இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …. (39)
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே 1
2012ம் ஆண்டு எனும் மாடியின் முடிவில் நின்று கொண்டு 2013 எனும் மாடியை வியப்புடன் நோக்கிக் கொண்டே இம்மடலை உங்களுக்கு வரைகின்றேன்.
காலம் காற்றுப் போல பறக்கின்றது. ஒரு இரயில் பெட்டியில் உட்கார்ந்து கொண்டு சாளரத்தின் வாழியே வெளியே கடந்து செல்லும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பயணியின் கண்களில் தெரியும் அற்புதமான, மிதமான ,மோசமான காட்சிகள் இது அற்புதம், இது மிதம், இது மோசம் எனப்தைப் புரிந்து கொண்டு இரசிப்பதன் முன்னாலே அக்காட்சி மின்னல் வேகத்தில் மறைந்து விடுவது போலத்தான் வாழ்வின் நிகழ்வுகளும் எம்மைக் கடந்து கனவேகத்தில் பறக்கின்றன.
ஆனால் இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் ? அட என்னடா அப்படி என்னதான் வித்தியாசம் என்கிறீர்களா?
இரயில் பயணி தவற விட்ட காட்சியை நிச்சயம் மீண்டும் பார்த்துத்தான் ஆக வேண்டும் என எண்ணினால் அதே பயணத்தை , அதே பாதையில் மீணடுமொருமுறை செய்து கொள்ளலாம். ஆனால் நாம் எமது வாழ்வில் தவற விட்ட கணங்களை மீண்டும் அனுபவிப்பது சாத்தியமாகுமா? இல்லையே !
முடிந்த ஆண்டின் கணக்கை கடைசிப் படியில் நின்று அலசுவது சுலபம். ஆனால் எமது முன்னே இருக்கும் ஆண்டு எமக்கு தரப்போவது என்ன? எமது வாழ்க்கைப் பயணம் எந்தப்பாதையில் எவ்வகையில் திருப்பப்படப் போகிறது என்பதை யாருமே அறிய மாட்டார்.
அது ஒரு திறக்கப்படாத புத்தகம். அதன் நிகழ்வுகளை அனுபவித்துக் கொண்டே தான் அறியலாம். ஆனால் இதுவரை படித்து முடித்து கடைசிப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் இந்த 2012 எனும் அத்தியாயத்தில் நாம் கண்டவைதான் என்ன ? சற்றே அலசுவோமா வாருங்கள் !
இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் இந்த 2012 ஒரு மைல் கல் என்றே சொல்ல வேண்டும். 2005ம் ஆண்டு சிங்கப்பூரில் உலக ஒலிம்பிக் கமிட்டியின் 2012 ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாடு இங்கிலாந்து என்று அறிவிக்கப்பட்ட நேரம் தொடக்கம் ஒலிம்பிக் நடந்து முடிந்த வரைக்கும் பலவகையான நிகழ்வுகல் அரங்கேறி முடிந்து விட்டன.
ஆனால் அனைத்துக்கும் முடி சூட்டியது ஒலிம்பிக் போட்டி என்றே சொல்ல வேண்டும். டோனி பிளேயர் பிரதமராக இருந்த காலம் தொடங்கி இன்று டேவிட் கமரன் பிரதமராக இருக்கும் காலத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியே கடந்த 2012ம் ஆண்டின் முத்திரையான நிகழ்வு என்றால் மிகையாகாது.
உலகப் பொருளாதாரம் கனவேகத்தில் சரிந்து கொண்டு சென்றதன் ஆரம்பம் 2008ம் ஆண்டே என்று சொல்லலாம். அச்சரிவினை சரியான முறையில் கையாளத் தவறி விட்டது இங்கிலாந்தின் அப்போதைய அரசாங்கம் எனும் வாதத்தை முன்வைத்து 2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டணி அரசாங்கம் அமைக்க மட்டுமே அதிகாரம் பெற்ற கன்சர்வேடிவ் கட்சி தனது அனுமானத்தின் படி நாட்டின் சரிவை மாற்றியமைக்கும் பணியில் எதிர்பார்த்தபடியான முன்னேற்றங்களை இந்த இரண்டரை வருடங்களில் ஏற்படுத்தவில்லை.
மக்களின் மனதில் இருந்த பொருளாதார நிலை பற்றிய ஐயப்பாட்டை ஒரு 6 மாத காலம் மறக்கப் பண்ணியிருந்தது ஒலிம்பிக் போட்டிகளே !
நாடு இருக்கும் சிக்கலுக்குள் ஒலிம்பிக் போட்டிக்காக இத்தனை தொகையான பணத்தை வாரி இறைப்பது தேவையா? எனும் வாதம் பல கோணங்களில் இருந்து எழுந்து கொண்டுதான் இருந்தது. இவ்வொலிம்பிக் போட்டிகள் அரசு எதிர்பார்த்தபடி வெற்றியடையாது எனும் எதிர்பார்ப்பில் அப்போது “சொன்னேன் கேட்டீர்களா?” எனும் பல்லவியைப் பாடக் காத்திருந்தவர்கள் எதிர்பார்ப்பில் மண்ணை வாரிப்போட்டு நாட்டின் அனைத்து மக்களும் தமது வேறுபாடுகளை மறந்து இவ்வொலிம்பிக் போட்டியின் வெற்றிக்காக உழைத்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
கொள்கையளவில் அதீத வேறுபாடுகளைக் கொண்டிருந்த கட்சிகளான “கன்சர்வேடிவ்” கட்ச்சியும், “லிபரல் டெமகிரட்ஸ்” கட்ச்சியும் கூட்டரசாங்கம் அமைத்திருந்தாலும் அதன் பலன் அவர்கள் இருவருக்கும் மோசமானதாகவே 2012ல் அமைந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பொதுக் கருத்துக் கணிப்பீட்டில் இவ்விரண்டு கட்சிகளுக்கும் பலத்த அடி விழுந்துள்ளது.
இவர்களது எதிர்காலம் எத்தகைய சுபீட்சம் வாய்ந்தது என்பதை 2013ம் ஆண்டின் நிகழ்வுகள் தான் காட்டப் போகிறது.
அடுத்து இவ்வருடம் இங்க்லாந்தில் இடம்பெற்ற மிகவும் பரவலாக அனுபவிக்கப்பட்ட நிகழ்வு இங்கிலாந்து மகாராணியாரின் 60 ஆண்டுகால பதவிக்கால கொண்டாட்டங்களாகும்.
இக்கொண்டாட்டங்கள் மீண்டும் ஒருமுறை நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தி நாட்டின் பொருளாதாரச் சிக்கல்களை மறந்து ஒரு சிறிய இடைவெளியில் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அது தவிர இங்கிலாந்தைப் பொறுத்தவரை இவ்வருடம் பலவழிகளிலும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலான அரசியல் சட்டங்களை உள்ளடக்கியதாகவே அமைந்திருக்கிறது.
அமெரிக்காவை எடுத்துக் கொண்டோமானால் அமெரிக்க நாட்டின் முதலாவது கருப்பு இனைத்தைச் சேர்ந்த ஜனாதிபதி எனும் சாதனையை ஏற்படுத்திய ஒபாமா அவர்கள். தனது சாதனைக் காலம் ஒரு பதவிக்காலம் மட்டுமே என்று ஆக்கிவிடாமல் இவ்வருடம் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளார்.
முதலாவது முறை ஜனாதிபதியாக அவர் பதவி ஏற்றபோது உலகெங்கும் ஒரு அமைதி கலந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவற்றில் பல எதிர்பார்ப்புக்களாகவே முடிந்து போயின.
நான்கு வருட கால பதவியின் மூலம் தான் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் அந்த எதிர்பார்ப்புகளுக்கு இப்பதிவிக்காலத்திலாவது செயலாக்கம் கொடுப்பாரா என்பதையும் 2013ம் ஆண்டில் அவர் எடுக்கப் போகும் நடவடிக்கைகளை வைத்துத்தான் கூற முடியும்.
கடந்த வருடம் அமெரிக்காவைப் பொறுத்தவரையில் சில கசப்பான மனிதக் கொலைகள் நிகழ்வுகளின் மூலம் தன்மீது கறையைப் பூசிக்கொண்டிருக்கிறது. துப்பாக்கிகளை சாதாரண் குடிமகனும் வைத்திருக்கலாம் எனும் அவர்களின் அரசியல் சட்டத்திற்குப் பலமான சோதனைகள் எழுந்துள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக அரபு-இஸ்ரேல் சிக்கலுக்கு தீர்வை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு எத்தகைய அழுத்தத்தைப் பிரயோகிக்கப்போகிறது என்பதை ஆவலுடன் உலகின் பலநாடுகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. இதற்குரிய விடையையும் 2013 நல்குமா? என்பது கேள்விக்குறியே !
