உரிமைகளைப் பயன்படுத்தாத மக்கள் பிரதிநிதிகள்

0

நாகேஸ்வரி அண்ணாமலை

இந்தியாவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ கட்சியைப் பற்றியோ கட்சித் தலைவரைப் பற்றியோ விமர்சிக்க எந்தவித சுதந்திரமும் இல்லை.  கட்சித் தலைவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதையே செயலிலும் காட்டவேண்டும்.  தமிழ்நாட்டில் ஜெயலலிதா இருந்தவரை அவரை எதிர்த்துப் பேசவோ முதுகை வளைத்து அல்லது அவர் காலில் விழுந்து வணங்காமல் இருக்கவோ யாருக்கும் தைரியம் இல்லை.  யாராவது அப்படி ஒரு குறிப்புக் காட்டினால்கூட அவர் பதவி பறிக்கப்படும்; மேலும் கட்சியை விட்டே விலக்கப்படுவார்.  அம்மாதான் அதிமுக, அதிமுக.தான் அம்மா என்று கட்சியை வழிநடத்திக்கொண்டு போனார் அவர்.

மற்ற மாநிலங்களில் இவ்வளவு மோசம் இல்லையென்றாலும் அங்குள்ள மாநில அரசியல் கட்சிகளிலும் நிலைமை இதுதான்.  ஏன் நாட்டை ஆளும் பிஜேபி.யிலும் இதே நிலைமைதான்.  மோதியை எதிர்த்துப் பேச யாருக்குத் தைரியம் இருக்கிறது?  அவரைப் புகழ்வதற்கு வேண்டுமானால் எந்த வரையரையும் இல்லை.  வானளாவப் புகழ்பவர்களுக்குச் சலுகைகள் வேண்டுமானால் கிடைக்கலாம்.  ஊழலிலே ஊறிப்போன எடியூரப்பாவின் மீதுள்ள வழக்குகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.  இதற்கெல்லாம் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.  ஆனால் ஏதாவது சொல்ல முடியுமா?

இதுவரை எனக்குத் தெரியாத இன்னொரு செய்தியை நேற்றுப் பத்திரிக்கையில் படித்தேன்.  மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இத்தகைய கட்சித் தலைவர்களின் இலக்கணத்திற்கு மாறுபட்டவர் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.  அவர் பற்றிய செய்தி ஒன்று என்னை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியது.  அவர் நடந்து வரும்போது அவருடைய கட்சிக்காரர்கள் பலர் அவருடைய காலைத் தொட்டு  வணங்கினார்களாம்.  ஒருவர் மட்டும் இருக்கையை விட்டு எழுந்திக்கவில்லையாம்  அவருக்கு அதற்குக் கைமேல் பலன் கிடைத்திருக்கிறது.  வட இந்தியாவில் பெரியவர்களின் காலில் சிறியவர்கள் விழுந்து வணங்குவது அவர்களுடைய பழக்கம்.  ஆனால் கட்சித் தலைவரின் காலில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் விழுவது அந்தப் பழக்கங்களில் ஒன்றா என்று தெரியவில்லை.

அமெரிக்காவில் முக்கியமான இரண்டு கட்சிகளிலுமே கட்சித் தலைவர் என்று ஒருவர் இருந்தாலும் அவருக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை.  சொல்லப் போனால் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களே பல விஷயங்களில் பல கருத்துக்களை உடையவர்களாக இருப்பார்கள்.  ஒவ்வொருவரும் சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர்கள்.  சந்தர்ப்பம் வரும்போது தங்கள் கருத்துக்களைக் கூறுவதற்கோ அதற்கேற்ப நடந்துகொள்வதற்கோ தயங்க மாட்டார்கள். அதுதான் அமெரிக்க ஜனநாயகத்தின் மிகச் சிறந்த அம்சம்.

இப்போது ட்ரம்ப்,  ஒபாமா கொண்டுவந்த மருத்துவ வசதி வழங்கும் திட்டத்தை எப்படியாவது தகர்த்துப் புதுச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று துடிக்கிறார்.  ஒபாமா அந்தச் சட்டத்தைக் கொண்டுவந்த நாளிலிருந்தே அதைக் குடியசுக் கட்சியினர் எதிர்த்து வந்தனர்.  2012-இல் ஒபாமாவோடு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ராம்னி தான் ஜெயித்தால் பதவிக்கு வந்த முதல் நாளே அதைத் தகர்த்துவிடுவதாகச் சபதம் செய்தார்.  அவர் ஜெயிக்கவில்லையாதலால் அப்போதைக்கு அந்தக் கோஷம் நின்றுபோயிருந்தது.  இப்போது பதவிக்கு வந்திருக்கும் ட்ரம்ப்பிற்கு ஒபாமா கொண்டுவந்த எல்லாச் சட்டங்களையும் திட்டங்களையும் மாற்றி அமைக்க வேண்டும் என்ற தீராத வெறி.  அதனால் ஒபாமாவின் முக்கிய வெற்றிச் சின்னமான இந்த சட்டத்தையா விட்டுவைப்பார்?  ஒழித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார்.

ஆனால் அவர் நினைத்த மாதிரி குடியரசுக் கட்சிக்காரர்களே அதற்கு ஆதரவு அளிக்கவில்லை.  குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் 52 பேர் இருக்கிறார்கள்.  இதில் 50 பேர் ட்ரம்ப்பின் மசோதாவுக்கு ஓட்டுப் போட்டால்கூட துணை ஜனாதிபதியும் செனட் தலைவருமான பென்ஸ் தன் ஆதரவு ஓட்டைப் போட்டு அந்த எண்ணிக்கையை 51 ஆக்கிவிடலாம்.  அந்த மசோதா சட்டமாகிவிடும்.    இப்போது குடியரசுத் தலைவர்களில் மூன்று பேர் அதைத் தீவிரமாக எதிர்க்கிறார்கள்.  இன்னும் மூன்று பேர் அநேகமாக ஓட்டுப் போட மாட்டார்கள்.  ட்ரம்ப்பும் தன்னால் முடிந்த அளவு அவர்களை வேண்டிக்கொண்டார், பயமுறுத்தினார்.  ஆனால் தீவிரமாக எதிர்க்கும் மூன்று பேரும் அசைந்து கொடுக்கவில்லை.  இவர்கள் மூவரில் ஒருவர் புதுச் சட்டம் அமலுக்கு வந்தால் ஏழைகள், குழந்தைகள், முதியோர் ஆகியோர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி கிடைக்காது என்பதால் எதிர்ப்பதாகக் கூறுகிறார்.  இன்னொருவர் ஒபாமாவின் சட்டத்திலிருந்து இன்னும் சில அம்சங்களைக் களைய வேண்டும் என்கிறார்.  இன்னொருவர் அதிலுள்ள அதிகமாக இருக்கும் பிரீமியத்தைக் குறைக்க வேண்டும் என்கிறார்.  இவர்கள் எல்லோரும் பல பக்கங்கள் கொண்ட ஒபாமா கொண்டுவந்த சட்டத்தை முழுவதுமாகப் படித்துத் தெரிந்துகொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள்.  எல்லா செனட்டர்களுமே இப்படித்தான்.  மக்கள் தங்களை எதற்காகத் தேர்ந்தெடுத்தார்களோ அந்தக் கடமையை நன்றாக நிறைவேற்றுகிறார்கள்.

நம் எம்.எல்.ஏ.க்களுக்குப் புதிதாகக் கொண்டுவரப்படும் சட்டத்தைப் பற்றியோ திட்டங்களைப் பற்றியோ எவ்வளவு தெரியும் என்று தெரியவில்லை. கட்சித் தலைவர் சொன்ன இடத்தில் கையெழுத்தைப் போட்டுவிடுவார்கள்.  எம்.எல்.ஏ. பதவி கிடைத்துவிட்டதா, இனி பணம் பண்ணுவது எளிதான காரியம் என்று மட்டும்தான் நினைக்கிறார்கள்.

அமெரிக்காவில் மாநிலங்களும் அப்படித்தான்.  மாநிலங்களுக்கென்று தனி உரிமைகள் உண்டு.  ஜனாதிபதி சொல்வதையெல்லாம் கேட்க வேண்டுமென்பதில்லை.  மேலே சொன்னதுபோல் ஒபாமா செய்த எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று நினைக்கும் ட்ரம்ப் சுற்றுச்சூழலைக் காப்பாற்றக் கம்பெனிகள் மீது ஒபாமா கொண்டுவந்த  எல்லாக் கட்டுப்பாடுகளையும் எடுத்துவிட்டார்.  ஆனால் கலிஃபோர்னியா மாநிலம் ஒபாமா கொண்டுவந்த எல்லாக் கட்டுப்பாடுகளையும் அப்படியே வைத்துக்கொள்ள முடிவுசெய்துள்ளது.

‘நீட்’ தேர்வு வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்கிறதா?  உடனே தமிழகமும் அதை நிறைவேற்றும் என்று தமிழக அரசு முடிவுசெய்கிறது.  அதை எதிர்த்துப் போராடுபவர்களைக் கைதுசெய்யுங்கள் என்றால் மத்திய அரசோடு ஒத்துப்போக தமிழக அரசு தயாராக இருக்கிறது.

இவைதான் இந்திய ஜனநாயகத்திற்கும் அமெரிக்க ஜனநாயகத்திற்கும் உள்ள  வித்தியாசம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *