Month: June 2018

  • “தமிழ்நாடு” பெயர்சூட்டல் 50 ஆவது ஆண்டு பொன்விழாக் கொண்டாட்டம்

    சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாட்டிற்குத் “தமிழ்நாடு” என்று அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்டு, இந்த ஆண்டோடு 50 ஆண்டுகள் ஆகின்றது. அதற்கான பொன்விழாக் கொண்டாட்டத்தில் இருக்கும் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறை நடத்திய மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை/பேச்சு/கவிதைப் போட்டிகள் 29.06.2018 காலை 9.00 மணி முதல் தொடங்கி சென்னை இராணி மேரி கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த 80க்கும் மெற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தம் திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பரிசுகள் வீதம் ஒண்பது மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாயினர். கவிதைப் போட்டிக்குத் “தமிழின் சக்தி” என்றும், கட்டுரைப் போட்டிக்கு “மொழிப்பற்றெங்கே விழிப்புற்றெழுக” என்றும் தலைப்புகள் கொடுக்கப்பட்டன. பேச்சுப் போட்டிக்கு தமிழ் மொழி வளர்ச்சி குறித்து விதவிதமான தலைப்புகள் அளிக்கப்பட்டன. இராணி மேரி கல்லூரியின் தமிழ்த்துறையுடன் தமிழக தமிழ்வளர்ச்சித் துறையின் சென்னை பிரிவும் சேர்ந்து நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியது. மதியம் 2.00 மணி அளவில் நிறைவு விழாவாக பங்களிப்புச் சான்றிதழ் வழங்கப்பெற்று தமிழ்வளர்ச்சித் துறையின் இயக்குநர் திரு. கோ.விசயராகவன் அவர்கள் பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கியும், பரிசு பெற்ற மாணவர்களை வாழ்த்தியும் சிறப்புரை ஆற்றினார். இதே போட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரேநாளில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. 

    படம்: பரிசுபெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகியிருக்கும் மாணவர்களுடன் தமிழ்வளர்ச்சித் துறையின் இயக்குநர். துணை இயக்குநர், சிறப்பு இயக்குநர் மற்றும் இராணி மேரி கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர்.

    Share
  • எழுத்து – 7

    வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 28-6-2018

    புலன்நுகர் எழுத்தெனும் விண்மீன் விதை
    பலன் கருதி விழுந்து முளைத்து
    நிலவாகி ஒளிரும்! எனதென்று மொழிந்தாலும்
    வலங்கொள்ளுதல் உலகிற்காகவே என்பதுண்மை!
    பலமுடை எழுத்துமொரு தீவிரவாதமே! துணிவுச்
    சாராயம் அருந்தியவன் அச்சம் தெரியாமல்
    ஊராண்மை செய்வான்! வாள் வீச்சாகவும்
    தாராட்டும் தென்றலாகவுமவன்; தூரிகை சாமரமாகும்

    பெருந்தெருவோ ஒற்றையடிப்பாதையோ எதுவானாலும் தானே
    உருவாக்கி எழுத்துலா அமைப்பான். மண்ணிலடித்து
    அரூபமாய்ப் பேரலை பிரமாணமிடுதல் போல
    உருவம் தருகிறது மீண்டும் மீண்டுமெழுத்து
    முருகு! மூழ்கும் பரிமாணமல்ல எழுத்து!
    வண்ணத்திப் பூச்சிச் சிதறல், பூவனம்,
    கண்ணிறையும் பெருமரத் தோப்பு, தவழுமலை
    எண்ணிறைந்தவை எழுத்துறங்கும் இரகசியப் பொறிகள்.

    சிற்பக்காடு, மூங்கில் வலயம், மைமல்,
    அற்புதம் சமைக்கும் மழை வானம்,
    பொற்புடை சோலை, மலர் பந்தல்
    உற்சாகம் உற்பத்தியாக்கும் ஆனந்தத் தென்றல்,
    அற்றைப் பொழுது மழைத்தூறலின்
    சொக்கும் மண்ணின் மணம், கடையிடும்
    பூக்கள் அனைத்தும் இதழ்கள் விரித்து
    பாக்கள் உற்பத்திக்கும் ஊற்றுப் புதையல்.

    தூக்கம் விழித்து இயற்கையில் மிதந்து
    பா கட்ட வைக்கும் மனமெனும்
    மொட்டை விரிக்கும் எழுத்தாய் விழுந்திட
    நித்திரை மரமேன் ஏற வேண்டும்!
    பத்துவித பணிகளேன் செய்ய வேண்டும்!
    எழுத்தென எழுதிக் கொண்டேயிருந்தால் என்ன!
    தமிழ் மேகங்கள் பொங்கும் மனவானம்
    வெறுமையின்றி வார்த்தைகள் வெடி கொளுத்தலாமே!

     

    Share
  • பழந்தமிழக வரலாறு – 9

    கனியன்பாலன்

    அ.மாமூலனாரும் செருப்பாழிப்போரும் செங்குட்டுவனும்

         .

           தென்னிந்தியக் கல்வெட்டுகள்(South Indian Inscription) என்கிற நூல்  தொகுதிகளை மிகக் கவனமாக தொகுத்தளித்த புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் உல்ட்ச்(Hultzsch)  என்பவர், முதலாம் கயவாகு மன்னனும், சேரன் செங்குட்டுவனும் ஒரே காலத்தவர் என்கிற கருத்தை ஏற்கவில்லை(1). மேலும் மகாவம்சம் குறிப்பிடும் கயவாகுவின் காலம், அந்தக் கயவாகு சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்காக நடத்திய விழாவில் கலந்து கொண்டான் என்கிற செய்தி ஆகிய இரண்டுமே அடிப்படை வரலாற்றுச் சான்றுகள் அற்றவை. அவை வரலாற்றுக்கு பொருந்தாதவை. ஆகவே, அவைகளைக் கொண்டு தமிழக வரலாற்றின் காலங்களைக் கணிப்பது முறையான காலக்கணிப்பாக இருக்காது. ஆகவே இந்தியாவின் மேல் அலெக்சாந்தர் படையெடுப்பு நடத்திய காலத்தையும், மாமூலனார் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மகதத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையும், அதன்பின் தமிழகத்தின்மேல் மேற்கொள்ளப்பட்ட மௌரியப் படையெடுப்புக்காலத்தையும், அசோகன் கல்வெட்டையும் கணக்கில்கொண்டு, நமது தமிழக வரலாற்றுக்கான காலம் கணிக்கப்பட்டு உறுதிப்படுத்தப் படவேண்டும்.  இவைகளின் மூலம் மட்டுமே  நமது தமிழக வரலாறு உலக வரலாற்றுக் காலத்தோடு இணைக்கப்பட்டு, ஒரு முறையான, நிலையான, உறுதியான காலவரையறையைக் கொண்ட வரலாறாக ஆகும்.

    பழந்தமிழக வரலாற்றில் அசோகன் கல்வெட்டும் சம்பைக் கல்வெட்டும்:

           அதியமான் திருக்கோவிலூர்ப் போரில் மலையமான் காரியை வென்ற போது, பரணர் அதியமானைப் பாடியுள்ளதாக ஔவையார் குறிப்பிடுகிறார். ஆகவே, பரணர் அதியமான் காலத்தவர் ஆகிறார். பரணர் சேரன் செங்குட்டுவனை, 5ஆம் பதிற்றுப்பத்திலும், புறம்-212, 369;  அகம்-376 ஆகிய மூன்று பாடல்களிலும் பாடியுள்ளார். ஆகவே, சேரன் செங்குட்டுவன் பரணர் காலத்தவனாகிறான். இவைகளின் காரணமாக சேரன் செங்குட்டுவன், அதியமான், பரணர் ஆகியோர் சம காலத்தவர் ஆகின்றனர்.

         அதியமானின் சம்பைக் கல்வெட்டில் உள்ள “சதியபுதோ” என்கிற சொல்லும் அசோகர் கல்வெட்டில் உள்ள “சதியபுதோ” என்கிற சொல்லும் ஒரே மாதிரி எழுதப்பட்டு, இரண்டும் அதியமான்களை அவர்களது பரம்பரையைத் தான் குறிப்பிடுகிறது. பண்டைய எழுத்தியல்- கல்வெட்டியல்(palaeography – orthography) படி, அசோகரின் கல்வெட்டில் இருக்கும் எழுத்துக்கள் போன்றே சம்பை கல்வெட்டிலும் இருப்பது என்பது இரண்டும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதி செய்கிறது.  அசோகர் கல்வெட்டின் காலம் கி.மு.256 ஆகும். ஆகவே சம்பைக் கல்வெட்டின் காலம் தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன் அவர்களின் கருத்துப்படி கி.மு. 270-230 ஆகும். அதாவது அசோகன் கல்வெட்டுக்குச் சில வருடங்கள் முன்பின் என்பதே அதன் கருத்தாகும்(2). நாம் அதனை கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனலாம். அசோகன் கல்வெட்டு, சம்பை கல்வெட்டு ஆகியவற்றின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதால் சம்பைக் கல்வெட்டை வெட்டிய அதியமான், அதியமானைப்பாடிய பரணர், பரணர் பாடிய சேரன் செங்குட்டுவன் ஆகிய மூவரின் காலமும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என உறுதிப்படுத்தலாம்.

         ‘பழந்தமிழ்ச்சமுதாயமும் வரலாறும்’ என்ற எனது நூலில் அசோகன் கல்வெட்டு, சம்பை கல்வெட்டு ஆகியன போக, புகளூர் கல்வெட்டு; மாமூலனாரின் நந்தர்கள், மௌரியர்கள், சேர, சோழ வேந்தர்கள் குறித்த பாடல்கள்; அதியமான், சேரன் செங்குட்டுவன் குறித்த பரணரின் பாடல்கள்; பாலைபாடிய பெருங்கடுங்கோ, மாமூலனார் ஆகியவர்களின் நன்னன் குறித்த பாடல்கள்; தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள்; மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள்; ஆகியவைகளைக் கொண்டு செங்குட்டுவனின் காலம் கி. மு. 3ஆம் நூற்றாண்டு என்பது பல தளங்களில், பல கோணங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது(3).

    மகாவம்ச நூலும் செங்குட்டுவனின் காலமும்:

         வில்கெம் கெய்கர் அவர்களின் மகாவம்ச நூலின்படி புத்தர் இறந்தபின் 248 ஆண்டுகள் கழித்து அசோகர் முடிசூட்டிக்கொண்டார்(4). மகாவம்ச நூலின் ஆண்டுப்பட்டியல் கி.மு. 483இல் இருந்து தொடங்குகிறது. ஆனால் கி.மு. 483 என்பது எந்தவிதத்தில் இந்திய அல்லது உலக வரலாற்றுக் காலவரையரையோடு இணைக்கப்பட்டது என்பதற்கான அடிப்படைச் சான்றுகள் எதுவும் அந்த நூலில் தரப்படவில்லை. அந்த நூல் தந்துள்ள மன்னர்களுடைய ஆட்சி ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டுதான் கயவாகுவின் காலம் சொல்லப்பட்டுள்ளது. கி.மு. 483இல் தொடங்கும் பட்டியல் கி.பி. 352இல் முடிகிறது. அநுராதபுரத்தில் கிட்டத்தட்ட சுமார் 835 ஆண்டுகள் ஆட்சி செய்த 61 மன்னர்களை அது குறிப்பிடுகிறது. இந்த ஆண்டுகள் ஆரம்பம் முதல் இடையில் கூட உலக, இந்திய காலவரையரைகளோடு இணைக்கப்படவில்லை-(5).

         புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் வின்சுடன் சுமித் அவர்கள் கி.மு. 483 முதல் கி.பி. 124 வரையான, 607 வருடகால மகாவம்ச நூலின் வரலாற்றை,  அதன் ஆண்டுகளை முழுமையாக நிராகரித்துள்ளார்.  தேவநாம்பியதீச என்கிற மன்னன் சார்ந்த 10 அத்தியாயங்களை “அபத்தங்களால் முடையப்பட்ட வேலைப்பாடு” என்கிறார் அவர்-(6). அதனால்தான் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் கூல்ட்ச்(Hultzsch) அவர்கள் சேரன் செங்குட்டுவன், கயவாகுவின் காலத்தைச் சேர்ந்தவன் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நூல், எந்த வெளிநாடும் செல்லாத புத்தர் மூன்றுமுறை இலங்கை வந்ததாகக் கதை சொல்லுகிறது. தனது 99 சகோதரர்களைக்கொன்றபின் அசோகர் ஆட்சிக்கு வந்தார் என்கிறது-(7). புத்தசமயத்துக்கு மாறுவதற்கு முன் அசோகர் தீயவராக, கொடூரமானவராக இருந்தார் என அந்நூல் சொல்வதற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை என்கிறார் வின்சுடன் சுமித்(8).

         பல அறிஞர்களின் கருத்துப்படி அசோகர் இலங்கை பற்றித் தனது கல்வெட்டில் எதுவும் சொல்லவில்லை. அசோகருக்கு மகிந்த, சங்கமித்ர என்கிற மகனோ, மகளோ இருக்கவில்லை. அவர்கள் இலங்கை போகவும் இல்லை. மகிந்த அவருடைய தம்பி ஆவார். அவர்தான்  தமிழகம் வந்தார். இலங்கை போனார். தமிழ்நாட்டில் இருந்துதான் புத்தமத நிறுவனங்கள் இலங்கைக்குப் பரவின. இவை வின்சுடன் சுமித் அவர்கள் தனது அசோகர் என்கிற நூலில் தரும் தரவுகளாகும்-(9). மகாவம்ச நூல் என்பது பௌத்தமத நம்பிக்கையாளர்கள் ஓதுவதற்கும், நினைவில் வைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு இன்பமும், பரவசமும் ஊட்டவும் எழுதப்பட்டது என்கிறார் அதனை கி.பி. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதிய ‘மகாநாம’ என்கிற புத்த பிக்கு. அந்நூல் புத்த மடாலங்களின் அத்தகதா கதைகளையும், புத்தமத மடாலயங்களுக்கு உதவிய மன்னர்கள், அவர்களின் உதவிகள் பற்றிய தரவுகள்  முதலியனவற்றையும் கொண்ட  கி.பி. 3ஆம் நூற்றாண்டு தீபவம்ச நூலைப் புதுப்பித்து எழுதப்பட்டதாகும்-(10).

             ஆகவே எந்தவித அடிப்படைச் சான்றுகளும் இல்லாத, கி.பி. 6ஆம் நூற்றாண்டு வாக்கில், மதக் காரணங்களுக்காக எழுதப்பட்ட, இலங்கையின் பௌத்தமத நூலான மகாவம்சம், இடைச் செருகல்கள் நிறைந்த சிலப்பதிகாரக் காப்பியப் பதிகம் ஆகியவைகளைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட, சேரன் செங்குட்டுவனின்காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பதைவிட, சங்க இலக்கியங்கள் தரும் அடிப்படைச் சான்றுகளைக் கொண்டும் உலக வரலாற்றுக்காலத்தோடு இணைக்கப்பட்ட, அசோகன் கல்வெட்டு, புகளூர் கல்வெட்டு, சம்பைக் கல்வெட்டு, தலைவடிவப்பெருவழுதி நாணயங்கள், மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள் போன்றவைகளின் காலத்தைக் கொண்டும் கணிக்கப்பட்ட சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதே பல கோணங்களிலும் பொருந்திப்போகிறது. இரண்டு காலங்களுக்கும் இடையே கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது என்பதையும், சங்க இலக்கியம் இயற்கையானது, நம்பத்தகுந்தது என்பதையும், பதிற்றுப்பத்து கூறும் சேர வேந்தர்களும், பிற சங்க இலக்கியங்கள் கூறும் பல தமிழக வேந்தர்களும் வரலாற்றில் இருந்தவர்கள் என்பதையும் அகழாய்வுகளும், கல்வெட்டுகளும், நாணயங்களும் இன்ன பிற தரவுகளும் உறுதி செய்துள்ளன என்பதையும் கருத்தில்கொண்டு சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதே முறையானதாகும்.

    மாமூலனாரும் செருப்பாழிப்போரும்:

         சங்ககாலப் புலவர்களும், பாணர்களும் வேந்தன் இருக்குமிடம் சென்று, அவனை நேரடியாகப் புகழ்ந்து பாடி பரிசுகள் பெற்று வருவதே சங்ககால வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதனால் தங்கள் காலகட்டத்துக்கு முந்தைய புரவலர்களைப் பாடும் பழக்கம் அவர்களிடத்தில் இருக்கவில்லை. புறப் பாடல்களில் மட்டுமின்றி அகப்பாடல்களிலும் இதே நிலை தான் இருந்து வந்துள்ளது. முந்தைய காலகட்டப் புரவலர்களை மட்டுமல்ல, முந்தைய காலகட்ட நிகழ்வுகளையும் அவர்கள் பெரும்பாலும் பாடுவதில்லை. புரவலர்களை நேரடியாக அவர்களின் இடத்திற்கே சென்று சந்தித்து அவர்களிடம் நேரடியாகத் தங்கள் புகழ்ந்துரைகளைப் பாடல்களாகப் பாடிப் பரிசில்பெறுவது என்பது பாணர், புலவர்களின் மிகப் பழமையான, தொன்று தொட்டு இருந்து வருகிற ஒரு மரபாகும். அதனால் தங்கள் காலத்துக்கு  முந்தையவர்களை, இறந்து மறைந்து போன பழைய தலைமுறைப் புரவலர்களை அல்லது தலைவர்களைப் பாடும் பழக்கம் என்பது சங்ககாலப் புலவர்களிடம் இருக்கவில்லை.

            சான்றாகக் கபிலர் பாரியிடமும், ஔவையார் அதியமானிடமும், பரணர் செங்குட்டுவனிடமும், அரிசில்கிழார் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடமும், நக்கீரர் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனிடமும் நேரடியாகச் சென்று தான் பாடிப் பரிசில் பெற்றார்கள் என்பதை சங்க இலக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன. பொதுவாகச் சங்க காலப் புலவர்கள் பழைய தலைமுறைப் புரவலர்களைப் பாடவில்லை என்பதற்குச் சில சான்றுகளைக் கீழே காண்போம்.

    மாமூலனார்:

          மாமூலனார் தனது இளவயதில் உதியஞ் சேரலாதனைப் பாடினார். பின் அவனது மகனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடினார். பின், இந்த நெடுஞ்சேரலாதனுடன் போரிட்ட சோழன் முதல் கரிகாலனைப் பாடினார். ஆனால் இவர் சேர வேந்தர்களில் உதியஞ்சேரலாதனுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த யாரையும் பாடவில்லை. தனது காலத்திய மகத நாட்டு நந்தர்களின் செல்வ வளம் குறித்துப் பாடியுள்ளார். நந்தர்களுக்குப் பின் மகத ஆட்சிக்கு வந்த மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்துப் பாடியுள்ளார். மாமூலனார் காலத்தில் நடந்த நிகழ்வுகள்தான், இவர் பாடல்களின் பாடுபொருளாக இருந்தன. தனக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பண்டைய நிகழ்வுகள் குறித்து இவர் எதுவும் பாடவில்லை.

    பரணர்:

         மாமூலனார் முதியவராக இருந்த போது இளையவராக இருந்த, மிக நீண்ட காலம் வாழ்ந்த பரணர், மிக அதிகமான வரலாற்றுக் குறிப்புகளைத் தந்தவர். இவர் தனது இளவயதில் மாமூலனார் பாடிய முதல் கரிகாலனைப் பாடியுள்ளார். பின் அவனது மகனான உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பாடியுள்ளார். முதல் கரிகாலனுக்குப் பிந்தைய சேரன் செங்குட்டுவனைப் பாடியுள்ளார். ஆனால் சேரன் செங்குட்டுவனுக்கு முந்தைய மாமூலனரால் பாடப்பட்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையோ, உதியஞ்சேரலாதனையோ அவர் பாடவில்லை. அதுபோன்றே, முதல் கரிகாலனுக்கு முந்தைய சோழ வேந்தர்களான செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியையோ அல்லது பெரும்பூட்சென்னியையோ அவர் பாடவில்லை.

         பாண்டியர்களில் நம்பி நெடுஞ்செழியனையும் அவனுக்குப் பின் வந்த பசும்பொன் பாண்டியனையும் பாடினாரே ஒழிய அவர்களுக்கு முந்தைய  முது குடுமிப் பெருவழுதி மற்றும் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதி போன்ற பாண்டிய வேந்தர்களைப் பரணர் பாடவில்லை. இவர்களைப் போன்று தான் பெரும்பாலான புலவர்கள் தங்கள் கால கட்ட நிகழ்காலப் புரவலர்களை, நிகழ்கால நிகழ்வுகளை மட்டுமே பாடியுள்ளனர். பரணர் தமது காலத்துக்குச் சற்று முன்பு நடந்த மௌரியப் படையெடுப்பு குறித்துக் கூடப் பாடவில்லை. ஆகவே பொதுவாக நிகழ்கால நிகழ்வுகளை, நிகழ்காலப் புரவலர்களை மட்டுமே சங்க காலப் புலவர்கள் பாடி உள்ளார்கள் என்பது வரலாற்றுக்கு மிகப்பெரிய அளவில் துணை செய்கிறது எனலாம். புலவர்கள் மற்றும் புரவலர்களின் காலத்தை உறுதிசெய்வதற்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

    பார்வை:

    1.நீலகண்ட சாத்திரி, சோழர்கள், தமிழில் கே.வி. இராமன், புத்தகம்-1, நவம்பர்-2009, பக்: 4, 69.

    2.. TAMILS HERITAGE – NATANA KASINATHAN, APRIL-2006, PAGE: 25-30.

    3.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 317-329

    4.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், அக்டோபர்-2009, பக்:36.

    5.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், அக்டோபர்-2009 பின்னிணைப்பு-அ.

    6.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், முன்னுரைப்பக்:28, அக்டோபர்-2009.

    1. “ “     பக்:36.

    8.வின்சுடன் சுமித், அசோகர், இந்தியாவின் பௌத்தப்பேரரசர், 2009, பக்:21.

    1. “ “       பக்; 38-40.

    10.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள்,  பக்:1; & முன்னுரைப்பக்: 20, 21,   அக்டோபர்-2009.

    Share
  • இருப்பது பேரின்பமன்றோ!


    எம்.ஜெயராமசர்மா ….. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    பொட்டுவைத்த பூமுகத்தைத் தேடுகிறேன்
    புன்சிரிப்பை மறுபடியும் எண்ணுகிறேன்
    கட்டழகு உடலமைப்பை காணவில்லை
    கையெல்லாம் நடுங்குவதைக் காணுகின்றேன்
    சிரித்துநின்ற செவ்வாயைத் தேடுகிறேன்
    சிவப்புநிறம் கறுப்பாகி நிற்குதங்கே
    என்றாலும் அவளேயென் இணையேயாவாள்
    இருக்கும்வரை அவளைத்தான் சொர்க்கமென்பேன்!

    கருங்கூந்தல் அவளிடத்தில் காணவில்லை
    கண்கூட  ஒளிமங்கி  வெகுநாளாச்சு
    முத்துபோன்ற பல்வரிசை எங்கேபோச்சோ
    மூச்சுவிட  அவளிப்போ முனுகுகின்றாள்
    சுவையாக உணவளித்த அவளின்கைகள்
    சுவைப்பதற்கே முடியாமல் ஆகிப்போச்சு
    அவள்வாயில் ஊட்டிவிடும் ஆசைகொண்டேன்
    அதுவேயென் வாழ்வில் பேரின்பமாச்சு!

    ஓடியாடித்  திருந்தஅவள் ஓய்ந்தேவிட்டாள்
    உதவிக்கு வருவார்கள் யாருமில்லை
    தேடித்தேடி  நான்கண்ட  தேவியிப்போ
    செய்திகேட்கும் செவிப்புலனை இழந்தேவிட்டாள்
    வாடிவிட்ட  நிலையினிலும்  வடிவாயுள்ளாள்
    வயிறார உண்பதற்கு இயலாதுள்ளாள்
    என்றாலும் உணவதனை ஊட்டும்போது
    என்வாழ்வு இனிக்குதென்று எண்ணுகின்றேன்!

    பிள்ளைகளோ  எம்மைவிட்டுப்  பிரிந்தேவிட்டார்
    தொல்லைகளே  என்றுவெண்ணி  தூரவுள்ளார்
    நல்லபிள்ளை என்றேநாம் வளர்த்தேவிட்டோம்
    நட்டத்தை எங்களுக்கே தந்தேவிட்டார்
    அல்லல்தரும் வயோதிபத்தை அடைந்தேவிட்டோம்
    ஆனாலும் அருகருகே இருக்கின்றோமே
    எல்லையிலாத் துன்பமெமை இறுக்கிட்டாலும்
    இணைபிரியா இருப்பது பேரின்பமன்றோ ! 

                    
    Share
  • சொற்களும் நானும்

    முனைவர் வே.சுமதி

    சொற்களில் குவிந்திருக்கின்றன
    ஓராயிரம் பொறாமையின் வன்மம்….
    சொற்களில் மறைக்கப்பட்டிருக்கின்றன
    எண்ணற்ற பாதைகள்….
    சொற்களில் ஊடுருவியிருக்கின்றன
    ஆயிரக்கணக்கான எதிர்பார்ப்புகள்….
    சொற்களில் வரையப்படுகின்றன
    கோடிக்கானக்கான மனிதர்கள்…
    சொற்கள் பிரதிபலிக்கின்றன
    எண்ணற்ற இருப்புகளை…
    சொற்கள் பெருமிதம் கொள்கிறது
    தனக்கான தனிமைகளில்…
    சொற்கள் வாழ்கிறன
    அர்த்தமுள்ள வாழ்க்கையில்….
    யாருமற்ற நேரங்களில்,
    தனக்கான இருப்பைத் தேடியே,
    நிசப்தமாகிறது
    சொற்கள்….

    Share
  • மலேசியா நூல்கள் அறிமுகமும், குழந்தை எழுத்து உலகமாநாடும்

    கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில்

    ————————————————————————–

    கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டம் – புதன் மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர் : தலைமை:கலாமணி கணேசன், சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.

    மலேசியா குழந்தை இலக்கிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன, முதல் குழந்தை எழுத்து உலகமாநாடு கோலாலம்பூரில் சமீபத்தில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன் கலந்து கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார், சுப்ரபாரதிமணியன் பேசியதில் :

    1. பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள் வாசிக்கும் இலக்கியம் )., 2. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம் 3, சிறுவர்கள் பற்றிய இலக்கியம் என பல்வேறு பிரிவுகள் இருப்பதை சிறுவர்கள் இலக்கியம் பற்றிச் சொல்லலாம். இன்று பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள் வாசிக்கும் இலக்கியம் ) அதிகமாக உள்ளது. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம் அதிகம் வரவேண்டும். அதுதான் ஆரோக்யமானதாகவும் சிறுவர்களின் படைப்புத்திறனைக்காட்டுவதாகவும் இருக்கும்.

    சிறுவர் இலக்கியம் என்பது பெரியவர்கள் இலக்கியம் அல்லது பொது இலக்கியம் அல்ல. அது வயது அடிப்படையில் படைக்கப்படுவதை வெளிநாட்டுப்படைப்புகள் காட்டுகின்றன. தமிழில் அப்படி வருவபவை குறைவு.வயதிற்கேற்ப ரசனை, வாசிக்கும் திறன், இயல்பு காரணமாய் இந்த வித்யாசம் தேவை.

    குழந்தை பருவத்தின் அடையாளங்கள் இன்றைய தொலைக்காட்சி மற்றும் நுகர்வுக்கலாச்சார முறையில் தொலைந்து நிற்பதை மீட்டெடுக்க வேண்டும்.. கைபேசி, அய் பேடு சந்ததியாக இன்றைய சிறுவர்கள் மாறாமல் இருக்க சிறுவர்கள் இலக்கியம் அதிகம் முன்னெடுக்கப்படவேண்டும். என்றார்.

    புலவர் சொக்கலிங்கனார் “ இலக்கிய இன்பம் “ என்றத் தலைப்பில் சிறப்புரையாற்றினார். விஜயா நன்றி கூறினார்.

    சுப்ரபாரதிமணியன் மாநாட்டில் படித்த கட்டுரை பின் இணைப்பில் தரப்பட்டுள்ளது.

    maleesiyaa மலேசியா குழந்தை இலக்கியம் மாநாட்டில் நான் படித்தக் கட்டுரை.

    குழந்தைகளும் குறும்படங்களும்: சுப்ரபாரதிமணியன்

    திரைப்படங்களில் குழந்தைகளை முதிர்ந்தவர்களாக , அதிகம் பேசுபவர்களாக ( வயசுக்கு மீறியப் பேச்சு ), வயதுக்கு மீறிய சாகசங்களில் ஈடுபடுபவர்களாக்க் காட்டுகிறார்கள். குறும்படங்களில் யதார்த்தமானக் குழந்தைகள் காணப்படுகிறார்கள். இயல்பாக அவர்களின் பிரச்சினைகளூடே உலவுகிறார்கள்.

    எங்களூரை இந்தக்கட்டுரைக்கு மையமாக எடுத்துக் கொள்கிறேன்.எங்களூர் குறும்படங்களில் குழந்தைகள் காட்டப்பட்டத் தன்மை குறித்து கொஞ்சம்.

    முதலில் எங்களூரைப்பற்றி சில தகவல்கள்: இந்தாண்டு எங்களூர் திருப்பூருக்கு 100 வயது.. திருப்பூர் நூறாண்டைத்தொட்டு இருப்பது அது நகராட்சியாக உருவாக்கப்பட்டு இருப்பதைக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது ( டிசம்.1, 1917 ) ஜன 1 2008 ல் மாநகராட்சியானது. . தற்போது பின்னலாடைத்துறை ஏற்றுமதியால் 30,000 கோடி ரூபாய் அந்நியச் செலவாணியைக் கொடுக்கும் நகரம். 18,000 கோடி ரூபாய் உள்நாட்டு வர்த்தகத்தால் பெறுகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் அது 1 லட்சம் கோடியாக உயரும் வாய்ப்புகள் உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கருதுகிறார்கள். பல்லடம் தாலுக்காவின் சிறு கிராமமாக ஒரு காலத்தில் இருந்தது இப்போது வந்தாரை வாழ வைக்கும் ஊர். நன்னீர் ஓடிய நொய்யல் இன்று மறைந்து போன நதியாகி விடும் அபாயம் உள்ளது. கரிசல் பூமியின் பருத்தி முன்பு நெசவாளர்களுக்கு வாழ்வு தந்தது இபோது பின்னலாடை மூலம் வேலை தேடி வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பைத் தந்து வருகிறது. சுதந்திரப்போராட்டம், தியாகி குமரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேலான தியாகிகள் இந்திய சுதந்திரத்தில் பங்காற்றிய ஊர். 2009ல் திருப்பூர் மாவட்டமாக உருவாகியிருந்தாலும் நகரின் கட்டமைப்பு, சுகாதாரம், கழிவு நீர் மேலாண்மை , சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் தத்தளிக்கிறது

    எங்களூர் திருப்பூர் இளம் குறும்படைப்பாளிகளின் களமாக விளங்கி வருகிறது. இளம் படைப்பாளிகளில் மிகவும் இளையவர் ரவிக்குமார்.. இவரின் இன்று நேற்று நாளை திரைப்படம் பெரும் வெற்றி கண்ட்து. லீவு, எட்டாம்வகுப்பு, கழல், எதிர்வினை, சுமங்கலி ஆகிய குறும்படங்களுக்குப் பின்பு இவர் இயக்கி வந்திருக்கும் 15 நிமிடக் குறும்படம் “கண்ணாமூச்சி”.தொடர்ச்சியாக அக்கரையுடனான செயல்பாட்டினால் “கண்ணாமூச்சி”யை வந்தடைந்திருக்கிறார் ரவிக்குமார்.

    அவர் சார்ந்த பொதுவுடமை இயக்கச் செயல்பாடுகள் சமூகவியல் சார்ந்த முழு அழுத்தத்தைத் தரும் விஷயங்களையே இதுவரை அவரின் படைப்புகளாக்கியிருக்கிறது. விடுமுறைகூடக் கிடைக்காமல் பனியன் கம்பனியில் உழலும் சிறுவனைப் பற்றிப் படம் எடுத்திருக்கிறார். சரியான கல்வி வசதியும், உதவியும் இல்லாத ஒரு சிறுவன் தொழிற்சாலைக்குள் தள்ளப்படுவதைக் குறும்படமாக்கியிருக்கிறார். பல ஆசைகளில் உடம்பை நிர்மூலமாக்கும் மதுவின் தன்மை பற்றி ஒரு நிமிடக் குறும்படத்தில் காட்டியிருக்கிறார். பின்னலாடை, நூற்பாலைகளில் பதின்பருவப் பெண்கள் கொத்தடிமைகளாய் ஆக்கப்பட்டிருக்கும் கொடுமை பற்றி ‘சுமங்கலி’ பேசுகிறது. ’தழலில்’ சின்னச் சின்ன ஆசைகள் தலைமுறைகளைத் தாண்டி கடந்து போவதாக இருக்கிறது.

    ‘கண்ணாமூச்சியில் தலைமுறை இடைவெளி கடந்த தாத்தா பேரன் உறவு பற்றிய அழுத்தம் இருக்கிறது.சிறந்த சிறுகதைத் தன்மையை ‘கண்ணாமூச்சி’ அதன் திரைக்கதையாகப் பெற்றிருக்கிறது. திருப்பம் தரும் எதிர்வினை முத்தாய்ப்பாக அமைந்துவிட்டிருக்கிறது. தாத்தா பேரனிடம் கதை சொல்லும்போது யதார்த்த உண்மைகளை மீறி தனது வீரச்செயல்களுக்கான முத்திரையை நிறையச் சொல்லுவார். தனது ஆளுமையை நிலைநிறுத்த அது தேவையானது என்றிருப்பவர். நொய்யல் ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளம் பற்றி பேரனிடம் கதை சொல்கிறார். கதை கேட்டு பேரன் தாத்தாவுடன் நெருங்கியிருக்கிறான். அவனது நண்பன் செஸ்-ஸில் வெல்ல முடியாதவனாக இருப்பதாகக் காட்டி அவனைத் தாத்தா வெல்ல வேண்டும் என்கிறான். “நீங்க செஸ் சேம்பியன் ஆச்சே தாத்தா” … தலையாட்டிவிடும் தாத்தா வேறு வழியின்றி செஸ் கற்றுக்கொள்கிறார்.தனது பழைய நண்பன் ஒருவனை தேடிச்சென்று செஸ் நகர்வுகளைக் கற்றுக்கொண்டும் செஸ் பற்றிய புத்தகங்களை வாசித்தும் ஒருவார இடைவெளியில் பையனை ஞாயிறில் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் கற்றுக்கொள்கிறார். வீட்டில் பலரின் விமர்சனத்திற்கு ஆளாகிறார். “பேரன் கேட்டிருக்கிறான், என்ன செய்ய”? ஞாயிறில் அந்த செஸ் பையன் வருவதில்லை. பேரனுக்காகக் காத்திருந்து அலுத்துப்போகிறார் தாத்தா. கையில் பேட்டுடன் கிரிக்கெட் மைதானத்திலிருந்து வருகிறான் பேரன்.

    ” இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. செஸ் போட்டி உன் பிரண்டோட இருக்கே. எங்கடா அவன் பயந்து போயிட்டனா?”

    “அதிருக்கட்டும் தாத்தா.” என்று கிரிக்கெட்டில் வீரனான அவனின் நண்பனான ஒருவனைக் குறிப்பிட்டு அவ்னைத் தாத்தா தோற்கடிக்க வேண்டும் என்கிறான்.

    “தாத்தாதான் கிரிக்கெட்டிலும் சாம்பியனாச்சே”

    “ஆமாமா”

    காலச்சூழலுக்கேற்ப தன் நண்பர்களையே சக நடிகர்களாக்கி அந்த அனுபவங்களுக்குள் அமிழ்ந்திருக்கிற அவர்களை கதை மாந்தர்களின் மூலம் வெளிப்படுதுவதாய் தனக்கு நெருக்கமானவர்களை நடிக்க வைத்திருக்கும் ரவிக்குமார், அந்த நெருக்கமானவர்களின் பலவீனஙகளை கடந்து திரையில் வெளிப்படுத்த சிரமஙகள் பட்டிருந்தாலும் அவர்களின் அனுபவங்களை நடிப்பிற்கும் உரமாக்கிக் கொள்கிறார். சக மனிதர்களால் வெளிப்படும் படைப்பிற்கான தன்மை யதார்தத்திற்கு வெகு அருகாமையில் இருக்கிற்து. அந்த வகையில் ஜெயபால், கே.பொன்னுசாமி, நந்தகோபால், சபரி ஆகியோர் நடிப்பை சொல்லலாம். உயர்ந்த தொழில் நுட்பக் காமிராவைப் பயன்படுத்தியிருந்தால் இப்படத்தின் தரம் வெகுவாகக் கூடியிருக்கும். சதுரங்கபலகைக் காட்சிகள், பலருடன் விளையாடுவதைக் காட்டியிருப்பது, சூழலை சரியாகக் காட்சிக்குள் கொண்டுவருவதில் நேர்ந்த அக்கறை இருக்கிறது. அக்கறை கொண்ட தலைமுறை குதிரைப்பாய்சசலாய் விரைந்துகொண்டிருக்கிற்து.

    எங்களூரில் அரிமா சங்கங்கள் மூலம் உதடுபிளவுக்கு பல குழந்தைகளுக்குச் சிகிச்சைகள் தரப்பட்டிருகிறது. அதற்கு சர்வதேச சமூக அமைப்புகள் உதவியிருக்கின்றன. அந்த வகையில் வடநாட்டில்

    பிங்கிகுமாரி என்ற ஆறு வயது பெண்ணிற்கு நிகழ்ந்த சிகிச்சை பற்றி ஒரு படம் பற்றி :பிங்கி ஸ்மைல். இதைத் திரையிட்டு பல இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கிறோம்.

    பிங்கிகுமாரி என்ற ஆறு வயது பெண்ணிற்கு உதட்டில் அமைந்த பிளவு முகத்தைக் கோரமாக்கி விட்டது. பள்ளிக்குச் செல்வதும், சமூக வாழ்க்கையில் சகஜமாக இருப்பதும் அவளுக்கு இயல்பானதாக இல்லாமல் போய்விட்டது. எதேச்சையாய் ‘ ஸ்மைல் ட்ரெயின் ‘ என்றத் தன்னர்வத்தொடு நிறுவனம் அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து நடத்திய 45 நிமிட அறுவைச் சிகிச்சை அப் பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறது. இது பற்றின விவரணப்படம் ‘பிங்கி ஸ்மைல் ‘ ஆஸ்கர் பரிசும் பெற்றது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைச் சார்ந்த மேகன் மைவன் என்ற பெண் இயக்குனர் இந்த 40 நிமிட படத்தை இயக்கியிருக்கிறார்.

    உதடு பிளவு என்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரத்தில் ஒருவருக்கு இருப்பதாகும். ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இது அதிகமாக உள்ளது. மரபியல் ரீதியான காரணங்களூம் இதற்கு உள்ளன. கர்ப்ப காலத்தில் தவறாக உபயோகப்படுத்தப்பட்ட மருந்துகள், கர்ப்ப நோய்கள், போதைப் பொருட்கள், மது பானங்கள் பயன்படுத்தியதன் விளைவாய் இந்த உதடு பிளவு பிறப்பில் குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகின்றது..

    பிங்கி குமாரியை ஒரு சமூக சேவகர் கண்டு பிடித்து இலவச அறுவைச்சிகிச்சைக்ககாக கூட்டிச் செல்வது பற்றி இப்படம் தெரிவிக்கிறது. ஸ்மைல்ட்ரெயின் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உதடு பிளவு போன்றவற்றுக்கான விழிப்புணர்வு, சிகிச்சையில் அக்கறை செலுத்தி இயங்கி வருகிறது இதற்கான சிகிச்சை குறித்து சமூகப் பணியாளர்கள் , பிங்கியின் தகப்பனார் இடம் விரிவாக எடுத்துச் சொல்கிறார்கள். அவர்களின் கிராமச்சூழலும், அங்கு பள்ளி செல்ல விடாமல் தடுக்கும் குழந்தைகளின் கேலியும் முன் வைக்கப்படுகின்றன். இதை சாப நோயாக எடுத்துக் கொள்ளும் முதியவர்களும் இருக்கிறார்கள். இதை மீறி பிங்கியை சிகிச்சைக்காகக் கூட்டிச் சென்று வெற்றி பெற்றுத்திரும்பும்போது அப்பெண்ணுக்கு இயல்பாய் பள்ளிக்குப் போகும் சூழ்நிலையும் , மற்றவர்களுடன் பழகும் சகஜநிலையும் ஏற்படுகிறது. பிங்கியோடு சொகான் என்ற பையனுக்கு நேர்ந்த சிகிச்சை முறைகளும் அவன் தன்னம்பிக்கை பெற்று பள்ளி வாழ்க்கையைத் தொடர்வதி இந்தப்படம் சொல்கிறது.

    இப்பிரச்சினை குறித்து விழிப்புணர்வின் அடையாளமாக இப்படட்த்தை எடுத்துக் கொள்ளலாம். ரசூல் பூக்குட்டி சிறந்த ஒளிப்பதிவுக்காக இப்படத்திற்கு ஆஸ்கார் பரிசு பெற்றிருக்கிறார். ஆனால் இந்தியாவில் கிடைக்கும் இப்படத்தின் பிரதியில் ஒளிப்பதிவின் பிரத்தியேகத்தன்மை இல்லாமல் சாதாரண கல்யாண வீடியோ காமிராவில் எடுக்கப்பட்டது போல படம் அமைந்திருப்பது அதிர்ச்சி தருகிறது, ஆஸ்கார் பரிசு பெற்ற ஸ்லம் டாக் மில்லினர் படம் பம்பாயைச் சார்ந்த விளிம்புநிலைக்குழந்தைகளை மையமாகக் கொண்டு அமெரிக்காவைச் சார்ந்தவர்களால் எடுக்கப்பட்ட படம். இந்தக்குறும்படமும் அமெரிக்காவைச் சார்ந்த ஒரு பெண் இயக்குனரால் , இந்தியாவின் பெனாரசைச் சார்ந்த ஒரு கிராமத்தினரை மையமாக வைத்து அங்கு விளிம்பு நிலையில் வாழும் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ரோட்டரி, அரிமா சங்கத்தினர் உதடு பிளவுக்கான இலவச சிகிச்சைகளை பல ஆண்டுகளாக தங்களின் சமூகப் பணியில் ஒன்றாக செய்து வருவதை இங்கு குறிப்பிடவேண்டும்.

    பூக்குட்டி: தாண்டவக்கோனின் குறும்படம். திருப்பூரின் இன்னொரு குறும்பட முகம் ; யதார்த்த நிகழ்வுகளை திரைத் தொடர்பு மொழியில் நாடகீயமாக வெளிப்படுத்துவதில் இருக்கும் சுவாரஸ்யத்தின் பலத்தை திருப்பூர் தாண்டவக்கோனின் குறும்படங்களில் காண முடிவது ஒரு சிறப்பம்சமாகவே எனக்குத் தோன்றுகிறது. அவரின் சமீபத்திய ” பூக்குட்டி” குறும்படத்தில் இடம் பெறும் பல நிகழ்வுகள் அப்படி நாடகீயமாகியிருக்கின்றன.

    தாண்டவக்கோனின் முந்திய படமொன்றில் உலக உருண்டை பிளாஸ்டிக பையில் அடைபடும் படிமத்தை ஒரு செய்தியாய் வெளிப்படுத்தியிருந்தார்.இதில் உடல் உறுப்பு தானம் என்ற செய்தி உணர்ச்சிகரமான நாடகமாக வெளிப்பட்டிருக்கிறது. உணர்ச்சிகரமான கலைஞர்கள் உணர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் மூலமே தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியும்.

    தாண்டவக்கோனின் பிற குறிப்பிடத்தக்க குறும்படங்கள் ( சற்றே நீளமானவை ) :

    பூங்கா, பேராண்டி . இனி பேராண்டி பற்றி

    தாண்டவக்கோனின் குறும்பட படைப்புலகத்தில் குழந்தைகள் நிரம்பியிருக்கிறார்கள். பள்ளி போகும் மூன்று குழந்தைகளின் தந்தை என்ற வகையில் அவர்களின் உலகம், அவர்களின் பிரச்சனைகளை அவர் நன்கு அறிந்திருக்கிறார். அவர்களூடே பயணம் செய்து அவர்களில் உலகில் நடமாடவும், அவர்களின் பிரச்சனைகளில் பங்கு பெறவும், சிக்கல்கள் அவர்களுக்குள் பூதாகரமாகும்போது கைகொடுக்கவும் அவருக்கு இயல்பாகிறது. குழந்தை மனத்துடன் அவர்களை அணுகுவதற்கு ஏற்ற மனநிலையை உருவாக்குவது சாமான்யமல்ல; அந்த இயல்பான மனநிலையையும் பக்குவத்தையும் கொண்டவராய் அவர் இருப்பது படைப்பு நிலைக்கு வெகு சாதகமாகிறது. இந்த சாத்தியத்தை அவரின் முதல் குறும்படமான ‘பூங்கா’ முதல் விளிம்பு நிலையினரான ஊனமான குழந்தைகளின் பிரச்சி னைகளை முன் வைக்கிற “கை”, குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பற்றிய கல்வி பற்றிய “பாலிபேக்” அவற்றிலும் காணமுடியும்.

    “பூங்கா”வில் அன்பிற்காக ஏங்கும் பெண் குழந்தை பக்கத்து வீட்டு ஏழை பையனுடன் கொள்ளும் நட்பு அன்பிற்கு அடைக்கலமாகிறது. “இப்படிக்கு பேராண்டி” படத்தில் இந்தச் சிறுவர்கள் குடும்பங்களின் மூத்தோரான தாத்தா பாட்டிகள் இல்லாத வெறுமையை உணர்ந்து அவர்களை தேடிக் கண்டடைகிறார்கள். இந்த ஏக்கத்தை நமக்குள்ளும் ஆழ விதைத்து விடுகிறார். இது அவரின் கலைத்திறனின் வெற்றியாக இருக்கிறது.

    படத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் பள்ளிக் காவலாளி ஒரு சிறு செடி தன் பராமரிப்பில் இருந்து தவறிப் போவதை கவனிக்கிற போது துணுக்குகிறார். அதை முதுமையான கைவிரல்களால் நிலத்தைக் கீறி பதியமிட்டு நீர் ஊற்றவும் செய்கிறார். இந்தப் பரிவை தடுக்கி விழுந்து சாப்பாட்டு கேரியரை சிதறடித்து விடும் சிறுவனிடமும் காட்டுகிறார். பெரியோரின் நேசம் இப்படித்தான் படத்தில் அறிமுகமாகிறது. அது காவலாளி என்ற நிலையிலிருந்து தாத்தா பாட்டி பற்றின ஏக்கமாக விரிகிறது. அவர்கள் இல்லாத உலகத்தை நினைத்து பூதாகரமாக்கிக் கொள்கிறார்கள். தாத்தா பாட்டி உலகில் தங்களுக்கான இடமில்லாதது பற்றி அழுகை இருந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க இயலாதபடி சூழல் இருக்கிறது (ஆனால் தனிப்பயிற்சி எடுக்கும் ஆசிரியையின் மகள் தன் எதிர்ப்பை சுலபமாகக் காண்பிக்கிறாள். கட்டாய நடனத்தை எதிர்த்த காமிக்ஸ் வாசிப்பில் என்ன தவறு என்று எதிர் கேள்வி எழுப்புகிறாள். அவளுக்குள்ளும் தாத்தா பாட்டி இல்லாத ஏக்கத்தை காமிக்ஸ்க்குள் அடக்க வேண்டியிருக்கிறது.)

    குழந்தைகள் இருவரின் ஏக்கம் பெற்றோர்களைத் தொற்றுகிறது. கனவுகளுக்குள் நிரம்பி அதிர்ச்சியடைகிறார்கள். குழந்தைகள் தாத்தா பாட்டி புகைப்பட தேடுதலில் ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது. இதன் முடிவாய் தாத்தா பாட்டிகளை கண்டடைகிறார்கள்.

    தாத்தா பாட்டி பற்றின ஏக்கங்களே குழந்தைகளின் பார்வையிலிருந்து விரிகிற வேளையில், தாத்தா பாட்டியின் பார்வையோ, நோக்கிலிருந்தோ குழந்தைகள் மீதான பாசம் குறித்து இன்றும் சில நெகிழ்வுகளை இப்படம் உள்ளடக்கியிருந்திருக்க வேண்டும். அது சமச்சீராக பாச வெளியின் விஸ்தாரத்தை குடும்பமெங்கும் விதைத்து விளைந்திருப் பதைக் காட்டியிருக்கும்.

    இப்படத்தின் குளோசப் காட்சிகள் பலமாக அமைந் திருக்கின்றன ஆனால் அழுகை காட்சிகளில் எல்லோரும் “நாடக நடிகர்களாகி” விடுகிறார்கள். பகல், இரவு, கனவு காட்சிகளிலும் ஒரே விதமான முகப்பூச்சு, உடை தரம், ஒளி யமைப்பு உறுத்துகிறது குழந்தைகளின் நுண்ணிய உணர்வு களின் மத்தியில் தனிபயிற்சி எடுக்கும் ஆசிரியை கணவனு டன் மாணவர்களை உட்கார வைத்தபடி தேநீர் அருந்தும் குரோமும் தென்படுகிறது. திரைப்படத்தளம் என்பது ஏற் படுத்தும் அழுத்தமான சுவடுகளை விரல்களை எண்ணுவ திலிருந்து எதிர்ப்புக் குரலுக்காக போராட்ட ஊர்வலம் என்ற தொலைக்காட்சி பிம்பம் ‘தாத்தாபாட்டி வேணும்’ என்று கோசமிட்டபடி ஊர்வலம் செல்லும் வரைக்கும் நீள் கிறது.

    இந்த வகை சாதாரண நிகழ்வுகளை யதார்த்த தளத் தின் சாதாரண இயல்பை மீறி திரைப்பட வடிவத்தில் அழுத் தமான காட்சிகளாக்குவதில் தாண்டவக்கோன் அவரின் பெரும் பான்மையான படைப்புகளில் வெளிப்படுத்துகிறார் (சமீபத் திய அவரின் சிறுகதையன்றிலும் இதை நுணுக்க மாக கவனிக்க முடிகிறது) வெறும் யதார்த்த தளம் மீறி சுவாரஸ்யப்படுத்தும் தன்மைக்கு இந்த வகை வெளிப்பாடு அவசியம். அந்த வகையில்தான் குழந்தை களின் குறும்புகள் கூட இடம் பிடிக்கின்றன. அழுகை என்பது குழந்தைகள் காதை மூடும் விபரீதமாகிறது. சித்தப்பா என்ற பணம் மற்றும் பொருள் குறித்த அக்கறை கொண்ட கதாபாத்திரம் கனவிலும் அதே போன்ற செய்கையை தான் வெளிப் படுத்துகிறது.

    குழந்தைகளுக்கு ஏற்பட்ட சிறு விபத்து பற்றி அறிகிற தாத்தா மனநிலையும் பதட்டமும் ஊசியில் நூல் கோர்க்க முடியாத சிக்கலால் நுணுக்கமாகக் காட்டப்படுகிறது. அதிலிருக்கும் பதட்டம் அன்பு குறித்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாத எல்லோருக்கும் ஏற்படும் அதிர்ச்சிப் படிமமே இப்படத்தின் சாட்சிகளாகும். பள்ளிக் காவலாளி முதல் மருத்துவர் வரை பலரும் பகிர்ந்து கொள்ளும் அறிவுரைகள், கருத்துக்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றாலும் அவை குழந்தைகளுக்கான உலகில் அழுத்தம் விடயங்களாகி விடும் என்பதையும் கவனிக்க நேர்கிறது. தொழில் முறையற்ற நடிகர்களின் நடிப்புப் பயிற்சி பலவீனம் துருத்தித் தெரிகிறது. பலவீனத்தை உதற அவர்களும் முயற்சி செய்கிறார்கள். படத்தில் இழையோடும் சோகத்தை குழந்தைகளின் சேஷ்டைகளும் கதாபாத்திர உருவாக்க சுவாரஸ்யமும் தவிர்க்கச் செய்கின்றன. சோக இழையை தவிர்த்துக் காட்டும் முயற்சியாக படத்தின் எழுத்துக் காட்சியில் கதாபாத்திரங்கள் இயல்பாய் சிரித்து வெளிப்படுவது குடும்ப உறவுகளில் தென்படாத அன்பையும் நேசிப்பையும் நோக்கி எள்ளி நகையாடியே இருப்பதற்கான சாட்சிகளாகக் கூட கொள்ளலாம். குழந்தைகளின் உலகில் அவர்களுடன் நேசக்கரம் நீட்டும் முயற்சிகளில் தொடர்ந்து தாண்டவக்கோன் இயங்குவது படைப்புலகிற்கு வரப்பிரசாதம் தான்.

    அன்பையும் பாசத்தையும் நெகிழ்வை யும் பகிர்ந்து கொள்வது அவரின் படைப்பின் ஆதாரமாக இருக்கிறது. இந்த ஆதாரத்தை தன் படைப்புகளின் அடிநாதமாக அவர் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் தொடர்ந்த செயல்பாடுகளில் அறிந்து கொள்ள முடிகிறது. அவர் இயங்குகிற கட்சி சார்ந்த செயல்பாடுகள், கலை இலக்கிய முயற்சிகளில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் குழந்தைகள் பற்றிய அக்கறையிலிருந்து தொடங்கப்பட வேண்டிய செயல்களின் ஆதாரங்களை சுட்டிக் காட்டியபடியே இயங்குகிறார் அவர்.(பேராண்டி, குறும்படம். இயக்கம் : தாண்டவக்கோன், திருப்பூர்)

    இந்த இரு திருப்பூர் இயக்குனர்களின் படங்களே இந்தியக் குழந்தைகளின் உண்மை முகங்களாய் விளங்குபவை. இவை தமிழ்க் குறும்பட உலகில் முக்கியத்துவம் பெற்றதற்குக் காரணம் அவற்றை யதார்த்த நம்பகத்தன்மையும் ஊடக மொழியை சரியாய் கையாண்டிருப்பதும்தான். அன்பையும் பாசத்தையும் நெகிழ்வை யும் பகிர்ந்து கொள்வது குறும்படப் படைப்பின் ஆதாரமாக இவ்வகையில் இருக்கிறது

    சுப்ரபாரதிமணியன்,8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602

    9486101003 * subrabharathi@gmail.com

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    தெய்வத்திற்கும் உண்டு பிராரப்தம்….!ஆனாலும்….குறைக்கவல்ல கண்ணபிரான்….!
    ————————————————————————————————————————————————-

    180627 Yashoda lr 10×14 inch Arches 300gsm prem.

    பேய்ச்சி முலைநஞ்சுப் பாலின், பிராரப்த
    சூழ்ச்சியை வெல்ல சிசுகண்ணன் -ஆய்ச்சியவள்
    கொஞ்ச, மடிதனில் பஞ்சாய்ப்(பூபாரம் இல்லாமல்) படுத்திருந்து
    நஞ்சளவு போக்கும் நயம்….கிரேசி மோகன்….!

    பூதனை நச்சுப் பாலொடு அவளின்
    வேதனை தீரக் குடித்துக் களைத்தவன்
    சீதரன் கோமளன் ஸ்யாமளன் என்னுளத்
    தீதினை விரட்டித் தூங்க வருகவே….கிரேசி மோகன்…..!

     

    Share
  • வாழ்க்கையெனும் போர்க்களம்..!

    அரசியலில் அடிக்கடி வரும் நெருக்கடிபோல்
    =====அவ்வப்போது துன்பம் வரலாம் நம்வாழ்வில்.!
    இரக்கமற்ற செயல்களைச் செயும் சழக்கரால்
    =====இயல்பான வாழ்க்கையில் இடர் வந்துசேரும்.!
    சிரமமின்றி சீராகநம் வாழ்க்கை செல்தற்கே
    =====சித்தர்கள் சிந்தைபுக பலநல் வழிசொன்னார்.!
    வரவேற்று வகையாயதை மனதில் ஏற்றினால்
    =====வாழ்க்கை யெனும் போர்க்களம் இனிக்கும்.!

    வாழ்வில் துன்பங்கள் நெருங்கும் போதிலே
    =====வாழ்வு குறுக்கிய நல்லதங்காள்களும் உளர்.!
    வாழ்வு முழுதும் துன்பமே நிறைந்த போது
    =====வாழ்ந்து காட்டிய இராமர்களும் உள்ளனர்.!
    வாழ்வே சூனியத்தால் சூழ்ந்த போதிலும்
    =====வழிகாட்டினர் பாண்டவர்கள் நம் வாழ்வில்.!
    வாழ்க்கை என்பதே ஒரு போர்க்களமதில்
    =====வாழப் பழகுவதே இப்பிறவியின் நோக்கம்.!

    அயலான் நம்மையாட் கொண்ட போதிலே
    =====அன்று நாமடைந்த துயரத்திற்கு அளவேது.!
    கயவர்கள் செயும் கலவரத்தால் சிலசமயம்
    =====கால முழுதும் கலங்குகிறோம் கண்ணீரால்.!
    இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நமது
    =====இல் வாழ்விலெங்கோ இடிக்கிறது இடையூறு.!
    வியர்வை சிந்தியுழைக்கும் எண்ணம் வரின்
    =====வெல்லலாம் வாழ்வெனும் போர்க் களத்தை.!

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::03-06-18
    நன்றி படம்:: கூகிள் இமேஜ்

    Share
  • அழவிட்டுப் போனதேனோ !

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    பாடியகுயில்   பறந்தோடிவிட்டது
    பாட்டுக்கேட்ட  யாவருமே
    பரிதவித்தே நிற்கின்றார்
    பலமொழிகள் குயில்காணாப்
    பார்த்தேங்கி அழுகிறது
    பாரதத்தாய் இசைமகளைப்
    பறிகொடுத்து ஏங்குகிறாள்  !

    இசைஞானி வசமாகி
    இசைத்தபாடல் எத்தனையே
    எம்ரகுமான் இசைக்கோப்பில்
    இனித்தபாடல் இதயமெலாம்
    இசைமகளை இனங்கண்ட
    இசையாளர் பலருமிப்போ
    இசைமகளின் முகங்காணா
    ஏக்கமுற்று இரங்குகின்றார் !

    சிங்கார  வேலனைத்
    தந்துவிட்ட இசைக்குயிலைச்
    சிந்தித்து சிந்தித்து
    இசையுலகு அழுகிறது
    திரையுலகை இக்குரலே
    திகைப்பூட்ட வைத்ததனால்
    திரையுலகு  இப்போது
    தேம்பிநின்று அழுகிறது !

    பத்தாயிரம்   பாடல்கள்
    பன்மொழியில் பாடியதால்
    பலருமே   இசைக்குயிலை
    பார்த்துமே வியந்தார்கள்
    பரிசுபல  குவிந்தன
    பாராட்டும் பெருகியது
    பாடிநின்ற   பூங்குயிலோ
    பாரைவிட்டுப் பறந்ததுவே !

    யாருமே மறக்கார்கள்
    ஜானகி அம்மாவைக்
    கானக்   குயிலாக
    கலக்கினார் இசையுலகை
    அவர்குரலில் இனியுலகில்
    ஆரிசைக்க வருவார்கள்
    அக்குரலை கேட்காமால்
    அழவிட்டுப் போனதேனோ!

    Share
  • குறுந்தொகை – பாடுபொருள் நுவல்தலில் பறவைகள்

    -கு. பூபதி 

    சங்க இலக்கியங்கள் தொன்மையால் பெருமை வாய்ந்தவை. நுண்ணிய கட்டமைப்பு விதிகளுக்கு இயைந்த வடிவுடையவை. முதற்பொருள் நிலமும், பொழுதுமாக அமைவதாலும் கருப்பொருளாக தெய்வம் தொடங்கி நிலம்சார் மக்கள், நிலையுயிர்களான தாவரங்கள் புள் உள்ளிட்ட இயங்குயிர்கள், இயற்கை உழுத செயற்கை உருவாக்கங்கள் என இயற்கைக்கு மிகுதியும் இடமளிப்பவை. எனவே உரிப்பொருள் உணர்வுகளைப்பாட இயற்கையை இயல்பாகவே துணைக்கழைத்துக் கொண்டனர் சங்கப்புலவர்கள்.

    தலைவன், தலைவி, தோழி கூற்றில் ஆளப்படும் உவமைகளுக்குக் கூட நுண்ணிய விதிகளும், தெற்றெனக்காட்டும் எல்லைகளையும் இலக்கணமாகக் கொண்டவை சங்கத்தமிழ் இலக்கியங்கள். தலைவி தான் கண்டவற்றையே உவமையாக்கவேண்டும் எனத் தொல்காப்பியம் விதிக்கிறது. இக்காரணங்களால் பறவைகள், விலங்குகள், மலர்கள், செடி, கொடி, மரங்கள் என அவ்வுணர்வைக் காட்டவும், அறிவு கொளுத்தவும் பயின்று வரும் உவமைகள் பெருமையுள்ளன. அவற்றில் குறுந்தொகைப் பாடுபொருளில் பயின்றுவரும் பறவைகள் குறித்த செய்திகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    பறவைகளும், திணைகளும்

    பறவைகள் தம் இயல்பான வாழிடங்களுக்கேற்ற நிலங்களில் காணப்படுதல், இயல்பான வாழிடங்கள் அல்லாத இடங்களில் காணப்படுதல், அல்லது பறவைகளை இன்னதென விளங்காமல் உரைகாரர்களால் நேர்ந்த மயக்கம் ஒன்றுக்கு மேற்பட்ட நிலங்களில் பயின்று வருதல் எனப் பொதுவகைமையிற் கொண்டுவரவியலும்.

    பறவைச்சகுனம்

    பறவைகளைச் சகுனத்தின் குறியீடாகக் கொள்ளுதல் தற்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காகம் கரைதல் விருந்தினர் வருதலையும் சகுனமாகக் கொண்டுள்ளனர். இச்சகுனம் பார்த்தல் சங்ககாலந்தொட்டே கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. தலைவன் வரவை எதிர்நோக்கி ஆற்றியிருக்கும் போதும், நல்வினையைத் துவங்கும் போதும் நல்ல நிமித்தம் பார்த்தலும் நற்சொல் கேட்டலும் நற்குறிகளாகக் கொள்வது நெடிய பண்பாட்டுக் குறியீடுகள். புள்ளூர்தல் என்பது பறவைகளை நன்னிமித்தமாகக் கொள்தல், விரிச்சிகேட்டல் என்பது நல்ல சொல் கேட்டல் இதை,

    ‘புள்ளும் ஓராம் விரிச்சியுமில்லாம்
    உள்ளலும் உள்ளாம் அன்றே’ (குறு : 218) என்பதிலிருந்தும்,

    ‘வேதின வெரிநி னோதி முதுபோத்
    தாறுசென் மாக்கள் புட்கொளப் பொருந்தும்’ என்பதிலிருந்தும் அறியலாம்.

    உட்பிரிவுகள்

    பொதுவாகப் பார்த்த பறவைகளைப் பாடல்களில் உவமையாக்குவது என்பதைக் கடந்து கூர்ந்து கவனித்து, நுணுக்கமான ஒப்புமைகளைக் கைக்கொள்வது, அப்பறவைகள் இணையோடு சேர்ந்து வாழ்தல், பிரிந்து செல்லும்போது வருந்துதல், கருவுற்ற பேடைக்குக் கூடமைத்துக் கொடுத்தல் ஆகிய நுட்பமான செய்திகள், பல சங்கப் புலவர்களை பறவை ஆர்வலராகக் காட்டும். ஒரு வகைப் பறவையினத்தினைச் சாந்து நிறத்தால், வரவால், வாழிடத்தால், உணவு முறையால் வேறுபட்ட அவற்றின் உட்பிரிவுகளைக் கூறும் திறம் மூலம் பறவை ஆராய்ச்சியாளரின் நோக்கு அப்புலவர்களுக்கு அமைந்திருந்ததைக் குறிக்கிறது. உதாரணமாக கழுகுகளில் இருவகை, ஆந்தையில் ஆறு வகை, காக்கையில் இருவகை, வல்லூறு மூவகை, புறாக்கள், நீர்ப்பறவைகளின் வகைகள் போன்றவை சங்கப்பாடல்களில் காணக் கிடைக்கின்றன.

    கணந்துள்

    குறிஞ்சி திரிந்த பாலை நிலத்தில் வழிப்போக்கர்களை ஆறலை கள்வரிடம் அகப்படாமல் நீங்கிச் செல்ல கணந்துள் பறவை எச்சரிக்கும். இச்செய்தி,

    “நெடுங்காற் கணந்து ளாளறி வுறீஇ
    ஆறுசெல் வம்பலா் படைதலை பெயர்க்கும்”    (குறு: 350) என்ற பாடலில் கூறப்படுகிறது.

    “கம்புட் கோழியும் கனைகுர னாரையுஞ்
    செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்
    கானக் கோழியும்நீா்நிறக் காக்கையும்
    உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
    வெல்போர் வேந்தா்முனையிடம் போலப்
    பல்வேறு குழூக் குரல் பரந்த வோதையும்”      (சில -10-114-117)

    என்ற சிலம்பு, புகார்க்காண்டம், நாடுகாண் காதைப் பாடல் உரையில் புள் என்பதைக் கணந்துள் எனக் குறிப்பிட்ட அடியார்க்கு நல்லார், கானக் கோழி- காட்டுக்கோழி என்பாருமுளா். நிறம்- தன்மை, ஊரல் – நீா்மேலூர்வது ஆதலின் ஆகுபெயா் என்பர். காவிரியாற்றங்கரையில் நீா்த்துறைப் பறவைகளைப் பட்டியலிடும் போது கணந்துள் பறவையும் சேர்த்துக் குறிப்பிடுவது ஆய்வுக்குட்பட்டது.

    கற்பாங்கான வறட்சியான வாழிடத்தைக் கொண்ட கணந்துள் பறவை ஆள் வருகையை எச்சரித்துக் கூறும் செய்தி நற்றிணைப் பாடலிலும் உறுதிப்படுத்தப்படுகிறது.

    “பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
      நெடுங்கால் கணந்துள் புலம்புகொள் தௌ்விளி
      சுரஞ்சொல் கோடியர் கதுமென இசைக்கும்”     (நற்: 212)

    என நற்றிணைப் பாடலுக்கு  வரைந்த உரையில் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயா் “ இது நீா்வாழ் பறவை என்று கூறப்படுதலின்,  எந்நில மருங்கிற்  பூவும் புள்ளும்” (தொல். பொரு.19) என்றபடி பாலைக்கண் வந்ததெனெக்கொள்க எனத் திணைமயக்கமாகக் கொள்கிறார்.

     கற்பாங்கான வறண்ட பகுதியில் வாழும் கணந்துள் நீா்ப்பறவை எனக் கொள்ளப்பட்டமை ஆய்வுக்குரியதாகிறது.

    ஆள் வருகையைக் காட்டும் கணந்துள் ‘ஆள்காட்டிக் குருவி’ என்பது மருவி தற்காலத்தில் ஆக்காட்டுக் குருவி’ என கிராமப்புறங்களில்  அடையாளப்படுத்தப்படுகிறது.

    மஞ்சள் மூக்கையுடைய கணந்துள் (Vanellus malabaricus) கற்பாங்கான வாழிடத்தையுடையது என்றும் அதேபோல் உருவம் கொண்ட சிவப்பு மூக்கையுடைய பறவையே (Venelius indicus) குளம் குட்டை ஆறு பொன்ற நீா்த்துறைகளில் வாழ்தல் என்பதையும் (en. Wikipedia.org) இணையதளம் வழி அறியலாம். குறுந்தொகைப் பாடல்களில் சுட்டப்படும் கணந்துள் மஞ்சள் மூக்கையுடையது என தெளியலாம்.

    கொக்கு

    “மாரியாம்ப லன்ன கொக்கின்
    பார்வ லஞ்சிய பருவர லீர்நெண்டு”       (குறு: 117)

    என வடிவத்திலும், வண்ணத்திலும் பொருத்தமாகக் கொக்கின் கூரும் ஆம்பல் முகையும் ஒப்புமைப் படுத்தப்படுகிறது. மாரிக்காலத்து மழையில் நனைந்து கூம்பியிருக்கும் கொக்கை ‘மாரிக்கொக்கின் கூரல்’ என நற்றிணை (100) சுட்டுகிறது.

    கொக்கி போன்ற வடிவை உடையதால் கொக்கு என்ற காரணப்பெயர் கொண்ட இப்பறவை, உரிய காலம் வரை பொறுமையாகக் காத்திருந்து வினையாற்றுவதற்கு உவமையாக மூதுரையில் சுட்டப்படுகிறது.

    கூகை

    உவமையால் பெயர்பெற்ற புலவர்கள் வாரிசையில் கூகையை உவமையாக்கி,

    “கூகைக் கோழியானாத் தாழிய பெருங்காடு”               (புற: 364)

    என்ற பாடல் எழுதிய புலவர் கூகைக் கோழியார் எனக் குறிப்பிடப்படுகிறார்.

    “குன்றக் கூகைக் குழற்று முன்றிற்
    பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும்”     
               (குறு: 153) என்ற கபிலர் பாடல் வழி குன்றில் வாழ்வதால் குன்றக்கூகை எனச் சுட்டப்படுவதை அறியலாம். கோழியிலிருந்து கூவ வேண்டிய இடத்துக் கூகை கூவியதால் ‘கூகைக் கோழி’ எனக் கூறப்பட்டதாக,

    “கூகைக் கோழி வாகைப் பறந்தலை”   (குறு: 393) என்ற பரணர் பாடலுக்கு உ.வே.சா உரை வழங்குவார். கூகை கூவுதலை ‘குழறுதல்’ என்பர். பொருளற்ற ஒலியை எழுப்புவது குழறல் எனப்படும்.

    சங்கப் பாடல்களில் ஆந்தை என்ற பொதுவகையில் கூகை, கூகுரால், குடிஞை, ஊமன், ஆண்டலை ஆகியவற்றைக் குறிக்கிறது. புறநானூறு, அகநானூறு பாடல்களில் ‘ஆந்தை’ என்ற சொல் பயன்படுத்தப்படாமை மேலாய்வுக்குரியது.

    கூகைக் குழறலுக்கு மகளிர் அஞ்சும் செய்தி நற்றிணைப் (218) பாடலில் கூறப்பட்டுள்ளது.

    காக்கை

    நிமித்தம், பராய்க்கடன் குறித்த செய்திகளில் காக்கை மிகுதியும் புலவர்களால் பயன்படுத்தப்பட்டதை பல அகப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.

    “விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே”      (குறு: 210)

    என்ற குறுந்தொகைப் பாடலை இயற்றிய புலவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்ற உவமை வழி அடையால் அறியப்படுகிறார்,

    பலியுண்ணும் காக்கையே சங்கப் பாடல்களில் சுட்டப்படுகிறது.

    “உகுபலி அருந்திய தொகுகருங் காக்கை”                (நற்: 343)

    எனப் பலியுண்ணும் காக்கையை நற்றிணை காட்டுகிறது. காக்கை கரைதல் தலைவன் வரவுக்கு நிமித்தமென்றும், அவ்வாறு கரைந்தால் இன்னது தருவேன் எனக் கூறியவாறு இடும் உணவை பலியென்றும் கூறுதல் மரபு.

    தமிழ்நாட்டுக் காக்கைகள், ஊர்க்காக்கை (Corras Splendens), அண்டங் காக்கை (Corras Macrorhynchos) என இருவகையானவை. உடல் கருப்பாகவும், கழுத்து சாம்பல் நிறத்திலும் உள்ளவை ஊர்க் காக்கைகள். உடல் முழுவதும் அடர்கருப்பாக உள்ளவை அண்டங் காக்கைகள்.

    சங்கப் பாடல்களில் கூறப்படுபவை அண்டங் காக்கைகள் என்பது ‘கருங்காக்கை’ என்ற அடைவழிப் பெறப்படுகிறது.

    கம்புட் கோழியும் கனைகுர னாரையுஞ்
    செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்
    கானக் கோழியும்நீர்நிறக் காக்கையும்
    உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்” என்ற சிலப்பதிகாரப் பாடலில் கூறப்படும் ‘நீர்நிறக் காக்கை’ என்பது காக்கையினத்தைச் சார்ந்தது அல்ல. அது ஒரு நீர்ப்பறவை. பெயரைத் தவிர மற்றவற்றில் காக்கையோடு ஒப்புமையற்றது.

    கிளி

    மொச்சை மலரை கிளிமூக்கிற்கு உவமையாக்குகிறது

    “பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக்
    கிளிவா யொப்பி னொளிவிடு பன்மலர்”      (குறு: 240) என்ற குறுந்தொகைப் பாடல்.

    “செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்” என தொல்-மரபியல் காட்டும். கிளி வாயில் உள்ள வேப்பம்பழத்தை கொல்லன் கையில் உள்ள பொற்காசினை ஒப்பக் காட்டுகிறது பின்வரும் அள்ளளுர் நன்முல்லாயார்பாடல்.

    “உள்ளார்கொல்லோ தோழி கிள்ளை
    வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்
    புதுநா ணுழைப்பா னுதிமாண் வள்ளுகிர்ப்
    பொலங்கல வொருகா சேய்க்கும்”      (குறு: 67)

    ‘கிளிமூக்கு’ எனும் சொல் இன்றும் கிளிமூக்கு மாங்காயில் தொடங்கி, பட்டுச்சேலையில் இடம்பெறும் கிளிமூக்குப் பூவடிவம் வரையில் பெருவழக்காக உள்ளது. காலத்தினூடே பயணிக்கும் வீரியமிக்க உவமையாக விளங்குவதை உறுதிப்படுத்துகிறது.

    எழால்

    பிற பறவைகளை அடித்துக் கொன்று தின்னும் எழால் எனும் பறவை வழிநடை ஆபத்துக்குக் குறியீடாக விளங்குகிறது.

    “எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது”            (குறு: 151)

    “குடுமி யெழாலொடு கொண்டு கிழக் கிழிய”               (பதி: 36-10)

    என எழால் சங்கப் பாடல்களில் காட்டப்படுகிறது.

    குறும்பூழ்

    தினைத்தாளன்ன கால்களையுடைய குருகு முதல் ‘பூரிக்கா லன்ன செங்கா லுழந்தது’ வரையில் சங்கப் பாடல்களில் சிறு பறவைகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.

    ‘நிலங்கு குறும்பூழ் என்பன காடை’ என திவாகர நிகண்டு கூறுகிறது.

    “பாரீஇ வித்திய வேனற்
    குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே”              (குறு: 72)

    பாடலில் திணைக் குருவி போல, சிட்டுக் குருவிகள், முனியாக் குருவிகள் போன்ற சிறு குருவிகள் குறுந்தொகைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன.

    அன்றில்

    பிரிவுத் துன்பம் சிறுபொழுதேயாயினும் தாளாமல் தவிக்கும் தலைவிக்கு அன்றில் பறவைகளை உவமையாக்கி,

    “மனைசேர்பெண்ணை மடிவாய் அன்றில்
    துணைஒன்று பிரியினும் துஞ்சா காண்”                  (அக: 50)

    என அகநானூறு கூறும். இதுதான் அன்றில் என அடையாளம் காட்டுகின்றன குறுந்தொகைப் பாடல்கள்.

    “நெருப்பி னன்ன செந்தலை யன்றில்”                     (குறு: 160)

    “கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல்”                  (குறு:301)

    செந்தலையும், கருங்காலும் கொண்ட அன்றில் பறவைகள் பகலில் வெளியே செல்லாது பனைமரக் கூட்டில் தங்கி, இரவில் இரை தேடச் செல்லும் இயல்புடையவை. ‘பனங்கிளி’ என்று பெருவழக்காக அன்றில் அறியப்படுகிறது.

    தொகுப்புரை

    தான் கண்டவற்றையே உவமையாக்க வேண்டும் என்பதால் இயல்பான தோற்றத்தில் பறவைகள் தலைவி கூற்றில் பாடுபொருளாக விளங்குகின்றன. எனவே உயர்வு நவிற்சியும், மிகைப்படுத்தப்பட்ட முருகியலும் இன்றி உள்ளது உள்ளவாறே பறவைகளின் வாழிடம், தோற்றம், நுட்பமான செயல்கள், உணவுமுறை ஆகியவற்றைப் பதிவு செய்துள்ள குறுந்தொகைப் பாடல்கள் இலக்கிய இன்பம் மட்டுமின்றி, அறிவியல் ஆய்வாளர்களுக்குக் கூடுதல் செய்திகளைக் கூறுவதாகவும் அமைந்துள்ளன.

    பார்வை நூல்கள்

    1. குறுந்தொகை மூலமும் உரையும் (2009), டாக்டர் உ.வே.சா நூல் நிலையம், சென்னை.

    2. நற்றிணை மூலமும் உரையும், (2016), ஔவை துரைசாமிப் பிள்ளை, சாரதா பதிப்பகம், சென்னை.

    *****

    கட்டுரையாசிரியர் – பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளார், தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், ஈச்சநாரி, கோவை-21.
    முனைவர் ஆறுச்சாமி.செ. நெறியாளர், உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், ஈச்சநாரி, கோவை-21.

     

     

    Share
  • சங்க கால நிலவியல் பகுப்புகளின் அடிப்படையில் விளைந்த குறிஞ்சிநிலத் தொழில்கள்

    -த. வாசுகி 

    முன்னுரை

    தொல்காப்பியர் தொழில் என்பதனை வினை என்ற பொருளில் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். இதனை, “வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை இடைச் சுர மருங்கில் தவிர்தல் இல்லை” (தொல். பொருள். அகத்திணையியல், நூ.1140) என்ற நூற்பாவின் மூலம் அறியலாம். தமிழகராதியானது தொழில் என்பதற்குச் செயல், வேலை, ஏவல் என்ற பொருளினைத் தருகின்றது. நிலவியல் பகுப்புக்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்றவற்றில் சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கை வள ஆதாரங்களோடு நேரிடையாக இணைந்து செயல்பட்டனர். இவ்வாறு இயற்கையோடு நேரிடையாக தொடர்புடைய தொழிலானது தற்காலத்தில், முதன்மைத் தொழில்கள் அல்லது முதல்நிலைத் தொழில்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை பழைமையான தொழில்கள் என்று தற்காலத்தில் வரையறை செய்கின்றனர். இவற்றில் அடங்கும் தொழில்களாகக் கருதப்படுபவை:

    1. உணவு சேகரித்தல்
    2. வேட்டையாடுதல்
    3. மரம் வெட்டுதல்
    4. வேளாண்மை
    5. மீன்பிடிப்பு
    6. சுரங்கத் தொழில்
    7. காடுகள் பராமரிப்பு

    போன்றவை ஆகும். இத்தகைய தொழில்களில் சங்க காலத்திலேயே மக்கள் ஈடுபட்டிருந்தனர் என்பதனைச் சங்க நூல்களின் மூலம் அறிய முடிகின்றது. மேலும் சங்க இலக்கியங்களில் நிலம்சார்ந்த தொழில் முறைகள், நுணுக்கங்கள் போன்ற தொழில்சார்ந்த செய்திகள் ஏராளமாக அடங்கியுள்ளன. சங்க காலத்து நிலவியல் பகுப்புகளின் அடிப்படையில் விளைந்த குறிஞ்சிநிலத் தொழில்கள் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் முக்கியமான நோக்கமாகும்.

    குறிஞ்சிநிலத் தொழில்கள்

    குறிஞ்சி நிலம் என்பது மலை சார்ந்த பகுதிகளைக் குறிக்கின்றது. மலைக்குன்றுகள், அடர்ந்த மரங்கள், கொடிகள், சுனைகள், அருவிகள், பறவைகள், விலங்குகள் போன்றவை மலையின் அங்கங்களாகும். இந்த நிலப் பகுதிகளுக்கு ஏற்ப மக்கள் தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டு, அங்கு நிலவும் தட்ப வெப்பநிலை, பருவ காலங்கள், அந்நிலத்தின் தன்மை போன்றவைகளை அறுதியிட்டு அதற்கு ஏற்ப தங்களது தொழில்களை அமைத்து செழிப்புடன் வாழ்ந்தனர் என்பதனை சங்கப் பாடல்களின் மூலம் அறியலாம். உழவரால் உழுது விதைவிக்கப்படாத இயற்கை வளத்தை உடையது குறிஞ்சி நிலம் என்பதனைப் புறநானூற்றுப் பாடல் (புறம். 109: 3-8) குறிப்பிடுகின்றது.

    வேளாண் தொழில்கள்

    குறிஞ்சி நிலத் தொழில் என்பது மலைவளத்தையும், புன்செய் வேளாண்மையையும், வேட்டைத் தொழிலையும் அடிப்படையாய்க் கொண்டமைந்துள்ளது. தினை, ஐவன வெண்ணெல்லும், புல்லரிசியும், மூங்கிலரிசியும், அவரையும், கிழங்கும், தேனும், வேட்டைப் பொருள்களும் குறிஞ்சி நில மக்களின் அடிப்படை உணவுகள் ஆகும்.

    தினை (ஏனல்)

    எக்காலத்திலும் புன்செய் நிலங்களில் வளர்வதற்கு ஏற்ற பயிராக தினை விளங்குகின்றது. புன்செய் நிலம் என்பது மழை நீரினால் விளைச்சலைத் தரக்கூடிய நிலத்தினைக் குறிக்கும். குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலைசார்ந்த இடமுமாக இருப்பதினால் அங்கு மழையின் அளவு அதிக அளவில் இருக்கும். இதனால் மனித முயற்சியின்றி இயற்கையாகவே நீராதாங்களைப் பெற்ற நிலமாக குறிஞ்சி நிலம் அமைகின்றது. இந்நிலத்தின் முக்கிய பயிராகிய தினையினைப் பற்றியப் பல குறிப்புகள் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. தினை, தினை வகைகள், தினை விதைத்தல், கொல்லையில் விதைத்தல், தினை முளைத்தல், களை நீக்குதல், முதிர்ந்த தினை கதிர்கள், தினை விளைந்த பதம், தினைப்புனத்திற்கு வரும் பாதிப்புகள், யானை தினைப்புனம் புகுதல், பன்றிகள் தினையைச் சேதப்படுத்தல், கானங்கோழி, கிளி போன்றவை தினையினைக் கவர்தல், தினையைப் பாதுகாத்தல், பன்றியைப் பொறி வைத்துப் பிடித்தல், அம்பெய்து விரட்டுதல், விளக்கேற்றி விரட்டுதல், தொண்டகப் பறை முழக்குதல் போன்று பல விதமான உத்திகளைத் தினையினைக் கவர வரும் விலங்கு, பறவைகளை விரட்டப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், பரணில் இருந்து புனம் காத்தல், தினையின் அறுவடைக் காலம், தினையைக் காயவைத்தல், தினை இடித்தல் போன்ற தினையினைப் பற்றிய செய்திகளை அறியலாம். இதனை,

    மலை அயற் கலித்த மைஆர் ஏனல்”32   (நற். 108 : 1) என்னும் நற்றிணைப் பாடலானது தினையினை, ‘மலைப்பக்கத்தே முளைத்துச் செழித்துக் கரிய நிறமுடைய தினை’ என்று குறிப்பிடுகின்றது.

    தினை அறுவடைக்குப் பின் தினைத்தாளைக் கொண்டு குடிசை வேயப்பட்டது என்பதனை,

    இருவி வேய்ந்த குறுங்காற் குரம்பை”33   (குறிஞ்சிப்பாட்டு, வரி. 153) என்னும் குறிஞ்சிப்பாடலானது குறிப்பிடுகின்றது. இதன்மூலம் குறிஞ்சி நில மக்களின் நிலம் சார்ந்த வாழ்வியல் திறத்தினை அறிய முடிகின்றது.

    ஐவனம் அல்லது மலைநெல்

    குறிஞ்சி நிலத்தில் ஐவனநெல் என்னும் வெண்ணெல், தோரை என்னும் நெல், மூங்கிலரிசி போன்றவற்றை விளைவித்தனர். புல்லரிசியானது எறும்புப் புற்றிலிருந்து கிடைக்கப்பெற்ற உணவாக இருந்திருக்கின்றது. மதுரைக் காஞ்சியானது குறிஞ்சி நிலத்தில் விளையும் நெல் பற்றியும், அவற்றுடன் எவையெவை பிணைந்து வளரும் என்பதனை,

    நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
    குறுங்கதிர்த் தோரை, நெடுங்கால் ஐயவி,
    ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி;
    இஞ்சி, மஞ்சள், பைங்கறி, பிறவும்

    பல்வேறு தாரமொடு, கல்லகத்து ஈண்டி” (மதுரைக்காஞ்சி, வரி. 286-290) என்ற பாடல்வரிகள் குறிப்பிடுகின்றன. இப்பாடலானது, மணம் கமழும் அகிலையும், சந்தனத்தையும் வெட்டி, மேட்டு நிலங்களில் விதைக்கப்பட்ட குறிய கதிர்களையுடைய தோரை என்னும் நெல்லும், நெடிய தாளினையுடைய வெண்சிறு கடுகும், ஐவன நெல் என்னும் வெண்ணெல்லுடன் பிணைந்து வளர்ந்த இஞ்சியும், மஞ்சளும், பசுமை வாய்ந்த மிளகுக் கொடியும், ஒழிந்த பல்வேறு பண்டங்களும் கல் தரையில் குவிக்கப்பட்டிருப்பதனைச் சுட்டுகின்றது. 

    குறுந்தொகையில் வரும் குறிஞ்சிப் பாடலொன்று, ‘காந்தளை இயற்கை வேலியாக உடைய இச்சிறுகுடியில் வாழ்பவர், அருவியை உடைய பரந்த நிலத்தில் மலை நெல்லை விதைப்பர். அவற்றிடையே களையாக வளர்ந்துள்ள பருத்த இலையையுடைய காட்டு மல்லிகையையும், பசிய மரலை எனப்படும் ஒருவகை கற்றாழையையும் பறித்து எறிவர். இதனை,

    அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
    பருஇலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
    காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி”  (குறுந். 100 : 1-3) என்றப் பாடலின் மூலம் அறியலாம்.

    எள்

    எள் பற்றிய செய்தியானது சங்கப் பாடல்களில் காணக்கிடைக்கின்றது. கார் காலத்தில் முதலில் தோன்றும் மழை, புதுப்பெயல் எனவும், இளமழை எனவும் கூறப்படும். அக்காலத்தில் தொடர்ந்து பெய்யும் மழை, ‘பழமழை’ எனப்படும். அப்பருவத்தின் இறுதியில் பெய்யும் மழை ‘சில் பெயல்’ எனப்பட்டது. எள்ளிற்கு அதிக மழை பெய்தால், காய்கள் பதனழிந்து, உள்ளீடின்றிப் போகும். உள்ளீடில்லாத காய்கள் ‘சிதட்டுக் காய்’ என்றும் கூறப்படும். இத்தகைய கருத்துக்களைத் தாங்கி நிற்கும் குறுந்தொகைப் பாடலொன்று, பழமழையால் பதம்கெட்டு உருகிய எள்ளின்காய், சின்மழையால் இனிதாய் விளங்கினாற் போல என்பதனை,

    பழமழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய
    சிதட்டுக்காய் எண்ணின் சில்பெயற் கடைநாள்”   (குறுந். 261 : 1-2) என்ற பாடல் வரிகளின் மூலம் விளக்குகின்றது. எள்ளிலிருந்து எண்ணெய் பிழிந்து எடுக்கப்பட்ட செய்தியை நற்றிணைப் பாடலானது எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது”  (நற். 328 : 8) என்ற வரிகளில் குறிப்பிடுகின்றது. மேலும், மலைபடுகடாம் என்ற பாடலானது, ‘பலவாகக் கிளைத்த பசிய எள்ளின் இலைகள் எல்லாம் நீலமணியின் நிறத்தையுடையனவாய் வளர்ந்தன. அவை விதைக்கப்பட்ட கொல்லையின் பக்கத்தில், நீர் இறைக்கும் சால் போன்ற வடிவத்தையுடைய நீர் நிறைந்த சுனைகள் விளங்கின. அக்காட்டின்கண் அரக்குப் பாயாமல், மழைத்துளி தழுவுதலால், இளங்காயாகிய தன்மை நீங்கி, ஒரு பிடியில் ஏழு காய்களைப் பெற்று, எள், நெய் உள்ளே கொள்ளும்படி வளர்ந்தன. இதனை (மலைபடுகடாம், 102-106) என்ற பாடல் வரிகளின் மூலம் அறியலாம். இவற்றிலிருந்து குறிஞ்சி நில மக்களின் வாழ்வில் எள் இடம்பெற்றிருந்தது என்பதனை அறியலாம்.

    அவரை

    குறிஞ்சி நில மக்கள் தினைக்கு ஊடுபயிராக அவரையைப் பயிரிட்டுப் பயன்பெற்றனர் என்பதனை சங்கப் பாக்கள் அறிவிக்கின்றன. மலைபடுகடாம் என்ற பத்துப்பாட்டு நூலானது, ‘அவரைகள், தினை அரிந்த தாள்களில் முற்றிய தயிரின் பிதிர்ந்த சிதறல் போன்ற பூக்கள் உதிர்ந்து, அரிவாள் போன்ற வளைந்த காய்களைக் கொண்டன’  என்றுக் குறிப்பிடுகின்றது. இதனை விளைதயிர்ப் பிதிர்வின் வீஉக்கு, இருவி தொறும், குளிர் புரை கொடுங்காய் கொண்டன, அவரை” (மலைபடுகடாம், 109-110) என்ற பாடலின் மூலம் அறியலாம். மேலும், குறுந்தொகைப் பாடலொன்று இதே செய்தியினைப் பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால் கொழுங்கொடி அவரை பூக்கும்” (குறுந். 82 : 4-5) என்பதில், தினைப் புனத்தில் விதைத்த அவரை, அதன் மறுதாளில் படர்ந்து, பூத்துக் காய்களை உண்டாக்கும். அதாவது, குறவன் ஒருமுறை விதைத்த தினையின் கதிர்களைப் பெற்று மகிழ்வதோடு, அவற்றின் மறுகாலில் விளையும் அவரைக் காய்களையும் பெற்று இன்பம் நுகர்வான் என்பதனை அறியலாம்.

    கிழங்கு அகழ்தல்

    சங்க கால மக்களின் உணவுப் பொருளாக கிழங்கு வகைகள் இருந்துள்ளன. கவலைக் கிழங்கு, வள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு, நூற் கிழங்கு, சேமங்கிழங்கு போன்ற பல கிழங்கு வகைகளைப் பற்றிய செய்திகளும், அவை உணவாகப் பறிமாறப்பட்டன என்ற செய்திகளும் சங்கப் பாடல்களில் காணக்கிடைக்கின்றது. கிழங்கினைப் பண்டமாற்றுப் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தியுள்ளனர் என்பதனையும் அறிய முடிகின்றது. கிழங்கு அகழ்வதற்காக வெட்டப்பட்ட குழி, முதலில் அகழ்ந்தவர்க்கு உரித்தாதலும், அதனைப் பிறர் அகழாமையும் மலைவாழ் மக்களிடம் காணப்படும் இயல்பாக இருந்துள்ளதனை அறியமுடிகின்றது. இத்தகைய ஒழுங்குமுறையினைக் காணும் பொழுது, குறிஞ்சி நில மக்கள் கிழங்கினைப் பயிர் செய்யாமல் இயற்கையாகவே மலைகளில் கிடைக்கப்பெற்ற உணவுப் பொருளாக இருந்துள்ளதை ஒருவாறு உணரமுடிகின்றது. கானவன், அகழ்ந்த குழியில் கிழங்கு முற்றாமை கண்டு, பிற்றை நாள் அகழ்ந்ததை, குறுந்தொகைப் பாடலானது (குறுந். 379 : 1-2) குறிப்பிடுகின்றது. கானவர் கிழங்ககழ்வதற்கு நெடுங்குழி தோண்டிய செய்தியினை ஐங்குறுநூற்றுப் பாடலானது (ஐங். 208 : 1-2) குறிப்பிடுகின்றது.

    தேனெடுத்தல்

    குறிஞ்சி நிலத்தில் மரங்கள் மிகுதியாகக் காணப்பட்டதால் தேன் மிகுந்து காணப்பட்டது. குறிஞ்சி நில மக்கள் தேனெடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர். தேன் என்பது மலையின் வளத்தினைக் குறிக்கும் ஒரு பொருளாக திகழ்ந்திருக்கின்றது. தேன் சிறந்த உணவுப் பொருள் என்பதனை நற்றிணைப் பாடலானது, வண்டுகள் உண்ணுமாறு மலர்ந்த கரிய அடிப்பகுதியைக் கொண்ட வேங்கை மரத்தின் பெரிய கிளையிலே தொடுத்த கொழுவிய கண்களையுடைய தேனடையில் தேனீக்கள் மொய்த்தலால் தேன் கசிந்து கல்லின் குழிகளிலே வடியும். குறவர்களின் இளமகார் அதனை வழித்துண்பர். அவர் உண்டது போக எஞ்சியதை மெல்லிய தலையுடைய மந்தியின் வலிய குட்டிகள் சென்று உண்ணும் என்பதனை  (நற். 168 : 1-5) என்ற பாடல் வரிகள் விளக்குகின்றது. தேனை எடுப்பதற்குக் கருவிகளை பயன்படுத்தியுள்ளனர் என்பதனை மலைபடுகடாம் பாடலானது (மலைபடுகடாம், 315-317), முசுக்கலை தன்னால் ஏறமுடியாது என்று செயலற்றுப் போகக் காட்சிக்கு இனிய உயர்ந்த மலையில் நிலைபேறுண்டாகக் கூட்டி நட்ட கண் ஏணி வழியாகச் சென்று, பெரிய பயன் உண்டாகுமாறு, தேனீக்கள் திரட்டிவைத்த தேனை அழித்துக் கொண்டு வந்ததனைக் குறிப்பிடுகின்றது. இதனைப் போன்றே, மலையின் பக்கத்தில் உயர்ந்த மரங்களிலும், பாறைகளிலும் உள்ள தேனடைகளை எடுப்பதற்கு கண்ணேணி மற்றும் தமாலம் என்னும் கொடியினைப் பயன்படுத்தி ஏறியுள்ளனர் என்பதனை (நற். 292 : 1-3), (கலி. 39 : 9) என்ற இருபாடல்களின் மூலம் அறியலாம்.

    வேட்டையாடுதல்

    ஆதிகாலத்தில் உணவிற்காக வேட்டையாடிய மனிதன், உணவினை உற்பத்தி செய்யக் கற்றுக்கொண்ட பின்னரும் இன்றுவரை வேட்டையாடுதல் என்னும் தொழிலினைத் தொன்மமாகத் தொடர்கின்றான். வேட்டைத் தொழில் என்பது வீரத்தினை வெளிப்படுத்தும் கலையாக இன்று விளங்குகின்றது. குறிஞ்சி நில மக்கள் வேட்டைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பதைச் சங்கப் பாக்கள் எடுத்துரைக்கின்றன. அவர்கள் புலி வேட்டை, யானை வேட்டை, மான் வேட்டை போன்ற பல வேட்டைகளில் ஈடுபட்டுள்ளனர். நாய்களைப் பழக்கி வேட்டைக்குப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், வலையைப் பயன்படுத்துதல், பொறி வைத்தல் போன்ற நுட்பமான முறைகளை கையாண்டுள்ளனர் என்பதனை (அகம். 172 : 6-10), (அகம். 58 :3-4), (நற். 276 : 1-3), (குறுந். 272 : 4-5), (அகம். 182 : 5-8), (அகம். 272 : 13-15), (நற். 212 : 1) என்ற பாடல்களின் மூலம் அறியலாம்.

    முடிவுரை

    குறிஞ்சிநிலப் பகுதிகளுக்கு ஏற்ப மக்கள் தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டனர். அங்கு நிலவும் தட்ப வெப்பநிலை, பருவ காலங்கள், அந்நிலத்தின் தன்மை, நீர் நிலைகள் போன்ற இயற்கை வள ஆதாரங்களோடு நேரிடையாக இணைந்து தங்களது தொழில்களை அமைத்து செழிப்புடன் வாழ்ந்தனர் என்பதனையும், குறிஞ்சி நிலம் சார்ந்த தொழில் முறைகள், நுணுக்கங்கள் போன்ற செய்திகளையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. நிலவியல் பகுப்புகளினால் விளைந்த தொழில்களானது, பழைமையான தொழில்கள் என்று தற்காலத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள தொழில்களுடன் ஒத்துப்போவதனையும் அறியமுடிகின்றது.

    துணைநூற்பட்டியல்

    1. இளம்பூரணர் (உரை), தொல்காப்பியம் பொருளதிகாரம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. முதற்பதிப்பு (1986)
    2. கார்த்திகேசு சிவத்தம்பி, பண்டைத் தமிழ்ச் சமூகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, இரண்டாம் பதிப்பு (2017)
    3. முனைவர் ப. சரவணன், சங்க காலம், கிழக்கு பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு (2015)
    4. பெ. மாதையன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, இரண்டாம் பதிப்பு (2010)

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த்துறை,
    ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,
    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
    திருநெல்வேலி – 627 008.

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180626 Kamadhenu -watercolour-wm-10×14

    காமதேனு கண்ணபிரான் கல்கி அவதாரம்
    ராமன்பின் சந்தி ரவம்சத்து -ஜாமவண்ணன்
    வெஞ்சிறையில் தேவகியை வாட,யசோதையார்
    கொஞ்சிட வந்ததோர் கன்று’’….கிரேசி மோகன்….!

    (அல்லது)
    எளியோரைக் காக்க வலியோரை வாட்ட
    புளியோதரை(சீச்சீ இந்தத் தரை புளிக்கும் என்றே, விடாது கருப்பு(கண்ணன்)….) வந்த புருஷன் -தளிகையாய்(வந்த வேலையாய்)-
    கோக்களை மேய்த்தனர் கோபால விம்சதி
    ’ஆ’க்கள் மாதா(கோமாதா) அடுத்து….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி 166-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. நித்தி ஆனந்தின் கைவண்ணத்தில் உருவான புகைப்படம் இது. இதனைப் ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கிறார் திருமதி. இராமலக்ஷ்மி. இவ்விருவருக்கும் என் நன்றி உரித்தாகின்றது.

    படத்தில் அம்மையார் மிகுந்த அர்ப்பணிப்போடு பானம் ஆற்றுவதுகூட ஒரு தியானம் போலவே இருக்கக் காண்கிறேன்.

    இனி அம்மையின் செயலைத் தமக்கே உரித்தான அழகுத்தமிழ் நடையில் செம்மையாய் வர்ணிக்கக் கவிஞர்கள் அணிவகுக்கிறார்கள்!

    ******

    ”எதிர்பார்ப்பில்லாமல் அனைவருக்கும் உழைக்கும் இந்தப் பெண்மணியல்லவோ கண்கண்ட கடவுள்“ என்று போற்றுகிறார் திருமதி. துளசி அருள்மோகன். 

    தன் பசி நினையாமல் தேநீருடன்
    இந்த பாச பெண்மணி இவ்வளவு மகிழ்ச்சியுடன் காத்திருப்பது
    தன் கணருக்காகவோ
    பிள்ளைக்காகவோ
    பேரக்குழந்தைக்காகவோ
    பாவம் இந்த பெண்மணியின் பசி தீர்க்க இவர்களில் யார் வருவார்?
    எந்த எதிர்பார்ப்புமில்லா
    பெண்ணே நீயே கடவுள்!

    *****

    ”கோடி கொடுத்தாலும் கிட்டாத தாயன்பை மறவாதே; அன்னையைத் துறவாதே!” என்று நல்லுரை நவில்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உண்மை தெய்வம்…

    சூடாய்க் கொடுத்தால் சுடுமெனவே
    சுவையாய்க் காய்ச்சி ஆறவைத்து,
    தேடிப் பிள்ளை குடித்திடவே
    தேனீர் தந்திடும் தாய்மறவேல்,
    கோடி கொடுத்தும் கிடைக்காதே
    கொட்டிக் கொடுக்கும் தாயன்பே,
    வாட மட்டும் விட்டிடாதே
    உண்மை தெய்வம் தாயவளே…!

    *****

    ”தன் பசிமறந்து, அன்பைக் கலந்து உறவுகளுக்காக உற்சாக பானம் ஆற்றும் அன்னைக்கு மாற்று அகிலத்தில் இல்லை!” என்று வியக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    தன் மகனுக்கோ, கணவனுக்கோ
    தேநீர் ஆற்றும் பெண்மணியே!

    வாய்பொறுக்கும் சூட்டிற்குக் குடிக்க ஆற்றுகின்றாய்
    உன் தாகத்தை மறந்து குடும்பத்திற்காகப் பணிசெய்கின்றாய்!

    கொடுத்திடும் உன் தாயன்பிற்கு ஈடு இணையில்லை
    உன் அருமை அறியாத மனிதனும் பெருமையடைவதில்லை!

    இன்முகம் காட்டி, பாசத்தைத் தேநீரில் கலந்து, மகிழ்ந்து
    கொடுப்பதற்காக எதிர்நோக்கும் குடும்பப் பெண்மணியே!

    களைப்புடன் வீடு திரும்புவனுக்கோ இது உற்சாக பானம்
    உன் கையால் கொடுப்பது அன்பும், பாசமும் கலந்த உறவாகும்!

    *****

    சொந்தங்களின் ஆதரவின்றி, கல்வியின் துணையின்றி, காப்பியாற்றியபடி தன்னைத்தானே தேற்றிக்கொள்ளும் முதுமையை உருக்கமாய்ப் படம்பிடித்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    இளமையில் கல்

    பெற்ற மகனும்
    ……….பிரிந்து விட்டான்
    உற்ற மகளும்
    ……….ஓடியே விட்டாள்
    பற்றி ருப்போர்
    ……….பக்கத்தில் இல்லை
    ஆற்றுப் படுத்த
    ……….அண்டியவர் இல்லை
    எத்தனை துன்பம்
    ……….இடறிவிட்டது
    கத்தினால் என்ன
    ……….குழப்பம் தீர்ந்ததா
    என்னைப் போல
    ……….எவரும் இராதீர்.!
    முன்பேநீ யோசி
    ……….முடிவிலே சுகமே.!

    சிறிய வயதில்
    ……….சிறிதளவுக் கல்வி
    அறிவு பெற்றிடும்
    ……….ஆவலெனக் கில்லை
    முதிய வயதிலும்
    ……….முடியாத போதிலும்
    புதிதாய் யோசித்துப்
    ……….பயனும் இல்லை
    இளமையில் கற்பது
    ……….இயலாது போன(அ)து
    அளவிலாத துன்பம்
    ……….அள்ளிக் கொடுத்தது
    மூப்பு வந்தபோது
    ……….முக்கி முனகியிப்போ
    காப்பியாற்றி வாழ்வைக்
    ……….கழிப்பதென் தொழிலே

    *****

    மென்மலர்க் கைகள் கொண்ட பெண்மை ஆயினும், இன்முகத்தோடு செய்யும் வினைகள் அகிலத்தை வெல்லும் ஆற்றல் வாய்ந்தவை என விளம்புகின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    இன்முகத்தோடு செய்யும் வினைகள்… !

    இன் முகத்தோடு செய்யும் வினைகள்…
    இதயம் மகிழச் செய்யும் வினைகள்…
    பன்முகத் திறமைகள் பளிச்சிடும் வினைகள்…
    பலன்கள் பலவும் அளித்திடும் பாரீர்…!

    மென் மலரொத்த கைகளே எனினும்…
    மெல்லிய தேகம் கொண்டவ ரெனினும்…
    அன்பைப் பொழியும் உள்ள மதற்கு…
    அகிலத்தை வெல்லும் ஆற்றல் காணீர்…!

    தேனீ ராற்றும் செயலே ஆயினும்…
    தெய்வம் தொழுதிடும் செயலே ஆயினும்…
    ஒன்றிடும் மனமது இருந்து விட்டாலே…
    ஒளியாய்த் திகழ்ந்திடும் வாழ்வை உணர்வீர்…!

    கண்மூடித் தனமாய் செய்யும் வினைகள்…
    கடமை கருதிச் செய்யும் வினைகள்…
    நன்மையை என்றும் தந்திடா வினைகள்…
    நமக் குதவாது நினைவிற் கொள்வீர்…!

    *****

    பானம் ஆற்றும் பெண்மையின் சிறப்பைத் தம் கானத்தில் விளங்கச் சொல்லியிருக்கும் வித்தகக் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்.

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    அருமை மகளாகப் பூமியில பிறந்தேனே!
    அப்பா மடிமேலே அரசாட்சி செஞ்சேனே!
    தரைமேல நான் நடந்தா என் பாதம் நோகுமுன்னு தோளிலே சுமந்தாரு!
    பதினெட்டு வயசினிலே வாழ்க்கைப்பட்டு வந்தேனே!
    அப்பாவின் சொத்தெல்லாம் சீர் தனமா கொண்டு வந்தேன்!
    என்னைத் தொலைச்சுப்புட்டு, கணவனைத் தேடி வந்தேன்!
    என் புருசன் அழகில சுந்தரன்தான்! அறிவில சூரியன்தான்!
    அம்மா பேச்சத் தட்டாத உத்தமந்தான்!
    அம்மாவின் பேச்சக் கேட்டு என்ன அழவச்ச ஆம்பளதான்!
    மாமியார் பதவி வந்தா மனசு கெட்டுப் போயிருமா?!
    மருமகளும் பொண்ணு என்னும் உண்மை மறந்திருமா?!
    மாமியார் கொடுமைய. அப்பா பாத்தாரு! வாய்விட்டு அழுதாரு!
    மனுசியா நடத்தச் சொல்லி மாமியாரக் கேட்டாரு! கை கூப்பி நின்னாரு!
    மாமியார் மகராசி இரக்கம் காட்டலையே!
    தாலி தந்த. மகராசன் தயவு செய்யலையே!
    போதும் இந்த வாழ்க்கையின்னு நானே முடிவு செஞ்சேன்!
    அப்பா கண் தொடச்சு, அவரோட நான் நடந்தேன்!
    வருசம் பல போச்சு! வாழ்க்கையும் தொலைஞ்சாச்சு!
    சூடான காபித்தண்ணி ஆத்துனா ஆறிடுமே!
    சூடான நிகழ்வுகளை காலம் தான் ஆற்றிடுமே!
    உள்ளுக்குள் அழுதாலும், வெளியில சிரிக்கின்றேன்!
    அம்மா சொல் கேட்டு, மனைவியை வதைக்காதே!
    மனைவி சொல் கேட்டு மாதாவை ஒதுக்காதே!
    இரு கண்ணில் ஒரு கண்ணை குருடாக்க நினைக்காதே!
    குருடாகப் போகாதே!

    மாமியார்க் கொடுமையால் மணமிழந்த தன் மணவாழ்க்கையைக் காப்பியாற்றிக்கொண்டே மனத்தில் அசைபோடும் பெண்மணியாய் இந்த அம்மையாரை அடையாளப்படுத்தி, அவர் வாழ்வின் அவலநிகழ்வுகளைத் தன் கவிதையில் சிறுகதையாய் ஓடவிட்டிருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன். 

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (167)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பவள சங்கரி எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share