Tag: நடராஜன் கல்பட்டு

  • சுதந்திரம்!…

    நடராஜன் கல்பட்டு 

     

    அப்பா இப்பொ கல்யாணத்துக்கு என்னப்பா அவசரம்இப்பொதான் எனக்கு பதினாறு வயசாகுது. நான் காலேஜுக்குப் போயி படிச்சு பட்டம் வாங்கணும்பாசங்கீதத்துலெ இன்னும் நெறய கத்துக்க வேண்டியது இருக்குப்பாபல மேடேலெ ஏறிக் கச்சேரி பண்ணணும்பத்து பேரு சொல்லணும், “மீனாட்சி கச்சேரியாமிஸ் பண்ணக் கூடாதுப்பா ன்னுசித்திரம் நெறெய வரையணும்சிறுகதையும் எழுதணும்பா.”

    அவ்வொளோ தானா இன்னும் எதுனா பாக்கி இருக்குதா?”

    தோணுற போது அப்பொப்போ சொல்லறேம்ப்பா.”  சிரித்துக் கொண்டே ஒடுகிறாள் மினாட்சி.

    சுந்தரத்தின் மனம் ஐந்தாண்டுகள் பின்னே செல்கிறதுமனைவி மரணப் படுக்கையில்அவன் கையைப் பிடித்துக் கொண்டு சன்னக் குரலில் கெஞ்சுகிறாள், “நாளெக் கடத்தாமெ என் அண்ணன் மவன் மதியழகன் கையிலெ நம்ம பொண்ணெப் புடிச்சுக் கொடுத்துடுங்கஅதான் அவளுக்கு வாள்க்கெ பூரா காவலா இருக்கும்.”  கண்களைத் துடைத்தபடி, “சரி சரி என்கிறார் அவர்அவளும் கண்களை மூடினாள் நிரந்தரமாய்.

    கொடுத்த வாக்கெக் காப்பாத்த வாணாம் சுந்தரம்அதனால தான் மீனாட்ச்சிவாணாம்பான்னு சொன்னாலும் கேக்காமெ கல்யாண்த்தெ நடத்தி முடித்தார்.

    மீனாட்சி புகுந்த வீடு சென்றடைந்தாள்வீடு சிறிய ஓட்டு வீடுதான்பக்கம் பக்கமாகப் பல வீடுகள் அந்தத் தெருவில்விட்டிலே மதியழகனைத் தவிற வேறு யாரும் கிடையாது  அவன் ஆத்தா போய் இரண்டு வருடங்களுக்குள்ளேயே அப்பனும் போய்விட்டான்கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லைதனிக் கட்டை அவன்.

    மதி சுய தொழில் செய்பவன்வீடுகளுக்கு வெள்ளை, பெயின்டு அடிப்பவன்காலை எட்டு மணிக்குக் கிளம்பிப் போனால் இரவு ஒன்பது மணிக்கோ பத்து மணிக்கோதான் திரும்புவான், தனியாக அல்ல உடலுக்குள்ளே சில பாட்டில்கள் சாராயத் தண்ணியோடு.

    மணமாகி ஒரு வாரம் கழிந்ததுவாசலில் வந்த மல்லிகைப்பூவில் இரு முழம் வாங்கி வீட்டில் இருந்த ஒரே சாமி படத்துக்கு ஒரு முழம் வைத்துத் தானும் வைத்துக் கொண்டாள் தலையில் மிச்சத்தை மீனாட்சி,.

    இரவு வந்த மதி கத்தினான் வீட்டிற்குள் காலடி வத்ததும், “என்னடீ இது வீடு பூரா பொண நாத்தம்?”

    மல்லிகெ நல்லா இருந்தீச்சு வாசமா இருக்குமேன்னு நாந்தான் வாங்கினேன்.”

    மல்லிகெயுமாச்சு மண்ணாங் கட்டியு மாச்சு. இதெப் பாகுறப்போல்லாம் எங்க ஆத்தா நெப்புதான் வருதுஅவொ மஞ்சளோடெ போய்ட்டான்னு மல்லிகெப் பூவெ மாலெ மாலெயா வாங்கி சாத்தி இருந்தாங்க. தூக்கி எறிடீ வாசல்லே.”, என்று கத்தினான் மதி எட்டு வீட்டிற்குக் கேட்கும் படியாக.

    கண்களில் இருந்து வழிந்த நீரைத் துடைத்தபடி தலையிலும் படத்திலும் இருந்த மல்லிகைப் பூ சரத்தை எடுத்து வாசலில் வீசினாள் மீனாட்சி.

    வீட்டில் தனிமையில் வாடிய மீனாட்சி தன்னுடன் கொண்டு வந்திருந்த சுருதிப் பெட்டியை வைத்துக் கொண்டு தான் கற்ற சில பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பாள் தன் பொழுதைப் போக்கிடதான் பாடுவதை சுவர்கள் தான் கேட்டுக் கொண்டிருக்கின்றன என்று எண்ணிவந்த மீனாட்சிக்கு ஒரு அதிர்ச்சி.

    ஒரு நாள் அவள் பாடிக் கொண்டிருந்த போது ஜன்னலருகே ஒரு உருவம் நகர்ந்தது போல் தெரியவே வாசல் கதவைத் திறந்து பார்த்தாள்அங்கு ஒரு பத்து பன்னிரெண்டு வயதுள்ள சிறுவன் நின்று கொண்டிருந்தான்.

    யாரு நீஎதுக்கு எங்க வீட்டு ஜன்னல் கிட்டெ நிக்கிறெ?”

    அக்கா எம் பேரு பாலுபக்கத்து ஊட்டுலெதான் இருக்கேன்எனக்கு பாட்டுன்னா ரொம்பப் புடிக்கும்எங்கெ பாட்டு வந்தாலும் நின்னு கேட்டு கிட்டு இருப்பேன்எங்கூடப் படிக்குற பசங்களெல்லாம் என்னெஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் வந்திடுச்சிடா ம்பாங்கதினோம் நீங்க பாடும் போது வாசல்லெதான் நின்னு கேட்டுகிட்டு இருப்பேன்இன்னிக்கித்தான் இவ்வொளோ நல்லாப் பாடுறாங்களே யாரு பாடுறதுன்னு பாக்கலாம்னு சன்னல் வழியே எட்டிப் பாத்தேன். தப்பு தாங்காநீங்க சின்னஞ்சிறு கிளியேன்னு ஒரு பாட்டு பாடினீங்களே அதெ இன்னோரு வாட்டி பாடுங்க அக்காஅதெக் கேக்குற போதெல்லாம் என் செத்துப் போன அக்கா ஞாபகம் வரும்கண்ணுலெ தண்ணி தானா வரும்ஆனாலும் அந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் புடிக்கும்.”

    சரி பாடறேன்வா உள்ளெ வந்து ஒக்காரு, என்று சொல்லியபடி சுருதிப் பெட்டியை மீண்டும் இயக்க ஆரம்பித்தாள் மீனாட்சி.

    சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்று மீனாட்சி ஆரம்பித்த உடனேயே கண்கள் குளமுடைக்க தலையைத் திருப்பிக்க் கொண்டான் பாலுஅழுவது மீனாட்சிக்குத் தெரியக் கூடாது என்ற எண்ணமோ என்னவோ தெரியவில்லைஅப்படியே திரும்பிய தலையை ஒரு 360 டிகிரி சுற்றி வீட்டின் சுவர்களை ஒரு நோட்டம் விட்டான்ஆங்காங்கே காகிதத்தில் வரைந்து ஒட்டப் பட்ட ஓவியங்கள்ஒன்றை விட ஒன்று அழகு.

    அமுத கானம் வந்து கொண்டிருந்தது மீனாட்சியின் வாயில் இருந்து.

    உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில்

     உதிரம் கொட்டுதடி

    என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா

    என்னுயிர் நின்னதன்றோ?”