ஆசிய நாடுகளை எடுத்துக் கொண்டோமானல் பொருளாதார ரீதியில் வளர்ந்து கொண்டு செல்லும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மேலைநாடுகளின் பொருளாதாரத் தேக்கத்தினால் சிறிது பின்னோக்கிச் சென்றிருந்தாலும் விளைவான பொருளாதாரக் கண்ணோட்டம் வளர்ச்சியாக இருந்திருக்கிறது.
இப்பொருளாதார வளர்ச்சியின் தாக்கம் மத்திய வர்க்கத்தினோடு தங்கி விடாமல் பெரும்பான்மையான அடிமட்டத்தில் வாழும் மக்களைச் சென்றடையும் வழிமுறைகளை இந்தியா போன்ற நாடுகள் செயல்படுத்துமா ? என்பதையும் 2013ன் நடவடிக்கைகள் தான் உணர்த்தப் போகின்றன.
“அரபு நாடுகளின் எழுச்சி” என்று வர்ணிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளினதும், அரபு நாடுகளினதும் சர்வாதிகாரத் தலைமைகள் தூக்கியெறியப்பட்டு “ஜனநாயக ஆட்சிமுறை” என வர்ணிக்கப்படும் ஆட்சிகள் பலநாடுகளில் அமைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாட்சி முறைகள் உலகப் பொருளாதாரத்தில் தம்மை இணைத்துக் கொள்ளும் வகையிலான ஜனநாயக முறையைப் பின்பற்றப் போகின்றனவா? அன்றி மதச் சார்பான தீவிர அரசியல் நடத்தும் ஆட்சிகளை அமைக்கப் போகின்றனவா? என்பதையும் இந்நாடுகளின் 2013ம் ஆண்டு நடவடிக்கைகள் காட்டிக் கொடுக்கப் போகின்றன.
ஈழத்துத் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு அரசியல் தீர்வு காணப்பட்டு அங்கு வாழும் மக்கள் அனைவரும் சம உரிமையுடன், சகோதரத்துவ மனப்பான்மையுடன் ஒரு அமைதி வாழ்வை அடைவார்களா? எனும் கேள்வியின் விடையையும் 2013ம் ஆண்டின் நிகழ்வுகளே அளிக்கப் போகின்றன.
உலகம் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. மக்களின் தேவைகளும், ஆசைகளும் அவர்களது ஆற்றலை மீறிய அளவில் வளர்ந்து கொண்டு செல்கிறது
மனிதாபிமானம், மனிதநேயம், அன்பு, கருணை என்பன மக்களின் பண்புகளில் முதலிடம் பெறும் தன்மை குறைந்து கொண்டு செல்கிறது.
சமுதாயம், சமூகம் எனும் பரந்த நோக்கம் குறுகிக் கொண்டு தன்னலவட்டம் விரிந்து கொண்டு செல்கிறது.
இத்தகைய ஒரு சூழலில் தான் டிசம்பர் மாதம் 21ம் திகதி உலகம் தனது முடிவை அடையப் போகிறது எனும் வதந்தி உலகமெங்கும் வேகமாகப் பரவி வந்தது. இவ்வதந்தியின் வேகத்திற்கு ஈடுகட்டும் முகமாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் இத்தகைய நிகழ்வுக்குச் சாத்தியமில்லை என்று ஒரு மறுப்பறிக்கை விடுமளவிற்கு இக்கருத்து மக்களின் மனதில் ஒரு பீதியை, ஒரு கிலேசத்தைக் கிளப்பி விட்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் இன்று அது வெறும் வதந்தி என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் இப்படியான ஒரு நிகழ்வு ஒவ்வொருவரையும் தமது வாழ்க்கையை எடைபோட்டுப் பார்க்கப் பண்ணியிருக்க வாய்ப்பிருக்கிறது.
இந்த எடைபோடுதலில் மக்கள் வாழ்க்கையில் மனிதநேயம் எத்தகைய எடையை எடுத்தது என்பதே கேள்விக்குறி ?
இனம், மதம், மொழி, நிறம் எனும் பாகுபாடுகளைக் கடந்து மனிதன் தன்னை மனிதனாகக் கணிக்க முயற்சித்துள்ளானா ?
எம் அனைவரின் அவதானமும் 2013ம் நோக்கித் திரும்பியுள்ளது .
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்