இந்த வார வல்லமையாளர்!
இந்த வார வல்லமையாளர்!
ஏப்ரல் 7 , 2014
வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..
**************************************************************************************
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு எம்.ரிஷான் ஷெரீப் அவர்கள்
**************************************************************************************
எம்.ரிஷான் ஷெரீப் இணையத் தமிழ் வாசகர்களை தொடர்ந்து தனது கவிதைகள் மூலம் மகிழ்வித்து வருபவர்.
இலங்கையின் மாவனல்லையைச் சேர்ந்த எம்.ரிஷான் ஷெரீப் அவர்கள் கவிஞர் என்ற வகையில் தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், ‘வீழ்தலின் நிழல்’ என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டிருந்தாலும், அவரைக் கவிஞர் என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் நம்மால் அடக்க இயலாது. இத்தமிழ் எழுத்தாளர் ஒரு கவிஞர் மட்டுமின்றி ஒரு சிறந்த ஊடகவியலாளரும் ஆவார்.
எம்.ரிஷான் ஷெரீப் தனது படைப்பாற்றலை கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனக் கட்டுரை, மொழிபெயர்ப்பு, புகைப்படம், ஓவியம், எனப் பல துறைகளின் வழியாகவும் வெளிப்படுத்தி வருபவர். இதுவரை இவரது படைப்புகள் இலங்கையிலிருந்து வெளிவரும் இதழ்கள், தமிழகத்தின் பிரபலமான இதழ்கள், மற்றும் மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளின் பத்திரிக்கைகள், இணைய இதழ்கள் எனப் பலவற்றிலும் வெளிவந்துள்ளன. காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இவரது மொழிபெயர்ப்பு நாவலான ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருதும் கிடைத்துள்ளது.
இவரது பலதுறை பங்களிப்புகளின் அடிப்படையாக உள்ள ஓர் இழை சமுதாய அக்கறை என்பதாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் வல்லமையில் நூலறிமுகக் கட்டுரைக்காக இவர் தேர்ந்தெடுத்த நூல் அன்றைய இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தாய்லாந்திருந்து பர்மா வரைக்குமான ரயில்பாதை அமைப்பதற்காக பலியிடப்பட்ட மக்களைப்பற்றிய ‘சயாம் – மரண ரயில் பாதை’யைப் பற்றி இருந்தது என்றால், இவர் எழுதும் செய்தி விமர்சனக் கட்டுரை பள்ளியில் அவமானப்படுத்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்யும் முடிவை எடுத்ததற்கு பள்ளி நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில் அமைந்தது. இவையாவும் வல்லமை வாசகர்களுடன் ரிஷான் ஷெரீப் முன்னர் பகிர்ந்து கொண்டவையே.
ஆனால் இவ்வாரம் ரிஷான் ஷெரீப் மீண்டும் அவரது வழக்கமான கவிஞர் என்ற கோணத்தில் தன்னை இருத்திக் கொண்டு இரு சிறப்புமிகு கவிதையை வல்லமை வாசகர்களுக்கு வழங்கியுள்ளார். “பனிபடர்ந்த இரவின் காலம் எனது கைவிரல்களை ஒற்றியொற்றி உன் நேசத்தைச் சொல்லிற்று” என்று மனதிற்கு இதம் தரும் சூழலில் அறிமுகமாகி, உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட தோழமை ஒன்று தன்னை விட்டு விலகித் தொலைதூரம் சென்றுவிட்ட சோகத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘நுழைதல்’, ‘விலகல்’ என்ற இரு கவிதைகள் மூலம் உறவை இழந்த பின்னர் மனதில் தோன்றும் வெறுமை உணர்வை அருமையாக வடித்துக் கொடுத்துள்ளார். ஒரு சில வரிகள் கீழே….
நுழைதல்
https://www.vallamai.com/?p=43635
எல்லாம் கடந்துவிட்டன
நேற்றிருந்த மேகத்தைப் போல
இக் கணத்து நதி நீர் போல
உனது பயணங்கள் முடிவற்றன
எல்லையற்று நீளும் உனது பாதைகள் வலியன
ஏமாற்றங்களில் தடுக்கி விழுந்து
அனுபவங்கள் பல ஒளிந்திருந்த நெஞ்சுனது
பாளங்களாய்க் கனன்றெரிந்து
உன் வாழ்வின் கதைகள் பேசிற்று
உள்ளிருந்த எனக்கான உன் நேசம் சுகமாயும் வலியாயும் மிதந்தூறிட
தெப்பமென நனைந்தேன்
விலகல்
https://www.vallamai.com/?p=43769
பட்ட மரத்தின் அடிப்பாகத்தில்
புற்றெழுப்பும் கரையான்களைக்
கொத்த வரும் சாம்பல்குருவிகளை
பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்
வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்
நாம் கதைத்தபடியே நடந்து கடந்த
எனது கிராமத்தின் ஒற்றையடிப் பாதை
வழித்தடங்களிலெல்லாம் அக் கதைகள் சிந்தின
விடிகாலையில்
அக் கதைகளைப் பொறுக்கித் தின்ற சாம்பல்குருவிகள்
தொலைதூர தேசமேகிப் பின்னர் வரவேயில்லை
உன்னைப் போலவே
இவ்வாறு ஈழத்தமிழர் ஒருவர் பிரிவுத் துயரக் கவிதை வடிக்கும் பொழுது, அந்த உறவு பிரிந்து சென்றுவிட்ட காரணம் புலம் பெயரவேண்டிய கட்டாயச் சூழலோ என்றும் தோன்றுகிறது. இவர் வெளிப்படுத்தும் ஏக்கம் உண்மையில் எத்தனை மக்களின் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிட்டதோ என்ற கலக்கத்தையும் ஏற்படுத்தும் கவிதை வரிகள் இவை.
இது போன்ற உணர்வு மிகுந்த இவரது கவிதை வரிகளைப் படிக்கும் பொழுது, ரிஷான் ஷெரீப் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒரு சமுதாய அக்கறை கொண்ட துடிப்புமிக்க இளைஞர் ஒருவர், வருங்கால உலகம் பற்றி நினைக்கும் பொழுது நமக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிபவர் என்ற எண்ணமே. இவ்வாறு தனது எழுத்துப் பணியின் மூலம் இக்கால இளைஞர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாகத் திகழும் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
தொடர்ச்சியான படைப்பியக்கமும் புதிய தேடலும் நவீன இலக்கிய வாசிப்பும் கொண்ட ரிஷான், இந்த வார வல்லமையாளர் விருதினைப் பெறுவதில் மகிழ்ச்சி. அவரது திறனும் புகழும் மேன்மேலும் வளர, எனது நல்வாழ்த்துகள்.
மண்ணின் மனத்தோடு வரும் கவிதைக்கும் . வல்லமையாளர் விருதுக்கும் வாழ்த்துக்கள்.
இந்தவார வல்லமையாளர் விருது பெற்றுள்ள திரு.ரிஷான் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.