இலக்கியம்கவிதைகள்மரபுக் கவிதைகள்

இருப்பது பேரின்பமன்றோ!


எம்.ஜெயராமசர்மா ….. மெல்பேண் … அவுஸ்திரேலியா

பொட்டுவைத்த பூமுகத்தைத் தேடுகிறேன்
புன்சிரிப்பை மறுபடியும் எண்ணுகிறேன்
கட்டழகு உடலமைப்பை காணவில்லை
கையெல்லாம் நடுங்குவதைக் காணுகின்றேன்
சிரித்துநின்ற செவ்வாயைத் தேடுகிறேன்
சிவப்புநிறம் கறுப்பாகி நிற்குதங்கே
என்றாலும் அவளேயென் இணையேயாவாள்
இருக்கும்வரை அவளைத்தான் சொர்க்கமென்பேன்!

கருங்கூந்தல் அவளிடத்தில் காணவில்லை
கண்கூட  ஒளிமங்கி  வெகுநாளாச்சு
முத்துபோன்ற பல்வரிசை எங்கேபோச்சோ
மூச்சுவிட  அவளிப்போ முனுகுகின்றாள்
சுவையாக உணவளித்த அவளின்கைகள்
சுவைப்பதற்கே முடியாமல் ஆகிப்போச்சு
அவள்வாயில் ஊட்டிவிடும் ஆசைகொண்டேன்
அதுவேயென் வாழ்வில் பேரின்பமாச்சு!

ஓடியாடித்  திருந்தஅவள் ஓய்ந்தேவிட்டாள்
உதவிக்கு வருவார்கள் யாருமில்லை
தேடித்தேடி  நான்கண்ட  தேவியிப்போ
செய்திகேட்கும் செவிப்புலனை இழந்தேவிட்டாள்
வாடிவிட்ட  நிலையினிலும்  வடிவாயுள்ளாள்
வயிறார உண்பதற்கு இயலாதுள்ளாள்
என்றாலும் உணவதனை ஊட்டும்போது
என்வாழ்வு இனிக்குதென்று எண்ணுகின்றேன்!

பிள்ளைகளோ  எம்மைவிட்டுப்  பிரிந்தேவிட்டார்
தொல்லைகளே  என்றுவெண்ணி  தூரவுள்ளார்
நல்லபிள்ளை என்றேநாம் வளர்த்தேவிட்டோம்
நட்டத்தை எங்களுக்கே தந்தேவிட்டார்
அல்லல்தரும் வயோதிபத்தை அடைந்தேவிட்டோம்
ஆனாலும் அருகருகே இருக்கின்றோமே
எல்லையிலாத் துன்பமெமை இறுக்கிட்டாலும்
இணைபிரியா இருப்பது பேரின்பமன்றோ ! 

                
Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    இதுவே வாழ்வின் நித்தியம். அந்திமந்தாரையின் அற்புதம்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க