ராமஸ்வாமி ஸம்பத்

எப்பேர்ப்பட்ட போர் அது! உவமைகளைக் கையாள்வதில் வல்லவனான வடமொழிப் புலவன் காளிதாசன் தன் ‘ரகுவம்சம்’ எனும் காப்பியத்தில் சரியான உவமை ஏதும் கிடைக்காமல், “ராம-ராவண யுத்தம் எவ்வாறு இருந்தது என்றால் ராம-ராவண யுத்தம் போன்றே இருந்தது” என்று குறிப்பிடுகிறான்.

இலங்கையில் நடந்த போரில் ஏராளமான அரக்கர்களும் வானர வீரர்களும் கொன்று குவிக்கப்பட்டனர். ராமனின் போர்த்திறனை ராவணனின் சேனாதிபதிகள்கூட புகழ்ந்தனர். இதனால் சினமுற்ற இலங்கை அரசனுக்கு ஒரு விபரீதமான யோசனை தோன்றியது.

‘ராமன் வெற்றி பெறுவான் எனும் எண்ணத்தினாலே அல்லவா ஸீதை என்னைப் புறக்கணிக்கிறாள். மாயாஜாலம் செய்து ராமன் மாண்டுவிட்டான் என்று ஸீதையை நம்ப வைத்து விட்டால் அவளை நான் சுலபமாக அடைந்து விடலாம். பின்னர் ராமனும் மனம் நொந்து உயிரை விட்டு விடுவான் அல்லது போர்க்களம் நீங்கி நாடு திரும்பிவிடுவான்’ என்றெல்லாம் மனக்கோட்டை கட்டியவாறு வித்யுத்ஜிஹ்வா எனும் சூனியக்காரனை அழைத்து ”வெட்டப்பட்ட ராமனின் தலை போன்ற ஒரு மாயபிம்பத்தை அசோகவனத்தில் ஸீதைமுன் வை” என்று ஆணையிட்டான். அவன் அவ்வாறே செய்ய ஸீதை மனம் கலங்கி விம்மி அழுதாள். அப்போது அங்கு வந்த ராவணன், “ஜனகபுத்திரியே! இதோ போரில் மாண்டுபோன உன் கணவனின் தலை. இனி உனக்கு என்னைத்தவிர வேறு கதியில்லை”  இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு ஓற்றன் அவன் செவியில் வானர வீரர்கள் நகருக்குள் நுழைந்து விட்டதைக் கூறினான். உடனே ராவணன் அங்கிருந்து அகன்றான். இப்படிப்பட்ட சூனிய வேலைகளுக்கு ஏவல் செய்பவன் அத்தலத்தில் கட்டாயமாக இருக்க வேண்டும். ராவணன் அங்கு இல்லாததால் அம்மாயை பிசுபிசுத்து அத்தலை மறைந்து விட்டது. திரிஜடை இந்த சூனியவேலையை விளக்க ஸீதை ஆறுதல் அடைந்தாள்.

தன் தந்திரம் பலிக்கவில்லை என்ற கோபத்தோடு ராவணன் போர்க்களத்துக்கு விரைந்து ராமனை முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்தான். இருவரும் உக்கிரமான யுத்தத்தில் ஈடுபட்டனர். ராமனின் விற்கணைகளுக்கு ராவணனின் படைகளும் தேரோட்டியும் பலியானார்கள். அவன் தேர் சுக்குநூறானதோடு விற்களும் பற்பல ஆயுதங்களும் பொடியாக்கப் பட்டன. தன் கையில் மிகுதியாக இருந்த சங்கரன் வரமாகக் கொடுத்த வாளை ராமன்மேல் ராவணன் எறிந்தான். அதுவும் பயனற்றுப் போயிற்று.

நிராயுதபாணியாக நின்றிருந்த அரக்கர் கோமானை நோக்கி ராமன், “இலங்கை வேந்தே! தேர், தேரோட்டி, ஆட்படைகள், யுத்த தளவாடங்கள் அனைத்தையும் இழந்து களைப்பாக இருக்கிறாய். உன்னை இந்நிலையில் கொல்ல நான் விரும்பவில்லை. உனக்கும் ஓய்வு தேவை. ஆகவே இன்று போய் நாளை வா” என்றான்.

’என்னுடைய தற்போதைய நிலையைப் பார்த்தால் ஸீதை ஏளனம் செய்வாளே’ என்று நொந்த மனத்தோடு அரண்மனைக்குத் திரும்பிய ராவணன் தன் ஏகாந்தமான பூசை அறைக்குச் சென்று, “இறைவா! தவப்பலத்தால் எனக்குக் கிடைத்த ஆயுதங்கள் எல்லாம் வீணாகிவிட்டனவே. நீ கொடுத்த வாளும் பயனற்றுப் போய்விட்ட்தே. அவ்வாளினால் எந்த எதிரியையும் மாய்க்கலாம் என்ற உன் வாக்கு பொய்த்து விட்டதே” என்று புலம்பினான்.

அப்போது அசரீரி பேசியது: “முட்டாளே! சிவபெருமான் உனக்குக் கொடுத்த வாளால் ஒரு விரோதியைத்தான் கொல்லமுடியும் என்ற நியதியை மறந்து விட்டாயா? எப்போது அவ்வாளால் ஜடாயுவைக் கொன்றாயோ அப்போதே அது தன் வலிமையை இழந்துவிட்டது.”

அடுத்த நாள் காலை ராவணன் உறக்கத்தில் இருக்கும் தன் தம்பி கும்பகர்ணனை எழுப்புமாறு ஆனையிட்டான். பலத்த முயற்சி செய்து அவனை அரக்கர்கள் எழுப்பி அரசன் ஆணையை விவரித்தனர். அண்ணனிடம் வந்த தம்பி, “எதற்காக என்னை எழுப்பினாய். என்ன விபரீதம் நிகழ்ந்து விட்ட்து?” என வினவினான்.

“தம்பி, உன் புஜபல பராக்கிரமத்தைக் காட்டவேண்டிய சமயம் வந்துவிட்டது. நீ உடனே போர்க்களத்துகுச் சென்று அந்த மனித பூச்சிகளையும் குரங்குகளையும் தவிடு பொடியாக்கி வெற்றியோடு வா.”

”அண்ணா, நான் முன்பே எச்சரிக்கை செய்தேன். ஸீதையை கபடமாகக் கடத்தி வந்தது பெருந்தவறென்று. அதன் விளைவே இப்போது நம் குலத்திற்கு வந்திருக்கும் சாபக்கேடு.”

“கும்பகர்ணா, நியாய அநியாயங்களைப் பற்றி பேச இது தருணம் அல்ல. உனக்குப் பிடிக்கவில்லை என்றால் உணவருந்திவிட்டு உறக்கம் கொள்.”

“அண்ணா, சினம் கொள்ளாதே. என் உள்ளத்திற்குத் தோன்றியதை சொன்னேன். நான் உனக்காக உயிரையும் கொடுக்க சித்தமாக உள்ளேன் என்பது உனக்கும் தெரியும். போரில் ராம லக்ஷ்மணர்களை தோற்கடித்து விட்டபின்தான் உன்னிடம் வருவேன். ஒரு வேளை மாண்டுவிட்டால், நீ நம் அரக்கர்குலத்தைக் காப்பதற்காகவாவது ஸீதையை ராமனிடம் சேர்ப்பிக்க வேண்டும். நீயும் நம் குலமும் அழிவதில் எனக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை.”

இவ்வாறு உரைத்து கும்பகர்ணன் போர்க்களத்திற்குச் சென்றான். பலத்த சேதத்தை ராமனின் படைகளுக்கு ஏற்படுத்தினாலும், முடிவில் கோதண்ட பிரயோகத்தால் கூற்றத்தின் வாய் விழுந்தான் கும்பகர்ணன்.

இனிய தம்பியின் பிரிவு தமையனை வாட்டியது. அதன்பின் பல அரக்க வீரர்களை அனுப்ப அவர்களும் வீரசொர்கம் எய்தினர். ‘யார் இந்த ராம லக்ஷ்மணர்கள்? எங்கிருந்து இத்தனை பலம் பெற்றார்கள்?’ என்று யோசித்தவாறு அருமை மகன் இந்திரஜித்தை அழைத்தான். “மகனே! இப்போது நீதான் என் மானத்தைக் காக்கவேண்டும்” என்ற தந்தையிடம் இந்திரஜித், “நான் ஒருவன் இருக்கும்வரை நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆசி அளியுங்கள். வெற்றியோடு வருகிறேன்” என்றான்.

போர்த்திறனோடு மாயாஜாலம் புரிவதிலும் வல்லவனான இந்திரஜித் தான் இருப்பது தெரியாவண்ணம் ராம லக்ஷ்மணர்களை நாகபாசத்தால் கட்டி வீழ்த்தி ”இனி அவர்கள் பிழைக்க முடியாது” என்று தந்தையிடம் பெருமையாகச் சொன்னான். சுக்ரீவன், விபீஷணன், ஜாம்பவான் என் செய்வது என்று தெரியாமல் வருத்தத்தோடு அமர்ந்திருந்தனர். அப்போது சிறிய திருவடியான அனுமன் பெரிய திருவடியான கருடனை வேண்ட, நாகங்களின் ஜன்ம வைரியான அப்பட்சிராஜன் அங்கு வந்த வேளையில் அவை அந்த  அம்புகளிலிருந்து தப்பி ஓடவும் ராம லக்‌ஷ்மணர்கள் மூர்ச்சை நீங்கினர்.

அதன் பின், இந்திரஜித் ஸீதையைப் போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி, வானரர்கள் முன்னே அதன் தலையைக் கொய்து அவள் மாண்டுவிட்டது போன்ற ஒரு பிரமையை அவர்களிடையே உண்டாக்கினான். இதனால் மிக்கத்துயர்கொண்ட வானரர்கள் ராமனிடம் இந்த செய்தியைக் கூறியதும் ராம லக்ஷ்மணர் இருவரும் ஸ்தம்பித்துப் போயினர். பக்கத்தில் அமர்ந்திருந்த விபீஷணன் ராமனிடம், “அண்ணலே! கவலை வேண்டாம். ராவணன் ஒரு நாளும் அன்னை ஸீதையைக் கொல்வதை அனுமதிக்கமாட்டான். இது இந்திரஜித்தின் மாயாஜாலம்” என்றான்.

மனம் தெளிந்த ராம லக்ஷ்மணர்கள் இந்திரஜித்தோடு மீண்டும் போர் செய்தனர். அவன் உக்கிரமாகப் போரிட்டு பிரம்மாஸ்திரத்தால் லக்ஷ்மணனை வீழ்த்தினான். தம்பியின் நிலை கண்டு ராமனின் துயரம் பொங்கும் கடல்போல் கட்டுமீறியது. அவன் கதறலைக் கம்பர் இவ்வாறு வர்ணிக்கிறார்:

 “மாண்டாய் நீயோ யான் ஒருபோதும் உயிர் வாழேன்

 ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன்தான்

 பூண்டார் எல்லாம் பொன்றுவர் துன்பப் பொறையாற்றார்

 வேண்டாவோ நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றதால்”

[”நீயோ இறந்துவிட்டாய். அதனால் நான் ஒரு நாளும் உயிர் வாழமாட்டேன். அதை அறிந்தால் பரதன் நாட்டினை ஆட்சி செய்யாமல் இறப்பான். என்னோடு உறவு பெற்றவர் அனைவரும் துன்பச்சுமையைத் தாங்க முடியாமல் இறப்பர். நான் சிறந்த தர்மத்துக்குப் பயந்து (பிரம்மாஸ்திரம் செலுத்தாதே என்று லக்ஷ்மணனைத் தடுத்து) தளர்ச்சி அடைந்ததால் அதன் விளைவாக இவ்வளவும் நடக்க வேண்டாவா” என்று ராமன் ஏங்கி விம்மினான்.]

ராமனின் மாளாத்துயரத்தைக் கண்ட விபீஷணன் தன் அந்தரங்க மருத்துவனை அழைத்து வந்தான். “நாளைப் பொழுது விடிவதற்குள் இமயத்தில் உள்ள சஞ்ஜீவி மூலிகைகளைக்கொண்டுவந்தால்தான் லக்ஷ்மணன் பிழைக்க முடியும்” என்றான் அம்மருத்தவன். இதைக்கேட்ட அனுமன் சடுதியில் வடக்கு நோக்கிப் பாய்ந்து சஞ்ஜீவி பர்வதத்தையே கையில் ஏந்தி வந்தான். இளவல் மயக்கம் தெளிந்தான்.

இதற்கிடையில் இந்திரஜித் துர்த்தேவதைகளின் உதவி கோரி நிகும்பலையில் ஒரு யாகம் செய்யமுற்பட்டான். இதை அறிந்த விபீஷணன், “இந்திரஜித்தின் இம்முயற்சியைத் தடுத்து நிறுத்தாவிட்டால் அவன் மிக்க பலசாலி ஆகிவிடுவான். அவனை வெல்ல முடியாது” என்று சொன்னதும், லக்ஷ்மணனும் அனுமனும் பல வானரர்கள் புடைசூழ அந்த யாகசாலைக்குச் சென்று அதனைக் கலைத்தனர். பின்னர் அங்கு நடந்த போரில் லக்ஷ்மணன் இந்திரஜித்தின் தலையை வெட்டி வீழ்த்தினான். ராமன் உள்ளிட்ட அனைவரும் இளவல்மீது புகழ்மாரி பொழிந்தனர்.

தனிமரமாகிவிட்ட ராவணன் ராமனுடன் இறுதிப் போருக்கு சித்தமானான். இந்திரன் தன் தேரை மாதலி எனும் சாரதியோடு ராமன் உதவிக்கு அனுப்பினான். எத்தனை அம்புகளை எய்தாலும் வெட்டப்பட்ட ராவணனின் தலைகள் மீண்டும் மீண்டும் முளைத்தன. வியப்படைந்த ராமன் செவியில், மாதலி “ஐயனே, இனியும் தாமதம் செய்யவேண்டாம். பிரம்மாஸ்திரத்தை ராவணனின் மார்பில் எய்க” என்றான்.

ராமனால் எய்யப்பட்ட பிரம்மாஸ்திரம் தன் பணியைச் செவ்வனே செய்து ராவணனின் மார்பில் பாய்ந்து அவனை வீழ்த்தியது. வானவர்கள் பூமாரி பொழிந்தனர்.

தானாடாவிட்டாலும் சதையாடும் என்பதற்கொப்ப துயரம் மேலிட்டாலும், அறநெறி மறந்த தமையனுக்கு ஈமச்சடங்குகளைச் செய்ய விபீஷணன் தயங்கினான். “சிறப்பாகப் போர் புரிந்த உன் அண்ணன் வானுலகம் சென்றுவிட்டான். அவனுக்கு அந்திமக் கிரியைகளைச் செய்து அந்த ஆன்மாவைக் கடையேற்றுவது உன் கடமை. அதற்குத் தயங்கினால் நானே முன்னின்று அப்பணியைச் செய்வேன். ஏனினில் உன் சகோதரன் என் சகோதரன்கூட அல்லவோ?” என்றான் ராமன்.

அப்பொழுதே அங்கு வந்த இலங்கை அரசி மந்தோதரி கணவன் சடலத்தின்மேல் விழுந்து இவ்வாறு புலம்பலுற்றாள்:

வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்

எள்ளிருக்குமிடன் இன்றி உயிர் இருக்கும் இடன் நாடி இழைத்தவாறோ

கள்ளிருக்கும் மலர் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்

உள்ளிருக்கும் எனக்கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி.

[ராமன் என்னும் ஒரு மனிதனுடைய அம்பு, வெண்மையான எருக்கமாலை அணிந்த, சடைமுடியை உடைய சிவன் அமர்ந்திருக்கும் கயிலை மலையைப் பெயர்த்த ராவணனின் அழகிய உடம்பு முழுவதையும் எள் இருப்பதற்கு சிறிய இடமும் இல்லாதவாறு அவன் உயிர் இருக்கும் இடம் தேடித் துளை செய்த தன்மையோ? அல்லது தேன் இருக்கும் மலர்களை அணிந்த கூந்தலை உடைய ஸீதையை இதயம் என்னும் சிறையில் மறைத்து வைத்த காதல், உள்ளே எங்கேயாவது மறைந்திருக்கும் என்று கருதி அவன் உடலில் புகுந்து தேடியவாறோ?]

”யார் இந்த மாதரசி?” என்று வினவிய ராமனுக்கு விபீஷணன் “அவர் என் அண்ணியார் மந்தோதரி” என்று பதிலுரைத்தான். அதன் பின்னர், விபீஷணன் அண்ணனுக்குச் செய்ய வேண்டிய இறுதி மரியாதைகளைச் செய்து முடித்தான்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “ராமன் வரும் வ​ரை காத்திரு… (12)

  1. சந்திரஹாசம் என்னும் ராவணன் வாள் ஒரு முறை தான் பிரயோகிக்கலாம் என்னும் செய்தி எனக்குப் புதியது.  இன்றே அறிந்தேன்.

    மாயா சனகர், ராமர் போல் ஏமாற்றுதல் எல்லாம் கம்பரில் தான் வருகிறதென நினைக்கிறேன்.  ராவண சம்ஹாரம் முடிந்தாயிற்று.  இனி என்ன?? சீதையை அழைத்து வர வேண்டியது தான். முக்கியமான சம்பவங்களை விடாமல் தொகுத்து எளிமையாக அளித்து வருகிறீர்கள்.  என் போன்றவர்கள் கூடப் புரிந்து கொள்ள முடிகிறது.  நன்றி.

  2. ஆம்! இராவணனின் மாட்சியும் வீட்சியும் பற்றி யுத்த காண்டத்தில் ஒரே ஒரு பாடலில் கம்பர் எடுத்துரைக்கிறார். அது:

    “வாரணம் பொருத மார்பும் வரையினை யெடுத்த தோளும்
     நாரத முனிவற் கேற்ப நயம்பட வுரைத்த நாவும்
     தாரணி மவுலி பத்துஞ் சங்கரன் கொடுத்த வாளும்
     வீரமுங் களத்தே போட்டு வெறுங்கையோ டிலங்கை புக்கான்”

    இராவணனுடைய வீரத்துக்குச் சான்றாக அமைந்த அவனது மார்பு, தோள், நாவு, மணிமுடிகள், சந்திரஹாசம் எனும் சிவன் கொடுத்த வாள், வீரம் இவை அனைத்தும் போர்க்களத்தில் இராமன் அவனைப் போருக்கு இன்று போய் நாளை வா என்று உயிர்ப்பிச்சை அளித்த மாத்திரத்தில் போட்டுவிட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான் என்கிறார். சந்திரஹாசம் ஒரு முறை ஜடாயுவின் இறகை வெட்டப் பயன்படுத்தி விட்டமையால் இங்கு போர்க்களத்தில் அதன் சக்தி பயனளிக்கவில்லை என்பது கருத்து.

  3. அன்புள்ள கீதாம்மா!
    சிவபெருமான் ராவணனுக்கு வாளை வரமளித்தபோது, “இந்த வாள் தன்னலம் கருதாமால் பிறர் நலத்துக்காகப் போராடும் ஒரு நல்ல ஆத்மாவின்மீது பாய்ந்து விட்டால் அத்துடன் அதன் பலம் நீங்கிவிடும்” என்று சொல்லியிருந்தார். ராமன் வருவதற்குள் இலங்கை சேர்ந்திடவேண்டும் என்ற அவசரத்தினால் ராவணன் அந்த நிபந்தனையை மறந்து அவ்வாளை ஒரு அபலை ஸ்திரீயை காப்பதற்காகப் போராடிய ஜடாயுவை வெட்டி வீழ்த்தினான். அவ்வாளும் தன் வலிமையை இழந்தது.
    ராமன் தலைபோன்ற மாயபிம்பம் வால்மீகத்திலும் உள்ளது. ஒரு சிறு திருத்தம். ஸீதைக்கு அம்மாயயைவிளக்கியது ஸரமா என்னும் அரக்கி, திரிஜடை அல்ல. தவற்றிற்கு மன்னிக்கவும்.
    தங்கள் பின்னூட்டத்தில் எளியேனை உயர்த்துவதற்காக ‘என் போன்றவர்கள் கூட புரிந்து கொள்ளமுடிகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்கள் அவையடக்கம் எந்த அவையையும் அடக்க வல்லது.
    வணக்கத்துடன்
    ஸம்பத்

  4. அன்புள்ள தஞ்சை கோபாலன் அவர்களே!
    தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
    வணக்கத்துடன்
    ஸம்பத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.