Tag: எம்.ரிஷான் ஷெரீப்

  • ஈரானியக் கவிஞர் மஹ்மூத் ஃபலாகி கவிதைகள்

     

    ஈரானியக் கவிஞர் மஹ்மூத் ஃபலாகி கவிதைகள்
    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
    ____________________________

    1. இருண்ட சொற்கள்

    உலகின் பார்வைக்குப் புலப்படா நெற்றியிலிருந்து
    எமது எண்ணங்களில் துடிப்பவற்றை
    ஒரு பெரும் மத்தளத்தின் துணையுடன்
    பித்துப் பிடித்தவனொருவன் அம்பலப்படுத்துகிறான்

    ஒரு கல் தட்டப்படுகிறது
    அதனுடன் ஒப்பிடுகையில்
    தண்ணீரும் புற்களும்
    எமது துயரங்களின்
    விகாரமான வடிவங்களைக் காட்டுகின்றன

    ‘நாம் ஏன் பிறந்திருக்கிறோம்?’ என
    திரும்பவும் கேட்க மாட்டேன்
    அப்படிக் கேட்பதன் மூலம்
    கற்களின் வரலாற்றின் பின்னாலிருக்கும்
    பளபளப்பான வார்த்தைகளின் மீது
    சோர்வுகளை ஊற்ற முடியாது

    எளிமையாகவும் பிரகாசமாகவும் இருப்போம்
    எனவே யன்னலிலிருந்து உனது
    பார்வையைத் திருப்பும்போதெல்லாமோர்
    பாடலின் வடிவம் கொள்ளும் யன்னல்

    எனது ஆகாயம் அதன் நீல நிலையிழந்து
    வெறிச்சோடிப் போகும் அக் கணத்தில்
    எனது பிறப்பின் காரணத்தை நான்
    இவ்விதத்தில் கற்றுக்கொள்ளக் கூடும்

    ஆனால் அது சாத்தியமில்லை
    எமது இரவுக்குரிய நிலவின்
    மகிழ்ச்சிகரமானதான மெல்லிசை
    இல்லாத நிலையில்
    சாலையோரத்தில்
    யன்னலும் காணாமல் போகும்

    எனது தேர்ச்சியற்ற பயணங்களின் போது
    வளைந்து சோர்ந்த கற்களோடும்
    இருண்ட வார்த்தைகளோடும்
    நானும் தனியாக வளர்வேன்

    நானொரு ஒலியை செவிமடுக்கிறேன்
    பித்துப்பிடித்தவனொருவன் தொடர்ந்தும்
    எமது சிந்தனைகளில் அடித்துக் கொண்டிருக்கிறான்
    உலகின் பார்வைக்குப் புலப்படா நெற்றியிலிருந்து

    —————————————

     

    2. குடை

    மழை பெய்து கொண்டிருக்கிறது
    துளை விழுந்த குடையொன்றுடன்
    தெருவைக் கடக்கிறேன் நான்
    சிவப்பு விளக்குக்குப் பின்னால்
    எனது நெற்றி வரிகளின் மீது கவனத்தைச் செலுத்தும்
    ஒரு பெண்ணின் பச்சை நிறப் பார்வை
    மழை வடிவம் கொண்டு
    இந்தத் தெருவில் கரையக்கூடியது

    தொடர்ந்தும் வீழ்ந்து கொண்டேயிருக்கிறது மழை
    என்னிடமில்லை அந்தக் குடை இப்பொழுது
    அந்தப் பெண்ணின் கரங்களில்
    அதோ எனது குடை

    —————————————

     

    கவிஞர் மஹ்மூத் ஃபலாகி (கவிஞர் பற்றிய குறிப்பு)

    arishஈரான் தேசத்து கஸ்பியன் கடற்பிரதேசத்தை அண்டிய நகரமொன்றில் 1951 ஆம் ஆண்டு பிறந்த கவிஞர் மஹ்மூத் ஃபலாகி, தனது ஆரம்பக் கல்வியை ஈரானில் கற்றதோடு பட்டப்படிப்பை ஜேர்மனியில் பூர்த்தி செய்துள்ளார். மன்னர் ஷாவின் ஆட்சியின் போது, அவரது ஆட்சிக்கெதிரான அரசியல் கொள்கைகளைக் கொண்டிருந்ததன் காரணத்தால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட கவிஞர் மஹ்மூத் ஃபலாகி, மூன்று வருடங்களின் பிறகு, 1979 ஆம் ஆண்டு நிகழ்ந்த புரட்சியின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதோடு, தனது முதலாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.

    தொடர்ந்து ஈரானின் திறந்த பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வந்த இவர், புதிய ஆட்சியில் கவிதைகள் எழுதுவது தடை செய்யப்பட்டு, கவிஞர்களுக்கு ஆபத்தான சூழல் உருவானதால், நாட்டை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, 1986 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறார்.

    தற்போது பாரசீக மொழி மற்றும் இலக்கியங்கள் சம்பந்தமான விரிவுரையாளராகக் கடமையாற்றி வரும் இவர், கவிதைகள், நாவல், புனைவு, விமர்சனங்கள் என எழுதி, இதுவரையில் கிட்டத்தட்ட 19 தொகுப்புக்களை பாரசீக மற்றும் ஜேர்மன் மொழிகளில் வெளியிட்டிருக்கிறார். இவரது கவிதைகள் இதுவரையில் ஆங்கிலம், ஸ்வீடிஷ் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

    Share
  • ஆட்டுக்குட்டிகளின் தேவதை

    எம். ரிஷான் ஷெரீப்

    am

    ஆட்டுக்குட்டியைத் தூக்கித் திரிந்த இடைச்சியின்
    இடர்காலப் பாடல் எங்கும் விரிகிறது
    கோடை காலங்களில் எஞ்சியிருக்கும்
    அம் மலைப் பிரதேசப் பூக்களில் தேனுறிஞ்சும்
    கூர் சொண்டுக் குருவி
    நிலாக் கிரணங்கள் வீழும்
    அவளுக்குப் பிடித்தமான வெளிகளுக்கெல்லாம்
    அப் பாடலைக் காவுகின்றது

    பள்ளத்தாக்கில் ஆடுகளைத் துரத்தியபடி
    தண்ணீர் தேடிச் சென்றவேளை
    சிதைந்தவோர் குளக்கரையைக் கண்டுகொண்டாள்
    வரண்ட பாசிகளோடு வெடித்திருந்த தரையில்
    களைத்துப் போய் பெருவலி தந்த
    கால்களை மடித்து ஓய்வெடுத்தவளோடு
    சேர்ந்து கொண்டதொரு சிவப்பு வால் தும்பி

    வலிய விருட்சங்கள் உதிர்ந்துவிட்டிருந்தன
    விதவிதமாய்க் குரலிட்ட பட்சிகளெல்லாம்
    வேறு தேசங்களுக்குப் பறந்துவிட்டிருந்தன
    புழுதி மண்டிய மேய்ச்சல் நிலத்தில்
    மந்தைகளின் தேவதை
    முடங்கிப் போயிருக்கிறாள்
    உஷ்ணப் பிரம்பினைக் காட்டி
    அவளை மிரட்டி வைத்திருக்கும் வெயில்
    கடல் தாண்டித் தனது யாத்திரையைத் தொடரும்வரை

    பயணப் பாதைகளிலெல்லாம்
    ஆட்டுக்குட்டிகளே நிறைந்திருக்கும்
    இடைச்சியின் கனவில் எப்போதும் வரும்
    பசிய மரங்கள் அடர்ந்திருக்கும் வனமும்
    மீன்கள் துள்ளித் தெளிந்த நீரோடும் நதியும்
    புற்களும் புதர்களுமாய் அடர்ந்த சமவெளியும்
    அவளுக்கு எப்போதும்
    ஆதிக் காலங்களை நினைவுறுத்தும்

    வாடிச் சோர்வுற்ற விழிகளினூடு
    தொலைவில் அவள் கண்டாள்
    யானையாய்க் கறுத்த மேகங்கள்
    வானெங்கும் நகர்வதை

    இனி அவள் எழுவாள்
    எல்லா இடர்களைத் தாண்டியும்
    துயருற்ற அவளது பாடலோடு
    விழித்திருக்கும் இசை
    ஒரு புன்னகையெனத் ததும்பித் ததும்பி மேலெழும்
    ஆக்ரோஷமாக… ஆரவாரமாக…
    ஆட்டுக்குட்டியைப் போலவே துள்ளித் துள்ளி…

    – எம். ரிஷான் ஷெரீப்

    Share
  • மொழிபெயர்ப்புக் கவிதை – இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது

    எம். ரிஷான் ஷெரீப்

    கன்னத்துக்கு நீயளித்த அறையின் வீச்சில்
    உடைந்து தெறித்தது மலையின் சிரசு
    இடையறாது குருதியோடும் சதுப்பு நிலமாய் இதயம்
    புதைந்தது குளிர்ந்த பள்ளத்தாக்கினிடையே

    அருளும் பாதுகாப்பும் தரும்படி நாம்
    உருவச் சிலைகளுக்கு மலர் வைக்கும்போதும்
    நேசித்த மலை பற்றியே முணுமுணுத்தோம்

    தென்னோலைக் கூரையினூடே தென்படும் வானத்தை நோக்கி
    வசந்தங்களைக் கேட்டபோதும்
    உழைத்துத் தேயும் கரங்களுக்குக் கிடைக்காது ஒருபோதும்
    எனவே இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது
    உறங்குகிறேன் மண்ணின் கீழே வழமைபோலவே

    – ஷஸிகா அமாலி முணசிங்க
    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    குறிப்பு – அண்மையில் இலங்கையிலுள்ள மலையகப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் போது உயிரிழந்த மற்றும் அநாதரவான அனைத்து தமிழ் உள்ளங்களுக்காகவும் !

    கவிஞர் பற்றிய குறிப்பு – கவிதாயினி ஷஸிகா அமாலி முணசிங்க

    arsh

    கவிதாயினி ஷஸிகா அமாலி முணசிங்க, ஒரு சட்டத்தரணியாவார். அத்தோடு கவிஞர், விமர்சகர், சமூக ஆர்வலர், கலைஞர் எனப் பன்முகம் கொண்டவர். சிங்கள மொழியில் வாழ்வின் அனுபவங்களைக் கவிதைகளாக எழுதும் இவரது கவிதைகள் பல காத்திரமான இதழ்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. ஒரு தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். மற்றுமொரு தொகுப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது.

    Share
  • அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை

    எம். ரிஷான் ஷெரீப்

    dstree

    கழுத்து நீண்ட வாத்துக்கள் பற்றிய உன் கதையாடலில்
    சாவல் குருவிக்கு என்ன திரை
    அதுவும் இருந்துவிட்டுப் போகட்டும்
    அடித்த சாரலில்
    வண்ணத்துப் பூச்சியின் நிறம் மட்டும் கரைந்தே போயிற்று
    நல்லவேளை சருகுப் பூக்கள் அப்படியேதானே

    பிறகென்ன
    வற்றிய ஆழக் கடல்களின் நிலக் கரையில்
    துருப்பிடித்துப் பாதி மணலில் மூழ்குண்ட
    நங்கூரங்களின் கயிற்றோடு
    உப்புக் கரித்துத் தனித்திருக்கின்றன சிதிலப் படகுகள்

    அந்தி மாலையில் தூண்டிலிட்டமர்ந்து
    வெகுநேரம் காத்திருக்கும் சிறுவன்
    பாரம்பரிய விழுமியங்களைப் போர்த்தி
    உணவு தயாரிக்கும் இளம்பெண்
    நிலவொளியில் புயல் சரிக்க
    போராடி அலையும் பாய்மரக் கப்பல்
    அழிந்த மாளிகை
    அசையாப் பிரேதம்

    அது என் நிலம்தான்
    உன் மொழி வரையும் ஓவியங்களில்
    எல்லாமும் என்னவோர் அழகு

    உண்மைதான்
    மந்தையொன்றை அந்தியில்
    நெடுந் தொலைவுக்கு ஓட்டிச் செல்லும்
    இடையனொருவனை நான் கண்டிருக்கிறேன்
    நீ சொல்வதைப் போல
    காலத்தை மிதித்தபடிதான் அவன் நடந்துகொண்டிருந்தான்
    நெடிதுயர்ந்த மலைகள்
    உறைந்துபோன விலங்குகளைத்தான் தின்று வளர்கின்றன
    ஆகவே மலைக் குகை வாசல்களில் அவன் அவைகளோடு
    அச்சமின்றி ஓய்வெடுத்தான்

    சொல்
    மெய்யாகவே நீ கனவுதான் கண்டாயா

    என்னைக் கேட்டால்
    வாசப் பூஞ்சோலை
    சுவனத்துப் பேரொளி
    தழையத் தழையப் பட்டாடை
    தாங்கப் பஞ்சுப் பாதணி
    கால் நனைக்கக் கடல்
    எல்லாவற்றிலும் நேர்த்தியும் மினுமினுப்பும்
    தேவையெனில் அமைதியும்
    தேர்ந்தெடுத்த மெல்லிசையும் என
    எல்லாமும் இன்பமயம் என்பேன்

    அத்தோடு
    இன்னும் கூட இரவு
    தினந்தோறும் கொஞ்சம் இருட்டை
    எனக்காக விட்டுச் செல்கிறது கிணற்றுக்குள்
    என்பதைச் சொல்வேன்
    வேறென்ன கேட்கிறாய்

    இலையுதிர் காலத்து மரத்தின் வலி
    அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை

    – எம்.ரிஷான் ஷெரீப்,
    இலங்கை
    mrishanshareef@gmail.com

    Share
  • ஒரு சில கணங்களுக்குள் ……..

    எம். ரிஷான் ஷெரீப்

    ஒரு சில கணங்களுக்குள்
    இலங்கை வரைபடத்திலிருந்து காணாமல் போயுள்ள கிராமம்

    இலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு முழுக் கிராமமே நேற்று (29.10.2014) மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான மக்களை, அவர்கள் நேசித்த மண்ணே உயிருடன் விழுங்கிக் கொண்டுள்ளது. சடலங்கள் மீட்கப்படுகின்றன. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு, இலங்கையில் பல நூறு உயிர்களைக் காவுகொண்ட இயற்கை அனர்த்தம் இதுவாகும். அதே போல இலங்கை, மலையக வரலாற்றில் இதுவரை இடம்பெற்றுள்ள மண் சரிவு அனர்த்தங்களில், இப்போது நிகழ்ந்துள்ள இந்த அனர்த்தத்தை மிகவும் மோசமான ஒன்றாகவும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்படலாம்.

    arsh

    இக் கிராமத்தில் குறைந்தபட்சம் ஐம்பத்தேழு தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த முந்நூற்றைம்பது நபர்களாவது வசித்திருக்கலாம் என நம்பப்படுவதோடு, இந்த அனர்த்தம் நிகழ்வதற்கு முன்னர் வெளிப் பிரதேச பாடசாலைக்குச் சென்ற சிறுவர்,சிறுமியர்,வேலைகளுக்காகச் சென்ற சில தொழிலாளர்கள் என ஒரு சிலரே அனர்த்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர். இழப்புக்கள் சம்பந்தமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும், போலிஸ் ஊடகப் பேச்சாளரும் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்துச் சொல்லி தப்பித்துக் கொள்ள முற்படுகின்றனர். என்ற போதிலும், பல நூற்றுக்கணக்கான மக்களை நேற்று முதல் காணவில்லை. மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் முயற்சி, நேற்று காலநிலையைக் குறிப்பிட்டு கைவிடப்பட்டதோடு, இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நேற்றே முழுமையாக நடந்திருந்தால் ஒருவேளை சிலரையாவது உயிருடன் காப்பாற்றியிருந்திருக்கலாம்.

    arsh1

    மலேசிய விமானம் காணாமல் போனபோது, அதில் பயணித்த உயிர்களுக்கு என்னவானது எனக் கேட்டு உலகமே ஆர்ப்பரித்தது. அவர்களுக்காகப் பிரார்த்தித்தது. Facebook, Twitter, Google plus போன்ற சமூக வலைத்தளங்களில் கூட, திரும்பிய பக்கமெல்லாம் அவர்களுக்கான பிரார்த்தனைகளும், உதவிகளும் பரந்திருந்தன. ஆனால், அதே போன்ற, கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையான உயிர்கள் இங்கும் காணாமல் போயிருக்கின்றன. மீட்கப்பட்டு, நிர்க்கதியான நிலையிலும் பல நூறு பேர் இருக்கின்றனர். ஆனால் மேற்சொன்ன சமூக வலைத்தளங்களிலோ, இணையத்தளங்களிலோ அவர்களுக்கான உதவிகளோ, பிரார்த்தனைகளோ கூட பரவலாக இல்லை. ஏனெனில், இவர்கள் இலங்கையின் ஒரு மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்மொழி பேசும் ஏழைகள். பூர்வீக நாடற்றவர்கள். வந்தேறு குடிகள். விரல் முனையில் உலகைச் சுற்றிவரும் மேற்தட்டு மக்களுக்கு, இவர்கள் இருந்தாலும் ஒன்றுதான். இவர்களை இழந்தாலும் ஒன்றுதான்.

    arsh2

    யார் இவர்கள்? ஒரு பக்கம் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களோடும், மறுபக்கம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலாவணி, மிகக் குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற குடிசைகள், நோய்நொடிகள், வறுமை எனப் பலவற்றோடும் போராட வேண்டியிருக்கும் இம் மக்கள் தென்னிந்தியாவிலிருந்து ஏமாற்றி அழைத்து வரப்பட்ட அப்பாவி மலையகத் தோட்டத் தொழிலாளர்கள். நூற்றாண்டுகளாக இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திக்காக, எந்த அடிப்படை வசதிகளுமற்று அடிமைகளாக உழைக்கும் தமிழ் மக்கள் இவர்கள். எந்த அரசியல்வாதிகளாலும் கண்டுகொள்ளப்படாத ஏழைக் கூலி மனிதர்கள். யார், யாருக்காகவோ உழைத்துத் தேய்ந்து, தேயிலைச் செடிகளுக்கே உரமாகிப் போகும் அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள்.

    arsh3

    எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தேர்தல்கால வாக்குகளுக்காகவும், ஏற்றுமதி வர்த்தகத்துக்கான உழைப்பாளிகளாகவும் மாத்திரமே இலங்கை அரசாங்கம் இவர்களைப் பார்க்கின்றது. இவர்கள் இந்திய வம்சாவளியினர் என்றபோதும், இந்திய அரசியல்வாதிகள் கூட இவர்களது உரிமைகளுக்காகவோ, இவர்களைத் தமது நாட்டில் மீள்குடியேற்றச் செய்யவோ எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள், ஈழத் தமிழர்களென மேடைகளில் கூச்சலிடுகிறார்கள். ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள். அவர்கள் செய்வதுவும், இந்த அப்பாவிகளை வைத்து, தமது ஆதரவாளர்களை உசுப்பி விடும் பம்மாத்து அரசியலன்றி வேறென்ன?

    இலங்கை அரசு, உலகத்துக்கு தனது பகட்டையும், ஆடம்பரத்தையும் காண்பிப்பதற்காக நீரில் மிதக்கும் நகரங்களை நிர்மாணிக்கிறது. அதிவேகப் பாதைகளை அமைக்கிறது. இவற்றின் செலவுக்கான பணம், மேற்குறிப்பிட்ட ஏழை மக்களின் உழைப்பிலிருந்துதான் கிட்டுகிறது என்ற போதிலும், நான் மேலே சொன்ன எந்த வசதிகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இவர்களுக்கில்லை. அதிவேகப் பாதைகளை, பல மாடிக் கட்டிடங்களை, அதி நவீன ஹோட்டல்களை நிர்மாணிக்க முன்பு, தனது நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் எல்லா அடிப்படை வசதிகளும் கிட்டுகின்றனவா எனப் பார்க்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை. ஆனால் ‘இவர்களை முன்பே இங்கிருந்து போகச் சொல்லிவிட்டோம்’ எனச் சொல்லி இன்று அரசாங்கம் தப்பிக் கொள்ளப் பார்க்கிறது.

    அரசாங்கமானது, வீடுகளைக் கட்டிக் கொடுத்து பாதுகாப்பாகக் குடியேற்ற வேண்டியது இவ்வாறான ஏழை மக்களைத்தானே தவிர, வசதியானவர்களையல்ல. வீண் ஆடம்பர அலங்காரங்களுக்காகவும், கிரிக்கட் வீரர்களுக்கும், நடிகர்களுக்கும் வீடு, வாகனம், காணிகளென பல கோடி ரூபாய்களைச் செலவழிக்கும் அரசாங்கம், இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதை என்னவென்பது?

    உலகிலுள்ள எந்த மனிதரிடத்திலும், திடீரென எவரும் வந்து அவர்கள் பரம்பரையாக வாழ்ந்துவரும் இடத்திலிருந்து வெளியேறி ‘நீ வேறெங்காவது போ’ எனச் சொன்னால் அவர்கள் எங்குதான் செல்வர்? ஒருவரது இருப்பிடமென்பது பூமி மாத்திரமல்ல. அது அவர்களது உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் சுற்றிப் பிணைக்கப்பட்ட ஆன்மா. அந்த ஏழைகளை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் புலம் பெயரச் சொன்னால், அகதியாய் அலையச் சொன்னால், அதை விட்டும் அவர்களைத் தடுப்பது எது? ஜீவனோபாய வழி முறைகள்.

