Tag: எம்.ரிஷான் ஷெரீப்

  • நுழைதல்

    எம்.ரிஷான் ஷெரீப்sadimages

    எந்த நட்சத்திரமும் உதிர்ந்துவிழா பனிபடர்ந்த இரவின் காலம்

    எனது கைவிரல்களை ஒற்றியொற்றி

    உன் நேசத்தைச் சொல்லிற்று

     

    பசியினைத் தூண்டும் சோள வாசம்

    காற்றெங்கிலும் பரவும்

    அத்திப்பூ மலையடிவாரக் கிராமங்களினூடான பயணத்தை

    முடித்து வந்திருந்தாய்

    குடிநீர் தேடி அடுக்கடுக்காய்ப் பானைகள் சுமந்து நடக்கும்

    பெண்களின் சித்திரங்களை

    புழுதி பறக்கும் தெருவெங்கும் தாண்டி வந்திருந்தாய்

    வெயிலெரித்த சருமத்தின் துயரம்

    உன் விழிகளுக்குள் ஒளிந்திருக்கும்

    அந் நெய்தல் நிலத்தின் அழகை என்றும் மறந்திடச் செய்யாது

     

    நகரும் தீவின் ஓசை

    நீ நடந்த திசையெங்கிலும்

    பாடலாகப் பொழிந்திடக் கூடும்

    அனற்சூரியனை எதிர்க்கத் தொப்பிகள் விற்பவன்

    வாங்க மறுத்து வந்த உன்னை நெடுநாளைக்கு நினைத்திருப்பான்

     

    உனைத் தீண்டி நகர்ந்திருந்ததொரு விஷத் தேள்

    உச்சியிலிருந்து சருக்கச் செய்தது அதன் நச்சு

    எல்லாம் கடந்துவிட்டன

    நேற்றிருந்த மேகத்தைப் போல

    இக் கணத்து நதி நீர் போல

     

    உனது பயணங்கள் முடிவற்றன

    எல்லையற்று நீளும் உனது பாதைகள் வலியன

    ஏமாற்றங்களில் தடுக்கி விழுந்து

    அனுபவங்கள் பல ஒளிந்திருந்த நெஞ்சுனது

    பாளங்களாய்க் கனன்றெரிந்து

    உன் வாழ்வின் கதைகள் பேசிற்று

    உள்ளிருந்த எனக்கான உன் நேசம் சுகமாயும் வலியாயும் மிதந்தூறிட

    தெப்பமென நனைந்தேன்

     

    நரகப் பெருநெருப்புக்கஞ்சி

    எவருக்கெனவோ மூடிக் காத்திருந்த பொக்கிஷ நந்தவனமொன்று

    நீ வரத் திறந்தது

    அன்று

    உனக்கென உதிர்ந்ததொரு மந்திரப் பூ

    உனக்கெனத் தெளிந்ததொரு வாசனைப் பொய்கை

    உனக்கென மட்டும் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது ஒரு தளிர்

     

    எல்லாவற்றையும் குறித்துத் தெரிந்திருக்கிறாய்

    ஆனாலும் சகா

    நீ உணர்வதற்கும் நம்புவதற்கும்

    அப்பாலுள்ளது எனதுலகம்

     

    http://visualnovelaer.fuwanovel.org/2013/10/where-are-all-the-blog-posts/

    Share
  • நரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள விபூஷிகா எனும் சகோதரி

    கஸுன் மகேந்திர ஹீனடிகல63341_10203341156391284_866522752_n1912068_479616398833526_454922784_n
    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

     

    ஒரு தகவல் : காணாமல் போன தனது சகோதரனைத் தேடியழுத 13 வயதுச் சிறுமி விபூஷிகா, கடந்த 14.03.2014 அன்று அவளது வீட்டுக்கு வந்த இராணுவத்தினரால் பட்டப்பகலில் கிராமத்தவர் முன்னிலையில் கடத்திக் கொண்டு செல்லப்பட்டாள்.

    கவிதைக்கான குறிப்பு : எப்பொழுதும் தனது சகோதரனைக் கேட்டு அழுது ஓலமிட்ட அத் தமிழ் சகோதரி இப்பொழுது கடத்தப்பட்டிருக்கிறாள். காவல்துறைத் தலைமையகம் அறிவித்திருப்பதைப் போல அதனை மனிதாபிமானக் கடத்தலா எனத் தீர்மானிப்பது உங்கள் கையிலிருக்கிறது.

    விமானத்தைக் காணவில்லை
    உலக வரைபடமே இங்கே பார்
    யோசனைகளோடு விம்மியழுது
    உதித்த சூரிய மகள் எங்கேயெனச் சொல்

    அண்ணன்மார் மூவருக்கு இளையவள்
    அன்னையின் விழிகளோ அன்பின் உறைவிடம்
    அதுதான் ஐயாக்களே தமிழனின் பாசம்
    அதுவன்றி வாழ்க்கையே போராட்டம் தங்கையே

    கொடிய கனவொன்றைப் போல
    மூத்தவர்கள் இருவர் மரித்திட
    முப்பொழுதும் பார்த்திருந்த
    இளைய அண்ணனும் கடத்தப்பட
    பனையழகு எல்லாம் அழிந்த பூமியில்
    ஸ்வரம் இழந்த பாடலானாள்
    இரட்சகனைத் தேடியதால் – நரகத்துக்கு
    கொண்டு செல்லப்பட்டுள்ள சகோதரியொருத்தி

    கற்றறிந்த சிலுவைக் குறிகளுக்கு
    சத்தியத்தில் இடமில்லை
    குரலெழுப்பிப் பூத்த மலரொன்று
    சிதைகிறது இரகசியமாக

    அவளுமொரு சிறுமி
    இருந்திருக்கக் கூடும்  கனவுகள் ஆயிரம்
    இன்னும் கண்டிருக்கக் கூடும்
    எப்பொழுதாவது ஒரு புன்னகைத் துளியை

    உலகம் ஒரு சிறைக்கூடம்
    நலிந்தவர்கள் மட்டும் சிக்கிக் கொள்ளும் சதி பீடம்
    இன்றும் வலி தந்திருக்கக் கூடும்
    ஒரு கொடியவனின் பார்வை

    வேண்டுமென்றே கடத்தப்பட்டாள் கறுப்புத் திலகமிட்டவள்
    உருவழித்து தீப்பற்றியெரிகிறது எனது இருதயம்
    உருகவில்லையா செவிமடுக்கையில் உம் மனங்கள்

    நரக நதியினின்றும் மீண்டிட
    நீந்திடு விபூஷிகா!

    Share
  • புன்னகையை விற்பவளின் கதை

    திலினி தயானந்த

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    பளபளக்கும் விழிகள், பூக்கும் இதழ்கள் என்பன மகிழ்ச்சி நிரம்பி வழியும் ஒரு வாழ்க்கையின் அறிகுறி. உண்மைதான், நான் இன்று எல்லோர் முன்னிலையிலும் புன்னகைக்கிறேன். இவ்வுலகில் வாழும் ஏனைய எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் எதுவுமே எனக்கு இல்லாதது போல பூரிப்புடன் உரையாடுகிறேன். உண்மையில் இன்னுமொருவர் முன்னிலையில் எனது விழிகளில் கண்ணீரைத் தேக்கி வைக்க எனக்கு உரிமையில்லை. உங்களைப் போலவே நானும் துயருருவதை சொல்வதற்கும் இயலவில்லை. புன்னகையால் துயரக் கண்ணீரை மறைத்தபடி, ஒப்பனைகளால் பிரச்சினைகளை மூடி, இந் நிறுவனத்துக்கு வரும் உங்களை வரவேற்கிறேன்.

    இரு விழிகளிலும் மையிட்டு விழிநீரை மறைத்த போதிலும், இதழ்களுக்குச் சாயமிட்டு மெருகூட்டிய போதிலும், ஆத்மாவை இரு கைகளிலேந்தி புன்னகையால் உங்களை வரவேற்ற போதிலும், இப் புன்னகையால் மூடப்பட்டிருக்கும் எனது வாழ்க்கையானது முட்கள் நிறைந்ததென எவ்வாறு உரைப்பேன்? தேவதையொருத்தியாக நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள் எனினும் நான் ஒரு பொம்மையல்ல. இந் நிறுவனத்துக்குள் நுழையும் கணம்தொட்டு உங்களுக்கு காணிக்கையாக்கும் புன்னகைகளுக்கு ஊதியம் கிடைக்கிறதெனக்கு. வாய் நிறைய ‘வணக்கம்’ சொல்லி உங்களை வரவேற்று பணப்பையின் சுமைக்கேற்ப கொடுக்கல் வாங்கல்களை நிகழ்த்தும் நீங்களும் நானும் அறியாமல் எங்களை விற்கும் நடைமுறையிது. தலைமை அதிகாரியின் மனநிலையை சாந்தப்படுத்தவும் எனது புன்னகைதான் தேவைப்படுகிறது.

    அதனை விருப்பத்துடன்தான் செய்கிறேனா என்பதை யாரும் அறிய மாட்டார்கள். அழகாகப் புன்னகைத்தபடியே இருந்த போதிலும் அப் புன்னகைக்குள் கண்ணீரும் வெளியே குதித்திடவென அலைபாய்கிறது. இச் சமூகத்தில் மிகவும் கௌரவமாக மதிக்கப்படும் ஒரு தொழிலை நான் செய்கிறேன். எனினும் சிலர் இதனை மோசமான கோணத்தில் பார்க்கிறார்கள். நிறுவனத்துக்குள் பிரவேசிக்கும் தலைவாசலிலிருந்து புன்னகையை விற்பது உண்மைதான். உங்களை எமது நிறுவனம் பக்கம் ஈர்க்க நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதுதான் எனது தொழில். இலகுவானதும் நிம்மதி தரக்கூடியதுமான தொழிலென நீங்கள் எண்ணிய போதிலும், இது உண்மையில் இலகுவானதா என்ன? புன்னகைக்கக் காசு செலவழியாது என ஒரு பேச்சுக்குச் சொல்வார்கள். எனினும் நான் புன்னகைக்க எனக்கு பணம் கொடுக்கப்படுகிறது. நான் புன்னகைத்தால் மாத்திரமே எனது நிலைப்பாடு உறுதியாகிறது. வாழ்க்கையை வாழ்ந்து செல்லவே இன்று நான் புன்னகைக்கிறேன்.

    சில மாதர்கள், தங்களது காரியங்களை ஆற்றிக் கொள்ளவென கனவான்களின் கைகளில் தொங்கிப் புன்னகைக்கிறார்கள். எனினும் எனக்குக் கவலையில்லை. நான் எனது தொழிலைச் செய்கிறேன். பொருளாதாரத்தை வளம் மிக்கதாக்கும் செயன்முறை இது. யார் எவ்விதத்தில் அதனை நோக்கிய போதும், மாதக் கடைசியில் கிடைக்கப் போகும் ஊதியத்தைப் பற்றியே நான் சிந்திக்கிறேன். அதற்காகத்தான் நான் புன்னகைக்கிறேன்.

    Share
  • சிறுமியின் தற்கொலைக்குக் காரணமான அதிபர் கைது

     எம். ரிஷான் ஷெரீப்

     

                ஃபேஸ்புக் இணையத்தளத்தில் தனக்கு டேக் செய்யப்பட்ட புகைப்படமொன்றைப் பார்த்து, அதிபர் ‘வேசி’ எனத் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதையையும், அவளது கடிதத்தின் தமிழ்மொழிபெயர்ப்பையும் ஏற்கெனவே உங்களுக்குத் தந்திருந்தேன். சிறுமி வெனுஷா தனது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிடுவதற்கு முன்பே, அந்த அதிபரான W.M சமன் இந்திரரத்னவின் நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடுகள் பல கொடுக்கப்பட்டிருந்த போதும், அவருக்கிருந்த அதிகாரத்தின் காரணத்தாலும், அரசியல் பலத்தாலும் அந்த முறைப்பாடுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

                கடந்த வருடம் மே மாதத்துக்கு முன்பிருந்தே இந்த அதிபருக்கெதிராகவும், அப் பாடசாலையில் இடம்பெறும் சில மோசமான நடவடிக்கைகள் குறித்தும் பல முறைப்பாடுகள் உயர் கல்வித் திணைக்களங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கப் பெற்றபோதிலும் கூட, எந்த விசாரணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதிபர், மாணவர்களை உடல் மற்றும் மன ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துகிறார் எனும் மனுவை பெற்றோர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த நிலையில், இயலாத பட்சத்தில் கடந்த 2013 மே மாதம் 17ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சம்பந்தப்பட்ட பாடசாலை அமைந்திருக்கும் வலயத்தின் கல்வித் திணைக்கள உயரதிகாரிக்கு  இது குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். உத்தரவிட்டு இரு மாதங்கள் கடந்த பின்னர் 2013 ஜூலை மாதம் 23 ஆம் திகதி, அதிபருக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார் அந்த உயரதிகாரி. அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

                ஆனால், சிறுமி வெனுஷாவின் மரணத்தின் பின்னர், அவளது தற்கொலைக் கடிதம் கிளப்பிய அலை, பூதாகரமாக எழுந்தது. தான் ஒரு தீக்குச்சியாகி ஏனைய மாணவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்ற வேண்டுமென்பதுதான் அவளது எதிர்பார்ப்பாக இருந்தது. அக் கடிதமும், அதன் மொழிபெயர்ப்பும் இணைய ஊடகங்களின் மூலமாக உலகம் முழுவதும் தெரியப்படுத்தப்பட்ட பின்னர் சமூக வலைத்தளங்களில் ஒன்றுசேர்ந்த நல்ல மனங்களின் காரணமாக அதிபருக்கிருந்த அரசியல்பலத்தினால் மறைக்கப்படவிருந்த உண்மைக்கும், மூடி மறைக்க முயற்சி செய்யப்பட்ட அநீதிக்கும் ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

                மேலதிக விசாரணைகளுக்காக நேற்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் பிரிவு விஷேட காவல்துறையினரால் அதிபர் சமன் இந்திரரத்ன, கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது, சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டு பதிவாகியிருக்கிறது. 1995 இல 22 குற்றத் தண்டனைச் சட்டத்தின் 308 ஆவது பிரிவின் கீழ், சிறுவர் துஷ்பிரயோகம் எனப்படுவது மனரீதியாகத் துன்புறுத்தலும் சேர்ந்ததுதான் என்பதாலும், 2006 இல 16 குற்றத் தண்டனைச் சட்டத்தின் கீழ் மன ரீதியாகத் துன்புறுத்துவது என்பதுவும் குற்றமாகக் கருதப்படுவதாலும் அப் பிரிவுகளின் கீழ் அதிபருக்கு தண்டனை வழங்கப்படச் சாத்தியமிருக்கிறது. அவர் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பத்து வருடத்துக்குக் குறையாத சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க நேர்வார்.

                அதிபர் சிறுமியின் நடத்தை குறித்து தவறாகக் கூறியதால் மன உளைச்சலுக்குள்ளான சிறுமியின் தந்தை, மரண விசாரணைக்கான உடல் பரிசோதனையின் போது, சிறுமியின் கன்னித்தன்மை சான்றிதழையும் வைத்தியர் குழுவிடம் கோரியிருந்தார். எந்தப் பெற்றோருக்கும் நேரக் கூடாத விடயம் இது. எனினும், சிறுமி கன்னித்தன்மையுடனே மரணித்திருக்கிறாள் எனச் சான்றிதழ் கிடைக்கப் பெற்றதையடுத்து அதிபர் சிறுமி மீது குறிப்பிட்ட ‘வேசி – விபச்சாரி’ எனும் கூற்று பொய்யாகியிருக்கிறது. அத்தோடு சிறுமியின் தற்கொலைக்கு அவளது பெற்றோரே காரணமென பகிரங்கமாக அரசியல் மேடைகளில் உரைத்து, அதிபரைக் காப்பாற்ற முனைந்த  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரது கருத்துக்கள், அநீதியை எதிர்த்து எழுந்த மக்களது ஆர்ப்பாட்டங்களின் முன்னிலையில் அடிபட்டுப் போயிருக்கிறது.

                எதற்கும் தற்கொலை தீர்வல்ல. ஏனைய மாணவர்களின் நல்வாழ்வுக்காக தற்கொலை செய்துகொண்ட சிறுமி வெனுஷாவின் நடவடிக்கையை யாரும் இங்கு முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது. எனினும், மக்கள் ஒன்றிணைந்தால், அநீதிகளுக்கெதிராக எதையும் சாதிக்கலாம் என்பதையே இது நிரூபித்திருக்கிறது.

                இங்கு செய்தியாகப் பதிவிட்டும், எனது வலைத்தளம் மற்றும் ஃபேஸ்புக் முகப்பிலிருந்து பகிர்ந்தும் இந்த அநீதிக்கெதிராக ஒன்றிணைந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    – எம்.ரிஷான் ஷெரீப்,

    இலங்கை

    19.02.2014

    Share
  • தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை

    எம். ரிஷான் ஷெரீப்

                இலங்கையில் கடந்த வாரம் (05.02.2014) Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தியின் புகைப்படங்கள் இவை. Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா என்பதனை, உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள்.

     ilan

                10 ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த வெனுஷா இமந்தியின் Facebook கணக்கின் Wall இல், அவரது நண்பனாக இணைந்துகொண்ட ஒருவன், காதல் ஜோடியொன்றின் புகைப்படத்தை Tag செய்துவிடுகிறான். அதனை வெனுஷாவின் பாடசாலை ஆசிரியை ஒருவர் கண்டு, அதிபரிடம் போய் முறையிடுகிறார். அதிபர், 5000 மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தச் சிறுமியை மேடைக்கு அழைத்து ‘வேசி’ எனத் திட்டுகிறார். மறுதினம் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவரும்படி கட்டளையிடுகிறார்.

                தான் செய்யாத ஒரு தவறுக்காக அவப் பெயர் கேட்க நேர்ந்ததையிட்டு பெரும் மன உளைச்சலுக்குள்ளான சிறுமி, தனது தந்தைக்கு 3 பக்கங்களில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, தாயின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள்.

    கீழேயுள்ளதுதான் சிறுமி தற்கொலை செய்துகொள்ள முன்பு எழுதி வைத்த கடிதம் – மரண வாக்குமூலம்

    2014 -02-05

     ilan1

    அப்பாவுக்கு..

     

                இப்படி ஒரு முடிவெடுத்ததற்காக என்னை மன்னியுங்கள். நான் குற்றமெதுவும் செய்யாமல் எனது அப்பாவை, அதிபர் முன் நிற்க வைக்க என்னால் முடியாது. தவறு என்று நான் செய்ததென்றால் 7 ஆம் ஆண்டில் ஃபோட்டோ எடுத்ததுதான். நான் செய்த அந்தத் தவறை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன். ஃபோட்டோ ஒன்றை FB யில் இட்டவரையும், அந்த ஃபோட்டோவை எனக்கு டேக் செய்தவரையும் விட்டுவிட்டு ஏன் என்னை நோக்கியே விரலை நீட்டுகிறார்கள்? இன்று நான் என்னுடைய ஒன்றுமறியாத அப்பாவை பாடசாலைக்குக் கூட்டிச் சென்றிருந்தால் அதிபருடைய ஏச்சுப் பேச்சுக்களை எவ்வளவு கேட்டிருக்க வேண்டியிருந்திருக்கும்? என்னுடைய அப்பா அவ்வாறான ஏச்சுப் பேச்சுக்கு ஆளாகக் கூடாது. எவ்வளவு பிரச்சினைகளை அப்பா தலையில் வைத்திருக்கிறீர்கள் என இந்த வீட்டில் யாருக்குமே புரிவதில்லை. அதற்கிடையில் எங்கேயோ போகும் ஒன்றுக்காக எனது அப்பாவை அவமானப்படுத்த வேண்டிய தேவை எனக்கில்லை. இதற்கெல்லாம் காரணம் எமது அதிபர். அவர் எதுவுமே தெரியாமல் என்னை நோக்கி மாத்திரம் விரலை நீட்டுவது ஏன் என எனக்குத் தெரியவில்லை. 5000 பிள்ளைகள் முன்பு, கூட்டத்தில் வைத்து மேடைக்கு அழைத்துத் திட்டினார். ஒரு பையனோடு படம் பார்க்கப் போனாய் எனச் சத்தமிட்டார். நான் போகவில்லை என்பதை எனது தங்கையும், அக்காவும் அறிவார்கள். இவ்வளவு அநீதங்களெல்லாம் நடந்த போதும் கூட நான் மிகவும் பொறுமையாக இருந்தேன். இனிமேலும் என்னால் இயலாது.

     ilan2

                எனது வகுப்பாசிரியர் பண்டார, வகுப்பைப் பொறுப்பேற்கும் அன்று எனது எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு ஆசிரியருக்கு உதவினேன். அப்படியெல்லாம் செய்த என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். இந்தப் பாடசாலைக்காக பாடுபடுவதுதான் எனது மிகப் பெரும் தவறு. பாடசாலையில் ஏதேனும் போட்டிகள், விழாக்களின் போது நான் நடனமாடாமல் இருந்தால்தான் ஆச்சரியமாக இருக்கும். ஜயசுந்தர ஆசிரியை, ரஞ்சனி ஆசிரியை ஆகியோருக்கு இது தெரியும். எனது அப்பாவுக்கும், பண்டார ஆசிரியருக்கும் இனியும் கவலைகள் தர என்னால் முடியாது. நான் இன்று செய்யப் போகும் காரியத்தால் ஏனைய பிள்ளைகளுக்கு இம் மாதிரியான கீழ்த்தரமான வேலைகள் நடக்காமலிருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.

     

                சில ஆசிரியர்கள் பிரச்சினையொன்று வரும்போது எனது குடும்பத்தை இழுக்கிறார்கள். நான் இங்கு சொல்வது யார் குறித்து என்பது என் அப்பாவுக்குத் தெரியும். நான் இன்னும் உயிருடன் இருந்து, இந்தப் பாடசாலையில் ‘வேசி’ எனப் பேச்சுக் கேட்டுக் கேட்டு O/L பரீட்சையைக் கூட என்னால் ஒழுங்காக எழுத முடியாது. அப்பாவிப் பிள்ளைகள் சிறியதொரு தவறைச் செய்தால் அப் பிள்ளைகளை ‘வேசி’ எனக் கூப்பிடுவதை நிறுத்துங்கள். பிள்ளைகள் பற்றி முறைப்பாடுகள் வரும்போது யார் சரி, யார் தவறு என்பதைத் தேடிப் பாருங்கள். எல்லா அவப் பெயர்களையும் எனக்கும், என் தங்கைக்குமே கூறுகிறார்கள். எனது பாடசாலையில் 50%மானவர்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவையெல்லாம் அதிபருக்குத் தெரியாது. நாங்கள் சொல்வதும் இல்லை. அதனால்தான் எம்மையே குற்றம் சாட்டுகிறார்கள்.

     

     ilan3           நான் எனது அப்பாவை மிகவும் நேசிக்கிறேன். எவருடைய முன்பும் நின்று ‘எனது மகள் செய்த தவறுகளுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்’ என அவர் மன்றாடுவதை நான் விரும்பவில்லை. என்னை பாடசாலையிலிருந்து விலக்கிவிடும்படி அதிபர் கூறவிருக்கிறார். நாங்கள் நல்லதை மாத்திரமே செய்தபோதும், போட்டிகளிலெல்லாம் வென்றபோதும் எமக்கு நற்பெயரெதுவும் சூடவில்லை. ஆனால் தவறொன்று செய்தவிடத்து முழுப் பாடசாலைக்கும் கேட்கும் வண்ணம் சத்தமிடத்தான் அவருக்குத் தெரியும். பாடசாலைக்கே நான் ஒரு இழுக்கு என அவர் கூறுகிறார். இவ்வாறெல்லாம் ஏச்சுக் கேட்டுக் கேட்டு என்னால் பாடசாலைக்குப் போக முடியாது. கமகே ஆசிரியரும் கூட நான் நடத்தை கெட்ட பிள்ளை எனக் கூறினார். நான் அப்பொழுதெல்லாம் கூட எனது O/L பரீட்சைப் பெறுபேறுகளின் மூலம் எனது நல்ல நடத்தையை அவர்களுக்குக் காட்டத் தீர்மானித்துக் காத்திருந்தேன். எனினும் இப்பொழுது அதிகம் தாமதமாகி விட்டது. இனி செய்ய ஏதுமில்லை.

     

                பண்டார ஆசிரியர், நடன ஆசிரியைகள் இருவர், பிரபா ஆசிரியை ஆகியோர் மாத்திரமே இந்தப் பாடசாலையில் எனது திறமைகளைப் பற்றிக் கூறிப் பாராட்டியவர்கள். பிரபா ஆசிரியையிடம் சென்று எனது பிரச்சினைகளைக் கூறி ஆறுதல் தேடியபோது, நான் நன்றாக பரீட்சையில் சித்தியெய்த வேண்டுமென எண்ணியிருந்தேன். ஆனால் என் கனவுகள் எல்லாம் அழிந்து போயின. என்னால் இப்பொழுது O/L பரீட்சை தவிர்த்து அடுத்த ஜென்மத்தில் எந்த இடம் கிடைக்குமெனக் கூட எண்ணிப் பார்க்க இயலவில்லை.

     

                அப்பா, நீங்கள் என்னுடைய பேரில் இருக்கும் காணியை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளுங்கள். நானில்லாமல் போனால் உங்களைக் கவனித்துக் கொள்ள ஆளிருந்தால் அது ஆச்சரியம்தான். உங்களிடம் பணம் இருப்பதால்தான் உங்களுடன் இருப்பவர்களெல்லாம் கூட இருக்கிறார்கள். பணம் இல்லாமல் போன நாளில் உங்களுடன் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு நடக்க இடமளிக்கக் கூடாது. இறுதியான, இறுதியான இந்தக் கணத்திலும் கூட எனக்குத் தென்படுவதெல்லாம் எனது அப்பாவின் கண்களிரண்டும் மாத்திரமே. எனக்கு உங்களை விட்டுப் போவது மிகுந்த கவலையைத் தருகிறது. முடியுமென்றால் தங்கையையும் அந்தப் பாடசாலையிலிருந்து நீக்கி விடுங்கள். அந்த அதிபர் இருக்கும்வரை தங்கைக்கும் பாரபட்சம் காட்டுவார்.

     

                அம்மா, நான் உங்களையும் மிகவும் நேசிக்கிறேன். அம்மா என்னுடன் இன்று இன்னும் கதைக்காததற்குப் பரவாயில்லை. சந்தோஷமாக இருங்கள். என்னுடைய அக்காவைத்தான் இந்த இறுதி நேரத்திலும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. நீங்களும் இருக்கும் இடத்தில் சந்தோஷமாக இருங்கள். என்னுடைய அப்பாவை கவனித்துக் கொள்ளுங்கள். தங்கையே அவர் பாரிய நெருப்புக்கிடையே வெந்துகொண்டிருக்கிறார்.

     

                நானில்லாமல் போனால் உங்களுடைய பிரச்சினைகளை யாரிடம் கூறுவீர்கள் அப்பா? எழுத எழுத எனக்கு எனது இதயத்தில் கவலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடுத்த ஜென்மத்திலும் கூட ஆறுதல் கிடைக்காமல் போகும்.

     

                என்னைப் போல தவறிழைக்காத பிள்ளைகள் இன்னும் இருப்பார்கள். அவர்களையும் பாடசாலையிலிருந்து விலக்கி விடப் பார்ப்பார்கள். அவர்களுக்காகவே நான் இத் தீர்மானத்தை எடுத்தேன்.

     

                I love my family

     

                நான் எனது குடும்பத்தை நேசிக்கிறேன்.

     

                இங்கு என்னைப் பார்த்தவுடன், பண்டார ஆசிரியருக்கு முதலில் தெரிவியுங்கள்.

                தற்காலத்தில் வயதில் பெரியவர்கள் பலர் சமூக மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவோ, கற்றுக் கொள்ளவோ மறுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் Facebook உட்பட, சமூக வலைத்தளங்கள் எல்லாமே தீயவை, வழிகெடுப்பவை மாத்திரமே. எனவே அவற்றைப் பாவிப்பவர்களும் கூட மோசமானவர்கள் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது.

                உண்மையில் அவளது தற்கொலைக்கு யார் காரணம்? என்னைக் கேட்டால் ‘அதிபர்’ என்றுதான் சொல்வேன். இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் பல வருடங்கள் சேவையாற்றியவரும், இராணுவப் பயிற்சி பெற்றவருமான ஒரு பொறுப்புள்ள அதிபர் எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதைத்தான் செய்திருக்கிறார்.

                # உண்மையில் என்ன நடந்தது என சிறுமியிடம் விசாரிக்கவில்லை.

                # எந்தப் பெண்ணையும் குற்றம் சாட்டக் கூடாத ஒரு பட்டப் பெயரை பகிரங்கமாகக் கூறி, அவள் மீது முத்திரை குத்தியமை.

                # 5000 பேர் முன்னிலையில் அவமானப்படுத்தியமை.

                # பதின்ம வயது என்பது எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய வயது என்பது குறித்து கவனமெடுக்காமை.

                சிறுமியின் கடிதத்தில் அவள் குறிப்பிட்டிருக்கிறாள்.

                “எனக்கு நேர்ந்தது, இனி எனது பாடசாலையில் எந்த மாணவிக்கும் நிகழக் கூடாது”

                இனி நேராது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. எனினும் இப்பொழுது அந்த அதிபரை என்ன செய்யலாம்? அதிபரை அந்தப் பாடசாலையை விட்டு விலக்கி விட வேண்டும் என்பதுவும், சிறுமியின் மேற்படி கடிதத்தை அவளது மரண வாக்குமூலமாகக் கொண்டு, தற்கொலைக்குத் தூண்டியதற்காக அதிபரைக் கைது செய்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுமே பொதுமக்களின் தீர்ப்பாக இருக்கிறது. ஆனால் ஏற்கெனவே இலங்கையில் ஃபேஸ்புக் எனப்படும் சமூக வலைத்தளத்தைத் தடை செய்ய வேண்டுமெனக் கூறி வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களுக்கு இம் மரணம் ஒரு ஆதாயமாக அமைந்துவிட்டது. எனவே அரச தரப்பு அமைச்சர்கள் சிலரும், இலங்கைக் காவல்துறையும் அதிபரின் சார்பாக இருப்பதனால் அதிபர் இன்றுவரை விசாரணைகளுக்குக் கூட ஆளாகாமல் தனது பதவியில் தொடர்ந்தும் இயங்கி வருகிறார். அரசை எதிர்க்கப் பயந்து சிறுவர் அமைப்புக்களும், பெண்ணிய ஆதரவாளர்களும் கூட மௌனமாக இருப்பதனால் பொதுமக்கள் கொந்தளித்து அதிபருக்கு ஏதும் தீங்கிழைத்து விடக் கூடாதென்று, காவல்துறையினர் அதிபருக்கு தினமும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

                இந்தச் சம்பவம் இன்னும் சொற்ப நாட்களில் பொருட்களின் விலையேற்றத் தகவல்களினாலும், மாகாண சபைத் தேர்தல் செய்திகளாலும் மறக்கடிக்கப்பட்டு விடக் கூடும். ஆனால் பேரிழப்பென்பது, பாதிக்கப்பட்ட அப்பாவிப் பெற்றோருக்கும், சகோதரிகளுக்கும் மாத்திரமே.

    – எம்.ரிஷான் ஷெரீப்,

    இலங்கை

    Share
  • அம்மா

     

    எம். ரிஷான் ஷெரீப்

     

     

    (கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படும் அம்மாவுடன் கதைப்பதற்கு இடமளிக்கப்படாத குழந்தை, நீதிமன்ற வளாகத்தில் சத்தமிட்டு அழுதது – செய்தி)

     

    இழுத்துச் செல்லப்படுகிறாள் அம்மாhand-Cuff

    விலங்கிடப்பட்டிருக்கின்றன அவளது கைகள்

    இருண்டு பருத்த தொப்பை மனிதர்கள்

    அவளை அண்டவிடாமல் காவலிருக்கிறார்கள்

     

    அம்மா

    பகல் இரவுகளில் இனிய கதைகள் சொன்னவள்

    சோறு கஞ்சி சமைத்து

    என் நாவில் ஊட்டியவள்

     

    நிலவு உதித்திருக்கிறது

    இரவுத் தங்கத் தட்டின் மீது

    இருக்கக் கூடும் நீ ஊட்டும் பால்

    பசித்தாலும் கூட நான்

    கையேந்த மாட்டேன் அம்மா

     

    வந்துவிடு அம்மா என்னருகே

    என் பாற்பற்களால் கடித்துன்

    கை விலங்கை உடைக்கட்டுமா அம்மா

     

    – ஷஸிகா அமாலி முணசிங்க

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    Share
  • சயாம் மரண ரயில் – புத்தக மதிப்புரை

    எம்.ரிஷான் ஷெரீப்,

    நூல் மதிப்புரை

     rishaan

     நூல்  – சயாம் மரண ரயில் (நாவல்)

    ஆசிரியர் – சண்முகம்

    பக்கம்:  304  

    விலை: ரூ. 150/-

    வெளியீடு: தமிழோசை பதிப்பகம்

    ___________________________________________________________________________________________

    எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர்

                தனது வாழ்விடத்திலிருந்து தமிழ் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து செல்லாத இடங்களேயில்லை என்றாக்கி விட்டன காலமும், போர்களும். எல்லாவற்றுக்கும் காரணங்களைத் தேடுகிறது வரலாறு. அவை சொல்லும் பாடங்கள் விலைமதிப்பற்றவை. பலரும், பல இன்னல்களை அனுபவித்து, பல இழப்புக்களைச் சந்தித்து, அந்த அனுபவங்கள் மூலம் கற்றுத் தரும் பாடங்கள், காலம் காலமாக எழுதி வைக்கப்பட வேண்டியவை. அவையே காலப்பதிவுகளாகி விடுகின்றன. தமிழ் பேசும் மக்களின் ஆதி பரம்பரைகள் எதிர்கொண்ட துயரங்களும், இழப்புக்களும் தற்கால சந்ததியினருக்கு அநேகமாகத் தெரிய வருவதில்லை. அவை காலத்தின் நீட்சிக்குள் மறைக்கப்பட்டிருக்கின்றன. இக் காலத்தில் பல தசாப்தங்களை வாழ்ந்து அனுபவித்த முதியவர்களுக்கும் கூட தமது எதிர்கால சந்ததியினருக்காக தாம் அனுபவித்த அல்லது தமது மூதாதையர் அனுபவித்த வாழ்க்கை குறித்த உண்மைக் கதைகளை பேரப் பிள்ளைகளுக்குச் சொல்ல நேரமிருப்பதில்லை அல்லது செவிமடுக்க பிள்ளைகளுக்கு நேரமில்லை.

                இன்றைய காலத்தில் ‘சயாம் – மரண ரயில் பாதை’யைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தாய்லாந்திருந்து பர்மா வரைக்குமான ரயில்பாதை அமைப்பதற்காக எத்தனை ஆயிரம் தமிழ் பேசும் மக்கள் பலியிடப்பட்டார்களென்பதை எத்தனை பேர் அறிவர்? ஜப்பான் அரசால், ரயில் பாதை அமைக்கும் பணியில் பிரித்தானிய, அவுஸ்திரேலிய போர்க்கைதிகள் பல்லாயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்ட போதும், சுரங்கம் தோண்டவும், மண் அள்ளவும் ஆசியத் தொழிலாளர்களே பயன்படுத்தப்பட்டுள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் தோட்டங்களில் வேலை செய்துவந்த தமிழர்கள், இவ் வேலைகளுக்காக ஏமாற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டதோடு, பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டும், ஏமாற்றியும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்பதே வரலாறு சொல்லும் பகுதியாக இருக்கிறது. இவர்கள் அனைவருமே ஜப்பானியரால் கடுமையாக வேலை வாங்கப்பட்டுள்ளனர் என்பதனை செத்துப் பிழைத்து வந்த பலரும் உறுதிப்படுத்துகின்றனர். போதியளவு உணவுமின்றி, போதியளவு மருத்துவ வசதிகளுமின்றி மரணமடைந்த மற்றும் கொல்லப்பட்ட சக உறவுகளைப் பார்த்து, துன்பங்களை அனுபவித்து, மீண்டு வந்த ஒரு இளைஞனின் கதையோடு, ஒரு வரலாற்று ஆவணமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தொகுப்பாக உள்ளது மலேசிய எழுத்தாளர் சண்முகத்தின் ‘சயாம் மரண ரயில்’ நாவல்.

                பஞ்சத்தின் காரணமாகவும், குடும்பத்தினருக்கு உதவுவதற்காக வேண்டியும் தனது வீட்டிலிருந்து வேலை தேடித் தப்பிச் செல்லும் இருபது வயது மாயா, சயாம் மரண ரயில் பாதைக்கு வந்து சேர்வதும், அங்கு அவன் சந்திக்க நேரும் மனிதர்களும், அவனது வாழ்க்கை கட்டமைக்கப்படும் விதமும், அங்கிருந்து மீண்டு வரும் விதமும் நாவலின் நகர்வினைத் தீர்மானித்திருக்கின்றன என்றபோதிலும், நாவல் எழுதப்பட்ட பின்னணிதான் இங்கு விசேடமானது. இந் நாவலை வாசிக்கவென கையிலெடுக்கும் எவரும் தூர விலத்திவிடாதபடி கட்டிப் போடுகிறது அப் பின்னணி. பலவந்தமாகப் பிடிக்கப்படும் தமிழர்கள் சயாம் மரண ரயில் பாதைக்குக் கொண்டு செல்லப்படுவதும், அங்கு நடைமுறையிலிருக்கும் ஜப்பான் அரசின் சட்டங்களும், விதிமுறைகளும், படுகொலைக்களங்களும் ஒரே தடவையில் முழுமையாக அந் நாவலை வாசித்து விடச் செய்கிறது. வாழ்வின் துயரங்களோடு, பல திருப்பங்களையும் கொண்டு எழுதப்பட்ட உண்மை நிகழ்வுகளின் தொகுப்பாக இந் நாவல் பார்க்கப்பட வேண்டியது அவசியம்.

                ஜப்பான்காரர்களின் சித்திரவதைகள், காட்டு பர்மியர்களின் மறைமுகத் தாக்குதலும், கொள்ளையும், சீனர்களின் மனிதாபிமானமற்ற நடைமுறைகள், வாந்திபேதி, மேக நோய் போன்றவற்றின் தீவிரத் தாக்குதல் போன்ற பல இன்னல்களை அம் மக்கள் எதிர்கொள்ள நேர்ந்தமையை தெளிவாக விளக்குகின்றது எழுத்தாளர் சண்முகத்தின் வரிகள். வெறுமனே கதையை மாத்திரம் சொல்லிச் செல்பவராக இல்லாமல் அவர் வரலாற்றின் பக்கங்களை மேற்கோள் காட்டி, அந்த ரயில் பாதையை படங்களோடு விளக்கியிருப்பதுவும், அக் காலத்தின் அரசியல் நிலைப்பாடுகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் இடைக்கிடையே கதையோடு சேர்த்து எழுதியிருப்பதுவும் நிலைமையின் தீவிரத்தையும், உண்மைத்தன்மையையும் உணர்த்துகிறது. ‘சயாம் மரண ரயில்’ – எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் வரலாற்றினைக் கொண்டது. தமிழோசை பதிப்பகத்தால் 2007 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் இத் தொகுப்பு, தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரது வீட்டிலும் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஆவணமென உறுதியாகச் சொல்லலாம்.

    – எம்.ரிஷான் ஷெரீப்,

    இலங்கை

    Share