குறுந்தொகை – பாடுபொருள் நுவல்தலில் பறவைகள்
-கு. பூபதி
சங்க இலக்கியங்கள் தொன்மையால் பெருமை வாய்ந்தவை. நுண்ணிய கட்டமைப்பு விதிகளுக்கு இயைந்த வடிவுடையவை. முதற்பொருள் நிலமும், பொழுதுமாக அமைவதாலும் கருப்பொருளாக தெய்வம் தொடங்கி நிலம்சார் மக்கள், நிலையுயிர்களான தாவரங்கள் புள் உள்ளிட்ட இயங்குயிர்கள், இயற்கை உழுத செயற்கை உருவாக்கங்கள் என இயற்கைக்கு மிகுதியும் இடமளிப்பவை. எனவே உரிப்பொருள் உணர்வுகளைப்பாட இயற்கையை இயல்பாகவே துணைக்கழைத்துக் கொண்டனர் சங்கப்புலவர்கள்.
தலைவன், தலைவி, தோழி கூற்றில் ஆளப்படும் உவமைகளுக்குக் கூட நுண்ணிய விதிகளும், தெற்றெனக்காட்டும் எல்லைகளையும் இலக்கணமாகக் கொண்டவை சங்கத்தமிழ் இலக்கியங்கள். தலைவி தான் கண்டவற்றையே உவமையாக்கவேண்டும் எனத் தொல்காப்பியம் விதிக்கிறது. இக்காரணங்களால் பறவைகள், விலங்குகள், மலர்கள், செடி, கொடி, மரங்கள் என அவ்வுணர்வைக் காட்டவும், அறிவு கொளுத்தவும் பயின்று வரும் உவமைகள் பெருமையுள்ளன. அவற்றில் குறுந்தொகைப் பாடுபொருளில் பயின்றுவரும் பறவைகள் குறித்த செய்திகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
பறவைகளும், திணைகளும்
பறவைகள் தம் இயல்பான வாழிடங்களுக்கேற்ற நிலங்களில் காணப்படுதல், இயல்பான வாழிடங்கள் அல்லாத இடங்களில் காணப்படுதல், அல்லது பறவைகளை இன்னதென விளங்காமல் உரைகாரர்களால் நேர்ந்த மயக்கம் ஒன்றுக்கு மேற்பட்ட நிலங்களில் பயின்று வருதல் எனப் பொதுவகைமையிற் கொண்டுவரவியலும்.
பறவைச்சகுனம்
பறவைகளைச் சகுனத்தின் குறியீடாகக் கொள்ளுதல் தற்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காகம் கரைதல் விருந்தினர் வருதலையும் சகுனமாகக் கொண்டுள்ளனர். இச்சகுனம் பார்த்தல் சங்ககாலந்தொட்டே கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. தலைவன் வரவை எதிர்நோக்கி ஆற்றியிருக்கும் போதும், நல்வினையைத் துவங்கும் போதும் நல்ல நிமித்தம் பார்த்தலும் நற்சொல் கேட்டலும் நற்குறிகளாகக் கொள்வது நெடிய பண்பாட்டுக் குறியீடுகள். புள்ளூர்தல் என்பது பறவைகளை நன்னிமித்தமாகக் கொள்தல், விரிச்சிகேட்டல் என்பது நல்ல சொல் கேட்டல் இதை,
‘புள்ளும் ஓராம் விரிச்சியுமில்லாம்
உள்ளலும் உள்ளாம் அன்றே’ (குறு : 218) என்பதிலிருந்தும்,
‘வேதின வெரிநி னோதி முதுபோத்
தாறுசென் மாக்கள் புட்கொளப் பொருந்தும்’ என்பதிலிருந்தும் அறியலாம்.
உட்பிரிவுகள்
பொதுவாகப் பார்த்த பறவைகளைப் பாடல்களில் உவமையாக்குவது என்பதைக் கடந்து கூர்ந்து கவனித்து, நுணுக்கமான ஒப்புமைகளைக் கைக்கொள்வது, அப்பறவைகள் இணையோடு சேர்ந்து வாழ்தல், பிரிந்து செல்லும்போது வருந்துதல், கருவுற்ற பேடைக்குக் கூடமைத்துக் கொடுத்தல் ஆகிய நுட்பமான செய்திகள், பல சங்கப் புலவர்களை பறவை ஆர்வலராகக் காட்டும். ஒரு வகைப் பறவையினத்தினைச் சாந்து நிறத்தால், வரவால், வாழிடத்தால், உணவு முறையால் வேறுபட்ட அவற்றின் உட்பிரிவுகளைக் கூறும் திறம் மூலம் பறவை ஆராய்ச்சியாளரின் நோக்கு அப்புலவர்களுக்கு அமைந்திருந்ததைக் குறிக்கிறது. உதாரணமாக கழுகுகளில் இருவகை, ஆந்தையில் ஆறு வகை, காக்கையில் இருவகை, வல்லூறு மூவகை, புறாக்கள், நீர்ப்பறவைகளின் வகைகள் போன்றவை சங்கப்பாடல்களில் காணக் கிடைக்கின்றன.
