இந்தியப் பெண்மணிகள் – புத்தக மதிப்புரை
சுலோச்சனா
புத்தகத்தின் பெயர் : இந்தியப் பெண்மணிகள்
எழுதியவர் : ஸ்வாமி விவேகானந்தர்
அச்சிட்டோர் : ஸ்ரீ ராம கிருஷ்ணமடம் அச்சகம்
மயிலாப்பூர், சென்னை-4.
வெளியிடுபவர் : தலைவர்
ஸ்ரீ ராம கிருஷ்ண மடம்,
மயிலாப்பூர், சென்னை-4.
தமிழ் மொழிபெயர்ப்பு
விலை ரூ.25
பக்கங்கள் -114
‘யத்ர ஸ்த்ரியாக பூஜிந்தே
தத்ர தேவதாக ரமயந்தே”
‘எங்கு பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ
அங்கு தேவர்கள் மகிழ்கின்றார்கள்
அப்படி பூஜிக்கப்படுவதற்குத் தக்கவளாக பெண்
புனிதமானவளாக இருத்தல் வேண்டும்”
இந்தியப் பெண்கள்
என்ற இந்தப் புத்தகத்தை எழுதியவர் நம் நாட்டில் உதயமாகி உலகெல்லாம் -ஞான ஒளிமயம் பரப்பிய ஞான ஒளியான ஸ்வாமி விவேகானந்தர் ஆவார். இந்த புத்தகத்தை வாசிக்க வாசிக்க நம் மனதில் முதலில் தோன்றுவது ஓர் உண்மைத் துறவியான இவரின் மனதிலும் வற்றாத ஊற்றாக சுரந்து கொண்டே இருக்கும் தாய் நாட்டுப் பற்றும், அவரின் நாட்டில் வாழும் இந்திய சகோதர, சகோதரிகள் நலனில் அவர் கொண்டிருந்த அக்கரையுமே.
வீடு பேறும் வேண்டா விறலியர் என்று தமிழகத்தில் சில மகான்கள் போற்றப்படுவார்கள் மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே தன் முக்திக்காகத் தவம் புரிந்த துறவி விவேகானந்தர். தாய் நாடான இந்தியா, அதில் வாழும் மக்களின் நிலை குறிப்பாக அவர்களுள் பெண்களின் வாழ்வு நிலை என்று கண்டு கண் கலங்கி கண்ணீர் சிந்தி சிந்திக்கின்றார். அவர்களைப் பற்றி இரண்டு உண்மைகள் தெள்ளத்தெளிவாக அவர் தெரிந்து கொண்டதை இந்தியப் பெண்மணிகள் என்ற இந்த புத்தகத்தின் மூலம் நாமும் அறிந்து கொள்கின்றோம்.
இந்துக்களுக்குள்ளேயே ஜாதி, பேத பிரச்சனைகள் பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மையான மக்கள் அவர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொண்டும் அவர்களைத் தங்கள் காலடியில் நசுக்கிக் கொண்டிருக்கும் ‘உயர்ந்த ஜாதி” என்று தங்களை அழைத்துக்கொள்ளும் சகோதரத்துவம் இன்றி சர்வாதிகாரத்துவம் கொண்டவர்கள்.
எந்த ஜாதியில் பிறந்தாலும் ‘பெண்” என்கிற ஜாதியில் பிறந்துவிட்டதால் அவளுக்கு மறுக்கப்படும் பல உரிமைகள் இவ்வளவிற்கும் அவள் ‘சமுதாயம்” என்ற கட்டிட அமைப்பின் கண்ணிற்குத் தெரியாத அஸ்திவாரமாக விளங்குகிறாள்.
சுவாமிஜியின் அபிப்பிராயமாகும் இந்த நூலின் மூலம் நமக்கும் தெரிய வருகின்றது.
இந்த நூலின் முதல் இரண்டு அத்தியாயங்கள் பெண்களின் வாழ்க்கை நிலையை விளக்குகின்றது. சுவாமிஜியின் காலத்திய இந்தியாவை அதில் பலதரப்பட்ட மக்களின் வாழ்வு நிலையை தெளிவாக விளக்கப்படுகின்றது. உண்மையில் முதல் அத்தியாயம் என்பது சிறந்த காலக் கண்ணாடியாக விளங்குகின்றது.
அத்தியாயத்தின் ஆரம்பக் காலத்தில் வேதங்களில் பெண்களின் உயரிய நிலையை விவரிக்கின்றது. வேதங்களில் கூறப்பட்டுள்ளவை நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.
வேதங்கள் ஒரு வேளை ‘பால்டிக்” கடற்கரை நாடுகளிலோ, மத்ய ஆசியாவிலோ எழுத்து வடிவில் எழுதப்பட்டிருக்கலாம் என்ற தன் ஊகத்தைக் கூறுகிறார் சுவாமிஜி
வேதத்தின் பழைய பகுதிகளில் ‘ரிஷிகள்” தேவர்களைத் துதித்த துதிப்பாடல்கள் உள்ளன. இதில் ஒரு பெண் ரிஷியும் இடம் பெறுகிறார் என்ற ‘உண்மை” உரைக்கப்படுகின்றது. இந்த பெண் ரிஷியின் பாடல் ரிக் வேதத்தின் பத்தாம் அத்தியாயத்தில் 125வது துதிப் பாடலாக இருக்கின்றது.
வேத காலத்தில் பெண்கள் ஆணுக்கு சரிநிகர் சமானமாக வாழ்ந்ததை வேதத்தின் பல இடங்களை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி நிரூபிக்கிறார் ஸ்வாமிஜி.
அவைகளில் பெண்கள் புரோகிதர்களாக இருந்தது சுட்டப்படுகிறது. ‘ஜனகரின்” சபையில் ‘ஞானமுனி, யாக்ஞ வல்கீயரோடு பெண் ரிஷி, ஆன்மஞானம், பற்றி விவாதிப்பதையும் காண்கிறோம்.
பெண்கள் தங்கள் விருப்பம் போல் சுயம்வரம் நடத்தி தங்கள் மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தனர்.
இக்காலத்தில் மருத்துவர்கள், தாய்வழியிலோ தந்தை வழியிலோ நெருங்கிய உறவினர் மணம் செய்வதைத் தடை கூறுவது போல் அக்காலத்தில் உறவில் திருமணம் மறுக்கப்பட்டிருந்திருக்கிறது. கொடிய வியாதி உள்ள குடும்பத்தில் மணம் வைத்துக்கொள்வதும், மறுக்கப்படுகின்றது. ஆனால் இவையெல்லாம். காலப்போக்கில் கழன்றுபோய் பெண் என்பவள் ஆணுக்கு அடுத்த நிலைக்கு வருபவளாக ஆணின் ஆளுகைக்கு உட்பட்டவளாக இருப்பதோடு உறவின் முறைகளில் மாமியாருக்கு நாத்தனாருக்கு என்றும் அடங்கியே வாழ்வதைக் குறிக்கின்றனர். சுவாமிஜியின் தாயார் புவனேஸ்வரி தேவியே மதிய உணவை அனைவருக்கும் படைத்துவிட்டு எவ்வளவு தாமதமாக உண்பார் என்பதைக் குறிப்பிடுகிறார்.
பெண் என்பவள் ‘தாயாக” அந்த ஸ்தானத்திலேயே இந்தியாவில் மதிக்கப் பெறுகிறாள். குடும்பத்தில் கூட மருமகளாக வருபவள் ‘தாய்மை” அடைந்த பிறகே வீட்டின் எஜமானியாக கருதப்படுகிறாள். பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்பட்டது பற்றி சுவாமிஜி வருந்துகின்றார். இல்லறத்திலும் அவர்களின் அடிமைத் தனம் அவரை வருத்துகின்றது.
புராணங்களில் வரும் சீதாதேவி-சாவித்திரி, நாளாயினி போன்றவர்களின் தியாகத்தையும், தீரத்தையும் போற்றும் ‘பழமை பிரியரான”; சுவாமிஜி சரித்திர காலத்தின் ‘ஜான்சிராணி, லட்சுமிபாய்” போன்ற வீராங்கனைகளைப் பற்றி போற்றி குறிப்பிடும்பொழுது நமக்கு தமிழ்நாட்டின் ராணி மங்கம்மாள், வீரமங்கை வேலுநாச்சியார் போன்ற வீர மங்கைகள் நினைவிற்கு வருகின்றனர்.
இந்தியாவின் மங்கையர் இருந்த நிலையை சுவாமிஜி விரும்பவில்லை எனினும் அதற்காகக் ‘கல்வி” கேள்விகளில் சிறந்து இருந்தாலும், எவ்வளவுதான் சுய முன்னேற்றத்தாலும் ‘அவள்” அதாவது ஒரு இந்தியப் பெண்மணி ‘சுயநலவாதியாக” தன் இன்பத்திற்கே வாழ்பவளாக இருப்பதை அவர் சிறிதும் விரும்பவில்லை.
தியாகமும், நேசமும் கருணையும் கொண்டவளாக ‘வீரப் புதல்வர்களை ஈன்று அவர்களை சான்றோனாக்கும் ‘தெய்வத்தாயாகவே இந்தியப் பெண்ணை தரிசிக்க விரும்புகின்றார் சுவாமிஜி.
இவ்வாறு தாயாகும் தகுதி என்றும் தந்தையாகும் தகுதி என்றும் கூறும் ஸவாமி ‘இன்ப” விழைவு காரணமாக பிறக்கும் குழந்தை சிறந்தவனாக-ஆரியனாக ஆகமாட்டான். ‘நன்மக்கள் பேற்றிற்”காகத் தாயும் தந்தையும் வேண்டிப் பிறக்கும் குழந்தையே சான்றோனாக ஆரியனாக ஆவான் என்கிறார்.
இந்நூலை படிக்கையில் நேர்மையும், வைராக்கியமுமே வடிவமான சுவாமி விவேகானந்தரின் பார்வையில் இந்தியப் பெண்ணும் – ஆணும் பார்க்கப்படுகின்றனர்.
அவர், வர்ணிக்கும் ‘பெண்” சராசரிப் பெண்களில் இல்லை. சராசரிப் பெண்ணின் உள்ளுணர்வு தூண்டப்பெற்று தன சுகத்தை மறந்து புறந்தள்ளி வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் உதவுபவளாக நாட்டின் நலனுக்காக ஏன் உலகின் நலனுக்காகவே தியாகம் செய்பவளாக இருக்கவேண்டும்.
பெண்ணிடம் அறிவிற்குச் சமமாக அன்பும் உயர்கல்விக்குச் சமமாக ஒழுக்கமும் இருக்கவேண்டும்.
விதவைத் திருமணம் என்பது மறுக்கப்பட்டுவிடாவிட்டாலும், ஊக்குவிக்கப்படவும் இல்லை.
இன்பத்திற்காகத் திருமணம் என்பதே பலவீனர்களின் செயல் என்கின்றார், சுவாமிஜி
தாய் திருநாட்டின் இந்தியாவைப் பற்றி இந்தியரைப் பற்றி அவரது கருத்து இந்தியரின் வித்தியாசமானவர்கள். இயல்பாகவே ஆன்மீகத் தாக்கம் கொண்டவர்கள் தொழில் வளர்ச்சி சொல்லின் செழுமை இவற்றோடு எப்பொழுது வேண்டுமானாலும், அவன் மனம் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பிவிடும் இது இந்தியர்களின் இயல்புத் தன்மை என்கிறார், சுவாமிஜி.
‘இந்தியப் பெண்கள் என்ற இந்தப் புத்தகத்தின் மதிப்புரையில் எதை மதிப்பிட மறந்தாலும் நீண்ட காலமாக ‘பெண்களைப் பற்றி சுவாமிஜியின்” நேர்மையான பதிலை மதித்துப் போற்றாமல் இருக்க இயலாது.
‘ பெண் என்பவள் மாயை – ஆணின் முக்திக்கு அவள் பெரும் தடையாக இருப்பவள் என்ற கருத்து பன்னெடுங்காலமாக பழக்கத்தில் உள்ளது. இதற்கு சுவாமிஜியின் பதில்: இந்த புத்தகத்தில்
“பெண்ணின் புற அழகில் மயங்கி நிற்கும் பலவீனனே ‘மாயை” எனும் உணர்வில் மதி மயங்கலாம், ஆனால் பெண்ணின் ‘அக” அழகில் ஈடுபாடு கொள்பவன் அறிவிலோங்கி யோகி என்னும் உயர்நிலையை அடைவான்”.
எங்கு பெண் துன்பப்படுகிறளோ, அங்கு தெய்வம் மகிழாது.
பெண் மகிழ்வாக இருந்தாலே வீடும், நாடும் நலம் பெறுகிறது என்பதை வேதவாக்காக சுவாமிஜி சொல்கிறார்.
இந்தப் புத்தகத்தின் மூலம் சுவாமிஜியின் இறுதி மற்றும் முடிவான கருத்து என்பது பெண்ணை உயர்ந்த நிலையிலும், தியாக உருவாகவும் சுவாமிஜி சித்தரிக்கின்றார்.
பி.கு. உண்மையில் மதிப்பிற்குரிய மகான்களின் கருத்துகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்றாலும் அவருடைய உயர்ந்த கருத்துகள் உலகில் பரவ வேண்டும் என்பதற்காகவே விமர்சனம் என்ற செயலுக்கும் துணிகிறோம். இவ்வரிய கருத்துகளை அவரவர் தகுதிக்கேற்ப மேலும் அதிகமாகவும் புரிந்து கொள்ளலாம் என்பதே சத்தியம்.