Tag: சமணம்

  • (Peer Reviewed) நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம்

    முனைவா் பு.பிரபுராம்
    முதுமுனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை,
    காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்

               நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம்

    யசோதர காவியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சண்டமாரி (நாட்டார் தெய்வம்) வழிபாட்டு மரபுகளையும் சமண தத்துவங்களையும் ஒப்பிட்டு ஆராய்வது, இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். “நிறுவன மயமாக்கப்பட்ட சமயமான சமணம் தன் தத்துவத்தின் துணைகொண்டு நாட்டார் தெய்வ வழிபாட்டைக் கீழ்நிலைக்குத் தள்ளி, நாட்டாரைச் சமணச் சார்புடையோராக மாற்றியது” என்ற கருதுகோள் இவ்வாய்வில் கையாளப்பட்டுள்ளது. இக்கட்டுரைக்கான முதன்மைச் சான்றாதாரம், யசோதர காவியம். இக்காவியம், ஐந்து சருக்கங்களில் மொத்தம் 330 பாடல்களைக் கொண்டுள்ளது.


    சண்டமாரி வழிபாடு

    ஓதயநாட்டு இராசபுரத்து அரசனான மாரிதத்தன், அவந்திநாட்டு உஞ்சயினியின் அரசனான யசோதரன், அவன் தாய் சந்திரமதி ஆகிய அரச மரபினரும் பொதுமக்களும் சண்டமாரிக்கு உயிர்ப் பலியிட்டு விழா எடுத்த காட்சிகள் யசோதர காவியத்தில் உள்ளன. அக்காட்சிகளிலுள்ள கதையாடல்கள், சண்டமாரி வழிபாட்டில் நிகழ்த்தப்படும் சடங்குகளையும் அவ்வழிபாடு குறித்த நம்பிக்கைகளையும் அளிக்கின்றன.

    ஆண்டுதோறும் வேனிற்காலத்திலும் ஐப்பசித் திங்களிலும் காளிதேவிக்கு விழா எடுக்கும் வழக்கம் மக்களிடையே இருந்தது. அவ்வாறு விழா நிகழ்த்தப்படாவிடின், தேவியானவள் மனம்திரிந்து வெகுளுவாள், துன்பத்தைச் செய்கின்ற நோய்கள் பலவற்றையும் உண்டுபண்ணுவாள், உயிரைக் கொள்ளுதற்குரிய தீங்குகள் பலவற்றையும் செய்வாள், மேலும் பல தீங்குகளும் வந்தடையும் என்பது போன்ற நம்பிக்கைகளை மக்கள் கொண்டிருந்தனா்.

     

              “என்றும் இப்பரு வத்தினோ டைப்பசிச்

               சென்று தேவி சிறப்பது செய்துமஃ

               தொன்றும் ஓரல மாயினம் ஒன்றலா

               நன்ற லாதன நங்களை வந்துறும்” (யசோ.15)

              “நோவு செய்திடும் நோய்பல ஆக்கிடும்

               ஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும்

               தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல்

               காவன் மன்ன! கடிதெழு கென்றனா்” (யசோ. 16)

    ஐப்பசி மாதத்துப் பூா்ணிமைக்கு முன்னதாகிய அட்டமிக்குப் பின்வரும் நாள்களுள் குற்றமில்லாது நிலவும் செவ்வாய்க்கிழமையில் உயிர்ப்பலியிட்டு காளிதேவியின் வீரகண்டையணிந்த திருவடியில் வீழ்ந்து வணங்கினால், அவள் அப்பலியேற்று, பலியிடுவோர்பால் விருப்பமுற்று அவா்க்குத் தீங்கு வராது காப்பாள் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவி வந்தது.

                          “ஐப்பசி மதிய முன்ன ரட்டமி பக்கப் பின்னா்

                        மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னிற்

                        கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியிற் காளாய்

                        மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு மென்றாள்”             

                                                                                                                                                                 (யசோ.136)

    மேலும், மக்கள் காளிதேவி கோவிலை வலம்வந்து தங்கள் இடா்களைய வேண்டுமென்று வணங்கும் முறைமையைக் கொண்டிருந்தனா். அத்துடன் மயில், கோழி, பன்றி, ஆடு, எருமை முதலிய விலங்கினங்களில் இரட்டைகளையும்(Animal Sacrifice) மனிதருள் இரட்டையரையும்(Human Sacrifice) பலியிட்டு வணங்கும் சடங்கு சண்டமாரிக்கு உகந்ததாகக் கருதப்பட்டது.

                “மாவ லோன்வலங் கொண்டு வணங்கினன்

               தேவி யெம்மிடா் சிந்துக என்றரோ” (யசோ.19)

              “மன்னன் ஆணையின் மாமயில் வாரணம்

               துன்னு சூரகம் ஆடெரு மைத்தொகை

               இன்ன சாதி விலங்கி லிரட்டைகள்

               பின்னி வந்து பிறங்கின கண்டனன்” (யசோ. 20)

              “யானிவ் வாளினின் மக்களி ரட்டையை

               ஈன மில்பலி யாக இயற்றினால்

               ஏனை மானுயா் தாமிவ் விலங்கினில்

               ஆன பூசனை யாற்றுதல் ஆறெனா” (யசோ. 21)       

    இவ்வாறு ஆண்டுதோறும் மக்களால் கொண்டாடப்படும் தெய்வம், சண்டமாரி. மனிதப் பலி, விலங்குப் பலி ஆகிய பலிகளை ஏற்று அருள்தரும் நாட்டார் தெய்வமாக அவள் விளங்கினாள். சண்டமாரிக்கு விழா எடுப்பின் தீமையகன்று, நன்மை வந்துசேரும் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டிருந்தனா்.

    சண்டமாரி ஒரு துருத்தேவதை

              நாட்டார் தெய்வமான சண்டமாரியின் உருவச் சிலையைப் பாவத்தின் (தீவினையின்) வடிவம் என்று காவிய ஆசிரியா் கற்பிதம் செய்கிறார்.

                         “பாவ மூா்த்தி படிவ மிருந்தவத்

                        தேவி மாடம்…” (யசோ. 19)

    மேலும் சண்டமாரி மிகுந்த கோபமுடையவள், நடுநிலைமை இல்லாதவள், அவள் மெய்ப்பொருள்களைக் கேட்டறிந்த கேள்வியறிவும் நுண்ணிய நூல்களைக் கற்ற கல்வியறிவும் இல்லாத கீழ்மக்கள் வழிபடும் துருத்தேவதை(கொடிய தெய்வம்) என்றும் பதிவு செய்கிறார்.

                       “சண்டகோபி தகவிலள் தத்துவம்

                        கொண்ட கேள்வியுங் கூரறி வுமிலாத்

                        தொண்டா் கொண்டு தொழுந்துருத் தேவதை

                        சண்ட மாரி தனதிட மெய்தினான்” (யசோ. 18)

    காவிய ஆசிரியா் சண்டமாரியின் பண்பினைக் கொடியதெனக் கூறுவதோடு, அத்தெய்வத்தை வழிபடும் தொண்டா்களை கல்வியறிவும் கேள்வியறிவுமற்றோர் என்றும் கற்பிதம் செய்கிறார்.

    காளி வழிபாடு தீது என்ற சித்திரிப்பு

    ஓதயநாட்டு மக்களின் விழாவயா்வு குறித்த அவாவிற்கிணங்கி மாரிதத்தன் (அரசன்) நகரின் தென்திசைக்கண் உள்ள காளிதேவி கோயிலைச் சென்றடைந்தான். அவன் சென்ற செய்தியைச் சித்திரிக்கும் காவிய ஆசிரியா், “காளிக்கு விழா எடுக்கலாம் என்று நகரமாந்தா் கூறியவுடன் அருளறமாகிய நன்னெறிக்கண் சென்று அறிவு தெளியாதவனாதலால் இச்செயல்(விழா) தீது என்று கூறாமல் இது நல்லதே என்று நகர மாந்தரிடம் மாரிதத்தன் உரைத்தான்” என்கிறார்.

                         “என்று கூறலும் ஏதமி தென்றிலன்

                        சென்று நல்லறத் திற்றெளி வின்மையால்

                        நன்றி தென்றனன் நன்னகரப்புறத்

                        தென்தி சைக்கண் சிறப்பொடு சென்றனன்” (யசோ.17)

    இதன்வழி, காளி வழிபாடு தீது தரும் என்ற சித்திரிப்பினைக் அவா் வழங்குகிறார். மேலும், காளி வழிபாடு செய்வோர் நன்னெறிக்கண் சென்று அறிவு தெளியாதோர் என்றும் உரைக்கிறார்.

    உயிர்ப்பலி வழிபாட்டைக் காட்டிலும் அருக நெறி உயா்ந்தது

    ஓதய நாட்டு மக்கள் கொற்றவைக்கு விலங்குகளுள் இரட்டையைப் பலியிடக் கருதி நிற்க, அரசன் மாரிதத்தன் மக்களுள் உடலியற் குறையற்ற இரட்டையரைப் பலியிடக் கருதினான். அத்தகு இரட்டையரைக் கொணா்க என்று சண்டகருமனுக்கு ஆணையிட, அச்சண்டகருமன் சுதத்த முனிவரின் சங்கத்துள் துறவோராய் இணைந்திருந்து, பிச்சையேற்பதற்காய் நகா்க்குள் நுழைந்த இரட்டையராகிய அபயருசியையும் அபயமதியையும் பலிக்கெனக் கொணா்ந்து பலிபீடத்தின் முன் நிறுத்தினான். பலிக்கு முன் “தங்கட்கு இறைவனாகிய வேந்தன் நிலத்தின்மேல் நீண்டகாலம் வாழ்வானாக என்று வாழ்த்துக” என்று சூழ்ந்திருந்த தளபதி முதலாயினோர் அவ்விரட்டையரைப் பணித்தனா். வறிய புன்முறுவலுடன் பின்வருமாறு மன்னனை அவா்கள் வாழ்த்தத் தொடங்கினா்.

                         “மறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா

                        தறவியன் மனத்தை யாகி ஆருயிர்க் கருள்ப ரப்பிச்

                        சிறையென பிறவி போக்குந் திருவறம் மருவிச் சென்று

                        நிறைபுக ழுலகங் காத்து நீடுவாழ் கென்று நின்றார்” (யசோ.60)

    உலகுயிர்களை வருத்தாமல் அருளறம் நிறைந்த மனமுடையனாய் எல்லா உயிர்களுக்கும் அருளைச் செய்து, உயிர்க்குச் சிறைபோல்வதாகிய பிறப்பினைக் கெடுக்கும் சினேந்திரன் கூறிய அறத்தைக் கடைப்பிடித்து ஒழுகி, அழியாப் புகழை நிறுவி, உலகத்தை இனிது காத்தளித்து, நெடிது வாழ்வாயாக என்று அபயருசியும் அபயமதியும் மன்னனை வாழ்த்தினா். பிறவியானது உயிர்க்குச் சிறைபோன்றது. அவ்வாறு மீண்டும் பிறத்தலை ஒழிக்க வேண்டுமாயின் சமண அறங்களைக் கடைப்பிடித்து ஒழுகவேண்டும் என்றும் பலி வழிபாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றும் இப்பகுதி வலியுறுத்துகிறது.

    யசோதரனும் சந்திரமதியும் பலி வழிபாட்டால் விலங்கு கதியடைதல்

    யசோதரன் தனக்குத் தீய நிமித்தங்கள் நிகழ்ந்ததாகத் தன் தாய் சந்திரமதியிடம் கூறுகிறான். உனக்குத் தெய்வமான காளிதேவிக்கு நீ உயிர்ப் பலியிட்டு வழிபடின், அத்தீயநிமித்தம் நீங்கி, நல்லவை நிகழும் என்று சந்திரமதி உபாயம் உரைக்கிறாள். யசோதரன் உயிர்க்கொலை செய்யின், மறுமையில் தேவ கதியடைவதற்கான தகுதி அகலும், இடா்பல விளையும் என்கிறான். ஆகவே காளிக்கான உயிர்ப்பலியிடலை மறுக்கிறான்.

                          “யானுயிர் வாழ்த லெண்ணி யெளியவா் தம்மைக் கொல்லின்

                        வானுய ரின்ப மேலால் வருநெறி திரியும்….” (யசோ.140)

                       “இன்றுயிர் கொன்ற பாவத் திடா்பல விளையு மேலால்” (யசோ. 141)

    உயிரைக் கொல்லாது மாவால் கோழிசெய்து அதனைச் சண்டமாரிக்குப் பலியிடலாம் என்று சந்திரமதி பதில் உரைக்கிறாள். இவ்வுரையாடலில் யசோதரனின் மனவோட்டமாக ஒரு செய்தியைக் காவிய ஆசிரியா் பதிவு செய்கிறார். “உயிருடைய பொருளொன்றின் வடிவினைச் செய்து அதனைப் பலியிடுவதும் உயிர்க்கொலையேயாம் என்னும் ஓா் அருவருப்பினை யசோதரன் தன் மனத்தே கொண்டிருந்தான்” என்கிறார்.

                “உயிர்ப்பொருள் வடிவு கோற லுயிர்க்கொலை போலு மென்னும்

               பயிர்ப்புள முடைய னேனும் பற்றறத் துணிவில் மன்னன்

               செயிர்த்தவ ளுரைத்த செய்கை செய்தவற் கிசைந்த தென்றான்

               அயிர்ப்பதென் அறத்தின் திண்மை யறிவதற் கமைவி லாதான்” (யசோ.144)

    இவ்வாறு, விலங்குயிர்களைப் பலியிடுவதற்குப் பதிலாக, மக்களால் பதிலீடாகக் கருதப்படும் பொருள்களைப் பலியிடுவதுகூட (Substitute for animal sacrifice) அருவருப்பான செயல் என்ற சித்திரிப்பினைச் சமணம் வழங்குகிறது.

    பின்பு யசோதரன் விலங்குப் பலிக்குப் பதிலீடாகிய பாவனைப் பலிக்கு ஒப்புகிறான். சண்டமாரியை வணங்கிப் படைக்கப்பட்ட மாக்கோழியைத் தலையறிந்து அவன் பலியிட, அது கூவித் துடித்து வீழ்ந்து இறக்கிறது. இதனைக் கண்டு மனம்பொறாத யசோதரன், துறவுபூணும் எண்ணம் கொண்டான். ஆயின் யானைப் பாகனுடன் கள்ளவொழுக்கம் புரியும் யசோதரனின் மனைவி அமிர்தமதி, யசோதரனையும் அவன் தாய் சந்திரமதியையும் உணவில் விடம்கலந்து கொன்றுவிடுகிறாள். அவ்விருவரின் உயிர்களும் விலங்கு கதியை அடைகின்றன. யசோதரனின் மகன் யசோமதி, அவந்திநாட்டு உஞ்சயினிக்கு அரசனாகிறான்.

    யசோதரன், விந்தமலைச் சாரலில் மயிலாகப் பிறக்கிறான். சந்திரமதி, உஞ்சயினி நகா்ப்புறத்துச் சேரியில் நாயாகப் பிறக்கிறாள். அம்மயிலும் நாயும் அரசனாகிய யசோமதியின் அடைக்கலமாக வளா்கின்றன. ஒருநாள் மயில், அட்டபங்கனைக் கண்டு, அவன் கண்களைக் குத்திவிட்டுப் போகிறது. அதனால் அமிர்தமதி அதனைக் கல்லெறிந்து வீழ்த்த, நாய் அம்மயிலை வாயால் கவ்விக் கொன்றுவிடுகிறது. அதுகண்ட அரசன் ஆராயாது, நாயைக் கொல்கிறான். பின் மயில் முள்ளம்பன்றியாகப் பிறந்துழலும்போது, நாய் கருநாகமாய் வரக்கண்டு அதைக் கொல்கிறது. அப்பன்றியைச் சிங்கம் என்று கருதிய கரடி, பாய்ந்து கொன்றுவிடுகிறது. பன்றி மீனாய்ப் பிறக்க, கருநாகம் முதலையாய்ப் பிறக்கிறது. அரண்மனையில் பணியாற்றும் கூனியை முதலை கொல்ல, முதலையை அரசன் கொன்றுவிடுகிறான். வலையிற்பட்டு மீன் மாள்கிறது. முதலை ஒரு பெண்ணாடாய்ப் பிறக்க, மீன் ஆணாடாய்ப் பிறந்து அப்பெண்ணாட்டைக் கூடுகிறது. அதனைக் கண்ட கிடாவொன்று ஆணாட்டை மோதிக் கொல்ல, அது பெண்ணாட்டின் கருவில் தங்கிப் பிறக்கிறது. வேட்டைக்குச் சென்ற யசோமதியால் தாயாடு கொல்லப்படுகிறது. தகா் மட்டும் புலைச்சேரியில் வளா்கிறது. அத்தகா் யசோமதியின் முன்னோர் சிரார்த்தத்திற்காகக் கொல்லப்படுகிறது. யசோதரனாகிய அந்த ஆடு, மீண்டும் ஆடாகப் பிறக்கிறது. சந்திரமதியாகிய ஆடு, எருமையாய்ப் பிறக்கிறது. எருமை அரசனின் மாவை முட்டிக் கொல்ல, அரசன் அவ்வெருமையைக் கொன்றுவிடுகிறான். அமிர்தமதியின் உணவிற்காகத் தகா் கொல்லப்படுகிறது. பின்பு யசோதரனும் சந்திரமதியும் நகா்மருங்கில் உள்ள பறைச்சேரியில் கோழிகளாகப் பிறக்கின்றனா். யசோமதி அக்கோழிகள் இரண்டையும் கண்டு விருப்பமுற்று அரண்மனைக்குக் கொணா்ந்து வளா்க்கிறான். இறுதியில் அக்கோழிகள் இரண்டும் யசோமதி எய்த அம்பினால் இறந்துபட்டு யசோமதியின் மனைவியான புட்பாவலியின் மணிவயிற்றில் அபயமதியாகவும் அபயருசியாகவும் பிறப்பெய்துகின்றன.

    யசோதர மன்னனும் அவன் தாய் சந்திரமதியும் விலங்கு கதியில் பிறந்து அடைந்த இவ்வகைத் துன்பங்களுக்கு, முற்பிறப்பில் அவா்கள் மாவால் செய்யப்பட்ட கோழியொன்றைக் கொன்றதே காரணமாகும் என்று காவியம் கற்பிதம் செய்கிறது.