கணந்துள்
குறிஞ்சி திரிந்த பாலை நிலத்தில் வழிப்போக்கர்களை ஆறலை கள்வரிடம் அகப்படாமல் நீங்கிச் செல்ல கணந்துள் பறவை எச்சரிக்கும். இச்செய்தி,
“நெடுங்காற் கணந்து ளாளறி வுறீஇ
ஆறுசெல் வம்பலா் படைதலை பெயர்க்கும்” (குறு: 350) என்ற பாடலில் கூறப்படுகிறது.
“கம்புட் கோழியும் கனைகுர னாரையுஞ்
செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்
கானக் கோழியும்நீா்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தா்முனையிடம் போலப்
பல்வேறு குழூக் குரல் பரந்த வோதையும்” (சில -10-114-117)
என்ற சிலம்பு, புகார்க்காண்டம், நாடுகாண் காதைப் பாடல் உரையில் புள் என்பதைக் கணந்துள் எனக் குறிப்பிட்ட அடியார்க்கு நல்லார், கானக் கோழி- காட்டுக்கோழி என்பாருமுளா். நிறம்- தன்மை, ஊரல் – நீா்மேலூர்வது ஆதலின் ஆகுபெயா் என்பர். காவிரியாற்றங்கரையில் நீா்த்துறைப் பறவைகளைப் பட்டியலிடும் போது கணந்துள் பறவையும் சேர்த்துக் குறிப்பிடுவது ஆய்வுக்குட்பட்டது.
கற்பாங்கான வறட்சியான வாழிடத்தைக் கொண்ட கணந்துள் பறவை ஆள் வருகையை எச்சரித்துக் கூறும் செய்தி நற்றிணைப் பாடலிலும் உறுதிப்படுத்தப்படுகிறது.
“பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
நெடுங்கால் கணந்துள் புலம்புகொள் தௌ்விளி
சுரஞ்சொல் கோடியர் கதுமென இசைக்கும்” (நற்: 212)
என நற்றிணைப் பாடலுக்கு வரைந்த உரையில் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயா் “ இது நீா்வாழ் பறவை என்று கூறப்படுதலின், எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்” (தொல். பொரு.19) என்றபடி பாலைக்கண் வந்ததெனெக்கொள்க எனத் திணைமயக்கமாகக் கொள்கிறார்.
கற்பாங்கான வறண்ட பகுதியில் வாழும் கணந்துள் நீா்ப்பறவை எனக் கொள்ளப்பட்டமை ஆய்வுக்குரியதாகிறது.
ஆள் வருகையைக் காட்டும் கணந்துள் ‘ஆள்காட்டிக் குருவி’ என்பது மருவி தற்காலத்தில் ஆக்காட்டுக் குருவி’ என கிராமப்புறங்களில் அடையாளப்படுத்தப்படுகிறது.
மஞ்சள் மூக்கையுடைய கணந்துள் (Vanellus malabaricus) கற்பாங்கான வாழிடத்தையுடையது என்றும் அதேபோல் உருவம் கொண்ட சிவப்பு மூக்கையுடைய பறவையே (Venelius indicus) குளம் குட்டை ஆறு பொன்ற நீா்த்துறைகளில் வாழ்தல் என்பதையும் (en. Wikipedia.org) இணையதளம் வழி அறியலாம். குறுந்தொகைப் பாடல்களில் சுட்டப்படும் கணந்துள் மஞ்சள் மூக்கையுடையது என தெளியலாம்.
கொக்கு
“மாரியாம்ப லன்ன கொக்கின்
பார்வ லஞ்சிய பருவர லீர்நெண்டு” (குறு: 117)
என வடிவத்திலும், வண்ணத்திலும் பொருத்தமாகக் கொக்கின் கூரும் ஆம்பல் முகையும் ஒப்புமைப் படுத்தப்படுகிறது. மாரிக்காலத்து மழையில் நனைந்து கூம்பியிருக்கும் கொக்கை ‘மாரிக்கொக்கின் கூரல்’ என நற்றிணை (100) சுட்டுகிறது.
கொக்கி போன்ற வடிவை உடையதால் கொக்கு என்ற காரணப்பெயர் கொண்ட இப்பறவை, உரிய காலம் வரை பொறுமையாகக் காத்திருந்து வினையாற்றுவதற்கு உவமையாக மூதுரையில் சுட்டப்படுகிறது.
கூகை
உவமையால் பெயர்பெற்ற புலவர்கள் வாரிசையில் கூகையை உவமையாக்கி,
“கூகைக் கோழியானாத் தாழிய பெருங்காடு” (புற: 364)
என்ற பாடல் எழுதிய புலவர் கூகைக் கோழியார் எனக் குறிப்பிடப்படுகிறார்.
“குன்றக் கூகைக் குழற்று முன்றிற்
பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும்” (குறு: 153) என்ற கபிலர் பாடல் வழி குன்றில் வாழ்வதால் குன்றக்கூகை எனச் சுட்டப்படுவதை அறியலாம். கோழியிலிருந்து கூவ வேண்டிய இடத்துக் கூகை கூவியதால் ‘கூகைக் கோழி’ எனக் கூறப்பட்டதாக,
“கூகைக் கோழி வாகைப் பறந்தலை” (குறு: 393) என்ற பரணர் பாடலுக்கு உ.வே.சா உரை வழங்குவார். கூகை கூவுதலை ‘குழறுதல்’ என்பர். பொருளற்ற ஒலியை எழுப்புவது குழறல் எனப்படும்.
சங்கப் பாடல்களில் ஆந்தை என்ற பொதுவகையில் கூகை, கூகுரால், குடிஞை, ஊமன், ஆண்டலை ஆகியவற்றைக் குறிக்கிறது. புறநானூறு, அகநானூறு பாடல்களில் ‘ஆந்தை’ என்ற சொல் பயன்படுத்தப்படாமை மேலாய்வுக்குரியது.
கூகைக் குழறலுக்கு மகளிர் அஞ்சும் செய்தி நற்றிணைப் (218) பாடலில் கூறப்பட்டுள்ளது.
காக்கை
நிமித்தம், பராய்க்கடன் குறித்த செய்திகளில் காக்கை மிகுதியும் புலவர்களால் பயன்படுத்தப்பட்டதை பல அகப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.
“விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே” (குறு: 210)
என்ற குறுந்தொகைப் பாடலை இயற்றிய புலவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்ற உவமை வழி அடையால் அறியப்படுகிறார்,
பலியுண்ணும் காக்கையே சங்கப் பாடல்களில் சுட்டப்படுகிறது.
“உகுபலி அருந்திய தொகுகருங் காக்கை” (நற்: 343)
எனப் பலியுண்ணும் காக்கையை நற்றிணை காட்டுகிறது. காக்கை கரைதல் தலைவன் வரவுக்கு நிமித்தமென்றும், அவ்வாறு கரைந்தால் இன்னது தருவேன் எனக் கூறியவாறு இடும் உணவை பலியென்றும் கூறுதல் மரபு.
தமிழ்நாட்டுக் காக்கைகள், ஊர்க்காக்கை (Corras Splendens), அண்டங் காக்கை (Corras Macrorhynchos) என இருவகையானவை. உடல் கருப்பாகவும், கழுத்து சாம்பல் நிறத்திலும் உள்ளவை ஊர்க் காக்கைகள். உடல் முழுவதும் அடர்கருப்பாக உள்ளவை அண்டங் காக்கைகள்.
சங்கப் பாடல்களில் கூறப்படுபவை அண்டங் காக்கைகள் என்பது ‘கருங்காக்கை’ என்ற அடைவழிப் பெறப்படுகிறது.
“கம்புட் கோழியும் கனைகுர னாரையுஞ்
செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்
கானக் கோழியும்நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்” என்ற சிலப்பதிகாரப் பாடலில் கூறப்படும் ‘நீர்நிறக் காக்கை’ என்பது காக்கையினத்தைச் சார்ந்தது அல்ல. அது ஒரு நீர்ப்பறவை. பெயரைத் தவிர மற்றவற்றில் காக்கையோடு ஒப்புமையற்றது.
கிளி
மொச்சை மலரை கிளிமூக்கிற்கு உவமையாக்குகிறது
“பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக்
கிளிவா யொப்பி னொளிவிடு பன்மலர்” (குறு: 240) என்ற குறுந்தொகைப் பாடல்.
“செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்” என தொல்-மரபியல் காட்டும். கிளி வாயில் உள்ள வேப்பம்பழத்தை கொல்லன் கையில் உள்ள பொற்காசினை ஒப்பக் காட்டுகிறது பின்வரும் அள்ளளுர் நன்முல்லாயார்பாடல்.
“உள்ளார்கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்
புதுநா ணுழைப்பா னுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல வொருகா சேய்க்கும்” (குறு: 67)
‘கிளிமூக்கு’ எனும் சொல் இன்றும் கிளிமூக்கு மாங்காயில் தொடங்கி, பட்டுச்சேலையில் இடம்பெறும் கிளிமூக்குப் பூவடிவம் வரையில் பெருவழக்காக உள்ளது. காலத்தினூடே பயணிக்கும் வீரியமிக்க உவமையாக விளங்குவதை உறுதிப்படுத்துகிறது.
எழால்
பிற பறவைகளை அடித்துக் கொன்று தின்னும் எழால் எனும் பறவை வழிநடை ஆபத்துக்குக் குறியீடாக விளங்குகிறது.
“எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது” (குறு: 151)
“குடுமி யெழாலொடு கொண்டு கிழக் கிழிய” (பதி: 36-10)
என எழால் சங்கப் பாடல்களில் காட்டப்படுகிறது.
குறும்பூழ்
தினைத்தாளன்ன கால்களையுடைய குருகு முதல் ‘பூரிக்கா லன்ன செங்கா லுழந்தது’ வரையில் சங்கப் பாடல்களில் சிறு பறவைகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.
‘நிலங்கு குறும்பூழ் என்பன காடை’ என திவாகர நிகண்டு கூறுகிறது.
“பாரீஇ வித்திய வேனற்
குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே” (குறு: 72)
பாடலில் திணைக் குருவி போல, சிட்டுக் குருவிகள், முனியாக் குருவிகள் போன்ற சிறு குருவிகள் குறுந்தொகைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன.
அன்றில்
பிரிவுத் துன்பம் சிறுபொழுதேயாயினும் தாளாமல் தவிக்கும் தலைவிக்கு அன்றில் பறவைகளை உவமையாக்கி,
“மனைசேர்பெண்ணை மடிவாய் அன்றில்
துணைஒன்று பிரியினும் துஞ்சா காண்” (அக: 50)
என அகநானூறு கூறும். இதுதான் அன்றில் என அடையாளம் காட்டுகின்றன குறுந்தொகைப் பாடல்கள்.
“நெருப்பி னன்ன செந்தலை யன்றில்” (குறு: 160)
“கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல்” (குறு:301)
செந்தலையும், கருங்காலும் கொண்ட அன்றில் பறவைகள் பகலில் வெளியே செல்லாது பனைமரக் கூட்டில் தங்கி, இரவில் இரை தேடச் செல்லும் இயல்புடையவை. ‘பனங்கிளி’ என்று பெருவழக்காக அன்றில் அறியப்படுகிறது.
தொகுப்புரை
தான் கண்டவற்றையே உவமையாக்க வேண்டும் என்பதால் இயல்பான தோற்றத்தில் பறவைகள் தலைவி கூற்றில் பாடுபொருளாக விளங்குகின்றன. எனவே உயர்வு நவிற்சியும், மிகைப்படுத்தப்பட்ட முருகியலும் இன்றி உள்ளது உள்ளவாறே பறவைகளின் வாழிடம், தோற்றம், நுட்பமான செயல்கள், உணவுமுறை ஆகியவற்றைப் பதிவு செய்துள்ள குறுந்தொகைப் பாடல்கள் இலக்கிய இன்பம் மட்டுமின்றி, அறிவியல் ஆய்வாளர்களுக்குக் கூடுதல் செய்திகளைக் கூறுவதாகவும் அமைந்துள்ளன.
பார்வை நூல்கள்
1. குறுந்தொகை மூலமும் உரையும் (2009), டாக்டர் உ.வே.சா நூல் நிலையம், சென்னை.
2. நற்றிணை மூலமும் உரையும், (2016), ஔவை துரைசாமிப் பிள்ளை, சாரதா பதிப்பகம், சென்னை.
*****
கட்டுரையாசிரியர் – பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளார், தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், ஈச்சநாரி, கோவை-21.
முனைவர் ஆறுச்சாமி.செ. நெறியாளர், உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், ஈச்சநாரி, கோவை-21.