தளிர்களுக்கான திரை
– எம். ரிஷான் ஷெரீப்
நமக்கு எழுத்தறிவித்தவரை எத்தனை பேர் தினந்தோறும் நினைத்துப் பார்க்கிறோம்? நாம் எழுத, வாசிக்கப் படிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எம்மைச் சார்ந்தவர்கள் எமக்கு எழுத்தறிவித்ததாலேயே இதனை வாசித்துக் கொண்டிருக்கிறோம் இல்லையா? நம் அயலில், நம் ஊரில், நமது தேசத்தில், உலகில் எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிட்டியிருக்கிறது? எத்தனையோ நபர்களினது ஜீவிதங்களில் கல்விக்கான ஆர்வம் பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்திருக்கும் எனினும் அதற்கான வாய்ப்புக் கிட்டாமல் வாழ்க்கையோடு போராட வேண்டிய நிர்ப்பந்தங்கள் மேலோங்கியிருப்பதையும், அவையே அவர்களது நடத்தைகளில் ஆதிக்கம் செலுத்துவதையும் தினமும் கேள்விப்படுகிறோம். அவ்வாறான ஓர் அநாதைச் சிறுவன்தான் அமிரோ. யுத்தத்தில் தனது உறவுகளைப் பறிகொடுத்த அவனுக்காக அவர்கள் மிச்சம் வைத்துப் போனது அவனது பெயர் மட்டும்தான்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சிறுவன் அமிரோ, பிற நகரமொன்றின் கடற்கரைப் பிரதேசமொன்றில் சிதிலமடைந்து புறக்கணிக்கப்பட்ட கப்பலைத் தனது வசிப்பிடமாகக் கொண்டிருக்கிறான். ஜீவனோபாயமாகக் குப்பைகளில் கிடக்கும் இரும்புப் பொருட்களைத் தேடியெடுத்து விற்கிறான். போத்தல்களைப் பொறுக்கி விற்கும் சக சிறுவனொருவன் அவனிடம் கப்பல்களிலிருந்து கடலில் எறியப்படும் போத்தல்களைப் பொறுக்கி விற்றால் நிறையப் பணம் கிடைக்கும் எனக் கூறி கடலுக்கு அழைத்துச் செல்கிறான். அத் தொழிலுக்கு வில்லங்கம் ஒரு சுறா மூலம் வருகிறது. அவர்கள் போத்தல்களைச் சேகரிக்கும் கடற்பகுதியில் சுறாவின் நடமாட்டத்தைக் கண்டதால் வேறு வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. பிறகு கடற்கரைக்கு வரும் பெரிய பனிக்கட்டிகளைப் போராடி வாங்கி, அவற்றைக் குளிர் நீராக்கி, குவளையில் நிரப்பி கூவி விற்கிறான். அதுவும் நிரந்தரமில்லை எனப் புலப்பட, சக சிறுவனின் சிபாரிசில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தளமொன்றில் அவர்களது சப்பாத்துக்களைத் துடைத்துவிடும் வேலை கிடைக்கிறது. அதில் ஓரளவு வருமானம் வந்த போதிலும் திரும்பவும் ஒரு தவறான குற்றச் சாட்டினால் அந்த வேலையும் பறிபோகிறது. இனி அவனுக்காக உதவ யாருமில்லை. எனில், அவனது எதிர்காலம் முழுவதற்குமாக அவனுக்கு உதவப் போவது எது?
சிறுவர்களது உலகம் விசித்திரமானது. அது மாயலோகமும், யதார்த்தமும் கலந்தது. அவர்களது பார்வையில் அனைத்தும் புதிதாய்த் தெரியும். பின்னாட்களில் அனுபவங்கள் கற்றுத் தரப் போகும் படிப்பினைகள் குறித்து எந்தக் கவலைகளுமற்று சுற்றித் திரியும் பருவத்தைச் சார்ந்தவர்கள் அவர்கள். காலமும், நேரமும், சூழலும் குறித்த எந்தக் கவலையுமின்றி சுற்றித் திரியலாம். விளையாடிக் கொண்டிருக்கலாம். அதிலும் கட்டுப்படுத்த யாருமின்றி சுயமாய் வளரும் சிறுவர்களது வாழ்க்கையில் இச் சுதந்திரமும், விளையாட்டுக்களும் சர்வ சாதாரணமானவை.
அமிரோவின் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது. கடலில் வரும் ஒரு வெண்ணிறக் கப்பலைக் கண்டு வியக்கிறான். தெருவில் செல்லும் ஒரு முதியவனையும், அவனுடன் செல்லும் நோயால் துன்புறும் பெண்ணையும், இன்னும் ஒரு கால் இல்லாமல் ஊன்றுகோலின் துணையுடன் செல்லும் ஒருவனையும் கண்டு அனுதாபமுறுகிறான். தன்னிடம் தண்ணீர் வாங்கிக் குடித்து விட்டுப் பணம் தராமல் ஏமாற்றிச் செல்பவனைத் துரத்திச் சென்று பிடித்து, தண்ணீருக்குரிய பணத்தினை வாங்கிக் கொண்டு புன்னகைக்கிறான். தன்னிடமிருந்து பெரிய பனிக்கட்டிப் பாளத்தைப் பறித்துக் கொண்டு ஓடுபவர்களை விரட்டிச் சென்று அவர்களிடமிருந்து அதை மீளப் பெற்று வெற்றியில் திளைத்து, திருடனை நோக்கிப் பழித்துக் காட்டுகிறான். தனக்குத் திருட்டுப் பட்டம் சுமத்தி, தனது தொழில் போகக் காரணமாக இருந்த வெள்ளையனோடு சண்டை போடுகிறான். புத்தகக் கடைகளில் விற்பனைக்காகத் தொங்க விட்டிருக்கும் புத்தகங்களை ஆசையோடு தொட்டுப் பார்க்கிறான். தனது சிறிய இருப்பிடத்தில் கோழிக் குஞ்சொன்றைக் கொஞ்சி வளர்க்கிறான்.
அவனது வசிப்பிடத்துக்கருகில் இருக்கும் பிற நாட்டவரொருவரின் வீட்டில் ஒரு விமானம் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தினந்தோறும் அதைப் பார்த்துப் பரவசத்தில் திளைப்பவனுக்கு, விமானங்கள் மேல் ஆசை வந்து விடுகிறது. திருட்டுத்தனமாகச் சென்று அதைத் தொட்டுப் பார்த்து மகிழ்கிறான். புத்தகக் கடைகளில் தொங்க வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களில் விமானங்களின் படங்களிட்ட புத்தகங்களை வாங்கி வந்து விமானங்களின் படங்கள் பார்த்து ரசிக்கிறான். புத்தகங்களை மேலும் மேலும் வாங்குகிறான்.
”நிறைய வெளிநாட்டுப் புத்தகங்கள் வாங்கிறாயே? உனக்கு வெளிநாட்டு பாஷைகள் கூடத் தெரியுமா?”
”இல்லை..நான் அவற்றை அவற்றிலுள்ள படங்களுக்காக வாங்குறேன்”
”நீ வாசிக்க விரும்புகிறாயென்றால், என்னிடம் ஃபார்ஸி மொழிப் புத்தகங்களும் இருக்கின்றன. அவை விலையும் குறைவு.”
”எனக்கு வாசிக்கத் தெரியாது.”
”உன்னைப் போன்ற சிறுவர்கள் எல்லோருக்குமே வாசிக்கத் தெரியுமே.”
புத்தகக் கடைக்காரனுடனான மேற்படி சம்பாஷணையைத் தொடர்ந்து, வாங்கி வந்த புத்தகங்கள் அனைத்தையும் கடற்கரையில் வைத்து ஆவேசத்தோடு, துண்டு துண்டாய்க் கிழித்தெறிகிறான் அமிரோ.
”நான் வாசிக்கணும்.. நான் எழுதப் படிக்கணும்… ஏன் என்னால் முடியாது.. ஏன் என்னால் முடியாது?” எனக் கேட்டுக் கத்துகிறான்.
ஏன் அவனால் முடியாது? அவன், அருகிலிருக்கும் பாடசாலையொன்றுக்குச் சென்று அவனுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறான். அந்தப் பள்ளிக்கூட அதிபர் அவனைப் பார்த்து, அரிச்சுவடியிலிருந்து கற்றுக் கொள்ள, முதலாம் வகுப்பில் சேர வேண்டும் என்றும் அந்த வயதை அவன் தாண்டி விட்டான் என்றும் கூறுகிறார். எனினும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் சுயமாக வந்திருக்கும் அவனை மாலை நேர வகுப்பில் சேர்த்துக் கொள்கிறார். அவனுக்கு அரிச்சுவடி எழுத்துக்கள் மனனமிடச் சிரமமாக இருக்கின்றன. ஆனால் அவனது தன்னம்பிக்கையும், ஆர்வமும் அவனை அரிச்சுவடியை மனனமிட்டு அவ்வெழுத்துக்களை ஒரே மூச்சில் கூற வைக்கின்றன.
ஒருவனது தன்னம்பிக்கையும், ஆர்வமும், திறமையும், நேர்மையும், அடிப்படைக் கல்வியும்தான் அவனது வெற்றிகளுக்குக் காரணமாகின்றன என்பதை விளக்கும் ஈரானியச் சிறுவர் படம்தான் ‘The Runner (Davandeh)’. தனது திரைப்படங்களுக்காகச் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்றுள்ள ஈரானியத் திரைப்பட இயக்குநர் அமிர் நாத்ரியின் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த இத் திரைப்படமானது, ஈரானியச் சினிமாவில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியதும், முழு சர்வதேசத்தையுமே தன் பக்கம் ஈர்த்த யதார்த்தத் திரைப்படங்களில் ஒன்று என்றும் தயங்காது குறிப்பிடலாம்.
அண்மைய தசாப்தங்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஈரானிய சிறுவர் திரைப்படங்களின் வழிகாட்டியாக இத் திரைப்படத்தைக் கருதலாம். யதார்த்தம், அப்பாவித்தனமும் நேர்மையும் வெளிப்படும் குழந்தைகளின் பார்வையினூடாக சமூக நடைமுறைகளைக் கூறுதல், எளிய வாழ்க்கை முறை, சமூக ஏற்றத் தாழ்வுகளை பட்டவர்த்தனமாக்கல், முழுத் திரைப்படத்தையும் குழந்தையின் தோளில் ஏற்றி வைத்து திரைப்படத்தை நகர்த்திச் செல்லல், குழந்தைகளின் வாழ்க்கையை வளர்ந்தோருக்கான பாடமாக்கல் என அனைத்துக்கும் முன்னுதாரணமாகக் குறிப்பிடக் கூடிய திரைப்படமாக இத் திரைப்படத்தையே குறிப்பிட வேண்டுமென சர்வதேசத் திரையியலாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு சிறுவர் திரைப்படத்தின் தாக்கம் சர்வதேசத்தையே பேச வைத்திருக்கிறது எனில், அத் திரைப்படத்தின் கருவும், எடுத்துக் கொண்ட விடயத்தைத் திறம்படச் சொன்ன விதமும், அதில் வாழ்ந்து காட்டியிருக்கும் மனிதர்களின் இயல்பான நடிப்பும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதன்றி வேறேது?
திரைப்படத்தின் தலைப்பே ஓர் ஓட்ட வீரனின் இலக்கைக் குறிப்பிடுகிறது. திரைப்படத்திலும் கதையின் நாயகனான சிறுவன் அமிரோ மூச்சு வாங்க வாங்க வேகமாக ஓடிக் கொண்டேயிருக்கிறான். சக சிறுவர்களுடனான பந்தய ஓட்டங்கள், பணம் தராமல் சைக்கிளில் விரைந்து செல்பவனைத் துரத்திச் சென்று பிடிக்கும் ஓட்டம், விரைந்து செல்லும் புகையிரத்தை இரயில் தண்டவாளத்திலேயே ஓடித் தொட்டு விடும் ஓட்டம் எனப் பல ஓட்டங்கள் திரைப்படத்தில் வியாபித்து, சிறுவர் உலகின் தன்னம்பிக்கையைப் பறைசாற்றுகின்றன. அந்த ஓட்டங்களே, ஊக்குவிக்க யாருமின்றியிருக்கும் அவனுக்கு எதிராக பூதாகரமாகத் தோன்றும் கல்விச் சமூகத்தில் அவனையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தையும் நம்பிக்கையும் அவனுக்குள் தூண்டுகின்றன.
இத் திரைப்படத்தைப் போலவே ஒரு சிறுமியின் மூலமாக கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கும் இன்னுமொரு ஈரானியத் திரைப்படம் ‘ஹயாத்.’
ஈரானியக் கிராமமொன்றில் தனது குடும்பத்தினரோடு வாழ்ந்து வரும் 12 வயதுச் சிறுமி ஹயாத், பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள். அப் பரீட்சையில் சித்தியடைந்தாலே அவளுக்கு மேலும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். எனவே அவள் மிகுந்த ஊக்கத்தோடு பரீட்சைக்குத் தயாராகிறாள். பரீட்சையன்று விடிகாலையில் அவளது தந்தை கடும் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார். தந்தையைக் கவனிக்கத் தாயும் செல்ல வேண்டிய நிலைமையில், அவர்களது கைக் குழந்தையை ஹயாத்திடம் விட்டு விட்டு அவர்கள் வைத்தியசாலைக்குச் செல்கிறார்கள். கைக்குழந்தையை வைத்துக் கொண்டு, வீட்டு வேலைகளையும் செய்தபடி அன்று அவள் பரீட்சையை எவ்வாறு எழுதினாள் எனும் ஒரு நாள் அனுபவத்தைத் திரைப்படமாக்கி, அதன் மூலமாக ஈரானிய சமூகத்தில் பெண் கல்வியின் அத்தியாவசியத்தை பகிரங்கமாக எடுத்துக் காட்டியுள்ளார் இயக்குனர் குலாம் ரெஸா ரம்ஸானி.
’The Runner’ திரைப்படம் வெளிவந்து சரியாக இருபது வருடங்களுக்குப் பிறகு 2005 ஆம் ஆண்டு வெளி வந்த இத் திரைப்படத்துக்கும் பல சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. சிறப்பு ஜூரி விருது (ஆம்ஸ்டர்டாம் திரைப்பட விழா 2005), சிறந்த திரைப்படத்துக்கான விருது (மாட்ரிட் குழந்தைகள் திரைப்பட விழா 2005), சிறுவர் திரைப்பட ஜூரி விருது (இந்தியா கோல்டன் எலிபெண்ட் திரைப்பட விழா 2005), சிறந்த திரைப்படத்துக்கான விருது (இஸ்த்தான்புல் சர்வதேசக் குழந்தைகள் திரைப்பட விழா 2005), யூனிசெப் விருது (Centre International Du Film Pour L’enfance et la Jeunesse, IRAN UNICEF Award), சிறப்பு ஜூரி விருது (ஆர்ஜெண்டினா குழந்தைகள் திரைப்படவிழா 2005), சிறப்பு விருது (செக் குடியரசு திரைப்படவிழா 2005), (உருகுவே குழந்தைகள் திரைப்பட விழா 2005), (பெலாரஸ் குழந்தைகள் மற்றும் சர்வதேச திரைப்பட விழா 2005) ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
பல போதனைகளைச் சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஹயாத் எனும் இத் திரைப்படத்தின் ஆரம்பம் முதற்கொண்டு சிறுமி ஹயாத்தைப் பீடித்துக் கொள்ளும் பதற்றம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. அவள் பரீட்சை எழுதப் போராடும் போராட்டமும், நெருக்கடியும் நம்மையும் திணறச் செய்கின்றன. அச் சிறுமியின் கல்விக்கான போராட்டம் அச் சிறுமியுடையது மாத்திரமேயல்ல. உலகம் முழுவதும் நிலைமை அவ்வாறுதான் இன்றும் இருக்கிறது. எவ்வளவுதான் நவீன மற்றும் நாகரிக மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பெண்களுக்கான கல்வி என்பது இன்றும் கூட இரண்டாம் தரமாகவே பார்க்கப்படுகிறது. கட்டுப்பாடுகள் அதிகமுள்ள ஈரான் போன்ற நாடுகளில் இன்னும் அதிகமாக, இன்றும் அதனது தாக்கத்தை வெளிப்படையாகக் காணலாம்.
திரைப்படங்கள் சமூக மாற்றங்களுக்கு வித்திடுகின்றன என்பதற்கு அமைவாக ஈரானியச் சமூகத்தில் புரட்சிக்கு முன்னும் பின்னும் சிறுவர்களுக்கான கல்வியின் அவசியத்தை விளக்கும் மேற்கூறப்பட்ட திரைப்படங்கள் அக் காலத்தில் பல சிறுவர்களது கல்விக்கு வழிகாட்டியாக அமைந்தவை. கல்விக்கு வழியின்றியும், புறக்கணிக்கப்பட்டும் வாழும் எத்தனை சிறுவர், சிறுமியர்களை நாம் தினந்தோறும் காண்கிறோம்? எத்தனை பேருக்கு நம்மால் உதவ முடிந்திருக்கிறது? வெறும் கேளிக்கைகளுக்காகத் திரைப்படம் எடுக்காமல், தமது படைப்புகள் மூலம் சமூகத்தை விழிப்புணர்வுக்குள்ளாக்கிய இத் திரைப்படங்களின் இயக்குநர்களைச் சர்வதேசமே பாராட்டுவது அதற்காகத்தான்.
சிறுவர்களுக்கான கல்வியின் தேவை குறித்த கருவைக் கொண்டு எடுக்கப்பட்டு, சர்வதேச விருதுகளை வென்ற இலங்கைத் திரைப்படம் ‘விது’ இன்னுமொரு குறிப்பிடத்தக்க சிறுவர் திரைப்படம் ஆகும். சமூகத்தில் கீழ்த்தரமானவர்களாகக் கருதப்படும், சேரியில் வசிக்கும் விலைமாது ஒருத்தியின் மகனான சிறுவன் விதுவை, அரசாங்கப் பாடசாலையொன்றில் சேர்த்து விட தாய் போராடும் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் அஷோக ஹந்தகம எடுத்த இத் திரைப்படமும் ‘கல்வி – தனி மனித உரிமை’ என்பதைப் பேசுகிறது.
இன்று சிறுவர் திரைப்படம் என்றாலே பிற மொழித் திரைப்படங்களையே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருப்பது துரதிர்ஷ்டமானது. தமிழிலும் சிறுவர் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன அல்லவா எனக் கேட்பீர்கள். உண்மையில், அவ்வாறான முத்திரையோடு இதுவரை வெளிவந்துள்ளவை எவையும் சிறுவர் திரைப்படங்களே அல்ல. அவை சிறுவர்களை நாயகர்களாகக் காட்டி, வளர்ந்தவர்களுக்குப் பாடம் போதிக்க முற்படும் பெரியவர்களுக்கான திரைப்படங்கள் அல்லது பேய், பூத, அமானுஷ்யங்களைக் களமாகக் கொண்டு சிறுவர்களை ஈர்க்க முற்படும் மாயாஜால திரைப்படங்கள்.
உண்மையில் திரைப்படம் என்பது என்ன? நடிகர்கள் கண்ணாடியைப் பார்க்கிறார்கள். அக் கண்ணாடி முன் நின்று, அதே கண்ணாடியினூடாக பார்வையாளர்களாகிய நாம் அவர்களைப் பார்க்கிறோம். ஆனால் அவர்களைக் காட்டும் அக் கண்ணாடி அவர்களோடு எம்மைக் காட்டுவதில்லை. ஆகவே திரைப்படமானது, நிஜமான, யதார்த்தமற்ற ஒரு மாயத் திரை. எனினும் யதார்த்த வாழ்வியலை நமக்குச் சுட்டிக் காட்டி, படிப்பினைகளைக் கற்றுத் தரும், சமூகத்தில் மாற்றங்களை விளைவிக்கும் மிகத் திறன் வாய்ந்த ஊடகம்.
அந்த ஊடகத்தில் சிறுவர்களுக்கான திரைப்படங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அவற்றை வெறுமனே பொழுதுபோக்குச் சித்திரங்களென ஒதுக்கி விட முடியாது. உலகத்தில் ஜனித்து, ஒரு தசாப்தம் மாத்திரமே கழிந்த நிலையில் சிறுவர்கள் தினந்தோறும் எதிர்கொள்ளும் போராட்டங்களைச் சிறுவர்களின் தோளில் நின்று, அவர்களது பார்வையினூடு பார்த்தால் மாத்திரமே புரிந்து கொள்ள முடியும். அவ் வாழ்வியல் போராட்டங்களைப் பதிவாக்கி சர்வதேசம் முழுவதும் கொண்டு சேர்ப்பது மாத்திரமன்றி, அப் படைப்புகளின் மூலமாக சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதும் சாதாரணமானதல்ல. அவ்வாறான திரைப்படங்களையும், அதன் இயக்குநர்களையும் எப்போதுமே நாம் கொண்டாட வேண்டும்.