Tag: எம்.ரிஷான் ஷெரீப்

  • புதிய பதினான்கு நூல்கள் – எம். ரிஷான் ஷெரீப்

    புதிய பதினான்கு நூல்கள் – எம். ரிஷான் ஷெரீப்

    வணக்கம்.

    2023 ஜுலை 21 அன்று இந்தியா, கோயமுத்தூர், கொடீஷியாவில் ஆரம்பமாகியுள்ள புத்தகக் கண்காட்சியில் எனது புதிய பதினான்கு நூல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

    கூகி வா தியாங்கோ, சினுவா ஆச்சிபி, பென் ஒக்ரி உள்ளிட்ட  சர்வதேச இலக்கிய விருதுகளை வென்றுள்ள உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் முக்கியமான சிறுகதைகள் அடங்கியுள்ள தொகுப்புகளோடு, பாலியல் அடிமையாகவிருந்து மீண்ட மரியா ரோஸா ஹென்சன் எழுதிய அவரது சுயசரிதையும், உலகின் தலைசிறந்த தத்துவவாதியும், அறிஞருமான ஆந்த்ரே கோர்ஸ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது மனைவிக்கு எழுதிய நீண்ட கடிதமும், இலங்கையின் புகழ்பெற்ற சிங்களப் பெண் எழுத்தாளரான சுநேத்ரா ராஜகருணாநாயக்கவின் சிறந்த நாவலும் எனது மொழிபெயர்ப்பில் தமிழில் தற்போது வெளிவந்துள்ளன.

    இந்த நூல்களை திராவிடன் ஸ்டாக், எதிர் வெளியீடு, காலச்சுவடு ஆகிய பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. புத்தகங்களின் அட்டைப்படங்களை இணைத்திருக்கிறேன். இந்த நூல்களை புத்தகக் கண்காட்சி அரங்குகளில் தற்போது பெற்றுக் கொள்ளலாம்.

    என்றும் அன்புடன்,
    எம். ரிஷான் ஷெரீப்

    Share
  • எம்.ரிஷான் ஷெரீப்பின் நூலுக்கு  ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’

    எம்.ரிஷான் ஷெரீப்பின் நூலுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’

    தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆயிரக்கணக்கான நூல்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றுள் ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’களை வெல்லும் நூல்கள் பற்றிய விபரங்களை தற்போது இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்திருக்கிறது.

    அவற்றுள் ‘சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியம்’ எனும் பிரிவில் இலங்கை ஊடகவியலாளரும், எழுத்தாளருமான  எம். ரிஷான் ஷெரீபின் ‘அயல் பெண்களின் கதைகள்’ எனும் நூலுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’ வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

    வம்சி பதிப்பக வெளியீடான ‘அயல் பெண்களின் கதைகள்’ நூலில், சிங்கள மொழியில் எழுதி வரும் இலங்கையின் முக்கியமான பெண் எழுத்தாளர்களான சுநேத்ரா ராஜகருணாநாயக, தக்ஷிலா ஸ்வர்ணமாலி, கத்யானா அமரசிங்ஹ,  மனுஷா பிரபானி திஸாநாயக்க, சந்தனி ப்ரார்த்தனா ஆகியோரின் சிறுகதைகள் எம். ரிஷான் ஷெரீபால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருந்தன. ‘அயல் பெண்களின் கதைகள்’ எனும் இந்த நூலுக்கு கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கான ‘இந்திய வாசகசாலை விருது’ம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

    Share
  • சென்னைப் புத்தகக் காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்

    சென்னைப் புத்தகக் காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்

    2021 ஆம் ஆண்டிற்கான 44 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியானது, இந்தியா, சென்னை YMCA நந்தனம் வளாகத்தில் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 09ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. உலகம் முழுவதிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் இலங்கை எழுத்தாளரான எம். ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்புகள் மூன்று, நாவல்கள் இரண்டு எனப் புதிய ஐந்து நூல்கள் வெளியாகவிருக்கின்றன.

    எம். ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ள ‘கிகோர்’ (சோவியத் ரஷ்ய இலக்கியம்), ‘தரணி’ ஆகிய புதிய நாவல்களையும், ‘திருமதி பெரேரா’, ‘அந்திமக் காலத்தின் இறுதி நேசம்’ ‘சுருக்கப்பட்ட நெடுங்கதைகள்’ ஆகிய புதிய சிறுகதைத் தொகுப்புகளையும் இந்தக் கண்காட்சியில் பெற்றுக் கொள்ளலாம். அத்தோடு, இதுவரை வெளியாகியுள்ள எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வம்சி, காலச்சுவடு, டிஸ்கவரி புக்பேலஸ், பாரதி புத்தகாலயம், பரிசல் புத்தக நிலையம் ஆகிய அரங்குகளில் கிடைக்கும்.

    எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப் இலங்கையில் மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் தனது நூல்களுக்காக இதுவரை இலங்கை அரச சாகித்திய விருது, கனடா இயல் விருது, இந்தியா வம்சி மற்றும் வாசகசாலை விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Share
  • யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம்

     

    – வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்த நபரொருவர் எனக்களித்த வாக்குமூலத்தை பல வருடங்களுக்குப் பிறகு நான் எழுதுகிறேன். இந்த நிகழ்வு குறித்து நான் தனிப்பட்ட பதிவேதும் எழுதவில்லை. எனினும் 2002 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்ட எனது ‘பிரபாகரன் நிரூபணம் குறித்த மனோவியல் ஆய்வு’ எனும் தொகுப்பில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

    இந்த நபரை, 1994 ஆம் ஆண்டு நான் மாத்தளை வைத்தியசாலையில் கடமையாற்றிய காலத்தில் சந்தித்தேன். அவர் எனது பகுதி நேர நோயாளியாகவிருந்தார். பகுதி நேர நோயாளி என நான் குறிப்பிடுவது ஏனெனில், அவருக்கு ஆரம்பத்திலிருந்து சிகிச்சையளித்த வைத்தியர் நானல்ல. எனினும் அவரது உடல் ரீதியான வியாதிகள் சிலவற்றுக்கு நான் சில வைத்திய அறிவுரைகளைக் கூறியிருந்ததாலும், அவருக்கு சில மருந்துகளை இலவசமாகக் கொடுத்ததாலும் அவர் எனக்கு சினேகமாகியிருந்தார்.

    நான் இங்கு குறிப்பிடப் போவது அந்த நபர் என்னிடம் கூறியதைத்தான். இந்தத் தகவல்கள் உண்மையானவை, பொய்யானவை போன்ற விடயங்களை வாசகர்களின் தீர்மானத்துக்கு விட்டு விடுகிறேன். (ஓய்வுபெற்ற சிரேஷ்ட போலிஸ் பிரதி காவலதிகாரி எட்வட் குணதிலகவால் முன்வைக்கப்பட்ட ‘ஆய்வறிக்கை’யின் பிரகாரம், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தது விடுதலைப்புலிகள் இயக்கத்தினரது செயல்பாடாகும். அதற்கு சிங்களவர்கள்தான் காரணம் எனக் காட்டி சர்வதேச மக்களின் அனுதாபத்தை வென்றெடுப்பதே அவர்களது நோக்கமாகும்.)

    இந்த வாக்குமூலத்தை அளித்த நபரது உத்தியோகம் என்னவாகவிருந்தது என்பதை நான் கூற மாட்டேன். காரணம் அது சர்ச்சைக்குரியதாகவும், ஈழ ஆதரவாளர்களால் இந்த விடயமும் கூட அவர்களது பிரசார தந்திரமாகப் பாவிக்கப்படக் கூடும் என்பதனாலுமாகும். எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அவர் வடக்கில்தான் இருந்திருக்கிறார்.

    ஒரு இலட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களோடு, ஆசியாவிலிருந்த விசாலமான நூலகங்களிலொன்றான யாழ்ப்பாண நூலகத்துக்கு 1981 ஆம் ஆண்டு, மே மாதம் 31 ஆம் திகதி தீ வைக்கப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் யாழ்ப்பாண அபிவிருத்திக் குழுத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்ததோடு, கொழும்பிலிருந்து சென்றிருந்த காடையர்கள் யாழ்ப்பாணத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவாறு இருந்தனர். இந்த நிகழ்வானது இனவாதக் கலவரங்களின் திருப்புமுனையாக அமைந்தது.

    யாழ்ப்பாணத் தமிழர்களின் பெருமைக்குக் கொடுத்த அடியாகத்தான் யாழ்ப்பாண நூலகம் கொளுத்தப்பட்டதென அந்த நபர் கூறுகிறார். இதற்கு சில அரசியல்வாதிகளும் கூட அனுமதியளித்திருக்கின்றனர். அதை நியாயப்படுத்தும் விதமாக, விடுதலைப் புலி இயக்கத் தீவிரவாதிகள் இந் நூலகத்தில் வைத்துத்தான் ஒருவரையொருவர் சந்தித்து தாக்குதல் திட்டங்களைத் தீட்டுவதாகவும், அதனால் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் இடங்களை அழித்தொழித்து விட வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. அத்தோடு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் இறுதி பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்ற இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போலிஸார் இருவரை தீவிரவாதிகள் கொலை செய்திருந்ததால் இந்தக் குழுவினர் அமைதியற்று இருந்திருக்கின்றனர்.

    இந்த நபர் கூறும் விதத்தில், அவரும், அவருடனிருந்த குழுவினரும் முதலில் சாராய போத்தலொன்றில் பெற்றோலும், மணலும் நிரப்பி, புடைவைத் துண்டால் மூடி அதனைக் கொளுத்தி விட்டு நூலகத்தை நோக்கி எறிந்திருக்கின்றனர். அந்த போத்தலுக்குள் சதுர வடிவில் வெட்டப்பட்ட இறப்பர் செருப்பின் துண்டொன்றும் இருந்ததனால் பலமாகத் தீ பற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே குழுவிலிருந்த ஒருவர் ‘நெருப்பு நெருப்பு’ எனக் கத்தியிருக்கிறார். அத்தோடு முன்பே திட்டமிட்டிருந்தவாறு ஒரு குழுவினர் தீயை அணைக்க தண்ணீரை எரிவதைப் போல பெற்றோலையும், மண்ணெண்ணையையும் கொண்டிருந்த வாளிகளை தீயின் மீது எறிந்திருக்கின்றனர். அதனால் தீயானது கொழுந்து விட்டெரியத் தொடங்கியிருக்கிறது. நூலகத்திலிருந்த புத்தகங்களிலும் தீப்பிடித்துக் கொண்ட காரணத்தால் சொற்ப நேரத்துக்குள் யாழ்ப்பாண நூலகம் சாம்பலாகி விட்டிருக்கிறது. இருண்ட வானம் சிவந்து போயிருந்தது.

    தீ, அதிக வெப்பத்தையும் கக்கிக் கொண்டிருந்ததனால், தீ வைத்தவர்கள் சற்றுத் தூரமாகச் சென்று இக் காட்சியைக் கண்டு களித்தவாறு மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டிருந்திருக்கின்றனர். இதற்கிடையே யாழ்ப்பாணத் தமிழ் மக்கள், நூலகத்துக்கு அருகில் ஓடி வந்து தமது அக ஆன்மா எரிந்து கொண்டிருப்பதையும், அதற்குக் காரணமானவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்புவதையும் கண்டிருக்கிறார்கள். இந்த வாக்குமூலத்தைக் கொடுத்தவர் கூறுவதற்கேற்ப தீ வைப்பதில் பங்குகொண்ட சிலர் சாராய போத்தல்களைக் கையில் வைத்துக் கொண்டு, அவற்றைப் பருகியவாறு இன ரீதியான கோஷங்களை எழுப்பியிருக்கிறார்கள். மது போதையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு சவால் விடுத்திருக்கின்றனர். பின்னர் போலிஸார் வந்து மிகவும் மென்மையாக அக் காடையர்களை அங்கிருந்து நீங்கிச் செல்லப் பணித்திருக்கின்றனர்.

    மிகவும் அரிய கைப்பிரதிகளைக் கூடக் கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகம் அழிக்கப்பட்டதைக் குறித்து ‘Cultural Genocide’ அதாவது ‘கலாசார இனப்படுகொலை’ என பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்திருக்கிறார். யாழ்ப்பாண நூலத்தை எரிக்க இராணுவ அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருந்ததாக நான் நினைக்கவில்லை. காரணம் இராணுவ அதிகாரிகளான ஜெனரல் வஜிர விஜேரத்ன, கர்னல் வைத்தியர் ரஞ்சன செனவிரத்ன போன்ற இராணுவ அதிகாரிகள் கூட யாழ்ப்பாண நூலகத்தின் உறுப்பினர்களாக இருந்ததோடு, அவர்கள் கூட இச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். இந்தக் குற்றச் செயலைச் செய்ய காடையர்களைத் தூண்டி விட்ட அரசியல்வாதிகள்தான் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

    எவ்வாறாயினும், யாழ்ப்பாண நூலகத்தை எரித்த காடையர் குழுவிலிருந்த இந்த நபர் பின்னர் அதைக் குறித்து வருந்தத் தொடங்கியிருக்கிறார். அவரது ஒரே பிள்ளையும் கூட பதினாறு வயதாகும் முன்பு இறந்து விட்டிருந்தது. அதனால் வாழ்க்கை குறித்து வெறுப்படைந்திருந்த அவர் மதுபானத்திற்கு அடிமையாகியிருந்தார். அவரை நான் இறுதியாக 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தித்தேன். இப்போது அவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பதை நான் அறியேன்.

    ******

    Font – Unicode

     

    எழுத்தாளர் பற்றிய குறிப்பு 

    வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க

    கவிதை, சிறுகதை, கட்டுரைகள் ஆகிய துறைகளில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தனது பங்களிப்பை ஆற்றி வரும் திரு. ருவண் எம் ஜயதுங்க, இலங்கை இராணுவத்தின் மன நலப் பிரிவில் மருத்துவராக கடமையாற்றியவர்.  அத்தோடு இலங்கை சுகாதார அமைச்சின் புத்தளம் மாவட்டத்துக்கான மன நல உத்தியோகத்தராகவும் கடமையாற்றியவர்.

    ஜோன் எப். கென்னடி, வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற தலைவர்கள் குறித்தும், மன நல மருத்துவம், சிறுகதைத் தொகுப்புகள்  என சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட  நூல்களை எழுதியுள்ள இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.

    Share
  • கலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது !

    நேர்காணலின் தமிழ் மொழிபெயர்ப்பு – எம்.ரிஷான் ஷெரீப்

    (இந்த நேர்காணலானது, இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஞாயிறு லக்பிம வாரப் பத்திரிகையில் (20.05.2018) வெளிவந்தது. நேர்காணல் செய்திருப்பவர் லக்பிம பத்திரிகை ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவரும், எழுத்தாளருமான திருமதி.கத்யானா அமரசிங்ஹ.)

    கேள்வி : நீங்கள் தமிழ்மொழியில் ஆக்கங்களை எழுதி வரும் படைப்பாளியாக இருப்பதோடு, சிங்கள இலக்கிய நூல்கள் பலவற்றை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பின் மீதான ஈடுபாடு எவ்வாறு தோன்றியது?

    பதில் : அது வேண்டுமென்றே செய்தவொன்றல்ல. தானாக நிகழ்ந்தது. பணி நிமித்தம் பிற நாடொன்றுக்கு வந்ததன் பின்னர் அதுவரைக்கும் நான் இலங்கையில் வசித்த காலத்தில் வாசித்துக் கொண்டிருந்த சிங்கள பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றை இழக்க நேரிட்டது. எனவே எனது சகோதரி கவிஞர் பஹீமா ஜஹான், இலங்கையில் சிங்களப் பத்திரிகைகளில் வெளியாகும் சிறந்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மாத்திரமல்லாது அரசியல் கட்டுரைகளையும் கூட மின்னஞ்சல் வழியாக அனுப்பிக் கொண்டிருந்தார். அவற்றிலுள்ள நல்ல, தீய விடயங்கள் குறித்து நாங்கள் வாதிட்டோம். தர்க்கித்தோம். அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் சிங்கள இலக்கியத்தைக் குறித்தும், ‘சிங்களவர்கள் அனைவருமே தமிழர்களுக்கு எதிரானவர்களல்ல’ என்பதையும், யுத்தத்தையும், இன மத வேறுபாடுகளை எதிர்க்கும் சிங்களவர்களும் இலங்கையில் வசிக்கிறார்கள் என்பதையும் தமிழ் வாசகர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூற முடியும் எனப் புரிந்தது. மொழிபெயர்ப்புப் பயணம் அப்போதிலிருந்து அவ்வாறுதான் தொடங்கியது.

    கேள்வி : தமிழ் மொழி மூலமாகக் கல்வி கற்ற நீங்கள் சிங்கள மொழியறிவை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? சிங்கள சமூகத்தோடு சிறுபராயம் முதல் தொடர்பேதும் இருந்ததா?

    பதில் : எனது ஊர் மாவனல்லை. எனவே சிறுபராயம் தொட்டு நான் வளர்ந்தது சிங்கள மக்களுடன்தான். சந்தையில், மைதானத்தில், வைத்தியசாலையில், கடைத்தெருக்களில் என அனைத்து இடங்களிலும் என்னைச் சூழ இருந்தவர்கள் சிங்கள மக்கள். அக் காலத்திலேயே அனைவரும் சிரமம் எனக் கூறும் சிங்கள மொழியை என்னால் புரிந்து கொள்ள முடியுமாக இருந்தது. பாடசாலையில் இரண்டாம் மொழியாக சிங்கள மொழியைத் தேர்ந்தெடுத்தேன். பிற்காலத்தில் கணினி வகுப்பில் சேர்ந்ததுவும் ஒரு சிங்கள ஆசிரியையிடம்தான். பல்கலைக்கழகத்திலும் என்னுடன் படித்தவர்கள் சிங்கள மாணவர்கள். இவ்வாறாக சிங்கள மொழி சிறுபராயம் தொட்டு என் கூடவே வந்ததால் சிங்கள மொழி எனக்கு நெருக்கமானதாக இருக்கிறது.

    கேள்வி : படைப்பாக்கங்களுக்கு தூண்டுதலாக அமைந்த உங்கள் குடும்பப் பின்னணி, சிறு பராயம் மற்றும் நீங்கள் வெளியிட்டுள்ள இலக்கிய படைப்புக்கள் பற்றி?

    பதில் : எனது சிறுபராயம் தொட்டு புத்தகம் வாசிக்கும் சூழல் எமது வீட்டிலிருந்தது. அம்மா முதற்கொண்டு வீட்டிலிருந்த அனைவரும் புத்தகங்களை வாசித்தார்கள். ஆகவே எனக்கும் அந்தப் பழக்கமே தொற்றியிருக்கிறது என்று கூறலாம். பாடசாலைக் காலங்களில் நிறைய இலக்கிய விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வென்றிருக்கிறேன். பாடசாலைக் காலத்துக்குப் பிறகும் நிறைய எழுத அவையும் பெரும் ஊக்கத்தையும் தைரியத்தையும் அளித்தன. உயர்தரக் கல்வியை மேற்கொண்டிருந்த காலத்திலேயே இலக்கியப் பத்திரிகைகளுக்கும் எழுதத் தொடங்கியிருந்தேன்.

    ‘இந்த வயதில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கற்று, வாழ்க்கையில் ஒரு நிலையான இடத்தை எட்டியதன் பிறகு எழுதத் தொடங்குங்கள். அப்போதுதான் அந்த எழுத்து ஆழமாகவும், காத்திரமாகவும் அமையும்’ என தக்க சமயத்தில் சகோதரி அறிவுறுத்தினார். ஆகவே உத்தியோகம் பார்க்க ஆரம்பித்த பிறகுதான் திரும்பவும் எழுதத் தலைப்பட்டேன். கல்வி கற்றுக் கொண்டிருந்த காலங்களில் எதுவும் எழுதாமலிருந்த போதும் அக் காலத்தில் புத்தகங்களை வாசிப்பதை நிறுத்தவில்லை. தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் சிறந்த நூல்கள் எனக் கூறப்படுபவற்றைத் தேடி வாசித்திருக்கிறேன்.

    பிறகு திரும்பவும் நான் எழுதத் தொடங்கியது எனது வலைத்தளத்தில்தான். அவை தமிழ் வாசகர்கள் இருந்த அனைத்து நாடுகளையும் சென்று சேர்ந்தமையால் எனது வலைத்தளத்தில் பதிவிட்ட எனது கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், அரசியல் கட்டுரைகள் என்பவற்றை அச்சு நூல்களாக வெளியிடத் தீர்மானித்தோம். அவ்வாறு கவிதைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு, மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்புக்கள், மொழிபெயர்ப்பு நாவல், மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கள், அரசியல் கட்டுரைத் தொகுப்புக்கள் போன்றன இதுவரைக்கும் அச்சு நூல்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த வருடத்தில் எனது புதிய கவிதைத் தொகுப்பையும், சிங்கள மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பொன்றையும் வெளியிடத் தீர்மானித்திருக்கிறோம்.

    கேள்வி : முப்பது வருடங்களாக நிலவிய யுத்தத்தின் காரணமாக தமிழ் மொழியில் எழுதி வரும் எழுத்தாளர்கள் பலருக்கும் இலங்கையை விட்டும் புலம் பெயரை நேர்ந்திருக்கிறது. மேலும் பல எழுத்தாளர்கள் யுத்தத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்தது. இவற்றால் தமிழ் இலக்கியத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் ?

    பதில் : யுத்தமானது, தமிழ் இலக்கியத்தைப் பெரிதும் பாதிக்கச் செய்தது என்பதே உண்மை. 1983 கலவரத்துக்கு முன்பு இலங்கையின் தமிழ் சினிமாவும், தமிழ் இலக்கியமும் வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருந்தவை. நிறைய எழுத்தாளர்கள் உருவாகியிருந்தார்கள். 1983 கலவரத்தில் அனைத்தையும் இழக்க நேரிட்டது. ஆசியாவின் பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாண நூலகமும், பல்லாயிரக்கணக்கான நூல்களும் எரிக்கப்பட்டு எதிர்கால சந்ததியினருக்கு அவை இல்லாமலாகின. அது சாதாரண விடயமல்ல.

    யுத்தம் தொடங்கியது. யுத்தத்தின் காரணமாக போர்க்கால இலக்கியம் உருவானது. யுத்தத்தோடு சம்பந்தப்பட்டவர்களும், யுத்தத்தின் காரணமாக தமக்குரியவற்றை இழந்தவர்களும் தமிழ் மொழியில் எழுதியதெல்லாம் யுத்தமானது தமிழ் மக்களுக்கு உரித்தாக்கியிருக்கும் துயரத்தையும், கண்ணீரையும், இழந்த ஜீவிதங்களையும், துயருறும் மக்களையும் பற்றித்தான். அவ்வளவு காலமும் தமிழ் இலக்கியம் என்றால் அது இந்தியத் தமிழ் இலக்கியம்தானென ஏற்றுக் கொண்டிருந்த உலகத்தில் போரிலக்கியமாக இலங்கைத் தமிழ் இலக்கியம் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. அது தனிப்பட்டு எழுந்து நின்றது.

    யுத்த தேசத்தில் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தினால் நிறைந்திருக்கும் இலக்கியம். அதை எழுதியவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களும், போர்க்களத்தில் இருந்தவர்களும்தான். அவ்வாறுதான் யுத்தமானது தமிழ் இலக்கியத்தைப் பாதிக்கச் செய்தது. இன ஒடுக்குமுறை மேலோங்கி, தனி மனித சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் போன்ற அனைத்தும் யுத்தங்களின் போது இல்லாதொழிக்கப்படுகின்றன. அந்தப் புள்ளியிலிருந்து இலக்கியமானது அத் துயரங்கள் குறித்த படைப்புக்களால் பூரணத்துவம் அடையத் தொடங்கி விடுகின்றது. ‘‘Protest literature’ என அழைக்கப்படும் அந்த இலக்கியம் இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் அடையாளமாக பிறப்பெடுத்தது அப்போதுதான்.

    இப்போதும் கூட பொதுவாக தமிழ் இலக்கியம் எனும்போது இந்தியத் தமிழ் இலக்கியம், இலங்கைத் தமிழ் இலக்கியம், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் தமிழ் இலக்கியம், தமிழில் எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்களின் இலக்கியம் என ஒவ்வொரு படைப்பையும் வகைப்படுத்த முடிகிறது. யுத்தத்துக்கு முன்னர் இந்தளவு பிரிவுகள் இருக்கவில்லை.

    கேள்வி : இலங்கைத் தமிழ் சினிமாவுக்கு மாத்திரமல்லாது, இலக்கியத்திலும் இந்திய ஆக்கிரமிப்பைத் தவிர்க்க முடியாதுள்ளது. இலங்கைக்குள் தரமான தமிழ் இலக்கிய படைப்புக்கள் குறைவாகத்தான் பதிப்பிக்கப்படுகின்றன. அநேகமான இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் தொகுப்புக்கள் இந்தியாவில்தான் பதிப்பிக்கப்படுகின்றன. உங்களுடையதும் கூட அப்படித்தான் இல்லையா? அதன் காரணத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?

    பதில் : நான் முன்பே கூறியது போல இலங்கைத் தமிழ் இலக்கியம் எனும்போது அதிலிருந்து யுத்தத்தையும், சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் பற்றி எழுதுவதைத் தவிர்க்க முடியாது இல்லையா? யுத்த காலத்திலும், தற்போதும் யுத்தத்தைக் குறித்தும், தற்காலத்தில் நிகழ்த்தப்படும் இனக் கலவரங்கள் குறித்தும் எழுதப்படும் இலக்கியப் பிரதிகளை தமது பதிப்பகத்தினூடாக பிரசுரிக்க பல தமிழ்ப் பதிப்பகங்கள் தயங்குகிறார்கள். ஏதேனும் பிரச்சினைகள் வருமோ என அவர்கள் பயப்படுகிறார்கள். அந்தப் பயம் சாதாரணமானது தான்.

    அண்மையில் கூட விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படத்தை முன்னட்டையில் கொண்டிருந்த ஒரு இந்தியத் தமிழ் சஞ்சிகையை இலங்கையில் தனது புத்தகசாலையில் விற்பனைக்கு வைத்திருந்தார் என்பதற்காக தமிழ் பதிப்பகத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறை கைது செய்து விளக்க மறியலில் அடைத்தது. எனவே தான் உணர்வதை எழுதுவதற்கு, எழுதியதைப் பதிப்பிப்பதற்கு இலங்கைக்குள் சுதந்திரம் இல்லை எனும்போது அப் படைப்புக்களை வெளிநாட்டில்தான் பதிப்பிக்க நேர்கிறது. அதுதான் எனக்கும் நேர்ந்தது. எமது நாட்டின் எமது இலக்கியத்தை நாம் எழுதி இன்னொரு நாட்டிடம் பதிப்பிக்கக் கொடுக்க வேண்டியிருக்கிறது. காரணம் இலங்கையில் அதற்கான சுதந்திரம் இல்லை என்பதோடு அவ்வாறு பதிப்பித்தாலும் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகள் அதிகம் என்பதால்தான். ஆகவே இலங்கையில் ஒரு தொகுப்பை பதிப்பித்து விட்டு சிறைக்குச் செல்லவும், அதன் பிறகு இலக்கியமே வேண்டாமென்று வீட்டிலிருந்து பெருமூச்சு விடவும் விரும்பாததால்தான் இலங்கை தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் பலரும் இந்தியாவில் தமது புத்தகங்களை பதிப்பிக்கிறார்கள்.

    கேள்வி : பிற நாடுகளில் பதிப்பிக்கப்படும் தமிழ் நூல்களின் பிரதிகளை இலங்கைக்கு தருவித்துக் கொள்ளும்போதும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வருவதாக அறியக் கிடைக்கிறது. இந்த விடயத்தில் உங்கள் அனுபவம் எவ்வாறிருக்கிறது?

    பதில் : அது உண்மைதான். தமிழ்ப் புத்தகங்கள் தபால் மூலமாக இலங்கைக்கு அனுப்பப்படுமாயின், அப் புத்தகங்களின் அட்டைப்படம் முதற்கொண்டு முழுமையான உள்ளடக்கம் வரைக்கும் தபாலதிகாரிகளிடம் விவரித்த பிறகுதான் அப் புத்தகங்கள் எமக்கு கிடைக்கும். அட்டைப்படத்திலோ, உள்ளடக்கத்திலோ யுத்தம் சம்பந்தப்பட்ட ஏதேனும் இருப்பின் புத்தகங்களைப் பெற்றுச் செல்ல வந்தவரின் பாடு முடிந்தது. எவரும் அவ்வாறான சிக்கல்களை எதிர்கொள்ள விரும்ப மாடடார்கள், அல்லவா?

    எனது அனுபவத்தைப் பற்றிக் கூறுவதானால், ஒரு தடவை நானும் கவிஞர் பஹீமா ஜஹானும் இணைந்து சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் கவிதைத் தொகுப்பொன்றை மொழிபெயர்த்து ஒரு நூலாக வெளிநாட்டில் பதிப்பித்து வெளியிட்டிருந்தோம். அப் பதிப்பகம் அதன் பிரதிகளை எமக்கு அனுப்பியிருந்தது. புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள தபாலகத்துக்குச் சென்றால் புத்தகப் பொதியைப் பிரித்துப் பார்த்திருந்தார்கள். அத் தொகுப்பைப் பற்றிய விபரங்களை விசாரித்தார்கள். இராணுவ வீரர்களின் ஓவியம் அட்டைப்படத்தில் அச்சாகியிருந்தது. அதைக் கவனித்தவர்கள் அப் பொதியை எம்மிடம் ஒப்படைக்கவில்லை. ‘புத்தகங்களைத் திரும்பவும் கொழும்புக்கு அனுப்புகிறோம். அங்கு விசாரணைக்குப் பிறகு உங்களுக்கு ஒரு கடிதம் வரும். பிறகு அங்கே சென்று உங்கள் புத்தகப் பொதியைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார்கள். அக் கடிதம் வரும் வரைக்கும் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். இன்று வரையில் அக் கடிதம் வரவேயில்லை. இது நிகழ்ந்து தற்போது ஐந்து வருடங்கள் ஆகின்றன.

    இது எனது அனுபவம் மாத்திரமல்ல. பிற நாடுகளிலிருந்து இலங்கையில் பெற்றுக் கொள்ள தமிழ்ப் புத்தகங்களை கொள்வனவு செய்யும் பலரும் இவ்வாறான அனுபவங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

    கேள்வி : ரஷ்ய மொழிபெயர்ப்பு இலக்கியங்களினூடாக மத்திய ஆசிய இஸ்லாமியக் கலாசாரப் பின்னணி குறித்துக் கூறப்படும் பல படைப்புக்களை நாங்கள் வாசித்திருக்கிறோம். இலங்கையில் இஸ்லாமிய இலக்கியப் படைப்புக்கள் சிங்கள வாசகர்களிடையே போதுமான அளவு சென்று சேர்ந்திருக்கின்றன என நீங்கள் கருதுகிறீர்களா? இல்லாவிட்டால் அதற்கான காரணமென்ன?

    பதில் : இலங்கையின் இஸ்லாமிய இலக்கியமானது சிங்கள வாசகர்களிடையே போதுமான அளவு சென்றடையவில்லை. இலங்கையின் இஸ்லாமிய இலக்கியம் எனும் போது அதைக் கூட போர் பாதித்திருக்கிறது.

    யுத்த காலத்தில் கூட இஸ்லாமிய இலக்கியப் படைப்புக்கள் பலவும் அதிகளவில் கிழக்கு மாகாணத்தில் படைக்கப்பட்டிருக்கின்றன. யுத்தத்தின் காரணமாக அவை குறித்து பெரிதளவில் பேசப்படவில்லை. தமிழ் மொழியில் எழுதப்படும் தரமான சிறந்த இலக்கியப் படைப்புக்களை மொழிபெயர்ப்பதை விட்டு விட்டு, நன்றாக விற்பனையாகக் கூடிய இரண்டாந்தர தொகுப்புக்களை மொழிபெயர்ப்பு செய்து இலங்கையில் புத்தக வியாபாரிகளிடம் சேர்ப்பிப்பதைத்தான், தமிழ்மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கும் அனேகமானவர்கள் செய்து வருகிறார்கள். எனவே அவற்றை வாசிக்கும் சிங்கள வாசகர்கள் இவ்வளவுதான் தமிழ் இலக்கியம், இவ்வளவுதான் இஸ்லாமிய இலக்கியம் என அந் நூல்களைக் கொண்டு வரையறுத்துக் கொள்கிறார்கள். இந் நிலைமை மாற்றப்பட வேண்டும்.

    கேள்வி : இலங்கையில் 1950 களிலிருந்து அதிகளவில் இனக் கலவரங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அண்மையில் கூட இஸ்லாமிய சமூகத்தினருக்கெதிராக அவ்வாறானதொரு இனக் கலவரம் மூண்டது. இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படுத்தும் தாக்கமும், மன அழுத்தமும் ஒரு படைப்பாளியாக உங்களைப் பெரிதும் பாதிக்கும். இன ஒற்றுமையை வலியுறுத்தி பல படைப்புகள் வருகின்றபோதிலும், இப்போதும் கூட இலக்கியவாதியாகவோ, படைப்பாளியாகவோ நாங்கள் இருக்கும் இடம் குறித்து உங்களால் திருப்திப்பட முடிகிறதா? இன ஒற்றுமைக்காக ஒரு இலக்கியவாதிக்கு, படைப்பாளிக்குள்ள பொறுப்புக்கள் எவை?

    பதில் : தற்கால இலங்கையானது, இரு புறமும் வெட்டக் கூடிய கத்தி போன்றிருக்கிறது. ஒரு புறம் இன வாதம். மறு புறம் சிறுபான்மை மக்களை அடக்கியாளக் கூடிய அரசியல் வியாபாரம். அரசியல்வாதிகள் எவ்விதத் தயக்கமுமின்றி தமது இலாபங்களுக்காக வேண்டி சந்தர்ப்பங்களுக்கேற்ப கத்தியின் இரு புறங்களையும் பாவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளிடையே எவ்வித இன மத வேறுபாடுகளுமில்லை. இந்த விடயத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றுதான். அவர்கள் உசுப்பேற்றி விடும் மக்கள் குறித்தும், அதன் காரணமாக தற்காலத்திலும், எதிர்காலத்திலும் இந் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்தும் எவருமே கவனத்தில் கொள்வதில்லை.

    அண்மையில் வெளிவந்து பலரதும் பாராட்டுக்களைப் பெற்ற ‘கூம்பியோ (எறும்புகள்)’ எனும் சிங்களத் தொலைக்காட்சி நாடகத்தின் ஒரு பாகத்தை நானும் பார்த்தேன். அதில் பொட்டு வைத்திருக்கும் ஒரு தமிழ்ச் சிறுமி ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்கிறாள். அவ் வீட்டுக்கு பொருட்களை வினியோகிக்க வரும் ஒரு சிங்கள இளைஞனைக் கண்டு அவள் புன்னகைக்கிறாள். அவனோடு கொஞ்சிக் கதைக்கவும், தனது தொலைபேசி இலக்கத்தை அவனுக்குக் கொடுக்கவும் அவள் விரும்புகிறாள். அதற்கு முன்பு ஆண்கள் எவரையுமே கண்டதில்லை போல அவளது நடவடிக்கையின் மூலம் கேவலமாக அத் தமிழ்ச் சிறுமி சித்தரிக்கப்படுகிறாள்.

    இக் காட்சியை நாடகத்தின் இயக்குனர் நகைச்சுவைக்காகச் சேர்த்திருக்கக் கூடும். கடந்த காலத்திலும் அப்படித்தான் இருந்தது. அனேகமான சிங்களத் திரைப்படங்களிலும், சிங்கள நாடகங்களிலும் பார்வையாளர்களை சிரிப்பூட்டுவதற்காக வேலைக்காரியாகவும், தோட்டக்காரனாகவும் தமிழ்க் கதாபாத்திரங்களை நுழைத்திருப்பார்கள். அவர்களை கேவலமாக சித்தரிப்பார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னரும் இந்த நிலைமைதான் இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. எனவே இவ்வாறான படைப்புக்களை பார்க்கும், வாசிக்கும் பெரும்பான்மை சமூகமானது, சிறுபான்மை சமூகத்தை கேலிக்குரியதாகத்தான் கருதுகிறது. அவர்களை வெறுப்போடு பார்க்கிறது.

    இன ஒற்றுமைக்காக உருவாக்கப்படும் இவ்வாறான படைப்புக்களில் கூட சிறுபான்மையினரை கேலியாகச் சித்தரிக்கும்போது இலங்கையில் பெரும்பான்மை சமூக கலைஞர்களைப் போலவே இலக்கியவாதிகளும் இன ஒற்றுமை என வரும்போது அவர்கள் இருக்குமிடத்தைக் குறித்து திருப்திப்பட முடியாது. இன ஒற்றுமை குறித்துச் சிந்திக்கும் எந்தவொரு கலைஞருக்கும், எந்தவொரு இலக்கியவாதிக்கும் இருக்க வேண்டிய பொறுப்பு என்பது சிறுபான்மையினரை கேலிக்குரியவர்களாக்காமல், அவர்களை மோசமானவர்களெனச் சித்தரிக்காமல் படைப்புக்களை உருவாக்குவதாகும்.

    அண்மையில் கண்டியில் இடம்பெற்ற இனக் கலவரத்தின் போதும் அதுதான் நடந்தது. ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும்போது கூட இனவாதக் கும்பலுக்கு அவ்வளவு மோசமான தாக்குதல்களையும், தாம் விரும்பியவாறு நிகழ்த்த முடிந்திருக்கிறது. அதாவது, அரசையும், சட்டத்தையும் கவனத்திலேயே கொள்ளாது தெருவிலிறங்கி பகிரங்கமாக சிறுபான்மையினரைத் தாக்கி, அவர்களது சொத்துக்களையும், உயிர்களையும்  அழிக்க முடியுமாக இருக்கும் ஜனநாயக நாடு இது என்பதுதானே? இது எவ்வாறு சாத்தியமானது?

    அனேகமான கலை, இலக்கியப் படைப்புக்களில் இலங்கையில் ஒரு இன சமூகத்தினரை, ஏனைய இன சமூகத்தினரை விடவும் சிறந்தவர்களாக சித்தரித்துக் காட்டுவதால் வந்த வினைதான் இல்லையா? எனவே இன ஒற்றுமை குறித்து இலக்கியவாதிக்கு, படைப்பாளிக்கு இருக்கும் பொறுப்புதான் ஏனைய மக்களையும் கௌரவமாக, அவர்களது மனித உரிமைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாதவண்ணம் தமது கலை, இலக்கியப் படைப்புக்களை சமூகத்துக்கு வழங்குவதாகும்.

    கேள்வி : நீங்களும், உங்கள் சகோதரியும் சிங்கள மொழிப் படைப்புக்கள் பலவற்றை தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறீர்கள். அவற்றுக்கு தமிழ் வாசகர்களிடையே எவ்வாறான வரவேற்பிருக்கிறது?

    பதில் : யுத்த காலத்தில், போரில் சிக்கித் துயருற்ற அப்பாவித் தமிழ் மக்கள் குறித்து சிங்களத்தில் எழுதப்பட்ட கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றையே நாங்கள் மொழிபெயர்த்திருக்கிறோம். அவற்றை எழுதியவர்கள் சிங்கள இலக்கியவாதிகள். எனவே அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு படைப்புக்களை உலகம் முழுவதுமிருக்கும் தமிழ் வாசகர்கள் வாசித்துவிட்டு எம்மிடம் எழுப்பிய முதல் கேள்வி, ‘பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக குரலெழுப்பும் சிங்களவர்களும் இலங்கையில் இருக்கிறார்களா?’ என்பதுதான்.

    அது வரையில் சிங்களவர்கள் அனைவருமே, இலக்கியவாதிகளும் கூட தமிழர்களை எதிர்ப்பவர்கள், தமிழர்களை வாழ விடாதவர்கள் என்றுதான் அவர்கள் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார்கள். எனவே இன ஒற்றுமையை வலியுறுத்தி சிங்களத்தில் எழுதப்பட்ட சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வழங்கி அந்த எண்ணத்தை மாற்ற எம்மால் முடிந்தது. இந்தியாவிலும், உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் வாசகர்கள் சிங்களத்தில் எழுதப்படும் இலக்கியப் படைப்புக்களை வாசிக்க ஆர்வத்தோடு இருக்கிறார்கள். மொழிப் பிரச்சினைதான் இங்கு சிக்கலாக இருக்கிறது. தற்போது எமது மொழிபெயர்ப்புக்களின் மூலம் அச் சிக்கலை ஓரளவு தீர்க்க முடிந்திருக்கிறது எனக் கூறலாம். எதிர்காலத்திலும் அதனை ஒரு சேவையாகச் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்.

    ******

    Share
  • அரூபமானவை பூனையின் கண்கள்

     

     

     

    எப்போதும் ஈரலிப்பாகவே மின்னும்
    ஒளிப்பச்சை விழிகளினூடு வழியும்

    அப்பாவித்தனமும் திருட்டுக் குணமும் ஒருசேர

    ஆதி கால வனத்தை நினைவுபடுத்தும்

    மேனி வரிகளோடு
    அச்சுறுத்தும் சிலவேளை அதன்
    அசட்டுச் சிப்பிக் கண்கள்

     

    இரைக்காகக் காத்திருக்கும்வேளையில்
    அக் கண்களினூடு ததும்பும்

    சலனமற்ற ஒற்றைச் சாதுவின் தியானம்

     

    வேட்டை விலங்கின்
    உடல் மொழியைப் பேசும்
    பின்னங்கால்களில் அமர்ந்து

    மீதிப் பாதங்களை ஊன்றி

    நிமிர்ந்து பார்க்கையில்

    ஏதேனும் யாசித்துப் பின் தொடரும்

    அதன் பார்வையில்

    தயை கூறக் கோரும்

    கெஞ்சல் மிகைத்திருக்கும்

     

    அபூர்வமானவை
    பூனைப் பார்வைகளற்ற

    குடியிருப்புக்கள்

     

    அரூபமான கண்களைக் கொண்ட
    பூனைகள்

    பூனைகள் மாத்திரமேயல்ல

     

     

    – எம்.ரிஷான் ஷெரீப்

    mrishanshareef@gmail.com

     

     

    Share
  • மொழிபெயர்ப்புக் கட்டுரை – கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு !

    கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு !

     

    ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு

     

    – கத்யானா அமரசிங்ஹ

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது, ‘மந்திரி மனை’ என அழைக்கப்படுகிறது. தென்னிந்திய வீடுகளின் கட்டடக்கலையும், ஐரோப்பிய வீடுகளின் கட்டடக்கலையும் ஒருங்கே அமைந்திருந்த அந்த அரண்மனையை முதன்முதலாகக் கண்டபோது, இலங்கையின் தென்பகுதியில் காணக்கூடிய மழையும், வெயிலும், காலமும் பொலிவிழக்கச் செய்திருக்கும் பழங்கால, பாழடைந்த ‘வளவ்வ’ எனப்படும் பாரம்பரிய வீடுகளை அது நினைவுபடுத்திற்று. யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அந்த அரண்மனையானது, போர்த்துக்கேயர்களின் வருகையோடு ஆரம்பித்த காலனித்துவ யுகத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த மந்திரியொருவரின் இல்லமாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. அவ்வாறே யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர்கள் கைப்பற்ற முன்பு இம் மந்திரி மனை அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் யாழ்ப்பாண மன்னரொருவரின் அரண்மனையும் இருந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

    முதன்முறையாக ‘மந்திரி மனை’யைக் கண்ட எனது உள்ளத்தில் யாழ்ப்பாண வரலாறு குறித்த பல தரப்பட்ட எண்ணங்கள் கேள்வியெழுப்பின. எனினும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கே இருந்திருக்கக் கூடிய தமிழ் மன்னரொருவரின் ராஜதானியைக் குறித்து கற்பனை செய்து பார்ப்பதைத் தவிர, அதைக் குறித்து மேலதிக விபரங்களைத் தேடிப் பெற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பில்லை என்பதனால் அந்தக் கற்பனைகளும் கூட தோன்றிய இடத்திலேயே மரித்து விடவும் வாய்ப்பிருந்தது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கண்டி ராஜதானிகள் குறித்து நாங்கள் பலதரப்பட்ட வரலாறுகளைப் படித்திருந்த போதிலும், ஆயிரக்கணக்கான வருடங்கள் யாழ்ப்பாணத்தில் நிலவியிருந்த ராஜதானிகளின் அமைவிடங்கள் மற்றும் வரலாறு குறித்த விரிவான குறிப்பொன்றை எங்கிருந்து தேடிப் படிப்பேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

    எனினும் அதற்கு சில வாரங்களின் பின்னர், ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’’ எனும் ஆய்வு நூலொன்று எனக்குக் கிட்டியதானது, கோடையில் துவண்டிருக்கும் ஒருவர் மீது அகாலத்தில் பெய்த மழை போன்றிருந்தது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கட்டடவியல் பட்டதாரியும், தமிழ் எழுத்தாளருமான நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்) எழுதிய இந்த ஆய்வு நூலானது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த  யாழ்ப்பாண ராஜதானி நகர அமைப்பு  குறித்து எழுதப்பட்ட முதல் அறிவியல் ரீதியான ஆய்வு நூலாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட அந் நூலானது, இந்திய எழுத்தாளர்களில் ஒருவரான லதா ராமகிருஷ்ணனால்  ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நான் வாசித்தது ஆங்கில மொழிபெயர்ப்புப் பிரதியாகும்.

    எனக்கு முதன்முதலாக கிரிதரன் அறிமுகமாவது ஒரு கவிஞராகவும், சிறுகதை மற்றும் நாவல் எழுத்தாளராகவும்தான். அதற்கும் மேலதிகமாக உலகம் முழுவதும் தமிழ் வாசகர்களிடையே பிரபலமான வலைத்தளமாகவுள்ள ‘பதிவுகள்’ இணைய இதழாசிரியர் அவர். ஆயிரக்கணக்கான வருடங்களாக யாழ்ப்பாணத்தில் திகழ்ந்த ராஜதானிகளின் வரலாறுகள் குறித்தும், அதன் இறுதி ராஜதானியாகக் கருதப்படும் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு  குறித்தும் மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை, பல வருடங்கள் பாடுபட்டு ஆய்வுகள் செய்து அவர் எழுதியிருக்கும் இச் சிறந்த ஆய்வு நூலிலிருந்து அறிந்து கொண்டேன்.

    “சிறு பராயத்திலிருந்து தென்னிந்திய வரலாற்று நாவல்களை வாசிக்க நேர்ந்தபோதும், அனுராதபுரம் போன்ற இதிகாசப் பழமை வாய்ந்த ராஜதானிகள் குறித்த விபரங்களை அறியக் கிடைத்த போதும், அக் காலத்தில் இலங்கையின் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்த ராஜதானிகள் எவ்வாறிருந்திருக்கும் என எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பேன். அத்தோடு, நான் பாடசாலைக்குச் செல்லும் காலத்தில், இற்றைக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்த நல்லூர் ராஜதானியைக் குறித்து தமிழ் எழுத்தாளர் ஒருவர் எழுதிய நந்திக்கடல் எனும் நாவலை வாசித்ததுவும் நினைவிருக்கிறது.”

    எனினும் தொல்லியல் ஆய்வுத் துறை  மூலம், இலங்கையிலிருந்த சிங்கள ராஜதானிகள் குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டிருப்பதோடு வடக்கின் தமிழ் ராஜதானிகள் குறித்த போதிய ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பது அவருக்கு வளரும்பருவத்தில் தெளிவாகிறது. அது மாத்திரமல்லாது, அக் காலகட்டத்தில் வடக்கிலிருந்த தொல்லியல் பெறுமதி வாய்ந்த ஸ்தலங்கள் சரியான முறையில் பாதுகாக்கப்பட்டிருக்கவுமில்லை.

    “அது மாத்திரமல்ல. இலங்கை தமிழ் மக்கள் வரலாறு குறித்து முறையான ஆய்வு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதுவும் எனக்குத் தெளிவானது. சிங்கள மக்களுக்கு வரலாற்று நூலாக மகாவம்சம் எனும் தொகுப்பாவது இருக்கிறது. தமிழ் மக்கள் தமது பழங்காலப் பெருமைகளை அதிகம் கதைத்தபோதிலும் கூட, அவர்களுக்கென இருக்கும் ஒரே வரலாற்றுக் கிரந்தம் ‘யாழ்ப்பாண வைபவ மாலை’ என்பது புரிந்தது. எனினும் அதுவும் எழுதப்பட்டிருந்தது இற்றைக்கு இருநூறு, முன்னூறு வருடங்களுக்கு முன்னர்தான். அடுத்தது, அனுராதபுரம், பொலன்னறுவை போன்ற ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமை வாய்ந்த ராஜதானிகள் குறித்து பல ஆய்வுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், இற்றைக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்த நல்லூர் ராஜதானி நகர அமைப்பு  எவ்வாறிருந்தது என்பது எமக்குத் தெரியவில்லையே எனவும் எனக்குத் தோன்றியது.”

    யாழ்ப்பாணத்தில் பிறந்து, அங்கு பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த நவரத்னம் கிரிதரன், பட்டப்படிப்புக்காக எண்பதுகளின் ஆரம்பத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டடக் கலைத் துறையில்  பிரவேசிக்கிறார். மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டடக் கலை பிரிவானது அவரது நல்லூர் ராஜதானி கனவை பெரு விருட்சமாக செழித்து வளர்ந்திட உரமிட்டது.

    “எமது விரிவுரைகளின் போது ஒரு தடவை பேராசிரியர் நிமல் த சில்வா (Nimal De Silva) அவர்கள், அனுராதபுர ராஜதானி குறித்தும், அங்கு ராஜதானி நகர அமைப்பு  எவ்வாறிருந்தது என்பது குறித்து பேராசிரியர் ரோலண்ட் சில்வா நடத்திய ஆய்வு குறித்தும் விவரித்தார். அனுராதபுர நகரமானது ஸ்தூப வளையங்கள்  இரண்டு மற்றும் நகரத்தின் மத்தியிலிருந்த வியாபார மத்திய நிலையத்தோடு திட்டமிடப்பட்ட ஒன்றெனவும் கூறக் கேட்டபோதுதான் எனக்கு அந்த எண்ணம் திடீரென உதித்தது. அக் கணத்தில்  பேரானந்தத்தை உணர்ந்தேன். நல்லூர் இராசதானியைக் குறித்து நான் சிந்திக்கத் தலைப்பட்டது அப்போதிலிருந்துதான்”

    அப்போது அவர்களுக்கு பட்டப்படிப்புக்கான ஆய்வுக்காக வரலாற்றோடு சம்பந்தப்பட்ட கட்டடக் கலை தொடர்பான தலைப்பொன்றின் கீழ்  ஆராய்ச்சிக் கட்டுரையொன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

    “அக் காலத்தில் என்னுடனிருந்த சிரேஷ்ட மாணவரான தனபாலசிங்கம், எனக்கு முன்பே அதைக் குறித்து எழுதத் திட்டமிட்டிருந்ததாகக் கேள்விப்பட்டேன். எனினும் போதியளவு தகவல்களும், சாட்சிகளும் இல்லாத காரணத்தால் அவர் அந்த எண்ணத்தைக் கை விட்டதாகவும் அறிந்து கொள்ளக் கிடைத்தது. எனினும் இதைக் குறித்துத் தேடிப் பார்க்க அவர் எனக்கு ஊக்கமளித்தார்” என கிரிதரன் கூறுகிறார்.

    அவர் கூறும் விதத்தில், அந்த ஆய்வை போதியளவு தொல்லியல் சான்றுகள் இல்லாமலேயே செய்ய நேர்ந்திருக்கிறது. போர்த்துக்கேயர்களின் ஆக்கிரமிப்பின் பின்னர் கடந்த ஐநூறு வருடங்களுக்குள் யாழ்ப்பாண ராஜதானியின் நகர அமைப்பானது  முற்றுமுழுதாக மாறியிருக்கிறது. எனினும் அண்மைக்கால ஆய்வாளர்களால் யாழ்ப்பாண வரலாறு குறித்து எழுதப்பட்டிருக்கும் தொகுப்புக்கள் அவருக்கு பெருமளவு உதவி புரிந்திருக்கின்றன. அவற்றுள் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள வரலாற்று ஆய்வு நூல்கள் பலவற்றையும் வாசித்து பரிசீலித்துப் பார்த்ததில் அவருக்கு முதலியார் ராசநாயகம் எழுதிய ‘The Ancient Jaffna’ எனும் தொகுப்பை தர்க்கரீதியாக ஏற்றுக் கொள்ள முடியுமாக இருந்திருக்கிறது.

    கிரிதரனின் ஆய்வு நூலை வாசித்துக் கொண்டிருக்கும்போது நானும் கூட அவர் எனக்கு அனுப்பி வைத்திருந்த அந்தத் தொகுப்பின் பி.டி.எஃப் பிரதியை வாசிக்கத் தொடங்கினேன். அந்தத் தொகுப்பிலும், ஏனைய வரலாற்று நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நல்லூர் ராஜதானி உருவாகும் வரைக்கும், யாழ்ப்பாணக் குடா நாட்டில் நிலவி வந்திருக்கும் ராஜதானிகள் குறித்த வரலாற்றை இவ்வாறு விவரிக்க முடியும்.

    கிறிஸ்துவ வருடம் பதினைந்தாம் நூற்றாண்டளவில் இலங்கையின் வடக்குப் பிரதேசத்தில் நாக மன்னர்களின் ராஜதானியொன்று இருந்திருக்கிறது என்பதை அனுமானிக்க முடிவதோடு  அதன் தலைநகரம் இப்போது யாழ்ப்பாணத்தில் ‘கந்தரோடை’ எனத் தமிழிலும் ‘கதுருகொட’ என சிங்களத்திலும் அழைக்கப்படும் பிரதேசத்தில் அமைந்திருந்ததை அனுமானிக்க முடிகிறது. இந்த நாக ராஜதானியானது, கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரைக்கும் யாழ்ப்பாணத்தில் நிலவி வந்திருக்கிறது. இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கும், யாழ்ப்பாண குடா நாட்டுக்கும் இடையே நிகழ்ந்த பாரியளவிலான தொடர்பாடல்களின் காரணமாக இலங்கை அடையாளத்துடன் கூடிய தமிழ் குடியிருப்புக்கள் வடக்கில் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்தியாவின் சோழ மன்னரொருவர், நாக இளவரசியொருவரை சுயம்வரம் செய்திருக்கிறார். சோழ மற்றும் நாக வம்சத்தின் இத் திருமணத்தினால் அத் தொடர்பாடல் மேலும் பலம் பெற்றிருக்கக் கூடும் என எண்ணிப் பார்க்க முடிவதோடு அப்போது இலங்கையில் வாழ்ந்து வந்த நாக, யட்ச, காலிங்க போன்ற இனங்களுடன் அத் தமிழ்மக்கள் ஒன்றாகக் கலந்து இலங்கைக்கே உரித்தான தமிழ் குயிருப்புக்கள் யாழ்ப்பாணத்தில் உருவாகியிருப்பதையும் எண்ணிப் பார்க்க முடிகிறது. (அது, இந்தியாவிலிருந்து வந்த விஜயன் உள்ளடங்கிய குழுவின் பரம்பரையிலிருந்து உருவானதாகக் கூறப்படும் சிங்கள இனத்தவர்கள் இந் நாட்டின் பூர்வீக இனங்களான யட்ச, நாக இனங்களோடு ஒன்றாகக் கலந்ததை ஒத்திருக்கிறது.)

         அதன்பிறகு உருவாகிறது வெற்றிடமொன்று. அதாவது கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு நூற்றாண்டு வரைக்கும் யாழ்ப்பாண ராஜதானி குறித்த போதியளவு விபரங்கள் கிடைக்கப் பெறாத தெளிவற்ற கால கட்டம். (நாக மன்னர்களின் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலம் தோன்றுவது அக் காலகட்டத்திலாக  இருக்கக் கூடும்.) அந்தக் காலத்திலோ அல்லது அதன் பிறகோ யாழ்ப்பாண ராஜதானியானது பருத்தித் துறையை அண்டிய சிங்கை நகரில் தோன்றியிருக்கக் கூடும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது. யாழ்ப்பாண ராஜதானி வரலாற்றில் ‘நல்லூர் காலம்’ தோன்றுவது அதன்பிறகுதான். அது, கி.பி.  1250 களில் சோழ இளவரசர்களில் ஒருவரான சேகராஜசேகரன் இலங்கைக்கு வருகை தந்து சேகராஜசேகர சக்கரவர்த்தி என யாழ்ப்பாணத்தில் முடிசூடப்பட்டதும் நிகழ்ந்திருக்கிறது. அவர் மூலமாக யாழ்ப்பாணத்தில் ஆரிய சக்கரவர்த்தி ராஜ வம்சம் தோன்றத் தொடங்குவதோடு சக்கரவர்த்தி தனது ராஜதானியாக நல்லூரைக் களமமைத்துக் கொள்கிறார்.

    நல்லூர் ராஜதானியின் அடுத்த முக்கியமான அத்தியாயம் உருவாவது கி.பி. 1450 களில் தெற்கிலிருந்து வந்த சபுமல் இளவரசன் யாழ்ப்பாணத்தை ஆண்டு கொண்டிருந்த சக்கரவர்த்தி வழித் தோன்றலான மன்னர் கனக்சிங்காரியனை தோற்கடித்து, ஸ்ரீ சங்கபோதி புனனேகபாகு எனும் பெயரில் அங்கு மன்னராக முடிசூடிய போது நிகழ்ந்திருக்கிறது. அவர் நல்லூர் கந்தஸ்வாமி கோயிலை முற்றுமுழுதாக புணர்நிர்மாணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

    இலங்கையின் தென்பகுதியிலிருந்து கிளம்பி, தமிழ் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட சபுமல் இளவரசன் குறித்து எழுதப்பட்டிருக்கும் ‘கோகில சந்தேஷய’ எனப்படும் சிங்கள சங்கக் கவிதை இலக்கியத்தின் கவிதைகள்  பலவற்றிலும் அக் காலத்தில் இருந்த நல்லூர் ராஜதானியின் பெருமை பாடப்பட்டிருப்பதாக கிரிதரன் தனது ஆய்வு நூலில் எழுதியிருக்கிறார். அது வரையில், பல தடவைகள் கேள்விப்பட்டிருக்கும், ‘கோகில சந்தேஷய’ எனப்படும் சிங்கள சங்கக் கவிதை இலக்கியத்தை நான் முதன்முதலாக தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் கவனமாக வாசிக்கத் தொடங்கியது, அக் கவிதைகளை வாசிப்பதன் மூலம் நான் வாசித்துக் கொண்டிருந்த நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பின் மீது   மிகுந்த நேச உணர்வை உள்ளத்தில் தோற்றுவித்துக் கொள்ளத்தான்.

    தங்கத் தோரணங்களும் மணிகளும் தொங்கும்

    அலங்கரித்த விசாலமான அரண்மணை வீற்றிருக்கும்

    ஆங்காங்கே பூத்துச் செழித்திருக்கும் மலர்த் தோப்புக்களுடன்

    வைஷ்ணவ எனும் கடவுள் குடியிருக்கும் யாழ் நகரை (நல்லூர் ராஜதானியை) பாருங்கள் 

    இவ்வாறு உரைக்கப்பட்டிருக்கும்விதமாக அந்தக் காலத்தில் திகழ்ந்த அழகிய நல்லூர் ராஜதானியானது பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்களின் படையெடுப்பின் காரணத்தால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டிருக்கிறது. மந்திரி மனையையும், இன்னும் சில இடிபாடுகளையும் தவிர வேறு எதுவும் அங்கு எஞ்சியிருக்கவில்லை. நல்லூர் ராஜதானியைக் குறித்த சான்றுகள் பலவும் அழிந்துபோயிருந்த அவ்வாறானதோர் இக்கட்டான நிலைமையில்தான் கிரிதரன் தனது ஆராய்ச்சியை நடத்தியிருக்கிறார். எனினும் அவர் தனது முயற்சியைக் கைவிடத் தயாராகவிருக்கவில்லை.

    பௌத்த மற்றும் இந்து கட்டடக் கலை மற்றும் நகர அமைப்புக்கள் குறித்து எழுதப்பட்ட புத்தகங்கள், மற்றும் போர்த்துக்கேயர்களால் எழுதப்பட்ட குறிப்புக்களை ஆய்வு செய்ததன் மூலம் அவருக்கு யாழ்ப்பாண தமிழ் ராஜதானிகளின் அமைவுகள் குறித்த விடயங்களை பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது. நில அளவையாளர் காரியாலயத்திலிருந்து பெற்றுக்கொண்ட வரைபடங்களினூடாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களினதும் பாதைகளினதும் பெயர்களைக் கண்டறிந்து அதனூடாக கடந்த காலத்தில் ஓரோர் இடங்களினதும் அமைவிடங்கள் குறித்த தெளிவையும் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது.

    போர்த்துக்கேயர்களால் பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கும் Early Christanity of Ceylon தொகுப்பில் நல்லூர் ராஜதானியில் அமைக்கப்பட்டிருந்த வியாபார மத்திய நிலையம் ஒன்றைக் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் செயற்பாடுகளை மன்னர் தனது மாளிகையிலிருந்தே கண்காணிக்கக் கூடிய விதமாக அது அமைக்கப்பட்டிருந்தது என அத் தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் நல்லூர் ராஜதானியின் பாதுகாப்புக்காக நகரத்தைச் சூழவும் சிறிய காவலரண்கள் மூன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும், அக் காவலரண்களைத் தொடர்புபடுத்தி ஒவ்வொன்றினூடாகச் செல்லும் பிரதான பாதைகளிரண்டும் அமைந்திருந்ததாகவும் அத் தொகுப்பில் எழுதப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கிறது.

    அதற்கும் மேலதிகமாக, இன்றும் கூட யாழ்ப்பாணத்தில் சிதைவுகளாகக் காணப்படக் கூடிய யமுனை ஏரி அல்லது யமுனாரி எனப்படும் ஏரியானது  நல்லூர் ராஜதானி குறித்த ஆராய்ச்சியின் போது கிரிதரனுக்கு பெரிதளவில் பயனளித்திருக்கிறது. ராஜவம்சத்தினர் தமது குளியல் தேவைகளுக்காகவோ அல்லது நல்லூர் கந்தஸ்வாமி கோயில் பூஜைகளுக்குப் பயன்படுத்திய ஏரியாகவோ இந்தப் பொய்கை பாவிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது.

    இந்த அனைத்து விடயங்களோடும் பண்டைய இந்து வாஸ்து ரீதியான கட்டடக் கலை பொருந்துவதால் கிரிதரனுக்கு தனது நல்லூர் ராஜதானி  நகர அமைப்பை கட்டமைக்க முடிந்திருக்கிறது. அது சதுர வடிவான நகரமாகத் திகழ்ந்திருக்குமெனத் தீர்மானிக்கும் அவர் அதில் வட மேற்குத் திசையில் அரச மாளிகை, யமுனை ஏரி, வியாபார மத்தியநிலையம் மற்றும் கந்தஸ்வாமி கோயில் இருந்திருக்கலாமென தீர்மானிக்கிறார். வட கிழக்குத் திசையில் பணியாளர்களது குடியிருப்பும், வேலைத்தளங்களும்,, தென்கிழக்குத் திசையில் படையினரதும், வியாபாரிகளினதும் குடியிருப்பும், தென் மேற்குத்  திசையில் புலவர்களினதும், மந்திரிகளினதும், ராஜ குலத்தவர்களினதும் காணிகளாகவும், நகரத்தைச் சூழவும் நான்கு கோயில் இருக்கத் தக்கதாகவும் அவர் அந்த நகர நகர அமைப்பை நிர்மாணித்திருக்கிறார். அந்தத் திட்டமிடலுக்கேற்ப நான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் மந்திரி மனையானது அமையப் பெறுவது தென் மேற்குத் திசையிலாகும்.

    “மந்திரி மனை அமைந்திருக்கும் காணிக்கு பண்டைய காலத்திலிருந்து குறிப்பிடப்படும் பெயர் சங்கிலித் தோப்பு என்பதாகும் என நில அளவையாளர் காரியாலயத்தின் வரைபடத்தைப்  பரிசோதித்துப் பார்த்தபோது எனக்குப் புலப்பட்டது. அதற்கு முன்பு அதனை யாரும் கண்டுபிடித்திருக்கவில்லை. சங்கிலித் தோப்பு என்பது ராஜாவுக்கு உரிய தோப்பு (சோலை) என்பதாகும். ஆகவே அதைச் சுற்றிவர அரச மாளிகையும், ஏனைய உயரதிகாரிகளின் கட்டடங்களும் இருந்திருக்கக் கூடுமென தீர்மானிக்க முடிகிறது” என கிரிதரன் விவரிக்கிறார்.

    அவர் இந்த ஆய்வுத் தொகுப்பை மீளவும் எழுதி ஒரு நூலாக வெளியிடுவது, பல்கலைக்கழகப் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து, நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் காலப்பகுதியில்தான். அந்த நூல் 1996 ஆம் ஆண்டு இந்தியாவிலிருக்கும் சினேகா பதிப்பகத்தினூடாக வெளிவந்திருக்கிறது.

    “இன்னும் கூட எனது ஆராய்ச்சி முடிவடையவில்லை. நான் இடைக்கிடையே அதற்குரிய பாகங்களைச் சேகரித்து வருகிறேன். அந்தக் காலத்தில் போதியளவு தொல்லியல் சான்றுகளேதுமற்றுத்தான் நான் இந்த ஆய்வை எழுத வேண்டியிருந்தது. இது இலகுவான விடயமல்ல. மிகவும் பாடுபட வேண்டியதொன்று. உண்மையில் இதனூடாகப் பயணித்து இதைக் குறித்து மேலதிக ஆய்வுகளைச் செய்ய விரும்புவோருக்கு ஒரு அடிப்படை அத்திவாரமாக எனது ஆய்வு நூலை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்” என நவரத்தினம் கிரிதரன் குறிப்பிடுகிறார்.

    அவரது இந்த ஆய்வு நூலுக்கு ஆய்வாளர்களதும், வாசகர்களதும் உச்ச வரவேற்பு கிடைத்துள்ளதோடு, நல்லூர் மற்றும் யாழ்ப்பாண ராஜதானிகள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும், இணையத்தளங்களில் அதைக் குறித்து எழுதப்படும் கட்டுரைகளிலும் அவரது ஆய்வை அடித்தளமாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பதை இன்றும் கூடக் காண முடிகிறது.

    “இலங்கை வரலாற்றைக் குறித்து ஆராய்ச்சிகள் செய்யப்படும்போது அது ஒருதலைப்பட்சமாக அமையக் கூடாது என நான் ஆழமாக நம்புகிறேன். இலங்கையில் தெற்கு, மேற்கிலிருப்பதைப் போலவே வடக்கிலும் கிழக்கிலுமிருக்கும் தொல்லியல் சான்றுகள் குறித்த ஆய்வுகளை ஒருதலைப்பட்சமாக நிகழ்த்தக் கூடாது என்பதே எனது கருத்து. இந்த அனைத்துப் பிரதேசங்களும் இலங்கை எனும் நாட்டுக்கே உரித்தாகிறது. அனைத்துப் பிரதேசங்களினதும் வரலாறுகள் ஒன்றிணைந்துதான் ஒரு நாட்டின் வரலாறு உருவாகிறது. அவ்வாறு நோக்கும்போது நாங்கள் எமது வரலாறு குறித்து செய்திருக்கும் ஆய்வுகள் போதாது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என எனக்குத் தோன்றுகிறது. இந்த நாட்டின் வரலாறானது நாம் நினைத்துப் பார்ப்பதை விடவும் மிகவும் புகழ் வாய்ந்தது.”

    கிரிதரனின் அந்தக் கூற்றோடு என்னாலும் இணைய முடிகிறது. நான் ஒரு கணம் நல்லூர் ராஜதானியை மனதால் உருவகித்துப் பார்க்க முயன்றேன். அதில் மனிதர்களின் குரல்களால் எழுந்து நிற்கும் தெருக்கள், உயர்ந்த மதில் சுவர்கள், வியாபார மத்திய நிலையம், இடையறாது மணியோசை எழுப்பும் கோயில்கள், கம்பீரமாக எழுந்து நிற்கும் அரசவை, மாளிகைகள் மற்றும் காவலரண்கள் எனது கற்பனையில் எழுகின்றன.

    நான் கிரிதரனுக்கு திரும்பவும் நன்றி தெரிவிக்கிறேன். மரித்துக் கொண்டிருந்த எனது பண்டைய யாழ்ப்பாண நினைவுகளுக்கு அவரால்தான்  உயிர் கிடைத்திருக்கிறது. நான் அவரது நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு எனும் கால யந்திரத்தினூடாக கடந்த காலத்துக்குச் சென்று நல்லூர் ராஜதானியைக் கண்டு கொண்டிருக்கிறேன்.

    – கத்யானா அமரசிங்ஹ

     

     

     

     

     

     

     

     

     

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    நல்லூர் ராஜதானி நகர அமைப்பு

    பி.கு.

    பல நூறு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில், யாழ்ப்பாண மண்ணில் தமிழ் மக்களும், தமிழ் மன்னர்களும் வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பதற்கு தற்போதும் சிதைவுகளாகவேனும் எஞ்சியிருக்கும் நல்லூரின் ‘மந்திரிமனை’ எனும் அரண்மனை ஒரு முக்கிய சான்று. அதனைக் குறித்து நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டால்தான் தமிழருக்கு உரித்தான மண்ணின் பூர்வீகத்தை ஆதாரபூர்வமாக நிரூபிக்கலாம் என்ற நிலையிலும் கூட அதைக் குறித்து ஆய்வுகள் செய்ய எவருமில்லை. அல்லது எவருக்கும் நேரமில்லை. இலங்கை அரசு கூட அனுராதபுரம், பொலன்னறுவை, காலி, கண்டி போன்ற பண்டைய சிங்கள ராஜதானிகளை அகழ்வாராய்ச்சி நிலையத்தில் பதிவு செய்து அதன் புராதன வரலாறையும், தொல்பொருட்களையும் இன்றும் கூட பேணி வருகிறது. ஆனால் அவற்றைப் போலவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யாழ்ப்பாணம், நல்லூர் ராஜதானியை கண்டுகொள்ளாமல் புறக்கணித்திருக்கிறது.

    ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்பு, பல சிரமத்துக்கு மத்தியில் இந்த நல்லூர் ராஜதானியைக் குறித்து ஆய்வு செய்து ஒரு நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார் எழுத்தாளர் நவரத்தினம் கிரிதரன். அவரது இந்த அரும்பெரும் முயற்சி கூட தமிழ் பேசும் சமூகத்தில் பெரிதும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கிறது. அண்மையில் இத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்புப் பிரதியை வாசித்த சிங்களப் பெண் எழுத்தாளர் கத்யானா அமரசிங்ஹ, அத் தொகுப்பைக் குறித்து பிரபல சிங்கள வார இதழொன்றில் கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை பலரது கவனத்தை நல்லூர் ராஜதானி பக்கம் ஈர்த்திருக்கிறது. அந்தக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து இத்துடன் இணைத்திருக்கிறேன்.

    இப்போதும் கூட நல்லூர் ராஜதானி, சிதைவுகளோடு ஆய்வுகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆய்வுகளுக்கு, நல்லூர் ராஜதானி குறித்து எழுத்தாளர் நவரத்தினம் கிரிதரன் எழுதியுள்ள ‘நல்லூர் ராஜதானி அமைப்பு’ நூலும் பெரிதும் உதவியாக அமையும். ஆய்வுகளை மேற்கொள்ள விரும்பும் எவரும் இந்தத் தொகுப்பையும் அதிலுள்ள விபரங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த நூலையும் இணைத்திருக்கிறேன்.

    என்றும் அன்புடன்,
    எம்.ரிஷான் ஷெரீப்

    Share
  • ஆகாயக் கடல்

     

     

    எத் திசையிலும் எப்போதும்

    சுழன்றடிக்கலாம் காற்று

    அதன் பிடியில்

    தன் வேட்கைகளையிழந்த

    ஓருருவற்ற வானம்

    மேகங்களையசைத்து அசைத்து

    மாறிக் கொண்டேயிருக்கிறது
    விதவிதமாக வர்ணங்களைக் காட்சிப்படுத்தும்

    தொடுவானத்தினெதிரே

    ஒற்றை நிறம் நிரப்பிப் பரந்து கிடக்கிறது கடல்
    ஆகாயத்தைப் போலவன்றி

    சமுத்திரத்தின் இருப்பு

    ஒருபோதும் மாறுவதில்லை

    எவ்வித மாற்றமுமற்ற
    கடலின் அலைப் பயணம்

    கரை நோக்கி மாத்திரமே
    பருவ காலங்களில்
    வானின் நீர்ச் செழிப்பில்

    கடல் பூரித்து

    அலையின் வெண்நுரையை

    கரை முத்தமிடச் செய்கிறது
    இராக் காலங்களில்
    தூமகேதுக்களின் வழிகாட்டலின்றி

    கடற்பயணங்களில்லையென்றபோதும்
    ஒன்றுக்கொன்று நேரெதிர்
    ஆகாயமும் கடலும்

     

    நேரெதிராயினும்

    இப் புவியில்

    ஆகாயமின்றிக் கடலேது

     

    கரை

    கால் நனைக்கக் கால் நனைக்கக் கடல்

     

    – எம்.ரிஷான் ஷெரீப்

    Share
  • மொழிபெயர்ப்புக் கவிதை – சிங்களக் கவிதை

     துஷாரி ப்ரியங்கிகா

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

     

    செய்தி – கெக்கிராவ கல்வி வலயத்துக்குட்பட்ட அரச பாடசாலையொன்றில்,  பட்டினியின் காரணமாக வாந்தியெடுத்த 14 வயது மாணவியை, கர்ப்பிணியென பழி சுமத்தி அப் பாடசாலையிலிருந்து நீக்கி விட்டார் பெண் அதிபர். கல்வியில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்த அந்த ஏழைச் சிறுமி தூய்மையானவள் என்பது மருத்துவ பரிசோதனைகளின் மூலம் பின்னர் தெரிய வந்தது.

    உன்னிடம்தான் தரித்திருக்கிறது மகளே

    எம் சுவாசக் காற்று

     

    இரவு பகலாகக் கூலி வேலை

    தினம் ஒரு வேளை  மட்டுமே உணவு

    மகளுக்குக் கல்வியளிக்கப் பாடுபட்டு

    வாடி வீழ்ந்தோம் நாம் கைகால் வலுவிழக்க

     

    கல்வி மாத்திரமே அவள் சூடியிருக்கும் மாலை

    அதுவே எமதும் ஒரே கனவு

    அக் கனவுக்கு வேட்டு வைத்ததில்

    சிதறியது முத்து மாலை

    இனி எவ்வாறு கோர்ப்போமோ அதை

    ஜீவிதம் எனும் நூலிழையில்

     

    சொற்களால் பின்னப்பட்ட புத்தகங்களின்

    பக்கங்கள் கிழிந்து கிடக்கின்றன

    சொற்களை உச்சரித்து வாசிக்கும்

    உதடுகள் பூட்டப்பட்டிருக்கின்றன

    வழமை போல தலையுயர்த்திப் பார்க்கவியலா நிலையில்

    வீழ்ந்தழுகிறாள்  எமது மகள்

    தேயிலைச் சாயத்தால் மாத்திரம்

    வயிறு நிரம்பும் நாட்கள் அநேகம்

    ஒவ்வொரு ரூபாயாகச் சேமிப்பாள்

    புத்தகங்களை வாங்கவென

    சீருடையும் கூடக் கிழிந்து

    கந்தலாகிக் கறை படிந்து கிடக்கையில்

    பிளவுண்ட இதயத்தை நிரப்புவது இப்

    பெருந் துயரம் மாத்திரமே

     

     

    வாந்தியெடுக்கும் பட்டினி வயிறுகள்

    முடிவற்றவை

    பசியை அறியாதவர்களுக்கு அவை

    தெளிவற்றவை

    மனிதாபிமானமற்ற உயரதிகாரிகளுக்கு

    போதுமானவையா பதவிகள் மாத்திரம்

    எவரும் எதையும் கண்டுகொள்ளாமல்

    வாய் கண் மூடிக் கிடப்பதுவும் விசித்திரம்தான்

    இம் மகளே எமதுலகின் ராஜ கிரீடம்

    சந்திர சூரியனாக ஒளிரும்

    எமது ஆகாயத்தின் பெரு வெளிச்சம்

    கலங்கிய நீர்க்குளத்தின் உச்சியில்

    எப்போதும் பூத்திருக்கிறாள் எமது மகள்

    செந்தாமரைகள் எழுவது சேற்றிலிருந்துதான்

     

    இருக்கக் கூடும் இம் மகளைப் போலவே

    அழுது புலம்பும் பல மகள்கள்

    இப் பார் முழுதும்

    யாருக்கெல்லாம் கேட்கின்றன

    அந்த அழுகுரல்கள்?

    அதிகாரத்துக்கே எவரும் தலைசாய்க்கும் நிலையில்

    நூலிழையில் முடிந்து வைக்கவா

    இருக்கிறது நீதி?

     

     

    Share
  • மாசுற்ற தாமரைக் குளத்தின் வாசனை

    ஒரு பெண்ணின் அழகை வைத்துத்தான் காலம் காலமாக உலகெங்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு பெண்ணினது அக உணர்வுகளை விடவும் அழகுதான் அவளது இருப்பையும், நடைமுறை வாழ்க்கையையும், வாழ்வு மீதான புறத் தாக்கங்களையும் தீர்மானிக்கின்றன. அவளது புறச்சூழலில் அவளைத் தாண்டிய எல்லைகளுக்குள் அடங்கும் சமூகத்தின் கோட்பாடுகள் மிகவும் வலிய கரங்களைக் கொண்டு அவள் மீதான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன. அழகுடன் கூடிய பெண்ணினது மன உணர்வுகள், அவளது எண்ண வெளிப்பாடுகள், சமூகம் அவளுக்கிட்டிருக்கும் வேலிகள் எனப் பல்வேறான காரணிகள் அவளது வாழ்வைத் தீர்மானிக்கும் கூறுகளாக அமைகின்றன.

    18108_1556627777960174_3715045860138984916_n

    இவ்வாறாகப் பழக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் ஒரு பெண் அழகற்றவளாகப் பிறந்துவிட்டால் என்ன செய்வாள்? அதிலும் குறிப்பாக அவள் வறிய நிலைமையில் உள்ளவளாக இருப்பின் அவளது வாழ்வின் மீதான தாக்கங்கள் எவை? அவள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சிக்கல்களும் அவளை என்னென்ன நிலைமைகளுக்குள் செலுத்திப் பார்க்கின்றன என்பதைக் குறித்துத்தான் இலங்கையின் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான சத்யஜித் மாஇடிபேயின் முதல் திரைப்படமான ‘பொர திய பொகுன (மாசுற்ற நீர்த் தடாகம்)’ திரைப்படம் பேசுகிறது.

    சர்வதேச ரீதியில் கறுப்பாக உள்ளவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் அனைத்தும் அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்பதற்காகவல்லாது, அவர்களது நிறத்தினைக் குறித்தே பிரயோகிக்கப்படுகின்றன என்பது நிதர்சனம். அவர்கள் நிரபராதிகளாக உள்ளபோதிலும், அவர்களது நிறமும் அவலட்சணமான தோற்றமும் அவர்கள் மேல் சந்தேகங்களைக் கிளப்பிவிடப் போதுமாக உள்ளன.

    21984_1563934943896124_3421116455876624922_n

    கௌதமி ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு யுவதி. அவள் தனது சக தோழிகள் இருவருடனும் ஒரு வீட்டின் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறாள். சக தோழிகளில் ஒருத்தி மிகவும் அழகானவள் என்பதோடு அவளுக்கு ஒரு காதலனும் இருக்கிறான். கௌதமியின் அவலட்சணமான தோற்றம் அவளை, இலங்கை கடற்படையில் பணிபுரியும் அழகி மங்களாவின் காதலனுக்கு தூது கொண்டு செல்லுமொருத்தியாக மாற்றி விட்டிருக்கிறது. பொதுவாக படையினர் தங்கியிருக்கும் இராணுவ முகாம்களுக்கு இளம்பெண்கள் தனியே செல்ல அச்சப்படும் நிலையில் கௌதமி எவ்வித அச்சமுமின்றி எந் நேரத்திலும் சென்று வரக் கூடியவளாக இருக்கிறாள். மங்களாவின் காதலன் உயரமாகவும் கட்டுமஸ்தானவனாகவும் அழகி மீது பேரன்பு கொண்டவனாகவும் இருப்பதனால் அவன் மீது கௌதமிக்கு ஒருதலையாக காதல் ஏற்படுகிறது.

    தனது சக தோழிக்கும் அவளது காதலுக்கும் துரோகமிழைக்கும் கௌதமி, அவளது காதலனுடன் பலவந்தமாக இணைவதன் மூலமாக ஒரு குழந்தைக்குத் தாயாகிறாள். மிகுந்த குற்றவுணர்ச்சிக்குள்ளாகும் அழகியின் காதலன் தற்கொலைக்கு முயல்கிறான். அவனது கவலையுணர்ந்த சக படையினர் கௌதமியைக் கடத்திச் சென்று கருவைக் கலைத்துவிடும்படி மிரட்டுகிறார்கள். மீண்டு வரும் கௌதமி, இலங்கையில் வறள் பிரதேசக் காடொன்றுக்குள் வசிக்கும் தனது தூரத்து உறவினரைத் தேடிச் சென்று, மாதக் கணக்கில் அவர்களுடன் தங்கி சேனை விவசாயம் செய்து குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அங்கிருந்து தனது ஊருக்கு வரும் வழியில் குழந்தையை புகையிரத நிலையத்தில் விட்டு வருகிறாள். தனது ஊருக்கு வந்தவள் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்கிறாள். ஆறு வருடங்களின் பின்னர் இலங்கை வரும் அவள் இன்னுமொருவரைத் திருமணம் செய்து வாழ்கிறாள். இவர்களது வாழ்வில் திரும்பவும் மங்களாவும் அவளது காதலனும் நுழைகிறார்கள். காதலன் தனது குழந்தையைக் கேட்டு கௌதமியிடம் வந்து நிற்கிறான். இதன் பிறகு என்னவாயிற்று என்பதைத்தான் திரைப்படம் சொல்கிறது.

    15355803_1831488703807412_8690262300183438553_n

    சாதாரணமாக தெருவில் செல்லும் எந்த இளைஞர்களுமே திரும்பிக் கூடப் பார்க்காத கௌதமிக்குள்ளும் உள்ள காதல் உணர்வுகள் மிகவும் நுட்பமாக திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக திரைப்படங்களில் கதாநாயகி எனப்படுபவள் மிகவும் தூய்மையானவளாகவும், தீய எண்ணங்கள் எதுவுமற்றவளாகவும், மிக மிக நல்லவளாகவும், வானத்திலிருந்து குதித்த தேவதை போலவும் சித்தரிக்கப்படுகையில் அவை எல்லாவற்றுக்கும் நேர்மாறான ஒரு கதாநாயகியை இயக்குனர் சத்யஜித் மாஇடிபே தனது முதல் படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். தனது அவலட்சணமான தோற்றத்தின் காரணமாக எழும் சக சமூகத்தின் நடைமுறைகளால் தாழ்வு மனப்பான்மைக்கும், உள்மனக் குமைச்சலுக்கும் ஆளாகும் கௌதமி மிக இரகசியமாகச் செய்யும் குற்றங்கள் எளிதில் மன்னிக்க முடியாதவையாக இருப்பினும், பார்வையாளர்களிடத்தில் அவை ஒரு நியாயத்தையும் சொல்பவையாக அமைந்திருக்கின்றன என்பதுதான் சிறப்பு.

    இலங்கையில் பெரும்பான்மையான சமூகத்தினால் பின்பற்றப்படும் பௌத்த மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை மூன்று பெண்களைக் கொண்டு கேள்விக்குட்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சத்யஜித் மாஇடிபே. பாசம், காமம், வன்மம் ஆகிய மூன்று உணர்வுகளும் பெண்களிடத்திலும் ஆண்களிடத்திலும் வேறுபடும் புள்ளி எதுவென திரைப்படத்தின் மூலமாகக் காண முயற்சித்திருக்கிறார்.

    இதனாலேயே 2003 ஆம் ஆண்டு திரையிடலுக்கான அனைத்து வேலைகளும் முடிந்த நிலையிலும், ஒரு தசாப்தம் கடந்த நிலையில் 2015 வரையும் இத் திரைப்படத்தினை இலங்கையில் திரையிட அரசு அனுமதிக்கவில்லை. பன்னிரண்டு வருடங்களாக தனது படைப்பினை வெளிப்படுத்த இயலாது பிரசவ வேதனையை ஒத்த வலியை சுமந்தலையும் இயக்குனரின் வலி மிகவும் வலியது. அது ஏனைய திரைப்படங்களை இயக்க இன்றுவரையும் அவருக்கு தடையாக அமைந்திருக்கிறது.

    திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரமான கௌதமியின் கதாபாத்திரத்தை எந்தப் பிரதான நடிகையுமே ஏற்று நடிக்கத் தயங்குவர் என்பதில் சந்தேகமில்லை. எனினும் கதையினைக் கேட்ட மாத்திரத்திலேயே அக் கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு, திரைக்கதை எழுதுவதில் பங்குகொண்டு அதனைச் செம்மைப்படுத்தி, மிகவும் நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார் பல விருதுகளை வென்ற நடிகை கௌசல்யா பெர்ணாண்டோ. இந்தத் திரைப்படத்தில் நடித்தமைக்காக இலங்கையின் ‘சிறந்த நடிகைக்கான விருது’ இவருக்குக் கிடைத்தது. அவ்வாறே 2016 ஆம் ஆண்டுக்கான ’SAARC’ சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்தத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக ‘சிறந்த நடிகை விருது’ இவருக்குக் கிடைத்தது. தற்பொழுது பல்கலைப்பழக பேராசிரியராகக் கடமையாற்றி வரும் இவர் சர்வதேச ரீதியில் விருதுகள் பல வென்ற திரைப்படங்களிலும், மேடை நாடகங்களிலும் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

    மங்களா எனும் அழகியின் கதாபாத்திரத்தை பிரபல நடிகை டிலானி அபேவர்தனவும் அவளது காதலன் கதாபாத்திரத்தை இலங்கை ரக்பி அணியின் விளையாட்டு வீரர் துமிந்த டி சில்வாவும் ஏற்று நடித்திருக்கின்றனர். அத்தோடு திரைப்படத்தின் சிறிய கதாபாத்திரங்களிலும் கூட சிங்களத் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர், நடிகையர்களான தர்மசிறி பண்டாரநாயக்க, ஐராங்கனி சேரசிங்க, வீணா ஜயகொடி, சாந்தனி செனவிரத்ன, ப்ரியங்கா சமரவீர, சந்திரா களுஆரச்சி, லியோனி கொத்தலாவல போன்றோர் ஏற்று நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இலங்கையில் பௌத்த சமூகத்திலுள்ள இளைய சமுதாயத்தினரின் அக, புறச் சிக்கல்களைப் பேசும் இத் திரைப்படமானது 2003 ஆம் ஆண்டு ஜனவரி 21 முதல் பெப்ரவரி 02 ஆம் திகதி வரை நடைபெற்ற 33 ஆவது ரொட்டர்டம் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, அது அங்கிருந்த பல்வேறு தேசங்களையும் சேர்ந்த திரையுலக முக்கியஸ்தர்களது கவனத்தை ஈர்த்திருக்கிறது. அத்தோடு விழாவின் கௌரவ விருதான டைகர் விருதிற்கும் இத் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

    திரைப்படத்தின் பின்னணியானது இலங்கையின் கிராமப்புறங்களிலிருந்து வந்து சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் பெண்களது காதல், காமம், திருமணம் ஆகிய நிகழ்வுகளை பல சந்தர்ப்ப சூழ்நிலைச் சிக்கல்களோடு பொருத்தி, அரசியல், சமூகக் கோட்பாடுகளின் உண்மையான முகத்தைக் காட்டியிருக்கிறது. சமூகம், அரசியல் என இரு மட்டங்களிலும் வகைப்படுத்தக் கூடுமான இத் திரைப்படத்தின் அத்திவாரம் பௌத்தவியலாக அமைந்திருக்கிறது.

    பௌத்த நீதிக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றைக் கேள்விக்குட்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இத் திரைப்படமானது 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘HONOLULU’ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த புனைவுத் திரைப்படத்துக்கான விருதினை வென்றது. இலங்கை அரசை ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக அச்சுருத்திக் கொண்டிருக்கும்படியாக, பல இன்னல்களுக்கு மத்தியில் ஒரு திரைப்படத்தையெடுத்து, அதனைத் தான் பிறந்த மண்ணில் திரையிட்டுக் காட்டமுடியாத மனவேதனையை அகத்தில் புதைத்தபடி பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசியராகக் கடமை புரியும் இயக்குனர் சத்யஜித் மாஇடிபே தனது திரைப்படம் குறித்து இவ்வாறு கூறுகிறார்.

    ‘தமது காதல் வாழ்க்கை நொறுங்கிப் போனதன் காரணமாக தீய வழியில் செல்லும் இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களது கனவுலகம் சிதைந்த பின்னர் நிஜ வாழ்க்கையைச் சந்திக்கும் தைரியம் அவர்களிடமில்லை. ஒருவகையில் இத் திரைப்படம் அவர்களது நடைமுறை வாழ்க்கையையே பிரதிபலிக்கிறது. வாழ்க்கையானது எவ்வளவுதான் இன்னல்களுக்குள் உள்ளபோதிலும், எல்லாவற்றையும் விட மிகவும் பெறுமதியானது வாழ்வதுதான் என நான் இத் திரைப்படத்தின் மூலம் கூற விரும்புகிறேன்’.

    – எம்.ரிஷான் ஷெரீப்
    mrishanshareef@gmail.com

    Share
  • தளிர்களுக்கான திரை

    – எம். ரிஷான் ஷெரீப்

    நமக்கு எழுத்தறிவித்தவரை எத்தனை பேர் தினந்தோறும் நினைத்துப் பார்க்கிறோம்? நாம் எழுத, வாசிக்கப் படிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எம்மைச் சார்ந்தவர்கள் எமக்கு எழுத்தறிவித்ததாலேயே இதனை வாசித்துக் கொண்டிருக்கிறோம் இல்லையா?  நம் அயலில், நம் ஊரில், நமது தேசத்தில், உலகில் எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிட்டியிருக்கிறது? எத்தனையோ நபர்களினது ஜீவிதங்களில் கல்விக்கான ஆர்வம் பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்திருக்கும் எனினும் அதற்கான வாய்ப்புக் கிட்டாமல் வாழ்க்கையோடு போராட வேண்டிய நிர்ப்பந்தங்கள் மேலோங்கியிருப்பதையும், அவையே அவர்களது நடத்தைகளில் ஆதிக்கம் செலுத்துவதையும் தினமும் கேள்விப்படுகிறோம். அவ்வாறான ஓர் அநாதைச் சிறுவன்தான் அமிரோ. யுத்தத்தில் தனது உறவுகளைப் பறிகொடுத்த அவனுக்காக அவர்கள் மிச்சம் வைத்துப் போனது அவனது பெயர் மட்டும்தான்.

    யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சிறுவன் அமிரோ, பிற நகரமொன்றின் கடற்கரைப் பிரதேசமொன்றில்  சிதிலமடைந்து புறக்கணிக்கப்பட்ட கப்பலைத் தனது வசிப்பிடமாகக் கொண்டிருக்கிறான். ஜீவனோபாயமாகக் குப்பைகளில் கிடக்கும் இரும்புப் பொருட்களைத் தேடியெடுத்து விற்கிறான். போத்தல்களைப் பொறுக்கி விற்கும் சக சிறுவனொருவன் அவனிடம் கப்பல்களிலிருந்து கடலில் எறியப்படும் போத்தல்களைப் பொறுக்கி விற்றால் நிறையப் பணம் கிடைக்கும் எனக் கூறி கடலுக்கு அழைத்துச் செல்கிறான். அத் தொழிலுக்கு வில்லங்கம் ஒரு சுறா மூலம் வருகிறது. அவர்கள் போத்தல்களைச் சேகரிக்கும் கடற்பகுதியில் சுறாவின் நடமாட்டத்தைக் கண்டதால் வேறு வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. பிறகு கடற்கரைக்கு வரும் பெரிய பனிக்கட்டிகளைப் போராடி  வாங்கி, அவற்றைக் குளிர் நீராக்கி, குவளையில் நிரப்பி கூவி விற்கிறான். அதுவும் நிரந்தரமில்லை எனப் புலப்பட, சக சிறுவனின் சிபாரிசில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தளமொன்றில் அவர்களது  சப்பாத்துக்களைத் துடைத்துவிடும் வேலை கிடைக்கிறது. அதில் ஓரளவு வருமானம் வந்த போதிலும் திரும்பவும் ஒரு தவறான குற்றச் சாட்டினால் அந்த வேலையும் பறிபோகிறது. இனி அவனுக்காக உதவ யாருமில்லை. எனில், அவனது எதிர்காலம் முழுவதற்குமாக அவனுக்கு உதவப் போவது எது?

    சிறுவர்களது உலகம் விசித்திரமானது. அது மாயலோகமும், யதார்த்தமும் கலந்தது. அவர்களது பார்வையில் அனைத்தும் புதிதாய்த் தெரியும். பின்னாட்களில் அனுபவங்கள் கற்றுத் தரப் போகும் படிப்பினைகள் குறித்து எந்தக் கவலைகளுமற்று சுற்றித் திரியும் பருவத்தைச் சார்ந்தவர்கள் அவர்கள். காலமும், நேரமும், சூழலும் குறித்த எந்தக் கவலையுமின்றி சுற்றித் திரியலாம். விளையாடிக் கொண்டிருக்கலாம். அதிலும் கட்டுப்படுத்த யாருமின்றி சுயமாய் வளரும் சிறுவர்களது வாழ்க்கையில் இச் சுதந்திரமும், விளையாட்டுக்களும்  சர்வ சாதாரணமானவை.

    அமிரோவின் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது. கடலில் வரும் ஒரு வெண்ணிறக் கப்பலைக் கண்டு வியக்கிறான். தெருவில் செல்லும் ஒரு முதியவனையும், அவனுடன் செல்லும் நோயால் துன்புறும் பெண்ணையும், இன்னும் ஒரு கால் இல்லாமல் ஊன்றுகோலின் துணையுடன் செல்லும் ஒருவனையும் கண்டு அனுதாபமுறுகிறான். தன்னிடம் தண்ணீர் வாங்கிக் குடித்து விட்டுப் பணம் தராமல் ஏமாற்றிச் செல்பவனைத் துரத்திச் சென்று பிடித்து, தண்ணீருக்குரிய பணத்தினை வாங்கிக் கொண்டு புன்னகைக்கிறான். தன்னிடமிருந்து பெரிய பனிக்கட்டிப் பாளத்தைப் பறித்துக் கொண்டு ஓடுபவர்களை விரட்டிச் சென்று அவர்களிடமிருந்து அதை மீளப் பெற்று வெற்றியில் திளைத்து, திருடனை நோக்கிப் பழித்துக் காட்டுகிறான். தனக்குத் திருட்டுப் பட்டம் சுமத்தி, தனது தொழில் போகக் காரணமாக இருந்த வெள்ளையனோடு சண்டை போடுகிறான். புத்தகக் கடைகளில் விற்பனைக்காகத் தொங்க விட்டிருக்கும் புத்தகங்களை ஆசையோடு தொட்டுப் பார்க்கிறான். தனது சிறிய இருப்பிடத்தில் கோழிக் குஞ்சொன்றைக் கொஞ்சி வளர்க்கிறான்.

    அவனது வசிப்பிடத்துக்கருகில் இருக்கும் பிற நாட்டவரொருவரின் வீட்டில் ஒரு விமானம் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தினந்தோறும் அதைப் பார்த்துப் பரவசத்தில் திளைப்பவனுக்கு, விமானங்கள் மேல் ஆசை வந்து விடுகிறது. திருட்டுத்தனமாகச் சென்று அதைத் தொட்டுப் பார்த்து மகிழ்கிறான். புத்தகக் கடைகளில் தொங்க வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களில் விமானங்களின் படங்களிட்ட புத்தகங்களை வாங்கி வந்து விமானங்களின் படங்கள் பார்த்து ரசிக்கிறான். புத்தகங்களை மேலும் மேலும் வாங்குகிறான்.

    ”நிறைய வெளிநாட்டுப் புத்தகங்கள் வாங்கிறாயே? உனக்கு வெளிநாட்டு பாஷைகள் கூடத் தெரியுமா?”

    ”இல்லை..நான் அவற்றை அவற்றிலுள்ள படங்களுக்காக வாங்குறேன்”

    ”நீ வாசிக்க விரும்புகிறாயென்றால், என்னிடம் ஃபார்ஸி மொழிப் புத்தகங்களும் இருக்கின்றன. அவை விலையும் குறைவு.”

    ”எனக்கு வாசிக்கத் தெரியாது.”

    ”உன்னைப் போன்ற சிறுவர்கள் எல்லோருக்குமே வாசிக்கத் தெரியுமே.”

    புத்தகக் கடைக்காரனுடனான மேற்படி சம்பாஷணையைத் தொடர்ந்து, வாங்கி வந்த புத்தகங்கள் அனைத்தையும் கடற்கரையில் வைத்து ஆவேசத்தோடு, துண்டு துண்டாய்க் கிழித்தெறிகிறான் அமிரோ.

    ”நான் வாசிக்கணும்.. நான் எழுதப் படிக்கணும்… ஏன் என்னால் முடியாது.. ஏன் என்னால் முடியாது?” எனக் கேட்டுக் கத்துகிறான்.

    ஏன் அவனால் முடியாது? அவன், அருகிலிருக்கும் பாடசாலையொன்றுக்குச் சென்று அவனுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறான். அந்தப் பள்ளிக்கூட அதிபர் அவனைப் பார்த்து, அரிச்சுவடியிலிருந்து கற்றுக் கொள்ள, முதலாம் வகுப்பில் சேர வேண்டும் என்றும் அந்த வயதை அவன் தாண்டி விட்டான் என்றும் கூறுகிறார். எனினும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் சுயமாக வந்திருக்கும் அவனை மாலை நேர வகுப்பில் சேர்த்துக் கொள்கிறார். அவனுக்கு அரிச்சுவடி எழுத்துக்கள் மனனமிடச் சிரமமாக இருக்கின்றன. ஆனால் அவனது தன்னம்பிக்கையும், ஆர்வமும் அவனை அரிச்சுவடியை மனனமிட்டு அவ்வெழுத்துக்களை ஒரே மூச்சில் கூற வைக்கின்றன.

    ஒருவனது தன்னம்பிக்கையும், ஆர்வமும், திறமையும், நேர்மையும், அடிப்படைக் கல்வியும்தான் அவனது வெற்றிகளுக்குக் காரணமாகின்றன என்பதை விளக்கும் ஈரானியச் சிறுவர் படம்தான்  ‘The Runner (Davandeh)’.  தனது திரைப்படங்களுக்காகச் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்றுள்ள ஈரானியத் திரைப்பட இயக்குநர் அமிர் நாத்ரியின் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த இத் திரைப்படமானது, ஈரானியச் சினிமாவில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியதும், முழு சர்வதேசத்தையுமே தன் பக்கம் ஈர்த்த யதார்த்தத் திரைப்படங்களில் ஒன்று என்றும் தயங்காது குறிப்பிடலாம்.

    அண்மைய தசாப்தங்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஈரானிய சிறுவர் திரைப்படங்களின் வழிகாட்டியாக இத் திரைப்படத்தைக் கருதலாம். யதார்த்தம், அப்பாவித்தனமும் நேர்மையும் வெளிப்படும் குழந்தைகளின் பார்வையினூடாக சமூக நடைமுறைகளைக் கூறுதல், எளிய வாழ்க்கை முறை, சமூக ஏற்றத் தாழ்வுகளை பட்டவர்த்தனமாக்கல், முழுத் திரைப்படத்தையும் குழந்தையின் தோளில் ஏற்றி வைத்து திரைப்படத்தை நகர்த்திச் செல்லல், குழந்தைகளின் வாழ்க்கையை வளர்ந்தோருக்கான பாடமாக்கல் என அனைத்துக்கும் முன்னுதாரணமாகக் குறிப்பிடக் கூடிய திரைப்படமாக இத் திரைப்படத்தையே குறிப்பிட வேண்டுமென சர்வதேசத் திரையியலாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு சிறுவர் திரைப்படத்தின் தாக்கம் சர்வதேசத்தையே பேச வைத்திருக்கிறது எனில், அத் திரைப்படத்தின் கருவும், எடுத்துக் கொண்ட விடயத்தைத் திறம்படச் சொன்ன விதமும், அதில் வாழ்ந்து காட்டியிருக்கும் மனிதர்களின் இயல்பான  நடிப்பும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதன்றி வேறேது?

    திரைப்படத்தின் தலைப்பே ஓர் ஓட்ட வீரனின் இலக்கைக் குறிப்பிடுகிறது. திரைப்படத்திலும் கதையின்  நாயகனான சிறுவன் அமிரோ மூச்சு வாங்க வாங்க வேகமாக ஓடிக் கொண்டேயிருக்கிறான். சக சிறுவர்களுடனான பந்தய ஓட்டங்கள், பணம் தராமல் சைக்கிளில் விரைந்து செல்பவனைத் துரத்திச் சென்று பிடிக்கும் ஓட்டம், விரைந்து செல்லும் புகையிரத்தை இரயில் தண்டவாளத்திலேயே ஓடித் தொட்டு விடும் ஓட்டம் எனப் பல ஓட்டங்கள் திரைப்படத்தில் வியாபித்து, சிறுவர் உலகின் தன்னம்பிக்கையைப் பறைசாற்றுகின்றன. அந்த ஓட்டங்களே, ஊக்குவிக்க யாருமின்றியிருக்கும் அவனுக்கு எதிராக பூதாகரமாகத் தோன்றும் கல்விச் சமூகத்தில் அவனையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தையும் நம்பிக்கையும் அவனுக்குள் தூண்டுகின்றன.

    இத் திரைப்படத்தைப் போலவே ஒரு சிறுமியின் மூலமாக கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கும் இன்னுமொரு ஈரானியத் திரைப்படம் ‘ஹயாத்.’

    ஈரானியக் கிராமமொன்றில் தனது குடும்பத்தினரோடு வாழ்ந்து வரும் 12 வயதுச் சிறுமி ஹயாத், பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள். அப் பரீட்சையில் சித்தியடைந்தாலே அவளுக்கு மேலும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். எனவே அவள் மிகுந்த ஊக்கத்தோடு பரீட்சைக்குத் தயாராகிறாள். பரீட்சையன்று விடிகாலையில் அவளது தந்தை கடும் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார். தந்தையைக் கவனிக்கத் தாயும் செல்ல வேண்டிய நிலைமையில், அவர்களது கைக் குழந்தையை ஹயாத்திடம் விட்டு விட்டு அவர்கள் வைத்தியசாலைக்குச் செல்கிறார்கள். கைக்குழந்தையை வைத்துக் கொண்டு, வீட்டு வேலைகளையும் செய்தபடி அன்று அவள் பரீட்சையை எவ்வாறு எழுதினாள் எனும் ஒரு நாள் அனுபவத்தைத் திரைப்படமாக்கி, அதன் மூலமாக ஈரானிய சமூகத்தில் பெண் கல்வியின் அத்தியாவசியத்தை பகிரங்கமாக எடுத்துக் காட்டியுள்ளார் இயக்குனர் குலாம் ரெஸா ரம்ஸானி.

    ’The Runner’ திரைப்படம் வெளிவந்து சரியாக இருபது வருடங்களுக்குப் பிறகு 2005 ஆம் ஆண்டு வெளி வந்த இத் திரைப்படத்துக்கும் பல சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. சிறப்பு ஜூரி விருது (ஆம்ஸ்டர்டாம் திரைப்பட விழா 2005), சிறந்த திரைப்படத்துக்கான விருது (மாட்ரிட் குழந்தைகள் திரைப்பட விழா 2005), சிறுவர் திரைப்பட ஜூரி விருது (இந்தியா கோல்டன் எலிபெண்ட் திரைப்பட விழா 2005), சிறந்த திரைப்படத்துக்கான விருது (இஸ்த்தான்புல் சர்வதேசக் குழந்தைகள் திரைப்பட விழா 2005), யூனிசெப் விருது (Centre International Du Film Pour L’enfance et la Jeunesse, IRAN UNICEF Award), சிறப்பு ஜூரி விருது (ஆர்ஜெண்டினா குழந்தைகள் திரைப்படவிழா 2005), சிறப்பு விருது (செக் குடியரசு திரைப்படவிழா 2005), (உருகுவே குழந்தைகள் திரைப்பட விழா 2005), (பெலாரஸ் குழந்தைகள் மற்றும் சர்வதேச திரைப்பட விழா 2005) ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

    பல போதனைகளைச் சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஹயாத் எனும் இத் திரைப்படத்தின் ஆரம்பம் முதற்கொண்டு சிறுமி ஹயாத்தைப் பீடித்துக் கொள்ளும் பதற்றம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. அவள் பரீட்சை எழுதப் போராடும் போராட்டமும், நெருக்கடியும் நம்மையும் திணறச் செய்கின்றன. அச் சிறுமியின் கல்விக்கான போராட்டம் அச் சிறுமியுடையது மாத்திரமேயல்ல. உலகம் முழுவதும் நிலைமை அவ்வாறுதான் இன்றும் இருக்கிறது. எவ்வளவுதான் நவீன மற்றும் நாகரிக மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பெண்களுக்கான கல்வி என்பது இன்றும் கூட இரண்டாம் தரமாகவே பார்க்கப்படுகிறது. கட்டுப்பாடுகள் அதிகமுள்ள ஈரான் போன்ற நாடுகளில் இன்னும் அதிகமாக, இன்றும் அதனது தாக்கத்தை வெளிப்படையாகக் காணலாம்.

    திரைப்படங்கள் சமூக மாற்றங்களுக்கு வித்திடுகின்றன என்பதற்கு அமைவாக ஈரானியச் சமூகத்தில் புரட்சிக்கு முன்னும் பின்னும் சிறுவர்களுக்கான கல்வியின் அவசியத்தை விளக்கும் மேற்கூறப்பட்ட திரைப்படங்கள் அக் காலத்தில் பல சிறுவர்களது கல்விக்கு வழிகாட்டியாக அமைந்தவை. கல்விக்கு வழியின்றியும், புறக்கணிக்கப்பட்டும் வாழும் எத்தனை சிறுவர், சிறுமியர்களை நாம் தினந்தோறும் காண்கிறோம்? எத்தனை பேருக்கு நம்மால் உதவ முடிந்திருக்கிறது?  வெறும் கேளிக்கைகளுக்காகத் திரைப்படம் எடுக்காமல், தமது படைப்புகள் மூலம் சமூகத்தை விழிப்புணர்வுக்குள்ளாக்கிய இத் திரைப்படங்களின் இயக்குநர்களைச் சர்வதேசமே பாராட்டுவது அதற்காகத்தான்.

    சிறுவர்களுக்கான கல்வியின் தேவை குறித்த கருவைக் கொண்டு எடுக்கப்பட்டு, சர்வதேச விருதுகளை வென்ற இலங்கைத் திரைப்படம் ‘விது’  இன்னுமொரு குறிப்பிடத்தக்க சிறுவர் திரைப்படம் ஆகும். சமூகத்தில் கீழ்த்தரமானவர்களாகக் கருதப்படும், சேரியில் வசிக்கும் விலைமாது ஒருத்தியின் மகனான சிறுவன் விதுவை, அரசாங்கப் பாடசாலையொன்றில் சேர்த்து விட தாய் போராடும் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் அஷோக ஹந்தகம எடுத்த இத் திரைப்படமும் ‘கல்வி – தனி மனித உரிமை’ என்பதைப் பேசுகிறது.

    இன்று சிறுவர் திரைப்படம் என்றாலே பிற மொழித் திரைப்படங்களையே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருப்பது துரதிர்ஷ்டமானது. தமிழிலும் சிறுவர் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன அல்லவா எனக் கேட்பீர்கள். உண்மையில், அவ்வாறான முத்திரையோடு  இதுவரை வெளிவந்துள்ளவை எவையும் சிறுவர் திரைப்படங்களே அல்ல. அவை சிறுவர்களை நாயகர்களாகக் காட்டி, வளர்ந்தவர்களுக்குப் பாடம் போதிக்க முற்படும் பெரியவர்களுக்கான திரைப்படங்கள் அல்லது பேய், பூத, அமானுஷ்யங்களைக் களமாகக் கொண்டு சிறுவர்களை ஈர்க்க முற்படும் மாயாஜால திரைப்படங்கள்.

    உண்மையில் திரைப்படம் என்பது என்ன? நடிகர்கள் கண்ணாடியைப் பார்க்கிறார்கள். அக் கண்ணாடி முன் நின்று, அதே கண்ணாடியினூடாக பார்வையாளர்களாகிய நாம் அவர்களைப் பார்க்கிறோம். ஆனால் அவர்களைக் காட்டும் அக் கண்ணாடி அவர்களோடு எம்மைக் காட்டுவதில்லை. ஆகவே திரைப்படமானது, நிஜமான, யதார்த்தமற்ற ஒரு மாயத் திரை. எனினும் யதார்த்த வாழ்வியலை நமக்குச் சுட்டிக் காட்டி, படிப்பினைகளைக் கற்றுத் தரும், சமூகத்தில் மாற்றங்களை விளைவிக்கும் மிகத் திறன் வாய்ந்த ஊடகம்.

    அந்த ஊடகத்தில் சிறுவர்களுக்கான திரைப்படங்களின் பங்கு மிகவும்  முக்கியமானது. அவற்றை வெறுமனே பொழுதுபோக்குச் சித்திரங்களென ஒதுக்கி விட முடியாது. உலகத்தில் ஜனித்து, ஒரு தசாப்தம் மாத்திரமே கழிந்த நிலையில் சிறுவர்கள் தினந்தோறும் எதிர்கொள்ளும் போராட்டங்களைச் சிறுவர்களின் தோளில் நின்று, அவர்களது பார்வையினூடு பார்த்தால் மாத்திரமே புரிந்து கொள்ள முடியும். அவ் வாழ்வியல் போராட்டங்களைப் பதிவாக்கி சர்வதேசம் முழுவதும் கொண்டு சேர்ப்பது மாத்திரமன்றி, அப் படைப்புகளின் மூலமாக சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதும் சாதாரணமானதல்ல. அவ்வாறான திரைப்படங்களையும், அதன் இயக்குநர்களையும் எப்போதுமே நாம் கொண்டாட வேண்டும்.

    Share
  • மழைப் பயணி

    எம்.ரிஷான் ஷெரீப்

     

    ஆங்காங்கே தேங்கியிருக்கும் சகதிகளோடு

    மழை நனைத்த ஒற்றையடிப் பாதை

    ஈரமாகவே இருக்கிறது இன்னும்

     

    ஊதா நிறப் பூக்களைக் கொண்ட

    தெருவோர மரங்கள்

    கிளைகளிலிருந்து காற்று உதிர்க்கும் துளிகளினூடு

    நீரில் தலைகீழாக மிதக்கின்றன

     

    இருண்ட மேக இடைவெளிகளிலிருந்து வந்து

    தரையிலிறங்கியதும்

    சந்திக்க நேரும் மனிதர்களுக்கேற்ப

    மழையின் பெயர் மாறிவிடுகிறது

    ஆலங்கட்டி, தண்ணீர், ஈரம், சேறு, சகதியென

     

    மழைக்குப் பயந்தவர்கள்

    அடைத்து மூடிய ரயில் யன்னல் வழியே

    இறுதியாகக் காண நேர்ந்த

    பச்சை வயல்வெளியினூடு

    மழையில் சைக்கிள் மிதித்த பயணி

    இந் நேரம் தனது இலக்கை அடைந்திருக்கக் கூடும்

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • கோடைக்கு இரை ஈரம்

    எம்.ரிஷான் ஷெரீப்

     

     

    யானை எலும்புகளில் அமரும் மீன்கொத்திகளும்

    புறக்கணித்துவிட்ட

    இலையுதிர்த்த விருட்சங்களில்

    பௌர்ணமி நிலவு

    கோடையை வாசித்தபடி வானில் நகரும்

     

    வனத்தில்

    புள்ளி மான்கள் நீரருந்திய

    குட்டைகள் வரண்டு விட்டன

     

    அகோரச் சூரியன் தினமும்

    தனதாயிரம் உஷ்ணக் கரங்களால் தடவும்

    பசிய புற்கள் படர்ந்திருந்த நிலம்

    தன் மென்பரப்பையிழந்து

    வெடிக்கத் தொடங்கி விட்டது

     

    சாம்பல் குருவிகள் ஏழு

    இரை தேடும் தம் ஒற்றைத் திட்டத்தோடு

    தினந்தோறும் காலையில்

    முற்றத்திலிறங்கும்

     

    காட்டு மலைச் சரிவின் பலகை வீடுகள்

    உஷ்ணப் பிராந்தியக் கதைகளைச் சுமந்த

    காற்றோடு வரும் பூ இலைச் சருகுகளைப் போர்த்தி

    தம்மை மரமென அலங்கரித்துக் கொள்கின்றன

     

    எஞ்சியிருக்கும் ஓரோர் பட்சிகளும்

    தமக்கொரு மரப் பொந்து வேண்டுமென

    கேட்டுக் கொள்ளும் பார்வைகளை

    சேமித்து வைத்தவாறு

    வட்டமிட்டபடியே இருக்கின்றன

    கருநிறப் பின்னணியில் வெண்ணிற வளையமிட்ட

    மரங்கொத்திப் பறவையின் கண்கள்

     

    கொக்குகளும் நாரைகளும்

    தம் ஒற்றைக் கால் தவத்தோடு மறந்து கைவிட்ட

    தண்ணீர்க் குளங்களின்

    ஈர மணற்தரையைத் தொடுகின்றன

    ஆழமற்ற நீரில் பிரதிபலிக்கும்

    தாகித்த மேக விம்பங்கள்

     

    அவ்வாறாக

    கோடைக்கு இரை

    ஈரமென ஆயிற்று

     

     

    Share
  • வெள்ள நிவாரண முகாம்

    மொழிபெயர்ப்புச் சிறுகதை

    (சிங்கள மொழிச் சிறுகதை)

    வெள்ள நிவாரண முகாம்

    – அஜித் பெரகும் திஸாநாயக

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

             நயனா வீட்டுக்குள் நுழையும்போது அது சகதிக் குவியலாகக் கிடந்தது. அவள் எப்போதும் பெருக்கித் துடைத்து தூய்மையாக வைத்திருந்த பளிங்குத் தரையானது, கோப்பி நிற அழுக்குச் சேறு படிந்து சேற்று வயல்வெளி போல ஆகியிருந்தது. வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த சோபா கதிரையின் இருக்கைகள் சேற்றிலும் தண்ணீரிலும் ஊறிப் போயிருந்தன. பிளாஸ்டிக் கதிரைகள், புகைப்படங்கள், அலங்காரப் பொருட்கள் எல்லாம் மிதந்து சென்று ஆங்காங்கே ஒதுங்கியிருந்தன. சுவரில் கழுத்தளவு உயரத்தில் மஞ்சள் நிற நீரின் அடையாளம் படிந்திருந்தது.

             அறையிலிருந்த அலுமாரியைத் திறந்து பார்த்தவளின் நெஞ்சம் அதிர்ந்து போனது. சேலைகள், சட்டைகள், பிள்ளைகளின் ஆடைகள் அனைத்திலிருந்தும் அழுக்குத் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அலுமாரியின் இழுப்பறையைத் திறந்து பார்த்தாள். முக்கியமான பத்திரங்கள் அனைத்துமே நனைந்து போயிருந்தன. அவற்றுக்கிடையே தங்க நகைகளை அடகு வைத்தமை சம்பந்தமான முக்கியமான காகிதங்களும் அடங்கியிருப்பது நினைவுக்கு வந்து அவளது கை தானாகவே கழுத்தை நோக்கிச் சென்றது.

             அவள் கட்டிலின் மீது அமர்ந்து கொண்டாள். அதிலும் ஈரத்தை உணர்ந்தவள் உடனே எழுந்து நின்றாள். எழுந்ததுமே கட்டில் ஒரு புறமாக சாய்ந்து கொண்டது. அட்டைப் பலகைகளால் செய்யப்பட்ட அதை மீண்டும் பாவிப்பது சாத்தியமில்லை. அது இப்போது நனைந்து ஊறி பப்படத்தைப் போல உப்பிப் போய்விட்டிருந்தது. வீட்டுச் சாதனங்களை வாங்குவதற்காகப் பெற்றுக் கொண்ட கடனைக் கூட இன்னும் செலுத்தி முடிக்கவில்லை.

             பிள்ளைகளின் அறை முழுவதும் புத்தகங்களும், கொப்பிகளும் பரந்து கிடந்தன. அவற்றின் மேலே அடுக்கடுக்காக சேறும் சகதியும் படிந்திருந்தன. கறுப்பு நிற அழுக்குச் சேற்றிலிருந்து மூக்கைத் துளைக்கும் நாற்றம் கிளம்பியதால் அவள் மூக்கைப் பொத்திக் கொண்டாள். அழுக்காகி, சகதி படிந்து அறையின் மத்தியில் வீழ்ந்து கிடந்த மகளின் பொம்மையொன்றைக் கண்டதும், அண்மையில் இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிக் கொல்லப்பட்ட குழந்தையொன்றின் சடலம் நினைவுக்கு வந்தது. அவளுக்கு வெள்ள நிவாரண முகாமில் விட்டுவந்த மகள் நினைவில் வந்தாள்.

             நண்டொன்று குறுக்கே அடி வைத்து புத்தகங்களின் மேலால் ஓடியது. ‘பாம்புகளும் இருக்குமோ தெரியாது’ எனப் பயந்து சடுதியாக பின்புறம் அடியெடுத்து வைத்தவள் சகதியில் வழுக்கினாள். சட்டென நிலைக் கதவைப் பற்றிப் பிடித்து கீழே விழாது தன்னைப் பாதுகாத்துக் கொண்டாள். சுவரிலிருந்த அட்டைப் புழுவொன்று நசுங்கி அவளது கைகளில் அதன் சதைத் திரவம் படிந்தது. மிகுந்த அறுவெறுப்பாக உணர்ந்தாள். சுவரிலேயே பல தடவைகள் கையைத் தேய்த்தாள். ஏனைய நாட்களில் சுவரை அழுக்காக்க வேண்டாம் என மகனை மிரட்டுபவள் அவள்.

