தாந்தித்தாத்தாவும்…
நிர்மலா ராகவன்
தாந்தித்தாத்தாவும், பொன்னுசாமி கங்காணியும்
தந்தையின் பக்கத்தில் அமர்ந்து, கடந்த முக்கால் மணி நேரமாகப் பஸ்ஸில் பிரயாணம் செய்துகொண்டிருந்த புலியம்மாவின் உள்ளத்தில் ஒரே சமயத்தில் பயமும், குதூகலமும் நிரம்பி இருந்தன.
ஆறு வருடங்களாகத் தமிழில் பயின்றுவிட்டு, இப்போது மலாய்ப் பள்ளியில் — முற்றிலும் புதியதொரு சூழ்நிலையில் — படிக்கவேண்டுமென்ற பயம். தங்கள் தோட்டப்புறத்திலேயே முதன்முறையாக இவ்வளவு சிறப்பான தேர்ச்சி பெற்று, உயர்கல்வி கற்க ஆயத்தமென, இந்தப் பள்ளியில் சேரப் போகும் களிப்பு.
‘கேவலம், பெண்ணாய்ப் பிறந்தவளுக்கு இவ்வளவு செலவழிச்சாவது படிப்பு அவசியந்தானா! ஆனாலும் ஒங்க மகளுக்கு ரொம்பத்தான் இடங்கொடுத்து வளக்கறீங்க!’ பொறாமை மேலிட, அண்டை அயலார் அவநம்பிக்கை ஊட்டிப்பார்த்தபோது, பொன்னுசாமி கங்காணி அயரவில்லை.
‘பெண்களை மதிக்கறவன்தான் தெய்வம் ஆகிறான்,’ என்று நிதானமாக மகாத்மா காந்தியின் போதனையை எடுத்துக்கூறினார்.
காந்தி மகான்தான் அவருடைய தெய்வம். அவர்கள் வீட்டில் மூஞ்சூறுமேல் அமர்ந்த பிள்ளையார், யானைகளுடன் கஜலட்சுமி ஆகிய கடவுள் படங்களுடன், வேட்டி மட்டும் அணிந்து, தரையில் காலை மடக்கி, சர்க்காவில் நூல் நூற்கும் காந்தியின் படமும் மாட்டி இருந்தார்.
அதைப்பற்றிக் கேலியாக விசாரிப்பவர்களிடம், ‘சாமி கண்ணுக்குத் தெரியுமான்னு நாத்திகம் பேசறாதாலதான் இன்னிக்கு இளவட்டங்க தறிகெட்டுப்போறாங்க. ஒத்தையாளா வெள்ளைக்காரனைத் துரத்தி அடிச்சிருக்காரே, நம்ப காந்தி! இது சாமான்யமான மனுசன் செய்யற வேலையா? எவன் ஒருத்தன் சுயநலமில்லாம இருக்கானோ, அவன்தான் சாமி!” என்று, அன்பே சிவம் கமலஹாசன் பாணியில் பேசி, அவர்கள் வாயை அடைத்துவிடுவார்.
பிறரது கேலிக்கெல்லாம் மசியாது, தனது கொள்கைகளில் பிடிவாதமாக, உண்மையே பேசி, வெற்றியும் பெற்றிருக்கிறாரே அம்மகான்! அப்பாவுக்குப் பிடித்த காந்திபோலத் தானும் நடக்கவேண்டும் என்று புலியம்மா உறுதி செய்துகொண்டாள்.
ஆனால், அப்பா செய்தது எல்லாமே அவளுக்குப் பிடிக்கும் என்பதில்லை. முக்கியமாக, அவளுடைய பெயர்.
“ஏம்பா எனக்கு இந்தப் பேரு வெச்சீங்க? எல்லாரும் கேலி செய்யறாங்க!” பத்து வயதாயிருக்கும்போது தந்தையிடம் செல்லமாகச் சிணுங்கினாள்.
மகள் தன்னைத் தட்டிக்கேட்பதாவது என்று அவர் ஆத்திரப்படவில்லை. அவர்தான் அகிம்சாவாதி ஆயிற்றே!
“எல்லாம் காரணமாத்தான். தனக்கு எல்லாம் தெரியும்னு அலட்டிக்கிற மனுசன் புலியைப் பாத்துப் பயப்படறான், ஓடி ஒளிஞ்சுக்கறான்!” அந்த நினைவிலேயே அவர் சிரித்தார்.
அவளுக்கு அந்த விளக்கம் பிடிபடவில்லை. “எங்கிட்ட ஏம்பா மத்தவங்க பயப்படணும்?”
“அப்படி இல்ல. நீ எதுக்கும் பயப்படக்கூடாது, கண்ணு. இது ஆம்பளைங்க ஒலகம்! பொண்ணுங்கன்னா மட்டம். அதான் அன்னாடம் பாக்கறியே! நம்ப லயத்திலேயே, கண்ணுமண்ணு தெரியாம தண்ணி போட்டுட்டு, அவனவன் பெண்டாட்டியை மாட்டை அடிக்கறமாதிரி அடிக்கிறான். ம்! இவனெல்லாம் ஆம்பளை!” என்று எள்ளியவர், “அந்த மகானைப் பாரு! துப்பாக்கியும், பீரங்கியுமா வெச்சு வெள்ளைக்காரனை விரட்டினாரு? அகிம்சாவாதத்திலேயே தாய்தாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக்குடுத்தாரு!” என்ன பேச ஆரம்பித்தாலும், அதைக் காந்தியில்தான் கொண்டு முடிப்பார் பொன்னுசாமி கங்காணி.
அவருடைய மனைவி பதைத்துப்போய் உள்ளேயிருந்து வருவாள். “யாருகிட்ட எதைச் சொல்றதுன்னு கிடையாது? அது சின்னப்பிள்ளை!” என்று மகளுக்குப் பரிவாள்.
அவளிடம் நேராகப் பதிலளிக்காது, புலியம்மாவிடம் கூறுவார் அவர்: “நான் எதுக்குச் சொல்றேன், நீ என்னைமாதிரி தற்குறியா நின்னுடப்படாது. பெரிய படிப்புப் படிச்சு, நல்லா வரணும். நடுவிலே யாராவது வயத்தெரிச்சல்பட்டு ஒன்னை வெரட்டினா, நீ பயந்து ஒதுங்கலாமா? புலிமாதிரி எதிர்த்துச் சண்டை போடணும், என்ன?”
புலியம்மாவுக்கு அவருடைய அடிப்படைக் கொள்கையிலேயே சந்தேகம் பிறந்தது. “ஏம்பா? சண்டை போட்டா, அது அகிம்சையா?”
“சண்டைன்னா, வெட்டறதும், குத்தறதும் மட்டுமில்ல. கொள்கைக்காக போராடறதும்மா. துப்பாக்கியா பிடிச்சிருந்தாரு காந்தி?”
இவ்வளவு தெரிந்துவைத்திருந்த அப்பாவுக்கு ஏன் தன்னை முதலிலேயே ஒரு மலாய்ப் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்று தோன்றாமல் போயிற்று? பயத்தால் உறைந்திருந்த அந்த வேளையில் புலியம்மாவுக்கு இந்தச் சந்தேகம் உதித்தது.
அவள் எந்தக் கேள்வி கேட்டாலும், அப்பா நிதானமாகப் பதில் சொல்வார். எங்கேயோ இருந்திருக்கவேண்டியவர், பாவம்! அதிகக் கல்வி இல்லாததால், வாழ்க்கையில் முன்னேற முடியவில்லையாம். தானே அடிக்கடி அவளிடம் சொல்லி இருக்கிறார். அதனால்தான் மகளாவது உயரவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.
“அப்பா!” புலியம்மா தயங்கினாள்.
“என்னம்மா? எதுவானாலும் கேளு. ஒனக்கில்லாததா!”
“எனக்கு ஒண்ணும் வேணாம்பா. என்னை… ஏம்பா தமிழ் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினீங்க?” எப்படியோ துணிச்சலை வரவழைத்துக்கொண்டு கேட்டுவிட்டாள்.
கங்காணியின் முகம் வாடிப்போயிற்று. “என்னம்மா இப்படிக் கேட்டுட்டே?” என்றார் ஆழ்ந்த வருத்தத்துடன். “தாய்மொழிங்கறது பெத்த தாய்மாதிரி. கருவிலேயே நம்பளோட மூளையில பதிஞ்சது. வயத்துப்பிழைப்புக்காக நம்ப கலாசாரத்தைத் தலைமுழுகிட முடியுமா? சாப்பிட்டோம், தூங்கினோம்னு இருந்தா, அப்புறம் நமக்கும், மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்? நம்பளையே நாம்ப மதிக்கவேணாம்?”
தான் தமிழச்சி என்ற பெருமை புலியம்மாவுக்குப் பிறந்தது அப்போதுதான். புதுப்பள்ளியிலோ, நூற்றுக்கு ஒருவர்கூட தமிழர் கிடையாதாம். மூன்று மாடிகளைக்கொண்ட பெரிய பெரிய கட்டிடங்கள் அமைந்த விசாலமான வளாகத்துக்குள் நுழைந்தபோது கால்கள் பின்னுக்கு இழுத்தன.
அப்பாவுக்குப் புரிந்திருக்கவேண்டும். அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தார். ‘நீ எதுக்கும் பயப்படக் கூடாதுன்னுதானே ஒன் பேரிலேயே வீரத்தை வெச்சிருக்கேன்?’ என்று சொல்வதுபோலிருந்தது. அச்சிரிப்பில் எல்லாம் மறந்து போயிற்று அவளுக்கு.
“அதோ பாருங்கப்பா. தமிழ் டீச்சர்!” என்று உற்சாகமாகக் கையை நீட்டிக் காட்டினாள்.
புடவையும், பொட்டுமாக இருந்த அந்த “தமிழ் டீச்சர்” தன் வகுப்புக்கு வரமாட்டாள் என்று அதன்பின் அறிந்ததில் ஒரு சிறிய ஏமாற்றம் எழுந்தது. அதனால் என்ன? தானே போய் அறிமுகம் செய்துகொள்ள வழியா இல்லை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள் புலியம்மா.
“ஒங்க பையைத் தூக்கிட்டு வரட்டுமா, டீச்சர்?”
அந்தத் தமிழ்க் குரல் வித்தியாசமாகக் கேட்டிருக்க வேண்டும். டீச்சர் சட்டெனத் திரும்பினாள். எதுவும் பேசாது, தன் கையிலிருந்த பிரம்புப் பையை எதிரில் அகன்ற விழிகளுடன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் கொடுத்தாள்.
பை சற்றுக் கனம்தான். ஆனால், சிவபெருமானிடமிருந்து மாங்கனியைப் பெற்றுக்கொண்ட பிள்ளையார்மாதிரி அச்சிறுமிக்குப் பூரிப்பு ஏற்பட்டது. அதனை அடக்க வழி தெரியாது, பல் தெரிய புன்னகைத்தபடி, டீச்சரின் சிவப்புப் புடவையையும், அதற்குப் பொருத்தமாக, கவனத்துடன் தேர்ந்தெடுத்திருந்த சிவப்புக் காலணிகளையும் பார்த்தபடி, ராமனைப் பின்தொடர்ந்த சீதையாக நடந்தாள்.
மறுநாள் காலை, இருள் பிரியுமுன்னரே பஸ் பிடித்து, டீச்சரின் வருகைக்காகக் காத்திருந்தாள் புலியம்மா. கும்பல், கும்பலாக நின்றுகொண்டு, உரக்கப்பேசி, அதிர்வேட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தவர்களுடன் சேர விரும்பாது, ஒரு போகன்வில்லா புதர் அருகே தனித்து நின்றாள்.
டிச்சருடைய சிறிய, வெள்ளைக்கார் கேட்டுக்குள் நுழைந்தது. காதல் வசப்பட்டவருடையதைப்போல புலியம்மாவின் இருதயம் துடித்தது. ஓடாத குறையாகக் காரை நெருங்கினாள்.
“வணக்கம் டீச்சர்!”
டீச்சர் அவளுடைய முகமன் காதில் விழாதவளாக நடந்தாள்.
