Tag: இல.பிரகாசம்

  • கன்னி கழியவில்லை!

    இல.பிரகாசம்

     
    “கால்கள் ஓடி ஓய்கிற வயதாச்சு
    வயசு ஐம்பதை நெருங்கிடுச்சு
    வருஷம் தவறாது
    கால்கடுக்க வெயிலில் நின்னு
    பேரு விலாசம் எல்லாத்தையும்
    கொடுத்தாச்சு“
    காலத்தை தொலைத்து விட்ட
    பதிவாளரின் மூச்சு
    பின் வரிசைக்காரனுக்கும் ஒலித்திருக்கும்
    சங்கேத மொழிகள் ஏதேனுமொன்றில்

    ஆபிசு வாசலில் “வேலைவாய்ப்பு
    படித்த இளைஞா்களே வாய்ப்பை தவறவிடாதீா்கள்”
    கொட்டை எழுத்தில் கெக்கலித்துக் கொண்டிருப்பது போல்
    பாவனை காட்டியதாக ஒரு சித்திரம்
    அப்போது தோன்றியிருந்தாலும்
    ஆச்சரியப் படுவதற்கில்லை

    பட்டயச் சான்றிதழ் நகல்களைக்
    கொடுத்துப் போகச் சொன்ன அலுவலா்

    அடுத்த மாதம்
    அலுவலக வாசல் பஜ்ஜிக் கடையில்
    ஒரு மூலையில்
    ஒரு நாளேட்டின் நான்கு துண்டு
    காகிதங்களோடு
    இந்த நான்கு துண்டு நகல்கள்
    எங்கேனும் தேடிப் பார்க்கத் துாண்டுமா?

    வரிசை நீண்டு கொண்டிருப்பது போல
    என் பெயருடன் விலாசத்துடன்
    மேலும் ”நான் ஒரு
    பட்டதாரி” பதிவுகளும் எண்ணிக்கையில்
    நீண்டு கொண்டிருக்கின்றன

    வயசு பதிவு மூப்பாகிக் கொண்டிருக்கிறது
    என் பட்டயச் சான்றிதழும்
    இன்னும் கன்னி கழியவில்லை
    நான் பட்டதாரி தான்
    “பட்ட” தாரி!

    வரிசையில் மீண்டும் என்னைப் போல்
    ஒருவன்
    நாளையும் வருவான்
    வரிசையும் நீளும்…!
    பதிவெண்களும் நீளும்….!

    Share
  • நிழல் சா்ப்பம்!

     

    இல.பிரகாசம்

     

    ஒரு ஒலி என்னைத் தொடா்ந்து வருகிறது

    “வழ் வழ்” என்று அது

    என்னை ஏதோ ஒன்றிலிருந்து

    விலகியிருக்க மீண்டும் துரத்த ஆரம்பித்திருக்கிறது

     

    கால்கள் வேகமெடுக்க முயலுகின்றன

    புரியமால் தடுமாறுகின்றன!

    மீண்டும் ”வழ் வழ்” வெறிபிடித்த ஒரு

    சப்தம் புடைத்துக் கொண்டு

    எங்கிருந்து வருகிறது?

     

    மீண்டும் “வழ் வழ்” இரத்தத்தை

    குடிக்கிற வெறி பீறிட்டு ஒழுகுகிறது!

    வெறி பிடித்த சா்ப்பத்தைப் போல ஊா்ந்து ஊா்ந்து

    நிழல் போல வருவதை

    பின் நோக்கிப் பார்த்தேன்

     

    சந்தேகம் இல்லை நிச்சயம் சந்தேகம் இல்லை

    அது தான் நிச்சயம் அதுவே தான்

    ”நான்””நான்”“நான்”

    நிழல் சா்ப்பம் ”நான்”

     

    Share
  • பறவை மோதிய தடம்?

    இல.பிரகாசம்

     
    ஆகாயத் தாமரைகள்
    அலைகளோடு
    வேரூன்றி வாழப் பழகிக் கொண்டன
    போலும்!

    இரட்டைத் துடுப்புகளுக்கு
    இனிய வரவுகளை காட்டுகின்றன
    அப்போதும் அலைகள்
    முன்னோக்கிச் செல்கின்றன!
    ஏரியில் தனியனாய் நான்!

    “நான்” புறவெளி
    சிந்தை அலைகளின் மீது!
    ஒரு பறவை தன் சிறகுகளால்
    அலையை மோதிய தடம எங்கே?

    Share
  • வரம் தாரீரோ கண்களே!

     
    இல.பிரகாசம்

     

    உயிர் உண்ணும் கண்கள்
    களவாடிச் செல்ல
    இமைகள்
    இமைக்குந் தருணம் இதுவல்லவோ?

    இளமைஅது கொள்ளாது கொள்ளாது உன்
    உறவைத் தீண்டிட மனம் கள்ளத்தனத்
    திட்டம் தீட்டுகிறது!;
    தீயில் ஊறுந் தேனாய்க்
    கார்மேகஞ் சூழ்ந்த மையல் கொண்ட
    கயல்விழிப் பாவையின் பார்வையது பொல்லாது!

    யாவரும் மோகங் கொள்ளும் கலைநயப்
    பாவையின் நயனம் எனைத் தீண்டாதோ?
    தீரரெனப் போற்றும் வீரர்களுக்கெல்லாம்
    வீரம் விளைத்திடும் -அந்தக்
    கொற்றவையின் கருணை
    கடுகளவேனும் எனை தீண்டாதோ? கண்களே!

    காவியம்பல போற்றும் நாயகன் நானென
    பாவலர் பாடும் பாடுபொருளாய் நானாவேனோ?
    உயிருறவை ஈர்க்குங் கலைநயக் காதலை
    கருவில் சுமந்தலையும் கண்களே நீங்கள்
    நான்கேட்ட வரமதனை தாரீரோ?

    Share