    அவளது கணவன் சேறாலும் சகதியாலும் மூடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மிகவும் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் வீட்டை விட்டுச் செல்லும்போதே வயல்வெளியின் மத்தியில் செல்லும் பாதை கழுத்தளவு நீரில் மூழ்கிப் போயிருந்தது. அவர்களை கடற்படையின் படகொன்று வந்து வெள்ள நிவாரண முகாமுக்கு அழைத்துச் சென்றது. எதையுமே எடுத்துச் செல்ல வழியிருக்கவில்லை. வாழ்நாளில் பாடுபட்டு வாங்கிய தமது முதல் வாகனத்தை வீட்டிலேயே விட்டுச் செல்ல அன்று நேர்ந்தது. இப்போதும் பஸ் செல்லும் தெருவுக்குச் செல்ல ஒரு கிலோமீற்றர் தூரம் சேற்றில் தவழ்ந்து செல்ல வேண்டியிருக்கும். அயல்வீட்டுத் தம்பி நுவன் வாடகைக்கு ஓட்டும் முச்சக்கரவண்டிக்கும் கூட மோட்டார் சைக்கிளுக்கு ஏற்பட்ட கதியே நிகழ்ந்திருக்கிறது.

    அவள் தையல் இயந்திரத்தின் போர்வையை அகற்றினாள். தண்ணீர் உள்ளே சென்றிருந்த போதும் சகதி சொற்பமாகவே படிந்திருந்தது. மின்சார மோட்டார் பழுதடைந்திருக்கக் கூடும். புதிய மின்சார மோட்டார் எவ்வளவு விலை வரும் என அவளுக்கு ஒரு கணம் யோசனை எழுந்தது. தைக்கும் புடவைகளை வைத்திருந்த பெட்டியில் படிந்திருந்த சேற்றினிடையே சிறு குழந்தையின் சட்டையொன்றில் பதிக்கப்பட்டிருந்த உருவம் தெளிவாகத் தெரிந்தது. கார்ட்டூன் கதாபாத்திரமொன்று தூண்டிலிடப் போகும் காட்சி அங்கிருந்தது.

             சமையலறைப் பக்கம் எட்டிப் பார்க்கவேனும் அவளுக்குத் தோன்றவில்லை. சமையலறை ஒரு படிக்கட்டின் கீழாக அமைந்திருந்தது. அதைப் பார்த்தால் தனக்கு மயக்கமே வரக் கூடுமென அவள் அச்சமுற்றாள். கணவன் குளியலறையை எட்டிப் பார்ப்பதைக் கண்டதும் அவனது தோளின் மேலாக அவளும் எட்டிப் பார்த்தாள். கழிவறையில் தண்ணீர் வற்றியிருக்கவில்லை.

             ‘கடவுளே, வாழ்நாள் முழுதும் தேடி சம்பாதிச்சது எல்லாமே தண்ணில.. நாங்க திரும்பவும் தலை தூக்குறது எப்படி?” என அவளது வாய் தானாக முணுமுணுத்தது. மாதவிடாய் தோன்றக்கூடிய அறிகுறிகளை இன்று காலையிலிருந்து அவளது உடல் அறிவித்துக் கொண்டிருக்கிறது. அடுக்கடுக்காக சேறும் சகதியும் மூடியிருந்த துண்டுகள், உள்ளாடைகள், சட்டைகள், சேலைகள், கட்டில் விரிப்புகள், தலையணைகள், பிள்ளைகளின் ஆடைகள், கணவனின் ஆடைகள், சட்டிகள், பானைகள், நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த மசாலா, மிளகாய்த் தூள்களிட்ட போத்தல்கள் போன்ற இன்னும் பலவும் அவளது நினைவில் தோன்றிக் கொண்டேயிருந்தன.

            “இதையெல்லாம் நாம துப்புரவாக்க முடியாது. எனக்கு இங்க இருக்கவும் பயமா இருக்கு.. வாங்க போகலாம்” என்றாள். சுற்றுச்சூழல் முழுவதும் பாழடைந்து, மர்மமான துயரம் நிரம்பி, பரிதாபத்துக்குரியதாகவிருந்தது. வானம் கூட கரிய மேகங்களால் கனத்துப் போயிருந்தது. மீண்டும் பலத்த மழை பெய்யக் கூடும். அமைதியான துயரம் சூழ்ந்து பாழடைந்த அமைதியைக் குழப்பியவாறு வெட்டுக்கிளியொன்று சிறகடிக்கும் ஓசை கேட்டது.

                    “நீ போ” என அவளது கணவன் சந்தன கவலை தோய்ந்த கோபத்தோடு கூறுவது கேட்டது.

             நிச்சயமாக அவள் போயாக வேண்டும். பன்னிரண்டு வயதான மகளையும், எட்டு வயது மகனையும் பக்கத்துவீட்டுப் பெண்ணின் பாதுகாப்பில் விட்டு வந்திருந்தாள். கணவனினதோ, அவளதோ ஊர்களுக்குச் செல்லக் கூட அவர்கள் எவரிடமும் நல்ல ஆடைகள் எவையும் இப்போது இல்லையென்பது அவளுக்குத் தோன்றியது. எனினும், அவ்வாறு இலகுவில் விட்டுச் சென்றுவிடவும் முடியாத அளவுக்கு அவர்களது வாழ்க்கையானது கொழும்போடு கட்டிப் போடப்பட்டிருக்கிறது. கணவனின் தொழில், அவளது தையல் பணி, பிள்ளைகளின் கல்வி என அனைத்துமே அழுக்கு வாடை வீசும், வடிகான்கள் பெருக்கெடுக்கும், வாகன நெருக்கடியில் இளைப்பாறும், சுவாசிக்கக் கூட முடியாதளவு உஷ்ணமான இக் கொழும்பு நகரத்திலேயே தங்கியிருக்கின்றன.

             மகளுக்கு கழிப்பறைக்குப் போக வேண்டிய தேவையேற்பட்டால் கூட அவள் தனியாக வெள்ள நிவாரண முகாமிலிருக்கும் கழிப்பறைக்குச் செல்ல விரும்புவதில்லை. நாலாபக்கமும் மலமும், சிறுநீரும், எச்சிலும், பீடி சிகரெட் துண்டுகளும்  பரந்திருக்கும் அப் பாடசாலைக் கழிப்பறைக்குச் செல்ல விருப்பமற்றதால் மகள் மாத்திரமல்லாது அவளும் கூட அதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால் மாத்திரமே கழிப்பறைக்குச் செல்கின்றனர்.

                “ஆஹ் தங்கச்சி… இப்ப நாங்களும் இங்கேதான்… நீங்களும் இங்கேதான் இல்லையா?” என மகள் மாலைவகுப்புக்கு போய் வரும் வேளைகளில் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் முரட்டுப் பையன் ஒரு நாள் அவளுக்கும் கேட்கவே கூறியிருந்தான். எனவே மகளின் பாதுகாப்பு குறித்து நயனாவுக்கு அச்சம் தோன்றியிருக்கிறது.

            மகனுக்கு தடிமன் பிடித்திருக்கிறது. மூக்கைச் சிந்தித் துடைக்கவேனும் கைக்குட்டையொன்று இருக்கவில்லை. தண்ணீரில் இறங்கி ஓடியாடி நடப்பதால் அவனது கால்களும் அரிப்பெடுத்திருக்கின்றன. பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு வந்திருந்த வயதான பெண்மணியும் ஒரு நோயாளி. நீரிழிவுக்கும், உயர் குருதியழுத்தத்துக்கும் மருந்து பாவித்துக் கொண்டிருப்பவளின் அனைத்து நோய் மருத்துவப் பத்திரங்களும் கூட வெள்ளத்தில் போய்விட்டிருந்தன.

             மகனின் ஆரம்பப் பாடசாலையே வெள்ள நிவாரண முகாமாக ஆகியிருந்தது. வகுப்புக்களிலிருந்த பிள்ளைகளின் உபகரணங்கள், புத்தகங்கள், படைப்புக்கள் ஆகியவை முழுவதுமாக சேதமாகிப் போயிருந்தன. பாதிக்கப்பட்ட இம் மக்கள் இம் முகாமிலிருந்து முழுமையாக வெளியேறும் வரைக்கும் பிள்ளைகளுக்கு பாடசாலை இல்லை. மகனுக்கென்றால் இப் புதிய அனுபவம் மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் இருக்கிறது.

             எனினும், மஞ்சள் நிற இருள் சூழ்ந்த மின்குமிழ் இரவு முழுவதும் எரிந்து கொண்டிருக்கும், பூச்சிகளும் நுளம்புகளும் நிறைந்த, மக்கள் முணுமுணுக்கும், இருமும், காரித் துப்பும், குடிகாரர்களின் புலம்பும் ஓசைகளும் நிறைந்த முகாமில், இரும்புக் கால்களைக் கொண்ட பாடசாலைக் கதிரைகள் தரையோடு உரசுவதால் உடைந்து போன தரையின் மீது பன்சலை விகாரையால் தரப்பட்ட அழுக்குப் பாயில் உறங்குவதற்கென படுத்திருக்கும்போது ‘அம்மா, நாங்க நம்ம வீட்டுக்குப் போறது எப்போ?’ என மகன் எப்போதும் கேட்பான்.

                சந்தன கோபத்திலிருந்தான். நிவாரண முகாமுக்குக் கொண்டு வந்து பகிரப்படும் பொருட்களைப் பெற்றுக்கொள்ள அவன் பெரிதும் விருப்பமின்றியே வரிசையில் நிற்பான். உணவும், குடிநீரும் தவிர்ந்த வேறெதற்கும் அவன் வரிசையில் நிற்பதில்லை.

             ‘நாங்க பிச்சைக்காரர்களில்ல.. எங்களுக்கு வேறொண்ணும் தேவையில்ல’ என கோபமாகச் சொல்வான்.

             நிவாரணப் பொருட்களைப் பகிரும் குழுவினர் வந்தால் அயல்வீட்டுப் பெண்மணி பிள்ளைகளை மறந்து வரிசையில் முண்டியடிக்கச் சென்றுவிடக் கூடும். உடல் பலம் கொண்ட முரட்டு ஆண்கள் வந்து கொடுக்கப்படுபவற்றைப் பறித்துக் கொண்டு செல்வர். அவர்களில் பலரும் வெள்ளத்தில் சிக்கியவர்களல்ல என பக்கத்து வீட்டுப் பெண்மணி கூறியிருக்கிறாள். பல ஊர்மக்கள் சேர்ந்திருக்கும் முகாம் மிகவும் சிக்கலானது. கிராம சேவக அதிகாரியான பெண்மணியால் மாத்திரம் அச் சிக்கலைத் தீர்ப்பது சிரமமானது.

             பக்கத்து வீட்டு பெண்மணியைச் சூழவும் எப்போதும் நிவாரணப் பொருட்கள் நிறைந்திருந்தன. பால்மா, பருப்பு, மீன் டின்கள், சீனி, தேயிலை, ஆடைகள், பயிற்சிப் புத்தகங்கள், பேனைகள், பென்சில்கள், வர்ணப் பெட்டிகள், விளையாட்டுப் பொருட்கள் எனப் பலவற்றையும் பொலிதீன் பைகளில் சேகரித்து வைத்திருந்தாள். அவள் பாவாடை சட்டை அணிபவள். எனினும் மகளிர் அமைச்சினால் கொண்டு வந்து கொடுக்கப்பட்டிருந்த இளம்பெண்களின் உள்ளாடைகளையும் ‘மகளுக்குக் கொடுக்கலாம்’ என இலவசமாக வாங்கி வைத்திருந்தாள். மகள் வந்து நிவாரணப் பொருட்கள் நிரம்பிய பொதிகளை வாங்கிச் சென்றாளே தவிர, தாயை தன்னோடு  கூட்டிக் கொண்டு போகவில்லை.

             அயலில் வசித்து வந்த திலினி இப்போது ஐந்து மாதக் கர்ப்பிணி. கர்ப்பிணிப் பெண்களை வைத்தியசாலையில் சென்று தங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் அவள் அங்கு சென்றால் அவளது ஏனைய இரண்டு குழந்தைகளையும் அவளது கணவனே கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். பிறகு வெள்ளத்தில் சிக்கியுள்ள அவர்களது வீட்டை துப்புரவு செய்வது யார்?

             ‘கீழே படுக்க, உட்கார, எழுந்திருக்க ரொம்ப கஷ்டமாக இருக்கு அக்கா’ என திலினி எப்போதும் கூறுவாள். முகாமில் ஆடை மாற்றுவதில் கூட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மோசமான ஆண்களின் காமப் பார்வை எல்லாப் புறத்திலிருந்தும் மின்சார விளக்குகளைப் போல பளிச்சிட்டுக் கொண்டேயிருக்கின்றன. எவ்வாறாயினும் அதுதான் இப்போது இவர்களின் இருப்பிடம்.

             “நாங்கள் போவோம்” எனக் கூறியவாறு நயனா தனது கணவனின் கையைப் பிடித்தாள்.

             “நீ போ… என்னால முடியாது” என அவன் கையைத் தட்டி விட்டான்.

             இப்போது அவன் மிகவும் கோபமுற்றிருக்கிறான். முகாமில் ஒருவன் திடீரென கதிரைகளைக் கீழே தள்ளிப் பாய்ந்து தனது மனைவியைத் தாக்கியதை அவள் நேற்று காண நேர்ந்தது. ஏனையவர்கள் அவனைப் பிடித்து வேறு புறத்துக்கு இழுத்துச் சென்றனர். குழப்பத்தைக் கண்ட பொலிஸ் அதிகாரி சப்பாத்துக் கால்களுடன் நயனாவின் பாயை மிதித்தவாறு கடந்து சென்றார். அந்தச் சப்பாத்துக்களில் என்னென்ன அழுக்குகள் மிதிபட்டிருக்கக் கூடும்?

             முகாமுக்குச் சென்ற நாளிலிருந்து குளிக்கவில்லை. பாடசாலையில் புதிதாக இணைக்கப்பட்டிருந்த தண்ணீர்க் குழாயினருகே கால்களில் ஒட்டிக் கொள்ளுமளவுக்கு சேறு நிறைந்திருந்தது. அவளது தலை அரிப்பெடுத்தது. தலைமயிர்களிடையே விரலை நுழைத்துப் பார்த்தாள். அழுக்கு எண்ணெய்ப் பிசுக்கு அங்கிருந்தது. கால்களும் அரிப்பெடுத்தன.

                 “மகளை நினைச்சாப் பயமாயிருக்கு… வீட்டைத் துப்புரவாக்க உதவுங்கன்னு, உதவிக்கு வந்திருக்குற அந்தத் தம்பிகள்ட சொல்லுவோம். வாங்க இப்ப போகலாம்.”

             மகளின் நிலையைப் பற்றிச் சொன்னதும் சந்தனவின் மனம் மாறுவதை நயனா உணர்ந்தாள்.

    ***************

    mrishanshareef@gmail.com

    Share
  • தென்னைகளில் கள்ளெடுப்பவள்

     எம்.ரிஷான் ஷெரீப்

     

     

    பக்கவாதப் புருஷனுக்கென முதலில்

    வீட்டுத் தென்னையில் கள்ளெடுத்தவளின்

    தோப்பு மரங்கள்

    அத் தடவை காய்த்துக் குலுங்கியது கண்டு

    தொடக்கத்தில் ஊர் முழுவதும்

    வியப்பாகக் கிசுகிசுத்துக் கொண்டார்கள்

    பெண்ணேறும் தென்னைகள்

    அதிகமாகக் காய்க்கிறதென

    விடியலிலும், இரவிலுமென

    எக் காலத்திலும் மரமேறுபவள்

    எல்லாத் தென்னைகளினதும் உச்சிகளைத் தொடுத்து

    நீண்ட கயிற்றினால் முடிச்சிட்டுக் கட்டினாள்

    ஓரோர் மரத்துக்கும்

    கயிற்றின் வழியே நடந்து சென்று

    மண்பானைகளைப் பொருத்தியும், எடுத்தும் வரும்

    கள்ளெடுக்கும் செம்பருத்தி

    தென்னை ஓலைகளினூடே தொலைவில்

    கடல் மின்னுவதை

    எப்போதும் பார்த்திருப்பாள்

    தென்னந் தோட்டங்களை வைத்திருப்பவர்கள்

    அவளைக் காண வரும் பின் மதியங்களில்

    தம் தோப்புக்களைச் செழிக்கச் செய்ய வேண்டுமென்ற

    அவர்களது வேண்டுகோள்களோடு பணத்தையும் வாங்கி

    பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வாள்

    ஒரு தொகை பணம் சேர்த்த பின்

    கடலின் அப்புறம் தெரியும் தீவுத் தென்னைக்கு

    கயிறெரிந்து முடிச்சிட்டு

    கணவனோடு தப்பித்துச் செல்லும் வீரியம்

    அவள் கண்களில் மின்னும்

    அப்போதெல்லாம்

     

     

    Share