இன்னும் உரக்கச் சொன்னாள்: “வணக்கம் டீச்சர்!”
டீச்சர் நின்றாள். தலையை வெட்டினாற்போல் அவள்பக்கம் திரும்பி, “மெதுவாப் பேசு!” என்று அதட்டினாள். குரல் கட்டையாக இருந்தது. “இப்படிக் கத்தினா, நாலுபேர் பாத்துச் சிரிப்பாங்க!” பழக்க தோஷத்தால், அவள் குரலில் கடினமும், அதிகாரமும் கலந்திருந்தன.
ஒரேயடியாக மிரண்டுபோன புலியம்மாவால், கையாலாகாத்தனத்துடன் தலையை அசைக்கத்தான் முடிந்தது.
பல வினாடிகள் கழித்துத்தான் அவளுக்கு சுயநினைவு வந்தது. தன்மீது எவ்வளவு அக்கறை இருந்தால், இப்படித் தனிப்பட்ட முறையில் கண்டிப்பார்கள் என்ற நெகிழ்வு ஏற்பட்டது. தன்னைப்போலத்தானே டீச்சரும்! ஒரே இனம், ஒரே மொழி என்ற பற்றுதல் அவர்களுக்குமட்டும் இருக்காதா, என்ன!
இப்போதெல்லாம் தானே வலியப்போய் முணுமுணுப்பாக வணக்கம் தெரிவித்துவிட்டு, உரிமையுடன் டீச்சரின் கையிலிருந்து பிரம்புப் பையைப் பிடுங்காத குறையாக வாங்கிக்கொள்ளும் அளவுக்குத் துணிச்சல் ஏற்பட்டிருந்தது புலியம்மாவுக்கு.
“ஒன் பேரு என்ன?” அறிந்துகொள்ளும் ஆர்வமில்லை அந்தக் கட்டைக் குரலில். ஒப்புக்குக் கேட்பதுபோலிருந்தது.
ஆனால், அதையெல்லாம் கவனிக்கத் தோன்றவில்லை மாணவிக்கு. என்னதான் சகமாணவிகளுடன் பழகினாலும், ஆசிரியை தன்னை மதித்துப் பேசுவதுபோல் ஆகுமா?
வெண்மையான பற்கள் கறுத்த முகத்தின் பின்னணியில் மேலும் ஒளிவிட, “என் பெயர் புலியம்மா!” என்று ஒப்பிப்பதுபோல் தெரிவித்தாள். கைகள் தாமாகக் கட்டிக்கொண்டன.
அவள் தோழிகள் ‘காக்கா’ என்று கேலியுடன் அவளைக் குறிப்பிட்டதை லட்சியம் செய்யவில்லை புலியம்மா. அவர்களுக்கு என்ன தெரியும் சேவை செய்வதன் மகத்துவம்? காந்தி சொன்னபடி..! அவள் தானே சிரித்துக்கொண்டாள். தானும் அப்பாமாதிரியே ஆகிவருகிறோமே!
அன்றும் ஒரு கட்டு நோட்டுப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு, கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதுபோல பயபக்தியுடன் டீச்சரின் மேசைமேல் வைத்தாள் புலியம்மா. வழக்கம்போலவே, ஒரு நன்றிகூட எதிர்பார்க்காது, ஆசிரியர்களின் பொது அறையைவிட்டு வெளியே வந்தாள்.
ஜன்னல்வழியே உள்ளே நடந்த உரையாடல் கேட்டது. “அந்தப் பொண்ணு என்ன, உனக்கு வாலா? கிட்ட வந்தாலே ஏதோ எண்ணை நாத்தம்!”
யாரோ சிரித்தார்கள்.
தன்னைப்பற்றித்தான் பேசுகிறார்கள்! புலியம்மாவின் கால்கள் மேலே நகர மறுத்தன.
“சரியான கழுத்தறுப்பு. ஒரு நாளைக்கு நாலு தடவை அங்க, இங்க பாத்து, ‘குட் மார்னிங்’ சொல்லியாகணும் அதுக்கு. அன்னிக்கு என் கையைப் பிடிச்சுக்கிட்டு, ‘எங்க கிளாசுக்கு வாங்க டீச்சர்’னு முரட்டுப் பிடிவாதம் வேற!’
