கண்ணே! தமிழ் வாணீ!
அமிழ்தத்வனி மதுரத்வனி அமரத்வனி அருள்க
அழகுத் தமிழ் நதியில்முழு நிலவாய் நீ எழுக
தமிழ்போ லெதும் இலையென்பதைத் தரையெங்கணும் மொழிக! ஒரு
தமிழ்ச் சொல்லினில் தட மேவிடும் தடையாவையும் கழிக!
இதயத்தினில் நீயே சதம் இன்பத் தமிழ் வாணி
இருவேளையும் இடையின்றி நீ எனையாள்கிற ராணி
கதையெத்தனை நிதம்மாறிடும் ககனத் துலைநடுவே
கனலெற்றிடும் புனலாயெழும் கவிதையெனும் கேணி
வேதம் மிகத் தேடும் பெரு விந்தை மிகும் தாய் நீ
வீதித் திரு மூலைதனில் விளையாடிடும் சேய்நீ
பேதம்செயும் நீதர்தமைப் பின்னும் கொடும் பேய்நீ
பேதைக்கொரு வாழ்வைத்தரச் சாதம்பிசைந் தாய்நீ
உச்சந்தலை ஊசித்துளை தொட்டுக் கன லாடும், அதை
உள்ளத் தினி லோடும் பெரு வெள்ளத் துளி சாடும்
மெச்சத் தகு பண்ணை ஒரு மின்னற் சொல் சூடும்
மேவும் நிலை தானே ஒரு மரணத்தினில் ஜனனம்!
அன்பே நீ வாழ்க! உன் அழகுப் பதம் வாழ்க!
அருளே! என் அமிழ்தே! என் அம்மா! நீ வாழ்க!
இன்பத் தினுக் கப்பா லிசைக் கவியா யெனைவைத்தாய்
இதைமீ றிடும் நிலை இல்லயென் றுயிரைப் புளகித்தாய்
கண்ணே! தமிழ் வாணீ! உன் காலே கதி கொண்டேன்
கவிதைக் கனல் தனில் மூழ்கிநான் கர்மங்களை விண்டேன்
மண்ணை விண் ணாக்கும் பெரும் மாயம் தமிழ் செய்யும்,
கலை மகளே! பர சுகமே! எக் காலமும் நான் உனதே!
29.09.2017 / வெள்ளி / காலை 9.04
(படம் : ஸ்ரீ ஞானசரஸ்வதி ஆலயம், குன்றக்குடி)