‘டார்வின் படிக்காத குருவி’ – புத்தக மதிப்புரை
ஜி. கலையரசி
புதுவை அகில இந்திய வானொலியில் முதுநிலை அறிவிப்பாளராக பணியாற்றும் உமாமோகன் அவர்களின் முதல் கவிதைத்தொகுப்பு இது.
இவரது கவிதைகள் ஏற்கெனவே வண்ணக்கதிர், செம்மலர், ஆனந்தவிகடன், கல்கி ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. வல்லமை, சொல்வனம், உயிரோசை, அதீதம். கீற்று, திண்ணை, மஹா கவிதை உள்ளிட்ட பல இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
‘டார்வின் படிக்காத குருவி,’ என்ற ஒரு கவிதையின் பெயரையே, தன் தலைப்பாகத் தாங்கி நிற்கும் இந்நூலில், நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் உள்ளன.
மாந்த நேயம், இயற்கையோடியைந்த வாழ்வு, பசுமை சூழலைக் காத்தல், சுற்றுச் சூழலின் சமனைக் காப்பதில் பெரும் பங்கு வகிக்கும் பறவைகளை அழிவிலிருந்து மீட்டல், மலைக்கும் மடுவுக்குமான பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்குதல் போன்ற சிறந்த சமூக சிந்தனைகள், இவரது பல கவிதைகளின் பாடுபொருளாக ஒலிக்கின்றன.
இயற்கையை விட்டு வெகுதூரம் விலகிப் போய், அனைத்தும் வணிகமயமாகி விட்ட இன்றைய சூழலில், நிலவோடு வாழ்ந்த அந்த இனிமையான நாட்களின், பசுமையான நினைவுகளை அசை போட்டு ஏங்குகிறார் கவிஞர்.
நிலவைக் காட்டிச் சோறூட்டவோ, கதைகள் சொல்லிச் சீராட்டவோ இன்று யாருக்கும் நேரமில்லை. தொலைக்காட்சிப் பெட்டியில் மூளையை அடகு வைத்து, கண் சிமிட்டக் கூட மறந்து, கார்ட்டூன் பார்த்தபடியே என்ன தின்கிறோம் என்கிற சுய உணர்வின்றி, வாயில் திணிப்பதை விழுங்கி வைப்பது தான் இன்றைய குழந்தைகளின் பரிதாப நிலை.
‘நதியும் நிலவும்,’ என்ற கவிதை:-
“நிலவைக் கொண்டாடினோம்
நிலவோடே வாழ்ந்தோம்
நிலாச்சுவை மறந்த உலகில்
ஓடிவா பாட ஒருவருமில்லை,”
நிலாச்சோறு தெரியும். ‘நிலாச்சுவை’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தேனில் ஊறிய பலாச்சுளை போல நிலாச்சுவை இனிக்கின்றது. அன்னை தமிழுக்கு இவரது கொடை ‘நிலாச்சுவை.’
பதிப்புரையில் யாழினி முனுசாமி சொல்லியிருப்பது போல், வார்த்தை களை வலிந்து திணிக்காமல், மிகவும் இயல்பாக தம் வாழ்வியல் அனுபவங்களை, உள்ளத்து உணர்வுகளை எளிய நடையில் வெளிப் படுத்துகிறார் கவிஞர்.
“வேற்று மொழி கலப்பின்றி, நுட்பமான சொற்கட்டுடன் கவிதைகள் இயல்பாக தமது வெளிகளை ஆட்சி செய்கின்றன,” என்று பாராட்டுகிறார், இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் இரா.மீனாட்சி அவர்கள்.
இத்தொகுப்பில் சிறந்த கவிதைகள் பல இருந்தாலும், விரிவஞ்சி எனக்குப் பிடித்த ஒரு சில கவிதைகளை மட்டும், உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
டார்வின் படிக்காத குருவி அல்லது குருவி டார்வினின் தத்துவத்தைப் படிக்கவில்லை என்று பொருள் மயக்கம் தரும் இக்கவிதை, இந்நூலிலுள்ள சிறந்த கவிதைகளுள் ஒன்று:-
அக்கவிதையை நீங்களும் சுவைக்க வேண்டுமா?
“ஒரு காலத்தில்
களத்துமேடு இருந்த ஞாபகத்தில்
ஒரு காலத்தில்
கூட்டமாய் வந்த ஞாபகத்தில்
ஒரு காலத்தில்
தானியம் கொத்திய ஞாபகத்தில்
புதிய நகரின்
குப்பைமேட்டு
டெட்ராபேக்குகளில்
அலகால் தடவித் தேடும்
குருவியைப் பார்த்து
சிரித்தது
சுவரொட்டி அசைபோடும்
பசு.”
இக்கவிதையை வாசித்தவுடன் என் சிறு வயதில் அடிக்கடி கண்ட காட்சி என் கண்முன்னே விரிகிறது. வேளாண்மை செழித்திருந்த காலமது. அறுவடை முடிந்து நெல் களத்துமேட்டுக்குக் கொண்டு வரப்படுகின்றது. . அங்குச் சிதறும் தானியங்களைக் கொத்தித் தின்ன கூட்டங்கூட்டமாய் சிட்டுக்குருவிகள் வருகின்றன. புல்லையும் வைக்கோலையும் ஆசை தீர தின்றுவிட்டு அருகிலிருந்த மர நிழலில் படுத்துக் கொண்டு அசை போட்டுக் கொண்டிருக்கின்றன மாடுகள்.
இன்றோ விளை நிலங்கள் அனைத்தும் மனைகளாக்கப்பட்டுப் புதுப்புது நகர்களாகிவிட்டன. வாய்க்கால், வரப்பு, களத்துமேடு, சம்பா, குறுவை, தாளடி, நன்செய், புன்செய், பத்தாயம், மானாவாரி சாகுபடி, வானம் பார்த்த பூமி போன்ற சொற்கள் கொஞ்சங் கொஞ்சமாகப் புழக்கத்திலிருந்து விடைபெற்றுக் காணாமற் போய்க் கொண்டிருக்கின்றன. இன்றைய குழந்தைகளுக்குக் களத்துமேடு என்றால், என்னவென்று தெரியுமா என்பது சந்தேகமே.
பழைய ஞாபகத்தில் தன் பரிவாரங்களோடு வந்து தானியம் பொறுக்கித் தின்ற இடத்தில் களத்துமேட்டைத் தேடுகிறது குருவி. களத்து மேட்டைத்தான் காணவில்லையென்றால், கும்பல் கும்பலாக உடன் வந்த தன் கூட்டத்தையும் காணோம். அன்று வேண்டும், வேண்டாம் என்று இஷ்டத்துக்குத் தின்று தீர்த்த தானியக் குவியலில், ஒரு நெல்மணி கூட இன்று அகப்படவில்லை. கூடத்தில், முற்றத்தில், தாழ்வாரத்தில் நெல்லைக் கொட்டி வைக்கும் வீடுகளும் இப்போது இல்லை.
கிணற்றடியில், முற்றத்தில் பாத்திரம் துலக்கும் இடத்தில் முன்பெல்லாம் சோற்றுப் பருக்கைகள் சிந்திக்கிடக்கும். வீட்டில் தானியங்களைப் புடைத்துச் சுத்தப்படுத்தும்போது அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறும் தானியங்கள் பறவைகளுக்கு உணவாகும். இன்றோ அடுப்பங்கரை தொட்டியில் சாமான்கள் கழுவப்பட்டு சிந்தும் உணவு தரைக்கடியிலுள்ள சாக்கடையில் கலந்து விடுகின்றன. கடைகளில் சுத்தப்படுத்தப்பட்டு பாலீதீன் பைகளில் கிடைப்பதால் தானியங்கள் சிந்துவதற்கு வாய்ப்பில்லை.
எனவே குப்பைமேட்டில் கிடக்கும் டெட்ராபேக்கில் ஏதேனும் சோற்றுப் பருக்கைகள் கிடைக்காதா என அலகால் தேடிப்பார்க்கும் அழிவின் விளிம்பில் இருக்கும் சிட்டுக்குருவியைப் பார்த்துச் சிரிக்கிறது சுவரொட்டி தின்னும் பசு.
வேளாண்மை போனதால் பசுவிற்கு வைக்கோல் இல்லை. தோட்டம் இல்லாததால் வாழை மரங்கள் இல்லை. சாப்பாட்டுக்கு வாழை இலைகள் பயன்படுத்திக் குப்பை தொட்டிகளில் போடும் பழக்கமும், இப்போது வெகுவாகக் குறைந்து விட்டது.
‘ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை,’ என்கிற கதையாக வைக்கோலுக்குப் பதிலாக, வாழை இலைக்குப் பதிலாக, சுவரொட்டி தின்று வயிற்றை வளர்க்கும் பசு, குருவியைப் பார்த்துச் சிரிக்கிறது.
இன்று குருவி! நாளை …..நாம்?
ஆண்டு பலவானாலும் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூடத் தெரியாமல் வசிக்கும் நகரவாசிகளுக்கு, ஒரு வீட்டில் விசேஷம் என்றால் ஊர் முழுக்க உற்சாகம் தொற்றிக் கொள்ளும் அந்நாளைய கிராமியச் சூழலைக் கண்முன் நிறுத்தும் ‘எங்கேந்த அதெல்லாம்?’ என்ற இக்கவிதை வாசித்து இன்புறத்தக்கது:
“பேபியக்கா தைத்து விடும்
தாழம்பூச் சடை……
யார்வீட்டுப் பெண் சடங்கானாலும்
வெளியில் வரும் கெம்புக்கல் திருகுப்பூ….. . ….
பேன்குத்தும் தாலாட்டில்
செருகும் கண்கள்,
ஏழு வீட்டுக் கூரையும்
கட்டெறும்பும்
சேர்த்தரைத்த மருதாணி.
எந்த வரியும் புரியவில்லை
இந்நாளின் எழிலரசிக்கு”.
செடி, கொடிகளோடு கூடவே வளர்ந்து, அவற்றோடு உணர்வு பூர்வமாய் ஒன்றிணைந்து மகிழ்ந்த நம் இளம்பிராயத்து இனிய நினைவுகளை மீட்டெடுக்கிறது, ‘ஒளிச்சேர்க்கை’ என்கிற இக்கவிதை:-
“இந்தக் கோவை இலை
சிலேட்டு துடைக்கப்
பறிக்கப்பட்டிருக்கிறதா,
இந்த மருதாணி
இலைபழுக்க வாய்ப்பிலாது
துளிர்க்க துளிர்க்க
உருவப்பட்டிருக்கிறதா,
இந்த இலந்தை முள்
இளரத்தம் பார்த்திருக்கிறதா,
ஆமெனில் இவற்றோடு
வாழ்க்கை இருந்திருக்கிறது
இல்லையெனில் இறந்திருக்கிறது.”
மஞ்சள் செம்பருத்தி,’ என்ற கவிதையின் இவ்வரிகள், ஏழையின் துன்பங் கண்டு இரங்கும் கவிஞரின் மனித நேயத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
“பசித்த வயிற்றின் எரிச்சல் உணராதவனும்
ஆடைக்கிழிசலின் அவமானம் உணராதவனும்
ஏக்க விழிக்குழந்தையின்
சடைத்தலைக்குச் சலிப்பவனுமான
அவனுக்கும் மனிதன் என்று தான் பெயர்.”
இத்தொகுதியில் என்னை மிகவும் பாதித்த கவிதை:
‘யுகாந்திரமாய்த் தவறும் உறக்கம்’
“காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவறவிட்டால்
தூக்கமில்லை மகளே,”
என்ற பழைய திரைப்படப்பாடலை நினைவுபடுத்தும் இக்கவிதை, இதோ உங்களுக்காக:-
“குழாயடிப் பாத்திரங்கள்
விட்டுப்போன பால்கணக்கு
ஊறும் அரிசி உளுந்து
தீர்ந்து போன வெங்காயம்
காலையில் வீசிப்போன
ஒரு வசைச் சொல்
ஒவ்வொன்றாக நுழைந்து
குழு படத்துக்கு இடம்பிடிப்பது போல்
நெருக்கியடிக்கின்றன.
என் மேலிமைக்கும் கீழ் இமைக்கும்
நடுவே கருவிழிக்குச் சற்று மேலே.”
சமையல் முடித்துத் துலக்க வேண்டிய பாத்திரங்கள் குழாயடியில் கிடக்கின்றன; இரு நாட்களாய் வாங்கிய பால் கணக்குக்குச் சுவரில் கோடு போட மறந்து விட்டேன்;
இட்லிக்கு ஊற வைத்த அரிசி உளுந்தை ஆட்டுக்கல்லில் அரைக்க வேண்டும்; காலையோடு வெங்காயம் தீர்ந்து விட்டது, இரவு சமையலுக்கு வாங்க வேண்டும்;
இவற்றோடு காலையில் கணவன் வீசிப் போன வசைச்சொல்;
சம்பளம் இல்லா வேலைக்காரியாய் நாள் முழுதும் பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்றாலும் கணவன் வாயிலிருந்து ஒரு பாராட்டு இல்லை. அட! பாராட்டுக் கூட வேண்டாம்; மனம் புண்படும்படியாகத் திட்டாமலாவது இருக்கலாமில்லையா? போன்ற சிந்தனைகள், ‘நான்,’ ‘நீ’ என்று குழுப் புகைப்படத்துக்குப் போஸ் கொடுக்க இடம் பிடிப்பது போல் முண்டியடித்து, இமைகள் கண்களை முழுவதுமாக மூடி நிம்மதியாகத் தூங்க விடாமல் அவளது உறக்கத்தைக் கெடுக்கின்றன.
யுகம் யுகமாய்த் தூக்கத்தைத் தொலத்து நிற்கும் பெண்களின்
அவல வாழ்வைச் சொல்லும் இக்கவிதை, என்னைப் பாதித்ததில் வியப்பு ஏதுமில்லை. ஏனென்றால் நானும் ஒரு பெண் தானே? ஒரு பெண்ணின் வலியை, வேதனையை இன்னொரு பெண்ணால் தானே உணர முடியும்?
இவரது அபி உலகம் என்ற கவிதை தொடரை ரசிக்க வேண்டுமானால் நாமும் ஒரு குழந்தையாக மாற வேண்டும்.
“மறுமொழியையே கேள்வியாக்கும் உத்தி, தனது கேள்விகளைப் பிற உயிரிகளின் பார்வையில் வைக்கும் நேர்த்தி, கனமான கருத்துக்களை அங்கதத் தொனியில் பேசும் பாங்கு, எல்லாமே பக்கத்துக்குப் பக்கம் நிரம்பித் ததும்புகின்றன. அழகிய குளம், தாமரை குளம் என எளிதில் இறங்கிவிட முடியாது ஆழம் அதிகம்,” என்று முன்னுரையில் இரா,மீனாட்சி அவர்கள் கூறியிருப்பதை நானும் வழிமொழிகிறேன்.
டார்வின் படிக்காத குருவி
கவிதை தொகுப்பு
ஆசிரியர்:- உமா மோகன்
பக்க எண்ணிக்கை:- 144
விலை:- ரூ 90/-
முதல் பதிப்பு:- டிசம்பர் 2013
வெளியீடு:- முரண்களரி படைப்பகம்
34/25, வேதாச்சலம் தெரு, காந்தி நகர்,
சின்னசேக்காடு, மணலி, சென்னை-68.