கிய நாடுகளின் விஞ்ஞானக் கலாச்சாரக் கல்விக் குழுவின் [UNESCO (United Nation Educational, Scientific, Cultural Organization)] உதவியை நாடியது. உதவியும் கிடைத்து (1964-1968) ஆண்டுகளில், இரண்டு கோயில்களும் பிரித்து நீக்கப்பட்டு, நாஸர் ஏரிக்கு அப்பால் 200 அடி [60 மீடர்] உயரத்தில் இருக்கும் மணற் பாறைக் குன்றின் மீது அமைக்கப்பட்டு, வரலாற்றிலே மகத்தான மீள்படைப்பு நிகழ்ச்சி நடத்திக் காட்டப் பட்டது!

    ஆபூ சிம்பளின் அடுத்த ஆலயம் ஹாதர் [Hathor] என்னும் இடத்தில் உள்ளது. அதை ராமெஸிஸ் வேந்தன் காதலிசைத் தேவதைக்குச் சமர்ப்பணம் செய்து, தனது மனைவி நெஃபர்டாரி நினைவிற்குக் கட்டியதாக அறியப்படுகிறது. காதலிசை ஆலயத்தின் முன்பு 33 அடி உயரத்தில் ஆறு தூண்களில் பிரமிக்கத் தக்க ஆறு சிற்பச் சிலைகள் செதுக்கப்பட்டு கம்பீரமாக நிற்கின்றன! அப்பெரும் சிற்பங்களின் கீழே அவரது குழந்தைகளின் வடிவச் சிலைகளும் அமைக்கப் பட்டுள்ளன. அக்கோயில்கள் சூடானின் எல்லையில் இருப்பதால் பல நூற்றாண்டுகள் பலரும் அறியாத வண்ணம் 1813 ஆண்டுவரை மறைந்தே இருந்து விட்டன. 1817 இல் இரண்டு ஆலயங்களையும் இத்தாலிய எகிப்திய புதைச் சின்னவாதி [Egyptologist] கியோவன்னி பாட்டிஸ்டா பெல்ஸானி [Giovanni Batissta Belzoni] என்பரால் துருவி ஆராயப் பட்டு ஃபாரோ அரசர், அரசிகளின் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டன. சிற்பங்கள், சிலைகள், சித்திரங்கள் சீராக்கப் பட்டு, உலகிலே மிக உன்னத நாகரீகக் களஞ்சியங்களாய்ப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன!

    (தொடரும்)

    1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

    2. Atlas of the World History By: Harper Collins (1998)

    3. The Ancient World, Quest for the Past (1984)

    4. How in The World By: Reader ‘s Digest (1990)

    5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

    6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

    7. The History of Art for Young People By: H.W. Janson.

    8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

    9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)

    10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]

    11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)

    12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)

    13.  http://www.history.com/topics/ancient-history/ancient-egypt/videos/ramses-temple-at-abu-simbel

    14.  http://www.ancient-egypt-online.com/abu-simbel.html

    15.  https://en.wikipedia.org/wiki/Abu_Simbel_temples  [March 3, 2016]

    *******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (March 22, 2016) (R-1)

    Attachments area
    Preview YouTube video Egypt – Luxor, Abu Simbel, Aswan in HD

    Egypt – Luxor, Abu Simbel, Aswan in HD

    Preview YouTube video The Revelation of the Pyramids / true english version (+русский)

    The Revelation of the Pyramids / true english version (+русский)
    Share
  • வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கம்

    சி. ஜெயபாரதன்.

    welland-canal-seaway

    [St Lawrence Seaway Connecting The Great Lakes to Atlantic Sea]

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    +++++++++++++++++

    https://youtu.be/aTRIqCgSxYQ

    https://youtu.be/9HNTxtWkxUc

    https://youtu.be/heRLwTPpSMc

    https://youtu.be/EfVzOz1nqnE

    +++++++++++++

    எங்கெங்கு காணினும் ஏரிகளாம்! திசை

    எப்புறம் நோக்கினும் ஆறுகளாம்!

    கப்பலை ஏற்றி இறக்கும் நீர்த் தடாகமாம்!

    ஒப்பிலா ஏரிகள் இணைக்கும் கடல் மார்க்கம்!

    [வட அமெரிக்கக் கண்டம்]

    +++++++++++++

    St Lawrence Seaway Locks -1

    உலகிலே நீளமான உள்நாட்டுக் கடல் மார்க்கம்!

    பூகோளத்தின் ஏறக்குறைய கால் பகுதியில் பூமத்திய ரேகைக்கு மேலே வடதுருவம் வரைப் பரவும் புதிய பூதக் கண்டமான வட அமெரிக்கா நீர் வளமும், நிலவளமும் செழித்து, நீண்ட மலை வளமும் மிக்கது! முப்பெரும் குடியாட்சித் தேசங்களான கனடா, அமெரிக்கக் கூட்டு நாடுகள், மெக்ஸிகோ மற்றும் சில சிறு நாடுகளையும் கொண்டது. முப்புறம் கடல்கள் சூழ்ந்து வெப்பக் காற்றும், குளிர்காற்றும் அடிக்கடி மோதிக் காலநிலைகள் மாறி, ஹர்ரிகேனும் சூறைப் புயலும் இன்னல் தரும் ஒப்பற்ற கண்டம் அது! மேற்றிசை ஓரத்தில் ராக்கி மலைத்தொடர் மலைப் பாம்புபோல் பல்லாயிரம் மைல் நீளமாய்ப் படுத்திருக்கிறது! 14,000 ஆயிரங்களுக்கு முன்பு வட அமெரிக்காவின் வடக்குப் பகுதிகளில் ‘பனிப்பாறை மந்தைகள் ‘ [Glaciers] பரவி, பனிகட்டி ஈட்டிகள் பளுவாலும் அழுத்தத்தாலும் கடைந்து ஆயிரக் கணக்கான குட்டை, குளங்கள், ஏரிகள் அங்கே தோன்றின! அப்போது உண்டான ஆழமான பூத ஏரிகள்தான் ஐம்பெரும் ஏரிகள் [The Great Lakes] எனப்படும் சுப்பீரியர், மிச்சிகன், ஹூரான், ஈரி, அண்டாரியோ [Superior, Michigan, Huron, Erie, Ontario] ஆகிய ஏரிகள். பனி மலைகளும், பனிப்பாறை மந்தைகளும் உருகி மிஸ்ஸிசிப்பி, மிஸ்ஸோரி, கொலராடோ, ஆர்கன்ஸாஸ் நதிகள் அமெரிக்காவிலும், செயின்ட் லாரென்ஸ், நெல்ஸன், சர்ச்சில், மெக்கென்ஸி, பிரேஸர் நதிகள் கனடாவிலும் தோன்றின!

    Soo Locks

    St Lawrence Seaway Locks -5

    வட அமெரிக்காவின் நடுவில் கனடா, அமெரிக்காவுக்குப் பொதுவான ஐம்பெரும் ஏரிகள் இணைந்து, செயின்ட் லாரென்ஸ் நதியில் கலந்து, ஆற்றோட்டம் 2350 மைல் தூரம் கடந்து அட்லாண்டிக் கடலை அடைகிறது! வரை படத்தில் மட்டமாகத் தெரியும் சுப்பீரியர், மிச்சிகன், ஹூரான், ஈரி, அண்டாரியோ என்று அழைக்கப்படும் ஏரிகள் ஒவ்வொன்றின் நீர் மட்டம் கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரமானது! அவற்றைச் சேர்க்கும் ஆறுகள் சில இடங்களில் நயாகரா நீர்வீழ்ச்சி போல் விழுந்து மட்டத்தைக் குறைத்துக் கடலை நோக்கி ஓடிச் சங்கமம் ஆகின்றன. ஐம்பெரும் குடிநீர் ஏரிகள் இயற்கையாகவே நதிகளால் இணைக்கப் பட்டு அமெரிக்கா, கனடாவில் உள்ள எட்டு மாநிலங்களின் துறைமுக நகரங்களைத் தொட்டு ஐரோப்பிய, ஆசிய நாடுகளுடன் வணிகப் பண்டங்கள் பகிர்ந்து கொள்ள கப்பல் போக்குவரத்துக்கு வசதியாய் அமைந்துள்ளன.

    St Lawrence Seaway Locks -4

    அமெரிக்கக் கனேடிய கூட்டுப் பணியாக 470 மில்லியன் டாலர் [1959 நாணய மதிப்பு] செலவில் திட்டமான செயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway] 1954 இல் கட்ட ஆரம்பிக்கப் பட்டு 1959 இல் முடிந்து கப்பல்கள் செல்லக் கால்வாய் திறக்கப் பட்டது. ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் டிசம்பர் வரைதான் செயின்ட் லாரென்ஸ் கடல்வீதியில் கப்பல் போக்குவரத்துக்கள் அனுமதிக்கப் படும். குளிர்காலத்தில் ஏரி நீர்ப் பனியாக உறைந்து, பனிக்கட்டிகள் மிதந்து, ஆற்றோட்டம் தணிந்து சீரான கப்பல் பயணங்கள் தடைப்படுகின்றன. கடந்த [1959-1999] 40 ஆண்டுகளாக 250,000 கப்பல்கள் 2 பில்லியன் டன்னுக்கு மேற்பட்ட இரும்பு, நிலக்கரி, தானியம், பெட்ரோலியம் போன்ற பளு பாரங்களைக் கடல்வீதி வழியாகக் கொண்டு சென்றுள்ளன. அத்துடன் செயின்ட் லாரென்ஸ் கடல்வீதிப் போக்குவரத்து 40,000 பேருக்குப் பிழைப்பு வேலைகள் அளித்தும், ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர் வருவாயைப் பெருக்கியும் வந்திருக்கிறது.

    St Lawrence Seaway Connecting Cities

    Locks Locations

    உலகிலே பெரிய ஐம்பெரும் குடிநீர்ப் பூத ஏரிகள்!

    ஐம்பெரும் ஏரிகளின் நீர்ப்பரப்பு உலகிலே மிகப் பெரிய குடிநீர்ப் பகுதியாகக் கருதப்படுகிறது! அவற்றின் பரப்பளவை ஒப்பு நோக்கினால், பிரான்ஸ் நாட்டை விடப் பெரிதாக இருக்கும் என்று மதிப்பிடப் படுகிறது! கனடாவில் உள்ள அண்டாரியோ மாநிலத்தில் மட்டும் சுமார் 250,000 ஏரிகள் உள்ளன வென்று அறியப்படுகிறது! ஐந்து ஏரிகளின் நீர்க் கொள்ளளவைக் கனடாவின் முழுப் பரப்பளவில் கொட்டினால், 12 அடி உயரம் நிரப்பும் என்று கணிக்கப் படுகிறது! ஐந்திலும் மிகப் பெரிதான சுப்பீரியர் ஏரியில் மட்டும் சுமார் 200 ஆறுகள் ஆண்டு முழுவதும் நீரைக் கொட்டிக் கொண்டே இருக்கின்றன! ஏரிகள் ஐந்தைச் சுற்றிலும் எந்த விதப் பெரும் மலைகளின் நீரோட்டம் இன்றிக் காலநிலை மழையாலும், குளிர்காலப் பனிப்பூ [Snow] வீழ்ச்சிகளாலும், ஏரிகளில் நீர் மட்டம் சதா காலமும் நிரம்பி வருகிறது! புயல் காற்று வீசும் சமயங்களில் ஏரியின் அலைகள் கடலைப் போன்று 15 அடி முதல் 25 அடி உயரத்தில் எழும்பிக் கரையை நோக்கி அடிக்கின்றன! பூமிக்கு மேல் 600 மைல் உயரத்தில் சுற்றும் ஒரு துணைக்கோள் [Satellite] ஐம்பெரும் ஏரிகளின் முழுப் பரப்புகளையும் படமெடுக்க முடியும்!

    Map with Locks

    உலகிலே பெரிய முதல் ஏரியான சுப்பீரியர் கடல் மட்டத்திலிருந்து 600 அடி உயரத்தில் உள்ளது. அடுத்து மிச்சிகன் ஏரி 577 அடி, ஹூரான் 577 அடி, ஈரி 569 அடி, அண்டாரியோ 243 அடி அளவுகளில் நீர் மட்ட உயரங்களைக் கொண்டுள்ளன. சுப்பீரியர் ஏரியின் நீளம்: 350 மைல்! அகலம்: 160 மைல்! மிச்சிகன் ஏரியின் நீளம்: 307 மைல்! அகலம்: 118 மைல்! ஹூரான் ஏரியின் நீளம்: 206 மைல்! அகலம்: 183 மைல்! ஈரி ஏரியின் நீளம்: 241 மைல்! அகலம்: 57 மைல்! அண்டாரியோ ஏரியின் நீளம்: 193 மைல்! அகலம்: 53 மைல்! 483 அடி தாழ்ந்த சுப்பீரியர் ஏரியே எல்லாவற்றிலும் ஆழமானது! ஆழம் குன்றிய ஈரி 62 அடி தாழ்ந்தது. கொள்ளளவு 2900 கியூபிக் மைல் கொண்ட சுப்பீரியர் ஏரியே ஐந்து ஏரிகளிலும் அதிகமான கொள்ளளவு நீர் வெள்ளத்தைக் கொண்டது!

    Levels in the Five Great Lakes

    செயின்ட் லாரென்ஸ் கடல் வீதியின் ஆரம்பமும் முடிவும்

    சுப்பீரியர் ஏரியிலிருந்து நீரோட்டம் செயின்ட் மேரி நதி மூலமாக ஹூரான் ஏரியில் கலக்கிறது. இரண்டு ஏரிகளுக்கும் மிடையே நீர்மட்டங்கள் 23 அடி வித்தியாசம் இருப்பதால், அவற்றிடையே கப்பல் பயணம் செய்ய நீரடைப்புத் தொட்டிகள் [Hydraulic Locks] அமைக்கப் பட்டுள்ளன. மிச்சிகன் ஏரியும், ஹூரான் ஏரியும் அகண்ட ஆழமான ‘மாக்கிநாக் நீர்ச்சந்தியில் ‘ [Mackinac Straits] இணைவதால், இரண்டின் நீர்மட்டங்களும் ஒன்றாகி விடுகின்றன. மிச்சிகன்-ஹூரான் ஏரிகளின் நீரோட்டம் பிறகு செயின்ட் கிளேர் ஆற்றின் [St. Clair River] வழியாக செயின்ட் கிளேர் ஏரியை அடைந்து, அடுத்து டெட்ராய்ட் ஆற்றில் [Detroit River] ஓடி ஈரியில் சங்கமம் ஆகிறது. ஹூரான், ஈரி ஆகிய இரண்டு ஏரிகளின் நீர்மட்ட வேறுபாடு 8 அடியாக இருப்பதால் நீரடைப்புத் தொட்டி அவற்றிடையே தேவை யில்லை.

    Welland Canal, Niagara Falls, Canada

    Welland Canal Locks

    ஆனால் ஈரி ஏரிக்கும், அண்டாரியோ ஏரிக்கும் உள்ள நீர்மட்ட வேறுபாடு 326 அடி எல்லாவற்றிலும் மிகையானது! அந்த ஏரிகளின் இடையேதான் உலகப் பெயர் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி விழுந்து, நயாகரா ஆற்றில் ஓடி அண்டாரியோ ஏரியில் சேர்கிறது! பயங்கரமான அந்த உயரத்தைக் கடக்கத் தனியாக ‘வெல்லண்டு கால்வாய் ‘ [Welland Canal] நிலப்பகுதியில் வெட்டப்பட்டு இரண்டு ஏரிகளையும் இணைக்கிறது! வெல்லண்டு கால்வாயில் கப்பல்கள் ஈரியிலிருந்து, அண்டாரியோ ஏரிக்கு இறங்கப் படிப்படியாக எட்டு நீரடைப்புத் தொட்டிகள் கட்டப் பட்டுள்ளன! ஈரி ஏரியின் நீரோட்டத்தில் 5% அளவே தனித்து வெல்லண்டு கால்வாய் வழியாகப் புகுத்தப் படுகிறது. அண்டாரியோ ஏரியிலிருந்து நீரோட்டம் செயின்ட் லாரென்ஸ் ஆற்றின் வழியாக ஓடி, அட்லாண்டிக் கடலில் கலக்கிறது. அண்டாரியோ ஏரியின் நீர்மட்டம் 243 அடி கடல் மட்டத்தை விட உயர்ந்திருப்பதால், மான்டிரியால் குயூபெக் பகுதியில் [Montreal Quebec Region] ஏழு நீரடைப்புத் தொட்டிகள் கட்டப் பட்டுள்ளன.

    பூத ஏரிகளின் நீர்க் கொள்ளளவு ஏராளமாகச் சேமிக்கப் பட்டிருப்பதாலும், செயின்ட் லாரென்ஸ் நதியில் குறைந்த அளவு நீரோட்டம் 1%, கூடிய அளவு நீரோட்டம் 2.3% கொள்ளளவாக இருப்பதாலும், ஏரிகள் மழை காலத்திலும், பனியுருகும் வசந்த காலத்திலும் மிகையாகச் சேரும் நீர்மட்டத்தை சமாளித்து, செயின்ட் லாரென்ஸ் கடல்வீதியில் சீரான முறையில் சதா காலமும் நீரோட்டம் நிகழ்ந்து வருகிறது! குளிர் காலத்தில் ஏரியின் மேற்தளம் உறைந்து பனி மூடி யிருந்தாலும், பொதுவாக நீரோட்டம் அடித்தளத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் வருகிறது!

    Welland Canal Locks

    வெல்லண்டு நீர்மார்க்க இணைப்பு

    செயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கக் கால்வாயின் அமைப்பு

    செயின்ட் லாரென்ஸ் கடல்வீதியின் நெடுவே சுப்பீரியர் ஏரியிலிருந்து, கடலை அடைவது வரை மொத்தம் 19 நீரடைப்புத் தடாகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. சுப்பீரியர் ஏரி ஹூரான் ஏரியுடன் கப்பல் போக்கிற்கு ஏதுவாகச் சேர்க்க, சூஸென் மேரியில் [Sault Ste. Marie] உள்ள செயின்ட் மேரி நதியில் 23 அடி இறக்கும் ஒரே அனுப்புப் போக்கான, நான்கு இணைத் தொட்டிகள் [Four Parallel Locks (One Transit)] கட்டப் பட்டுள்ளன. சூ நீரடைப்பு தடாகங்கள் [Soo Locks] எனப் பெயர் பெறும் அவை நான்கும் அமெரிக்காவுக்குச் சொந்தமானவை. அடுத்து ஈரி, அண்டாரியோ ஏரிகளுக்கு இடைப் பட்ட பீடத்தில் கட்டப் பட்டுள்ள, நயாகரா நீர்வீழ்ச்சியைச் சுற்றித் தவிர்க்கும் ‘வெல்லண்டு கால்வாய் ‘ [Welland Canal] எட்டு நீரடைப்புத் தடாகங்கள் அடுத்தடுத்து அமைக்கப் பட்டுக், கப்பல் 326 அடி தணிந்து செல்ல வசதி செய்யப் பட்டுள்ளது.

    St Lambert Lock

    உலகப் புகழ் வாய்ந்த நயாகரா நீர்வீழ்ச்சி ஈரி ஏரியிலிருந்து, சுமார் 175 அடி விழுந்து நயாகரா ஆற்றில் பல மைல் ஓடி அண்டாரியோ ஏரியில் கலக்கிறது! வெல்லண்டு கால்வாயும், எட்டுப் புனல் தொட்டிகளும் கனடாவுக்குச் சொந்தமானவை. அவற்றை மேற்பார்ப்பதும், பராமரிப்பு செய்வதும் கனடாவின் பொறுப்பு. இறுதி நிலையில் அண்டாரியோ விலிருந்து கப்பல் அட்லாண்டிக் கடலை அடைய 243 அடி இறக்கப் படவேண்டும். குபெக்கில் உள்ள மான்ட்ரியால் [Montreal, Quebec] நகருக்கு அருகே, அமெரிக்காவுக்குச் சொந்தமான இரண்டு, கனடாவுக்குச் சொந்தமான ஐந்து நீரடைப்புத் தடாகங்கள் செயின்ட் லாரென்ஸ் நதியில் அமைக்கப் பட்டுள்ளன.

    Ice Breaker

    கப்பல்கள் சுப்பீரியர் ஏரியின் 600 அடி நீர்மட்டத்திலிருந்து மிச்சிகன், ஹூரான் ஏரிகளின் நீர்மட்டத்திற்கு [577 அடி] இறங்க நீரடைப்புத் தொட்டிகள் [Hydraulic Locks] கட்டப் பட்டுள்ளன. ஈரி ஏரியின் 569 அடி மட்டத்திலிருந்து அண்டாரியோ நீர்மட்டம் 243 அடி அளவுக்கு இறங்க ‘வெல்லண்டு கால்வாய் ‘ [Welland Canal] வெட்டப்பட்டு எட்டு நீரடைப்புத் தொட்டிகள் அமைக்கப் பட்டுள்ளன. நயாகார நீர்வீழ்ச்சி ஈரி எரியிலிருந்து, அண்டாரியோ ஏரிக்கு இயற்கையாக விழுந்து நயாகார ஆறாக ஓடி இன்னும் 326 அடியைக் குறைகிறது. அடுத்து ஐந்து ஏரிகளின் நீர் செயின்ட் லாரென்ஸ் ஆறாக இன்னும் ஏழு நீரடைப்புத் தொட்டிகளின் வழியாக ஓடிக் கடலில் சங்கமமாகிறது. கனடாவின் கார்ன்வாலில் (1900-1995) ஆண்டுப் பதிவுகளின் அறிக்கைப்படி செயின்ட் லாரென்ஸ் நதியில் சராசரி நீர்ப்போக்கின் கொள்ளளவு வினாடிக்கு 244,000 குயூபிக் அடி [6910 cubic meter/sec]! இந்த நீரோட்ட அளவு ஏரிகளின் மொத்தக் கொள்ளளவில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானதாக அறியப்படுகிறது.

    Eisenhover Locks

    பத்தொன்பது நீரடைப்புத் தடாகங்கள் மூலமாக 600 அடி நீர்மட்டம் தாழ்ந்து, 2350 மைல் தூரப் பயணம் சென்று, கப்பல் போக்குவரத்தில் உள்நாட்டிலிருந்து அட்லாண்டிக் கடல்வரை செல்லும் செயின்ட் லாரென்ஸ் கடல்வீதி உலகிலே மகத்தான ஒரு சாதனையாகக் கருதப் படுகிறது! அவற்றின் மூலம் 740 அடி நீளம், 78 அடி அகலக் கப்பல்கள் செல்ல முடியும்! நீர்மட்டத்துக்கு மேல் இருக்கும் கப்பலின் உயரம் 116.5 அடியைத் தாண்டக் கூடாது. நீரடைப்புத் தொட்டிகளின் அளவு: நீளம் 859 அடி, அகலம் 80 அடி, ஆழம் 30 அடி. ஒரு தடாகத்தைக் கடக்க சுமார் 45 நிமிடங்கள் ஆகின்றன! தொட்டியை நிரப்பிக் கப்பலைத் தூக்க 24 மில்லியன் காலன் நீர் தேவைப்படும். தடாகத்தை நிரப்பவோ, குறைக்கவோ 10 நிமிடங்களே எடுக்கின்றது!

    Three Locks in Seried -5A

    சூஸென் மேரியில் உள்ள அமெரிக்காவின் சூ நீரடைப்பு தடாகங்கள்

    1852 இல் அமெரிக்கன் காங்கிரஸ் முடிவு செய்து சூப்பீரியர் ஏரியில் கட்டத் திட்டமிடப் பட்ட நீரடைப்புத் தடாகங்கள் அவை. 1969 இல் அவை புதுப்பிக்கப் பட்டு 23 அடித் தாழும் நீர்ப்படித் தொட்டிகள் இணையாக நான்கு ஒருபோக்கு வழியாகக் [Four Parallel Locks (One Transit)] கட்டப் பட்டவை. மேன்மைப் படுத்தப் பட்ட அவற்றின் வழியாக அமெரிக்காவின் பெருங் கப்பல்கள் [1000 அடி நீளம்] எளிதாகக் கடந்து செல்ல முடியும்! நீரடைப்புத் தொட்டி ஒன்றின் நீளம்: 1200 அடி! அகலம்: 110 அடி! அப்பெருங் கப்பல் ஒன்று ஒரே சமயத்தில் 60,000 டன் பளுப் பாரத்தைக் கொண்டு செல்ல முடியும்! தற்போது அவற்றின் வழியாக ஓராண்டுக்கு வேறுபாடான அளவுள்ள சுமார் 10,000 கப்பல்கள் ஏறி இறங்கிக் கடக்கின்றன!

    ஆனால் 1932 இல் அமைக்கப் பட்ட வெல்லண்டு கால்வாய் வழியாக 1000 அடி நீளக் கப்பல்கள் புகுந்து செல்ல முடியாது! உச்ச அளவு 740 அடி நீளம், 78 அடி அகலக் கப்பல்களே எட்டு நீரடைப்புத் தொட்டிகள் மூலம் போய் வர முடியும். அச்சிறிய கப்பல்களின் பளு சுமக்கும் ஆற்றல் உச்ச அளவு 32,000 டன்!

    175 ஆண்டுகளாக அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கப்பல் வணிகத்துறை வளர்ச்சிக்கு, வெல்லண்டு கால்வாய் பெரும்பணி ஆற்றியுள்ளது.

    வெல்லண்டு கால்வாய் மாற்றங்களும் நீர்மட்டப் புனல் தொட்டிகளும்

    கப்பலை 326 அடி நீர்மட்டம் இறக்கும் எட்டுத் தடாகத் தொட்டிகளை உடைய ‘வெல்லண்டு கால்வாய் ‘ இருபதாம் நூற்றாண்டின் மகத்தானப் பொறியியல் சாதனைகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது! 1996 இல் வெல்லண்டுக் கால்வாய் மூலம் கடல் வழியாகச் சென்ற கப்பல்கள்: 900. அதே சமயம் உள்நாட்டுக்குள் போய் வந்தவை: 2400 கப்பல்கள். கால்வாயின் நீளம்: 26 மைல்கள். ஒவ்வொரு தடாகப் புனலும் 46.5 அடி உயரம் கப்பலைத் தூக்கவோ, தணிக்கவோ ஆற்றல் உடையது. கால்வாயின் ஆழம் குறைந்தது 27 அடி இருக்கும்படித் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகிறது.

    Superior-Huron Locks

    வெல்லண்டு கால்வாயின் பிதா எனப்படும் வில்லியம் ஹாமில்டன் மெர்ரிட் [William Hamilton Merritt] 1824 இல் 8 மில்லியன் டாலர் செலவில் 40 நீரடைப்பு மரத்தொட்டிகளை முதலில் திட்டமிட்டுத் துவங்கி 1829 இல் கட்டி முடித்தார். 1833 இல் பல முறைகளில் கால்வாய் திருத்தமானது. பிறகு இரண்டாவது வெல்லண்டு கால்வாய் 27 தடாகங்களுடன் 1842 இல் அமைக்கப் பட்டது. அடுத்து மூன்றாவது கால்வாய் 1887 இல் 26 தடாகத் தொட்டிகளுடன் கற்களால் கட்டப்பட்டுத் தயாரிக்கப் பட்டது. தற்போதைய நான்காவது மாடல் வெல்லண்டு கால்வாய் 1913-1932 ஆண்டுகளில் முடிக்கப் பட்டது! 870 அடி நீளமும், 80 அடி அகலமும் கொண்ட எட்டு நீர்ப்படித் தடாகங்களுடன் புதிய முறையில் அமைக்கப் பட்டது.

    Soo Locks

    நயாகரா நீர்வீழ்ச்சிப் போக்கில் மின்சக்தி உற்பத்தி

    நயாகரா நதி இளவயதானது! அது ஓட ஆரம்பித்து 12,000 ஆண்டுகள்தான் ஆகின்றன என்று கனடாவின் தளப்பண்பு ஆய்வுமூலம் [Geological Study] அறியப் படுகின்றது. பனிப்பாறை ரம்பங்கள் அறுத்து உண்டாக்கிய நயாகரா ‘செங்குத்துப் பள்ளத்தாக்கு ‘ [Niagara Escarpment] அதற்கும் முன்பாகவே தோன்றியது! உலகத்தில் இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சியாகக் கருதப்படும் நயாகரா, அமெரிக்க நீர்வீழ்ச்சி என்றும், கனடா நீர்வீழ்ச்சி என்றும் பிரித்து அழைக்கப் பட்டாலும், இரண்டும் ஒரே நீரோட்ட வீழ்ச்சிகள்தான்! 1060 அடி அகண்ட அமெரிக்க நீர்வீழ்ச்சி 176 அடி உயரத்திலிருந்தும், 2600 அடி அகண்ட கனடா நீர்வீழ்ச்சி 167 அடி உயரத்திலிருந்தும் விழுகின்றன! ஈரி ஏரியிலிருந்து ஓடும் நீரோட்டம் இரண்டாகப் பிரிந்து, தனியாக இரு பகுதியில் விழுந்தாலும், இரண்டும் மீண்டும் ஒன்றாகி ஒரே நீரோட்டமாக நயாகரா நதியில் 15 மைல் ஓடி அண்டாரியோ ஏரியில் கலக்கிறது! அமெரிக்க வீழ்ச்சியில் வினாடிக்கு 150,000 காலன் வெள்ளமும், கனடா நீர்வீழ்ச்சியில் வினாடிக்கு 600,000 காலன் வெள்ளமும் மழையாய்க் கொட்டுகின்றன. அந்தப் பயங்கர நீர்வீழ்ச்சியின் மேலிருந்து கவசக் கலசத்தில் உள்ளமர்ந்து குதித்துக் [Barrel Jump Hero] காட்டிய தீரர் இருவர்!

    இரண்டு ஏரிகளின் நீர்மட்டம் 326 அடி வேறு படுவதால், மிகப் பெரும் நீரோட்ட மின்சார நிலையங்கள் [Hydro Electric Power Plants] அமைக்க வழியுள்ளது. அமெரிக்கா 2575 மெகாவாட் உற்பத்தி செய்யும் நிலையங்களும், கனடா 2045 மெகாவாட் உற்பத்தி செய்யும் நிலையங்களும் நயாகரா நீர்வீழ்ச்சி அருகில் நிறுவகமாகி மின்சாரம் பரிமாறி வருகின்றன. நீர்வீழ்ச்சிகளுக்கு முன்பாகவே, மின்சார நிலையங்களுக்கு வேண்டிய நீர் வெள்ளம், எடுத்துக் கொள்ளப்படுகிறது. குளிர்காலத்தில் ஏரிகளின் நீர் மேலாக உறைந்து விடுவதால், மிதந்து வரும் பனித்துண்டுகள் டர்பையன் சுழலிகளைத் [Turbine Blades] தாக்காதவாறு நுழைவாயில் வடிகட்டப் படவேண்டும்.

    Hydro Electric Power Station, Niagara Falls

    செயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கத்தில் செய்த மேம்பாடுகள்

    கடந்த 45 ஆண்டுகளாக உலக நாடுகளிடையே அமெரிக்காவும், கனடாவும் கப்பல் வணிகத்துறைப் போக்கு வைத்துக் கொள்ள, செயின்ட் லாரென்ஸ் கடல்வீதி பெரும்பணி யாற்றியுள்ளது. 1954 ஆண்டு துவக்கத்தில் கடல்வீதிக் கால்வாய் ஆழம் 25 அடியாகத் திட்டமிடப் பட்டது, 1959 இல் முடிவு பெறும் போது 27 அடியாக அதிகமாக்கப் பட்டது. கப்பல்களின் போக்குவரத்துக் கடல்வீதி வழியே அதிகரித்து விடுவதாலும், எதிர்பாராமல் ஏற்படும் தகுதி யற்ற காலநிலைக் கோளாறுகளாலும், வரிசையில் நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கைக் கால்வாய்க் கடப்பு ஆற்றலை ஏறக்குறைய எட்டி வருகிறது! 1967 இல் ‘புதிய போக்குவரத்துக் கண்காணிப்பு ஏற்பாடு ‘ [New Traffic Control System] ஒன்று அமைக்கப் பட்டது. அம்முறைப்படி கப்பல்களின் போக்கைப் பின்பற்றும் டெலிவிஷன் காட்சி அரங்கம், தூர அறிவிப்பு ஏற்பாடுகள் [Close Circuit Television & Telemetry] அமைக்கப் பட்டு, ஆட்சி அரங்கில் தொடர்ந்து நோக்கிவர முடிகிறது. அதன் விளைவுகள்: நீரடைப்புத் தடாகங்களில் கப்பல் கடப்பு நேரக் குறைப்பு, சுற்றுப் பயணக் கப்பல்களின் காலக் குறைப்பு போன்றவை. வெல்லண்டு கால்வாயில் ‘மையக் கட்டுப்பாட்டு அரங்கம் ‘ [Central Control Area] அமைக்கப் பட்டு, 1, 2, 3, 7 & 8 தடாகத் தொட்டிகள் சுய இயக்க முறைகளைப் பின்பற்றிக் கண்காணிப்படுகின்றன. செயின்ட் லாரென்ஸ் கடல்வீதிக் கப்பல் போக்குவரத்தால், வெல்லண்டு கால்வாய்ப் பணிகள் மட்டும் ஆண்டுக்கு 160 மில்லியன் டாலர் வருமானத்தை நயாகரா பகுதியில் [Niagara Region] உண்டாக்கி, மாந்தருக்கு பணி அளிக்கும் பெரும் பிழைப்பு நிறுவனமாய்ப் பெயர் பெற்று வருகிறது!

    தகவல்:

    1. The Great Lakes (Natural Science of Canada) By: Robert Thomas Allen [1970]

    2. The St. Lawrence Valley (Natural Science of Canada) By: Ken Lefolii [1970]

    3. National Geographic Picture Atlas of our World [1990]

    4. Teaching About the Great Lakes & St. Lawrence Seaway [www.canadainfolink.ca/glks.htm]

    5. The Welland Canal Section of the St. Lawrence River [www.greatlakes-seaway.com] [March 2003]

    6. Great Lakes Ports & Shipping to the Ocean & Beyond [www.seaway.ca/en/]

    7. The St. Lawrence Seaway [Combined Traffic by Commodity Report (1996)]

    8. The Great Lakes -St. Lawrence System Profile By: David Schweiger & Charles Southam

    9. [www.usace.army.mil] [2000]

    10. https://en.wikipedia.org/wiki/Welland_Canal [March 29, 2016]

    11. http://www.infoniagara.com/attractions/welland_canal/canal_map.aspx

    12. https://en.wikipedia.org/wiki/Saint_Lawrence_Seaway [February 27, 2016]

    13. http://www.greatlakes-seaway.com/en/seaway/locks/index.html

    14. http://www.greatlakes-seaway.com/en/seaway/locks/

    15. http://www.canadiangeographic.ca/magazine/ja09/seaway.asp

    16. http://www.thecanadianencyclopedia.ca/en/article/st-lawrence-seaway/

    ****

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] March 30, 2016 [R-1]

    Share
  • நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள் -1

    Pyramid 10

    (The Great Pyramids of Egypt)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    +++++++++++

    https://youtu.be/T4cA6oGwzvk

    https://youtu.be/Jt6ZdheNyek

    https://youtu.be/xo2f4IVhuPs

    http://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids

    +++++++++++++++++

    நைல் நதி நாகரீகக் கோபுரம்

    ஐயாயிரம்  ஆண்டு வயது மேடகம்

    ஒயில் மிக்க உன்னதக் கூம்பகம்

    சதுரப் பீடம்மேல் எழுந்த ஓர் கோணகம்!

    புரவலர் உடலைப் புதைத்த பெட்டகம்!

    சிற்பமும், சின்னமும் செதுக்கிய களஞ்சியம்!

    கற்பாறை தமை அடுக்கிக் கட்டிய அற்புதம்!

    பூர்வீக உலகின் பொற்காலக் கட்டடம்!

    ++++++++++++++

    aj

    5000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, மெஸோபொடாமியா, இந்தியா, சைனா போன்ற நாடுகளின் பூர்வீக நாகரீகங்கள் செழிப்பான நைல் நதி, டைகிரிஸ் நதி, யுஃபிராடிஸ் நதி, சிந்து நதி, மஞ்சள் நதிக்கரைகளில் சீராகத் தலைதூக்கி விருத்தியாகி வந்துள்ளன. இங்குமங்கும் சிதறிய இனக்குழுக்கள் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து, வேளாண்மை செய்து பயிரினங்களை விதைத்துத் தளிர்க்க வைத்துச் சிற்றூர் ஆட்சி முறை நிலைபெற்றுப் பல இடங்களில் சிற்றரசர்களும், சில தளங்களில் பேரரசர்களும் சிறப்பாக ஆண்டு வந்திருக்கிறார்கள். நூற்றுக் கணக்காக கிராமங்களும், நகரங்களும் பெருகி, மக்கள் அறிவு வளர்ச்சி அடைந்து சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டடக்கலை, காவியம், நாடகம், நாட்டியக் கலைகளும் தழைத்தன. நகரங்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, அவரிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாயின! இனவாரிச் சமூகங்களில் அவரவர் புரியும் தொழில்களுக்கு ஏற்பவும், செல்வச் செழிப்புகளுக்கு ஒப்பவும் வகுப்புவாரிப் பிரிவினைகள் கிளைவிட்டு, விழுதுகள் பெருகின! அரச பரம்பரை, செல்வந்தர், படைவீரர், மதவாதிகள், வர்த்தகர், தொழிலாளிகள், அடிமைகள் என்று பகுப்புகள் நிலை பெற்றன! நகரங்களில் ஆட்சி வர்க்கத்தார் அரச மாளிகைகளை எழுப்பி, எதிரிகள் புகாவண்ணம் பாதுகாப்பு அரண்களைச் சுற்றிலும் கட்டின.

    Upper Cover

    புரட்சிகரமான அந்தப் புதிய நாகரீகம், கற்காலத்திற்குப் பிறகு குப்பென தோகை விரித்தது. வலுப் பெற்ற வல்லரசுகள், பலமற்ற மெல்லரசுகளை நசுக்கி அவரது நாடுகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டன! போர்வாள் இட்ட விதிகளே சட்டங்களாய் நிலவி வந்தன. ஆரம்ப நாகரீக வரலாறு களில் சமயவாதிகளும், ஜோதிட வானியல் ஞானிகளும், திறமைசாலி களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் தோன்றினர். எழுத்துத் திறம் சிறப்புற்று எகிப்து, கிரேக்க [மெஸோபொடமியா] எழுத்தாள ஞானிகள் தமது நாகரீக வரலாறுகளை எழுதிப் பதிவு செய்து வைத்துள்ளது பண்டைய இனங்களின் வரலாறுகளை அறிய உதவி நமக்கு செய்கின்றன.

    சிற்பிகள் தமது சிற்பங்கள் மூலமாக, ஓவியர் தமது ஓவியங்கள் மூலமாக, எழுத்தாளர் பேச்சாளர் தமது கல்வெட்டுகள் மூலமாக, கட்டடக் கலைஞர் தாம் கட்டிய மாளிகைகள், அரண்கள், கோயில்கள், கோபுரங்கள், பிரமிட்கள், கலைத் தூண்கள் மூலமாக பூர்வீக நாகரீக வரலாறுகளைப் பதிவு செய்து வைத்துள்ளார்கள். உலக அற்புதங்களில் ஒன்றானது, பிரம்மாண்டமான கூஃபூ பிரமிட் [Khufu Pyramid]. எகிப்தில் கட்டிய பிரமிட்களில் எல்லாவற்றிலும் பெரியதான காஸாவில் உள்ள கூஃபூ பிரமிட் 480 அடி உயரம், 750 அடிச் சதுர பீடத்தில், 2,300,000 பாறைத் துண்டுகள் கூம்பு வடிவில் அடுக்கப் பட்டது! தற்காலப் பொறியல் துறை, கட்டடக் கலை நிபுணர்கள், நவீன யந்திர சாதனங்களால் அத்தகைய பூதக் கற்கோபுரத்தைக் கட்ட முடியமா என்பது ஐயப்பாடே!

    எகிப்தின் பொற்காலப் பூர்வீக நாகரீகம்

    2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதல் கிரேக்க வரலாற்று ஞானி, ஹெரொடோடஸ் [Herodotus] எகிப்தை ‘நைல் நதியின் கொடை ‘ [The Gift of Nile] என்று வாழ்த்தி எழுதி யிருக்கிறார். உலகப் பெரும் நதிகளிலே எல்லாவற்றையும் விட மிகவும் நீண்டதாகக் கருதப்படும், நைல் நதி 4160 மைல் தூரம் தளத்தில் ஓடி பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் பயிர் வளத்தையும், மனிதர் தரத்தையும் உன்னத மாக்கியது. கெய்ரோவுக்கு அருகில் உள்ள சிறப்பான கிஸா பிரமிட்கள் நைல் நதிக்கு அருகே எழுந்தவை. நைல் நதியில் ஆண்டு தோறும் வெள்ளம் வந்து, நிலங்கள் மூழ்கிடும் சமயம் விவசாயிகள் வேலை யில்லாமல் இருந்த போது, அவர்கள் பிரமிட் கட்டும் பணியில் கலந்து கொண்டதாக அறியப்படுகிறது. நீர் வடிந்து நிலங்கள் தயாரான போது அவர்கள் மீண்டும் வேளாண்மையில் முனைந்திருக்கிறார்கள்.

    பிரமிட்கள் கட்டி 2700 ஆண்டுகள் கழித்து நேரடியாகக் காண வந்த ஹெரொடோடஸ் எழுதியுள்ள குறிப்புகளின்படி கூஃபூ பிரமிட் [Khufu Pyramid] கட்டுவதற்கு 100,000 மேற்பட்ட நபர்கள் பங்கேற்றிருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. நவீன எகிப்தின் கட்டடக் கலைஞர் [Egyptologists] கணிப்பு விவரப்படி, பங்கு பெற்றோர் எண்ணிக்ககை சுமார் 20,000 நபர்களாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. கிஸா பீட பூமியில் 2,300,000 பாறைத் துண்டுகள் கொண்ட மாபெரும் பிரமிட் ஒன்றைக் கடவுளாகக் கருதப்பட்ட ஃபாரோ [Pharaoh] மன்னருக்குக் கட்டி யிருக்கிறார்கள். அவற்றில் பயன்படுத்தப் பட்ட பெரும் பாறைத் துண்டுகள் சில 15 டன் எடை கொண்டிருந்தன. அதை மட்டும் கட்ட 20 ஆண்டுகள் எடுத்துள்ளதாக அறியப்படுகிறது! தொல்பொருள் உளவாளர் மார்க் லேனர், ஸஹி ஹவாஸ் [Archaeologists: Mark Lehner & Zahi Hawass] இருவரும் பணிபுரிந்த 20,000-30,000 பணியாட்கள் எங்கே தங்கி யிருந்தார்கள் என்னும் புதிரை விடுவிக்க முயன்றார்கள்.

     

    5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்ட எகிப்தின் நான்காம் அரசப் பரம்பரையினர் மிக்க நாகரீகத்தில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. அவரது வம்சத்தில் வந்த வலுவாற்றல் பெற்ற ஃபாரோ சக்கரவர்த்திகள் பலர் எகிப்தை ஆண்டு வந்திருக்கிறார்கள். அந்தப் புராதன வேந்தர்கள் முற்போக்கான நாகரீகத்தில் வாழ்ந்து வந்ததின் அடையாளச் சின்னங்கள் யாவும் 5000 ஆண்டுகளாய் மகத்தான பிரமிட் கோபுரங்களில் புதைத்து வைக்கப் பட்டுள்ளன! கடவுளுக்கு இணையாகக் கருதப்பட்ட அந்த மாபெரும் அரசர்கள் இறந்த பின்பு தங்களைப் பின்னால் புதைப்பதற்கு தாங்களே பிரமிக்கத் தக்க பிரமிட்களைக் கட்டியுள்ளார்கள்! எகிப்திய மக்கள் ஃபாரோ சக்கரவர்த்திகளைக் கடவுளாக மதித்து வந்ததைப் பிரமிட் என்னும் அவர்களின் அடக்கக் மாளிகைகளே இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பறைசாற்றப் போகின்றன! ‘பெரும் மாளிகை ‘ என்று அர்த்தம் கொண்ட ஃபாரோ என்னும் சொல், பின்னால் பேரரசர் என்னும் பொருளில் நிலவியது.

    பிரமிட் கோபுரங்கள் கட்டப்பட்டதின் காரணங்கள் என்ன ?

    எகிப்தின் முதல் கரடுமுரடான ‘படிக்கட்டுப் பிரமிட் ‘ [Step Pyramid] கி.மு.2750 ஆம் ஆண்டில் சாக்காரா [Saqqara] என்னும் இடத்தில் ஸோசர் அரசரால் [King Zoser] கட்டப் பட்டது. அடுத்து சதுரப் பீடத்தின் மீது வழவழப்பான சமகோண சாய்வு முக்கோணப் பிரமிட், கூஃபூ மன்னனின் தந்தைக்கு வட தர்ஹூர் [Dahrhur] என்னும் இடத்தில் கட்டப்பட்டது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு கீஸாவில் கட்டுமானமாகிய பிரமிட்கள்தான் எல்லாவற்றிலும் மிகச் சிறப்பானவை! அவை பிரம்மாண்டமானவை! பார்ப்போரைத் திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்துபவை! கூஃபூ பேரரசர் [King Khufu] காலத்தில் கட்டப்பட்ட ‘மகா பிரமிட்டுக்கு ‘ [The Great Pyramid] அவரே திறப்பு விழாவைக் கொண்டாடினார். உலகப் புகழ் பெற்றது அதுதான். ஏழு அற்புதங்களில் ஒன்றானதும் அதுதான்!

    பிரமிட்கள் யாவும் கடவுளாகக் கருதப்பட்ட எகிப்த் பேரரசர்களுக்குக் கட்டிய சமாதி மாளிகைக் கோபுரங்கள். பூர்வீக எகிப்திய மாந்தர் மரணத்துக்குப் பிறகு பிரியும் ஆன்மா தொடர்ந்து வாழ்கிறது என்று நம்பினார்கள். இறப்புக்குப் பின் தொடரும் வாழ்வில் கிடைக்கும் முழுப்பயனை அடைய, அவர்கள் மிகவும் சிரமம் எடுத்து வழி செய்தார்கள். நகரில் முக்கியத்துவம் பெற்ற நபர்கள் மிக்க மதிப்பு அளிக்கப்பட்டனர். அதிலும் கடவுளாகக் கருதப்பட்ட நாட்டு வேந்தர்கள் எல்லோரையும் விட உன்னத நிலையில் வைக்கப் பட்டனர்! பிரமிட் அடக்க மாளிகைகள் அவ்விதப் பேரரசர்களுக்கே கட்டப் பட்டவை. ஃபாரோ வேந்தர்களின் உடல்கள் பிரமிட் உட்புற அரண்களில் வெகு பாதுகாப்பாக அடக்க மாகியுள்ளன.

    Pyramid 11

    ஃபாரோ மன்னனின் முதற்பணி தனக்காகக் கட்டப் பட்டிருக்கும் பிரமிட் மாளிகைக்குத் திறப்பு விழா புரிவது! பேரரசர் தான் அடங்கப் போகும் பிரமிட் மாளிகையைக் கட்ட அவரே ஆரம்ப விழா நடத்திய பின், அவர் சாகும் வரையில் நிபுணர்களால் அது அலங்கரிக்கப் படுகிறது! பேரரசர் இறந்தவுடன் சிங்காரிப்பு வேலைகள் அப்படியே முடிக்கப் படாமல் நிறுத்தம் ஆகின்றன! பிறகு அரசனின் உடலைப் பேழையில் இறுக்கமாய் மூடிப் புதைக்க, பிரமிட்டின் உட்புற அடக்க மாளிகை மட்டும் தயாரிக்கப் படுகிறது. பிரமிட்டின் அடக்க மாளிகை மதில்களில் எல்லாம் ஓவியப் படங்கள் வரையப்பட்டு அந்த அரசர் பரம்பரையின் வரலாறுகள் சொல்லப் படுகின்றன.

    பிரமிடைப் பேரரசருக்காகக் கட்டிய நிபுணர் குழுவினர் பெயர்கள் சுவர்களில் எழுதப் பட்டுள்ளன. இறந்த பேரரசரின் செல்வக் களஞ்சியங்கள், தங்க ஆபரணங்கள், அலங்கார ஆசனங்கள் ஆகியவை யாவும் அவருடன் புதைக்கப் பட்டன. அரசர், அரசிகளுக்குப் பணி செய்த பணியாளிகள் இறந்த பின் அவரது சடலங்களும், அரச தம்பதிகளின் அடக்க அறைகளுக்கு அருகே புதைக்கப் பட்டுள்ளன. அரச தம்பதிகளின் உறவினர், அரசாங்க அவையைச் சேர்ந்தவர், பிரமிடைச் சுற்றியுள்ள புறவெளி இடத்தில் புதைக்கப் பட்டிருக்கிறார்கள்.

    Paintings

    (தொடரும்)

    தகவல்

    1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

    2. Atlas of the World History By: Harper Collins (1998)

    3. The Ancient World, Quest for the Past (1984)

    4. How in The World By: Reader ‘s Digest (1990)

    5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

    6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

    7. The History of Art for Young People By: H.W. Janson.

    8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

    9.  http://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids

    10.  https://en.wikipedia.org/wiki/Pyramid_(geometry)  February 7, 2016

    11.  http://science.nationalgeographic.com/science/archaeology/giza-pyramids/

    12.  https://en.wikipedia.org/wiki/Egyptian_pyramids  [March 1, 2016]

    13.  https://en.wikipedia.org/wiki/Great_Pyramid_of_Giza  [March 23, 2016]

    *********************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  March 25, 2016

    Attachments area
    Preview YouTube video The Great Egyptians – Episode 1: King of the Pyramids (History Documentary)

    The Great Egyptians – Episode 1: King of the Pyramids (History Documentary)

    Preview YouTube video History Channel Documentary | Mystery Doors Inside the Great Egyptian Pyramid | Ancient Egypt

    History Channel Documentary | Mystery Doors Inside the Great Egyptian Pyramid | Ancient Egypt

    Preview YouTube video Egypt: Beyond the Pyramids – Episode 2 (Ancient History Documentary)

    Egypt: Beyond the Pyramids – Episode 2 (Ancient History Documentary)
    Share
  • அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள்

    unnamed

    (Lessons Learned in Three Mile Island 1979  Accident)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    “மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

    ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

    மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதைக் கட்ட ஆரம்பிக்க வேண்டும்.

    தாமஸ் ஹார்டி [Thomas Hardy 1840–1928]

    மனிதக் கரங்கள் மூளைக்கு முந்திச் செய்த அவசரத் தவறை அறிந்த வுடனே விரைவாய்த் திருத்தச் செல்கையில் மீண்டும் ஒரு தவறைப் புரிகின்றன ! பிறகு இரண்டு தவறுகள் நான்கு பழுதுகளை உண்டாக்கும் ! அப்படியே தவறுச் சங்கிலித் தொடரியக்கம் விரிந்து கண்ணிமைப் பொழுதில், மீள முடியாத ஒரு கோர விபத்து கண்முன்னே அரங்கேறுகிறது !

    கட்டுரையாளர்


    முன்னுரை:

    1979 ஆண்டு அமெரிக்காவில் முதன்முதலில் நேர்ந்த திரிமைல் தீவு (TMI-2) அணுமின் நிலைய  விபத்து, உலகில் வாணிப அணுமின் சக்தி வளர்ச்சியின் வரலாற்றையே முற்றிலும் மாற்றி  விட்டது! இந்தியாவில் 1983 ஆண்டு நிகழ்ந்த போபால் விஷ வாயு விபத்தையும், TMI-2  அணு உலை விபத்தையும் ஒப்பிட்டால், அபாய வேளையில் பணி செய்த இயக்குநர் கையாட்சிப்  பண்பாட்டில் பல ஒற்றுமைகள் காணப் படுகின்றன! அவ்விரண்டு நுணுக்கக் கூடங்களை  உருவாக்கிய உரிமை நிறுவகங்கள் அமெரிக்காவின் யூனியன் கார்பைடு [UCC] & ஜெனரல் பப்ளிக் யுடிலிடாஸ் [GPU]! அதே சமயம் டெல்லிக் கருகே நரோரா அணுமின் நிலையத்தில்  1993 ஆண்டு நேர்ந்த வெடிப் போடு ஒப்பிட்டால், பாரத இயக்குநர்கள் அணு உலையைக்  கண்காணித்து, வெப்பத் தணிப்பு நீரிழப்பு நிகழாது, எரிக்கோல்கள் சூடாகாமல்  காப்பாற்றியது, பாராட்டத் தக்க ஓர் தீரச் செயலாகும்!

    1959 ஆண்டுக்குப் பிறகு இருபது வருடங்களாக இயங்கிக் கொண்டிருந்த முதல் பிறப்பு  பழைய அணுமின் உலைகள் [First Generation Power Reactors] அனைத்தின் தலை விதிகளை  TMI-2 மாற்றி விட்டது! 1979 ஆண்டுக்குப் பிறகு இருபது ஆண்டுகளில் உருவாகப் போன  இரண்டாம் பிறப்பு [Second Generation Power Reactors] அணுமின் உலைகளின் டிசைன்,  பாதுகாப்பு, இயக்க நெறிகள், பராமரிப்பு, இயக்குநர் தேர்ந்தெடுப்பு, பயிற்சி, தேர்ச்சி  முறைகள், அபாய காலப் பயிற்சிகள், அபாய எதிர்பார்ப்பு உளவுகள், அபாய நேரத்  தொடர்புகள் அனைத்தும் பல கோணங்களில் ஆராயப் பட்டு முற்றிலும் மாற்றப் பட்டன!

    செர்நோபிள் அணு உலை வெடிப்பைப் போன்று, திரி மைல் தீவு பேரழிவைப் பென்ஸில்வேனியா  ஹாரிஸ்பர்கில் உண்டாக்க வில்லை! அணு உலையும், அதைச் சுற்றி யுள்ள  சாதனங்களும் வெடித்துத் தகர்க்கப் பட்டது போல், திரிமைல் தீவில் நிகழ வில்லை! சுமார்  1700 டன் மிதவாக்கிக் கரித்திரள் கட்டிகள் [Moderator Graphite Blocks] எரிந்து கதிரியக்கத்  துணுக்குகள் சூழ்மண்டலத்தில் தூவப் பட்டது போல் அமெரிக் காவின்  பென்ஸில்வேனியாவில் நேர  வில்லை!  செர்நோபிள் விபத்தின் போது சில தினங்களில் பலியானவர்கள்: வெடிப்பில்  இயக்குநர் இருவர், பெருங் கதிரடியில் தீயணைப்புப் படையினர் 29 பேர் மற்றும்  கதிர்வீச்சுக் காய்ச்சலில் 13 பேர்; ஆக மொத்தம் உயிரிழந்தவர் 44 மாந்தர்!

    ஆனால் திரி மைல் தீவு விபத்தில் யாரும் மரணம் அடைய வில்லை! எவரும் பேரளவுக்  கதிரடி பட்டுத் துன்புற வில்லை! செர்நோபிள் விபத்தில் கதிர்வீச்சாலும், கதிரியக்கத்  தீண்டலாலும், மானிடருக்கு நீண்ட கால இன்னல்கள் விளைந்தன! இன்னும் 50  ஆண்டுகளுக்கு புற்று நோய் மரண அதிகரிப்பு உண்டாகும் என்று கதிரியல்  விஞ்ஞானி களால் யூகிக்கப் படுகிறது! ஆனால் திரி மைல் தீவு விபத்தில், கதிர்வீச்சால்  அவ்விதம் நீண்ட கால விளைவுகள் எதுவும் நிகழ வில்லை!  ஆனால் அமெரிக்காவில் அடுத்துக் கட்டப் போகும் புதிய அணுமின் நிலையங்கள் நிறுத்த மாயின.  கட்டப் பட்டுவரும் அணுமின் உலைகளும், இயங்கி வரும் அணுமின் உலைகளும் மென்மேலும் ஆராயப் பட்டுப் பேரளவில் மேம்படுத்தப் பட்டன !

    திரிமைல் தீவு விபத்துக்கும் ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகள் விபத்துக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள்

    திரிமைல் தீவு அணுமின் உலை விபத்து 1979 இல் யந்திரத் தவறோடு மனிதத் தவறால் தூண்டப் பட்டு வெப்பத் தணிப்பு நீரிழப்பால் (Loss of Coolant Accident -LOCA) பேரளவு எரிக்கோல்கள் அணு உலையில் முறிந்து, உருகிப் போயின.  அதனால் வெளிப்பட்ட கதிரியக்கத் துணுக்குகள், திரவக் கழிவுகள் எவையும் வெளியேறாமல் அணு உலைக் காங்கிரீட் கோட்டைக்குள் தங்கின !  ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் 9.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தாலும், 30 அடி உயரத்தில் தாக்கிய சுனாமியாலும் விபத்து தூண்டப்பட்டு எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரிழப்பால் ஓரளவு முறிந்தோ அல்லது உருகியோ சிதைந்து போயின.  ஆனால் தொடர்ந்து சிறிதளவு & பேரளவுக் கதிரியக்கம் மாறி மாறி, நீர் வழியாகவும், வாயு வழியாகவும் அணுமின் உலைகளை விட்டு விட்டு வெளியேறியது. திரிமைல் தீவில் விபத்து ஓர் அணுமின் உலையில் மட்டும் நேர்ந்தது.  புகுஷிமாவில் நான்கு அணுமின் உலைகளில் விபத்துக்கள் நேர்ந்தன.  பதினாறு நாட்கள் (மார்ச் 26, 2011) ஆயினும் இன்னும் சில அணுமின் உலைகளில் தொடர்ந்து ஜப்பான் இயக்குநரால் வெப்பத் தணிப்பு நீர் எரிக்கோல்களுக்குச் செலுத்த முடியவில்லை.

    ஓர் அணுமின் உலையில் இணைக்கப் பட்ட நீர்த் தடாகத்தில் சேமிப்பான எரிக் கோல்கள் (Spent Fuel Storage Pool) நீர் மட்டம் கீழாகிச் சூடேறத் துவங்கின.  நீர்க் கவசமின்றி தடாகத்தில் கதிரியக்கம் மிகையானது.  செலுத்தப்பட்ட கதிர்வீச்சுத் தணிப்பு நீர் தங்கும் வளையம் நிரம்பி தரையில் சேரத் தொடங்கியது.  அந்த நீர் பணியாளர் காலணிகளில் புகுந்து பீட்டா கதிர்வீச்சால் கால் எரிப்புண்கள் (Beta Ray Burns) உண்டாயின.  வெப்பத் தணிப்பு நீரிழப்பால் முறிந்த / உருகிய எரிக்கோல்கள் புகுஷிமாவில் திரிமைல் தீவைப் போல் சுமார் நான்கு மடங்கு எண்ணிக்கை !  புகுஷிமா அணுமின் உலைகளின் சீர்கேட்டையும், கதிரியக்கப் பேரிடரையும் அனுதினம் தொலைக் காட்சியில் கண்டவர் இன்னும் கவனித்து வேதனை அடைந்து வருபவர் உலகில் பல பில்லியன் மாந்தர்.  செர்நோபிள் பேரிடர் நிலை இலக்கம் 7 என்றும், திரிமைல் தீவு விபத்து நிலை இலக்கம் 5 என்றும் புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்துக்கள் நிலை இலக்கம் 6 என்றும் IAEA ஆல் எடை போடப் படுகின்றன.

    அமெரிக்க அணுமின் உலைத் திட்டங்களை நிறுத்திய விபத்து !

    TMI-2 அணு உலையில் எதிர்பாராமல் துவங்கியது சிறிய நிகழ்ச்சி யாயினும், பிறகு அது  அசுர வடிவெடுத்து அணு உலை எரிக் கோல்களுக்குப் பெருமளவில், வெப்பத் தணிப்பு  நீரை இழக்கச் செய்து விட்டது! பிரதம வெப்பத் தணிப்பு நீரிழப்பு [LOCA, Loss of Coolant  Accident] அணு உலைக்குப் பேரழிவு விளைவிப்பதைத் தடுக்கப் பலவித அபாயத் துணை  ஏற்பாடுகள் சுயமாக இயங்கக் காத்துக் கொண்டிருக்கின்றன! அவ்விதம் தவிர்ப்பு முறைகள்  TMI-2 இல் இருந்தாலும், அறிவற்ற இயக்குநரின் கையாட்சியால் பேரளவுச் சேதம் அணு  உலையில் உண்டானது! அவரது மூடத் தனத்தால் இரண்டு மணி நேரத்திற்குள் நான்கு  வித அபாய விபத்துகள் கட்டுப் படுத்த முடியாமல் பூத உருவில் எழுந்தன!

    1. எரிக்கோல்களின் உஷ்ணம் 2800 டிகிரி C ஏறி, 50 டன் [50%] யுரேனியம் ஆக்ஸைடு  கோல்கள் உலைக் கலனில் உருகிக் கட்டிகளாய்ச் சேர்ந்தன!

    2. வீரிய கதிரியக்க முள்ள, யுரேனியப் பிளவுக் கழிவுகள் சேர்ந்த 600,000 காலன் வெப்பத்  தணிப்பு நீர், அணு உலையிலிருந்து கசிந்து வெளியேறி, கோட்டைத் தளத்தில்  தடாகமாய்ப் பெருகியது!

    3. அணு உலையில் 2800 டிகிரி C உஷ்ண நீராவி அருகில் உள்ள ஸிர்கோனிய [Zirconium]  உலோகத்துடன் இணைந்து பேரளவு ஹைடிரஜன் வாயு முகிலாகி, மூர்க்கமுடன்  ஆக்ஸிஜனுடன் பிணைந்து பெரு வெடிப்பை [Hydrogen Explosion] உண்டாக்கப்  பயமுறுத்தியது! செர்நோபிள் அணுமின் உலையில் எழுந்த இரண்டாவது வெடிப்பு  இவ்விதம்தான் ஏற்பட்டது!

    4. உருகித் திரண்ட யுரேனியக் கட்டிகள் அணு உலை நீரில் ‘விரைவுப் பூரண வெடிப்பைத் ‘  [Prompt Criticality Explosion] தூண்டி விடுமோ என்ற பேரச்சத்தை வேறு உண்டாக்கியது!

    நல்ல வேளையாக கடைசி இரண்டு கோர நிகழ்ச்சிகளும் நேரவில்லை!

    1983 இல் உலகெங்கும் இயங்கி வந்த அணு உலைகளின் எண்ணிக்கை 284! உலகில்  அப்போது கட்டப் பட்டு உருவாகி வந்தவை 192! அதே சமயத்தில் அமெரிக்காவில் மட்டும்  ஓடிக் கொண்டிருந்தவை 79! நிறுவன நிலையில் வளர்ந்து கொண்டு வந்தவை 55! TMI-2  விபத்துக்குப் பிறகு உலகில் ஓடிக் கொண்டிருந்த அணுமின் உலைகளும், கட்டப்படும்  அணுமின் உலைகளும் தீர்க்கமாய் ஆய்வு செய்யப் பட்டு மேபடுத்தப் பட்டன!  அமெரிக்காவில் அணுமின் உலைகளின் மீது நம்பிக்கை குன்றி கட்டப்படும் 55 அணு  உலைகளில் 30 நிலையங்கள் முழுவதும் கட்டப் படாமலே பாதியில் நின்று போயின!  காரணம் NRC [Nuclear Regulatory Commission] எதிர்கால அணுமின் உலைகளுக்குக் கடும்  நிபந்தனைகளிட்டுப் பாதுகாப்பு நெறிகளையும், முறைகளையும் மிகையாக்கியதால்,  கட்டுமான நிதித் தொகை மிக மிக ஏறிவிட்டது!

    திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் என்ன நிகழ்ந்தது ?

    1979 மார்ச் 28 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அமெரிக்காவின் மாபெரும் அணுமின்  நிலைய விபத்து, இரட்டை உலைகளில் ஒன்றான யூனிட்-2 நிலையத்தில்தான் நேர்ந்தது!  TMI-2 [Three Mile Island Unit-2] அணுமின் நிலையம் நியூ யார்க், நியூ ஜெர்ஸி மாநிலங்களுக்கு  அண்டையில் உள்ள பென்ஸில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின்  கரையில் உள்ள மிடில்டன் நகரில் [Middletown near Harrisburg on the Susquehanna River]  அமைந்துள்ளது. 1978 டிசம்பர் முதல் வாணிப ரீதியாக இயங்கி வரும் TMI-2 அணுமின்  உலை விபத்தன்று 97% [870 Mwe] மின்னாற்றலில் ஓடிக் கொண்டிருந்தது.

    பராமரிப்புக்குப் பிறகு எதிர்பாராத விதமாக மூடப்பட்ட ஒரு வால்வால் [Valve] நீராவி  ஜனனிகளுக்குத் தொடர்ந்து நிரப்பும் தூய நீர் தடைபட்டது! அதன்பின் பிரதம நிரப்பு நீர்ப்  பம்பும் [Main Feedwater Pump], ஓடிக் கொண்டிருந்த பிரதம டர்பைனும் [Main Turbine] நிறுத்தம்  அடைந்து, 870 MWe மின்னாற்றல் இழப்பானது! உடனே அபாய நிரப்புப் பம்ப் தானாக  இயங்க ஆரம்பித்தாலும், நீராவி ஜனனிகளுக்கு நீரனுப்ப முடியாது போயிற்று!  ஏனென்றால் கடந்த வாரத்தில் மூடப் பட்ட சில வால்வுகள், சோதனை முடித்ததற்குப்  பிறகு திறக்கப் படாமல் கிடந்தன! ஆட்சி அறை அரங்கில் [Control Roon Panels] காணப்படும்  மூடிய அந்த வால்வுகளின் மினி விளக்கு, அருகில் தொங்கும் பராமரிப்பு எச்சரிக்கை  அட்டை எதுவும், இயக்குநர் கண்களுக்குத் தெரியாமல் போனது, ஓர் விந்தை நிகழ்ச்சி!

    அணு உலையில் தொடர்ந்து உண்டாகும் 2700 MWt வெப்பசக்தி [870 MWe] ஜனனிகளில் நீர்  இருந்தால்தான் நீராவி யாக்கப்பட்டு டர்பைனை ஓட்டுகிறது. அவ்வழியில் அணு உலைக்கு  நீராவி ஜனனிகளே பிரதம ‘வெப்ப விழுங்கிகள் ‘ [Steam Generators are the Main Heat Sinks for  the Reactor]! வெப்ப விழுங்கிகள் நீரற்று முடமானதால், அணு உலையின் வெப்பமும்,  தணிப்புநீர் அழுத்தமும் அளவு மீறி, அணு உலைத் தானாக நிறுத்த மானது! நீர் அழுத்தம்  ஏறியதும் தானாய் இயங்கும் தணிவு வால்வு [Power Operated Relief Valve (PORV)] ஒன்று  திறந்து அணு உலைப் பிரமத வெப்பத் தணிப்பு நீரை [Primary Coolant] வெளியேற்றியது!  திறந்த PORV அழுத்தம் குன்றியதும் மூடாமல் துரதிஷ்ட வசமாகச் சிக்கிக் கொண்டதால்,  நீர் வற்றிப் போய்க் கனலான எரிக்கோல்கள் நீர் மட்டம் குன்றி வரட்சியில் உஷ்ணம் ஏறி  எரியத் தொடங்க ஆரம்பித்தன! அதாவது வெப்ப எரிக்கோல்கள் ‘தணிப்பு நீர் இழப்பு விபத்தில் ‘ [Loss of Coolant Accident (LOCA)] மாட்டிக் கொண்டது!

    வெப்ப எரிக்கோல்கள் தணிப்பு நீர் இழப்பு விபத்தில் உருகின!

    PORV இல் ஒழுகும் கதிர்வீச்சு நீர் சேமிப்புத் தகழி [Contaminated Water Storage Tank]  நிரம்பியதும் அதனுடைய காப்புத் தகடு [Rupture Disc] உடைந்து, தீவிரமான கதிரியக்க  திரவம் கோட்டைத் தளத்தில் கொட்ட ஆரம்பித்தது! வெப்பத் தணிப்பு நீரழுத்தம்  குன்றியதும், சுயமாகவே அபாய எருக்கருத் தணிப்பு நீர் ஏற்பாடு [Emergency Core Cooling  System] துவங்கியது! அணு உலையின் மீது பட்ட நீர் உடனே ஆவியான போது, அழுத்தக்  கலனில் [Pressurizer] நீர் நிரம்பிப் பொங்குவதாக எண்ணித் தப்பாகப் புரிந்து கொண்ட ஆட்சி  அறை இயக்குநர், அபாயப் பணிப் பம்பை மூடத்தனமாக நிறுத்தினர்! அத்துடன் நில்லாது,  மேலும் தணிப்பு நீரை நீக்க சில வால்வுகளைச் சிந்திக்காமல் திறந்து விட்டார்கள்!  அவசரத்திலும், அச்சத்திலும் செய்யும் பல அபாயத் தடுப்பு வேலைகள் அனைத்தும்  அடுத்தடுத்த தவறுகளாகி அணு உலையின் கனலான எரிகோல்கள் நீரற்று உஷ்ணத்தில்  உருகி உலைக் கலனின் அடியில் ஓடித் தங்கின!

    நீராவி ஜனனிகளின் மூடிய அபாயப் பணி நீரனுப்பி வால்வுகளைக் கண்டு இறுதியில்  திறந்து, ஜனனிகளுக்கு நீரைத் திறந்து விட்டார்கள்! ஆனால் திறந்து மூடாமல் சிக்கிக்  கொண்ட PORV நீரை வீணாகக் வெளியேற்றுவதை இயக்குநர் இன்னும் கண்டு  கொள்ள வில்லை! அணு உலையில் தங்கிய நீர் ஆவியாகி, அதன் உஷ்ணம் மிகையாகி, உலையின் உலோகத்துடன் பிணந்து ஏராளமான ஹைடிரஜன் வாயுக் குமிழ் [Hydrogen Gas  Bubble] உண்டாகி வெடித்து விடப் பயமுறுத்தியது! செர்நோபிள் அணு உலையில் நிகழ்ந்த  இரண்டாவது பயங்கர வெடிப்பு, ஹைடிரஜன் வாயுக்குமிழ் மூர்க்கமாக ஆக்ஸிஜனுடன்  இணைந்ததால் ஏற்பட்டதே!

    தீவிரமாய்க் கதிர்வீசும் கழிவுகளைத் தாங்கிய நீர் தொடர்ந்து கொட்டிக், கோட்டை  அரணின் தளத்தில் நிரம்பத் துவங்கியது! விபத்து நிகழ்ந்து 2 மணி 18 நிமிடங்கள் கழித்து  PORV திறந்து தணிப்பு நீரை வெளியாக்குவது தெரிய வந்து அது மூடப் பட்டது! உடனே  தணிப்பு பம்புகளை இயக்க ஆரம்பித்து, எரிகோல்களின் கனல் வெப்பம் தணிக்க நீரனுப்பி,  அணு உலை நிரப்பப் பட்டு அணு உலை கட்டு படுத்தப் பட்டது! ஆனால் அதற்குள் பல எரிக்கோல்கள் உருகி விபத்தின் மீளா விளைவுகள் ஏற்பட்டு விட்டன!

    வெப்பத் தணிப்பு நீரிழப்பால் அணு உலைக்கு நேர்ந்த சிதைவுகள்

    PORV திறந்து 600,000 காலன் வெப்பத் தணிப்பு நீரைக் கோட்டை அரணில் கொட்டி  வெளியாக்கியது! TMI-2 அணு உலையில் 37,170 தனி யுரேனியம் டையாக்ஸைடு  எரிக்கோல்கள் கொண்ட 177 கட்டுகள் [177×210 =37170] நீரில் மூழ்கும்படி முதலில்  நுழைக்கப் பட்டிருந்தன. எரிக்கோல்களின் மேற்புறம் நீரில் மூழ்காமல், 315 டிகிரி C  உஷ்ணத்தில் இயங்கியவை, தணிப்பு நீர் குன்றி உஷ்ணம் 2800 டிகிரிக்கும் மேல்  ஏறியதால், 50 டன் [50%] எரிக்கோல்கள் எரிந்துருகிச் சிதைவடைந்தன! அணு உலையில்  எரிக்கோல்கள் மேற்புறம் பிளந்து, தீவிரக் கதிரியக்க துணுக்கு களைக் [Cesium134, Cesium135,  Strontium90] கக்கியதால், அவற்றைச் சுமந்து கொண்டு வெளியேறிய தணிப்பு நீர் பெரிய  தடாகம் போல், கோட்டைத் தளத்தில் சேர்ந்தது! 100 டன் மொத்த எரிக்கோல்களில் 16-20  டன் அணு உலையில் காணப் படவில்லை! அப்பகுதி தணிப்பு நீரில் கசிந்து கோட்டைத்  தளத்தில் கிடந்தது! மேலும் 50 டன் உட்கருச் சாதனங்களும் சிதைந்து, ஆக மொத்தம் 150  டன் கதிர்வீச்சுக் குப்பைகள் உலைக்குள் சேர்ந்து விட்டன!

    தீவிரக் கதிர்வீச்சுள்ள நீரை இரசாயன, மற்றும் யந்திர வடிகட்டு வழிகளில் சுத்திகரித்துப்  பல டன் அணுப்பிளவுத் துணுக்குகளைக் கவசக் கலன்களில் பாதுகாப்பாகச் சேமிப்பது ஓர்  இமாலயச் சாதனை! அதை விட 150 டன் கதிரியக்கக் குப்பைகளைக் கவசம் அணிந்து,  அணு உலையிலிருந்து சிறுகச் சிறுக அறுத்தெடுத்து கவசக் கலன்களில் மூடி,  வாகனங்களில் அனுப்பிப் புதைப்பது, அதைவிடப் பெரிய சாதனை!

    அணு உலையின் 20-30 அடி ஆழத்தில் மண்டியான நீரில், 150 டன் கதிரியக்கக்  குப்பைகளை, பதினெட்டு அங்குள விட்டமுள்ள துளை வழியாக உறிஞ்சி எடுக்கப் பலவித  சுய இயக்கத் தூரக் கருவிகள் பயன்படுத்தப் பட்டன! 1000 பவுண்டுக்கும் மேலான  யுரேனியக் கழிவுகள் வெப்பத் தணிப்பு பைப்புகள், பம்புகள், மற்ற சாதனங்களிலும்  நீரோடத்தால் பரவி விட்டன!

    யுரேனியம் உருகித் திரண்டு பலவித வடிவங்களில் நீருக்குள் அணு உலையின்  அடித்தளத்தில் சேர்ந்து, ‘விரைவுப் பூரண வெடிப்பு ‘ [Prompt Criticality Explosion] நேர்ந்து  விடுமோ என்ற பேரச்சம் உண்டானதால், மித மிஞ்சிய நியூட்ரான் விழுங்கியான ‘போரான்  திரவத்தை ‘ [Boron Liquid 5000 parts per million] அணு உலைக்குள் செலுத்தினார்கள்!

    TMI-2 அணு உலைத் திருத்தத்தில் பணிநபர் பட்டக் கதிரடிகள்

    (1 Sv = 100 Rem) (1 mSv = 0.1 Rem)

    கதிர்வீச்சு அளவுகள் அணு உலையின் உள்ளே பல தளங்களில், பல திசைகளில் உளவு  செய்து குறிக்கப் பட்டன. பணியாளிகள் வேலை செய்யும் அணு உலையின் மேற்தளத்தில்  கவச மற்ற அளவுகள்: 40-600 Rem/hr. அணு உலையின் மூடியின் உள்ளே 700-800 Rem/hr.  ஈயத்தால் ஆன கவசம் அணிந்து வேலை புரிவதால் பணியாளருக்குப் படும் கதிரடி மிக  மிகக் குன்றிய அளவிலே [50-250 milliRem/hr] இருக்கும்!

    TMI-2 அணு உலைச் சுத்திகரிப்புக்குக் கதிரடி மதிப்பீடு சுமார் 8000 man-Rem. கதிரடி  வரையறை உலைப் பணியாளிக்கும் (0.5 Rem/yr, Max 5 Rem/yr), வெளிப் பணியாளிக்கும் (0.2  Rem/yr) [Administrative Control 0.5 Rem/yr (Max 5 Rem/yr) for Radiation Worker & 0.2 Rem/yr for Non- Radiation Worker] என்று அழுத்தமாகக் கட்டுப் படுத்தப் பட்டன. அம்முறையில் உதாரணமாக  உலைப் பணியாளிகள் 500 பேர் என்றும், வெளிப் பணியாளிகள் 3000 நபர் என்றும்  வைத்துக் கொண்டால் ஓராண்டில் 500×0.5 +3000×0.2 =850 man-Rem. அந்த வீதத்தில் வேலை  முடியக் குறைந்தது 9.5 ஆண்டுகள் [8000/850] ஆகும்!

    கோட்டை அரண் தளங்களில் கதிர்வீச்சு 35 R/hr! அரணின் அடித்தளத்தில் மட்டும்  கதிர்வீச்சு 1000 R/hr! 1986-1988 ஆண்டுகளில் பணியாளிகளின் கதிரடி 900-1000 man-Rem! 1989  இல் அணு உலைப் பணியில் பங்கு கொண்டவர்கள் சுமார் 500 நபர்கள். அவர்களின்  அவ்வாண்டுக் கதிரடி மட்டும் 615 man-Rem! TMI-2 அணு உலைச் சுத்திகரிப் புக்கு இறுதியில்  மதிப்பீடுக்கும் [8000 man-Rem] குறைவாகவே செலவானது: 6000 man-Rem!

    கோட்டை அரணுள் அடைபட்ட கதிரியக்க நோபிள் வாயுக்களை [Noble Gases] வெளியே  அனுப்பும் போது, வரையறைக் குட்பட்டு 1% அளவே அனுமதி பெற்று புகைபோக்கி  வழியாகச் சென்றது! மிஞ்சியவை சிறிது சிறிதாக வடிகட்டப் பட்டுக் கோட்டையி லிருந்து  1% அளவை மீறாமல் வெளியாக்கப் பட்டது!

    கதிரியக்க விளைவுகளால் பொது நபருக்கு ஏற்பட்ட பாதிப்புகள்

    விபத்து நேர்ந்து இரண்டு நாட்களில் NRC [Nuclear Regulatory Commission] TMI-2 அணு உலைக்கு  5 மைல் வட்டாரத்தில் வாழும் கர்ப்பவதிகளையும், சிசுக்களையும் வீடுகளை விட்டு வேறு  இடங்களுக்குப் புகும்படி, பென்ஸில்வேனியா ஆளுநர் [Governor] மூல மாக ஆணை  பிறப்பித்தது! ஐந்து மைல் சுற்றளவில் குடியிருந்த 60% நபர்கள், 15 மைல் வட்டாரத்தில்  வாழ்ந்த 39% மக்கள் ஆணைக்குக் கீழ்படிந்து வெளியேறினர்! பிறகு அபாய வேளை  கடந்ததும் ஏப்ரல் 2 ஆம் தேதி அனைவரும் தம் வீடுகளுக்கு மீள அழைக்கப் பட்டனர்!  1999 மார்ச்சில் வெளியான TMI-2 ‘இருபது ஆண்டு கடப்பு நிகழ்ச்சி ‘ [Twentieth Anniversary]  அறிக்கையில் ஜாக் ராஸோ கூறியது:

    1. கோட்டை அரணிலிருந்து வெளிவந்த கதிர்வீச்சு வாயுக்கள், திரவத்தின் கசிவால் பொது  நபருக்கு விளையும் மிகுதியான அபாய எதிர்பார்ப்புகள் [Extra Health Risks] மிகக் குறைந்த  அளவே!

    2. TMI-2 அருகில் 50 மைல் வட்டாரத்தில் வாழும் மாந்தருக்கு அவரது வாழ்நாளில்  எதிர்பார்க்கப்படும், மதிப்பீடு செய்யப் பட்ட மிகுதிப் புற்று நோய் மரணம் [Extra Terminal  Cancer] ஒன்று! மற்றும் வேறு மரண நோய்கள், மரண மற்ற நோய்கள் இரண்டு!

    1996 இல் பென்ஸில்வேனியா அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் [US District Court of  Pennsylvania] நீதிபதி ஸில்வியா ராம்போ [Sylvia Rambo] TMI-2 விபத்தால் சமர்ப்பிக்கப் பட்ட  2100 உடல்நலக் கேடு வழக்குகளை மெய்யில்லை என்று நிராகரித்துத் தள்ளினார்!

    30 ஆண்டுகளுக்குப் பிறகு TMI-2 அணு உலையின் தற்போதைய நிலை!

    1986 ஜூலை முதல் ரயில், மோட்டார் வாகனங்களில் கதிர்வீச்சுக் குப்பைக் கலன்களின்  பயணங்கள் தொடங்கின! 1990 ஜனவரி மாதம் TMI-2 அணு உலையில் உருகி கடும்  உலோகப் பாறையாய்ப் போன யுரேனியப் பிளவுக் கட்டிகள் யாவும் நீக்கப் பட்டன!  ஆயிரக் கணக்கான ராஞ்சன் கதிரியக்கம் கொண்ட பிளவுக் கழிவுகள் கவசக் கலன்களில்  ஏற்றப் பட்டு அமெரிக்க எரிசக்தித் துறையகத்தின் இதாஹோ தேசீயப் பொறியியல்  ஆய்வுக் கூடத்திற்குச் [U.S. Dept of Energy, Idhaho National Engineering Laboratory] சோதிக்கவும்,  அதன் பின் புதைக்கவும் அனுப்பப் பட்டன! பென்ஸில் வேனியாவிலிருந்து பத்து  மாநிலங்களைத் தாண்டி இதாஹோ இடுகாடுப் புதை பூமியில் கலன்களை இறக்கி விட்டு,  ஒரு முறை மீள 90,000 டாலர் [1989 நாணய மதிப்பீடு] செலவானது!

    கதிர்த்தளக் கட்டுப்பாட்டு மேல் நிர்வாகி, டேல் மெர்ச்சென்ட் [Dale Merchant,Radiological Control  Field Operations] கூறியது: ‘TMI-2 அணு உலையின் பத்தாண்டு பராமரிப்பு முடிந்ததாகப்  பெருமை அடைகிறேன்! இதுவரைத் தொழிற் துறையில் யாரும் மேற்கொள்ளாத ஒரு  மாபெரும் சாதனை இது! தூரத்தில் தானாய்ச் செய்யும் ‘சுயப்பணி யந்திரங்கள், தொலை  இயக்குக் கருவிகள், பேரறுவை, உறிஞ்சல் பொறி நுணுக் கங்கள்,  [Robotics, Remote Toolings,  Cutting-Edge & Vacuum Technology, Handling Hot Radioactive Particles] யாவும் புதியதாய் வடிக்கப்  பட்டுப் பயன்படுத்தப் பட்டன!

    1990-1993 ஆண்டுகளில் மிஞ்சிய அற்பப் பணிகள் யாவும் தீர்க்கப்பட்டு, முடிவாகச் சுத்தம்  செய்யப்பட்டு, 1993 டிசம்பரில் TMI-2 அணு உலை நிரந்தரக் கண்காணிப்பு நிலையில்  [Monitored Storage Condition] ஓய்வெடுத்தது! அதன் இரட்டைப் பிறவியான TMI-1 முற்றிலும்  செம்மைப் படுத்தப்பட்டு 1989 ஆண்டு முதல் 100% ஆற்றலில் [900 MWe] சிறப்பாக இயங்கி  வருகிறது!

    திரி மைல் தீவு அணு உலையைச் சுத்தம் செய்ய நிதிச் செலவு

    1979 TMI-2 அணுமின் உலை விபத்து நிகழும் போது, அமெரிக்க அதிபதியாக இருந்தவர்,  அணுவியல் துறையில் வல்லமை பெற்ற எஞ்சினியரான, ஜிம்மி கார்டர் [Jimmi Carter]!  விபத்து நேர்ந்த சில தினங்களில் கார்டர் நேராகச் சென்று TMI-2 விளைவுகளைக்  கண்ட றிந்தார்! அணுமின் உலைகளின் மீதுள்ள பொதுநபர் மதிப்பை மேற்படுத்த அமெரிக்க  அரசு திரி மைல் தீவின் கோர விளைவுகளுக்குப் பொறுப்பேற்று, விபத்தின் காரணத்தை  ஆய்ந்து, நிலையத்தைச் சுத்தம் செய்யும் இமாலயப் பணியையும் மேற்கொண்டது!  அமெரிக்க அணுமின் உலைகளைக் கண்காணிக்கும் ‘அணுக்கருக் கட்டுப்பாடு பேரவை ‘  [Nuclear Regulatory Commission] அனைத்து பராமரிப்புப் பணிகளையும் ஆணை யிட்டு  மேற்பார்வை செய்தது! TMI-2 அணுமின் நிலைய உரிமையாளி G.P.U. [General Public Utilities  Corp. Parsipanny, N.J.].

    900 MWe ஆற்றல் கொண்ட TMI-2 அணு உலை இயக்குநர் மூடத்தனத்தால் விபத்தில்  சிக்கிச் சிதைந்த பிறகு, பத்தாண்டு களுக்கு மேல் நிறுத்தம் ஆகி பராமரிப்பில் கால  தாமதமானதால், பல பில்லியன் டாலர் பணம் விரையமானது! 1987 ஆண்டு மதிப்பீடு  நிதியில் வெளியே வாங்க வேண்டிய ஆற்றலுக்கு மேற்கொள்ளும் பணத்தின் ஏற்ற  இறக்கத்துக்குத் தக்கவாறு [Replacement Cost of Power], நாளொன்றுக்கு $500,000 -$1000,000  டாலர் முடங்கிய நிலையத்தின் நஷ்டச் செலவுத் தொகையாகும்!

    TMI-2 அணு உலைச் சுத்திகரிப்புச் செலவு ஒரு பில்லியன் டாலர் என்று [1983 நாணய  மதிப்பு] மதிப்பீடு செய்யப் பட்டது! 1979-1983 நான்கு ஆண்டுகளில் மட்டும் 60 மில்லியன்  டாலர் செலவாகி விட்டது! GPU உரிமையாளிக்கு இன்ஸூரன்ஸ் கம்பேனி அளித்த  தொகை 300 மில்லியன் டாலர்!அமெரிக்காவின் தொழிற் துறை நிறுவகங்கள் 100  மில்லியன் டாலர் அளிக்க முன்வந்தன! மற்றும் அமெரிக்க மின்னாற்றல் உற்பத்தி  நிறுவகங்கள் [Power Utilities] 64.6 மில்லியன் டாலர் உதவி செய்ய உறுதி கூறின! அமெரிக்க  அரசு [Dept of Energy] 159 மில்லியன் டாலர் அளித்தது! ஜப்பான் மின்னாற்றல் கூட்டகம்  [Japan Federation of Electric Power] தனது 22 எஞ்சினியர்களைப் பங்கு கெள்ள அனுப்பி, 18  மில்லியன் டாலர் நிதி அளித்து அணு உலைச் சுத்திகரிப்பில் துணை புரிய முன்வந்தது!

    இறுதியில் TMI-2 சுத்திகரிப்புக்கு மெய்யாகச் செலவான தொகை 973 மில்லியன் டாலர்  [March 1999 Report]!

    விபத்தில் முறையாக இயங்கிப் பாதுகாத்த சாதனங்கள்

    TMI-2 விபத்து மூலம் அமெரிக்காவின் அழுத்த அணுமின் உலை [PWR, Pressurized Water  Reactor] டிசைன் ஆக்கநெறி வெற்றியை ஒரு வகையில் நிரூபித்துக் காட்டியது!

    1. அபாய விளைகளால் சேர்ந்த 600,000 கதிர்வீச்சுத் திரவத்தையும், யுரேனியக்  கழிவுகளையும், கதிரியக்க வாயுக்களையும் 3 அடித் தடிப்புக் கோட்டை அரண் [Containment]  உள்ளடக்கி, பொது நபர்களைத் தாக்காதவாறு காப்பாற்றி யுள்ளது!

    2. கதிரியக்கம் பொங்கும் சிதைந்து போன 50 டன் உருகிய யுரேனியம், 50 டன் உருகாத  யுரேனியம், தகர்ந்து போன 50 டன் உலைச் சாதனங்களை 2800 டிகிரி C உஷ்ணத்தில், 2175  psi அழுத்தத்தில் [15 MPa] தாங்கிக் கொண்டு, ஒருவிதப் பிளவோ, கீரலோ இல்லாமல் அணு  உலைக்கலன் [Reactor Vessel] கட்டுப் படுத்தியது, சிறப்பான டிசைனைக் காட்டுகிறது!

    3. மில்லியன் கியூரிக் கணக்கில் கதிரியக்கத் திரவம் கோட்டைக்குள் சேர்ந்தாலும், மிகக்  குன்றிய அளவே [Radioactive Emission] அரணை விட்டு வெளியேறியது!

    4. அணு உலைக் கலனில் எங்கெல்லாம் நீர் [Core Cooling] இருந்ததோ, அங்கெல்லாம்  எரிக்கோல்கள் [50 டன் (50%)] சேதமடைய வில்லை!

    5. எதிர்பார்த்த அளவுக்கு அணுப்பிளவுத் துணுக்குகளால் [Fission Product Behaviour]  இன்னலோ அல்லது இடைஞ்சலோ பணியாளிகளுக்கு ஏற்பட வில்லை!

    TMI-2 விபத்தில் அமெரிக்கா கற்றுக் கொண்ட பாடங்கள்

    TMI-2 அணுமின் உலை விபத்திற்கு மூல காரணமான இயக்குநர்கள் யாவரும்  வேலையிலிருந்து வெளியே தள்ளப் பட்டனர்! ஆனால் யந்திரத் தவறுகளும், சாதனப்  பழுதுகளும், இயக்கப் பராமரிப்புச் சீர்கேடு களும் பின்னக் கொண்டு, பில்லியன் டாலர்  விபத்து நேர்ந்த போது, ஒருதிசைக் கண்ணோட்டத்தில் அவர்களை மட்டும் தண்டித்தது  நியாயம் அற்ற கொடுஞ் செயல்! அணு உலை டிசைநர், கட்டுநர், இயக்குநர், பயிற்சி  அளிப்போர் ஆகிய அனைவரும் குற்றக் கூண்டில் ஏற்றப்பட்டு விசாரணைக் குள்ளாகித்  தண்டிக்கப் பட்டிருக்க வேண்டும்!

    பணி புரிந்த இயக்குநர்களுக்கு, அணு உலை இயக்க நுணுக்கங் களில் போதிய பயிற்சிகள்  அளிக்காதது GPU உரிமையாளி செய்த முதற் தவறு! மிகவும் சிக்கலான அணு உலை  இயக்க ஏற்பாடுகளில் முரண்பாடுகள் நிகழ்ந்து அபாயம் விளையப் போகும் வேளைகளில்,  இயக்குநர் விரைவாகச் சிந்தித்துச் செயல்படாதது, அணுக்கரு விஞ்ஞானம், பொறியியல்,  வெப்ப யியக்கவியல் [Nuclear Physics, Nuclear Engineering & Thermodynamics] ஆகியவற்றில்  படிப்பில்லாமல் போனதையும், மின்சார நிலையத்தில் போதிய பயிற்சிகள் [Power Station  Operation Training] யில்லாமல் இயக்குநர் ஆனதையும் காட்டுகிறது!

    1979 இல் அமெரிக்கா TMI-2 அணுமின் உலை விபத்திற்கும், இந்தியாவில் போபால் நகரில் 1983 இல் நேர்ந்த விஷ வாயு விபத்துக்கும் பல ஒற்றுமைகள் காணப் படுகின்றன!  இரண்டும் அமெரிக்க உரிமையாளிகளால் நிர்வாகம் செய்யப் பட்டன! இரண்டு  விபத்துகளும் தூண்டப் பட்டு பேரழிவும், பெருஞ் செலவும் ஏற்பட மூல காரணமானவர்  போதிய படிப்பற்ற, பயிற்சியற்ற, சிந்தனை குன்றிய இயக்குநர்களே! அவ்வாறு தரமற்ற  இயக்குநர்களை நுணுக்கமான பணிகளைச் செய்ய அனுமதித்த நிர்வாகிகளே முதற்  குற்றவாளிகளாக கருதப் பட்டு ஏனோ விசாரிக்கப் படவில்லை!

    அணுமின் நிலைய ஆக்க நெறிகளில் நான்கு துறைகளில் செய்முறைகள் முற்றிலும்  திருத்த மாகி NRC தனது புதிய Nureg-0737 அறிக்கையை 1980 அக்டோபரில் வெளியிட்டது!

    1. அணு உலை இயக்கப் பாதுகாப்பு [Reactor Operational Safety]

    2. அணு உலைத் தள அமைப்பு & அணு உலை டிசைன் [Reactor Siting & Design]

    3. பிரதம வெப்பத் தணிப்பு நீரிழப்பு, நீராவி ஜனனி நிரப்பு நீரிழப்பு ஆகிய அபாயங்களைக்  கட்டுப்படுத்தல் [Handling Loss of Primary Coolant & Loss of Secondary Coolant (Feedwater) Accidents]

    4. அபாய நிகழ்ச்சிகளை எதிர்கொள்ள தயாரிப்பு முறைகள், கதிர்வீச்சுத் தாக்குதல் களைக் கட்டுப்படுத்தல் [Emergency Preparedness & Radiation Effects], அபாய காலத்தில் பொதுநபர்  பின்பற்றும் பாதுகாப்புப் பயிற்சிகள்.


    அமெரிக்காவின் எதிர்கால அணுமின் உலைகளின் நிலை

    TMI-2 விபத்துக்குப் பிறகு NRC எதிர்கால அணுமின் திட்டங் களுக்குக் கடும் விதிகளையும், பெரும் தேவைகளையும், நெடும் உளவு முறைகளையும் புகுத்தி முன்னறிவித்துப் பல புதிய லைஸென்ஸ் நெறி முறைகளை வகுத்தது! அவற்றில் நீடித்த இயக்குநர் பயிற்சிகள், உயர்தரத் தேர்ச்சி முறைகள் அழுத்தமாகக் கூறப் பட்டுள்ளன! அடுத்து புதிய நிலையங்கள் உருவாகும் முன்பே அவற்றின் ‘போலி அணுமின் உலை ஆட்சி அரங்குகள்’  [Reactor Simulator Panels] அமைப்பாகி, நிலைய இயக்குநருக்கு அணுமின் உலையின் அபாய வேளைப் பயிற்சிகள் அனைத்தும் முன்பாகவே கற்பிக்கப்பட்டு இயக்குநர் சோதிக்கப் பட வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது!

    அமெரிக்காவில் இப்போது 104 அணுமின் உலைகள் இயங்கிக் கொண்டு 97,400 MWe [20%] மின்னாற்றலைப் பாதுகாப்பாகப் பரிமாறி வருகின்றன! 1979 ஆண்டில் நேர்ந்த TMI-2 விபத்திற்குப் பிறகு மூடப்பட்ட நிலையங்கள் பல புத்துயிர் பெறப் போகின்றன!  அடுத்து பழையதாய்ப் போய் மூடப்பட்ட நிலையங்கள் பல புதுப்பிக்கப் படப்  போகின்றன!  அணுமின் சக்திக்கு அமெரிக்காவில் மீண்டும் பச்சைக் கொடி காட்டப் பட்டுள்ளது ஓர் நல்ல திருப்பமே ஆயினும், இப்போது ஜப்பானிய புகுஷிமா விபத்து (மார்ச் 11, 2011) அணுமின் உலைகளின் தலை விதியை நேர் மாறாக முற்றிலும் மாற்றி விடலாம்.  கடற்கரை ஓரங்களில் நிறுவப் பட்டு இயங்கி வரும் அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப் பட்டு மீண்டும் சீராக்கப் படலாம்.  காரணம் பல மாநிலங்களில் இப்போது அடிக்கடி இருளாட்சியும் [Blackouts (Complete Shutdown)], பழுப்பாட்சியும் [Brownouts (Partial Shutdown)] இடையிடையே உண்டாகி மின்சக்தியின் தேவையும், தொடர்ந்த சேவையும் உலகில் மிகையாகி வருகிறது!

    ++++++++++++++++++++++++

    Timeline Date Event (Three Mile Island Unit -1 & Unit -2)

    1968–1970 Construction

    April 1974 Reactor-1 online

    Feb 1978 Reactor-2 online

    March 1979 TMI-2 accident occurred. Containment coolant and unknown amounts of radioactive  contamination released into environment.

    April 1979 Containment steam vented to the atmosphere in order to stabilize the core.

    July 1980 Approximately 1591 TBq (43,000 curies) of krypton were vented from the reactor building.

    July 1980 The first manned entry into the reactor building took place.

    Nov. 1980 An Advisory Panel for the Decontamination of TMI-2, composed of citizens, scientists, and State  and local officials, held its first meeting in Harrisburg, PA.

    July 1984 The reactor vessel head (top) was removed.

    Oct. 1985 Defueling began.

    July 1986 The off-site shipment of reactor core debris began.

    Aug. 1988 GPU submitted a request for a proposal to amend the TMI-2 license to a “possession-only”  license and to allow the facility to enter long-term monitoring storage.

    Jan. 1990 Defueling was completed.

    July 1990 GPU submitted its funding plan for placing $229 million in escrow for radiological  decommissioning of the plant.

    Jan. 1991 The evaporation of accident-generated water began.

    April 1991 NRC published a notice of opportunity for a hearing on GPU’s request for a license  amendment.

    Feb. 1992 NRC issued a safety evaluation report and granted the license amendment.

    Aug. 1993 The processing of accident-generated water was completed involving 2.23 million gallons.

    Sept. 1993 NRC issued a possession-only license.

    Sept. 1993 The Advisory Panel for Decontamination of TMI-2 held its last meeting.

    Dec. 1993 Post-Defueling Monitoring Storage began.

    Oct. 2009 TMI-1 license extended from April 2014 until 2034.

    ++++++++++++++++

    தகவல்:

    1. What Happened at Harrisburg ? And Can it happen here ? By David Post [1979]

    2. The Spectrum, Institute of Electrical & Electronics Engineers Inc [April 1984]

    3. Nuclear Power, A Rational Approach By Robert Deutsch [1987]

    4. TMI Decontamination Activities, Nine Years Later By: Gordon Tomb, GPU Nuclear Power Corporation [Sep  1988]

    5. TMI Reactor Materials Behaviour & Plant Recovery, TMI Topical Meeting [Jan 1989]

    6. The Journal of the National Academy for Nuclear Training, Twenty Years Later in TMI [Jan-Apr 1999]

    7. Three Mile Island, A 20th Anniversary Remembrance By: Jack Raso M.S., R.D. [March 1999]

    8. Staffs Report to The Presidents Commission on the Accident at Three Mile Island [Sep 2002]

    9. Backgrounder on the Three Mile Island Accident  (US NRC Report) (August 2009)

    10. http://en.wikipedia.org/wiki/Nuclear_meltdown (Nuclear Meltdown) (March 26, 2011)

    11. http://en.wikipedia.org/wiki/Three_Mile_Island_accident (March 25, 2011)

    **************************

    Share
  • அகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?

    Safe casks 

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    முன்னுரை: 1944 ஆம் ஆண்டு உலகத்தின் முதல் அணுவியல் கழிவுச் சேமிப்பகம், அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் உள்ள ஓக் ரிட்ஜ் நகரில் [Oak Ridge, Tennessee] இரண்டாம் உலகப் போர் நடக்கும் சமயத்தில் தோன்றியது. முதல் அணு ஆயுதங்களுக்கு வேண்டிய யுரேனியம்-235, புளுடோனியம்-239 ஆகிய எருக்களைத் தயாரிக்கவும், அவற்றைத் தூய்மைப் படுத்தவும் ஓக் ரிட்ஜில் அணு உலைகளும், அணு எருச் சுத்திகரிப்புத் தொழிற் கூடங்களும் அமைக்கப் பட்டன! அந்த முன்னோடிச் சேமிப்பகம் பயன்படுத்தப் பட்ட பிறகு அதில் பெற்ற அனுபவத்தால், பலவித முறைகளில் அது இன்னும் விருத்தி அடைந்தது! அதைப் போன்ற பல சேமிப்பகங்கள் மற்ற நாடுகளிலும் ஆரம்ப காலத்தில் கையாளப் பட்டன. ஆனால் தொட்டி போன்ற அந்த முன்னோடிச் சேமிப்பகம் வீரியக் கதிர்வீச்சுக் கழிவுகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வில்லை!

    aj

    தற்போது ஆஸ்டிரியா, வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுத்துறைப் பேரவையின் [International Atomic Energy Agency (IAEA)] ஆலோசனைப்படி உலக நாடுகளில் கீழ்நிலை, இடைநிலை, உயர்நிலைக் கதிர்வீச்சுக் கழிவுகளுக்காக பலவிதக் குழிகளும், பாதாளக் கிடங்குகளும் அமைப்பாகி யுள்ளன. அம்முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கீழ்நிலைச் சேமிப்புக் குழிகள் பயன்பட்டு வருவதோடு, 42 புதிய பூதளக் கிடங்குகளும் [Geological Repositories] டிசைன் செய்யப் பட்டு, விருத்தி யடைந்து தயாராகி வருகின்றன.

    அகில நாடுகளில் அணு ஆயுதத் தயாரிப்பு, ஆராய்ச்சி அணு உலைகள், மின்சக்தி அணு உலைகள் இயக்கம், முதுமை எய்திய அணு உலைகள் முடக்கம், அணுவியல் எருக்கள் தனித்தெடுப்பு, சுத்தீகரிப்பு, எருக்கோல்கள் வடிப்பு [Fuel Fabrication], செறிவு யுரேனியத் தயாரிப்பு [Uranium Enrichment], தீய்வு எருக்கோல்கள் மீள் சுத்திகரிப்பு [Spent Fuel Reprocessing Plant] ஆகிய பல் வேறு பணிகளால் அனு தினமும் கதிர்வீசும் கழிவுகள் சேர்ந்து கொண்டே போகின்றன!

    Nuclear feul cycle

    IAEA அகில நாடுகளின் அனுபவக் கூட்டறிவையும், பயன்படும் தனியறிவையும், முன்னேறும் நாடுகளுக்கும், தேவையான பிற நாடுகளுக்கும் அளித்து, அணுத்துறைக் கழிவுகள் பாதுகாப்பாக அடக்க மாவதற்கு உதவி செய்து வருகிறது. அணுமின் சக்தி உற்பத்திச் செலவில் பத்தில் ஒரு பங்கு செலவே, அதன் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைப்புக்குத் தேவைப் படுகிறது!

    கதிர்வீச்சுக் கழிவுகள் அடக்கமாகும் புதைப்புத் தளம் தேர்ந்தெடுப்பு

    புதைப்புத் தளம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால், அது பல தகுதி விதி முறைகளை நிறைவேற்ற வேண்டும்.

    1. பூதளவியல் பண்பு [Geological Characteristics]

    2. பூதள நீரோட்ட அமைப்பு [Hydrology or Hydrogeology].

    3. பூதள இரசாயனவியல் பாதிப்பு [Geochemistry].

    4. பூதள அதிர்வு அபாயம் [Tectonics & Seismicity].

    5. மேற் பரப்பு இயக்கம் [Surface Process].

    6. காலநிலைப் பாதிப்பு [Meteorology].

    7. மனிதர் தூண்டும் நிகழ்ச்சிகள் [Human-induced Events].

    8. கழிவுகளைக் கடத்த வாகனப் போக்குவரத்து வசதி [Transportation of Wastes].

    9. பூதளப் பயன்பாடு [Land Use].

    10. மக்கள் வசிக்கும் திணிவு [Population Density or Distribution].

    11. சூழ்வெளிப் பாதுகாப்பு முறைகள் [Environmental Protection].

    12. முக்கியமாக இறுதியில் பொதுநபர் அங்கீகாரம் [Public Acceptance]. இவற்றுடன் மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு ஆகியவற்றின் அழுத்தமான உடன்பாடு, உறுதிப்பாடு, முடிவில் ஒப்பந்தம்!

    தற்போது உலக நாடுகளில் கீழ்நிலை, இடைநிலைக் கழிவுகள் சேமிக்க 17 இடங்கள் தேர்வாகிக் கட்டும் அனுமதி [லைஸென்ஸ்] பெற்றுள்ளன! மேலும் 17 நாடுகளில் 25 பூதளங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்த நாடுகளில் ஒன்று சைனா. சைனா கீழ்நிலை, இடைநிலைக் கழிவுகளைச் [Low Level, Medium Level Radioactive Wastes] சேமிக்க வடமேற்கு கோபி பாலை வனப் பகுதியில் இரண்டு, தெற்குப் பகுதியில் இரண்டாக நான்கு இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

    சில தேசங்களில் புதைப்புக் கிடங்குகள் அணுத்துறைச் சாதனங் களின் அருகே அமைக்கப் பட்டுள்ளன. உதாரணமாக இங்கிலாந்தில் டிரிக் [Drigg, U.K.], பிரான்ஸில் மான்ச் மையம் [Centre de la Manche], ஜப்பானில் ராக்கஷோ [Rakkasho, Japan], பின்லாந்தில் ஒகிலெளட்டு [Olkiluoto, Finland] போன்ற பூதளப் புதைப்பு இடங்கள் அணுவியல் கூடங்களுக்கு அருகிலே உள்ளன! பல நாடுகள் ஒன்றாக இணைந்து பொதுப் புதைப்புக் கிடங்குகள் [Regional Multi-national Repository] நிறுவிப் பயன்படுத்த ஐரோப்பிய நாடுகள் சில ஒப்புக் கொண்டு உள்ளன!

    பூதளப் புதைப்பிடத்தின் சிறப்பு டிசைன் தேவைகள்

    புதைப்பிடத் தேர்வு ஒரு நாட்டின் பூதள நீர், நில வளத்தையும், கீழ்த்தள நீரோட்டத் தன்மையும், அணுசக்திக் கட்டுப்பாடுப் பேரவையின் விதிகளையும் பொறுத்தது. அவற்றின் டிசைன் குறிக்கோள் 1. கதிர்வீச்சுத் தீண்டல் குறைப்பு அல்லது கதிர் அணுக்கருத் துணுக்குகள் கசிந்து உயிரியல் கோளத்தில் [Biospere] வெளியேறிப் பரவும் அளவுக் கட்டுப்பாடு 2. பொதுநபர், பணியாளிகள் ஆகியோருக்கு மிகக் குன்றிய கதிரடித் தாக்குதல் 3. மிகக் குறைந்த பராமரிப்பு வினைகள் 4. கண்காணிப்பு வசதிகள் 5. 24 மணிப் பாதுகாப்பு ஏற்பாடுகள்.

    பூதள புதைப்பிடங்களின் கதிர்வீச்சுக் கழிவுகளுக்குக் கவசங்களாகப் பயன்படும் பல்லடுக்குப் பொறியியல் அரண்கள் [Multiple Engineered Barriers] அமைக்கப் பட்டுள்ளன. அவை யாவும் காங்கரிட் அரண்கள் [Concrete Vaults]. அந்த அரணில் மீள்நிரப்பிப் பண்டம் [Backfilling Material], இரசாயனத் தடுப்பி [Chemical Barrier], வாயு வெளி நீக்கி [Gas Vent], தளர்ச்சிக் களம் [Buffer Zone] போன்றவை இணைக்கப் பட்டுள்ளன.

    அகில நாடுகளில் பலவிதப் புதைப்புக் கிடங்குகள் டிசைன் செய்யப் பட்டுள்ளன. அவற்றில் 62% அமைப்புகள் தரை மட்டத்துக்கு 34 அடிக்குக் [40 மீட்டர்] கீழ் உள்ளன. 18% எளிதான தரை மட்ட ஏற்பாடுகள். 7% சுரங்கப் பாதாளக் குழிகள். 4% 2000-4000 அடிக்குக் கீழான பூதளக் கிடங்குகள்.

    அகில நாடுகளில் அமைந்துள்ள கழிவுக் கிடங்குகள்

    அமெரிக்காவில் 1980 ஆம் ஆண்டு ‘கீழ்நிலைக் கதிர்வீச்சுக் கழிவு விதி ‘ [Low Level Radioactive Waste Policy] அமுலான பிறகு, புதிதாக எந்த இடமும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. எட்டு மாநிலங்களில் பூதளத் தேர்வு முன்னேறி வருகிறது. தேர்ந்தெடுக்கப் பட்ட நான்கு இடங்கள்: 1. நெப்ராஸ்காவில் மத்திய புதைப்பகம் [Nebraska (Central Interstate Compact)], 2. வட கரோலினாவில் தென்கிழக்குப் புதைப்பகம் [North Carolina (Southeast Compact)], 3. காலிஃபோர்னியாவில் தென்மேற்குப் புதைப்பகம் [California (Southwest Compact)], 4. டெக்ஸஸில் டெக்ஸஸ் புதைப்பகம் [Texas, (Texas Compact pending)] லைஸென்ஸ் பெறப் போகின்றன. கனெக்டிகெட்டில் [Connecticut] பொது நபர்களின் எதிர்ப்பைச் சமாளித்து, ‘பூதளத் தேர்வு, கட்டுப்பாடு ‘ [Choice & Contorl] ஆகிய இரண்டு முறைகளிலும் பொது மக்கள் ஈடுபட வசதி செய்யப் பட்டது!

    ரஷ்யாவில் 1960-1970 ஆண்டுகளில் பல தரப்பட்ட கதிரியக்கக் கழிவுகளைப் புதைக்க பல விதக் கிடங்குகள் உருவாக்கப் பட்டன. அவற்றைப் போல மற்ற கிழக்கு ஈரோப் நாடுகளிலும் அமைக்கப் பட்டன. பூதளத்தின் கீழ் நீரோட்ட மட்டத்திற்கு 15 அடி மேலாக அவை யாவும் அமைய டிசைன் செய்யப் பட்டன. ஸெர்கீவ் போஸாட் [Sergiev Posad] என்னும் இடத்தில் ‘காங்கிரிட் அரண்கள் ‘ [Concrete Vaults] தரைக்குக் கீழ் கட்டப் பட்டன. இரட்டைக் காங்கிரிட் சுவர்கள் கொண்டு, பிட்டுமென் தார் [Bitumen Tar] அடுக்காய்ப் பூசப்பட்டவை. கழிவுத் திட்டுகள் [Waste Packages] அரணுள்ளே தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு, செமென்ட் காரையால் நிரப்பப்படும். அரண் நிரம்பியதும் காங்கிரிட் ஊற்றி அடைக்கப்பட்டு, மேலே உறுதியாக்கப்பட்ட காங்கிரிட் உலோக மூடியால் மூடப்பட்டு, மேலும் செமெண்டால் இணைக்கப்படும்.

    Uranium Storage Process

    ஆஸ்திரேலியாவில் பொறி நுணுக்கமான ஒரு பூதளக் கிடங்கு தேர்வாகப் பொது மக்கள் முழுப் பங்கெடுக்க வாய்ப்பளிக்கப் பட்டது. கனடாவில் ரேடியம், யுரேனியம் சுத்திகரிப்புக் கழிவு களைப் புதைப்பது பொது மக்களின் எதிர்ப்பு வலுத்ததால் தாமத மாகி, அரசாங்கம் முதல் பூதளத்தை நிராகரித்தது! பின்னால் தனியார் பணிக்குழு முன்வந்து அளித்த, நகராட்சி உறுப்பினர் பங்கு கொள்ளும் ஐந்து கட்டத் திட்டம் நிறைவேறிப் பூதளப் புதைப்பிடங்கள் தேர்வாயின.

    ஹங்கேரியில் முதலிரண்டு இடங்கள் தடுக்கப்பட்டுக் கீழ்நிலை, இடைநிலைக் கழிவுகளைச் சேமிக்க தேசீயப் புதைப்பிடம் ஒன்றை 1992 இல் ஹங்கேரி அணுத்துறைப் பேரவை [Hungarian Atomic Energy Commission] முடிவு செய்தது. அதைப் பின்பற்றி மக்கள் சமூகமே முன்வந்து, இன்னும் ஆறு புதைப்பு இடங்களைக் குறித்துத் தந்தது!

    இந்திய அணுத்துறைக் கட்டுப்பாடு வாரியம் வெளிடாதவை!

    இந்தியாவில் சென்னைக் கூடங்குளத்தில் உருவாகி வரும் ரஷ்யாவின் இரட்டை [1000 MWe ஆற்றல் கொண்ட] அணுமின் உலைகளில் ஒன்று ஓராண்டுக்கு முழு ஆற்றலில் இயங்கினால் சுமார் 100 கன அடி [cu.ft] மேல்நிலைக் கழிவு விளையும்! உயர்நிலைக் கதிர்வீச்சுக் கழிவான [High Level Radioactive Waste] அந்தக் கொள்ளளவில் 20 மில்லியன் கியூரி [curie] நீள் ஆயுள் கதிரியக்கம் [long Half Life Radioactivity] எழுகிறது! அவை 67,000 வாட்ஸ் [watts] வெப்பத்தை வெளியேற்றி நாளடைவில் குறைந்து கொண்டே வருகிறது. இரட்டை அணு உலைகள் 10 ஆண்டு இயங்கினால், 2000 கன அடிக் கழிவுகள் சேரும்!

    இதுவரை 14 அணுமின் உலைகளும், சில ஆராய்ச்சி அணு உலைகளும் 30 ஆண்டு முதல் 2 ஆண்டு வரை இடை இடையே பாராமரிப்புக்கு நிறுத்தமாகி இயங்கி வந்துள்ளன! அத்துடன் மூன்று தீய்ந்த எரு சுத்திகரிப்புக் கூடங்கள் [Spent Fuel Reprocessing Plants], எருக்கோல் வடிப்புச் சாலைகள் [Fuel Bundle Fabrication Plants], யுரேனியச் சுத்தீகரிப்புத் தொழிற் கூடங்கள் [Uranium Separation Plants] ஆகியவை தினமும் கதிர்வீச்சுக் கழிவுகளை விளைவித்து வருகின்றன!

    Dry Cask

    2001 ஆண்டு முடிவு அறிக்கையில் [2001 Annual Report] கூட உயர்நிலை, இடைநிலை, கீழ்நிலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் எத்தனைக் கன அடி, திரவக் கழிவுகள் எத்தனை காலன், திடக்கட்டி ஆக்கப்பட்ட கழிவுகள் எத்தனை டன் என்னும் விபரங்களைத் தவிர இந்திய அணுத்துறைக் கட்டுப்பாடு வாரியம் [Atomic Energy Regulatory Board] மற்ற நிகழ்ச்சிகளை வெளியிட்டிருக்கிறது! முக்கியமாக உயர்நிலைக் கழிவுகள் எங்கே, எப்படி நிரந்தரமாக அடக்கம் செய்யப் படுகின்றன என்னும் முக்கிய விபரங்கள் இந்திய அணுத்துறை அகிலவலை முகப்புகளில் எதனிலும் காணப்பட வில்லை!

    இப்போது [2015 ]இயங்கி வரும் 21 இந்திய அணுமின் உலைகள், ஆராய்ச்சி அணு உலைகள் யாவும் 220, 540, 1100 MWe மின்னாற்றலை மிஞ்சியவை அல்ல! பாரதத்தில் கட்டப் பட்டு எதிர்காலத்தில் இயங்கி வரும் புதிய பூத அணுமின் உலைகள்தான் [500 MWe, 1100 MWe] ஏராளமான அணுவியல் கழிவுகளை வெளியாக்கப் போகின்றன! உலக நாடுகளில் உச்சமான 1300 MWe மின்னாற்றல் கொண்ட அணுமின் உலைகள் சில நாடுகளில் இயங்கி வருகின்றன! அகில நாடுகள் வெளியாக்கும் கதிர்வீச்சுக் கழிவுகளின் அளவை ஒப்பிட்டால், இந்திய அணு உலைகளின் அணுவியல் கழிவுகள் மிகவும் குறைந்தவை என்று சொல்லலாம்!

    தீய்ந்த எரிக்கோல் தங்கும் நீர்த் தடாகம்

    IAEA அறிக்கையின்படி பாம்பேயில் இருக்கும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் [Bhabha Atomic Energy Centre] அருகே ஆறு கீழ்நிலை, இடைநிலைக் கழிவுப் புதைப்புக் கிடங்குகள் உள்ளதாக தெரிய வருகிறது! அவை யாவும் உறுதியாக்கப் பட்ட காங்கிரிட் தொட்டிகள் [Reinforced Concrete Trenches], மற்றும் பல்வேறு விதமான கழிவுகளை அடக்கம் செய்யும் ஆழக் குழிகள் [Tile Holes]. காங்கிரிட் தொட்டிகள் யாவும் நீர்க்கசிவுகள் இல்லாதவை! அடுத்து மழைநீர் ஊடுறுவ முடியாதவை [Waterproof]. காங்கிரிட் மூடியால் அவை இறுக்கமாக மூடப் பட்டவை. கதிர்வீச்சு புறத்தே உள்ளவரைத் தாக்கா வண்ணம், அவைக் கவசமாகப் பெட்டியாகவும் உள்ளன. பேய் மழை கொட்டும் மழைக்காலச் சமயத்தில் நீர் இறங்காதபடி, நீரகற்றித் திரவங்கள் [Water Repellents] பூசப்பட்டவை. ஆழக் குழிகள் 15 அடி ஆழம் கொண்டவை. காங்கிரிட் தொட்டிகள் கதிர்வீச்சைக் குறைக்க முடியாத கழிவுகளும், ஆல்ஃபாக் கதிர்கள் [Alpha Rays] வீசும் கழிவுகளும் ஆழக் குழிகளில் புதைக்கப் பட்டன.

    முடத்துவமான ஸ்பெயின் அணுமின் உலையின் கதிரியக்கக் கழிவுகள்

    17 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய ஸ்பெயின் வாண்டெலாஸ்-1 [480 MWe மின்னாற்றலுள்ள Vandellos-1] அணுமின் உலையின் உயர் அழுத்த டர்பைன் கலத்தில் [High Pressure Turbine] 1989 இல் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு 1990 இல் நிரந்தரமாக மூடப் பட்டது! இந்தியாவில் டெல்லிக்கு அருகில் இருக்கும் நரோரா அணுமின் நிலையத்தில் இதே போல்தான் 1993 இல் கீழ் அழுத்த டர்பைன் சுழலியில் தீப் பற்றிப் பெரும் சேதம் விளைந்தது! இந்த இரண்டு விபத்துக்களும் அணு உலைப் பாதுகாப்புச் சாதனங்களுக்கு இடையூறு விளைவித்தாலும், அணு உலையால் தீ விபத்துத் தூண்டப் படவில்லை!

    கோடிக் கணக்கான நிதியைச் செலவு செய்து, நரோரா செப்பணிடப் பட்டுத் தற்போது இயங்கி வருகிறது! ஆனால் வாண்டெலாஸ் அணு உலைத் திரள்கரி மிதவாக்கியைப் பயன்படுத்தி வாயுவால் வெப்பம் நீக்கப்படும் [Graphite moderated & Gas cooled Reactor] பிற்போக்குச் செர்நோபிள் மாடலைச் சேர்ந்தது! 1986 இல் செர்நோபிள் வெடித்துச் சிதைந்து போன காரணத்தால், டர்பைனில் தீப்பற்றிய ஸ்பெயினின் திரள்கரி அணுமின் உலையும் மூடப்பட்டு, 1996 இல் முடத்துவ மானது [Decommissioned]!

    1. வாண்டெலாஸின் எருக்கோல்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, நீர்த் தடாகத்தில் [Storage Water Pool] சேமிக்கப் பட்டன. அணு உலைச் சாதன இயக்கங்களால் விளைந்த கீழ்நிலைத் திடக் கழிவுகள், கதிர்வீசும் உலோகத் துண்டுகள், சுத்தீகரிப்பு இரசாயனக் கழிவுகள் [Chemically treated Liquid Wastes], யாவும் உலோகத் தொட்டிகளில் காங்கிரீட் கட்டிகளாய்ச் சுருக்கப்பட்டன!

    2. 200,000 திரள்கரி உறைகள், மிதவாக்கிக் கட்டிகள், தயாரான மூன்று காங்கிரிட் அரண்கள் ஒன்றில் அடைக்கப் பட்டன!

    3. அமுக்கிச் சிறுக்கும் கழிவுகள் [Compactable Wastes] 200 லிட்டர் கொள்ளளவுள்ள 900 கலன்களில் அடைக்கப் பட்டு மூடப்பட்டன. அவற்றுடன் 492 கட்டுப்பாடு செய்யும் நியூட்ரான் உறிஞ்சிக் கோல்களும் [Absorber Rods] சேமிக்கப் பட்டன.

    4. காங்கிரிட் அரண்களின் உள்ளே இருந்த கழிவுகளின் பேரளவு கதிர்வீச்சு, புறத்தே மணிக்கு 4 மில்லி ரெம் [4 mRem/hour] கதிரடி வீதத்தில் இருந்தது.

    அமெரிக்காவில் பேரளவு கதிர்வீச்சுக் கழிவுகளின் சேமிப்பு!

    சோவியத் யூனியன் பொதுடமைக்கு எதிராக ‘ஊமைப்போர் ‘ நிலவிய சமயத்தில் [Cold War (1952-1989)] அமெரிக்காவும், ரஷ்யாவும் அணு ஆயுதங்களை அடுக்கிக் கொண்டே போன போது, அமெரிக்கா மட்டும் 32,000 அணு ஆயுதப் போர் வெடிகளைத் [Nuclear Warheads] தயாரித்தது! அவற்றுக்கு அணு எருக்களாகப் பயன்பட்ட செறிவு யுரேனியம்-235 [90% மேல்], தூய்மையான புளுடோனியம்-239 ஆகியவற்றைத் தனித்தெடுக்க, செறிவாக்க, தூய்மைப் படுத்தும் வினைகளில் விளைந்த கழிவுகளின் கொள்ளளவு [114 அணுமின் உலைகளின் தீய்ந்த எருக்களின் கழிவையும் சேர்த்து] 52,000 டன்! புளுடோனிய திரவக் கழிவு மட்டும் 91 மில்லியன் காலன்!

    பேரளவு கதிரியக்கக் கழிவுகளை கணக்கில்லாமல் விளைவித்துக் கொண்டு, ஆயிரக்கணக்கான டன் அளவுகளில் சேகரித்து வரும் முதல் நாடு அமெரிக்கா! அதற்கு அடுத்தபடியாக ரஷ்யாவைச் சொல்லலாம்! 1945 இல் வாஷிங்டன் மாநிலத்தின் ஹான்ஃபோர்டு [Hanford, Washington State] அணு உலையில் முதல் அணு குண்டுகளுக்கு புளுடோனியம் தயாரிக்கப் பட்டது! 1989 இல் அந்த அணு உலை மூடப் படுவதற்கு முன்பு, அமெரிக்கா அணு ஆயுதங்களுக்காக 59 டன் புளுடோனியத்தை அங்கே தயாரித்துச் சேமித்தது! அருகில் ஓடிய கொலம்பியா ஆற்று நீரே அணு உலை வெப்பத்தைத் தணிக்கப் பயன் பட்டது. அணு உலையில் நுழைந்து ஆற்றுக்கு மீளும் நீரோட்டத்தில் கசிந்து, கதிர்வீசும் புளுடோனியம், ஸீஸியம், ஸ்டிரான்சியம், சோடியம், ஆர்செனிக் போன்ற நஞ்சு உலோகங்கள் காணப்பட்டன!

    Spent fuel burial

    புளுடோனியக் குண்டுகளின் எச்சக் கழிவுத் திரவம் மட்டும் 45 பில்லியன் காலன் சேர்ந்து, கசியும் தொட்டிகளில் நிரப்பப் பட்டு, கொலம்பியா ஆற்றில் வழிந்தோடப் பயமுறுத்தியது! தற்போது 4 பில்லியன் டாலர் செலவில் திரவக் கழிவைக் கண்ணாடிக் கழிவாய்ச் சுண்டிப் புதைக்கப் பேரளவு ‘கழிவுக் திரட்சிக் கூடம் ‘ [Waste Vitrifying Plant] ஒன்று கட்டப் பட்டு வருகிறது!

    அமெரிக்காவில் அணு ஆயுதத் தயாரிப்புக் கூடங்களின் அருகே உள்ள பல புதைப்புக் குழிகளில் புளுட்டோனியம் தீண்டிய கழிவுகள் கொட்டிக் கிடக்கின்றன என்று அமெரிக்க இந்தியச் சூழ்வெளி விஞ்ஞானி, அர்ஜுன் மக்கிஜானி [Arjun Makhijani. Ph.D. Environmentalist] கூறுகிறார். இதாஹோ மாநிலத்தில் [Idaho State] மட்டும் ஒரு டன் புளுடோனியக் கழிவுகள் மண்ணில் பரவி யுள்ளன என்று மக்கிஜானி தான் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டுகிறார்.

    ‘தன்வினை தன்னைச் சுடும் ‘, ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான் ‘ என்பவை தமிழ்ப் பழமொழிகள். உலக நாடுகள் அனைத்தையும் தகர்த்துப் பொடியாக்கத் தகுதி பெற்ற 32,000 அணு ஆயுதப் போர் வெடிகளை [Nuclear Warheads], அமெரிக்கா தன் கைவசம் வைத்துள்ளது! எண்ணற்ற மாந்தரை அழிக்க வல்ல [Mass Destruction] அந்தக் கோர ஆயுதங்களை ஆக்கிய அமெரிக்கத் தளங்கள், இப்போது தங்கிவிட்ட கதிரியக்கக் கழிவுகளால், அமெரிக்க மக்களுக்கே பல்லாண்டு தீங்கு விளைவிக்கும் விதைகளை பல மாநிலங்களில் கட்டுப்பாடு இல்லாமல் தெளித்துள்ளன!

    +++++++++++++++++++++

    தகவல்:

    1. Radioactive Waste Disposal, Global Experience & Challenge, IAEA Bulletin 39/1 [www.iaea.or.at/worldatom/]

    2. Nuclear Science & Society By: Bernard Cohen [1974]

    3. Atomic Science, Bombs & Power By: David Dietz [1962]

    4. The Careless Atom By: Sheldon Novick [1969]

    5. Living With Radiation, National Geographic [April 1989]

    6. Nuclear Waste By: National Geographic [July 2002]

    7. Indian Atomic Energy Regulatory Board Bombay, Annual Report [2001]

    8. https://www.iaea.org/About/Policy/GC/GC50/GC50InfDocuments/English/gc50inf-3-att5_en.pdf  [2006]

    9.  http://issues.org/28-2/alvarez/  [2012]

    10.  http://www.nucleartourist.com/systems/spfuel1.htm

    11.  https://en.wikipedia.org/wiki/Dry_cask_storage  [September 9, 2015]

    12.  http://www.nrc.gov/waste/spent-fuel-storage.html  [October 15, 2015]

    ++++++++++++++++

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] March 20, 2016]  R-1]

    Share
  • பிரிட்டனைப் பிரான்சுடன் இணைக்கும் ஈரோக்குகை உலகிலே நீளமான கடலடிக் கணவாய்

    — சி. ஜெயபாரதன்.

    eurotunnel

    [World ‘s Longest Subsea Eurotunnel

    Connecting Britain to Europe

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    https://youtu.be/L7GFFntXi8I

    UnderseaTunnel Link

    முன்னுரை: 13,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் தீவு இயற்கையாகவே இருந்த குறுகிய நிலச்சந்தி மூலம் ஈரோப்புடன் இணைந்திருந்ததாகத் தளவியல் ரீதியாக அனுமானிக்கப் படுகிறது! கி.பி.1750 ஆம் ஆண்டிலே இங்கிலாந்திற்கும், பிரான்சிற்கும் கடலடிக் குகை அமைக்க வேண்டும் என்ற ஆர்வமும் முயற்சியும் இருந்தது வரலாற்றில் அறியப் படுகிறது! பிரென்ச் அதிபதி நெப்போலியன் ஆணையின் மேல் முதலாவது குகை அமைப்பு திட்டம் 1802 ஆம் ஆண்டில் தயாரிக்கப் பட்டது. அத்திட்டப்படி இடையில் இருந்த ஒரு தீவுடன் இணைத்து இரண்டு குகைகள் அமைத்துக் குதிரை வண்டிப் போக்குவரத்தைத் துவக்குவதாய் இருந்தது. சிறிது காலம் நீடித்த ‘அமியன்ஸ் சமாதானத் ‘ தருணத்தில் [Peace of Amiens] நெபோலியனின் திட்டத்தை இங்கிலாந்து ஏற்றுக் கொண்டிருந்தது! ஆனால் ஓராண்டுக் குள்ளே பிரிட்டன் மீது நெப்போலியன் கொண்டிருந்த வெறுப்பு மறுபடியும் திரும்பவே, அத்திட்டம் அத்துடன் கைவிடப்பட்டது!

    பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தொழிற்புரட்சி நுணுக்கம் மிகுந்து, இருப்புப்பாதை இரயில் யுகம் பிறக்கவே, பிரிட்டன் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளை இணைக்கும் கால்வாய்க் குகை [Channel Tunnel or Chunnel] ஒன்றைக் கட்டும் எண்ணம் மீண்டும் உருவெடுத்தது! அதே சமயத்தில் பகைவர் படையெடுப்பைத் தடுக்க இங்கிலாந்துக்கு இயற்கையாகவே ஏற்பாட்டுள்ள கடல் அரணைக் கால்வாய் குகை நீக்கிவிடும் என்று சிந்தித்து, பிரிட்டனும் அந்தப் பாதுகாப்பு வேலியை இழக்கத் தயாராக இல்லை! அக்குறையைத் தவிர்க்க முன்னோடித் திட்டங்களில் குகைக் கணவாயை, யுத்த சமயத்தில் கடல் வெள்ளத்தால் மூழ்க்க பூதத் திறப்பிகள் [Giant Valves] அமைக்கப் பட்டிருந்தன!

    1861 இல் ஜேம்ஸ் சாமர்ஸ் கடலடிக் கண்வாய் இரயில் பாதையை அமைக்க [The Channel Railway Connecting England & France By James Chalmers] முழு டிசைன் பணிகளைச் செய்து, விபரங்கள் அடங்கிய திட்டத்தைத் தயாரித்து, நிதி மதிப்பீடையும், நிதி சேர்ப்பு விளக்கத்தையும் வெளியிட்டார். அவரது திட்டத்தில் மாபெரும் இரும்புக் குழலை [Huge Iron Tube on the Seabed] கடல்தளத்தில் கிடத்த ஏற்பாடு செய்திருந்தார். அந்த டிசைனில் பல சிக்கல்களும் பிரச்சனைகளும் இருந்ததால் அத்திட்டம் ஏற்றுக் கொள்ளப்படாது பிறகு கைவிடப் பட்டது!

    1860, 1880, 1920, 1945 ஆண்டுகளில் மீண்டும் தோன்றிய புதிய முயற்சிகள் முளைத்து எழுவதற்கு முன்பே மறுபடியும் முடக்கப் பட்டன. இறுதியாக 1987 ஆம் ஆண்டில் முழு மூச்சில் பிரிட்டன், பிரான்ஸ் இரண்டு வல்லரசு நாடுகளும் கூடி உழைத்து, 150-250 அடி ஆழத்தில் இங்கிலீஷ் கால்வாய்க் கடலடியைக் குடைந்து இருபதாம் நூற்றாண்டின் சிரமமான, பிரமிக்கத் தக்க ஈரோ கணவாயை 1994 இல் கட்டி முடித்தார்கள். பிரிட்டனில் ஃபோக்ஸ்டோன், பிரான்ஸில் சங்கத் [Folkestone, Sangatte] ஆகிய இரு நகரங்களை இருப்புப் பாதை மூலமாக இணைத்து இரயிலில் பயணிகளும், வாகனங்களும், பளு பாரங்களும் போய்வர ஏதுவாக்கப் பட்டுள்ளது. பிரிட்டிஷ் பிரதம மந்திரி மார்கரெட் தாட்சர், பிரென்ச் அதிபர் பிரான்கொ மிட்டிரான்ட் [Margaret Thatcher & Francois Mitterand] ஆகியோர் இருவரும் 1995 ஆண்டில் இரயில் போக்குவரத்துப் பாதையான ‘ஈரோ குகைக்குத் ‘ [Eurotunnel] திறப்பு விழாவை நிகழ்த்தினார்கள். 21 பில்லியன் டாலர் செலவில் கட்டி முடித்த ஈரோடன்னல், இருபதாம் நூற்றாண்டின் உன்னத பொறியியல் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது! அந்த நிதி மதிப்பு ஸான் பிரான்சிஸ்கோ வளைகுடா மீதுள்ள பொன்வாயில் பாலத்தைக் [Golden Gate Bridge] கட்டிய தொகையைப் போல் 700 மடங்கு என்று கருதப்படுகிறது!

    Eurotunnel -4

    ஈரோக்குகை வழியாகச் செல்லும் இரயில் போக்குவரத்துகள்

    ஈரோ குகை வழியாக நான்கு வகை வாகன வண்டிகள் அனுதினமும் பயணம் செய்கின்றன. மின்சார வண்டியான ‘மீட்சி இரயில் ‘ எனப்படும் ஷட்டில் [Le Shuttle], ஈரோப் கண்டம் முழுவதும் சுற்றிப் பயணம் செய்யும் டாசல் எஞ்சின் இழுக்கும் வேக வண்டி, ‘ஈரோஸ்டார் ‘ [Eurostar], பார இரயில் [Goods Train] ஆகிய பெரிய வாகனங்களும், பராமரிப்பு செய்யும் சிறிய பணி வண்டிகளும் குகைகளின் வழியாகச் செல்பவை. 7600 hp [Horse Power] இழுக்கும் ஆற்றல் கொண்டு 2000 டன் எடையுள்ள மீட்சி இரயில் குகைப் பாதை நிலையங்களுக் கிடையே மட்டும் திரும்பத் திரும்பப் பயணம் செய்பவை. கார்கள், பஸ்கள் கூட ஏற்றப் பட்டு மீட்சி வண்டி மூலமாக அனுதினம் கடலைக் கடக்கின்றன.

    Eurotunnel -5

    பிரான்ஸ், பிரிட்டன் இரட்டை நாட்டுக்குச் சொந்தமான, 3600 பேர் பணி புரியும் ஈரோடன்னல் கம்பேனி [Eurotunnel Consortium] இரயில் கணவாய்க் கண்காணிக்கும் பொறுப்பை 2086 ஆண்டுவரை ஏற்றுக் கொண்டுள்ளது. 2000 ஆண்டில் மட்டும் 2.8 மில்லியன் கார்கள், 80,000 பஸ்கள், 1.1 மில்லியன் டிரக்குகள் ஈரோக் கணவாய் வழியாகச் சென்றுள்ளன! அதே காலத்தில் லண்டனிலிருந்து பாரிஸுக்கு ஈரோஸ்டார் இரயில் பயணத்தில் [Eurostar Rail Service] குகை வழியாக 7.1 மில்லியன் மாந்தர் பயணம் செய்ததாக அறியப் படுகிறது! மேலும் 2.9 மில்லியன் டன் பாரங்களும் இரயில் பளு வண்டிகள் மூலம் அனுப்பப் பட்டுள்ளன.

    Cutawawy

    கடலடிக் குகையைக் குடையும் தொழிற்துறை நுணுக்கம்

    தளர்ந்த மண்ணடங்கும் [Soft Soil] கடலடியிலோ அல்லது ஆற்றுக்கு அடியிலோ கணவாய்க் குகையைக் குடைந்து அமைப்பது, இன்னல்களைத் தரும் ஓர் அசுரப் பணி! மனிதர் யந்திரங்களைக் கொண்டு தோண்டும் போது, திடாரென மண்திட்டுகள் சரிந்து விழுவதும், வெள்ளம் கசிந்து குகையை மூடுவதும் விபத்துகளை ஏற்படுத்தும் எதிர்பாராத இடர் நிகழ்ச்சிகள்! ‘கடற்புழு ‘ அல்லது ‘கடல் நத்தை ‘ [Shipworm or Marine Mollusks] எனப்படும் ‘குகை தோண்டிக் கூடு ‘ கண்டுபிடிக்கும் வரை நீருக்கு அடியில் குகையைக் குடைவது முடியாத வினையாகக் கருதப்பட்டது! அக்கருவி பாதுகாப்பு அரண் ஒன்றைக் கொண்டு குடைந்து வெட்டும் உளிப்பற்கள் உள்ளும், புறமும் நத்தைபோல் நகர வசதி செய்யப் பட்டுள்ளது. அத்தகைய பாதுகாப்பு வெட்டுக் கருவியை 1825 இல் அமைத்த முதல் பிரிட்டிஷ் எஞ்சினியர், மார்க் இஸாம்பார்டு புருனெல் [Marc Isambard Brunel]. புருனெல் அக்கருவியைப் பயன்படுத்தி, உலகின் முதல் நீரடிக் குகையைத் தேம்ஸ் நதியின் கீழே குடைந்து அமைத்துக் காட்டினார். ஆனால் 1828 ஜனவரி 12 இல் குகையை ஆறு உடைத்து, வெள்ளம் பெருகி ஆறு நபர்களை மூழ்க்கியது! நல்ல வேளையாக புருனெலின் புதல்வன் அந்த விபத்தில் மூழ்காமல் தப்பினான்! பதினெட்டு ஆண்டுகள் தொடர்ந்த தேம்ஸ் நதித் திட்டத்தில், ஐந்து முறைகள் உடைப்பு ஏற்பட்டுக் குகையில் வெள்ளம் அடித்துச் சென்றது!

    அத்தகைய பாதுகாப்பு வெட்டுக் கருவியை 1825 இல் அமைத்த முதல் பிரிட்டிஷ் எஞ்சினியர், மார்க் இஸாம்பார்டு புருனெல் [Marc Isambard Brunel]. புருனெல் அக்கருவியைப் பயன்படுத்தி, உலகின் முதல் நீரடிக் குகையைத் தேம்ஸ் நதியின் கீழே குடைந்து அமைத்துக் காட்டினார். ஆனால் 1828 ஜனவரி 12 இல் குகையை ஆறு உடைத்துக் கொண்டு வெள்ளம் பெருகி ஆறு நபர்களை மூழ்க்கியது! நல்ல வேளையாக புருனெலின் புதல்வன் மூழ்காமல் தப்பினான்! பதினெட்டு ஆண்டுகள் தொடர்ந்த தேம்ஸ் நதித் திட்டத்தில், ஐந்து முறைகள் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் அடித்துச் சென்றது!

    Eurotunnel -3

    1864 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் எஞ்சினியர் பீட்டர் பார்லோ [Peter Barlow] என்பவர் புருனெல் கருவியைச் செம்மைப் படுத்தி ஒற்றை இரும்புத் தகடைப் பயன்படுத்தி நேருளை வடிவத்தில் [Cylinderical Shape] பாதுக்காப்பு வெட்டுக் கருவியை அமைத்தார். பார்லோவின் சீடரான ஜேம்ஸ் ஹென்ரி கிரேஹெட் [James Henry Greathead] இரட்டை நேருளை வெட்டுக் கருவியை ஆக்கி, கடலடித் தூண்கள் போன்று காற்றின் அழுத்த விசையைப் பயன்படுத்திக் கருவியின் உள்ளும், புறமும் ஒரே அழுத்தத்தை நிலைப்படுத்தி, நவீனப் பாதுகாப்பு வெட்டுக் கருவியைத் தோற்றுவித்தார்!

    1919 இல் நியூ யார்க் ஹட்ஸன் நதிக்குக் கீழே மன்ஹாட்டன் பகுதியை நியூ ஜெர்ஸியுடன் இணைக்கும் ‘ஹாலண்டு குகையைக் ‘ [Holland Tunnel] கிலிஃபோர்டு ஹாலண்டு [Clifford Holland] ஆரம்பித்து, 1927 இல் பின்பு மற்றவர்களால் முடிக்கப் பட்டது! 1950 ஆண்டு முதல் வெட்டுக் கருவியின் வெளிப் பாதுகாப்புக் கவசம், ‘நுழைக்கும் குழல்களாக ‘ [Sunken Tubes] மாற்றப் பட்டன! துளையைக் குடைந்ததும் கருவியின் மேற்புறம் சுற்றியுள்ள பெரும் இரும்புச் குழல்கள் நுழைக்கப்பட்டு குகை மண்ணைத் தாங்கும் அரணாக அமைக்கப் படுகிறது! பிறகு முன்வார்த்த வளைத் தட்டுகள் [Prefabricated Sections] செருகி இணைக்கப் பட்டு, வட்டக் குகை இடைவெளி மண்ணால் நிரப்பப் படுகிறது.

    Eurotunnel -2

    பிரிட்டிஷ் கால்வாய்க் கடலடியில் அமைத்த மூன்று குகைகள்

    24 மைல் அகன்ற இங்கிலீஷ் கால்வாய்க் கடலுக்கு அடியே செல்லும், உலகிலே மிகப்பெரும் நீளமுள்ள குகைப் பாதையைக் கட்ட சுமார் 250 ஆண்டுகளாக பிரான்சும் பிரிட்டனும் முயன்று வந்திருக்கிறார்கள்! ஜப்பானின் செய்கான் கடற்குகை [Seikan Tunnel] அதைவிட நீளமானதாக இருந்தாலும், மெய்யாகக் கடக்கும் கடல் அகலம் [15 மைல்] அதைவிட ஒன்பது மைல் குன்றியது! 18 பில்லியன் டாலர் [1990 நாணய மதிப்பு] நிதி மதிப்பீட்டில் திட்டமிடப் பட்ட ஈரோடன்னல் முயற்சிபோல் வரலாற்றில் செலவு மிக்க எந்தத் தனியார் துறை நிதி திரட்டுத் திட்டமும் அதுவரை துவக்கப்பட வில்லை! இறுதியில் ஈரோடன்னல் அமைக்கச் செலவான தொகை: 21 பில்லியன் டாலர்! குகை அமைப்பைப் பின்பற்றி இரண்டு தடவை 1880, 1974 ஆண்டுகளில் நிலத்தைத் தோண்டத் துவங்கினாலும், தொடரப்படாமல் திட்டம் ஏதோ ஒரு காரணத்தல் நிறுத்தமானது! ‘டோவர் [பிரிட்டன்], காலே [பிரான்ஸ்] ஆகிய இரு நகரையும் கடலடி இரயில் குகை மூலம் இணைக்கும் பாதை போன்று, ஆழ்ந்த விருப்பு வெறுப்பு மிகுந்த திட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று 1936 இல் பிரிட்டிஷ் பிரமுகர், வின்ஸ்டன் சர்ச்சில் (1874-1965) ஆத்திரமாகக் கூறினாராம்!

    உலகிலே நீண்ட குகை குடையப் பட்ட போது நிபுணர்களுக்குப் பெரும் சவாலாய் பல பிரச்சனைகளை உண்டாக்கியது! எவ்விதம் நூற்றுக் கணக்கான வேலை ஆட்களை உள்ளே அனுப்பி, வெளியே பாதுகாப்பாய்க் கொண்டு வருவது ? எவ்விதம் கட்டுமானச் சாதனங்களை குகைக்குள் அனுப்புவது ? எவ்விதம் மில்லியன் டன் கணக்கில் தோண்டிய மண்ணையும், புழுதியையும் தொடர்ந்து அகற்றுவது ? மாபெரும் யந்திர சாதனங்களை ஈரடிப்பும், நீரடிப்பும் மண்டிய புழுதியில், பல மைல் தூரம் குகைக்குள்ளே எப்படி இழுத்துச் செல்வது ? குகை தோண்டும் யந்திர வெட்டிகள் [Rotary Cutters], குப்பைமண் அகற்றிகள் [Conveyor Belts] அடிக்கடிச் சிக்கிக் கொள்ளும் போது, வெகு சிரமப் பணிகள் செய்து அவை தளர்த்தப்பட வேண்டும்!

    இறுதியாக 1987 இல் பிரான்சும் பிரிட்டனும் இருபுறமும் தோண்ட ஆரம்பித்து, 1990 டிசம்பர் முதல் தேதி வரலாற்று முக்கிய நாளில், அட்லாண்டிக் கடலடில் 200 அடி ஆழத்தில் கைகோர்த்து இணைப்பு விழாவைக் கொண்டாடினர்! இரு குழுவினரும் திக்குத் தெரியாத வெப்பக் குகைக்குள்ளே தோண்டும் போது, ஒருவரை ஒருவர் மறைமுகமாக அணுகும்படித் தளநோக்குத் திசை அறிவிக்க [Survey Direction By Natigation Satellites, Triangulation & Plumb] நவீன அண்டவெளித் துணைக்கோள் பாதை காட்டும் நுணுக்க முறைகள் பயன்படுத்தப் பட்டன. லேசர் கதிருடன் இணைக்கப்பட்ட மின் கணனிகள் [Guided by Computer Linked Lasers] குகை குடையும் பணியாளிகளுக்கு தொடர்ந்து திசை காட்டின.

    கணவாயின் இருபுறத்திலும் பூதப் புழுக்கள் போல் கடல் மடியைக் குடையும் யந்திரங்கள் [Tunnel Boring Machines (TBM)] மணிக்கு 2400 டன் மண்ணைக் குடைந்து வெளியே தள்ளின! அந்தப் பூத யந்திரங்கள் சுற்றும் டங்ஸ்டன் வெட்டுப் பற்களைக் கொண்டவை! ஒரே சமயத்தில் குடைந்து, ஒரே சமயத்தில் மண்ணை அகற்றி, ஒரே சமயத்தில் குகைக்கு உட்கவசம் [Lining Shell] பூணும் திறமை கொண்டவை! குகை முடிந்ததும் சேர்ந்து போன மண்குவியல் 8 மில்லியன் கியூபிக் மீடர் கொள்ளளவுக் கோபுரமாக உயர்ந்தது! குகைப்பணி மையத்தில் முடிந்ததும் பிரிட்டிஷ் தோண்டும் யந்திரம் குகைக்குள்ளே புதைக்கப் பட்டது! பிரென்ச் யந்திரம் தொடர்ந்து தோண்டி கணவாய்க் குகையை முழுவதையும் தோண்டி முடித்தது!

    இங்கிலீஷ் கால்வாயின் கடல்நீர்க் கடியில் 150-250 அடி ஆழத்தில் இறுகிய சுண்ணாம்பு அடுக்குகளைக் [Chalk Layers] குடைந்து, மூன்று இணையான குகைகள் [Three Parallel Tunnels] தோண்டப்பட்டன. குகைகளின் நீளம்: 31 மைல் [50.45 கி.மீடர்]. கடக்கும் கடலின் நீளம்: 24 மைல். 25 அடி விட்டமுள்ள இரண்டு இரயில் பாதைக் குகைகள், அவற்றுக்கு இடையே 50 அடி தூர மையத்தில் 16 அடி விட்டமுள்ள பணிக்குகை [Service Tunnel] ஒன்றும் ஆக மூன்று குகைகள் அமைக்கப்பட்டன. பணிக்குகையில் பராமரிப்பு, செப்பணிடும் வாகனங்கள் உலவ முடியும். மையக் குகை 1230 அடிக்கு ஒருதரமாக 270 இடங்களில் மற்ற பக்கத்துக் குகைகளோடு இணைக்கப் பட்டுள்ளது. பணிக்குகையில் காற்றழுத்தம் மற்ற இரண்டு குகைகளை விடவும் சற்று அதிகமாக்கப்பட்டு, அபாய நிகழ்ச்சியின் போது ‘அடைப்பு முறம் ‘ [Dampers] திறந்து இணைப்பாகி, பயணிகளுக்கு புதுக் காற்றையும், பாதுகாப்பையும் அளிக்க ஏதுவாகிறது.

    இருபுறமும் அமைந்த இரயில் குகைகளில் மணிக்கு 100 மைல் வேகத்தில் இரயில் பாய்ந்து செல்லும் போது ஏற்படும் காற்றுப் போக்கு இழுப்பைத் [Aerodynamic Drag] தவிர்த்துச் சமநிலைப் படுத்த, ‘விடுவிப்புக் குழல் இணைப்புகள் ‘ [Relief Ducts Joints] அமைக்கப் பட்டுள்ளன. இரயிலின் பொதுவான வேகம் மணிக்கு 87 மைல்; உச்ச வேகம் மணிக்கு 100 மைல். பிரிட்டனிலிருந்து குகைவழியாகப் பிரான்சுக்கு இரயில் 35 நிமிடங்களில் வந்து விடுகிறது. நேர்த்திசை இரயில் ஒரு குகையிலும், எதிர்த்திசை இரயில் அடுத்த குகையிலும் செல்கின்றன. தேவைப் பட்டால் திசை மாற்றி இரயில் வேறு குகையில் செல்லவும் இருப்புப் பாதைக் குறுக்கு இணைப்புகள் செய்யப் பட்டுள்ளன.

    முப்பத்து மைல் நீண்ட குகை, 24 மைல் நீளமான கடலுக்குக் கீழே 150 அடி முதல் 250 அடி ஆழத்தில் செல்கிறது. அவ்விதம் நீண்ட குகையில் புவிநிலை வாயு அழுத்தம் [Atmospheric Pressure] சீராகக் காற்று நுழையும் செங்குத்து ‘விடுவிப்பித் துளைகள் ‘ [Venting Shafts] இரண்டு நிலப் பகுதியில் [பிரிட்டன் கரையில் ஒன்றும், பிரென்ச் கரையில் ஒன்றும்] அமைக்கப் பட்டுள்ளன. ஈரோ குகையின் உள்ளே முப்பது மைல் பாதைகளில் எங்காவது தீ விபத்து நேர்ந்தால், பயணிகளையும் சாதனங்களையும் முதலில் பாதுகாப்பது, ஈரோடன்னல் அதிகாரிகளின் தலையாய பணியாகிறது! மின்சார இரயில் வண்டிகள் 25,000 வோல்ட் அழுத்தமுள்ள மேல்தளத் தொங்கு கம்பிகளில் மின்சக்தியை உறிஞ்சிக் கொண்டு மணிக்கு 100 மைல் உச்ச வேகத்தில் செல்லும் போது, மின்சாரத் தீ விபத்து நேர வாய்ப்புள்ளது! அடுத்து இரசாயனப் பளுக்களை ஏற்றிச் செல்லும் பார வண்டிகளில் தீப்பற்றி எழவும் வாய்ப்புக்கள் உள்ளன!

    ஈரோக்குகை ஆட்சி அரங்கு, பாதுகாப்பு மையங்கள்

    இரயில் வண்டிகளின் பயணப் போக்குகள், வேகங்கள், திசைகள், ஓடு மிடங்கள் யாவும், ஈரோடன்னல் ஆட்சி அரங்கில் [Eurotunnel Control Centre] தொடர்ந்து அல்லும் பகலும் கண்காணிக்கப் படுகின்றன. மின்சாரச் சமிக்கை ஏற்பாடுகள் [The Electric Signalling System] அனைத்தும் பிரென்ச் கண்காணிப்பு ஏற்பாடுகளில் [French TVM-430] இயங்கி வருகின்றன. சமிக்கை மின்னோட்டங்கள் இருப்புப் பாதைகளுக்கு அருகே உள்ள சாதனங்கள் மூலம், ஓட்டுநர் காண எஞ்சின் ஆட்சி அரங்குக்கு அனுப்பப் படுகின்றன. வண்டியின் வேகம் உச்ச அளவைத் [மணிக்கு 100 மைல்] தாண்டும் போது, மைய ஆட்சி அரங்கின் சுயக் கட்டுப்பாடு சாதனம் எஞ்சின் சக்கிரங்களுக்குத் தடை உராய்வு அளித்து [Automatic Brake Application] வேகத்தைக் குறைக்கிறது!

    ஈரோக் குகையின் இருபுறமும் தீவிபத்தைக் கட்டுப்படுத்த ‘தீ கண்காணிப்பு மையம் ‘ [Fire Management Centre] அமைக்கப் பட்டுள்ளது. அவற்றின் முக்கிய பணிகள்:

    சுழலும் கூரிய தோண்டி

    1. குகையில் அனைத்துத் தீப்புகை அறிவிப்புச் சாதனங்களையும், தீயணைப்பு பாதுகாப்புக் கருவிகளையும் [Monitor Fire Detection & Suppression Equipment] கண்காணித்து வருதல்.

    2. எதிர்பாராது தீவிபத்து நேர்ந்தால், மைய ஆட்சி அரங்கிற்கு எச்சரிப்பது.

    3. ஒவ்வொரு கண்காணிப்பு மையத்திலும், தீயணைப்புச் சாதனங்கள் சேமித்து வைக்கப்பட்டு, போதிய தீயணைப்புப் படையினர் இராப் பகலாகப் 24 மணிநேரப் பணியில் தயாராக இருப்பது.

    4. தீயணைப்பு மையங்கள் யாவும் வெளிப்புறம் நிறுவகமான எல்லா அபாய நிகழ்ச்சி மையங்களுடன் சுயமான எச்சரிக்கைத் தொடர்பைக் கொண்டிருப்பது.

    செப்பணிடும் சிறிய நடுக்குகை

    Fire Escape

    ஈரோக் கணவாயில் ஏற்பட்ட முதல் தீவிபத்து!

    1996 நவம்பர் 18 ஆம் தேதி இரவு 8:45 மணி பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்குப் பாரம் ஏற்றிச் சென்ற 29 பெட்டி மீட்சி இரயிலில் [29-Car Vehicle Shuttle (Carrier Wagon)] முதல் ஈரோடன்னல் தீ விபத்து ஏற்பட்டது! பிரான்ஸ் முனைக் கலே [Calais] நிலையத்தைக் கடந்து, குகைக்குள் நுழையும் போது பார வண்டியின் கடைசிப் பெட்டியில் தீ கிளம்பி யிருக்க வேண்டும் என்று தீயணைப்புப் படையினர் கருதுகிறார்கள். தீ எழுச்சி உடனே ஈரோகுகை ஆட்சி அரங்குக்கு அறிவிக்கப் பட்டது! தீயணைப்பு விதிகளின்படி, பார வண்டியின் பயணம் தொடர அனுமதிக்கப் பட்டுப் பிரிட்டன் நிலையத்தில் தீ அணைக்கப் பட வேண்டும் என்று தீர்மானம் செய்யப் பட்டது! அம்முடிவு எஞ்சின் ஓட்டுநருக்கும் தெரிவிக்கப் பட்டது. ஆனால் அதற்குள் தீ பெருகி விட்டதாகத் தெரிகிறது!

    குகையின் முனையில் தயாராக இருக்கும் பிரென்ச் பகுதியின் ‘முன்னோடிக் காப்புக் குழு ‘ [First Line of Response Team (FLOR)], மையத்தில் உள்ள பணிக்குகையில் தீக்கட்டுப்பாடு சாதனங்களைப் பயன்படுத்த எதிர்பார்த்திருந்தது. மையத்தில் இருந்த பிரிட்டன் பகுதி தீயணைப்புப் படையும் தயாராக இருந்தது. அச்சமயம் எஞ்சின் அறைக் கருவி அரங்கில், ‘வண்டியில் முரண்பாடு நிகழ்ச்சி ‘ இருப்பதாகக் காட்டி, ‘இரயில் தண்டவாளத்திலிருந்து புரண்டு விடும் ‘ என்று ஒரு சிவப்பு சமிக்கை எச்சரிப்பு விடுத்தது! விதிப்படி உடனே வண்டி குகை நடுவே ஓட்டுநரால் நிறுத்தப் பட்டது! அப்போது வண்டி அடைந்த தூரம் கலே யிலிருந்து 12 மைல்!

    வண்டியின் மேற்பார்வை அதிபதி [Chef De Train] என்ன நிகழ்கிறது என்று கதவைத் திறக்க, புகை மண்டலம் உண்டி வாகனத்தில் நுழைந்தது! உடனே அதன் உள்ளிருந்த 33 நபர் பாதுகாப்பான மையக் குகைக்குள் அழைத்துச் செல்லப் பட்டனர். அப்போது எதிர்த்திசையில் வந்த இரயில் நிறுத்தப் பட்டு 33 நபர் அந்த வண்டியில் மீண்டும் கலே நிலையத்துக்குக் கொண்டு செல்லப் பட்டார்கள். தீப் பற்றிய பெட்டியும், மற்ற ஏழு பெட்டிகளும் தீயில் எரிந்து முழுவதும் மாய்ந்தன! கொளுந்து விட்டுப் பற்றிய நெருப்பு, குகையின் 1330 அடி [400 மீடர்] நீளக் காங்கிரீட் கவசத்தை 16 அங்குல ஆழத்துக்குச் சிதைத்தது!

    தீக் கட்டுப்பாடு காலை 5:00 மணிக்கு செய்ய முடிந்து, 11:15 மணிக்குத் தீ முழுவதும் அணைக்கப் பட்டது! பதினைந்து நாட்கள் தீப் பற்றிய குகையில் பயணம் நிறுத்தமாகி, மறுபுறம் உள்ள குகையில் மட்டும் வாகனப் போக்குகள் தொடர்ந்தன. 1996 டிசம்பர் 10 முதல் மறுபடியும் இரயில் பயணங்கள் இரண்டு திசையிலும் சீராகின. சுற்றுப் பயண இரயில் போக்குகள் 1997 ஜனவரி 6 முதல் மறுபடியும் அனுமதிக்கப் பட்டன!

    இங்கிலீஷ் கால்வாய்ப் பயணத்தின் எதிர்கால நிலைப்பாடு

    1998 ஆண்டில் மட்டும் 3.45 மில்லியன் சுற்றுப் பயண வாகனங்கள் ஈரோ கணவாய் வழியாகச் சென்றுள்ளதாக அறியப்படுகிறது. ஈரோடன்னலில் பயண மக்கள் அடர்த்தியும், வாகனப் போக்குகள் எண்ணிக்கையும் மிகையாகி வருவதால், புதிய ஏற்பாடுகளை பிரான்சும், பிரிட்டனும் சிந்தித்துக் கொண்டு வருகின்றன! ஏகக் குறுகிய இருப்புப் பாதையாய்த் தனித்தியங்கி வரும் ஈரோடன்னலுக்குப் போட்டியாக அடுத்தொரு கடற்குகை வெகு சீக்கிரத்தில் இங்கிலீஷ் கால்வாயில் வரப் போவதாக அறியப்படுகிறது! அத்திட்டத்தில் இரண்டு குகைகள் அமைக்கப்பட விருக்கின்றன. முதல் குகை: ஒரு திசையில் போகும் வாகனங்களுக்கு இரட்டைப் பாதைகளை ஒரு மட்டத்தில் கொண்டு, அதற்கு மேல் மட்டத்தில் எதிர்த் திசையில் செல்லும் வாகனங்களுக்கு இரட்டைப் பாதையும் அமைப்பதாக உள்ளது. இரண்டாம் குகை: முதல் குகைபோல் ஒரு திசையில் செல்லும் இரட்டை இருப்புப் பாதை ஒரு மட்டத்திலும், அடுத்த மட்டத்தில் எதிர்த்திசையில் செல்லும் இரயிலுக்கு இருப்புப் பாதை இரண்டும் கட்டப் போவதாகத் தெரிகிறது.

    தகவல்:

    1. The Seven Wonders of the World By Life [Dec 15, 2003]

    2. National Geographic Sosiety -Underwater Tunnels, Marvels of Engineering [1992]

    3. National Geographic France Celebrates Its Bicentennial [July 1989]

    4. The E-Learing Zone -Facts & Figures of the Channel Tunnel [www.cornwallis.kent.uk/intranet/elearn/science/eurotunn] [2004]

    5. Channel Tunnel (Chunnel) Vital Statics

    6. English Channel Tunnel Fire National Fire Protection Association, Quincy, MA, USA. [Nov 16, 1996]

    7. Le Shuttle Arriving in France -Jeremy Lennard & Agencies [Apr 7, 2004]

    8. The Tunnel Boring Details, About Eurotunnel [Feb 23, 2004]

    9. The History of Eurotunnel [www.eurotunnel.co.uk/]

    10. https://en.wikipedia.org/wiki/Eurostar [March 8, 2016]

    11. https://en.wikipedia.org/wiki/Channel_Tunnel [March 9, 2016]

    *************

    Share
  • குன்றுகளைக் குடைந்து கடலடியிலே தோண்டிய உலகிலே நீண்ட ஜப்பான் செய்கான் அதிசயக் குகை

    — சி. ஜெயபாரதன்.

     

     

    Seikan Subsea Mountain Tunnel

     

    [Japan ‘s Seikan Subsea Mountain Tunnel]

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    +++++++++++++++

    https://youtu.be/HX-yhXFK7ss

    https://youtu.be/7lcwecXiL0I

    https://youtu.be/5nYGzo7QcUM

    முன்னுரை: இரண்டாம் உலகப் போரில் தோற்றுச் சரணடைந்த ஜப்பான், அதி விரைவில் எழுந்து ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைப் போல் தொழில் வளத்தில் முன்னேறி, ஆசியாவின் பொறித்துறைப் பூதமாகவும், வல்லரசாகவும் உச்ச இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது! நவீனப் பொறி நுணுக்கங்களும், தொழிற்துறை நூதனங்களும் படைக்கும் மிகச் சுறுசுறுப்பான மாந்தரைக் கொண்டது ஜப்பான் தேசம்! தேள் கொடுக்கு போல் வளைந்த ஜப்பான் தேசம் சுமார் 7000 தீவுகளைத் தன்னகத்தே சேர்த்துக் கொண்டுள்ளது! 127 மில்லியன் ஜனத்தொகை கொண்ட ஜப்பான் தீவுகளின் பரப்பளவை ஒப்பிட்டால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திற்கு நிகராகும்! ஜப்பானின் நான்கு பெரிய தீவுகளும், அநேக சிறிய தீவுகளும் 2000 மைல் தூரம் நீண்டு வளைந்து பரவியவை! ஆண்டுக்கு 10,000 நிலநடுக்கங்கள் ஜப்பான் தீவுகளுக்கு அண்டையில் நேருகின்றன! அவற்றில் குறைந்தது 40 நிலநடுக்கம் ஜப்பான் நிலப் பகுதியில் மட்டும் ஏற்படுகின்றன! ஆயினும் நான்கு தீவுகளை இணைக்கும் நீளமான பாலங்களையும், ஆழமான கடற் குகைகளையும், மலைக் குகைப் பாதைகளையும், அவற்றின் ஊடே புகும் அதிவேக புள்ளெட் இரயில் வண்டிகளையும், [Bullet Trains] கோடிக் கணக்கான டாலர் செலவழித்து, ஜப்பான் நுணுக்கமாகக் கட்டிக் கண்காணித்து வருவது பேராச்சரியம் அளிக்கிறது!

    1954 இல் அடித்தக் கடற் சூறாவளியில் சுகரு நீர்ச்சந்தியில் [Tsugaru Strait] ஜப்பானியரை ஏற்றிச் சென்ற ஐந்து மீட்சிப் படகுகள் [Ferry Boats] கவிழ்ந்து 1314 பேர் மூழ்கிப் போயினர்! பொது மக்களின் பெரும் போராட்டத்தின் விளைவாய், ஜப்பான் அரசு அந்த நீர்ச்சந்தியைப் பாதுகாப்பாகக் கடக்க ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தது! அம்முயற்சி பத்தாண்டுகளுக்குப் பிறகு 1964 ஆம் ஆண்டில் வெளிப்பட்டு, உலகிலே நீண்ட செய்கன் கடலடிக் குகை, ஹோன்சூ தீவுக்கும் ஹோக்கைடு தீவுக்கும் இடையே [Between Honshu & Hokkaidu Islands] கட்டப்பட்டு, 1988 முதல் அனுதினமும் இரயில் வண்டிகள் அதன் வழியே போய் வருகின்றன. அடுத்துத் தென்திசையில் ஹோன்சூ தீவை ஷிகோகுத் தீவுடன் [Shikoku] இணைக்க 22.5 மைல் தூரத்தில் இடையிடையே நிலத்துடன் சேர்ந்த உலகிலே நீண்ட ஊஞ்சற் பாலங்களும், முறுக்குநாண் பாலங்களும் [Suspension & Cable-stayed Bridges] அமைக்கப் பட்டன. கடல் இடையே மிதக்கும் எண்ணற்ற தீவுகளையும், மலை இடையே அமைந்த நகரங்களையும் போக்குவரத்து மூலம் சேர்க்க பலவிதக் குகைகள், பாலங்கள், இரயில் பாதைகள் அமைத்த ஜப்பான் உலகில் சிறந்த சிவில் பொறியியல் நிபுணத்துவ நாடாகப் பெயர் பெற்றுள்ளது!

    செய்கான் கடலடிக் கணவாயின் சிறப்பு அம்சங்கள்

    பிரிட்டனுக்கும் பிரான்ஸிற்கும் இடையே கட்டப்பட்ட ஈரோக்குகை [Eurotunnel (1994)], ஜப்பானின் வடதிசைத் தீவை மையத் தீவுடன் இணைக்கும் செய்கன் கடற்குகை [Seikan Tunnel (1988)] ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன ? மலைகளைக் குடைந்து கட்டப்பட்ட செய்கன் குகையே, மொத்த நீளத்தில் 33.4 மைல் [174,240 அடி (53.9 கி.மீ)] தூரம் கொண்டு ஈரோகுகையை விடச் சற்று நீண்டதாக உள்ளது. 800 அடிவரைக் கடலுக்குக் கீழே செல்லும் செய்கான், ஈரோகுகையை விட, ஆழத்திலும் உலகத்திலே முதன்மையாகக் கருதப்படுகிறது. ஆனால் கடற்பரப்பு நீளத்தை ஒப்பிடும் போது, ஈரோகுகையே உலகில் முதன்மை இடத்தைப் பெறுகிறது. செய்கன் குகை 14.3 மைல் நீளமானக் கடல் பகுதியைக் கடக்கிறது. இங்கிலீஷ் கால்வாயில் ஈரோகுகையின் கடற்தளக் கடப்பு நீளம்: 24 மைல். ஈரோ குகையின் நீளம்: 31 மைல் [50.45 கி.மீ]. அதன் ஆழம் 150-250 அடிவரைச் செல்கிறது. அடுத்து நிலநடுக்கப் பாதுகாப்பு உளவிகள் பதிக்கப்பட்டு, மேன்மையானப் பொறி நுணுக்க முற்பாடுகளில் அமைந்தது, செய்கன் குகை! பதினேழு ஆண்டுகளாய் 13.8 மில்லியன் பணியாளிகள் வேலை பார்த்த அந்த இமாலயத் திட்டத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 33! அச்சிறிய எண்ணிக்கை ஜப்பானியரின் உன்னதப் பாதுகாப்பு நிர்வாகத்தை எடுத்துக் காட்டுகிறது!

    Rail tunnel Drilling

    சுண்ணாம்பு அடுக்குத் தளத்தில் துளையிட்ட குடையும் யந்திரங்கள் [Tunnel Boring Machine] ஈரோகுகையில் பயன்பட்டது போல், செய்கன் குகை முழுவதும் துளைக்கப் படவில்லை! காரணம் எரிமலைப் பாறைகள் இங்கும் அங்குமாய் அடுக்கப்பட்டுக் கிடந்தன. திட்டு திட்டான அந்தப் பாறைகளை வெடி மருந்தால் பிளக்க வேண்டிய தாயிற்று! மலைகளைக் குடைந்து, கடலடியே தோண்டி 33 மைல் நீண்ட குகையை முடிக்க 17 ஆண்டுகள் ஆயின. 800 அடி உச்ச ஆழத்தில் குகை தோண்டப்பட்டு, இரட்டை இருப்புப் பாதைகள் கொண்டு, அதி வேக சின்கன்ஸென் புள்ளெட் இரயில் தொடரோட்டப் போக்குவரத்துக்கு [Sinkansen Network High Speed Bullet Train] ஏற்றதாய் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் தற்போது [மீடர்கேஜ்] குற்றகல இரயில் வண்டிகள் மட்டும் செய்கன் குகை வழியாக அனுமதிக்கப் படுகின்றன.

    செய்கான் கடலடிக் குகை அமைப்பில் ஏற்பட்ட சிக்கல்கள்

    ஹோக்கைடு தீவு பல்லாண்டுகளாக ஜப்பானியருக்கு ஒரு புதிய தேடல் பூமியாய்த் தோன்றி வரவேற் பளித்தது! அங்கே புதையல் களஞ்சியமாய்ச் செழித்துக் கிடந்த இயற்கை வளத்தைத் [Natural Resources] தோண்டிப் பிரதம தீவான ஹோன்சூவுக்குக் கொண்டு வருவதற்கு, மெதுவகச் செல்லும் கடல்வழித் துறையே பயன்பட்டு வந்தது. ஆனால் ஹோன்சூ, ஹோக்கைடு தீவுகளுக்கு இடையே உள்ள குறுகிய சுகரு நீர்ச்சந்தி [Tsugaru Strait] மிகக் கொந்தளிப்புள்ள கடற்பகுதி! 1954 இல் அவ்மோரி, ஹகோடேட் நகரங்களுக்கு [Aomori,Hakodate] இடையே பயணம் செய்யும் டோயா மாரு என்னும் இரயில் மீள்கப்பல் [Toya-Maru Train Ferry], ஓர் அசுரச் சூறாவளியில் சிக்கிக் கடலில் கவிழ்ந்தது! அப்பயங்கர விபத்தில் 1314 பேர் மூழ்கி, 159 நபர் உயிர் பிழைத்தனர்! ஜப்பானியர் அந்நிகழ்ச்சிக்குப் பிறகு எழுப்பிய குரலே, செய்கன் குகை இரயில் பாதை அமைக்க விதை யிட்டது!

    1971 ஆம் ஆண்டில் தோண்டும் பணிகள் துவக்கப்பட்டன. செய்கன் குகையை டிசைன் செய்து கட்டி முடித்த எஞ்சினியர் யாவரும் ஜப்பான் இரயில்வே கட்டமைப்பு வாரியப் பணியாளர்கள் [Japan Railway Construction Corporation]. திட்ட மிட்டக் குகை 33 மைல் தூரம் நீண்டதால், முக்கியக் குகையைக் குடைவதற்கு முன்பு, முதலில் முன்பணிக் குகையும் [Pilot Tunnel] பராமரிப்புக் குகையும் [Service Tunnel] அருகே இணையாகத் தோண்ட வேண்டிய தாயிற்று. முன்பணிக் குகைத் தளமட்டம், திசைநோக்கு, நிலப்பண்பு ஆகியவற்றை அறியும் சர்வே, புவியியல் கருவிகளைப் [Survey & Geological Instruments] பயன்படுத்தத் தேவைப் பட்டது. பராமரிப்புக் குகை வழியாகப் பணியாளிகள் நுழையவும், வெட்டுப் பாறைக் கற்களை வெளியேற்றவும் இருப்புப் பாதை வண்டிகள் செல்ல வசதிகள் அமைக்கப் பட்டன. பதினேழு ஆண்டுகளாக 800 அடி ஆழத்தில் கடலடியே பணி செய்ததில், 33 பேர் மொத்தம் உயிரிழந்ததாக அறியப்படுகிறது!

    1976 ஆம் ஆண்டில் குகைப்பணி தொடர்ந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஒரு வெள்ள விபத்து ஏற்பட்டு இன்னலை உண்டாக்கியது! பணியாளிகள் மென்மையான பாறை அடுக்கு ஒன்றை உடைத்த போது, பேரிடர் விளைந்தது! பீறிட்டுக் கடல் வெள்ளம் உடைத்துக் கொண்டு பாய்ந்து, குகைக்குள்ளே நிமிடத்துக்கு 80 டன் வீதம் கொட்டிக் குவிந்தது! நல்ல வேளையாக மனிதர் எவருக்கும் ஆபத்து நேரவில்லை! ஆனால் கடல்நீர்க் கசிவு ஓட்டத்தை நிறுத்தி, குகைநீரை உறிஞ்சி வெளியேற்ற 60 நாட்கள் பிடித்தன!

    ஜப்பான் மலைகளுக்குள் எரிமலை அடுக்குப் பாறைகள்

    மலைகளுக்கு இடையே 24 மைல் அகண்ட மடியில் கொந்தளிக்கும் கடலுக்கு அடியில் 800 அடி ஆழத்தில் குகை அமைப்பது எப்படி ? முதலில் தளப்பண்பு நிபுணர்கள் [Geologists] சோதனைத் துளைகள் இட்டு, நிலமண்களை ஆராய வேண்டும். அதற்காக இரண்டு தீவுகளிலும் தனித்தனியாகச் சிறிய செங்குத்துக் கிணறுகள் [Vertical Shafts] தோண்டப்பட்டன. அவ்விதம் உட்சென்று எடுத்த மாதிரிப் பாறைக் கட்டிகள் உடையும் தன்மையும், துளைகளும் [Breakable & Porous] பெற்றிருந்ததால் அவை யாவும் எரிமலைப் படிமான பாறைகளாக அறியப்பட்டன! குகை தோண்ட ஆரம்பித்த பின்பு, அதிகரித்த நீர்க் கசிவுகளும், அழுத்தமான நீர்ப் பாய்ச்சலும் ஏற்பட்டுத் தொல்லைப் படுத்தின!

    தொடர்ந்து பெருகும் நீரை வெளியேற்றுவதும், சேர்ந்து போகும் சகதியை நீக்குவதும் பெரிய பிரச்சனைகள் ஆயின! ஜப்பானிய நிபுணர் படைத்த பொறி நுணுக்க சாதனங்களால், இன்னல்களும் பிரச்சனைகளும் குறைக்கப் பட்டுக் குகைப் பணிகள் தொடர்ந்தன. அதிக அழுத்தமுடன் சோடியம் சிலிகேட் செமென்ட் [High Pressure Injection of Sodium Silicate Cement] நுழைக்கப் பட்டு, நீர்க் கசிவுகள் அடைக்கப்பட்டு அறவே நீக்கப் பட்டன. பாறைக் குடைவுகள் முடிந்ததும், காங்கிரீட் திரவத்தைக் குகைச் சுவர்களில் தெளித்து உடனே பாறைக் குழிகள் மூடப்பட்டு உறுதிப் படுத்தப்பட்டன.

    சுகரு நீர்ச்சந்திக்குக் [Tsugaru Strait] கீழே இருந்த நிலப்பரப்புப் பகுதி யாவும் எரிமலைப் பாறையாகக் [Volcanic Rock] காணப் பட்டதால், பொதுவாகக் கையாளப்படும் குகைக் குடையும் யந்திரம் [Tunnel Boring Machine (TBM)] அங்கே முழுமையாகப் பயன்படவில்லை! கடலடிக் குகையைத் தோண்ட 2800 டன்

    வெடி மருந்தைப் பயன்படுத்தி மலைப் பாறைகளைக் குடைந்து துளைக்க நேரிட்டது! 180,000 டன் தேனிரும்புக் கம்பிகளும், சாதனங்களும் குகைக்குக் காங்கிரீட கவசமிடத் தேவைப் பட்டன! கடல் மட்டத்துக்கு 800 அடி ஆழத்தில் சில பகுதிகளில் அமைப்பான செய்கன் குகைப்பாதை, உலகிலே மிக ஆழ இரயில் பாதையாகக் கருதப்படுகிறது! பிரதமப் பெருங்குகையின் விட்டம் சுமார் 32 அடி. சிறியதானப் பராமரிப்புக் குகையின் அகலம் 16 அடி.

    33 மைல் நீள இரட்டை இரயில் பாதைகள் ஒவ்வொன்றும் மூன்று தண்டவாளங்கள் கொண்டிருந்தன. அவ்விதம் அமைப்பதால், குறுகிய அகற்சி, பெருகிய அகற்சி இரயில் வண்டிகள் [Narrow Gauge & Broad Gauge Trains] இரண்டும் போவதற்கு வசதியாக இருக்கும். குகைக்குள் இரண்டு இரயில் நிலையங்கள் உள்ளன. ஒன்று: யோஷியோகா-கைத்தி நிலையம் [Yoshioka-Kaitei Station], அடுத்தது: டாப்பி-கைத்தி நிலையம் [Tappi-Kaitei Station]. இரண்டு நிலையங்களும் செய்கன் குகையின் வரலாறு, விளக்கம் அளிக்கும் காட்சி மையங்களாக [Museums] நிறுவகமாகி யுள்ளன.

    ஜப்பான் புள்ளெட் வேக ரயில்

    நிலநடுக்கம் தாலாட்டும் நித்திய பூமி!

    ஆண்டு தோறும் நிகழும் நிலநடுக்க ஆட்டங்களும், சூறாவளி, சுனாமி [Tsunami] புயல் அடிப்புகளும் ஜப்பானியர்களுக்கு ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அளிக்காதவை! உலகத்தின் 10 சதவீத நிலநடுக்கங்கள் டோக்கியோ தலைநகருக்கு அருகிய பகுதிகளில் நேருகின்றன! இயற்கை அன்னை விளைவிக்கும் கோர விபத்துகளை எதிர்பார்த்து, இடர்களை ஏற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் சீர்ப்படுத்தி, உயிர்த்தெழும் ஜப்பானியரின் நெஞ்சுறுதிக்கு ஈடு, இணை உலகில் வேறு எங்கும் இல்லை! இல்லை!! இல்லை!!! ஒவ்வோர் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி அன்று, பூகம்ப எச்சரிக்கைப் பயிற்சிகள் தவறாது நடத்தப்பட்டு மக்களைத் தயாராக வைத்திருப்பது, போற்றத் தகுந்த ஓர் அரசாங்கப் பணி!

    1995 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி கோப் [Kobe] பெரு நகரத்தின் அருகே 6.9 ரிக்டர் அளவில் நேர்ந்த 20 விநாடிப் பூகம்ப ஆட்டத்தில் இறந்தவர்: 5470. காயமடைந்தவர் 33,000! நிலநடுக்கத்தில் சிதைந்து போன இல்லங்கள்: 144,032! தீப்பற்றி மாய்ந்து போன வீடுகள்: 7456! கவிழ்ந்து போன கட்டடங்கள்: 82,091! முறிந்து போன மாளிகைகள்: 86,043! நிதி மதிப்பீட்டில் சிதைவுக்கு ஈடான தொகை: 200 பில்லியன் டாலர்! நீர்வசதி, மின்சார வசதி, எரிவாயு போன்ற மனிதருக்குத் தேவையான முக்கிய ஏற்பாடுகளை மீண்டும் உயிர்ப்பித்து இணைக்க 100 பில்லியன் டாலர் நிதி செலவானது! வாணிப நிதிவளத் தொழில் துறைகளை மீண்டும் இயக்க அடுத்து 50 பில்லியன் தொகை தேவைப்பட்டது! முக்கியமாக கார், வாகன, இரயில், கப்பல் போக்குவரத்துக்கள் நின்று போயின! காங்கிரீட் பாலங்கள் உடைந்து, இருப்புப் பாதைகள் நெளிந்து, பெரு வீதிகள் பிளந்து நகரங்கள் பெருஞ்சேத மடைந்தன.

    பூகம்ப ஆட்டத்தின் போது இரயில் ஓட்டப் பாதுகாப்பு!

    மணிக்கு 180 மைல் வேகத்தில் பாய்ந்து உலகிலே அதி விரைவில் ஓடும் புள்ளெட் இரயில்கள் ஜப்பான் ஒரு நாட்டில்தான் உள்ளன! அவை வேகத்துக்கும், பாதுகாப்புக்கும், குறித்த நேரத்துக்கும் பெயர் பெற்றவை! 1964 ஆண்டு முதல் இயங்கிவரும் புள்ளெட் இரயில் முன் விழுந்து தானாக மாய்ந்தவரைத் தவிர இதுவரை வண்டி கவிழ்ப்போ, தடப் புரட்டோ எதுவும் நேர்ந்து யாரும் உயிரிழந்த தில்லை! காலவரைக் கடைப்பிடிக்கப் பட்டு விநாடித் துல்லியமாக அனுதினமும் நிலையங்களை அடைகிறது, புள்ளெட் இரயில் வண்டி! ஓராண்டு ஓட்டத்தைக் கணக்கு எடுத்துப் பார்த்ததில், அனைத்து புள்ளெட் இரயில்களின் மொத்தக் கால தாமதம் 12 விநாடி என்று அறிவது வியப்பை அளிக்கிறது!

    புள்ளெட் இரயில் ஓடும் ஜப்பானின் இருப்புப்பாதை முழுவதிலும் இடையிடையே ‘நிலநடுக்க உளவிகள் ‘ [Seismometers] மாட்டப் பட்டிருக்கின்றன. அவற்றின் பணி, புவித்தள ஆட்டத்தை உணர்ந்து, ரிக்டர் அளவு 4 மேற்பட்ட சமயத்தில் அதி வேகத்தில் பாய்ந்து செல்லும் புள்ளெட் இரயிலை உடனே நிறுத்துவது! சக்தி வாய்ந்த நிலநடுக்க ஆற்றல் இருப்புப் பாதைகளை நெளித்து, இரயில் வண்டியைச் சாய்த்துவிடும் முன்னரே, முன்னறிவிப்புக் கருவிகள் வண்டியை நிறுத்துகின்றன! இரயில் பாதை அருகிலும், மற்றும் பாலங்கள், வீதிக் கம்பங்கள் ஆகியவற்றில் நிலநடுக்க ஆட்டத்தின் மட்டநிலை நகர்ச்சியைப் [Horizontal Displacements] பதிவு செய்யக் குறிக்கோடுகள் வரையப் பட்டுள்ளன! புள்ளெட் இரயில் போல மற்ற வாகனங்களும் 4 ரிக்டர் அளவுக்கு மிகையான பூகம்ப ஆட்டத்தின் போது நிறுத்தப் படுகின்றன.

    2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 இல் 8.3 ரிக்டர் அளவுப் பூகம்பம் மாலை 7:50 மணிக்கு ஹோக்கைடுப் பகுதியை [Hokkaido Region] ஆட்டியது! நல்ல வேளையாக தாக்கிய பூமி கரையிலிருந்து 25 மைல் அப்பால் கடற்பகுதியில் இருந்ததால், நகர மாந்தர் தப்பினர்! வீடுகள், வீதிகள், பாலங்கள், முக்கியமாக செய்கன் கடலடிக் குகை யாவும் பிழைத்துக் கொண்டன! ஆனால் அதே தீவில் செப்டம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட 8 ரிக்டர் நிலநடுக்கத்தில் 250 பேர் காயமுற்றனர்! யாரும் மரண மடைய வில்லை! 16,000 இல்லங்களில் மின்சக்தி அற்றுப் போனது! தொழிற் சாலைகளில் தீப் பற்றின! காங்கிரீட் வீதிகள் பிளவு பட்டன! நகரில் நீர்ப்பைப்புகள் துண்டிக்கப் பட்டன! கடலில் மீன்படகுகள் கவிழ்ந்தன! விமானத்தள மாளிகையின் கூரைக் குழிந்தது! நிலநடுக்கம் உண்டாக்கிய சுனாமியில் [Tsunami] கடல்நீர் மட்டம் 4.3 அடி உயர்ந்து, குஷிரோ நகரத்தின் [Kushiro City] கடற்கரைத் தாக்கப்பட்டு 41,000 மாந்தர் கடத்தப்படக் கட்டளை பிறந்தது! நல்ல வேளையாக ஹோக்கைடுத் தீவிலுள்ள அணுமின் நிலையத்திலோ அல்லது செய்கன் கடற்குகைப் பாதையிலோ எந்த விபத்தும், உடைப்பும் நேரவில்லை!.

    செய்கான் குகை இரயில் பாதைப் போக்கின் எதிர்காலம்

    ஜப்பானில் உள்ள சுமார் 3800 மலைக் குகைகளின் ஊடே செய்கன் குகையும் சேர்த்து, இரயில்கள் 1260 மைல் தூரம் [2100 கி.மீ.] அல்லும் பகலும் பயணம் செய்கின்றன. கடலடியில் 800 அடி உச்ச ஆழத்தில் குகை தோண்டப்பட்டு, இரட்டை இருப்புப் பாதைகள் கொண்டு, அதி வேக சின்கன்ஸென் புள்ளெட் இரயில் தொடரோட்டப் போக்குவரத்துக்கு [Sinkansen Network High Speed Bullet Train] ஏற்றதாய் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது [மீடர்கேஜ்] குற்றகல இரயில் வண்டிகள் மட்டும் செய்கன் குகை வழியாக அனுமதிக்கப் படுகின்றன. காரணம், சின்கன்ஸென் தொடரோட்டப் போக்கில் செய்கன் குகை இரயில் பாதையை இணைப்பது பெரும் நிதி விழுங்கும் திட்டம்! 2020 ஆண்டுக்குப் பிறகுதான் அதை நிறைவேற்றப் போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது!

    நான்கு பெரிய தீவுகளையும் ஒப்பிட்டால், வடதிசையில் குளிர்ந்ததான ஹோக்கைடு தீவில் ஜனத்தொகை மிகவும் குறைவு. அதனால் குற்றகல இரயில் வண்டிகளே அங்கே போய் வருகின்றன. தற்போது ஜப்பானில் ஹோன்சூ, ஹோக்கைடு தீவுகளுக்கிடையே உள்ள விமானப் பயணச் செலவு, ஏறக் குறைய இரயில் பயணச் செலவை ஒட்டியதாக உள்ளதால், நிதி மிகையான புள்ளெட் இரயில் தொடர்பு இணைப்பு இப்போதைக்குள் நிகழப் போவதாய்த் தெரியவில்லை! எண்ணிக்கை முறையில் குறைவாகப் பயணங்களுக்கு பயன்பட்டாலும், ஆழமான செய்கன் கடலடிக் குகை இருபதாம் நூற்றாண்டின் ஓர் உன்னதப் பொறியியல் சாதனையாக உலகிலே கருதப்படுகிறது!

    ஜிப்ரால்டர் நீர்ச்சந்தியில் எதிர்காலக் கடலடிக் குகை!

    பிரிட்டன் தீவை ஈரோப்புடன் இணைக்கும் கடலடிக் குகை ‘ஈரோடன்னல் ‘ [Eurotunnel] 1994 ஆண்டு திறக்கப்பட்டு, மில்லியன் கணக்கான பயணிகள் சுற்றுலா இரயில் பயணத்தில் சென்று நிதிவளம் செழித்து வருகிறது! 2004 ஜனவரியில் ஸ்பெயின், மொராக்கோ அரசாங்கம் இரண்டும் ஈரோப்பையும், ஆஃபிரிக்காவையும் கடலடிக் குகை மூலம் இணைத்து, இரயில்பாதை அமைக்கத் தீர்மானித்துள்ளன! 19 ஆம் நூற்றாண்டில் சூயஸ் கால்வாயும், 20 ஆம் நூற்றாண்டில் பனாமா கால்வாயும் தோண்டப் பட்டது போல், 21 ஆம் நூற்றாண்டில் ஜிப்ரால்டர் குகைக் கணவாய்த் தோன்றப் போகிறது என்று பெருமிதமுடன் அறிவித்தன! 27 மில்லியன் ஈரோ நிதி மதிப்புடன் முன்னோடித் தளப்பண்பு உளவுகள் இப்போது திட்டமிடப் பட்டுள்ளன.

    ஜிப்ரால்டர் நிலச்சந்திக் குகை 24 மைல் நீளமும், கொந்தளிக்கும் கடலடித் தளம் 17 மைல் அகலமும் இருக்கும் என்று கணிக்கப் பட்டிருக்கிறது. கட்டப் போகும் கடற்குகை 300 அடி முதல் 1000 அடி ஆழத்தில் [100-300 மீடர்] அமைக்கப் பட்டு, உலகத்திலே மிக ஆழக்குகை என்று வரலாற்று முதன்மை பெறப் போகிறது! ஸ்பெயின் கம்பெனி இப்போதே 200 நீளச் சோதனைக் குகையைத் தோண்டி, மாதிரி மண்கள் ஆராயப்பட்டுத் தளப்பண்புகள் அறியப்படுகின்றன. அதேபோல் மொராக்கோ கம்பெனி 1000 அடி [300 மீடர்] ஆழக் கிணறு ஒன்றைத் தோண்டி தளப்பண்பு ஆய்வு செய்து வருகிறது. பத்து பில்லியன் ஈரோ நாணயத் திட்டச் செலவில் [2004 மதிப்பு] உருவாகப் போகும் ஜிப்ரால்டர் கடலடிக் குகை 2008 ஆம் ஆண்டில் முழுப் பணிகளைத் துவங்கப் போகிறது! சமீபத்தில் இரயில் வெடிகளை வைத்து ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் 200 பேர் மாண்டதற்கு, சில மொராக்கோ மூர்க்கர் காரணக் கர்த்தாக்கள் என்று அறியப் படுவதால், ஜிப்ரால்டர் குகைத் திட்டம் நிறுத்தப் படுமா அல்லது ஒத்திப் போடப் படுமா என்பது தெரியவில்லை! மேலும் மொராக்கோவிலிருந்து ஏராளமான புலப்பெயர்ச்சி முஸ்லீம் மாந்தர், சட்டத்தை மீறி நுழைந்து கொள்ள குகைப்பாதை தொடர்ந்து வழி வகுக்கும் என்று ஸ்பெயின் அரசாங்கம் கவலை கொண்டிருக்கிறது!

    தகவல்:

    1. National Geographic Picture Atlas of our World [1990]

    2. The Seikan Tunnel -A Short History of the Tsugaru Straits Line [www.pref.aomori.jp/]

    3. Science & Technology: The World ‘s Longest Tunnels [www.Swishweb.com/]

    4. Mountain Tunnels, Tunnels & Bridges -Seikan Undersea Tunnel.

    5. A Short History of Japan By: InfoPage Corporation [2003]

    6. Bullet Trains Programmed to Stop, if a Quake occurs [And Life Goes On By: G.Bhaskaran, The Hindu Jan, 2002]

    7. Powerful Earth Quake Shakes Northern Japan [Sep 26, 2003]

    8. World Data Center for Seismology, Denver U.S. Geological Survey [Sep 25, 2003]

    9. Spain & Morocco Agree to Rail under Gibraltar Strait By Vicky Short [Jan 5, 2004]

    10. http://www.railway-technology.com/projects/seikan-tunnel/

    12. http://web-japan.org/atlas/architecture/arc02.html

    13. https://en.wikipedia.org/wiki/Seikan_Tunnel [March 2, 2016]

    *********************

    Share
  • பிரான்சிலே உலகத்தின் பிரமிக்கத் தக்க வானுயர்ப் பட்டாம்பூச்சிப் பாலம்

     Long bride -10

     

    [World’s Highest Butterfly Bridge in France] 

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    https://youtu.be/F6wLEiv491g

    பிரான்சில் ‘மில்லா நீள்வீதிப் பாலம் கட்டமைப்புப் பொறியியல் துறைநுணுக்கச் சாதனையாக உன்னத இடத்தைப் பெறுகிறது. நமது ஆராய்ச்சி, பொறித்துறை நுணுக்கங்களின் மகத்தான வல்லமையை அது எடுத்துக் காட்டுகிறது.  அங்கே கட்டப்பட்டு, பிரென்ச் மக்கள் மெய்யாகப் பெருமைப்படும் அந்த மகத்தான சாதனை பிரான்சின் தீரச்செயலைப் பறைசாற்றுகிறது. நவீன வெற்றிமயமான பிரான்ஸ் தேசம், எதிர்காலத்துக்காகத் தன்னை இணைத்துக் கொள்ளும் ஓர் பங்கெடுப்புத் திட்டம், இது ‘.

    பிரென்ச் அதிபதி: ஜாக்ஸ் செராக் (President: Jacques Chirac)

    Long bride -9

    ‘மனிதனின் படைப்பு வினைகள் இயற்கை வனப்புக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். வீதிப் பாலத்தை வானவெளியில் தூக்கி நிற்கும் தூண்கள் பூமியில் ஏறக்குறைய இயற்கையாக வளர்ந்தவை போல எழுந்து, சூழ்வெளி வனாந்திர எழிலில் தோற்றம் அளிக்க வேண்டும். பொலிவுடன் காட்சி தரும் பள்ளத்தாக்குடன், பாலம் ஒட்டுத் தையல் போட்டதுபோல் தெரியக் கூடாது. பசுமையான வனச்சரிவுகள் பரந்த வெளியில் பட்டாம்பூச்சி மென்மையாக எழுவது போல் பாலம் காணப்பட வேண்டும் ‘.

    ‘நமது நாகரீக யுகத்தில் பின்னணித் துணைத்துறை [Infrastructure] அமைப்பு ஒரு நாட்டுக்கு வேண்டிய அடிப்படை. பொதுவெளித் தளங்கள், நதிகள் மீது கட்டும் பாலங்கள், வீதிகள் ஆகியவைதான் மக்களை ஒருங்கிணைத்துச் சேர்க்கின்றன. மேலும் நமது வாழ்க்கைத் தரத்தை அவை செம்மைப் படுத்துகின்றன. ஆனால் ஒருவர் அளந்தறிய முடியாத மிக்க ஆன்மீக உணர்வும், நமது தேவைகளில் ஒன்றாய் அவற்றுடன் இருக்கின்றது. ‘

    ajay

    ‘பாலம் மீது ஒருவர் வாகனத்தில் கடந்து செல்லும் போது, அவரது உள்ளத்தையும் பாலம் உயரச் செய்ய வேண்டும். கம்பீரமான பாலத்தைப் பார்க்கும் அவரது நெஞ்சில் ஓர் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும். மில்லா நகர் வழியே வாகனப் பயணங்களைத் தவிர்த்து அதைப் பாழாக்காமல், வான்வீதிப் பாலம் மாந்தருக்குக் கடந்து செல்ல வேறு பாதை அளிப்பதுடன், அதைத் தாண்டி மனப் பூரிப்பையும் மிகையாய்த் தருகிறது.’

    பிரிட்டிஷ் கட்டமைப்புக் கலைநிபுணர்: நார்மன் ஃபாஸ்டெர் (British Architect: Norman Foster)

    Long bride -5

    பொறிநுணுக்கமும் கலைத்துவமும் கலந்த வான்வீதிப் பாலம்

    உலகப் பெருவிந்தைப் படைப்புகளில் முன்னணியில் நிற்கும் பாரிஸ் ஐஃபெல் கோபுரம் [Eiffel Tower], அமெரிக்காவின் சுதந்திரச் சிலை [Statue of Liberty] ஆகியவற்றை ஆக்கிய பிரான்ஸ் தேசம், மற்றுமொரு மகத்தான பொறியியற் சாதனையாக மிக்க உயரத்தில் ஒரு நீண்ட வான்வீதிப் பாலத்தைத் தனது 21 ஆவது நூற்றாண்டுப் படைப்பாக அமைத்து, உலகிலே ஓர் பரபரப்பை உண்டாக்கி யுள்ளது! தீக்குச்சி களில் நூலைக் கட்டித் தொங்கவிட்ட தொட்டில் போல் எளிதாகத் தோன்றுகிறது, பிரான்சின் பிரம்மாண்டமான இரும்புவடம் தூக்கிய புது யுகப் பாலம் [Cable-Stayed Modern Bridge]! கண்கொள்ளாக் காட்சி யாய்க் கவரும், பிரான்ஸ்-ஸ்பெயின் எல்லைப் பகுதியில் டார்ன் நதிப் பள்ளத்தாக்கில் (Tarn River Valley), உயர்ந்த மலைச் சரிவுகளில் தெரிந்தும், தெரியாமால், சூழ்வெளிப் பொலிவைச் சிறிதும் குன்றச் செய்யாது அற்புதமாக ஆக்கப் பட்டிருக்கிறது, பிரான்சின் ஜெர்மன் சில்வர் வடத் தொங்கு பாலம்!

    ஏழு கம்பங்கள் தாங்கி நிற்கும் 1.6 மைல் [2460 மீடர்] நீளமான வான்வீதிப் பாலம், பிரான்சின் தெற்குப் பகுதியில் மாஸ்ஸிஃப் மைய மலைப் பிரதேசப் பள்ளத்தாக்கில் (Massif Central Mountains) 886 அடி [270 மீடர்] உயரத்தில் படுத்திருக்கும் வானவில் போல காட்சி அளிக்கிறது! இந்த வான்வீதியில் மோட்டர் பயணம் செய்வதால் 60 மைல் (100 கி.மீ) பயண தூரம் குறைவதோடு, 4 மணிப் பயண நேரமும் சேமிப்பாகிறது! ஏழு தீக்குச்சிக் கம்பங்களில், எல்லாவற்றுக்கும் பெரிய கம்பம் 1125 அடி [343 மீடர்] உயரத்தில் ஐஃபெல் கோபுரத்தை விட 62 அடி மிகையாகப் பூமியில் ஊன்றப் பட்டுள்ளது, ஒரு மகத்தானப் பொறியியல் சாதனையே!

    மெலிந்த, எளிதான, மென்மையான மில்லா வான்வீதிப் பாலத்தைப் படைத்தவர், பிரிட்டிஷ் கட்டமைப்புக் கலை நிபுணர் நார்மன் ஃபாஸ்டர். ரைஸ்ஸ்டாக் [Reichstag] என்னும் ஜெர்மன் பாராளுமன்றத்தைப் பெர்லினில் டிசைன் செய்த கட்டிட நிபுணர், நார்மன் ஃபாஸ்டர். பிரான்சின் தலைநகர் பாரிஸ் நகரை, ஸ்பெயின் நாட்டு எல்லையுடன் இணைக்கும் பாதையில் (A75) இப்புது வீதி, ரோன் நதி தீரத்தில் [Rhone River Valley] கோடை கால மோட்டர் வாகனங்களின் பயண நெருக்கடியைக் குறைப்பதற்காகக் கட்டப்பட்டது. ‘மலைச் சரிவுப் பள்ளத்தாக்கில் கண்ணுக்குப் பட்டும், படாமல் மெலிந்த சிற்பக் கோடுகள் போல் தோற்றம் அளிக்கிறது, பிரான்சின் புதுப்பாலம். இயற்கையோடு மனிதன் கொண்டுள்ள நடை மொழியைப் பேசுகிறது இந்தப் பாலம். மிகச் சிறிய இடத்தை அடைத்துக் கொண்டு, மலைச் சரிவு தீரத்தில் இயற்கையுடன் பொருந்தி நடமிடும், இந்தப் பாலத்தின் கட்டமைப்புப் பொலிவு எங்களைக் கவர்கிறது! ‘ என்று ஃபாஸ்டர் கூறினார்.

    Relative Size

    பிரான்சின் மில்லா வான்வீதி, ஜப்பான் கடல்மீது கட்டியுள்ள நீண்ட தொங்கு பாலம் ஆகாஷி கைகோவை விட [Akashi Kaiko, Japan] சற்று நீளமானது. மேலும் மில்லாவின் கூம்பிய தூண்கள் ஆகாஷி ைகைகோ கோபுரங்களை விட மிக்க உயரத்தைக் கொண்டவை. ஆனால் அமெரிக்காவின் ஆர்கன்ஸாஸ் நதிமேல் [Arkansas River] 1067 அடி (320 மீடர்) உயரத்தில் இருக்கும் கொலராடோ ராயல் கார்ஜி பாலத்தை விடச் [Colorado Royal Gorge Bridge] உயரத்தில் சிறியது, மில்லா வான்வீதி. ஆனால் இரும்பு உத்தரச் சட்டத்தின் மேல் மரப்பலகைகளால் கட்டப்பட்ட ராயல் கார்ஜி பாலம் மனிதர் மட்டும் செல்லும் நடைபாலமே [Pedestrian Bridge] தவிர, பிரான்ஸ் மில்லா பாலம் போன்று மோட்டர் வாகனங்கள் பயணம் செய்யத் தகுதியும், வலுவும் அற்றது! ஆகவே மோட்டர் வாகனங்கள் போக்குவரத்துக்கு ஏற்ப பேருயர்ச்சியில் கட்டப்பட்ட உலகப் பெரும் பாலம், பிரான்சின் மில்லா வான்வீதி என்பதை அழுத்தமாகச் சொல்லலாம். ஈரோப்பின் [2004] நாணய மதிப்பில் E.394 மில்லியன் ஈரோ [523 மில்லியன் US டாலர்] செலவில் கட்டி முடிக்கப்பட்ட வான்வீதிப் பாலத்தை 2004 டிசம்பர் 14 ஆம் தேதி பிரென்ச் அதிபதி ஜாக்ஸ் செராக் கோலாகல மோடு திறந்து வைத்தார்.

    Bridge details

    வான்வீதிப் பாலத்தின் கட்டுமான விளக்கங்கள்

    மில்லா நீள்பாலம் 120 ஆண்டுகள் நீடிக்கும் தகுதி உடையது என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து வாகனங்கள், தினம் சராசரி 10,000 என்றும், வேனிற் காலச் சுற்றுலாச் சமயங்களில் உச்சம் 25,000 ஆக ஏறும் என்று அனுமானிக்கப் படுகிறது. வாகனங்கள் பாலத்தில் பயணம் செய்யக் ‘கடப்புக் கட்டணம் ‘ (Toll Fee) ஈரோ நாணயம் E 4.9 [6.5 டாலர்] செலுத்த வேண்டும். பளு வாகனங்கள், லாரி ஓட்டுநர் அதைப்போல் 4 மடங்கு தர வேண்டும். கூம்பிய நீள் தூண்கள், பாலத் தட்டுகள், அவற்றுக் குரிய சட்டங்கள் யாவும் சுமார் 36,000 டன் எடை கொண்டவை. கூடியவரை அவ்வுறுப்புகள் அனைத்தும், பாலம் அமைப்பாகும் தளங்களிலே ஒவ்வொன்றாய் இணைக்கப் பட்டன. பூமிக்குமேல் 1.6 மைல் நீளமுள்ள பாதைத் தட்டைப் பல நூறு அடி உயரத்தில் 7 தூண்கள் தூக்கிக் கொண்டு, மணிக்கு 150 மைல் (250 கி.மீ.) வேகத்தில் காற்றின் ஆற்றல் தாக்கினாலும், ஊஞ்சல் போன்று சிறிது ஆட்டம் ஆடிச் சாய்ந்து விடாதபடித் தாங்கிக் கொள்ளும் தகுதி பெற்றது, மில்லா வான்வீதி!

    The Road building

    வான்வீதிப் பாலத்தின் நீளம்: 8200 அடி (2460 மீடர்). அகலம்: 106 அடி (32 மீடர்). பாலத்தின் தடிப்பு: 14 அடி (4.2 மீடர்). இரட்டைப் பாதைகளை இருதிசைகளிலும் அமைக்கப்பட்டுப் பாலம், ஒரே சமயத்தில் இரண்டு வாகனங்கள் இணையாகச் செல்லும் வசதி படைத்தது. ஏழு கூம்பிய தூண்களின் [Piers] இடையில் அமைப்பான ஆறு இடையகற்சித் தட்டுகள் [Span Plates] ஒவ்வொன்றும் 1140 அடி (342 மீடர்). முதல்-இறுதித் தூண்களின் புறத்தே உள்ள தட்டின் நீளம்: 680 அடி (204 மீடர்). ஏழு தூண்கள் 253 அடி முதல் 807 அடி வரை உயரங்கள் (77 மீ-246 மீ) கொண்டு அடித்தளம் 81 அடி (24.5 மீ) அகலமும், பாலத் தட்டு அரங்கில் 36 அடி (11 மீ) அகண்டும், உச்சியில் ஒடுங்கியும் உள்ளன. தூண் ஒன்றின் மேல் 319 அடி (97 மீடர்) கோபுரம் [Pylon] நிற்கிறது. ஒவ்வொரு தூணும் 16 இணைப்புச் சட்டங்களால் சேர்க்கப்பட்டு, 2230 மெட்ரிக் டன் எடை கொண்டது. தூண்கள் ஒவ்வொன்றின் இருபுறத்திலும் 154 முறுக்கப்பட்ட இரும்பு வடங்கள் [Twisted Steel Cables] பூட்டப்பட்டு, மனிதக் கரங்கள் போல் பாலத்தின் இடைத்தட்டு எடையைத் தூக்கி, தட்டின் மட்டநிலை [Horizontal Level] உயரத்தைச் சீராகச் சமநிலையில் நிறுத்துகின்றன. முறுக்கிய இரும்பு நாண்களின் மொத்த எடை: 5000 டன்.

    2001 அக்டோபர் 17 ஆம் தேதி கட்டத் துவங்கி, 39 மாதங்களில் (3 வருடம் 3 மாதம்) 520 பணியாளிகள் வேலை செய்து கட்டி, பாலம் முடிக்கப் பட்டது ஒரு வியக்கத் தக்க சாதனையே. அதை அமைத்த முக்கிய பொறியியல் கம்பேனி: எஃப்பியாஜ் [Effiage]. அப்பாலத்தில் பயன்பட்டிருக்கும் இரும்புச் சாதனங்களின் எடையில் (36,000 டன்) ஐந்து ஐஃபெல் கோபுரங்களைக் கட்டி விடலாம்! வீதிக்குப் பயன்பட்டுள்ள காங்கிரீடின் கொள்ளளவு: 85,000 கியூபிக் மீடர். பாலவீதி அமைத்துள்ள பிரான்சின் மோட்டர் வாகன வீதி: A75 (Autoroute). 1140 அடி நீளம், 14 அடி தடிப்புள்ள காங்கிரீட் தட்டுகள், 60 டன் எடையுள்ள 13 அடிX57 அடி [4 மீடர்X17 மீடர்] துண்டுகளால் தனித்தனியாகச் சேர்க்கப்பட்டுப் பிறகு ஒவ்வொரு தட்டும், பூமியின் துணைக்கோள் மூலம் கண்காணிக்கப் பட்டு ஆயில் அழுத்த துடுப்புகளால் [Satellite-guided Hydraulic Rams], ஒவ்வொரு கனமான தட்டும், தூண்களின் மேல் மெதுவாக [நிமிடத்துக்கு 6 அங்குல] நகர்ச்சி வீதம் சீராகத் தள்ளப்பட்டு நேராக்கப் பட்டது.

    வான்வீதிப் பாலத் திட்டம் உருவாகிய வரலாறு

    1989 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்ட நான்கு பாதை அமைப்பு முறைகளில் ஒன்றாக வான்வீதிப் பால மாடல் தேர்ந்தெடுக்கப் பட்டது. உயர மாடல் ஒன்றும், மட்டநிலை மாடல் ஒன்றும் அவற்றில் முக்கியமானவை. மட்டநிலை வீதி மாடலில் டார்ன் நதி மீது 667 அடிப் [200 மீடர்] பாலமும், அதை நீட்சி செய்து, 7670 அடி [2300 மீடர்] மலைக்குகைப் பாதையும் தேவைப்பட்டன. குகையைத் தோண்டுவதால் டார்ன் நதியின் நீரோட்டம் குறுக்கீடு ஆவதாலும், அருகில் உள்ள நகரின் அடியே பாதை செல்வதாலும் நிதிச் செலவு அதிகமாகித் தூரமும் மிகையானது. ஆகவே மட்டநிலை மாடல் வீதி அமைப்பு கைவிடப்பட்டு, உயரத்தில் செல்லும் வான்வீதி மாடல் தகுதி பெற்றது.

    Long bride -4

    1989 பூகம்பத்தில் பழுதடைந்த அமெரிக்காவின் ஸான் பிரான்சிஸ்கோ வளைகுடா தொங்கு பாலம் [Bay Bridge] 2004 இல் செப்பனிட அல்லது வேறிடத்தில் புதிதாய்க் கட்டத் தீர்மானமாகி, இப்போது மதிப்பீடைத் தாண்டிப் பல பில்லியன் டாலருக்கும் மேலோடி விட்டது. காலிஃபோர்னியா ஆளுநர் ஆர்நால்டு சுவார்ஸ்நெக்கர் [Arnold Schwarzeneggar], வளைகுடாப் பாலத்தில் டிசைன் மாறுதல் அமைக்கச் செய்து, நிதிச் செலவு குறையுமா வென்று ஆராய நிபுணர்களை ஏற்பாடு செய்தார். ஆனால் புதுப்பாலம் அமைப்புத் திட்டம் தீர்மானமாகத் தாமதமாகிக் கொண்டு வருவதால், தற்போது வளைகுடா பால அமைப்பு நிதி மதிப்பீடு [5200 பில்லியன்], பிரான்சின் வான்வீதிப் பாலச் செலவைப் போல் பத்து மடங்காகி விட்டது! பிரென்ச் பொறியியல் நிபுணர்கள் 21 ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் மூன்றே ஆண்டில் 1.6 நீளமுள்ள மகத்தான ஒரு புதுவித வான்வீதியைச் சிக்கனமாக 520 மில்லியன் டாலரில் கட்டி முடித்தது, மெச்சத் தகுந்த ஒரு மாபெரும் சாதனையே!

    Long bride

    ******************************

    Photo credits: [Thanks for the following Web Sites]

    a) http://www.structurae.de/photos/index.cfm ?ID=31858

    http://www.structurae.net/structures/data/index.cfm ?id=s0000351

    b) http://en.wikipedia.org/wiki/Image:Millau_Viaduct_from_the_End_.jpg

    By Photographer: Daniel Lavabre

    c) http://www.structurae.net/photos/index.cfm ?JS=26588

    And also the Following Websites

    +++++++++++++++++++++

    தகவல்:

    1. World ‘s Tallest Bdige Opens in France [www.iafrica.com/pls/cms/iac.page] Dec 14, 2004

    2. From Wikipedia the Free Encyclopedia

    3. France Opens World Class Bridge By Dan Walters [Dec 15, 2004]

    4. World ‘s Tallest Road Bridge Opens By the Guardian [www.guardian.co.uk/] Dec 14, 2004]

    5. France Opens World ‘s Highest Bridge http://www.gulg-news.com

    6. Europe ‘s Highest Bridge Links Art & Engineering [http://seattletimes.nwsource/cgi-bin]

    7. France Inaugurates World ‘s Highest Bridge [www.reuters.co.uk/] Dec 14, 2004

    8. http://www.bing.com/videos/search?q=millau+viaduct+bridge+france&&FORM=VDVVXX

    9.  http://www.highestbridges.com/wiki/index.php?title=Millau_Viaduct

    10.  https://en.wikipedia.org/wiki/Millau_Viaduct  [February 22, 2016]

    *****************************

    jayabarathans@gmail.com (S. Jayabarathan)  [February 27, 2016]  [R-1]

    Attachments area
    Share