நவராத்திரி 11
இசைக்கவி ரமணன்
வெற்றி வெற்றி வெற்றி என்று கூவு! இந்த’
விண்ணும் போத வில்லையென்று தாவு!
பற்றுகளைத் தந்துவிடு காவு – அங்கு
பராசக்தி வந்துநிற்பாள் பாரு!
முற்றும்யாவும் தீர்ந்துவிட்ட போது – நெஞ்சில்
முத்துத்தமிழ்க் கவிதையாய் முளைப்பாள்! அந்த
ஒற்றைமினுக்கிக் காலில்நெஞ்சைப் போடு! வந்த
ஊக்கத்திலே புல்நுனியில் ஆடு!
என்மனத்தைச் சந்தமய மாக்கி, அதில்
ஏகாந்தத் தேன்குளத்தைத் தேக்கி, கொல்லும்
புன்மையின் நினைவுகூடப் போக்கி, நிதமும்
புதிய புதிய நிலைகளிலே ஊக்கி,
மின்னல்களால் என்னுயிரைத் தாக்கி, ஒரு
மென்னகையால் மீண்டுமதைத் தூக்கி, இவள்
என்னவென்ன செய்திடுவாள் கண்ணே!
என்றுமிவட் கேதமிழின் பண்ணே!
கருவிலருள் தந்ததுவோ கருணை, சந்தைக்
கடையில் அலைய வைத்ததுவோ கொடுமை
குருவைக் கண்ணில் காட்டியதோ அருமை, அவர்
கூடத் தெருவில் நடந்ததுதான் பெருமை, இன்று
மருமமெல்லாம் தீர்ந்து வந்த வெறுமை, இதில்
மாற்றிலாமல் தேவையொன்று பொறுமை
அருகிலென்றும் நிற்பதுன்றன் கடமை, எதையும்
அதிரடியாய்க் கேட்பதென்றன் உரிமை!
’இக்கணமே நாட்டின்நிலை மாற்று! எம்மை
இக்கலியின் கொடுமைதாண்டி ஏற்று
மக்களெல்லாம் தக்கவர்க ளாகி, நல்ல
மாண்புடையோர் கையில் ஆட்சி மாற்று
வக்கரித்துக் கொள்ளையடித் தோரை, நினைந்து
வாடவாட நரகத்திலே பூட்டு!’ என்று
சக்திபரா சக்தியென்று சாற்று! அந்த
சாம்பவியின் சாகசத்தைப் போற்று!
பாரதத்தின் தேவியில்லை சக்தி! இந்த
பாரதமே சக்தி! பராசக்தி!
பாரதமே தேவியென்று கொண்டு, இன்னும்
பலரும் நன்கு புரிகின்றார் தொண்டு, அந்த
மாரதர்கள் முக்திபெறுவ துறுதி, இதில்
மறைந்திருக்கும் நுண்மையினைக் கருதி, நமது
பாரதமே பராசக்தி என்று, ஒரு
பரவசத்தை அவளுக்கு நாம் தருவோம்!