Tag: கட்டாரி

  • அறிவெனப்படுவது…..

    கட்டாரி

     

    என்னைப் போலத்தான்

    அவனும் பிறந்திருப்பான்..

     

    எனக்குப் போலவே

    அவனுக்கும் மேல்நோக்குப்பல்

    முளைத்திருக்கலாம்….

     

    எனக்குப் போலவே

    அவனுக்கும் ஏழாம் மாத முடிவில்

    வயிற்றுப்போக்கும்

    வந்திருக்கலாம்…

     

    என்னைப் போலவே

    அவனும் இடதுபுறமாகவே

    ஒருக்களித்திருக்கலாம் ..

     

    அரிசி பரப்பி நான்

    அ… எழுதியிருந்த நன்னாளில்

    தொடுதிரையில் A

    எழுதியிருந்த அவன் “ஸ்மார்ட் கிட்”

    ஆகிவிட்டிருந்தான்………………

     

     

     

    Share
  • எலும்பிலிருந்தா பிறந்தாய் ?

    கட்டாரி

     

    அம்மன் கோவிலில்

    மணியடித்துக் கொண்டிருக்கிறது….

     

    சங்கிலியைப் பறிகொடுத்தவள்

    கதறியபடியே

    ஓடிவந்து கொண்டிருந்தாள்..

     

    கடைசிப் பேருந்தை

    தவறவிட்டவள்…

    வன்புணரப்பட்டிருந்தாள்…

     

    நடந்ததைச் சொல்லத் தெரியாத

    சிறுபிள்ளைக்கு

    உடம்பெங்கும் காயம்…

     

    பிணங்களாய் சிலர்

    சிரித்துக்கொண்டே விளக்கொளியில்

    நிர்வாணம்

    உடுத்தியிருந்தார்கள்….

     

    மூன்றாம் சாமத்தில்

    ஒருத்தி குளிக்கப் போயிருந்தாள்…

     

    மணியோசையும் ஓய்ந்த

    பாடில்லை…..! கூடவே

    மழையும் சேர்ந்துகொண்ட பொழுதுகளில்

     

    அரை மயக்கத்திலேயே

    ஒரு பெண்ணைப் பெற்றெடுக்கிறாள்…..

    இன்னொரு.. பெண்…!!

     

     

     

    Share
  • ஆற்றுப்படுகையும் ஆற்றுப்படுத்தலும்!

    கட்டாரி

    அம்மாவின் முந்தானையோர
    ஐம்பது காசுகள்
    போதுமானதாக இருந்தது…கல்கோனாக்கள்
    தவறியிருந்த
    நேற்றைகளின் பொருமல்கள் கரைத்துவிட…

    பொரி உருண்டைகளுக்கான
    தங்கையின் ஏக்கமும்
    அப்படித்தான்…!

    அப்பாவின்
    முழங்கைச்சட்டை மடிப்பிலும், தொடர்ந்தே வரும்
    முள்மீசை முத்தத்திலும்…

    இம்முறை தனியே வந்த
    அக்காவின் கோபம் இறங்க…
    இரண்டு நாள் தள்ளிவந்திருந்த
    மாமாவையும் சேர்த்துவைக்கச்
    செத்துப் போயிருந்தது… நாட்டுக்கோழியொன்று…!!

    வேலைக்குக் காத்திருந்த
    சித்தப்பாவின் வெறுமைகளைச்
    சாயங்காலக் கிரிக்கெட்டின்
    நான்கு சிக்சர்கள் நிரப்பிவிடும்…தவறினால்
    அப்பத்தாவின் அம்மாசீர்வாதம்…!!

    பிசாசு விழுங்கியிருந்த
    பக்கத்துக்கு வீட்டு அக்காவும்…
    ஒற்றை எலுமிச்சை, கொத்து வேப்பிலைக்
    குளியலோடு
    சுகப்பட்டிருந்தாள்…

    செதுக்கிய பாதையில்
    சிதறா நினைவுகளோடு திரும்புகையில்
    தொகுப்பு வீட்டின்
    எதிர்க்கதவுக்காரன் செய்தி பகிர்ந்தான்…

    சாக்லேட் கடிச்சி வீசறான் சார்
    பையன்… இப்பத்தான்
    கவுன்சலிங் போயிட்டு வரோம்!!

     

    Share