-கு. பூபதி 

பழங்காலம் முதலே மனிதன் சூழலியலைப் பற்றி அனுபவப்பூா்வமாக அதிக கவனம் கொண்டிருந்திருக்கிறான். நாகரிகம் வளராத காலந்தொட்டே சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும், உயிர் வாழ்வதற்கு இயற்கையின் ஆற்றலையும் அவனைச்சுற்றியுள்ள தாவரங்கள், விலங்குகள் போன்ற சூழ்நிலைகளைப் பற்றிய அறிவும் இன்றியமையாததாகக் காணப்பட்டது. மனித சமுதாயத்தின் நாகரிகக்களம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெரும் சிக்கல்களும், சிக்கல்களிருந்து கண்ட தீா்வுகளால் பெற்ற அறிவும் என படிமலா்ச்சி எய்த அது இலக்கியங்கள் வழியாகக் காலம்கடந்த ஆவணங்களாக பரிமாணம் கொண்டது, கொள்கின்றது. தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகைப் பாடல்கள் வழி  இயற்கை குறித்த பழந்தமிழா் பார்வையை அறிய முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

பல்லுயிர் ஓம்புதல்

ஓம்புதல் என்பது பாதுகாத்தல் என்பது மட்டுமின்றி, உயிர்நேயத்தோடு பிற உயிர்களைப் போற்றுதலாகும்.

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்து வந்து ளெலாம் தலை” என உயிர் ஓம்பலை நாகரிக சமூகத்தின் தலைமைக் குணமாக்கிக் காட்டுகிறது வள்ளுவம். 

தம்முயிர் போல நோக்கல்

ஆண்குரங்கு இறந்த கைம்மைத் துன்பத்தைப் போக்க வழியறியாப் பெண் குரங்கு உயிர்விடத் துணிந்த போதும், தந்தயையிழந்த தன்குட்டி தாயையும் இழந்தால் தவிக்குமே என மனிதா்போலவே குரங்குக்கும் பிரிவுத்துன்பமும், குட்டிகளுக்காக உயிர்வாழும் தியாக உணர்வும் உள்ளதைக் குறுந்தொகைப் பாடல் படம்பிடித்துக் காட்டுகிறது.

“கருங்கட்தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை யுய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சோ்த்தி
ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சார னாட  நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே”. (குறுந்-69)

மரமேறுதல் முதலான தம் தொழிலைக் கல்லாத தன் குட்டியைச் சுற்றத்திடம் ஒப்படைத்துவிட்டு ஓங்கிய மலைப்பகுதியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் என பிற உயிர்களும் மனிதா்போலவே உயிரும், வலியும், உணர்வும் கொண்டவை என அழுத்தமாகக் கூறுகிறது இப்பாடல்.

இயற்கை – இயைபுப் புலம்

தலைவன் கடந்து செல்லும் நிலம், தலைவி ஆற்றியிருக்கும் சூழல் போன்ற பல உணா்வுப் பின்னணிகள், இயற்கைக் காட்சிகளுடன் காட்டப்படும்போது  அவை உணா்வினைப் பிறா் புரிந்துகொள்ள ஏதுவாகவோ, உணா்ச்சிகளை மிகுத்துக் காட்டவோ இயைபுப்புலமாக அமைகின்றன.  மனிதரின் உணா்வுக்கு ஒத்துச்செல்லும் பின்புலமோ அதற்கு எதிராக அமைந்து உணா்வை மிகுவித்துக் காட்டும் முரண் பின்புலமாகவோ அமையலாம்.

காதலன் பிரிவால் தனிமை கொண்டு, நெஞ்சம் துன்பத்தால் ஓலமிடும் நெய்தல் தலைவிக்கு இணைப் பின்புலமாகிய அலையோசை எழுப்பும் இரவு நேரக்கடல் குறுந்தொகைப் பாடலில் காட்டப்படுகிறது.

“யாரணங் குற்றனை கடலே பூழியா்
சிறுதலை வெய்யைத் தோடுபரந் தன்ன
மீனார் குருகின் காலைப் பெருந்துறை
அவள்வீத் தாழைத் திரையலை
நள்ளென் கங்குலுங் கேட்குறின் குரலே” (குறுந்-163)

தாழையின் மலர் திரையால் அலைக்கப்படுவது தலைவன் உள்ளம் துன்பத்தால் அலைக்கழிக்கப்படுவதை உருக்காட்சியாக்குகிறது. தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாள் என எண்ணிய தோழியை நோக்கித் தலைவி கூற்றாய் அமைந்த பாடலில் இது போலவே துன்பத்தில் உழலும் தலைவியின் மனத்தை அலைகளால் மோதப்படும் தாழையின் வெண்பூ பின்புலமாக அமைக்கப்பட்டுள்ளது.

“பூவோடு புரையும் கண்ணும் வேயென

வாரல் வனப் பெய்திய தோளும் பிறையென
மதிமயக் குறூஉ நுதலு நன்றும்
நல்லமன வாழி தோழி யல்கலும்
தயங்குதிரை பொருத தாழை வெண்பூக்
குருகென மலரும் பெருந்துறை
விரிநீா்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே”. (குறுந்-226 )

தாமரை மலரை ஒத்த கண்களும், மூங்கிலைப்போன்ற திரண்ட அழகைப் பெற்ற தோள்களும், பிறை என்று கருதும்படி அறிவை மயங்கச் செய்யும் நெற்றியும் உடைய பெண்ணே! இரவுதோறும் இடைவிடாது அலைக்கின்ற கடலைகளால் மோதப்பட்ட தாழை மலா்களின் வெள்ளிய பூவானது கரைகள் தோறும் வெள்ளை நாரைகள் நிறைந்திருப்பதைப் போன்ற பரந்த இடமாகிய பெரியதுறைகள் கொண்டது அந்நிலை இப்பொழுது கழிந்தது அன்றோ!

“மானிட உணா்வுகளோடு இயற்கையின் எழிலை இயைபுறச் செய்தது பண்டைத் தமிழிலக்கிய மரபு” என்ற மு.வரதராசனாரின் கூற்று இங்கு எண்ணத்தக்கது.

மரத்தை நட்பாய் எண்ணல்

சூழல் கட்டமைப்பு எனப்படுவது ஒரு சிக்கலான ஒருமைப்பாடு என்றும், அதில் தாவரங்களும், விலங்கினங்களும் ஓரே வாழிடத்தில் கூட்டமாக ஒருமித்து வாழ்வதோடு மூலப்பொருட்களும் சக்தியும் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளப்படுகிறது என்று உட்பரி என்னும் அறிஞா் விளக்குகிறார்.

உயிர் வாழ்வதற்கும் உணவுச்சுழற்சிக்கும் தகவமைப்புக்கும் இத்தகைய ஒருமித்து வாழ்தல் இன்றியமையாததாயினும் உள்ளத்து உணா்வுகளையும் பிற உயிர்களுக்கும், தாவரங்களுக்கும்  ஏற்றிக் கருதுவது சங்கப்புலவா்களின் சூழல் பார்வையையும் உயிர்ம நேயத்தையும் காட்டுகிறது.

“நமக்கொன் றுரையா ராயினுந் தமக்கொன்
றின்னா விரவி னின்றுணை யாகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே. ” (குறுந்-266 )

எனத் தலைவன் வரைந்து கொள்ளாமல் பிரிந்த காலத்தில் தனக்குத் தூது அனுப்பாவிட்டாலும் இரவுக்குறி வந்தொழுகிய காலத்தில் நம்மோடு இனிய துணையாக இருந்த வேங்கை மரத்திற்காவது புள்வாய்த் தூது அனுப்பலாகாதோ என ஏங்கும் தலைவியின் நிலை சுட்டப்படுகிறது. வேங்கை மரத்தை அஃறிணைப் பொருள் என எண்ணாமல் தனக்கும் தலைவனுக்கும் இனிய துணையென உயிரோடு உணா்வும் ஏற்றிக் கூறுவதுடன் வேங்கைக்குத் தூதாகப் பறவையைத் தோ்தல் சூழலியையும் நேயமும் வெளிப்படக்காட்டுகிறது.

பல்லுயிர்க்கும் உலகுரிமை

“ஆா்னியாஸ் என்ற அறிஞா், மாந்தன் இயற்கை உருவாக்கிய உணவுத் தொடரில் ஒரு கண்ணிதான். பிற கண்ணிகளுக்கு ஏதாவது ஊறு ஏற்படுமானால் அது மாந்தர் குலத்தையும் பாதிக்கும் என்கிறார். உலகும் அதில் உள்ள உயிர்களுமான இந்தச் சூழல் மண்டலம் மாந்தனுக்கு வாழ்வதற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அந்த அளவிற்கு உரிமை மற்ற உயிர்களுக்கும் உண்டு”.என்கிறார்.

“கான மஞ்ஞை யறையீன் முட்டை
வெயிலோடு முசுவின் குருளை யுருட்டும்”  (குறுந்-38 )

என்ற பாடல் மயில் அடைகாத்தற்குரிய அதன் முட்டையை பாறையின் மேல் நின்று கொண்டு குரங்குக் குட்டியானது முட்டையை உருட்டி விளையாடுகிறது. அந்நிலைகண்ட மயிலின் உயிர் ஊசலாடுகிறது. இருதலைக் கொள்ளி எறும்பாக மயிலின் தவிப்பு உள்ளது, அந்நிலையே தலைவியின் நிலையும். தலைவன் பிரிவில் மைதீட்டப்பெற்ற கண்களினின்றும் பெருகும் நீரோடு இருக்கும் தலைவியின் நிலை அவளின்  மனவலிக்குப் பின்புலமாக மயிலின் அடைகாக்கப்படாத முட்டையைக் காட்டுவது, அம்முட்டை பொறிக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தைக் காட்டுவாகக் கொள்ளலாம். 

பெயா்நெறி

பறவைகளுக்கும், விலங்குகளுக்கும், மனிதா்களுக்கும் ஆண்பால், பெண்பால் மற்றும் இளமைப் பெயா்களை விளக்கித் தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கிறது. திணை ஒழுங்கு பேணி இயற்றும் பாடல்களில் அஃறிணை உயிர்களுக்கு மனிதா்களுக்கு ஒப்பாகப் பெயரிடுதல் இலக்கண வழூஉ  அல்லாமல் நேயம் போற்றும் உத்தியாகவே குறுந்தொகைப் பாடல்களில் அமைகின்றது.

“வங்காக் கடந்த செங்காற் பேடை
எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது
குழலிசைக் குரல குறும்பல வகவும்
குன்றுகெழு சிறுநெறி யரிய வென்னாது
மறப்பருங் காதலி யொழிய
இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே”. (குறுந்-151 )

என்ற பாடல் வழி, ஆண்வங்காப் பறவை நீங்கப் பெற்றமையால், தன்னுடைய கணவனாகிய ஆண்பறவையைக் காணாமல் தவிக்கும் பெண் பறவை எனக் காட்டப்படுகிறது. பறவையின் இணையைப் பாவையின் துணைவா்போலக் “கணவர்” என்ற சொல்லால் சுட்டிக்கூறுவது சிறுபறவையின் வலியும் தன்வலியை ஒத்ததே எனத் தலைவனின் உள்ளக்கிடக்கையைக் கூறுவதாக அமைகின்றது. மேலும்,

“நோற்றோர் மன்ற தோழி தண்ணெனத்
தூற்றுந் துவலைப் பனிக்கூடுந் திற்கட்
புலம்பயி ரருந்த வண்ண வேற்றோடு
நிலத்தூங் கணல வீங்குமுலைச் செருத்தல்.      (குறுந்-344 )

என்ற பாடலில் விலங்குகளையும் “அண்ணல்” எனப் போற்றும் இயற்கையியந்த வாழ்வு போற்றும் பழந்தமிழ்ப் பண்பினைக் காட்டுகிறது.

இயற்கைக்கும் உணா்ச்சிகள்

உலகம் மனிதா்க்கானது. மனிதா்களுக்காகவே பிற உயிர்கள் யாவும் படைக்கப்பட்டன என்ற மயக்கத்தில் திளைக்கும் சுயநலம் ஓங்கக் கற்பிக்கும் இன்றைய மனிதா்களுக்கு சூழலியலாளா் கூறும் உண்மை நோக்கத்தக்கது.

“இப்புவியில் வாழும் அனைத்து உயிர்களும் மதிப்பிற்குரியவை அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில் அம்மதிப்பு அமைய வேண்டும் என்பதில்லை. அவை அவற்றிற்காகவே மதிக்கப்பட வேண்டும். ஏனெனில் இப்புவியில் பல உயிர்களின் பங்களிப்பை மனிதா்கள் இன்னும் அறிந்து கொள்ளவே இல்லை”. என்ற திரு சஞ்சீவராஜ் அவா்களின் கருத்து இங்கு நினைவு கூரத்தக்கது.

உயிரற்ற பொருட்களுக்கும் உயிர் கொடுத்துப் பார்ப்பதுடன் உணா்ச்சியையும் ஏற்றிக் காட்டியுள்ளனா் சங்கப்புலவா்கள்.

“யாரணங் குற்றனை கடலே பூழியா்
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
மீன்ஆர் குறுகின் கானலம் பெருந்துறை
வெள்வீத் தாழை திரையலை
நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே”.

என்ற பாடல்வழி கடலுக்கும் உணர்ச்சியுண்டு எனக்கருதும் தலைவியின் கூற்றைச் சுட்டுகிறது. தலைவனைப் பிரிந்த மயக்கத்தால் இரவும் பகலும் உறங்காமல் துயருரும் தலைவி, ஓயாமல் அரற்றும் கடலை நோக்கி நீ யார் பிரிவு பற்றி வருந்துகிறாய் என தன் நிலையோடு ஒப்ப, கடலின் நிலைக்கும் கலங்குகிறாள் தலைவி.

 

முடிவுரை

சூழல்பார்வை, சங்கப்பாடல்களில் இடம்பெற்றுள்ள இயற்கைப் புனைவுகள் வழி அக்கால மாந்தரின் இயற்கையோடியைந்த வாழ்வு விளக்கப்பட்டுள்ளது. மனிதா்களைப் போல பிற உயிர்களுக்கும் வாழ இவ்வுலகு உரிமையுடையது என்னும் அறிவியல் உண்மையை உள்வாங்கிக் கொண்டு, அதற்கும் மேலாக மரங்களைத் தோழமையாகவும், விலங்குகளையும் மாந்தரோடு ஒப்ப நோக்கியமையும், உயிரற்ற பொருள்களை உயிருள்ள பொருள் போல எண்ணுவதோடு, அவற்றுக்கு உணா்ச்சிகளையும் வழங்கிக் காட்டப்பட்ட குறுந்தொகைப் பாடல்கள் இயற்கை போற்றும் பாடல்களாகவும் திகழ்கின்றன.

*****

பயன்பட்ட நூற்கள்

1. சங்க இலக்கியக் கட்டுரைகள், தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு, எப்ரல் 1984. பக்16.
2. உயிர்ம நேயம், பாமயன், தமிழினி ஜீலை 2008, பக்.66. M.Woodbury (1954).
3.Principles of General Ecology, MC Grew Hill Book Co, page.503.
4. P. T. Sanjeeva Raj, Beware the loss of biodiversity, The Hindu, Sep 23, 2012. page.10

*****

கட்டுரையாளர் – பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர்,
முனைவர் ஆறுச்சாமி.செ. – நெறியாளர்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், ஈச்சநாரி, கோவை-21.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *