நாகேஸ்வரி அண்ணாமலை

 

1903-லிருந்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் வருஷம் தோறும் குளிர்காலத்தில் நடன நிகழ்ச்சி – இதை ஆங்கிலத்தில் Costume Ball என்பார்கள் – ஒன்றை நடத்துவார்கள்.  சிகாகோ பல்கலைக்கழகத்தின் அழகியையும் அப்போது தேர்ந்தெடுப்பார்களாம். இந்த நிகழ்ச்சியே 1970-லிருந்து 1984 வரை மாணவர்கள் நடத்தும் நிகழ்ச்சியாக உருவெடுத்தது.  இந்த நிகழ்ச்சிக்கு முழு உடையோடு வரும் மாணவ, மாணவிகளுக்கு முழுக் கட்டணமும் பால் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் உடை உடுத்திக்கொண்டு வருபவர்களுக்கு அரைக் கட்டணமும் வசூலித்தார்களாம்.  ஒன்றும் இல்லாமல் நிர்வாணமாக வருபவர்களுக்கு இலவசமாம்!  1984-க்குப் பிறகு இது மறுபடி 2008-லிருந்து நடத்தப்பட்டது.  ஆனால் முழு நிர்வாணமாக வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

சிகாகோவில் ஜனவரியில் மிகவும் குளிருமாதலால் சிகாகோ பல்கலைக்கழக மாணவர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய ஒரு இடைவெளி கொடுக்கிறார்கள்.  ஜனவரி மாதத்தில் ஒரு வாரம் – திங்கள் முதல் வெள்ளி வரை – பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.  அந்த வாரத்தில் தினமும் மாணவர்களும் ஆசிரியர்களும் காலை ஆறு மணிக்கே எழுந்து – அப்போது சூரியன் உதிப்பது ஏழு மணிக்கு மேல்தான் – பல உடற்பயிற்சிகளைச் செய்கிறார்கள்.  மாலையில் எல்லோரும் சேர்ந்து சுடச் சுட சாக்கலேட் பானம் அருந்துவது, மாணவர்களும் ஆசிரியர்களும் விவாதங்களில் ஈடுபடுவது, பனிக்கட்டியில் செய்த ஸ்டாண்டிலிருந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவது, பனிக்கட்டியில் சிலைகள் செய்வது என்று பல நிகழ்ச்சிகள் நடக்கும்.  கடைசி நாளான வெள்ளியன்று பல்கலையின் முக்கிய சதுக்கத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் Polar Bear Run என்னும் ஓட்டத்தில் மாணவர்கள் கலந்துகொள்வார்கள்.  அந்த நாளன்று சீதோஷ்ணநிலை எப்படியிருந்தாலும் ஓடுவதைத் தவிர்க்க மாட்டார்கள்.  எல்லா வருஷங்களிலும் ஜனவரி மாதம் மிகவும் குளிராக இருக்கும்.  சில வருஷங்களில் கொஞ்சம் நன்றாக இருக்கும்.  குளிரைத் தங்களால் தாங்கிக்கொள்ள முடியும் என்பதை நிரூபிப்பதற்காகவோ என்னவோ இந்த ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பலர் – மாணவர்களும் மாணவிகளும் – எந்த வித உடையும் இல்லாமல் முழு நிர்வாணமாக–- கலந்துகொள்கிறார்கள்.  இந்த ஆண்டும் ஜனவரி மாதம் 17-ஆம் தேதி – அன்று சீதோஷ்ணநிலை 15 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருந்தது.  காற்று அடித்தால் குளிர் 40 டிகிரிக்குச் சமமாக இருக்கும்.  வேண்டிய கம்பளி உடைகள் தரித்துக்கொண்டு போனாலே அந்தக் குளிரைத் தாங்குவது கஷ்டம் – மாணவர்களும் மாணவிகளும் நிர்வாணமாக ஓடினர்.  இவர்கள் ஓடிய நேரம் சுமார் எட்டு நிமிடங்கள்.  இவர்களைப் பார்க்க சாலையின் இரண்டு பக்கங்களிலும் பலர்.  இவர்களில் சிலர் இந்தக் காட்சியைப் படம் வேறு எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

புதிதாக வந்திருக்கும் இன்னொரு செய்தி.  முதியோர் இல்லங்களில் – இங்கு பலவிதமான முதியோர் இல்லங்கள் இருக்கின்றன.  ஓய்வு பெற்றோர் தங்கும் விடுதிகள், பிறர் உதவி இல்லாமல் வாழ முடியாதவர்கள், மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் என்று பல ரகம்.  இவை எல்லாவற்றையும் மொத்தமாக முதியோர் இல்லம் என்று அழைக்கலாம் – உடல் உறவால் பரவும் வியாதிகள் (Sexually Transmitted Diseases) அதிகரித்திருக்கின்றனவாம்.  முதியோர் இல்லங்கள் என்றாலே அமைதியாக அமர்ந்து படிப்பவர்கள், பிங்கோ, குறுக்கெழுத்துப் போட்டி போன்ற விளையாட்டுக்களை விளையாடுபவர்கள் ஆகிய முதியோர்கள் வாழும் இடம் என்ற எண்ணம் இருந்ததற்கு மாறாக இப்போது அங்கு அதிகரித்திருக்கும் உடல் உறவால் பரவும் வியாதிகள் பற்றிய கணக்கெடுப்புகள், விவாதங்கள் ஆரம்பித்திருக்கின்றனவாம்.  வயதானவர்களுக்கு வரும் பெருங்குடல் புற்றுநோய் (Colon Cancer) போன்ற நோய்கள் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்கு எடுக்கும் பரிசோதனைகள் போல் இப்போது உடல் உறவால் ஏற்படும் வியாதிகளுக்கும் இந்த முதியோர்களுக்கு பரிசோதனைகள் செய்கிறார்களாம்.  20 வயது முதல் 24 வயதுடையவர்களிடையே இந்த வியாதிகள் பெருகி வருவதைப் போல் முதியோர்களிடமும் இது அதிகரித்து வருகிறதாம்.

இதற்குரிய காரணங்களாகச் சிலவற்றைக் குறிப்பிடுகிறார்கள்.  முதலாவதாக இந்த முதியோர் இல்லங்கள் – இங்கு இருப்பவர்கள் எல்லோரும் 60 வயதைத் தாண்டியவர்கள் – கல்லூரி விடுதிகள் போல் ஆகி வருகின்றனவாம்.  கிட்டத்தட்ட ஒரே வயதுடையவர்களை ஒன்றாக இருக்கவிடுகிறார்களாம்.  அதனால் அவர்களுக்குள் பாலியல் உறவுகள் ஏற்படுகின்றனவாம்.  ‘என் தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்க்கப்போனபோது அரை மணி நேரத்திற்குள் மூன்று பெண்கள் அவரிடம் வந்து தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.  அந்த அறிமுகம் முதியோர்களுக்கான மருத்துவ இன்சூரன்ஸ் பிரீமியம் பற்றியோ அல்லது மருந்துகளுக்கான புதிய திட்டம் பற்றியோ பேசுவதற்காக அல்ல’ என்று ஒரு பெண் கூறியிருக்கிறார்.

இரண்டாவதாக, அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 60 சதவிகிதம் பேரும் பெண்களில் 40 சதவிகிதம் பேரும் உடலுறவு கொள்ளத் தகுதியானவர்களாக இருக்கிறார்களாம்.  ஆனால் இவர்கள் பாதுகாப்பான உடல் உறவு பற்றிச் சிந்திப்பதில்லை.  குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இவர்களுக்கு இல்லையென்றாலும் மற்ற விதமான உடல் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை இவர்கள் உணருவதில்லை.  ஆணுறை சாதனங்களை இளவயதினரில் 40 சதவிகிதம் பேர் உபயோக்கிறார்களாம்.  ஆனால் முதியோர்களில் 6 சதவிகிதம் பேர்தான் உபயோகிக்கின்றனராம்.

முதியோர்களிடையே இந்த வியாதிகள் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்று கூறுபவர்கள், மருத்துவர்கள் இவர்களிடமும் பாதுகாப்பான உடல் உறவு பற்றி அறிவுரை கூற வேண்டும் என்றும் கல்லூரி வளாகங்களில் இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுவதுபோல் முதியோர் இல்லங்களிலும் வழங்கப்பட வேண்டும் என்றும் 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசிடமிருந்து வரும் மாதக் காசோலையில் பாதுகாப்பான உடல் உறவு பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.  ஓய்வு பெற்ற அமெரிக்கர்களுக்கான அமைப்பு (Association for America’s Retired People) ஒன்று அமெரிக்காவில் இருக்கிறது. இந்த அமைப்பிலிருந்து அவ்வப்போது வரும் கடிதங்களில் பாதுகாப்பான உடல் உறவு பற்றி அறிவுரை கூற வேண்டும் என்ற கோரிக்கையையும் இவர்கள் வைக்கிறார்கள்.

வாழும் வரை உடல் உறவு வேண்டும் என்ற (Sex for Life) என்ற இலக்கைக் கொண்ட அமெரிக்கர்கள் முதியோர் இல்லங்களில் வாழ்பவர்களுக்கு உடலுறவு தேவையில்லை என்று அறிவுரை கூறுவதற்குப் பதில் அதனால் வரும் பாதகங்களுக்கு எப்படிப் பரிகாரம் தேடலாம் என்பதில்தான் அக்கறை செலுத்துகிறார்கள்.

இதெல்லாம் போதாதென்று 2006-இல் வெளிவந்த பெண்களின் பால் உணர்ச்சி பற்றி எழுதப்பட்ட புத்தகம் (Mating in Captivity) பிரபலமாகி வருகிறது.  திருமணமான தம்பதிகள் கொள்ளும் உடல் உறவில் கடைசி வரைக்கும் இருவருக்கும் முழுத் திருப்தியும் இருக்க வேண்டுமாம்.  அப்படி இல்லாத பட்சத்தில் அவர்கள் எப்படித் தங்களைத் தாங்களே தயார் செய்துகொள்ள வேண்டும் என்பதற்கு அறிவுரைகளை இந்தப் புத்தகத்தின் ஆசிரியை கூறுகிறார்.  இதையாவது ஒப்புக்கொள்வோம்.  ஆனால் அவர் அடுத்துச் சொல்வதுதான் தேவையற்றதாகத் தெரிகிறது.  வயதாக வயதாக குறைந்துகொண்டு வரும் பால் உணர்ச்சியை எப்படிக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கும் அறிவுரை கூறுகிறார்.

இலைமறை காய்மறையாக செக்ஸ், பிறப்புறுப்புகள் பற்றி நாம் கையாண்ட விஷயங்களை அமெரிக்கர்கள் மனத்தடையில்லாமல் கையாளுகிறார்கள்.

‘ஒரு முறைதான் வாழ்கிறோம்.  வாழ்க்கையை முழுவதுமாக வாழ்ந்துவிட வேண்டும்.  வாழ்க்கை வாழ்வதற்கே’ என்னும் மேற்கத்திய கோட்பாடு சரியென்றே வைத்துக்கொண்டாலும் இந்த அளவிற்குப் போக வேண்டுமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அமெரிக்கச் சமூகத்தின் அதீதங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.