    என்று மீனாட்சி பாடியபோது பாலுவின் நெஞ்சில் உதிரம் கொட்டாததுதான் பாக்கிஅவன் கண் முன்னே படுக்கையில் அவன் அக்கா, பேச இயலாத நிலையில்அவன் கைகளை அவளருகே நீட்ட மெல்ல முயற்சி செய்து அவன் கைகளைத் தொட்டாள்இருவர் கண்களிலும் கண்ணீர்அதுதான் அவர்கள் கடைசியாகப் பேசிக் கொண்ட மவுன வார்த்தைகள்.

    பாட்டு முடிந்தது.

    நினைவுகளை மாற்ற எண்ணி, பாலு கேட்டான், “அக்கா இதெல்லாம் நீங்க வரெஞ்சதா?”

    ஆமாம். எனக்குப் போது போகலேன்னா படம் வரைவேன்இல்லேன்னா குட்டி குட்டி கதெய்ங்கெ எழுதுவேன்.”

    கதெ கூட எழுதுவீங்களாபத்திரிகைகள்லெ ஒங்க ஓவியங்களெ, கதெய்ங்களெப் போட்டதுண்டா அக்கா?”

    போடலாந்தான்யாரு அனுப்பறது?”

    அக்கா எங்கிட்டெ குடுங்கக்காநான் நம்மூர்லெ இருக்குற பத்திரிகெ ஆபீசுலெ கொண்டு சேக்குறேன்.”

    ஒரு வாரம் கழிந்ததுஒரு சனிக்கிழமை.

    கையில் ஒரு வாரப் பத்திரிகையை வைத்துக்கொண்டு மூச்சிறைக்க தாழ்ப்பாள் போடாதிருந்த கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்த பாலு கத்தினான், “அக்கா ஒங்களோட படமும், கதெயும் இந்த வாரம் வந்துருக்கக்காஎன்று.

    வேலைக்குத் செல்லாமல் வீட்டில் படுத்திருந்த மதி கத்தினான், “எவண்டா அவன் எனக்குப் புதுசா மொளெச்ச மச்சான்நான் ஊட்டுலெ இல்லதபோது ரெண்டு பேருமா கொஞ்சிக் கும்மாளம் அடிக்கிறீங்களா?”

    பேச்சோடு நிற்கவில்லை மதிஎழுந்து பளார் என்று பாலுவின் கன்னத்தில் அறைந்தான்.

    சின்னப் பையனைப் போய்…” சொல்ல வந்ததை பூராவுமாகச் சொல்லி முடிக்க வில்லை அவள்மீனாட்சியின் கன்னத்தில் விழுந்தது அடுத்த அறை.

    என்னடி? சின்னப் பையன் கேக்குதோ ஒனக்குநான் கெளவனாயிட்டேனோ?”

    பாலு ஒன்றும் பேசாது வெளியே சென்றான்மீனாட்சியும் ஒன்றும் பதில் பேசவில்லைகுடிகாரனிடம் நியாயமா பேச முடியும்

     மறு நாள் காலை ஏழு மணிக்கு எழுந்த மதி பல் துலக்கி விட்டுஏய் மீனாச்சி டீ கொண்டாடி நான் வேலெக்கு போவணும் என்றான்ஐந்து நிமிஷம் ஆயிற்றுமீனாட்சியைக் காணோம்.

    சமயல் அறைக்குள் சென்று பார்த்தான்அங்கும் அவளைக் காண வில்லைபக்கத்து வீட்டு வாசலில் நின்று கத்தினான், “ஏய் பாலூ வாடா வெளியே, என்றுபாலுவின் அம்மா வந்து சொன்னாள்பாலு காலெலெயே வெளிலெ கெளம்பிப் போயிட்டானுங்களே.”

    எங்கெ போனான்?”

    சொல்லீட்டு போகலீங்களே.”

    அவங்கூட ஓடிப் போயிருப்பாளோஇருக்காதுஎங்க போயிருக்கப் போறா களுதெஅப்பன் ஊட்டுக்குப் போயிருப்பாராவிக்கு வந்துருவாநாம போவலாம் வேலெக்கு என்று மனதிற்குள் சொல்லியபடி வீட்டைப் பூட்டி சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.

    இரவு மதி வீடு திரும்பியபோது வீடு பூட்டியபடி இருந்ததுபக்கத்து வீட்டில் இருந்து சாவியை வாங்கிக் கொண்டு பூட்டை திறந்து ஊள்ளே சென்றான்வயிற்றில் பசி கொல்ல அடுப்பங்கரைக்குச் சென்றால் அங்கு பாத்திரங்கள் எல்லம் கவிழ்த்தபடி இருந்தனகளுதெ வரட்டும்.  “நாளெக்கி அவளுக்கு வெச்சுக்கறேன் கச்சேரி, என்றபடி தரையில் படுத்தான்.

    மறு நாள் காலை வீட்டுக் கதவை யாரோ தட்ட, மதி கதவைத் திறக்க, வாசலில் இரு போலீஸ்காரர்கள்அவர்களில் ஒருவர் கையில் இருந்த கடிதத்தை மதியிடம் நீட்டி, “நேத்து கடற்கரைலெ ரெண்டு பாடி ஒதுங்கீச்சு. ஒண்ணு சுமார் அம்புது வயசு ஆம்பிளெஇன்னோணு பதினாறு, பதினேளு வயசுப் பொண்ணுஅக்கம் பக்கத்துலெ விசாரிச்சதுலெ இந்தப் பொண்ணு இந்த ஊட்டுலெதான் இருந்தீச்சுன்னு சொன்னாங்க. இதெப் படிச்சுப் பாருங்க என்றார்.

    கடிதத்தை வாங்கிப் படித்தான் மதி.

    நான் எண்ணியபடி வாழத்தான் சுதந்திரம் இல்லை எனக்குசாகவுமா இருக்காது அது எனக்குஎன்னை பிறர் கண் படாதபடி வைத்து, விஷமென மனம் நோக வார்த்தைகளைக் கக்கி, உடல் நோக அடித்து வளர்த்த என் புருசனின் கைகளுக்கு காப்புகள்தான் போட வேண்டும்நானும் அப்பாவும் செல்கிறோம் இவ்வுலகை விட்டு. இப்படிக்கு மீனாட்சி.

    கடிதத்தைப் படித்த மதி, “அடிப்பாவீ, இப்படிப் பண்ணீட்டெயெடி என்று கத்தியபடி ஓடப் பார்த்தான்அவனைத் தாவிச்சென்று பிடித்த போலீஸ்காரர், “நான் போடுறேன் காப்பு ஒங்க கைக்கு.பி.கோ. செக்ஷன் 306ன் கீழெ கேசும் ஏற்கெனவே பதிவு பண்ணி வெச்சிருக்காரு இன்ஸ்பெக்டர் ஐயா என்றபடி மதியை போலீச் வண்டியில் ஏற்றினார்.

    தெருக் கோடியில் இருந்த பூங்காவில் வானொலியில் டி.கே. பட்டம்மாள் பாடிய

     ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

     ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்

    என்று ஆடுவோமே

    என்ற பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.

    மதியழகன் என்று அழகாகப் பெயர் வைத்தார்களேயொழிய அவன் மதி அழகில்லாமல் போய் விட்டதே என்ன செய்யபெயர்வைக்கும் போது அவன் குணம் எப்படி இருக்கும் என்று தெரியாதே.

    என்று வரும் நாட்டுக்கு உண்மை சுதந்திரம்

     இந்த சாராயக் கடைகள் தானோ நிரந்தரம்

     

    Share
  • “அக்கூ…. அக்கூ….”

    Plaintive cuckoo-4-pic by Allen

    (Plaintive cuckoo – அக்கூ பட்சி – Picture by Allen)

     நடராஜன் கல்பட்டு

    நேற்று அவருக்கு, அதான் என் கணவருக்கு, அறுபது வயது முடிந்தது.  சஷ்டி அப்த பூர்த்தியை திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அம்ருதகடேஸ்வரர் சன்னதியில் செய்தால் விசேஷம் என்று பலரும் சொன்னதால் அங்கு சென்று வைதீக சடங்குகளை எல்லாம் செய்து முடித்தோம்.

    அந்த ஊர்க் கோயிலின் விசேஷம் அங்குதான் சிவ பக்தனான மார்கண்டேயனுக்காக சிவ பெருமான் யமனையே செயல் இழக்கச் செய்தார்.  பக்தன் அபிராமி பட்டருக்காக அமாவாசையையே பௌர்ணமி ஆக்கினாள் அம்பாள் அபிராமி.

    பூஜைகள் முடிந்ததும் உணவு உண்டபின் கிளம்பி பம்பாய் திரும்பு முன் எனது பிறந்த ஊரான திருச்சிக்கும் சென்று பார்த்து விட வேண்டும் என்பது எங்கள் திட்டம்.

    அவர் சொன்னார், “லக்ஷ்மி போற வழிலெ கும்பகோணம் தஞ்சாவூர் எல்லாம் வரது.  அங்கெல்லாமும் ஒரொரு நாள் தங்கீட்டுச் செல்லலாம்..  அங்கெ இருக்குற கோயில்களையும் பாத்தா மாதிரி இருக்கும்.  கும்பகோணத்தில் காவேரிலெ குளிச்சூட்டு கும்பேஸ்வரர், சாரங்கபாணி இவாளெயும் தரிசிக்கலாம்” என்று.

    “சரி” என்று தலை ஆட்டினேன்.

    மறு நாள் காலை காவேரிக்குச் சென்றோம் குளிக்க.  அங்கு கேட்ட “அக்கூ… அக்கூ…” என்ற அக்கூ பட்சியில் குரல் என்னை முப்பத்தேழு வருஷம் பின்னிழுத்துச் சென்றது.

    அப்போது எனக்கு வயது பத்தொன்பது.  பியெஸ்ஸி பரீட்சை எழுதிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையோடு நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தேன்.  அக்கா மீனா தன் கணவருடன் கும்பகோணத்தில் இருதாள்.  அவளுக்குத் தலைப் பிரசவம் ஆக இன்னும் சுமார் மூன்று மாதங்கள் இருந்தன.  அவள் மிகவும் பலவீனமாக இருப்பதாகக் கடிதம் எழுதி இருந்தாள்.  நல்லபடியாகப் பிரசவம் ஆக வேண்டுமே என்று அம்மா வேண்டாத தெய்வம் இல்லை.  தாயுமானவர் கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவாள்.  ஆஞ்சனேயர் கோவிலுக்குச் சென்று வடமாலை சாத்துவாள்.

    ஒரு நாள் அம்மா சொன்னாள், “ஏண்டீ லக்ஷ்மி ஒன் டிகிரி கைக்கு வரத்துக்கே இன்னும் ரெண்டு மூணு மாசம் ஆயிடும்.  மீனாக்கு அடுத்த மாசம் சீமந்தம் வறது.  அதெ அவாத்துலெ செய்வா.  அது முடிஞ்சதும் ஒரு நல்ல நாள் பாத்து அவளெ நம்மாத்துக்கு அழெச்சிண்டு வந்துடலாம்.  இந்த ரெண்டு மாசம் நீ அங்கெ போயி அவளுக்கு ஒத்தாசையா இருந்தூட்டு வாயேண்டி.”

    “சரிம்மா” என்றேன் புது ஊர் பார்க்கும் ஆசையிலும் அக்காவைப் பார்க்கும் ஆசையிலும்.

    எனக்கும் மீனாவுக்கும் ஆறு வயது வித்தியாசம்.  எத்தனை நாட்கள் என்னை அவள் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றி வந்திருக்கிறாள்?  வெளியே எங்கு போனாலும் அக்காவின் இடுப்புதான் எனக்கு வண்டி.

    இரண்டு நாட்களுக்குப் பின் கும்பகோணம் வழியாக விழுப்புரம் செல்லும் ஒரு வண்டியில் என்னை பத்திரமாக பெண்கள் பெட்டியில் ஏற்றி விட்டார் அப்பா.

    கும்பகோணத்தில் அத்திம்பேர் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார் (அப்படித்தான் நாங்கள் அழைப்போம் அக்காவின் கணவரை.  மற்றவர்கள் போல மாமா என்றழைத்தால் தாய் மாமன் உரிமையைக் கொண்டாடி விடுவாரோ அவர் என்ற பயமாக இருக்குமோ?)  இருவரும் குதிரை வண்டியில் ஏறி கிழக்கு டபீர் தெருவை அடைந்தோம்.  என்னைப் பார்த்த அக்காவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.  ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டாள்.

    “எப்பிடி வளந்தூட்டேடி நீ?”

    “பின்னெ வளராமெ அப்பிடிய அங்குஷ்டாப்யாம் நமஹன்னு இருக்க முடியுமாக்கா?”

    “இல்லெடி.  ஒன்னெ இடுப்புலெ தூக்கி வெச்சிண்டு வீட்டெச் சுத்தி ஓடிவருவேன் நீ குதெரெ சவாரி போகணும்னு அடம் புடிக்கச்சேல்லாம்.  இப்பொ தூக்கினா என் இடுப்புதான் ஒடிஞ்சு போயிடும.”

    “வாணாங்க்கா.  ஒன் கொழிந்தெயெத் தூக்கி வெச்சுக்க ஒனக்கு இடுப்பு வேணும்.”  கொல்லென்று சிரித்தோம் மூவரும்.

    “மூஞ்சி, கை, கால் எல்லாம் அலம்பிண்டு வாடி. சூடா சாப்பிடலாம்.”  அக்கா சொன்னபடி செய்தேன்.

    எனக்கு மிகவும் பிடித்த உருளைக் கிழங்கு ரோஸ்ட் கறி, கத்தரிக்காய் ரசவாங்கி, கெட்டித் தயிர்.  அக்காவுக்கு தான் எத்தனை ஞாபக சக்தி.  புது வாழ்க்கையில் பழையது எதையும் மறக்க வில்லை அவள்.  அன்று மாலை வரை வீட்டில் பழங் கதைகள் பேசிக் கொண்டு கழிந்தது பொழுது.

    அத்திம்பேர் சொன்னார், “மீனா, லக்ஷ்மி ரெண்டு பேரும் கெளம்புங்கோ.  குபேஸ்வரர், சாரங்கபாணி இவாளெ எல்லாமும் பாத்தூட்டு வரலாம்.”

    அவசர அவசரமாக ஆடை மாற்றிக் கொண்டு கிளம்பினோம்.

    கோவில்களைச் சுற்றிப் பார்த்தபின் அத்திம்பேர் கேட்டார், “லக்ஷ்மி நீ டிகிரி காபி சாப்பிட்டு இருக்கையோ?”

    “டிகிரி காப்பீன்னா?”

    “சுண்டக் காச்சின பாலுலெ அப்பொ எறக்கினெ டிகாக்ஷனெ உட்டுக் கலந்து சக்கெரெ போட்டுக் குடுப்பா.  அதுதான் டிகிரி காப்பி.  அதோடெ டேஸ்டே அலாதி.”

    வெங்கடேஸ்வரா கஃபே உள்ளே நுழைந்தோம்.  காலியாய் இருந்த ஒரு டேபிளில் உட்கார்ந்தோம்.  அடுத்த கணம் அருகில் வந்து விநயமாக, “சாருக்கு என்ன வேணும்?” என்று கேட்ட பையனிடம், “மூணு நெய் ரோஸ்ட் மசாலா தோசை, மூணு டிகிரி காப்பி” என்றார் அத்திம்பேர்.

    “மூணு மசாலா நெய் ரோஸ்ட்……………” என்று அந்தப் பையன் எங்கள் அருகில் இருந்தபடியே கத்தியது என் காதுகளை ‘ரொய்ங்’ என்று துளைத்தது.  மூன்று நிமிஷம் கூட ஆகியிருக்காது.  மசாலா நெய் ரோஸ்ட் குட்டி முழு வாழை இலைகளில் வந்து சேர்ந்தது.  அதை நாங்கள் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடிப்பதற்கும் காப்பி வந்து சேருவதற்கும் சரியாக இருந்தது.  எனக்கு இரு விஷயங்கள் புரியவில்லை.  கிச்சனில் தோசை வார்ப்பவர் காதுகள் என்ன கட்செவியா, எந்த பையன் என்ன பொருளை எவ்வளவு கேட்டான் என்பதை அறிய? பையன் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்டு தயார் செய்து எடுத்துத் தர அவரது நினைவாற்றல் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்?

    வீடு வந்து சேர்ந்த போது இருட்டி விட்டது.  மூன்று பேருக்குமே வயிறு நிரம்பி இருந்ததால் இரவு ஒரு டம்ளர் பாலை குடித்து விட்டுப் படுத்துக் கொண்டோம்.

    அத்திம்பேர், “மீனா நாளெய்க்கி நீ லக்ஷ்மியெக் காவேரிக்குக் கூட்டிண்டு போ.  அங்கெ குளிச்சூட்டு அப்படியே ஆஞ்சநேயர், பக்த விநாயகர், வேத விநாயகர் இவாளெயும் தரிசனம் பண்ணீட்டு வாங்கோ.  காவேரிலெ குளிக்கறச்சே ஜாக்கிரதெ.  ஒத்தர் கையெ ஒத்தர் புடிச்சுக் கோங்கோ.  ரெண்டு நாள் லீவு போட்டதுனாலெ நாளெய்க்கி நான் சீக்கிரமே ஆபீஸ் கெளம்பணும்.  இல்லேன்னா நானே அழெச்சிண்டு போயிருப்பேன் ஒங்களெ” என்றார்.

    “நீங்க கவெலெப் படாமெ ஆபீசுக்கு போயிட்டு வாங்கோன்னா.  நான் என் லக்ஷ்மியெ கை நழுவ உடமாட்டேன்.”

    மறு நாள் அக்காவும் நானும் காவேரிக்குச் சென்றோம்.  திருச்சியில் பார்க்கும் காவேரிக்கும் இங்கு பார்க்கும் காவேரிக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்!  அங்கு அகலமான காவேரி.  அதில் இரண்டு மாதங்கள் போக மற்ற மாதங்களில் முக்காலே மூணு வீசம் மணல்.  ஓர் ஒரமாகத் தண்ணீர்.  இங்கோ குறுகலான ஆறு.  ஆனால் ஆறு பூராவும் தண்ணீர்.  கரையோரம் எல்லாம் அடர்ந்த மரங்கள்.  அவற்றைத் தாண்டி பச்சைப் பசேலென்று வயல் வெளிகள்.  தண்ணீர் சற்றே ஜில்லென்று இருதாலும் குளிக்க சுகமாக இருந்தது.

    எங்கிருந்தோ “அக்கூ… அக்கூ…” என்று ஒரு குரல் கேட்டது.

    “அக்கா அது என்ன சத்தம்?”

    “அது அக்கூ பட்சியோடெ அழு குரல்.  அதோட அக்காவெ ஆத்து வெள்ளம் அடிச்சிண்டு போயிடுத்தாம். தன் அக்காவைத் தேடி அழறதாம் அது.  ஆத்துலெ நெறெய தண்ணி போறப்பொதான் அதோடெ கொரல் கேக்கும்.”

    “பாவம்கா.  அது அக்கா மேலெ எவ்வளோ ஆசெ வெச்சிருக்கும்?”

    ஆஞ்சனேயர், பிள்ளையார் சன்னதிகளி லெல்லாமும் என் காதுகளில் அக்கூ பட்சியின் குரல்தான் ஒலித்துக் கொண்டிருநது.  வீடு வந்த பின்னும் அதே நினைவுதான்.

    நாட்கள் மள மளவென்று ஓடின.  அத்திம்பேருக்கு தான் அக்கா மேல் எவ்வளவு ஆசை?  ஆபீசில் இருந்து திரும்பும் போது மல்லிகையோ, கதம்பமோ வாங்கி வரத் தவறியது இல்லை ஒரு நாளும் அவர்.  அவ்வப்போது காரா சேவை, முறுக்கு, ராயர் கடை போளி இப்படி ஏதாவது ஒன்றும் வரும்.

    பதினைந்து நாட்கள் கட கடவென்று ஓடி விட்டன.

    ஒரு ஞாயிறன்று நான் அம்மாவுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன்.  சத்தமின்றி பூனை போல் நடந்து வந்து என் பின்னிருந்து என்னை இறுக்கக் கட்டி என் கன்னத்தில் முத்தமிட முனைந்தார் என் அத்திம்பேர்.  நான், “அம்மா” என்று அலறினேன்.  என் அலறல் கேட்டு, “என்னடீ ஆச்சு லக்ஷ்மீ?” என்று கத்தியபடி பக்கத்து அறையில் படுத்திருந்த அக்கா அங்கு ஓடி வந்தாள்.  அவள் வந்ததைப் பார்த்த அத்திம்பேர் அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.  ஆனாலும் அவர் கைப் பிடியின் இறுக்கம் தளரவே இல்லை..

    “என்ன செய்யறேள்?  விடுங்கோ அவளெ.”

    “என்னடி செய்யறேன் நான்?  என் பொண்ணு மாதிரிடி அவொ.  ஒரு அப்பா பொண்ணுக்கு முத்தம் கொடுக்கறது தப்பாடீ?”

    தாவி வந்து அக்கா அவர் கைகளைப் பிரிக்கப் பார்த்தாள்.  கைகள் பிரிந்தன.  ஆனால் அவை அடுத்த கணம் நிறை கர்ப்பிணியை வேகமாகத் தள்ளியது சுவ்ற்றுப் பக்கம்.  அக்காவின் பின் மண்டை சுவற்றில் மோதியது.

    “அம்மா….” என்றலறியபடி தரையில் சாய்ந்தாள் அக்கா.  அத்திம்பேர் ஓடிப் போய் அடுத்த் தெருவில் இருந்த ஒரு டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தார்.

    டாக்டர் கையால் அக்காவின் நாடியையும், பின் ஸ்டெத்தா ஸ்கோப்பால் இதயத்ட் துடிப்பையும் பார்த்தார்.  கண் இமைகளைத் திறந்து ஒரு டார்ச் லைட்டை இப்படி அப்படி ஆட்டினார்.

    “அம்மா போயி பத்து நிமிஷம் ஆச்சு” என்று சொன்ன டாக்டர் அக்காவின் தலையை சற்று தூக்கிப் பார்த்தார்.  தரையிலும் தலையிலும் ரத்தம்.  அவர் கண்கள் தன்னிச்சையாக அக்கா கீழே கிடந்த இடத்துக்கருகே இருந்த சுவற்றுப் பக்கம் திரும்பியது.  அங்கு சுவற்றிலும் ரத்தக் கறை.

    “என்ன ஆச்சு?”

    நான் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றேன்.

    “வேகமா வந்தா. சுவத்துலெ இடிச்சுண்டுட்டா.”

    “அப்படியா? யாரு சார் பின் பக்கமா இவ்வொளோ வேகமா நடக்கறாங்க?  இது போலீசு கேசு.  நான் இன்ஃபார்ம் பண்ணலேன்னா நாளெய்க்கு நானும் கம்பி எண்ண வேண்டி வரும்.”

    அவசர அவசரமாக வெளியேறினார் டாக்டர்.  பத்து நிமிஷத்தில் போலீசும் வந்தது.  பின் நடக்க வேண்டியவை நடந்தன.  ஏழாண்டுகள் சிறையில் களி தின்ன பின் இன்று எங்கு இருக்கிறாரோ அவர்.

    “அக்கூ… அக்கூ…” என்ற குரல் என்னை உலுக்கியது.  அந்தப் பறவை போல நானும் “அக்கா… அக்கா…” என்று கத்தவேண்டும் போல இருந்தது.

    “எந்தக் கோட்டெயெப் பிடிக்கப் போறெ நீ?  படிக் கட்டுலெ அப்பிடியே பிரமெ புடிச்சா மாதிரி உக்காந்து இருக்கே?”

    கணவர் குரல் கேட்டு படிக்கட்டை விட்டு எழுந்தேன்.  அவர் பின் நடைப் பிணமாய் நடந்து சென்றேன்.

    Share
  • புரியாத புதிர்

     

    நடராஜன் கல்பட்டு

     

    “சாந்தா நாழியாச்சு.  நான் கெளம்பணும் ஆபீசுக்கு.  கார் ஷெட் கதெவெத் தெற.”

    “இதோ தெறக்கறேன்.”

    ஷெட் கதவு திறக்கிற சத்தம் கேட்கிறது.  கூடவே சாந்தாவின் அலறலும்.  “அய்யய்யோ….. இங்கெ பாருங்க.”

    “என்ன?”

    “ஒரு பையன் நம்ம விட்டு வாசலுலெ கெடெக்கறான்.  யாரு பெத்த புள்ளையோ பாவம்.  உடனே இவனுக்கு வைத்தியம் பாத்துக் காப்பாத்தணுங்க.”

    “கொஞ்சம் தண்ணி கொண்டா.”

    செம்பில் தண்ணி கொண்டு வருகிறாள் சாந்தா.  பையன் முகத்தில் சிறிது தண்ணீர் தெளிக்க அவன் மெல்ல கண்ணைத் திறக்கிறான்.  எனக்கு போன உயிர் திரும்ப வந்தது போல இருந்தது.  கைத் தாங்கலாக அவனைப் பிடித்துத் தூக்கி வீட்டிற்குள் அழைத்துச் சென்று மடக்குக் கட்டிலில் படுக்க வைத்தேன்.  சாந்தா ஒரு டம்ப்ளரில் சூடான பால் கொண்டு வந்து கொடுத்தாள்.  அதை அவனுக்குக் கொடுத்து குடிக்கச் சொன்னேன்.

    குடும்ப வைத்தியருக்கு போன் செய்து அவரை அவசரமாக வீட்டிற்கு வரச் சொன்னேன்.

    “என்ன விஷயம்?  யாருக்கு என்ன ஆச்சு?” கேட்டார் டாக்டர்.

    “நீங்க சட்டுனு வாங்க சொல்றேன்” என்றேன்.

    நல்லவர் அவர்.  உடனே வந்தார்.  விஷயத்தைச் சொல்லி கட்டிலில் படுத்திருந்த பையனைக் காட்டினேன்.  அவனை பரிசோதித்த டாக்டர் சொன்னார், “பட்டினி மயக்கம் தான் இது.  பையன் சாப்பிட்டு இரண்டு நாளாகி இருக்கும்.  சத்தான ஆகாரம் கொடுங்க.  சரியாயிடும்.  சார் கொஞ்சம் நீங்க எங்கூட வாங்க” என்றபடி என்னை வாசலுக்கு அழைத்துச் சென்றார்.

    “நீங்க என்ன காரியம் செஞ்சிருக்கீங்க?”

    “ஏன்?  நல்ல காரியந்தானே செஞ்சிருக்கேன்?  ஒரு சாக இருந்த உயிரெக் காப்பாத்தி இருக்கேன்.’

    “அப்பிடீன்னு நீங்க நினைக்கிறீங்க.  ஆனா போலீசு அப்பிடி நெனெக்காது அவன் ஒங்க வீட்டுள்ளெ வந்து மண்டெயெப் போட்டிருந்தான்னா அடுத்த ஆறு மாசத்துக்கு போலீசு ஸ்டேஷன், கோர்ட்டு, கேசுன்னு அலையணும் நீங்க.

    நீங்க என்ன பண்ணி இருக்கணும்?  அவன் மூஞ்சிலெ தண்ணி தெளிச்சு அவன் கண்ணெத் தொறந்ததும் போலீசுக்கு போனு போட்டிருக்கணும்.  இல்லே சர்க்கார் ஆசுபத்திரி ஏம்புலன்சுக்கு போனு போட்டிருக்கணும்.  சரி நடந்தது நடந்திடிச்சு.  அவனுக்கு ரெண்டு மூணு நாளு சத்தான ஆகாரம் கொடுத்து அவன் ஒடம்பு தேறினதும் அவன் எங்கெ போகணுமோ அங்க அனுப்ச்சி வையுங்க.”

    டாக்டர் போனதும் அவசர அவசரமாக கடைக்கு ஓடி ஹார்லிக்ஸ், பிஸ்கெட், ஆப்பிள், சாத்துக்குடி இவை எல்லாம் வாங்கி வந்தேன்.  சாந்தாவிடம் சொன்னேன் அவனுக்கு அப்பொப்பொ ஹார்லிக்ஸ் கரைச்சுக் குடு.  சாத்துக்குடி ஜூஸ் பிழிஞ்சு குடுன்னு.

    மறு நாள் காலை அவனுக்கு ஒரு டவலும், மாற்று உடையாக எனது ஒரு அரை நிஜார், டீ ஷர்ட், புதிய பனியன், புதிய உள் டிராயர் இவைகளையும், ஒரு சோப்பும் கொடுத்து குளிக்கச் செய்தேன்.

    மதிய உணவுக்கு வந்த போது பையனை விசாரித்தேன் என்ன ஏது என்று.

    “எனக்கு ஊரு மதுரைங்க.  எட்டங் கிளாசு பரீட்சையிலெ ஃபெயிலாயிட்டேன்.  அப்பாருக்குத் தெரிஞ்சா அடி பின்னீடுவாருன்னு பயந்து கிட்டு நானும் இன்னும் ரெண்டு பசங்களுமா வீட்டெ விட்டு ஓடி வந்துட்டோங்க.

    மெட்ராசுக்கு வந்ததும் ஒருத்தன் சொன்னான், ‘வாடா நாம விஜய வாடா போயிடலாம்.  அங்கெ எதுனா வேலெ பாத்துக்கலாம்’ னு.  சரீன்னு சென்ட்ரலு போயி விஜயவாடா வண்டிலெ தொத்திக் கிட்டோம்.  வித்தவுட்டு டிக்கெட்டுதான்.  எங்கெளெப் புடிச்ச டீடீஆரு விஜயவாடாலெ எறக்கி உட்டூட்டாரு.  டேசனுலெ பன்னெ வாங்கி சாப்டூட்டு ப்ளேட்பாரத்துலெ படுத்திருந்தோம்.

    காலேலெ முளிச்சுப் பாத்தா ரெண்டு பசங்களையும் காணும்.  கூடவே என்னோட பையுந்தான்.  அதுலெதான் வெச்சிருந்தேன் ஊட்டுலெந்து யாருக்கும் தெரியாமெ எடுத்துக் கிட்டு வந்த நூத்தம்பது ரூவாயும்.

    ரெண்டு நாளா சுத்தி அலயுறேன், சோறும் தின்னாமெ, எதுனா வேலெ கெடெய்க்குமான்னு.  இங்கெ இருக்குறவங்க பேசுறது எனக்குப் புரியலெ.  நான் பேசுறது அவங்களுக்குப் புரியலெ.”.

    எனக்கு உள்ளூர ஒரு ஆசை.  எனக்குதான் மகன் இல்லையே.  இவனை வீட்டோடு வைத்துக் கொண்டு படிக்க வைத்தால் என்ன என்று.

    “என்ன வேலையானாலும் செய்வெயா?”

    “செய்வேங்க.”

    “சரி அப்பொ நீ இங்கேயே இரு,  என் காரெத் தொடெ.  தோட்டத்துலெ இருக்குற புல்லெப் புடுங்கு.  செடிங்களுக்கு தண்ணி ஊத்து.”  (விட்டின் முன் புறம் 12 அடிக்கு 12 அடி அளவிலான நிலத்தில் ஒரு முசுக்கொட்டைச் செடி.  ஒரு மல்லிகை மற்றும் ஒரு அரளிச் செடி.  பின் புறம் அதே அளவிலான இடத்தில் ஒரு அவரைப் பந்தல்!)

    இரண்டு நாள் கழிந்தது.  பையன் நல்ல தெம்பானான் சாந்தாவின் கவனிப்பில்.

    “சார் நான் ஊருக்கே திரும்பப் போயிடலாம்னு முடிவு செஞ்சிருக்கேங்க.  ஒரு நூறு ரூவாக் குடுத்தீங்கன்னா……….”

    என்னது என் மனக் கோட்டை மணல் கோட்டையாயிடிச்சா?  ஒரு நல்ல காரியம் செய்யப் போறதா நெனெச்சேனே.  சரி.  எது எப்படி நடக்கணுமோ அது அப்படி நடக்கும்.  என்னைத் தேற்றிக் கொண்டேன்.

    “ஒன் கைச் செலவுக்கு முப்பது ரூவா தறேன்.  நாக்பூருலேந்து ஆரெஞ்சு எடுத்துக் கிட்டு மெட்ராஸ் போற லாரிங்க எங்க கம்பெனி பெட்ரோலு பம்புலெதான் டீசல் போட்டுக் கிட்டு கொஞ்ச நாழி தங்கீட்டுப் போவாங்க.  அவுங்க கிட்டெ ஏற்பாடு பண்ணி ஒன்னெ அனுப்பறேன்.  மெட்ராசுலேந்து மதுரைக்கு அவுங்க ஏற்பாடு பண்ணி அனுப்புவாங்க.  சரியா?”

    “சரி சார்.”

    இரவு சாப்பாடு முடிந்தது.  பையனுக்கு மறு நாள் வழியில் சாப்பிட நாலைந்து சப்பாத்தி செய்து நெய்யும் சர்க்கரையுமாகக் கலந்து சுருட்டி ஒரு பொட்டலம் தயார் செய்தாள் சாந்தா.

    இரவு பத்தரை மணிக்கு வீட்டருகில் இருந்த பெட்ரோல் பம்புக்கு அழைத்துச் சென்று மேனேஜர் மல்லா ரெட்டியிடம் விவரத்தைச் சொல்லி பையனை ஜாக்கிரதையாக லாரியில் ஏற்றி விடச் சொல்லி விட்டு வீட்டுக்குத் திரும்பினேன் நிம்மதிப் பெரு மூச்சு விட்டபடி.

    இரவு பன்னிரெண்டு மணிக்கு டெலிபோன் மணி அடித்தது.  அவசர அவசரமாகப் போய் அதை எடுத்தேன்.  ஊருலெ அம்மாவுக்கோ, இல்லே வேறெ யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் போயிருக்குமோ?  கவலையோடு போனை எடுத்தால்………….

    போனில் மல்லா ரெட்டி.  “சார் லாரி பதினோரு மணிக்கு வந்துது.  நான் லாரி ட்ரைவரிடம் ஏற்பாடு செஞ்சிட்டு பையனை ஒப்படைச்சீட்டு பம்புக்கு வந்தேன்.  ட்ரைவரும் பையனை லாரியிலே உகாத்தீட்டு சாப்பிட்டு வரப் போனாரு.

    ட்ரைவரு பதினொண்ணரை மணிக்கு வந்தாரு.  அப்போலேந்து இங்கே பையனெத் தேடறோம்.  காணூம்.  ஒருக்கால் ஒங்க வீட்டுக்கே வந்திருக்கானோன்னு தான் போனு போட்டேன்.”

    “இங்கெ வரலியே.”

    “சார், பையன் பட்டினிலெ ஒங்க ஊட்டு வாசலுலெ உளுந்தது உண்மையா இருக்கும்.  அப்பால அவன் சொன்னதெல்லாம் கதெயா இருக்கும்.  வீட்டுலெ வெலெ ஒசந்த சாமானுங்க பத்திரமா இருக்கான்னு பாத்துக் கோங்க சார்.”

    இன்று வரை எனக்கு அந்தப் பையன் ஓடிப் போனது ஒரு புரியாத புதிர்தான்.

     

    பி.கு.  கதையல்ல இது.  நிஜம்.

     

     

    Share
  • ஒரு கண்ணு வெச்சுக்கணும்

    நடராஜன் கல்பட்டு

    “இதெப் பாருங்கோ.  இருபத்து நாலு மணி நேரமும் அந்தக் கம்ப்யூடரெக் கட்டிண்டு அழாதீங்கோ.”

     

    “கம்ப்யூடரெக் கட்டிண்டு எங்கேடீ அழறேன் நான்?  ஒன்னெக் கட்.”

     

    “கட் கட்.  என்ன சொல்ல வந்தேள்?  என்னெக் கட்டிண்டூ….. அழறேளா?  இந்த நிமிஷத்துலேந்து காப்பி, டிபன், சாப்பாடு கட்.  எம் பாட்டெ நான் பாத்துக்கறேன்.  ஒங்க பாட்டெ நீங்க பாத்துக் கோங்கோ.”

     

    “அய்யையோ நான் அப்பிடி சொல்ல வரலேடீ.  இன்னிக்கி ஒத்தர் சனி தசையோட தாக்கம் இப்போ கன்னி ராசிக்காராளுக்கு இருக்குன்னு எழுதி இருந்தார்.  ஒருக்கால் அந்த சனிதான் என் நாக்குலே வந்து ஒக்காந்து இருக்கணும்.  அதுனாலெ தான் என்னெ அறியாமெ அந்த வார்த்தெ என் வாய்லெ வந்துடுத்துடீ.  நான் இப்போ என்ன பண்ணணுங்கறே?  அதெத் தெளிவா சொல்லு.  நான் பண்ணறேனா இல்லியா பாரு.”

     

    “எனக்கு ஒத்தாசைக்கு புதுசா ஒரு பொண்ணெ வேலைக்கு வெச்சிருக்கேன்.  நம்பிக்கெ வரமுட்டும் நீங்க அவ மேலெ ஒரு கண்ணு வெச்சுக்கோங்கோ.”

     

    “ஒரு கண்ணு வெச்சுக்கணும்னா?”

     

    “ஒரு கண்ணு வெச்சுக்கணும்னா, அவொ வீட்டெப் பெறுக்கித் தொடைக்க ஒவ்வொரு உள்ளெயும் போற போது அவொ பின்னாடி எதோ சாமான் எடுக்கப் போறாப்புளெ போங்கோ.  ஸ்டீல் அலமாரிலே என் சங்கிலி, வளெ எல்லாம் வெச்சிருக்கேன்.  அதோட சாவியெ எத்தெனெ தடவெ சொன்னாலும் அது மேலெயே வெச்சூடறேள் நீங்க.  எப்பொவும் ஒங்க சட்டெலெயே காசெ வெச்சு அப்பிடியே தொறெந்த அலமாரிலே தொங்க விடறேள்.  காலம் கெட்டுக் கெடெக்க்குன்னா.  நம்ம சாமானெ நாம தான்னா ஜாக்கிறதையாப் பாத்துக்கணும்.”

    “கரெக்டுடீ.  அப்பிடியே பண்ணறேன் நாளேலேந்து.  இப்பொ நான் ஒக்காரலாமோல்யோ கம்ப்யூடர்லே?”

    “என்னமாவது பண்ணுங்கோ.”

    நான்கு நாட்களுக்குப் பின்:

    “அம்மா அய்யா மேலெ ஒரு கண்ணு வெச்சுக்கோம்மா.”

    “என்னடீ சொல்லறே?”

    “நான் எந்த அறைக்குள்ளெ போனாலும் எம் பின்னாடியே வறாரு அய்யா.  அது மட்டும் இல்லேம்மா.  அப்பொப்போ அலமாரிலேந்து ஏதோ எடுக்கறாப்புளெ எம் பின்னாடி வந்து குனியுறாரு.  அப்பொ அவரு கையி எம்மேல படுதோன்னும் தோணுதும்மா.”

    “சீச்சீ அதெல்லாம் ஒண்ணும் இருக்காதுடீ.  அவரு எதுனா அலமாரிலேந்து எடுக்க வந்திருப்பாரு.  நீ போயி அதெத் தப்பாப் புரிஞ்சிண்டு இருக்கேடீ.”

    “அம்மா நீ ரொம்பவே வெள்ளந்தியா இருக்கேம்மா.  இப்பிடி இருந்தா பக்கத்து தெரு பங்கஜமாட்டம் ஒம் புருசனெ ஒரு நாளு கோட்டெ உட்டூடுவேம்மா.  பங்கஜத்தோட புருசன் அவுங்க ஊட்டுக்கு வந்த வேலெக்காரியோட ஓடிப் போயிட்டாரு தெரியுமில்லே?”

     

     

    Share
  • பச்சைக் கிளி

    நடராஜன் கல்பட்டு

     ரகு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிந்து வந்தான்.  எங்கு போவதானாலும் காரில் தான் பயணம்.

     அவனுடைய சித்தப்பா சித்தி விழுப்புரத்தில் வசித்து வந்தனர்.  அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.  அதனால் தானோ என்னவோ ரகு மீது அவர்களுக்கு அளவு கடந்த பாசம்.  ரகுவுக்கும் அவர்கள் மீது ஒரு தனி மரியாதை.  எப்போது விழுப்புரம் வழியாகச் சென்றாலும் சித்தப்பா வீட்டிற்குச் செல்லாமல் இருந்ததில்லை.

    அப்படி ஒரு முறை சென்றபோது:

    “வா, ரகு.  எப்படி இருக்கே?  அப்பா அம்மா சௌக்யமா?” என்றபடி அவனை வரவேற்றாள் சித்தி.

     அவர்கள் குடி இருந்த வீடு ‘ஸ்டோர்’ என்று சொல்வார்களே அப்படிப் பட்ட ஒன்று.  ‘ஸ்டோர்’ வீடு என்றால் என்ன தெரியுமா?  தெருவிலிருந்து கதவு வழியே நுழைந்தால் வரிசையாக ஐந்தாறு வீடுகள் இருக்கும்.  இந்த வீடுகளுக்கெல்லாம் பொதுவாக செங்கல் பதித்த நீண்ட முற்றம்.  கொல்லைப் புரத்திலோ வாசல் புரத்திலோ ஒரு பொது அறை உண்டு.  குடி இருப்பவர்களின் வீட்டில் உள்ள வயது வந்த பெண்கள் மாத விடாய் நாட்களைக் கழிக்க அந்த பொது அறை.  கொல்லைப் புரம் ஒரு பொது குளியல் அறை, கிணறு மற்றும் கழிப்பறை.  ஒவ்வொரு வீட்டிற்கும் வாசலில் ஒரு திண்ணை.   வீட்டினுள்ளே ஒரு சமையல் அறை, ஒரு படுக்கை அறை.  சமையல் அறையில் ஒரு பக்கத்தில் பாத்திரங்கள் சுத்தம் செய்யும் இடம்.  அவ்வளவே.

     உள்ளே நுழைந்தவுடன் சூடான காப்பி வந்தது.  சித்தி சொன்னாள், “ரகு காப்பி சாப்டூட்டு குளிச்சுட்டு வா.  பத்து நிமிஷத்துலே உனக்குப் புடிச்ச கத்தரிக்கா ரசவாங்கி ரெடி ஆயிடும்.”

     “சித்தி நான் கெளம்பற போதே குளிச்சுட்டு தான் கெளம்பினேன்.”

     “சரி.  இந்தா இந்த பழய ஆனந்த விகடனப் பாத்துண்டு இரு.  சாதமெல்லாம் ரெடியா இருக்கு.  ரசவாங்கி மட்டும் பண்ணிடறேன்.  நீ ட்ரெஸ்ஸ மாத்திண்டு வா.”

     “சரி” என்று சொல்லிய ரகு, ஒரு வேஷ்டியைக் கட்டிக் கொண்டு கையில் ஆனந்த விகடனுடன் திண்ணையில் வந்து அமர்ந்தான்.

     அவன் உட்கார்ந்த அடுத்த நிமிஷமே எங்கிருந்தோ பறந்து வந்தது ஒர் பச்சைக் கிளி.  பதினாறு வயதிருக்கும்.  அரக்கு பார்டருடன் கூடிய பச்சை நிறப் பட்டுப் பாவாடை, சட்டை, மஞ்சள் நிற மேலாக்கு இவற்றுடன் தனது கைகளிரண்டையும் ஒரு கிளி பறப்பது போல் விரித்து வைத்த படி வளைந்து வளைந்து ஓடிவந்த அவள் ரகுவின் கையில் உள்ள ஆனந்த விகடனைப் பார்த்தவுடன், “ஹையா ஆனந்த விகடன்” என்று கத்தியபடி அதைப் பிடுங்கி எறிந்து விட்டு, “ஹஹ்ஹா” என்று குரல் எழுப்பிய படி மீண்டும் வந்தபடியே பறந்து சென்றது அந்த பச்சைக் கிளி.

     ரகுவுக்கு சில வினாடிகள் ஒன்றும் புரியவில்லை.  பின்னர் எழுந்து சென்று ஆனந்த விகடனை எடுத்து வந்து திண்ணயில் உட்கார்ந்தான்.

     சற்று நேரத்திற்கெல்லாம் சித்தி, “ரகு சாப்பாடு ரெடி.  உள்ளே வறயா?” என்றாள்.

     “சித்தி இங்கெயே ஒரு தட்டுலே போட்டுக் கொண்டு வந்துடேன்.”

     சாப்பாடு வந்தது.  ரகு அதை ருசித்துக் கொண்டே, “சித்தி உன் கை மணமே தனி.  கத்திரிக்காய் ரசவாங்கி சாப்பிடணும்னா இங்கெதான் வரணும்.”

     திடீரென மறுபடி ‘கீ… கீ…’ என்று கத்தியபடி பறந்து வந்தது பச்சைக் கிளி.  ரகுவின் கையிலிருந்த தட்டைப் பார்த்ததும், “ஹையா கத்திரிக்காத் தான்”  என்று கத்தியபடி ஒரு தானைக் கையில் எடுத்து வாயில் போட்டுக் கொண்டது.  பின் விரித்த கைகளுடன் வளைந்து வளைந்து “கீ…கீ…”  என்று கத்தியபடி ஓடியது.

     மூன்றாவது வீட்டுத் திண்ணையில் சில குழந்தைகள் தாயக் கட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர்.  அங்கு சென்றடைந்த பச்சைக் கிளி கட்டங்களில் இருந்த சோழி, புளியங்க்கொட்டை இவற்றைக் கைலத்துவிட்டு, “ஹஹ்ஹா”  என்று கத்தியபடி மீண்டும் பறந்தது.

     விளயாடிக் கொண்டு இருந்த சிறுவர் சிறுமிகள்,  ‘பயித்தியம்’ ‘பயித்தியம்’.  ஏன் இங்கே வந்தே?  ஒங்க வீட்டுக்கே போ” என்று கத்தினர்.

     ஐந்தாவது வீட்டிலிருந்து அப்போது வெளியே வந்த ஒரு மாமி, “சனியனே…சனியனே…ஏண்டி ஒன்னெக் கட்டிப் போட்டு இருந்தேனே.  யாருடீ கட்டெ அவுத்து உட்டா?  வாடி உள்ளே” என்றபடி பச்சைக் கிளியின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு தன் வீட்டிற்குள்ளே மறைந்தாள்.

     “சித்தி, அந்தக் குழந்தைக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி அது நடந்துக்கறது?” என்றான் ரகு.

     சித்தி ஆரம்பித்தாள்.  “பாவம் அந்தப் பொண்ணு.  ரெண்டு வருஷத்துக்கு முன்னே ஒம்போதாங்க்ளாஸ் படிச்சிண்டு இருந்தா.  கால் வருஷப் பரீக்ஷை  நடந்துண்டு இருக்கறப்போ ஒரு நாள் கொஞ்சம் சீக்கிரமாவே ஸ்கூல் போய்ட்டா.  க்ளாஸ்ரூம் கதவு தெறக்காததுனாலே ஒரு மரத்தடிலே ஒக்காந்து படிச்சிண்டு இருந்தா.

     அப்போ அங்கே வந்த ஒரு பத்தாங்க்ளாஸ் பையன் அவளெக் கட்டிப் புடிச்சு முத்தம் கொடுத்தான்னு மத்த பொண்ணுங்கள்ளாம் சொன்னா.  பாவம் மீனாக்ஷி.  அன்னிலேருந்து இப்படி ஆயிட்டா.  அன்னியோட அவ படிப்பும் நின்னு போச்சு.

     அவ அப்பா அம்மா பாக்காத வயித்தியம் இல்லே.  வேண்டிக்காத தெய்வம் இல்லே.  எப்பொதான் அந்த ஆண்டவன் கண்ணு தொறப்பானோ தெரிலே.”

     “ஆண்டவா உனக்குக் கண்ணே இல்லையா?  இந்தப் பச்சைக் கிளிக்கு இப்படி ஒரு சோதனையா?” என்று மனதில் எண்ணியபடி மீதி சாப்பாட்டை விருப்பின்றி  சாப்பிட்டு முடித்தான் ரகு.

     “ரகு நான் படுக்கை போடறேன். காரை ஓட்டிண்டு வந்தது ஒனக்குக் களப்பா இருக்கும். கொஞ்ச நாழி ரெஸ்ட் எடுத்துண்டுட்டு சாயங்காலமாக் கிளம்பிப் போகலாம்”, என்றாள் சித்தி.  ரகுவும் உள்ளே சென்று படுத்துக் கொண்டான். ஆனால் தூக்கம் வரவில்லை.

     மீண்டும் மீண்டும் ஒரே எண்ணம் மனத் திரையில்.  ‘இந்த சின்னம் சிறிசுக்கு இப்படி ஒரு கஷ்டமா?  ஆண்டவா உனக்குக் கண்ணே இல்லையா?’ என்று.

     மணி மூன்றாயிற்று.  ரகு பேன்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு கிளம்பத் தயாரானான்.  அப்போது மீனாக்ஷியின் அம்மா, “மீனா இங்கே வந்தாளா?’ என்று கேட்டபடி ஓடி வந்தாள்.  “அரை மணி நேரமா அவளக் காணும்.  எங்கே போய்ட்டாளோ தெரியலயே,” என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது.

     ரகு, “சித்தி நான் போய்ட்டு வறேன்.  சித்தப்பா வந்தா சொல்லிடு,” என்றபடி வாசலை அடைந்தான்.

     “ரகு, இன்னும் ஒரு அரை மணி நேரத்துக்குள்ளே சித்தப்பா வந்துடுவா.  கொஞ்சம் வெயிட் பண்ணேன்.”

     “நான் இருட்டுக்கு முன்னே மெட்ராஸ் போய்ச்சேரணும்னு பாக்கறேன் சித்தி.  அடுத்த தடவே வரெச்சே ஒரு நாள் பூரா தங்கறாப்ளே வறேன்.”

     “மெட்ராஸ்லேந்து திரும்பிப் போறெச்சே வரயா?”

     “இல்லே சித்தி. திரும்பிப் போறச்சே வேற வழியால போகலாம்னு யோசனை பண்ணிண்றுக்கேன்.”

     சித்தியின் பாசம் கலந்த உபசரிப்பு ‘வா…வா’ என்றாலும் பச்சைக் கிளியின் பரிதவிப்பு பற்றிய எண்ணம் அவனை ‘வராதே…வராதே’ என்று தடுத்தது.

     ரகு, சித்தி வீட்டிலிருந்து கிளம்பி ஐந்து நிமிஷம் கூட ஆகியிருக்காது.  ஒரு நூறடி தூரத்தில் கைகளை விரித்தபடி பச்சைக் கிளி ஓடிக்கொண்டிருந்தாள்.  சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் பருந்து போல அவள் மீது பாய்ந்தனர்.  அவர்கள் மோதியதில் மீனாக்ஷி கீழே விழ ஒருவன் அவளது மேலாக்கைப் பிடித்து இழுத்தான்.  மற்றவன் அவளது சட்டையைப் பிடித்து இழுக்க அது சற்று கிழிந்தது.

     அதற்குள் அங்கு சென்றடைந்த ரகு காரை விட்டு இறங்கி அந்த சிறுவர்களை பலமாக அடித்து உதைத்தான்.  சிறுவர்கள் ஓடி மறைந்தனர்.  தரையில் கிடந்த மீனாக்ஷியை கையைக் கொடுத்துத் தூக்கினான்.  பின் அவளது மேலாக்கை அவள் மீது போர்த்தி அவள் மீது ஒட்டிக் கொண்டிருந்த புழுதியைத் தட்டினான்.  பிறகு கைத்தாங்கலாக அவளை காருக்குள் ஏற்றி உட்கார வைத்தான்.

     சில வினாடிகள் பச்சைக் கிளியின் உடலெல்லாம் மலேரியாக் காய்ச்சல் வந்தது போல நடுங்கியது.  மீனாக்ஷி பேச ஆரம்பித்தாள், “அங்கிள் ஒங்கள மாதிரி நல்லவா இருக்கற இந்த உலகத்துலே இந்த மாதிரி கெட்டவாள் எல்லாம் ஏன் இருக்கா?”

     சிறு இடைவெளிக்குப் பின் தொடர்ந்தாள்  பேச்சை மீனாக்ஷி. “அங்கிள், ஆத்துக்குப் போனதும் நடந்ததை அம்மா கிட்டே அப்படியே சொல்லாதேங்கோ.  அம்மாவாலே அதெத் தாங்கிக்கவே முடியாது.  பாவம் அம்மா.  உயிரே போனாலும் போயிடும்.  ரோடுலே ஓடறச்சே கல் தடுக்கி கீழே விழுந்துட்டேன்.  ரோடு ஓரத்துலே இருந்த முள் செடிலே மாட்டி சட்டை கிழிஞ்சுடுத்துன்னு  சொல்லுங்கோ.”

     மற்றுமொரு இடைவெளிக்குப்பின், “அங்கிள், அப்பா அம்மா கிட்ட என்னை மறுபடியும் ஸ்கூல்லே சேக்கச் சொல்லுங்கோ.  எனக்கு நெறய படிச்சு சரோஜினி நாய்டு, மேதா பட்கர், கிரண் பேடி இவா மாதிரி வரணும்னு ஆசை,” என்றது பச்சைக் கிளி.

     “ஆண்டவா இந்தப் பிஞ்சு உள்ளத்தில்தான் எத்தனை பாசம்.  எத்தனை ஆசை.  சற்று முன்புதான் ‘உனக்குக் கண் இல்லையா?’ என்று கேட்டேன். கண்கள் மட்டுமல்ல, காதுகளும் உனக்கு இருக்கிறது என்பதைக் காட்டி விட்டாய்.  தாயே மீனாக்ஷி நீ உன் பெயர் கொண்ட இந்தக் குழந்தையின் ஆசையையும் பூர்த்தி செய்து விடு”, என வேண்டிக்கொண்டான் ரகு.

     வீடு வந்ததும் மீனாக்ஷி கேட்டுக் கொண்டபடியே அவள் அம்மாவிடம் சொன்னான் ரகு.

     மீனாக்ஷி, “அம்மா நான் ரோடுலே ஒடிண்டு இருந்தப்போ கல் தடுக்கி விழுந்துட்டேன்.  அங்கிள்தான் என்னத் தூக்கி விட்டு ஆத்துக்கு அழைச்சிண்டு வந்தாம்மா,” என்றாள்.   மகள் கோர்வையாகப் பேசுவதைப்   பார்த்து அவள் அம்மாவுக்கு ஒரே அதிர்ச்சி, ஆச்சரியம்.

     ரகு காரில் ஏறியபோது அவனுக்கு வழியனுப்ப வாசலுக்கு வந்தவர்கள் நான்கு பேர், சித்தி, மினாக்ஷி மற்றும் அவளது அப்பா, அம்மா.

     மினாக்ஷி, “பை அங்கிள்.  நீங்க மறுபடியும் எங்க ஊருக்குக் கட்டாயம் வரணும்,” என்றாள் கைகளை ஆட்டியபடி.

     “கட்டாயம் வருவேம்மா,” என்றபடி காரைக் கிளப்பினான் ரகு.

    Share