‘தமிழ் டீச்சரா’ இப்படிப் பேசுகிறார்கள்? யாரோ மென்னியைப் பிடித்து அமுக்குவதுபோல் இருந்தது புலியம்மாவுக்கு. இரு கைகளாலும் நீலநிறக் குட்டைப் பாவாடையைக் கசக்கிப் பிடித்துக்கொண்டாள்.
கட்டைக்குரல் தன்பாட்டில் பேசிக்கொண்டிருந்தது: “அந்தப் பொண்ணு பேரு புலியம்மா. வேடிக்கையா இல்ல? காட்டில இருக்கவேண்டியதை எல்லாம் இந்தமாதிரி நல்ல பள்ளிக்கூடத்திலே விட்டா இப்படித்தான்!”
யார்யார்மீதோ மோதிக்கொண்டு, மன்னிப்பு கேட்கும் உணர்வுகூட அற்றவளாய், வகுப்பை அடைந்தாள் அவள். ஏமாற்றத்திலும், அவமானத்திலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.
‘அழக்கூடாது. நீ புலிமாதிரி இல்லியா!’ அப்பா மானசீகமாகப் பக்கபலம் அளித்தார். ‘காந்திகூடத்தான் சிறுமைப்பட்டிருக்கிறார். அதனால் அவர் தளர்ந்துபோனாரா, என்ன!’ என்று அவர் கூறுவதுபோலிருந்தது.
அப்பாவுடன் டவுனுக்குப் போய், ‘காந்தி’ ஆங்கிலப்படம் பார்த்திருந்தாள். அதிகம் புரியாவிட்டாலும், ஒரு காட்சி மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டிருந்தது.
காந்தி ஆப்பிரிக்காவில் இருந்தபோது, தாங்கள் நடக்கும் தெருவில் கறுப்பரான அவர் நடக்கக்கூடாது என்று அவர் எதிரில் வந்த இரு வெள்ளையர்கள் தகறாறு பண்ணுகிறார்கள். அவரோ, அஞ்சாமல் அவர்களைக் கடக்கிறார். பின்பு, தன் நண்பரிடம் கூறுகிறார், “சகமனிதனை அவமானப்படுத்துவதால் ஒருவனுக்கு என்ன ஆனந்தம் என்று எனக்குப் புரியத்தான் இல்லை,” என்று.
அன்றுபூராவும் நினைத்து நினைத்து அழுகை வந்தது. அப்பாவையும், காந்தியையும் நினைத்துக்கொண்டாள். அம்மாவிடம் சொல்லவேண்டும், ‘இனிமே கடுகெண்ணை வைத்துத் தலைபின்னாதீங்கம்மா’ என்று.
இப்போதெல்லாம் டீச்சர் புடவை அணிந்து வருவதே அபூர்வமாக இருந்தது. டீச்சருடைய காரைக் கண்டும் காணாததுபோல் நின்றாள் புலியம்மா.
“ஏ பையா! இந்த நோட்டை எல்லாம் எடுத்திட்டு என்கூட வா!” அந்த அதிகாரக்குரல் என்னவோ பலத்துத்தான் இருந்தது. ஆனால் அது காதில் விழாததுபோல் தன்பாட்டில் நடந்துபோனான் அவள் அழைத்த மாணவன்.
“பெரிய அதிகாரம்! சம்பளம் வாங்கலே? இந்த நோட்டுங்களைத் தூக்கிட்டு நடக்க என்ன கேடு?” அவன் தன் நண்பர்களிடம் உரக்கக் கூறியது புலியம்மாவின் காதிலும் விழாமல் போகவில்லை.
‘பாவம் டீச்சர்!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். தானும் ஒரு தமிழ்ப்பெண் என்பதில் டீச்சருக்குப் பெருமிதம் இருந்திருந்தால், இப்படி ஒரு அவமதிப்பு உண்டாகி இருக்குமா?
(1996-ல், மலேசியாவில் பாரதிதாசன் இயக்கத்தின் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது)