Category: மறு பகிர்வு

மறு பகிர்வு

  • ஆண் துணை

    நிர்மலா ராகவன்

    ஆண் துணை



    தெருவெல்லாம் ஒரே புகை. வழக்கம்போல் குப்பை கூளத்தை வீட்டு வாசலில் எரிந்ததால் அல்ல. சுவாசிக்கும்போது மூக்கிலும், தொண்டையிலும் எரிச்சலை ஏற்படுத்திய பட்டாசுப் புகை தீபாவளி நெருங்கி விட்டதை நினைவுபடுத்தியது.

    நாசித் துவாரத்தினருகே ஒரு கையால் விசிறியபடி நடந்தான் சாமிநாதன். ஒருவழியாக வீட்டை அடைந்தபோது, உள்ளே கேட்ட ஆண்குரல் அவனைக் குழப்பியது.

    யாராக இருக்கும்?

    தங்கைகளில் யாராவது வந்துவிட்டார்களா, குடும்பத்துடன்? அவர்களைத் தவிர எவரும் அவ்வீட்டுக்குள் நுழைந்ததில்லை. எல்லாம், தலைவன் இல்லாத குடும்பம்தானே என்ற அலட்சியம்!

    `நம்பளையெல்லாம் விட்டுட்டு எங்கேயோ போயிட்டாருடா அந்த மனுசன்!’ துக்கத்தில் ஸ்ருதி மேலே போக, அம்மா தெரிவித்தபோது பதினாறு வயதுக்கு இன்னும் இரண்டு மாதங்களிருந்தன.

    முதல் நாள், வழக்கத்துக்கு மாறாக, அப்பாவுடன் அம்மா சண்டை பிடித்துக்கொண்டிருந்தது நினைவில் எழ, அலுப்பாக இருந்தது. தெரிந்த சமாசாரம்தான். மனைவியும், பிள்ளைகளும் இருக்கிறபோது, ஒரு மனிதனுக்கு இன்னொரு பெண்ணுடன் என்ன தொடர்பு வேண்டியிருக்கிறது!

    தலைச்சன் பிள்ளையாகப் பிறந்துவிட்ட பாவம், படிக்கும் ஆசையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, குடும்பச் சுமையை ஏற்க வேண்டியிருந்தது.

    அவர் தங்கள் குடும்பத்துக்கு இழைத்த துரோகத்திற்குப் பரிகாரமாக, தனக்குப் பெண்வாடையே கூடாது என்று முடிவு செய்தான்.

    `அந்த மனிதர்’ ஒரு வழியாக செத்துத் தொலைந்திருந்தால், நிம்மதியாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொள்வான். இந்த இருபது வருடங்களாக, அவன் எவ்வளவோ முயன்றும் அம்மாவின் முகத்தில் சிரிப்பை மட்டும் வரவழைக்க முடியவில்லை.

    நாள் தவறாது, தாலிக்கயிற்றில் மஞ்சள் அரைத்துப் பூசிக்கொள்பவளிடம் எரிச்சல்தான் மூளும் சாமிநாதனுக்கு. அத்தாலியைக் கட்டியவனே இல்லையென்று ஆகிவிட்டது. இன்னும் என்ன பதிபக்தி வேண்டியிருக்கிறதாம்!

    ஆனால், வாய்திறந்து அவன் எதுவும் சொன்னதில்லை. பாவம், ஏற்கெனவே நொந்து போயிருக்கிறாள்! தான்வேறு அவள் மனத்தை மேலும் ரணமாக்க வேண்டுமா?

    திறந்திருந்த கதவின்வழி உள்ளே நுழைந்தவனுடைய கால்கள் பூமியிலேயே புதைந்து போயின.

    “யாரு வந்திருக்காங்க, பாத்தியா சாமிநாதா?” அம்மாவின் புலம்பல்களையே கேட்டு வளர்ந்திருந்தவனுக்கு, அன்று அக்குரலில் தொனித்த பெருமையும், பூரிப்பும் வித்தியாசமாகக் கேட்டன.

    “நம்ப சாமிநாதனா! என்னைவிட அதிகமா தலையெல்லாம் நரைச்சுப் போயிருக்கே!” என்று அட்டகாசமாகச் சிரித்தவரைக் குரோதமாகப் பார்த்தான்.

    `ஒங்க பொறுப்பையெல்லாம் என் தலையில கட்டிட்டுப் போயிட்டு, கேக்க மாட்டீங்க?’ என்று சுடச்சுட கேட்க நா துடித்தது.

    இவ்வளவு காலமாகப் பேசுவதையே மறந்தவனாக, கடமையிலேயே கடவுளைக் கண்டவன்போல் வாழ்ந்தாகிவிட்டது. இந்த உபயோகமற்ற மனிதருக்காக அந்தத் தவத்திலிருந்து பிறழுவானேன்! தொலைந்து போகிறார்!

    அவர்களிருவரையும் பார்க்கவும் விரும்பாதவனாக, உள்ளே நடந்தான் விறுவிறுவென்று.

    குளியலறைக்குள் நுழைந்தபின் தோன்றிற்று, அப்படியே வெளியே நடந்திருக்க வேண்டுமென்று.
    தனக்கு நினைவு தெரிந்த நாளாய், கஷ்டத்தைத் தவிர வேறு எதுவும் அனுபவித்து அறியாத அம்மா மேலும் நோகக்கூடாது என்று தான் சின்ன வயதிலேயே வேலைக்குப் போனதென்ன, பொறுப்பாகத் தம்பி தங்கைகளுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டு, அம்மாவுக்குக் காவல்நாயாய் தன்னை மாற்றிக்கொண்டு, அதற்காகவே பிறவி எடுத்ததுபோல் வாழ்ந்து வந்ததென்ன! எல்லாவற்றுக்கும் அர்த்தமே இல்லாது போய்விட்டதே!

    இனி தான் எதற்கு? அதுதான் வேறொரு ஆண்துணை கிடைத்துவிட்டதே! இப்படி ஒரு சமயத்திற்காகத்தான் அம்மா காத்திருந்தாளோ?

    தலையை அளவுக்கு மீறி குனிந்துகொண்டு வெளியே வந்து, வாயிலை நோக்கி நடந்தான் சாமிநாதன்.
    அம்மா எழுந்து ஓடி வந்தாள். “திரும்ப எங்கேப்பா போறே? அப்பா ஒனக்காக சாப்பிடாம காத்துக்கிட்டு இருக்காரு, பாரு!”

    அம்மாவின் பரிதவிப்பான முகத்தால் சற்றே இளகிய மனத்தை இரும்பாக்கிக்கொண்டு, ஒரு தீர்மானத்துடன் வெளியே போனான்.

    எல்லாரும் தூங்கியிருப்பார்கள் என்று உறுதியானதும், மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தான்.
    கதவு திறக்கும் சப்தத்திற்காகவே காத்திருந்ததுபோல் அம்மா ஓடி வந்தாள். “சாமிநாதா..!” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தாள்.

    அவளைப் பார்க்கவும் மனம் இடங்கொடுக்காது, “தூக்கம் வருது!” என்று முணுமுணுத்தபடி, தன் அறைக்கு ஓடாதகுறையாகப் போய், கதவைத் தாளிட்டுக்கொண்டான் சாமிநாதன்.

    சட்டையைக் கழற்றும்போது யோசனை வந்தது. அழையா விருந்தாளியாக வந்தவர் போய்விட்டாரா, இல்லை, அம்மாவின் பலவீனத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, அங்கேயே தங்கிவிட்டாரா?
    அப்படியென்றால்.., இப்போது எங்கே படுத்திருப்பார்?

    அந்த எண்ணம் எழுகையிலேயே உடலெல்லாம் எரிந்தது.

    வெட்கம் கெட்டவர்கள்!

    இந்த அம்மாதான், `இத்தனை வருஷங்களாக எங்கே, எவளுடன் இருந்தீர்களோ, அங்கேயே போய்த் தொலையுங்கள்!’ என்று முகத்தில் அடித்தமாதிரி சொல்லிவிட்டு, அப்படியே கதவை அவர் முகத்தில் அறைந்து சாத்தியிருக்க வேண்டாம்?

    `எனக்கு நீங்கள் யாரும் தேவையில்லை!’ என்பதுபோல், சுயநலமே பெரிதென ஓடிப்போனவரை வரவேற்று, நடுக்கூடத்தில் உட்காரவைத்து உபசாரம் என்ன வேண்டியிருக்கிறது!

    ஐம்பது வயதுக்கு மேலும் இந்தக் கிழவிக்குப் புருஷ சுகம் கேட்கிறதோ?

    சே! தனக்கு எப்படி இவ்வளவு கேவலமான அம்மாவும், அப்பாவும் வாய்த்தார்கள்!

    கஷ்டப்பட்டபோது எல்லாம் ஏதோ வைராக்கியத்துடன் இருந்து விட்டவனுக்கு அன்று முதன்முறையாகத் தன்மீதே கழிவிரக்கம் பிறந்து, அது கண்ணீராகக் கொட்டியது.

    சுமார் பத்து வருஷங்களுக்குமுன் ஒரு கோடீஸ்வரர், `உங்களைமாதிரி பொறுப்பான மாப்பிள்ளையைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்,’ என்று, அவர் மகளை ஏற்று, வீட்டோடு தங்கும்படி காலில் விழாத குறையாகக் கெஞ்சியபோது, அவர் பின்னாலேயே போயிருக்க வேண்டும், `விட்டது சனி’ என்று. அவர் சொன்னபடி கேட்டு நடப்பது `துரோகம்’ என்று அப்போது நினைத்தது மடத்தனம். அது என்னவோ, இந்த உலகில் சுயநலம் உள்ளவர்கள்தாம் பிழைக்கிறார்கள்.

    முடிவற்ற யோசனையில், எப்போது கண்ணயர்ந்தோம், எப்போது விழித்தோம் என்று ஒன்றும் புரியவில்லை சாமிநாதனுக்கு.

    மறுநாள் காலையில், அறைக்கு வெளியே வருவதற்குக்கூடத் தயக்கமாக இருந்தது. விடிந்ததும் விடியாததுமாக, அந்தப் பாவி மனிதரின் முகத்தில் விழிக்க வேண்டுமா?
    அயோக்கியத்தனம்!

    இளமை இருந்த நாளெல்லாம் பொறுப்புக்குப் பயந்தோடி, இப்போது முடியாத காலத்தில் ஆதரவு நாடி, சம்பாதிக்கும் மகனிடம் வந்து ஒட்டிக்கொள்ளப் பார்க்கிறார்!

    என் ரத்தம்தானே, என்னைப்போலவே ரோஷம் கெட்டவனாகத்தான் இருப்பான் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது!

    நான் யாரென்று இவர்களுக்கெல்லாம் காட்டுகிறேன்!

    வழக்கத்துக்கு மாறாக, நீர்யானை உள்ளே புகுந்ததுபோல் மிகுதியாகச் சத்தப்படுத்தினான் குளிக்கும்போது. வேண்டுமென்றே தண்ணீர் மொள்ளும் சொம்பை இரண்டு முறை கீழே தவறவிட்டான்.

    துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு வெளியே வந்தபோது, வீடு நிசப்தமாக இருந்தது. வழக்கம்போல் சமையலறைக்குப் போய், பசியாற உட்காருவதா, வேண்டாமா என்று யோசித்தபடி நின்றபோது, அம்மா வெளிப்பட்டாள்.

    “நீ பயப்படாம சாப்பிடு, வா. அவர் இல்ல. போயிட்டாரு!”

    அக்குரலில் சிறிதும் கோபமிருக்கவில்லை. ஆனால், அவன் இதுவரை என்றுமே கேட்டிராத சோகம் — நிராசை — சாமிநாதனை என்னவோ செய்தது. பரிதாபகரமாய் நின்றவளைத் தான் ஏதேதோ அசிங்கமாக நினைத்ததை எண்ணி அவமானம் ஏற்பட்டது.

    நேற்று என்றுமில்லாத கலகலப்புடன் பேசிய தாய் ஒரே இரவில் இவ்வளவு மூப்படைந்து போனது எதனால்? யாரால்?

    “இத்தனை காலமா நீ போட்ட உப்பைத் தின்னுட்டு, ஒன் மனசுக்குப் பிடிக்காத காரியத்தை எதுக்குச் செய்யறது? அதான்..!” எதுவுமே நடக்காததுமாதிரி, ஒப்பிப்பதுபோல் பேசினாள் அம்மா.

    அவனை அறைந்திருந்தால்கூட அவ்வளவு வேதனையாக இருந்திருக்காது என்று தோன்றியது.

    அம்மாவின் முகத்தில் எப்படியாவது சிரிப்பைப் பார்த்துவிட வேண்டும் என்று முன்பு எப்போதோ தைப்பூசத்தின்போது பத்து மலையில் ராட்டினத்தில் உட்காரும்படி வற்புறுத்தியதும், இன்னொரு முறை தன் சக்திக்கு மீறி, விலையுயர்ந்த புடவை ஒன்றை வாங்கி வந்ததும் ஞாபகம் வந்தது.

    எதுவுமே பலனளிக்காது போனபின், அம்மாவைப் போலவே தானும் சிரிப்பை மறந்து வாழக் கற்றுக்கொண்டதை நினைத்துக்கொண்டான்.

    அம்மாவின் முகத்தில் இனியும் மலர்ச்சியை வரவழைக்க முடியுமென்றால், அது ஒருவரால்தான் முடியும். அவர் போக்கியதை அவரேதான் மீட்டுத் தர முடியும். இது புரிந்தோ, புரியாமலோ, அவர் கட்டிய தாலியை அவராகவே பாவித்து, அவ்வளவு அக்கறையாகப் பாதுகாத்து வந்திருக்கிறாள்!

    கணவனால்தான் ஒரு பெண்ணின் அந்தஸ்து சமூகத்தில் நிர்ணயிக்கப்படுகிறது என்று நம் பெண்களுக்கு யார் விதித்தார்கள்? கோபம் எழுந்தது சாமிநாதனுக்கு.

    அதை மீறி மேலெழுந்தது, அம்மாவின் நலத்தையே நாடிய கடமை உணர்வு.

    “அப்பா எங்கே தங்கி இருக்காராம்? போய் கூட்டிட்டு வரேன்!” என்றபடி புறப்பட ஆயத்தமானான்.
    `வெடி’ என்று பயந்திருந்தது புஸ்வாணமாகப் போன நிம்மதி அம்மாவின் முகமெல்லாம் பரவியது.

    Share
  • பெயர் போன எழுத்தாளர்

    நிர்மலா ராகவன்

    எழுத்தாளர் கார்மேக வண்ணன் எழுத்தாளர் ஆனதற்கு முக்கிய காரணம் அவரது பெற்றோர்கள்.
    ‘கருப்பண்ணசாமி’ என்று அவர்கள் வைத்த பெயரால் சிறுவயதில் நண்பர்கள் செய்த கேலியும், அதனால் தான் அடைந்த துயரும் பொறுக்காதுதானே அவர் வாழ்வில் உயர்ந்தார்?

    இப்படியெல்லாம் சொன்னால் உங்களுக்குப் புரியாது. முப்பத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம், வாருங்கள்.

    அப்போது வெறும் கருப்பண்ணசாமியாக இருந்த நம் கதாநாயகனுக்கு ஆறு வயது. தன்னை ஒத்த நண்பர்கள், ஆறுமுகத்தை ‘ஆறு’ என்றும், ஏழுமலையை ‘ஏழு’ என்றும் அழைக்கும்போது, தன்னைக் ‘கருப்பு’ என்று விளித்ததை வித்தியாசமாக நினைக்கத் தோன்றாத பருவம்.

    அவன் பள்ளியில் சேர்ந்த சில வருடங்களுக்குப்பின், இலக்கணப் பாடத்தை நடத்திய ஆசிரியர் ‘காரணப் பெயர்’, ‘இடுகுறிப் பெயர்’ என்ற பதங்களை விளக்க முயன்றபோதுதான் வினை பிறந்தது.

    “ஊறும் காய் என்பது ஊறுகாய் ஆயிற்று,” என்று புத்தகத்திலிருந்த உதாரணத்தை விளக்கியதோடு நில்லாமல், தன் சொந்தக் கற்பனையையும் சிறிது கலந்துகொண்டார் அவர். “இதோ நம்ப கருப்பண்ணசாமியை எடுத்துக் கொண்டால், பிறந்தபோது இவன் கருப்பாக இருந்ததால், இந்தப் பெயரை இவனுக்குச் சூட்டி இருக்கிறார்கள். ஆக, இதுவும் ஒரு காரணப் பெயர்தான்!”

    என்னமோ தானே நேரில் வந்து, அவனுடைய பெயர்சூட்டு விழாவை நடத்தி வைத்திருந்ததுபோல் அளந்தார் வாத்தியார். தனக்கே தெரியாமல் தன்னுள் இவ்வளவு நகைச்சுவை உணர்வு இருந்திருக்கிறதே என்ற பூரிப்பில் அவர் தொந்தி குலுங்கச் சிரித்தார்.

    அவருடைய அடிவயிற்றை இறுக்கியிருந்த பெல்ட் எந்த வினாடியும் அறுந்து, நடக்கக்கூடாதது நடந்துவிடும் என்று பயந்தபடி இருந்த மாணவர்கள், அக்கற்பனையிலும், வாத்தியாரே சிரிக்கும்போது நாமும் சிரிக்காவிட்டால் மரியாதை இல்லை என்ற உசிதத்தாலும் பலக்கச் சிரித்துவைத்தார்கள்.

    அவர்களில் பலரும் கறுப்புத்தான் என்பதால், ‘நல்லவேளை! நம்ப வீட்டில நமக்கு இப்படி ஒரு பேரை வெக்காம போனாங்களே!’ என்ற நிம்மதி அச்சிரிப்புடன் வெளிப்பட்டது.

    கருப்பண்ணசாமிக்குள் வைராக்கியம் பிறந்தது அன்றுதான்.

    ‘நான் தோத்துட்டா, என் பேரை மாத்தி வெச்சுக்கறேண்டா!’ என்று எந்த ஒரு சிறு பந்தயமாக இருந்தாலும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் சவால் விடுவதை உண்மை ஆக்கிவிட்டால் என்ன?

    ஆனாலும், பணங்காசு செலவழித்து, உற்றார், உறவினர் முன்னிலையில் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற எண்ணுவதே அவர்களுக்குத் துரோகம் இழைப்பதைப்போல் பட்டது.

    உடன்படித்தவர்கள் ‘டேய் கருப்பு!’ என்று விளித்தபோது, முன்போல் யதார்த்தமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. உலகமெல்லாம் கூடி தன்னை மட்டம் தட்டுவதுபோல் இருந்தது.

    பிறருடன் பேசிப் பழகினால், அவர்கள் தன்னை அந்த பாழாய்ப்போன பெயரால் கூப்பிட்டு விடுவார்களே என்று பயந்தவனாகத் தனிமையில் இருக்கத் தலைப்பட்டான்.

    எதுவும் செய்யாமல் இருந்ததில் விசனம் அதிகமாகவே, அந்நேரங்களில் எல்லாம் கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தான்.

    அதிகம் படித்திராத அம்மா, “கண்ட புஸ்தகங்ககளைப் படிச்சுக் கெட்டுப் போகாதேடா!” என்று ஓயாது கண்டித்ததில், அவன் வயதுக்கு மீறிய புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் வந்தது.

    புத்தகத்தைக் கையில் எடுத்தாலே தூக்கம் வந்துவிடும், அல்லது கவனம் திசைமாறிவிடும் என்ற பொது நிலை அவன்வரை பொய்த்துப்போய், யாருமே எதிர்பாராதபடி, வகுப்பில் முதல் மாணவனாக வர ஆரம்பித்தான்.

    சகமாணவர்கள் பொறாமை தாங்காது, “காரணப் பெயருன்னா என்னடா?” என்று அவன் காதுபட கேட்டபோதுதான் அவனுக்கு அந்த யோசனை உதித்தது.

    தான் ஒரு எழுத்தாளனாகிவிட வேண்டும்!

    அப்பா, அம்மா வைத்த பெயரை மாற்றி வைத்துக்கொள்ள இதைவிட வேறு சிறந்த வழி கிடையாது. யாரும், எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள். தனக்கும் குற்ற உணர்வு தோன்றாது.

    இந்த எண்ணம் எழுந்தவுடனேயே ஏதோ பெரிய பாவத்தைத் தொலைத்துவிட்டமாதிரி ஒரு நிம்மதி பிறந்தது அவனுக்குள்.

    ‘எதை எழுதுவது?’ என்று யோசித்து, ஒன்றும் பிடிபடாமல், அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், இப்போதைக்கு முக்கியமான விஷயம் புனைப்பெயர்தான் என்று தீர்மானித்தான். புனைப்பெயரில் இன்னொரு சௌகரியம். எழுதுவது சற்று முன்னே பின்னே இருந்தாலும், தான்தான் அது என்று பிறருக்குத் தெரியாமல் போய்விடும்.

    அடுத்த சில மாதங்களை வாசகசாலையில் கழித்தான் கருப்பண்ணசாமி. கேட்டவர்களிடம், ‘ஆராய்ச்சி,’ என்றான்.

    எல்லாம் புனைப்பெயர் ஆராய்ச்சிதான். அந்தத் தேடுதலில் சில உண்மைகளைக் கண்டுபிடித்தான்.

    சில எழுத்தாளர்கள் தம் மனைவியின் பெயரில் ஒளிந்திருந்தார்கள். ‘பாவம், பெண்!’ என்று பத்திரிகை ஆசிரியர்கள் சற்றே மட்டமான படைப்பையும் வெளியிட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையோ, என்னவோ!

    ஒருவேளை, மனைவியின் விருப்பு வெறுப்பில் அவ்வளவு தூரம் ஒன்றிப்போய், தாம் வேறு, அவள் வேறு என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்தவோ என்னவோ என்றுகூட அவன் நினைத்தான்.

    தன்னால் அப்படிச் செய்ய முடியாது, தனக்கு ஒரு மனைவி வருவதற்குப் பல வருடங்கள் இருக்கின்றன என்பதோடு, ‘மிஸஸ். கருப்பண்ணசாமி’ என்பதாகத் தன் பெயரை மாற்றிக்கொள்ள எவளும் வலிய வரமாட்டாள் என்று தோன்றியது. அப்படி வருபவள் அவனுக்கு வேண்டவும் வேண்டாம். சுயகௌரவம் உள்ளவளாக இருக்கவேண்டும் அவனுக்கு வாய்ப்பவள்.

    இன்னும் சிலர், ‘நான் ஆண்மை பொருந்தியவன், என் மனைவியை நேசிப்பவன்’ என்று தங்கள் புனைப்பெயரால் விளம்பரப்படுத்திக் கொண்டார்கள். அதாவது, கொண்டவள் ஜானகியாக இருந்தால், இவன் ‘ஜானகிமணாளன்’ அல்லது ‘ஜானகிப்ரியா’ என்று மாறினான்.

    இலக்கியத் துறையில் புகழ் வாய்ந்தவர்கள் மறைந்தபிறகு, பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறலாமே என்ற நப்பாசையுடன் தத்தம் பெயருடன் ‘தாசன்’ என்று இணைத்து, அந்த இரவல் சுகத்தில் புகழ் தேடியவர்கள் கண்ணில் பட்டார்கள். இப்படியாகத்தானே கருப்பண்ணசாமியின் ஆராய்ச்சி தொடர்ந்தது.

    ‘அது ஏன் ஒளவையாருடன் எந்தப் பெண் எழுத்தாளரும் ஒட்டிக்கொள்ளவில்லை?’ என்ற் சிலகாலம் யோசித்ததில், ‘தாசன்’ என்ற வார்த்தைக்குப் பெண்பால் ‘தாசி’. அது அவ்வளவு மரியாதைப்பட்டதாக இருக்காது என்பது புரிந்தது.

    இந்த ரீதியில் எழுத்தாளர்களுடைய பெயர் வண்ணங்களை ஆராய்ச்சி செய்துவந்ததிலும், ஓயாது படித்ததிலும் கருப்பண்ணசாமியின் வயதும், அறிவும் கூடின. ஆனால், தன் பெயரைப்பற்றிய ஏக்கம் என்னவோ சற்றும் குறையவில்லை.

    இயற்பெயர் பிடிக்காது போனாலும், கன்னத்தில் இருந்த மச்சத்தைப்போல் அதுவும் அவனுடைய ஒரு அங்கமாகிவிட்டது. ‘விரைவில் அதை இழக்கப் போகிறோம்’ என்ற நினைவு எழும்போது சற்று வருத்தம்கூட வந்தது.

    பெயருக்குச் சம்பந்தம் இல்லாத இன்னெரு பெயரை எங்கேயாவது போய்த் தேடுவானேன் என்ற ஞானோதயம் அப்போதுதான் உதித்தது.

    இந்தமாதிரி வேண்டாத ஆராய்ச்சியும், யோசனையும் செய்துகொண்டே இருந்தால், தன் பெயருக்கு ஒரு விமோசனமே கிட்டாது என்று ஒரு நாள் உறைக்க, அண்மையில் இறந்துவிட்ட அவனது அப்பாவின் ஆத்மா சாந்தியடைய, ‘கருப்பு’ என்ற பொருளில் ஏதாவது புனைப்பெயர் வைத்துக் கொள்வதுதான் நியாயம் என்று தோன்றிப் போயிற்று.

    ஒரு விடுமுறை நாளன்று பகலில் அயர்ந்த தூக்கத்தில் இருந்தவன் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான்.
    ‘படபட’வென்று நிறையபேர் கைதட்ட, “நம்ப கார்மேகவண்ணன் இன்னும் அனேக எழுத்துப் படிவங்களைப் படைத்து நம்மை நீண்ட காலம் மகிழ்விக்க வேண்டும்!” என்று யாரோ ஒருவர் சொல்லி, பொன்னாடை போர்த்துகிறார். இன்னொருவர் முன்னால் வந்து, “நமது கார்மேகவண்ணனின் புகழில் பாதி அவருடைய மனைவிக்குச் சேரவேண்டும். இரவும், பகலுமாக அவர் இலக்கியச் சேவையில் ஈடுபட்டிருப்பது மனைவியின் புரிந்துணர்வால்தான்!” என்று மெச்சுகிறார்.

    இம்மாதிரி பல பாராட்டு விழாக்களில் தான் பேசி இருப்பது நினைவுக்கு வந்தது. தன்னைப் போலவே, விழா நாயகன் தலைமறைந்ததும், ‘இவனெல்லாம் பெரிய எழுத்தாளனாம்! இவனுக்கு ஒரு விழா எடுக்கறாங்களாம், வேலையத்தவங்க!’ என்று அனேகமாகச் சொல்லக்கூடும் என்பதும் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது.

    பொன்னாடைமேல் ஒரு மலர்மாலை விழுகிறது. அதன் கனமானது எழுதி, எழுதி வலிகண்டிருக்கும் அவனுடைய கழுத்தை மேலும் அழுத்த, அந்தப் நோவைப் பெரிதாக மதிக்காது, ஒரு பெரிய எழுத்தாளனுக்கே உரிய அடக்கத்துடனும், கம்பீரத்துடனும், “உங்களைமாதிரி தரமான வாசகர்கள் அமையாவிட்டால் நான் ஏது!” என்று பற்கள் (அவை வெகு வெண்மை) தெரியப் புன்னகைத்து…

    இந்த இடத்தில் கருப்பண்ணசாமி விழித்துக்கொண்டான். சற்றும் எதிர்பாராவிதமாக புனைப்பெயர் அமைந்ததில் அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

    கார்மேகம். அதாவது கரிய மேகம். அந்த மேகத்தின் வண்ணத்தைக் கொண்டவன் கண்ணன்.

    நினைவுதெரிந்த நாளாகத் தன்னை அவமானப்படுத்திவந்த பெயரை மாற்றினாற்போலவும் ஆயிற்று, கடவுள் பெயரை அடிக்கடி எழுதினால் புண்ணியத்திற்குப் புண்ணியமும் ஆயிற்று.

    நிம்மதி பிறந்தவுடனேயே மறைந்தும் போயிற்று. புனைப்பெயரெல்லாம் சரிதான், அதை வைத்துக்கொண்டு ஏதாவது எழுதித் தொலைக்க வேண்டுமே!

    தன் பெயர் மாற்றத்துக்காக செய்த ஆராய்ச்சிகள், கழித்த ஆண்டுகளையெல்லாம் நினைவில் கொண்டுவர முயற்சித்தான். நாற்பது, ஐம்பது கதைகளைப் படித்து, அதன்பின் அதில் கொஞ்சம், இதில் கொஞ்சம் என்று நிரவினால், ஒன்றாவது தேறாது!

    இந்தக் கற்பனை அளித்த உற்சாகத்தில், ‘கருப்பண்ணசாமி’ விரைவில் மறைந்து, அந்த இடத்தை ‘கார்மேகவண்ணன்’ பிடித்துக் கொள்வதை மானசீகமாகக் கண்டு மகிழ்ந்தான் அவன்.

    பி.கு: இக்கதையால் எவரையும் நோகடிக்க எண்ணமில்லை. நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கிறது.

    (தமிழ் நேசன், 1992)

    Share
  • கையாலாகாதவனாகிப்போனேன்! – 2

    ஒரு அரிசோனன்

    2.  மூக்குக்கண்ணாடி

     எனக்கு ஒன்பது வயதிலேயே கிட்டப்பார்வை வந்துவிட்டதால் மூக்குக்கண்ணாடி போடநேர்ந்தது. வகுப்பில் கரும்பலகையில் ஆசிரியர் எழுதுவது முதல் பெஞ்ச்சில் உட்கார்ந்தும் மங்கலாகத் தெரிந்ததால், பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவனைப் பார்த்து எழுத்த்துவங்கினேன்.  அவன் முதலில் அதை அனுமதித்தபோதிலும், தேர்வுகளில் என்னைப் பார்த்து அவன் எழுத நான் அனுமதிக்காததால், அதற்குமேல் எனக்கும் அனுமதி மறுத்துவிட்டான்.  தேர்வுவேறு, மற்றசமயம்வேறு என்று நான் பலவாறு எடுத்துரைத்தும் அவன் காதில் அந்த நியாயம் ஏற்வில்லை.

    அதுவும் நல்லதற்கே என்று பின்னால்தான் தெரிந்தது.  இல்லாவிட்டால் அதிகமான கிட்டப்பார்வை மிகவும் மோசமாகியிருக்கும்.

    அனுமதி மறுக்கப்பட்டதால், வேறுவழியின்றி, முதல்பெஞ்சிலிருந்து இறங்கித் தரையில் அமர்ந்து கரும்பலகையைப் பார்த்து எழுதத் துவங்கியபோதுதான் ஆசிரியர் என்னவென்று விசாரித்தார்.

    “அவன் பொட்டைக்கண்ணு சார்; அவனுக்குக் கண்ணு சரியாகத் தெரியாது!” என்று எனக்கு அனுமதிமறுத்த மாணவன் ஒரு பெரிய உண்மையை முதன்முதலில் கண்டுபிடித்து அறிவிப்பதுபோல — ஆசிரியருக்கு மட்டுமன்றி, வகுப்பிற்கும் உரத்தகுரலில் அறிவித்தான்.

    அன்றிலிருந்து சில ஆண்டுகள் ’பொட்டைக்கண்ணன்’ என்ற பட்டப்பெயர், நான் மூக்குக்கண்ணாடி அணிந்து சரியான பார்வையைப் பெற்றும்கூட என்னைத் தொடர்ந்துவந்தது.

    என் தாய்வழிப்பாட்டனாரை நன்கறிந்த எனது ஆசிரியர் என் கண்களைப்பற்றிய உண்மையைத்[!] தெரிவித்ததும், மதுரைக்கு அழைத்துச்சென்று — ஏனெனில் காரைக்குடியில் அப்பொழுது சிறந்த கண்மருத்துவர் இல்லை– கண்களைச் சோதித்துக் கண்ணாடி வாங்கித்தந்தார்கள்.

    கண்ணாடியைத் தேவையின்றிக் கழட்டக்கூடாது என்ற மருத்துவரின் பரிந்துரை என் நெஞ்சில் ஆழமாக்ப் பதிந்திருந்ததால், எனது மூக்குக்கண்ணாடி ஒருவகையில் எனக்குக் கவசகுண்டலமாகிவிட்டதென்றால் மிகையில்லை.

    வகுப்பிலேயே கண்ணாடியணிந்த மாணவன் நான் ஒருவன் என்பதால், நான் பலவிதச் சோதனைகளுக்குள்ளாக நேர்ந்தது. உடன்பயிலும் நண்பர்கள் என் பார்வையைச் சோதிக்கவேண்டி, கண்ணாடியுடனும், அது இல்லாமலும், அவர்கள் சுட்டும் கைவிரல்கள் எத்தனை என்ற பரிசோதனைக்கு ஆளாக்கப்பட்டேன். அலுத்துவிட்டபடியால் அவற்றை மறுத்த எனக்கு, ‘சோடாபுட்டி’, ‘கோலிசோடா,’ ‘நாலுகண்ணன்’ போன்ற கௌரவப்பட்டங்களும் தாராளமாக வழங்கப்பட்டன.

    கண்ணாடியைக் கழட்டக்கூடாது என்ற சூழ்நிலை ஏற்பட்டதால், விளையாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டியிருந்தது.  அதனால் விளையாட்டு பிரியடுகளில் பாடப்புத்தகத்தைப் படித்துப் பொழுதுபோக்கியதால், தேர்வில் மதிப்பெண்கள் உயர்ந்தன என்பது ஒரு நல்ல பக்கவிளைவு.

    இப்படியிருக்கையில் சிவகங்கையை அடுத்த சோழபுரத்தில் எனது ஒன்றுவிட்ட மாமனின் திருமணம் நடந்ததால், மூன்று நாள்கள் அங்கு செல்லவேண்டிவந்தது ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது. யாரும் என்னைப் பட்டப்பெயர் சொல்லி அழைக்கமாட்டார்களென்ற மகிழ்வுடன், என் வயதொத்த எனது உறவுச் சிறார்களையும் சத்திக்கலாமென்ற மகிழ்வும் சேர்ந்துகொண்டது.

    முதல் நாளே திருமண நிகழ்ச்சிகள் ‘போர’டித்துவிட்டன.  கைக்கெட்டும் கூந்தல்பனை இலைகளைக் கிழித்து ஊதல் செய்து விளையாடுவதும், அதில் விமானம் செய்து மகிழ்வதற்கும், எங்கள் மாமா அதட்டல்போட்டு முற்றுவைத்தார்.  அத்தோடுநில்லாமல், எங்கள் கையிலிருந்த ஊதலையும், விமாங்களையும் பறித்துக் கிழித்தும் எறிந்துவிட்டார்.  பெரியவராயிற்றே!  எதிர்த்துப்பேசவியலாத ஒரு கையாலாகாத்தனம்.  அதுமட்டுமல்ல, எதிர்த்துப்பேசினால் கன்னத்தில் அறைவிழும், அதைத் தவிர்க்கவேண்டும் என்ற புத்திசாலித்தனமும்கூட…

    எனவே, என்னசெய்யலாம் என்று அலைந்து திரிந்துகொண்டிருந்த நானும், என் மாமன் மகனும் திருமணமண்டபத்திற்கு அருகாமையில், சிவகங்கையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையோரத்தில் இருக்கும் சுமைதாங்கியில் ஏறி அமர்ந்து, இரண்டுபக்கமும் செல்லும் பஸ்களை எண்ணிக்கொண்டிருந்தோம்.

    அப்பொழுது ஒரு மூதாட்டியும், என் வயதொத்த ஒரு சிறுவனும், ஒரு ஆட்டுக்குட்டியுடன் அங்குவந்து நின்றனர்.

    எங்களைப் பார்த்த அச்சிறுவன் விடுவிடென்று சுமைதாங்கியில் ஏறி, என்னருகில் அமர்ந்துகொண்டான்.

    “எலே, முனிசாமி, பார்த்துடா;  கண்ணுதெரியாமக் காலைவச்சு விளுந்துடாதடா.” என்று கரிசனத்துடன் கூறினாள்.

    எனக்குத் திக்கென்றது.  என்னருகில் அமர்ந்த சிறுவனை ஏற இறங்கப் பார்த்தேன்.

    வழியவழிய எண்ணெய்தடவி வாரப்பட்ட சுருட்டைமயிர்; அதிகப்படியான எண்ணெய் நெற்றியில் இறங்கி புருவத்தைத் தொட்டு நின்றதோடுமட்டுமல்லாமல், அவன் பூசியிருந்த திருநீற்றையும் கருப்பாக்கியிருந்தது.  பெரிய கண்கள்; வெள்ளைவெளேரென்ற விழியின் நடுவில் பளிச்சிடும் கருவிழி…

    இவனுக்கா கண் தெரியவில்லை?!

    முனுசாமி என் கண்ணாடியைக் கூர்ந்து கவனித்தான்.

    அவன் மட்டுமல்ல, அந்த மூதாட்டியும் கவனித்தாள் என்பது இருவரும் ஒரே சமயத்தில், “ஏன் தம்பி, உனக்கு அதுக்குள்ள வெள்ளெழுத்து வந்துடுச்சா?  கண்ணாடி போட்டிருக்கியே?” இருவரும் கேட்ட கேள்வியிலிருந்து தெரிந்தது.

    சிறிது தயங்கிய நான், ‘வெள்ளெழுத்து இல்லை.  தூரத்திலே இருக்கறது மங்கலாத் தெரியும், அதனாலே கண்ணாடி போட்டிருக்கேன்,” என்று பதில் சொன்னேன்.

    ஏதோவொரு அதிசயத்தைக் கண்டதுபோல என் கண்ணாடியையே உற்றுநோக்கினான், முனுசாமி.

    “எனக்கும் தூரத்தில இருக்கறது மங்கலாத்தான் தெரியுது.  இந்தக் கண்ணாடியைப் போட்டுக்கிட்டா நல்லாக் கண்ணு தெரியுமா?”

    முனுசாமியின் குரலில் ஏக்கம், நம்பிக்கை, வியப்பு கலந்திருந்தன.

    “ஆமாம், தெரியும்,” என்று சுருக்கமாகப் பதிலளித்தேன் நான்.  பள்ளி நண்பர்களின் ஏச்சுக்கும், எள்ளலுக்கும் பாத்திரமாகிவந்தபடியால், எனது கிட்டப்பார்வையைப்பற்றி அதிகம் பேசவிரும்புவதில்லை நான்.

    சிறிதுநேரம் ஒன்றுமே பேசாமல் முனுசாமி தன்னுடன் வந்த மூதாட்டியையும், என் கண்ணாடியையும் பார்த்துக்கொண்டே இருந்தான்.

    மிகவும் தணிந்த குரலில், “எனக்கு கண்ணு நல்லாத் தெரிஞ்சா எப்படி இருக்குமிண்டே தெரியாது.  உன்னோட கண்ணாடிய ஒரு நிமிசம் போட்டுப் பாக்கலாமா?” என்று கேட்டான்.

    எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.

    என்னையும் அறியாமல் என் கைகள் கண்ணாடியைக் கழட்டச் சென்றன.

    “வேண்டாம்.  கண்ணாடியைக் கழட்டக்கூடாதுன்னு வீட்டிலே சொல்லியிருக்காங்க இல்லையா?  எனக்கே நீ ஒருதடவைகூட..” என்று எச்சரித்த எனது மாமன்மகனையும் பொருட்படுத்தாது என் கண்ணாடியை முனுசாமியிடம் நீட்டினேன்.  என்னையுமறியாமல் அவன் எனக்கு மிகவும் நெருங்கிவந்துவிட்டதைப்போன்ற ஒரு நேச உணர்வு..

    ஏதோவொரு மாயக்கண்ணாடியை வாங்குவதுபோன்ற எதிர்பார்ப்புடன், மிகவும் கவனமாக என்னிடமிருந்து மூக்குக்கண்ணாடியை வாங்கி, மெல்ல அதை அணிந்துகொண்டான் முனுசாமி.

    அவன் தலை நாலாபக்கமும் சுழன்றது.

    வாயெல்லாம் பல்லாக அவன் முகம் மலர்ந்தது.

    “ஆயா, கண்ணு நல்லாத் தெரியுது ஆயா!  ஒம் மூஞ்சிலே இவ்வளோ சுருக்கம் இருக்குன்னு இப்பத்தான் பாக்குறேன்.”  இதுவரை கண்டிராத மூதாட்டியின் முதுமையைக் கண்டதில் அவனுக்கு அவ்வளவு பரவசம்!

    “கோயில் கோவரத்திலே எத்தன பொம்மைக இருக்கு, ஆயா!  இதுவர அதுக இருக்குன்னுகூட எனக்குத் தெரியல.  இது மாயக்கண்ணாடிதான், ஆயா!”

    அவனது மகிழ்ச்சி என்னையும் தொற்றிக்கொண்டது.

    “வேறென்ன தெரியுது?  கண்ணாடி இல்லாம எனக்கு இப்ப கோபுர பொம்மைகள் தெரியலே!”  என்று என் நிலைமையை அவர்களுக்கு அறிவித்து மகிழ்ந்தேன்.  என் இயலாமையை வெளியிடுவதில், அதைத் தயக்கமில்லாமல் பகிர்ந்துகொள்வதில் – அதைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு ஜீவனிடம் பகிர்ந்துகொள்வதில் கிடைத்த அந்த நிம்மதி, அந்த மகிழ்ச்சியை எண்ணும்போது இப்பொழுதும் இனிக்கிறது.

    “நெசமாவா சொல்லுறே, முனுசாமி?  இந்தக் கண்ணாடியைப் போட்டுக்கிட்டா, ஒனக்குக் கண்ணு நல்லாத் தெரியுதா?!”

    மூதாட்டி பெரிய சொத்து கிடைத்துவிட்டமாதிரி மகிழ்ந்தாள்.

    சிறிது நேரம் கழித்து, “முனுசாமி, இந்தத் தம்பிகிட்டே கண்ணாடியத் திருப்பிக் கொடுத்துடு.” என்று கட்டளை பிறக்கவே, மனமேயில்லாமல் என்னிடம் கண்ணாடியைத் திருப்பிக் கொடுத்தான் முனுசாமி.

    “இப்ப பழையபடியே ஆயிடுச்சு, ஆயா.  ஒம் முகத்துலே இருக்கற சுருக்கமும் தெரியல், கோயில் கோவரத்திலெ இருக்கற பொம்மகளும் தெரியலே.  எல்லாம் மாயமா மறஞ்சுபோச்சு.  இது மாயக்கண்ணாடிதான், ஆயா!  எனக்கு இந்தமாதிரி ஒரு கண்ணாடிய வாங்கிக் கொடு, ஆயா!”

    முனுசாமியின் குரலில் ஏக்கம் இருந்தது.

    “தம்பி, கொஞ்சம் கீளே எறங்கி வாரியா!” என்று என்னை அழைத்தாள் மூதாட்டி.

    மூவரும் சுமைதாங்கியைவிட்டுக் கீழிறங்கினோம்.

    three-kids

    “என்ன ஆயா?”  முனுசாமியின் ஆயா எனக்கும் ஆயா ஆகிவிட்டிருந்தாள்.

    “தம்பி, நீ இந்த ஊரா?”

    “இல்லை, ஆயா.  காரைக்குடி.”

    “இந்தப்பக்கம் எப்பிடி?”

    “எங்க சின்னமாமாவுக்குக் கல்யாணம்.  அதோ அந்த மண்டபத்திலதான் நடக்குது.  அதுக்குத்தான் நாங்க வந்தோம்.  என் பெரியமாமா மகனையும் அந்த ‘நாமி’ல் சேர்த்துக்கொண்டேன்.”

    “நாங்க நாலுகோட்டையிலேந்து வந்திருக்கோம்.”

    இது முனுசாமி.  நாலுகோட்டைக்குச் சோழபுரத்திலிருந்து சில மைல்கள் செல்லவேண்டும்.  எனது தந்தைவழிப்பாட்டியின் ஊர் அது என்று பின்னர் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    “ஏந்தம்பி, இந்தக் கண்ணாடியைக் காரக்குடிலே வாங்கினியா?”

    “இல்லே, ஆயா.  மதுரைலே வாங்கினது.”

    “சிவசங்கை [சிவகங்கை] வரிச்சியூர் வளியா, பஸ் அங்கு போகுமிண்டு கேள்விப்பட்டிருக்கிறேன்.  மருதை போனதேயில்லை.” மூதாட்டி ஒரு ஏக்கத்துடன் இயம்பினாள்.

    “நான் சிவசங்கை போனதே இல்லை. நாலுகோட்டைவிட்டா, சோளவரம் — சோளவரம் விட்டா, நாலுகோட்டை.  அவ்வளவுதான்.”  முனுசாமி யாரும் கேட்காமலேயே அறிவித்தான்.

    “மருதையில எந்தக் கடயில தம்பி கண்ணாடிய வாங்கினே?”

    “முதல்ல கண்டாக்டர்கிட்ட கண்ணைச் சோதனைசெய்யனும்.  அதுக்கப்பறம் அவர் எப்படிப்பட்ட கண்ணாடிபோடனும்னு ஒரு சீட்டிலே எழுதிக்கொடுப்பார்.  அதை வாங்கிக்கிட்டுப்போயி, மூக்குக்கண்ணாடிக் கடையிலே கொடுத்து, கண்ணாடி வாங்கணும், ஆயா,” என்று நான் சொன்னதும், மூதாட்டியின் முகம் தொங்கிவிட்டது.

    “இதெல்லாம் நான் எப்பிடிச் செய்யமுடியும் தம்பி?  ஒரே ஒரு தபா நான் சிவசங்கை போயிருக்கேன்.  அவ்வளவுதான். அதுவும், பஸ்சிலே அடிபட்டுச் செத்த இவன் அப்பன், ஆயி பொணத்த எரிச்சுட்டுவர காஞ்சிரங்காடு வரைக்கும்தான்.  நானாவது, இவனைக் கூட்டிக்கிட்டு மருதை போகறதாவது..?”

    ஆற்றாமையில் அலுத்துக்கொண்டாள் அந்த மூதாட்டி.

    “ஆயா, இந்தக் கண்ணாடிதான் எனக்கு நல்லாத் தெரியுதே!  இத்த நம்ம வாங்கிக்கிட்டா, இந்தத்தம்பி வேற கண்ணாடி வாங்கிக்கலாமில்லே!”

    ஒரு எதிர்ப்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும், மூதாட்டியைக் கேட்டான் முனுசாமி.

    “நீபாட்டு கேட்டுப்புட்டேடா, நாம் எத்தைக் கொடுத்து தம்பிகிட்டே கண்ணாடியைக் கெக்குறது?”

    “அதுதான் நம்மகிட்ட இந்த ஆட்டுக்குட்டி இருக்குதுல்ல, ஆயா.  இத்தக் கொடுத்துட்டாப் போகுது…”

    இழுத்தான் முனுசாமி.

    “நீ சொல்லறது நல்லா இருக்குடா.  இந்தத் தம்பியைப் பார்த்தா சைவச்சாப்பாடு சாப்புடறவக மாதிரியில்ல இருக்கு.  இவுக ஆட்டுக்குட்டிய வச்சுக்கிட்டு என்ன செய்வாக?  கிடேரிக் கன்னுக்குட்டினாலும், பெரிசானதுக்கப்பறம் இவுகளுக்கு உவயோகப்படும்.  அத்தவிடு, சாயபு கொஞ்சநேரத்துல இத்த வாங்கிக்க வந்துடுவாருல்ல…” என்று பதிலுக்கு இழுத்தாள் மூதாட்டி.

    “சாயபுகிட்ட பணத்த வாங்கி இவுக கையிலே கொடுத்துட்டு, கண்ணாடிய வாங்கிக்கலாமில்ல..”  நப்பாசை விடவில்லை முனுச்சாமிக்கு.

    நான் எனது கண்ணாடியைக் கொடுக்கச் சம்மதித்துவிட்டதுபோலவும், அதை எப்படி பைசல்செய்வது என்பதுதான் பிரச்சினை என்பதுபோல இருந்தது அவர்கள் பேச்சு.

    என் மாமன்மகன் இப்பேச்சை இரசிக்கவில்லை என்பதுபோல, “வாடா, போகலாம்.  நம்மைத் தேடுவாங்க.’’ என்று என் கையைப்பற்றி இழுத்தான்.

    எனக்கோ இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை ஏற்பட்டது.  பாவம், முனுசாமி, நான் என் கண்ணாடியைத் தராவிட்டால் பார்வை இல்லாமலல்லவா கஷ்டப்படுவான்?  காலாகாலத்தில் கண்ணாடி போடாவிட்டால் பார்வை மோசமாகும் என்றல்லவா டாக்டர்வேறு சொல்லியிருந்தார்.  அதனால்தானே எனக்கு உடனே கண்ணாடி போட்டார்கள்!  நானாவது வேறு கண்ணாடி வாங்கிக்கொள்ளலாம்.  சீட்டு இருக்கிறது.  ஆனால், முனுசாமி…?

    என் நண்பர்கள் என்னைச் செய்த பழிப்புச்சொற்கள் அனைத்தும் என் காதில் தாமாகவே ஒலித்தன.  பாவம், முனுசாமியை மற்றவர்கள் எப்ப்டிப் பழிக்கிறார்களோ?

    இதற்குள் எனது பெரியமாமா ஒரு பக்கத்திலிருந்தும், லுங்கியும் தொப்பியும் அணிந்த ஒரு சாயபு இன்னொரு பக்கத்திலிருந்தும் வந்துசேர்ந்தார்கள்.

    “சாயபு, இந்த ஆட்டுக்குட்டிக்கான பணத்தத் தர்றீகளா, இந்தத் தம்பிக்குக் குடுக்கணும்..” முனுசாமியின் குரலில் அவசரம் இருந்தது.

    சாயபுவோ புரியாமல் விழித்தவாறு மூதாட்டியைப் பார்த்தார்.

    “என்னடா விவகாரம்?  இவங்க உனக்கு எதுக்குப் பணம் தரேன்னு சொல்லறாங்க?” என் மாமாவின் குரலில் அதட்டல் இருந்தது.

    “வாங்க ஐயா.” என்று என் மாமாவை வாயெல்லாம் பல்லாக வரவேற்ற முனுசாமி, “தம்பியோட மூக்குக்கண்ணாடிய நான் வாங்கிக்கப்போறேன்.  அதுக்கு காசு கொடுக்கணுமில்ல? எங்க ஆட்டுக்குட்டிய தம்பிக்குக் கொடுக்க முடியாதுல்ல.  சாயபுதானே ஆட்டுக்குட்டிய வாங்கிகப்போறாரு. அதான் அவருகிட்ட காசைக் கேக்குறன்.” என்று உற்சாகமாக் என் மாமாவுக்கு விளக்கினான்.

    என் மாமாவின் புருவங்கள் உயர்ந்தன.

    “என்னடா இது?  கல்யாணத்துக்கு வந்தோம், தின்னோம், போனோம்னு இருக்காமக் கண்ணாடிய விக்கறேன்னு இது என்னடா கூத்து?  கண்ணாடியக் கொடுத்துட்டு நீ என்னடா கம்பை ஊணிக்கிண்டா போகப்போறே?”

    என் மாமா என்னைப் பார்த்துக் கத்தினார்.  அவருக்குக் கோபம்வந்தால் என்ன பேசுகிறோம், யார் மனம் புண்படுகிறது என்றே பார்க்கமாட்டார்.

    அவர் சொற்கள் என்னைச் சுட்டன. என் மனம் முனுசாமிக்காக உருகியது.  அவரை எதிர்த்துப்பேசத் திராணியின்றி நின்றேன்.

    சாயபு என் மாமாவைச் சமாதானப்படுத்தும்விதமாகப் பேசினார்.

    “நீங்க அமைதியா இருங்க, ஐயா.  இந்தக் கிளவி எனக்குப் பணம் தரணும்.  அதுக்குத்தான் இந்த ஆட்டுக்குட்டியக் கொடுத்து கடனைத்தீர்க்க வந்திருக்கு.  நல்ல , மானஸ்தமான பொம்பளைங்க ஐயா இது.  ஆனா அதிர்ஷ்டம்கெட்டது.  போன வருசம்தான் இதோட புள்ளையும், மருமகளும் சிவேங்கைச் சந்தைக்குப் போறபோது அவங்க மாட்டுவண்டிமேல பஸ்மோதி செத்துப்போனாங்க.  அப்ப வாங்கின கடன்.  மாசாமாசம் கொஞ்சம்கொஞ்சமா கடனைத் தீர்த்துக்கிட்டு வருது.   கடைசித் தவணையாத்தான் இந்த ஆட்டுக்குட்டியக் கொண்டுவந்திருக்கு.  என் மகளுக்கு நிக்கா வச்சுருக்கோம்.  அதுக்கு கறிபோட்டு விருந்து வைக்கணுமில்ல.  அதுதான்.  சரிங்க, வர்றேன்.”

    ஆட்டுக்குட்டியை இழுத்துக்கொண்டு சென்றார் அந்த சாயபு.

    முனுசாமியின் கண்பார்வையின் தீர்வையும் அவர் இழுத்துக்கொண்டு செல்லவதுபோலடத்தான் எனக்குப் பட்டது.  தான் பலியாகப் போவதை அறியாமல், அவர் பையிலிருந்து வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் முருங்கைக் கீரையைத் தின்றுகொண்டே அவர் பின்னால் சென்றது ஆட்டுக்குட்டி.

    நானும் அந்த ஆட்டுக்குட்டியைப்போல, முனுசாமியைத் திரும்பித்திரும்பிப் பார்த்துவாறே  என் கையாலாகாத்தனத்தை நொந்துகொண்டு என் மாமாவைத் தொடர்ந்து சென்றேன்.

    முனுசாமிக்கு என்னவாயிற்று, அவன் கிட்டப்பார்வைக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டானா, அல்லது பார்வை மிகவும் மோசமாகித் தவிக்கிறானா என்ற எண்ணம் அவ்வப்போது என்னுள் எழுங்கால் — அவனுக்கு எந்த உதவியும் செய்யாதுபோன என் கையாலாத்தனத்தை எண்ணியெண்ணி  என் நெஞ்சு கனத்து வலிக்கிறது.

    [கையாலாகாத்தனம் தொடரும்]

    மறுபகிர்வு நன்றி: தாரகை இணைய இதழ்

    Share
  • கலைவாணன் கண்ணதாசன் நினைவுகள்(1)

    அப்துல் கையூம்

    என் இளமைக் காலத்தில் கண்ணதாசன் என்ற மாபெரும் ஆளுமை பொருந்திய மனிதனோடு ஓரிரண்டு முறை பேசிப் பழக வாய்ப்பு கிட்டியதையும், அவரது தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் பங்குகொண்டு நான் கவிதை வாசித்ததையும், அவரிடம் “சபாஷ்” வாங்கியதையும் இன்றளவும் பெருமையோடு எண்ணிப் பார்க்கிறேன்.

    “வசிட்டர் வாயால் பிரம்மரிஷி” பட்டம் பெற்றதைப் போல என்று சொல்வார்களே அந்த முதுமொழியை அன்று நான் முழுவதுமாக உணர்ந்தேன்.

    எனது பள்ளிப் பருவத்தின்போது, வண்டலூர் பிறைப்பள்ளியில் (Crescent Residential School) என்னோடு படித்த சகமாணவர்களுக்கும் அவரைச் சந்தித்து உரையாடுகின்ற அரிய வாய்ப்பு கிடைத்தது,. அப்படிப்பட்ட ஓர் அதிர்ஷ்டம் எங்களுக்கு வாய்த்தமைக்கு வலுவான காரணம் ஒன்று உண்டு.

    அதற்கான காரணம் என் நண்பன் கலைவாணன் கண்ணதாசன்.

    கலைவாணன் என்னைவிட வயதிலும், வகுப்பிலும் ‘ஜூனியர். அவனது தந்தையின் தமிழாற்றலுக்கு மனதைப் பறிகொடுத்த நான், கலைவாணனுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தேன். அவனுக்குள்ளும் தன் தந்தைபோலவே கதை, கட்டுரை, கவிதை, நடிப்பு என அனைத்துக் கலைகளிலும் ஆர்வம் குடிகொண்டிருந்தது

    எங்களோடு ஹாஸ்டலில் தங்கி ஒன்றாக பழகிய சகமாணவன் அவன். சென்னை மாநகரத்திலேயேதான் கண்ணதாசன் வீடும் இருந்தது. இருந்தபோதிலும் ஹாஸ்டலில் பிறமாணவர்களுடன் தங்கி படிக்கும்போது, அவனது வாழ்க்கையில் உலக அனுபவங்கள் இன்னும் கூடுதலாக கிடைக்கும், எல்லோருடனும் சேர்ந்து பழகும் சந்தர்ப்பம் உண்டாகும் என்ற எதிர்ப்பார்ப்பில் அவனை வண்டலூர் கிரெசெண்ட் பள்ளியில் கவியரசர் சேர்த்திருந்தார்.

    தன் மகனின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைக்கும் எல்லா தகப்பன்மார்களைப் போலவே கண்ணதாசனும் ஆசைப்பட்டார். என்னைப் பொறுத்தவரை கண்ணதாசன் ஒரு சிறந்த கவிஞனாக மட்டுமல்ல. சிறந்த தகப்பனாகவும் திகழ்ந்தார் என்பது என் கருத்து.

    kannadasan

    மூன்று பெண்மணிகளை அவர் மணம் முடித்தார், அவருக்கு 14 குழந்தைகள் இருந்தன என்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி சிலர், அவர் சிறந்த குடும்பத் தலைவனாக இருக்கவில்லை என்று குறை கூறுவதை ஒருநாளும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

    கண்ணதாசனின் முதல் மனைவி பொன்னழகி என்கின்ற பொன்னம்மா வயிற்றில் உதித்தவன் என் நண்பன் கலைவாணன். அம்மையாருக்கு நான்கு மகன்கள்: கண்மணி சுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம். மூன்று மகள்கள்; அலமேலு, தேனம்மை, விசாலாட்சி.

    கண்ணதாசன் அமெரிக்காவிலுள்ள தமிழ் சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளச் சென்று அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, சிகாகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவரோடு உடனிருந்து கவனித்துக்கொள்ள இங்கிருந்துச் சென்ற அவரது குடும்பத்தினர் மூன்று பேர்கள்.

    அவருடைய மனைவிகள் பார்வதி, வள்ளியம்மை, மற்றும் அவருடைய அன்புக்கு பாத்திரமான செல்ல மகன் கலைவாணன். கவிஞரின் உயிர் பிரிந்து அங்கிருந்து அவருடைய பூதவுடல் விமானத்தில் தாயகம் வந்தபோது இவர்களும் விமானத்தில் கூடவே வந்தார்கள்.

    மற்ற குழந்தைகளைக் காட்டிலும் கலைவாணன் மீது சற்று கூடுதலாகவே பற்றும் பாசமும் கவிஞர் வைத்திருந்தார் என்பது என் எண்ணம். எனது இந்தக் கருத்தில் அவரது மற்ற குழந்தைகளுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அதனால்தான் இது எனது சொந்தக் கணிப்பு என்பதை இங்கே கோடிட்டுக் காட்டியுள்ளேன்.

    யாசீன் காக்காவும் கண்ணதாசனும்

    கலைவாணன் கண்ணதாசனை எங்கள் பள்ளியில் சேர்க்க கவிஞர் பெருமகனாருக்கு ஆலோசனை வழங்கியது கீழக்கரையைச் சேர்ந்த யாசீன் காக்கா அவர்கள்தான்.

    வளநாடு சினி ரிலீஸ், கிரஸெண்ட் மூவீஸ், வச்சிர நாடு பிலிம்ஸ் , செம்பி பிலிம்ஸ், சேது பிலிம்ஸ் போன்ற சினிமா சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனங்களில் பங்குதாரராக இருந்தவர் அந்த பிரபலம். நடிகர் பாலாஜி போன்ற படத்தயாரிப்பாளர்கள் யாசீன் காக்காவுடன் மிக நெருக்கமாக இருந்தார்கள்.
    1970 – 1980 கால கட்டங்களில் தமிழகத்தில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் இவர்களின் தொடர்பு இல்லாமல் வெளிவந்ததில்லை.

    திரைப்படத்துறையில் மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் கவியரசர் கண்ணதாசனுக்கு யாசீன் காக்கா மிகவும் வேண்டப்பட்ட நபராக இருந்தார். கவிஞர், உயிருக்கு உயிராக நேசித்த நண்பர்களின் பட்டியலில் யாசீன் காக்காவுக்கும் இன்றிமையாத ஓர் ஒரு இடமுண்டு. கண்ணதாசனுக்கு சினிமாத் துறையில் பொருளாதார ரீதியாக நிறைய உதவிகள் அவர் புரிந்திருக்கிறார்.

    அக்கால கட்டத்தில் ‘குமுதம்’ இதழில் “என் எனிய நண்பர்கள்” என்ற தலைப்பில் தன் நெஞ்சில் நீங்காது இடம்பெற்றிருந்த நண்பர்களைப் பற்றி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து கண்ணதாசன் கவிதை எழுதிவந்தார்.

    வானதி பதிப்பகம் திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் மாதவன், யாசீன் காக்கா போன்றோர் கண்ணதாசனின் இதயத்தில் தனியொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்கள். மற்றவர்களின் பெயர்கள் எனக்கு நினைவுக்கு வரவில்லை.

    அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் அழகுற தமிழில் அட்டகாசமாக கவிதைகள் வடித்தார். ஒவ்வொரு வாரமும் அடுத்ததாக யாரைப் பற்றி எழுதப் போகிறார் என்ற ஆர்வத்தில் குமுதம் இதழுக்காக நான் காத்திருப்பேன்.

    [யாசீன் காக்காவுக்கும் முன்னாள் திமுக அமைச்சர் மாதவனுக்குமிடையே நெருங்கிய நட்புறவு நீடித்து வந்தது. அது ஒரு தனி ட்ராக். மாதவனை ஒருமையில் “அவன்”, “இவன்” என்று அழைக்குமளவுக்கு இருவருக்குமிடையே நெருக்கம் நிலவி வந்தது]

    தனது நண்பர் யாசீன் காக்கா அவர்களைப்பற்றி கண்ணதாசன் “குமுதம்” இதழில் எழுதியிருந்த ஒரு சில வரிகள் பசுமரத்தாணியாய் என் மனதில் இன்னும் பதிந்துள்ளது; ஆழமாய் பொதிந்துள்ளது.

    எப்போதும் புன்சிரிப்பு
    எவரிடத்தும் பேசும்போதும்
    தப்பாக ஒருவார்த்தை
    தவறியேனும் சொல்வதில்லை
    தழுவவரும் நண்பருக்கு
    தங்கக்கட்டி
    முப்பாலில் வள்ளுவனார்
    வாழ்க்கை எல்லாம்
    முன்பாக காணவரும்
    எளிய வாழ்க்கை
    அப்பழுக்கில்லா(த) எங்கள் சேதுநாட்டு
    யாசீன்பாய் எனதுஇனிய நண்பராவார்

    [மேற்கண்ட கவிதையில் ஒன்றிரண்டு சொற்கள் விடுபட்டிக்கலாம், காரணம் இது முறையான மரபுக்கவிதை வடிவில் இருந்தது. நினைவில் இருந்ததை மட்டும் இங்கே வடித்திருக்கிறேன்.]

    தன் மனதுக்கு உகந்த நண்பருக்கு இதைவிட ஒரு சிறந்த சன்மானம் என்ன கொடுக்க முடியும்? அதுதான் கண்ணதாசன்.

    கண்ணதாசனைக் காணச் சென்ற நான்

    ஒருமுறை கண்ணதாசனைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட எனக்கு கலைவாணனுடன் காணச் சென்ற அந்த நிகழ்வு மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறது. நினைத்தாலே அது இனிக்கும்.

    சென்னை தியாகராய நகரில், நடேசன் பூங்காவுக்கு பின்புறம் இருந்தது அவர் வீடு. எழுதுவதற்கு பெரும்பாலும் தனிமையை விரும்பி கவிதா ஓட்டலில் தங்கியிருப்பது கவிஞரின் வழக்கம். அன்று அவர் தி.நகர் வெங்கட நாராயணா சாலையிலுள்ள வீட்டில் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அங்குச் சென்றோம். அம்பாஸிடர் கார் ஒன்று வெளியில் நின்றிருந்தது. மேல்வயிற்றுக்கு மேலே உயர்த்திக் கட்டிய வேட்டியோடு வீட்டின் வெளியே அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தார் அந்த கவிப்பேரரசர்.

    அருகில் சென்று அவரைப் பார்த்த நான், என்னை நானே ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். நான் காண்பது கனவா அல்லது நனவா என்று புரியாமல் திகைத்தேன்.

    ஆஜானுபாகுவான உடல்வாகு. கம்பீரமானத் தோற்றம். உருண்டையான முகம். கள்ளம் கபடமற்ற வெளிப்படையான பேச்சு.

    கலைவாணனுக்கும் கண்ணதாசனுக்கும் தோற்றத்தில் நிறைய ஒற்றுமை இருந்தது. ‘ஜெராக்ஸ்’ காப்பி எனலாம்.

    “ரத்தத் திலகம்” படத்தில் கோட்டு சூட்டு அணிந்துக்கொண்டு “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” என்று பாடி நடித்த கலைஞனா இவன் என்ற பிரமிப்பு என்னை ஆட்கொண்டு என்னை ‘மெளனி’யாக்கியது.

    நாடோறும் சிலோன் வானொலியில் கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீது போன்றோர் அனுதினமும் சுவைத்து பாராட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரன் முன் நான் நிற்கின்றேன் என்ற உணர்வு, ‘ஹை-ஹீல்ஸ்’ அணியாமலேயே என்னை உயர்த்திக் காண்பித்தது.

    அவரது தீவிர ரசிகன் என்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். எத்தனையோ கேள்விகள் அவரிடம் கேட்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டுச் சென்றேன். ஊஹீம்…. எதுவுமே கேட்கத் தோன்றவில்லை. எனக்கு பேச்சே எழவில்லை. “பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போல” அவரையே பார்த்துக்கொண்டு பிரமித்துப் போய் நின்றேன். அப்பொழுது ஒன்பது அல்லது பத்தாவது வகுப்பு நான் படித்துக் கொண்டிருந்தேன்.

    சிறுகூடல்பட்டி சிந்தனைவாதி பேசப்பேச நான் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். பாசமலர் படத்தில் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்ற அவரது பாடலுக்கு சிவாஜி கணேசன் ” உம்…உம்.. உம்..உம்,” , என்று ‘உம்’ கொட்டிக்கொண்டிருப்பார். அதுபோல நான் ‘உம்’ கொட்டிக் கொண்டிருந்தேன்.

    எங்கள் பள்ளிக்கூட வாழ்க்கைப் பற்றி விசாரித்துவிட்டு, அவரது அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்தார். எங்களுக்கு புத்திமதியும் வழங்கினார்..

    அவரைச் சந்தித்துவிட்டு திரும்பி வருகையில் என்னாலேயே நம்ப முடியவில்லை; நான் பார்த்து பேசிவிட்டு வந்தது தமிழகத்தையே தன் எளிமையான சொற்களால் கட்டுண்டு அடிமைப்படுத்திய அந்த கவிராஜனைத்தானா என்று……

    எங்களுடன் ஒன்றாகத் தங்கி படித்துக் கொண்டிருந்த கவிஞர் கண்ணதாசனின் செல்வப் புதல்வன் கலைவாணனுக்கு ஏனோ இந்த ஹாஸ்டல் வாழ்க்கை அறவே பிடிக்கவில்லை. இதனால் படிப்பிலும் அவனால் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை.

    காரணம், சுதந்திரப் பறவையாக தன் வீட்டில் சுற்றித் திரிந்து வாழ்க்கையை தன் குடும்பத்தாருடனும், உடன்பிறந்தாருடனும் ‘ஜாலியாக’ அனுபவித்து வந்த அவன் இந்த ஹாஸ்டல் வாழ்க்கையை சிறைவாழ்க்கையாக எண்ணி கலக்குமுற்றான்.

    ஒருநாள் காலை வேளையில், ஏற்கனவே அவன் திட்டமிட்டிருந்தபடி சுவரேறிக் குதித்து பள்ளி வளாகத்திலிருந்து வெளியே ஓடிவிட்டான். “தோள் கொடுப்பான் தோழன்” என்பார்கள். அதுபோல முதுகைக் கொடுத்து அதன் மீது ஏறி அவனை தப்பிக்க துணை புரிந்தவன் நானல்ல; என் இன்னொரு நண்பன்.

    அச்சமயத்தில் அண்ணா உயிரியல் பூங்காவெல்லாம் வண்டலூரில் கிடையாது. ஓட்டேரி நாற்சந்தியில் ஒரே ஒரு கீற்றுக் கொட்டகை டீக்கடை மாத்திரம் இருக்கும். தாம்பரம் செல்வதற்கு ஏகப்பட்ட மண் லாரிகள் அவ்வழியே போய்க்கொண்டிருக்கும். அதில் ஏறி எப்படியோ வீட்டுக்குச் சென்றுவிட்டான் கலைவாணன்.

    அன்று இந்த சம்பவம் எங்களுக்குள் பரபரப்பாக பேசப்பட்டது. மறுபடியும் எப்படியும் கலைவாணனை அவனது பெற்றோர்கள் அழைத்துக் கொண்டு வந்து விட்டுவிடுவார்கள் என்று எங்களுக்கு நன்றாகவேத் தெரியும். பள்ளி முதல்வர் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறாரோ என்று பயந்துக் கொண்டிருந்தோம்.

    principalஅப்போது எங்கள் பள்ளியின் முதல்வராக இருந்தவர் இறையருட்கவிமணி என்று போற்றப்படும் பேராசிரியர் கா.அப்துல் கபூர்.

    “செந்தமிழுக்கு ஒரு சேதுப்பிள்ளை” என்று கூறுவதைப்போன்று “அழகுத்தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என்று எங்கள் பள்ளி முதல்வருக்கு புகழ்மாலைச் சூடுவார்கள் தமிழறிந்த சான்றோர்கள்.

    எதிர்பார்த்தபடியே கலைவாணனின் குடும்பத்தார் மீண்டும் அவனை அழைத்து வந்து பள்ளியில் சேர்த்துவிட்டு போனார்கள். “போன மச்சான் திரும்பி வந்தான்” என்று பாட்டுப்பாடி நாங்கள் குதூகலித்தோம்.

    கலைவாணனை அழைத்து எங்கள் பள்ளி முதல்வர் அவன் ஓடிப்போனதற்கான காரணத்தை வினவுகிறார்.

    “உனக்கு இங்கிருப்பது பிடிக்கவில்லையா?” என்று பரிவோடு விசாரிக்கிறார்.

    பள்ளி வளாகத்திலிருந்து சுவரேறிக் குதித்து ஓடிப் போனதற்கு கலைவாணன் சொன்ன காரணத்தைக் கேட்டால் நீங்களே சிரித்து விடுவீர்கள்.

    அதற்குமுன் எங்கள் பள்ளி வளாகத்தைப் பற்றிய இச்சிறு குறிப்பை படிப்பது அவசியம்.

    வண்டலூரில் எங்கள் பிறைப்பள்ளி (Crescent Residential School) நிறுவப்பட்டது ஒரு மாங்காய் தோப்பினில்தான். கட்டிடங்கள் யாவும் எழும்பிய பின்னரும் வளாகத்தினுள் எங்கு பார்த்தாலும் மாமரங்களில் மாங்காய் காய்த்துத் தொங்கும். வேண்டுமளவு மரத்திலேறி மாங்காய் பறித்துத் தின்பது எங்களது ‘வீரதீர’ பொழுதுபோக்காக இருந்தது.

    “இங்கிருப்பது உனக்கு பிடிக்கவில்லையா….? ஏன் இங்கிருந்து சுவரேறிக் குதித்து ஓடினாய்..?” என்ற பள்ளி முதல்வரின் கேள்விக்கு கலைவாணன் சொன்ன பதில் இதுதான்.

    “நான் மாந்தோப்பில் மாங்காய் பறித்து தின்பதற்காக சுற்றி வந்தேன். அப்போது ஒரு மாங்காயைப் பறித்து நான் உண்டேன், அது மிகவும் சுவையாக இருந்தது. அது சாப்பிட்டபின் அப்படியே தூங்கி விட்டேன் அப்புறமா கண்முழிச்சு பாத்தபோது நான் மவுண்ட் ரோடுலே நின்னுக்கிட்டு இருந்தேன். எனக்கு எப்படி ஸ்கூலுக்கு போறதுன்னு வழியே தெரியலே. அதனாலே அப்படியே நான் வீட்டுக்குப் போயிட்டேன்”

    இதை கலைவாணன் சொன்னபோது ஒரு சில ஆசிரியர்களும் கூடவே இருந்தார்கள். முதல்வாராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆசிரியர்களாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

    கலைவாணனின் ‘சால்ஜாப்பு’ பதிலை பொறுமையாக காதுகொடுத்து கேட் ட எங்கள் பள்ளி முதல்வர் கூறிய பதில் என்ன தெரியுமா?

    “அடேங்கப்பா….! கலைவாணா! நீ கதை சொல்வதிலும், கற்பனையிலும் உன் தகப்பனையே மிஞ்சிட்டே,,!” என்றார்.

    கலைவாணன் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவன். பிசிறில்லாமல் சீராக பாடக் கூடியவன். கதை, கவிதை எழுதுவதிலும் அவனுக்கு ஆர்வம் அதிகம். ஒரு முறை கண்ணதாசன் எங்கள் பள்ளிக்கு வந்தபோது “அடி என்னடி ராக்கம்மா கண்டாங்கி நெனப்பு” என்ற பாடலை தாளம் பிசகாமல் எங்கள் எல்லோர் முன்னிலையிலும் இனிமையாக பாடிக் காட்டினான் அந்த நினைவலைகள் இன்னும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை.

    நானும், பிரான்சு நாட்டில் இருக்கும் என் பள்ளி நண்பன் காரைக்கால் திப்பு சுல்தானும் சந்தித்து உரையாடும்போதெல்லாம் கலைவாணன் பற்றிய பேச்சு எப்படியாவது வந்துவிடும். பள்ளிப் பருவத்திற்கு மீண்டும் சென்று விடுவோம்.

    ஒருநாள் காலை வேளையில் என் நண்பர் அஹ்மது தெளஃபீக்கிடமிருந்து ஓர் அதிர்ச்சியான செய்தி வந்தது.

    காக்கா சேதி கேள்விப் பட்டியலா..?

    என்ன செய்தி தெளஃபீக்..?

    நம்ம கலைவாணன் இறந்து போயிட்டான் காக்கா. இப்பத்தான் நான் கேள்விப்பட்டேன்

    என் தலையில் பேரிடி விழுந்தது போலிருந்தது. எந்த கலைவாணன் என்றெல்லாம் நான் கேட்கவில்லை. காரணம் எங்களுக்குத் தெரிந்த ஒரே கலைவாணன் அவன்தான். துடிதுடித்துப் போனேன். என் உதிரம் சற்று நேரம் உறைந்து போனது போலிருந்தது

    பாலு மகேந்திராவின்“அழியாத கோலங்கள்” படத்தில் அந்த குண்டு பையன் இறந்தபோது அவனது நண்பர்களுக்கு ஏற்பட்ட அதே மனபாதிப்பு எங்களுக்கும் ஏற்பட்டது. கலைவாணனின் திடீர் மறைவு எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

    கலைவாணர் என்.எஸ்.கே.யின் நினைவாகவே கண்ணதாசன் தன் மகனுக்கு கலைவாணன் என்ற பெயரைச் சூட்டினார் . தனக்கு பிடித்தமானவர்களின் பெயர்களை தன் பிள்ளைகளுக்குச் சூட்டி அழகு பார்ப்பதில் கவியரசருக்கு அலாதிப் பிரியம்.

    அறிஞர் அண்ணாவின் நினைவாக அண்ணாத்துரை; பாரதிதாசனின் நினைவாக கண்மணி சுப்பு (சுப்பு ரத்தின தாசன்).

    தங்குவதற்கு இடமின்றி. தனது 14-வது வயதில் பிழைப்புத் தேடி சென்னையில் சுற்றித் திரிந்த கண்ணதாசனுக்கு எந்த மெரினாவிலுள்ள காந்தி சிலை வழியே திக்குத் தெரியாமல் சுற்றித் திரிந்தாரோ; அவருக்கு பிடித்த அதே காந்தி மகானின் நினைவாக இன்னொரு மகனுக்கு காந்தி என்ற பெயர்.
    கலைவாணனுக்கு தன் தந்தையைப் போலவே குழந்தை மனசு. கண்ணதாசனுக்கும் அவன்மேல் அலாதிப் பிரியம். கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் பாலு மகேந்திராவின் “மூன்றாம் பிறை” படத்தில் இடம்பெற்ற “கண்ணே கலைமானே” என்ற பாடல். (அவர் கடைசியாக எழுதிய பாடல் இடம் பெற்ற படம் “உன்னை நான் சந்தித்தேன் என்ற மாற்றுக் கருத்தும் உண்டு)

    “கண்ணே கலைமானே!” என்ற பாடல் தன் தந்தை தன்னை நினைவில் வைத்துதான் எழுதினார் என்று கலைவாணன் பிற்காலத்தில் அவனுக்கு நெருங்கியவர்களிடம் பலமுறை கூறி மகிழ்ந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    தன் சகோதரன் கலைவாணனின் நினைவுகளை கண்ணதாசனின் இன்னொரு தாரத்தின் (புலவர் வள்ளியம்மை) செல்வப் புதல்வியான விசாலி கண்ணதாசன் கூறுவதைக் கேளுங்கள்:

    “அவன் சாகக்கூடிய வயசில்ல. எமனுக்கு இது தெரியல. ரத்த உறவுன்னு இருந்த ஒன்னும் போச்சு. கலை அண்ணா இருந்திருந்தா சினிமாவில் பெரும் இயக்குநரா வந்திருப்பான்”

    தன்மீது அளவில்லாத அன்பைப் பொழிந்த அன்புச் சகோதரனை இழந்தபோது இந்தச் சகோதரியின் மனம் எந்தளவுக்கு பாடுபட்டிருக்கும் என்பதை நம்மால் உணர முடிகின்றது.

    தகப்பனின் அன்பை முழுமையாக அனுபவிக்க கொடுத்து வைக்காதவர் விசாலி என்றுதான் சொல்ல வேண்டும். கவிஞர் மரணிக்கையில் விசாலிக்கு கருத்து தெரியாத பருவம். அப்போது அவருக்கு வெறும் நான்கு வயதுதான்.

    ‘அப்பாவோட மற்ற பதினான்கு பிள்ளைகளில் கலைவாணன் அண்ணாதான் என் கூட ஒட்டினான். மற்ற யாரும் என்கூட ஒட்டல” என்கிறார் விசாலி கண்ணதாசன்.

    “கண்ணே கலை மானே” பாட்டில் “கலை” என்று வருகிறது. அதனால் இது அப்பா எனக்காக எழுதிய பாட்டு என்று கலைவாணன் ஒருமுறை தன் சகோதரிகளிடம் வாதம் புரிய, அவர்கள் அதை “இல்லை” என்று மறுக்க அதை உறுதிப்படுத்த நேராகவே சென்று தன் தந்தையிடம் சந்தேகம் கேட்டிருக்கிறான்.

    இன்னொருமுறை கலைவாணன் தன் தந்தையிடம் ஓடிச்சென்று அவரைக் கட்டிப்பிடித்து

    “அப்பா.. நீங்க எல்லாரைப் பத்தியும் பாட்டு எழுதுறீங்க. என்னைப் பத்தியும் பாட்டு எழுதுங்கப்பா”

    என்று செல்லமாக கேட்டிருக்கிறான். கவியரசரின் நகைச்சுவை உணர்வுக்கும், சமயோசித புத்திக்கும் அளவே கிடையாது. உடனே குறும்புத்தனமாக பதில் சொல்லியிருக்கிறார்.

    “உன்னைப் பத்தி ஏற்கனவே எழுத்திட்டேனடா…” என்று கவிஞர் சொல்ல கலைவாணனுக்கு ஒரே ஆச்சரியம். “சொல்லுங்கப்பா..” என்று மீண்டும் அவர் தோளைப் பிடித்து உலுக்க

    “ஏன் பிறந்தாய் மகனே! ஏன் பிறந்தாயோ? பாட்டை உனக்காகத்தானே எழுதினேன்” என்றாராம் அந்த கவிராஜன் சிரித்துக் கொண்டே..

    இந்த பதிலைக்கேட்ட மற்ற குழந்தைகளும் முண்டியடித்து அவர் மடிமேல் தவழ்ந்து

    “அப்ப எங்களைப் பத்தியெல்லாம் ஒண்ணும் எழுதலையா..?” என்று சிணுங்கி இருக்கிறார்கள்.

    கவிச்சக்கரவர்த்திக்கு பேச சொல்லியா கொடுக்க வேண்டும்?

    “அதுவும் எழுதி விட்டேனே..…!” என்றாராம். “அது என்ன பாட்டு?” என்று பிள்ளைகள் ஆர்வத்துடன் வினவ..

    ஒரே ஒரு ஊரிலே
    ஒரே ஒரு ராஜா
    ஒரே ஒரு ராஜாவுக்கு
    ஒரே ஒரு ராணி
    ஒரே ஒரு ராணி பெற்றால்
    ஒன்பது பிள்ளை அந்த
    ஒன்பதிலே ஒன்றுகூட
    உருப்படியில்லை..
    உருப்படியில்லை “

    என்று பாடி முடித்துவிட்டு, “இதையெல்லாம் உங்களை மனசுலே வச்சுத்தான் எழுதினேன்” என்று பிள்ளைகளை கலாய்த்தாராம்.

    பாவம் பிள்ளைகள். இந்த பதிலை அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. மறுபடியும் செல்லமாக சிணுங்கிக் கொண்டு ஓடி விட்டன. .

    கண்ணதாசனுக்குள்ளே கவிஞர்களுக்கே உரித்தான குசும்பு சற்று அதிகமாகவே குடிகொண்டிருந்தது

    எங்க ஊரில் ஒரு பழமொழி வட்டார வழக்கில் கூறுவார்கள். “இருந்தா நவாப்சா, இல்லேன்னா பக்கீர்சா”. கண்ணதாசனைப் போல் லட்சக்கணக்கில் சம்பாதித்தவரும் இல்லை. அதுபோல செலவழித்தவர்களும் இல்லை. அப்போது லட்சங்கள் கோடிகளுக்குச் சமம்.

    பெருமளவு சம்பாதித்துக் கொண்டிருந்த வேளையிலும் கடனில் மூழ்கி கண்ணதாசன் தன் குழந்தைகளுக்கு தீபாவளியன்று புதுத்துணிமணி, பாட்டாசுகள் வாங்கிக் கொடுக்க முடியாத நிலையில் கண்ணீர்கூட வடித்திருக்கிறாராம்.

    கண்ணதாசன் சில சமயம் இரவில் தாமதமாக வீடு திரும்புவார். பிள்ளைகள் முழித்துக்கொண்டு அவருக்காக காத்திருப்பார்கள். ஜாலியான மூடு வந்துவிட்டால் தனது அம்பாஸிடர் காரை எடுத்துக் கொண்டு மவுண்ட்ரோடிலுள்ள புகாரி அல்லது பிலால் ஓட்டலிலிருந்து வகைவகையான அசைவ உணவு பார்சல் கொண்டுவந்து வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள்.

    கண்ணதாசனுக்கு செட்டி நாடு சமையலில் காரமாக சமைக்கப்பட்ட நாட்டுக்கோழி வறுவல், நண்டு, முயல்கறி, மான்கறி எல்லாமே விரும்பிச் சாப்பிடுவார்.

    “பறப்பதில் ஏரோப்பிளேனும், ஓடுவதில் ரயிலும் மட்டும்தான் நான் சாப்பிடாதது” என்று நகைச்சுவையாகச் சொன்னதை ஒரு பத்திரிக்கை பேட்டியின்போது காந்தி கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார்.

    “குழந்தைகளுக்கு இடையே வித்தியாசம் வரக்கூடாது என்பதற்காக எல்லோருக்கும் யூனிஃபார்ம் மாதிரி ஒரே கலரில் ட்ரவுசர், சட்டை, பாவடை வாங்கித் தருவார்” என்று தன் தந்தை பற்றிய சுவையான நினைவுகளைப் பகிர்கிறார் காந்தி கண்ணதாசன்.

    – —- இன்னும் தொடரும்

    Share
  • கையாலாகாதவனாகிப் போனேன்! – 1

    ஒரு அரிசோனன்

    வாயில்லா ஜீவன்

    நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நாம் பலதடவை கையாலாகாதவர்களாகி நின்றிருக்கிறோம். அந்தசில நிகழ்வுகள் – நம் அடிமனத்தில் ஆழமாகப் புதைந்துபோனாலும், அவ்வப்போது, திரும்பத்திரும்ப மேலெழுந்துவந்து நம்முள் ஒரு ஏக்கத்தை, நமது கையாலாகாத்தனத்தை நமக்குஉணர்த்தி, குற்ற உணர்வை அதிகமாக்கி நிற்கத்தான் செய்கின்றன.  அப்படி அவை நமது கையாலாகாத்தனத்தை உணர்த்தும்போது, நமக்குள் ஒருவிதமான தாழ்வுமனப்பான்மை ஏற்படுவதையும், மீண்டும் நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா, கையாலாகாதவர்களாகிப்போகாமல் ஏதாவது செய்திருக்கமாட்டோமா என்றும் தோன்றும்.  சிறிது சிந்தித்தவுடன், நம்மால் அந்தச் சந்தர்ப்பத்தில் அப்படித்தான் நடந்துகொண்டிருக்க இயலும், ஏனெனில் வேறுவிதமாக நடந்துகொள்ளும் வலிமையோ, திறமையோ நம்மிடம் இருக்கவில்லை என்றும் நம்மைநாமே சமாதானம் செய்துகொள்வோம்.  இருப்பினும், அந்நிகழ்ச்சிகள் கொதிக்கும் நீரிலிருந்து கிளம்பும் குமிழிகளாக வருவதை நம்மால் தடுக்க இயலாது.

    என் வாழ்வில் நடந்த அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை — என்னைக் கையாலாகாதவனாக ஆக்கி, பச்சாதாபமடையவைத்திருக்கும் உண்மை நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்கிறேன். உங்களுக்கும் அப்படி ஏதாவது நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தால் – என்னைப்போல உங்களையும் பச்சாதாபப்படவைத்த, குற்ற உணர்வில் புழுங்கவைத்த அந்நிகழ்வுகள் மனிதவாழ்வின்இயற்கை என்றெண்ணி அமைதிகொள்ளுங்கள்…

    … அம்மாதிரியான முதல் நிகழ்வு என் ஆறாம்வயதில் நிகழ்ந்தது.

    சைக்கிள் ரிம்மை ஒரு குச்சியால் தட்டிக்கொண்டு, உதடுகளிலிருந்து காற்றை வெளியேற்றி, கார் ஓடுவதுபோன்ற ஒரு சத்தத்தை உண்டாக்கியதாகக் கற்பனைசெய்துகொண்டு, சிலமுறை பார்த்து மயங்கிப்போன ‘ப்ளிமத் சேவாய்’ காரை ஓட்டும் பெருமையுடன், வீதியை வலம்வந்துகொண்டிருந்தேன் – கழுதைகூட பொதிசுமக்க மறுக்கும் புடைபுடைக்கும் வெய்யிலில்.

    என் கவனத்தைக் கவர்ந்தது நடுவீதியில் படுத்துக்கிடந்த அந்த மாடு.

    அது தனியாகப் படுத்திருந்தால், ஒருகணம்கூட அதற்குமேல் அந்த மாட்டைப் பார்த்திருக்கமாட்டேன். எனது ப்ளிமத் சேவாயை [அதுதான் என் சைக்கிள் ரிம்மை] ஓட்டிக்கொண்டு அந்த வாயில்லா ஜீவனைக் கடந்துசென்றிருப்பேன்.

    அந்த ‘வாயில்லா ஜீவன்’ கழுத்தில் கட்டப்பட்ட நுகத்தடியுடன், நுகத்தடி இணைக்கப்பட்ட வண்டியுடன் படுத்திருந்தது. அதன் அருகில் அதன் தோழனான இன்னொரு ‘வாயில்லா ஜீவன்’ கடனேயென்று நின்றுகொண்டிருந்தது.

    “சனியனே, எந்திரு.  நீ இப்பிடி சண்டித்தனம்செஞ்சா, சந்தைக்கு நான் எப்படிப் போகுறதிங்குறேன்?” என்று அந்த மாட்டை மாட்டடி அடித்துக்கொண்டிருந்தார் வண்டியோட்டி. அவரது கவலை அவருக்கு.

    வண்டியில் ஏற்றப்பட்டிருக்கும் சுமை வைக்கோல் ஏற்றிவரும் இக்கால லாரிகளில் நிரம்பிவழிவதுபோல – ஆனால், சுமை வைக்கோல்போர் அல்ல – நிரம்பிவழிந்திருந்தது.

    நான்கு மாடுகளால்கூட அந்த வண்டியை இழுக்கமுடியாமா என்பதே கேள்விக்குறியாக இருக்கும்போது, இவ்வளவுதூரம் அந்த வண்டியை அந்த மாடுகள் இரண்டும் எப்படி இழுத்துவந்தன என்பதைப் பார்த்தால் வியப்பாகவே இருந்தது.

    வண்டியோட்டி அடித்தது போதாதென்று, மாட்டைப் பலமாக உதைத்து, அதன் வாலைத்தூக்கி, அதற்குக்கீழே இருக்கும் மென்மையான பாகத்தில் தார்க்குச்சியின் ஆணியால் இரண்டு – மூன்று முறை முழுபலத்துடன், நாக்கைத் துருத்திக்கொண்டு, ஆவேசத்துடன் குத்தினார்.

    அந்த இடங்களிலிருந்து செந்நிறக் குருதி கசிந்தது.

    என் தங்கை அழுதாலே பொறுக்காமல், “பாப்பாவைத் தூக்கு, அம்மா!” என்று முறையிடும் என்னால் அதைக் காணச்சகிக்கவில்லை.  முறுக்குமீசையுடன், சிறிது சிவந்த கண்களுடன், தெற்றுப்பற்களுடன் ஐயனார்போல அமர்ந்திருந்த வண்டியோட்டியைப் பார்த்தால் எனக்குப்  பயமாகத்தான் இருந்தது.

    என்னையுமறியாமல் என் சைக்கிள் ரிம் கையைவிட்டு நழுவித் தரையில் விழுந்தது. செயலற்று நின்றேன்.

    “மாட்டை அடிக்காதீங்க ஐயா,” என்று கதறவேண்டும்போல இருந்தது.  பயத்தில் உதடுகள் ஒட்டிக்கொண்டதால் குரல் எழவில்லை.

    துயருறும் அந்த வாயில்லா ஜீவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆறுதல்சொல்ல என் உள்ளம் துடித்தது.

    ஆயினும், நான் செயலற்று நின்றேன்.

    அதன் கண்ணிலிருந்து கரியதாக நீர்பெருகித் தரையில் சொட்டியது. அப்படியும் இலேசாக அசைந்துகொடுத்ததே தவிர, அந்த மாடு எழுந்திருக்கவில்லை.  என்ன அலுப்போ, களைப்போ, அயர்ச்சியோ அதற்கு!

    உள்ளங்காலில் முள்குத்தினால் நம்மால் பொறுக்கவியலாது.  மென்மையான பின்பாகத்தில் இரத்தம்கசியக் குத்தப்பட்டும், துடிக்காமல் வெறுமனே அசைகிறதே அந்த வாயில்லா ஜீவன்?

    அது பொறுமையா, அல்லது, இப்படி அடியையும், உதையையும், குத்தலையும் தாங்கியதால் ஏற்பட்ட மரப்பா?

    அந்த மாட்டின், தாய், தந்தை, அக்கா இவற்றுடன் அந்த மாட்டைச் சம்பந்தப்படுத்திக் கண்டகண்ட கெட்டவார்த்தைகளால் திட்டியவாறே கீழே குதித்தார், வண்டியோட்டி.

    என்னைப் பார்த்தவுடன், “தம்பி, இங்கே உனக்கென்ன வேலை?  போ, போ!” என்று கடும்சொற்களால் அதட்டிவிட்டு, தொண்டையைச் செருமிக்கொண்டு, குனிந்து அந்த வாயில்லா ஜீவனின் இருகண்களிலும் வாயில் குதப்பிக்கொண்டிருந்த செக்கச்செவேலென்ற புகையிலைச் சாற்றை உமிழ்ந்தார்.

    என் கண்கள் இரண்டும் எரிந்தன.

    இதயத்தை யாரோ கசக்கிப்பிழிவதுபோல இருந்தது.  மூச்சுத் திணறியது.  அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டேன்.

    மாடு எழுந்தது.  தார்க்குச்சியால் அதைக் குத்தியவாறு விரட்டினார் வண்டியோட்டி.

    மாடு தள்ளாடியவாறே அடியெடுத்து வைத்தது.  வண்டி மெல்ல நகர்ந்தது.

    பிழியப்பிழிய அழுதேன் நான் – என் கையாலாகாத்தனத்தை எண்ணி.

    கிங்காங்கைப் புரட்டிப்போடும் தாராசிங்காக நான் இல்லையே என்றெண்ணி.

    இன்றும், எந்தவொரு மாட்டுவண்டியைப் பார்த்தாலும் இந்நிகழ்வே என் கண்முன் வந்துநிற்கிறது.  என் கையாலாகாத்தனத்தையும், அந்த வாயில்லா ஜீவனையும், இரத்தம்சொட்டும் மென்மையான அதன் பின்பாகத்தையும், அதன் கண்ணிலிருந்து வழிந்து தரையில் சிந்திய கரிய நீரையும், அதன் கண்களில் உமிழப்பட்ட புகையிலைச் சாறையும், அது வழியும்போது அந்த வாயில்லா ஜீவன் தன்னை நொந்துகொண்டு இரத்தக்கண்ணீர் வடிப்பதுபோன்ற தோற்றமும், மெல்ல எழுந்திருந்து தள்ளாடித் தள்ளாடி வண்டியை இழுத்துச்சென்றதையும் நினைவுக்குக் கொண்டுவந்து என்னுள் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

    ஒருசில சமயம் நான் என்னை அந்த வாயில்லா ஜீவனைப்போல உணர்ந்து, அதுபட்ட வேதனையை அனுபவிக்கிறைன்.

    இது என் கையாலாகாத்தனத்திற்கு இறைவன் தொடர்ந்து அளித்துவரும் தண்டனையா?

     [கையாலாகாத்தனம் தொடரும்]

    மறுபகிர்வு நன்றி:  தாரகை இணைய இதழ்

    Share
  • நேற்றைய நிழல்

    நிர்மலா ராகவன்

    “ஏதாவது கடுதாசி வந்திருக்கா?”

    சாதாரண குமாஸ்தாவாக இருந்த குஞ்சிதபாதத்திற்கு தினமும் அதிமுக்கியமான கடிதங்கள் வந்து குவியும் என்பதில்லை. இருந்தாலும், தான் வீடு திரும்பியாயிற்று என்பதைத் தெரிவிப்பதுபோல், அதே கேள்வியைத் தினமும் கேட்கத் தவறமாட்டார்.

    “ஆமாம்! நமக்கு யார் இருக்காங்க, அன்னாடம் எழுத!” என்றபடி, கோப்பையில் தேத்தண்ணீரை எடுத்து வருவாள் திலகம்.

    அன்று அவளுடைய பதிலில் சிறிது மாற்றம். “இந்தாங்க. ஒங்க மகன் பள்ளிக்கூடத்திலிருந்து!”

    “என்னாவாம்?”

    “யாருக்குப் புரியுது மலாயில எழுதினா!”

    அசுவாரசியமாக நோட்டம் விட்டவருக்கு கோபம் வந்தது. அதற்குப் பதில் எழுதித் தொலைக்கவேண்டுமே என்ற கவலை எழ, மனைவிமேல் பாய்ந்தார். “விநாயகம் ஒழுங்கா பள்ளிக்கூடம் போறதில்ல? மூணு நாளா வரல்லேன்னு எழுதியிருக்காங்களே!”

    அவளுக்கும் கோபம் எழுந்தது. தான் என்ன மற்ற மாற்றாந்தாய்கள் மாதிரியா!

    “தினமும் காலையில அஞ்சு மணிக்கே எழுந்து, கஷ்டப்பட்டு பலகாரம் பண்ணி அவன் கையில குடுத்து அனுப்பறேன் நான்! புத்தகப்பையை எடுத்துக்கிட்டு, ஆறரை மணி பஸ்ஸுக்குப் போயிடுவான். நீங்க வேணுமானா, அவனையே கேட்டுப் பாருங்க!” வீராவேசமாக ஆரம்பித்தவளின் குரல் அடைத்தது. அழுதுவிடுவாளோ என்று பயந்தார் குஞ்சிதபாதம்.

    ஆறு வயது மகனான விநாயகத்துடன் அவர் திகைத்துப்போய் நின்றிருந்தபோது, அவருடைய வாழ்வைப் பங்கு போட்டுக்கொள்ள துணிந்து வந்தவள் திலகம். அவளுடைய ஏழ்மையும், குள்ளமும், குண்டுமான உருவமும் அவரைப் பாதிக்கவில்லை. மாறாக, குடும்பப் பொறுப்பு முழுவதையும் அவள் கையில் விட்டுவிட்டு, தன் உத்தியோகம் உண்டு, வீட்டில் தொலைகாட்சி உண்டு என்று நிம்மதியாகக் காலத்தைக் கழித்தார்.

    அந்தச் சமயத்தில் உள்ளே நுழைந்தான் விநாயகம், தன்னைப்பற்றி ஒரு பூகம்பமே உருவாகிக் கொண்டிருப்பதை உணராது.

    பதினாறு வயதாகியும், பன்னிரண்டு வயதே மதிக்கத்தக்க தோற்றம். ஏனோ தானோ என்றிருக்கும் தந்தை, `கண்டிப்பு` என்ற பெயா¢ல் சதா சுடுசொற்களை வீசும் சின்னம்மா, தன் நினைவில் இல்லாத, ஆனால் பிறர் நினைவுபடுத்துக்கொண்டே இருக்கும், தாய் — இவர்களில் யாரால் அவனுடைய வளர்ச்சி பாதிக்கப் பட்டதோ!

    வயதுக்கு ஏற்ப உடல் வளர்ச்சி அடையவில்லையே என்ற தாபம் ஒரு புறம்; உடல் வளராமலேயே நின்றுவிட்டால் என்ன செய்வது என்ற பயம் மற்றொரு புறம். அதோடு, தான் யாருக்கும் வேண்டாதவனாக குறித்தும் அவனுக்கு கலக்கம் உண்டாயிற்று.

    பள்ளிக்கூடத்துக் கட்டுப்பாடுகள், கொள்கைகள் எல்லாவற்றிலும் அவநம்பிக்கை முளைக்க ஆரம்பித்தது.

    தான் ஒழுங்காக இருப்பதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையே என்ற ஏக்கமானது கெட்டலையும்போது பக்கபலமாக நண்பர்கள் இருக்கிறார்களே என்ற திருப்தியில் மறைந்தது.

    எப்படியோ இவ்வளவு நாட்களும் யார் கண்ணிலும் படாமல் தப்பியாயிற்று என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தவன், தந்தை கையிலிருந்த கடிதத்தை அவன்மீது வீசி எறிந்து, கூடவே, “ஏண்டா? இதுக்கு என்னா அர்த்தம்னு கேக்கறேன்!” என்று ஒரு அதட்டலும் போட்டதும், திகைத்துப் போனான்.

    ஒரு கணம்தான். குறுக்கு வழியிலேயே போய் பழகிய மூளை அப்போது அவனைக் கைவிடவில்லை. “சின்னம்மாவையே கேட்டுக்குங்கப்பா, நான் பள்ளிக்கூடம் போகாம வீட்டிலேயே இருந்திருக்கேனா அப்படின்னு!” திமிராகப் பேசினான்.

    “ஒழுங்காப் போயிருந்தா, இந்த கடுதாசி எப்படி வந்திச்சு?” மலேசிய அரசாங்கப் பள்ளிகளின் விதிமுறைப்படி, தொடர்ச்சியாக மூன்று தினங்கள் பள்ளிக்குச் செல்லாவிட்டால், வீட்டுக்குத் தெரியப்படுத்திவிடுவார்கள்.

    அயரவில்லை விநாயகம். “டீச்சர் என் பேரைக் கூப்பிடறப்போ, நான் பதில் சொன்னது கேக்காட்டி, `ஆப்ஸெண்ட்` போட்டிருப்பாங்க!” என்று ஒரேயடியாக அளந்தான்.

    “எதுக்கு மனசுக்குள்ளே முனகிக்கிறியாம்? உரக்க பதில் சொல்றது!”

    “மத்தவங்க பேசறதால, என் குரல் அவங்களுக்குக் கேக்கல போலயிருக்கு! இனிமே ஜாக்கிரதையா இருக்கேம்பா!” என்று இரு பொருள்பட பேசினான் விநாயகம். இனிமேல் மாட்டிக்கொள்ளக்கூடாது. அதிகப்படி இரண்டு நாட்கள்தாம் மட்டம் போடலாம்.

    குஞ்சிதபாதத்திற்கு அலுப்பு தட்டியது. மகன் சொல்வது உண்மையோ, பொய்யோ, அதை நம்பினால் நிம்மதி என்று தோன்ற, “சரி, போ. இன்னொரு தடவை இந்தமாதிரி ஏதாவது வந்திச்சோ, முதுகுத்தோலை உரிச்சுடுவேன்!” என்று எச்சரித்துவிட்டு, அந்த சமாசாரத்தை அப்போதே மறந்துவிட்டவராக, தொலைகாட்சியை முடுக்கினார்.

    ஏதோ ஆங்கிலப்படம். கதாநாயகனுக்கு ஆறு பிள்ளைகள். அவளுக்கு நான்கு. இருவரும் விவாகரத்து ஆனவர்கள். காதலித்துக் கல்யாணம் செய்துகொள்கிறார்கள். மொத்தம் பத்து குழந்தைகள்!

    அவருக்கு ஆச்சா¢யமாக இருந்தது. ஒரு மகனை வைத்தே தன்னால் சமாளிக்க முடியவில்லையே, அது எப்படி இந்தக் குடும்பத்தில் எல்லாரும் சிரிப்பும், கேலியுமாக வளைய வருகிறார்கள்?

    நடப்பதையே காட்டினால், எவன் படம் பார்ப்பான் என்று தோன்ற, சிரிப்பு வந்தது.

    சில மாதங்கள் கழிந்தன.

    குஞ்சிதபாதத்திடம் ஒரு கடிதத்தை நீட்டிய விநாயகம், “அப்பா! வர்ற ஞாயித்துக்கிழமை எங்க பள்ளிக்கூடத்தில பி டி ஏ (PTA) மீட்டிங்காம். நீங்க கண்டிப்பா வரணும்னு சொல்லச் சொன்னாங்க டீச்சர். என்னையும் கூட வரச்சொன்னாங்க” என்றான், சற்றே பயந்தபடி.

    “அது என்னடா கஷ்டகாலம்?” டீச்சர் என்ன சொல்லிவிடுவார்களோ என்ற கவலையில் கேள்வி தானாக வந்தது.

    “பெற்றோர் ஆசிரியர் சங்கம். அதாவது, மாணவர்களோட அப்பாவோ, அம்மாவோ டீச்சர்ஸை பாத்துப் பேசறது”.

    “ஓ! அப்போ, மத்த அப்பாவும் வருவாங்க, இல்லே?” தான் மட்டும் தனியாகப் போய் நின்று, உதவாக்கரையான மகனைப் பெற்றதற்கு பேச்சு வாங்கிக்கொண்டு வரவேண்டாம் என்ற நினைப்பில் சற்று நிம்மதி பிறந்தது.

    பள்ளி வளாகத்துள் நுழையும்போது, குஞ்சிதபாதத்திற்குத் தயக்கம் ஏற்பட்டது. அவருக்குப் பின்னால் தன் சிறிய உருவத்தை மறைத்துக்கொள்ள முயன்றபடி, “அதோ வர்றாங்களே, அவங்கதான் எங்க டீச்சர்,” என்று கிசுகிசுத்தான் விநாயகம்.

    குதிகாலில் சுமார் நான்கு அங்குலம் நீண்ட காலணிகளும், உச்சந்தலையில் போடப்பட்டிருந்த கொண்டையும் அவளை அசாதாரணமான உயரமாகக் காட்டின. உடலைத் தழுவிய மெல்லிய , ஜப்பான் நாட்டு நைலக்ஸ் புடவை, நீல வண்ணத்தில். அதே நிறத்தில் நீண்டு தொங்கிய காதணிகள், கண்ணாடி வளையல்கள். கைக்கடிகாரத்தின் பிளாஸ்டிக் பட்டை மற்றும் நகப்பூச்சும்கூட நீலம்!

    `அலங்காரத்தில செலுத்தற கவனத்தை பிள்ளைங்க முன்னேற்றத்திலேயும் காட்டினா தேவலே!` என்று தனக்குள் சொல்லிக்கொண்டார் குஞ்சிதபாதம். `இவ்வளவு அழகா டிரெஸ் பண்ணிக்கிட்டா, வயசுப் பசங்க டீச்சரைத்தானே கவனிப்பாங்க! அவங்க படிச்சுக் குடுக்கறதிலே கவனம் போகுமா?` என்ற கவலையும் பிறந்தது.

    ஆசிரியர்களின் நடையுடை பாவனை அவர்கள் போதிக்கும் பாடங்களில் மாணவர்களுக்குத் தனி ஆர்வத்தை உண்டாக்கும் என்பதெல்லாம் குஞ்சிதபாதத்தின் அறிவுக்கு அப்பாற்பட்டது. அவர் என்ன, கல்லூரியிலா படித்திருந்தார் சமூக இயல் தெரிய!

    “அப்பா! இவங்கதான் எங்க டீச்சர், மிஸஸ் பாணி,” என்ற மகனின் குரல் கேட்டு, தம் எண்ணங்களிலிருந்து விடுபட்டார் குஞ்சிதபாதம். “எங்கப்பா, டீச்சர்!”

    மிஸஸ் பாணி புன்னகையுடன் தலையைத் தாழ்த்தினாள், அந்த அறிமுகத்தை ஏற்கும் விதத்தில்.

    “ஒங்களை இதுக்கு முன்னே பாத்ததில்லேன்னு நினைக்கிறேன்!” உருவத்திலிருந்த அழகு குரலில் இல்லை.

    `பாவம்! பிள்ளைங்களோட கத்திக் கத்தி, தொண்டை வரண்டுபோச்சு டீச்சரம்மாவுக்கு!` என்று பரிதாபப் பட்டுக்கொண்டார் குஞ்சிதபாதம்.

    “ரெண்டு நாள் முந்திதான் இவன் வந்து சொன்னான்..,” என்று மென்று விழுங்கினார்.

    “இந்தத் தடவை சொல்லாட்டி, நானே நேரிலே ஒங்க வீட்டுக்கு வந்துடுவேன்னு மிரட்டி அனுப்பினேன். ஒரு தடவைகூட விநாயகம் ஒங்ககிட்டே லெட்டரை ஒங்ககிட்டே குடுக்கலியா?”

    “ஏண்டா டேய்!” மகன்மேல் பாய்ந்தார் தந்தை.

    இப்படி ஒரு நோ¢டைத் தாக்குதலை எதிர்பார்த்திராத பையன் மிரண்டே போனான்.

    அவனைப் பார்த்து முறுவலித்தாள் ஆசிரியை. அவளுடைய உத்தியோகத்தில் இந்தமாதிரி எத்தனை அப்பாக்களைச் சந்தித்திருக்கிறாள்!

    “வாங்க. அப்படிப்போய் ஒக்காந்துக்கிட்டு பேசலாம்,” என்று நடந்தவள் பின்னால் பலியாடுகள்போல் இரு ஆண்களும் நடந்தனர்.

    “விநாயகம் ஒரு மாசத்தில ரெண்டு, மூணு நாள் கூட ஸ்கூலுக்கு வரதில்லே. அதுக்காக ஒங்களுக்கு எத்தனை லெட்டர் போட்டேன்! நீங்க ஏன் ஸார் எந்த ஆக்ஷனும் எடுக்கலே?”

    டீச்சரின் குற்றச்சாட்டைச் செவிமடுத்த குஞ்சிதபாதம் திகைத்துப் போனார். அவருக்கு ஒரே ஒரு கடிதம்தானே வந்தது? தன் உடலைக் குறுக்கியபடி பக்கத்தில் நின்றிருந்த மகனை நோக்கித் திரும்பினார். கையும் களவுமாகப் பிடிபட்டு, திருடனைப்போல் அவன் விழித்ததைப் பார்த்து அவருக்கு உண்மை புலனாகியது. தபால்காரரை மடக்கி, தனக்கு வரும் கடிதங்களை பாதி வழியிலேயே பெற்றுக் கொண்டிருக்கிறான்!

    டீச்சர் தன்பாட்டில் தொடர்ந்தாள்: “விநாயகத்தோட படிப்பு மட்டுமில்ல, உடம்பும் ரொம்ப இளைச்சிருக்கு, பாத்தீங்க இல்ல?”

    “அதுக்கு என்னங்க டீச்சர் பண்றது? காலையில போனா, ராத்திரி ஏழு மணிக்குத்தான் வீட்டுக்கு வரான். இங்க தினமும் ஹாக்கி, ·புட்பால் எல்லாம் விளையாடறானாமில்ல!” என்றார் அப்பாவியாக.

    ஆசிரியை பெரிதாக நகைத்தாள். “விளையாடறானா? பாடம் படிக்கவே கிளாசுக்கு வராதவன் விளையாட மட்டும் ஸ்கூலுக்கு வர்றானா? அவன் சொன்னா, நீங்களும் நம்பிடறதா?”

    குஞ்சிதபாதத்துக்கு அவமானம் தாங்கவில்லை.

    அடுத்த கேள்வி பிறந்தது.”ஒங்க மனைவிக்கும், ஒங்களுக்கும் இடையே எந்த மாதிரி உறவுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

    என்னென்னவோ கேட்கிறாளே என்று அருவருப்படைந்தார் குஞ்சிதபாதம்.

    அவருடைய எண்ணப்போக்கு முகத்திலும் பிரதிபலிக்க, புன்னகையுடன் விளக்கினாள் மிஸஸ் பாணி. “அதாவது, நீங்க ரெண்டுபேரும் குழந்தைகளோட நலனைப்பத்தி அக்கறையோட சேர்ந்து விவாதிப்பீங்களா? பெத்த பிள்ளைகளோட சேர்ந்து பொழுதைக் கழிக்க விரும்பறீங்களா? இதைத்தான் கேக்கறேன்”.

    எதற்காக இப்படியெல்லாம் கேட்கிறாள் என்பது விளங்காது, பதில்சொல்லத் தொ¢யாது விழித்தார் குஞ்சிதபாதம்.

    அவருடைய மௌனத்தை விநாயகம்தான் கலைத்தான், கணீரென்ற குரலில். “எனக்கு அம்மா கிடையாது, டீச்சர். சின்னம்மாதான் இருக்காங்க”.

    மென்று விழுங்கியபடி, ” ஆமாம். என் ரெண்டாந்தாரம்,” என்று சேர்ந்துகொண்டார் குஞ்சிதபாதம்.

    ஏதோ புரிந்தவள்போல் தலையை ஆட்டினாள் மிஸஸ் பாணி. “ஓ! முதல் மனைவி இறந்தபிறகு, விநாயகத்தை வளர்க்க இன்னொரு கல்யாணம் கட்டிக்கிட்டீங்கன்னு சொல்லுங்க!”

    விநாயகத்திற்கு திடீரென்று ஆவேசம் பிறந்தது. “எங்கம்மா செத்துப் போகலே, டீச்சர். யாரோடேயோ ஓடிப் போயிட்டாங்க. அவங்க எங்க குடும்பத்துக்கு உண்டாக்கிட்டுப் போயிருக்கிற களங்கத்தைத் துடைக்க முடியலியே என்கிற ஆத்திரத்திலே என்மேலே வஞ்சம் தீர்த்துக்கிறாங்க இவங்க எல்லாரும்!” பெரிய குரலில் அலறிவிட்டு, சிறு குழந்தைபோல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். ஆண்டாண்டு காலமாகத் தன்னையுமறியாமல் தேக்கி வைத்திருந்த துயரம் எல்லாம் வெளிக் கிளம்பியது.

    என்றோ சிறுவனாக இருந்தபோது நடந்ததை அப்படியே விட்டிருந்தால், அவனுக்கு மறந்து போயிருக்கக்கூடும்.

    ஆனால், அது மனதில் என்றும் நிலைத்திருப்பது அவனுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும் என்று எண்ணியவள்போல, திலகம் வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாரிடமும் தம்பட்டம் அடிப்பாள்: `விநாயகம் என் சொந்தப் பிள்ளைன்னுதான் எல்லாருமே நினைச்சுக்கிட்டிருக்காங்க. ஆனா, அவன் எங்க வீட்டுக்காரரோட மூத்த சம்சாரத்துக்குப் பிறந்தவன்`. இந்த இடத்தில் சற்று நிதானித்து, கேட்பவர்களை யோசிக்கவைப்பாள். `அந்தச் சிறுக்கி எவனோடேயோ ஓடிப் போயிட்டா. இவரு, பாவம், மானி. சாது. மகனை வளர்க்க என்னைக் கட்டிக்கிட்டார்!` என்று நீட்டி முழக்கி, இன்னொருத்தியின் மகனைப் பேணும் தன் நல்ல குணத்தையும், மூத்தவளுடைய தரக்குறைவான நடத்தையையும் ஒப்பிட்டுக் காட்டுவாள்.

    அதையே திரும்பத் திரும்பக் கேட்கும்போதெல்லாம் விநாயகத்தின் மனம் கொந்தளிக்கும். அப்படிப்பட்ட ஒரு தாய்க்குப் பிறந்த தான் மட்டும் ஒழுக்கமானவனாக இருக்க முடியுமா என்ற சந்தேகம்தான் அவனிடம் தலைதூக்கியது.

    தன் இருப்பிடத்திலிருந்து எழுந்த ஆசிரியை, மாணவனின் மனக்குமுறலைப் புரிந்துகொண்டவளாய், ஆறுதல் அளிக்கும் வகையில் அவனது தோளைத் தட்டிக் கொடுத்தாள்.

    விம்மலுக்கிடையே தொடர்ந்தான்: “எங்கம்மா செய்த காரியத்துக்கு நானா டீச்சர் பிணை? நீங்கதான் பாக்கறீங்களே! இந்தமாதிரி பாசமே இல்லாத, அக்கறை காட்டாத ஒருத்தரோட வாழ முடியாம அவங்க போனதில என்ன தப்பு? அவங்க நல்ல காலம் போயிட்டாங்க. என்னால முடியலியே! “

    குஞ்சிதபாதம் விக்கித்துப் போனார். மகன் ஒரு முட்டாள், கீழ்ப்படியாதவன் என்றுதான் அதுவரை நினைத்திருந்தார். ஆனால், அவனுடைய குற்றச்சாட்டுகளைக் கேட்டபின், தன்மீதே அவருக்குச் சந்தேகம் பிறந்தது.

    எப்போது மாறினான் இப்படி ஒரு உணர்ச்சிக் குவியலாக?

    எவ்வளவு காலமாக இத்துணை ஏக்கத்தையும் சுமந்து வந்திருக்கிறானோ என்ற எண்ணம் உரைக்க, தன்னையுமறியாமல் மகன்மேல் பாசம் சுரந்தது.

    “கண்ட வழியிலே போறதாச் சொன்னியே, விநாயகம்! சிகரெட்டா?”

    கொஞ்சம் தயங்கிவிட்டு, கண்ணைத் துடைத்தபடி, `ஆமாம்` என்பதுபோல் தலையாட்டினான்.

    “டாடா? (DADAH?)

    போதைப் பழக்கம் கிடையாது என்று தலையசைப்பிலேயே மறுத்தான்.

    சற்றுமுன் நெகிழ்ந்திருந்த குஞ்சிதபாதத்தின் மனம் மீண்டும் கல்லாகியது. சின்னப் பையன், பிறர் எதிரில் தன்னை என்ன பேச்சு பேசிவிட்டான், என்னவோ, எல்லாமே தன் குற்றம் என்பதுபோல்!

    ஆத்திரத்தில் அறிவிழந்தார். மகனது கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

    “என்னடா சொல்றே? இந்த வயசிலே சிகரெட் பிடிக்கிறியா, காலிப் பயலே! வெக்கமா இல்லே, டீச்சர் எதிரிலேயே ஒத்துக்கிட?”

    துடிக்கும் உதடுகளுடன், தலையைச் சற்றே சாய்த்தபடி ஆங்காரத்துடன் அவரை முறைத்துப் பார்த்தான் மகன்.

    நிலைமையை மிஸஸ் பாணி தன் வழியில் சமாளிக்கப் பார்த்தாள். “நீ கொஞ்சம் வெளியே இரு, விநாயகம். நான் அப்பாவோட தனியா பேசணும்”.

    உதடுகளைப் பிதுக்கியபடி அவன் அசையாது நின்றிருந்தான். வேறு வழியின்றி, அவன் எதிரிலேயே அவன் மனநிலைமையை அலசினாள். “புகை பிடிக்கிறதில்லேன்னு இவன் பொய் சொல்லி இருக்கலாம். ஆனா, இவன் அப்படிச் செய்யல. ஏன் தெரியுமா?”

    தந்தை, மகன் இருவருமே உன்னிப்பாகக் கவனித்தனர், தலையைச் சாய்த்தபடி.

    “தான் கெட்டுப் போறதை தன்னாலதான் தவிர்க்க முடியலே. மத்தவங்களாவது தன்னை நல்வழிப்படுத்த மாட்டாங்களான்னு ஏங்கிப் போயிட்டான்”.

    விநாயகத்திடமிருந்து ஒரு பெரிய விம்மல் வெளிப்பட்டது.

    “அதனாலதான் உண்மையை ஒத்துக்கிட்டான். அதுவே நல்ல ஆரம்பம்தான். என்ன சொல்றீங்க?”

    அந்த அழகிய உடலுக்குள் அறிவு மட்டுமின்றி, அளவற்ற அன்பும் இருப்பது புலன்பட, குஞ்சிதபாதம் மனம் நெகிழ்ந்து கையைக் கூப்பினார்.

    “நம்ப நாட்டிலே பெரும்பான்மையானவங்க பள்ளிக்கூடத்துக்குப் போற வயசுப் பிள்ளைங்கதான். இவங்களை முன்னுக்குக் கொண்டு வந்தாத்தானே நாளைக்கு நாடு உருப்படும்?” அரசியல்வாதிபோல் ஏதேதோ சொல்கிறாளே என்ற அலுப்பு ஏற்பட்டது எதிரிலிருந்தவருக்கு.

    “பிள்ளைங்களை ஒழுங்கு படுத்தறது ஆசிரியர்கள் பொறுப்பு மட்டும்தான் என்கிறமாதிரி நடந்துக்கிறவங்கதான் இங்க அதிகம்,” என்று மேலும் சொன்னாள்.

    குஞ்சிதபாதம் நெளிந்தார்.

    “அடடே! நீங்க வித்தியாசமா எடுத்துக்கிட்டீங்களா? பொதுவாச் சொன்னேன். தனித்தனியா நாம்ப எதுவும் செய்ய முடியாது. ஆனா, பெத்தவங்களும், ஆசிரியர்களும் ஒண்ணு சேர்ந்தா..!”

    தான் செய்யும் தொழிலில் கிடைக்கும் சம்பளத்தை மட்டும் கணக்கிட்டு, அதற்கேற்ப வேலை செய்யாது, அதன் மூலகாரணத்தையும், சிறப்பையும் அறிந்து நடக்கும் இவளைப்போல் எத்தனைபேர் இருப்பார்கள் என்று யோசித்தார் குஞ்சிதபாதம்.

    “ஒரு பையனுக்கு அப்பாதான் வழிகாட்டி. அவனோட சின்னம்மா நல்ல எண்ணத்தோட கண்டிச்சாலும், `பெத்த தாயா இருந்தா இப்படி தன் மனம் நோக ஏசுவாளா?`ன்னு நினைச்சு வருந்தலாம். அதுவே நீங்க உரிமையோட கண்டிச்சா, அப்பாவுக்குத்தான் நம்பமேல எவ்வளவு அக்கறைன்னு புரிஞ்சு ஆனந்தப்படுவான். ஒங்க அன்பையும், ஆதரவையும் எப்படியாவது அடையணும்னுதான் அவன் எதை எதையோ தேடிப் போயிருக்கான். நல்ல வேளை, சிகரெட்டோட போச்சு!”

    பள்ளிக்கூட வளாகத்திலிருந்து வெளியே நடக்கும்போது, கோயிலுக்குப் போய்விட்டு வந்த நிறைவு இருவரிடமும்.

    “என்னங்க, ஒன்பது மணிக்கே படுத்துட்டீங்க? சீரியல் பாக்கலே?”

    “அது கிடக்கு! நம்ப மகன் அடுத்த வருஷம் சீனியர் (பள்ளி இறுதியாண்டு) எடுக்கிறானே! இப்பவே பிடிச்சு படிக்கவேணாம்? சும்மா டிவி போட்டா, அதிலதான் அவன் மனசு போகும்!”

    மகன்மேல் அவருக்குப் புதிதாகத் தோன்றியிருந்த கரிசனம் திலகத்திற்குப் புதிராக இருந்தாலும், அவளுக்கும் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

    Share
  • அன்னையைத் தேடும் ஆன்மாக்கள்

    நிர்மலா ராகவன்

    “எனக்குப் பொறந்த பிள்ளைக்கு அப்பாவா! அந்த நாலு பேத்தில எவனோ ஒருத்தன்!” இடது கையை வீசி, அலட்சியமாகச் சொன்ன அந்தப் பெண் காளிக்குப் பதினாறு வயது என்றாளே இல்லத் தலைவி, மிஸ்.யியோ (YEO)! கூடவே நான்கைத் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம் என்று தோன்றியது சங்கீதாவுக்கு.

    சிறகு முளைக்குமுன் பறக்க ஆசைப்பட்டு, கூட்டிலிருந்து தரையில் விழுந்து, பூனை வாயில் மாட்டிக்கொள்ளும் பறவைக் குஞ்சுபோல்தான் இவளும்!

    இவளுடைய நல்ல காலம், உடலெல்லாம் குருதியாக, நிலைகுலைந்த ஒற்றை ஆடையுடன் இலக்கின்றி தெருவில் ஓடிக்கொண்டிருந்தவளை காவல் துறையினர் பார்க்க நேரிட்டது.

    பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அவ்விடம் கோலாலம்பூரின் மையப்பகுதியில் இருந்தது. பெரிய வளாகத்துக்குப் பொருத்தமில்லாத சிறு வீடு. ஆனால், தனி வீடு.

    வாசலில் பெரிய மரம் ஒன்றின்கீழ் பிள்ளையார் வீற்றிருந்தார். மூன்றடி உயரத்தில் கம்பீரமான, கருங்கல் பிள்ளையார். இப்பெண்கள் திருந்தி, நல்வாழ்வு வாழவென அவரவர் மதப்படி பூசை நடத்துகிறார்கள்.

    “எங்கப்பா ரொம்ப மட்டம்! அம்மா — அதைவிட!” தானே தெரிவித்தாள் காளி, தான் சீரழிந்ததை நியாயப்படுத்துவதுபோல்.

    கற்பு வன்முறையில் சூறையாடப்பட்டிருந்த பெண்கள் திக்பிரமையாக நிற்பார்கள், அல்லது ஒரேயடியாக அழுது புலம்புவார்கள் என்றெல்லாம்தான் சங்கீதா படித்திருந்தாள். ஆனால் இந்தப் பெண்ணோ, தனக்கு நடந்தது சாதாரணமாக எல்லாரும் அனுபவிப்பதுதான் என்ற தோரணையில் அல்லவா பேசுகிறாள்!

    “நான் இப்படித்தான் போவேன்னு எனக்குப் பன்னண்டு வயசிலேயே தெரியும்,” என்று தொடர்ந்தாள் காளி. “ஒருக்கா பக்கத்து வீட்டிலே எங்கம்மாவையும், அந்த வீட்டு ஆம்பளையையும் பாயில ஒண்ணா பாத்தேனா? அப்பவே தோணிப்போச்சு, இந்தமாதிரி அம்மாவுக்குப் பொறந்த நாம்பளும் கெட்டுத்தான் போவோம்னு!”

    `சேற்றில் செந்தாமரை பூப்பதில்லையா?’ என்று இவளிடம் காலங்கடந்து கேட்டு என்ன பயன்! பெருமூச்சை அடக்கிக்கொண்டு, அவள் சொல்லிக்கொண்டே போனதைக் கேட்கத் தயாரானாள் சங்கீதா.

    “எங்கப்பா வெஷம் கலந்த சம்சுத் தண்ணியைக் குடிச்சுட்டு, உசிரை விட்டாரு. `சனியன் விட்டுச்சு’ன்னு, தெகிரியமா அம்மா அநியாயம் பண்ண ஆரம்பிச்சாங்க. அதைப் பொறுக்கமுடியாம, பக்கத்து வீட்டு சொர்ணாக்கா அவங்க சோத்துக் கையை அதோ, இங்க வெட்டிட்டாங்க!” முழங்கைக்குக் கீழே காட்டினாள்.

    சங்கீதா மூச்சை உள்ளுக்கிழுத்துக்கொண்டாள். இவ்வளவு பயங்கரமான நிகழ்வுகளை இந்தப் பெண்ணால் எப்படி உணர்ச்சியற்ற குரலில் சொல்ல முடிகிறது? ஒரு வேளை, இந்தச் சின்ன வயதுக்குள் அளவுக்கு மீறிய துன்பத்தை அனுபவித்ததால், உணர்வுகள் மரத்துப்போய்விட்டனவோ!

    மரத்தடி பிள்ளையாருக்கு ஆராதனையாகக் காட்டப்படும் கற்பூரத்தை கண்ணில் ஒற்றிக்கொள்வதற்குப் பதில், அதை அவசரமாக எடுத்து, வாயில் போட்டுக்கொள்வாளாமே காளி!

    `அது ஒரு வித போதை! இவளுக்கு அந்தப் பழக்கம் இருந்திருக்கிறது!’ என்றாள் மிஸ்.யியோ.

    அப்பழக்கத்தால்தான் எதையும் அசாதாரணமாக ஏற்க முடிகிறதோ இவளால்?
    கதை நாராசமாக இருந்தது. ஆனால், வித்தியாசமான ஒன்றைக் கேட்கத்தானே இத்தனை பிரயாசைப்பட்டு, விசேட அனுமதி வாங்கி இந்த இடத்துக்கு வந்திருக்கிறோம்!

    “அப்புறம்?” என்று ஊக்கினாள்.

    “கை போனதும், அம்மா செஞ்சுக்கிட்டிருந்த தோட்ட (ரப்பர் எஸ்டேட்) வேலையும் போயிடுச்சு. எங்க மாமா வந்து, எங்க ரெண்டு பேத்தையும் டவுனுக்குக் கூட்டிட்டு வந்துட்டாரு!”

    அடுத்து, அவள் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்ததைப்பற்றிச் சொல்லும்போது, காளியின் முகத்தில் சிறிது பிரகாசம் தோன்றியதைக் கவனித்தாள் சங்கீதா.

    அந்த வயதில் தான் எந்தக் கவலையும் இல்லாது, பள்ளிக்கூடம், நீச்சல், சினிமா, பாட்டு கிளாஸ் என்று உல்லாசமாக வாழ்வைக் கழித்தது நினைவில் எழுகையில், சிறிது குற்ற உணர்வுகூட ஏற்பட்டது.

    ஓர் ஆன்மா இவ்வுலகில் பிறக்குமுன், தான் சேரவேண்டிய அன்னையைத் தேடுமாம். அதனால்தான், இயற்கையிலேயே

    பெற்றோரின் ஆற்றலைக் கொண்டிருப்பார்கள் சில குழந்தைகள்.

    காளியின் ஆன்மா எதற்காக இப்படிப்பட்ட பெற்றோரைத் தெரிவு செய்தது? மீண்டும் இவ்வுலகிற்கு வரவேண்டும் என்ற ஆசை ஒன்றே பிரதானமாக இருக்க, எதுவுமே யோசிக்காது, கிடைத்த கருவுக்குள் அவசரமாகப் புகுந்துகொள்ளும் கோடானுகோடி உயிர்களுள் அவளுடையதும் ஒன்றோ?

    சற்றுமுன் மலர்ந்திருந்த காளியின் முகம் மீண்டும் வாடியது. “அம்மாவும் மாமாவும் எப்பவும் என்னை ஏசிக்கிட்டே இருப்பாங்க. வேலை முடிஞ்சதும், நான் பஸ் பிடிச்சு, வீட்டுக்கு வரணும். அன்னாடம், மாமா வாசல்லேயே நின்னுக்கிட்டு, `எவனோடடி கும்மாளம் போட்டுட்டு வர்றே?’ன்னு கத்துவாரு!” குரல் விம்மியது.

    “நீ எல்லாரோடேயும் கலகலப்பா பழகுவியா?” நாமும் ஏதாவது கேட்டால்தானே இவள் தொடர்ந்து பேசுவாள் என்று ஏதோ கேட்டுவைத்தாள் சங்கீதா.

    “ஊகும், எனக்கு ரொம்ப பயம்! யார்கூடவும் பேசமாட்டேன்!”

    “பின்னே.. ஏன் ஒங்க மாமா அப்படி..?”

    “அதான் எனக்கும் தெரியல. வீட்டுக்கு ஏன் வர்றோம்னு இருக்கும்”.

    `அந்த மாமாப்பயலுக்கு இந்த அறியாப் பெண்மீது ஒரு கண்ணாக இருக்குமோ?’ என்று சங்கீதாவின் எண்ணம் ஓடிற்று.

    “எங்கேயாவது ஓடிப் போயிடலாம்னு பாத்தா, அதுக்கும் பயம்! அப்பதான் ஆன்ட்டியைப் பாத்தேன்!” காளியின் முகத்தில் ஒரு சிறு ஒளிக்கீறல்.

    `ஐயோ!’ என்றது சங்கீதாவின் உட்குரல்.

    “தினமும் பஸ் ஸ்டாப்புக்கு வருவாங்க. என்மேல ரொம்ப இஷ்டம் அவங்களுக்கு. ரிப்பன், மணிமாலை எல்லாம் வாங்கிக் குடுப்பாங்க!”

    அவள் கூறாமலேயே மேலே என்ன நடந்திருக்கும் என்று சங்கீதாவால் ஊகிக்க முடிந்தது. முன்பின் தெரியாதவள் ஒரு பருவப்பெண்மீது பரிவு காட்டுவது — தனக்கே இரையாகப்போகும் ஆட்டுக்கு இரை போடும் கரிசனம்தான்.

    “ஆன்ட்டிக்கு என் வயசில ஒரு பொம்பளைப்புள்ள இருந்து, செத்துப்போச்சாம். அதான் என் கையைப் பிடிச்சுக்கிட்டு, ஆசை ஆசையா பேசுவாங்க. என்னைப் பாக்கிறப்போ எல்லாம், `எங்க வீட்டுக்கே வந்துடேன்’னு கூப்பிடுவாங்க. அம்மாகிட்டேயும், மாமாகிட்டேயும் ஏச்சுப்பேச்சு கேக்கறதுக்கு, இந்த ஆன்ட்டிகூடப் போனா, நல்லாயிருக்கும்னு தோணிச்சு. ஒரு நாள், வேலைக்குப் போகாம, அவங்ககூடப் போயிட்டேன்!” காளி சிரித்தாள், அபூர்வமாக. “ஆன்ட்டி வீட்டில நல்லா இருந்திச்சு”.
    சங்கீதா மௌனமாக இருந்தாள். இந்தப் பெண்ணா வாயே திறக்காது என்றாள் இல்லத்தலைவி?!

    “பேப்பர்ல என்னோட போட்டோ போட்டு, `காணும்’னு விளம்பரம் குடுத்தாங்க எங்க வீட்டில. ஆன்ட்டிதான் காட்டினாங்க. `என்னை அங்க அனுப்பிடாதீங்க, ஆன்ட்டி’ன்னு அழுதேன். நான் இல்லாம, அம்மாவுக்கும், மாமாவுக்கும் ஏச ஆள் கிடைக்கலபோல!”என்று வெறுப்பைக் கொட்டியவள், “ஆன்ட்டி வீட்டில ஏதாவது சாப்பிடக் குடுத்துக்கிட்டே இருப்பாங்க,” என்றாள், முகமலர்ச்சியுடன்.

    `அதில்தான் போதை மருந்து கலந்திருப்பார்களோ?’

    “எப்பவும் யாராச்சும் என்கூடவே..!”

    தப்பித்துப் போகாமலிருக்க காவல்! இதுகூடப் புரியாமல், இந்த அப்பாவிப்பெண் சந்தோஷப்படுகிறாள்!

    அடைத்துக்கொண்ட குரலைக் கனைத்துச் சரிசெய்ய முயன்று, தோல்வியுற்றவளாக, “எப்படி இங்கே வந்தே?” என்று கேட்டாள் சங்கீதா.

    “நாலுபேர் ஒத்தர் மாத்தி ஒத்தரா என்மேல விழுந்தாங்களா..?”

    “ஆன்ட்டி வீட்டிலேயா?”

    “இல்ல. அங்க நெறைய்..ய மரங்க இருந்திச்சு,” என்றுதான் காளிக்குச் சொல்லத் தெரிந்தது. “நானும் அந்த தடியன்களோட சண்டை போட்டுப் பாத்தேன். முடியல. கத்த பயம். ஒருத்தன் கத்தியைக் காட்டிக்கிட்டு நின்னான்!” பயத்தில் இப்போதும் அவள் உடல் நடுங்கியது. “அப்புறமா, கைலியை எம்மேல தூக்கிப் போட்டுட்டு அவங்க ஓடிட்டாங்க. நானும் ஒரு பெரிய தெருவில ஓடினேன். போலீஸ் என்னைப் பிடிச்சு, சொந்தக்காரங்க எங்கே இருக்காங்கன்னு திரும்பத் திரும்பக் கேட்டாங்க. நான் சொல்லல”. தான் மறக்க முயல்வதையே எல்லாரும் ஏனோ கேட்கிறார்களே என்ற பரிதவிப்பு அவளுடைய பேச்சின் வேகத்தில் தெரிந்தது.

    மூச்சுவிடாமல் பேசிவிட்டு, சற்று நிறுத்தினாள். “ஆன்ட்டிதான் இங்க வந்து என்னைப் பாக்கறாங்க!”

    “இங்கேயும் வர்றாங்களா!”

    அவளடைந்த அதிர்ச்சி புரியாது, காளி உற்சாகமாகத் தலையாட்டினாள். “கேட்டுக்குள்ளே யாரையும் விடமாட்டாங்க. அதனால, நான் ஆசுபத்திரிக்கு காடியில போறப்போ, அவங்க தெருவுக்கு அந்தப் பக்கம் நின்னுக்கிட்டு கையாட்டுவாங்க!”

    ஒருவர் மனந்திறந்து பேசும்போது அவரது போக்கிற்கே விட்டுவிட வேண்டும், நம் விருப்பு வெறுப்பை அவர்மீது திணிக்கக்கூடாது என்ற மனோதத்துவ நியதியை தாற்காலிகமாக மறந்தாள் சங்கீதா. “அவங்களை நம்பிப் போனதால, நீ பட்டதெல்லாம் போதாதா? இன்னும் என்ன, ஆன்ட்டி?” என்று படபடத்தாள். “அங்கே ஏன் போறே?”

    “வேற எங்கே போறது! அவங்களுக்கு எம்மேல ரொம்ப இஷ்டம்!” மீண்டும் அதையே சொன்னாள்.

    “ஐயோ, வேணாம்மா!” தன்னை மறந்து கத்தினாள் சங்கீதா. “ஒங்கம்மாகிட்ட போ!”

    “அங்க எதுக்குப் போறது? அம்மாவுக்கு ஏசத்தான் தெரியும்!” என்று ஆங்காரமாகச் சொன்னவளின் குரல் தழதழத்தது. “இனிமே என்னை யார் கட்டிக்குவாங்க? இந்த ஒடம்பு இருக்கிறவரைக்கும் ஆன்ட்டிக்கு ஒழைச்சுப் போட்டுட்டுப் போறேன்!” தான் செய்யபோவது என்ன தொழில் என்று அவளுக்குத் தெரிந்தே இருந்தது வேதனையாக இருந்தது சங்கீதாவுக்கு.

    “ஒன் பிள்ளை?”

    “அந்தச் சனியனை யார்கிட்டயோ குடுத்துட்டாங்க!”

    அந்த இல்லத்தின் வெளியே காரைச் செலுத்திக்கொண்டு போகையில், சங்கீதாவின் மனம் கனத்திருந்தது.

    தன் முதல் பிரசவம் ஆகுமுன்னரே எவ்வளவு எதிர்பார்ப்புடன் தானும், கணவரும் குழந்தைக்கு வேண்டிய தொட்டில், சட்டைகள் என்று பார்த்துப் பார்த்து வாங்கினோம்!
    காளி ஏன் இப்படி?

    தாய்ப்பாசம் தெரியாது வளர்ந்திருந்ததால், தன் குழந்தைமீது அன்பு சுரக்கவில்லையோ?

    அல்லது, அதற்கு உயிர் கொடுத்த, முகம் தெரியாத காமுகன்மேல் கொண்ட வெறுப்பு அவளை இப்படிப் பேசவைக்கிறதோ என்று யோசித்தாள் சங்கீதா.

    தான் உருவான சூழ்நிலையில் அன்போ, இன்பமோ இல்லாது பிறக்கும் குழந்தை மகிழ்ச்சியோடு வளருமோ?

    பெற்ற தாய்க்கே வேண்டாதவனாக, தன்மேலேயே வெறுப்புகொண்டு..! இன்னொரு கர்ணனா?

    பிறந்தது பெண்ணாக இருந்தால், காளி செய்ததுபோல், தான் வழிதவறிப் போவதை நியாயப்படுத்துமோ?

    பிறப்பின் அதிர்ச்சியை, பரம்பரைக் குணத்தை, வளர்ப்பால் மாற்றி அமைக்க முடியுமா?

    ஓயாத எண்ண அலைகளால் அலைக்கழிக்கப்பட்டவளாக, இரண்டு தவறான திருப்பங்களுக்குப்பின் சங்கீதா வீடு திரும்பினாள்.

    தோட்டத்தைக் கொத்திக்கொண்டிருந்த கணவர், அவளை வரவேற்கும் விதமாக, “தீபாவளி இதழுக்குக் கேட்டிருக்காங்கன்னு யாரையோ பேட்டி எடுக்கப் போனியே! கதை கிடைச்சுதா?”என்று கேட்டார்.

    காளியின் கதையைச் சீரணிக்க இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும் என்று தோன்ற, அசுவாரசியமாகச் சூள் கொட்டிவிட்டு, உள்ளே போனாள் சங்கீதா.

    Share
  • மன்னிப்பு

    -நிர்மலா ராகவன்

    காலை ஏழு மணிக்குள் தலைக்குக் குளித்துவிட்டு, ஈரத்தலையில் ஒரு துண்டைச் சுற்றிக்கொண்டு, வாசலில் கிடந்த மலேசிய நண்பனை எடுக்க வந்தாள் பாரு.

    தொலைபேசி அழைத்தது.

    `யார் இவ்வளவு சீக்கிரம்?’ என்ற யோசனையுடன் உள்ளே போய், `ஹலோ, வணக்கம்!’ என்றாள் அசுவாரசியமாக.

    முகமன் சொல்லாது, “துர்கா போயிட்டாளாம்!” என்ற குரல் — தோழி கமலினியுடையது.

    “எங்கே?” என்று வாய்வரை வந்த கேள்வியை அடக்கிக்கொண்டு, எதுவும் பேசத் தோன்றாது வெறித்தாள் பாரு.

    `தொலைந்தாள்!’ என்று ஒரு அலாதி நிம்மதி எழுந்தது.

    அடுத்து ஏதேதோ பேசிக்கொண்டே போன கமலினியின் குரலில் மனம் பதியவில்லை.

    ஆருயிர்த்தோழி என்றெண்ணிய துர்கா! அப்படி ஒரு துரோகம் நினைப்பாளா தனக்கு?

    வாரம் ஒருமுறை கணவருடன் சிவன் கோயிலுக்குப் போகும்போதெல்லாம், அருகிலிருந்த அவள் வீட்டுக்குப் போவாளே! அப்போதெல்லாம் சிரித்துச் சிரித்துப் பேசியதெல்லாம் நாடகமா?

    “இனிமே அதோட வீட்டுக்கு என்னைக் கூப்பிடாதே!” என்று கண்டிப்பான குரலில், அதுவும் அஃறிணையில் கணவர் கூறியபோது ஆச்சரியமாக இருந்தது பாருவுக்கு. தொடர்ந்து, “க..டை!” என்ற கெட்ட வார்த்தையை அவர் பிரயோகித்தபோது, அப்படியெல்லாம் யாரையும் துச்சமாகப் பேசுபவர் இல்லையே என்று அவள் யோசனை போயிற்று.

    “ஏன்?”

    “கூப்பிடாதே. அவ்வளவுதான்!” என்று முரட்டுத்தனமாகக் கூறிவிட்டு, “பாட்டு பாடறாளாம், பாட்டு! அது ஒண்ணுதான் குறைச்சல்!” என்று முணுமுணுத்தபடி அப்பால் விரைந்தார்.

    பாரு, துர்கா இருவரும் ஆண்டு தவறாது, தியாகராஜ ஆராதனையை ஒட்டி நடக்கும் விழாவில் பஞ்சரத்ன கிருதிகளைப் பாடுவார்கள்.

    ஒருமுறை, துர்காவின் பாட்டில் ஏதோ தப்பு கண்டுபிடித்து, விளையாட்டாய் சிரித்துவிட்டாள் பாரு.

    துர்காவுக்கு வந்ததே ஆங்காரம்! “பேசாம பாடறதுன்னா பாடு. இல்லாட்டா, வாயை மூடிண்டு வீட்டிலேயே இரு!” என்று கட்டைக்குரலில் அலறிவிட்டு அவள் வெளியேறியபோது, கூடப் பாடுபவர்கள், நிகழ்ச்சியை நடத்துபவர்கள் எல்லாருமே விதிர்விதிர்த்துப் போனார்கள்.

    முதலில் அவமானமாக உணர்ந்தாள் பாரு.    பிறகு கணவர் அவளைக் கவனிப்பதேயில்லை, அவருடைய உத்தியோகம்தான் அவருக்கு மனைவி என்றெல்லாம் துர்கா தன்னிடம் குறைப்பட்டுக் கொண்டது நினைவிலெழுந்தது. `பாவம்! என்னிடம் அந்த ஆத்திரத்தைக் காட்டியிருக்கிறாள்!’ என்று, கொந்தளித்த மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள்.

    அதற்கடுத்த மாதம் ஒரு கச்சேரியில் துர்காவைப் பார்த்ததும், புன்னகையுடன் அவள் அமர்ந்திருந்த இடத்துக்கு விரைந்தபோது, தரையில் ஏதோ தேடுவதுபோல குனிந்து, அவளை தவிர்த்தது ஏன்?

    அடுத்தடுத்துப் பலமுறை அதேபோல் நடக்க,  “துர்காவுக்கு ஏனோ என்னைப் பிடிக்காம போயிடுத்து!” என்று குழந்தைபோல் கணவரிடம் முறையிட்டபோது, அவர் நிதானமாக, “அது நீ செஞ்ச எதனாலேயுமில்லே!” என்றார்.

    அடுத்து அவர் கூறியது!

    இவளா? இவளா!

    எவ்வளவு உயர்வாக எண்ணியிருந்தோம் தோழியைப்பற்றி!

    “நாம்ப கடைசியா அவ வீட்டுக்குப் போனோமே, அப்போ..,” முகத்தில் வேதனையும், அவமானமும் ஒருங்கே கொப்பளிக்க, அன்று நடந்ததை நினைவுகூர்ந்தார் அவர்.

    அடுத்த பல நாட்கள் அவருடைய வார்த்தைகளையே அசைபோட்டாள் பாரு.

    அந்தப் பாவி சிரித்து சிரித்துப் பேசியதெல்லாம் தன்னைப் பார்த்த பூரிப்பில் இல்லையா? தன் கணவரை வசப்படுத்தத்தானா?

    `மடியாகப் பூஜை செய்கிறேன் பேர்வழி’ என்று ரவிக்கை போடாது அரைகுறையாக உடுத்து, பரிமாறும்போது ஒரு கையால் லேசாகப் புடவையை விலக்கி, கண்ணால் வேறு சமிக்ஞை செய்வாளா ஒருத்தி?

    பாருவால் நம்ப முடியவில்லை. நம்பப் பிடிக்கவில்லை.

    “ஒரு வேளை புடவை நெகிழ்ந்துபோனதை நீங்கதான் தப்பா,” என்று, தானே நம்ப முடியாத ஒரு காரணத்தைக் கற்பித்துக்கொண்டபோது, “ஒங்கிட்டபோய் சொல்றேனே!” என்று கத்தினார் கணவர். “எனக்கென்ன அவ்வளவுகூடத் தெரியாதா? நமக்குக் கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆச்சு! கிளிபோல நீ பக்கத்திலேயே இருக்க..! அந்தக் கழுதை என்னை என்னன்னு நினைச்சிண்டது?”

    `இதை நீங்க எப்பவோ சொல்லியிருந்தா, நான் அவ்வளவு வேதனைப் பட்டிருக்க மாட்டேனே!’ என்று சொல்ல நினைத்து, தன்னை அடக்கிக்கொண்டாள் பாரு.

    முன்பே சொல்லியிருந்தால், `அவ அப்படி நடந்துக்கற அளவுக்கு நீங்க என்ன பண்ணினேள்?’ என்று தான் கேட்டுவிடுவோமோ என்று பயந்திருக்கலாம். இப்போது, மனைவி படும் வேதனையைப் பொறுக்காது உண்மையைச் சொல்லியிருக்கிறார், பாவம்!

    ஒரு ஆண் பெண்ணிடம் தப்பாக நடக்க முயற்சித்தாலும், பெண் ஆணிடம் அப்படி நடந்தாலும், அதை ரசித்து ஏற்க முடியாதவருக்கு ஆத்திரமும், அவமானமும், பயமும் ஏற்படுவது இயற்கைதானே!

    அதற்குப் பிறகு பாருவும் எந்த இசை நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. தற்செயலாக அவளைப் பார்க்க நேர்ந்தாலும், அவமானத்தால் இறுகிய உதட்டுடன் துர்கா விலகிவிடுவாள்.

    அப்படி ஒரு சந்திப்பின்பிறகு, “அந்தக் கழுதை அப்படியேதான் இருக்கு. வயசானதில கொஞ்சம் புத்தி வந்திருக்கலாம்!” என்று பாருவிடம் எகத்தாளமாகச் சொன்னவர், “என்னைப் பாத்துட்டு ஓடி வந்தா ஒன் சிநேகிதி. `ஐயோ! ஒங்களைப் பாத்து எவ்வளவு நாளாச்சு!ன்னு என் கையைப் பிடிக்க வந்தா!” அந்த நிகழ்ச்சியை நினைக்கும்போதே ஏற்பட்ட அருவருப்பில் உடலைச் சிலிர்த்துக்கொண்டார். “அப்போ நீ எங்கிட்ட வர்றதைப் பாத்தாளா? பயந்து ஓடிட்டா,” என்று சிரித்தார். “நல்லவேளை, நான் தப்பிச்சேன்!”

    “அவ ஹஸ்பண்ட் வேலை முடிஞ்சா கிளப், குடின்னு இருக்கிறவர். நீங்களோ, ஜாகிங், ஜிம் அப்படின்னு போய், இந்த வயசிலேயும் ஒடம்பை சின்னப்பையனாட்டம் வெச்சிண்டு இருக்கேள்!” என்று புகழ்வதுபோல், தன் அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொண்டாள் பாரு. “எதுவுமே தனக்குக் கிடைக்காட்டாதான் அது ஒஸ்தியாத் தோணும்!”

    “ஒனக்கு நான் சுலபமா கிடைச்சுட்டேனே! அதான் ஒனக்கு என்னோட அருமை புரியலியாக்கும்!” புன்சிரிப்புடன் அவளைச் சீண்டினார்.

    இந்தமாதிரி எவ்வளவு சின்னஞ்சிறு நிகழ்வுகள், நினைத்து நினைத்து ரசிப்புடன் லயிக்கும் வண்ணம்! இதையெல்லாம் தன்னிடமிருந்து பறிக்கப்பார்த்தாளே, துர்கா!

    பல வருடங்களாகியும், பாருவின் ரணம் பூரணமாக ஆறவில்லை.

    அந்தத் தோழிதான் இறந்துவிட்டாளாம்.

    இன்னும் ஒரே ஒரு சந்தேகம் பாக்கி இருந்தது.

    “எப்படி?” தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவளிடம் விசாரித்தாள்.

    “ப்ரெஸ்ட் கான்சர்!”

    வலி உயிர் போயிருக்குமே!

    உடலில் எத்தனையோ அங்கங்கள் இருக்க, சொல்லிவைத்தாற்போல் மார்பில் புற்றுநோய் வருவானேன்!

    `எங்களைத் தவறாகப் பயன்படுத்தத் துணிந்த உன்னிடம் நாங்கள் இருக்கமாட்டோம்!’ என்றுதான் அவை பழுதாகிவிட்டனவோ?

    துரோகத்திலேயே மிகக் கொடிது மித்திரத் துரோகம் எனபார்களே! ஒரு வேளை, அதன் விளைவோ?

    பாருவின் எண்ணப்போக்கில் ஒரு முட்டுக்கட்டை.

    முதலில் நெறிகெட்ட ஆசை, அது நிறைவேறாத ஆத்திரம், நெருங்கிப் பழகிய அப்பாவி சிநேகிதியின் வாழ்வைக் கலைக்கப்பார்த்தோமே என்ற குற்ற உணர்வு, இறுதியாக, இவர்களுக்குத் தன் உண்மை சொரூபம் தெரிந்துவிட்டதே என்ற அவமானம்.

    அதனால்தானே அவள் அப்படி விலகி, விலகிப் போனாள்!

    மனக்குமுறலைப் பிறரிடம் சொல்லி ஆற்றிக்கொள்ளவும் வழியில்லாதுபோக, உள்ளுக்குள்ளேயே குமைந்திருப்பாள். வடிகால் இல்லாத உணர்ச்சிகள் அவள் உடலையே அரித்தெடுத்திருக்க வேண்டும்.

    `பாவம், துர்கா!’ வாய்விட்டு வந்தன அவ்வார்த்தைகள்.

    பாருவுக்கு ஏதோ தோன்ற, மீண்டும் குளியலறைக்குப் போனாள். ஏற்கெனவே ஈரமாக இருந்த தலையில் தண்ணீரை மொண்டு விட்டுக்கொண்டாள்.

    “எத்தனை தடவை குளிப்பே?” வெளியிலிருந்த கணவர் குரல்கொடுத்தார்.

    “வேணுங்கிறவா செத்துப்போயிட்டா!” என்று தெளிவான குரலில் மறுமொழி கேட்டது மறுபுறத்திலிருந்து.

    Share
  • வீணில்லை அன்பு

    நிர்மலா ராகவன்

    “இன்னிக்கு சத்யா திரும்ப ஆபீசுக்கு வந்திருந்தாரும்மா!”

    “அவர் பிழைச்சதே பெரிசு! இப்ப ஒடம்பு நல்லா ஆயிடுச்சா?”

    `உருவத்தில் பழைய சத்யாதான். ஆனால், அந்த இனிமையான குணத்தில்தான் ஏதோ மாசு படிந்துவிட்டதுபோல் இருக்கிறது,’ என்று தாயிடம் சொல்ல கலாவின் மனம் இடங்கொடுக்கவில்லை.

    கடந்த சில மாதங்களாக, மருத்துவமனைக்குப் போய் சத்யாவைப் பார்க்கும்போது, தலையில் பட்ட பலத்த அடியில் அவனது குணாதிசயமே மாறிவிட்டிருந்தது தெரிந்தது. காரணமில்லாமல் சிரித்தான். சம்பந்தம் இல்லாது ஏதேதோ பேசினான்.

    பரிதாபமாகத் தோற்றம் அளித்த அந்நிலையில் அவனுக்கு ஆதரவாக இருக்கத் தீர்மானித்தாள். சிறு குழந்தை மாதிரி, சாப்பிடுவதற்கு அவன் முரண்டு பிடித்ததோ, மாத்திரை கொடுக்க வந்தவளை பிடித்துத் தள்ளியதோ பெரிதாகப் படவில்லை அவளுக்கு.

    `எப்படி இருந்தவர்!’ அழுகைதான் வந்தது.

    “ஹலோ, கலா! குட் மார்னிங்! எப்படி இருக்கே இன்னிக்கு?” மேலதிகாரி என்ற படாடோபம் இல்லாது, சத்யா வலிய வந்து, மரியாதை தவறாது சிறுகச் சிறுகப் பேசியதால்தானே அவள் மனதளவில் அவனுடன் நெருங்கிப் போனாள்!

    முதலில் எட்டடி தூரத்தில் நின்று உரையாடியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி, இரண்டடி தொலைவில் நின்று, தாழ்ந்த குரலில் மனம்விட்டுப் பேசும் அளவுக்கு முன்னேற ஓராண்டு பிடித்தது.

    அலுவலகப் பிரச்னைகள், சண்டை பூசல்கள், பிறகு டி,வி, பிடித்த இசையமைப்பாளர், பத்திரிகை என்று பொதுப்படையாக ஆரம்பித்த பேச்சு, மெள்ள மெள்ள அவரவர் குடும்பப் பின்னணி என்று முன்னேறியது.

    கலாவின் வாழ்வோடு பார்த்தபோது, தான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று பிரமிப்புதான் ஏற்பட்டது சத்யாவுக்கு.

    `எங்கப்பா குடிப்பாரு!’ என்று ஒரு நாள் ஆரம்பித்தவளை அலட்சியமாக இடைமறித்தான் சத்யா. `இங்க எவன்தான் குடிக்கலே? உலகத்திலேயே பெரும்பாலான ஆண்கள் குடிக்கிறது மலேசியாவிலேதான்னு பேப்பரிலே போட்டிருந்தாங்களே!’

    அப்பாதான் எப்படி அடிப்பார் அம்மாவையும், அவளையும்! அவர் வீட்டுக்குள்ளே நுழையும்போதே இருவரும் மேசை அடியில் ஒளிந்துகொண்டதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு!

    எலிகள் செத்துக் கிடந்த ஏதோ மட்டமான சரக்கைக் குடித்ததன் விளைவாக பார்வையிழந்து, இப்போது கையாலாகாதவராக இருந்தாலும், அப்பா உண்டாக்கிய பாதிப்பு என்னவோ நீங்கவே இல்லை.

    இதையெல்லாம் சத்யாவிடம் சொல்லலாம் என்று தோன்றியது. சொன்னால், தன்னை மட்டமாக நினைக்க மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது.

    தயங்கத் தயங்கி அவள் பேசியபோது, அக்கண்களையே உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு, அவளுடைய நான்கு வாக்கியங்களுக்கு ஒரே வாக்கியம் குரல் அதிராமல் அவன் பேசியபோது, அதுவே அவளுடைய நொந்த மனத்துக்கு அருமருந்தாக அமைந்தது.

    அவனுடன் பேசும் அந்த ஐந்து, பத்து நிமிடங்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் கலா.

    `தன்னை எப்படியாவது வளைத்துப் போடுவதற்காகத்தான் இப்படி, தன் நலனில் அக்கறை உள்ளவர்போல் நடிக்கிறாரோ!’ இரவின் தனிமையில் அவனைப்பற்றி எண்ணமிட்டுக் கொண்டும், தனக்குத்தானே சிரித்துக் கொண்டும் இருக்கும்போது, இப்படி ஒரு சந்தேகம் தலைகாட்டும்.

    `நாளையிலிருந்து வளவளவென்று பேசாது, ஒரு அளவோட பழகணும்!’ என்று முடிவெடுத்துக் கொள்வாள்.

    ஆனால், மறுநாள் அவனுடைய கண்களை, அதில் காணப்பட்ட கபடின்மையை, அன்பை உணர்கையில், தன்மேலேயே எரிச்சல் வரும் — இப்படி ஒரு பண்பாளரைத் தவறான நோக்குடன் எடைபோட்டதற்கு. அவளையும் அறியாமல், அவர்களது உறவு பலப்படும்.

    இரண்டு ஆண்டுகள் இவ்விதம் பழகிவிட்டு, `நம் இருவருக்கும்தான் ஒத்துப்போகிறதே! வாழ்நாளெல்லாம் இணைந்தால் என்ன?’ என்ற ஒரு கேள்வியைப் போட்டான் சத்யா. எதிர்பார்த்ததுதான் என்றாலும் அதிர்ச்சியாக இருந்தது கலாவிற்கு.

    தன் தாயின் அலங்கோலமான வாழ்க்கையைக் கண்டு மனம் வெறுத்துப்போய், தானாவது சுதந்திரமாக இருக்கவேண்டும் என்றுதானே இரவு பகலாக உழைத்துப் படித்து, வேலையிலும் அமர்ந்தாள்!

    அவளால் உடனே பதில் கூற முடியவில்லை. சத்யாவும் வற்புறுத்தவில்லை.

    இரண்டு மாதங்களுக்குப்பின் மீண்டும் அவன் அதே கேள்வியைச் சற்றுக் கெஞ்சலாகக் கேட்டபோதும் அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. `கல்யாணம், குடும்பம்னாலே பயமா இருக்கு, சத்யா!’ என்று உண்மையை ஒத்துக்கொண்டாள்.

    `நான் குடிக்கறதில்ல. ஆல்கொஹால் அலர்ஜி. கட்டினவளை அடிக்கவும் மாட்டேன்!’ என்று அவன் சிரித்தான்.

    ஆனால் அவள் கண்களில் நம்பிக்கை காணப்படவில்லை. “நீங்க என்ன சொன்னாலும், பயமாத்தான் இருக்கு!” என்றாள்.

    சற்று யோசித்து, `இப்படிச் செஞ்சா என்ன? ஒரு ஆறு மாசம் நாம்ப ரெண்டு பேரும் பேசிக்காம இருக்கலாம். அப்புறம் பார்ப்போம்!’ என்ற அவனுடைய திட்டத்தை கலா ஏற்றுக்கொண்டாள்.

    சில நாட்களிலேயே அவன் குரல் எங்கே கேட்டாலும் மனம் துடிக்க, அவள் பக்கமே திரும்பாது அவன் அவளைக் கடந்து போகையில், இருவருமே தமது படபடப்பை மறைத்துக்கொள்ள முயற்சி செய்தபோது, முதலில் வேடிக்கையாக இருந்தாலும், நாளடைவில் ஏக்கமாக மாறியது.

    இரண்டு மாதம்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது அவளால்.

    அந்தச் சமயத்தில் அவள் தந்தை இறக்க, அவள் குடும்பத்தில் ஒருவனாகவே தன்னைப் பாவித்துக்கொண்டு, எல்லா விஷயங்களிலும் அவளுக்குப் பக்கபலமாக இருந்தான் சத்யா. அதன்பின், தங்கள் போட்டியின் முடிவைப்பற்றி எந்த ஒரு சந்தேகமும் இருக்கவில்லை இருவருக்கும்.

    கல்யாணத்துக்கு இன்னும் மூன்றே மாதங்கள்தாம் இருக்கையில், ஒரு புதிய குழப்பம்!

    ஏன்தான் அப்படி ஒரு விபத்து நிகழ்ந்ததோ!

    இரவு பத்து மணிக்கு, ஒரு டோல் அருகே சத்யா பல கார்களுக்குப் பின்னால் காத்திருந்தபோது, இரண்டு பேர் அவனை வெளியில் இழுத்துப் போட்டு, அவனுடைய கைக்கடிகாரம், பர்ஸ், காரின் முன்னிருக்கையில் இருந்த மடிக்கணினி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டதோடு நில்லாது, தலையில் பலமாகத் தாக்க, மூர்ச்சையடைந்தவன் கோமாவில் கிடந்தான் மாதக்கணக்கில்.

    ஒரு வழியாக, சத்யா மீண்டும் ஆபீசுக்கு வந்தபோது, அவனுடைய இடத்தில் சின் என்பவர் அமர்த்தப்பட்டு, அவனுக்குப் பெயரளவில் ஏதோ எளிதான வேலை கொடுக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்தான்.

    எல்லாரும் தன்னைக் கேலியாகப் பார்ப்பதுபோல் தோன்றியது அவனுக்கு.

    `உனக்கு மூளை கெட்டுவிட்டது!’ என்று சொல்லாமல் சொல்கிறார்களா?
    இதுவரைக்கும் குடும்பம், படிப்பு, காதல், எதிலும் ஒருவித குழப்பமும் இல்லாத வாழ்க்கை அமைந்ததெல்லாம் இப்படி ஒரு பேரிடியைத் தாங்க வேண்டும் என்பதற்காகத்தானா? மண்டைக்குள் எரிச்சல் உண்டாக, தலையே பிளந்துவிடுவதைப்போல ஒரு வலி.

    அந்தச் சமயத்தில்தானா சின்னுடைய அறையிலிருந்து கலா வெளியே வரவேண்டும்!

    தன் வேலையைப் பறித்ததும் இல்லாது, எதிர்கால வாழ்க்கையையே சூறையாடுவது என்றே எல்லாரும் தீர்மானித்துவிட்டார்களா?

    இந்த உலகத்தின் மேலேயே பொதுவாக ஆத்திரம் வந்தது.

    “ஏ கலா! `இவன் எப்படி தொலைவான்’னு காத்துக்கிட்டு இருந்திட்டு, என் தலை மறைஞ்சதும், இன்னொருத்தனை வளைச்சுப் போட்டுட்டியா?”

    அத்தாக்குதலைச் சற்றும் எதிர்பார்த்திராத கலா விக்கித்துப்போய் நின்றாள். அவள் கையிலிருந்த ஆவணங்கள் சிதறின. அவைகளைத் திரட்டக்கூட தோன்றாமல், அசையாமல் நின்றாள்.

    “மொதல்லேயே ஒனக்கு சிவப்பா, உயரமா இருக்கிற ஒருத்தனைக் கட்டிக்கணும்னு மனசுக்குள்ளே இருந்திருக்கு. அதனாலதானே என்னை அவ்வளவு தூரம் கெஞ்ச வெச்சே?”

    அவனுடைய கத்தல் அருகேயிருந்த மலாய், சீனர்களுக்குப் புரியாவிடினும், `காதலர்களுக்குள் ஏதோ தகறாறு!’ என்று அனைவரும் ஓடிவர, அவமானத்தால் சிறுத்த முகத்துடன், “இவருக்கு இன்னும் உடம்பு தேறவில்லை,” என்று ஆங்கிலத்தில், குரலே எழும்பாது மன்னிப்புக் கேட்டவள், அங்கிருந்து விரைந்தாள்.

    பகல் சாப்பாட்டு நேரத்துக்குச் சற்று முன்பாகவே எழுந்து, கலாவின் மேசைக்கருகில் தயங்கி நின்றான் சத்யா.

    அவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தவள், மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள். வேலை ஓடவில்லை.

    “சாப்பிடப் போகலாமா?” அவனது தாழ்ந்த, ஆழமான குரல் அவள் மனதைத் தொட்டது. அந்தக் கண்களில் தெரிந்த வேதனை அவளை என்னவோ செய்தது. தன்னையுமறியாமல் எழுந்தாள்.

    வழக்கம்போல் எதிரெதிரே அமர்ந்து சாப்பிடுகையில், இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவனுடைய பார்வை அவ்வப்போது தன்மேல் நிலைத்ததை கலா உணர்ந்தாலும், அவளால் நிமிர முடியவில்லை. எந்த நிமிடமும் அழுதுவிடுவோமோ என்று பயமாக இருந்தது.

    “கலா! என்னை விட்டுட்டுப் போயிட மாட்டியே?” கெஞ்சலாக ஒலித்த அவன் குரல் அவள் கண்களில் நீரை வரவழைத்தது.

    எவ்வளவு நெருக்கமாக இருந்தவர்கள்! உடல் நெருங்கினால்தானா உறவு? `பிணைப்பு’ என்பது மனதைப் பொறுத்துத்தானே இருக்கிறது!

    எதுவும் சொல்லாமல் எழுந்துகொண்டாள். அவள் மனதில் ஓயாது எழும்பிய கேள்விகளுக்கு முதலில் விடை காண வேண்டும்.

    `கல்யாணமே வேண்டாம்!’ என்றிருந்தவள் அப்படியே இருந்து தொலைத்திருக்கக் கூடாதா?

    இப்போது, தாயின் வாழ்க்கையைப்போல தன்னுடையதும் ஆகிவிடுமோ?
    மூளை கலக்கம் அடைய எத்தனை வழிகள் இல்லை!

    குடித்தால்தான் கத்துவார்களா, அடிப்பார்களா, என்ன!

    இப்படியெல்லாம் அடுக்கடுக்காக யோசனைகள் வந்தபோதே, தன் சுயநலம் கலாவை வெட்க வைத்தது.

    முன்பெல்லாம் சத்யா எத்தனை வகைகளில் தனக்கு ஆதரவாக இருந்தார்! எதை எதிர்பார்த்து அப்படி நடந்துகொண்டார்?

    தான் அப்படி ஒன்றும் பிரமாதமான அழகி என்று அவள் நம்பத் தயாரில்லை. தானும்தான் அவரிடம் எதைப் பார்த்து மயங்கி, உறுதி குலைந்து, மணக்கச் சம்மதித்தோம்?

    அவனுடைய அதிக உயரமில்லாத உருவமும், கறுப்பில் சேர்த்தியான நிறமும் அவளை எங்கே பாதித்தது! உள்ளத்தையே ஊடுருவது போன்ற அந்தக் கண்களின் கூர்மையும், அவள் சிறிது மன அயர்ச்சி கொண்டிருந்தாலும் அதைக் குறிப்பாலேயே உணர்ந்து, உடனே அவள் பக்கம் விரையும் அவனது ஆண்மைத்தனமும்தானே, இயற்கையாகவே இன்னொருவரைச் சார்ந்து நிற்கவைக்கும் அவளுடைய பெண்மையை விழிக்கச் செய்தது?

    இது என்ன உணர்வு?

    எந்தப் பெயராக இருந்தால் என்ன!

    ஆனால், தங்கள் இருவரின் நிலையும் இப்போது தலைகீழாக மாறி இருப்பது என்னவோ விளங்கியது.

    சத்யாவுக்கு இப்போது பக்கபலம் அவசியம். தலையில் அடிபட்டால், இரண்டு வருடங்களுக்கும் மேலாக, சில சமயம், பத்தாண்டுகள்கூட பொறுக்க முடியாமல் வலிக்குமாமே! பாவம்! அதை எப்படித் தாங்கப் போகிறார்?

    ஜூர வேகத்தால் அழுது அமர்க்களம் செய்யும் குழந்தையை அதன் தாய் மடியில் கிடத்திக்கொண்டு, இரவெல்லாம் — தன் உறக்கம் கெடுவதை நினைத்தும் பாராது — அதற்கு ஆறுதலாக ஏதாவது பேசிக்கொண்டே இருப்பதில்லையா?

    குழந்தையாக இருந்தால் என்ன, கணவராக இருந்தால் என்ன! அன்பு செலுத்துவது என்று வந்துவிட்டால் அதில் யார், எவர் என்ற பேதம் ஏது!

    சத்யாவால் பழையபடி வேலைப் பளுவுக்கோ, அன்றாட வாழ்க்கையின் அவசரத்துக்கோ ஈடு கொடுக்க முடியாதுபோக, அதனால் பிறந்த ஆத்திரமே சிறுமை உணர்ச்சியாக மாறியிருக்கிறது என்று கலா புரிந்துகொண்டாள்.

    மூளையில் ஒரு பகுதியிலுள்ள அணுக்கள் அழிந்துவிட்டால், அவை திரும்ப தோன்ற முடியாது; ஆனால், வேறொரு பாகம் பழைய வேலைகளைச் செய்யப் பழகிவிடும் என்று அவள் படித்திருந்தாள்.

    இந்த வேளையில் சத்யாவுக்கு முக்கியமாக வேண்டியது அவருடைய உள்ளக் குமுறலைப் புரிந்துகொண்டு, உணர்ச்சிக் கொந்தளிப்பைப் பொருட்படுத்தாது, தனது பலத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு துணை.

    பிறருடைய நலனுக்காக நாம் செலவிடும் அன்போ, பணமோ, எதுவுமே வீணில்லை என்றுதான் கலாவுக்குத் தோன்றியது.

    “ஏம்மா? என்னோட வெளிர் மஞ்சள் புடவையை கஞ்சி போட அனுப்பியிருந்தேனே! வந்திடுச்சா?” என்று உரக்கக் கேட்டவள், `சத்யாவுக்கு அதில என்னைப் பாத்தா, எப்பவுமே சந்தோஷமா இருக்கும்!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

    Share
  • என்னைக் கைவிடு! 

    -நிர்மலா ராகவன்

    “நல்லா யோசிச்சுப் பாத்தியா, சியாமளா?” தந்தையின் குரலில் கவலை மிகுந்திருந்தது. மூன்று வருடங்களோ, இல்லை ஐந்து வருடங்களோ
    சேர்ந்து வாழ்வதற்கா கல்யாணம்?

    ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்களே!பெற்ற ஒரே பெண்ணுக்குத் தன் முயற்சியால்
    ஒரு கணவனைத் தேடித்தர டியவில்லையே என்ற அவருடைய நீண்டகால வேதனை இன்னும் மிகுந்தது.

    “சதீஷ் காண்ட்ராக்டிலே வந்தவன்! அது முடிஞ்சதும் வந்தஊருக்கே திரும்பிப்போயிடணுமேம்மா!”கட்டிடவேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு விபத்தால் முதுகில் பலத்த அடிபட,சில ஆயிரம் நஷ்ட ஈடு பெற்று வீட்டிலேயே நிரந்தரமாக இருக்க வேண்டியநிலை தனக்கு ஏன் வந்தது என்று மீண்டும் மீண்டும் குமைவதைத் தவிர, உருப்படியாக என்னசெய்ய முடிந்தது தன்னால்?

    எட்டு வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்ட சியாமளா தொழிற்சாலையில் வேலை செய்வதால்தான் குடும்பமே ஓடுகிறது. இந்த நிலையில் பேச தனக்கு என்ன அருகதை?

    “சதீஷ்தானேதான், நாம்ப ரெண்டுபேரும்
    கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?’ன்னு கேட்டாருப்பா,”

    அவருடைய அனுமதியை வேண்டி நின்ற மகளைப் பார்த்து மெல்லச்சிரித்தார் சுப்பையா. “ஒனக்குச் சரின்னு பட்டா, சரிதான்!” சதீஷ் அவர்கள் வீட்டுக்கு வந்தபோதே இப்படி ஓர் எண்ணம் அவனுக்குள் இருக்கும் என்று அவர் பயந்திருந்தது நிஜமாகப் போயிற்றே!

    பங்களா தேஷிகளுக்கே உரிய கவர்ச்சியான கண்களும், நீண்ட மூக்கும் எவரையும் கவர்ந்துவிடும்.

    அத்துடன், அவனுடைய கடுமையான உழைப்பும், சேமிக்கும்திறனும்!  இதைவிட அருமையான துணை சியாமளாவுக்குக் கிடைக்க முடியாது என்பதென்னவோ உண்மை என்று ஒரு சிறுகசப்புடன் ஒத்துக்கொண்டார் சுப்பையா.

    ஆனால், இருவருக்குமிடைய ஒரு பெரிய வித்தியாசம் இருந்ததே! இருபத்தெட்டுவயது இளைஞன் சதீஷ். சியாமளாவோ இருபத்தெட்டு வயதாகியும், பல வரன்கள்பெண்பார்க்க வந்துவிட்டு, `பெண் கறுப்பு!’ என்று தட்டிக்கழிக்கப் பார்த்து, பின் சற்றுஇறங்கிவந்து, எவ்வளவு பவுன் நகை போடுவீங்க?’ என்று பெரிய மனது பண்ணிப் பேரம்பேசிவிட்டு, வியாபாரம்’ படியாததால் ஒதுங்கிப் போனதன் பலனாக,உள்ளுக்குள்ளேயே மறுகிக்கொண்டிருப்பவள். பிறர் அவளை நிராகரித்துவிட்டுப் போகும் ஒவ்வொரு
    முறையும், தன் ஏமாற்றத்தைமறைத்துக்கொண்டு, `வயசான காலத்திலே ஒங்களுக்குத் துணையாதான் இருந்துட்டுப் போறேனேப்பா!’ என்று சமாதானப்படுத்துவாள் சியாமளா.

     `இவ்வளவுபேசிட்டு, கட்டிக்கிட்டதும், குடிப்பான். அடிப்பான். நான் சம்பாதிக்கிறதையும்பிடுங்கிப்பான். அதான் அன்னாடம் பாக்கறேனே அந்தக் கண்ராவியை! மூஞ்சியெல்லாம் ரத்தக்காயமா வர்றாளுங்க ஒவ்வொருத்தியும்! நான் சுதந்தரமாஇருந்துட்டுப்போறேனே!’

    வெளியில் வீறாப்பாகப் பேசினாலும், பழைய தோழிகளைஅவர்கள்பிள்ளைகுட்டிகளுடன் பார்க்கும்போது, அவள் மனம் பொருமத்தான் செய்தது. இப்போது அவளையும் ஒருவன் மணக்க விரும்பி, வேண்டுகிறான்! பெருமையாக உணர்ந்தாள்.

    “அப்பா! கல்யாணத்துக்கு அப்புறம் அவரும் நம்பகூட இங்கதான் வந்துதங்கப்போறாரு. ஒங்களைவிட்டு எங்கேயும் வரமாட்டேன்னு கண்டிசனாசொல்லிட்டேன்ல!”

    தன் நன்றியை ஒரு புன்முறுவல் மூலம் வெளிப்படுத்தினார் சுப்பையா.

    “சாயந்திரம் ஸ்டூடியோவுக்குப் போய், நான் ஒரு போட்டோ எடுத்துக்கணும். அவரோட அம்மாவுக்கு அனுப்ப!”

    சுப்பையாவின் முகத்தில்படர்ந்த கலவரத்தைப் பார்த்துச் சியாமளாசிரித்தாள். நம்ம தமிழாளுங்க மாதிரி நினைச்சுட்டீங்களா இவரையும்? அழகு, கலர், அந்தஸ்து- இப்படிஎதிலேயாவது குறை கண்டுபிடிச்சு, மத்தவங்களைக் கேவலமா பேசறதாலேயேஅவங்க என்னமோ ஒரு படி ஒசந்து இருக்கிறதா நினைக்கிற  சின்னப் புத் சதீஷூக்குக்கிடையாது!”

    சுப்பையாவின் சந்தேகம் முழுவதாக மாறவில்லை என்பதை அவருடைய கவலைதோய்ந்த முகமே காட்டிக்கொடுக்க, சியாமளா மேலும் சொன்னாள்: “நான் ஏன்இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கேன்னு எல்லாத்தையும் அவர்கிட்டேசொல்லிட்டேன். அவர் சொல்றாரு, ஒன்னோட நிஜ அழகு புரியாம ஒதுக்கிட்டுப்போனவங்க அடிமுட்டாளுங்க!’ அப்படின்னு சொல்றாருப்பா சதீஷ்!”

    வார்த்தைக்குவார்த்தை அவன் பெயரை உச்சரிப்பதிலேயே ஆனந்தம் காணும் மகளின் உற்சாகத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்க விரும்ப
    வில்லை சுப்பையா. `அவன் நிரந்தரமாக இந்த மலேசிய மண்ணில் கால் பதித்து இருக்கமுடியுமோ?’என்றுஆரம்பத்தில் எழுந்த உறுத்தல்கூட, `இந்த ஒலகத்திலே எதுதான் நிரந்தரம்!’ என்ற வேதாந்தத்தில் மறைந்தது.

    மாலையும் கழுத்துமாக சதீஷின் பக்கத்தில் அமர்ந்திருந்த சியாமளா மகிழ்ச்சியின் எல்லையிலிருந்தாள். ’இவனுங்களை எல்லாம் நம்பவே கூடாது. கையிலே பிள்ளையைக் குடுத்துட்டுஓடிடுவான்!’ என்று தோழிகள் எச்சரிக்கை செய்ததைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது எத்தனை நல்லதாகப் போயிற்று!

    அவன் மனத்துள் இருக்கும் அன்பு பிறர் கண்ணுக்குத் தெரியவில்லை. ஏழை, அயல்நாட்டுக்காரன், அதிலும் அழகன் என்பதில்
    விளைந்த அலட்சியம், பொறாமை!

    தன்னைப்பற்றி தரக்குறைவாகப் பேசியவர்களைப் பொய்யர்களாக்கிவிட்டு, இப்போது தாலிகட்டி, மனைவியாக ஏற்றுக்கொண்டிருக்கிறான்!

    மாதங்கள் நிமிடங்களாகிப் பறக்க, தன்னைவிட பாக்கியசாலி எவருமில்லை

    என்றுஎண்ணி எண்ணி சியாமளா இறுமாந்துபோனாள். மேலே போனால், கீழே விழவும்கூடும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

    `வேலைக்கு வந்த மலேசிய நாட்டில், இந்நாட்டுப் பெண்களைத்  திருமணம்புரிந்துகொள்ளக் கூடாது என்ற விதியை மீறிய அந்நிய நாட்டுத் தொழிலாளிகள் நாடுகடத்தப்படுவார்கள்!’ புதிய சட்டமொன்று அமுலுக்கு வர, சதீஷின்

    குறும்புப்பேச்சும், பெரிய கண்களின் மின்னல் வெட்டும் போன இடம் தெரியவில்லை. சியாமளாவுக்கோ, `இனி என்ன?’ என்ற கேள்வி மட்டும் விஸ்வரூபம் எடுத்து பயங்கரமாகத் தெரிந்தது. இப்படி அகாலமாக முடிவதற்காஅவ்வளவு இன்பம் நிறைந்த மணவாழ்வு கிட்டியது?

    அடுத்த பத்து நாட்கள் நகர முடியாது நகர்ந்தன. வீட்டில்
    அசாதாரண மௌனம் நிலவியது. அடுத்த அறிக்கை, `உள்நாட்டுப் பெண்களை மணந்தவர்கள் அவ்வப்போது குறுகியவருகை மேற்கொண்டு, தம் மனைவி மக்களை பார்த்துப் போகலாம்!’ என்று சிறிதுகருணையுடன் வெளிவந்தது.

    “சதீஷ்! நீங்க திரும்பிப்போக விடமாட்டேன்!“ கணவனைக் கட்டிக்கொண்டு கதறினாள்சியாமளா. தன்னை மணந்த செயல் ஒரு குற்றமா? அதற்குத் தண்டனைபோல் மீண்டும் பிறந்த நாட்டில் ஏழ்மையிலேயே உழல, திருப்பி அனுப்பி வைக்கப்படுவார் என்ற நினைவே அவளை வாட்டியது.

    தன் உடலைச் சுற்றியிருந்த அவளுடைய கரங்களை மெல்ல விலக்கினான் சதீஷ். “நான் திரும்பிப் போனா, அங்கே என்ன இருக்கு?

    எவ்வளவு படிச்சிருந்தாதான் என்ன! பசி, பட்டினிதான்! அங்கே நல்ல வேலை கிடைச்சிருந்தா, இங்கே எதுக்கு வந்துதொலைச்சிருக்கப் போறேன்!”

    சியாமளா அவன் முகத்தையே பார்த்தாள். என்ன சொல்ல வருகிறான்?

    “நல்லவேளை, நம்ப கல்யாணம் கோயில்ல நடந்திச்சு.
    இன்னும் பதிவு செய்யலே!”

    அவள் திடுக்கிட்டாள். கல்யாணமே நடக்கவில்லை என்றுசாதிக்கப்போகிறானா?அதற்காகத்தான் அவள் எவ்வளவோ வற்புறுத்தியும்,
    அவளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லையோ?

    சியாமளாவின் முகம்போன போக்கைக் கவனிக்கும் மனநிலையில் இருக்கவில்லை அவன். அது தன்னுடைய வாழ்க்கைப்பிரச்னை மட்டுமே
    என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தான்.

    “நாங்க ஏழைதான்! அதுக்காக, `வந்த இடத்திலே சன்னியாசிமாதிரி இருங்க!’அப்படின்னா முடியுமா? ஒன்னைப் பிடிச்சுத்தான் கல்யாணம் செய்துக்கிட்டேன்,சியாமளா. ஆனா, என் சுயநலத்துக்காக மத்தவங்க கஷ்டப்படணுமா?” “என்னசொல்றீங்க?” ஈனஸ்வரத்தில் கேட்டாள் சியாமளா

    “நான் சம்பாதிச்சு அனுப்பற பணத்தாலேதான் எங்கப்பா,
    அம்மா, தங்கச்சிங்க எல்லாரும் நல்லாச் சாப்பிடறாங்க. தம்பிங்களும் பள்ளிக்கூடத்துக்குப் போக முடியுது.

    நான் திரும்பிப்போறதா இல்லே!”சியாமளாவுக்குச் சற்றுத்தெம்பு பிறந்தது. வந்த வேகத்திலேயே அதுதொலைந்தது, அடுத்து அவன் கூறியதைக் கேட்டு.“நாம்ப ஒண்ணா
    இருந்தா, ஏதாவது தகறாறு வரும். அதனால வேற
    வேலைதேடிக்கிட்டேன். வேற ஊரிலே!”அவன் தன்னை விட்டுப் போகப்போகிறான்!

    அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாது, அவளுடைய வாய் பிளந்தது. மூச்சுக் கன வேகமாக, இரைப்பதுபோல் வெளிவந்தது.

    முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். “நான் என்ன செய்யறது! எனக்கு வேறவழி தெரியலே!”
    மன்னிப்பு வேண்டும் தொனி.

    சதீஷ் சற்றும் எதிர்பாராத ஒரு காரியத்தைச் செய்தாள்
    சியாமளா. அவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.“என்னையும் ஒரு பொண்ணா மதிச்சு ஏத்துக்கிட்டீங்களே, அதுவே போதும்  நன்றின்னு வாய்வார்த்தையா சொன்னா நல்லாயிருக்காது.

    அப்பா மொதல்லேயே சந்தேகப்பட்டாரு, இந்த ஒறவு நிலைக்க முடியுமான்னு.

    ஆனா, கல்யாணம், கணவன்,குடும்பம் எல்லாம் வேணும்கிற வெறிதான் அப்போ இருந்திச்சு எனக்கு. இப்போ..!”மேலே பேசத் தெரியாது விக்கினாள்.

    குற்ற உணர்வும், வேதனையும் உலுக்க, “சியாமா!” என்று அவளை நெருங்கினான் சதீஷ்.

    சரேலென விலகிக்கொண்டாள். “சொல்ல இன்னும் என்ன இருக்கு! என் வேதனையை அதிகப்படுத்தாதீங்க. ப்ளீஸ்! இப்பவே இந்த வீட்டைவிட்டு போயிடுங்க! இனிமே வராதீங்க!” பெரிதாக அழ ஆரம்பித்தாள் சியாமளா.

    அவள் கெஞ்சுவாள், இல்லை ஆத்திரப்படுவாள் என்றெல்லாம் எதிர்பார்த்து எல்லாவற்றிற்கும் விடை தேடி வைத்திருந்தவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. தலைகுனிந்த
    நிலையில், தனது சொற்ப உடைமைகளைத் திரட்ட ஆரம்பித்தான்.

     

     

    Share
  • அம்மாபிள்ளை

    நிர்மலா ராகவன்

     

    பூங்கோதையின் அருகே சிறியதொரு மரக்கட்டிலில் கண்ணை மூடிப் படுத்திருந்தது அவனது முதல் சிசு.

    `அது இனி கண்ணைத் திறந்தாலும் ஒன்றுதான், மூடினாலும் ஒன்றுதான்!’ என்று நினைக்கும் போதே ஏதோ நெஞ்சை அடைத்துக்கொண்டது.

    “ஒங்களுக்கு நான் என்ன கொறை வெச்சேன்? இப்படிப் பண்ணிட்டீங்களே!” யாராவது ஏதாவது கேட்டால், ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசும் பூங்கோதை அன்றுதான் முதன்முதலாக அவ்வளவு ஆக்ரோஷத்துடன், சுயமாகப் பேசினாள். அதுவும் கணவனிடமே!

    அவளுக்கு விடையளிக்கும் திறனின்றி, தங்கராசு தலைகுனிந்த படி, ஆஸ்பத்திரி அறையை விட்டு வெளியேறினான்.

    அறைக்கு வெளியே நின்றிருந்த கோமளம் கண்ணில் வேதனையுடன் வெளிநடந்த மகனைப் பார்த்தாள்.

    `ஒன்னை எவ்வளவு ஒசத்தியா நினைச்சிருந்தேன்! சீ!’ அவள் மனதில் நினைத்தது அவனுக்குக் கேட்டது.

    மனைவி இருக்கையிலேயே கேடுகெட்ட  பெண்களை தேடிப் போயிருக்கிறான்!

    பத்து வயதுவரை தன் மடியிலேயே வைத்துக் கொஞ்சிய மகன்!

    “ஒங்கப்பா மாதிரி நீயும் என்னை விட்டுட்டுப் போயிடாதே, தங்கம்!” சிறுவயதில் அம்மா ஓயாது அரற்றியது அவனுக்குப் புரியத்தான் இல்லை. அப்பா அவர்களுடன் தானே இருந்தார்?

    குழப்பத்தினூடே, தனக்கு ஒவ்வொன்றையும் பார்த்துச் செய்யும் அம்மாவின் மேல் பரிதாபம் உண்டாயிற்று. அவளுடைய கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டான்.

    எல்லாரும் கடவுளுக்குப் படையல் செய்தால், அம்மாவுக்கு அவன் தான் தெய்வம். அவள் எது சமைத்தாலும், அவன் சாப்பிட்டுப் பார்த்ததும், `பிடிச்சிருக்கா தங்கம்?’ என்று பல முறை கேட்டு, தன் சம்மதத்தைக் காட்ட அவன் தலையாட்டினால் தான் இன்னொரு முறை அதைச் செய்வாள்.

    ஒரு முறை, ஏதோ நூதனமான உணவுப் பண்டத்தைத் தயாரித்து, அதை இவன், `நல்லாவே யில்லையே!’ என்று சொல்லிவிட, அவள் துடித்ததைப் பார்த்து, இனி அம்மா மனம் நோக எதையும் சொல்லக்கூடாது என்று நிச்சயித்துக் கொண்டான்.

    அன்றையிலிருந்து, எது சொல்வதற்கு முன்பும், `நான் இப்படிச் சொன்னால், அம்மா எப்படி எடுத்துக்கொள்வாள்?’  என்று யோசித்துப் பேச ஆரம்பித்தான். அதனால் பேசுவதே அபூர்வமாகிப் போயிற்று.

    தட்டில் அம்மா என்ன போட்டாலும், எவ்வளவு போட்டாலும், சாப்பிட்டான். `குண்டு’ என்று சகமாணவர்கள் கேலி செய்தபோது, `எங்கம்மாவுக்கு நான் இப்படி இருந்தாத்தான் பிடிக்கும்!’ என்று மறுமொழி அளிப்பான், வீம்பாக.

    அதிசயமாக ஒருமுறை, “எங்க ஸ்கூல்ல எல்லாரையும் உல்லாசப் பயணம் கூட்டிட்டுப் போறாங்கம்மா. நாலு நாள்! நானும் போறேனே!” என்று அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொஞ்சியபோது, “என்னைத் தனியா விட்டுட்டுப் போக ஒனக்கு அவ்வளவு ஆசையா, தங்கம்?” என்று அழுகைக்குரலில் கேட்ட கோமளம், அன்று பூராவும் எதுவும் பேசாது, எதையோ பறிகொடுத்ததுபோல வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

    மறுநாள் எல்லா மணவர்களும் பெயரைப் பதிவு செய்யும்போது, “ஏன் தங்கராசு, நீ வரலே?” என்று அதிசயப்பட்டுக் கேட்டாள் ஆசிரியை.

    “அவன் அவங்கம்மாவை விட்டு எங்கேயும் வரமாட்டான், டீச்சர்!” யாரோ ஒருவன் துடுக்காகச் சொல்ல, எல்லாரும் சிரித்தார்கள்.

    இந்த மாதிரி ரௌடிகளுடன் ஊர் சுற்றுவதற்கு, வீட்டு வாசலில் தனக்கென்று அம்மா வாங்கிப் போட்டிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து பொழுதைக் கழிக்கலாம்!

    இவன் ஒதுங்க ஒதுங்க, மற்ற பையன்களின் தொல்லை அதிகமாயிற்று. போதாத குறைக்கு, இப்போதெல்லாம் அப்பாவும் சேர்ந்துகொண்டார்.

    தானுண்டு, தன் நண்பர்கள் உண்டு என்றிருந்தவருக்கு அப்போது தான் தனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்ற பிரக்ஞையே வந்திருந்தது.

    “இந்தா! அவனை அவன் வயசுப் பசங்களோட பழக விடு. இப்படி, வீட்டிலேயே பிடிச்சு வெச்சுக்கிட்டு!” பொங்கிய ஆத்திரத்தில் பல்லைக் கடித்துக்கொள்ள, முணு முணுப்பாக வந்தது குரல்.

    அதுவே பொறுக்கவில்லை கோமளத்திற்கு. “எல்லாம் எனக்குத் தெரியும். வீட்டிலேயே தங்காம, கூட்டாளிங்களோடேயே பொழுதைக் கழிக்க.., ஒங்கொருத்தரைப்போல, என் மகன் ஒண்ணும் சூதாடியோ, குடிகாரனோ இல்லே!”

    சூதாட்டம் தந்த போதையில், `இதைவிட வேறு சுகமில்லை!’ என்று தோன்றிப் போயிருந்தது அவருக்கு. திருமணமாகிய சில வருடங்களிலேயே, மனைவியை நாடுவதில் நாட்டம் அறவே போயிற்று. அதனாலேயே அவளுடைய ஏளனத்துக்கும், வெறுப்புக்கும் தான் பாத்திரமாகியிருந்தது அவருக்குத் தெரிந்துதான் இருந்தது.

    இப்போது தான் அதிகம் பேசினால், தன் குறையை உரக்க விமர்சித்து விடுவாளோ என்ற பயம் எழ, வாய் அடைத்துப் போயிற்று. `அம்மாவும், பிள்ளையும் எப்படியோ தொலையட்டும்!’ என்று கைகழுவிவிட்டார்.

    மகனையொத்த இளைஞர்கள் காதல், கீதல் என்று அலைந்து, தான்தோன்றித்தனமாக எவளையோ கல்யாணம் செய்துகொண்டு பெற்றோரைப் புறக்கணித்து விட்டுப் போவதைப் பார்க்கையில், கோமளத்திற்கு அவனைப் பற்றி அபாரப் பெருமை எழும்.

    `எங்க தங்கத்தைப்போல உண்டா! படிச்சான், வேலையில சேர்ந்தான். `இந்தாங்கம்மா,’ன்னு அப்படியே சம்பளப் பணத்தை என் கையில குடுத்துடறான். ஒரு சிகரெட்டு பிடிச்சிருப்பானா, இன்னி வரைக்கும்!’ எதிரில் யாரும் இல்லாவிட்டாலும் கூட  தானே மகன் பெருமையைப் பேசிக் கொண்டிருப்பாள், சலிக்காது.

    தங்கராசு நிச்சலனமாக இருந்தான். அம்மா சொன்னால் மகன் முடி வெட்டிக்கொள்ளப் போனான். எந்தக் கடையில் எப்படிப் பேரம் பேசி சாமான் வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் உபதேசம் நடக்கும்.

    அம்மா இல்லாத ஒரு உலகத்தைக் கற்பனை செய்யக்கூட தங்கராசுவுக்குப் பயமாக இருந்தது. அம்மாவே பார்த்து முடித்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினான், அசட்டுச்சிரிப்போடு.

    அவனுக்குத் தெரியாது, பலரும் கோமளத்திடம், `ஒனக்கு வயசாகலே ஒரு மருமக வந்தா ஒனக்கு நல்லதுதானே?’ என்று கேட்டதன் விளைவு அது என்று.

    மகனுடைய அன்புக்காக மருமகளுடன் போட்டி போட வேண்டியிருக்குமே என்று முதலில் பயந்த கோமளம், மிகவும் சாதாரணமான ஒருத்தியைத் தேர்ந்தெடுத்தாள்.

    பூங்கோதை அம்மா மாதிரியே தெரிந்தாள்  தங்கராசுவுக்கு.

    முரட்டுத்தனமாகப் பேசியோ, நடந்தோ அவளை நோகடிக்கக்கூடாது என்று தோன்றிப்போயிற்று. ‘வேறொரு பெண்ணை — என்னதான் அவள் மனைவியாக இருந்தாலும் — நான் நாடினால், அம்மாவுக்கு வருத்தமாக இருக்காது? என்ற குழப்பம் வேறு எழுந்தது.

    கல்யாணமாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் தன்னிடம் ஏதோ குறை இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. ஏதோ வேகத்தில், உடன் வேலை செய்யும் ராமுவிடம் சொல்ல, மன்மதக்கலையைத் தொழிலாகக் கொண்டிருந்த பெண்களின் அறிமுகம் கிடைத்தது. அந்த அனுபவம் அளித்த வேகத்தில் மனைவிக்குக் கணவனாக இயங்க முடிந்தது.

    தான் தகப்பனாகப் போகிறோம்! தங்கராசுவுக்குள் ஒரு நிறைவு. முதன்முறையாக, அம்மா சொல்லிக் கொடுக்காமல் ஒரு காரியத்தைச் செய்திருக்கிறோம்!ஆனால், அந்தப் பெருமையும், பூரிப்பும் நிலைக்கவில்லை.

    “குழந்தைக்குப் பிறவியிலேயே பார்வையில்லை. கருவிலேயே காம நோயால் பாதிக்கப்பட்டு..,” என்று டாக்டர் கூறிக்கொண்டே போனபோது, தங்கராசுவுக்கு ஒன்றுதான் புரிந்தது. தன்னால் எதையுமே உருப்படியாகச் செய்ய முடியாது.

    “எனக்கு ஒண்ணுமே தெரியாதும்மா. ராமுதான் சொல்லிக்குடுத்தான்!” என்று சிறுபிள்ளையாகவே ஆகி, பயத்தில் திக்கியபடி அவன் கூறியபோது, கோமளத்தின் இதழ்களில் ஒரு சிறு புன்னகை.

    மகனைப் பிறரிடம் இழந்து, தனிமைக்கு ஆளாகி விடுவோமோ என்ற பயம் இனி கிடையாது. அவன் என்றும் அவள் குழந்தை தான்!

    Share
  • தாந்தித்தாத்தாவும்…

    நிர்மலா ராகவன்

    தாந்தித்தாத்தாவும், பொன்னுசாமி கங்காணியும்

    தந்தையின் பக்கத்தில் அமர்ந்து, கடந்த முக்கால் மணி நேரமாகப் பஸ்ஸில் பிரயாணம் செய்துகொண்டிருந்த புலியம்மாவின் உள்ளத்தில் ஒரே சமயத்தில் பயமும், குதூகலமும் நிரம்பி இருந்தன.

    ஆறு வருடங்களாகத் தமிழில் பயின்றுவிட்டு, இப்போது மலாய்ப் பள்ளியில் — முற்றிலும் புதியதொரு சூழ்நிலையில் — படிக்கவேண்டுமென்ற பயம். தங்கள் தோட்டப்புறத்திலேயே முதன்முறையாக இவ்வளவு சிறப்பான தேர்ச்சி பெற்று, உயர்கல்வி கற்க ஆயத்தமென, இந்தப் பள்ளியில் சேரப் போகும் களிப்பு.

    ‘கேவலம், பெண்ணாய்ப் பிறந்தவளுக்கு இவ்வளவு செலவழிச்சாவது படிப்பு அவசியந்தானா! ஆனாலும் ஒங்க மகளுக்கு ரொம்பத்தான் இடங்கொடுத்து வளக்கறீங்க!’ பொறாமை மேலிட, அண்டை அயலார் அவநம்பிக்கை ஊட்டிப்பார்த்தபோது, பொன்னுசாமி கங்காணி அயரவில்லை.

    ‘பெண்களை மதிக்கறவன்தான் தெய்வம் ஆகிறான்,’ என்று நிதானமாக மகாத்மா காந்தியின் போதனையை எடுத்துக்கூறினார்.

    காந்தி மகான்தான் அவருடைய தெய்வம். அவர்கள் வீட்டில் மூஞ்சூறுமேல் அமர்ந்த பிள்ளையார், யானைகளுடன் கஜலட்சுமி ஆகிய கடவுள் படங்களுடன், வேட்டி மட்டும் அணிந்து, தரையில் காலை மடக்கி, சர்க்காவில் நூல் நூற்கும் காந்தியின் படமும் மாட்டி இருந்தார்.

    அதைப்பற்றிக் கேலியாக விசாரிப்பவர்களிடம், ‘சாமி கண்ணுக்குத் தெரியுமான்னு நாத்திகம் பேசறாதாலதான் இன்னிக்கு இளவட்டங்க தறிகெட்டுப்போறாங்க. ஒத்தையாளா வெள்ளைக்காரனைத் துரத்தி அடிச்சிருக்காரே, நம்ப காந்தி! இது சாமான்யமான மனுசன் செய்யற வேலையா? எவன் ஒருத்தன் சுயநலமில்லாம இருக்கானோ, அவன்தான் சாமி!” என்று, அன்பே சிவம் கமலஹாசன் பாணியில் பேசி, அவர்கள் வாயை அடைத்துவிடுவார்.

    பிறரது கேலிக்கெல்லாம் மசியாது, தனது கொள்கைகளில் பிடிவாதமாக, உண்மையே பேசி, வெற்றியும் பெற்றிருக்கிறாரே அம்மகான்! அப்பாவுக்குப் பிடித்த காந்திபோலத் தானும் நடக்கவேண்டும் என்று புலியம்மா உறுதி செய்துகொண்டாள்.

    ஆனால், அப்பா செய்தது எல்லாமே அவளுக்குப் பிடிக்கும் என்பதில்லை. முக்கியமாக, அவளுடைய பெயர்.

    “ஏம்பா எனக்கு இந்தப் பேரு வெச்சீங்க? எல்லாரும் கேலி செய்யறாங்க!” பத்து வயதாயிருக்கும்போது தந்தையிடம் செல்லமாகச் சிணுங்கினாள்.

    மகள் தன்னைத் தட்டிக்கேட்பதாவது என்று அவர் ஆத்திரப்படவில்லை. அவர்தான் அகிம்சாவாதி ஆயிற்றே!

    “எல்லாம் காரணமாத்தான். தனக்கு எல்லாம் தெரியும்னு அலட்டிக்கிற மனுசன் புலியைப் பாத்துப் பயப்படறான், ஓடி ஒளிஞ்சுக்கறான்!” அந்த நினைவிலேயே அவர் சிரித்தார்.

    அவளுக்கு அந்த விளக்கம் பிடிபடவில்லை. “எங்கிட்ட ஏம்பா மத்தவங்க பயப்படணும்?”
    “அப்படி இல்ல. நீ எதுக்கும் பயப்படக்கூடாது, கண்ணு. இது ஆம்பளைங்க ஒலகம்! பொண்ணுங்கன்னா மட்டம். அதான் அன்னாடம் பாக்கறியே! நம்ப லயத்திலேயே, கண்ணுமண்ணு தெரியாம தண்ணி போட்டுட்டு, அவனவன் பெண்டாட்டியை மாட்டை அடிக்கறமாதிரி அடிக்கிறான். ம்! இவனெல்லாம் ஆம்பளை!” என்று எள்ளியவர், “அந்த மகானைப் பாரு! துப்பாக்கியும், பீரங்கியுமா வெச்சு வெள்ளைக்காரனை விரட்டினாரு? அகிம்சாவாதத்திலேயே தாய்தாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக்குடுத்தாரு!” என்ன பேச ஆரம்பித்தாலும், அதைக் காந்தியில்தான் கொண்டு முடிப்பார் பொன்னுசாமி கங்காணி.

    அவருடைய மனைவி பதைத்துப்போய் உள்ளேயிருந்து வருவாள். “யாருகிட்ட எதைச் சொல்றதுன்னு கிடையாது? அது சின்னப்பிள்ளை!” என்று மகளுக்குப் பரிவாள்.

    அவளிடம் நேராகப் பதிலளிக்காது, புலியம்மாவிடம் கூறுவார் அவர்: “நான் எதுக்குச் சொல்றேன், நீ என்னைமாதிரி தற்குறியா நின்னுடப்படாது. பெரிய படிப்புப் படிச்சு, நல்லா வரணும். நடுவிலே யாராவது வயத்தெரிச்சல்பட்டு ஒன்னை வெரட்டினா, நீ பயந்து ஒதுங்கலாமா? புலிமாதிரி எதிர்த்துச் சண்டை போடணும், என்ன?”

    புலியம்மாவுக்கு அவருடைய அடிப்படைக் கொள்கையிலேயே சந்தேகம் பிறந்தது. “ஏம்பா? சண்டை போட்டா, அது அகிம்சையா?”

    “சண்டைன்னா, வெட்டறதும், குத்தறதும் மட்டுமில்ல. கொள்கைக்காக போராடறதும்மா. துப்பாக்கியா பிடிச்சிருந்தாரு காந்தி?”

    இவ்வளவு தெரிந்துவைத்திருந்த அப்பாவுக்கு ஏன் தன்னை முதலிலேயே ஒரு மலாய்ப் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்று தோன்றாமல் போயிற்று? பயத்தால் உறைந்திருந்த அந்த வேளையில் புலியம்மாவுக்கு இந்தச் சந்தேகம் உதித்தது.

    அவள் எந்தக் கேள்வி கேட்டாலும், அப்பா நிதானமாகப் பதில் சொல்வார். எங்கேயோ இருந்திருக்கவேண்டியவர், பாவம்! அதிகக் கல்வி இல்லாததால், வாழ்க்கையில் முன்னேற முடியவில்லையாம். தானே அடிக்கடி அவளிடம் சொல்லி இருக்கிறார். அதனால்தான் மகளாவது உயரவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.

    “அப்பா!” புலியம்மா தயங்கினாள்.

    “என்னம்மா? எதுவானாலும் கேளு. ஒனக்கில்லாததா!”

    “எனக்கு ஒண்ணும் வேணாம்பா. என்னை… ஏம்பா தமிழ் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினீங்க?” எப்படியோ துணிச்சலை வரவழைத்துக்கொண்டு கேட்டுவிட்டாள்.
    கங்காணியின் முகம் வாடிப்போயிற்று. “என்னம்மா இப்படிக் கேட்டுட்டே?” என்றார் ஆழ்ந்த வருத்தத்துடன். “தாய்மொழிங்கறது பெத்த தாய்மாதிரி. கருவிலேயே நம்பளோட மூளையில பதிஞ்சது. வயத்துப்பிழைப்புக்காக நம்ப கலாசாரத்தைத் தலைமுழுகிட முடியுமா? சாப்பிட்டோம், தூங்கினோம்னு இருந்தா, அப்புறம் நமக்கும், மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்? நம்பளையே நாம்ப மதிக்கவேணாம்?”
    தான் தமிழச்சி என்ற பெருமை புலியம்மாவுக்குப் பிறந்தது அப்போதுதான். புதுப்பள்ளியிலோ, நூற்றுக்கு ஒருவர்கூட தமிழர் கிடையாதாம். மூன்று மாடிகளைக்கொண்ட பெரிய பெரிய கட்டிடங்கள் அமைந்த விசாலமான வளாகத்துக்குள் நுழைந்தபோது கால்கள் பின்னுக்கு இழுத்தன.

    அப்பாவுக்குப் புரிந்திருக்கவேண்டும். அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தார். ‘நீ எதுக்கும் பயப்படக் கூடாதுன்னுதானே ஒன் பேரிலேயே வீரத்தை வெச்சிருக்கேன்?’ என்று சொல்வதுபோலிருந்தது. அச்சிரிப்பில் எல்லாம் மறந்து போயிற்று அவளுக்கு.

    “அதோ பாருங்கப்பா. தமிழ் டீச்சர்!” என்று உற்சாகமாகக் கையை நீட்டிக் காட்டினாள்.
    புடவையும், பொட்டுமாக இருந்த அந்த “தமிழ் டீச்சர்” தன் வகுப்புக்கு வரமாட்டாள் என்று அதன்பின் அறிந்ததில் ஒரு சிறிய ஏமாற்றம் எழுந்தது. அதனால் என்ன? தானே போய் அறிமுகம் செய்துகொள்ள வழியா இல்லை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள் புலியம்மா.

    “ஒங்க பையைத் தூக்கிட்டு வரட்டுமா, டீச்சர்?”

    அந்தத் தமிழ்க் குரல் வித்தியாசமாகக் கேட்டிருக்க வேண்டும். டீச்சர் சட்டெனத் திரும்பினாள். எதுவும் பேசாது, தன் கையிலிருந்த பிரம்புப் பையை எதிரில் அகன்ற விழிகளுடன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் கொடுத்தாள்.

    பை சற்றுக் கனம்தான். ஆனால், சிவபெருமானிடமிருந்து மாங்கனியைப் பெற்றுக்கொண்ட பிள்ளையார்மாதிரி அச்சிறுமிக்குப் பூரிப்பு ஏற்பட்டது. அதனை அடக்க வழி தெரியாது, பல் தெரிய புன்னகைத்தபடி, டீச்சரின் சிவப்புப் புடவையையும், அதற்குப் பொருத்தமாக, கவனத்துடன் தேர்ந்தெடுத்திருந்த சிவப்புக் காலணிகளையும் பார்த்தபடி, ராமனைப் பின்தொடர்ந்த சீதையாக நடந்தாள்.

    மறுநாள் காலை, இருள் பிரியுமுன்னரே பஸ் பிடித்து, டீச்சரின் வருகைக்காகக் காத்திருந்தாள் புலியம்மா. கும்பல், கும்பலாக நின்றுகொண்டு, உரக்கப்பேசி, அதிர்வேட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தவர்களுடன் சேர விரும்பாது, ஒரு போகன்வில்லா புதர் அருகே தனித்து நின்றாள்.

    டிச்சருடைய சிறிய, வெள்ளைக்கார் கேட்டுக்குள் நுழைந்தது. காதல் வசப்பட்டவருடையதைப்போல புலியம்மாவின் இருதயம் துடித்தது. ஓடாத குறையாகக் காரை நெருங்கினாள்.

    “வணக்கம் டீச்சர்!”

    டீச்சர் அவளுடைய முகமன் காதில் விழாதவளாக நடந்தாள்.

    இன்னும் உரக்கச் சொன்னாள்: “வணக்கம் டீச்சர்!”

    டீச்சர் நின்றாள். தலையை வெட்டினாற்போல் அவள்பக்கம் திரும்பி, “மெதுவாப் பேசு!” என்று அதட்டினாள். குரல் கட்டையாக இருந்தது. “இப்படிக் கத்தினா, நாலுபேர் பாத்துச் சிரிப்பாங்க!” பழக்க தோஷத்தால், அவள் குரலில் கடினமும், அதிகாரமும் கலந்திருந்தன.

    ஒரேயடியாக மிரண்டுபோன புலியம்மாவால், கையாலாகாத்தனத்துடன் தலையை அசைக்கத்தான் முடிந்தது.

    பல வினாடிகள் கழித்துத்தான் அவளுக்கு சுயநினைவு வந்தது. தன்மீது எவ்வளவு அக்கறை இருந்தால், இப்படித் தனிப்பட்ட முறையில் கண்டிப்பார்கள் என்ற நெகிழ்வு ஏற்பட்டது. தன்னைப்போலத்தானே டீச்சரும்! ஒரே இனம், ஒரே மொழி என்ற பற்றுதல் அவர்களுக்குமட்டும் இருக்காதா, என்ன!

    இப்போதெல்லாம் தானே வலியப்போய் முணுமுணுப்பாக வணக்கம் தெரிவித்துவிட்டு, உரிமையுடன் டீச்சரின் கையிலிருந்து பிரம்புப் பையைப் பிடுங்காத குறையாக வாங்கிக்கொள்ளும் அளவுக்குத் துணிச்சல் ஏற்பட்டிருந்தது புலியம்மாவுக்கு.

    “ஒன் பேரு என்ன?” அறிந்துகொள்ளும் ஆர்வமில்லை அந்தக் கட்டைக் குரலில். ஒப்புக்குக் கேட்பதுபோலிருந்தது.

    ஆனால், அதையெல்லாம் கவனிக்கத் தோன்றவில்லை மாணவிக்கு. என்னதான் சகமாணவிகளுடன் பழகினாலும், ஆசிரியை தன்னை மதித்துப் பேசுவதுபோல் ஆகுமா?

    வெண்மையான பற்கள் கறுத்த முகத்தின் பின்னணியில் மேலும் ஒளிவிட, “என் பெயர் புலியம்மா!” என்று ஒப்பிப்பதுபோல் தெரிவித்தாள். கைகள் தாமாகக் கட்டிக்கொண்டன.

    அவள் தோழிகள் ‘காக்கா’ என்று கேலியுடன் அவளைக் குறிப்பிட்டதை லட்சியம் செய்யவில்லை புலியம்மா. அவர்களுக்கு என்ன தெரியும் சேவை செய்வதன் மகத்துவம்? காந்தி சொன்னபடி..! அவள் தானே சிரித்துக்கொண்டாள். தானும் அப்பாமாதிரியே ஆகிவருகிறோமே!

    அன்றும் ஒரு கட்டு நோட்டுப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு, கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதுபோல பயபக்தியுடன் டீச்சரின் மேசைமேல் வைத்தாள் புலியம்மா. வழக்கம்போலவே, ஒரு நன்றிகூட எதிர்பார்க்காது, ஆசிரியர்களின் பொது அறையைவிட்டு வெளியே வந்தாள்.

    ஜன்னல்வழியே உள்ளே நடந்த உரையாடல் கேட்டது. “அந்தப் பொண்ணு என்ன, உனக்கு வாலா? கிட்ட வந்தாலே ஏதோ எண்ணை நாத்தம்!”

    யாரோ சிரித்தார்கள்.

    தன்னைப்பற்றித்தான் பேசுகிறார்கள்! புலியம்மாவின் கால்கள் மேலே நகர மறுத்தன.
    “சரியான கழுத்தறுப்பு. ஒரு நாளைக்கு நாலு தடவை அங்க, இங்க பாத்து, ‘குட் மார்னிங்’ சொல்லியாகணும் அதுக்கு. அன்னிக்கு என் கையைப் பிடிச்சுக்கிட்டு, ‘எங்க கிளாசுக்கு வாங்க டீச்சர்’னு முரட்டுப் பிடிவாதம் வேற!’

    ‘தமிழ் டீச்சரா’ இப்படிப் பேசுகிறார்கள்? யாரோ மென்னியைப் பிடித்து அமுக்குவதுபோல் இருந்தது புலியம்மாவுக்கு. இரு கைகளாலும் நீலநிறக் குட்டைப் பாவாடையைக் கசக்கிப் பிடித்துக்கொண்டாள்.

    கட்டைக்குரல் தன்பாட்டில் பேசிக்கொண்டிருந்தது: “அந்தப் பொண்ணு பேரு புலியம்மா. வேடிக்கையா இல்ல? காட்டில இருக்கவேண்டியதை எல்லாம் இந்தமாதிரி நல்ல பள்ளிக்கூடத்திலே விட்டா இப்படித்தான்!”

    யார்யார்மீதோ மோதிக்கொண்டு, மன்னிப்பு கேட்கும் உணர்வுகூட அற்றவளாய், வகுப்பை அடைந்தாள் அவள். ஏமாற்றத்திலும், அவமானத்திலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

    ‘அழக்கூடாது. நீ புலிமாதிரி இல்லியா!’ அப்பா மானசீகமாகப் பக்கபலம் அளித்தார். ‘காந்திகூடத்தான் சிறுமைப்பட்டிருக்கிறார். அதனால் அவர் தளர்ந்துபோனாரா, என்ன!’ என்று அவர் கூறுவதுபோலிருந்தது.

    அப்பாவுடன் டவுனுக்குப் போய், ‘காந்தி’ ஆங்கிலப்படம் பார்த்திருந்தாள். அதிகம் புரியாவிட்டாலும், ஒரு காட்சி மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டிருந்தது.

    காந்தி ஆப்பிரிக்காவில் இருந்தபோது, தாங்கள் நடக்கும் தெருவில் கறுப்பரான அவர் நடக்கக்கூடாது என்று அவர் எதிரில் வந்த இரு வெள்ளையர்கள் தகறாறு பண்ணுகிறார்கள். அவரோ, அஞ்சாமல் அவர்களைக் கடக்கிறார். பின்பு, தன் நண்பரிடம் கூறுகிறார், “சகமனிதனை அவமானப்படுத்துவதால் ஒருவனுக்கு என்ன ஆனந்தம் என்று எனக்குப் புரியத்தான் இல்லை,” என்று.

    அன்றுபூராவும் நினைத்து நினைத்து அழுகை வந்தது. அப்பாவையும், காந்தியையும் நினைத்துக்கொண்டாள். அம்மாவிடம் சொல்லவேண்டும், ‘இனிமே கடுகெண்ணை வைத்துத் தலைபின்னாதீங்கம்மா’ என்று.

    இப்போதெல்லாம் டீச்சர் புடவை அணிந்து வருவதே அபூர்வமாக இருந்தது. டீச்சருடைய காரைக் கண்டும் காணாததுபோல் நின்றாள் புலியம்மா.

    “ஏ பையா! இந்த நோட்டை எல்லாம் எடுத்திட்டு என்கூட வா!” அந்த அதிகாரக்குரல் என்னவோ பலத்துத்தான் இருந்தது. ஆனால் அது காதில் விழாததுபோல் தன்பாட்டில் நடந்துபோனான் அவள் அழைத்த மாணவன்.

    “பெரிய அதிகாரம்! சம்பளம் வாங்கலே? இந்த நோட்டுங்களைத் தூக்கிட்டு நடக்க என்ன கேடு?” அவன் தன் நண்பர்களிடம் உரக்கக் கூறியது புலியம்மாவின் காதிலும் விழாமல் போகவில்லை.

    ‘பாவம் டீச்சர்!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். தானும் ஒரு தமிழ்ப்பெண் என்பதில் டீச்சருக்குப் பெருமிதம் இருந்திருந்தால், இப்படி ஒரு அவமதிப்பு உண்டாகி இருக்குமா?

    (1996-ல், மலேசியாவில் பாரதிதாசன் இயக்கத்தின் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது)

    Share
  • கண்ணாடிமுன்

    நிர்மலா ராகவன்

    `மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க!’

    குரலில் சற்றும் கோபமில்லாமல்தான் மனைவி அந்த வார்த்தைகளைச் சொல்லியிருந்தாள். ஆனால் அதில் பொதிந்து கிடந்த ஏளனம்!

    வேண்டும். நன்றாக வேண்டும். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தமாதிரி, ஏற்கெனவே குண்டாக இருந்த மனைவியிடம் அவளுடைய உடலைப்பற்றிக் கிண்டல் செய்வானேன், இப்படி வாங்கிக் கட்டிக்கொள்வானேன்!

    அவருக்கு எல்லார்மேலேயும் கோபம் வந்தது.

    `பிறந்த நாள்’ என்று அவரைத் தூக்கிப்போகாத குறையாக வெளியே அழைத்துப்போன அந்த ஐந்து நண்பர்கள்மேல், அவர்களுடன் பார்த்த படத்தின் கதாநாயகிமேல். இன்னும்.., தன்மேலேயே.

    இந்த சிம்ரன் ஒருத்தி! எதற்காக உடலை இவ்வளவு கச்சிதமாக வைத்திருக்க வேண்டும்? அட, அழகான, ஒல்லியான உடல் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே! அதை இப்படியா வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும், இடுப்பு, தொப்புள் என்று அணு அணுவாக!

    இவரைப்போன்ற இளிச்சவாயர்கள், `ஆகா! இன்னும்கூட நமக்கு இளமையின் உத்வேகம் இருக்கிறதே!’ என்ற பூரிப்புடன் மீண்டும் மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் சேர்ந்து செய்த சதி! இல்லாவிட்டால், முக்காலே முவ்வீசம் கிழவனாகிவிட்ட தனக்கு அந்த இளம்பெண்ணைப் பார்த்து எதற்காக இத்தனை கிறக்கம் ஏற்பட வேண்டும்?

    பார்த்ததுதான் பார்த்தோமே, அப்போது உண்டான மயக்கத்தை மனசுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?

    படத்தின் பாதிப்பு குறையாமலேயே வீட்டுக்கு வந்தவருக்கு, காலைப் பரத்திக்கொண்டு, குறட்டை விட்டபடி தூங்கிக்கொண்டிருந்த மனைவியைப் பார்த்ததும் எரிச்சல் பொங்கியதில் என்ன ஆச்சரியம்?

    `சனியன்! எனக்குப்போய் இப்படி ஒண்ணு வாய்ச்சிருக்கே!’ என்று அவளை மனசுக்குள்ளேயே திட்டி, தன்மேல் பரிதாபப்பட்டுக்கொண்டார்.

    அப்போது கண்விழித்தவள், “வந்துட்டீங்களா?” என்று தூக்கக் கலக்கத்தில் கட்டைக்குரலில்கேட்டது அவரது ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.

    “வராம? தியேட்டரிலேயே படுத்துடுவாங்களா? இல்ல, இது ஒன் புருஷனோட ஆவின்னு நினைச்சுக்கிட்டியா?” என்று எரிந்து விழுந்தார்.

    அவள் எழுந்து உட்கார்ந்துகொண்டாள். “ரொம்பப் போட்டுட்டீங்களா? பேசாம படுங்க!” என்றாள், மனைவிகளுக்கே உரிய விவேகத்துடன்.

    “யாரு, யாரைடீ போட்டாங்க? புருஷனை மயக்கறமாதிரி ஒடம்பை வெச்சுக்கத் தெரியல, பெரிசா பேச வந்துட்டா!” என்று பொரிந்தவர், “சே! ஏண்டா வீட்டுக்கு வர்றோம்னு இருக்கு. வந்தா, பூரியாட்டம் ஒப்பிப்போன ஒன் மூஞ்சியைப் பாத்துத் தொலைக்க வேண்டியிருக்கு. ஹூம்! சிம்ரனைக் கட்டிக்கப்போறவன் குடுத்து வெச்சவன்!” என்று ஏகமாக உளறினார்.

    அவளுக்கு ஏதோ புரிந்தாற்போலிருந்தது. முகத்தில் மெல்லிய புன்னகை.

    அப்போதுதான் சொன்னாள், “மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க!”
    அசரீரிபோல், வேளைகெட்ட வேளையில் அவள் குரல் கேட்டவண்ணம் இருந்தது.

    காலையில் பல் துலக்கிய கையோடு பாத்ரூமில் சவரம் செய்துகொள்ளும்போது, குளித்துவிட்டுத் தலை வாரிக்கொள்ளும்போது, ஏன், காரை ஓட்டிப்போகும் வழியில் ஏதாவதொரு சிவப்பு விளக்கில் நிற்கும்போது முகத்திற்குமேல் இருந்த கண்ணாடியைத் திருப்பி … இப்படி பல கோணங்களிலும் கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்துக் கொண்டவருக்கு ஒன்று புரிந்தது.

    மனைவி சிம்ரன்மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், தானும் சினிமா கதாநாயகன்போல் இருக்கவேண்டாமோ?

    `ரஜினி எவ்வளவு இளமையா இருக்காரு, பாருங்க! அவருக்கும் ஒங்க வயசுதானாம்!’ அண்மையில், `சந்திரமுகி’ பார்த்துக்கொண்டிருந்தபோது மனைவி காதருகே குனிந்து முணுமுணுத்தது நினைவில் எழுந்தது.

    அவருக்குப் படத்தின் ஆரம்பத்திலேயே சுவாரசியம் போய்விட்டது. `இதையெல்லாம் ஒரு படம்னு பாக்கறாங்களே, அறிவு கெட்டவங்க!’ என்று தமிழ்ப்பட ரசிகர்களை ஒட்டுமொத்தமாக வைதார்.

    மனைவியை மயக்கிய அந்தக் கதாநாயகனை பொறாமையுடன் வெறித்தார்.ஒரு படத்துக்கு ஐம்பது கோடிக்குமேல் சம்பளம் வாங்குபவருக்கு ஆயிரக்கணக்கில் செலவழித்து, வழுக்கைத்தலையை மறைக்க கரிய நிறத்தில் `விக்’ வாங்க முடியும்தான். இத்தாலி நாட்டுக்குப் போய், முகத்திலும், உடம்பிலும் தொங்கும் வேண்டாத சதையை எல்லாம் அறுவைச் சிகிச்சையால் அகற்றிக்கொள்ளவும் முடியும்.

    தனக்கு அதெல்லாம் முடியுமா? கேவலம், மாதச் சம்பளக்காரன்! இந்த லட்சணத்தில், வெளிநாட்டில் படிக்கும் மகனுக்கு வேறு அவ்வப்போது தண்டம் அழ வேண்டியிருக்கிறது.

    இதெல்லாம் நண்பர்களுக்குத் தெரிகிறதா?

    “ஒனக்கென்னப்பா! ஒரே மகன்! மகா புத்திசாலி! நீங்க புருஷன், பெண்டாட்டி ரெண்டே பேர் வீட்டிலே! எப்பவும் ஹனிமூன்தான்!” என்று விகாரமாகக் கண்ணைச் சிமிட்டி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வார்கள்.

    ஹனிமூனாவது!

    அந்த வார்த்தை காதில் விழுந்தாலே, அவருக்குத் தன் கல்யாணம்தான் நினைவுக்கு வந்து பயமுறுத்தும்.

    குப்பன்.
    அதுதான் அவருடைய பெயர்.

    அவரைக் கேட்காமல், அவருக்குப் பிடிக்காத பெயராக வைத்துவிட்டார்கள். ஷ், ஹ் போன்ற வடமொழி எழுத்துக்கள் ஒன்றிரண்டு கலந்து நாகரிகமாக இல்லை தன் பெயர் என்ற பெரிய குறை அவருக்கு.

    போதாத குறைக்கு, பள்ளியில் ஷாம் என்ற மாணவன் `ஷாம்பு’ ஆக, சம்சூரி என்ற மலாய் மாணவன் `சம்சு’வாக (மட்ட ரக கள்ளைக் குறிக்கும் வார்த்தை), இவரைக் `குப்ப’ என்று அழைத்தார்கள் சகமாணவர்கள்.

    வாத்தியார்களுக்கும் புனைப்பெயர் வைத்துச் சிரித்த காலம் அது. ஆனால், தன் பெயரைச் சுருக்கி அழைத்து, பிறர் சிரிக்கும்போது, அதை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்டு சிரிக்க முடியவில்லை அவரால். அழுகைதான் வந்தது.

    வயதாக ஆக, தனக்கு வரும் மனைவிக்காவது பெயர் மிக அழகாக இருக்கவேண்டும் என்ற தீர்மானம் அவருக்குள் எழுந்தது.

    அதனால்தானே, “பொண்ணு பேரு ஜலஜாவாம்,” என்றபடி, மேலே ஏதோ சொல்லவந்த அம்மாவை இடைமறித்து, “இதையே முடிச்சுடுங்க!” என்றார் அவசரமாக?

    “நீ பாக்க வேணாம்?” என்று அம்மா அதிசயப்பட்டுக் கேட்டபோது, “பரவாயில்லே,” என்று மட்டும்தான் அவரால் சொல்ல முடிந்தது.

    ஜலஜா!
    ஆகா! எவ்வளவு அழகான பெயர்! பெயரே இவ்வளவு அழகாக இருந்தால், உருவம் எப்படி இருக்கும்! அடுத்த சில மாதங்கள் இனிமையான கற்பனையில் கழிந்தன.

    மனைவியின் பெயரிலிருந்த அழகிற்கும், உருவத்திற்கும் கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லை என்று உணர்ந்து அவர் அதிர்ந்தபோது, அவள் கழுத்தில் தாலி ஏறியிருந்தது.

    “இவ இவ்வளவு குண்டுன்னு ஏம்மா மொதல்லேயே சொல்லலே?” அம்மாவைத் தனியாகப் பார்த்தபோது அழமாட்டாக்குறையாகக் கேட்டார்.

    “நீ எங்கே சொல்லவிட்டே?” என்று பழியை அவன்மேலேயே திருப்பினாள் தாய். “இப்ப அதனால என்ன மோசம்? நளபாகமா சமைக்கிறா. நீயும் குண்டாயிட்டாப் போவுது!” என்று சமாதானப்படுத்தினாள்.

    அப்படியும் அவர் முகம் வாடியிருந்ததைப் பொறுக்காது, “எல்லாப் பொண்ணுங்களும் ஒரு பிள்ளை பெத்ததுக்கு அப்புறம் குண்டாத்தானே போயிடுவாங்க! நான் எப்படி இருந்தேன், தெரியுமா?” என்று ஆரம்பித்தாள்.

    நல்லவேளை, மனைவியின் பிரசவம் கடினமாக இருந்தது. சற்றே இளைத்தாள்.

    இருந்தாலும், ஏமாந்துவிட்ட உணர்ச்சி அவரை அலைக்கழைத்துக்கொண்டே இருந்தது. எதற்காகவாவது அவளை விரட்டுவார். அவரது போக்கால் பாதிக்கப்படாது, எருமை மாட்டின்மேல் பெய்த மழைபோல் அவள் சும்மா இருந்தது அவரை மேலும் ஆத்திரப்படுத்தியது.

    இன்றோ, பயம் சுத்தமாக விட்டுப்போய், அவரையே பழிக்கிறாள்!

    எதையோ இழந்துவிட்டது போலிருந்தது. யாருடனும் பேசப் பிடிக்காமல், பத்திரிகைகளில் வரும் தத்துவ போதனைகளைப் படிக்க ஆரம்பித்தார். அப்படியாவது நிம்மதி கிடைக்காது?

    காவி கட்டிய ஒருவர் இந்த அரிய யோசனையை அளித்திருந்தார்: மனம் உற்சாகமாக இருந்தால், உடலில் இளமை துள்ளி விளையாடும்.

    சிறிது தயக்கத்திற்குப்பின், ஹைபர் மார்க்கெட்டுக்குப் போய், மருக்கொழுந்து வாசனை அடித்த செண்ட் ஒரு குப்பி வாங்கிக்கொண்டார். கல்யாணமான புதிதில் உபயோகித்தது. அதற்குப் பிறகுதான் உல்லாசமே போய்விட்டதே!

    கணவர் அடிக்கடி கண்ணாடியில் அழகு பார்த்துக்கொள்வதையும், இப்போது செண்ட் உபயோகிப்பதையும் கண்டும் காணாததுபோல் இருந்த ஜலஜா குழம்பினாள். `நாற்பது வயதில் நாய்க்குணம்’ என்பார்களே!

    அவர் எதிர்பார்த்த அளவுக்கு அந்த செண்ட் வாசனை புத்துணர்ச்சி அளிக்கவில்லை.
    அடுத்த முறை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டபோது, உப்பும் மிளகும் கலந்தது போன்றிருந்த தலைமயிர் அவர் கண்ணை உறுத்தியது.

    `என் முடி ரஜினியுடையதைவிட எவ்வளவு அடர்த்தி!’ என்ற பெருமையும் எழாமலில்லை.

    தனக்கு எதற்கு `விக்’கும், மண்ணாங்கட்டியும்! முடி மட்டும் கொஞ்சம் கறுப்பாக இருந்ததால், இன்னும் பத்து வயது குறைவாகக் காட்டுமே!

    குளிக்கப்போனவர் ஒரு மணி நேரத்துக்குமேல் ஆகியும் வெளியே வரவில்லையே என்று பயந்த மனைவி தன் பலத்தையெல்லாம் பயன்படுத்தி கதவை உடைக்காத குறையாகத் தட்ட, அசட்டுச் சிரிப்புடன் வெளிப்பட்டார்.

    “இதென்னங்க கண்ராவி!” சிரிப்பை அடக்க முயற்சித்து, தோற்றவளாகக் கேட்டாள்.

    “அமில மழையிலே நனைச்சுட்டேன்!” என்று — வெகுவாகக் கறுத்த — தன் முடிக்கு ஒரு காரணத்தைக் கற்பித்தார்.

    தான் எதிர்பார்த்தபடி, மனைவி தன் புதிய முக அழகில் அப்படி ஒன்றும் மயங்கவில்லையே என்ற வருத்தம் அவருக்குள் எழுந்தது.

    வேறு எங்காவது கோளாறோ?

    உடல் பூராவையும் பார்த்துக்கொள்ள முழுநீளக் கண்ணாடி ஒன்றை வாங்கி மாட்டினார். அப்போதுதான் புரிந்தது மனைவியின் எகத்தாளம்.

    நம் வயிறு எப்போது, எப்படி, இப்படி — எட்டு மாதக் கர்ப்பிணிபோல் — பருத்தது?

    முடிச்சாயம் வாங்கிய அதே கடைக்குப் போய் சில மணி நேரங்களைச் செலவிட்டார். வெளியே வரும்போது அவர் கையில் இருந்த பொட்டலத்தில் ஒரு வித இடுப்புப்பட்டி இருந்தது. ஏதோ மருந்து சேர்க்கப்பட்டதாம். வயிற்றைச் சுற்றிச் சுற்றிக் கட்ட வேண்டும். எந்நேரமும் அணிய வேண்டும். சில வாரங்களுக்குள்ளேயே வித்தியாசம் புலப்படும் என்று அங்கிருந்த சீன மாது அடித்துச்சொல்ல, `இந்தப் பானை வயிற்றைக் குறைக்க நூற்றுப் பத்து ரிங்கிட் செலவழிப்பதில் தப்பொன்றும் இல்லை! என்று துணிந்து வாங்கிவிட்டார்.

    இப்போது நிமிர்ந்துதான் உட்காரவோ, நடக்கவோ முடிந்தது. நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டாலும், எந்நேரமும் வயிறு வெடிப்பதுபோல் இருந்ததால் சாப்பிடும் அளவு கணிசமா்கக் குறைந்து போயிற்று.

    `வயிறு சரியா இல்லியா?’ `சாப்பாடு நல்ல இல்லே?’ என்றெல்லாம் மனைவி ஆதுரத்துடன் கேட்டபோது, மனதுக்குள் கொக்கரித்துக்கொண்டார்: `என்னை மட்டம் தட்டினியே! இன்னும் கொஞ்ச நாளிலே பாரு!’

    கொஞ்ச நாளில் தலைசுற்றல்தான் வந்தது.

    பொறுக்க முடியாது போக, மருத்துவரிடம் போனார்.”எடையை ஒரேயடியாக் குறைக்க ஏதோ செய்யறீங்களா? அதான் ரத்த அழுத்தம் குறைஞ்சுபோய், தலை சுத்துது. சாதாரணமா, லேடீஸ்தான் இப்படிச் செய்வாங்க!” என்று அந்த மனிதர் பிட்டுப் பிட்டு வைத்து, ஒரு மாதிரியாகப் பார்க்க, மானம் போயிற்று குப்பனுக்கு.

    வீடு திரும்பியதும் முதல் வேலையாக, பெல்டைச் சுற்றி, பழைய துணிகளுக்கடியில் ஒளித்து வைத்தார். அவ்வளவு விலை கொடுத்து வாங்கியதை தூர எறியவும் மனம் இடம் கொடுக்கவில்லை.

    அன்று அவர் வேலை முடிந்து வந்தபோது, வழக்கத்துக்கு விரோதமாக மனைவி யாரிடமோ பேசிசுக்கொண்டிருந்தது கேட்க, மறைந்திருந்து கேட்டார்.

    “அவர் முந்திமாதிரி என்னைச் சீண்டறது கிடையாது. எப்பவும் ஏக்கமா, எதையோ நினைச்சுக்கிட்டு, சரியா சாப்பிடறதில்ல. வீடெல்லாம் கண்ணாடி வாங்கி மாட்டி அழகு பாத்துக்கிடறது இருக்கே! விடலைப் பசங்க தோத்தானுங்க, போ! ஏதானும் சின்ன வீடு சமாசாரமோன்னு மனசு கிடந்து அடிச்சுக்குது. இவரைவிட்டா, இத்தனை வயசுக்குமேல நான் என்னடி பண்ணுவேன்!”

    மெய்சிலிர்க்க, வந்த வழியே மீண்டும் நடந்தார் குப்பன். மனைவிக்குத் தன்மேல் அன்பு இல்லாமல் இல்லை!

    ஆணழகராக இருக்கும் ஒருவரைத் திரையில் பார்த்து ரசிக்கலாம். ஆனால், எல்லாரும் வாழ்க்கைத்துணையாக முடியுமா?

    ஏதோ உறைத்தது.

    சிம்ரனோடு மனைவியைத் தான் ஒப்பிட்டுப் பேசியது மட்டும் என்ன நியாயம்?
    அந்த பஞ்சாபி நடிகையால் அப்பள வற்றல் குழம்பும், கத்தரிக்காய் பொரியலும் ஜலஜாவின் கைமணத்தோடு ஆக்கிப்போட முடியுமா?

    வீட்டுக்குத் திரும்பியவர் கையில் பழைய தினசரியில் சுற்றப்பட்ட மல்லிகைப்பூ. ஒரு பிளாஸ்டிக் பை பிதுங்க ரசமலாய், சூர்யகலா, பால்கோவா, பாதம் ஹல்வா என்று வித விதமான இனிப்பு வகைகள்.

    “இவ்வளவு இனிப்பு சாப்பிட்டா, நான் இன்னும் குண்டாயிடுவேன்!” என்று செல்லமாய் சிணுங்கிய மனைவியை ஆசையுடன் பார்த்தார்.

    “நீ இப்படி இருந்தாத்தான் நல்லா இருக்கு. இறுகக் கட்டிக்கிட்டா, எங்கே எலும்பு நொறுங்கிடுமோன்னு பயப்பட வேண்டாம், பாரு!” என்றபடி அவளை நெருங்கினார்.

    Share
  • குட்டக் குட்டக் குனியும்போது

    நிர்மலா ராகவன்

    பத்திரிகையில் பெயர் வந்துவிட்டால், புகழ் வருகிறதோ இல்லையோ, எல்லாருக்கும் பொறாமை வருகிறது. என்னமோ பத்திரிகைக்காரர்கள் கொட்டிக் கொடுத்து, அந்த சன்மானத்தில் நாலு பங்களா வாங்கிப் போட்டுவிட்ட மாதிரிதான்! இந்த மனிதர்களை எண்ணி அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை இந்திராவுக்கு.

    இருபத்தைந்து ஆண்டுகளாக புனைப்பெயரிலேயே எழுதி தன்னை மறைத்துக் கொண்டவளின் போதாத காலம் ஏதோ போட்டியில் பரிசு கிடைத்து, புகைப்படம் மூலம் அவள் முகமும், அத்துடன் சொந்தப்பெயரும் எல்லாருக்கும் அறிமுகமாகிவிட்டது.

    பரிசு வாங்கியதில் தன்னம்பிக்கை துளிர்த்தது. துணிந்து, சமூகத்தின் குறைகளைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தபோதுதான் பிடித்தது சனி.

    இவள் பெண்களுக்குச் சமத்துவம் கேட்கப்போய், எல்லாப் பெண்களும் விழித்துக்கொண்டு, அப்புறம் நம்மையே குப்புற வீழ்த்தி விடுவார்களோ என்று பயந்தார்கள் ஆண் வாசகர்கள்.

    பயம் இருப்பவன்தான் பயங்கரமானவனாக ஆகிறான் என்று எங்கோ படித்தது இந்திராவுக்கு நினைவு வந்தது.

    அடங்கிக் கிடப்பதுதான் பெண்ணாகப் பிறந்ததன் பயன் என்றெண்ணிய பெண்களோ, `இவள் என்ன நம்மை மட்டம் தட்டுவது!’ என்று ஆத்திரம் அடைந்தார்கள்.

    யாராவது மிகுந்த பலம் அடைவதற்குள் எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று எல்லாருமே கங்கணம் கட்டிக்கொள்கிறார்கள். சிலர், வெளிப்படையாக எதுவும் செய்யத் துணிவின்றி, புகழ்வதுபோல, தந்திரமாகக் குழிபறிக்கிறார்கள்.

    எவனுக்கோ இவள் தலையெடுத்தது பிடிக்கவில்லை. இல்லாவிட்டால், நாற்பது வயதான, ஒரு பெண்ணுக்கும் தாயான இவள் பெயருக்குமுன்  `மிஸ்` போட்டு கடிதம் எழுதியிருப்பானா?

    `அது எப்படி கண்ட தடியனெல்லாம் என் பெண்டாட்டிக்கு கடுதாசி எழுதப்போச்சு!’ என்ற கோபத்தைவிட, எழுதின முட்டாள் `மிஸ். இந்திரா’ என்று விலாசத்தில் எழுதியிருந்ததுதான் கதிரேசனது ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டது.

    “உன்னையெல்லாம் காலை ஒடைச்சு, வீட்டிலேயே  வைக்கணும். பெரிய மனசு பண்ணி, வேலைக்குப் போக விட்டிருக்கேன்ல? சம்பாதிக்கிற திமிரு! அதான் கொழுத்துப் போச்சு!” என்று ஆரம்பித்தவன், என்னமோ இவள் தானாகப்போய் எவனுடனோ கள்ள உறவு வைத்துக்கொண்டதுபோல பேயாட்டம் ஆடினான்.

    அடுத்து என்ன நடக்கும் என்று புரிந்து போயிருந்தாலும், கணவனுக்கு எதிர்பேச்சு பேசாது, அடங்கிப்போவதுதான் ஒரு நல்ல மனைவியின் தர்மம் என்று வளர்க்கப்பட்டு இருந்ததால், பலியாடுபோல் எதற்கும் தயாராக நின்றாள்.

    தாயின் வீங்கிய முகத்திலும் உடலிலும் ஒத்தடம் கொடுத்தபடி வசந்தா பேசினாள்: “இன்னும் எத்தனை நாளைக்கும்மா இப்படி அடிபட்டு சாகப்போறீங்க? நீங்கதான் சுயமா சம்பாதிக்கிறீங்களே! எங்கேயாவது தனியா போயிடறது!”

    உலகம் புரியாத மகளைக் கனிவுடன் பார்த்தாள் இந்திரா. கல்யாணத்திற்கு நிற்பவள்!

    ஒரு பெண் கணவனிடம் படும் அவதியைப் பற்றி யாருக்கு என்ன  அக்கறை! `பொண்ணுக்கு அம்மா சரியில்லையாமே!’ என்றுதான் மற்ற எல்லாப் பெண்களும் வம்பு பேசுவார்கள்.

    பிறர் கிடக்கட்டும், தனக்கேகூட பயமாகத்தான் இருக்கிறது. ஒரு பெண் இந்த உலகத்தில் தனியாக இருக்க முடியுமோ? `ஆண் என்னும் கொழுகொம்பில் படருபவள்தான் பெண் என்னும் மெல்லியலாள்’ என்று சினிமா, கதைப்புத்தகங்கள் மூலம் நம்ப வைத்து விட்டார்களே!

    சரி, கொடுமைக்காரரான இவரை விட்டுவிட்டு, வேறு ஓர் ஆணைத் தேடிக்கொள்ளலாம்தான். அவன் மட்டும் நல்லவனாக இருப்பான் என்பது என்ன நிச்சயம்?

    தீர்மானிக்க முடியாததோர் எதிர்காலத்தைவிட கசப்பான நிகழ்காலத்தையே பொறுத்துப் போகலாம் என்றுதான் விரக்தியுடன் எவ்வளவோ இம்சையைத் தாங்கி வந்திருக்கிறாள். எல்லாம் இந்தப் பெண்ணுக்காகத்தானே! அது புரிகிறதா இவளுக்கு!

    “அப்பா முந்தியெல்லாம் இப்படியா இருந்தாரு! நம்ம போதாத காலம், குடிச்சுட்டு காடியை எவன்மேலேயோ ஏத்தி, லைசன்சு போயிடுச்சு. என்னடா, தனக்கு வேலை போயிடுச்சே, பொண்டாட்டி சம்பாதிச்சுக் கொண்டு வர்ற காசில சோறு திங்க வேண்டியிருக்கேன்னு அவமானம், பாவம்! அவரோட கோபத்தையும், வருத்தத்தையும் வேற யார்மேல காட்ட முடியும், வசந்தா?”

    ஆனால், தன் சமாதானத்தை மகளால் ஏற்க முடியவில்லை என்பது புரிந்தது. மகள் தந்தையைத் தவிர்ப்பதையும்,`நான் கல்யாணமே செய்துக்கப் போறதில்லே! அதான் ஃபேக்டரி வேலைக்குப் போறேனே!’ என்று திமிராகப் பேசுவதையும் பார்த்து இந்திராவுக்குப் பயம் வந்தது.

    `இந்த காலத்துப் பெண்கள் நம்மைப்போல கையாலாகாத அசடுகள் இல்லை!’ நினைக்கும்போதே பெருமிதம் ஏற்பட்டது.

    `பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்,’ என்று அடிக்கடி எழுதிய தன்னுடைய தைரியம் எல்லாம் எழுத்தோடு சரி.`கணவன் செய்யும் எல்லா கொடுமையையும் பொறுத்துப் போகிறவள்தான் நல்ல பெண்!’ என்பதுபோல் அல்லவா நடந்துகொள்கிறோம்!

    இனியாவது ஊருக்கு உபதேசம் செய்து கொள்வதோடு நிற்காமல், தான் சொல்லி வருவதைத் தானே கடைப்பிடிக்க வேண்டும். இப்படித் தீர்மானம் செய்து கொண்டாலும், சிறிது பயமும் எழுந்தது இந்திராவுக்குள்.

    அன்று சம்பள நாள்.

    மனைவிக்காக வீட்டு வாசலிலேயே காத்திருந்தான் கதிரேசன்.

    “கொண்டா!” அவனது நீட்டிய கையை லட்சியம் செய்யாது, உள்ளே நடந்தாள் இந்திரா.

    நாராசமாகக் கத்தியபடி அவன் அவளைப் பின்தொடர்ந்தபோது, சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தாள் வசந்தா. அவள் கண்கள் பயத்தில் விரிந்தன.

    அவ்வளவுதான். இந்திராவுக்கு எங்கிருந்தோ ஆவேசம் வந்தது. கைப்பையை இறுக அணைத்துக் கொண்டாள். “நான் ராப்பகலா வேலை பாக்கிறதில கிடைக்கற காசு இது! ஒங்களுக்கு எதுக்குக் குடுக்கிறது!”

    வழக்கத்துக்கு விரோதமான அந்த எதிர்ப்பில் கதிரேசன் சற்றே அயர்ந்து போனான். பிறகு, வெறியுடன் அவள்மேல் பாய, அதை எதிர்பார்த்தவளாக, சட்டென விலகினாள். தாவிய வேகத்தில் சுவற்றில் தலை மோதி, கீழே விழுந்தான்.

    சமாளித்தபடி எழுந்திருக்கப்போனவனை இந்திராவின் குரல் தாக்கியது. “சும்மா அப்படியே ஒக்காருங்க. நீங்க பாட்டில எல்லா காசையும் தண்ணியில விட்டுட்டா, வசந்தாவுக்கு ஒரு கல்யாணம், காட்சின்னு எப்படி செய்யறது?”

    “என்னமோ, வசந்தா வசந்தாங்கறியே! நானில்லாட்டி ஒம்பொண்ணு எப்படி வந்திருக்கும்!”

    இந்திராவின் உதடுகள் அலட்சியத்தில் விரிந்தன. `பிள்ளை பெத்துக்க எந்த ஆம்பளையா இருந்தா என்ன! கற்பழிப்புகூடத்தான் கருவில வந்து முடியுது!’ என்று அவள் நினைப்பு ஓடியது. வெளியில் சொல்வது அசிங்கம் என்று அடக்கிக்கொண்டாள்.

    “இதோ பாருங்க! வேலைவெட்டி எதுவும் இல்லாத ஒங்களை வெச்சு சோறு போடறேன் — நீங்க தாலி கட்டின தோஷத்துக்கு. அதுக்கு மீறி, என்மேல ஒங்க கை பட்டுச்சோ, போலீசுக்குப் போயிடுவேன். பொண்டாட்டியை அடிக்கிறது `குடும்ப விவகாரம்’ னு இப்ப யாரும் ஒதுங்கிப் போறதில்ல. நம்ப மலேசிய நாட்டில இது சட்ட விரோதம். தெரியுமில்ல?”

    வசந்தாவின் முகத்தில் ஓர் ஆச்சரியக் குறி. கண்ணில் மின்னல் கீற்று தோன்றி மறைந்தது நன்றாகவே புலப்பட்டது. தனக்குக்கூட தைரியம் வந்துவிட்ட பெருமையில், தலை நிமிர்ந்து உள்ளே நடந்தாள் இந்திரா.

    கதிரேசன் நிலைகுத்திப்போய் உட்கார்ந்திருந்தான்.

    `என்ன பொண்ணு நீ! புருஷனுக்கு மரியாதை குடுத்து நடக்கத் தெரியாது?’ ஏதோ தலைமுறையைச் சேர்ந்த எவளோ கூறியது அசரீரியாகக் கேட்டது.

    இந்திரா உதட்டைச் சுழித்தாள். “மரியாதை எல்லாம் குடுத்து வாங்கற சமாசாரம்!” உரக்கவே சொன்னாள்.

    Share
  • வைராக்கியம்

    பவள சங்கரி

    ‘இளமையில் கல்’ என்றார்கள். கற்க ஆவல் கொண்ட மாணவர்கள் அனைவரும் தங்கள் விருப்பம்போல கற்க முடிகிறதா என்றால் இல்லை என்பதே வருந்தத்தக்க விசயம். அறிவும், ஆற்றலும் இருப்பவருக்கு பள்ளிக்கட்டணம் கட்டவோ, நோட்டுப் புத்தகம் வாங்கவோ வசதியில்லாமல் ஏழ்மை வாட்டி வதைக்கலாம். எல்லா வசதியும் இருக்கும் இளைஞனுக்கு படிப்பில் நாட்டம் இல்லாமல் போகலாம். பெற்றோரின் கட்டாயத்திற்காக மட்டுமே படித்துக்கொண்டு வருவான். இன்னும் சில குழந்தைகளுக்கோ பிறவிக் குறைபாடு போன்ற பிரச்சனைகளால் கல்விக்கூடம் செல்வது என்பதே பெற்றோரின் பகற் கனவாகிவிடுகிறது. இப்படி ஒரு சிலரின் வாழ்க்கையில் அடிப்படையான கல்வி என்பது ஒரு சரித்திரமாகவே மாறிவிடுகிறது.  ஆனால் எப்படியும் கல்வி கற்றே தீரவேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருப்பவர்களுக்கு, அந்த எண்ணமே அவர்களுக்கு அதை ஏதேனும் ஒரு வழியில் அதை செயல்படுத்திவிடுகிறது.

    மரம் ஏறத்துணியும் ஒருவருக்கு பின்னால் தாங்கிப்பிடிக்க கை கொடுக்கலாம். சற்றே மேலெழும்போது நம் கையை இயன்ற அளவிற்கு நீட்டி அவருக்கு உதவலாம். இன்னும் சற்று மேலெழும்பும்போது நம் குதிங்காலை சற்றே உயர்த்தி அவரைத் தூக்கிவிடலாம். இறுதியாக நம் தோளின்மீது தம் பாதம் பதித்து ஏறவும் பொறுக்கலாம். அதைத்தாண்டி அவர்தான் அந்த மரத்தின் உச்சத்தை அடைய முயலவேண்டும் எவருடைய உந்துதலும் இன்றி. அப்படி ஏறும்போது சுற்றி இருக்கும் கிளைகளின் வலிமையறிந்து அதன் உதவியுடன் மெல்ல மெல்ல உச்சியைத் தொடவேண்டும். நிறை, குறைகளைக்கடந்து தமது உச்சத்தை நெருங்கும் வைராக்கியமும், விடாமுயற்சியும் எவரிடம் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே வாழ்க்கையின் வெற்றிப்படியை நெருங்கவியலும்.

    சிரீகாந்த் போலா என்பவர் ஐதராபாத் நகரைச் சார்ந்த  பார்வையற்ற 24 வயது இளைஞர். இந்த வயதில் தொழிற்துறை வட்டத்தில் பெரிய கதாநாயகனாக வலம்வருபவர். ஆனால் அவருடைய கடந்த காலம் பற்றி நாம் அறிய வேண்டும். இவர் பிறந்தபோது இவருடைய பெற்றோர் ஆண்டொன்றிற்கு ரூ.20,000 மட்டுமே சம்பாதிக்கக்கூடியவர்கள். இப்படி குறையுடன் பிறந்த மகன் தேவையா என்ற சுற்றத்தின் அமில வீச்சுகளின் இடையில் தெய்வாதீனமாக உயிர் பிழைத்து சிரமத்துடன் வளர்க்கப்பட்டவர். தமது பள்ளிப்பருவத்தில் படிப்பை ஒரு தவமாக மேற்கொண்டவர். பத்தாம் வகுப்பு வரை 90, 100 என்று மதிப்பெண்களை குவித்துக்கொண்டிருந்தவருக்கு, பள்ளியிறுதி வகுப்பில் (+1)  தாம் பார்வையிழந்தவர் என்ற காரணத்தினால் அறிவியல் பாடத்தை விருப்பப்பாடமாக எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இவர் சட்டப்படி நடவடிக்கை எடுத்துப் போராடி ஆறு மாதத்திற்குப் பிறகு அதே அறிவியல் படிப்பில் சேர்ந்ததோடு நில்லாமல் 12ம் வகுப்பில் 98 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்துக்காட்டினார். ஆனாலும் அதற்குப் பிறகும் ஓயவில்லை அவருடைய போராட்டம். ஐ.ஐ.டி, என்.ஐ.டி. என எங்கும் போட்டித் தேர்வுகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. நம் நாட்டில் எந்த கல்வித்துறையும் அவருக்கு உதவ முன்வரவில்லை. அந்த இளைஞர் ஓயாமல் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளுக்கு தமது நிலையைத் தெரிவித்து விண்ணப்பித்தார். இறைவன் பார்வையும் அவர் முயற்சிக்கு ஒளியூட்டியது. உலகிலேயே தலை சிறைந்த நான்கு கல்லூரிகளான எம்.ஐ.டி., இசுடேன்ஃபோர்டு, பெர்க்கிலி, மற்றும் கார்னீகு மெல்லான் ஆகிய கல்லூரிகளிலிருந்து ஒருசேர அழைப்பு வந்தது. அமெரிக்க நாட்டில்,  எம்.ஐ.டி இன் உதவித்தொகை பெற்ற முதல் சர்வதேச பார்வையிழந்த மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  2012 இல் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தவுடன் அவர் போலாந்து (Bollant) தொழிற்சாலைகளை உருவாக்கி அதன் 60% தொழிலாளர்களாக மாற்றுத் திறனாளிகளையே நியமித்தார். 450 பணியாளர்களைக் கொண்ட இந்த நிறுவனம் இன்று 50 கோடி மதிப்புள்ளது என்பதோடு ரத்தன் டாட்டா அவர்களே இதில் முதலீடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இன்னொருவரையும் இதுபோன்று குறிப்பிட முடியும்.  2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கட்டப்பட்ட பிரபலமான கோவை ஜெம் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் சி. பழனிவேல் என்ற உலகப்புகழ் பெற்ற அறுவைச்சிகிச்சை நிபுணர், ஆய்வாளர், கோவையில் இயங்கும் இரைப்பை குடல் மருத்துவ மருத்துவமனை, ஆராய்ச்சி மையத் தலைவர் பொறுப்பில் இருப்பவர்.  லேப்புராசுக்கோப்பி என்ற மருத்துவச் சிகிச்சை முறையில் பல நவீன தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளவர் இவர். பல ஆண்டுகளாக மருத்துவத் துறையின் ஒரு குறிப்பிட்ட அறுவை சிகிச்சை பயிற்சிக்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்துள்ளவர். லேப்புராசுக்கோப்பியில் நவீன தொழில்நுட்பங்களை மேற்கொண்டதோடு, ஏழை, எளிய மக்களுக்கும் அறுவை சிகிச்சைகளும், வாழ்க்கையை மாற்றியமைக்கும் மருத்துவங்களும் கிடைக்கும்படி செய்தவர்.  ஆம், மருத்துவர் பழனிவேல் அவர்களின்  ஜெம் ( GEM) அறக்கட்டளை தொண்டு நிறுவனம் மூலமாக வறுமைக்கோட்டில் வாழும் மக்களுக்கு  இலவச மருத்துவச் சிகிச்சையை வழங்குகிறது. இந்த  அறக்கட்டளை அமைப்பு இரைப்பை குடலியல் மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவப் பிரிவை பராமரித்து வருகிறது. கோயம்புத்தூர் நகரைச்சுற்றி அடிக்கடி மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருகிறது. இவருக்கு வெளிநாடுகளிலிருந்தும் அடிக்கடி பயிற்சி வகுப்புகள் கருத்தரங்கம் என்று அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சிகிச்சை முறை பயன்பாட்டில் உள்ளது. சிசேரியன் அறுவைச் சிகிச்சை தவிர வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து அறுவை சிகிச்சைகளுக்கும் இந்த நவீன முறை அறுவை சிகிச்சை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை முடிந்த ஓரிரு நாட்களில் நோயாளிகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதும், மருத்துவமனையில் அதிக நாட்கள் தங்க வேண்டிய தேவையும் இல்லை என்பதை இதன் சிறப்பாகக் கூறமுடியும்.

    மருத்துவர்களுக்கு இந்த நவீன அறுவைச் சிகிச்சை குறித்த பயிற்சியை வழங்கும் இவர் அதனை எளிமையாக விளக்கும் விதமே அலாதியானது. முன் காலத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஒரு புறம் நின்று வேடிக்கைப் பார்த்து பந்து வரும் திசையை உன்னிப்பாகக் கணிக்கவேண்டும். ஆனால் இப்போதைய நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தில் பந்து புறப்பட்ட இடத்திலிருந்து அது சேரும் இடம்வரை அதன் பயணிக்கும் பாதையை மிகத்துல்லியமாக காணமுடிவது போன்றதுதான் லேப்புராசுக்கோப்பி சிகிச்சை முறை என்று எளிமையாக விளக்கம் அளிப்பாராம்..

    2003 ஆம் ஆண்டில் டாக்டர் பழனிவேல் எடின்பர்க்   ராயல் கல்லூரியின் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மூலம் பெல்லோசிப்,  2006 இல் டாக்டர் பி சி ராய் தேசிய விருது, அமெரிக்காவில் ‘சர்வதேச ஒலிம்பிக் அறுவை சிகிச்சை ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம்’  வென்றது போன்ற பல பெருமைகளைப் பெற்றவர்.

    இதுமட்டுமன்றி,  லேப்புராசுக்கோப்பி  சிகிச்சை முறை சம்பந்தமாக மூன்று புத்தகங்களை எழுதி  வெளியிட்டுள்ளார்: லேப்புராசுகோப்பி அறுவை சிகிச்சை கலை; “Text Book of Surgical Laparoscopy”  “CIGES Atlas of Laparoscopic Surgery.”

    இத்துனை சாதனை புரிந்த  இவருடைய ஆரம்பக்கால வாழ்க்கை அந்த அளவிற்கு எளிமையானதாக இல்லை. ஒரு சாதாரண விவசாயக்கூலித் தொழிலாளியின் மகனாகப் பிறந்தவர் இவர். மிகப்பெரும் சவால்களைச் சந்தித்த பிறகே இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார் என்பதே உண்மை. ஆம்,  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் இவர். 1953 ஆம் ஆண்டில் இவர் குடும்பம் மலேசியாவிற்கு குடிபெயர்ந்தது. குடும்பத்தின் ஏழ்மை காரணமாக தமது கல்வியை ஆறாம் வகுப்பிலேயே நிறுத்திவிட்டு ஒரு சாராயக் கடையில் பத்து மலேசிய டாலர்களுக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.  18 வயது வரை வேலை பார்த்தவர் அதற்குமேல் கல்வி கற்கவேண்டும் என்ற பேரார்வம் உந்தித்தள்ள, 1967 இல் அங்கிருந்து கிளம்பி இந்தியா வந்து சேர்ந்தார்.  நல்லாசிகளின் விளைவாக பள்ளியில் சேரும் வாய்ப்பும் அமைந்து, தம்முடைய 21 ஆம் வயதில்  எஸ்.எஸ்.எல்.சி வகுப்பு படித்து முடித்தார். கற்கள் ஏற்றும்போது ஏற்பட்ட காயம் காரணமாக சிதைக்கப்பட்ட ஒரு விரல் மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக தனலட்சுமி என்ற ஆறு வயது அன்புச் சகோதரி உயிரிழந்தது போன்ற காரணங்களால் அவர் மருத்துவம் பயில விரும்பினார். பல சிரமங்களுக்கிடையில் மருத்துவப் படிப்பும் பயின்றவர்,  இசுடான்லி மருத்துவக் கல்லூரியில் தங்கப் பதக்கத்துடன் வெற்றிவாகையும் சூடி வந்தார்.  தாம் வந்த பாதையை மறக்காதவராக வசதியில்லாத பல நோயாளிகளுக்கு இலவச மருத்துவமும், குறைந்த கட்டண வசூலிப்பும் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது!

    மேற்கண்ட இரண்டு சாதனையாளர்களும் தங்கள் வைராக்கியம் மூலமாகவே தடைகளை முறியடித்து வெற்றிவாகை சூடியுள்ளார்கள் என்பதே நிதர்சனம்!

    Share