    காலம், காலமாக தோட்டங்களையே நம்பி வாழும் ஏழைக் குடிகளுக்கு, அவர்களுக்கேற்ற ஜீவனோபாய வழிமுறைகளை அமைத்துக் கொடுத்து, தண்ணீர், மின்சார, கழிவறை வசதிகளோடு முறையான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அரசாங்கமே குடியேற்றி வைப்பதுதானே முறை? அதை ஒருபோதும் செய்யவில்லை. இப் பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் இருப்பதாக பல தடவைகள் எச்சரிக்கப்பட்ட போதிலும், இங்கு வாழும் அப்பாவித் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை இடம் மாற்றிக் குடியமைக்க அரசாங்கம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அண்மையில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக, இம் மலையகப் பிரதேசங்களில் போட்டியிட்ட வசதிபடைத்த அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் செலவிட்ட பணத்தில் ஒன்றிரண்டு சதவீதங்களைச் செலவழித்திருந்தால் கூட, இம் மக்களுக்கு ஆபத்தற்ற குடியிருப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்க முடியும்.

    இவ்வாறான ஆபத்தான பல பிரதேசங்கள் மலையகத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிலுமே குடியிருக்கச் செய்யப்பட்டிருப்பது அப்பாவி ஏழைத் தோட்டத் தொழிலாளர்கள். இனியாவது அரசாங்கம் இவர்களைக் கருத்திற்கொண்டு உடனடியாக பாதுகாப்பான இடங்களில் இவர்கள் பத்திரமாகக் குடியேற ஏற்பாடு செய்ய வேண்டும். கேமராக்களின் முன்பும், ஊடகங்களின் முன்பும் இன்று பாய்ந்து பாய்ந்து உதவி செய்யும் அரசியல்வாதிகளும், தலைவர்களும் ஒரே நாளில் தமது தாய் தந்தையரை, சொந்தங்களை, இருப்பிடங்களை இழந்து நிற்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட எல்லா சிறுவர், சிறுமிகளதும் எதிர்காலம் சிறப்பாக அமையவும் உதவ வேண்டும். மீட்கப்பட்டவர்கள் உடல் காயங்களைப் போலவே, மனதளவிலும் அதிர்ந்து போயுள்ளனர். அவர்களுக்கான தக்க சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

    arsh4

    நேற்றைய அனர்த்தத்தைப் பார்வையிட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அங்கு பூஞ்சிரிப்போடு வருகை தந்திருக்கிறார். கேமராக்களின் முன்னர் பரிசுகள் போலச் சுற்றிய பார்சல்களை யார் யாருக்கோ அள்ளி வழங்குகிறார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திரும்பவும் போட்டியிடவிருக்கும் ஜனாதிபதிக்கு இந்த அனர்த்தத்தில் உதவிய புகைப்படங்களைக் காட்டியே வாக்குகளை அள்ளி விடலாம். அரசியல்வாதிகளுக்கு இவர்களது தேர்தல் கால வாக்குகள் மட்டும் போதும். இப்போதும் கூட அவர்கள், பல நூற்றுக்கணக்கான வாக்குகளை இழந்துவிட்டோமே என்றுதான் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்களே தவிர, பாவப்பட்ட இந்த உயிர்களுக்காகவல்ல !

    – எம்.ரிஷான் ஷெரீப்
    30.10.2014

    Share
  • மலையுச்சிப் பூவின் தியானம்

    ரிஷான் ஷெரீப்

     

    மலையுச்சிப் பூவின் தியானம்

    lelacyosemite

    கைக்குழந்தை உள்ளங்கையென மொட்டவிழ்கிறது
    பறிக்கப்படாத கனிகள் வீழ்ந்தழியும் மலைத் தரைகள்
    வனப்பு மிக்க காடுகளைச் சுமக்கின்றன தம்மில் அவை

    அந்திப் பறவைகள்
    கறுப்புத் திட்டுகளாகப் பறந்து மறையும்
    மாலை நேரங்களில் வனங்கள் என்ன செய்யும்

    உன் பாடலெனப் பொழிந்திடும் மழை பார்
    ஒவ்வொரு துளிகளிலும் உறைந்திருக்கக் கூடும்
    தாண்டிப் பறந்த பட்சி இறகுகளின் ரேகைகள்

    நீ மிதந்திருக்கிறாய் ஒரு வெண்குதிரையின் மீது
    யாரும் அகற்றிடா ஆதிச் சருகுகள் மூடி மறைத்திருக்கும்
    தடித்த வேர்கள் பிடித்து வைத்திருக்கும்
    கருங்கற் குகைகளிடை வழி
    உனது பயணப் பாதையல்ல

    நீ பறித்து வரச் சென்ற மலையுச்சிப் பூவின் தியானம்
    கடவுளுக்கானது
    காட்டின் விரூபங்களை மறைக்கும் இராப் பொழுதுகளில்
    உதிக்கும்
    மலையுச்சிப் பூவின் சோர்ந்திடாத் திமிர்

    உனது இலக்குகளில்
    பகலைக் கரைத்த ஈரம் சொட்ட அழுத சூரியன்
    எங்கோ தொலைந்துபோகும் இத் தருணத்தில்
    தாமதியாதே
    வனத்தின் வேர்களில் உனது புரவிகள் சற்று ஓயட்டும்

    – எம்.ரிஷான் ஷெரீப்

    Share
  • திலீபன் – மொழிபெயர்ப்புக் கவிதை

    ரிஷான் ஷெரிப்

     

    புன்னகைக்கும் இதயம்
    கண்ணீர்த் துளியைப் பற்றிக் கொள்ளும்
    அழத் தோன்றும் முகத் தோற்றம்
    நேசத்தை யாசிக்கும்
    யதார்த்தத்தைக் கனவோடு பிணைத்து
    இலக்குகளுக்காகத் தரித்து நின்ற திலீபன் !
    திலீபன் ! காற்றில் உதித்தவன் !

    நெஞ்சங்களில்
    அநேகமானவற்றை விட்டுச் சென்ற
    முற்றுப் புள்ளிகளுடனான நிலத்தில்
    ஒரு ‘கமா’வாக மறைந்த
    விலைமதிப்பற்ற யௌவனத்தை
    கோரிக்கைகளுக்காக ஈடு வைத்த
    நேர்மையான புன்னகையும்
    தாயன்பின் மிருதுவான குணமும் கொண்டவன்

    அன்றிலிருந்து இன்று வரை
    கண்ணீர் ருசிக்கும் அன்னையர்
    கைகளிலில்லா ஐவிரல்களையும்
    தேடியலையும் தந்தையர்
    ஒன்றின் மீதொன்றாக அடுக்கப்பட்டிருக்கும்
    புதல்வர்களின் சடலங்களின் மீது
    ஓலமிட்டழுபவர்கள்
    எல்லா இடங்களிலிலும்
    இருக்கிறார்கள் திலீபன்

    எரியும் விளக்கின் சுடரின்
    கதைகளைக் கேட்கும் இருளும்
    ‘பொறுமையை மாத்திரமே கைக்கொள்வோம்’
    என்றே முனகும்
    உருவாக்கப்பட்ட நாடகக் கோமாளிகள்
    விலகிச் செல்லும் கூடமும்
    ‘உண்ணாவிரதம் இருப்பது
    எப்படியெனக் காட்டுகிறேன்’ எனக் கூறி
    மீண்டும் திலீபனுடன் அமைதியாகும்

    நல்லூர் வானம் எனப்படுவது
    வெடிப்புற்ற பூமியென அறிந்து
    சூரிய, சந்திரர்களை விடவும்
    கருமுகில்கள் அணி திரளும்
    வாழ்க்கையில் சிறந்தவற்றை
    கோணலாகிய தினங்களிடையே ஒளித்து
    சுவாசத்தை உடைத்துடைத்துப் பகிர்ந்து
    இதயத் துடிப்பு உறைந்ததோ திலீபன் அண்ணா…

    – கசுன் மஹேந்திர ஹீனடிகல
    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
    கவிஞர் பற்றிய குறிப்பு
    கசுன் மஹேந்திர ஹீனடிகல

    இலங்கையில் சிங்கள மொழியில் எழுதும் கவிஞராகவும், எழுத்தாளராகவும், ஊடகவியலாளராகவும் அறியப்பட்டிருக்கும் கசுன் மஹேந்திர ஹீனடிகல, இலங்கை சட்டக் கல்லூரி மாணவராவார். ‘Kavi Acid’ எனும் இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு 2014 ஆம் ஆண்டு வெளிவந்து பலரது பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

     

    Share
  • திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடனான நேர்காணல்

    ‘With You, Without You’
    திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல்
    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    a

    பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயின் ‘With You, Without You’ (உன்னுடன், நீயில்லாமல்) எனும் திரைப்படமானது, கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

    d

    யுத்த கால இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட இத் திரைப்படமானது, ஒன்று சேரவே முடியாத இடைவெளியை ஏற்படுத்திச் சென்ற மோதலொன்றின் இடையே, தற்செயலாகச் சந்திக்க நேரும் இருவரைச் சுற்றி பின்னப்பட்ட கதையாகும். அவர்கள் இருவருக்கும், அந்த இடைவெளியை அழித்து ஒன்று சேர காதல் உதவுமா அல்லது அவர்களது இறந்த காலமானது தொடர்ந்தும் நிகழ்காலத்தைப் பாதித்துக் கொண்டேயிருக்குமா என்பதைப் பற்றியே இத் திரைப்படம் பேசுகிறது.

    இந்தத் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகை அஞ்சலி பட்டீலுக்கு, இத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக 2012 ஆம் ஆண்டு நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. அத்தோடு இத் திரைப்படமானது, லண்டன் BFI, சிக்காகோ, ஹொங்கொங், கேரளா மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் திரையிடப்பட்டுள்ளது.

    b

    கேள்வி – ‘With You, Without You’ திரைப்படமானது தஸ்தாவேஸ்கியின் ‘A Gentle Creature’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந் நாவலின் கதையை, இலங்கையின் யுத்த காலத்தோடு தொடர்புபடுத்தலாம் என உங்களுக்கு ஏன் தோன்றியது? அவ்வாறு உங்களுக்குத் தோன்றச் செய்தது எது?

    பதில் – வளர்ந்துவரும் திரைக்கதையாசிரியர் ஒருவர், இந் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் யுத்த காலப் பின்னணியில் தான் எழுதிய கதையை என் கவனத்தில் கொண்டு வந்தார். தஸ்தாவேஸ்கியின் இந் நாவலானது, பல தளங்களில் விரியும் படைப்பு. அதன் ஒரு தளமானது நுகர்வுக் கலாசாரம், மானிடத் தொடர்புகளை சீர்குலைப்பதை விவரிப்பதாக அமைந்திருப்பதாக பல விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கருவானது, அகிலம் முழுவதற்கும் பொருந்தக் கூடியதாகவும், நிரந்தரமானதுமென நான் சிந்தித்தேன்.

    இலங்கையும் மூடிய பொருளாதாரத்திலிருந்து திறந்த பொருளாதார சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால், இது பொருத்தமான உருவகம் என நான் உணர்ந்தேன். யுத்தம் எனப்படுவது வலியவர்களது ஆட்சி அதிகாரங்களுக்காக, மக்களுக்கிடையே ஏற்படக்கூடிய மோதலாகும். இந் நாவலின் கதையானது ஆண்மையை சீர்தூக்கிப் பார்க்கும் கதையொன்றென இந் நாவலை வாசிக்கும்போது எனக்குத் தோன்றியது. யுத்த காலத்தில் இலங்கைக்குள் நிலவிய ‘ஆண்மையை’ விமர்சனம் செய்வதற்கு இக் கதையின் மூலமாக எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

    பிரதான கதாபாத்திரங்கள் இரண்டுமே இனங்களால் வேறுபட்டும், யுத்த களத்திலிருந்து வந்தவர்களாகவும் இருப்பின், அவர்களது தொடர்புகளையும், எதிர்நோக்கும் சவால்களையும், பல பரம்பரைகளாக நிகழ்ந்த யுத்தத்தின் பின்னர் வழமைக்குத் திரும்ப முயற்சிக்கும் முழு இலங்கையின் நிலவரத்தையும் ஒரு உருவகமாகப் பயன்படுத்தலாம் என எனக்குத் தோன்றியது. இரு தரப்பினருமே அடுத்தவரின் கோணத்திலிருந்து பார்க்க ஆரம்பிக்காத வரையில் அமைதி ஏற்படாது என நான் நம்புகிறேன். இச் சிறு நாவலை, பல தடவைகள் வாசித்த பின்னரே நான் திரைக்கதையை எழுதினேன்.

    கேள்வி – திரைப்படத்துக்கான பணம் எங்கிருந்து வந்தது?

    பதில் – இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட ஆகார் எனும் அமைப்பின் மூலமாக ஆதாரப் பணம் கிடைத்தது. தெற்காசியாவில் நிலவும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் ஆவணப்படமொன்றை உருவாக்கித் தரும்படி அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டனர். ஆரம்பத் திரைக்கதையை வாசித்து முடித்ததன் பிற்பாடு, எனது விருப்பத்திற்கேற்ப இத் திரைப்படத்தை உருவாக்க அவர்கள் அனுமதித்தார்கள். மேலதிக செலவுகளை இலங்கைத் தயாரிப்பாளர்கள் இருவர் ஏற்றுக் கொண்டார்கள்.

    கேள்வி – இத் திரைப்படம், இதுவரையில் இலங்கையில் திரையிடப்பட்டிருக்கிறதா? இலங்கையில் திரையரங்குகள் மூடப்படுவதானது, திரைப்படங்களைத் திரையிடுவதில் பாதக விளைவுகளை ஏற்படுத்துவதாக நீங்கள் முன்பு கூறியிருக்கிறீர்கள். இப்பொழுது அந் நிலவரத்தில் மாற்றமேதும் உள்ளதா?

    பதில் – இத் திரைப்படமானது இன்னும் இலங்கையில் திரையிடப்படவில்லை. இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டதாகும். இலங்கையில் தற்போதிருக்கும் திரையரங்குகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறும்வரை நான் காத்திருக்கிறேன். இப்போது, நாம் உரையாடும் இக் கணம் வரை கூட அவ்வாறான மாற்றம் ஏதும் இடம்பெறவில்லை. திரையரங்குகள் மூடப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந் நிலையில், திரையரங்குகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றம் பெறாவிடில், இன்னும் பல திரையரங்குகள் மூடப்பட்டு நிலைமை இன்னும் மோசமாகும்.

    c

    கேள்வி – இத் திரைப்படம், இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    பதில் – நானென்றால், எனக்கு இவ்வளவு காலம் நடந்தவற்றில் சிறந்ததாக நினைப்பது அதைத்தான். ஏனென்றால் இந்தியா எனப்படுவது எனக்கு மிகச் சிறப்பான ஒரு இடம். சரியாகச் சொல்வதானால் என்னுடைய இரண்டாவது வீடு போன்றது அது. சினிமா என்பதால் மாத்திரமல்ல, எல்லாவற்றினாலும். நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், இத் திரைப்படத்தைத் தயாரித்திருப்பது இந்தியத் தயாரிப்பாளர்கள் என்பதால் மட்டுமல்ல. சென்னையிலுள்ள பிரசாத் கலைக்கூடத்திலேயே பிற்தயாரிப்பு வேலைகள் நடைபெற்றன. இத் திரைப்படத்தைத் தொகுத்தது தேசிய விருது பெற்ற தொகுப்பாளர் திரு.ஏ.ஸ்ரீகர் ப்ரஸாத். ஒலி வடிவமைத்தது ஒரு இந்தியக் கலைஞர். பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது, தேசிய விருது பெற்ற இந்திய நடிகை அஞ்சலி பட்டீல். இவர்கள் அனைவருமே இவ்வளவு ஈடுபாட்டோடு இத் திரைப்படத்தில் பணியாற்றியமையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இத் திரைப்படத்தை இந்தியாவில் திரையிடுவதே இவர்களுக்கு வழங்கக் கூடிய அதியுயர் விருதுகளாகும்.

    கேள்வி – இலங்கை திரைப்படத் துறையில் இருக்கும் மோசமான நிலைமைக்கு ஏற்ப, நீங்கள் இத் திரைப்படத்துக்காக செலவிட்ட பணத்தை மீளவும் எவ்வாறு பெற்றுக் கொள்வீர்கள்?

    பதில் – திரையரங்குகளில் திரையிடுவது, செய்மதி தொலைக்காட்சி மற்றும் DVD உரிமையை வழங்குதல் போன்ற வரையறுக்கப்பட்ட வழிமுறைகள் மாத்திரமே இப்போதைய நிலைமையில் தயாரிப்பாளர்களின் கையில் உள்ளது. இலங்கையில் திரையிடப்படும் திரைப்படங்களில் 95% ஆனவை, படத்துக்காக செலவழிக்கப்பட்ட பணத்தைக் கூட மீளப் பெற்றுத் தராதவை. எதிர்காலத்தில் எமது நிலைப்பாட்டுக்காக செய்மதி தொலைக்காட்சியில் திரையிடும் உரிமையை வழங்குவது, Video on demand, ITunes downloads, Vimeo, Netflix, Amazon, YOUTUBE streaming ஆகிய வலைத்தளங்களில் பதிவேற்றுவது போன்ற பணம் ஈட்டக் கூடிய வழிமுறைகளில் ஈடுபட நேரிடும். திரைப்படக் கலைஞர்கள் தேசிய சந்தையைத் தாண்டிச் சென்று, வேகமாக முன்னேறிவரும் தொலைத்தொடர்பு ஊடகங்களினூடாக பயனைப் பெற்றுக் கொள்வது நல்லதென நான் நம்புகிறேன்.

    கேள்வி – நீங்கள் இந்திய நடிகை அஞ்சலி பட்டீலைத் தேர்ந்தெடுத்தது எப்படி?

    பதில் – இந்தக் கதாபாத்திரத்தைக் குறித்து நான் இந்திய ஒலி சீரமைப்புக் கலைஞர் தபாஸ் நாயக்கிடம் விபரித்ததன் பின்னர், அவர் அஞ்சலி பட்டீலின் புகைப்படங்கள் சிலவற்றை என்னிடம் அனுப்பியிருந்தார். நான் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த நடிகர்கள் தேர்வு நிகழ்விற்கு அவரை அழைத்திருந்தேன். தேர்வுக்காகப் பலரும் வந்திருந்தபோதும், அவருக்குள் இருந்த அப்பாவித்தனத்தையும், முரட்டுத்தனத்தையும் ஒன்றாகக் காட்டும் திறமையானது, ஏனையவர்களை விடவும் அவரிடம் மிகைத்திருந்ததைக் கண்டோம். அவர் அக் கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவராக இருப்பார் என நாங்கள் தீர்மானித்தோம். அவருக்குள்ளிருந்த நன்னெறிகளுக்கிணங்க வேலை செய்யும் குணம், ஈடுபாடு மற்றும் தொழில்முறை நேர்த்தி ஆகியன என்னை வியப்புக்குள்ளாக்கியது. எனது தேர்வு மிகப் பொருத்தமாக அமைந்ததையிட்டு மிகுந்த திருப்திக்குள்ளானேன்.

    கேள்வி – இந்தியாவும், இலங்கையும் திரைத்துறை மூலமாக சம்பந்தப்பட்டிருப்பது எவ்வாறு? கூட்டுறவாக இணைந்து இயங்குவதற்கான சாத்தியங்கள் எவ்வாறு உள்ளது?

    பதில் – எனது அனேகத் திரைப்படங்களின் பிற்தயாரிப்பு வேலைகளைச் செய்தது சென்னையில்தான். ஸ்ரீகர் ப்ரசாத், தபாஸ் நாயக் போன்ற முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களோடு இணைந்து பணியாற்றக் கிடைத்தமை எனது அதிர்ஷ்டம்.

    அநேகமான இந்திய திரைத்துறைக் கலைஞர்கள் தம் படப்பிடிப்புக்களுக்காக இலங்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். யுத்தத்தின் பின்னர், திரு.அநுராக் காஷ்யப், தனது Bombay Velvet திரைப்படத்தின் அனேக காட்சிகளை இலங்கையில் படமாக்கினார். எதிர்காலத்தில் நான், இன்னும் பல இந்தியக் கலைஞர்களோடும், தொழில்நுட்பக் கலைஞர்களோடும் இணைந்து பணியாற்றவும், இந்தியக் கூட்டுத் தயாரிப்புக்களில் பங்குகொள்ளவும் எதிர்பார்த்திருக்கிறேன். வூடி ஆலன் சொன்னது போல, வெற்றியின் 80% ஆனது, காட்சிப்படுத்துவதாகும். நெருங்கிய அயலவர்களாக நாம் ஒருவருக்கொருவர் வாயில்களில் அவர்களுக்காக முன் நிற்போம். அந்த ஒற்றுமையின் பலனாக நலன்கள் கிடைக்கப் பெறும் விதத்தைப் பார்த்திருப்போம்.

    ***************************

    Share
  • மொழிபெயர்ப்புக் கவிதை – எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்

    ரிஷான் ஷெரீப்

     

    எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்

    மழைக் காலநிலையென்ற போதும்
    தெளிவானதும் அமைதியானதுமான அந்தி நேரம்
    வாசிகசாலை முற்ற சீமெந்து வாங்கின் மீது
    நாங்கள் அமர்ந்திருந்தோம்
    எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்
    இறந்த காலத்துக்கு மீளச் செல்ல இயலாத

    கதைத்துக் கொள்ளாத போதிலும்
    இதயங்களில் ஒன்றே உள்ள,
    கவிதைகள் எழுதிய போதிலும்
    வாழ்க்கையை விற்கச் செல்லாத
    நட்புக்கள் இடைக்கிடையே வந்து அமர்ந்துசென்ற
    சீமெந்து வாங்கும் கூட ஆறுதலைத் தரும்

    காலத்தின் தாளத்திற்கேற்ப மாற்றங்கள் நேராத போதும்
    வெளியே உரைக்க முடியாத் துயரம் உள்ளத்தில் உறைந்த போதும்
    வில்லோ மரக் கிளைகள் காற்றோடு இணைந்து சரசரக்கும்போது எழும்
    எம் புன்னகை கண்டு திறக்கும் எம் மாயலோக இல்லம்

    – ஷஸிகா அமாலி முணசிங்க
    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

     

     

    Share
  • படுகொலை செய்யப்பட்ட கவிதை!

    செல்வி. டிமாஷா கயனகி

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

     

    dimasha

    செல்வி. டிமாஷா கயனகி

      (சம்பவம்: இலங்கை, எல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி செல்வி. டிமாஷா கயனகி, தனது கல்வி நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு செல்வதற்காக 24.05.2014 அன்று விடிகாலை 3.30 மணிக்கு, எல்பிடிய பஸ் நிலையத்துக்கு வந்தவேளை, அங்கு நின்றிருந்த இராணுவ வீரனொருவனால் அருகிலிருந்த பாழடைந்த கட்டிடமொன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவி அங்கிருந்து தப்பிக்க முற்பட்ட வேளையில் இராணுவ வீரனால் கத்தியால் பல தடவை குத்தப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். மோப்பநாயின் உதவி கொண்டு, தப்பித்துச் சென்ற குற்றவாளியைக் கைது செய்துள்ள போதிலும், குற்றவாளி இராணுவத்தினன் என்பதால் ‘இராணுவ வீரனது காதலை மறுத்ததால் அவனுக்கு ஏற்பட்ட சடுதியான கோபத்தின் காரணமாகவே கொலை நிகழ்ந்துள்ளது. திட்டமிட்டுச் செய்ததல்ல’ என இராணுவத் தரப்பும், இலங்கைக் காவல்துறையும் சம்பவத்தை மூடி மறைக்கவும், குற்றவாளியைத் தப்பிக்கச் செய்யவும் முயற்சிக்கிறது.)

    கடந்த 24.05.2014 அன்று ஒரு இராணுவ வீரனால் படுகொலை செய்யப்பட்ட 21 வயதான பல்கலைக்கழக மாணவி செல்வி. டிமாஷா கயனகி மரணிக்கும் முன்பு இறுதியாக எழுதிய கவிதை இது.

    எப்போதேனுமொரு நாள் இவையெல்லாவற்றையும்
    விட்டுச் செல்லவேண்டியிருக்கும்!
    எவரும் மகிழ்ச்சியாகச் செல்லும் பயணமல்ல அது                 dimasha0
    எனினும் அதைத்
    துயரமின்றிச் செல்லமுடிந்தால்
    எவ்வளவு நன்றாகவிருக்கும்!

    அந்நாளில்
    நினைவில் வராதோர் அனேகர்
    எனினும்
    நினைவில் வரக்கூடிய சிலரில்
    நீங்கள் இருப்பீர்களென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது

    நான் மரிக்கும் நாளில் வாருங்கள்!
    என்னைப் பார்க்கவென்றே வந்துசெல்லுங்கள்!
    ஒருபோதும் சிந்தியிராத கண்ணீரில்
    ஒரு துளியை விட்டுச் செல்லுங்கள்!

    இரு விழிகளும் இறுக்கமாக மூடப்பட்டிருந்த போதிலும்                          dimasha2
    குளிர்ந்த சரீரத்துடனிருந்த போதிலும்
    முன்பு பழகியதையெண்ணி                                                                           
    நெற்றியிலொரு முத்தமிடுங்கள்!                                                                           

    ஆயிரம் கண்கள் பார்த்திருக்கும்                                               
    எனது நற்குணங்களை விமர்சிக்கும்
    பதிலாக எதுவும் பேசாது
    ஒரு பிடி மண்ணிட்டுச் செல்லுங்கள்!                                                 

    கல்லறையிலிருந்து நீங்கள்
    நீங்கிச் செல்கையில்
    மாபெரும் தனிமையை நான் உணரக்கூடும் – எனவே
    ஒரு பூவை மட்டும் வைத்துவிட்டு
    நீங்கள் செல்லுங்கள் திரும்பிப் பாராது!

     

    Share
  • சிவரமணிக்கு

     

    ரிஷான்

     

    சிவரமணிக்கு…

     

    உன்னிடமொன்றைச் சொல்லும்59255_605371066139667_518905472_n

    தேவை எனக்கிருக்கிறது

    எனினும் நான் வாய் திறக்கும்வரை

    பார்த்திருந்த அவர்கள் எனது நாவைச் சிதைத்தனர்

    உன்னைப் பார்க்கவென

    நான் விழிகளைத் திறக்கையில் அவர்கள்

    அவற்றைப் பிடுங்கி எறிந்தனர்

     

    அச்சமானது தாய்த் தேசத்தைச் சூழ்கையில்

    உனை நான் இதயத்தில் உருவகித்தபடி

    போய்க் கொண்டிருந்தேன்

    எனைப் பிடித்துக் கொண்ட அவர்கள்

    இதயத்தைத் துண்டம் துண்டமாகச் சிதைத்து

    உனை என்னிடமிருந்து பறித்துக் கொண்டனர்

     

    அந்தகாரத்துக்குள் பிறந்த நான்

    அந்தகாரத்துக்குள் பிறந்த நீ

    ஒருவரையொருவர் அறிந்துகொள்வோமென்று ஐயமுற்ற அவர்கள்

    இறுதித் தாரகையையும் தூள்தூளாக்கினர்

    நிரந்தரமான இருளுக்குள்ளேயே

    எங்களைப் பிரித்துக் கொன்றுபோட்டனர்

     

    இப்பொழுது பிணங்கள்

    கரையொதுங்குகையில்

    நீயும் நானும்

    தற்கொலை செய்துகொண்டதாக அறிவிப்பார்கள்

     

    நீ வடக்கிலும், நான் தெற்கிலும்

    இன்னும் நிரப்பப்படாத

    பொதுக் கல்லறைகள் இரண்டினுள்ளே

    வெவ்வேறாக படுத்திருப்போம்

     

    இக் குளிர்ந்த நிலக் கருவறைக்குள்ளே இடைவெளியானது

    பிணங்களாலும் இருளினாலும் நிறைந்திருக்கிறது

     

    சிவரமணி, அன்பிற்குரிய சகோதரி

    வடக்கிலும் தெற்கிலும்

    புதைக்கப்பட்ட அனேகரோடும்

    இன்னும் நிறைய நாட்கள்

    இங்கு நாங்கள் அமைதியாகச் சாய்ந்திருப்போம்

     

    சகோதர விழிகளிலிருந்து உதிரும்

    உஷ்ணக் கண்ணீர்த் துளியொன்று வந்து

    எமது குளிர்ந்த நெற்றியை மெதுவாக முத்தமிட்டு

    இம் மரணத்தின் தொடர்ச்சி

    இத்தோடு முடிந்துவிட்டதென உத்தரவாதமளித்து

    எம்மை மீண்டும்

    வாழ்க்கையை நோக்கி அழைக்கும்வரை

    நாமிங்கு அமைதியாகச் சாய்ந்திருப்போம்

     

    ஏனெனில் மரணத்துக்கு முன்னர்

    நீ இவ்வாறு எழுதியிருக்கிறாய்

     

    “ஆனால்

    நான் வாழ்ந்தேன்

    வாழ்நாளெல்லாம் நானாக

    இருள் நிறைந்த

    பயங்கரங்களின் ஊடாக

    நான் வாழ்ந்தேன்

    இன்னும் வாழ்கிறேன்.”

     

    – அஜித் சி. ஹேரத்

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

     

     

    Share
  • கசிவு

    எம்.ரிஷான் ஷெரீப்

    ‘நாயோட வாலுல புடிச்சுக் கட்டிவுட்டாப்புலல்ல இந்தப் பய நாலு தெரு சுத்தறான். எதுக்குங்குறே. ஒண்ணுத்துக்கும் பிரயோசனமில்ல. சும்மாச் சும்மா தெரு அளந்துட்டுத் திரியுறான். நீ ஒருக்காப் போய் தேடிப் பார்த்துட்டு வாயேன் ராசா. காலைல வெளிய இறங்கினவன். பசி தாங்கமாட்டானே புள்ள’

    வழமையாக சோறு வடித்து, பானையை இறக்கி வைக்கும்போதே பசியெனக் கத்திக் கொண்டு வந்து நிற்பவனை இன்னும் காணவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்த வள்ளித்தாயி, வாசலோடு ஒட்டிய உள்தரையில் அமர்ந்திருந்தாள். அவள் ஏவிய மூத்தவன், அவளது பேச்சே தன் காதுகளில் விழாதது போல சாக்குக் கட்டிலில் படுத்து, கூரைத் தகரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்திப் பொழுதை அந்தக் குடிசைக்குள் தள்ளிச் சென்றது போல மழை இருட்டு மதியம் தாண்டிய அப் பிற்பகல் வேளையை சற்று இருளாக்கியிருந்தது. கண்ணுக்கெட்டிய வரை வெளியே எட்டி தெருவைப் பார்த்தாள். எப்பொழுதும் பழைய சைக்கிள் டயரை உருட்டியபடியோ, கூட்டாளிகளோடு விளையாடியபடியோ அத் தெருவே பழியெனக் கிடப்பவனை இன்று காணவில்லை. தூரத்திலிருந்து மழையின் பெருஞ்சத்தம் மிகுந்த வெறியோடு யாரையோ விரட்டிவருவது போலக் கேட்டது. பின் அப்படியே அவளது குடிசையின் தகரக் கூரையிலும் சத்தத்தோடு விழ ஆரம்பித்தது. அவள் தெருவிலிருந்து தூரத்தே தெரிந்த மலைத் தொடருக்கு பார்வையை நகர்த்தினாள்.

    ‘இந்த மழயப் பாரு. எங்கிட்டோ போற மழ. இங்க வந்து கொட்டித் தீக்குது ஆகாசமே பொத்துக்கிட்ட மாதிரி. அந்த மலயக் கூட மூடல. முத்தம் இருட்டல. வுட்டதத் தேடி வர்றாப்ல மழ பேஞ்சு கொட்டுது பாரு. இந்தப் பய நனஞ்சிட்டு வந்து நிப்பானோ, பத்திரமா புத்தி யோசனையா எங்கிட்டாவது நிழல்ல குந்தியீந்துட்டு மழவுட்டாப்புல வூடு வந்து சேருவானோ? தடுமக் காச்சல்னா தாங்கமாட்டானே ராசா. பச்சபச்சயாச் சளி கட்டிக்கும் அவனோட அப்பனுக்குப் போல. இருமி இருமியே சீவன் தேஞ்சிடும். ஏலே போய் எங்கிட்டிருக்கான்னு ஒருக்காப் பாத்துக் கூட்டி வாயேண்டா’

    மூத்தவன் அதையும் காது கொடுத்துக் கேட்கவில்லை. காதில் விழுந்ததுதான். ஆனால் சொல்லப்படுவது தனக்கில்லையென்பது போல அமைதியாக இருந்தான். ஏதோ இவள் மட்டும் தன்னைச் சுற்றியிருக்கும் நான்கு சுவர்களுக்கும் கேட்கும்படி புலம்பிக் கொண்டிருந்தாள். தகரக் கூரையின் ஓட்டைகளிலிருந்து துளித்துளியாக சொட்டிய நீர் களிமண் பூசிய தரையில் விழுந்து, விழுந்த இடத்தைக் குழியாக்கியது. விட்டு விட்டுப் பெய்யும் மழையின் காரணமாக நிலமே ஈரலித்துக் கிடந்தது. மூலையில் அடுக்கியிருந்த சில மண் சட்டிகளைக் கொண்டுவந்து கூரையிலிருந்து தண்ணீர் ஒழுகும் இடங்களைப் பார்த்துத் தரையில் வைத்தவள், அப்படியே சாக்குக் கட்டிலருகே போய் மூத்தவனை தோளில் பிடித்து உசுப்பிவிட்டாள்.

    ‘ராசா..மின்னல் வெட்டுது..இடி விழுது..சின்னவன் எங்கிட்டிருக்கானோ..பயப்புடுவான்..போய்ப் பார்த்துட்டு வாயேண்டா’ என்றாள் திரும்பவும்.

    ‘சும்மா போம்மா..நேத்துத்தான் பொறந்தாம் பாரு மடியில வச்சுப் பாத்துக்கிடறதுக்கு. பத்து வயசாச்சு. நாலு ஆடு கண்டுகளப் புடிச்சுக் குடுத்து மேச்சுட்டு வான்னு அனுப்பியிருந்தாலும் அர வயித்துக்காவது தேறும். வேலயத்துப்போன கண்ட கண்ட தெருப்பசங்களோட வெளையாட அனுப்பிட்டு என்னவுட்டு தேடச் சொல்றியா?’

    அவன் சலிப்போடு கத்திக் கொண்டு அடுத்த பக்கம் திரும்பி ஒருக்களித்துப் படுத்துக் கொண்டான். திடீரென நினைவு வந்தவன் போலவும், குளிரெடுத்தவன் போலவும் திரும்பவும் மல்லாந்து படுத்து, உடுத்திருந்த சாரத்தை அவிழ்த்து கழுத்துவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு, திரும்பவும் அடுத்த பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான். இனி அவனை எழுப்ப முடியாது என உணர்ந்தவள், மீண்டும் வாசலுக்கு வந்து தெருவை எட்டிப் பார்த்தாள். முகத்தில் மழைச் சாரலடித்தது. அது அவளை உசுப்பிவிட்டது.

    ‘ஆமா. சின்னவனை வேலைக்கனுப்பித்தா இந்தக் கெழவி பட்டும், மூக்குத்தியுமாப் போட்டு மினுக்கிக்கப் போறேம் பாரு. வெளாடுற வயசுல அப்படி இப்படித்தா இருப்பான். யேன் நீ இருக்கல? உன் தம்பிதான.. நீ கூட்டிட்டுப் போ.. பட்டற வேலைய அவனுக்கும் கத்துக் குடு. நானா வேணாங்குறே?’ அவிழ்ந்த தலைமுடியைச் சுருட்டிக் கொண்டை கட்டியவாறே மீண்டும் வாசலோரச் சுவரில் சாய்ந்து அமர்ந்தபடி குரலெழுப்பிச் சொன்னாள் வள்ளித்தாயி.

    ‘க்கும். தெருவுல போற ஆனக்கிச் சாப்பாடு கொடுக்குறது இருக்கட்டும்..முதல்ல வளக்குற பூனக்கி மீதியைக் கொடுங்குற கதையா, இருக்குற ஒரு பட்டறக்கே அப்பவோ இப்பவோன்னுதா வேலை வருது. எல்லாத்துக்கும் மெஷினுன்னு வந்தபொறவு எவன் வாறான் அருவா செய்ய கோடரி செய்ய மம்பட்டி செய்யன்னு. இதுல இவனயும் கூட்டிட்டுப் போய் வெட்டியா சோறு போடச் சொல்றியா?’

    இதுவரையிலும் நிலத்திலமர்ந்து, சுவரின் மூலையில் சாய்ந்து, கிழிந்த துணியொன்றைத் தைத்துக் கொண்டிருந்த மருமகள் முதன்முதலாக வாயைத் திறந்து சொன்னதைக் கேட்டதும் ஆவேசம் வந்தவளைப் போலானாள் அவள்.

    ‘எண்ட ராசா எங்கிட்டும் போய்ச் சோத்துக்குக் கெஞ்சப் போறதில்ல. இந்தக் கெழவிக்கு ஒடம்பு குளுந்து போகாம இருக்குற மட்டும் அவன நா பாத்துப்பே. பெத்தவளுக்கு வளக்கத் தெரியாது? வக்கப்போருல மழக்கி மொளச்ச காளானப்போல நேத்து வந்தவளுங்கெல்லாம் அவனுக்குப் பொங்கிப் போடத் தேவல்ல. நடு முதுகுல வந்த கட்டி மாதிரி சொமையா நெனக்கத் தேவயுமில்ல. நா எதுக்கிருக்கே. நா ஆக்கிப் போடுறே..நா பார்த்துப்பே’

    இதைக் கேட்டதும் மருமகளுக்கு இப்பொழுது கோபம் வந்துவிட்டது. தைத்துக் கொண்டிருந்த துணியைச் சுருட்டி ஒரு மூலைக்கு எறிந்தாள். குளித்த தலை காய, அவிழ்த்துப் போட்டிருந்த கூந்தலைக் கொண்டையாகக் கட்டிக் கொண்டு, வலுத்த மழை தகரக் கூரையில் எழுப்பும் சத்தத்தை விட அதிகமான சத்தத்தோடு அவளும் குரலுயர்த்தினாள். அவளுக்குக் கீச்சுக் குரல். தகரத்தில் கம்பியால் கீறுவதைப் போல அது மாறியிருந்தது இப்பொழுது.

    ‘நேத்து வந்தவளாம்ல..சூடு சொரணயிருக்குறவங்க இதுக்கு மேல இங்க இருப்பானுங்களா? இதுக்குத்தா நா இதுக்கிட்ட படிச்சுப் படிச்சுச் சொன்னே. நம்மள மதிக்காதவோ வூட்டுக்கு எதுக்குப் போவணும்னு…கேட்டுச்சா இது? ஏதோ வூட்டுல மூட்ட மூட்டயா பொதையல் கட்டி வச்சிருக்காப்புலல்ல வூட்டுக்குப் போவணும்னு அடம்புடிச்சுக் கூட்டி வந்துச்சு?’

    அவளுக்கு தன் மாமியார் வீட்டுக்கு வர விருப்பமே இருக்கவில்லை. ஊரில் கல்யாண காலம் இது. சமையல், கூலி வேலைகளுக்குப் போனால் கொஞ்சம் பணம் சம்பாதித்துக் கொள்ளலாம். உடுத்துக் கொள்ளப் பழந் துணிகளும் கிடைக்கும். போதாதற்கு மாமியார் வீட்டுக்கு மூன்று பஸ்கள் மாறி மாறி வரவேண்டும். அவன் எங்கே கோபித்துக்கொண்டு தனியே போய்விடுவானோ என்ற பயத்தில் அவன் தன் அம்மா வீட்டுக்குக் கூப்பிடும்போதெல்லாம் முடியாதென அடம்பிடித்துச் சண்டை போட்டுவிட்டுப் பின்னர் அவனுடன் சேர்ந்து வந்து விடுவாள்.

    ‘ஏம் புள்ள என்னப்பாக்க வராம வேற எங்கிட்டுப் போவான்? இந்த வூட்டுல பொதையல் இல்லாமப் போனாலும் அவன் பொறந்து வளந்த வூடு. அவன் மண்ணள்ளித் தின்ன வூடு. இந்த வூட்டுல நா பொணமா வுழுற வரைக்கும் அவன் வரத்தான் செய்வான்..நீ இவன முந்தானைல முடிஞ்சிக்க நெனச்சாக் கூட எண்ட வூட்டுப் புள்ள அதுக்கெல்லாம் ஒத்துவர மாட்டான். போக்கிடமில்லாத சோம்பேறிக் கழுதயப் புடிச்சுக் கொண்டு வந்து அவன் கட்டிக்கிட்டதுக்கு இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ’

    நகரத்தில் இரும்புப் பட்டறை வேலைக்கெனப் போனவன் ஒரு நாள் அவளைக் கோயிலில் வைத்துத் தாலி கட்டிக் கையோடு கூட்டிக்கொண்டு வந்து நின்றான். வள்ளித்தாயி வாசலருகே இருந்து முதலில் கத்திப் பார்த்தாள். அவனை எப்படியெல்லாம் தான் கஷ்டப்பட்டு வளர்த்த கதையைச் சொல்லி, ஒப்பாரி வைத்து அழுதாள். அக்கம்பக்கத்து வீட்டு ஆட்களெல்லாம் வந்து சமாதானம் செய்த பிறகுதான் அவர்களை உள்ளே விட்டாள். முதல் சில நாட்களுக்கு மகனையோ, மருமகளையோ ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மூலைக்கு மூலை அமர்ந்து புலம்பி அழுதுகொண்டிருந்தாள். வீடுகளுக்கு பாத்திரம் கழுவப் போகையில், விஷயம் கேள்விப்பட்டு விசாரிப்பவர்களிடமெல்லாம் வசியம் வைத்து, மருந்து கொடுத்து தன் மகனை மயக்கிவிட்டதாக மருமகளைக் குறைசொல்லி திட்டியபடியே இருந்தாள்.

    ‘ந்த.. கழுத கிழுதன்ன..அப்றம் நடக்குறதே வேற..தோ..இந்தக் கழுததான் எம்பின்னால வந்துச்சு.. மொளகாயக் கடிச்சேனோ..கஞ்சியக் குடிச்சேனோன்னு அர வவுறு நெறஞ்சாலும் எம் பாட்டுல நிம்மதியாக் கெடந்தேன். புலாலுக்குப் பின்னால போற பூன மாதிரி சத்தமில்லாம வந்து தாலியக் கட்டிக்கிட்டதுக்கு சொத்தக் கண்டேனா..சொகத்தக் கண்டேனா..ஆஸ்தியக் கண்டேனா..அந்தஸ்தக் கண்டேனா’

    சத்தமாக ஆரம்பித்தவள், இறுதிவரிகளைச் சொன்னபோது விசும்ப ஆரம்பித்தாள்.

    ‘ ஆமா.. பெரிய ராசா வூட்டு மக பாரு. வரிசயாக் கெடந்தானுங்க இவளத்தான் கட்டிக்கணும்னு..கேக்கப் பாக்க நாதியத்துக் கெடந்தவளுக்கு வாழ்க்க கொடுத்தேம்பாரு..என்னச் சொல்லணும்’

    இவ்வளவு நேரமும் கண்ணை மூடியவாறு தூங்கியது போல படுத்துக் கொண்டிருந்தவன் ஓட்டுக்குள்ளிருந்து தலையை நீட்டும் ஆமையைப் போல தலையை உயர்த்திப் பார்த்து அங்கிருந்தபடியே கத்தினான். அவளை முறைத்துப் பார்த்துவிட்டு திரும்பவும் கண்ணை மூடிக் கொண்டான்.

    ‘ராசா மகளோ இல்லயோ..எங்க அப்பன் என்ன ராசா மக போலத்தான் வளத்தாரு..செறப்பாத்தானே இருந்தேன்..மகராசா ஒரு நாளாச்சும் என்னப் பட்டினியில போட்டிருக்குமா..இப்படி எங்கிட்டோ வந்து கதறத்தான் விட்டிருக்குமா..செருப்புக்கு அளவா கால வெட்டிக்கிடற மாரி வெட்டிக்கிட்டு ஓடி வந்து கானல் தண்ணிய நம்பிப் பாழுங்கெணத்துக்குள்ள குதிச்ச கதயாப் போச்சு யேன் வாழ்க்க’

    ‘ பெத்தவன் மேல அம்புட்டுப் பாசமிருக்குறவ இப்படி எதுக்கு எவன் கூடவாவது ஓடியாரணும்..? ஓலப்பாயில நாய் ஒண்ணுக்கடிச்ச மாதிரி சலசலன்னு பொலம்பிட்டுக் கெடக்கணும்..? அவன வுட்டுப் போயிட வேண்டியதுதான?’

    இப்பொழுது வள்ளித்தாயி குரலுயர்த்த, தனக்கு இரு புறத்திலிருந்தும் ஆதரவில்லை என்பதை உணர்ந்தவள் வாய்க்குள் ஏதேதோ முணுமுணுத்தபடி வெடித்து அழுதாள். அவள் இவனுடன் வந்ததிலிருந்து, அவளது வீட்டில் அவளைச் சேர்க்கவில்லை. திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அவளுக்கு மூத்தவளும் இளையவள்களுமாக வீட்டில் 5 பேர். அம்மா இல்லை. அப்பாவும் மற்றவர்களும் கூலி வேலைகளுக்குப் போய் எப்படியோ சீவனம் நடத்திக் கொண்டு போக, இவளால் ஏற்பட்ட அவப்பெயர் மற்றப் பெண்களின் திருமணத்திற்குப் பெறும் குறுக்கீடாக இருந்தது. அவனது அம்மாவுடன் சண்டை போட்டுக்கொண்டு போன பிறகு அவளிடம் இருந்த தோடுகளையும் வளையலையும் விற்று, அவளது ஊரில் வாடகைக்கு ஒரு சிறிய வீடு தேடிக் குடியேறியிருந்தார்கள்.

    ‘வுட்டுப் போறதுக்கா நம்பிக் கழுத்த நீட்டினேன்? எத்தன சொம வந்தாலும் கண்ண மூடுற காலம் மட்டும் ஒண்ணாச் சேந்திருப்போமுன்னுதான் இந்தக் கழுத மஞ்சக் கெழங்கச் சொமந்து வாக்கப்பட்டுச்சு. பாத்துக்க. பெத்த பயலுக்கு பொஞ்சாதியக் காலம் பூராம் நல்லபடியா வச்சுக் கஞ்சி ஊத்துன்னு சொல்லிக் குடுக்காம கெழவி என்னெல்லாம் சொல்லிக் குடுக்குது. சோத்துக்கு வக்கத்த குடும்பம்னாலும் கெட்டது சொல்லிக் குடுக்க மட்டும் நல்லாத் தெரிஞ்சிருக்கு பூராத்துக்கும்’

    அவள் விசும்பிக் கொண்டே இருந்தாள். அமர்ந்திருந்த இடத்திலேயே காலை நீட்டிப் படுத்துக் கொண்டாள். ஈரலித்த மண் தரை குளிர்ந்திருந்தது. உடல் சிலிர்த்தது.

    ‘க்கும்.. செவப்புத் தோலுக்கு மயங்கினானோ..முழிக்குற முழிக்கு, ஆட்டுற நடக்கி மயங்கினானோ..நோய்காரின்னு தெரியாம கட்டிக்கிட்டு வந்து நின்னவன் எம் பேச்சக் கேட்டானா? உண்டதுமில்ல..கொண்டதுமில்ல..பூ வச்சுக் கட்டக் கொண்டயுமில்ல..நாலு சுத்து சுத்திக் கட்ட சேலயுமில்லங்குற கதயா உருப்படியில்லாத மலட்டுச் சிறுக்கியக் கட்டிக் கூட்டிக்கிட்டு வந்தான். அப்பவே அத்துட்டிருந்தா நாறச் சிறுக்கி மக இப்படிப் பழிபோட்டுப் பேசுவாளா?’

    நான்கு வருடங்களுக்கு மேலாகியும் தனக்குக் குழந்தையில்லையென்ற கவலை உள்ளூர ஊறிப் போயிருந்தது அவளுக்குள். அந்தப் புண்ணைக் கிளறிவிட்டது வள்ளித்தாயியின் பேச்சு. வலிக்க வலிக்கக் கீறப்படும் ரணம். போகுமிடமெல்லாம் அன்பான விசாரிப்புக்கள் போலப் புறப்படும் முட்கள். புண்ணைக் கீறி, மேலும் மேலும் ரணமாக்கி, பெரும் வலியில் வெளிப்படும் அவளது அழுகையைக் காணும் உள்ளூர ஆவலுடனான விசாரணை அது. அவளுக்குப் பின்னால் ஊர் முழுதும் அவளைப் பற்றிப் பேசப்படும் பேச்சுக்கள் குறித்து அவள் அறிந்திருந்தாள். கணவனிடம் சொல்லிப் பல தடவை அழுதிருக்கிறாள்.

    ‘ந்த..ஒண்ணுமில்லாத விஷயத்துக்குத் தொண தொணன்னுக்கிட்டு..செத்த கண்ணசர வுடுறீங்களா..முட்ட போட்ட கோழிங்க மாரி கொக்கரிச்சுக்கிட்டு…மனுச இருப்பானா இந்த வூட்டுல’

    மழை விட்டிருந்தது. கட்டிலிலிருந்து லேசாகக் கழுத்தை உயர்த்தியவன் இருவரையும் பார்த்துக் கத்தினான். அவனது சத்தம் பலமாக இருந்தது. இடி இடிப்பதைப் போல. பெரிய மரமொன்று உடைந்து விழுவதைப் போல. வாசலருகே அமர்ந்திருந்த வள்ளித்தாயியின் குரல் அடங்கியது. ஏதோ வாய்க்குள் முணுமுணுத்தாள். மருமகளது விசும்பல் தொடர்ந்தும் கேட்டது.

    மழைக்குச் சாத்தியிருந்த கதவைத் தள்ளிக்கொண்டு அவள் இவ்வளவு நேரமும் தேடிக் கொண்டிருந்த அவளது இளைய மகன் ‘அம்மா..பசிக்குது’ எனக் கத்திக் கொண்டு உள்ளே வரும் வரை அந்த நிலையே நீடித்தது. பின்னங்கால்களில் பொட்டுப் பொட்டாய்ச் சேறு. தலை, உடலெல்லாம் மழை ஈரம். கைகளில் நெளிந்த சைக்கிள் டயர். ஒரு நீளக் குச்சி. அவனைக் கண்டதும் அவ்வளவு நேரமும் புகைந்துகொண்டிருந்த தணல் பற்றியெரிவது போல ஆவேசத்தோடு எழுந்த வள்ளித்தாயி, அவன் கையிலிருந்த குச்சியைப் பிடுங்கி தாறுமாறாய் அவனை அடிக்கத் தொடங்கினாள்.

    ‘பசிக்குதாம்ல..இம்புட்டு நேரம் தெரு நாய் மாரி எங்க போய்ச் சுத்திட்டு வரே…அங்கயே போய்ச் சாப்டுக்க வேண்டியதுதான..இங்க எதுக்கு வரே? உனக்கு இன்னிக்குச் சோறு கெடயாது..பட்டினி கெட எரும மாடு..உன் காலு ரெண்டையும் முறிச்சுப் போடுறேம் பாரு..எங்கிட்டுச் சுத்தப் போறேன்னு பாக்குறேன் நானு இனிமே’

    வலி தாங்காமல் அவன் கத்தியழ ஆரம்பித்தான். வள்ளித்தாயி இப்பொழுது குச்சியை விட்டுவிட்டு கையால் அவன் முதுகில் ஓங்கி ஓங்கி அறைய ஆரம்பித்தாள். அவன் ‘அம்மா அம்மா’ என்றே கத்தியழுதான். மூத்தவன் திரும்பிப் பார்த்துத் திரும்பவும் கண்ணை மூடிப் படுத்துக் கொண்டான். மருமகள் எழும்பி ஓடி வந்து சின்னவனை இழுத்தெடுத்துத் தனக்குப் பின்னால் மறைத்துக் கொண்டாள்.

    ‘சின்னப் புள்ளயப் போட்டு மாட்டுக்கு அடிக்கிற மாரி அடிக்குற? பெத்த அம்மாவா நீயி?’

    மிகச் சத்தமாய் மருமகள் கத்தியதும், வள்ளித்தாயியின் ஆவேசமெல்லாம் அடங்கிப் போனது போல, அப்படியே தரையில் அமர்ந்துகொண்டாள். மருமகள், அவன் முகத்தில் வழிந்த கண்ணீரை அழுந்தத் துடைத்துவிட்டாள். தான் கட்டியிருந்த சேலை முந்தானையெடுத்து அவன் தலையைத் துவட்டிவிட்டாள். பின்னர் உள்ளே போய்த் தட்டெடுத்து அதில் சோறு, ரசமென ஊற்றிப் பிசைந்து எடுத்துவந்தாள். அவன் இன்னும் கத்தி அழுதுகொண்டே தன் அண்ணியின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு அவள் பின்னால் நின்றுகொண்டிருந்தாள். வள்ளித்தாயி தன் அழுகையை மறைக்கப் போல முற்றத்துச் சகதியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    ‘பாரு மேலெல்லாம் எப்படி வீங்கியிருக்குன்னு…அழுவாத ராசா..அண்ணன் தூங்குதில்ல..இந்தா சாப்டு ராசா’

    அவனை அருகிலமர்த்தி, அவளும் அமர்ந்து, விம்மிக் கொண்டே சோற்றைப் பிசைந்து அவனுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தாள்.

    mrishansha@gmail.com

    படம் உதவி: http://www.panoramio.com/photo/52716439 ,by Prabhat Das

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஏப்ரல் 7 , 2014

    வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

    **************************************************************************************

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு எம்.ரிஷான் ஷெரீப் அவர்கள்

    **************************************************************************************

    M.Rishan Shareef

    எம்.ரிஷான் ஷெரீப் இணையத் தமிழ் வாசகர்களை தொடர்ந்து தனது கவிதைகள் மூலம் மகிழ்வித்து வருபவர்.

    இலங்கையின் மாவனல்லையைச் சேர்ந்த எம்.ரிஷான் ஷெரீப் அவர்கள் கவிஞர் என்ற வகையில் தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், ‘வீழ்தலின் நிழல்’ என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டிருந்தாலும், அவரைக் கவிஞர் என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் நம்மால் அடக்க இயலாது. இத்தமிழ் எழுத்தாளர் ஒரு கவிஞர் மட்டுமின்றி ஒரு சிறந்த ஊடகவியலாளரும் ஆவார்.

    எம்.ரிஷான் ஷெரீப் தனது படைப்பாற்றலை கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனக் கட்டுரை, மொழிபெயர்ப்பு, புகைப்படம், ஓவியம், எனப் பல துறைகளின் வழியாகவும் வெளிப்படுத்தி வருபவர். இதுவரை இவரது படைப்புகள் இலங்கையிலிருந்து வெளிவரும் இதழ்கள், தமிழகத்தின் பிரபலமான இதழ்கள், மற்றும் மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளின் பத்திரிக்கைகள், இணைய இதழ்கள் எனப் பலவற்றிலும் வெளிவந்துள்ளன. காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இவரது மொழிபெயர்ப்பு நாவலான ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருதும் கிடைத்துள்ளது.

    இவரது பலதுறை பங்களிப்புகளின் அடிப்படையாக உள்ள ஓர் இழை சமுதாய அக்கறை என்பதாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் வல்லமையில் நூலறிமுகக் கட்டுரைக்காக இவர் தேர்ந்தெடுத்த நூல் அன்றைய இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தாய்லாந்திருந்து பர்மா வரைக்குமான ரயில்பாதை அமைப்பதற்காக பலியிடப்பட்ட மக்களைப்பற்றிய ‘சயாம் – மரண ரயில் பாதை’யைப் பற்றி இருந்தது என்றால், இவர் எழுதும் செய்தி விமர்சனக் கட்டுரை பள்ளியில் அவமானப்படுத்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்யும் முடிவை எடுத்ததற்கு பள்ளி நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில் அமைந்தது. இவையாவும் வல்லமை வாசகர்களுடன் ரிஷான் ஷெரீப் முன்னர் பகிர்ந்து கொண்டவையே.

    ஆனால் இவ்வாரம் ரிஷான் ஷெரீப் மீண்டும் அவரது வழக்கமான கவிஞர் என்ற கோணத்தில் தன்னை இருத்திக் கொண்டு இரு சிறப்புமிகு கவிதையை வல்லமை வாசகர்களுக்கு வழங்கியுள்ளார். “பனிபடர்ந்த இரவின் காலம் எனது கைவிரல்களை ஒற்றியொற்றி உன் நேசத்தைச் சொல்லிற்று” என்று மனதிற்கு இதம் தரும் சூழலில் அறிமுகமாகி, உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட தோழமை ஒன்று தன்னை விட்டு விலகித் தொலைதூரம் சென்றுவிட்ட சோகத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘நுழைதல்’, ‘விலகல்’ என்ற இரு கவிதைகள் மூலம் உறவை இழந்த பின்னர் மனதில் தோன்றும் வெறுமை உணர்வை அருமையாக வடித்துக் கொடுத்துள்ளார். ஒரு சில வரிகள் கீழே….

    நுழைதல்
    http://www.vallamai.com/?p=43635

    எல்லாம் கடந்துவிட்டன
    நேற்றிருந்த மேகத்தைப் போல
    இக் கணத்து நதி நீர் போல
    உனது பயணங்கள் முடிவற்றன
    எல்லையற்று நீளும் உனது பாதைகள் வலியன
    ஏமாற்றங்களில் தடுக்கி விழுந்து
    அனுபவங்கள் பல ஒளிந்திருந்த நெஞ்சுனது
    பாளங்களாய்க் கனன்றெரிந்து
    உன் வாழ்வின் கதைகள் பேசிற்று
    உள்ளிருந்த எனக்கான உன் நேசம் சுகமாயும் வலியாயும் மிதந்தூறிட
    தெப்பமென நனைந்தேன்

    விலகல்
    http://www.vallamai.com/?p=43769

    பட்ட மரத்தின் அடிப்பாகத்தில்
    புற்றெழுப்பும் கரையான்களைக்
    கொத்த வரும் சாம்பல்குருவிகளை
    பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்
    வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்
    நாம் கதைத்தபடியே நடந்து கடந்த
    எனது கிராமத்தின் ஒற்றையடிப் பாதை
    வழித்தடங்களிலெல்லாம் அக் கதைகள் சிந்தின
    விடிகாலையில்
    அக் கதைகளைப் பொறுக்கித் தின்ற சாம்பல்குருவிகள்
    தொலைதூர தேசமேகிப் பின்னர் வரவேயில்லை
    உன்னைப் போலவே

    இவ்வாறு ஈழத்தமிழர் ஒருவர் பிரிவுத் துயரக் கவிதை வடிக்கும் பொழுது, அந்த உறவு பிரிந்து சென்றுவிட்ட காரணம் புலம் பெயரவேண்டிய கட்டாயச் சூழலோ என்றும் தோன்றுகிறது. இவர் வெளிப்படுத்தும் ஏக்கம் உண்மையில் எத்தனை மக்களின் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிட்டதோ என்ற கலக்கத்தையும் ஏற்படுத்தும் கவிதை வரிகள் இவை.

    இது போன்ற உணர்வு மிகுந்த இவரது கவிதை வரிகளைப் படிக்கும் பொழுது, ரிஷான் ஷெரீப் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒரு சமுதாய அக்கறை கொண்ட துடிப்புமிக்க இளைஞர் ஒருவர், வருங்கால உலகம் பற்றி நினைக்கும் பொழுது நமக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத்  தெரிபவர் என்ற எண்ணமே. இவ்வாறு தனது எழுத்துப் பணியின் மூலம் இக்கால இளைஞர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாகத் திகழும் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************

    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • தெளிதல்

    எம். ரிஷான் ஷெரீப்images

    ஏமாற்றத்தின் சலனங்களோடு

    மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும்

    அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது

    மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம்

    இரண்டையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்

    எல்லாவற்றையும் அதிர்ந்துபோகச் செய்த இறுதிக் கணங்கள்

    மிகப் பற்றுதலோடு என்னைப் பிடித்திருந்தன

    வாழ்வைப் பற்றிய பற்றுதல் குறித்து இனி எதுவும் எழுதுவதாயில்லை

     

    மகிழ்ச்சி ததும்பிய நேற்றின் தருணங்கள்

    ஒரு புகையென மறைந்து அழிந்துவிட்டன

    நூதனங்களை மிஞ்சிய பழங்காலத் தடயமொன்றைப் பேணிக் காக்கும்

    மூதாட்டியொருத்தியைப் போல எல்லாவற்றையும் சுமந்து திரிவதில்

    விசனப்படத்தான் வேண்டியிருக்கிறது

     

    மிக எளிய ஆசைகள் கொண்டு

    நான் பூட்டிய குதிரைகள் தப்பியோடினவோ

    புழுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது

    வெளிச்சம் எதிலுமில்லை

     

    கடற்கரையெங்கிலும் மணற்துகள்கள்

    அகலும்போது உறுத்துவதைத் தட்டிவிடத்தான் வேண்டியிருக்கிறது

    ஊரில் கடலற்ற சிறுவனின் பாதம் நனைக்க

    அலைகளும் எங்குமில்லை

    நேற்றைய சமுத்திரத்தோடு அது ஓய்ந்துவிட்டது

     

    எந்த நேசமுமற்று எப்பொழுதும்

    உனது தேவைகளுக்காக மட்டுமே நான் பயன்படுத்தப்பட்டேன் எனும்

    ஏமாற்றத்தின் முதல் தளிரோடு

    ஒரு கவிதை எஞ்சியிருக்கிறது தலைப்பேதுமற்று

     

    நாளைக்கு இருக்கும் முகம் உனதானதில்லை

     

     http://news.nationalgeographic.com/news/2011/01/photogalleries/110127-christo-arkansas-river-art-environment-water/

     

    Share
  • விலகல்

     

    எம். ரிஷான் 

    அடைமழை பெய்தோய்ந்தimages (2)
    நள்ளிரவுக்கு முன்னரான பொழுதின் வளி
    குளிரில் ஒடுங்கிக் கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்
    பனியை விரலிலேந்தி கடைசிப் பேருந்திலிருந்து இறங்கினாய்

    பகலை விடவும் இருளிடம் இருக்கின்றன
    பல்லாயிரம் விழிகள்
    அன்று ஒவ்வொரு விழியின் துளியுமிணைந்து
    தெருவெங்கும் குட்டைகளாய்த் தேங்கியிருந்ததை
    தாண்டித் தாண்டி நீ வந்த காட்சி
    இருளின் கறுப்புத் திரைக்குள் மறைந்தது

    பட்ட மரத்தின் அடிப்பாகத்தில்
    புற்றெழுப்பும் கரையான்களைக்
    கொத்த வரும் சாம்பல்குருவிகளை
    பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்
    வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்

    நாம் கதைத்தபடியே நடந்து கடந்த
    எனது கிராமத்தின் ஒற்றையடிப் பாதை
    வழித்தடங்களிலெல்லாம் அக் கதைகள் சிந்தின
    விடிகாலையில்
    அக் கதைகளைப் பொறுக்கித் தின்ற சாம்பல்குருவிகள்
    தொலைதூர தேசமேகிப் பின்னர் வரவேயில்லை
    உன்னைப் போலவே
    _______________________________________________

     

    Share