பச்சைக் கிளி
நடராஜன் கல்பட்டு
ரகு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிந்து வந்தான். எங்கு போவதானாலும் காரில் தான் பயணம்.
அவனுடைய சித்தப்பா சித்தி விழுப்புரத்தில் வசித்து வந்தனர். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் தானோ என்னவோ ரகு மீது அவர்களுக்கு அளவு கடந்த பாசம். ரகுவுக்கும் அவர்கள் மீது ஒரு தனி மரியாதை. எப்போது விழுப்புரம் வழியாகச் சென்றாலும் சித்தப்பா வீட்டிற்குச் செல்லாமல் இருந்ததில்லை.
அப்படி ஒரு முறை சென்றபோது:
“வா, ரகு. எப்படி இருக்கே? அப்பா அம்மா சௌக்யமா?” என்றபடி அவனை வரவேற்றாள் சித்தி.
அவர்கள் குடி இருந்த வீடு ‘ஸ்டோர்’ என்று சொல்வார்களே அப்படிப் பட்ட ஒன்று. ‘ஸ்டோர்’ வீடு என்றால் என்ன தெரியுமா? தெருவிலிருந்து கதவு வழியே நுழைந்தால் வரிசையாக ஐந்தாறு வீடுகள் இருக்கும். இந்த வீடுகளுக்கெல்லாம் பொதுவாக செங்கல் பதித்த நீண்ட முற்றம். கொல்லைப் புரத்திலோ வாசல் புரத்திலோ ஒரு பொது அறை உண்டு. குடி இருப்பவர்களின் வீட்டில் உள்ள வயது வந்த பெண்கள் மாத விடாய் நாட்களைக் கழிக்க அந்த பொது அறை. கொல்லைப் புரம் ஒரு பொது குளியல் அறை, கிணறு மற்றும் கழிப்பறை. ஒவ்வொரு வீட்டிற்கும் வாசலில் ஒரு திண்ணை. வீட்டினுள்ளே ஒரு சமையல் அறை, ஒரு படுக்கை அறை. சமையல் அறையில் ஒரு பக்கத்தில் பாத்திரங்கள் சுத்தம் செய்யும் இடம். அவ்வளவே.
உள்ளே நுழைந்தவுடன் சூடான காப்பி வந்தது. சித்தி சொன்னாள், “ரகு காப்பி சாப்டூட்டு குளிச்சுட்டு வா. பத்து நிமிஷத்துலே உனக்குப் புடிச்ச கத்தரிக்கா ரசவாங்கி ரெடி ஆயிடும்.”
“சித்தி நான் கெளம்பற போதே குளிச்சுட்டு தான் கெளம்பினேன்.”
“சரி. இந்தா இந்த பழய ஆனந்த விகடனப் பாத்துண்டு இரு. சாதமெல்லாம் ரெடியா இருக்கு. ரசவாங்கி மட்டும் பண்ணிடறேன். நீ ட்ரெஸ்ஸ மாத்திண்டு வா.”
“சரி” என்று சொல்லிய ரகு, ஒரு வேஷ்டியைக் கட்டிக் கொண்டு கையில் ஆனந்த விகடனுடன் திண்ணையில் வந்து அமர்ந்தான்.
அவன் உட்கார்ந்த அடுத்த நிமிஷமே எங்கிருந்தோ பறந்து வந்தது ஒர் பச்சைக் கிளி. பதினாறு வயதிருக்கும். அரக்கு பார்டருடன் கூடிய பச்சை நிறப் பட்டுப் பாவாடை, சட்டை, மஞ்சள் நிற மேலாக்கு இவற்றுடன் தனது கைகளிரண்டையும் ஒரு கிளி பறப்பது போல் விரித்து வைத்த படி வளைந்து வளைந்து ஓடிவந்த அவள் ரகுவின் கையில் உள்ள ஆனந்த விகடனைப் பார்த்தவுடன், “ஹையா ஆனந்த விகடன்” என்று கத்தியபடி அதைப் பிடுங்கி எறிந்து விட்டு, “ஹஹ்ஹா” என்று குரல் எழுப்பிய படி மீண்டும் வந்தபடியே பறந்து சென்றது அந்த பச்சைக் கிளி.
ரகுவுக்கு சில வினாடிகள் ஒன்றும் புரியவில்லை. பின்னர் எழுந்து சென்று ஆனந்த விகடனை எடுத்து வந்து திண்ணயில் உட்கார்ந்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம் சித்தி, “ரகு சாப்பாடு ரெடி. உள்ளே வறயா?” என்றாள்.
“சித்தி இங்கெயே ஒரு தட்டுலே போட்டுக் கொண்டு வந்துடேன்.”
சாப்பாடு வந்தது. ரகு அதை ருசித்துக் கொண்டே, “சித்தி உன் கை மணமே தனி. கத்திரிக்காய் ரசவாங்கி சாப்பிடணும்னா இங்கெதான் வரணும்.”
திடீரென மறுபடி ‘கீ… கீ…’ என்று கத்தியபடி பறந்து வந்தது பச்சைக் கிளி. ரகுவின் கையிலிருந்த தட்டைப் பார்த்ததும், “ஹையா கத்திரிக்காத் தான்” என்று கத்தியபடி ஒரு தானைக் கையில் எடுத்து வாயில் போட்டுக் கொண்டது. பின் விரித்த கைகளுடன் வளைந்து வளைந்து “கீ…கீ…” என்று கத்தியபடி ஓடியது.
மூன்றாவது வீட்டுத் திண்ணையில் சில குழந்தைகள் தாயக் கட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு சென்றடைந்த பச்சைக் கிளி கட்டங்களில் இருந்த சோழி, புளியங்க்கொட்டை இவற்றைக் கைலத்துவிட்டு, “ஹஹ்ஹா” என்று கத்தியபடி மீண்டும் பறந்தது.
விளயாடிக் கொண்டு இருந்த சிறுவர் சிறுமிகள், ‘பயித்தியம்’ ‘பயித்தியம்’. ஏன் இங்கே வந்தே? ஒங்க வீட்டுக்கே போ” என்று கத்தினர்.
ஐந்தாவது வீட்டிலிருந்து அப்போது வெளியே வந்த ஒரு மாமி, “சனியனே…சனியனே…ஏண்டி ஒன்னெக் கட்டிப் போட்டு இருந்தேனே. யாருடீ கட்டெ அவுத்து உட்டா? வாடி உள்ளே” என்றபடி பச்சைக் கிளியின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு தன் வீட்டிற்குள்ளே மறைந்தாள்.
“சித்தி, அந்தக் குழந்தைக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி அது நடந்துக்கறது?” என்றான் ரகு.
சித்தி ஆரம்பித்தாள். “பாவம் அந்தப் பொண்ணு. ரெண்டு வருஷத்துக்கு முன்னே ஒம்போதாங்க்ளாஸ் படிச்சிண்டு இருந்தா. கால் வருஷப் பரீக்ஷை நடந்துண்டு இருக்கறப்போ ஒரு நாள் கொஞ்சம் சீக்கிரமாவே ஸ்கூல் போய்ட்டா. க்ளாஸ்ரூம் கதவு தெறக்காததுனாலே ஒரு மரத்தடிலே ஒக்காந்து படிச்சிண்டு இருந்தா.
அப்போ அங்கே வந்த ஒரு பத்தாங்க்ளாஸ் பையன் அவளெக் கட்டிப் புடிச்சு முத்தம் கொடுத்தான்னு மத்த பொண்ணுங்கள்ளாம் சொன்னா. பாவம் மீனாக்ஷி. அன்னிலேருந்து இப்படி ஆயிட்டா. அன்னியோட அவ படிப்பும் நின்னு போச்சு.
அவ அப்பா அம்மா பாக்காத வயித்தியம் இல்லே. வேண்டிக்காத தெய்வம் இல்லே. எப்பொதான் அந்த ஆண்டவன் கண்ணு தொறப்பானோ தெரிலே.”
“ஆண்டவா உனக்குக் கண்ணே இல்லையா? இந்தப் பச்சைக் கிளிக்கு இப்படி ஒரு சோதனையா?” என்று மனதில் எண்ணியபடி மீதி சாப்பாட்டை விருப்பின்றி சாப்பிட்டு முடித்தான் ரகு.
“ரகு நான் படுக்கை போடறேன். காரை ஓட்டிண்டு வந்தது ஒனக்குக் களப்பா இருக்கும். கொஞ்ச நாழி ரெஸ்ட் எடுத்துண்டுட்டு சாயங்காலமாக் கிளம்பிப் போகலாம்”, என்றாள் சித்தி. ரகுவும் உள்ளே சென்று படுத்துக் கொண்டான். ஆனால் தூக்கம் வரவில்லை.
மீண்டும் மீண்டும் ஒரே எண்ணம் மனத் திரையில். ‘இந்த சின்னம் சிறிசுக்கு இப்படி ஒரு கஷ்டமா? ஆண்டவா உனக்குக் கண்ணே இல்லையா?’ என்று.
மணி மூன்றாயிற்று. ரகு பேன்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு கிளம்பத் தயாரானான். அப்போது மீனாக்ஷியின் அம்மா, “மீனா இங்கே வந்தாளா?’ என்று கேட்டபடி ஓடி வந்தாள். “அரை மணி நேரமா அவளக் காணும். எங்கே போய்ட்டாளோ தெரியலயே,” என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது.
ரகு, “சித்தி நான் போய்ட்டு வறேன். சித்தப்பா வந்தா சொல்லிடு,” என்றபடி வாசலை அடைந்தான்.
“ரகு, இன்னும் ஒரு அரை மணி நேரத்துக்குள்ளே சித்தப்பா வந்துடுவா. கொஞ்சம் வெயிட் பண்ணேன்.”
“நான் இருட்டுக்கு முன்னே மெட்ராஸ் போய்ச்சேரணும்னு பாக்கறேன் சித்தி. அடுத்த தடவே வரெச்சே ஒரு நாள் பூரா தங்கறாப்ளே வறேன்.”
“மெட்ராஸ்லேந்து திரும்பிப் போறெச்சே வரயா?”
“இல்லே சித்தி. திரும்பிப் போறச்சே வேற வழியால போகலாம்னு யோசனை பண்ணிண்றுக்கேன்.”
சித்தியின் பாசம் கலந்த உபசரிப்பு ‘வா…வா’ என்றாலும் பச்சைக் கிளியின் பரிதவிப்பு பற்றிய எண்ணம் அவனை ‘வராதே…வராதே’ என்று தடுத்தது.
ரகு, சித்தி வீட்டிலிருந்து கிளம்பி ஐந்து நிமிஷம் கூட ஆகியிருக்காது. ஒரு நூறடி தூரத்தில் கைகளை விரித்தபடி பச்சைக் கிளி ஓடிக்கொண்டிருந்தாள். சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் பருந்து போல அவள் மீது பாய்ந்தனர். அவர்கள் மோதியதில் மீனாக்ஷி கீழே விழ ஒருவன் அவளது மேலாக்கைப் பிடித்து இழுத்தான். மற்றவன் அவளது சட்டையைப் பிடித்து இழுக்க அது சற்று கிழிந்தது.
அதற்குள் அங்கு சென்றடைந்த ரகு காரை விட்டு இறங்கி அந்த சிறுவர்களை பலமாக அடித்து உதைத்தான். சிறுவர்கள் ஓடி மறைந்தனர். தரையில் கிடந்த மீனாக்ஷியை கையைக் கொடுத்துத் தூக்கினான். பின் அவளது மேலாக்கை அவள் மீது போர்த்தி அவள் மீது ஒட்டிக் கொண்டிருந்த புழுதியைத் தட்டினான். பிறகு கைத்தாங்கலாக அவளை காருக்குள் ஏற்றி உட்கார வைத்தான்.
சில வினாடிகள் பச்சைக் கிளியின் உடலெல்லாம் மலேரியாக் காய்ச்சல் வந்தது போல நடுங்கியது. மீனாக்ஷி பேச ஆரம்பித்தாள், “அங்கிள் ஒங்கள மாதிரி நல்லவா இருக்கற இந்த உலகத்துலே இந்த மாதிரி கெட்டவாள் எல்லாம் ஏன் இருக்கா?”
சிறு இடைவெளிக்குப் பின் தொடர்ந்தாள் பேச்சை மீனாக்ஷி. “அங்கிள், ஆத்துக்குப் போனதும் நடந்ததை அம்மா கிட்டே அப்படியே சொல்லாதேங்கோ. அம்மாவாலே அதெத் தாங்கிக்கவே முடியாது. பாவம் அம்மா. உயிரே போனாலும் போயிடும். ரோடுலே ஓடறச்சே கல் தடுக்கி கீழே விழுந்துட்டேன். ரோடு ஓரத்துலே இருந்த முள் செடிலே மாட்டி சட்டை கிழிஞ்சுடுத்துன்னு சொல்லுங்கோ.”
மற்றுமொரு இடைவெளிக்குப்பின், “அங்கிள், அப்பா அம்மா கிட்ட என்னை மறுபடியும் ஸ்கூல்லே சேக்கச் சொல்லுங்கோ. எனக்கு நெறய படிச்சு சரோஜினி நாய்டு, மேதா பட்கர், கிரண் பேடி இவா மாதிரி வரணும்னு ஆசை,” என்றது பச்சைக் கிளி.
“ஆண்டவா இந்தப் பிஞ்சு உள்ளத்தில்தான் எத்தனை பாசம். எத்தனை ஆசை. சற்று முன்புதான் ‘உனக்குக் கண் இல்லையா?’ என்று கேட்டேன். கண்கள் மட்டுமல்ல, காதுகளும் உனக்கு இருக்கிறது என்பதைக் காட்டி விட்டாய். தாயே மீனாக்ஷி நீ உன் பெயர் கொண்ட இந்தக் குழந்தையின் ஆசையையும் பூர்த்தி செய்து விடு”, என வேண்டிக்கொண்டான் ரகு.
வீடு வந்ததும் மீனாக்ஷி கேட்டுக் கொண்டபடியே அவள் அம்மாவிடம் சொன்னான் ரகு.
மீனாக்ஷி, “அம்மா நான் ரோடுலே ஒடிண்டு இருந்தப்போ கல் தடுக்கி விழுந்துட்டேன். அங்கிள்தான் என்னத் தூக்கி விட்டு ஆத்துக்கு அழைச்சிண்டு வந்தாம்மா,” என்றாள். மகள் கோர்வையாகப் பேசுவதைப் பார்த்து அவள் அம்மாவுக்கு ஒரே அதிர்ச்சி, ஆச்சரியம்.
ரகு காரில் ஏறியபோது அவனுக்கு வழியனுப்ப வாசலுக்கு வந்தவர்கள் நான்கு பேர், சித்தி, மினாக்ஷி மற்றும் அவளது அப்பா, அம்மா.
மினாக்ஷி, “பை அங்கிள். நீங்க மறுபடியும் எங்க ஊருக்குக் கட்டாயம் வரணும்,” என்றாள் கைகளை ஆட்டியபடி.
“கட்டாயம் வருவேம்மா,” என்றபடி காரைக் கிளப்பினான் ரகு.
நெகிழ்ச்சி நெகிழ்ச்சி