மாதொரு பாகன் – பெருமாள் முருகன் – புத்தக மதிப்புரை

2

 வீரக்குமார்

 

நாவலின் வழியே ஒரு ஆவணம்…

mathoru

நல்ல படைப்புகள் எப்பொழுதுமே வாசிப்பவர்களுக்கான கேள்விகளைத் தனக்குள் தாங்கியே நிற்கும். அவ்வகையில் “மாதொருபாகன்” ஒரு காலகட்டத்திய வாழ்க்கை முறையை  நம்முன் நிறுவி, அதுகுறித்த உளவியல் கேள்விகளை மனதுக்குள் கிளர்த்திவிடக்கூடியது.

 சுதந்திரத்திற்கு சற்று முந்தைய ஆண்டுகளில் கொங்குப்பகுதியின் திருச்செங்கோடு மலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிகழ்கிறது இந்த நாவல் சொல்லும் வாழ்க்கை. அப்பகுதியின் வனங்கள் முற்றிலும் அழிந்துவிடாமல் இருந்த காலகட்டத்தில் வாழ்வாதாரமாக விவசாயத்தையும் கால்நடைவளர்ப்பையுமே நம்பி வாழ்ந்த ஒரு குடும்பத்து உறுப்பினர்களைக் கதாபாத்திரங்களாக்கி அக்காலகட்டத்து வாழ்க்கையின் ஒரு முக்கியமான நடைமுறை வழக்கத்தை அந்தப் பகுதிக்கே உரித்தான வட்டார மொழியில் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார் பெருமாள்முருகன்.

திருமணஉறவின் மூலம் உருவாகும் குழந்தைப்பேறுதான்  அந்த உறவை அர்த்தப்படுத்தும் என்கின்ற எதார்த்தம்  இந்த நாவலில் கையாளப்பட்டிருக்கிறது. அந்தப் புதிய உயிருக்கான எதிர்பார்ப்பும், காத்திருப்பும் வெறுங்கனவாய் நீளும்போது அதற்கான தீர்வாக மிக மேலான நீதியுணர்வுடன் கடவுளைத் துணைகொண்டு கிராமத்து முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த ஒரு வழக்கம்தான் இந்த நாவலின் மிக ஆச்சர்யமான  திறப்பு.

குழந்தைப்பேறு இல்லாதபோது அதற்குப் பெண்களைக் காரணம் காட்டி மலடிப்பட்டம் சூட்டி, மறுமணம் செய்துகொண்ட ஆண்மேலாண்மை நிலவியதாக நம்பும் ஒரு காலகட்டத்தில் ஆண்களுக்கும் குறையிருக்கலாம் என்னும் கோணத்தில் எளிய கேள்வியை முன் வைத்து நம் சமூகம் ஒரு தீர்வைச் சிந்தித்திருப்பது உண்மையிலேயே பெருவியப்புத்தான்.

இந்தத் தீர்வை அவர்கள் எங்கிருந்து கண்டடைந்தார்கள்? எவ்வளவு காலத்துக்கு முந்திய வழக்கமாக அது இருந்து வந்தது? இவ்வழக்கம் கொங்குப்பகுதியில் மட்டும் நடைமுறையில் இருந்ததா அல்லது மற்ற பகுதிகளிலும் இருந்ததா? இந்தத் தீர்வுகளை நாடிய தம்பதியர்கள், அவ்வழியின் மூலம் உருவான பிள்ளைகளின் மனோநிலை, இதை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்த அல்லது மறுதலித்த சுற்றத்தாரின் நிலை போன்ற சமூக மற்றும் உளவியல் கூறுகள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்த நாவல் நவீன சமூகவியலின் ஆராய்ச்சிக்குத் தீவிரமாக உட்படுத்தப்படவேண்டிய அவசியம் கொண்டது.

முதல் அத்தியாயத்திலேயே நாவலை நகர்த்திச் செல்லும் பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் குணாதிசயங்கள் தொட்டுக்காட்டப்பட்டு, அவற்றுக்கு இடையே உள்ள உறவுகளின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு விடுகின்றன. இரண்டாவது அத்தியாயத்தில் நாவலின் கூறுபொருள் திறக்கப்பட்டுவிடுகிறது. அடுத்தடுத்த விரிவுகளில் குழந்தைப் பேறின்மையால் காளியும் பொன்னாளுமாகிய மையப்பாத்திரங்கள் தங்கள் இல்லறவாழ்க்கையின் துயரம் கவிக்கும் கேள்விகளைச் சுற்றத்தார் மற்றும் நட்புகளின் மூலம் எதிர்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். சகலவிதமான அகப் புற நிலவரங்களை தங்களின் குறைபாட்டுடனேயே பொருத்திப் பார்த்துத் துன்பம் மிகுகின்றனர். தழையத்தழையக் காய்த்துச் செழிக்கும் தங்கள் பூவரசன் மரமும் கன்றுகளைத் தொடர்ந்து ஈனும் தன்வளர்ப்பான வளமான கிடாரியும் தாங்களே அள்ளி முடியும் கூந்தலும்கூடத் தங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டி இவர்களைப் பரிகாசம் செய்வது போல் உணர்கிறார்கள்.

தொன்மங்களையும் முன்னோர்களின் நம்பிக்கைகளையும் தடம் பற்றி அந்தத் தம்பதிகள் தங்களின் குழந்தைப்பேறு அற்ற குறையை நிவர்த்திக்க முனையும் தொடர்முயற்சிகள் ஒவ்வொன்றாக நழுவிக்கொண்டே போகின்றன. அவர்களின் நம்பிக்கைகள் சிதையும் ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்  உடைகிறார்கள். தங்களுக்குத் தாங்களே ஆறுதல்படுத்திக் கொள்கிறார்கள். ஆனாலும் அவர்கள் அறியாமலேயே அவர்களின் ஆழ் மனம் தனித்தனியே சில தீர்மானங்களைத் தங்களுக்காக உருவாக்கி வருவதையும் அதன் துாலவெளிப்பாடாக அவர்களின் நடவடிக்கையில் மாற்றங்கள் நிகழ்வதையும் மிக நுட்பமான உளவியல் தன்மைகளோடு பதிவுசெய்து கொண்டே வருகிறது நாவல். காளியின் மறுதாரம் பற்றிய மனக்குழப்பத்திலும் சாபக் குடும்பத்துக்கு வாழ்க்கைப்பட நேர்ந்துவிட்ட பொன்னாளின் வருத்தத்திலும் அவற்றை நாம் உணர்ந்து கொள்ளமுடியும்.

ஒரு குழந்தையின் கருவை உருவாக்கிவிட எடுத்த அத்தனை முயற்சிகளும் பலனற்றுப் போன நிலையில் அந்தத் தம்பதிகளின் மேல் இறுதியாகக் காலம் ஒரு தீர்வை முன் வைக்கிறது. அது குறையுள்ள தம்பதிகளுக்காக மூதாதையர்களால் கண்டடையப் பெற்ற கடவுளின் தீர்வு.

இதுவரை ஒரே பாதையில் பயணித்த அந்த இருவரின் தேடல்கள் அந்தத் தீர்வை ஒட்டி வேறுவேறு பாதைகளில் பயணிக்க ஆரம்பிக்கின்றன. இறுதியாகத் தங்கள் தரப்பின் நிலைக்கு உட்பட்டு இருவரும் தேர்ந்தேடுக்கும் முடிவுகள் ஆன்மாவை அலற வைத்துவிட்டு அமரிக்கையாக நிலைத்துவிடுகிறது.

பெருமாள்முருகனின் படைப்பூக்கம் நின்று நிறுவிய படைப்புக்களில் இதுவும் ஒன்று. உயிர்ப்பான சித்தரிப்புகள் மூலம் காட்சித் துல்லியத்தைக் கொண்டுவருவதிலும் கதாபாத்திரங்களின் மனநிலைகளை விசாலமாக ஆராய்வதிலும் வரலாற்றுச் செய்திகளை நாவல் நெடுக விரவவிட்டு அவற்றைக் காலத்தின் குறீடாக்குவதிலும் வாட்டார மொழியின் சாத்தியங்களைப் பிரயோகித்து வார்த்தைகளைக் காலப் பெட்டகத்தில் சேமித்து வைப்பதிலும் அவரின் எழுத்தாளுமை பிரமிக்க வைக்கிறது.

ஒவ்வொரு விவசாயக் குடும்பமும் கால்நடைகளுக்கான ஓய்விடத்தைத் தங்களின் இருப்பிடமாகவே பாவிப்பார்கள். பொதுவாக மாட்டுத் தொழுவம் அல்லது மாட்டுக் கொட்டகை என்று குறிப்பிடப்படும் அந்த இடத்தைக் கொங்குப் பகுதி விவசாயிகள் ‘தொண்டுப்பட்டி’ என்று சொல்வார்கள்.

தொண்டுப்பட்டியின் சுகத்தை உணர்ந்தவனுக்கு அது சொர்ககம். கிலுவன் மரக்கன்றுகளால் வரையறுக்கப்பட்ட எல்லை. திறப்பு வாயிலுக்குச் செய்யப்பட்டிருக்கும் படல் நேர்த்தி. உள்ளுக்குள் ஓங்கி உயர்ந்து நிற்கும் வைக்கோல் போர். சேகரப்படுத்தப்பட்ட உழவு உபகரணங்கள். இவற்றினுடாக உழைத்தும் மேய்ந்தும் சலித்துப்போய்த் தங்களுக்கே உரித்தான சாய்மானங்களில் படுத்தபடி ஓய்வெடுக்கும் ஆடு மாடுகள். வயிற்றுக்குள் தள்ளிய தீனியை வாய்க்கு மீட்டு வந்து கண்கள் சொருக அவை அசைபோடும் அழகு. கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி அப்துல்ஹமீதின் குரலை ரேடியோவில் கேட்டுக்கொண்டு அவற்றை ரசித்த மாலைப் பொழுதுகள். அமைந்த தனிமையில் மெலிதாக எல்லைமீறிச் செய்த தவறுகள், எல்லோருக்கும் பரிச்சயமான பாலியல் ஆய்வுகள், போதையின் பல பரிமாணச் சுவைகள், சோக்காலிகளுடன் இணைந்து தீட்டிய கலவரத் திட்டங்கள் என எனது பிரத்யேகமான விஷயங்களை மீட்டுக் கொண்டுவந்து கொடுக்கின்றன பெருமாள்முருகனின் ‘தொண்டுப்பட்டி’ பற்றிய சித்தரிப்புகள். அதே போல்தான் மலையுச்சியில் இருக்கும் வரடிகல் பற்றிய சித்தரிப்புகளும் கவனம் கொள்ளத்தக்க எழுத்துத் திறன்.

அவருடைய ஆழ்ந்த அவதானிப்புக்குச் சாட்சியாக இதில் இன்னொரு இடத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். நாவலின் ஒரு இடத்தில் இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட வண்டியில் அதைச் செலுத்துவதற்காக ஒருவர் ஏற முற்படுவார். இரட்டை மாட்டுவண்டியில் ஏறுவதற்கு அதில் பூட்டப்பட்ட ஒரு காளைமாடு சற்று வெளிப்புறமாக நகர்ந்து இடம் கொடுக்க வேண்டும். லேசாகத் தட்டினால் மாடு நகர்ந்து இடம் கொடுக்கும். அந்த நுட்பமான இடத்தை பெருமாள்முருகன் எழுத்தில் தொட்டுக்காட்டியிருப்பார்.

ஒரு சமூகத்தின் வரலாற்றுப் பின்புலத்தை, நாகரிகத்தை, அவர்களின் பொருளாதார நிலையை ஒரு வீட்டின் விஸ்தாரத்தைக் காட்சிப்படுத்துவதிலேயே வாசகனுக்கு இந்த நாவல் உணர்த்திவிடுகிறது. கோழிக் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து காக்கும் சாமர்த்தியம், கொம்பு நுனியில் சாணம் வைத்து மரம் நடுவதில் உள்ள நேர்த்தி, அதற்குத் தண்ணீர் பாய்ச்சும் சமயோசிதம், மாட்டுவண்டி ஓட்டுவதில் உள்ள லாவகம், கோயிலாட்டத்தில் எடுத்துவைக்கும் அடிகள், குறிதவறாமல் கவண் எறியும் திறன், ஆண்பெண் பேதமற்று மதுவை நுகரும் பொதுமை, எருக்கலங்கோலைப் பெண்ணின் குறிக்குள் செலுத்தி அதன் உஷ்ணத்திலேயே கருவைக் கலைத்துவிடும் மருத்துவம் என்று கிராமத்தின் வழமைகள் பலவற்றையும் தொட்டுச்செல்கிறது நாவல்.

நாவல் உருவாக்கத்தில் காலம் எப்போதுமே தனக்கான ஒரு பங்கை முன்மொழிகிறது. அதுவும் இதுபோன்ற கலாச்சாரம் சார்ந்த கதையாடல்களுக்கு அதன் அவசியம் மிக அதிகம். அந்த அடிப்படையில் இதில் காலம் மிகச் சரியாக வரையறுக்கப்படுகிறது. 1930 களில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட சென்னை மாகானத்தின் முதல்வராக இருந்த ராஜாஜியின் மதுவிலக்குச் சட்டம் காலத்தை உறுதிசெய்யக் கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா டாக்கீசும் ஸ்ரீவள்ளி திரைப்படமும் அதற்குத் துணை நிற்கின்றன. இப்படி நிர்ணயிக்கப்பட்ட காலம் நாவலின் போக்கில் முன்பின் எனத் தடம்மாறித் தன் இருப்பை உணர்த்திச் செல்கிறது.

இவையெல்லாம் நாவலின் புறக்காரணிகள். ஆனால் இந்த நாவலின் அடிநாதம் அதன் அகநிலையில் மையம் கொண்டு உள்ளிருந்து ஒலிக்கும் சுயத்தின் குரலால் எழுப்பப்படுகிறது. காளிக்குள் படிந்திருக்கும் ஆண்வர்க்கக் கசடுகளும் சாதிபற்றிய கற்பிதங்களும் அவனைத் தீர்வுக்கு எதிர்த்திசையில் நகர்த்துகின்றன. மறுமணம் பற்றிய அவன் தவிப்பு, தான் வரடன் ஆகிவிடக்கூடாது என்பது பற்றிய அச்சம், தனக்குச் சாதகமில்லாத சடங்குகள் மீதான எதிர்நிலை என்று பலவிதமான உணர்ச்சிகளின் ஊசலாட்டத்திலேயே அவன் இழுத்துச்செல்லப்படுகிறான். காலம் இடம் பற்றிய கவலைகள் ஏதுமற்றுக் கவியும் பொன்னாள் மீதான காமம் அவனுக்குள் ஒரு விதமான ஆசுவாச உணர்வைத் தந்தாலும் அது தற்காலிகத் தீர்வாகவே அமைந்துவிடுவது காளியின் துரதிர்ஷ்டம். பொன்னாளின் உடல் மேல் அவனுக்கிருந்த காமத்தின் அளவை ஒப்பிடுகையில் அவளுடைய மனதின்பால் அவனுக்கிருந்த கரிசனம் குறைவுதான் என்பதை அவனின் இறுதி உறுதிசெய்கிறது.

ஆனால் சுற்றத்தார்களின் தொடர்ந்த அழுத்தங்களுக்கு எதிராக விடுதலையுணர்வை வேண்டிநிற்கும் பொன்னாளின் மனம், தன் குறைக்குத் தீர்வைக் கண்டடைந்தது முதல் அதிசயத்தக்க அளவில் தன் சுயத்தை இழந்து புதியதொரு விழிப்புநிலையை அடைகிறது. காளியின் கண் அசைவுக்குக் கட்டுப்பட்டிருந்த அவள் வாழ்க்கை, வேறு கதியில் திரும்ப, சட்டென்று அவள் விசித்திரமான அனுபவங்களுக்கு உட்படுகிறாள்.

அவளைப் பற்றியதான இறுதி அத்தியாயங்கள் வாசக அனுபவத்திற்கான  உச்சபட்சப் படைப்புச் சாத்தியம். எவரொருவர் தன் மனதை ஒருமுகப்படுத்தி முதல் அத்தியாயத்திலிருந்து துவங்கி ஒரே அமர்வில் கடைசிவரை சீராகப் படித்து வருகிறார்களோ அவர்களை ஒருவித மாயஉணர்வுக்கு இட்டுச் சென்றுவிடும் வல்லமை கொண்டது பொன்னாள் திருவிழாகூட்டத்தில் தனிமைப்படுத்தப்படும் இறுதிப் பகுதி.

அவள் தனிமையில் தள்ளப்படுகிறாள். ஒரு கணத்தில் அவளை நெருங்கியிருந்த எல்லாமும் விடுபடுகிறது. மக்கள் வெள்ளத்தால் சூழப்படுகிறாள். எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால் யாரும் இல்லை என்று உணர்கிறாள். மனதில் நிம்மதி படர்கிறது. எல்லாவற்றையும் புதிதாகப் பார்க்கத் தொடங்குகிறாள்.

அங்கு ஒரு தடிவரிசை (சிலம்பாட்டம்) நடந்து கொண்டிருக்கிறது. கண்மூடி அதன் சீரான ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசையை உள்வாங்குகிறாள்.

மனசுக்குள் பீடித்துக் கிடக்கும் இறுக்கங்களை எல்லாம் பட்பட்டென்று தட்டி உடைப்பதை உணர்ந்தாள். தடிகள் மோதிக் கொள்ளும் வெறும் சண்டையல்ல இது. மூடிக் கிடக்கும் ரகசியங்களை வெளிக் கொண்டுவர மேற்பூச்சுகளைத் தட்டிச் சிதறடிக்கும் மந்திரக்கோல் விளையாட்டு என்று இதைக் குறிப்பிட்டு எழுதுகிறார் பெருமாள்முருகன்.

அங்கு விளையாடும் ஆண் உடல்கள் அவள் மனதுக்குள் சில மாற்றங்களை நிகழ்த்துகின்றன. அங்கிருந்து விலகிவிட எண்ணும்போது தன் வலக்கையைப் பற்றும் வித்தியாசமான ஒரு தொடுதலை உணர்கிறாள். சட்டென்று காளியின் ஞாபகம். பழையனவற்றை உதறி எறிந்து விட்டோமே என்று அவள் மனம் கூறுகிறது. காளியின் நினைவை அவள் விரும்பவில்லை. ஆனால்,

மேலோட்டமாக வாரிக் கொட்டிவிடலாம் என்று தோன்றுபவற்றைப் பற்றிப் பிரச்சினையில்லை. அழுந்திக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போய் மக்கிக் கிடப்பவற்றை வெட்டி எடுத்து வீசுவது அத்தனை எளிதா?  

என்ற அற்புதமான வரிகளை அங்கு எழுதுகிறார்.

கையைப் பற்றிய முகம் பார்த்தவுடன் அது அவளுக்கானதில்லை என்ற தீர்மானத்தை அவள் மனம் எடுக்கிறது. உடனே தடிவரிசையின் லயம் தப்புகிறது. அந்த இடம் மனதுக்குப் பொருத்தமற்ற சூழலுக்கு உள்ளாகியது. இங்கு தன் படைப்புத் திறனை உச்சத்துக்குக் கொண்டு செல்கிறார் பெருமாள்முருகன்.

அவள் பார்க்கும் தடிவரிசை உருவங்களை அக்கூட்டத்திலிருந்து உருவித் தனியாக எடுத்தாள். ஒவ்வொரு உருவத்தையும் கட்டியணைத்து முத்தம் கொடுத்தாள். இந்தச் சாமிகளுக்கு இவ்வளவுதான் என்று தோன்றவும் மெல்ல அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

ஒரு பெண்ணுக்குள் அவள் கணவனை மீறி வேறு ஆணுடன் கிளர்ந்தெழும் காம உணர்வுகளைத் துளிகூட ஆபாசமில்லாமல் கலையாக்கிய விதம் இந்த நாவலை அபாரமான படைப்பாக மாற்றுகின்றது.

