Tag: கு. பூபதி

  • குறுந்தொகைப் பாடல்களில் இயற்கை

    -கு. பூபதி 

    பழங்காலம் முதலே மனிதன் சூழலியலைப் பற்றி அனுபவப்பூா்வமாக அதிக கவனம் கொண்டிருந்திருக்கிறான். நாகரிகம் வளராத காலந்தொட்டே சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும், உயிர் வாழ்வதற்கு இயற்கையின் ஆற்றலையும் அவனைச்சுற்றியுள்ள தாவரங்கள், விலங்குகள் போன்ற சூழ்நிலைகளைப் பற்றிய அறிவும் இன்றியமையாததாகக் காணப்பட்டது. மனித சமுதாயத்தின் நாகரிகக்களம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெரும் சிக்கல்களும், சிக்கல்களிருந்து கண்ட தீா்வுகளால் பெற்ற அறிவும் என படிமலா்ச்சி எய்த அது இலக்கியங்கள் வழியாகக் காலம்கடந்த ஆவணங்களாக பரிமாணம் கொண்டது, கொள்கின்றது. தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகைப் பாடல்கள் வழி  இயற்கை குறித்த பழந்தமிழா் பார்வையை அறிய முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

    பல்லுயிர் ஓம்புதல்

    ஓம்புதல் என்பது பாதுகாத்தல் என்பது மட்டுமின்றி, உயிர்நேயத்தோடு பிற உயிர்களைப் போற்றுதலாகும்.

    “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்து வந்து ளெலாம் தலை” என உயிர் ஓம்பலை நாகரிக சமூகத்தின் தலைமைக் குணமாக்கிக் காட்டுகிறது வள்ளுவம். 

    தம்முயிர் போல நோக்கல்

    ஆண்குரங்கு இறந்த கைம்மைத் துன்பத்தைப் போக்க வழியறியாப் பெண் குரங்கு உயிர்விடத் துணிந்த போதும், தந்தயையிழந்த தன்குட்டி தாயையும் இழந்தால் தவிக்குமே என மனிதா்போலவே குரங்குக்கும் பிரிவுத்துன்பமும், குட்டிகளுக்காக உயிர்வாழும் தியாக உணர்வும் உள்ளதைக் குறுந்தொகைப் பாடல் படம்பிடித்துக் காட்டுகிறது.

    “கருங்கட்தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
    கைம்மை யுய்யாக் காமர் மந்தி
    கல்லா வன்பறழ் கிளைமுதற் சோ்த்தி
    ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
    சார னாட  நடுநாள்
    வாரல் வாழியோ வருந்துதும் யாமே”. (குறுந்-69)

    மரமேறுதல் முதலான தம் தொழிலைக் கல்லாத தன் குட்டியைச் சுற்றத்திடம் ஒப்படைத்துவிட்டு ஓங்கிய மலைப்பகுதியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் என பிற உயிர்களும் மனிதா்போலவே உயிரும், வலியும், உணர்வும் கொண்டவை என அழுத்தமாகக் கூறுகிறது இப்பாடல்.

    இயற்கை – இயைபுப் புலம்

    தலைவன் கடந்து செல்லும் நிலம், தலைவி ஆற்றியிருக்கும் சூழல் போன்ற பல உணா்வுப் பின்னணிகள், இயற்கைக் காட்சிகளுடன் காட்டப்படும்போது  அவை உணா்வினைப் பிறா் புரிந்துகொள்ள ஏதுவாகவோ, உணா்ச்சிகளை மிகுத்துக் காட்டவோ இயைபுப்புலமாக அமைகின்றன.  மனிதரின் உணா்வுக்கு ஒத்துச்செல்லும் பின்புலமோ அதற்கு எதிராக அமைந்து உணா்வை மிகுவித்துக் காட்டும் முரண் பின்புலமாகவோ அமையலாம்.

    காதலன் பிரிவால் தனிமை கொண்டு, நெஞ்சம் துன்பத்தால் ஓலமிடும் நெய்தல் தலைவிக்கு இணைப் பின்புலமாகிய அலையோசை எழுப்பும் இரவு நேரக்கடல் குறுந்தொகைப் பாடலில் காட்டப்படுகிறது.

    “யாரணங் குற்றனை கடலே பூழியா்
    சிறுதலை வெய்யைத் தோடுபரந் தன்ன
    மீனார் குருகின் காலைப் பெருந்துறை
    அவள்வீத் தாழைத் திரையலை
    நள்ளென் கங்குலுங் கேட்குறின் குரலே” (குறுந்-163)

    தாழையின் மலர் திரையால் அலைக்கப்படுவது தலைவன் உள்ளம் துன்பத்தால் அலைக்கழிக்கப்படுவதை உருக்காட்சியாக்குகிறது. தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாள் என எண்ணிய தோழியை நோக்கித் தலைவி கூற்றாய் அமைந்த பாடலில் இது போலவே துன்பத்தில் உழலும் தலைவியின் மனத்தை அலைகளால் மோதப்படும் தாழையின் வெண்பூ பின்புலமாக அமைக்கப்பட்டுள்ளது.

    “பூவோடு புரையும் கண்ணும் வேயென

    வாரல் வனப் பெய்திய தோளும் பிறையென
    மதிமயக் குறூஉ நுதலு நன்றும்
    நல்லமன வாழி தோழி யல்கலும்
    தயங்குதிரை பொருத தாழை வெண்பூக்
    குருகென மலரும் பெருந்துறை
    விரிநீா்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே”. (குறுந்-226 )

    தாமரை மலரை ஒத்த கண்களும், மூங்கிலைப்போன்ற திரண்ட அழகைப் பெற்ற தோள்களும், பிறை என்று கருதும்படி அறிவை மயங்கச் செய்யும் நெற்றியும் உடைய பெண்ணே! இரவுதோறும் இடைவிடாது அலைக்கின்ற கடலைகளால் மோதப்பட்ட தாழை மலா்களின் வெள்ளிய பூவானது கரைகள் தோறும் வெள்ளை நாரைகள் நிறைந்திருப்பதைப் போன்ற பரந்த இடமாகிய பெரியதுறைகள் கொண்டது அந்நிலை இப்பொழுது கழிந்தது அன்றோ!

    “மானிட உணா்வுகளோடு இயற்கையின் எழிலை இயைபுறச் செய்தது பண்டைத் தமிழிலக்கிய மரபு” என்ற மு.வரதராசனாரின் கூற்று இங்கு எண்ணத்தக்கது.

    மரத்தை நட்பாய் எண்ணல்

    சூழல் கட்டமைப்பு எனப்படுவது ஒரு சிக்கலான ஒருமைப்பாடு என்றும், அதில் தாவரங்களும், விலங்கினங்களும் ஓரே வாழிடத்தில் கூட்டமாக ஒருமித்து வாழ்வதோடு மூலப்பொருட்களும் சக்தியும் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளப்படுகிறது என்று உட்பரி என்னும் அறிஞா் விளக்குகிறார்.

    உயிர் வாழ்வதற்கும் உணவுச்சுழற்சிக்கும் தகவமைப்புக்கும் இத்தகைய ஒருமித்து வாழ்தல் இன்றியமையாததாயினும் உள்ளத்து உணா்வுகளையும் பிற உயிர்களுக்கும், தாவரங்களுக்கும்  ஏற்றிக் கருதுவது சங்கப்புலவா்களின் சூழல் பார்வையையும் உயிர்ம நேயத்தையும் காட்டுகிறது.

    “நமக்கொன் றுரையா ராயினுந் தமக்கொன்
    றின்னா விரவி னின்றுணை யாகிய
    படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ
    துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே. ” (குறுந்-266 )

    எனத் தலைவன் வரைந்து கொள்ளாமல் பிரிந்த காலத்தில் தனக்குத் தூது அனுப்பாவிட்டாலும் இரவுக்குறி வந்தொழுகிய காலத்தில் நம்மோடு இனிய துணையாக இருந்த வேங்கை மரத்திற்காவது புள்வாய்த் தூது அனுப்பலாகாதோ என ஏங்கும் தலைவியின் நிலை சுட்டப்படுகிறது. வேங்கை மரத்தை அஃறிணைப் பொருள் என எண்ணாமல் தனக்கும் தலைவனுக்கும் இனிய துணையென உயிரோடு உணா்வும் ஏற்றிக் கூறுவதுடன் வேங்கைக்குத் தூதாகப் பறவையைத் தோ்தல் சூழலியையும் நேயமும் வெளிப்படக்காட்டுகிறது.

    பல்லுயிர்க்கும் உலகுரிமை

    “ஆா்னியாஸ் என்ற அறிஞா், மாந்தன் இயற்கை உருவாக்கிய உணவுத் தொடரில் ஒரு கண்ணிதான். பிற கண்ணிகளுக்கு ஏதாவது ஊறு ஏற்படுமானால் அது மாந்தர் குலத்தையும் பாதிக்கும் என்கிறார். உலகும் அதில் உள்ள உயிர்களுமான இந்தச் சூழல் மண்டலம் மாந்தனுக்கு வாழ்வதற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அந்த அளவிற்கு உரிமை மற்ற உயிர்களுக்கும் உண்டு”.என்கிறார்.

    “கான மஞ்ஞை யறையீன் முட்டை
    வெயிலோடு முசுவின் குருளை யுருட்டும்”  (குறுந்-38 )

    என்ற பாடல் மயில் அடைகாத்தற்குரிய அதன் முட்டையை பாறையின் மேல் நின்று கொண்டு குரங்குக் குட்டியானது முட்டையை உருட்டி விளையாடுகிறது. அந்நிலைகண்ட மயிலின் உயிர் ஊசலாடுகிறது. இருதலைக் கொள்ளி எறும்பாக மயிலின் தவிப்பு உள்ளது, அந்நிலையே தலைவியின் நிலையும். தலைவன் பிரிவில் மைதீட்டப்பெற்ற கண்களினின்றும் பெருகும் நீரோடு இருக்கும் தலைவியின் நிலை அவளின்  மனவலிக்குப் பின்புலமாக மயிலின் அடைகாக்கப்படாத முட்டையைக் காட்டுவது, அம்முட்டை பொறிக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தைக் காட்டுவாகக் கொள்ளலாம். 

    பெயா்நெறி

    பறவைகளுக்கும், விலங்குகளுக்கும், மனிதா்களுக்கும் ஆண்பால், பெண்பால் மற்றும் இளமைப் பெயா்களை விளக்கித் தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கிறது. திணை ஒழுங்கு பேணி இயற்றும் பாடல்களில் அஃறிணை உயிர்களுக்கு மனிதா்களுக்கு ஒப்பாகப் பெயரிடுதல் இலக்கண வழூஉ  அல்லாமல் நேயம் போற்றும் உத்தியாகவே குறுந்தொகைப் பாடல்களில் அமைகின்றது.

    “வங்காக் கடந்த செங்காற் பேடை
    எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது
    குழலிசைக் குரல குறும்பல வகவும்
    குன்றுகெழு சிறுநெறி யரிய வென்னாது
    மறப்பருங் காதலி யொழிய
    இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே”. (குறுந்-151 )

    என்ற பாடல் வழி, ஆண்வங்காப் பறவை நீங்கப் பெற்றமையால், தன்னுடைய கணவனாகிய ஆண்பறவையைக் காணாமல் தவிக்கும் பெண் பறவை எனக் காட்டப்படுகிறது. பறவையின் இணையைப் பாவையின் துணைவா்போலக் “கணவர்” என்ற சொல்லால் சுட்டிக்கூறுவது சிறுபறவையின் வலியும் தன்வலியை ஒத்ததே எனத் தலைவனின் உள்ளக்கிடக்கையைக் கூறுவதாக அமைகின்றது. மேலும்,

    “நோற்றோர் மன்ற தோழி தண்ணெனத்
    தூற்றுந் துவலைப் பனிக்கூடுந் திற்கட்
    புலம்பயி ரருந்த வண்ண வேற்றோடு
    நிலத்தூங் கணல வீங்குமுலைச் செருத்தல்.      (குறுந்-344 )

    என்ற பாடலில் விலங்குகளையும் “அண்ணல்” எனப் போற்றும் இயற்கையியந்த வாழ்வு போற்றும் பழந்தமிழ்ப் பண்பினைக் காட்டுகிறது.

    இயற்கைக்கும் உணா்ச்சிகள்

    உலகம் மனிதா்க்கானது. மனிதா்களுக்காகவே பிற உயிர்கள் யாவும் படைக்கப்பட்டன என்ற மயக்கத்தில் திளைக்கும் சுயநலம் ஓங்கக் கற்பிக்கும் இன்றைய மனிதா்களுக்கு சூழலியலாளா் கூறும் உண்மை நோக்கத்தக்கது.

    “இப்புவியில் வாழும் அனைத்து உயிர்களும் மதிப்பிற்குரியவை அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில் அம்மதிப்பு அமைய வேண்டும் என்பதில்லை. அவை அவற்றிற்காகவே மதிக்கப்பட வேண்டும். ஏனெனில் இப்புவியில் பல உயிர்களின் பங்களிப்பை மனிதா்கள் இன்னும் அறிந்து கொள்ளவே இல்லை”. என்ற திரு சஞ்சீவராஜ் அவா்களின் கருத்து இங்கு நினைவு கூரத்தக்கது.

    உயிரற்ற பொருட்களுக்கும் உயிர் கொடுத்துப் பார்ப்பதுடன் உணா்ச்சியையும் ஏற்றிக் காட்டியுள்ளனா் சங்கப்புலவா்கள்.

    “யாரணங் குற்றனை கடலே பூழியா்
    சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
    மீன்ஆர் குறுகின் கானலம் பெருந்துறை
    வெள்வீத் தாழை திரையலை
    நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே”.

    என்ற பாடல்வழி கடலுக்கும் உணர்ச்சியுண்டு எனக்கருதும் தலைவியின் கூற்றைச் சுட்டுகிறது. தலைவனைப் பிரிந்த மயக்கத்தால் இரவும் பகலும் உறங்காமல் துயருரும் தலைவி, ஓயாமல் அரற்றும் கடலை நோக்கி நீ யார் பிரிவு பற்றி வருந்துகிறாய் என தன் நிலையோடு ஒப்ப, கடலின் நிலைக்கும் கலங்குகிறாள் தலைவி.

     

    முடிவுரை

    சூழல்பார்வை, சங்கப்பாடல்களில் இடம்பெற்றுள்ள இயற்கைப் புனைவுகள் வழி அக்கால மாந்தரின் இயற்கையோடியைந்த வாழ்வு விளக்கப்பட்டுள்ளது. மனிதா்களைப் போல பிற உயிர்களுக்கும் வாழ இவ்வுலகு உரிமையுடையது என்னும் அறிவியல் உண்மையை உள்வாங்கிக் கொண்டு, அதற்கும் மேலாக மரங்களைத் தோழமையாகவும், விலங்குகளையும் மாந்தரோடு ஒப்ப நோக்கியமையும், உயிரற்ற பொருள்களை உயிருள்ள பொருள் போல எண்ணுவதோடு, அவற்றுக்கு உணா்ச்சிகளையும் வழங்கிக் காட்டப்பட்ட குறுந்தொகைப் பாடல்கள் இயற்கை போற்றும் பாடல்களாகவும் திகழ்கின்றன.

    *****

    பயன்பட்ட நூற்கள்

    1. சங்க இலக்கியக் கட்டுரைகள், தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு, எப்ரல் 1984. பக்16.
    2. உயிர்ம நேயம், பாமயன், தமிழினி ஜீலை 2008, பக்.66. M.Woodbury (1954).
    3.Principles of General Ecology, MC Grew Hill Book Co, page.503.
    4. P. T. Sanjeeva Raj, Beware the loss of biodiversity, The Hindu, Sep 23, 2012. page.10

    *****

    கட்டுரையாளர் – பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர்,
    முனைவர் ஆறுச்சாமி.செ. – நெறியாளர்
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், ஈச்சநாரி, கோவை-21.

     

    Share
  • குறுந்தொகை – பாடுபொருள் நுவல்தலில் பறவைகள்

    -கு. பூபதி 

    சங்க இலக்கியங்கள் தொன்மையால் பெருமை வாய்ந்தவை. நுண்ணிய கட்டமைப்பு விதிகளுக்கு இயைந்த வடிவுடையவை. முதற்பொருள் நிலமும், பொழுதுமாக அமைவதாலும் கருப்பொருளாக தெய்வம் தொடங்கி நிலம்சார் மக்கள், நிலையுயிர்களான தாவரங்கள் புள் உள்ளிட்ட இயங்குயிர்கள், இயற்கை உழுத செயற்கை உருவாக்கங்கள் என இயற்கைக்கு மிகுதியும் இடமளிப்பவை. எனவே உரிப்பொருள் உணர்வுகளைப்பாட இயற்கையை இயல்பாகவே துணைக்கழைத்துக் கொண்டனர் சங்கப்புலவர்கள்.

    தலைவன், தலைவி, தோழி கூற்றில் ஆளப்படும் உவமைகளுக்குக் கூட நுண்ணிய விதிகளும், தெற்றெனக்காட்டும் எல்லைகளையும் இலக்கணமாகக் கொண்டவை சங்கத்தமிழ் இலக்கியங்கள். தலைவி தான் கண்டவற்றையே உவமையாக்கவேண்டும் எனத் தொல்காப்பியம் விதிக்கிறது. இக்காரணங்களால் பறவைகள், விலங்குகள், மலர்கள், செடி, கொடி, மரங்கள் என அவ்வுணர்வைக் காட்டவும், அறிவு கொளுத்தவும் பயின்று வரும் உவமைகள் பெருமையுள்ளன. அவற்றில் குறுந்தொகைப் பாடுபொருளில் பயின்றுவரும் பறவைகள் குறித்த செய்திகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    பறவைகளும், திணைகளும்

    பறவைகள் தம் இயல்பான வாழிடங்களுக்கேற்ற நிலங்களில் காணப்படுதல், இயல்பான வாழிடங்கள் அல்லாத இடங்களில் காணப்படுதல், அல்லது பறவைகளை இன்னதென விளங்காமல் உரைகாரர்களால் நேர்ந்த மயக்கம் ஒன்றுக்கு மேற்பட்ட நிலங்களில் பயின்று வருதல் எனப் பொதுவகைமையிற் கொண்டுவரவியலும்.

    பறவைச்சகுனம்

    பறவைகளைச் சகுனத்தின் குறியீடாகக் கொள்ளுதல் தற்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காகம் கரைதல் விருந்தினர் வருதலையும் சகுனமாகக் கொண்டுள்ளனர். இச்சகுனம் பார்த்தல் சங்ககாலந்தொட்டே கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. தலைவன் வரவை எதிர்நோக்கி ஆற்றியிருக்கும் போதும், நல்வினையைத் துவங்கும் போதும் நல்ல நிமித்தம் பார்த்தலும் நற்சொல் கேட்டலும் நற்குறிகளாகக் கொள்வது நெடிய பண்பாட்டுக் குறியீடுகள். புள்ளூர்தல் என்பது பறவைகளை நன்னிமித்தமாகக் கொள்தல், விரிச்சிகேட்டல் என்பது நல்ல சொல் கேட்டல் இதை,

    ‘புள்ளும் ஓராம் விரிச்சியுமில்லாம்
    உள்ளலும் உள்ளாம் அன்றே’ (குறு : 218) என்பதிலிருந்தும்,

    ‘வேதின வெரிநி னோதி முதுபோத்
    தாறுசென் மாக்கள் புட்கொளப் பொருந்தும்’ என்பதிலிருந்தும் அறியலாம்.

    உட்பிரிவுகள்

    பொதுவாகப் பார்த்த பறவைகளைப் பாடல்களில் உவமையாக்குவது என்பதைக் கடந்து கூர்ந்து கவனித்து, நுணுக்கமான ஒப்புமைகளைக் கைக்கொள்வது, அப்பறவைகள் இணையோடு சேர்ந்து வாழ்தல், பிரிந்து செல்லும்போது வருந்துதல், கருவுற்ற பேடைக்குக் கூடமைத்துக் கொடுத்தல் ஆகிய நுட்பமான செய்திகள், பல சங்கப் புலவர்களை பறவை ஆர்வலராகக் காட்டும். ஒரு வகைப் பறவையினத்தினைச் சாந்து நிறத்தால், வரவால், வாழிடத்தால், உணவு முறையால் வேறுபட்ட அவற்றின் உட்பிரிவுகளைக் கூறும் திறம் மூலம் பறவை ஆராய்ச்சியாளரின் நோக்கு அப்புலவர்களுக்கு அமைந்திருந்ததைக் குறிக்கிறது. உதாரணமாக கழுகுகளில் இருவகை, ஆந்தையில் ஆறு வகை, காக்கையில் இருவகை, வல்லூறு மூவகை, புறாக்கள், நீர்ப்பறவைகளின் வகைகள் போன்றவை சங்கப்பாடல்களில் காணக் கிடைக்கின்றன.

    கணந்துள்

    குறிஞ்சி திரிந்த பாலை நிலத்தில் வழிப்போக்கர்களை ஆறலை கள்வரிடம் அகப்படாமல் நீங்கிச் செல்ல கணந்துள் பறவை எச்சரிக்கும். இச்செய்தி,

    “நெடுங்காற் கணந்து ளாளறி வுறீஇ
    ஆறுசெல் வம்பலா் படைதலை பெயர்க்கும்”    (குறு: 350) என்ற பாடலில் கூறப்படுகிறது.

    “கம்புட் கோழியும் கனைகுர னாரையுஞ்
    செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்
    கானக் கோழியும்நீா்நிறக் காக்கையும்
    உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
    வெல்போர் வேந்தா்முனையிடம் போலப்
    பல்வேறு குழூக் குரல் பரந்த வோதையும்”      (சில -10-114-117)

    என்ற சிலம்பு, புகார்க்காண்டம், நாடுகாண் காதைப் பாடல் உரையில் புள் என்பதைக் கணந்துள் எனக் குறிப்பிட்ட அடியார்க்கு நல்லார், கானக் கோழி- காட்டுக்கோழி என்பாருமுளா். நிறம்- தன்மை, ஊரல் – நீா்மேலூர்வது ஆதலின் ஆகுபெயா் என்பர். காவிரியாற்றங்கரையில் நீா்த்துறைப் பறவைகளைப் பட்டியலிடும் போது கணந்துள் பறவையும் சேர்த்துக் குறிப்பிடுவது ஆய்வுக்குட்பட்டது.

    கற்பாங்கான வறட்சியான வாழிடத்தைக் கொண்ட கணந்துள் பறவை ஆள் வருகையை எச்சரித்துக் கூறும் செய்தி நற்றிணைப் பாடலிலும் உறுதிப்படுத்தப்படுகிறது.

    “பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
      நெடுங்கால் கணந்துள் புலம்புகொள் தௌ்விளி
      சுரஞ்சொல் கோடியர் கதுமென இசைக்கும்”     (நற்: 212)

    என நற்றிணைப் பாடலுக்கு  வரைந்த உரையில் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயா் “ இது நீா்வாழ் பறவை என்று கூறப்படுதலின்,  எந்நில மருங்கிற்  பூவும் புள்ளும்” (தொல். பொரு.19) என்றபடி பாலைக்கண் வந்ததெனெக்கொள்க எனத் திணைமயக்கமாகக் கொள்கிறார்.

     கற்பாங்கான வறண்ட பகுதியில் வாழும் கணந்துள் நீா்ப்பறவை எனக் கொள்ளப்பட்டமை ஆய்வுக்குரியதாகிறது.

    ஆள் வருகையைக் காட்டும் கணந்துள் ‘ஆள்காட்டிக் குருவி’ என்பது மருவி தற்காலத்தில் ஆக்காட்டுக் குருவி’ என கிராமப்புறங்களில்  அடையாளப்படுத்தப்படுகிறது.

    மஞ்சள் மூக்கையுடைய கணந்துள் (Vanellus malabaricus) கற்பாங்கான வாழிடத்தையுடையது என்றும் அதேபோல் உருவம் கொண்ட சிவப்பு மூக்கையுடைய பறவையே (Venelius indicus) குளம் குட்டை ஆறு பொன்ற நீா்த்துறைகளில் வாழ்தல் என்பதையும் (en. Wikipedia.org) இணையதளம் வழி அறியலாம். குறுந்தொகைப் பாடல்களில் சுட்டப்படும் கணந்துள் மஞ்சள் மூக்கையுடையது என தெளியலாம்.

    கொக்கு

    “மாரியாம்ப லன்ன கொக்கின்
    பார்வ லஞ்சிய பருவர லீர்நெண்டு”       (குறு: 117)

    என வடிவத்திலும், வண்ணத்திலும் பொருத்தமாகக் கொக்கின் கூரும் ஆம்பல் முகையும் ஒப்புமைப் படுத்தப்படுகிறது. மாரிக்காலத்து மழையில் நனைந்து கூம்பியிருக்கும் கொக்கை ‘மாரிக்கொக்கின் கூரல்’ என நற்றிணை (100) சுட்டுகிறது.

    கொக்கி போன்ற வடிவை உடையதால் கொக்கு என்ற காரணப்பெயர் கொண்ட இப்பறவை, உரிய காலம் வரை பொறுமையாகக் காத்திருந்து வினையாற்றுவதற்கு உவமையாக மூதுரையில் சுட்டப்படுகிறது.

    கூகை

    உவமையால் பெயர்பெற்ற புலவர்கள் வாரிசையில் கூகையை உவமையாக்கி,

    “கூகைக் கோழியானாத் தாழிய பெருங்காடு”               (புற: 364)

    என்ற பாடல் எழுதிய புலவர் கூகைக் கோழியார் எனக் குறிப்பிடப்படுகிறார்.

    “குன்றக் கூகைக் குழற்று முன்றிற்
    பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும்”     
               (குறு: 153) என்ற கபிலர் பாடல் வழி குன்றில் வாழ்வதால் குன்றக்கூகை எனச் சுட்டப்படுவதை அறியலாம். கோழியிலிருந்து கூவ வேண்டிய இடத்துக் கூகை கூவியதால் ‘கூகைக் கோழி’ எனக் கூறப்பட்டதாக,

    “கூகைக் கோழி வாகைப் பறந்தலை”   (குறு: 393) என்ற பரணர் பாடலுக்கு உ.வே.சா உரை வழங்குவார். கூகை கூவுதலை ‘குழறுதல்’ என்பர். பொருளற்ற ஒலியை எழுப்புவது குழறல் எனப்படும்.

    சங்கப் பாடல்களில் ஆந்தை என்ற பொதுவகையில் கூகை, கூகுரால், குடிஞை, ஊமன், ஆண்டலை ஆகியவற்றைக் குறிக்கிறது. புறநானூறு, அகநானூறு பாடல்களில் ‘ஆந்தை’ என்ற சொல் பயன்படுத்தப்படாமை மேலாய்வுக்குரியது.

    கூகைக் குழறலுக்கு மகளிர் அஞ்சும் செய்தி நற்றிணைப் (218) பாடலில் கூறப்பட்டுள்ளது.

    காக்கை

    நிமித்தம், பராய்க்கடன் குறித்த செய்திகளில் காக்கை மிகுதியும் புலவர்களால் பயன்படுத்தப்பட்டதை பல அகப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.

    “விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே”      (குறு: 210)

    என்ற குறுந்தொகைப் பாடலை இயற்றிய புலவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்ற உவமை வழி அடையால் அறியப்படுகிறார்,

    பலியுண்ணும் காக்கையே சங்கப் பாடல்களில் சுட்டப்படுகிறது.

    “உகுபலி அருந்திய தொகுகருங் காக்கை”                (நற்: 343)

    எனப் பலியுண்ணும் காக்கையை நற்றிணை காட்டுகிறது. காக்கை கரைதல் தலைவன் வரவுக்கு நிமித்தமென்றும், அவ்வாறு கரைந்தால் இன்னது தருவேன் எனக் கூறியவாறு இடும் உணவை பலியென்றும் கூறுதல் மரபு.

    தமிழ்நாட்டுக் காக்கைகள், ஊர்க்காக்கை (Corras Splendens), அண்டங் காக்கை (Corras Macrorhynchos) என இருவகையானவை. உடல் கருப்பாகவும், கழுத்து சாம்பல் நிறத்திலும் உள்ளவை ஊர்க் காக்கைகள். உடல் முழுவதும் அடர்கருப்பாக உள்ளவை அண்டங் காக்கைகள்.

    சங்கப் பாடல்களில் கூறப்படுபவை அண்டங் காக்கைகள் என்பது ‘கருங்காக்கை’ என்ற அடைவழிப் பெறப்படுகிறது.

    கம்புட் கோழியும் கனைகுர னாரையுஞ்
    செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்
    கானக் கோழியும்நீர்நிறக் காக்கையும்
    உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்” என்ற சிலப்பதிகாரப் பாடலில் கூறப்படும் ‘நீர்நிறக் காக்கை’ என்பது காக்கையினத்தைச் சார்ந்தது அல்ல. அது ஒரு நீர்ப்பறவை. பெயரைத் தவிர மற்றவற்றில் காக்கையோடு ஒப்புமையற்றது.

    கிளி

    மொச்சை மலரை கிளிமூக்கிற்கு உவமையாக்குகிறது

    “பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக்
    கிளிவா யொப்பி னொளிவிடு பன்மலர்”      (குறு: 240) என்ற குறுந்தொகைப் பாடல்.

    “செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்” என தொல்-மரபியல் காட்டும். கிளி வாயில் உள்ள வேப்பம்பழத்தை கொல்லன் கையில் உள்ள பொற்காசினை ஒப்பக் காட்டுகிறது பின்வரும் அள்ளளுர் நன்முல்லாயார்பாடல்.

    “உள்ளார்கொல்லோ தோழி கிள்ளை
    வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்
    புதுநா ணுழைப்பா னுதிமாண் வள்ளுகிர்ப்
    பொலங்கல வொருகா சேய்க்கும்”      (குறு: 67)

    ‘கிளிமூக்கு’ எனும் சொல் இன்றும் கிளிமூக்கு மாங்காயில் தொடங்கி, பட்டுச்சேலையில் இடம்பெறும் கிளிமூக்குப் பூவடிவம் வரையில் பெருவழக்காக உள்ளது. காலத்தினூடே பயணிக்கும் வீரியமிக்க உவமையாக விளங்குவதை உறுதிப்படுத்துகிறது.

    எழால்

    பிற பறவைகளை அடித்துக் கொன்று தின்னும் எழால் எனும் பறவை வழிநடை ஆபத்துக்குக் குறியீடாக விளங்குகிறது.

    “எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது”            (குறு: 151)

    “குடுமி யெழாலொடு கொண்டு கிழக் கிழிய”               (பதி: 36-10)

    என எழால் சங்கப் பாடல்களில் காட்டப்படுகிறது.

    குறும்பூழ்

    தினைத்தாளன்ன கால்களையுடைய குருகு முதல் ‘பூரிக்கா லன்ன செங்கா லுழந்தது’ வரையில் சங்கப் பாடல்களில் சிறு பறவைகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.

    ‘நிலங்கு குறும்பூழ் என்பன காடை’ என திவாகர நிகண்டு கூறுகிறது.

    “பாரீஇ வித்திய வேனற்
    குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே”              (குறு: 72)

    பாடலில் திணைக் குருவி போல, சிட்டுக் குருவிகள், முனியாக் குருவிகள் போன்ற சிறு குருவிகள் குறுந்தொகைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன.

    அன்றில்

    பிரிவுத் துன்பம் சிறுபொழுதேயாயினும் தாளாமல் தவிக்கும் தலைவிக்கு அன்றில் பறவைகளை உவமையாக்கி,

    “மனைசேர்பெண்ணை மடிவாய் அன்றில்
    துணைஒன்று பிரியினும் துஞ்சா காண்”                  (அக: 50)

    என அகநானூறு கூறும். இதுதான் அன்றில் என அடையாளம் காட்டுகின்றன குறுந்தொகைப் பாடல்கள்.

    “நெருப்பி னன்ன செந்தலை யன்றில்”                     (குறு: 160)

    “கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல்”                  (குறு:301)

    செந்தலையும், கருங்காலும் கொண்ட அன்றில் பறவைகள் பகலில் வெளியே செல்லாது பனைமரக் கூட்டில் தங்கி, இரவில் இரை தேடச் செல்லும் இயல்புடையவை. ‘பனங்கிளி’ என்று பெருவழக்காக அன்றில் அறியப்படுகிறது.

    தொகுப்புரை

    தான் கண்டவற்றையே உவமையாக்க வேண்டும் என்பதால் இயல்பான தோற்றத்தில் பறவைகள் தலைவி கூற்றில் பாடுபொருளாக விளங்குகின்றன. எனவே உயர்வு நவிற்சியும், மிகைப்படுத்தப்பட்ட முருகியலும் இன்றி உள்ளது உள்ளவாறே பறவைகளின் வாழிடம், தோற்றம், நுட்பமான செயல்கள், உணவுமுறை ஆகியவற்றைப் பதிவு செய்துள்ள குறுந்தொகைப் பாடல்கள் இலக்கிய இன்பம் மட்டுமின்றி, அறிவியல் ஆய்வாளர்களுக்குக் கூடுதல் செய்திகளைக் கூறுவதாகவும் அமைந்துள்ளன.

    பார்வை நூல்கள்

    1. குறுந்தொகை மூலமும் உரையும் (2009), டாக்டர் உ.வே.சா நூல் நிலையம், சென்னை.

    2. நற்றிணை மூலமும் உரையும், (2016), ஔவை துரைசாமிப் பிள்ளை, சாரதா பதிப்பகம், சென்னை.

    *****

    கட்டுரையாசிரியர் – பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளார், தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், ஈச்சநாரி, கோவை-21.
    முனைவர் ஆறுச்சாமி.செ. நெறியாளர், உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், ஈச்சநாரி, கோவை-21.

     

     

    Share
  • குறுந்தொகைப் பாடல்களில் புழங்குபொருள் பயன்பாடும், பண்பாடும்

    -கு. பூபதி

    காலந்தோறும் மக்கள் பயன்படுத்தி வந்த பொருட்கள் அதன் தேவை மற்றும் தனித்தன்மை கருதி அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப தனி வடிவமோ, பொது அமைப்பில் மாறுதலோ கொள்கின்றன. அப்புழங்கு பொருட்கள்வழி மேற்கொள்ளப்படும் ஆய்வு புழங்குபொருள் அல்லது பருப்பொருள் பண்பாய்வு என அறிஞர்களால்  வகைப்படுத்தப்படுகிறது. வாய்மொழி வழக்காறுகள், ஏட்டுச்சுவடிகள், கல்வெட்டுக்கள், பாறை ஓவியங்கள் போல புழங்கு பொருட்களும் அந்தந்த நிலமக்களின் பண்பாட்டுச் சூழல் செய்திகளைக் காலங்களின் ஊடாகக் கடத்தும் திறனுடையவை. குறுந்தொகைப் பாடல்களில் காணக்கிடைக்கும் புழங்கு பொருட்களையும், அதன்வழிப் பண்பாட்டுச் சூழலையும் இக்கட்டுரை ஆராய்கிறது.

    பயன்பாடு:

    புழங்கு பொருட்களை அவற்றின் பயன்பாடு மற்றும் பயன்பாட்டுக்களம் சார்ந்து, தொழில்சார் கருவிகள், வேட்டைக் கருவிகள், வேளாண்கருவிகள், அன்றாட வாழ்வில் புழங்கும் பொருட்கள் எனப் பாகுபடுத்தலாம். பெரும்பாலான அறிஞர்கள் புழங்குபொருட் பயன்பாட்டை கலை (Art) என்றும் கைவினை  (Craft) என்றும் இரு உட்பிரிவுகளாகக் காண்கின்றனர் என மானிடவியலாளர் ஹென்றி கிளாசி குறிப்பிடுகிறார். பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையானவை என்று கொள்ள முடியாது. அவை மற்ற பயன்பாடுகளிலிருந்து நாம் வேறுபட்டு நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்கும் அப்பண்பாட்டைக் காலங்கடந்து நிலைநிறுத்துவதற்கும் காரணிகளாக அமையலாம்.

    கொல்லுத் தொழில்:

    ஏழூரில் உள்ள மக்களின் பயன்பாட்டில் உள்ள மண்வெட்டி, களைக்கொத்து போன்ற தொழில் கருவிகளை ஆக்கவும், ஆக்கிய கருவிகளைப் பழுது நீக்கவும் கொல்லுப்பட்டறையில் கொல்லர் உலையில் பயன்படுத்தப்பட்ட உலைவாங்கு மிதிதோல் (துருத்தி) போன்ற கருவிகளைப் பழந்தமிழர்கள் புழக்கத்தில் கொண்டிருந்ததை,

          “ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த
    உலைவாங்கு மிதிதோல் போலத்”
                           (குறு:172)

    எனக் குறுந்தொகைப் பாடல் கூறுகிறது.

    கொல்லர் உலையில் பயன்படுத்தப்படும் பட்டைக் கல்லைப்போன்ற வெம்மையை உடைய பாறை எனச் சுடுபாறையின் வெம்மையைக் கூற புழங்குபொருள் உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது இதனை,

    ‘உலைக்கு லன்ன பாறை யேறி’ (குறு:12) என்ற வரிகளால் அறியலாம்.

    வார்த்தல், கடைசல் கருவிகள்:
    விவசாயத்திற்குப் பயன்படும் கருவிகள் அனைத்தும் மரப்பிடி கொண்டு அமைக்கப்பட்டவையாகும். அதுமட்டுமன்றித் தேர்கால்களில் கால்கள் அகலாமல் இருப்பதற்கும் அணிகலனாக அலங்கரிப்பதற்கும் ‘பூண்’ என்னும் வளையம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப் பூணை இரும்பு, பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். வளைய வடிவில் செய்யப்பட்ட பூண் விவசாயக் கருவிகளில் புழக்கத்திலிருந்ததை ஓதஞானியார் குறிப்பிடுகையில்,

    ‘பூண்வனைந் தன்ன பொலஞ்சூட்டு நேமி
    வாள்முகம் துமிப்ப வள்இதழ் குறைந்த’  
    (குறு:227) என்ற பாடல்வரிகளில் ஆவணப்படுத்துகின்றார்.

    சங்கப்பாடல்களில் தலைவன் பொருளீட்டும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லும்பொழுது மணிகள் கோக்கப்பட்ட தேரில்சென்று பொருளீட்டுவதாக ஏராளமான பாடல்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அம்மணிகள் ஊது உலையில் இட்டு வார்த்து, மணிகள் செய்யப்பட்டதையும் அம்மணிகள் புழக்கத்திலிருந்ததையும்…….

          ‘ ………………………………….மெழுகான்
    றூதுலைப் பெய்த படுவாய்த் தெண்மணி’
          (குறு:155) என்ற பாடல்வரிகளால் அறியலாம்.

    தச்சுத்தொழில் பொருட்கள்:

    மரவேலைகளை மரத்தச்சரும், கல்லைப் பயன்படுத்திச் செய்யும் வேலைகளைக் கல்தச்சரும் மேற்கொண்டனர். சிறுவர்களின் விளையாட்டுப் பொம்மையாகச் சிறுவண்டியும், அதனுடன் பூட்ட சிறிய பொம்மைக் குதிரையும் விளையாட்டுப் பொருளாக மரத்தச்சரால் செய்தளிக்கப்பட்டதை….

          ‘தச்சன் செய்த சிறுமா வையம்
    ஊர்ந்தின் புறாஅ ராயினும் கையின்
    ஈர்ந்தின் புறூஉ மிளையோர் போல’
          (குறு: 61)

    என்ற பாடல்வரி படம்பிடித்துக் காட்டுகிறது. தச்சர் செய்த அச்சிறுமா பெரிதும் புழக்கத்தில் இருந்ததற்கு ஏராளமான சான்றுகள் சங்கப்பாடல்களில் காணக்கிடக்கின்றன. அவற்றில்,

          ‘தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த
    ஊரா நற்றே ருட்டிய புதல்வர்’
     (பெரு: 248) என்று பெரும்பாணாற்றுப்படையும் சுட்டுகிறது.

    உலக்கை:

    பச்சைநெல்லை ஊறவைத்து அவல் இடிப்பதற்கு  நன்கு முற்றிய கரிய வைரம் பாய்ந்த மரத்தினால் செய்யப்பட்ட உலக்கை பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அவல் இடிக்கும்போதும், விவசாய வேலைகள் செய்யும்போதும் உடற்சோர்வு தெரியாமல் இருப்பதற்கு வாய்மொழியாக பாடல்களைப் பாடுவது வழக்கம் அவ்வகையில் பாடப்பட்ட பாடல்களில் ‘வள்ளைப்பாட்டும்’ ஒன்றாகும். இப்பாடல் இலக்கிய வகையில் இடம் பெற்றிருப்பதை அறியலாம்.

          ‘பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை
    ஆய்கதிர் நெல்லின் வரம்புஅணைத் துயிற்றி’
       (குறு: 238)

    என்ற குன்றியனார் பாடல்வரியின் மூலம் வைரம் பாய்ந்த உலக்கை பயன்படுத்தப்பட்டிருப்பதை உணரமுடிகிறது.

    விதைக்குறு வட்டி:

    சங்ககாலத் தமிழர்கள் தானியங்களைச் சேகரித்து வைப்பதற்கும், தானியங்களை வயல்வெளிகளில் விதைப்பதற்கு எடுத்துச் செல்வதற்கும் விதைக்குறு வட்டியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். விதைக்குறு வட்டியானது பனங்குருத்தோலைகளால் முடையப்பெற்ற சிறுபெட்டியாகும் இப்பெட்டி புழக்கத்திலிருந்தது தலைவி கூற்றாக வரும்

    ‘முதைப்புனங் கொன்ற வார்கலி யுழவர்
    விதக்குறு வட்டி போதொடு பொதுளப்’
    (குறு: 155) என்ற பாடலால் அறியக்கிடக்கிறது.

    விதைப்புக்கூடையின் பயன்பாடு குறுந்தொகையில் மட்டுமல்லாது ஐங்குறுநூறு, நற்றிணை போன்ற சங்கப்பாடல்களிலும் விரவிக்கிடப்பதை ஆங்காங்கே காணமுடிகிறது.

    இன்றும் விதைக்குறு வட்டியைப் பல பெயர்களில் அதாவது,விதைப்பெட்டி, பெட்டிக்கூடை, சாட்டுக்கூடை, மக்கிரி, கொடாப்பு எனப் பலவடிவங்களில் பயன்படுத்தி வருகின்றனர். விதைக்குறு வட்டியானது பனையோலைகளாலும், மூங்கிலைப் பயன்படுத்தியும் அதே வடிவில் அதே பயன்பாட்டில் இன்றும் நிலைத்திருப்பதைக் பண்பாட்டுக்கூறாகக் கருதலாம்.

    பொன்செய் பாவை:

    அரசனைப் பிழைத்தவர் தம் எடைக்கு எடை பொன்தருதல் என்பது வழக்கிலிருந்ததை பல சங்கப்பாடல்கள் உணர்த்துகின்றன, இதனை,

    “மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை
    புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற்
    கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
    பொன்செய் பாவை கொடுப்பனங் கொள்ளான்
    பெண்கொலை புரிந்த நன்னன் போல்’
      (குறு: 292)

    என்ற பாடல் காட்டுகிறது. பொன்செய்பாவை என்ற புழங்குபொருள் பண்பாடு சார்ந்து பயின்று வந்ததைப் பெருங்கதை குறிப்பிடுகையில்,

          “……ஆடுவி குளிரெனின்
    ஆடகப் பொன்னினு மளவி னியன்ற
    பாவை யாகும் படுமுறை”
       (பெருங்: 1:40:371-3) என்ற பெருங்கதைப் பாடல் வழியும்,

          “பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்’ (அக:127-8)

    என்ற மாமூலர் எழுதிய அகநானூற்றுப் பாடல் வழியும் அறிய முடிகிறது.

    அரசனைத் தொடர்ந்து வழிபடு தெய்வத்திற்கும் எடைக்கு எடை பொன்னாய், வெள்ளியாய், நெல்லாய், உப்பாய்க் கொடுக்கும் வழக்கம் மரபாக இன்றும் நிலைத்திருக்கிறது.

    ஆடிப்பாவை

    “கையுங் காலுந் தூக்கத் தூக்கும்
    ஆடிப் பாவை போல” 
    (குறு: 8)

    என்ற பாடல், கண்ணாடி முன்னின்று தம் கைகளையும், காலையும் தூக்கத் தானும் தூக்கும் ஆடிப்பாவையை மனைவிக்கு அடங்கி அவள் சொல்லுக்கு ஆடும் தலைவனைச் சிறுமைப்படுத்த ஒப்புமைப்படுத்துவது பரத்தையின் கூற்றாகக் கூறப்படுகிறது.

    “ஆடியுப் பாவை போனீயணங்கிய தணங்க வென்றான்” என சீவகசிந்தாமணியும் (957) ஆடிப்பாவை குறித்துக் கூறுகிறது.

    “தாதிற் செய்த தண்பனிப் பாவை”                       (குறு: 48)

    “முறிகண்டன்ன மெல்லென் சீறடிச்

    சிறுபசும் பாவையும் எம்முள்ளார்”                       (குறு: 278)

    ஆகிய குறுந்தொகைப் பாடல்வரிகள் பாவை செய்தலைக் குறிப்பிடுகின்றன.

    கண்ணாடித் தோற்றம், பாவை (பொம்மை) எனும் புழங்குபொருளாகி, நெடிய காலத்தினூடே கடந்து பண்பாட்டின் தொடர்ச்சியாய், ‘கையுங் காலுந் தூக்கத் தூக்கும் பாவை’ நிலையிலிருந்து ‘நிகழ்த்துவோன் விரலசைவுக்கு ஆடும் பாவை’ எனப் பாவைக் கூத்தாக படிமலர்ச்சி பெற்றதை அறியலாம்.

    ஞெகிழி

    அறுவடைக்குத் தயாரான விளைபொருட்களைக் கிளி, குருவிகளிடமிருந்து காக்க கவண், பறை, தட்டை என ஒலியெழுப்பியோ, அச்சுறுத்தியோ தினைப்புனங் காவல் மேற்கொண்டனர்.

    “ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல்யானை”      (குறு: 357)

    எனும் பாடல்வழிக் கொள்ளிக் கட்டைக்கு அஞ்சி விலகிய யானை காட்டப்படுகிறது.

    “ஒளிதிகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர்
    களிறுஎன ஆர்ப்பவர் ஏனல் காவலரே”
      (கலி: 52:13)

    என்ற கலித்தொகைப் பாடல் தினைப்புனக் காவலில் ஒளிதிகழ் ஞெகிழி, வில், கவண் பயன்பாட்டைப் பறைசாற்றுகிறது. ஒளியும் வெம்மையும் கொண்ட ஞெகிழி காவல் குறிப்பாகப் படிமலர்ச்சி பெற்ற புழங்கு பொருள்களாகி, இன்றும் விழாக்களிலும், சடங்கு நிகழ்த்துகைகளிலும் ‘தீப்பந்தம் பிடித்தல்’ என்ற பண்பாட்டிற்கு வேராக விளங்குகிறது.

    “தழலும் தட்டையும் குளிரும் பிறவும்”        (குறு: 34)

    “படுகிளி கடியுதட கொடிச்சி கைக்குளிரே”      (குறு: 291)

    பாடல்களில் இடம்பெற்ற கிளியை விரட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களான பறை, தட்டை போன்றவை இன்றும் புழக்கத்திலுள்ளன.

    எருமண்

    ‘கான்யாற்று எருமண்’ கூந்தல் கழுவப் புழங்கியதை,
          “கூழைக்கு எருமண் கொணர்கஞ் சேறும்”                 (குறு: 113)

    என்ற பாடல் சுட்டுகிறது. தற்காலத்தில் பெண்கள் தங்கள் கூந்துலுக்கு எருமண்ணுக்கு மாற்றாக மூலிகைப் பொருட்களையும், வேதி நறுமணப் பொருட்களையும் பயன்படுத்தினாலும், ‘எருமண்’ பாரம்பரிய இயற்கை வழிமுறையாகவும், வைத்திய முறையாகவும் இன்றும் உயிர்ப்புடன் திகழ்கிறது.

    மண்கலமும் பொன்கலமும்

    தற்காலத்தில் அன்றாடப் புழங்குபொருட்களில் பயன்படக்கூடிய பொருட்கள் இரும்பு, செம்பு, ஈயம், பித்தளை போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பச்சை மண்ணால் செய்யப்பட்ட மட்கலப் புழக்கம் இன்றும் அதன் மதிப்புக்குறையாமல் இருக்கிறது, மட்பாண்ட பயன்பாட்டையும் பொன்னால் ஆன பாத்திரங்களின் பயன்பாட்டையும் குறுந்தொகை சுட்டுகையில்,

    “பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல”                    (குறு: 29)

    “செம்பொற் புனை கலமும்”                               (குறு: 356)

    எனக் குறிப்பிடுவதை அறியலாம்.

    கைவளைகள்

    பல்வேறு அளவுகளில் செய்யப்பட்ட கைவளைகள் விற்பனை செய்பவரை,

    “சிறியவு முளவீண்டு விலைஞர்கை வளையே”      (குறு: 117)

    என்ற பாடல் காட்டுகிறது.

    “கோடீ ரிலிங்குவளை நெகிழ நாளும்”                  (குறு: 365)

    எனச் சங்குகளை அறுத்துச்செய்த வளையல்கள் பயன்பாடு சுட்டப்படுகிறது.

    ‘வளைஞெகிழ்தல்’ என்பது கைவளை நெகிழ்தல் என்ற இயல்புப் பொருளை மட்டுமின்றி, பிரிவுத்துயர் ஆற்றாமல் உடலும், உள்ளமும் சோர்வுற்று புனையா ஓவியமாகக் காட்சிதரும் தலைவியின் மெலிவைக் கூறும் குறியீடாகவும் விளங்குகிறது.

    ‘கைவளை அணிதல்’ வரவையும், மகிழ்வையும் குறிப்பதாகவும், ‘கைவளை நெகிழ்தல்’ பிரிவையும், துன்பத்தையும் குறிப்பதாகவும் அமைந்துள்ளது. கைவளைகள் பொன்னாலும், முத்தாலும் செய்யப்பட்டதையும், ஆபரணங்களைப் பாதுகாக்க ‘பொன்பெய்பேழை (Jewel Box)

    பயன்படுத்தப்பட்டதையும்,

          “இன்னாக் கானமு மினிய பொன்னோடு
    மணிமிடை யல்குன் மடந்தை”    
                     (குறு: 274)

          “பொன்செய் பேழை முய்திறந் தன்ன”              (குறு: 233)

    கூழைக்கு எருமண் கொணர்கஞ் சேனும்                (குறு: 239)

    ஆகிய பாடல்களால் அறியலாம்.

    பொன்னை உரைத்துப் பாரிக்கும் உரைகல் புழக்கத்தை,

          “………….. பொன்னின்
    உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை”
               (குறு: 192)

    என்ற வரிகளாலும் அறியலாம்.

    தொகுப்புரை

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த சமூகத்தைப் பற்றி அறிந்துகொள்ள புழங்கு பொருள்கள் குறித்த செய்திகள் முக்கியத் தரவுகளாகின்றன. இலக்கியங்களில் உண்மைத் தன்மை குறித்த ஐயம் எழுந்தாலும், ஒவ்வொரு பாடலையும் ஒப்புநோக்க உரிப்பொருளை விளக்க இயல்பாகக் காட்டப்பட்டவையாக புழங்குபொருள்கள் திகழ்கின்றன என்ற உண்மை தெற்றென விளங்குகிறது. தொன்மையும், தரவுகளில் செழுமையும் கொண்ட குறுந்தொகைப் பாடல்களில் கூறப்பட்ட புழங்கு பொருட்கள் பண்பாட்டுச் சூழல் ஆய்வுக்குக் கருவூலமாகத் திகழ்கின்றன.

    பார்வை நூல்கள்:

    1. குறுந்தொகை மூலமும் உரையும் 2009, டாக்டர். உ.வே.சா நூல்நிலையம், சென்னை.
    2. சீவகசிந்தாமணி மூலமும் உரையும், நான்காம் பதிப்பு, 2015. சாரதா பதிப்பகம், சென்னை.
    3. நற்றிணை மூலமும் உரையும், 2015, ஔவை துரைசாமிப் பிள்ளை,
      சாரதா பதிப்பகம், சென்னை.

    *****

    கட்டுரையாளர் – பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர்,
    முனைவர் ஆறுச்சாமி.செ. – நெறியாளர்
    உதவிப் பேராசிரியர்
    தமிழ்த்துறை
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்
    ஈச்சநாரி, கோவை-21 

     

     

    Share