Tag: அமீர் (கவிஞர் தனுசு)

  • இடம் தேடி…!

    -அமீர்

    இதோ
    வந்து விட்டாள்
    என் காதலி
    காத்திருந்த நேரம்                                     tree
    கை கூடியது…

    அடிமன அபிலாஷை முதல்
    அந்தரங்க சில்மிஷம் வரை
    பரிவர்த்தனை செய்ய…

    அவள் நகம் தொட்டு
    அதன் மூலம்
    அகம் தொட்டு
    என் காதலின் புறம் காட்ட…

    அவளின் காதோர முடியை
    ஊதி விட…
    உதிர்ந்து விழுந்த
    தலையின் பூவை
    யாருமறியாமல்
    எடுத்து முகர…

    செல்லப் பெயரிட்ட
    சித்திரவதன அடையாளங்களுடன்
    என் தோள்மீது
    தலை சாய்க்கத் துடிக்கும்
    அவளின் கழுத்து…

    எங்கள் தலைமீது
    தகிக்கும் தணலை
    மெல்ல மறைக்க முயலும்
    அவளின் தாவணி…

    கலைந்திருக்கும்
    என் தலைமுடி
    கோதிவிடக் காத்திருக்கும்
    அவளின் கைகள்…

    யாவுமாகச் சேர்ந்து
    தேடுகிறோம்
    ஒரு மரத்தடியை…
    அங்கே மனம்விட்டுப் பேசி
    எங்கள் காதல் வளர்க்க
    எங்கும்
    தென்படவில்லை…

    ஏதும் மரம்
    உங்கள் பக்கமிருந்தால்
    சொல்லுங்களேன்
    அங்கே வருகிறோம்!!

    Share
  • உயிர் வாசம்!

    -அமீர்

    மனதை விட்டு அகலாத
    மழை  நேர
    மண் வாசனை…                                 baby

    மறக்காத
    பால் தந்த
    மார் வாசனை…

    திகட்டாத
    தூங்கத் தோள் தந்த
    தந்தை வாசம்…

    சலிக்காத
    பால்யத்தில் கட்டிபிடித்துச்
    சண்டையிட்ட
    சகோதரன் வாசம்…

    திரும்பத் திரும்ப அழைக்கும்
    மனைவியின்
    முந்தானை வாசம்…

    விரும்பிய
    ரோஜா
    மல்லி
    சம்பங்கி
    சந்தன வாசனைகள்…

    அவை யாவுமின்று
    எனக்கு
    அடுத்தபட்ச வாசமானது
    என்னவள் ஈன்ற
    என் சேயை
    மருத்துவச்சி
    என் கையில் தந்தபோது
    வீசிய பிறந்த குழந்தையின்
    ஈரமான பச்சை வாசத்தால்!

     

    Share