சாலப்பரிந்து – நாஞ்சில் நாடன் – புத்தக மதிப்புரை

0

நூல் அறிமுகம் :கோதை வெங்கடேஷ்.

முதல் பதிப்பு :டிசம்பர் 2012
வெளியீடு:காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,669,கே.பி.சாலை,நாகர்கோவில் 629001
பக்க எண்ணிக்கை :239
விலை ரூ.190 (போன வருட விலை )

saalaparinthu (1)

ஆசிரியர் குறிப்பு:

நாஞ்சில் நாடனின் இயற்பெயர் க .சுப்ரமணியம்.கன்யாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்.அலுவல் காரணமாக மும்பையில் பதினெட்டு ஆண்டுகள் வாசம்.இப்போது கோவையில் வசிக்கிறார்.சிறுகதைகள்,நாவல்கள்,கட்டுரைகள்,கவிதைகள் என எழுதி குவித்துள்ள இவர் ,வாங்கி குவித்துள்ள விருதுகளில்,”சூடிய பூ சூடற்க” என்னும் சிறுகதை தொகுப்புக்கு வாங்கிய சாகித்ய அகாதமி விருதும் அடங்கும்.

இது புத்தக விமர்சனமில்லை.ஒரு புத்தகத்தின் நிறைகுறைகளை சீர்தூக்கி,வேறு எழுத்துகளோடு ஒப்பிட்டு,எழுத்திலுள்ள மறைப்பொருள் கண்டுபிடித்து,(சில விமர்சனங்களை பார்த்து எழுத்தாளர்களே அசந்து விடுவதுண்டு,இப்படியெல்லாம் நாம் நினைத்தோமா என்று !)…….இதெல்லாம் எதுவும் இல்லீங்க.இது ஒரு ரொம்பவே சராசரி வாசகியின் படித்ததில் பிடித்தது பகுதி.ஒரு நல்ல நூலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவல்.

சாலப்பரிந்து…..ஒரு எழுத்தாளன் சமூகத்திற்காக பரிந்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.போன வருட புத்தக கண்காட்சியில் வாங்கியது.பிரித்ததும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழி சட்டென பிடிபடாமல் போக,புத்தக அலமாரியின் பின்வரிசைக்கு தள்ளி விட்டேன்.இந்த வருட கண்காட்சிக்கு போகுமுன்னாவது படித்து விட வேண்டுமென்று எடுத்தேன்.படிக்க படிக்க மனதை தன்வயப்படுத்தும் கதைகள்.மராத்தி வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தி,பிரயாணங்களை பற்றி எழுதிய “வளைகள் எலிகளுக்கானவை. “, உணர்வுகளை புரிந்து கொள்ள மொழி ஒரு தடை இல்லை என்பதற்கு ஒரு சான்று.

உணவும் பசியும் இந்த கதைகளில் முக்கிய பங்கு வகிக்கறது.”தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் ” என்னும் பாரதியின் குரல் கேட்கிறது “யாம் உண்பேம் ” …பசிக்கொடுமையை மிக ஆழமாக,ஆனால் யதார்த்தமாக சொல்லும் கதை.”அமி காணார் …அமி காணார்” என்னும் வார்த்தைகள் மனதில் வெகு நேரம் ஒலித்து கொண்டே இருக்கிறது, “எனக்கு தா என்றல்ல ,நான் தின்பேன் என்றல்ல,நாம் உண்போம் என்று…”

இடலாக்குடி ராசா… ! தொண்டையை அடைக்கிறது.உண்மை சம்பவமாக இருக்குமோ என தோன்ற வைத்த கதை.அந்த பிள்ளை எங்கிருந்தாலும் தேடி,அழைத்து வந்து,வயிறார உணவிட்டு விட வேண்டும் என்று என்னை பரிதவிக்க வைத்து விட்ட கதை.பந்தியிலிருந்து சாப்பிடாமல் எழும் ராசா,பேசும் போது ,”சொற்கள் நனைந்து வந்தன.”ஆனாலும் ,விளையாட்டுக்காகவே ராசாவை சீண்டியவர்கள்,அவனை சமாதானப்படுத்த முயற்சியே எடுக்கவில்லை என்பது கொஞ்சம் இடறுவதாகவே எனக்கு தோன்றுகிறது.

