Tag: ஒரு அரிசோனன்

  • கையாலாகாதவனாகிப் போனேன்! – 1

    ஒரு அரிசோனன்

    வாயில்லா ஜீவன்

    நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நாம் பலதடவை கையாலாகாதவர்களாகி நின்றிருக்கிறோம்அந்தசில நிகழ்வுகள்நம் அடிமனத்தில் ஆழமாகப் புதைந்துபோனாலும், அவ்வப்போதுதிரும்பத்திரும்ப மேலெழுந்துவந்து நம்முள் ஒரு ஏக்கத்தை, நமது கையாலாகாத்தனத்தை நமக்குஉணர்த்தி, குற்ற உணர்வை அதிகமாக்கி நிற்கத்தான் செய்கின்றனஅப்படி அவை நமது கையாலாகாத்தனத்தை உணர்த்தும்போது, நமக்குள் ஒருவிதமான தாழ்வுமனப்பான்மை ஏற்படுவதையும், மீண்டும் நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா, கையாலாகாதவர்களாகிப்போகாமல் ஏதாவது செய்திருக்கமாட்டோமா என்றும் தோன்றும்சிறிது சிந்தித்தவுடன், நம்மால் அந்தச் சந்தர்ப்பத்தில் அப்படித்தான் நடந்துகொண்டிருக்க இயலும், ஏனெனில் வேறுவிதமாக நடந்துகொள்ளும் வலிமையோ, திறமையோ நம்மிடம் இருக்கவில்லை என்றும் நம்மைநாமே சமாதானம் செய்துகொள்வோம்.  இருப்பினும், அந்நிகழ்ச்சிகள் கொதிக்கும் நீரிலிருந்து கிளம்பும் குமிழிகளாக வருவதை நம்மால் தடுக்க இயலாது.

    என் வாழ்வில் நடந்த அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை — என்னைக் கையாலாகாதவனாக ஆக்கிபச்சாதாபமடையவைத்திருக்கும் உண்மை நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்கிறேன். உங்களுக்கும் அப்படி ஏதாவது நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தால் என்னைப்போல உங்களையும் பச்சாதாபப்படவைத்த, குற்ற உணர்வில் புழுங்கவைத்த அந்நிகழ்வுகள் மனிதவாழ்வின்இயற்கை என்றெண்ணி அமைதிகொள்ளுங்கள்

    … அம்மாதிரியான முதல் நிகழ்வு என் ஆறாம்வயதில் நிகழ்ந்தது.

    சைக்கிள் ரிம்மை ஒரு குச்சியால் தட்டிக்கொண்டு, உதடுகளிலிருந்து காற்றை வெளியேற்றி, கார் ஓடுவதுபோன்ற ஒரு சத்தத்தை உண்டாக்கியதாகக் கற்பனைசெய்துகொண்டு, சிலமுறை பார்த்து மயங்கிப்போன ‘ப்ளிமத் சேவாய்’ காரை ஓட்டும் பெருமையுடன், வீதியை வலம்வந்துகொண்டிருந்தேன் – கழுதைகூட பொதிசுமக்க மறுக்கும் புடைபுடைக்கும் வெய்யிலில்.

    என் கவனத்தைக் கவர்ந்தது நடுவீதியில் படுத்துக்கிடந்த அந்த மாடு.

    அது தனியாகப் படுத்திருந்தால், ஒருகணம்கூட அதற்குமேல் அந்த மாட்டைப் பார்த்திருக்கமாட்டேன். எனது ப்ளிமத் சேவாயை [அதுதான் என் சைக்கிள் ரிம்மை] ஓட்டிக்கொண்டு அந்த வாயில்லா ஜீவனைக் கடந்துசென்றிருப்பேன்.

    அந்த ‘வாயில்லா ஜீவன்’ கழுத்தில் கட்டப்பட்ட நுகத்தடியுடன், நுகத்தடி இணைக்கப்பட்ட வண்டியுடன் படுத்திருந்தது. அதன் அருகில் அதன் தோழனான இன்னொரு ‘வாயில்லா ஜீவன்’ கடனேயென்று நின்றுகொண்டிருந்தது.

    “சனியனே, எந்திரு.  நீ இப்பிடி சண்டித்தனம்செஞ்சா, சந்தைக்கு நான் எப்படிப் போகுறதிங்குறேன்?” என்று அந்த மாட்டை மாட்டடி அடித்துக்கொண்டிருந்தார் வண்டியோட்டி. அவரது கவலை அவருக்கு.

    வண்டியில் ஏற்றப்பட்டிருக்கும் சுமை வைக்கோல் ஏற்றிவரும் இக்கால லாரிகளில் நிரம்பிவழிவதுபோல – ஆனால், சுமை வைக்கோல்போர் அல்ல – நிரம்பிவழிந்திருந்தது.

    நான்கு மாடுகளால்கூட அந்த வண்டியை இழுக்கமுடியாமா என்பதே கேள்விக்குறியாக இருக்கும்போது, இவ்வளவுதூரம் அந்த வண்டியை அந்த மாடுகள் இரண்டும் எப்படி இழுத்துவந்தன என்பதைப் பார்த்தால் வியப்பாகவே இருந்தது.

    வண்டியோட்டி அடித்தது போதாதென்று, மாட்டைப் பலமாக உதைத்து, அதன் வாலைத்தூக்கி, அதற்குக்கீழே இருக்கும் மென்மையான பாகத்தில் தார்க்குச்சியின் ஆணியால் இரண்டு – மூன்று முறை முழுபலத்துடன், நாக்கைத் துருத்திக்கொண்டு, ஆவேசத்துடன் குத்தினார்.

    அந்த இடங்களிலிருந்து செந்நிறக் குருதி கசிந்தது.

    என் தங்கை அழுதாலே பொறுக்காமல், “பாப்பாவைத் தூக்கு, அம்மா!” என்று முறையிடும் என்னால் அதைக் காணச்சகிக்கவில்லை.  முறுக்குமீசையுடன், சிறிது சிவந்த கண்களுடன், தெற்றுப்பற்களுடன் ஐயனார்போல அமர்ந்திருந்த வண்டியோட்டியைப் பார்த்தால் எனக்குப்  பயமாகத்தான் இருந்தது.

    என்னையுமறியாமல் என் சைக்கிள் ரிம் கையைவிட்டு நழுவித் தரையில் விழுந்தது. செயலற்று நின்றேன்.

    “மாட்டை அடிக்காதீங்க ஐயா,” என்று கதறவேண்டும்போல இருந்தது.  பயத்தில் உதடுகள் ஒட்டிக்கொண்டதால் குரல் எழவில்லை.

    துயருறும் அந்த வாயில்லா ஜீவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆறுதல்சொல்ல என் உள்ளம் துடித்தது.

    ஆயினும், நான் செயலற்று நின்றேன்.

    அதன் கண்ணிலிருந்து கரியதாக நீர்பெருகித் தரையில் சொட்டியது. அப்படியும் இலேசாக அசைந்துகொடுத்ததே தவிர, அந்த மாடு எழுந்திருக்கவில்லை.  என்ன அலுப்போ, களைப்போ, அயர்ச்சியோ அதற்கு!

    உள்ளங்காலில் முள்குத்தினால் நம்மால் பொறுக்கவியலாது.  மென்மையான பின்பாகத்தில் இரத்தம்கசியக் குத்தப்பட்டும், துடிக்காமல் வெறுமனே அசைகிறதே அந்த வாயில்லா ஜீவன்?

    அது பொறுமையா, அல்லது, இப்படி அடியையும், உதையையும், குத்தலையும் தாங்கியதால் ஏற்பட்ட மரப்பா?

    அந்த மாட்டின், தாய், தந்தை, அக்கா இவற்றுடன் அந்த மாட்டைச் சம்பந்தப்படுத்திக் கண்டகண்ட கெட்டவார்த்தைகளால் திட்டியவாறே கீழே குதித்தார், வண்டியோட்டி.

    என்னைப் பார்த்தவுடன், “தம்பி, இங்கே உனக்கென்ன வேலை?  போ, போ!” என்று கடும்சொற்களால் அதட்டிவிட்டு, தொண்டையைச் செருமிக்கொண்டு, குனிந்து அந்த வாயில்லா ஜீவனின் இருகண்களிலும் வாயில் குதப்பிக்கொண்டிருந்த செக்கச்செவேலென்ற புகையிலைச் சாற்றை உமிழ்ந்தார்.

    என் கண்கள் இரண்டும் எரிந்தன.

    இதயத்தை யாரோ கசக்கிப்பிழிவதுபோல இருந்தது.  மூச்சுத் திணறியது.  அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டேன்.

    மாடு எழுந்தது.  தார்க்குச்சியால் அதைக் குத்தியவாறு விரட்டினார் வண்டியோட்டி.

    மாடு தள்ளாடியவாறே அடியெடுத்து வைத்தது.  வண்டி மெல்ல நகர்ந்தது.

    பிழியப்பிழிய அழுதேன் நான் – என் கையாலாகாத்தனத்தை எண்ணி.

    கிங்காங்கைப் புரட்டிப்போடும் தாராசிங்காக நான் இல்லையே என்றெண்ணி.

    இன்றும், எந்தவொரு மாட்டுவண்டியைப் பார்த்தாலும் இந்நிகழ்வே என் கண்முன் வந்துநிற்கிறது.  என் கையாலாகாத்தனத்தையும், அந்த வாயில்லா ஜீவனையும், இரத்தம்சொட்டும் மென்மையான அதன் பின்பாகத்தையும், அதன் கண்ணிலிருந்து வழிந்து தரையில் சிந்திய கரிய நீரையும், அதன் கண்களில் உமிழப்பட்ட புகையிலைச் சாறையும், அது வழியும்போது அந்த வாயில்லா ஜீவன் தன்னை நொந்துகொண்டு இரத்தக்கண்ணீர் வடிப்பதுபோன்ற தோற்றமும், மெல்ல எழுந்திருந்து தள்ளாடித் தள்ளாடி வண்டியை இழுத்துச்சென்றதையும் நினைவுக்குக் கொண்டுவந்து என்னுள் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

    ஒருசில சமயம் நான் என்னை அந்த வாயில்லா ஜீவனைப்போல உணர்ந்து, அதுபட்ட வேதனையை அனுபவிக்கிறைன்.

    இது என் கையாலாகாத்தனத்திற்கு இறைவன் தொடர்ந்து அளித்துவரும் தண்டனையா?

     [கையாலாகாத்தனம் தொடரும்]

    மறுபகிர்வு நன்றி:  தாரகை இணைய இதழ்

    Share
  • தமிழ் இனி மெல்ல… ஒரு அரிசோனனின் புதின வெளியீட்டு நிகழ்ச்சி!

    தமிழ் இனி மெல்ல…

    ஒரு அரிசோனனின் புதின வெளியீட்டு நிகழ்ச்சி!

    நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழன்பர்களை வரவேற்கிறோம்.

    The Venue:

    Youth Hostel

    2nd Avenue, Indira Nagar

    Chennai, Tamil Nadu 600020

    India

    Time

    15-02-2015

    Sunday 4.00 P.M to 6.P.M.

    ariso

    இது தமிழின் கதை. எதிர்காலத்தையும், தமிழ் மன்னர்களின் சிறப்பான ஆட்சியையும் இணைகிறது. தற்பொழுதைய நிலை நீடித்தால் தமிழ் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்ற கற்பனையுடன், அந்த எதிர்காலத் தமிழர்களுக்கு பழங்காலத்துத் தமிழர்கள் ஒரு தங்கச் சுருளில் விட்டுச்சென்ற வரலாற்றை நான்கு பகுதிகளாகக் கூறும் புதினமே “தமிழ் இனி மெல்ல…”

    எதிர்காலம் எப்படி இருக்கும்? தமிழ்நாட்டின் நிலை என்ன, தமிழின் நிலை என்ன, தமிழர்களின் நிலை என்ன என்பதை முதல் பகுதி விவரிக்கிறது. முதல் பகுதி இருபத்தைந்தாம் நூற்றாண்டில் சுழல்கிறது.

    இரண்டாம் பகுதி இராஜராஜர் தஞ்சைகோவிலைக் கட்டிமுடித்த காலதத்தில் துவங்குகிறது. அரசை விரிவாக்கும் இலக்கை அடைத்த அவரின் புது இலக்கைப்பற்றி புதினம் பேசுகிறது. அவர் தனது இளவல் இராஜேந்திரனுக்கு சோழப்பேரரசை ஒப்படைப்பற்றியும் அவர்கது புதிய இலக்குபற்றி அவரது மன ஓட்டங்களையும் விவரிக்கிறது. சோழநாட்டிற்கும் சாளுக்கிய நாட்டிற்கும் உள்ள உறவினையும், மற்ற நாடுகளுடன் உள்ள போராட்டங்களையும் உணர்த்துகிறது.

    “தமிழ் இனி மெல்ல..”வின் முதல் புத்தகம் இத்துடன் முடிகிறது. இது தமிழிலும், ஆங்கிலத்தில் “The Golden Scroll (The story of a langugage and its people)” என்ற தலைப்பிலும் ஒரே சமயத்தில் வரும் பிப்ரவரி 15ம் தேதி தாரணி பதிப்பகத்தாரால் திரு வையவன் அவர்கள் முன்னிலையில் வெளியிடப்படுகிறது. இடம் [பின்பு அறிவிக்கப்படும். அனைவரும் வருக. வருபவர்கள் கீழ்க்கண்ட மின் அஞ்சலுக்கு எழுதினால், தொடர்பு கொள்ளப்படும். (oruarizonan@gmail.com )

    அடுத்த பகுதிகள் இராஜேந்திரன், அவனது மகன்களான இராஜாதிராஜன், இராஜேந்திரதேவன், வீர ராஜேந்திரன், இரண்டாம், மூன்றாம் குலோத்துங்க சோழர்கள், மற்றும் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், மார்கோ போலோ கண்ட பாண்டியப் பேரரசை ஒரு குடைக்கீழ் ஆண்ட குலசேகர பாண்டியன் இவர்களின் காலத்தில் நடை போடுகிறது. அத்துடன் தமிழ் மன்னர்களின் அழிவு ஏற்படக் காரணமான மாலிக் காஃபூரின் படையெடுப்பையும் கண்முன் நிறுத்துகிறது.

    இந்த வரலாற்றை அறிந்த எதிர்காலத் தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விளக்கி புதினம் நிறைவுபெறுகிறது.

    இந்தப் புதினம் ஒருசில நாயக-நாயகியரின் கோணத்தில் பார்க்கப்படுவதில்லை. அனைவரின் கோணங்களிலிருந்தும் வரலாற்றுக் கதையை நடத்திச் செல்கிறது.

    வரலாற்றை விவரிக்கும் புதினம், அப்படி ஏன் வரலாறு நிகழ்ந்தது என்பதை கதாசிரியரின் கற்பனைக் குதிரையில் வாசகர்களை ஏற்றிச் செல்கிறது.

    அரிசோனா மகாதேவன்

    (ஒரு அரிசோனன்)

    யு.எஸ்.ஏ.

    கதையைப் படித்த சிலரின் கருத்துக்கள்

    ஜவஹர் பிரேமலதா, பேராசிரியர், சேலம்

    அரிசோனா மகாதேவன் (ஒரு அரிசோனன்) புலம் பெயர்ந்த ஒரு தமிழர். தமிழின் அருமையை பெருமையை அந்நிய சூழலில் உணர்ந்து தனக்கான அடையாளம் மொழியே என்பதை உணர்ந்து தான் உணர்ந்ததை தாய்நாட்டுத் தமிழருக்கும் எடுத்துரைக்க இந்நாவல் புனைந்துள்ளார்.

    உணர்வதை உணர்த்த நினைப்பதே …அதுவும் சுவையாக … ஒரு கதையாக ….உணர்த்த முயல்வதே …..ஒரு படைப்பின் முதல் வெற்றியாகிறது. வெற்றுரைகளாக இல்லாமல் மாபெரும் வரலாற்றை ஆழ்ந்து அறிந்து வலுவான ஆதாரங்களினடிப்படையில் “தமிழ் இனி மெல்ல…” என்ற நாவல் எழுதப்பட்டுள்ளது.

    இது முன்னைப் பழைமைக்கும் பழமையான, பின்னைப் புதுமைக்கும் புதுமையான என்றுமுள தென் தமிழின் முந்தைய வரலாற்றையும் எதிர்கால வரலாற்றையும் எடுத்துரைக்க தமிழில் வந்துள்ள நாவல்களிலிலேயே தனித்தன்மை வாய்ந்தஒரு நாவலாகும்.

    தமிழ் நாவல்களில் பெண் விடுதலை,சமூகவிடுதலை இனவிடுதலை,சாதி விடுதலை என எத்தனையோ பாடுபொருள்களில் படைப்புகள் எழுதப்பட்டுள்ளன. சமூகத்தைப் பீடித்துள்ள பலச் சமூக விரோதப் போக்கை நாவல்கள் சாடியுள்ளன. ஆனால் தமிழுக்கு எதிரான தமிழர்களின் விரோதப்போக்கை எந்த நாவலும் எடுத்துரைத்ததில்லை. தமிழுக்குத் தமிழ் உணர்வில்லாத தமிழரிடமிருந்துதான் விடுதலை வேண்டும் என்பதை மிகச்சிறப்பாக நாவலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

    மிக எளிய நடை. படிக்கத்தூண்டும் உரையாடல்கள். இந்நாவல் ஒரு வரலாற்று நாவல். இதில் வரலாறும் உள்ளது. ஒரு துப்பறியும் நாவல் போல் வாசகரை கட்டிப்போடும் விறுவிறுப்பும் உள்ளது.தமிழின் நிலையை வைத்து எழுதப்பட்ட நாவல் இது ஒன்றாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் துப்பாக்கியோ, அணுகுண்டுகளோ தேவையில்லை.அந்த இனத்தின் மொழி அழிந்தாலே போதுமானது என்பதை நாவலாசிரியர் நிகழ்ச்சிகளின் வழியும் பாத்திரங்களின் வழியும் எடுத்துரைத்து எச்சரிக்கிறார்.

    ஒரு மொழியின் வாழ்வும், வளமும், வளர்ச்சியும் அம்மொழி பேசும் மக்களின் வாழ்வும் வளமும் வளர்ச்சியுமாகும். படைப்பாளர்கள் தாங்கள் உணர்வதைச் சமூகத்திற்கு ஏதோ ஒரு வகையில் உணர்த்த முயல்கின்ற போக்குத்தான் படைப்புகளாகத் தோற்றம் கொள்கின்றன.

    ஒரு சமூக மாற்றம் தேவை.

    ஒட்டார் பின்சென்று வாழ்தலின் அந்நிலையே

    கெட்டான் எனப்படுதல் நன்று.

    என்ற திருக்குறள் கருத்தை ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும். நாளை உலகிலுள்ள பிற மொழியாளர்கள், “பிறந்ததும்தான் பிறந்தேன் ஒரு தமிழனாகப் பிறந்தேனா?” என்று ஏங்க வேண்டும். அந்நாள் எந்நாள்?

    இந்நாவல் அந்நாளை எண்ணி ஏங்கிய ஒரு தமிழனின் ஏக்கமாக வெளிப்பட்டுள்ளது. தமிழ் இனி மெல்ல..சாகுமா? தமிழ் இனி மெல்ல… உலகை ஆளுமா? தமிழா உன் கையில்….

    ஹரணி, பேராசிரியர், அண்ணாமலை பல்கலைக்கழகம்

    தமிழின் தொன்மையும் பழம்சிறப்பும் உணர்வதற்கு மேற்சுட்டியவை ஒரு சிறு சான்றாகக் கொண்டு இப்போது திரு அரிசோனா மகாதேவன் அவர்கள் நாவலான “தமிழ் இனி மெல்ல…” வை அணுகுதல் வேண்டும்.

    ஒரு மொழி என்பது ஒரு சமுகத்தின் உருவாக்கம், வளர்ச்சி, மாற்றங்கள், விளைவுகள் இவற்றின் அடையாளம். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல சமுகமும் மொழியும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கின்றன. ஒருமொழியே ஒரு சமுகமாகவும் ஒரு சமுகமே ஒரு மொழியாகவும் நிலைநிறுத்தப்படுகின்றன. இந்த மொழியினை நேசித்தல், கற்றல், பயன்படுத்துதல், அனுபவித்தல், வளர்த்தல்,அடுத்தக் கட்ட தலைமுறைக்குக் கொண்டு செல்லுதல் என்பவை தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள அனைவரின் தலையாயக் கடமையாகும்.

    ஆனால் மொழியின் பயன்பாடு என்பது குறிப்பாகத் தமிழமொழியின் பயன்பாடு என்பது இன்றைக்கு கேலியாகவும் தமிழ் படித்தால் என்ன பயன்? என்பதுபோலவுமான கருத்தாக்கங்கள் மிகுந்து அது மொழியை வளர்ப்பதற்குப் பதிலாக அழிவின் பாதைக்குக் கொண்டு சென்றுவிடுமோ என்கிற பலரின் அசசத்தையும் உணரமுடிகிறது. இது உண்மையான மொழிப் பற்றாளர்களின் உள்ளார்ந்த கவலை.

    இந்தக் கவலையே திருமிகு அரிசோனா மகாதேவன்அவர்களின் கவலையும். அயல்நாட்டில் இருப்பிருந்தாலும் மனசு முழுக்க இந்த தமிழ்மொழியின் நிலை குறித்து அது சவலைப் பிள்ளைப்போலப் பராமரிக்கப்படுவது கண்டு உணர்வுப்பூர்வமாக கவலைப்பட்டு இந்நாவலைத் தொடங்கியிருக்கிறார்.

    உண்மையில் மகாதேவன் அவர்களின் இந்நாவல் இன்றைக்கான அவசிய சமுகத் தேவையாக உருவெடுத்திருக்கிறது. ஒரு சிறிய குழந்தைக்கு உறவுகளை அறிமுகம் செய்யும் தாத்தாவோ அப்பாவோ அறிமுகம் செய்யும்பொது, “நம்முடைய முன்னோர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா, அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் தெரியுமா, அவரின் செம்மாந்த வாழ்க்கை தெரியுமா, அவர்களின் செயற்கரிய செயல்கள் தெரியுமா? அந்தப் பரம்பரையில்தான் இப்போது நீ வந்து பிறந்திருக்கிறாய்!” எனும்போது அக்குழந்தை தன் பாரம்பரியத்தின் பெருமையை மட்டும் உணர்ந்துகொள்ளாமல், கூடவே தான் எப்படி அவர்களைப் போல வாழவேண்டும் சிறக்கவேண்டும் என்பதையும் கூடுதலாகக் கற்றுக்கொள்கிறது.

    இந்த உத்தியைத்தான் திரு மகாதேவன் அவர்களும் இந்நாவலின் வரலாற்றின் வேரைப் பிடித்து சேர,சோழ, பாண்டியர்கள் என்றிருந்தாலும்அவர்கள் மொழிக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு வளர்த்த விதத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நம் மொழியின் பெருமைகளை அடையாளப்படுத்தித் தொடங்கியிருப்பதன் சிறப்பே இந் நாவலாகும்.

    காதேவன் அவர்கள் ஒரு போராளியைப் போன்றே இந்நாவலைக் களமாக்கி இறங்கி நிற்கிறார் தமிழ்மொழியின் பெருமையைச் சிதைக்கும் எந்தவொன்றின் எதிராகவும். அவரின் அனுபவப் பின்புலத்தில் இந்நாவல் மெல்ல மெல்ல தமிழின் மாண்பையும் பண்பாட்டையும் படிப்போரின் மனத்துக்குள் இறக்குகிறது. நிச்சயம் இந்நாவல் குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்தும். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பதுபோல தமிழின் மாண்பையும் அதன் வளத்தையும் தொன்மையையும் காப்பதில் போராடும் சிலரில் மகாதேவனும் ஒருவர் என்றாலும் அவருக்கான தனித்துவம் இந்நாவலின் வழியாகக் குறிப்பிட்ட இலக்கை அடைந்து விளைவுகளை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

    நாலைந்து முறைகளாவது இந்நாவலை வாசிக்கவேண்டும். அப்போதுதான் இன்னும் இதன் செம்மாந்த நோக்கம் மனத்தில் கிளர்ச்சியை உருவாக்கும் என உறுதியாக நம்புகிறேன். திரு மகாதேவன் அவர்களின் முயற்சி வெல்லும் எனப்தோடு தமிழின் மாண்பு ஒருபோதும் எவராலும் நலிவடைந்துவிடாது என்கிற அழுததமான உணர்வையும் பல்வேறு சான்றுகள் வழியாக இந்நாவல் மனத்தில் எழுதிக்கொண்டேயிருக்கிறது.

    Paul Daniels, Mesa, Arizona, USA:

    The Golden Scroll, The Tamil Legacy… and What Might Have Been…

    aris

    Here is a journey spanning more than a thousand years — past, present, and future (not always in that order). It is a journey that goes over land, crosses rivers, and that requires ships at sea and aircraft. It is a journey into the hearts and minds of certain citizens (both ancient and modern) — decision makers, and those who are not usually seen as important, and which transcends caste and position. It is a journey about what might have been. There is loyalty to a great cause; there is intrigue; and there are those whose agendas conflict with a grand idea concerning how a people can be united, an idea found in a golden scroll, a document known to only a few…

    Share
  • மீனாம்பா பாட்டி போயிட்டா…

    -ஒரு அரிசோனன்

    “மீனாம்பா பாட்டி காலம் ஆகிவிட்டது. அவ போய்ச் சேந்துட்டா. நீ ஒரு முழுக்குப் போட்டுடு.” என்ற என் அம்மாவின் கார்டைப் பார்த்ததும் என் கண்கள் பனித்தன. மேலே எழுதிய எழுத்துக்கள் தெரியாமல் மறைந்தன. மீனாம்பா பாட்டிதான் எவ்வளவு அதிர்ஷ்டம் கெட்டவள்! உறவுக்குச் செய்து செய்தே ஓய்ந்து உருக்குலைந்து போனவள் அவள்! என் தொண்டை அடைத்தது. என் நினைவு பின்னோக்கிச் சென்றது…

    எனக்கு நினைவு தெரிந்து பார்த்ததில் இருந்து, கடைசித் தடவை பார்த்துவிட்டு வந்ததுவரை மீனாம்பா பாட்டி மாறவே இல்லை. அதே மழித்த மொட்டைத் தலை, உடம்பைச் சுற்றிய அழுக்கேறிய, ஆனால், தண்ணீரில் நனைத்துத் துவைத்துக் கட்டிய பழுப்பேறிய வெள்ளைப் புடவை. பறக்கப் பறக்கப் பார்க்கும் பார்வை. நடக்கும்போது இங்குமங்குமாக உதறும் கைகள். இருபது ஆண்டுகளாக மாறாத வடிவம்…

    “கண்ணா, இதுதான் என் அக்கா. உன் பெரியபாட்டி. நமஸ்காரம் பண்ணிக்கோ.” என்று என் தாய்வழிப்பாட்டி ஆறு வயதில் மீனாம்பா பாட்டியை அறிமுகப் படுத்தியது நன்றாக நினைவில் இருக்கிறது. அவர்களை வணங்கி எழுந்ததும் என் கண்ணில் பட்டது அவர்களுடைய மழித்த தலைதான்.

    meenapatti1முதன்முதலாக ஒரு அந்தணக் கைம்பெண்ணைப் பார்க்கிறேன் நான். அவர்கள் கைம்பெண் என்று அறியும் அறிவு கூட எனக்கு இல்லை. எனக்குள் தோன்றியது இதுதான். ஏன் இவர்கள் மொட்டை அடித்து இருக்கிறார்கள்?

    “பெரியபாட்டி, நீ எந்த கோவில்லே மொட்டை போட்டே? என்ன வேண்டுதல்?” என்று கேட்டதும், என் பாட்டி, “பெரியவாளை இப்படியெல்லாம் கேட்கக்கூடாது!” என்று கண்டித்ததும் நினைவுக்கு வருகிறது.

    “ஒரு அல்பாயுசுல போன பாவிக்காகத்தான்..” என்று மீனாம்பா பாட்டி அலுத்துக்கொண்டதும் என் காதில் ஒலிக்கிறது.

    “அல்பாயுசுல போன பாவி யாரு?” என்று நான் குழந்தைத்தனமாகக் கேட்டததற்கு, “என் ஆம்படையான் பாவிதான். நான் பெரியவள் ஆகறதுக்குள்ளையே குளத்துலே விழுந்து போய்ச் சேந்துட்டான். என் மஞ்சள் குங்குமம், தலை மயிர் எல்லாத்தையும் எடுத்துண்டு, மொட்டச்சியா விட்டுட்டுப் போயிட்டான்.” என்று மீனாம்பா பாட்டி வரட்டுச் சிரிப்புடன் கூறியதும், என் பாட்டி, “அக்கா. ஒரு சின்னக் குழந்தை கிட்ட என்னத்தைதான் சொல்றதுன்னு இல்லையா?” என்று கடிந்துகொண்டதும் கேட்கிறது.

    அப்பொழுது அதற்குப் பொருள் எனக்குப் புரியவில்லை. புரியும் வயது வந்தவுடன் நான் திடுக்கிட்டுப் போனேன். அறியா வயதில் திருமணம். ஒரே ஆண்டில் குளத்தில் நீந்திக்குளிக்கச் சென்ற கணவன் மூழ்கி இறந்துபோனான். பருவம் வந்ததும், சுமங்கலிகளை அழைத்து, மஞ்சள் நீராட்டி, பட்டுப் புத்தாடை உடுத்தச் செய்து சீராட்டவில்லை. மகிழ்ச்சியாகச் சிரித்து, பாட்டுப் பாடி, நல்வாழ்த்துக்கூறி, வாழ்த்திப் புகழவில்லை.

    மாறாக, நாவிதரை வீட்டுக்கு அழைத்து, தலைமயிரை மழிக்கச் செய்து, அமங்கலிகளைக் கொண்டு, வெள்ளை ஆடை உடுத்திவிட்டு, ஓவென்று அழுதார்கள். “பாவி மகளே, இப்படி ஆய் விட்டியே! இனி யாராத்தில் இடிசொறு திங்கப்போறியோ!” என்று சுமங்கலியான அவளது அம்மா கதறினார்களாம்.

    தன் மகளை விதவைக்கோலத்தில் பார்த்து நெஞ்சு உடைந்த என் பாட்டியின் அப்பா ஒரே ஆண்டில் போய்ச் சேர்ந்தாராம். தாயும் மகளும் ஒரே மாதிரி மழித்த தலையுடனும், வெள்ளை உடையுடனும் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பார்களாம்.

    கைம்பெண்களான தாயும், மகளும், என் பாட்டியின் அண்ணா வீட்டில் காலத்தைக் கழிப்பார்களாம்.

    எந்த உறவினர் வீட்டில் நல்ல நாள்களில் என்ன வேலை என்றாலும், தாயும் மகளும் சேர்ந்து செல்வார்களாம். வேலையைச் செய்துவிட்டு, யார் கண்ணிலும் படாமல் ஒதுங்கி இருப்பார்களாம்.

    என் தாத்தா வாங்கிய ஒரு வீட்டின் புதுமனை புகுவிழாவுக்கு வேலை செய்வதற்காக வந்தபோதுதான் மீனாம்பா பாட்டியை முதன்முதலாகப் பார்த்தேன்.

    மங்குமங்கென்று வேலை பார்த்த மீனாம்பா பாட்டியிடம் ஒரு கெட்ட குணம்meenapatti2 உண்டு. மடி விழுப்பு ரொம்பப் பார்ப்பாள். என் பாட்டி, பிரம்மச்சாரிக்கு விழுப்புக் கிடையாது என்று எப்போதோ சொன்னதை நினைவில் வைத்துக்கொண்டு வேண்டுமென்றே மீனாம்பா பாட்டியைத் தொடுவேன்.

    “பழிகாரா, ஏண்டா விழுப்போட என்மேல விழறே! என் மடி போச்சேடா!” என்று கத்துவாள். அதுகூட எனக்கு வேடிக்கையாக இருக்கும்.

    “பெரியபாட்டி! உன் மடி உன்கிட்டதான் இருக்கு. அது எங்கேயும் போகலை.” என்று சீண்டுவேன்.

    என்னை அடிக்கவென்று ஒரு சின்னக் குச்சியை வைத்திருப்பாள். அதை எடுத்து ஒளித்து வைத்து விடுவேன். குச்சியைத் தேடுவாள்.

    “என்ன பெரியபாட்டி தேடறே?” என்று கேட்டால், “முதுகைச் சொறிஞ்சுக்க ஒரு குச்சி வச்சிருந்தேன். அதக் காணம். “ என்று இழுப்பாள்.

    “இதுதானா அது?” என்று ஒன்றும் தெரியாதவன் போல அந்தக் குச்சியை எடுத்துக் காட்டுவேன்.

    “ஆமாம். கொடு.” என்பாள்.

    “வெவ்வெவ்வே! என்னை அடிக்கத்தானே வச்சிருக்கே! தரமாட்டேன். வேணும்னா உன் கையாலே அடி.” என்று கிண்டல் செய்வேன் – மடி, விழுப்பு பார்க்கும் மீனாம்பா பாட்டி என்மேல் கை வைக்கமாட்டாள் என்ற தைரியம்.

    “அநியாய சாமர்த்தியம்டா நோக்கு. என் ராஜாவாச்சே! நெஜமாவே முதுகை அரிக்கறதுடா. கொடுத்துடுடா கண்ணா!” என்று தாஜா செய்வாள்.

    “நான் வேணும்னா சொறிஞ்சு விடறேன். பாட்டிக்கும் நான்தான் சொறிஞ்சு விடுவேன்.” என்று மிஞ்சுவேன்.

    “பரவாயில்லே. நான் ஸ்நானம் பண்ணத்தான் போறேன். சொறிஞ்சுவிடு.” என்று முதுகைக் காட்டுவாள்.

    “பெரியபாட்டி, ஏன் நீ ரவிக்கையே போடறதில்லை?” என்று என் சந்தேகத்தை மெல்ல அவளிடம் கேட்டேன்.

    “சின்ன வயசிலேயே என் தலையைச் செரைச்சாச்சு. ரவிக்கை ஒண்ணுதான் பாக்கி. இனிமே என் அழகிலே மயங்கி, எந்த ராஜகுமாரன் வரப்போறான்!” என்று வரட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்ப்பாள்.

    “பெரியபாட்டி, நீ சின்ன வயசிலே எப்படி இருப்பே? அழகா இருப்பியா? எல்லோர் போட்டோவும் இருக்கே, உன் போட்டோ மட்டும் எங்கேயும் காணோமே?” என்று கேட்டேன்.

    “ஆமா, ஆமா, இனிமே என்னைப் போட்டோ எடுத்து, பெண்பாக்கக் கொடுத்தனுப்பணுமா? மொட்டச்சிக்கு அழகு ஒண்ணுதான் கொறையாக்கும்?” என்று அலுத்துக் கொள்வாள். எனக்கு மீனாம்பா பாட்டி ஏன் எப்படிப் பேசுகிறாள் என்றே புரியாது.

    என் பாட்டியிடம் கேட்டால், “உனக்கு வாய் ரொம்பப் பெருகிப் போச்சு. பெரியவாகிட்ட என்ன பேசறதுன்னே தெரியலை.” என்று என்னையே திட்டுவாள்.

    நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து ஊரில் இருந்த என் மாமாத்தாத்தா, அதாவது மீனாம்பா பாட்டியின் தம்பியின் வீட்டுக்கு ஒரு தடவை விசெஷத்திற்காகச் சென்றிருந்தேன்.

    பஸ்ஸில் இருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றபோது என் மாமாத்தாத்தா இரைந்துகொண்டிருந்தது என் காதில் விழுந்தது.

    “இப்படியா ஈரம் சொட்டச் சொட்டத் துணியை உணத்தறது? நீ ஒரு தரித்திரம் வந்து சேர்ந்தது போறாதா? இன்னும் வேற வரணுமா?” என்று மீனாம்பா பாட்டியை வைது கொண்டிருந்தார்.

    “வயசாச்சுடா. கையிலே தெம்பு இல்லே. நன்னா இறுக்கிப் பிழியா முடியலேடா. எனக்கு என்ன பிள்ளையா, குட்டியா? இல்லே நாட்டுப்பொண்ணுதான் இருக்காளா, கொஞ்சம் பிழிஞ்சு உணத்துடின்னு சொல்லறதுக்கு. கட்டை வேகறவரைக்கும் நானேதானே செய்துக்கணும்.” மீனாம்பா பாட்டியின் குரல் தழுதழுப்பது எனக்குக் கேட்டது. அது என் மனதையே அறுத்தது.

    “வாடா கண்ணா! எப்படா வந்தே? ஆத்துலே அம்மா, அப்பா, பாட்டி தாத்தா எல்லோரும் சௌக்யமா?” என்று என் மாமாத்தாத்தா கேட்டதற்கு பதிலே சொல்லாமல், கூடத்தில் ஈரம் சொட்டச் சொட்டத் தொங்கிக் கொண்டிருந்த மீனாம்பா பாட்டியின் வெள்ளைப் புடவையை எடுத்து, புழக்கடையில் நன்றாகப் பிழிந்து விட்டு கொடியில் உலர்த்தினேன். என் பையைத் திறந்து, என் துண்டை எடுத்து, கீழே சிந்தியிருந்த தண்ணீரைத் துடைத்தேன்.

    “இப்படி அதிகப்பிரங்கம் பண்ணி, அவ மனசை என் கெடுக்கறே! பாப்பா (என் அம்மா) உனக்கு ரொம்பச் செல்லம் கொடுத்து, கெடுத்துத் தொலைச்சுட்டா!” என்று அலுத்துக் கொண்டார், என் மாமாத்தாத்தா. முரடன் என்று எனக்குப் பெயர் இருந்ததால் மேலே ஒன்றும் பேசாமல் விட்டுவிட்டார்.

    யாரோ கேவும் குரல் கேட்டது. சென்று பார்த்தால் மூலையில் அமர்ந்துகொண்டு வாயைப் பொத்திக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள் மீனாம்பா பாட்டி.

    என்னைக்கண்டதும் புடவைத் தலைப்பால் கண்ணைத் துடைத்துக்கொண்டு எழ முயற்சித்தாள்.

    “வேண்டாம் பெரியபாட்டி. மாமாத்தாத்தாவுக்கு ஏதோ கோபம். அதை உன்மேல காட்டிட்டா. நீ ஏன் அதுக்கு அழறே?” என்று சமாதானம் சொன்னேன்.

    “இல்லேடா கண்ணா. சாமி என் தம்பிதானே. அவன் திட்டினா எனக்கு காச்சா தொங்கப்போறது? அது இல்லேடா?” என்று விம்மினாள்.

    “பின்னே!”

    “எனக்குப் பிள்ளை இல்லையே. அவன் இருந்திருந்தா இப்படி இடிசோறு திங்கவேண்டி இருக்காதேன்னு நிறைய தடவை நெனப்பேன். சாமி கத்தினபோது நீ ஒண்ணுமே பேசாம, என் பொடவையப் பிழிஞ்சு ஒணத்தினியே, எனக்கு மனசு நெறஞ்சு போச்சுடா. அதுதான் தன்னையும் அறியாம அழுகை வந்துடுத்து. பிள்ளை இல்லேன்னு இனி மனசு வருத்தப்பட மாட்டேண்டா. பகவானாப் பாத்து நான் பிள்ளையா குட்டியான்னபோது, உன்னை அனுப்பிவச்சு என் மனசுல இருந்த அந்தக் கொறையை நீக்கினானே, அதுவே போறும். நீ தீர்க்காயுசா இருப்பே.” கையை என் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தாள்.

    அன்று மாலை நான் நான்கு பார் சோப்புகளைத் துண்டம் செய்து, அவளிடம் கொடுத்தபோது, “ஏன்?” என்பதுபோல என்னைப் பார்த்தாள்.

    “பெரியபாட்டி. உன் புடவைலே அழுக்கு ஒட்டிண்டு இல்லே. அழுக்குலேதான் உன் புடவை ஒட்டிண்டு இருக்கு.   அதுக்குத்தான் இந்த சோப்புக் கட்டிங்க. வெறுன்ன தண்ணீல நனைச்சு நனைச்சு ஒணத்தவேண்டாம். சோப்புப் போட்டே துவை.”

    மீனாம்பா பாட்டி ஒன்றுமே பேசவில்லை. நன்றியுடன் சோப்புக் கட்டிகளை வாங்கி வைத்துக்கொண்டாள்.

    நானும் வேறூரில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. இதற்குள் மீனாம்பா பாட்டியை பத்துப் பன்னிரண்டு தடவை பார்த்திருப்பேன். சில சமயம் சோப்பு வாங்கித்தா, தலைவலித் தைலம் வாங்கித்தா என்று கேட்பாள். வாங்கிக் கொடுப்பேன்.

    ஒருதடவை விடுமுறையில் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

    “மாமா குடும்பத்துடன் மெட்ராஸ் போய்ட்டா!” என்றாள் என் அம்மா.

    “என்ன விஷயமாம்?”

    “எவ்வளவு நாள்தான் உழைச்சுக்கொட்ட முடியும்? வயசாயிடுத்து இல்லையா? மெட்ராஸ்ல இருக்கற மூத்த பிள்ளை கூப்பிட்டான். அதுதான் போயிட்டா!”

    “பெரிய பாட்டியையும் மெட்ராசுக்குக் கூட்டிண்டு போயிட்டாரா?”

    “நன்னாயிருக்கே, நீ சொல்றது! கண்ணும் தெரியலை, கடையும் தெரியலை. மொசைக் தரைன்னு தெரியாம ஏதோ கொட்டி இருக்குன்னு பொறுக்க ஆரம்பிச்சுடுவா. அவ ஆசாரம் மெட்ராசுக்கு லாயக்குப் படுமா? அதுதான்…” இழுத்தாள் அம்மா.

    புருவங்களை உயர்த்தினேன்.

    “என்னடா அப்படிப் பாக்கறே?”

    “மீனாம்பா பாட்டி எங்கேதான் இருக்கா?”

    “அதுதான் வயசானவாளுக்கு, பிள்ளை குட்டி இல்லாதவாளுக்கு மாசம் முப்பது ரூபா கவர்மின்ட்டுலே கொடுக்கறாளாமே, அதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டுத்தான் மாமா போயிருக்கா. பக்கத்துக் கிராமத்திலே, உன் சின்னப்பாட்டி இருக்காளே, அங்கேதான் இருக்கா.”

    “சின்னப்பாட்டியா மீனாம்பா பாட்டியை வச்சுண்டு இருக்கா?”

    “இல்லேடா. மீனாம்பா பாட்டி தனியாத்தான் இருக்கா.”

    “எப்படிம்மா இது? உடம்புல தெம்பு இருக்கறவரைக்கும் உங்க எல்லோருக்கும்தானே உழைச்சுக்கொட்டினா! இப்ப ஒங்க யாராலையும் அவளைப் பார்த்துக்க முடியலையா?” பொருமினேன் நான்.

    “உனக்கு ஒண்ணும் தெரியாது. தெம்பு இருக்கவரைக்கும் மாமா குடும்பத்துக்குத்தான் உழைச்சா. அவரே அவளை விட்டுட்டுப் போயிட்டா. நமக்கு உழைச்சானு சொல்றியே. நாம சும்மாவா விட்டோம்? அப்பப்ப ஏதாவது வாங்கித்தானே கொடுத்தோம்!”

    “கூலி கொடுத்தோம்னு சொல்றியாம்மா?”

    “ஒனக்கு வாய் ரொம்ப ஜாஸ்தியாப் போச்சு. இனிமே ஒன்னோட என்னால பேசமுடியாது.” என்று போய்விட்டாள் அம்மா.

    ஏதோ ஒன்று உந்தவே, நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு மீனாம்பா பாட்டி இருக்கும் கிராமத்திற்குச் சென்றேன். என் வயதுள்ள, என் ஒன்றுவிட்ட மாமா ராஜுதான் எட்டடிக் குச்சான ஒரு குடிசைக்கு அழைத்துச் சென்றான்.

    “பெரிம்மா, பெரிம்மா!” என்று சொல்லிக்கொண்டே ஆடும் கதவைத் திறந்தான்.

    “ஆரு வந்திருக்கா?” என்று மெல்லிய குரலில் கேட்டவாறே, தரையில், ஒரு பலகையைத் தலைக்கு வைத்திருந்த மீனாம்பா பாட்டி கையை ஊன்றிக்கொண்டு எழுந்திருந்தாள்.

    “நான்தான் பெரியபாட்டி, கண்ணன் வந்திருக்கேன்..” என்று உரத்த குரலில் சொன்னேன்.

    கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப் பார்த்த மீனாம்பா பாட்டி இனம் கண்டுகொண்டாள்.

    “வாடாப்பா, கண்ணா, வா.” என்று அன்புடன் சொன்ன அவள் பொங்கிப்பொங்கி அழுதாள்.

    “பாத்தியாடா என் நெலமைய? அநாதப் பொணமா இருக்கேண்டா. உடம்புலே தெம்பு இருந்தபோது என் ஒழைப்பு எல்லோருக்கும் தேவையா இருந்துது. மீனா, வாடீம்மா, நீ இல்லாம ஆத்திலே ஒரு விசேஷம் நடக்க முடியுமா அப்படீம்பா. இப்போ – நான்தான் சக்கையாப் போயிட்டேனே. அதுதான் தூக்கிப் போட்டுட்டா.”

    நான் என்ன சொல்லி அவளைச் சமாதானப் படுத்துவேன்?

    “பெரியபாட்டி, நீ கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. நான் படிச்சு முடிச்சதும் உடனே வேலையைப் பார்த்துப்பேன். நான் உன்னைக் கொண்டு என்னோட வச்சுக்கறேன். நான் சீக்கிரமே கல்யாணம் செஞ்சுக்கறேன். என் பொண்டாட்டி உன்னை நன்னாப் பார்த்துப்பா.” உணர்ச்சி வேகத்தில் என்னிடமிருந்து வார்த்தைகள் பெருக்கெடுத்தன.

    “இது போதும்டா, கண்ணா. நீ நல்ல குணவதியான பொண்ணைக் கல்யாணம் செஞ்சுண்டு நூறு வருஷம் நன்னா இருப்பே. ஒன் பொண்டாட்டி தொங்கத் தொங்கத் தாலியைக் கட்டிண்டு நூறு வருஷம் சுமங்கலியா இருப்பா. ஒன் புள்ளை, குட்டிகளெல்லாம் ஒன்னை நன்னாப் பாத்துக்குவா.

    “எம் மனக்கொறையைத் தீர்த்துட்டேடா, கண்ணா. இந்தக் கட்டை கண்ணை மூடி, காட்டிலே என்னை எரிக்கறச்சே, என் நெஞ்சு வேகுமோ, வேகாதோன்னு நெனப்பேன். இனிமே அப்படி நெனைக்கமாட்டேன்டா. எம் மனசு நெறஞ்சு போச்சுடா. எப்ப பகவன் கூப்படறானோ அப்பா நிம்மதியா போய்ச் சேருவேன். என்னா, என் நெஞ்சு வெந்துடும்டா.” என்றவள் தயங்கி, என்னிடம் கேட்டாள்.

    “கண்ணா, என்னால பிழிஞ்சு ஒணத்தவே முடியலடா. இப்ப நார்ப்பட்டுன்னு ஒண்ணு செய்யறாளாமேடா. அதைப் பிழியவே வேண்டாமாண்டா. வெறுன்ன நனைச்சுப்போட்டாலே ஒணந்து போகுமாமே. எனக்கு ரெண்டு நார்ப்பட்டுப் பொடவை வாங்கித் தறியாடா?”

    “கட்டாயம், பெரிய பாட்டி. கட்டாயம். நான் ஊருக்குப் போயி வாங்கி அனுப்பறேன்.”

    என் கையில் இருந்த ஐம்பது ரூபாயை அவளிடம் கொடுத்து, என் மாமன் ராஜுவிடம் அவளுக்கு உதவி செய்யுமாறு சொல்லிவிட்டு ஊர் வந்து சேர்ந்தேன்.

    முதல் வேலையாக இரண்டு வெள்ளை நார்ப்பட்டுப் புடவைகளை வாங்கி என் அம்மாவிடம் கொடுத்து, மீனாம்பா பாட்டியிடம் சேர்த்துவிடச் சொல்லிவிட்டுக் கல்லூரி செல்ல ரயில் ஏறினேன்.

    அதுதான் நான் மீனாம்பா பாட்டியைக் கடைசியாகப் பார்த்தது. இரண்டு மாதங்கள்கூட ஆகி இருக்காது.

    கண்கள் உலர்ந்து, என் அம்மா மேலே எழுதியிருந்த வரிகள் தெளிவாகின.

    “நீ கொடுத்துவிட்டுப் போன நார்ப்பட்டுப் புடவைகளை சார்த்தித்தான், மீனாம்பா பாட்டியைத் தகனம் செய்தார்கள்.”

    Share
  • வீரனுக்கு வீரன்!

    -ஒரு அரிசோனன்

    (மகாபாரதத்தில் யுத்தபர்வத்தில், பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருந்தபோழுது, அவரை வணங்கி ஆசிபெற, கர்ணன் யுத்தகளத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தான் என்று குறிப்பிட்டிருக்கிறது. அந்தச் சந்திப்பு எப்படி இருந்திருக்கும் என்ற எனது கற்பனையே இது.)

    Bhishmar“பீஷ்மப் பாட்டனார் களத்தில் வீழ்ந்து விட்டாராம். இனி, தாங்கள் களமிறங்கத் தடை ஏதும் இல்லை!” என்ற செய்தியைக் கேட்டு ஒரு கணம் அதிர்ந்துவிட்டான் கர்ணன். அவனுள் மகிழ்வும், துயரமும், மாறிமாறி அலை பாய்ந்தன. தன் நண்பன் துரியோதனனுக்காகக் களமிறங்கி, செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கவும், தலையான எதிரியான அர்ஜுனனைப் பழிதீர்க்கும் வாய்ப்பும் கிட்டியதற்கு மகிழ்ந்தாலும், தன்னை ‘அரைத் தேர்வீரன்’ (அர்த்த ரதன்) என்று இகழ்ந்த பீஷ்மப் பாட்டனாரின் சரிவு ஏனோ அவனுக்கு மகிழ்வைத் தரவில்லை. உண்மை வீரரான அவர் தனக்கு வரவிருந்த அரசைத் தனது சிற்றன்னையின் வாரிசுகளுக்கு விட்டுக் கொடுத்ததோடு மட்டுமல்லாது, தனது இல்வாழ்வையும் தியாகம் செய்துவிட்டிருந்தார்.. அது மட்டுமா? தன் சுக துக்கங்களை மறந்து தனது வாழ்க்கையையே அத்தினாபுர அரசின் நலத்திற்காகவும் அர்ப்பணித்து விட்டார். தன் அருமைப் பேரர்கள் பாண்டவர்களுக்கு எதிராகக் அரசுக் காவலனாகக் களம் இறங்கி, தனக்குப் பிடிக்காத கெளரவர்களுக்காக அக்களத்திலேயே வீழ்ந்து பட்டதையும் குறித்துச் சிறிது கழிவிரக்கம் கொண்டான்.

    “எப்படி பீஷ்மப் பாட்டனார் இறந்தார்? அந்த மாவீரரை வீழ்த்தியது யார்?” என்று வினவினான்.

    “அரசே! அவர் இன்னும் இறக்கவில்லை. அம்புப் படுக்கையில் கிடக்கிறார்!” என்று பகர்ந்த தூதுவன் மேலே தொடர்ந்தான். “கர்ணப் பிரபுவே! இணையற்ற வீரரான அவரை யார் கொல்ல இயலும்? ஆண்மையற்ற சிகண்டி அவரைப் போருக்கு அழைத்து, கணைகளைத் தொடுத்தான். சிகண்டியைப் பெண் என்று கருதும் பீஷ்மப் பாட்டனார் ஒரு பெண்ணுடன் போரிடுவது க்ஷத்திரியனுக்கு அழகல்ல என்று வில்லில் நாணேற்றி அம்பைப் பொருத்த மறுத்து விட்டார். சிகண்டியை முன்னிருத்தி, பின்னாலிருந்து அவர் உடலைச் சல்லடைக் கண்களாகத் துளைத்து எடுத்துவிட்டான் அர்ஜுனன். ‘சிகண்டியுடன்தான் நீங்கள் போரிட மாட்டீர்கள், அர்ஜுனனுடன் போரிடலாமே!’ என்று துரோணாச்சாரியார் முதல் பலரும் எடுத்துச் சொல்லியும், ‘சிகண்டி முன்னிருக்கும்வரை யாரிடமும் போரிட மாட்டேன்!’ என்று மறுத்துவிட்டார். நூற்றுக்கணக்கான அம்புகள் உடம்பில் தைத்து, முள்ளம்பன்றியைப்போலக் காட்சி அளித்த அவர், ஒவ்வொரு அம்பையும் தடவிப் பார்த்து, ‘இது சிகண்டியின் அம்பு அல்ல; அந்தப் பேடியின் அம்பு என் நகக்கண்களைக்கூடத் துளைக்காது. இவை அனைத்தும் அர்ஜுனனின் கணைகள்தான். என் கவசத்தைக்கூட அவை பிளந்துவிட்டனவே?’ என்று ஒரு உண்மையான வீரனாக, அர்ஜுனனின் போர்த்திறமையை மெச்சினார்.

    “எவ்வளவுதான் அவராலும் தங்க இயலும்? துளைப்பதற்கு வேறு இடம் ஒன்று இல்லை என்னும் அளவுக்கு உடலைக் கணைகள் துளைத்தவுடன் நிற்கத் திறனற்று அப்படியே கீழே சாய்ந்துவிட்டார். இருந்தபோதும், அவர் உடல் மண்ணில் விழவில்லை பிரபோ! அம்புகள் அவரைத் தாங்கி நிற்கின்றன. மேலும், அவராகத் தன் உயிரை விட்டால்தானே உண்டு? அப்படிப்பட்ட வரத்தை அல்லவே அவர் பெற்றிருக்கிறார்! தட்சிணாயணத்தில் உயிரை விடக்கூடாது என்று உத்திராயணத்தை எதிர்நோக்கி, அம்புப் படுக்கையில் நோன்பிருக்கிறார்.” என்று முடித்தான் தூதுவன்.

    “அர்ஜுனனா இத்தகைய பேடித்தனமான செயலைச் செய்தான்? அவனது வீரம் எங்கு போயிற்று?” என்று உறுமினான் கர்ணன். தன்னை இழிவு செய்தவர்தானே, எப்படியாவது தொலைந்து போகட்டும் என்ற எண்ணம் இல்லை அந்த மாவீரனுக்கு. பீஷ்மரைக் கொல்வதற்காக வீரத்திற்கு இழுக்கு வரும் செயலையா அர்ஜுனன் போன்ற மாவீரன் செய்தான் என்ற மனக்குமுறல்தான் இருந்தது.

    “பிரபோ! அர்ஜுனனாக மனமுவந்து அச்செயலைச் செய்யவில்லை. மிகவும் தயங்கிய அவரைக் கபட நாடக சூத்திரதாரியான கண்ணன்தான் இத்தகைய இழிசெயலுக்குத் தூண்டினார். ‘பீஷ்மப் பாட்டனாரை போரில் வெல்ல உன்னால் இயலாது. சிகண்டியால்தான் சாவு என்ற வரம் கொடுக்கப்பட்டுவிட்டது. எனவே, சிகண்டியை முன்னிருத்தி, அவனுக்கு உதவுவது போலப் போரிடு. இதுதான் ஒரே வழி.’ என்று கள்ள வழி காட்டினார். பலமுறைப் பாட்டனார் மீது பாணம் செலுத்தப் பார்த்திபன் மனம் தளர்ந்து நின்றபோதும், அவரை இடைவிடாது ஊக்குவித்ததும் கண்ணன்தான்!”

    “அப்படியா? தவறான வழியில் சென்றதற்காக, மார்பில் கணை ஏற்று மடியும் வீரச் சாவை அர்ஜுனனுக்கு நான் தரமாட்டேன். வெற்றிக்காக அறம் தவறிய அப்பேடியின் தலையை என் நாகாஸ்திரத்தால் துண்டித்து, அவன் உடலை முண்டமாக்கி, அழியாப் பழியை அவனுக்கு ஏற்படுத்துவேன்! இது உறுதி!” என்று வீர முழக்கமிட்டான் கர்ணன். பீஷ்மப் பாட்டனாரின் மீது இருந்த சிறிதளவு மனக்கசப்பும் நீங்கி, அர்ஜுனனைப் பழிவாங்கவேண்டும் என்ற வெறியே பெரிதாக அவனுள் எழுந்து நின்றது.

    “என் உயிர் நண்பன் துரியோதனனிடம் தெரிவி, நான் அவனைப் போர்க்களத்தில் சந்திக்கிறேன் என்று.” என்று தூதுவனை அனுப்பிய கர்ணன் சிறிது சிந்தித்தான். என்னதான் தன்னை இகழ்ந்து பேசியிருந்தாலும், மாவீரரான பீஷ்மப் பாட்டனாரிடம் வாழ்த்துப் பெற்ற பின்னரே போரை வழிநடத்த வேண்டும் என்ற அவா அவனுள் எழுந்தது. தவிரவும், தன் மனதில் புழுவாகக் குடைந்து கொண்டிருக்கும் ஒரு கேள்விக்குப் பதிலை அவரிடமிருந்துதான் தெரிந்து கொண்டாக வேண்டும் என்ற விருப்பமும் அவனை அம்புப் படுக்கையில் கிடக்கும் பீஷ்மப் பாட்டனாரிடம் நடத்திச் சென்றது.

    ***************************

    அம்புப் படுக்கையில் அயர்ந்து கிடந்தார் பீஷ்மப் பாட்டனார். அவரது தலையை மூன்று அம்புகள் தலையணையாகத் தாங்கி நின்றன. அந்த நிலையிலும் அவரது முகத்தில் அமைதியான வீர ஒளி மிளிர்ந்து கொண்டிருந்தது. கௌரவர்களும், பாண்டவர்களும் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அனைவரின் முகங்களிலும் சொல்லொணாச் சோகம் குடி கொண்டிருந்தது. கர்ணனின் வரவைக் கண்டு துரியோதனனின் முகம் சற்று மலர்ந்தது. நண்பனை மார்போடு சேர்த்து ஆரத் தழுவி வரவேற்றான்.

    “பீஷ்மப் பாட்டனாரே! ராதையின் மகனும், துரியோதனனின் உயிர் நண்பனும், அங்க நாட்டு அதிபனுமான கர்ணன், தங்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது வீர சாகசங்களை நேரில் கண்டுகளிக்கும் வாய்ப்பில்லாமல் போனது எனது துர்பாக்கியம்!” என்று பணிவுடன் வணங்கினான் கர்ணன்.

    “நலமுண்டாகட்டும். நல்வீரனாகத் திகழ்வாயாக!” என்று அவனை வாழ்த்தினார் பீஷ்மர். கர்ணனின் முகத்தில் ஊடாடிய உணர்ச்சிகளை ஊன்று நோக்கிய பீஷ்மர், “நான் கர்ணனிடம் சிறிது தனியாகப் பேச வேண்டும். நீங்கள் சற்று விலகி இருப்பீர்களாக!” என்று அனைவருக்கும் அன்புக் கட்டளை விடுத்தார். அரை மனதுடன் அனைவரும் அகன்று நின்றனர்.

    “என்னால் இயன்ற அளவுக்கு கௌரவர்களுக்கும், அத்தினாபுர அரசுக்கும், காவலனாகவும் படைத் தலைவனாகவும் இருந்து என் கடமையைச் செய்துவிட்டேன். அறியாச் சிறுவனான துரியோதனனுக்கு இனி நீ காவலனாக மட்டுமல்லாமல், உயிர் நண்பனாகவும் அறிவுரை சொல்ல வேண்டும்!” என்று மெலிந்த குரலில் அன்புக் கட்டளை இட்டார் பீஷ்மர்.

    “பாட்டனாரே! அப்படியே செய்கிறேன். இந்தப் போரில் வெற்றி வீரனாகத் திகழ வேண்டும் என்று என்னை வாழ்த்துங்கள்!” என்று வேண்டினான் கர்ணன்.

    சற்று அமைதியாக இருந்த பீஷ்மர், “கர்ணா! ஒருவர் போரில் வெல்ல வேண்டுமானால் மற்றவர் தோற்றாக வேண்டும். பாண்டவர்களும், கௌரவர்களும் எனது பேரர்கள். அப்படி இருக்கையில், அவர்களில் யார் மடிந்தாலும் எனக்குச் சம்மதமாகுமா? பாண்டவர்கள் இறந்தால்தான் நீ வெற்றி வீரனாகத் திகழ்வது திண்ணமாகும். நீ வெற்றி வீரனாகத் திகழ வேண்டும் என்று என்னால் எப்படி வாழ்த்த இயலும்? இந்தப் போர் நடக்காமல் இருக்க எத்தனையோ முயற்சி செய்தேன். தோல்வியையே தழுவினேன். உனக்கே தெரியும், பாண்டவர்கள் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்று. துரியோதனன் உன் உயிர் நண்பன். நீ ஒருத்தன்தான் அவனுக்கு அறிவுரை செய்து இப்போரை நிறுத்திக் குருதிப் புனல் பெருக்கிடா வண்ணம் தடுத்து நிறுத்த முடியும்!” இறைஞ்சியது அவர் குரல்.

    “பீஷ்மப் பாட்டனாரே! நான் ஒருவன் மட்டும் இறந்தால்தான் இப்போரை நிறுத்த இயலும் என்றால் அதைக்கூட மகிழ்வுடன் செய்வேன். நீங்கள் சொல்லும் அறிவுரையை – துரியோதனனிடம் நன்றிக் கடனும், நட்புக் கடனும் பட்டிருக்கும் என்னால் எடுத்துரைக்க இயலுமா? இப்போர் நடந்துதான் தீரும்.” என்று தன் இயலாமையைத் தெரிவித்தான் கர்ணன்.

    “இப்போர் நடந்தால் அறமே வெல்லும். நீ, துரியோதனன், துரோணாச்சாரியார் உட்பட நிறையப்பேர் வீர சுவர்க்கம் எய்துவீர்கள். எனவேதான் வெற்றிவீரனாகத் திகழ்வாயாக என்று உன்னை வாழ்த்த முடியாது போய்விட்டது. இருப்பினும், உனது வீரம் இவ்வுலகம் உள்ளவரை அனைவராலும் புகழப்படும் என்று நான் வாழ்த்துகிறேன்.” என்ற பீஷ்மரிடம், “நான் அதை அறிந்து கொண்டேன்!” என்று பதிலிறுத்துவிட்டுத் தயங்கி நின்றான் கர்ணன்.

    “கர்ணா! கடைசியாக உன்னிடம் சொல்லவேண்டியது இன்னுமொன்றும் இருக்கிறது! பாண்டவர்கள் அணியில் அர்ஜுனன் ஒருவன்தான் உனக்கும், எனக்கும் இணையான வில்லாளியாவான். அவனை எதிர்த்துப் போரிட ஒரு பீஷ்மனோ, அல்லது ஒரு கர்ணனோதான் கௌரவர்கள் அணியில் இருக்க வேண்டும். அதுதான் யுத்த தர்மமாகும். ஒரே சமயத்தில் நம் இருவரையும் எதிர்த்துப் போராடும் நிலைக்கு அர்ஜுனனை உட்படுத்துவது அதர்மமாகும். கௌரவர்களின் படைத்தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் – யுத்த தர்மத்தை என்றுமே மீறாத நான் – எப்படி அதைச் செய்ய இயலும்? இந்த விளக்கத்தை அனைவரின் முன்னரும் சொல்லி, போரில் கலந்துகொள்ளாதே என்று, கௌரவர்களின் படைத்தலைவனாக உனக்கு நான் எப்படி ஆணை இட முடியும்?

    “எனவேதான், என் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு, பெரும் தேர்வீரனாகிய (அதிரதன்) உன்னை, அரைத் தேர்வீரன் (அர்த்த ரதன்) என்று இகழ்ந்தேன்! நீயாகவே, ‘இந்தப் பீஷ்மர் போர்க்களத்தில் இருக்கும்வரை நான் போரிடமாட்டேன்!’ என்று சூளுரைக்கச் செய்துவிட்டேன். அதற்காக, இந்தக் கிழவனைக் கடைசிவரை வீரனை இனம் கண்டுகொள்ள இயலாத கயவன் என்று முடிவு செய்துவிடாதே கர்ணா!” என்று தழுதழுத்த குரலில் வேண்டினார் பீஷ்மர்.

    அப்படியே நெகிழ்ந்து போனான் கர்ணன். “பீஷ்மப் பாட்டனாரே! என் மனதைப் புழுவாகக் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு விடை அளித்துவிட்டீர்கள். எப்பொழுது என்னைத தங்களுக்கு இணையான வீரன் என்று சொன்னீர்களோ, அப்பொழுதே என் மனம் பெருமிதத்தில் திளைத்து, மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடுகிறது. தங்களிடமிருந்து இதைவிடச் சிறந்த வாழ்த்து வேறென்ன கிடைக்கக் கூடும்? வீரனுக்கு வீரனாக என்னை நீங்கள் உயர்த்தியது, இப்பிறவியில் எனக்குக் கிட்டிய பெரும் பேறே ஆகும். நான் புகழோடு வீர மரணம் எய்தும்படி வாழ்த்துங்கள்!” என்று வேண்டி நின்றான் கர்ணன்.

    இரு கரங்களையும் உயர்த்தி அவனை வாழ்த்தினார் பீஷ்மப் பாட்டனார்.

    அவரை வணங்கிவிட்டு, தான் வீழப் போகும் போர்க்களத்தை நோக்கித் தெளிந்த மனத்துடன் நடந்தான் மாவீரன் கர்ணன்.

     *************************

    Share
  • பாஞ்சாலியின் புலம்பல்!

    ஒரு அரிசோனன்

    நான்தான் பாஞ்சால நாட்டின் இளவரசியான பாஞ்சாலி; துருபத மன்னனின் மகளான திரௌபதி; கருப்பாக இருப்பதாலும், கார்மேக வண்ணனான கண்ணன் உடன்பிறப்பாக ஏற்றுக்கொண்டதாலும், கிருஷ்ணை என்றும் அழைக்கப்பட்டவள்.

    பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளர்களே! நீங்கள் ஏன் என்பக்கம் பேசுவதில்லை?

    ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா என்று பேசும் உங்கள் கூற்றைப் பல்லாயிரம்ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்று, ஐந்து கணவர்களைக் கொண்டேனே, அதை ஏன் நீங்கள் பாராட்டிப் பேசுவதில்லை? ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்த பல மாமன்னர்களைப் புகழும் நீங்கள், என்னை மட்டும் விலைமகளைப் போல ஏன் பார்க்கிறீர்கள்?

    பல்லாயிரக்கான வீரர்களைப் போரில் புறம்கண்டு, அவர்தம் தலைகளை ஒருவன் சீவிஎறிந்தால் பாராட்டும் நீங்கள், அதே மாவீரன் காரணமின்றி ஒருவர் தலையைச் சீவினால், அதைக் கொலை என்றுதானே கூறுவீர்கள்! ஆக, அங்கு வெவ்வேறு அளவுகோலைத்தானே எடுக்கிறீர்கள்!

    ஆனால், சிலபோதுமட்டும் — புலி பசுவைத்தின்னும், ஆனால் பசு ஒருபோதும் புலியைத் தின்னாது என்னும் இயற்கைச் சுபாவத்தைக் காணாது – புலியா, பசுவா என்று பார்க்காது, ஒரே தராசில் ஏற்றுகிறீர்களே!

    பெண்ணடிமை செய்தான் இராமன் என்று  அவனைத் தூற்றுகிறீர்களே, “கற்பென்று வைத்தால் அதை ஆணுக்கும் முன்பு வைப்போம்!” என்ற கொள்கையுடன், சீதை ஒருத்தியை மட்டும் மனதில் நினைத்து வாழ்ந்தானே — மக்களின் கருத்துக்காக, மன்னனின் முதற்கடமை மக்களுக்கே என்று, தன்மனைவியைத் துறந்து, தன் மகிழ்ச்சியைத் துறந்தானே – அவனது அந்தப் பேராண்மையை ஏன் பாராட்ட மறுக்கிறீர்கள்? பிறன்மனைவியை மயக்கி, அவளைத் தன் கணவனிடமிருந்து பிரித்து, அவளுக்காக நாட்டையே துறப்பவன் சிறந்தவன், நாட்டுக்காக, மனைவியைத் துறக்கும் மாவீரன் பெண்ணடிமை செய்பவனா?  சொந்த நலனுக்காக நாட்டை விடவேண்டும் என்றால் நாடுநலம் பெறுவது எப்படி?

    ஆண் மட்டும் தான் பிடிக்காத பெண்ணை விலக்கி வைக்க வேண்டுமா, பிடிக்காவிட்டால் பெண்ணும் அவ்வாறு செய்வதில் என்னதவறு என்று பெண்ணுக்குத் திருமணமுறிவில் முதலிடம் வைக்க முயலுகிறீர்களே – ஒருபெண், ஒருவர்பின் ஒருவராக, ஒன்றுக்கு மேற்பட்ட கணவருடன் வாழலாம் என்ற கருத்தை ஆதரிக்கிறீர்களே, ஐவரோடு வாழ்ந்தாலும் அவர்களுக்கு மட்டுமே என் மனதில் இடம் கொடுத்திருந்தேனே, யாரையும் தூக்கி எறியவில்லையே, அதை ஏன் போற்றமாட்டேன் என்கிறீர்கள்?

    ஏன் என் விஷயத்தில் மட்டும் இருபத்திஒன்றாம் நூற்றாண்டின் அளவுகோலைக்கூடத் தூக்கி எறிந்துவிடுகிறீர்கள்?

    ஆண் ஆதிக்கத்தையே, அவர்களின் அதிகாரத்தையே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே புரட்டிப்போட்ட புதுமைப்பெண்ணாக உங்கள் கண்களுக்கு நான் தெரியாமல்போனது ஏனோ?

    மகாபாரதத்தையே மாற்றி எழுதும் முயற்சியில் — என் கணவன் குடாகேசி (அருச்சுனன்) யிடம் நான்கு முறை தோற்று ஓடியவனும், போர்க்களத்தைவிட்டுப் பதினான்கு முறை ஓடியவனுமான கர்ணனை உயர்த்தியும், என்னவர் அருச்சுனனைத் தாழ்த்தியும் பேசுகிறீர்களே, பலவாறு ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளும் காட்டுகிறீர்களே, இதுதான் சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் கோடாமல் இருக்கவேண்டிய சான்றோர்களான உங்களுக்கு அணியா(கலனா)?

    எவருக்கும் தன்பக்கத்துவாதத்தை எடுத்துச்சொல்ல அனுமதிஉண்டு. என்னைப் பொருத்தமட்டில் என்வாதத்தையே காதுறாமல், நீங்கள் நடுவராகவும், நீதியாளராகவும் ஆகிவிடுவது ஏனோ?

    என் தரப்பு வாதத்தைத்தான் கேளுங்களேன்! என் புலம்பலைச் சற்றுதான் செவிமடுங்களேன்…

    எந்தையும் தாயும் கூடிக் குலவி, மகிழ்ந்து இருந்து பிறந்த பிறப்பல்ல என் பிறப்பு. தான் அவமதித்தனால் தன்னைஅவமதித்த துரோணாச்சாரியாரை வஞ்சம்தீர்க்க – தன்னைத் தேர்க்காலில் கட்டி இழுத்துவந்த அருச்சுனனுக்கே தன் மகளை மனைவியாக்கி, அவனின் உதவியுடன், தன் மகனால் மரணம் வரவேண்டும் என்று – கடும் தவமிருந்து, எரியும் நெருப்பில் பிறந்த பிறப்பு என் பிறப்பு!

    paanjaliPicture1வஞ்சம் தீர்க்கும் வனிதையாகத் தானே இப்பூவுலகுக்கு நான் வரவழைக்கப்பட்டேன்! வளர்க்கப்பட்டேன்! ஆசைக்கொரு பெண் வேண்டும், அவளது அழகைக் கண்டு உள்ளம் பூரிக்கவேண்டும், அவள் பூங்கொடியாக வளர்ந்து பூப்பெய்துவதைக் கொண்டாட வேண்டும், அவளைப் பொன்னாலும், மணியாலும் அலங்கரித்து, மனதுக்கேற்ற மணாளனுக்கு மணமுடிக்க வேண்டும் என்று என்னை என் தாய் ஈன்றெடுக்கவில்லையே! தீக்கடவுளல்லவா பாஞ்சாலப் பேரரசனின் (துருபத மன்னனின்) தவத்தை மெச்சி என்னைப் பரிசாக அளித்தான்! இதில் பாசமேது? அன்பேது?

    என்தந்தை தன் பழியைத் தீர்க்கத் தீக்கடவுளிடமிருந்து பெற்ற கருவியல்லவாநான்!

    “அருச்சுனனே உன் மணாளன் ஆவான், அவனுக்காவே பிறந்தவள்நீ!” என்று சொல்லிச்சொல்லி வளர்த்துவிட்டு, சிவனாரின் வில்லெடுத்து, நாண்பூட்டி, கீழே இருக்கும் நீரில் தெரியும் எதிரொளியில், மேலே சுழலும் ஒரு மீன்பொறியின் (மச்சயந்திரம்) கண்ணில் அம்பெய்ய வேண்டும், அதில் வெல்பவருக்கே என் மகளைக் கொடுப்பேன் என்று அறிவித்தாரே என் தந்தை, அது எனக்குஅவர் நல்கிய பெண்ணுரிமையா? இதில் தன்வரிப்பு (சுயம்வரம்) என்ற தம்பட்டம் வேறு!

    என்னடா இது, ஒருவனைச் சொல்லி இவள் மனதில் காதலை வளர்த்துவிட்டோமே, இப்பொழுது கதையை மாற்றுகிறோமே என்றுநினைத்தாரா என் தந்தை? இல்லையே!

    “அருச்சுனனைத் தவிர, வேறு யாராலும் மீன்பொறியை அடிக்க இயலாது. எனவே, நீ கவலை கொள்ள வேண்டாம், என் கண்ணே!” என்று என்னிடம் பகர்ந்தார். அந்தப்பாவி கர்ணன் அங்கு வருவான், தன் நண்பனுக்காக என்னை வெல்ல முயல்வான் என்று  யார் எதிர்பார்த்தார்கள்?

    “தேரோட்டியின் மகனான உன்னை நான் மணக்கமாட்டேன்! நீ paanjaliPicture2இந்தப்போட்டியில் கலந்துகொள்வதை நான் அனுமதிக்கமாட்டேன்!” என்று என்உரிமையைத் தானே நான் நிலைநாட்ட முயன்றேன்! வேறெப்படி நான் அவனைத் தடுக்க இயலும்? இதைக்காட்டி நான் சாதி வெறிபிடித்தவள் என்று என்னைத் தூற்றுகிறீர்களே, ஏன் நான் என் பெண்ணுரிமையை நிலைநாட்டிக் கொள்கிறேன் என்று யாரும் எண்ணிப்பார்க்க மறுக்கிறீர்கள்?

    கடைசியில் நான் மணக்க விரும்பியஅருச்சுனனே, அந்தணன் ஒருவன் வேடத்தில் வந்து என்னை வெற்றிகொண்டான். வெள்ளாடை உடுத்தி இருந்த நானும் அவன் கழுத்தில் மாலையிட்டேன். அதை எதிர்த்த அத்தனை மன்னர்களையும் – துரியன் (துர்யோதனன்), கர்ணன் உள்பட அத்தனை மன்னர்களையும் – அந்தண வேடதாரிகளானஅருச்சுனனும், பீமனும் புறங்கண்டனர்.

    “அந்தணா! உன் வீரத்திற்கு நான் தலைசாய்க்கிறேன்!” என்று கர்ணன் – கவச-குண்டலங்களை இன்னும் இழக்காத அக்கர்ணன் – அருச்சுனனை வணங்கி நீங்கினான். இத்தனை மாமன்னர்களை மண்ணில் வீழ்த்திய மாவீரன் அந்தணனாய் இருந்தால் என்ன, குறையில்லை என்று மனமகிழ்ச்சியுடன்தான் அவனைப் பின்தொடர்ந்தேன்.

    அவன், “ அன்னையே, பிச்சைபெற்றுவந்திருக்கிறோம்!” என்று பூடகமாகப் பேசியது என்தலையெழுத்தையே மாற்றிப்போட்டது.

    “பகிர்ந்து கொள்ளுங்கள், பாலகர்களே!” என்று, என்னைப் பார்க்காமலையே பதிலளித்தாள் என் மாமியார் குந்தி ( பாரை வென்ற பாண்டுவின் பெண்ணரசி.)

    பகீரென்றது என் நெஞ்சம். ஒருஉறையில் ஐந்துவாள்களா, இது என்ன நீதி! என்று துடித்தேன். தவறை உணர்ந்ததாயும், அறநெறியின் மறுவடிவமான மூத்தவன் யுதிட்டிரனின் கருத்தைக் கேட்டாள்.

    தாயின் வாக்கைப் பொய் ஆக்குவதா என்று தவித்த இருதலைக் கொள்ளி எறும்பான அவர், “தவறாகப் பேசிய சொற்கள்தானே!  அருச்சுனனே வென்றான், இக்கன்னியை! அவனே மணக்கட்டும்!” என்றார்.

    அதைக் கேட்ட நான் கொண்ட என் மனநிம்மதி, மறுகணமே கலைந்தது.

    “தாய்சொல்லைத் தட்டலாமா? பாவம் வந்து சேராதா?” என்று அண்ணனின் மனத்தைக் குழப்பி, அவர் சம்மதத்தையும் பெற்றான் அருச்சுனன். பாவம் வந்து சேர்ந்தாலும் சேரட்டும், நெறிமுறைகளை மீறவேண்டாம்  என்று இயம்பிய தருமரும் தலைஅசைக்க நேர்ந்தது.

    தாயா, தாரமா? என்னும் கேள்விக்கு அக்காலத்தில் தாய்சொல்லைத் தட்டாதே என்னும் பதில்தான் தலை சிறந்ததாக இருந்தது!

    துடித்தேன் நான்! அதைக்கேட்ட என் தந்தையும் துடித்தார்.

    “வேதங்களும், மரபுகளும் ஆதரிக்காதஒன்றைச் செய்து நரகப் படுகுழியில் நான் விழமாட்டேன். பாண்டவர்களே! உங்களில் யார் ஒருவர் வேண்டுமானும் என்மகளை மணந்து கொள்ளுங்கள்! ஒருவனுக்கு ஐந்து கன்னிகள் மண வாழ்க்கைப்படலாம். ஆயினும், ஒரு கன்னியை ஐவர் மணப்பதா?” என்று பொங்கிஎழுந்து, “கன்னியின் அண்ணனும், கன்னியின் மாமியும் இதை முடிவுசெய்யட்டும்!” என்று தனது பொறுப்பிலிருந்து நழுவினார்.

    அப்பொழுதும் என் விருப்பத்தை யாரும் கேட்கவில்லை.

    அப்பொழுது அங்கு வந்துசேர்ந்த வியாச மாமுனிவரிடம் — வேதங்களைத் தொகுத்து இவ்வுலகுக்கு வழங்கிய அந்த உத்தமரிடம் – அந்தணருக்கும், மீனவப்பெண்ணுக்கும் பிறந்த பேரறிவாளரிடம் – பாண்டுவின் தந்தையிடம் – அருச்சுனனின் பாட்டனிடம் — இந்த வேதனையைப் பகிர்ந்துகொண்டான் என் அண்ணன்.

    “மாமுனிவரே! நீங்களே சொல்லுங்கள்! அண்ணனின் மனைவி அன்னையாவாள்! தம்பியின் மனைவி தனது மகளுக்குஇணையாவாள். அப்படியிருக்க, அண்ணன் தம்பிகளான ஐவருக்கு ஒரு கன்னியைப் பகிர்வது பாவம் ஆகாதா? நெறிமுறைகளுக்கு உகந்ததா?  வேதங்களைத் தொகுத்தவரே! நீரே இதற்கு விடைஅறிவீர்!” என்று அவரிடம் அறிவுரை வேண்டினான்.

    முக்காலமும் உணர்ந்த அம்முனிவர் முன்னர் நடந்தவற்றை மொழிந்தார்.

    “இக்கன்னி பாஞ்சாலி, முன்பிறப்பில் கணவனை வேண்டி, இறைவன் சிவபெருமான் நோக்கித் தவமியற்றினாள். ஐந்து குணங்கள் நிரம்பிய ஒருகணவன் வேண்டும் என்று இறைஞ்சாமல், அறநெறிஅறிந்த கணவன் வேண்டும், காற்றைப்போல வலிமை மிக்க கணவன் வேண்டும், இந்திரனைப் போன்று வீரமிக்க கணவன் வேண்டும், அழகுமிக்க கணவன் வேண்டும், சாத்திரம் பயின்ற கணவன் வேண்டும் என்று தனித்தனியாக வேண்டினாள்.

    “வேண்டுவோருக்கு விரும்புவதை வரமாகஅளிக்கும் முக்கண்ணனும், ”பெண்ணே, நீவேண்டியபடி ஐந்து கணவர்களைஅளித்தேன்!” என்று அருளினான்.

    “இறைவா!  இது என்ன சோதனை? நான் ஒருகணவனை வேண்டினால், ஐந்து கொழுநன்களை அளிக்கிறீர்களே! இவ்வுலகு என்னைக் கற்பிழந்த காரிகை என்று தூற்றாதா?” என்று கதறிஅழுதாள்.

    இறைவனும், ”பெண்ணே! உன்னுள் ஐந்து பூதங்களையும் அடக்கி ஆளும் தெய்வப் பெண்கள் உட்புகுந்து ஒன்றாகச் சங்கமிப்பர்! உனது பிறப்பும் பூவுலகமாதர் மூலம்நிகழாது, நெருப்பின் மூலமாகவே நிகழும். ஐந்துதேவர்களின் அம்சமான மனிதர்களை நீ மணப்பாய்! பொன்னையே பரிசுத்தமாக்கும் தீயில் நீ பிறப்பதனால், மாசற்றவளாக விளங்குவாய்! உலகப்பெண்களுக்கு விதிக்கப்படும் நியதி உன்னைக் கட்டுப்படுத்தாது!” என்று வரமளித்து அருளினான்.

    “எனவே, அனைத்துக்கும் விதிவிலக்கு இருப்பதுபோல, இதுவும் ஒரு விதிவிலக்கேயாகும்! வருந்தற்க! நியதிக்கு அப்பாற்பட்ட இத்திருமணம் நடக்கட்டும்.   ஒருவரின் மனைவியாக அவள் விளங்கும்போது, உலகநெறிகளை மற்றவர் பின்பற்றவேண்டும். ஒருவரை நீங்கி மற்றவரிடம் அவள் புகும்போது மீண்டும் கன்னித் தன்மையைஅடைவாள்!” என்று அறிவுரை நல்கினார்.

    இறைவனே விதித்தபடி நடக்கட்டும் என்றுதான் விட்டுவிட்டேன். ஐவருக்கும் மனைவியானேன். ஆனால் நான்செய்தது புதுமைஅல்ல. எனக்குமுன் இப்படிப் பலகணவன் மணம் நடந்திருக்கிறது என்றும் உரைக்கப்பட்டது. இறைவனே வேதங்களைப் படைக்கிறான் என்று அனைத்து சமயங்களும் பகருகின்றன. வேதமுதல்வனே விதித்தது எப்படி முறைஅற்றது ஆகும்?

    இதுமட்டும் தானா நான்அனுபவித்த இக்கட்டானநிலை? எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாத இழிவல்லவா எனக்கு வந்துசேர்ந்தது!

    வஞ்சகச் சகுனியிடம் – சூதாட்டத்தின் மீதுகொண்டஈர்ப்பால் – செல்வம், வேலையாட்கள், அரசு, உடன்பிறப்புகள் மட்டுமன்றித் தன்னையும் இழந்த என்முதற்கணவர் யுதிட்டிரர், என்னையும் பணயம்வைத்து இழந்தார் – தன்னை இழந்த பின்னர் தாரத்தைப் பணயம் வைக்கும் உரிமை தனக்கு இல்லை என்பதை அந்த நீதிமான்அறியாது போனது ஏனோ?

    paanjaliPicture3இப்படிப்பட்ட ஒருநிகழ்சிக்குத்தானே காத்திருந்தான் துரியன்!

    “எமக்கு அடிமையான பாஞ்சாலியை இங்கு வரும்படி ஆணையிட்டதாகச் சொல்லி, இங்குவரச்சொல்லு!” என்று தனது தேரோட்டியைஅனுப்பினான் அந்தச் சண்டாளன்.

    மாதவிடாய்க் காலம் ஆனதால், ஒற்றை ஆடை உடுத்தி, நெகிழ்வான நிலையில் இருக்கிறாள்பாஞ்சாலி. இந்நிலையில் இருக்கும் அவளைப் பலர் வீற்றிருக்கும் இக்கொலுமண்டபத்திற்குக் கொணர்வது முறையில்லை!” என்று என்னவர் எடுத்துச்சொன்னது எக்காளமிட்ட அவன் செவிகளில் ஏறவில்லை.

    எனக்குச்சேதி வந்ததும், “குரு வம்சத்து அரசியை ஆணையிடத் துரியனுக்கு உரிமை இல்லை!” என்று மறுமொழி அனுப்பினேன்.

    “உன்னைப் பணயம் வைத்துத் தோற்றுவிட்டார் உன் கணவர். எனவே, உன்மீது உரிமை எனக்கு இருக்கிறது!” என்றுசொல்லிஅனுப்பினான்.

    “தான்தோற்ற பிறகு, என்னைப் பணயம் வைக்க அவருக்கு உரிமை இல்லை!” என்று மறுத்தேன் நான்.

    “இப்படிச் சொன்னால் அவள் வரமாட்டாள். அவளைப்பற்றி இழுத்துவா!” என்று தம்பி துச்சாதனனை அனுப்பினான் துரியன்.

    அவன் பிடியிலிருந்து தப்பிஓட முயன்ற என் நீண்ட கருநீலக் கூந்தலைப்பற்றி, என்னைத் தரையில் புரட்டி இழுத்துக்கொண்டல்லவா வந்தான் அந்தப்பாவி துச்சாதனன். அவனது தீச்செயலை யார் கண்டித்தார்கள்? இந்த முறையற்றசெயலைக் கண்டித்து எழுத ஒருவர் கூடவா இல்லாது போய்விட்டார்கள், இந்தப் புண்ணிய பூமியில்?!

    “மாதவிடாய்க் காலத்தில் இருக்கும் என்னை இந்தக் குருவீரர்கள் முன்னிலையில் இழுத்துவருகிறாய். உண்மையில் இது தகாத காரியம். ஆனால் இங்கிருக்கும் ஒருவரும் இதைக் கண்டிக்கவில்லை. நிச்சயமாக இவர்களும் உன்னைப் போன்ற மனம் கொண்டவர்களே! சீ… உண்மையில் பாரதர்களிடம் அறம் மறைந்துவிட்டதா? உண்மையில் க்ஷத்திரிய ஒழுக்கமும் மறைந்துவிட்டதா? அல்லது ஒழுக்கத்தின் எல்லைகளைக் கடக்கும் இந்தச் செயலை, இந்தச் சபையில் இருக்கும் ஆசான்கள் அனைவரும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே!“ என்று அழுதேன், அரற்றினேன்.

    அந்த அத்தினாபுரத்து அரசவையில் யாரும் என்பக்கம் பேசவில்லையே, வாய்மூடி அமைதிதானே காத்தார்கள்!?

    “ஓ, துரோணரும், பீஷ்மரும், விதுரரும், இந்த மன்னரும் {திருதராஷ்டிரரும்} தங்கள் சக்தியைஇழந்துவிட்டனரே. அல்லது, குரு வம்சத்தவர்களில் முதன்மையான இந்த மூத்தவர்கள் ஏன் இக்குற்றத்தைக் கண்டும் அமைதியாகப் பார்க்கின்றனர்?” என்று கதறினேனே, யாராவது எனக்காகத் தமது சுண்டு விரலைக்கூட அசைத்தார்களா?

    “நீங்கள் தோற்றபின் என்னை வைத்துச் சூதாட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அடிமைக்கு மனைவி, மக்கள் என்ற உறவேது?” என்று இடித்துரைத்தும், இடித்த புளியாகத்தானே சமைத்திருந்தார் தருமபுத்திரர்! கடைசிவரை ஒரு சொல்கூட அவர் வாயிலிருந்து உதிரவில்லையே!

    நீங்களும் அந்த அவையினரைப் போலத்தானே அமைதிகாக்கிறீர்கள்! கேட்டால், நான் துரியன் தடுக்கி விழுந்ததைப் பார்த்துச் சிரித்தேன், கர்ணனை அவையோர்முன்னர் அவமானப்படுத்தினேன் என்று எனக்கு எதிராகவே வழக்காடுகிறீர்கள்!

    தடுக்கி விழுந்தால் தாயும் நகைப்பள் என்ற பழமொழிப்படி தானே நான் நடந்து கொண்டேன்!

    என்னைத் “தாசியே!” என்று ஏசினானே துச்சாதனன், அந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் மிகவும் மகிழ்ந்து அந்தப் பேச்சை அங்கீகரித்து, சத்தமாகச் சிரித்தானே, அவனைக் கடிந்து நீங்கள் ஏன் ஒருசொல்கூடச் சொல்லத் தயங்குகிறீர்கள்?

    ஒரு பெண்ணை எப்படியெல்லாம் அவமானப்படுத்த முடியுமோ, அப்படி அவமானப்படுத்துவதுதான், நான் என் தன்னுரிமையை நிலைநாட்டிக் கொண்டதற்கும், தடுக்கி விழுந்தவனைக் கண்டு சிரித்ததற்கும் கொடுக்கப்படும் தண்டனையா? இதை எப்படி உங்களால், பெண்மையைப் போற்றிப் பேசும் உங்களால் நியாயப்படுத்த முடிகிறது?

    அச்சபையில் எனக்குப் பரிந்துபேசிய இருவர் என் கணவர்களில் ஒருவரான பீமனும், துரியனின் இளையோனான சத்திரிய மனைவிஅல்லது வேறோருத்திக்கும், திருதிராட்டிரனுக்கும் பிறந்தவி கர்ணனும்தானே!

    “சகாதேவா, நன்னெறியற்ற இச்செயலைச் செய்தஅண்ணனின் கரத்தை எரிக்கிறேன்!” என்றல்லவா பீமன் பொங்கி எழுந்தார்! உங்களால்போற்றப்படும் மகாகவி பாரதியும், என் பீமனின் சொற்களைக் கவிதை மழையாய்ப் பாஞ்சாலி சபதத்தில் பொழிந்ததும் தாங்கள் அறிந்ததுதானே!

    ‘சூதர் மனைகளிலே — அண்ணே!
    தொண்டு மகளிருண்டு.
    சூதிற் பணயமென்றே — அங்கோர்
    தொண்டச்சி போவதில்லை.     69
    ‘ஏது கருதிவைத்தாய்? — அண்ணே,
    யாரைப் பணயம்வைத்தாய்?
    மாதர் குலவிளக்கை — அன்பே
    வாய்ந்த வடிவழகை.     70
    ‘அவன் சுடர்மகளை, — அண்ணே,
    ஆடியிழந்து விட்டாய்.
    தவறு செய்துவிட்டாய்; — அண்ணே,
    தருமங் கொன்றுவிட்டாய்.     72
    ‘துருபதன் மகளைத் — திட்டத்
    துய்ந னுடற்பிறப்பை, —
    இருபகடை யென்றாய், — ஐயோ!
    இவர்க்கடிமை யென்றாய்!     76
    ‘இது பொறுப்பதில்லை, — தம்பி!
    எரிதழல் கொண்டுவா.
    கதிரை வைத்திழந்தான் — அண்ணன்
    கையை எரித்திடுவோம்.’     77

    அதுமட்டுமா? துரியனின் இளையோன் விகர்ணன்தான் எப்படி எனக்காக வாதாடினான்!

    “மன்னர்களே, பாஞ்சாலி கேட்கும் கேள்விக்கு பதிலளியுங்கள். நாம் நீதியைப் பகராமல் இருப்போமானால், நாம் நரகத்திற்கே செல்வோம். பிதாமகரான பீஷ்மரும், தந்தையும், அரசருமான திருதராஷ்டிரரும், உயர் ஆன்ம விதுரரும் ஒன்றும் சொல்லாமல் இருப்பது எவ்வாறு?

    “எங்களுக்கெல்லாம் குருவான, மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்களான துரோணரும், கிருபரும் ஏன் இங்கு பதிலளிக்கவில்லை? இந்தப் பந்தயத்தில் விருப்பம்கொண்ட சகுனியே, யுதிட்டிரனைத் தன் மனைவி பாஞ்சாலியைப் பந்தயமாக வைக்கத் தூண்டினான். இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், பாஞ்சாலி வெல்லப்படவில்லை என்று துணிகிறேன்” என்று எடுத்துரைத்தானே விகர்ணன்!

    அப்படி விகர்ணன் எடுத்துச் சொல்லியும் – தன்னை இழந்தபின், என்னை வைத்துச் சூதாடும் உரிமையை என்னவர் யுதிட்டிரர் இழந்துவிட்டார் என்று நன்னெறியை எடுத்துச் சொல்லியபோதும் — உங்களால் அறநெறித் தேவனின் மறுஅவதாரம் எனப் புகழப்படும் கர்ணன் என்ன சொன்னான் என்பது பெருந்தகையாளர்களான நீங்கள்அறியாததா!

    “பாஞ்சாலி ஒற்றையாடையுடன் இங்கு கொண்டுவரப்பட்டது சரியில்லாத நடவடிக்கையாக நீ கருதினால், அதற்கு நான் சொல்லும் மறுமொழியைக் கேள், விகர்ணா! ஒரு பெண்ணுக்கு ஒருகணவன் என்றே விண்ணவர்கள் வழங்கி இருக்கின்றனர்;  இருந்தபோதிலும், இந்தப் பாஞ்சாலி பலகணவர்களைக் கொண்டிருக்கிறாள். ஆகையால், இவள் கற்பற்ற பெண் என்பது உறுதி. ஆகையால், இவளை இந்தச்சபையின் முன்பு ஒற்றையாடையில் கொண்டுவருவதோஅல்லது அவளது ஆடைகளைக் களைவதோ வியப்படைய வேண்டிய செயல்அல்ல. “ என்றல்லவா இழித்துரைத்தான்! அவன் கூறிய சொற்களைக் கொண்டு என் கற்பறத்தைக் கூறுபோட முயல்வோர்களுக்கு நான்ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

    paanjaliPicture4பொன்னைப் புடம்போட்டுப் புனிதமாக்குவது நெருப்பில்தான்! தன் கற்பை இவ்வுலகுக்கு நிரூபிக்க, கற்புக்கரசியாம் சீதை புகுந்து மீண்டதும் நெருப்பிலிருந்துதான்!

    அந்த நெருப்பில் பிறந்தவள் நான்! நான் நெருப்பானவள்! என்னிடம் மாசு இருந்தால் நான் நெருப்பிலிருந்து தோன்றி இருக்க முடியுமா? எந்த மாசையும் எரிப்பது தீ! அத் தீயின் வடிவானவள் நான்! என்னிடம் மாசு இருக்கமுடியுமா? கர்ணனின் கூற்றை — கதிரவனின் மைந்தனின் கூற்று என்று நீங்கள் மதிக்கும்போது, கதிரவனே ஒருபகுதியான அந்த அக்கினிப் பிழம்பிலிருந்து தோன்றிய என்கூற்றை ஏற்க மறுப்பதும் ஏனோ?

    அந்த வஞ்சகக் கர்ணன் என்னைப் பழிதீர்க்கஅவ்வாறு கூறாதிருந்தால், என் துகில்அவையோர்முன் உரியப்பட்டிருக்காது, நான் சூளுரைத்திருக்கமாட்டேன். துரியனின் தொடை பிளக்கப்பட்டு, அவன் மரித்திருக்கமாட்டான். கர்ணன் அருச்சுனால் கொல்லப்பட்டிருக்கமாட்டான்.

    பாரதப் போரே நிகழ்ந்திருக்காது!

    ஒருபெண்ணின் — மாதவிடாய்க் காலத்தில் குருதி ஒழுகும் நிலையில் உள்ள ஒருபெண்ணின் — ஆடையைக் களைந்து, அவளது அவல நிலையை மாபெரும் சபையினர் கண்டு எள்ள வேண்டும் என்று கொக்கரித்த கர்ணனை — தாயென நினைக்க வேண்டிய பெண்ணினத்தையே இழிவுக்கு உள்ளாகச் செய்த அந்தப் பண்பற்றவனை – பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளர்கள் பெருமை பேசுவது எங்ஙனம்?

    என் மீது நீங்கள் மதிப்பு வைத்திருக்கிறீர்களோ இல்லையோ, அது வேறுவிஷயம். ஒருபெண்ணை, அவள் எப்படிப்பட்டவளாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் – அவளைப் பலவந்தப்படுத்தி, அவள் துகிலை உரிக்கச் சொன்னாலும், அப்படி உரிந்தாலும் — உங்கள் காலத்தில்அப்படி யார் செய்தாலும், செய்யத் தூண்டினாலும், அவர்களுக்குக் கொடிய தண்டனை கொடுக்கவேண்டும் என்று நீங்கள் கொடிபிடிப்பீர்களா, அல்லது   அந்தக் கயவர்களுக்கு நீங்கள் ஆலவட்டம் தூக்குவீர்களா — சொல்லுங்கள்!

    தீநெறியின் முன்பு செய்வதறியாது திகைத்து அனைவரும் நின்றபோது, என் துகிலைத் தீயவன் துச்சாதனன் உரிய முற்பட்டபோது, என் மானத்தைக் காத்து அருளிய கண்ணன்போன்று உங்களில் ஒருவராவது இருக்கத்தானே செய்வீர்கள்!

    தனது இழிசெயல் நிறைவேறாது நின்றபோது, துச்சாதனன் களைத்து வீழ்ந்தபோது பேச்சற்று நின்றஅவையோரைப் பார்த்து விதுரன் சொன்னதையே நானும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

    “அறநெறிகளின் விதிகளை அறிந்து, ஒருசபையில் கலந்துகொண்டு, ஒருகேள்விக்குப் பதில்அளிக்காமல் இருப்பது என்பது பாதி பொய்க்குச் சமமாகும். மறுபுறம், அறநெறிகளின் விதிகளைஅறிந்த ஒருவர் ஒன்றுகூடி, பொய்யான பதிலைச் சொன்னால், நிச்சயமாகப் பொய்சொன்ன பாவம் அவரைச்சாரும்.”

    எக்காலத்திற்கும் ஒரேநெறி, ஒரேநியாயம், ஒரேஅளவுகோல் என்று சொல்லும் நீதிமான்களே, சொல்லுங்கள்! இக்கால நெறிமுறையைக் கொண்டு என்னை நீங்கள் போற்றவேண்டாம், குறைந்தபட்சம், என்னைக் கொடுமைப்படுத்திய – பெண்ணடிமை செய்த பேடிகளுக்கு — உங்கள் காலப்படி என்ன தண்டனை வழங்குவீர்களோ, எப்படி ஈனர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்துவீர்களோ, அப்படி நடத்தாவிட்டாலும் போகிறது…

    இதுவரைப் பொறுமையாக என் புலம்பலைக் கேட்டதற்கு நன்றி!

    பாஞ்சாலி ஒரு பாவப்பட்டவள் என்று எனக்காக ஒரு துளி கண்ணீர்கூடச் சிந்தமாட்டீர்களா?

    Share