Month: January 2014

  • வாழ்க்கை நலம் – 46

    குன்றக்குடி அடிகள்

    46. வேண்டாம் சினம்!

    சினம் – கோபம் தீமையுள்  தீமை. கோபத்தால் விளையும் தீமை பலப்பல. கோபத்தால்  இரத்த நாளங்கள் சூடேறி உடலைக் கெடுக்கிறது. ஏன் கோபம் வருகிறது? எதனால் கோபம் வருகிறது? கோபம் தோன்றும் களங்கள் எவை? எவை? விருப்பு வெறுப்புக்களால் தாக்கப் பெற்றுள்ள மனித மனத்தில் தான் கோபம் எழும்!

    காலம் காட்டும் கருவி – கடிகாரத்தை உற்று நோக்குங்கள்! ஓயாது ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கடிகாரங்களைச் சூழ்நிலை பாதிப்பதில்லை. அதுபோல நமது வாழ்க்கையும் ஓர் இயக்கம்.

    எந்தச் சூழ்நிலையிலும் திகைப்பும் அச்சமும் கொள்ளாமல் தொடர்ந்து செயல் செய்தல் வேண்டும். கோபத்தினால் இழப்பேயாம். ஒரு பொழுதும் ஆக்கம் இல்லை. கோபம், ஆக்கப்பணிக்கு  அடக்கி வைக்கப் பெற்ற வெப்பம் எரிசக்தியாக மாறுவதைப் போல, அடக்கி வைக்கப்பட்ட கோபம் ஊக்கத்தைத் தரும்.

    பணிகள் தொடர் நிலைத் தன்மையுடையன. படிப்படியாக வளரும் தன்மையதே மனிதவியல் திறன். முதலில் செய்ய இயன்றதைச் செய்க! அதன் தொடர்ச்சியாகச் செய்ய முடியாததையும் செய்யும் திறன் உருவாகும்.

    திருவள்ளுவர் வெகுளாமை என்று பத்துக் குறள்களை ஓதுகிறார். வெகுளி, மனிதனின் நகையைக் கொல்லும்; வகையைக் கெடுக்கும்; இனத்தை சுட்டெரிக்கும்; தோழமையைக் கெடுத்துப் பிரிக்கும் என்றெல்லாம் வெகுளியினால் வரும் கேட்டினை விவரிக்கின்றார். திருவள்ளுவர் வெகுளியை மறந்துவிட வேண்டும் என்று கூறுகின்றார்.

    ஆம்! வெகுளியை மறந்து விடவேண்டும். தன்னைச் சேர்ந்தாரைக் கொல்லும் வெகுளி என்றும் கூறுகின்றார். வெகுளியை மறந்து விடுக! வெகுளியை யார் மாட்டும் மறந்து விடுக! யார் மாட்டும் வெகுளி வேண்டாம்.

    வெகுளியை மறந்தால் எண்ணியவைகளையெல்லாம் அடையலாம்! கால தாமதமில்லாமல் உடனடியாக உன் விருப்பத்தை அடையலாம்! எப்போதும் அடையலாம். உள்ளத்தில் உள்ளியதை அடையலாம்.  அதலால் வேண்டாம் வெகுளி; விடுமின் வெகுளி!

    மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
    பிறத்தல் அதனான் வரும்.
    (திருக்குறள் –  303)

    உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
    உள்ளான் வெகுளி யெனின்.
    (திருக்குறள் –  309)

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

    Share
  • அமெரிக்கச் சமூகத்தின் அதீதங்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    1903-லிருந்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் வருஷம் தோறும் குளிர்காலத்தில் நடன நிகழ்ச்சி – இதை ஆங்கிலத்தில் Costume Ball என்பார்கள் – ஒன்றை நடத்துவார்கள்.  சிகாகோ பல்கலைக்கழகத்தின் அழகியையும் அப்போது தேர்ந்தெடுப்பார்களாம். இந்த நிகழ்ச்சியே 1970-லிருந்து 1984 வரை மாணவர்கள் நடத்தும் நிகழ்ச்சியாக உருவெடுத்தது.  இந்த நிகழ்ச்சிக்கு முழு உடையோடு வரும் மாணவ, மாணவிகளுக்கு முழுக் கட்டணமும் பால் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் உடை உடுத்திக்கொண்டு வருபவர்களுக்கு அரைக் கட்டணமும் வசூலித்தார்களாம்.  ஒன்றும் இல்லாமல் நிர்வாணமாக வருபவர்களுக்கு இலவசமாம்!  1984-க்குப் பிறகு இது மறுபடி 2008-லிருந்து நடத்தப்பட்டது.  ஆனால் முழு நிர்வாணமாக வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

    சிகாகோவில் ஜனவரியில் மிகவும் குளிருமாதலால் சிகாகோ பல்கலைக்கழக மாணவர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய ஒரு இடைவெளி கொடுக்கிறார்கள்.  ஜனவரி மாதத்தில் ஒரு வாரம் – திங்கள் முதல் வெள்ளி வரை – பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.  அந்த வாரத்தில் தினமும் மாணவர்களும் ஆசிரியர்களும் காலை ஆறு மணிக்கே எழுந்து – அப்போது சூரியன் உதிப்பது ஏழு மணிக்கு மேல்தான் – பல உடற்பயிற்சிகளைச் செய்கிறார்கள்.  மாலையில் எல்லோரும் சேர்ந்து சுடச் சுட சாக்கலேட் பானம் அருந்துவது, மாணவர்களும் ஆசிரியர்களும் விவாதங்களில் ஈடுபடுவது, பனிக்கட்டியில் செய்த ஸ்டாண்டிலிருந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவது, பனிக்கட்டியில் சிலைகள் செய்வது என்று பல நிகழ்ச்சிகள் நடக்கும்.  கடைசி நாளான வெள்ளியன்று பல்கலையின் முக்கிய சதுக்கத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் Polar Bear Run என்னும் ஓட்டத்தில் மாணவர்கள் கலந்துகொள்வார்கள்.  அந்த நாளன்று சீதோஷ்ணநிலை எப்படியிருந்தாலும் ஓடுவதைத் தவிர்க்க மாட்டார்கள்.  எல்லா வருஷங்களிலும் ஜனவரி மாதம் மிகவும் குளிராக இருக்கும்.  சில வருஷங்களில் கொஞ்சம் நன்றாக இருக்கும்.  குளிரைத் தங்களால் தாங்கிக்கொள்ள முடியும் என்பதை நிரூபிப்பதற்காகவோ என்னவோ இந்த ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பலர் – மாணவர்களும் மாணவிகளும் – எந்த வித உடையும் இல்லாமல் முழு நிர்வாணமாக–- கலந்துகொள்கிறார்கள்.  இந்த ஆண்டும் ஜனவரி மாதம் 17-ஆம் தேதி – அன்று சீதோஷ்ணநிலை 15 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருந்தது.  காற்று அடித்தால் குளிர் 40 டிகிரிக்குச் சமமாக இருக்கும்.  வேண்டிய கம்பளி உடைகள் தரித்துக்கொண்டு போனாலே அந்தக் குளிரைத் தாங்குவது கஷ்டம் – மாணவர்களும் மாணவிகளும் நிர்வாணமாக ஓடினர்.  இவர்கள் ஓடிய நேரம் சுமார் எட்டு நிமிடங்கள்.  இவர்களைப் பார்க்க சாலையின் இரண்டு பக்கங்களிலும் பலர்.  இவர்களில் சிலர் இந்தக் காட்சியைப் படம் வேறு எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

    புதிதாக வந்திருக்கும் இன்னொரு செய்தி.  முதியோர் இல்லங்களில் – இங்கு பலவிதமான முதியோர் இல்லங்கள் இருக்கின்றன.  ஓய்வு பெற்றோர் தங்கும் விடுதிகள், பிறர் உதவி இல்லாமல் வாழ முடியாதவர்கள், மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் என்று பல ரகம்.  இவை எல்லாவற்றையும் மொத்தமாக முதியோர் இல்லம் என்று அழைக்கலாம் – உடல் உறவால் பரவும் வியாதிகள் (Sexually Transmitted Diseases) அதிகரித்திருக்கின்றனவாம்.  முதியோர் இல்லங்கள் என்றாலே அமைதியாக அமர்ந்து படிப்பவர்கள், பிங்கோ, குறுக்கெழுத்துப் போட்டி போன்ற விளையாட்டுக்களை விளையாடுபவர்கள் ஆகிய முதியோர்கள் வாழும் இடம் என்ற எண்ணம் இருந்ததற்கு மாறாக இப்போது அங்கு அதிகரித்திருக்கும் உடல் உறவால் பரவும் வியாதிகள் பற்றிய கணக்கெடுப்புகள், விவாதங்கள் ஆரம்பித்திருக்கின்றனவாம்.  வயதானவர்களுக்கு வரும் பெருங்குடல் புற்றுநோய் (Colon Cancer) போன்ற நோய்கள் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்கு எடுக்கும் பரிசோதனைகள் போல் இப்போது உடல் உறவால் ஏற்படும் வியாதிகளுக்கும் இந்த முதியோர்களுக்கு பரிசோதனைகள் செய்கிறார்களாம்.  20 வயது முதல் 24 வயதுடையவர்களிடையே இந்த வியாதிகள் பெருகி வருவதைப் போல் முதியோர்களிடமும் இது அதிகரித்து வருகிறதாம்.

    இதற்குரிய காரணங்களாகச் சிலவற்றைக் குறிப்பிடுகிறார்கள்.  முதலாவதாக இந்த முதியோர் இல்லங்கள் – இங்கு இருப்பவர்கள் எல்லோரும் 60 வயதைத் தாண்டியவர்கள் – கல்லூரி விடுதிகள் போல் ஆகி வருகின்றனவாம்.  கிட்டத்தட்ட ஒரே வயதுடையவர்களை ஒன்றாக இருக்கவிடுகிறார்களாம்.  அதனால் அவர்களுக்குள் பாலியல் உறவுகள் ஏற்படுகின்றனவாம்.  ‘என் தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்க்கப்போனபோது அரை மணி நேரத்திற்குள் மூன்று பெண்கள் அவரிடம் வந்து தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.  அந்த அறிமுகம் முதியோர்களுக்கான மருத்துவ இன்சூரன்ஸ் பிரீமியம் பற்றியோ அல்லது மருந்துகளுக்கான புதிய திட்டம் பற்றியோ பேசுவதற்காக அல்ல’ என்று ஒரு பெண் கூறியிருக்கிறார்.

    இரண்டாவதாக, அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 60 சதவிகிதம் பேரும் பெண்களில் 40 சதவிகிதம் பேரும் உடலுறவு கொள்ளத் தகுதியானவர்களாக இருக்கிறார்களாம்.  ஆனால் இவர்கள் பாதுகாப்பான உடல் உறவு பற்றிச் சிந்திப்பதில்லை.  குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இவர்களுக்கு இல்லையென்றாலும் மற்ற விதமான உடல் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை இவர்கள் உணருவதில்லை.  ஆணுறை சாதனங்களை இளவயதினரில் 40 சதவிகிதம் பேர் உபயோக்கிறார்களாம்.  ஆனால் முதியோர்களில் 6 சதவிகிதம் பேர்தான் உபயோகிக்கின்றனராம்.

    முதியோர்களிடையே இந்த வியாதிகள் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்று கூறுபவர்கள், மருத்துவர்கள் இவர்களிடமும் பாதுகாப்பான உடல் உறவு பற்றி அறிவுரை கூற வேண்டும் என்றும் கல்லூரி வளாகங்களில் இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுவதுபோல் முதியோர் இல்லங்களிலும் வழங்கப்பட வேண்டும் என்றும் 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசிடமிருந்து வரும் மாதக் காசோலையில் பாதுகாப்பான உடல் உறவு பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.  ஓய்வு பெற்ற அமெரிக்கர்களுக்கான அமைப்பு (Association for America’s Retired People) ஒன்று அமெரிக்காவில் இருக்கிறது. இந்த அமைப்பிலிருந்து அவ்வப்போது வரும் கடிதங்களில் பாதுகாப்பான உடல் உறவு பற்றி அறிவுரை கூற வேண்டும் என்ற கோரிக்கையையும் இவர்கள் வைக்கிறார்கள்.

    வாழும் வரை உடல் உறவு வேண்டும் என்ற (Sex for Life) என்ற இலக்கைக் கொண்ட அமெரிக்கர்கள் முதியோர் இல்லங்களில் வாழ்பவர்களுக்கு உடலுறவு தேவையில்லை என்று அறிவுரை கூறுவதற்குப் பதில் அதனால் வரும் பாதகங்களுக்கு எப்படிப் பரிகாரம் தேடலாம் என்பதில்தான் அக்கறை செலுத்துகிறார்கள்.

    இதெல்லாம் போதாதென்று 2006-இல் வெளிவந்த பெண்களின் பால் உணர்ச்சி பற்றி எழுதப்பட்ட புத்தகம் (Mating in Captivity) பிரபலமாகி வருகிறது.  திருமணமான தம்பதிகள் கொள்ளும் உடல் உறவில் கடைசி வரைக்கும் இருவருக்கும் முழுத் திருப்தியும் இருக்க வேண்டுமாம்.  அப்படி இல்லாத பட்சத்தில் அவர்கள் எப்படித் தங்களைத் தாங்களே தயார் செய்துகொள்ள வேண்டும் என்பதற்கு அறிவுரைகளை இந்தப் புத்தகத்தின் ஆசிரியை கூறுகிறார்.  இதையாவது ஒப்புக்கொள்வோம்.  ஆனால் அவர் அடுத்துச் சொல்வதுதான் தேவையற்றதாகத் தெரிகிறது.  வயதாக வயதாக குறைந்துகொண்டு வரும் பால் உணர்ச்சியை எப்படிக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கும் அறிவுரை கூறுகிறார்.

    இலைமறை காய்மறையாக செக்ஸ், பிறப்புறுப்புகள் பற்றி நாம் கையாண்ட விஷயங்களை அமெரிக்கர்கள் மனத்தடையில்லாமல் கையாளுகிறார்கள்.

    ‘ஒரு முறைதான் வாழ்கிறோம்.  வாழ்க்கையை முழுவதுமாக வாழ்ந்துவிட வேண்டும்.  வாழ்க்கை வாழ்வதற்கே’ என்னும் மேற்கத்திய கோட்பாடு சரியென்றே வைத்துக்கொண்டாலும் இந்த அளவிற்குப் போக வேண்டுமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (12)

    ராமஸ்வாமி ஸம்பத்

    எப்பேர்ப்பட்ட போர் அது! உவமைகளைக் கையாள்வதில் வல்லவனான வடமொழிப் புலவன் காளிதாசன் தன் ‘ரகுவம்சம்’ எனும் காப்பியத்தில் சரியான உவமை ஏதும் கிடைக்காமல், “ராம-ராவண யுத்தம் எவ்வாறு இருந்தது என்றால் ராம-ராவண யுத்தம் போன்றே இருந்தது” என்று குறிப்பிடுகிறான்.

    இலங்கையில் நடந்த போரில் ஏராளமான அரக்கர்களும் வானர வீரர்களும் கொன்று குவிக்கப்பட்டனர். ராமனின் போர்த்திறனை ராவணனின் சேனாதிபதிகள்கூட புகழ்ந்தனர். இதனால் சினமுற்ற இலங்கை அரசனுக்கு ஒரு விபரீதமான யோசனை தோன்றியது.

    ‘ராமன் வெற்றி பெறுவான் எனும் எண்ணத்தினாலே அல்லவா ஸீதை என்னைப் புறக்கணிக்கிறாள். மாயாஜாலம் செய்து ராமன் மாண்டுவிட்டான் என்று ஸீதையை நம்ப வைத்து விட்டால் அவளை நான் சுலபமாக அடைந்து விடலாம். பின்னர் ராமனும் மனம் நொந்து உயிரை விட்டு விடுவான் அல்லது போர்க்களம் நீங்கி நாடு திரும்பிவிடுவான்’ என்றெல்லாம் மனக்கோட்டை கட்டியவாறு வித்யுத்ஜிஹ்வா எனும் சூனியக்காரனை அழைத்து ”வெட்டப்பட்ட ராமனின் தலை போன்ற ஒரு மாயபிம்பத்தை அசோகவனத்தில் ஸீதைமுன் வை” என்று ஆணையிட்டான். அவன் அவ்வாறே செய்ய ஸீதை மனம் கலங்கி விம்மி அழுதாள். அப்போது அங்கு வந்த ராவணன், “ஜனகபுத்திரியே! இதோ போரில் மாண்டுபோன உன் கணவனின் தலை. இனி உனக்கு என்னைத்தவிர வேறு கதியில்லை”  இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு ஓற்றன் அவன் செவியில் வானர வீரர்கள் நகருக்குள் நுழைந்து விட்டதைக் கூறினான். உடனே ராவணன் அங்கிருந்து அகன்றான். இப்படிப்பட்ட சூனிய வேலைகளுக்கு ஏவல் செய்பவன் அத்தலத்தில் கட்டாயமாக இருக்க வேண்டும். ராவணன் அங்கு இல்லாததால் அம்மாயை பிசுபிசுத்து அத்தலை மறைந்து விட்டது. திரிஜடை இந்த சூனியவேலையை விளக்க ஸீதை ஆறுதல் அடைந்தாள்.

    தன் தந்திரம் பலிக்கவில்லை என்ற கோபத்தோடு ராவணன் போர்க்களத்துக்கு விரைந்து ராமனை முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்தான். இருவரும் உக்கிரமான யுத்தத்தில் ஈடுபட்டனர். ராமனின் விற்கணைகளுக்கு ராவணனின் படைகளும் தேரோட்டியும் பலியானார்கள். அவன் தேர் சுக்குநூறானதோடு விற்களும் பற்பல ஆயுதங்களும் பொடியாக்கப் பட்டன. தன் கையில் மிகுதியாக இருந்த சங்கரன் வரமாகக் கொடுத்த வாளை ராமன்மேல் ராவணன் எறிந்தான். அதுவும் பயனற்றுப் போயிற்று.

    நிராயுதபாணியாக நின்றிருந்த அரக்கர் கோமானை நோக்கி ராமன், “இலங்கை வேந்தே! தேர், தேரோட்டி, ஆட்படைகள், யுத்த தளவாடங்கள் அனைத்தையும் இழந்து களைப்பாக இருக்கிறாய். உன்னை இந்நிலையில் கொல்ல நான் விரும்பவில்லை. உனக்கும் ஓய்வு தேவை. ஆகவே இன்று போய் நாளை வா” என்றான்.

    ’என்னுடைய தற்போதைய நிலையைப் பார்த்தால் ஸீதை ஏளனம் செய்வாளே’ என்று நொந்த மனத்தோடு அரண்மனைக்குத் திரும்பிய ராவணன் தன் ஏகாந்தமான பூசை அறைக்குச் சென்று, “இறைவா! தவப்பலத்தால் எனக்குக் கிடைத்த ஆயுதங்கள் எல்லாம் வீணாகிவிட்டனவே. நீ கொடுத்த வாளும் பயனற்றுப் போய்விட்ட்தே. அவ்வாளினால் எந்த எதிரியையும் மாய்க்கலாம் என்ற உன் வாக்கு பொய்த்து விட்டதே” என்று புலம்பினான்.

    அப்போது அசரீரி பேசியது: “முட்டாளே! சிவபெருமான் உனக்குக் கொடுத்த வாளால் ஒரு விரோதியைத்தான் கொல்லமுடியும் என்ற நியதியை மறந்து விட்டாயா? எப்போது அவ்வாளால் ஜடாயுவைக் கொன்றாயோ அப்போதே அது தன் வலிமையை இழந்துவிட்டது.”

    அடுத்த நாள் காலை ராவணன் உறக்கத்தில் இருக்கும் தன் தம்பி கும்பகர்ணனை எழுப்புமாறு ஆனையிட்டான். பலத்த முயற்சி செய்து அவனை அரக்கர்கள் எழுப்பி அரசன் ஆணையை விவரித்தனர். அண்ணனிடம் வந்த தம்பி, “எதற்காக என்னை எழுப்பினாய். என்ன விபரீதம் நிகழ்ந்து விட்ட்து?” என வினவினான்.

    “தம்பி, உன் புஜபல பராக்கிரமத்தைக் காட்டவேண்டிய சமயம் வந்துவிட்டது. நீ உடனே போர்க்களத்துகுச் சென்று அந்த மனித பூச்சிகளையும் குரங்குகளையும் தவிடு பொடியாக்கி வெற்றியோடு வா.”

    ”அண்ணா, நான் முன்பே எச்சரிக்கை செய்தேன். ஸீதையை கபடமாகக் கடத்தி வந்தது பெருந்தவறென்று. அதன் விளைவே இப்போது நம் குலத்திற்கு வந்திருக்கும் சாபக்கேடு.”

    “கும்பகர்ணா, நியாய அநியாயங்களைப் பற்றி பேச இது தருணம் அல்ல. உனக்குப் பிடிக்கவில்லை என்றால் உணவருந்திவிட்டு உறக்கம் கொள்.”

    “அண்ணா, சினம் கொள்ளாதே. என் உள்ளத்திற்குத் தோன்றியதை சொன்னேன். நான் உனக்காக உயிரையும் கொடுக்க சித்தமாக உள்ளேன் என்பது உனக்கும் தெரியும். போரில் ராம லக்ஷ்மணர்களை தோற்கடித்து விட்டபின்தான் உன்னிடம் வருவேன். ஒரு வேளை மாண்டுவிட்டால், நீ நம் அரக்கர்குலத்தைக் காப்பதற்காகவாவது ஸீதையை ராமனிடம் சேர்ப்பிக்க வேண்டும். நீயும் நம் குலமும் அழிவதில் எனக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை.”

    இவ்வாறு உரைத்து கும்பகர்ணன் போர்க்களத்திற்குச் சென்றான். பலத்த சேதத்தை ராமனின் படைகளுக்கு ஏற்படுத்தினாலும், முடிவில் கோதண்ட பிரயோகத்தால் கூற்றத்தின் வாய் விழுந்தான் கும்பகர்ணன்.

    இனிய தம்பியின் பிரிவு தமையனை வாட்டியது. அதன்பின் பல அரக்க வீரர்களை அனுப்ப அவர்களும் வீரசொர்கம் எய்தினர். ‘யார் இந்த ராம லக்ஷ்மணர்கள்? எங்கிருந்து இத்தனை பலம் பெற்றார்கள்?’ என்று யோசித்தவாறு அருமை மகன் இந்திரஜித்தை அழைத்தான். “மகனே! இப்போது நீதான் என் மானத்தைக் காக்கவேண்டும்” என்ற தந்தையிடம் இந்திரஜித், “நான் ஒருவன் இருக்கும்வரை நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆசி அளியுங்கள். வெற்றியோடு வருகிறேன்” என்றான்.

    போர்த்திறனோடு மாயாஜாலம் புரிவதிலும் வல்லவனான இந்திரஜித் தான் இருப்பது தெரியாவண்ணம் ராம லக்ஷ்மணர்களை நாகபாசத்தால் கட்டி வீழ்த்தி ”இனி அவர்கள் பிழைக்க முடியாது” என்று தந்தையிடம் பெருமையாகச் சொன்னான். சுக்ரீவன், விபீஷணன், ஜாம்பவான் என் செய்வது என்று தெரியாமல் வருத்தத்தோடு அமர்ந்திருந்தனர். அப்போது சிறிய திருவடியான அனுமன் பெரிய திருவடியான கருடனை வேண்ட, நாகங்களின் ஜன்ம வைரியான அப்பட்சிராஜன் அங்கு வந்த வேளையில் அவை அந்த  அம்புகளிலிருந்து தப்பி ஓடவும் ராம லக்‌ஷ்மணர்கள் மூர்ச்சை நீங்கினர்.

    அதன் பின், இந்திரஜித் ஸீதையைப் போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி, வானரர்கள் முன்னே அதன் தலையைக் கொய்து அவள் மாண்டுவிட்டது போன்ற ஒரு பிரமையை அவர்களிடையே உண்டாக்கினான். இதனால் மிக்கத்துயர்கொண்ட வானரர்கள் ராமனிடம் இந்த செய்தியைக் கூறியதும் ராம லக்ஷ்மணர் இருவரும் ஸ்தம்பித்துப் போயினர். பக்கத்தில் அமர்ந்திருந்த விபீஷணன் ராமனிடம், “அண்ணலே! கவலை வேண்டாம். ராவணன் ஒரு நாளும் அன்னை ஸீதையைக் கொல்வதை அனுமதிக்கமாட்டான். இது இந்திரஜித்தின் மாயாஜாலம்” என்றான்.

    மனம் தெளிந்த ராம லக்ஷ்மணர்கள் இந்திரஜித்தோடு மீண்டும் போர் செய்தனர். அவன் உக்கிரமாகப் போரிட்டு பிரம்மாஸ்திரத்தால் லக்ஷ்மணனை வீழ்த்தினான். தம்பியின் நிலை கண்டு ராமனின் துயரம் பொங்கும் கடல்போல் கட்டுமீறியது. அவன் கதறலைக் கம்பர் இவ்வாறு வர்ணிக்கிறார்:

     “மாண்டாய் நீயோ யான் ஒருபோதும் உயிர் வாழேன்

     ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன்தான்

     பூண்டார் எல்லாம் பொன்றுவர் துன்பப் பொறையாற்றார்

     வேண்டாவோ நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றதால்”

    [”நீயோ இறந்துவிட்டாய். அதனால் நான் ஒரு நாளும் உயிர் வாழமாட்டேன். அதை அறிந்தால் பரதன் நாட்டினை ஆட்சி செய்யாமல் இறப்பான். என்னோடு உறவு பெற்றவர் அனைவரும் துன்பச்சுமையைத் தாங்க முடியாமல் இறப்பர். நான் சிறந்த தர்மத்துக்குப் பயந்து (பிரம்மாஸ்திரம் செலுத்தாதே என்று லக்ஷ்மணனைத் தடுத்து) தளர்ச்சி அடைந்ததால் அதன் விளைவாக இவ்வளவும் நடக்க வேண்டாவா” என்று ராமன் ஏங்கி விம்மினான்.]

    ராமனின் மாளாத்துயரத்தைக் கண்ட விபீஷணன் தன் அந்தரங்க மருத்துவனை அழைத்து வந்தான். “நாளைப் பொழுது விடிவதற்குள் இமயத்தில் உள்ள சஞ்ஜீவி மூலிகைகளைக்கொண்டுவந்தால்தான் லக்ஷ்மணன் பிழைக்க முடியும்” என்றான் அம்மருத்தவன். இதைக்கேட்ட அனுமன் சடுதியில் வடக்கு நோக்கிப் பாய்ந்து சஞ்ஜீவி பர்வதத்தையே கையில் ஏந்தி வந்தான். இளவல் மயக்கம் தெளிந்தான்.

    இதற்கிடையில் இந்திரஜித் துர்த்தேவதைகளின் உதவி கோரி நிகும்பலையில் ஒரு யாகம் செய்யமுற்பட்டான். இதை அறிந்த விபீஷணன், “இந்திரஜித்தின் இம்முயற்சியைத் தடுத்து நிறுத்தாவிட்டால் அவன் மிக்க பலசாலி ஆகிவிடுவான். அவனை வெல்ல முடியாது” என்று சொன்னதும், லக்ஷ்மணனும் அனுமனும் பல வானரர்கள் புடைசூழ அந்த யாகசாலைக்குச் சென்று அதனைக் கலைத்தனர். பின்னர் அங்கு நடந்த போரில் லக்ஷ்மணன் இந்திரஜித்தின் தலையை வெட்டி வீழ்த்தினான். ராமன் உள்ளிட்ட அனைவரும் இளவல்மீது புகழ்மாரி பொழிந்தனர்.

    தனிமரமாகிவிட்ட ராவணன் ராமனுடன் இறுதிப் போருக்கு சித்தமானான். இந்திரன் தன் தேரை மாதலி எனும் சாரதியோடு ராமன் உதவிக்கு அனுப்பினான். எத்தனை அம்புகளை எய்தாலும் வெட்டப்பட்ட ராவணனின் தலைகள் மீண்டும் மீண்டும் முளைத்தன. வியப்படைந்த ராமன் செவியில், மாதலி “ஐயனே, இனியும் தாமதம் செய்யவேண்டாம். பிரம்மாஸ்திரத்தை ராவணனின் மார்பில் எய்க” என்றான்.

    ராமனால் எய்யப்பட்ட பிரம்மாஸ்திரம் தன் பணியைச் செவ்வனே செய்து ராவணனின் மார்பில் பாய்ந்து அவனை வீழ்த்தியது. வானவர்கள் பூமாரி பொழிந்தனர்.

    தானாடாவிட்டாலும் சதையாடும் என்பதற்கொப்ப துயரம் மேலிட்டாலும், அறநெறி மறந்த தமையனுக்கு ஈமச்சடங்குகளைச் செய்ய விபீஷணன் தயங்கினான். “சிறப்பாகப் போர் புரிந்த உன் அண்ணன் வானுலகம் சென்றுவிட்டான். அவனுக்கு அந்திமக் கிரியைகளைச் செய்து அந்த ஆன்மாவைக் கடையேற்றுவது உன் கடமை. அதற்குத் தயங்கினால் நானே முன்னின்று அப்பணியைச் செய்வேன். ஏனினில் உன் சகோதரன் என் சகோதரன்கூட அல்லவோ?” என்றான் ராமன்.

    அப்பொழுதே அங்கு வந்த இலங்கை அரசி மந்தோதரி கணவன் சடலத்தின்மேல் விழுந்து இவ்வாறு புலம்பலுற்றாள்:

    வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்

    எள்ளிருக்குமிடன் இன்றி உயிர் இருக்கும் இடன் நாடி இழைத்தவாறோ

    கள்ளிருக்கும் மலர் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்

    உள்ளிருக்கும் எனக்கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி.

    [ராமன் என்னும் ஒரு மனிதனுடைய அம்பு, வெண்மையான எருக்கமாலை அணிந்த, சடைமுடியை உடைய சிவன் அமர்ந்திருக்கும் கயிலை மலையைப் பெயர்த்த ராவணனின் அழகிய உடம்பு முழுவதையும் எள் இருப்பதற்கு சிறிய இடமும் இல்லாதவாறு அவன் உயிர் இருக்கும் இடம் தேடித் துளை செய்த தன்மையோ? அல்லது தேன் இருக்கும் மலர்களை அணிந்த கூந்தலை உடைய ஸீதையை இதயம் என்னும் சிறையில் மறைத்து வைத்த காதல், உள்ளே எங்கேயாவது மறைந்திருக்கும் என்று கருதி அவன் உடலில் புகுந்து தேடியவாறோ?]

    ”யார் இந்த மாதரசி?” என்று வினவிய ராமனுக்கு விபீஷணன் “அவர் என் அண்ணியார் மந்தோதரி” என்று பதிலுரைத்தான். அதன் பின்னர், விபீஷணன் அண்ணனுக்குச் செய்ய வேண்டிய இறுதி மரியாதைகளைச் செய்து முடித்தான்.

    (தொடரும்)

    Share
  • எங்கு சென்று கொண்டிருக்கிறோம்?

    indian-man-wife

    சு. கோபாலன்

    பெரும் செல்வம் ,பதவி, அதிகாரம் இவையெலாம் தனக்கு மட்டுமன்றி

    வரும் வாரிசுகளுக்கும், தலைமுறைகளுக்கும் சேர்க்கத் துடித்திடும்

    கொலை வெறி கொலை வெறி மனதிலும் மூளையிலும் புகுந்து

    தலைவிரித்தாடி செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள்

    பெருகி வரும் பாலியல் கொடுமைகள், வக்கிரங்கள் – அவற்றில் சருகாய்

    கருகி விடும் உறவுகளின் உன்னதங்கள், புனிதங்கள், நம்பிக்கைகள்

    இறையாய் போற்றத் தக்க மூத்தோர், ஆசிரியர், மருத்துவர், நீதிபதிகள்- காமப்பசிக்கு

    இரை தேடும் விலங்குகளாய் மாறிவரும் செய்திகள் கேட்கவே கூசுகிறது.

    நீதி, நிர்வாகம், கல்வி, மருத்துவம் என்று அடுக்கிக்கொண்டே போகுமளவு

    மீதி ஒரு துறையும் விட்டு வைக்காமல் புற்று நோயாய்ப் பரவி வரும்

    லஞ்சம், ஊழல்கள் சமுதாயத்தில் புரையோடிப் போயிருப்பதைக் கண்டால்

    நெஞ்சம் பதறுகிறது , கொதிக்கிறது செய்வதறியாது தவிக்கிறது.

    செல்வங்களுள மிகச் சிறந்த கல்விச் செல்வம் வழங்கும் கல்வி நிறுவனங்கள்

    செல்வம் குவிக்கும் சாதனங்களாய் தங்கச் சுரங்கங்களாய் மாறி வருகின்றன.

    மனித உயிர் காக்கும் தொழில் என்பதால் சமூகத்திலுள்ள யாவராலும்

    புனிதமாய்ப் போற்றும் மருத்துவத் துறையிலும் பணவெறி பீடித்துள்ளது.

    படாடோப விருந்துகளில் பாழாய்ப் போகும் உணவு பற்றி கவலையிலா செல்வந்தர்கள்

    படாதபாடு பட்டாலும் ஒருவேளை சோறு பெற இயலாது தவிக்கும் ஏழை மக்கள்

    தாகம் தீர்க்கும் நீர், பசி போக்கும் உணவு, நோய் தீர்க்கும் மருந்து எதுவாயிருந்தாலும்

    வேகம் வேகமாகச்  செல்வம் சேர்க்கும் வெறியுடன் கலப்படம் செய்யும் வியாபாரிகள்

    அற்ப காரணங்களுக்காகச் சற்றும் சிந்தியாது கொலை செய்திடவும்

    முற்படும் கட்டுப்பாடில்லாத கோப உணர்ச்சிகளுக்கு ஆளாகும் இளவயதினர்

    ‘அன்னை இல்லம்’ என தன் சொந்த வீட்டிற்குப் பெருமையாக பெயர் சூட்டி

    அன்னை இல்லா இல்லமாக பெற்றவளை முதியோர் இல்லம் அனுப்பிடும் பிள்ளைகள்!

    படத்துக்கு நன்றி

    http://old-photos.blogspot.in/2013/05/old-indian-couple.html

    Share
  • முயற்சியால் ஆகாதெனினும்!…

    தஞ்சை வெ.கோபாலன்

     

    பசுபதிக்கு அந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது. அலுவலகத்தில் முக்கியமான பணியில் ஈடுபட்டிருந்த அந்த நேரத்தில் இந்த தந்தி வந்திருக்க வேண்டாம். தஞ்சையிலிருந்து அந்த தந்தியை அனுப்பியிருந்தவர் அங்கு மேம்பாலத்தின் அருகிலுள்ள காது கேட்காதோர் வாய் பேசாதோருக்கான தனிப் பள்ளியின் தலைமை ஆசிரியர். பசுபதியின் மகன் கண்ணன் அங்குதான் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்குப் பிறவியிலிருந்தே காதும் கேட்காது, வாயும் பேசமுடியாது. பன்னிரெண்டு வயது வரை வீட்டில் வைத்து எல்லா வைத்தியங்களும் பார்த்த பிறகு நரம்பியல் நிபுணர் ஒருவர் பார்த்துவிட்டு இனி இவனுக்கு வைத்தியம் செய்ய பணத்தைச் செலவு செய்யாதீர்கள். இவன் இப்படியே இருந்து ஏதாவது தொழிலைக் கண்ணால் பார்த்துக் கையால் செய்யத் தக்க வகையில் கற்றுக் கொடுத்து பிழைக்க ஒரு வழியைக் காட்டிவிடுங்கள். அவ்வளவுதான் நீங்கள் இனி செய்யக் கூடியது என்று சொன்னதால் தஞ்சாவூரில் இவனைப் போன்றவர்கள் தங்கி படிக்கும் வசதி கொண்ட பள்ளியில் இவனைக் கொண்டு போய் சேர்த்தார். அவனும் இப்போது கிட்டத்தட்ட ஐந்தாறு ஆண்டுகளாக அங்குதான் இருந்தான். இப்போது இன்று இந்த அவசரத் தந்தி சொன்ன செய்தி அவனைக் காலை முதல் காணவில்லை என்பதுதான். பசுபதிக்கு கையும் ஓடாமல் காலும் ஓடாமல் அடுத்த சீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ராகவனிடம் விஷயத்தைச் சொன்னார்.

    இருவரும் பசுபதியின் மேலதிகாரியிடம் சென்று தன்னுடைய காது கேட்காத வாய் பேசமுடியாத மகனை அவர்களைப் போன்றவர்க்கென்று நடக்கும் போர்டிங் பள்ளியில் இருந்து காணாமல் போய்விட்டதாகத் தகவல் வந்திருக்கிறது. என் மகனை உடனே போய் தேடவேண்டும், இப்போதே தஞ்சாவூர் போக அனுமதியும் இரண்டு நாள் விடுப்பும் தேவை என்று கேட்டார்கள். வேதாரண்யத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பசுபதியின் அந்த அதிகாரி சற்று அலட்சியமாக “ஏன்யா! அவனைக் காணும்னா எங்கே போயி தேடுவீங்க? அவனுக்கோ காதும் இல்லை வாயும் இல்லை; என்னய்யா பண்ணப் போறீங்க? போய் பேசாம போலீசிலே ஒரு புகார் கொடுங்க, அவுங்க கண்டுபிடிச்சி கொடுப்பாங்க” என்றார்.

    பசுபதிக்கு ஆத்திரம் வந்தது. காணாமல் போனது அவர் மகன் இல்லை, தன்னுடைய மகன். அவருடைய மகனாக இருந்தால் இப்படிப் பேசுவாரா? அலுவலகங்களில் ஏதோ ஒரு அதிகாரி என்று உட்கார்ந்து விட்டால் தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களை இப்படியெல்லாம் பேச யார் சொல்லிக் கொடுத்தார்கள்? இவர்களுக்கு மனிதாபிமானமே இருக்காதா? இவர்தான் தூக்கிப் பிடித்து அந்த துறை பணிகளைச் செய்யப் போகிறாரா? என்ன செய்வது தன்னுடைய எதிர்காலம் இந்த ஆள் கையில் இருப்பதறிந்து பசுபதி சற்று தணிந்து போக தீர்மானித்தார்.

    “அதெல்லாம் சரிதான் சார். அவனுக்குப் பேசமுடியாது, காதும் கேட்காது என்கிறேன், அவன் யார்கிட்டே போயி தான் யார் என்பதையெல்லாம் சொல்ல முடியும். உங்களிடம் சொல்லிவிட்டுப் போகவேண்டியது என் கடமை, சொல்லிவிட்டேன், நான் வரேன் சார்” என்றார் பசுபதி.

    “ஆபீஸ் விஷயங்களில் எல்லாம் இப்படி தூக்கி எறிந்து பேசமுடியாது மிஸ்டர் பசுபதி. இப்படிப்பட்ட ஒரு மகனை இருட்டில் குருட்டுப் பூனை குறுக்குச் சட்டத்தில் பாய்ந்ததைப் போல பிள்ளையைத் தேடப்போறேன்னு சொன்னா, எங்கே போயி தேடுவீங்க?” என்றார் அவர் மறுபடியும்.

    “நீச்சல் தெரியாம தண்ணில விழுந்துட்டா என்ன செய்வோமோ அதைச் செய்வோம் சார். காலையும் கையையும் அசைத்து நீந்த முயற்சிப்பது இல்லையா, அப்படி. அவன் போகக்கூடிய இடங்கள், அவனுக்குத் தெரிந்தவர்கள் வீடுகள், இப்படி பல இடமும் போய் தேடிப்பார்த்துத்தான் கண்டுபிடிக்க முடியும். எல்லாம் தானா வருவான் என்று உங்களைப் போல அலட்சியமா நானும் உட்கார்ந்திருக்க முடியாது சார். அவன் உடம்பில் ஓடறது என் ரத்தம். இங்கே என் ரத்தம் கொதிக்குது சார்” என்றார் பசுபதி.

    அதிகாரி விட்டபாடில்லை. “அதெல்லாம் சரிதான்யா! அப்படி தேடியும் அவன் கிடைக்கலைன்னா என்ன சார் பண்ணப் போறீங்க?” என்றார்.

    பசுபதிக்கு ஆத்திரம் தலைக்கேறியது, “அங்கேயே தற்கொலை பண்ணிக்கொண்டு செத்துப் போவேன் சார்” என்றார் சூடாக.

    “சரி, சரி இது போல நாடகபாணில பேசாதீங்க. போயிட்டு வாங்க. உங்க சவுகரியம்” என்றார் வெறுப்புடன்.

    “இவர் கிடக்கிறார் விடுங்க பசுபதி, இவர் புள்ளையா இருந்தா இப்படி பேசுவாரா, வாங்க நீங்க, நானும் உங்களோடு வரேன். உங்களைத் தனியா விட கவலையா இருக்கு” என்றார் நண்பர் ராகவன்.

    இருவரும் உடனே பேருந்து நிலையம் சென்று வேதாரண்யத்திலிருந்து திருச்சி செல்லும் பஸ்சில் ஏறி தஞ்சைக்குப் பயணமானார்கள். அங்கு சென்ற இருவரும் அந்த பள்ளிக்கூடத்துக்குச் சென்று என்ன நடந்தது என்று விசாரித்தார்கள்.

    அங்கிருந்தவர்கள் சொன்னார்கள், அன்று பள்ளித் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அன்றைக்கு ஆங்கில பாடத்தில் தேர்வு. இவனிடம் கேள்வித் தாளைக் கொடுத்த சில நிமிஷங்களில் இவன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வெறும் விடைத்தாளை ஆசிரியையிடம் கொடுத்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டானாம். திரும்பி வருவான் என்று காத்திருந்த ஆசிரியர்கள் அவன் வராதது கண்டு பயந்து போய் தந்தி கொடுத்ததாகச் சொன்னார்கள்.

    இவனுக்கு இங்கு யாரையுமே தெரியாதே. எங்கு போயிருப்பான். அந்த பள்ளிக்கூடத்துக்கு அருகில் இருந்த மேம்பாலம் வழியாக பெரிய கோயிலுக்குப் போகவும், மறுபாதையில் சென்றால் மருத்துவக் கல்லூரி இருக்கும் பகுதிக்கும் போகலாம். அங்கிருந்து இறங்கி போகும் ஒரு பாதை ரயில் நிலையம் போகும். அந்தப் பாதையில் போய் பார்க்கலாம் என்று பசுபதியும் நண்பரும் போனார்கள்.

    சற்று தூரத்தில் ஒரு டீக்கடை. அந்த டீக்கடைக் காரரிடம் பசுபதி கேட்டார், “ஏன்யா, காது கேட்காத வாய் பேசமுடியாத ஒரு பையன் மேம்பாலம் பள்ளிக்கூடத்திலிருந்து இந்த பக்கமா வந்தானா? அப்படி யாரையாவது பாத்தீங்களா?” என்றார்.

    அவர் சொன்னார், “அமாங்க, அப்படியொரு ஊமைப் பையனை அழைத்துக் கொண்டு யாரோ ஒரு ஆள் இங்கே வந்து டீ வாங்கி குடிச்சாங்க. அவங்களைப் பார்த்தா அந்தப் பையனுக்கும் அந்த ஆளுக்கும் சம்பந்தம் இருக்கறதா தோணலீங்க. சந்தேகமா இருக்கு, ஸ்டேஷன் பக்கமா போனாங்க ரெண்டு பேரும் போய் அங்கே பாருங்க”.

    இருவரும் ஸ்டேஷன் பக்கம் போய் சுற்றிப் பார்த்தார்கள். கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் இங்கே ஒரு ஊமைப் பையனைப் பார்த்தீங்களா என்று கேட்டார்கள். எல்லோரும் கைவிரித்துவிட்டார்கள். பையனைத் தேடும் பரபரப்பில் இருவரும் ஒன்றுமே சாப்பிடவில்லை. நன்றாக இருட்டத் தொடங்கிவிட்டது. வேறு வழியில்லை போலீசில் போய் ஒரு புகாரைக் கொடுத்துவிடலாம் என்று அங்கு போனார்கள். நல்ல காலம் அந்த பள்ளி தலைமை ஆசிரியரும் தங்கள் விடுதியிலிருக்கும் இந்த மாணவனைக் காணவில்லை என்று புகார் கொடுக்க வந்திருந்தார். இவர்களும் அந்தப் புகாரில் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டு பஸ்சைப் பிடித்து வேதாரண்யம் போக முடிவு செய்தனர்.

    வழிநெடுக பசுபதி புலம்பிக் கொண்டே வந்தார். என்ன செய்கிறானோ, வாய்கூட பேசமுடியாம என்ன பாடு படுகிறானோ என்றெல்லாம் புலம்ப ராகவன் ஆறுதல் சொல்லிக் கொண்டே வந்தார். வேதாரண்யம் பஸ் தஞ்சையிலிருந்து புறப்பட்டு போய்க்கொண்டிருந்தது.

    வழியில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் கோபுரம் தெரிந்தது. பசுபதி “அம்மா! மாரியம்மா! என் புள்ளைய நீதான் காப்பாத்திக் கொண்டு சேர்க்கவேணும் அம்மா. உன்னை விட்டா எனக்கு ஏது கதி” என்று சொல்லிக் கொண்டே ஓவென அழத் தொடங்கினார்.

    பஸ்சில் இருந்தவர்கள் இவரைத் திரும்பிப் பார்த்தனர். பாவம் என்ன கஷ்டமோ என்று அவர்களும் வருந்தினர். ராகவன் நிலைமையைச் சமாளித்து மெல்ல அழைத்துக் கொண்டு போனார். திருவாரூரில் இவருக்கு ஒரு உறவினர் இருந்தார். அங்கு ஒருக்கால் இவன் போயிருக்கலாமோ, அங்கேயும் போய் பார்த்துவிட்டு ஊருக்குப் போய்விடலாம் என்று திருவாரூர் போனார்கள். அங்கு அவரது உறவினர் வீட்டுக்குப் போனதும் அவர்கள் இவர்களை வரவேற்று என்ன விசேஷம் இப்படி திடீர்னு வந்திருக்கீங்க என்று விசாரித்த போதே அவன் இங்கு வரவில்லை என்பது தெரிந்து போயிற்று.

    அவர்களிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு ஒருக்கால் அவன் இங்கு வந்தால் எங்களுக்குத் தகவல் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு நாகப்பட்டினம் பஸ் ஏறி அங்கிருந்து வேதாரண்யம் போய்ச் சேர்ந்தார்கள். வீட்டுக்குப் போகும்போது மணி இரண்டைத் தாண்டியிருக்கும். பசுபதியின் மனைவி வாசலில் நின்று கொண்டு இவர்கள் வரவை எதிர்பார்த்திருந்தாள் பாவம். பையனை எங்கும் காணவில்லை என்றதும், அவள் அந்த நள்ளிரவிலும் வாய்விட்டு ஓவென்று கதறினாள். அருகிலிருந்த சில வீட்டுக்காரர்கள் இவள் அழுகையைக் கேட்டு வாசல் விளக்கைப் போட்டு என்னவென்று அறிந்து கொள்ள வந்து சேர்ந்தனர்.

    அப்படி வந்திருந்தவர்களிடம் நடந்த காரியங்களைச் சொல்லிக் கொண்டிருந்தபோது அவ்வூர் சப் இன்ஸ்பெக்டர் அங்கு மோட்டார் பைக்கில் வந்து சேர்ந்தார்.

    வந்தவர், “சார், இங்கே பசுபதிங்கறது யாரு?” என்றார்.

    போலீசைக் கண்டதும் துடிப்போடு பசுபதி, “நாந்தான் சார் பசுபதி, என்ன சார் விசேஷம்?” என்றார்.

    “இல்லை, இந்த நேரத்துல என்ன இங்கே இப்படி கூட்டமா நிக்கறீங்க?” என்றார்.

    “தஞ்சாவூர்ல இருந்த எங்க வாய்பேசமுடியாத பையன் காணாம போயிட்டான் சார். அவனைப் போய் எங்கெல்லாமோ தேடிப் பார்த்துட்டு இப்பதான் சார் வரேன். அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட சேதி சொல்லிக்கிட்டிருக்கேன், அதான் கூட்டம்” என்றார் பசுபதி.

    “கவலைப் படாதீங்க பசுபதி. அந்த விஷயமாத்தான் நான் வந்தேன். உங்க பையன் பத்திரமா இருக்கான். இப்பதான் சேதி வந்தது. அதைச் சொல்லிட்டுப் போகத்தான் உங்களைத் தேடி வந்திருக்கேன். அவனை அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன்லேர்ந்து ஆட்கள் அழைச்சிட்டு வராங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துடுவாங்க” என்றார் எஸ்.ஐ.

    “என்ன ஆச்சு சார், ஏதாவது விவரம் தெரியுமா சார்” என்றார் ராகவன்.

    “இருங்க, அவுங்க வந்ததும் தெரிஞ்சுடுது. பையன் கிடைச்சுட்டான்ல சந்தோஷமா இருங்க, இப்ப வந்துடுவாங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து இரு போலீஸ்காரர்களும், பையனும் அவருடன் கூட வேதாரண்யத்து இளைஞர் ஒருவரும் வந்து இறங்கினார்கள்.

    பசுபதியும் குடும்பத்தாரும் ஓடிப்போய் பையனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ஓவென்று அழுதார்கள். அனைவரையும் ராகவனும் எஸ்.ஐ.யும் சமாதானப் படுத்தி ஆசுவாசப் படுத்தினார்கள்.

    பசுபதி மட்டும் சற்று சமாதானமடைந்து ஜாடையில் பையனிடம் ஏதோ கேட்க அவனும் ஜாடையில் சொல்லிக் கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் பேசிய விவரம் அவர்களைத் தவிர மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போது ஜீப்பில் வந்திறங்கிய வேதாரண்யத்து இளைஞன் மட்டும் பேசினான்.

    “ஐயா! நான் வேதாரண்யத்துக்காரந்தான். நான் பூண்டி காலேஜ்ல எம்.ஏ. படிச்சுகிட்டு இருக்கேன். அங்கே ஹாஸ்டலில்தான் இருக்கேன். நான் அடிக்கடி புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குப் போவேன் சார். அப்படி அங்கே போனபோது, செறுப்பு போட்டுட்டுப் போனா பார்த்துக்கன்னு ஒருத்தர் வாசலில் உட்கார்ந்திருப்பார். செறுப்பு பார்த்துக் கொள்ள அவருக்கு எல்லோரும் காசு கொடுப்பாங்க. கடைகளிலும் போடலாம் ஆனா, அங்கு டோக்கன் எல்லாம் கிடையாது, இந்த ஆள் டோக்கன் போட்டுக் கொடுப்பான்.

    அப்படி நான் போனபோது அந்த ஆளுக்குப் பக்கத்துல செறுப்புக்குள்ள டோக்கன்களைச் செறுகிக் கொண்டு இந்தப் பையன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன். பையனைப் பார்த்தா இந்த வேலை செய்யறவனா தெரியலையே இவன் ஏன் இங்க உட்கார்ந்திருகான் என்று அவனை நீ யாருடான்னு கேட்டேன். அவன் நான் சொன்னதைக் கவனிச்சதாகவே தெரியல. அந்த செறுப்புக் காவல் காக்கும் நபரைக் கேட்டேன், அந்த ஆள், நீங்க உங்க வேலைய பாருங்க தம்பி, அவன் யாராயிருந்தா உங்களுக்கு என்ன? என்றான்.

    அதனால் எனக்குச் சந்தேகம் வந்தது. உடனே போய் பூண்டி போலீசிலே போய் விஷயத்தைச் சொன்னதும் அவங்கள்ள ஒருத்தர் எங்கூட வந்து செறுப்பு காவலரிடம் கேட்க அவன் விஷயத்தைக் கக்கிவிட்டான். இந்த பையனை தஞ்சை மேம்பாலம் பக்கம் பார்த்து, இவனுக்குப் பேசமுடியாதுன்னு தெரிஞ்சு தனக்கு உதவியா இருக்கட்டும்னு கூட்டிக்கிட்டு வந்துட்டதாக சொன்னான்.

    அவர்கள் தஞ்சாவூர் போலீஸ் நிலையத்துக்குக் கேட்டாங்க போலிருக்கு. அவங்க, ஆமாம் அங்க ஒரு புகார் வந்திருக்கு, இதப் போல ஒரு பையனைக் காணும்னு, அவன் ஊர் வேதாரண்யம்னு அவன் அப்பா விலாசம் எல்லாம் கொடுத்திருக்கார். பையனைப் புடிச்சிட்டிங்கன்னா உடனே வேதாரண்யத்துக்குத் தகவல் கொடுக்கச் சொன்னாங்க.

    அப்போது அம்மாபேட்டை போலீஸ் ஜீப் ஒண்ணு வந்தது. அதில் இருந்தவர்கள் தாங்கள் வேதாரண்யம்தான் போகிறோம் என்று சொன்னதால, பையனை பத்திரமா அவங்க கிட்ட ஒப்படைச்சி வேதாரண்யம் அழைச்சுப் போகச் சொன்னாங்க. நானும் பையனோடு அப்பா விலாசத்தைப் பார்த்துட்டு, அடடே நம்ம வீட்டுக்கு அடுத்த தெருதான், எனக்குத் தெரியும்னு நானும் அவுங்க கூடவே வந்துட்டேன் என்று விவரங்களைச் சொன்னார்.

    பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? புன்னை நல்லூர் மாரியம்மன் செய்த மாயமா, இதெல்லாம் எதேச்சையாக நடந்த செயலா? அதென்னவோ, எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் பசுபதி மட்டும் நிச்சயமாக நம்பினார், நான் உன் கோயிலைத் தாண்டி வரும்போது உன்னிடம் கெஞ்சி வேண்டிக் கொண்டேன் அல்லவா, நீ அனுப்பி வச்சுட்டியே அம்மா, தாயே, மகமாயி, நீயே எனக்குக் கண்கண்ட தெய்வம் என்று சொல்லி உருகிப் போனார்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!..94

    சக்தி சக்திதாசன்

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!..94

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    “மன்னிக்கத் தெரிந்த மனிதனின் மனது மாணிக்கக் கோவிலப்பா” எனும் வாசகம் எந்த அளவிற்கு யதார்த்தமானது?

    ஒருவர் எம்மைத் தாக்கி விட்டார் அன்றி தகாத வார்த்தைகளால் திட்டி விட்டார் இல்லை எமது மனதைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்.

    இவைகளை நாம் மன்னிப்பது என்பதும், உம்மை உடலளவில் தாக்கி உள்லத்தில் மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டவர்களை மன்னிப்பது என்பதற்கும் அபல வேறுபாடுகள் இருக்கின்றன.

    மனித மனதில் மன்னிப்புகளுக்கும் எல்லைகள் உண்டு என்பதே உண்மையான ஒரு கருத்தாகப் படுகின்றது.

    எதையும் எப்போதும் எப்படியும் மன்னித்து விடலாம் விட வேண்டும் என்பது பார்த்தையளவில் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கலாம் ஆனால் இது எத்தனை தூரம் நடைமுறையில் சாத்தியமாகும் எனும் கேள்வி எழாமல் இல்லை.

    நான் சமீபத்தில் இணையத்தளத்தில் படித்த ஒரு செய்தி என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இத்தகிய வினாக்களைத் தொடுக்க வைத்தது.

    அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலே இது.

    ஒரு மயிரை இழந்தாலும் உயிரை விட்டுவிடும் கவரிமான் என்பார்கள். அது போல பெண்களுக்கு மானம் என்பது அவர்களது உயிரைக் காக்கும் கவசம் போன்றது.

    மானத்தை ழப்பது என்பது பெண்களுக்கு உயிரை இழப்பதற்குச் சமானம். ஆனால் அம்மானம் பலாத்காரமாக அப்பெண்ணிடம் இருந்து பறிக்கப்படும் போது கூட அப்பெண் உயிரை விடுவது தான் ஒரே முடிவா?

    மூர்க்கத்தனம் கொண்ட ஆண் வர்க்கம் தமது மிலேச்சத்தனமான இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்கு பெண்களைன் மீது பலாத்காரத்தைப் பிரயோப்பதனால் அப்பெண் ணின் மானம் பறி போவது உண்மைதான் அதற்காக அப்பெண் உயிரை விட்டு விடுவது ஏற்றுக்கொள்லப்பட்க் கூடியதொன்றா?

    மனதைப் பாதிப்புக்குள்ளாஅக்கும் மிகவும் காராசாரமான கேள்வி இதுவல்லவா?

    நான் இப்போ குறிப்பிடப் போகும் சம்பவம் மன்னிப்பு எனும் பதத்தின் அர்த்தத்தை அதன் எல்லைகளுக்கப்பால் கொண்டு சென்று நிறுத்துகிறது.

    அப்படி என்னதான் நடந்தது? நீட்டி முழக்காமல் விஷயத்தைச் சொல் என்கிறீர்களா? அவசரப் படாதீர்கள் இதோ,

    லண்டனை வதிப்பிடமாகக் கொண்டவர் 40 வயது நிரம்பிய செல்வி.காட்ஜா ரோசென்பேர்க்.

    கடந்த 2008ம் ஆண்டு இவர் 16 வயதே நிரம்பிய இளஞனினால் பலாத்காரமாகக் கற்பழிக்கப்பட்டார்.

    இவரது கற்பழிப்பைத் தொடர்ந்து இதே இளஞன் மற்றொரு 51 வயதான் பெண்மணியையும் கற்பழித்துள்ளார்.

    இவ்விரு கற்பழிப்புக் குற்றங்களையும் ஒப்புக் கொண்ட இவ்விளைஞனுக்கு நீதிமன்றம் 14 வருட சிறைத்தண்டனை விதித்திருந்தது

    இந்த காட்ஜா ரோசென்பேர்க் எனும் பெண் கடந்த வருடம் குர்றசெயல் மீள்பிரிவு அதிகாரிகளின் அனுசரணையுடன் தன்னைக் கற்பழித்த அந்த இளஞனை சிறையில் சென்று நேரடியாகச் சந்தித்து உள்ளார்.

    எதற்கு என்று கேட்கிறீர்களா?

    அவரைத் தான் மன்னித்து விட்டேன் என்ரு அவருக்கு தான் நேரடியாக தெரிவிப்பதற்காகவே.

    கற்பழிப்பு மற்றைய பெண்களுக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சியைத் த்னக்கு ஏனோ ஏற்படுத்தவில்லை என்கிரார் இவர். இத் தாக்குதல் தனது வாழ்வை மிகவும் அதிக அளவில் பாதித்திருந்தாலும் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் தன்னைப் பாதிக்கவில்லை என்கிறார்.

    தான் வாழ்வில் இதனால் மிகவும் கவ்பலைக்குட்டபட்டதுவும், பல விடயங்கள் தன் வாழ்வில் பிழையாகிப் போனதுமே தனக்கு ஏற்பட்ட விளைவுகளே தவிர தான் தாக்கப்பட்டதாக உணரவில்லை என்கிறார்.

    தான் அவரிடம் நேரடியாகச் சென்ரு மன்னித்து விட்டதாக கூர எண்ணியதன் நோக்கம் அவருக்கு சிரையில் இருந்து வெளியே வந்ததும் வாழ்வதற்கு பிடிப்பு ஏற்படுத்தவே என்றும், இப்படியான செய்கையின் மூலம் அவரை வெட்கித் தலைகுனியச் செய்வதினால் அவர் இனிக் குற்றச் செயல்கள் செய்யாமல் தவிர்க்க உதவலாம் என்பதனாலுமே என்கிறார் இவர்.

    தன்மீது மூர்க்கத்தனமாக மற்றொருவரால் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலைச் சமாளித்து அந்நிலைமையிலும் தனது வாழ்வைத் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த வரது துணிச்சலை பல முன்னனி மாதர் அமைப்புகள் பாராட்டியுள்ளன.

    ஆம் மனிப்பு என்பதன் அர்த்தத்தையே மார்றி அமைத்து விட்டார் இந்த வீராங்கனை.

    ஆனால் இத்தகிய செயலினால் இவரது உள்ள உறுதியும், மனிதாபிமானும் உயருகிறதே ஒழிய “கற்பழிப்பு: என்னும் படுபாதகச் செயல் எந்த விதத்திலும் அங்கீகாரம் பெறவில்லை.

    ஒர் பெண்ணின் மீது இத்தகிய தாக்குதலை மேற்கொள்ளும் மிலேச்சத்தனமான கொடூர மனம் கொண்டவர்கள் மன்னிக்கப்பட வேண்டுமா? எனு7ம் வாதமும் ஒருபுறத்தில் எழுவது நியாயமே!

    இருப்பினும் தன் மானத்தைப் பறித்த அக்கயவனின் உள்லத்தை மாற்ற மன்னிப்பு எனும் ஆயுதத்தைக் கையிலெடுத்த இவ்வீராங்கனையும் ஒரு விதத்தில் ஒரு கவரிமான் தான்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

    Share
  • செந்தமிழ்க்கடல் சிலம்பொலி செல்லப்பனார்!

    காவிரி மைந்தன்

    வாழும் தமிழ் மொழியின் வற்றாத ஜீவ ஊற்றை.. வகை வகையாய் எடுத்துரைக்கும் இலக்கியங்கள்! வண்ணத்தமிழ் மொழிக்கு வசந்தகாலம் வந்ததுபோல்.. வந்திருக்கும் செந்தமிழ் அங்கீகாரம்!! வள்ளுவன் முதலாக வாழையடி வாழையாய் நற்றமிழைப் பனையேட்டில் பதித்து வைத்த பைந்தமிழ்ச் சான்றோர் பலர்! இவரெல்லாம் எடுத்துரைத்தப் பொக்கிஷத்தை செல்லரித்து தின்றதுபோக.. மீதமெனப் பத்திரப்படுத்த ஒரு தாத்தா.. உ.வே.சாமிநாத ஐயர் வந்தார்! கிட்டிய தமிழ்ச்செல்வம் அத்தனையும் உயிர்ப்பிக்க தன்னுயிரையே தந்தார்!!

    அத்திருமகனாரின் அளப்பரிய சேவையினால் தப்பித்த இலக்கியப் புதையல்கள்! இவைதான் எமதென்று இன்று மார்தட்டி நிற்கும் நாம்.. தமிழின மொழி கலாச்சாரம் பண்பாடு இவைகளின் ஒட்டுமொத்த உணர்வைப் பெற்றிருந்தால்.. உலகிலேயே உயர்ந்தவர்கள் நாமென்று ஓங்கிக்குரல் கொடுத்திருப்போம்! அடிமை உணர்வுக்கு ஒருபோதும் அடிபணியாதிருந்திருப்போம்! உரிமை வாழ்வென்று உலகிற்கே எடுத்துச்சொன்ன பரம்பரையின் வரலாறு அறிந்திருப்போம்! அகத்துறை புறத்துறை எனப் பகுத்தறிந்து வாழ்ந்தவன் தமிழன்! அவ்வழி நடந்தால் இவ் வையகம் உய்திடும் உண்மையை உரக்கக் கூறுவோம்!

    அறநெறி தழைக்க வேண்டி அன்றுமுதல் புலவர் பெருமக்கள் அய்யன் முதலாக.. வரைந்துவைத்த பாக்கள்.. படிவங்கள்.. செய்யுள்கள்.. செப்புவதென்ன? வீரமும் காதலும் தமிழர் வாழ்க்கை என்கிற சீரும் சிறப்புமான வரலாற்றுப் பெட்டகங்கள் எனத் திகழும் இலக்கியப் பக்கங்களை இனிவரும் தலைமுறைகளுக்கும் எடுத்துரைக்கும் கடமையும் நம்மைச் சார்ந்ததே!

    அவ்வழியே.. தமிழர்தம் சிறப்புகளை தாங்கிநிற்கும் இலக்கியமாய்.. தன்னிகரில்லாப் பெருங்காப்பியமாய்.. ஆள்கின்ற சேரனின் தம்பியாய் பிறந்திருந்தும்.. தனிமை நாடி தவக்கோலம்பூண்டு ஒப்பிலா இலக்கியமாய் ஓங்குபுகழ் சிலப்பதிகாரம்தனை இயற்றி நீங்கிடாப் புகழ்பெற்ற இளங்கோவடிகள்!

    ஆங்கு அதனை பாரினிலே அவையோர் சபையெல்லாம் தினம் முழக்கம் செய்தவராய்.. வாழ்கின்ற வாழ்வெல்லாம் தமிழ்.. தமிழ்.. என்றே வாழ்பவராய்.. எளிமையின் இலக்கணத்தை எடுத்துரைக்கும் வல்லோனாய்.. புன்முறுவல் பூத்ததுபோல் திருமுகம் கொண்டவராய்.. சொல்லேதும் கடினமாய் தன்னகத்தேக் காணாதவராய்.. அல்லும் பகலும் பட்டிதொட்டியெங்கும் பயணம் கொண்டேனும் பைந்தமிழைக் காத்துநிற்கும் சீலராய்.. பாவலராய்.. நாவலராய்.. எதிரிகளே இல்லாத ஏகோபித்த மனிதராய்.. இன்னுமின்னும் இவர் புகழைச் சொல்லச் சொல்ல.. செந்தமிழ் மணக்காதோ? தென்னவரின் பெருமை சிறக்காதோ?

    அன்னவரின் அகவை 85ஆம்! நம்பவே முடியவில்லை.. நாட்டோரே.. நடமாடும் தமிழுக்கு அகவை இங்கேது? அவர் புகழைப் பாடுதலில் எந்தன் பங்கேது? சுகம் சுகமாய் இருப்பதனால் தமிழே உந்தன் சுவைஞன் நான் என்றே வாழ்கின்றேன்! சிலம்பின் பெருமையெல்லாம் உலகை வலம்வந்து எடுத்துரைத்த ஏந்தலிவர்! அருமை மிகநிறைந்த மாமனிதர்! யுகம் யுகமாகத் தேடினினும் காணக்கிடைக்கா மனிதரிவர்! வாழ்கின்ற யுகத்தில் நாம் வாழ்ந்த பெருமையுடன்.. வாழ்த்துரைக்க வயதின்றி வணங்கி மகிழ்கின்றேன்!

    Share
  • குறவன் பாட்டு-28 (நிறைவுப் பகுதி)

    குறவன் நகர வாழ்க்கையைக் கண்டு தனக்குள் வினவுதல்

     

    அண்டை அயலாரைக் காண்பதற்கும் தயக்கம்,

    அன்பைப் பரிமாறிப் பேசிடவும் நடுக்கம்,

    அல்லல் கொண்டாலும் தனக்குள்ளே மறைக்கும்,

    அனாதை வாழ்க்கைக்குப் பெயர்தானோ நகரம்!                        228

     

    புரிந்து கொள்ளாத மணவாழ்க்கை மணக்கும்,

    புரிந்த பின்னாலோ வடுவாகி நிலைக்கும்,

    பிறந்த பிள்ளைகளோ பலநேரம் வதைக்கும்,

    பிறப்பின் பொருளுணராப் பரிதாபம் எவர்க்கும்!                                                                                229

     

    முறையற்ற மோகத்தில் மனதார வீழுகிறான்,

    முடிவற்ற துன்பத்தை முதலாளாய்த் கோருகிறான்,

    மறையுற்ற பொருளெல்லாம் இருளென்று பாடுகிறான்,

    கறையுற்ற காமுகனாய்க் கண்மூடி வாழுகிறான்!                                                                              230

     

    வலியில் வாடும் உயிர்க ளிடம்,

    வணிகம் பேசிப் பொருள் சேர்த்தான்,

    வறுமையில் வாடும் ஏழையை வாட்டிச்,

    சிறுமையில் வாழப் பழகி நின்றான்!                                                                                                          231

     

    கலியுகத்தில் உள்ள கொடுமைகளில், பெரும்

    கல்விச் சுமையும் ஒரு வகையோ,

    நலிவுற்ற மக்களை நஞ்சென வருத்திப்

    பலிகொள்ளும் பள்ளிக் கல்வி இதோ!                                                                                                        232

     

    கணிவுள்ள கண்களைக் காண்ப தெல்லாம்,

    கலியுகத்தில் மிகக் கடின மன்றோ?

    பணிவுள்ள மனிதனைக் காண்ப தற்கும்

    பெருந்தவம் செய்திட வேண்டு மன்றோ!                                                                                                233

     

    தருக்கள், குருவிகள், அறுகம் புற்கள்,

    எதற்கும் தெருவில் இடம் இல்லை,

    அதற்கென வருந்திக் கண்ணீர் சிந்த

    எவர்க்கும் இங்கே மனம் இல்லை!                                                                                                               234

     

    தனதுணர்வை மதிக்காத துரோகிகள் தாள்பற்றிக்,

    கனவுலகில் மிதப்பதே கடமை என்றான்,

    இனவுணர்வு இல்லாமல், தமிழமுதம் கொள்ளாமல்,

    பணவுணர்வு கொண்டுமன நிறைவு கண்டான்!                                                                                    235

     

    பாடுபொருள் இல்லாத கவிதை யாக,

    பாகனவன் இல்லாத யானை யாக,

    பார்வையாது இல்லாத விழிக ளாக,

    பயனற்று வாழ்வதிலே இன்பம் கண்டான்!                                                                                             236

     

    கானகம் காணாக் கொடுமைகளை, நரகக்

    கலியுகம் காணுது அனுதினமும், பரவிக்

    காட்டிலும் அதுகால் பதிக்காமல், விரைந்து

    காத்திடலே என் முதற் கடமை!                                                                                                                     237

     

    இல்லம் திரும்புதல்

     

    விற்பனை முடித்து விரும்பிய வண்ணம்,

    பற்பல பொருட்களை வாங்கிக் கொண்டு,

    நற்துணைக் குறத்தியும் குறவனும் இணைந்து,

    சுற்றம் நிறைந்த இல்லம் திரும்பினர்!                                                                                                      238

     

    சிறுவனைப் போலக் குறவனும் குறத்தியும்,

    சிறுகவலையும் இன்றிப் பறவைகள்  போல,

    சிறகினை விரித்து வாழ்க்கை வானில்,

    நறுமணம் வீசிப் பறந்த னரே!                                                                                                                          239

     

    (நிறைவு பெற்றது)

     

    இயற்கையோடு இரண்டறக் கலந்து, இரசித்து வாழ்ந்து, இறுதியில் இயற்கையுடன் இரண்டறக் கலப்பதே மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களின் வாழ்க்கை நோக்கம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொண்டு எளிமையாக வாழ்வோம்.

    வாழ்க இயற்கை!  வளர்க இயற்கை!!

    அன்புடன்,

    சச்சிதானந்தம்.

    Share
  • ஆயிரம் கைகள் மறைத்துநின்றாலும் – கவிஞர் முத்துக்கூத்தன்

     கவிஞர் முத்துக்கூத்தன்

     

    ஆயிரம் கைகள் மறைத்துநின்றாலும்

    · ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை-

    ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை..

    · இந்தப்பல்லவிஎழுதப்பட்டதுகவிஞர்ஆலங்குடிசோமுஅவர்களால்! அவர் இல்லத்திற்கு சென்றிருந்த அவர்தம் நண்பர் முத்துக்கூத்தன் அவர்கள் கண்ணில் இந்தப்பல்லவிபட.. அண்ணே.. ரொம்பநல்லாயிருக்கு.. இதைநான்எடுத்துக்குறேன்..என்றார்.

    · கழைக்கூத்தாடியாய் தன்வாழ்க்கையை ஓட்டிவந்த முத்துக்கூத்தன் அவர்களை இந்தப் பல்லவி உந்தித்தள்ள.. அவர் உள்ளத்திலிருந்து பொங்கியவரிகள் சரணங்களாகின!

    · அரசகட்டளையில் தமிழ்த்திரையில் முதன்முறையாக .. சண்டைக்காட்சியில் திரைப்பாடல் ஒன்று இடம்பெற்றது அன்றுதான்!

    · மக்கள்தீர்ப்புக்கு எதிராக எவரும் அரசாள முடியாது என்கிற அருமையான வரியையும்.. அவர் மேற்கோள் காட்டிய அனைத்துவரிகளுமே புரட்சித்தலைவருக்குப் பிடித்துப்போக.. அரசகட்டளையில் இடம்பெற்ற பாடலானது. அன்றும் இன்றும் இந்தவரிகள் நெஞ்சில் மனனமானது!

    · ஆடிவா …

    ஆயிரம்கைகள்மறைத்துநின்றாலும்

    ஆதவன்மறைவதில்லை
    ஆணைகள்இட்டேயார்தடுத்தாலும்
    அலைகடல்ஓய்வதில்லை

    ஆடிவா..ஆடிவா.. ஆடிவா..

    · ஆடப்பிறந்தவளேஆடிவா
    புகழ்தேடப்பிறந்தவளேபாடிவா
    ஆடிவாஆடிவாஆடிவா

    இடைஎன்னும்கொடியாடநடமாடிவா
    இசைகொண்டுஅழகேநீதேராடிவா
    தரைமீதுபோராடசதிராடிவா
    செந்தமிழேநீபகைவென்றுமுடிசூடிவா
    (ஆடிவா )

    மயிலாடவான்கோழிதடைசெய்வதோ
    மாங்குயில்பாடகோட்டான்கள்குறைசொல்வதோ
    முயல்கூட்டம்சிங்கத்தின்எதிர்நிற்பதோ
    அதன்முறையற்றசெயலைநாம்வரவேற்பதோ
    (ஆடிவா )

    உயிருக்குநிகர்இந்தநாடல்லவோ
    அதன்உரிமைக்குஉரியவர்கள்நாமல்லவோ
    புயலுக்கும்நெருப்புக்கும்திரைபோடவோ
    மக்கள்தீர்ப்புக்குஎதிராகஅரசாளவோ
    (ஆடிவா )

     

    புரட்சிக்கும் தலைவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தியபாடல் என்றுகூடச் சொல்லலாம்! நாட்டுப்பற்று, நமக்குள்ள உரிமை, எதிரிகளை எள்ளாடல், நமது வீரம் என்று எல்லாவற்றையும் பட்டியலிட்டு படைத்துள்ள பாட்டுப் படையலிது! எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கான கொள்ளைவிருந்து.. நாட்டிய மயிலாய் திரையில் தோன்றிநடைபோட்ட கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் கூட்டணியில் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன்வழங்கிய இசையில் உணர்வுகளை மீட்டிடும் பாட்டு!! உள்ளம்எழும்இதைக்கேட்டு!!

    Share
  • இவனுக்கு அப்போது மனு என்று பெயர் – புத்தக மதிப்புரை

    ரஞ்சனி நாராயணன்

    manu

    புத்தகத்தின் பெயர்: இவனுக்கு அப்போது மனு என்று பெயர்

    ஆசிரியர் : இரா. எட்வின்

    பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்

    பக்கங்கள்: 104

    விலை: ரூ. 70/-

    ஆசிரியர்:

    பெரம்பலூரில் தனது குடும்பத்துடன் வசிக்கும் திரு இரா. எட்வின், ஒரு பள்ளி ஆசிரியர். பத்திரிக்கைகளுக்கு எழுதுவதுடன் ‘நோக்குமிடமெல்லாம்’ என்ற வலைப்பதிவையும் நிர்வகித்துவருகிறார். ஆசிரியராக இருப்பதால் இவரது பதிவுகள் பள்ளிக்கூடம், மாணவர்கள் சார்ந்ததாக இருக்கிறது. கூடவே சமூகத்தில் தான் காணும் ஏற்றத்தாழ்வுகளையும் பதிவு செய்கிறார்.

    இந்தப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருக்கும் கவின்மலர் இவரது எழுத்துக்கள்  ‘பாசாங்கு இல்லாத எழுத்துக்கள்’ என்கிறார். இவரது வெளிப்படையான எழுத்துக்கள், அதிலிருக்கும் உண்மைகள் நம்மையும் கவருகின்றன. இந்தப்புத்தகத்தில் மொத்தம் இருபது கட்டுரைகள் இருக்கின்றன. வலைப்பதிவுகளின் தொகுப்பாக இருப்பதால், ரொம்பவும் நீண்டதாக இல்லாமல் சுருக்கமாகவும் நறுக்கென்றும் இருக்கின்றன என்பதால் படிப்பதற்கு எளிதாக இருக்கின்றன. ‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ என்பதுபோல இவரது கட்டுரைகளும் காரசாரமாகவே இருக்கின்றன.

    முதல் கட்டுரையில் முகநூலில் தான் கண்ட ஒரு கிழிந்த பனியனின் புகைப்படத்தைப் பற்றி எழுதுகிறார். தனக்குப் பிறந்திருக்கும் புது குழந்தையை போர்த்தி எடுத்துக் கொண்டுபோக காசில்லாத ஒரு ஏழை தந்தையின் கிழிந்த பனியன் அது என்பது நம் மனதை மிகவும் வருத்துகிறது. சுதந்திரம் பெற்று இத்தனை வருடங்களாகியும் ஏழ்மையை ஒழிக்க முடியாத இந்நாட்டில் பொக்ரான் எதற்கு? என்று கேட்கிறார் இந்த முகநூல் பக்கத்தின் உரிமையாளர் டெல்லி AIIMS இன் இளம் மருத்துவர். 2010 இல் மட்டும் ஏறத்தாழ 1,30,000 இந்தியக் குழந்தைகள் ஏதேதோ காரணங்களால் மாண்டு போயிருக்கிறார்கள் என்பதை அழுதுகொண்டே பதியும் இந்த இளம் மருத்துவர் புன்னகைத்துக்கொண்டே கொந்தளித்து கேட்கும் இன்னொரு கேள்வியையும் இரா.எட்வின் நம் முன் வைக்கிறார்: ‘18 மைல் தூரத்திலிருந்து வந்தால் அவனுக்கு அகதி முகம். 4000 மைல் தொலைவான இத்தாலியிலிருந்து வந்தால்….?

    கணவனை இழந்த கண்ணகிக்கு சிலை வைக்கும் இந்த சமூகம், நல்ல நிகழ்ச்சிகளில் விதவைகளை கேவலப்படுத்துவது ஏன்?

    மன்மோகன் சிங்கிற்கு ஏறத்தாழ பத்து டாக்டர் பட்டங்கள் ஏன்?

    முகநூலில் பொன்னான நேரத்தை வீணாக்கும் மனிதர்களிடையே இப்படியும் ஒரு இளைஞன் என்று நமக்கு அறிமுகம் செய்கிறார் இரா. எட்வின்.

    மழைகாலத்தில் ஏற்படும் வெள்ளத்தால் ஏற்படும் உயிர் சேதத்திற்கு, கால்நடை சேதத்திற்கு, உடமை சேதத்திற்கு, குடிசை சேதத்திற்கு நிவாரணத் தொகைகளை வாரிவழங்கும் அரசு அந்தத் தொகையை  ஏரிகள், குளங்கள், குட்டைகள், கசிவு நீர் குட்டிகள், தடுப்பணைகள், வாய்க்கால்கள், போன்றவற்றை தூர் எடுக்கவும், நதிகளில் ஏரிகளில் மற்றும் நீர் நிளிகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரை, சீத்தகருவை போன்றவற்றை அப்புறப்படுத்துவதற்கும்   ஏன் பயன்படுத்தக் கூடாது என்று ‘நதி பயணப்படும் பாதை’ என்ற கட்டுரையில் கேட்கிறார்.

    வோட்டு போடுவதற்கு பணம் கொடுக்கும் வழக்கத்தை கட்சிகள் எப்படியெல்லாம் பயன்படுத்துகின்றன, எங்கேயெல்லாம் இந்தப் பணத்தை ஒளித்து வைக்கின்றன என்று சொல்லும் ஆசிரியர் மதுரையில் ஒருவர் தனது வீட்டில் ‘எங்கள் வீட்டு வாக்குகள் விற்பனைக்கல்ல’ என்று எழுதிவைத்திருப்பதைக் குறிப்பிடுகிறார்.

    தனித்தனியான கட்டுரைகள் என்றாலும் இயல்பாகவே சில கட்டுரைகள் இன்னொன்றின் தொடர்ச்சியாகவோ  அல்லது அதனுடன் சம்பந்தப்பட்டதாகவோ அமைந்திருக்கின்றன இந்தப் புத்தகத்தில். ‘பெயரில் இருக்கிறது’ என்ற கட்டுரையில் பார்ப்பனீய எதிர்ப்பாளரும், தமிழ்மொழிப் பற்றும் கொண்ட  கனக சுப்புரத்தினம் எப்படி பாரதிதாசன் என்ற பெயரை வைத்துக் கொண்டார் என்பதற்கு பாரதிதாசன் சொன்ன பதில்களை தனது பதிவில் குறிப்பிடும் ஆசிரியர் பாரதியும், பாரதிதாசனும் முதல்சந்திப்பை ‘உச்சங்களின் முதல் சந்திப்பு’ என்று இன்னொரு கட்டுரையில் எழுதுகிறார்.

    இந்தப் புத்தகத்தின் பெயரில் வரும் கட்டுரையில் 1892 ஏப்ரலில் சென்னை விக்டோரியா மகாலில் நடைபெற்ற ‘சென்னை மகா சபை கூட்டம்’ பற்றி பேசுகிறார். அயோத்திதாசப் பண்டிதர் பறையர் குலத்தின் பிரதிநிதியாக ஆலயங்களில் வழிபடும் உரிமை, தரிசாகக் கிடக்கும் நிலங்களை தனது குலத்தைச் சார்ந்த கிராமவாசிகளுக்குப் பிரித்துக் கொடுப்பது, தனது இனக் குழந்தைகளுக்கும் நான்காவது வரை படிப்பதற்கு இலவச பாடசாலைகள் அமைப்பது போன்ற மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைக்கிறார். அதை எதிர்த்து சிவராம சாஸ்த்ரி திமிராகப் பேசுவதையும் அதற்கு பண்டிதர் கொடுக்கும் பதிலடியையும் கூறி எல்லாக்காலத்திலும் மனு இருக்கிறான். பெயர்தான் வேறு என்கிறார்.

    இதற்கு அடுத்த கட்டுரை ‘கதவை சாத்தியது யார்?’. படிக்கத்தெரியாத ஒரு பையனால் ‘இழு’ என்று எழுதப்பட்டிருக்கிற கதவை திறக்க முடியவில்லை என்ற செய்தி சொல்லும் குறும்படத்தைப் பற்றியது. படிப்பு எல்லாக் கதவுகளையும் திறக்கும் என்பது சரி, ஆனால் கதவை சாத்தியது யார் என்ற கேள்வியை நம் முன் வைக்கிறார். கல்வி இல்லாதவனுக்கு கதவுகள் திறக்காது என்பதை ஒத்துக்கொள்ளும் வேளையில் இவர்களை உள்ளே விடாமல் கதவைச் சாத்திய களவாணிகளை சும்மா விடப்போவதில்லை என்கிறார்.

    தாத்தாவின் பணத்தைக் கொடுத்து மருத்துவ படிப்பு படிக்க விரும்பாத ஒரு மாணவன், கூட்டம் நெறியும் பஸ்ஸில் பிரயாணிக்க நேரும்போது இப்படி நசுங்கிக் கொண்டு பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறதே என்று ஒவ்வொருவரும் நடத்துனரை சபித்துக் கொண்டுவர, அவரை பார்த்து ‘பாவம்’ என்று பரிதாபப்படும் சிறுவன் என்று பலரையும் இவரது கட்டுரைகளில் சந்திக்க முடிகிறது.

    சீருடையும் மதிய உணவும் கொண்டுவந்த பெருந்தலைவர் காமராசரைப் பற்றியும், முரட்டு மொழிப்பற்றாளர் என்று நெ.து. சுந்தரவடிவேலு பற்றியும், திப்பு சுல்தான் பற்றியும் நெகிழ்வுடன் எழுதுகிறார் ஆசிரியர்.

    சின்ன சின்ன கட்டுரைகளால் நம்மைப் பெரிதும் சிந்திக்க வைக்கும் இவரது திறமை வியக்க வைக்கிறது. எல்லோரும் நிச்சயம் படிக்க வேண்டிய நூல்.

    Share
  • மாதொரு பாகன் – பெருமாள் முருகன் – புத்தக மதிப்புரை

     வீரக்குமார்

     

    நாவலின் வழியே ஒரு ஆவணம்…

    mathoru

    நல்ல படைப்புகள் எப்பொழுதுமே வாசிப்பவர்களுக்கான கேள்விகளைத் தனக்குள் தாங்கியே நிற்கும். அவ்வகையில் “மாதொருபாகன்” ஒரு காலகட்டத்திய வாழ்க்கை முறையை  நம்முன் நிறுவி, அதுகுறித்த உளவியல் கேள்விகளை மனதுக்குள் கிளர்த்திவிடக்கூடியது.

     சுதந்திரத்திற்கு சற்று முந்தைய ஆண்டுகளில் கொங்குப்பகுதியின் திருச்செங்கோடு மலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிகழ்கிறது இந்த நாவல் சொல்லும் வாழ்க்கை. அப்பகுதியின் வனங்கள் முற்றிலும் அழிந்துவிடாமல் இருந்த காலகட்டத்தில் வாழ்வாதாரமாக விவசாயத்தையும் கால்நடைவளர்ப்பையுமே நம்பி வாழ்ந்த ஒரு குடும்பத்து உறுப்பினர்களைக் கதாபாத்திரங்களாக்கி அக்காலகட்டத்து வாழ்க்கையின் ஒரு முக்கியமான நடைமுறை வழக்கத்தை அந்தப் பகுதிக்கே உரித்தான வட்டார மொழியில் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார் பெருமாள்முருகன்.

    திருமணஉறவின் மூலம் உருவாகும் குழந்தைப்பேறுதான்  அந்த உறவை அர்த்தப்படுத்தும் என்கின்ற எதார்த்தம்  இந்த நாவலில் கையாளப்பட்டிருக்கிறது. அந்தப் புதிய உயிருக்கான எதிர்பார்ப்பும், காத்திருப்பும் வெறுங்கனவாய் நீளும்போது அதற்கான தீர்வாக மிக மேலான நீதியுணர்வுடன் கடவுளைத் துணைகொண்டு கிராமத்து முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த ஒரு வழக்கம்தான் இந்த நாவலின் மிக ஆச்சர்யமான  திறப்பு.

    குழந்தைப்பேறு இல்லாதபோது அதற்குப் பெண்களைக் காரணம் காட்டி மலடிப்பட்டம் சூட்டி, மறுமணம் செய்துகொண்ட ஆண்மேலாண்மை நிலவியதாக நம்பும் ஒரு காலகட்டத்தில் ஆண்களுக்கும் குறையிருக்கலாம் என்னும் கோணத்தில் எளிய கேள்வியை முன் வைத்து நம் சமூகம் ஒரு தீர்வைச் சிந்தித்திருப்பது உண்மையிலேயே பெருவியப்புத்தான்.

    இந்தத் தீர்வை அவர்கள் எங்கிருந்து கண்டடைந்தார்கள்? எவ்வளவு காலத்துக்கு முந்திய வழக்கமாக அது இருந்து வந்தது? இவ்வழக்கம் கொங்குப்பகுதியில் மட்டும் நடைமுறையில் இருந்ததா அல்லது மற்ற பகுதிகளிலும் இருந்ததா? இந்தத் தீர்வுகளை நாடிய தம்பதியர்கள், அவ்வழியின் மூலம் உருவான பிள்ளைகளின் மனோநிலை, இதை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்த அல்லது மறுதலித்த சுற்றத்தாரின் நிலை போன்ற சமூக மற்றும் உளவியல் கூறுகள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்த நாவல் நவீன சமூகவியலின் ஆராய்ச்சிக்குத் தீவிரமாக உட்படுத்தப்படவேண்டிய அவசியம் கொண்டது.

    முதல் அத்தியாயத்திலேயே நாவலை நகர்த்திச் செல்லும் பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் குணாதிசயங்கள் தொட்டுக்காட்டப்பட்டு, அவற்றுக்கு இடையே உள்ள உறவுகளின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு விடுகின்றன. இரண்டாவது அத்தியாயத்தில் நாவலின் கூறுபொருள் திறக்கப்பட்டுவிடுகிறது. அடுத்தடுத்த விரிவுகளில் குழந்தைப் பேறின்மையால் காளியும் பொன்னாளுமாகிய மையப்பாத்திரங்கள் தங்கள் இல்லறவாழ்க்கையின் துயரம் கவிக்கும் கேள்விகளைச் சுற்றத்தார் மற்றும் நட்புகளின் மூலம் எதிர்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். சகலவிதமான அகப் புற நிலவரங்களை தங்களின் குறைபாட்டுடனேயே பொருத்திப் பார்த்துத் துன்பம் மிகுகின்றனர். தழையத்தழையக் காய்த்துச் செழிக்கும் தங்கள் பூவரசன் மரமும் கன்றுகளைத் தொடர்ந்து ஈனும் தன்வளர்ப்பான வளமான கிடாரியும் தாங்களே அள்ளி முடியும் கூந்தலும்கூடத் தங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டி இவர்களைப் பரிகாசம் செய்வது போல் உணர்கிறார்கள்.

    தொன்மங்களையும் முன்னோர்களின் நம்பிக்கைகளையும் தடம் பற்றி அந்தத் தம்பதிகள் தங்களின் குழந்தைப்பேறு அற்ற குறையை நிவர்த்திக்க முனையும் தொடர்முயற்சிகள் ஒவ்வொன்றாக நழுவிக்கொண்டே போகின்றன. அவர்களின் நம்பிக்கைகள் சிதையும் ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்  உடைகிறார்கள். தங்களுக்குத் தாங்களே ஆறுதல்படுத்திக் கொள்கிறார்கள். ஆனாலும் அவர்கள் அறியாமலேயே அவர்களின் ஆழ் மனம் தனித்தனியே சில தீர்மானங்களைத் தங்களுக்காக உருவாக்கி வருவதையும் அதன் துாலவெளிப்பாடாக அவர்களின் நடவடிக்கையில் மாற்றங்கள் நிகழ்வதையும் மிக நுட்பமான உளவியல் தன்மைகளோடு பதிவுசெய்து கொண்டே வருகிறது நாவல். காளியின் மறுதாரம் பற்றிய மனக்குழப்பத்திலும் சாபக் குடும்பத்துக்கு வாழ்க்கைப்பட நேர்ந்துவிட்ட பொன்னாளின் வருத்தத்திலும் அவற்றை நாம் உணர்ந்து கொள்ளமுடியும்.

    ஒரு குழந்தையின் கருவை உருவாக்கிவிட எடுத்த அத்தனை முயற்சிகளும் பலனற்றுப் போன நிலையில் அந்தத் தம்பதிகளின் மேல் இறுதியாகக் காலம் ஒரு தீர்வை முன் வைக்கிறது. அது குறையுள்ள தம்பதிகளுக்காக மூதாதையர்களால் கண்டடையப் பெற்ற கடவுளின் தீர்வு.

    இதுவரை ஒரே பாதையில் பயணித்த அந்த இருவரின் தேடல்கள் அந்தத் தீர்வை ஒட்டி வேறுவேறு பாதைகளில் பயணிக்க ஆரம்பிக்கின்றன. இறுதியாகத் தங்கள் தரப்பின் நிலைக்கு உட்பட்டு இருவரும் தேர்ந்தேடுக்கும் முடிவுகள் ஆன்மாவை அலற வைத்துவிட்டு அமரிக்கையாக நிலைத்துவிடுகிறது.

    பெருமாள்முருகனின் படைப்பூக்கம் நின்று நிறுவிய படைப்புக்களில் இதுவும் ஒன்று. உயிர்ப்பான சித்தரிப்புகள் மூலம் காட்சித் துல்லியத்தைக் கொண்டுவருவதிலும் கதாபாத்திரங்களின் மனநிலைகளை விசாலமாக ஆராய்வதிலும் வரலாற்றுச் செய்திகளை நாவல் நெடுக விரவவிட்டு அவற்றைக் காலத்தின் குறீடாக்குவதிலும் வாட்டார மொழியின் சாத்தியங்களைப் பிரயோகித்து வார்த்தைகளைக் காலப் பெட்டகத்தில் சேமித்து வைப்பதிலும் அவரின் எழுத்தாளுமை பிரமிக்க வைக்கிறது.

    ஒவ்வொரு விவசாயக் குடும்பமும் கால்நடைகளுக்கான ஓய்விடத்தைத் தங்களின் இருப்பிடமாகவே பாவிப்பார்கள். பொதுவாக மாட்டுத் தொழுவம் அல்லது மாட்டுக் கொட்டகை என்று குறிப்பிடப்படும் அந்த இடத்தைக் கொங்குப் பகுதி விவசாயிகள் ‘தொண்டுப்பட்டி’ என்று சொல்வார்கள்.

    தொண்டுப்பட்டியின் சுகத்தை உணர்ந்தவனுக்கு அது சொர்ககம். கிலுவன் மரக்கன்றுகளால் வரையறுக்கப்பட்ட எல்லை. திறப்பு வாயிலுக்குச் செய்யப்பட்டிருக்கும் படல் நேர்த்தி. உள்ளுக்குள் ஓங்கி உயர்ந்து நிற்கும் வைக்கோல் போர். சேகரப்படுத்தப்பட்ட உழவு உபகரணங்கள். இவற்றினுடாக உழைத்தும் மேய்ந்தும் சலித்துப்போய்த் தங்களுக்கே உரித்தான சாய்மானங்களில் படுத்தபடி ஓய்வெடுக்கும் ஆடு மாடுகள். வயிற்றுக்குள் தள்ளிய தீனியை வாய்க்கு மீட்டு வந்து கண்கள் சொருக அவை அசைபோடும் அழகு. கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி அப்துல்ஹமீதின் குரலை ரேடியோவில் கேட்டுக்கொண்டு அவற்றை ரசித்த மாலைப் பொழுதுகள். அமைந்த தனிமையில் மெலிதாக எல்லைமீறிச் செய்த தவறுகள், எல்லோருக்கும் பரிச்சயமான பாலியல் ஆய்வுகள், போதையின் பல பரிமாணச் சுவைகள், சோக்காலிகளுடன் இணைந்து தீட்டிய கலவரத் திட்டங்கள் என எனது பிரத்யேகமான விஷயங்களை மீட்டுக் கொண்டுவந்து கொடுக்கின்றன பெருமாள்முருகனின் ‘தொண்டுப்பட்டி’ பற்றிய சித்தரிப்புகள். அதே போல்தான் மலையுச்சியில் இருக்கும் வரடிகல் பற்றிய சித்தரிப்புகளும் கவனம் கொள்ளத்தக்க எழுத்துத் திறன்.

    அவருடைய ஆழ்ந்த அவதானிப்புக்குச் சாட்சியாக இதில் இன்னொரு இடத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். நாவலின் ஒரு இடத்தில் இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட வண்டியில் அதைச் செலுத்துவதற்காக ஒருவர் ஏற முற்படுவார். இரட்டை மாட்டுவண்டியில் ஏறுவதற்கு அதில் பூட்டப்பட்ட ஒரு காளைமாடு சற்று வெளிப்புறமாக நகர்ந்து இடம் கொடுக்க வேண்டும். லேசாகத் தட்டினால் மாடு நகர்ந்து இடம் கொடுக்கும். அந்த நுட்பமான இடத்தை பெருமாள்முருகன் எழுத்தில் தொட்டுக்காட்டியிருப்பார்.

    ஒரு சமூகத்தின் வரலாற்றுப் பின்புலத்தை, நாகரிகத்தை, அவர்களின் பொருளாதார நிலையை ஒரு வீட்டின் விஸ்தாரத்தைக் காட்சிப்படுத்துவதிலேயே வாசகனுக்கு இந்த நாவல் உணர்த்திவிடுகிறது. கோழிக் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து காக்கும் சாமர்த்தியம், கொம்பு நுனியில் சாணம் வைத்து மரம் நடுவதில் உள்ள நேர்த்தி, அதற்குத் தண்ணீர் பாய்ச்சும் சமயோசிதம், மாட்டுவண்டி ஓட்டுவதில் உள்ள லாவகம், கோயிலாட்டத்தில் எடுத்துவைக்கும் அடிகள், குறிதவறாமல் கவண் எறியும் திறன், ஆண்பெண் பேதமற்று மதுவை நுகரும் பொதுமை, எருக்கலங்கோலைப் பெண்ணின் குறிக்குள் செலுத்தி அதன் உஷ்ணத்திலேயே கருவைக் கலைத்துவிடும் மருத்துவம் என்று கிராமத்தின் வழமைகள் பலவற்றையும் தொட்டுச்செல்கிறது நாவல்.

    நாவல் உருவாக்கத்தில் காலம் எப்போதுமே தனக்கான ஒரு பங்கை முன்மொழிகிறது. அதுவும் இதுபோன்ற கலாச்சாரம் சார்ந்த கதையாடல்களுக்கு அதன் அவசியம் மிக அதிகம். அந்த அடிப்படையில் இதில் காலம் மிகச் சரியாக வரையறுக்கப்படுகிறது. 1930 களில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட சென்னை மாகானத்தின் முதல்வராக இருந்த ராஜாஜியின் மதுவிலக்குச் சட்டம் காலத்தை உறுதிசெய்யக் கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா டாக்கீசும் ஸ்ரீவள்ளி திரைப்படமும் அதற்குத் துணை நிற்கின்றன. இப்படி நிர்ணயிக்கப்பட்ட காலம் நாவலின் போக்கில் முன்பின் எனத் தடம்மாறித் தன் இருப்பை உணர்த்திச் செல்கிறது.

    இவையெல்லாம் நாவலின் புறக்காரணிகள். ஆனால் இந்த நாவலின் அடிநாதம் அதன் அகநிலையில் மையம் கொண்டு உள்ளிருந்து ஒலிக்கும் சுயத்தின் குரலால் எழுப்பப்படுகிறது. காளிக்குள் படிந்திருக்கும் ஆண்வர்க்கக் கசடுகளும் சாதிபற்றிய கற்பிதங்களும் அவனைத் தீர்வுக்கு எதிர்த்திசையில் நகர்த்துகின்றன. மறுமணம் பற்றிய அவன் தவிப்பு, தான் வரடன் ஆகிவிடக்கூடாது என்பது பற்றிய அச்சம், தனக்குச் சாதகமில்லாத சடங்குகள் மீதான எதிர்நிலை என்று பலவிதமான உணர்ச்சிகளின் ஊசலாட்டத்திலேயே அவன் இழுத்துச்செல்லப்படுகிறான். காலம் இடம் பற்றிய கவலைகள் ஏதுமற்றுக் கவியும் பொன்னாள் மீதான காமம் அவனுக்குள் ஒரு விதமான ஆசுவாச உணர்வைத் தந்தாலும் அது தற்காலிகத் தீர்வாகவே அமைந்துவிடுவது காளியின் துரதிர்ஷ்டம். பொன்னாளின் உடல் மேல் அவனுக்கிருந்த காமத்தின் அளவை ஒப்பிடுகையில் அவளுடைய மனதின்பால் அவனுக்கிருந்த கரிசனம் குறைவுதான் என்பதை அவனின் இறுதி உறுதிசெய்கிறது.

    ஆனால் சுற்றத்தார்களின் தொடர்ந்த அழுத்தங்களுக்கு எதிராக விடுதலையுணர்வை வேண்டிநிற்கும் பொன்னாளின் மனம், தன் குறைக்குத் தீர்வைக் கண்டடைந்தது முதல் அதிசயத்தக்க அளவில் தன் சுயத்தை இழந்து புதியதொரு விழிப்புநிலையை அடைகிறது. காளியின் கண் அசைவுக்குக் கட்டுப்பட்டிருந்த அவள் வாழ்க்கை, வேறு கதியில் திரும்ப, சட்டென்று அவள் விசித்திரமான அனுபவங்களுக்கு உட்படுகிறாள்.

    அவளைப் பற்றியதான இறுதி அத்தியாயங்கள் வாசக அனுபவத்திற்கான  உச்சபட்சப் படைப்புச் சாத்தியம். எவரொருவர் தன் மனதை ஒருமுகப்படுத்தி முதல் அத்தியாயத்திலிருந்து துவங்கி ஒரே அமர்வில் கடைசிவரை சீராகப் படித்து வருகிறார்களோ அவர்களை ஒருவித மாயஉணர்வுக்கு இட்டுச் சென்றுவிடும் வல்லமை கொண்டது பொன்னாள் திருவிழாகூட்டத்தில் தனிமைப்படுத்தப்படும் இறுதிப் பகுதி.

    அவள் தனிமையில் தள்ளப்படுகிறாள். ஒரு கணத்தில் அவளை நெருங்கியிருந்த எல்லாமும் விடுபடுகிறது. மக்கள் வெள்ளத்தால் சூழப்படுகிறாள். எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால் யாரும் இல்லை என்று உணர்கிறாள். மனதில் நிம்மதி படர்கிறது. எல்லாவற்றையும் புதிதாகப் பார்க்கத் தொடங்குகிறாள்.

    அங்கு ஒரு தடிவரிசை (சிலம்பாட்டம்) நடந்து கொண்டிருக்கிறது. கண்மூடி அதன் சீரான ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசையை உள்வாங்குகிறாள்.

    மனசுக்குள் பீடித்துக் கிடக்கும் இறுக்கங்களை எல்லாம் பட்பட்டென்று தட்டி உடைப்பதை உணர்ந்தாள். தடிகள் மோதிக் கொள்ளும் வெறும் சண்டையல்ல இது. மூடிக் கிடக்கும் ரகசியங்களை வெளிக் கொண்டுவர மேற்பூச்சுகளைத் தட்டிச் சிதறடிக்கும் மந்திரக்கோல் விளையாட்டு என்று இதைக் குறிப்பிட்டு எழுதுகிறார் பெருமாள்முருகன்.

    அங்கு விளையாடும் ஆண் உடல்கள் அவள் மனதுக்குள் சில மாற்றங்களை நிகழ்த்துகின்றன. அங்கிருந்து விலகிவிட எண்ணும்போது தன் வலக்கையைப் பற்றும் வித்தியாசமான ஒரு தொடுதலை உணர்கிறாள். சட்டென்று காளியின் ஞாபகம். பழையனவற்றை உதறி எறிந்து விட்டோமே என்று அவள் மனம் கூறுகிறது. காளியின் நினைவை அவள் விரும்பவில்லை. ஆனால்,

    மேலோட்டமாக வாரிக் கொட்டிவிடலாம் என்று தோன்றுபவற்றைப் பற்றிப் பிரச்சினையில்லை. அழுந்திக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போய் மக்கிக் கிடப்பவற்றை வெட்டி எடுத்து வீசுவது அத்தனை எளிதா?  

    என்ற அற்புதமான வரிகளை அங்கு எழுதுகிறார்.

    கையைப் பற்றிய முகம் பார்த்தவுடன் அது அவளுக்கானதில்லை என்ற தீர்மானத்தை அவள் மனம் எடுக்கிறது. உடனே தடிவரிசையின் லயம் தப்புகிறது. அந்த இடம் மனதுக்குப் பொருத்தமற்ற சூழலுக்கு உள்ளாகியது. இங்கு தன் படைப்புத் திறனை உச்சத்துக்குக் கொண்டு செல்கிறார் பெருமாள்முருகன்.

    அவள் பார்க்கும் தடிவரிசை உருவங்களை அக்கூட்டத்திலிருந்து உருவித் தனியாக எடுத்தாள். ஒவ்வொரு உருவத்தையும் கட்டியணைத்து முத்தம் கொடுத்தாள். இந்தச் சாமிகளுக்கு இவ்வளவுதான் என்று தோன்றவும் மெல்ல அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

    ஒரு பெண்ணுக்குள் அவள் கணவனை மீறி வேறு ஆணுடன் கிளர்ந்தெழும் காம உணர்வுகளைத் துளிகூட ஆபாசமில்லாமல் கலையாக்கிய விதம் இந்த நாவலை அபாரமான படைப்பாக மாற்றுகின்றது.

    பெருமாள்முருகன் தன் மற்ற கதாபாத்திரங்களையும் இந்தப் படைப்புக்குத் துணை செய்யும் வண்ணம் வடிவமைத்திருக்கிறார். வாழவேண்டிய வயதில் கணவனை இழந்தாலும்கூடத் தன் தளராத உழைப்பாலும் தியாகத்தாலும் எதிர்காலத் தலைமுறைகளின் வளத்தை உறுதிசெய்துவிடும் தகுதி படைத்த மாராயி, திருமண பந்தத்தைத் தாண்டியும் வாழ்க்கை பல திறப்புகளைக் கொண்டது என்பதை உணர்ந்துகொண்ட நல்லுப்பையன் சித்தப்பா போன்ற கதாபாத்திரங்களின் துணையுடன் நாவல் நெடுகிலும், சாத்தியப்படும் எல்லா அலகிலும் பொன்னாயிக்கு இறுதியாக வாய்க்கவிருக்கும் வாய்ப்பை நேர்மறையாக எதிர்கொள்ளும் உதாரணங்களைப் படைத்துவிடுகிறார்.

    வாழ்க்கை எக்காலத்திலும் அது எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான  தீர்வுகளை  வழிநெடுகிலும் உருவாக்கியே வந்துள்ளது. சமூக மாற்றங்களாலும் அறிவுநிலை மேம்பாடுகளாலும் அந்தத் தீர்வுகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. ஆனால் அது உருவாக்கிவிட்டுச் செல்லக்கூடிய தடயங்கள் தங்களை ஆவணப்படுத்துவதற்கு ஒரு கலைஞனையே வேண்டி நிற்கின்றன. அந்த வகையில் பெருமாள்முருகன் செய்து முடித்த மாபெரும் கடமையே “மாதொருபாகன்.”

                                                                                    ————-

    நூலின் ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பு :

    பெருமாள்முருகன்.

    கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய படைப்புத் துறைகளுள் இயங்கிவருபவர். அகராதி, பதிப்புப் பணிகளில் ஈடுபாடு. தமிழ்ப் பேராசிரியர் பணி. இவரது மூன்று நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவை ‘Current Show’ (நிழல் முற்றம்), ‘Seasons of the Palm’ (கூளமாதாரி), ‘One Part Woman’ (மாதொருபாகன்). கதாவிருது, விளக்கு விருது முதலியவற்றைப் பெற்றுள்ளார்.

    அலைபேசி : 94426 98106

    மின்னஞ்சல் : murugutcd@gmail.com

    நூல் வெளியான ஆண்டு  :            டிசம்பர் 2010

     பக்க எண்ணிக்கை           :              190 பக்கங்கள்.

     விலை               :               ரூ.140/-

     பதிப்பக முகவரி                    :               காலச்சுவடு பதிப்பகம்.

                               669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629 001

    Share
  • ‘டார்வின் படிக்காத குருவி’ – புத்தக மதிப்புரை

    ஜி. கலையரசி

    kalikal

     

    புதுவை அகில இந்திய வானொலியில் முதுநிலை அறிவிப்பாளராக பணியாற்றும் உமாமோகன் அவர்களின் முதல் கவிதைத்தொகுப்பு இது.

    இவரது கவிதைகள் ஏற்கெனவே வண்ணக்கதிர், செம்மலர், ஆனந்தவிகடன், கல்கி ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.  வல்லமை, சொல்வனம், உயிரோசை, அதீதம். கீற்று, திண்ணை, மஹா கவிதை உள்ளிட்ட பல இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

    ‘டார்வின் படிக்காத குருவி,’ என்ற ஒரு கவிதையின் பெயரையே, தன் தலைப்பாகத் தாங்கி நிற்கும் இந்நூலில், நூற்றுக்கும் மேற்பட்ட  கவிதைகள் உள்ளன.

    மாந்த நேயம், இயற்கையோடியைந்த வாழ்வு, பசுமை சூழலைக் காத்தல், சுற்றுச் சூழலின் சமனைக் காப்பதில் பெரும் பங்கு வகிக்கும் பறவைகளை அழிவிலிருந்து மீட்டல், மலைக்கும் மடுவுக்குமான பொருளாதார ஏற்றத்தாழ்வை  நீக்குதல் போன்ற சிறந்த சமூக சிந்தனைகள், இவரது பல கவிதைகளின் பாடுபொருளாக ஒலிக்கின்றன.

    இயற்கையை விட்டு வெகுதூரம் விலகிப் போய், அனைத்தும் வணிகமயமாகி விட்ட இன்றைய சூழலில், நிலவோடு வாழ்ந்த அந்த இனிமையான நாட்களின், பசுமையான நினைவுகளை அசை போட்டு ஏங்குகிறார் கவிஞர்.

    நிலவைக் காட்டிச் சோறூட்டவோ, கதைகள் சொல்லிச் சீராட்டவோ இன்று யாருக்கும் நேரமில்லை.  தொலைக்காட்சிப் பெட்டியில் மூளையை அடகு வைத்து, கண் சிமிட்டக் கூட மறந்து, கார்ட்டூன் பார்த்தபடியே என்ன தின்கிறோம் என்கிற சுய உணர்வின்றி, வாயில் திணிப்பதை விழுங்கி வைப்பது தான் இன்றைய குழந்தைகளின் பரிதாப நிலை.

    ‘நதியும் நிலவும்,’ என்ற கவிதை:-

    “நிலவைக் கொண்டாடினோம்

    நிலவோடே வாழ்ந்தோம்

    நிலாச்சுவை மறந்த உலகில்

    ஓடிவா பாட ஒருவருமில்லை,”

    நிலாச்சோறு தெரியும்.  ‘நிலாச்சுவை’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  தேனில் ஊறிய பலாச்சுளை போல நிலாச்சுவை இனிக்கின்றது.  அன்னை தமிழுக்கு இவரது கொடை ‘நிலாச்சுவை.’

    பதிப்புரையில் யாழினி முனுசாமி சொல்லியிருப்பது போல், வார்த்தை களை வலிந்து திணிக்காமல், மிகவும் இயல்பாக தம் வாழ்வியல் அனுபவங்களை,  உள்ளத்து உணர்வுகளை எளிய நடையில் வெளிப் படுத்துகிறார் கவிஞர்.

    “வேற்று மொழி கலப்பின்றி, நுட்பமான சொற்கட்டுடன் கவிதைகள் இயல்பாக தமது வெளிகளை ஆட்சி செய்கின்றன,” என்று பாராட்டுகிறார், இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் இரா.மீனாட்சி அவர்கள்.

    இத்தொகுப்பில் சிறந்த கவிதைகள் பல இருந்தாலும், விரிவஞ்சி எனக்குப் பிடித்த ஒரு சில கவிதைகளை மட்டும், உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

    டார்வின் படிக்காத குருவி அல்லது குருவி டார்வினின் தத்துவத்தைப் படிக்கவில்லை என்று பொருள் மயக்கம் தரும் இக்கவிதை, இந்நூலிலுள்ள  சிறந்த கவிதைகளுள் ஒன்று:-

    அக்கவிதையை நீங்களும் சுவைக்க வேண்டுமா?

    “ஒரு காலத்தில்

    களத்துமேடு இருந்த ஞாபகத்தில்

    ஒரு காலத்தில்

    கூட்டமாய் வந்த ஞாபகத்தில்

    ஒரு காலத்தில்

    தானியம் கொத்திய ஞாபகத்தில்

    புதிய நகரின்

    குப்பைமேட்டு

    டெட்ராபேக்குகளில்

    அலகால் தடவித் தேடும்

    குருவியைப் பார்த்து

    சிரித்தது

    சுவரொட்டி  அசைபோடும்

    பசு.”

    இக்கவிதையை வாசித்தவுடன் என் சிறு வயதில் அடிக்கடி கண்ட காட்சி என் கண்முன்னே விரிகிறது.  வேளாண்மை செழித்திருந்த காலமது.  அறுவடை முடிந்து நெல் களத்துமேட்டுக்குக் கொண்டு வரப்படுகின்றது.  .  அங்குச் சிதறும் தானியங்களைக் கொத்தித் தின்ன கூட்டங்கூட்டமாய் சிட்டுக்குருவிகள் வருகின்றன.  புல்லையும் வைக்கோலையும் ஆசை தீர தின்றுவிட்டு அருகிலிருந்த  மர நிழலில் படுத்துக் கொண்டு அசை போட்டுக் கொண்டிருக்கின்றன மாடுகள்.

    இன்றோ விளை நிலங்கள் அனைத்தும் மனைகளாக்கப்பட்டுப் புதுப்புது நகர்களாகிவிட்டன.  வாய்க்கால், வரப்பு, களத்துமேடு, சம்பா, குறுவை, தாளடி, நன்செய், புன்செய், பத்தாயம், மானாவாரி சாகுபடி, வானம் பார்த்த பூமி போன்ற  சொற்கள் கொஞ்சங் கொஞ்சமாகப் புழக்கத்திலிருந்து விடைபெற்றுக் காணாமற் போய்க் கொண்டிருக்கின்றன.  இன்றைய குழந்தைகளுக்குக் களத்துமேடு என்றால், என்னவென்று தெரியுமா என்பது சந்தேகமே.

    பழைய ஞாபகத்தில் தன் பரிவாரங்களோடு வந்து தானியம் பொறுக்கித் தின்ற  இடத்தில் களத்துமேட்டைத் தேடுகிறது குருவி.  களத்து மேட்டைத்தான் காணவில்லையென்றால், கும்பல் கும்பலாக உடன் வந்த தன் கூட்டத்தையும் காணோம்.  அன்று வேண்டும், வேண்டாம் என்று இஷ்டத்துக்குத் தின்று தீர்த்த தானியக் குவியலில், ஒரு நெல்மணி கூட இன்று அகப்படவில்லை. கூடத்தில், முற்றத்தில், தாழ்வாரத்தில் நெல்லைக் கொட்டி வைக்கும் வீடுகளும் இப்போது  இல்லை.

    கிணற்றடியில், முற்றத்தில் பாத்திரம் துலக்கும் இடத்தில் முன்பெல்லாம் சோற்றுப் பருக்கைகள் சிந்திக்கிடக்கும்.  வீட்டில்  தானியங்களைப் புடைத்துச் சுத்தப்படுத்தும்போது அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறும் தானியங்கள் பறவைகளுக்கு உணவாகும்.  இன்றோ அடுப்பங்கரை தொட்டியில் சாமான்கள் கழுவப்பட்டு சிந்தும் உணவு தரைக்கடியிலுள்ள சாக்கடையில் கலந்து விடுகின்றன.  கடைகளில் சுத்தப்படுத்தப்பட்டு பாலீதீன் பைகளில் கிடைப்பதால் தானியங்கள் சிந்துவதற்கு வாய்ப்பில்லை.

    எனவே குப்பைமேட்டில் கிடக்கும் டெட்ராபேக்கில் ஏதேனும் சோற்றுப் பருக்கைகள் கிடைக்காதா என அலகால் தேடிப்பார்க்கும் அழிவின் விளிம்பில் இருக்கும் சிட்டுக்குருவியைப் பார்த்துச் சிரிக்கிறது சுவரொட்டி தின்னும் பசு.

    வேளாண்மை போனதால் பசுவிற்கு வைக்கோல் இல்லை.  தோட்டம் இல்லாததால் வாழை மரங்கள் இல்லை.  சாப்பாட்டுக்கு வாழை இலைகள் பயன்படுத்திக் குப்பை தொட்டிகளில் போடும் பழக்கமும், இப்போது வெகுவாகக் குறைந்து விட்டது.

    ‘ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை,’ என்கிற கதையாக வைக்கோலுக்குப் பதிலாக, வாழை இலைக்குப் பதிலாக, சுவரொட்டி தின்று வயிற்றை வளர்க்கும் பசு, குருவியைப் பார்த்துச் சிரிக்கிறது.

    இன்று குருவி!  நாளை …..நாம்?

    ஆண்டு பலவானாலும் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூடத் தெரியாமல் வசிக்கும் நகரவாசிகளுக்கு, ஒரு வீட்டில் விசேஷம் என்றால் ஊர் முழுக்க உற்சாகம் தொற்றிக் கொள்ளும் அந்நாளைய கிராமியச் சூழலைக் கண்முன் நிறுத்தும் ‘எங்கேந்த அதெல்லாம்?’ என்ற இக்கவிதை வாசித்து இன்புறத்தக்கது:

    “பேபியக்கா தைத்து விடும்

    தாழம்பூச் சடை……

    யார்வீட்டுப் பெண் சடங்கானாலும்

    வெளியில் வரும் கெம்புக்கல் திருகுப்பூ….. . ….

    பேன்குத்தும் தாலாட்டில்

    செருகும் கண்கள்,

    ஏழு வீட்டுக் கூரையும்

    கட்டெறும்பும்

    சேர்த்தரைத்த மருதாணி.

    எந்த வரியும் புரியவில்லை

    இந்நாளின் எழிலரசிக்கு”.

    செடி, கொடிகளோடு கூடவே வளர்ந்து, அவற்றோடு உணர்வு பூர்வமாய் ஒன்றிணைந்து மகிழ்ந்த நம் இளம்பிராயத்து இனிய நினைவுகளை மீட்டெடுக்கிறது, ‘ஒளிச்சேர்க்கை’ என்கிற இக்கவிதை:-

    “இந்தக் கோவை இலை

    சிலேட்டு துடைக்கப்

    பறிக்கப்பட்டிருக்கிறதா,

    இந்த மருதாணி

    இலைபழுக்க வாய்ப்பிலாது

    துளிர்க்க துளிர்க்க

    உருவப்பட்டிருக்கிறதா,

    இந்த இலந்தை முள்

    இளரத்தம் பார்த்திருக்கிறதா,

    ஆமெனில் இவற்றோடு

    வாழ்க்கை இருந்திருக்கிறது

    இல்லையெனில் இறந்திருக்கிறது.”

    மஞ்சள் செம்பருத்தி,’ என்ற கவிதையின் இவ்வரிகள், ஏழையின் துன்பங் கண்டு இரங்கும் கவிஞரின் மனித நேயத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

    “பசித்த வயிற்றின் எரிச்சல் உணராதவனும்

    ஆடைக்கிழிசலின் அவமானம் உணராதவனும்

    ஏக்க விழிக்குழந்தையின்

    சடைத்தலைக்குச் சலிப்பவனுமான

    அவனுக்கும் மனிதன் என்று தான் பெயர்.”

     

    இத்தொகுதியில் என்னை மிகவும் பாதித்த கவிதை:

    ‘யுகாந்திரமாய்த் தவறும் உறக்கம்’

    “காலமிது காலமிது

    கண்ணுறங்கு மகளே

    காலமிதைத் தவறவிட்டால்

    தூக்கமில்லை மகளே,”

    என்ற பழைய திரைப்படப்பாடலை நினைவுபடுத்தும் இக்கவிதை, இதோ உங்களுக்காக:-

    “குழாயடிப் பாத்திரங்கள்

    விட்டுப்போன பால்கணக்கு

    ஊறும் அரிசி உளுந்து

    தீர்ந்து போன வெங்காயம்

    காலையில் வீசிப்போன

    ஒரு வசைச் சொல்

    ஒவ்வொன்றாக நுழைந்து

    குழு படத்துக்கு இடம்பிடிப்பது போல்

    நெருக்கியடிக்கின்றன.

    என் மேலிமைக்கும் கீழ் இமைக்கும்

    நடுவே கருவிழிக்குச் சற்று மேலே.”

    சமையல் முடித்துத் துலக்க வேண்டிய பாத்திரங்கள் குழாயடியில் கிடக்கின்றன; இரு நாட்களாய் வாங்கிய பால் கணக்குக்குச் சுவரில் கோடு போட மறந்து விட்டேன்;

    இட்லிக்கு ஊற வைத்த அரிசி உளுந்தை ஆட்டுக்கல்லில் அரைக்க வேண்டும்; காலையோடு வெங்காயம் தீர்ந்து விட்டது, இரவு சமையலுக்கு வாங்க வேண்டும்;

    இவற்றோடு காலையில் கணவன் வீசிப் போன வசைச்சொல்;

    சம்பளம் இல்லா வேலைக்காரியாய் நாள் முழுதும் பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்றாலும் கணவன் வாயிலிருந்து ஒரு பாராட்டு இல்லை.  அட! பாராட்டுக் கூட வேண்டாம்; மனம் புண்படும்படியாகத் திட்டாமலாவது இருக்கலாமில்லையா?  போன்ற சிந்தனைகள், ‘நான்,’ ‘நீ’ என்று குழுப் புகைப்படத்துக்குப் போஸ் கொடுக்க இடம் பிடிப்பது போல் முண்டியடித்து, இமைகள் கண்களை முழுவதுமாக மூடி நிம்மதியாகத் தூங்க விடாமல் அவளது உறக்கத்தைக் கெடுக்கின்றன.

    யுகம் யுகமாய்த் தூக்கத்தைத் தொலத்து நிற்கும் பெண்களின்

    அவல வாழ்வைச் சொல்லும் இக்கவிதை, என்னைப் பாதித்ததில் வியப்பு ஏதுமில்லை.  ஏனென்றால் நானும் ஒரு பெண் தானே?  ஒரு பெண்ணின் வலியை, வேதனையை இன்னொரு பெண்ணால் தானே உணர முடியும்?

    இவரது அபி உலகம் என்ற கவிதை தொடரை ரசிக்க வேண்டுமானால் நாமும் ஒரு குழந்தையாக மாற வேண்டும்.

    “மறுமொழியையே கேள்வியாக்கும் உத்தி, தனது கேள்விகளைப் பிற உயிரிகளின் பார்வையில் வைக்கும் நேர்த்தி, கனமான கருத்துக்களை அங்கதத் தொனியில் பேசும் பாங்கு, எல்லாமே பக்கத்துக்குப் பக்கம் நிரம்பித் ததும்புகின்றன.  அழகிய குளம், தாமரை குளம் என எளிதில் இறங்கிவிட முடியாது ஆழம் அதிகம்,” என்று முன்னுரையில் இரா,மீனாட்சி அவர்கள் கூறியிருப்பதை நானும் வழிமொழிகிறேன்.

    டார்வின் படிக்காத குருவி

    கவிதை தொகுப்பு

    ஆசிரியர்:-  உமா மோகன்

    பக்க எண்ணிக்கை:- 144

    விலை:- ரூ 90/-

    முதல் பதிப்பு:- டிசம்பர் 2013

    வெளியீடு:- முரண்களரி படைப்பகம்

               34/25, வேதாச்சலம் தெரு, காந்தி நகர்,

               சின்னசேக்காடு, மணலி, சென்னை-68. 

     

       

    Share
  • சாலப்பரிந்து – நாஞ்சில் நாடன் – புத்தக மதிப்புரை

    நூல் அறிமுகம் :கோதை வெங்கடேஷ்.

    முதல் பதிப்பு :டிசம்பர் 2012
    வெளியீடு:காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,669,கே.பி.சாலை,நாகர்கோவில் 629001
    பக்க எண்ணிக்கை :239
    விலை ரூ.190 (போன வருட விலை )

    saalaparinthu (1)

    ஆசிரியர் குறிப்பு:

    நாஞ்சில் நாடனின் இயற்பெயர் க .சுப்ரமணியம்.கன்யாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்.அலுவல் காரணமாக மும்பையில் பதினெட்டு ஆண்டுகள் வாசம்.இப்போது கோவையில் வசிக்கிறார்.சிறுகதைகள்,நாவல்கள்,கட்டுரைகள்,கவிதைகள் என எழுதி குவித்துள்ள இவர் ,வாங்கி குவித்துள்ள விருதுகளில்,”சூடிய பூ சூடற்க” என்னும் சிறுகதை தொகுப்புக்கு வாங்கிய சாகித்ய அகாதமி விருதும் அடங்கும்.

    இது புத்தக விமர்சனமில்லை.ஒரு புத்தகத்தின் நிறைகுறைகளை சீர்தூக்கி,வேறு எழுத்துகளோடு ஒப்பிட்டு,எழுத்திலுள்ள மறைப்பொருள் கண்டுபிடித்து,(சில விமர்சனங்களை பார்த்து எழுத்தாளர்களே அசந்து விடுவதுண்டு,இப்படியெல்லாம் நாம் நினைத்தோமா என்று !)…….இதெல்லாம் எதுவும் இல்லீங்க.இது ஒரு ரொம்பவே சராசரி வாசகியின் படித்ததில் பிடித்தது பகுதி.ஒரு நல்ல நூலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவல்.

    சாலப்பரிந்து…..ஒரு எழுத்தாளன் சமூகத்திற்காக பரிந்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.போன வருட புத்தக கண்காட்சியில் வாங்கியது.பிரித்ததும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழி சட்டென பிடிபடாமல் போக,புத்தக அலமாரியின் பின்வரிசைக்கு தள்ளி விட்டேன்.இந்த வருட கண்காட்சிக்கு போகுமுன்னாவது படித்து விட வேண்டுமென்று எடுத்தேன்.படிக்க படிக்க மனதை தன்வயப்படுத்தும் கதைகள்.மராத்தி வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தி,பிரயாணங்களை பற்றி எழுதிய “வளைகள் எலிகளுக்கானவை. “, உணர்வுகளை புரிந்து கொள்ள மொழி ஒரு தடை இல்லை என்பதற்கு ஒரு சான்று.

    உணவும் பசியும் இந்த கதைகளில் முக்கிய பங்கு வகிக்கறது.”தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் ” என்னும் பாரதியின் குரல் கேட்கிறது “யாம் உண்பேம் ” …பசிக்கொடுமையை மிக ஆழமாக,ஆனால் யதார்த்தமாக சொல்லும் கதை.”அமி காணார் …அமி காணார்” என்னும் வார்த்தைகள் மனதில் வெகு நேரம் ஒலித்து கொண்டே இருக்கிறது, “எனக்கு தா என்றல்ல ,நான் தின்பேன் என்றல்ல,நாம் உண்போம் என்று…”

    இடலாக்குடி ராசா… ! தொண்டையை அடைக்கிறது.உண்மை சம்பவமாக இருக்குமோ என தோன்ற வைத்த கதை.அந்த பிள்ளை எங்கிருந்தாலும் தேடி,அழைத்து வந்து,வயிறார உணவிட்டு விட வேண்டும் என்று என்னை பரிதவிக்க வைத்து விட்ட கதை.பந்தியிலிருந்து சாப்பிடாமல் எழும் ராசா,பேசும் போது ,”சொற்கள் நனைந்து வந்தன.”ஆனாலும் ,விளையாட்டுக்காகவே ராசாவை சீண்டியவர்கள்,அவனை சமாதானப்படுத்த முயற்சியே எடுக்கவில்லை என்பது கொஞ்சம் இடறுவதாகவே எனக்கு தோன்றுகிறது.

    உணவு இடம் பெறாத கதையென்று எதுவும், இந்த நூலில் நினைவுக்கு வரவில்லை. “வறுத்த உளுந்தும்,வித்துச்சம்பா அரிசியும்,சுக்கும்,திருவிய தேங்காய் பூவும்,வெந்தயமும்,வெள்ளாங்கியமும் சேர்த்த உளுந்தன்சோறு,முட்டையும்,முருங்கைக்காயும்,வடகமும் போட்ட அவியல்,தேங்காய் எண்ணெயில் முறுகிய வாழைக்காய் பொரியல். “—சும்மா ஒரு சாம்பிள் ,”ஆங்காரம் “கதையிலிருந்து.பண்ணையாருக்கான உணவை யாரும் இல்லாத பொழுது,வேலைக்காரன் ருசி பார்ப்பதும்,அந்த சமயம் பார்த்து பண்ணையார் வந்து விடுவதும் என்று போகிறது இந்த கதை.திருவிழா சமயத்தில் ஒரு பலகார கடை தான் “கிழிசல் ” என்னும் கதைக்கான களன் கல்யாண சாப்பாட்டின் மேல் மோகம் கொண்ட நமச்சிவாயம் பிள்ளை, “துறவு ” கதையின் கதாநாயகன்.

    கும்பமுனி,தவசிப்பிள்ளை என்று இரு கதாப்பாத்திரங்கள் மூலம் எள்ளி நகையாடும் போது,எழுத்தாளர்கள்,பதிப்பகத்தார்,விமர்சகர்கள்,வாசகர்கள் எவரும் இவரிடமிருந்து தப்பவில்லை.

    விடலை வயதின் தவிப்புகளை, அனுசரணையோடு பார்க்கும் “வாலி சுக்ரீவன்,அங்கதன் வதைபடலம், “இன்றைய கல்விமுறைகளையும்,ஈடுபாடு அற்ற ஆசிரியர்களையும் நையாண்டி செய்கிறது :”வாலி வதைப்படலத்தை கூட சுவாரஸ்யம் இல்லாமல் நடத்தும் புலமையும் திறமையும் அவருக்கு இருந்தது. வாலியை அந்த வகுப்பிலேயே கொன்று வீடுபேறு கொடுக்கும் உத்தேசம் இல்லை அவருக்கு. ” ஆசிரியரின் பல்லிடுக்கில் அவரைக்காய் மட்டிக்கொண்டதாம்.பல்குத்த ராமனின் அம்பிருந்தால் கூட தேவலை.ஆனால் ஒரு அம்பு வாலியிடம் மாட்டியிருந்ததாம்.

    “செம்பொருள் அங்கதம் ” என்றொரு கதை.ஒரு மேலதிகாரியும்,அவர் உதவியாளரும் சேர்ந்து பயணிக்கறார்கள்.(மணிரத்னம் மாதிரி ஒரு ரயில் பிரேமை நாஞ்சில் சாருக்கு. ) மேலதிகாரி ப்ரொடோகால் அதிகம் பார்ப்பவர்.அவர் சர்க்கரை நோயாளி. தன் பங்கு இனிப்புகளை வீணாக்குவாரே தவிர ,உதவியாளனை சாப்பிட அனுமதிக்க மாட்டார்.நட்டநடு நிசியில் அவருக்கு சர்க்கரை அபாயகரமாக இறங்க,வேறு வழி தெரியாது,ரயில் குப்பை தொட்டியிலிருந்து ரொட்டி துண்டுகளையும்,பிஸ்கட் துண்டுகளையும் தேடி எடுத்து கொடுத்து உதவியாளன் அவரை காப்பாற்றுகிறான்.

    இதெல்லாம் டூப்பு என்று கந்தசாமி படப்பாட்டில் கூழ்,சுண்டல்,வேர்கடலை என்று பட்டியலிடுபவர் நாஞ்சில்நாடன் ரசிகரோ என்னமோ.பெயர்கள்,ஊர்கள் என்று நீண்ட பட்டியல்களை நூல்தோறும் காணலாம்.ரயில் பிடிக்க வந்தவர்களை பாருங்களேன்…”கோட்டாறு,பஞ்சலிங்கபுரம்,வாரியூர்,ராஜாவூர்,ராஜாக்கமங்கலம்,பறக்கை,சுசீந்தரம்,நல்லூர்,தேரூர்,கருங்கல்,இரணியல்,தக்கலை,அம்மாண்டிவிளை ,பொழிக்கரை,பொட்டல்,ஈத்தாமொழி,வெள்ளமடம்,புத்தேரி,திட்டுவளை,தாழக்குடி,போத்தியூர் ,கடுக்கரை,பெருவிளை ,ஈசந்தங்கு,பார்வதிபுரம்..” இவ்வூர்களை சேர்ந்தவர்களாம் !!

    கதைகளிலும் தலைப்பிலும் எட்டி எட்டி பார்க்கும் மரபிலக்கியங்கள் எழுத்தாளருக்கு அவற்றில் உள்ள தேர்ச்சியை சுட்டிக்காட்டுகின்றன.திருவாசகமும் பிரபந்தமும் ,சங்க இலக்கியங்களும்,கம்பராமாயணமும் அழகாக கச்சிதமாக வந்து பொருந்துகின்றன.ஒரு சிறுகதை என்பது கதையாக மட்டுமில்லாது அவர்கள் உணவு ,பழக்க வழக்கங்கள்,அவர்கள் வழிபடும் தெய்வங்கள் என்று ஒரு கலாசார பதிவாகவும் உதவுகிறது.தத்துவார்த்த அலசல்கள்,சுயநிலை விளக்கங்கள் எதுவுமின்றி ,கதாபாத்திரங்களின் வசனங்கள் மூலமாகவே ,அதிகபட்சமாக கதைகள் நகர்கின்றன .நெஞ்சை பிசைந்து அல்லது வாய் விட்டு சிரிக்க வைத்து,எந்த முறையை கையாண்டாலும் சற்றே நம்மை சிந்திக்க வைக்கும் கதைகள்.பெரும்பாலான கதைகளின் முடிவு ‘சுபம் ‘ அட்டையும் இல்லை,எல்லாம் தொலைந்து மீட்டெடுக்க முடியாத சூழ்நிலையுமில்லை.இருளடர்ந்த குகைபாதையில் தொலைவில் தெரியும் ஒளிக்கீற்று ,பாறையை பிளந்து பூத்திருக்கும் சிறுச்செடி ,இவற்றை போல், நியாயங்களுக்கும் நீதிக்கும் ஏற்படும் சோதனைகளை மீறியும் அவை வெல்லும் என்னும் சிறு நம்பிக்கைத்துளியை ஊட்டுவதாக உள்ளது.

    பெரும்பாலான கதைகளில் ஆண்களையே மையப்படுத்தும் இந்த நூலில் ” பேச்சியம்மை” ஒரு விதிவிலக்கு.கணவனால் கைவிடப்பட்டு,தனியாளாய் கஷ்டப்பட்டு ,பிள்ளையை படிக்க வைத்து ,அவன் அயல்நாடு சென்று, அவளை புறக்கணிக்கும் போது ,அவள் எடுக்கும் முடிவு அவனுக்கு நல்லதொரு பாடம்.

    முதியோர்க்கு நேரும் புறக்கணிப்பையும், அவல கதியையும் விளக்கும் ‘சாலப்பரிந்து’,நண்பனை பற்றி கூறும் ‘கான்சாகிப் ‘,அர்ச்சகர்களின் தாரித்ரியம் விளக்கும் கதைகள் , திருவாசகம் வாசித்தவரின் கதை, இப்படி இன்னும் நிறைய இருக்கிறது சொல்ல.புத்தக மதிப்புரை புத்தகத்தை விட அதிக பக்கங்கள் எடுத்து கொள்ளும் அபாயம் இருப்பதால் இத்துடன் முடித்து கொள்கிறேன்.

    Share
  • இந்தியப் பெண்மணிகள் – புத்தக மதிப்புரை

    சுலோச்சனா

    புத்தகத்தின் பெயர் : இந்தியப் பெண்மணிகள்

    எழுதியவர் : ஸ்வாமி விவேகானந்தர்

    அச்சிட்டோர் : ஸ்ரீ ராம கிருஷ்ணமடம் அச்சகம்
    மயிலாப்பூர், சென்னை-4.

    வெளியிடுபவர் : தலைவர்
    ஸ்ரீ ராம கிருஷ்ண மடம்,
    மயிலாப்பூர், சென்னை-4.

    தமிழ் மொழிபெயர்ப்பு

    விலை ரூ.25

    பக்கங்கள் -114

    ‘யத்ர ஸ்த்ரியாக பூஜிந்தே
    தத்ர தேவதாக ரமயந்தே”

    ‘எங்கு பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ
    அங்கு தேவர்கள் மகிழ்கின்றார்கள்

    அப்படி பூஜிக்கப்படுவதற்குத் தக்கவளாக பெண்
    புனிதமானவளாக இருத்தல் வேண்டும்”

    swami

    இந்தியப் பெண்கள்

    என்ற இந்தப் புத்தகத்தை எழுதியவர் நம் நாட்டில் உதயமாகி உலகெல்லாம் -ஞான ஒளிமயம் பரப்பிய ஞான ஒளியான ஸ்வாமி விவேகானந்தர் ஆவார். இந்த புத்தகத்தை வாசிக்க வாசிக்க நம் மனதில் முதலில் தோன்றுவது ஓர் உண்மைத் துறவியான இவரின் மனதிலும் வற்றாத ஊற்றாக சுரந்து கொண்டே இருக்கும் தாய் நாட்டுப் பற்றும், அவரின் நாட்டில் வாழும் இந்திய சகோதர, சகோதரிகள் நலனில் அவர் கொண்டிருந்த அக்கரையுமே.

    வீடு பேறும் வேண்டா விறலியர் என்று தமிழகத்தில் சில மகான்கள் போற்றப்படுவார்கள் மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே தன் முக்திக்காகத் தவம் புரிந்த துறவி விவேகானந்தர். தாய் நாடான இந்தியா, அதில் வாழும் மக்களின் நிலை குறிப்பாக அவர்களுள் பெண்களின் வாழ்வு நிலை என்று கண்டு கண் கலங்கி கண்ணீர் சிந்தி சிந்திக்கின்றார். அவர்களைப் பற்றி இரண்டு உண்மைகள் தெள்ளத்தெளிவாக அவர் தெரிந்து கொண்டதை இந்தியப் பெண்மணிகள் என்ற இந்த புத்தகத்தின் மூலம் நாமும் அறிந்து கொள்கின்றோம்.

    இந்துக்களுக்குள்ளேயே ஜாதி, பேத பிரச்சனைகள் பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மையான மக்கள் அவர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொண்டும் அவர்களைத் தங்கள் காலடியில் நசுக்கிக் கொண்டிருக்கும் ‘உயர்ந்த ஜாதி” என்று தங்களை அழைத்துக்கொள்ளும் சகோதரத்துவம் இன்றி சர்வாதிகாரத்துவம் கொண்டவர்கள்.

    எந்த ஜாதியில் பிறந்தாலும் ‘பெண்” என்கிற ஜாதியில் பிறந்துவிட்டதால் அவளுக்கு மறுக்கப்படும் பல உரிமைகள் இவ்வளவிற்கும் அவள் ‘சமுதாயம்” என்ற கட்டிட அமைப்பின் கண்ணிற்குத் தெரியாத அஸ்திவாரமாக விளங்குகிறாள்.

    சுவாமிஜியின் அபிப்பிராயமாகும் இந்த நூலின் மூலம் நமக்கும் தெரிய வருகின்றது.

    இந்த நூலின் முதல் இரண்டு அத்தியாயங்கள் பெண்களின் வாழ்க்கை நிலையை விளக்குகின்றது. சுவாமிஜியின் காலத்திய இந்தியாவை அதில் பலதரப்பட்ட மக்களின் வாழ்வு நிலையை தெளிவாக விளக்கப்படுகின்றது. உண்மையில் முதல் அத்தியாயம் என்பது சிறந்த காலக் கண்ணாடியாக விளங்குகின்றது.

    அத்தியாயத்தின் ஆரம்பக் காலத்தில் வேதங்களில் பெண்களின் உயரிய நிலையை விவரிக்கின்றது. வேதங்களில் கூறப்பட்டுள்ளவை நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.

    வேதங்கள் ஒரு வேளை ‘பால்டிக்” கடற்கரை நாடுகளிலோ, மத்ய ஆசியாவிலோ எழுத்து வடிவில் எழுதப்பட்டிருக்கலாம் என்ற தன் ஊகத்தைக் கூறுகிறார் சுவாமிஜி

    வேதத்தின் பழைய பகுதிகளில் ‘ரிஷிகள்” தேவர்களைத் துதித்த துதிப்பாடல்கள் உள்ளன. இதில் ஒரு பெண் ரிஷியும் இடம் பெறுகிறார் என்ற ‘உண்மை” உரைக்கப்படுகின்றது. இந்த பெண் ரிஷியின் பாடல் ரிக் வேதத்தின் பத்தாம் அத்தியாயத்தில் 125வது துதிப் பாடலாக இருக்கின்றது.

    வேத காலத்தில் பெண்கள் ஆணுக்கு சரிநிகர் சமானமாக வாழ்ந்ததை வேதத்தின் பல இடங்களை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி நிரூபிக்கிறார் ஸ்வாமிஜி.

    அவைகளில் பெண்கள் புரோகிதர்களாக இருந்தது சுட்டப்படுகிறது. ‘ஜனகரின்” சபையில் ‘ஞானமுனி, யாக்ஞ வல்கீயரோடு பெண் ரிஷி, ஆன்மஞானம், பற்றி விவாதிப்பதையும் காண்கிறோம்.

    பெண்கள் தங்கள் விருப்பம் போல் சுயம்வரம் நடத்தி தங்கள் மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தனர்.

    இக்காலத்தில் மருத்துவர்கள், தாய்வழியிலோ தந்தை வழியிலோ நெருங்கிய உறவினர் மணம் செய்வதைத் தடை கூறுவது போல் அக்காலத்தில் உறவில் திருமணம் மறுக்கப்பட்டிருந்திருக்கிறது. கொடிய வியாதி உள்ள குடும்பத்தில் மணம் வைத்துக்கொள்வதும், மறுக்கப்படுகின்றது. ஆனால் இவையெல்லாம். காலப்போக்கில் கழன்றுபோய் பெண் என்பவள் ஆணுக்கு அடுத்த நிலைக்கு வருபவளாக ஆணின் ஆளுகைக்கு உட்பட்டவளாக இருப்பதோடு உறவின் முறைகளில் மாமியாருக்கு நாத்தனாருக்கு என்றும் அடங்கியே வாழ்வதைக் குறிக்கின்றனர். சுவாமிஜியின் தாயார் புவனேஸ்வரி தேவியே மதிய உணவை அனைவருக்கும் படைத்துவிட்டு எவ்வளவு தாமதமாக உண்பார் என்பதைக் குறிப்பிடுகிறார்.

    பெண் என்பவள் ‘தாயாக” அந்த ஸ்தானத்திலேயே இந்தியாவில் மதிக்கப் பெறுகிறாள். குடும்பத்தில் கூட மருமகளாக வருபவள் ‘தாய்மை” அடைந்த பிறகே வீட்டின் எஜமானியாக கருதப்படுகிறாள். பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்பட்டது பற்றி சுவாமிஜி வருந்துகின்றார். இல்லறத்திலும் அவர்களின் அடிமைத் தனம் அவரை வருத்துகின்றது.

    புராணங்களில் வரும் சீதாதேவி-சாவித்திரி, நாளாயினி போன்றவர்களின் தியாகத்தையும், தீரத்தையும் போற்றும் ‘பழமை பிரியரான”; சுவாமிஜி சரித்திர காலத்தின் ‘ஜான்சிராணி, லட்சுமிபாய்” போன்ற வீராங்கனைகளைப் பற்றி போற்றி குறிப்பிடும்பொழுது நமக்கு தமிழ்நாட்டின் ராணி மங்கம்மாள், வீரமங்கை வேலுநாச்சியார் போன்ற வீர மங்கைகள் நினைவிற்கு வருகின்றனர்.

    இந்தியாவின் மங்கையர் இருந்த நிலையை சுவாமிஜி விரும்பவில்லை எனினும் அதற்காகக் ‘கல்வி” கேள்விகளில் சிறந்து இருந்தாலும், எவ்வளவுதான் சுய முன்னேற்றத்தாலும் ‘அவள்” அதாவது ஒரு இந்தியப் பெண்மணி ‘சுயநலவாதியாக” தன் இன்பத்திற்கே வாழ்பவளாக இருப்பதை அவர் சிறிதும் விரும்பவில்லை.

    தியாகமும், நேசமும் கருணையும் கொண்டவளாக ‘வீரப் புதல்வர்களை ஈன்று அவர்களை சான்றோனாக்கும் ‘தெய்வத்தாயாகவே இந்தியப் பெண்ணை தரிசிக்க விரும்புகின்றார் சுவாமிஜி.

    இவ்வாறு தாயாகும் தகுதி என்றும் தந்தையாகும் தகுதி என்றும் கூறும் ஸவாமி ‘இன்ப” விழைவு காரணமாக பிறக்கும் குழந்தை சிறந்தவனாக-ஆரியனாக ஆகமாட்டான். ‘நன்மக்கள் பேற்றிற்”காகத் தாயும் தந்தையும் வேண்டிப் பிறக்கும் குழந்தையே சான்றோனாக ஆரியனாக ஆவான் என்கிறார்.

    இந்நூலை படிக்கையில் நேர்மையும், வைராக்கியமுமே வடிவமான சுவாமி விவேகானந்தரின் பார்வையில் இந்தியப் பெண்ணும் – ஆணும் பார்க்கப்படுகின்றனர்.

    அவர், வர்ணிக்கும் ‘பெண்” சராசரிப் பெண்களில் இல்லை. சராசரிப் பெண்ணின் உள்ளுணர்வு தூண்டப்பெற்று தன சுகத்தை மறந்து புறந்தள்ளி வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் உதவுபவளாக நாட்டின் நலனுக்காக ஏன் உலகின் நலனுக்காகவே தியாகம் செய்பவளாக இருக்கவேண்டும்.

    பெண்ணிடம் அறிவிற்குச் சமமாக அன்பும் உயர்கல்விக்குச் சமமாக ஒழுக்கமும் இருக்கவேண்டும்.

    விதவைத் திருமணம் என்பது மறுக்கப்பட்டுவிடாவிட்டாலும், ஊக்குவிக்கப்படவும் இல்லை.

    இன்பத்திற்காகத் திருமணம் என்பதே பலவீனர்களின் செயல் என்கின்றார், சுவாமிஜி

    தாய் திருநாட்டின் இந்தியாவைப் பற்றி இந்தியரைப் பற்றி அவரது கருத்து இந்தியரின் வித்தியாசமானவர்கள். இயல்பாகவே ஆன்மீகத் தாக்கம் கொண்டவர்கள் தொழில் வளர்ச்சி சொல்லின் செழுமை இவற்றோடு எப்பொழுது வேண்டுமானாலும், அவன் மனம் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பிவிடும் இது இந்தியர்களின் இயல்புத் தன்மை என்கிறார், சுவாமிஜி.

    ‘இந்தியப் பெண்கள் என்ற இந்தப் புத்தகத்தின் மதிப்புரையில் எதை மதிப்பிட மறந்தாலும் நீண்ட காலமாக ‘பெண்களைப் பற்றி சுவாமிஜியின்” நேர்மையான பதிலை மதித்துப் போற்றாமல் இருக்க இயலாது.

    ‘ பெண் என்பவள் மாயை – ஆணின் முக்திக்கு அவள் பெரும் தடையாக இருப்பவள் என்ற கருத்து பன்னெடுங்காலமாக பழக்கத்தில் உள்ளது. இதற்கு சுவாமிஜியின் பதில்: இந்த புத்தகத்தில்
    “பெண்ணின் புற அழகில் மயங்கி நிற்கும் பலவீனனே ‘மாயை” எனும் உணர்வில் மதி மயங்கலாம், ஆனால் பெண்ணின் ‘அக” அழகில் ஈடுபாடு கொள்பவன் அறிவிலோங்கி யோகி என்னும் உயர்நிலையை அடைவான்”.

    எங்கு பெண் துன்பப்படுகிறளோ, அங்கு தெய்வம் மகிழாது.

    பெண் மகிழ்வாக இருந்தாலே வீடும், நாடும் நலம் பெறுகிறது என்பதை வேதவாக்காக சுவாமிஜி சொல்கிறார்.

    இந்தப் புத்தகத்தின் மூலம் சுவாமிஜியின் இறுதி மற்றும் முடிவான கருத்து என்பது பெண்ணை உயர்ந்த நிலையிலும், தியாக உருவாகவும் சுவாமிஜி சித்தரிக்கின்றார்.

    பி.கு. உண்மையில் மதிப்பிற்குரிய மகான்களின் கருத்துகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்றாலும் அவருடைய உயர்ந்த கருத்துகள் உலகில் பரவ வேண்டும் என்பதற்காகவே விமர்சனம் என்ற செயலுக்கும் துணிகிறோம். இவ்வரிய கருத்துகளை அவரவர் தகுதிக்கேற்ப மேலும் அதிகமாகவும் புரிந்து கொள்ளலாம் என்பதே சத்தியம்.

    Share
  • சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் – புத்தக மதிப்புரை

    த.க.தமிழ் பாரதன்

    கவிஞர் வைரமுத்து : கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். இவர் வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

    k

    விலை : 70
    பக்கங்கள் : 103
    முதல் பதிப்பு : 1985
    தற்போதைய பதிப்பு : 2011
    பதிப்பு : 20

    வெளியீடு: சூர்யா இலக்கியம், சென்னை
    பேசி : 91-44-24914747

    இன்று இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் அமைந்திருக்கும் நூல் சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்.

    இந்த நூலின் நோக்கம், வெறுமையாக இருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் வாழ்க்கையைப் பற்றிய சில தீர்மானங்களை எழுதிக் கொடுத்து எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு நடைபோடச் செய்வதாக உள்ளது.

    இது இளைஞர்களுக்கு உரமான மொழியில் அவர்களோடு உரையாடுகிறது.

    “இல்லாத ஓர் ஊருக்கு யாரும் செல்லாத ஒரு வழியில் நீ தூக்கதில் நடப்பவனாய்த் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறாய். மயில் தோகைகளைப் பரப்பி மல்லிகைப்பூத் தெளித்த சாலை உனது கனவாக இருக்கிறது. ஆனால் காலில் ஆணியடித்துக் கொண்டு முட்களின் மீது நடப்பது தான் உனது எதார்த்தமாக இருக்கிறது”.

    என எளிய நடையில் தரணியில் தடம் மாறி நடக்கும் இளைஞர்களுக்கு எதார்த்தத்தை எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

    மேலும், தன் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகளை தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தியுள்ளார் வைரமுத்து.

    “நாளையின் நம்பிக்கைச் சுடர் நீதான் என்று உன்னைப் போலி வார்த்தைகளால் புகழ மாட்டேன்.
    ஏனென்றால் – எரிந்து கொண்டிருப்பவனே நீ தானே!”
    என்னும் வரிகளில் உண்மைக்கு உருவம் தருகிறார்.

    ஆறுதல் தர வேண்டிய இடங்களில் ஆதரவு வார்த்தைகளையும், அறிவுரை தர வேண்டிய இடங்களில் படிப்பவர்க்கு புரியும் வண்ணம், அருமையான எளிமையான உவமை மொழிகளை உறுதி படவும் தெரிவித்துள்ளார் வைரமுத்து அவர்கள்.

    “உன் முதுகுக்குப் பின்னால் பள்ளம் , முகத்துக்கு முன்னால் இருட்டு. கண்பார்வை உனக்கு இருக்கிறதா இல்லையா என்று சோதித்துப் பார்க்கக் கூட அந்த இருட்டு உனக்கு சந்தர்ப்பம் தரவில்லை. ஆட்டுவித்தால் ஆடும் பொம்மைகளாய் , சாவிகொடுத்தால் சுற்றும் சக்கரங்களாய் நம் இளைஞர்கள் மாறியுள்ளனர்”.

    தற்கால கல்வி முறையால் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குரியாகிறது என்பதை அருமையாக விளக்குகிறார்.

    பிறிதொரு பக்கத்தில் “பொழுது என்பது போக்குவதற்கு அல்ல ஆக்குவதற்கு” எனவும், பொழுது போக்கு என்பதே தேவையில்லை என தெளிவுற கூறுகிறார்.

    இலட்சியம், கல்வி, கலை, உறவு, வீரம், எதிர்ப்பு, காதல், அடக்கம், புகழ், தாய்மண், என இன்றைய இளைஞர்களின் தேவைகளைப் புரிந்து 24 தலைப்புகளில் மாபெரும் கருத்துகளைச் சுமந்து நிற்கும் உளியாக நிற்கிறது ‘சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்’ புத்தகம்.

    Share