உணவு இடம் பெறாத கதையென்று எதுவும், இந்த நூலில் நினைவுக்கு வரவில்லை. “வறுத்த உளுந்தும்,வித்துச்சம்பா அரிசியும்,சுக்கும்,திருவிய தேங்காய் பூவும்,வெந்தயமும்,வெள்ளாங்கியமும் சேர்த்த உளுந்தன்சோறு,முட்டையும்,முருங்கைக்காயும்,வடகமும் போட்ட அவியல்,தேங்காய் எண்ணெயில் முறுகிய வாழைக்காய் பொரியல். “—சும்மா ஒரு சாம்பிள் ,”ஆங்காரம் “கதையிலிருந்து.பண்ணையாருக்கான உணவை யாரும் இல்லாத பொழுது,வேலைக்காரன் ருசி பார்ப்பதும்,அந்த சமயம் பார்த்து பண்ணையார் வந்து விடுவதும் என்று போகிறது இந்த கதை.திருவிழா சமயத்தில் ஒரு பலகார கடை தான் “கிழிசல் ” என்னும் கதைக்கான களன் கல்யாண சாப்பாட்டின் மேல் மோகம் கொண்ட நமச்சிவாயம் பிள்ளை, “துறவு ” கதையின் கதாநாயகன்.

கும்பமுனி,தவசிப்பிள்ளை என்று இரு கதாப்பாத்திரங்கள் மூலம் எள்ளி நகையாடும் போது,எழுத்தாளர்கள்,பதிப்பகத்தார்,விமர்சகர்கள்,வாசகர்கள் எவரும் இவரிடமிருந்து தப்பவில்லை.

விடலை வயதின் தவிப்புகளை, அனுசரணையோடு பார்க்கும் “வாலி சுக்ரீவன்,அங்கதன் வதைபடலம், “இன்றைய கல்விமுறைகளையும்,ஈடுபாடு அற்ற ஆசிரியர்களையும் நையாண்டி செய்கிறது :”வாலி வதைப்படலத்தை கூட சுவாரஸ்யம் இல்லாமல் நடத்தும் புலமையும் திறமையும் அவருக்கு இருந்தது. வாலியை அந்த வகுப்பிலேயே கொன்று வீடுபேறு கொடுக்கும் உத்தேசம் இல்லை அவருக்கு. ” ஆசிரியரின் பல்லிடுக்கில் அவரைக்காய் மட்டிக்கொண்டதாம்.பல்குத்த ராமனின் அம்பிருந்தால் கூட தேவலை.ஆனால் ஒரு அம்பு வாலியிடம் மாட்டியிருந்ததாம்.

“செம்பொருள் அங்கதம் ” என்றொரு கதை.ஒரு மேலதிகாரியும்,அவர் உதவியாளரும் சேர்ந்து பயணிக்கறார்கள்.(மணிரத்னம் மாதிரி ஒரு ரயில் பிரேமை நாஞ்சில் சாருக்கு. ) மேலதிகாரி ப்ரொடோகால் அதிகம் பார்ப்பவர்.அவர் சர்க்கரை நோயாளி. தன் பங்கு இனிப்புகளை வீணாக்குவாரே தவிர ,உதவியாளனை சாப்பிட அனுமதிக்க மாட்டார்.நட்டநடு நிசியில் அவருக்கு சர்க்கரை அபாயகரமாக இறங்க,வேறு வழி தெரியாது,ரயில் குப்பை தொட்டியிலிருந்து ரொட்டி துண்டுகளையும்,பிஸ்கட் துண்டுகளையும் தேடி எடுத்து கொடுத்து உதவியாளன் அவரை காப்பாற்றுகிறான்.

இதெல்லாம் டூப்பு என்று கந்தசாமி படப்பாட்டில் கூழ்,சுண்டல்,வேர்கடலை என்று பட்டியலிடுபவர் நாஞ்சில்நாடன் ரசிகரோ என்னமோ.பெயர்கள்,ஊர்கள் என்று நீண்ட பட்டியல்களை நூல்தோறும் காணலாம்.ரயில் பிடிக்க வந்தவர்களை பாருங்களேன்…”கோட்டாறு,பஞ்சலிங்கபுரம்,வாரியூர்,ராஜாவூர்,ராஜாக்கமங்கலம்,பறக்கை,சுசீந்தரம்,நல்லூர்,தேரூர்,கருங்கல்,இரணியல்,தக்கலை,அம்மாண்டிவிளை ,பொழிக்கரை,பொட்டல்,ஈத்தாமொழி,வெள்ளமடம்,புத்தேரி,திட்டுவளை,தாழக்குடி,போத்தியூர் ,கடுக்கரை,பெருவிளை ,ஈசந்தங்கு,பார்வதிபுரம்..” இவ்வூர்களை சேர்ந்தவர்களாம் !!

கதைகளிலும் தலைப்பிலும் எட்டி எட்டி பார்க்கும் மரபிலக்கியங்கள் எழுத்தாளருக்கு அவற்றில் உள்ள தேர்ச்சியை சுட்டிக்காட்டுகின்றன.திருவாசகமும் பிரபந்தமும் ,சங்க இலக்கியங்களும்,கம்பராமாயணமும் அழகாக கச்சிதமாக வந்து பொருந்துகின்றன.ஒரு சிறுகதை என்பது கதையாக மட்டுமில்லாது அவர்கள் உணவு ,பழக்க வழக்கங்கள்,அவர்கள் வழிபடும் தெய்வங்கள் என்று ஒரு கலாசார பதிவாகவும் உதவுகிறது.தத்துவார்த்த அலசல்கள்,சுயநிலை விளக்கங்கள் எதுவுமின்றி ,கதாபாத்திரங்களின் வசனங்கள் மூலமாகவே ,அதிகபட்சமாக கதைகள் நகர்கின்றன .நெஞ்சை பிசைந்து அல்லது வாய் விட்டு சிரிக்க வைத்து,எந்த முறையை கையாண்டாலும் சற்றே நம்மை சிந்திக்க வைக்கும் கதைகள்.பெரும்பாலான கதைகளின் முடிவு ‘சுபம் ‘ அட்டையும் இல்லை,எல்லாம் தொலைந்து மீட்டெடுக்க முடியாத சூழ்நிலையுமில்லை.இருளடர்ந்த குகைபாதையில் தொலைவில் தெரியும் ஒளிக்கீற்று ,பாறையை பிளந்து பூத்திருக்கும் சிறுச்செடி ,இவற்றை போல், நியாயங்களுக்கும் நீதிக்கும் ஏற்படும் சோதனைகளை மீறியும் அவை வெல்லும் என்னும் சிறு நம்பிக்கைத்துளியை ஊட்டுவதாக உள்ளது.

பெரும்பாலான கதைகளில் ஆண்களையே மையப்படுத்தும் இந்த நூலில் ” பேச்சியம்மை” ஒரு விதிவிலக்கு.கணவனால் கைவிடப்பட்டு,தனியாளாய் கஷ்டப்பட்டு ,பிள்ளையை படிக்க வைத்து ,அவன் அயல்நாடு சென்று, அவளை புறக்கணிக்கும் போது ,அவள் எடுக்கும் முடிவு அவனுக்கு நல்லதொரு பாடம்.

முதியோர்க்கு நேரும் புறக்கணிப்பையும், அவல கதியையும் விளக்கும் ‘சாலப்பரிந்து’,நண்பனை பற்றி கூறும் ‘கான்சாகிப் ‘,அர்ச்சகர்களின் தாரித்ரியம் விளக்கும் கதைகள் , திருவாசகம் வாசித்தவரின் கதை, இப்படி இன்னும் நிறைய இருக்கிறது சொல்ல.புத்தக மதிப்புரை புத்தகத்தை விட அதிக பக்கங்கள் எடுத்து கொள்ளும் அபாயம் இருப்பதால் இத்துடன் முடித்து கொள்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *