சயாம் மரண ரயில் – புத்தக மதிப்புரை
எம்.ரிஷான் ஷெரீப்,
நூல் மதிப்புரை
நூல் – சயாம் மரண ரயில் (நாவல்)
ஆசிரியர் – சண்முகம்
பக்கம்: 304
விலை: ரூ. 150/-
வெளியீடு: தமிழோசை பதிப்பகம்
___________________________________________________________________________________________
எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர்
தனது வாழ்விடத்திலிருந்து தமிழ் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து செல்லாத இடங்களேயில்லை என்றாக்கி விட்டன காலமும், போர்களும். எல்லாவற்றுக்கும் காரணங்களைத் தேடுகிறது வரலாறு. அவை சொல்லும் பாடங்கள் விலைமதிப்பற்றவை. பலரும், பல இன்னல்களை அனுபவித்து, பல இழப்புக்களைச் சந்தித்து, அந்த அனுபவங்கள் மூலம் கற்றுத் தரும் பாடங்கள், காலம் காலமாக எழுதி வைக்கப்பட வேண்டியவை. அவையே காலப்பதிவுகளாகி விடுகின்றன. தமிழ் பேசும் மக்களின் ஆதி பரம்பரைகள் எதிர்கொண்ட துயரங்களும், இழப்புக்களும் தற்கால சந்ததியினருக்கு அநேகமாகத் தெரிய வருவதில்லை. அவை காலத்தின் நீட்சிக்குள் மறைக்கப்பட்டிருக்கின்றன. இக் காலத்தில் பல தசாப்தங்களை வாழ்ந்து அனுபவித்த முதியவர்களுக்கும் கூட தமது எதிர்கால சந்ததியினருக்காக தாம் அனுபவித்த அல்லது தமது மூதாதையர் அனுபவித்த வாழ்க்கை குறித்த உண்மைக் கதைகளை பேரப் பிள்ளைகளுக்குச் சொல்ல நேரமிருப்பதில்லை அல்லது செவிமடுக்க பிள்ளைகளுக்கு நேரமில்லை.
இன்றைய காலத்தில் ‘சயாம் – மரண ரயில் பாதை’யைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தாய்லாந்திருந்து பர்மா வரைக்குமான ரயில்பாதை அமைப்பதற்காக எத்தனை ஆயிரம் தமிழ் பேசும் மக்கள் பலியிடப்பட்டார்களென்பதை எத்தனை பேர் அறிவர்? ஜப்பான் அரசால், ரயில் பாதை அமைக்கும் பணியில் பிரித்தானிய, அவுஸ்திரேலிய போர்க்கைதிகள் பல்லாயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்ட போதும், சுரங்கம் தோண்டவும், மண் அள்ளவும் ஆசியத் தொழிலாளர்களே பயன்படுத்தப்பட்டுள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் தோட்டங்களில் வேலை செய்துவந்த தமிழர்கள், இவ் வேலைகளுக்காக ஏமாற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டதோடு, பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டும், ஏமாற்றியும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்பதே வரலாறு சொல்லும் பகுதியாக இருக்கிறது. இவர்கள் அனைவருமே ஜப்பானியரால் கடுமையாக வேலை வாங்கப்பட்டுள்ளனர் என்பதனை செத்துப் பிழைத்து வந்த பலரும் உறுதிப்படுத்துகின்றனர். போதியளவு உணவுமின்றி, போதியளவு மருத்துவ வசதிகளுமின்றி மரணமடைந்த மற்றும் கொல்லப்பட்ட சக உறவுகளைப் பார்த்து, துன்பங்களை அனுபவித்து, மீண்டு வந்த ஒரு இளைஞனின் கதையோடு, ஒரு வரலாற்று ஆவணமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தொகுப்பாக உள்ளது மலேசிய எழுத்தாளர் சண்முகத்தின் ‘சயாம் மரண ரயில்’ நாவல்.
பஞ்சத்தின் காரணமாகவும், குடும்பத்தினருக்கு உதவுவதற்காக வேண்டியும் தனது வீட்டிலிருந்து வேலை தேடித் தப்பிச் செல்லும் இருபது வயது மாயா, சயாம் மரண ரயில் பாதைக்கு வந்து சேர்வதும், அங்கு அவன் சந்திக்க நேரும் மனிதர்களும், அவனது வாழ்க்கை கட்டமைக்கப்படும் விதமும், அங்கிருந்து மீண்டு வரும் விதமும் நாவலின் நகர்வினைத் தீர்மானித்திருக்கின்றன என்றபோதிலும், நாவல் எழுதப்பட்ட பின்னணிதான் இங்கு விசேடமானது. இந் நாவலை வாசிக்கவென கையிலெடுக்கும் எவரும் தூர விலத்திவிடாதபடி கட்டிப் போடுகிறது அப் பின்னணி. பலவந்தமாகப் பிடிக்கப்படும் தமிழர்கள் சயாம் மரண ரயில் பாதைக்குக் கொண்டு செல்லப்படுவதும், அங்கு நடைமுறையிலிருக்கும் ஜப்பான் அரசின் சட்டங்களும், விதிமுறைகளும், படுகொலைக்களங்களும் ஒரே தடவையில் முழுமையாக அந் நாவலை வாசித்து விடச் செய்கிறது. வாழ்வின் துயரங்களோடு, பல திருப்பங்களையும் கொண்டு எழுதப்பட்ட உண்மை நிகழ்வுகளின் தொகுப்பாக இந் நாவல் பார்க்கப்பட வேண்டியது அவசியம்.
ஜப்பான்காரர்களின் சித்திரவதைகள், காட்டு பர்மியர்களின் மறைமுகத் தாக்குதலும், கொள்ளையும், சீனர்களின் மனிதாபிமானமற்ற நடைமுறைகள், வாந்திபேதி, மேக நோய் போன்றவற்றின் தீவிரத் தாக்குதல் போன்ற பல இன்னல்களை அம் மக்கள் எதிர்கொள்ள நேர்ந்தமையை தெளிவாக விளக்குகின்றது எழுத்தாளர் சண்முகத்தின் வரிகள். வெறுமனே கதையை மாத்திரம் சொல்லிச் செல்பவராக இல்லாமல் அவர் வரலாற்றின் பக்கங்களை மேற்கோள் காட்டி, அந்த ரயில் பாதையை படங்களோடு விளக்கியிருப்பதுவும், அக் காலத்தின் அரசியல் நிலைப்பாடுகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் இடைக்கிடையே கதையோடு சேர்த்து எழுதியிருப்பதுவும் நிலைமையின் தீவிரத்தையும், உண்மைத்தன்மையையும் உணர்த்துகிறது. ‘சயாம் மரண ரயில்’ – எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் வரலாற்றினைக் கொண்டது. தமிழோசை பதிப்பகத்தால் 2007 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் இத் தொகுப்பு, தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரது வீட்டிலும் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஆவணமென உறுதியாகச் சொல்லலாம்.
– எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
இதுவரை கேள்விப்படாத சரித்திர நிகழ்வு. நானே கேள்விப்பட்டதில்லை எனில் இந்தத் தலைமுறையினரைப் பற்றி என்ன சொல்ல? உங்களுடைய மதிப்புரையைப் படிக்கும்போதே மனது நெகிழ்ந்து போகிறது. இப்படிக்கூட கஷ்டம் வருமா என்று தவித்துப்போகிறது.
நீங்கள் சொல்வதுபோல தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரும் படித்துப் பார்த்து இந்த வரலாற்று நிகழ்வை அடுத்த தலைமுறையினருக்குச் சொல்லவேண்டும்.
நேற்றைய குடியரசு விழாவில் ஜப்பானிய பிரதமர் நமத் விருந்தினர். காலப்போக்கில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. எனக்கு படிக்க திரு.ஷண்முகத்தின் நூல் கிடைக்கவில்லை. அதனால் அதை பற்றி பிரஸ்தாபிக்காமல், The Bridge on the River Kwai என்ற திரைபடம் நினைவிக்கு வந்தது. எனக்குத் தெரிந்த வரையில் கொடுமை இழைப்பதில் பாரபக்ஷமின்றி பல இனங்களையும் ஜப்பானிய ராணுவம் வதைத்தது.
கேள்விப்பட்டிராத தகவல். ஒரு கதையைச் சொல்வது போல சில விஷயங்களை ஆவணப் படுத்துதல் பாராட்டுக்குரியது. நான் கூட இது போன்றதொரு விமர்சனத்தைப் படித்துவிட்டு பர்மாவிலிருந்து நடையாய் நடந்து என்ற ஒரு புத்தகத்தை மணிமேகலைப் பிரசுரத்தில் கேட்டேன். கொண்டு வரவில்லை என்று சொல்லி விட்டார்கள்!
நாடோடிகள் கலைக்குழு பெயரில் “சயாம் பர்மா மரணரயில் பாதை” என்ற ஆவணப்படம் தயாரித்துள்ளோம். கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் ஒரு சோகம் தோய்ந்த கலை வடிவம் தான் “சயாம் பர்மா மரணரயில் பாதை (PG)” ஆவணப்படம்.
Facebook : https://www.facebook.com/Nadodigalcreations
IMDB : http://www.imdb.com/title/tt3883834/
ஆவணப்படம் பற்றிய சில தகவல்கள் :
தமிழுலகம் அதிகம் அறிந்திடாத ஒரு துயரம் சயாம்(தாய்லாந்து) – பர்மா மரணரயில் பாதை. சிங்கப்பூர் – மலாயாவை இரண்டாம் உலகப்போர் நேரத்தில் கைப்பற்றிய ஜப்பானிய இராணுவம், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைவதற்காக மிக நீண்ட ரயில்பாதை ஒன்றை அமைத்தது. அதை அமைக்கும் பணியில் 30,000 பிரிட்டீஷ் – ஆஸ்திரேலியப் போர்க்கைதிகளோடு, ஒன்றரை இலட்சம் (மலாயாவின் ரப்பர்த்தோட்டத் தொழிலாளர்கள்) தமிழர்களையும், 50,000 பர்மியர்கள், சீனர்கள், இந்தொனேசியர்கள் மற்றும் மலாய் இனத்தவர்களையும் கொண்டு சென்றது.
ஒரே நாளில் சயாம் மற்றும் பர்மா ஆகிய இருமுனைகளில் தொடங்கப்பட்ட இந்த இரயில்பாதை என்னும் துயரக்கதையின் பக்கங்கள் கனமானவை. ஏறத்தாழ 72 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இக்கொடியச்சம்பவத்தில் 80,000 தமிழர்கள் உள்ளிட்ட 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் தம் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். கண்ணீரைப் பெருக வைக்கும் இச்சம்பவம் குறித்து 64 நிமிடங்கள் கொண்ட ஒரு ஆவணப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
மரணரயில்பாதையில் பணியாற்றி உயிருடன் மீண்டு, இன்று தங்களது வாழ்நாளின் இறுதிக்கணங்களை எண்ணிக் கொண்டிருக்கும் முதியவர்கள் பலர் அந்த நினைவலைகளை இப்படத்தில் பகிர்ந்துள்ளனர். மனித உரிமைகள் பற்றிக் கவலைப்படும் எவரின் உள்ளத்திலும் ஆழமான காயங்களை உருவாக்கும் பல சம்பவங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். மேலும் பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வாளர்களும் பங்கேற்க உரிய ஆவணங்கள்/ஆதாரங்களோடு இப்படம் நிறைவடந்துள்ளது.
பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகளில் படப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இந்த இரயில்பாதையில் தம் அரிய பிறவியைத் தியாகம் செய்த இலட்சக்கணக்கான ஆசியத்தொழிலாளர்களுக்குச் செலுத்தும் அஞ்சலியாகவே அமைந்துள்ளது. இப்படத்திற்கான ஆதாரங்கள்/தகவல்கள் ஆகியவை கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஆவணக்காப்பகங்கள் மற்றும் நூலகங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.
இப்பணியில் இறந்த (இழப்பீடு உள்ளிட்டச் சலுகைகளைப் பெற்ற) பிரிட்டீஷ்-டச்சு-அமெரிக்காவைச் சேர்ந்த 16000 வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் நாள் ANZAC DAY என்ற பெயரில் நினைவுத்தினங்கள் உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகின்றன. 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் பற்றி எவரும் கவலை கொண்டதில்லை.
SIAM BURMA DEATH RAILWAY (Buried tears of asian labourers) என்னும் தலைப்பில் ஆங்கிலத்திலும் சயாம்-பர்மா மரணரயில் பாதை (எழுதப்படாத ஆசியத் தமிழர்களின் கண்ணீர்க் கதை) என்ற தலைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
நன்றி.
இப்படிக்கு,
ராஜ்சங்கர்