செந்தமிழ்க்கடல் சிலம்பொலி செல்லப்பனார்!
காவிரி மைந்தன்
வாழும் தமிழ் மொழியின் வற்றாத ஜீவ ஊற்றை.. வகை வகையாய் எடுத்துரைக்கும் இலக்கியங்கள்! வண்ணத்தமிழ் மொழிக்கு வசந்தகாலம் வந்ததுபோல்.. வந்திருக்கும் செந்தமிழ் அங்கீகாரம்!! வள்ளுவன் முதலாக வாழையடி வாழையாய் நற்றமிழைப் பனையேட்டில் பதித்து வைத்த பைந்தமிழ்ச் சான்றோர் பலர்! இவரெல்லாம் எடுத்துரைத்தப் பொக்கிஷத்தை செல்லரித்து தின்றதுபோக.. மீதமெனப் பத்திரப்படுத்த ஒரு தாத்தா.. உ.வே.சாமிநாத ஐயர் வந்தார்! கிட்டிய தமிழ்ச்செல்வம் அத்தனையும் உயிர்ப்பிக்க தன்னுயிரையே தந்தார்!!
அத்திருமகனாரின் அளப்பரிய சேவையினால் தப்பித்த இலக்கியப் புதையல்கள்! இவைதான் எமதென்று இன்று மார்தட்டி நிற்கும் நாம்.. தமிழின மொழி கலாச்சாரம் பண்பாடு இவைகளின் ஒட்டுமொத்த உணர்வைப் பெற்றிருந்தால்.. உலகிலேயே உயர்ந்தவர்கள் நாமென்று ஓங்கிக்குரல் கொடுத்திருப்போம்! அடிமை உணர்வுக்கு ஒருபோதும் அடிபணியாதிருந்திருப்போம்! உரிமை வாழ்வென்று உலகிற்கே எடுத்துச்சொன்ன பரம்பரையின் வரலாறு அறிந்திருப்போம்! அகத்துறை புறத்துறை எனப் பகுத்தறிந்து வாழ்ந்தவன் தமிழன்! அவ்வழி நடந்தால் இவ் வையகம் உய்திடும் உண்மையை உரக்கக் கூறுவோம்!
அறநெறி தழைக்க வேண்டி அன்றுமுதல் புலவர் பெருமக்கள் அய்யன் முதலாக.. வரைந்துவைத்த பாக்கள்.. படிவங்கள்.. செய்யுள்கள்.. செப்புவதென்ன? வீரமும் காதலும் தமிழர் வாழ்க்கை என்கிற சீரும் சிறப்புமான வரலாற்றுப் பெட்டகங்கள் எனத் திகழும் இலக்கியப் பக்கங்களை இனிவரும் தலைமுறைகளுக்கும் எடுத்துரைக்கும் கடமையும் நம்மைச் சார்ந்ததே!
அவ்வழியே.. தமிழர்தம் சிறப்புகளை தாங்கிநிற்கும் இலக்கியமாய்.. தன்னிகரில்லாப் பெருங்காப்பியமாய்.. ஆள்கின்ற சேரனின் தம்பியாய் பிறந்திருந்தும்.. தனிமை நாடி தவக்கோலம்பூண்டு ஒப்பிலா இலக்கியமாய் ஓங்குபுகழ் சிலப்பதிகாரம்தனை இயற்றி நீங்கிடாப் புகழ்பெற்ற இளங்கோவடிகள்!
ஆங்கு அதனை பாரினிலே அவையோர் சபையெல்லாம் தினம் முழக்கம் செய்தவராய்.. வாழ்கின்ற வாழ்வெல்லாம் தமிழ்.. தமிழ்.. என்றே வாழ்பவராய்.. எளிமையின் இலக்கணத்தை எடுத்துரைக்கும் வல்லோனாய்.. புன்முறுவல் பூத்ததுபோல் திருமுகம் கொண்டவராய்.. சொல்லேதும் கடினமாய் தன்னகத்தேக் காணாதவராய்.. அல்லும் பகலும் பட்டிதொட்டியெங்கும் பயணம் கொண்டேனும் பைந்தமிழைக் காத்துநிற்கும் சீலராய்.. பாவலராய்.. நாவலராய்.. எதிரிகளே இல்லாத ஏகோபித்த மனிதராய்.. இன்னுமின்னும் இவர் புகழைச் சொல்லச் சொல்ல.. செந்தமிழ் மணக்காதோ? தென்னவரின் பெருமை சிறக்காதோ?
அன்னவரின் அகவை 85ஆம்! நம்பவே முடியவில்லை.. நாட்டோரே.. நடமாடும் தமிழுக்கு அகவை இங்கேது? அவர் புகழைப் பாடுதலில் எந்தன் பங்கேது? சுகம் சுகமாய் இருப்பதனால் தமிழே உந்தன் சுவைஞன் நான் என்றே வாழ்கின்றேன்! சிலம்பின் பெருமையெல்லாம் உலகை வலம்வந்து எடுத்துரைத்த ஏந்தலிவர்! அருமை மிகநிறைந்த மாமனிதர்! யுகம் யுகமாகத் தேடினினும் காணக்கிடைக்கா மனிதரிவர்! வாழ்கின்ற யுகத்தில் நாம் வாழ்ந்த பெருமையுடன்.. வாழ்த்துரைக்க வயதின்றி வணங்கி மகிழ்கின்றேன்!