இலக்கியம்கவிதைகள்

கன்னி கழியவில்லை!

இல.பிரகாசம்

 
“கால்கள் ஓடி ஓய்கிற வயதாச்சு
வயசு ஐம்பதை நெருங்கிடுச்சு
வருஷம் தவறாது
கால்கடுக்க வெயிலில் நின்னு
பேரு விலாசம் எல்லாத்தையும்
கொடுத்தாச்சு“
காலத்தை தொலைத்து விட்ட
பதிவாளரின் மூச்சு
பின் வரிசைக்காரனுக்கும் ஒலித்திருக்கும்
சங்கேத மொழிகள் ஏதேனுமொன்றில்

ஆபிசு வாசலில் “வேலைவாய்ப்பு
படித்த இளைஞா்களே வாய்ப்பை தவறவிடாதீா்கள்”
கொட்டை எழுத்தில் கெக்கலித்துக் கொண்டிருப்பது போல்
பாவனை காட்டியதாக ஒரு சித்திரம்
அப்போது தோன்றியிருந்தாலும்
ஆச்சரியப் படுவதற்கில்லை

பட்டயச் சான்றிதழ் நகல்களைக்
கொடுத்துப் போகச் சொன்ன அலுவலா்

அடுத்த மாதம்
அலுவலக வாசல் பஜ்ஜிக் கடையில்
ஒரு மூலையில்
ஒரு நாளேட்டின் நான்கு துண்டு
காகிதங்களோடு
இந்த நான்கு துண்டு நகல்கள்
எங்கேனும் தேடிப் பார்க்கத் துாண்டுமா?

வரிசை நீண்டு கொண்டிருப்பது போல
என் பெயருடன் விலாசத்துடன்
மேலும் ”நான் ஒரு
பட்டதாரி” பதிவுகளும் எண்ணிக்கையில்
நீண்டு கொண்டிருக்கின்றன

வயசு பதிவு மூப்பாகிக் கொண்டிருக்கிறது
என் பட்டயச் சான்றிதழும்
இன்னும் கன்னி கழியவில்லை
நான் பட்டதாரி தான்
“பட்ட” தாரி!

வரிசையில் மீண்டும் என்னைப் போல்
ஒருவன்
நாளையும் வருவான்
வரிசையும் நீளும்…!
பதிவெண்களும் நீளும்….!

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (1)

  1. Avatar

    கன்னி கழியவில்லை கவிதையை வெளியிட்ட வல்லமை இதழுக்கு நன்றி 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க