வாணிக்கு வணக்கம்
உன்
வீணையே என் நெஞ்சமே, மின்
விரல்கள் பலவிதம் கொஞ்சுமே!
உன்
ஆணையே ஸ்வர மாகுமே, அவை
அண்டம் தாண்டியும் விஞ்சுமே!
முகில்
ஏணையில் வெண் ணிலவுபோல், உயிர்
எங்கும் களியே மிஞ்சுமே!
என்
ராணியே! உயிர் வாணியே! நீ
ரகசி யங்களின் கேணியே!
பத்து விரல்களின் பதை பதைப்பினைப்
பார்த்தவன் கதி என்னவோ!
முத்துத் தமிழினில் மூண்ட கவிஞன்முன்
முடிந்ததே விதி என்கவோ!
சத்த மடங்கிய சாந்தி வாசலில்
சன்ன மாயொலி மேவுதே!
எத்த னைவிதம் செப்பிச் சோர்கிறேன்!
என்றன் அனுபவம் மீறுதே!
செந்த மிழ்க்கவி என்ப தைவிட
வேறு பதவிகள் இல்லையே!
சந்த சங்கீத சரச நேரமே
பரவ சங்களின் எல்லையே!
சொந்த பந்தங்கள் சோழி விசிறிடும்
சூழ்ச்சிகள் மிகத் தொல்லையே
உந்தன் சொந்தமே உணர்வின் பந்தமே
உயிரைத் தந்தேனென் வாணியே!
நோக்க மற்றவோர் நோக்கில் மூண்டுமின்
புன்ன கைசெயும் சரஸ்வதீ!
வாக்கி யங்களை வாச கங்களாய்
மாற்றி யருளுமா தங்கிநீ!
ஊக்கி உந்திடும் மெளனம்நீ! என்றன்
உள்ளின் உள்ளிலே முரசம்நீ!
தேக்க மின்றியே தெளும்ப லின்றியே
நீக்க மற்றதோர் தெளிவுநீ!
கானம் கவிதையாய் கவிதை கானமாய்
கண்ணி மைப்பினில் அருளுவாய்!
மோன மடுவிலொரு மொக்க விழ்த்ததன்
மோடி யில்வந்து மூளுவாய்!
ஆன வரையில்நான் அலசிப் பார்க்கிறேன்
அன்னை உன்னைப்போல் இல்லையே!
ஏனம்நான்! அமிழ்த பானம்நீ! என்றும்
ஏந்தி மகிழ்ந்திடும் பிள்ளையே!
29.09.2017 / வெள்ளி / காலை 7.14
கானம் கவிதையாய் கவிதை கானமாய்
வாக்கி யங்கள் வாச கங்களாய்
செந்த மிழ்க்கவியே!