பெருமாள்முருகன் தன் மற்ற கதாபாத்திரங்களையும் இந்தப் படைப்புக்குத் துணை செய்யும் வண்ணம் வடிவமைத்திருக்கிறார். வாழவேண்டிய வயதில் கணவனை இழந்தாலும்கூடத் தன் தளராத உழைப்பாலும் தியாகத்தாலும் எதிர்காலத் தலைமுறைகளின் வளத்தை உறுதிசெய்துவிடும் தகுதி படைத்த மாராயி, திருமண பந்தத்தைத் தாண்டியும் வாழ்க்கை பல திறப்புகளைக் கொண்டது என்பதை உணர்ந்துகொண்ட நல்லுப்பையன் சித்தப்பா போன்ற கதாபாத்திரங்களின் துணையுடன் நாவல் நெடுகிலும், சாத்தியப்படும் எல்லா அலகிலும் பொன்னாயிக்கு இறுதியாக வாய்க்கவிருக்கும் வாய்ப்பை நேர்மறையாக எதிர்கொள்ளும் உதாரணங்களைப் படைத்துவிடுகிறார்.

வாழ்க்கை எக்காலத்திலும் அது எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான  தீர்வுகளை  வழிநெடுகிலும் உருவாக்கியே வந்துள்ளது. சமூக மாற்றங்களாலும் அறிவுநிலை மேம்பாடுகளாலும் அந்தத் தீர்வுகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. ஆனால் அது உருவாக்கிவிட்டுச் செல்லக்கூடிய தடயங்கள் தங்களை ஆவணப்படுத்துவதற்கு ஒரு கலைஞனையே வேண்டி நிற்கின்றன. அந்த வகையில் பெருமாள்முருகன் செய்து முடித்த மாபெரும் கடமையே “மாதொருபாகன்.”

                                                                                ————-

நூலின் ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பு :

பெருமாள்முருகன்.

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய படைப்புத் துறைகளுள் இயங்கிவருபவர். அகராதி, பதிப்புப் பணிகளில் ஈடுபாடு. தமிழ்ப் பேராசிரியர் பணி. இவரது மூன்று நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவை ‘Current Show’ (நிழல் முற்றம்), ‘Seasons of the Palm’ (கூளமாதாரி), ‘One Part Woman’ (மாதொருபாகன்). கதாவிருது, விளக்கு விருது முதலியவற்றைப் பெற்றுள்ளார்.

அலைபேசி : 94426 98106

மின்னஞ்சல் : murugutcd@gmail.com

நூல் வெளியான ஆண்டு  :            டிசம்பர் 2010

 பக்க எண்ணிக்கை           :              190 பக்கங்கள்.

 விலை               :               ரூ.140/-

 பதிப்பக முகவரி                    :               காலச்சுவடு பதிப்பகம்.

                           669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629 001

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மாதொரு பாகன் – பெருமாள் முருகன் – புத்தக மதிப்புரை

  1. மதிப்பீடு நூலை தேடிப்படிக்கத்தூண்டுகிறது. என்று நாம் சமுதாய உண்மைகளை அரிதாரம் பூசாமல் பாரிக்கிறோமோ அன்ரு தான் நமக்கு விடுதலை

  2. தற்போது பிரச்சினைகளைச் சந்திக்கும் படைப்பு என்பதால் விமர்சனத்தை கவனமுடன் படித்தேன். சிறந்த விமர்சனம். கதைப்போக்கையும் அது நடக்கும் காலத்தையும் மனித உறவுகளையும் எதிர்பார்ப்புக்களையும் பிரச்சினைகளுக்கு சமுதாயம் கண்ட தீர்வுகளின் மீள்பார்வையையும் குறித்த மதிப்புரை எவ்வாறு நூல் மதிப்புரை இருக்கவேண்டுமென்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.