குறவன் நகர வாழ்க்கையைக் கண்டு தனக்குள் வினவுதல்
அண்டை அயலாரைக் காண்பதற்கும் தயக்கம்,
அன்பைப் பரிமாறிப் பேசிடவும் நடுக்கம்,
அல்லல் கொண்டாலும் தனக்குள்ளே மறைக்கும்,
அனாதை வாழ்க்கைக்குப் பெயர்தானோ நகரம்! 228
புரிந்து கொள்ளாத மணவாழ்க்கை மணக்கும்,
புரிந்த பின்னாலோ வடுவாகி நிலைக்கும்,
பிறந்த பிள்ளைகளோ பலநேரம் வதைக்கும்,
பிறப்பின் பொருளுணராப் பரிதாபம் எவர்க்கும்! 229
முறையற்ற மோகத்தில் மனதார வீழுகிறான்,
முடிவற்ற துன்பத்தை முதலாளாய்த் கோருகிறான்,
மறையுற்ற பொருளெல்லாம் இருளென்று பாடுகிறான்,
கறையுற்ற காமுகனாய்க் கண்மூடி வாழுகிறான்! 230
வலியில் வாடும் உயிர்க ளிடம்,
வணிகம் பேசிப் பொருள் சேர்த்தான்,
வறுமையில் வாடும் ஏழையை வாட்டிச்,
சிறுமையில் வாழப் பழகி நின்றான்! 231
கலியுகத்தில் உள்ள கொடுமைகளில், பெரும்
கல்விச் சுமையும் ஒரு வகையோ,
நலிவுற்ற மக்களை நஞ்சென வருத்திப்
பலிகொள்ளும் பள்ளிக் கல்வி இதோ! 232
கணிவுள்ள கண்களைக் காண்ப தெல்லாம்,
கலியுகத்தில் மிகக் கடின மன்றோ?
பணிவுள்ள மனிதனைக் காண்ப தற்கும்
பெருந்தவம் செய்திட வேண்டு மன்றோ! 233
தருக்கள், குருவிகள், அறுகம் புற்கள்,
எதற்கும் தெருவில் இடம் இல்லை,
அதற்கென வருந்திக் கண்ணீர் சிந்த
எவர்க்கும் இங்கே மனம் இல்லை! 234
தனதுணர்வை மதிக்காத துரோகிகள் தாள்பற்றிக்,
கனவுலகில் மிதப்பதே கடமை என்றான்,
இனவுணர்வு இல்லாமல், தமிழமுதம் கொள்ளாமல்,
பணவுணர்வு கொண்டுமன நிறைவு கண்டான்! 235
பாடுபொருள் இல்லாத கவிதை யாக,
பாகனவன் இல்லாத யானை யாக,
பார்வையாது இல்லாத விழிக ளாக,
பயனற்று வாழ்வதிலே இன்பம் கண்டான்! 236
கானகம் காணாக் கொடுமைகளை, நரகக்
கலியுகம் காணுது அனுதினமும், பரவிக்
காட்டிலும் அதுகால் பதிக்காமல், விரைந்து
காத்திடலே என் முதற் கடமை! 237
இல்லம் திரும்புதல்
விற்பனை முடித்து விரும்பிய வண்ணம்,
பற்பல பொருட்களை வாங்கிக் கொண்டு,
நற்துணைக் குறத்தியும் குறவனும் இணைந்து,
சுற்றம் நிறைந்த இல்லம் திரும்பினர்! 238
சிறுவனைப் போலக் குறவனும் குறத்தியும்,
சிறுகவலையும் இன்றிப் பறவைகள் போல,
சிறகினை விரித்து வாழ்க்கை வானில்,
நறுமணம் வீசிப் பறந்த னரே! 239
(நிறைவு பெற்றது)
இயற்கையோடு இரண்டறக் கலந்து, இரசித்து வாழ்ந்து, இறுதியில் இயற்கையுடன் இரண்டறக் கலப்பதே மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களின் வாழ்க்கை நோக்கம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொண்டு எளிமையாக வாழ்வோம்.
வாழ்க இயற்கை! வளர்க இயற்கை!!
அன்புடன்,
சச்சிதானந்தம்.

Leave a Reply