                “இன்னுமீ தைய கேட்க யசோமதி தந்தை யாய

               மன்னவ னன்னை யோடு மாவினற் கோழி தன்னைக்

               கொன்னவில் வாளிற் கொன்ற கொடுமையிற் கடிய துன்பம்

               பின்னவா் பிறவி தோறும் பெற்றன பேச லாமோ” (யசோ.250)

    இவ்வாறு பலிவழிபாட்டால் மறுமையில் தேவ கதியடைவதற்கான தகுதி அகன்று, உயிர்க்குத் தீமை விளையும் என்ற தத்துவாத்தச் சிந்தனையைக் காவியம் வழங்குகிறது. விலங்குப் பலிக்குப் பதிலீடான பாவனைப் பலியால் யசோதரனும் சந்திரமதியும் மறுமையில் விலங்குகளாகப் பிறந்து பல்வேறு துன்பங்களை அடைந்தனா் என்றும் உரைக்கிறது. ஆகவே இத்தகு பலி வழிபாட்டுடன் இணைந்த நாட்டார் தெய்வ வழிபாட்டை விட்டகன்று, சமண நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற வேண்டுகோளைக் காவியம் விடுக்கிறது.

    முடிவுகள்

    • தத்துவார்த்த அடிப்படையில் நாட்டார் தெய்வ வழிபாடு கீழானது என்று யசோதர காவியம் கற்பிதம் செய்கிறது. நாட்டார் தெய்வத்தின் உருவமானது பாவத்தின் வடிவம் என்ற மாயத் தோற்றத்தினை உருவாக்க, அக்காவியம் முயன்றுள்ளது.
    • நாட்டார் தெய்வத்திற்கு உயிர்ப்பலியிட்டு வழிபடல் பாவம் (தீவினை) என்ற கருத்தியலை மக்கள் மனத்தில் விதைப்பதற்காகவே யசோதர காவியம் படைக்கப்பட்டுள்ளது. அப்பாவத்தால் மறுமையில் உயிர்க்குத் தீய பலன் கிட்டும் என்றும் காவிய ஆசிரியா் எச்சரிக்கிறார். இத்தத்துவார்த்த அச்சுறுத்தலுக்கு அஞ்சியோர், நாட்டார் வழிபாட்டை விடுத்து, சமண சமயத்திற்கு மடைமாறிய காட்சிகள் பல, காவியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சான்றாக மாரிதத்தன், சண்டமாரி வழிபாட்டை விட்டகன்று சமண நெறியேற்றதைக் கூறலாம்.
    • மேலும், நாட்டார் தெய்வத்திற்கு உயிர்ப் பலியிடுதலைப் பாவம் (தீவினை) என்று கருதிய மக்கள், அதற்குப் பதிலீடாக (Substitute for animal sacrifice) உயிரற்ற பொருட்களைப் பாவனைப் பலியாக அளித்தனா். அதன்வழி, தங்கள் தெய்வ வழிபாட்டைத் தொடா்ந்தனா். அவ்வாறு நாட்டார் வழிபாட்டில் நிலைநின்ற மக்களையும் சமணம் தன்வழிக்குத் திருப்ப முயன்றுள்ளது. அதற்கு யசோதரனின் கதையைப் பக்கபலமாக அமைத்துக்கொண்டது.

    முதன்மைச் சான்றாதாரம்

    * யசோதர காவியம் மூலமும் உரையும் – ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (உரையாசிரியா்),  2009, சாரதா பதிப்பகம், சென்னை.

    =======================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    முதற்கண் முனைவர் பு.பிரபுராம் அவர்களை வாழ்த்தி, என் மதிப்பாய்வை வழங்குகிறேன்.

    ஆய்வாளர் தன் ஆய்வுக் கருவாக, “நிறுவன மயமாக்கப்பட்ட சமயமான சமணம் தன் தத்துவத்தின் துணைகொண்டு நாட்டார் தெய்வ வழிபாட்டைக் கீழ்நிலைக்குத் தள்ளி, நாட்டாரைச் சமணச் சார்புடையோராக மாற்றியது” என்ற கருதுகோளை முன்வைக்கிறார். இக்கூற்று சற்று அதிகப்படியாகத் தோன்றுகிறது.

    யசோதர காவியத்தின் ஆசிரியர், தான் நூல் ஆக்கியதற்கான காரணத்தைத் தொடக்கத்தில் கூறியதை (நூல் நுவல் பொருள் – பாடல் எண் – 4) இவ்வாய்வாளர் கவனத்தில் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. யசோதரம் ஆசிரியர் இப்பாட்டில், “வெவுரு செய்யும் வினைப்பய னிற்றேனத் தெரிவு றுப்பதுஞ் செப்புத லுற்றதே” என்று நூல் யாத்ததற்கான காரணத்தை தெரிவிக்கிறார். உயிர்களுக்கு வினைவரும் வழியை அடைப்பதையும், தீவினை இதுவென்று தெரிவித்து, நல்வினைப் பயனை அடைவிப்பதற்கும் வடநாட்டில் வழங்கிய இக்கதையைத் தமிழில் ஆக்கியிருக்கிறார். இதுவே இந்நூலின் நோக்கமாகவும், அந்நோக்கத்தின் ஊடே பயணிக்கும்போது, தீவினைக்குக் காரணமானவற்றை அகற்ற, கதைக்கு ஏற்றவாறு சில புனைவுகள் மூலம் கொல்லாமை அறம் சூழ மாந்தர்களைப் படைத்து தன் நூலின் நோக்கமான “பாவனையின் மூலம் செய்யும் செயலும் தீவினைக்கு வித்தாகும்” என்பதை அறிவுறுத்துகிறார்.

    அப்படித்தான் மனித, மிருக பலியீடு என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிப்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமேயன்றி நாட்டார் மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்வதற்காக இந்நூல் எழுதியிருப்பது போன்று தன் ஆய்வைக் குறித்திருப்பது, சமண அறத்தையும், சமண இலக்கியங்களின் நோக்கத்தையும் ஆய்வாளர் எளிதில் உள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது.

    இவ்வாய்வாளர் இக்கட்டுரையின் தலைப்பை “ சமணம் மறுக்கும் நாட்டார் வழிபாட்டு மரபு” என்று தலைப்பிட்டிருந்தால் நன்றாக அமையும். என் மதிப்பாய்வு, ஆய்வை குறைகூறும் நோக்கில் அமைந்ததன்று.

    =======================================================

    Share
  • (Peer Reviewed) காப்பியங்களில் சமணம் கட்டமைக்கும் பெண்கள் நிலை

    முனைவர் பெ.சுமதி
    உதவிப் பேராசிரியர்,
    ஒப்பிலக்கியத் துறை,
    தமிழியற்புலம்,
    மதுரை காமராசர் பல்கலைக் கழகம்,
    மதுரை -21.

    காப்பியங்களில் சமணம் கட்டமைக்கும் பெண்கள் நிலை

    முன்னுரை

    தமிழ் மொழி, உலகம் போற்றும் தொல் மொழியாம். இவற்றில் எழுந்த இலக்கியங்களும் இலக்கணங்களும் செம்மொழி அந்தஸ்துடன் இன்று, பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இங்குப் பல்வேறு மதங்கள் உள்ள நிலையில், சமண மதமும் பல்வேறு மன்னர்களாலும் பின்தொடரப்பட்டு கைவிடப்பட்ட மதங்களில் ஒன்றாகும். தென்னிந்தியாவில் சமண மதம் வேரூன்றி இருந்த சமயத்தில் தமிழ் இலக்கியங்களில் அற நூல்களும் இலக்கணங்களும் தோன்றி, நம் மொழிக்குச் சிறப்பினைப் பெற்றுத் தந்தன.

    சமயக் காழ்ப்புணர்வால் சமண மதம் ஒட்டுமொத்தமான வீழ்ச்சிக்கு உட்பட்டது என்பது, நல்ல இலக்கிய நூல்களுக்கு இழப்பேயாம். இந்திய மதங்களில் நிறுவன தெய்வ வழிபாட்டுக் கடவுளர் முறையில் பெண் கடவுளர்களுக்கு உரிய முக்கியத்துவம் இருந்தாலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும், புறந்தள்ளப்படுதலும் காலம் காலமாகவே இருந்துகொண்டு தான் இருக்கின்றது. அது மதத்தாலும் இருந்திருக்கின்றது. அதற்குச் சமணமும் விதிவிலக்கு இல்லை என்ற கோணத்தில் ஆராய்வதை இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    சமணம் – பொருள்

    சங்கம் மருவிய காலம், அற இலக்கியக் காலமாகக் கருதப்படுகின்றது. தமிழ் இலக்கியத்திற்குச் சமணர்கள் ஆற்றிய பங்களிப்பே இதற்குக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    “சமணர் (ஸ்ர்மணர்) என்றால் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவு பூண்டோரே வீடு பெறுவர் என்று இந்த மதம் சாற்றுகிறது. எனவே, துறவு எனப் பொருள்படும் சமணம் என்னும் பெயர் இந்த மதத்திற்குச் சிறப்புப் பெயராக வழங்கப்படுகிறது. புலன்களையும் கர்மங்களையும் ஜயித்தவர் (வென்றவர்) ஆகலின் தீர்த்தங்கரர்க்கு ஜினர் என்னும் பெயர் உண்டு. ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் எனப்பட்டது. சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு.” (மயிலை.சீனி வேங்கடசாமி.1954.1)

    சிறு உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்று நினைக்கின்ற சமணர்கள், கடுமையான துறவு வாழ்க்கை மேற்கொண்டவர்கள். சமணர் என்றால் துறவிகள் என்றும் ஐம்புலன்களையும், உலகப் பற்றையும் வெறுத்தவர்கள் என்றும் கூறுவதிலிருந்து சமணத்தின் பொருளை அறிந்துகொள்ள முடிகின்றது.

    சமண சமயத் தத்துவம்

    சமண சமயத்தின் தத்துவமாக, “உயிர், உயரல்லது, புண்ணியம், பாவம், ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்பனவாம். இவற்றை முறையே ஜீவன், அஜீவன், புண்ணியம், பாவம், ஆஸ்ரவம் ஸம்வரை, நிர் ஜரை, பந்தம், மோக்ஷம் என்றும் கூறுவர்.” (மயிலை.சீனி வேங்கடசாமி.1954.9)

    மேற்கூறிய ஒன்பது பொருள்களும் சமண சமயத்தின் தத்துவமாகக் கூறப்படுகின்றன. சமணப் பெண் துறவிகள், சமண சமயத்தில் பெண் பிறப்பு இழிவாகக் கருதப்பட்டது என்பதை, “பெண்பிறவி தாழ்ந்த பிறவி என்பதும், பாவம் செய்தவர் பெண்ணாகப் பிறக்கிறார் என்பதும் சமண சமயக் கொள்கை. பெண்ணாகப் பிறந்தவர், வீடுபேறு (மோட்சம்) அடைய முடியாது என்பதும் சமண மதத் துணிபு ஆகும்.

    அவர்களுள், சுவேதாம்பர சமணர், பெண் பிறவிக்குச் சற்று உரிமை கொடுக்கின்றனர். இல்லறத்தை நீக்கித் துறவு பூண்டு, மனத்தை அடக்கி, உடம்பை வருத்தித் துன்பங்களைப் பொறுக்கும் ஆற்றல் பெண் மகளிர்க்கு இல்லாதபடியினால், அவர்கள் பெண் பிறப்பில் வீடுபேறடைய முடியாதென்றும், ஆனால், அவரும் துறவு பூண்டு மனவுறுதியோடு முயல்வார்களாயின் வீடுபேறடையக் கூடும் என்றும் சுவேதாம்பரச் சமணர் கூறுகின்றனர்.

    ஆனால், திகம்பர் சமணர், பெண் பிறவியில் வீடுபேறடைய முடியாதென்றும், பெண்கள் ஆணாகப் பிறந்து, துறவு பூண்டு நோற்றால் தான் வீடுபேறடைய முடியும் என்றும் கூறுகின்றனர். ஒருவன் யாரையேனும் வஞ்சனை செய்தால், அவன் அடுத்த பிறப்பில் பெண்ணாகப் பிறப்பான் என்பது சமண சமயக் கொள்கை”(மயிலை.சீனி
    வேங்கடசாமி.1954.185) என்று கூறப்படுகின்து.

    ஒரு பெண், பெண்ணாகப் பிறந்த காரணத்தினாலே வீடு பேற்றை அடைய முடியாது என்பதும் ஆணாகப் பிறந்தால் வீடு பேற்றை அடைய முடியும் என்றும் கூறும் சமண சமயம், பெண் பிறப்பை வெறுத்த நிலையை அறிய முடிகின்றது. பெண் பிறப்பை வெறுப்பதற்குக் காரணம், பெண்கள் உலகப் பற்றை விட்டொழிக்க முடியாது என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. இல்லற வாழ்க்கையை நீங்கி, துறவு மேற்கொள்வது பெண்களுக்கு இயலாத செயல் என்பதால் பெண்களுக்குச் சமணத்தில் துறவுக்கு இடமில்லை என்பது குறிப்பிடப்படுகின்றது.

    சமணர்களின் அறங்கள்

    சமணர்கள், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகம் வந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கொள்கை, சங்க மருவிய காலத்தில் மக்களிடையே பரவுகின்றது, “கொலை, களவு, காமம், மது, மாமிசம் என்னும் பஞ்சமா பாதகங்களை ஒதுக்கி, உலகம், இளமை, யாக்கை முதலியவற்றின் நிலையாமையைப் போற்றி, தூய்மையாக வாழ்ந்த சமணர், போர், வேட்டை, காதல், கொள்ளை, மது, மாமிசம் என்று வாழ்ந்த தமிழ் மக்களை அற வழியில் இட்டுச் செல்ல, இயன்ற அளவு முயன்றிருப்பர். சங்க மருவிய காலச் சூழ்நிலை அவருக்குச் சாதகமாக அமைந்தது” (ஆ.வேலுப்பிள்ளை, 2011:31) என்று சமணர்களின் அறநெறிச் சிந்தனை கூறப்படுகின்றது.

    மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் அறக் கருத்துகளை எடுத்துக் கூறுகின்ற இலக்கியங்கள், சமணர்களால் படைக்கப்படுகின்றன. சமுதாயத்தைக் கட்டமைப்பிற்குள் வைக்க விரும்பிய சமணர்கள், பெண்களின் பண்புகளை வரையறை செய்கின்றனர்.

    “எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம், சிறுகாலை
    அட்டில் புகாதாள் அரும்பிணி, – அட்டதனை
    உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய் – இம்மூவர்
    கொண்டானைக் கொல்லும் படை.”

    (பாலசுந்தரம் பிள்ளை. (உ.ஆ), நாலடியார், 2007:363)

    கணவன் சொல்லைக் கேட்காமல் எதிர்த்துப் பேசுகின்றவள் எமன் போன்றவள், காலையில் எழுந்தவுடன் சமையல் அறைக்குச் செல்லாதவள் போக்க முடியாத அரிய நோய், சமைத்த உணவைத் தன் கணவனுக்குப் படைக்காதவள் வீட்டிலேயே இருக்கும் பிசாசு, இந்த மூவரும், கொண்ட கணவனைக் கொல்லும் கருவிகள் ஆவார் என்று பெண்கள் பண்பைக் கட்டமைக்கின்றனர். கணவனுக்குக் கட்டுப்பட்டு வாழாத பெண்கள், கணவனைக் கொல்லும் கருவி போன்றவர்கள் என்று பெண்களின் இல்லற வாழ்க்கை கட்டமைக்கப்படுகின்றது.

    சிலப்பதிகாரம்

    கண்ணகியின் முன்பிறவி பற்றி மதுராபுரித் தெய்வம் கண்ணகியிடம் கூறுகின்றது.

    “கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள்
    எம்முறு துயரம் செய்தோர் யாவதும்
    தம்முறு துயரம் இற்று ஆகுக! என்றே
    விழுவோள், இட்ட வழுஇல் சாபம்
    பட்டனிர் ஆதலின் கட்டுரை கேள் நீ!”

    (வ.த.இராமசுப்பிரமணியம் (உ.ஆ), சிலப்பதிகாரம், ம.கா.க.கா.2005:166-170)

    இதில் கண்ணகி, தான் சாபம் பெற்ற நிகழ்வை அறிகின்றாள். கலிங்க நாட்டிலுள்ள சிங்கபுரத்தை வசு என்பவனும், கபில புரத்தைக் குமரன் என்பவனும் ஆட்சி செய்து வந்தனர். இருவருக்கும் அடிக்கடி போர் நிகழும். சிங்கபுரத்தைச் சேர்ந்த சங்கமன் என்ற வணிகன், தன் மனைவி நீலியுடன் கபிலபுரத்து வீதிகளில் பொருட்களை விற்றுக்கொண்டிருக்கிறான். உன் கணவனாகிய கோவலன், அப்பிறப்பில் பரதன் என்ற பெயரில் இருந்தான். சங்கமனைப் பார்த்த பரதன், இவன் எதிரி நாட்டு ஒற்றனாக இருக்கலாம் என்று கூறி, அரசனால் கொலைக் களத்தில் வெட்டப்படுகின்றான். இதை அறிந்த சங்கமனின் மனைவி நீலி, அழுது புலம்பி, பதினான்கு நாட்கள் அலைந்து திரிந்து, பின் மலையுச்சியில் ஏறி, விழுந்து உயிர் துறக்கின்றாள். அவள் உயிர் துறக்கும் போது தான் அடைந்த துன்பத்தைத் தனக்குத் துன்பத்தை உண்டாக்கியவனும் அடைவதாக என்று சாபம் கொடுத்தாள் என்று மதுராபுரித் தெய்வம் கூறுகின்றது.

    முனிவர்களும் கற்புடைய பெண்களும் சாபம் கொடுக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்று கூறப்படுகின்றது. இங்கு நீலி என்பவள் சாபம் கொடுத்தாள் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். சாபம் கொடுத்தல் என்பது இவர்களுக்கு எளிமையான செயல். அதில் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள், பெண்கள். சாபம் கொடுப்பதற்கு முன்பு, சாபம் பெறக்கூடியவர்களிடம் எந்த விளக்கமும் கேட்கப்படுவதில்லை. சாபத்திற்கான விளக்கம் கேட்கப்படாமலேயே பெண்களுக்குச் சாபம் கொடுத்தல் என்பது, அவர்களின் உரிமைகளை அவர்கள் கேட்டுப் பெற்றுவிடக் கூடாது என்பதையே காட்டுகின்றது. கோவலன் செய்த தவறுக்கு அவன் சாபத்தை அனுபவிக்க வேண்டும். மாறாகக் கண்ணகியும் சேர்ந்து அனுபவிக்க வேண்டிய நிலையை எண்ணும் போது, கணவன் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக வாழ வேண்டிய கட்டாய நிலையை இளங்கோவடிகள் கண்ணகிக்கு உருவாக்கி இருக்கின்றார் என்பது உணர்த்தப்படுகின்றது.

    சீவக சிந்தாமணி

    சீவக சிந்தாமணியில் விசயை துறவு மேற்கொள்ளப் போவதாகத் தன் மகன் சீவகனிடம் கூறுகின்றாள். இதை அறிந்த சீவகனும் இராசமாபுர மக்களும் பெருந்துன்பம் அடைகின்றனர். அந்த நிலையில் சுநந்தையுடன் விசயை தவம் மேற்கொள்வதற்காகப் பம்பை என்பவள் உபதேசம் செய்கின்ற இடத்தை அடைந்து,  பெண்பிறப்பை விட்டொழித்து, இந்திரர்களாய்ப் பிறந்தார்கள் என்பது, சமணத்தில் பெண்பிறப்பிற்கு மோட்சம் இல்லை என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது.

    முடிவுரை

    சமணர்கள் அறக் கருத்துக்களை சமுதாயத்திற்கு வலியுறுத்தினார்கள் என்று கூறப்படுகின்றது. ஆனால் சமணர்கள் ஆணுக்கு ஓர் அறம், பெண்ணுக்கு ஓர் அறம் என்று பாகுபடுத்தி, அறத்தை வலியுறுத்தியிருக்கின்றார்கள். குறிப்பாக ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியை சமணம் வலியுறுத்தியதாகக் காணப்படுகின்றது. பெண்பிறப்பு, சமணத்தில் இழிபிறப்பாகப் பார்க்கப்பட்டதோடு பெண்ணுக்கு மோட்சம் இல்லை என்ற கருத்தை வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.

    துணை நூல்கள்

    1. இராசாராம். துரை(உ.ஆ), சீவக சிந்தாமணி, முல்லை நிலையம், சென்னை, 2001
    2. இராமசுப்பிரமணியம் வ.த(உ.ஆ), சிலப்பதிகாரம், திருமகள் நிலையம், சென்னை, 2005
    3. பாலசுந்தரம் பிள்ளை.தி.சு.(உ.ஆ), நாலடியார், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், திருநெல்வேலி, 2007
    4. சீனி வேங்கடசாமி. மயிலை, சமணமும் தமிழும், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், திருநெல்வேலி, 1954
    5. வேலுப்பிள்ளை.ஆ., தமிழர் சமய வரலாறு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு-சென்னை: 2011

    ========================================================

    ஆய்வறிஞர் கருத்துரை:

    முதற்கண் முனைவர் பெ.சுமதி அவர்களை வாழ்த்தி, இந்த மதிப்பாய்வை வழங்குகிறேன்.

    ஆய்வு என்பது நாம் எடுத்துக்கொண்ட பொருளைப் பல திறக்குகள் மூலம் அவற்றின் முழுப் பொருளையும் உணர்ந்து, ஆய்ந்து, காய்த்தல், உவத்தல் அகற்றி பின், அது இட்டுச் செல்லும் வழியைக் கண்டடைவதாகும். இதைச் சரியாகப் புரிந்து தன் ஆய்வுக் கட்டுரையை ஆக்கியிருக்கிறார். எனினும், இவர் சமண மெய்யியலை முழுதும் உள்வாங்கவில்லை என்பது சிற்சில இடங்களில் தெரிகிறது.

    சமண மெய்யியல், “உயிர்” சார்ந்து அல்லது உயிரைச் சுற்றி எழுந்த மெய்யியல். அது சமணத்தின் தனித்துவமான மற்ற சமய மெய்யியல்களுக்கு அடித்தளமாகவும் அமைந்தது. சமண மெய்யியலின்படி உயிர் அருவமானது, நிறம் அற்றது, பாலினம் இல்லாதது. உயிர் தான் ஏற்ற உடம்பிற்கு ஏற்றவாறு சுருங்கி, விரியக்கூடியது, உயிர் தன் வினைத் துகள்களை முற்றாக விடும்போது மேல்நோக்கிச் செல்லக் கூடியது. இதில் கட்டுரையின் கருவிற்கு உகந்ததான உயிர்க்குப் பாலினம் இல்லை. அதாவது உயிரில், ஆண், பெண், அலி என்ற பாகுபாடு கிடையாது என்பதையும் விளங்கிக்கொண்டு தன் ஆய்வை மேற்கொண்டிருந்தால் இன்னும் சிறந்திருக்கும். சமண மெய்யியலின்படி, உயிரானது பற்றுகளிலிருந்து நீங்கி, நல்வினை, தீவினைகளை அகற்றி, வீடுபேறு பெறல் வேண்டும். ஆயின், பற்றுகள் நீங்க வேண்டுமானால் முற்றும் துறத்தல் என்பது இன்றியமையாதது. முற்றும் துறத்தல் அம்மணம். இது உயிர் ஏற்றுக்கொண்ட உருவம், பெண் உடலாகவிருந்தால் சாத்தியமில்லை என்பதால் சமணத்தில் பெண் உடலை ஏற்ற உயிர்களுக்கு வீடுபேறில்லை என்ற கருத்து உருவானது.

    ========================================================

    Share
  • சமணக் கல்வெட்டுக்களும், சங்ககாலச் செஞ்சியும்

    நிலவளம் கு.கதிரவன்

           மொழியைக் குறித்த சொல்லே காலத்தையும் குறிக்கும்.  அத்தகைய  சிறப்பு வாய்ந்த சொல் ” தமிழ் ”.  ஆம்.  சங்கத் தமிழ் என்றாலே சங்க காலத்தையும் குறிக்கும் சொல்லாடலாக உள்ளது நமது தனித் தமிழ்ச் சிறப்பாகும்.  சங்க காலம் தொடர்பான கால வரையறையில் சிற்சில வேறுபாடுகள் இருந்தாலும் கி.மு.5ம் நூற்றாண்டு  முதல் கி.பி.3ம் நூற்றாண்டு வரையிலான காலத்தை சங்க காலம் என  பெரும்பாலான அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அக் கால வரையறையின் வாயிலான பற்பல ஆய்வுகள் மேற்கொண்டு மொழி, கலை, பண்பாடு, நாகரிகம் தொடர்பான ஆய்வுரைகளை வழங்கியுள்ளனர்.

    தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் வளர்த்த நமது தமிழ்ச் சமூகம், தமிழ் எழுத்துக்கள் இன்றைய பயன்பாட்டில் பயன்படுத்தும் வடிவத்திற்கு முன்னர் சங்க காலத்தில்  பிராமிய வடிவத்தில் இருந்தது.  சங்க காலத்தில் தமிழ் மொழிக்கு வழக்கில் இருந்தது தமிழி அல்லது தமிழ் பிராமி எழுத்துரு வகையே ஆகும்.  பிராமிய எழுத்துருவை ஆய்வாளர் ஐராவதம்  மகாதேவன் அவர்கள் தமிழ் பிராமி என்றும், ஆய்வாளர் நாகசாமி அவர்கள் தமிழி என்றும், நடனகாசிநாதன், பேராசிரியர் ராசவேல் அவர்கள் தொன்மைத் தமிழ் எழுத்துக்கள் என்றும் அழைக்கின்றனர்.

    வடஇந்திய பிராமி எழுத்துக்களுக்கும், சங்க காலத்தில்  தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த எழுத்துக்களுக்கும் உருவ அளவில் ஒற்றுமை உண்டு. ஆனால் இதில் பல வேறுபாடுகள் இருந்தன.  தமிழில் உள்ள ழ,ள,ற,ன போன்ற எழுத்து வடிவங்கள் வட பிராமியில் இல்லை.  இந்தியாவின் பிற பகுதிகளில் கிடைக்கும் பிராமி எழுத்துக்கள் புத்த தர்மத்தைப் போதிக்கும் பிராகிருத மொழியில் இருக்கும் பொழுது, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.  எனவே இந்திய பிராமியிலிருந்து வேறுபடுத்தி உணர்த்தும் பொருட்டு தமிழ் பிராமி அல்லது தமிழி என்றழைத்தனர்.  இவற்றை சங்க காலத் தமிழ் எழுத்துக்கள் என்றே கூறலாம்.

    சமணக் கல்வெட்டுகள் வாயிலாக தமிழின் தொன்மையையும், தமிழர்களின் பண்பாட்டு வாழ்வியல் முறைகளையும் நாம் அறியலாம்.  இக் கல்வெட்டுகள் அனைத்தும் தமிழ் பிராமி எழுத்துரு வடிவங்களிலே இருப்பது இதன் தொன்மையை பறைசாற்றுகிறது. அதனால் இவை சங்க கால கல்வெட்டுகள் என்றும், தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் என்றம், தொல்தமிழ்க் கல்வெட்டுகள் என்றும் பலவாறாக அழைக்கப்படுகிறது.  இதுவரை 32 இடங்களில் ஆய்வு செய்து கிடைத்த 95 கல்வெட்டுகளில் 5 விழுப்புரம்  மாவட்டத்திலும், குறிப்பாக செஞ்சி மற்றும் செஞ்சி வட்டத்தை உள்ளடக்கிய பகுதிகளில் 4 கல்வெட்டுகள் இருப்பது செஞ்சி பகுதியின் சிறப்பாகும். திருக்கோவலூர் ஜம்பையில்  1 கல்வெட்டு உள்ளது. இதன் வாயிலாக செஞ்சி சங்க காலத்தில் சிறப்பு பெற்ற பகுதியாக இருந்தது இவ்வாய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    சங்க காலத்தில் செஞ்சி :

    சங்க கால செஞ்சியின் சிறப்புகளை அறிவதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது தமிழ்பிராமியக் கல்வெட்டுகளான சமணக் கல்வெட்டுகளே ஆகும்.  பிராமிய எழுத்து என்ற பெயரே, சமண சமயத்தின் முதல் தீர்த்தங்காரரான ரிஷப தேவருக்கு இரு மகள்கள் என்றும் அவற்றுள் ஒருவர் பெயர்  சுந்தரி, மற்றொரு மகளின்  பெயர் ”பிராம்மி” என்றும், சுந்தரி மொழியையும், பிராமி எழுத்தையும் குறிப்பதாகவும், இதன் வாயிலாகவே பிராமி எழுத்துரு பெயர் வழக்கு வந்தது என்றும்  ஆய்வாளர் கணேசன்  அவர்கள் கூறுகின்றார்.

    தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைப்பதற்கு இன்றும் அதன் பழமையை உணர்த்தும் தமிழ்பிராமி எனப்படும் தமிழி எழுத்துக்களே பெரும் காரணம்.  இவை 2400 ஆண்டுகள் பழமையானது.  தமிழ் எழுத்தின் தொடக்கத்தைக் காட்டும் இந்த அரிய கல்வெட்டு எழுத்துக்கள் சமண துறவியர்கள் நடத்திய அறப் பள்ளிகளிலேயே அதிகமாக காணக் கிடைக்கிறது.

    செஞ்சி பகுதியானது இயற்கையிலேயே கல்குவியலாகவும், பாறைகளாகவும், கனிம வளம் கொண்டவையாகவும் விளங்கும் இயற்கையான மலைகள் நிறைந்ததாகும்.  இதன் காரணமாகவே இம் மலைப்  பகுதிகள் தமிழகத்தின் தொன்மை கல்வி நிறுவனங்களாக, சமூக ஒழுக்கத்தை மேம்படுத்தும் அறப் பள்ளிகளாக விளங்கியிருக்கின்றன.

    செஞ்சிக்கு தென்மேற்கே உள்ளது வரிக்கல் கிராமம்.  இங்குள்ள சிவகிரி மலையில் 2000 ஆண்டு பழமையான சமண படுக்கைகளை பேராசிரியர்கள்  ரமேஷ், ரங்கநாதன் குழுவினர் கண்டறிந்து ஆய்வு செய்து வழங்கியுள்ளனர். இந்த சிவகிரி மலையின் தெற்கே 89 அடி நீளம் கொண்ட குகை உள்ளது. குகையின்  மேற்கே 10 சமணப்  படுக்கைகளும், மலையின் கீழ்ப் பகுதியில் தெற்கில் சிறிய பாறையில் சமணப் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சமணத்துடன் தொடர்புடைய ஜைனகிரி என்ற பெயர் கொண்ட இம்மலையே 200 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சிவகிரி என மாற்றி உள்ளனர்.

    மேலும்  மலையின் உச்சியில் சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமானக் கோயில் இருந்துள்ளது.  அடித்தளத்தில் காணப்படும்  செங்கல்லின் நீளம் 34 செ.மீ, அகலம் 6.5 செ.மீ இருப்பதால் இது சங்க காலத்தைச்சேர்ந்தது என உறுதியாகின்றது.  அரிக்கமேடு பகுதியில் சங்க காலத்தில் காணப்படும்  செங்கல் அளவில் இது ஒத்துப் போவதாக ஆய்வாளர் கூறுவதிலிருந்து செஞ்சியின் சங்க காலச் செழுமையை அறிய முடிகிறது.

    இது தவிர செஞ்சியின் சுற்றுப் பகுதி ஊர்களான சிறுகடம்பூர், தொண்டூர், நெகனூர் பட்டி, பறையன்பட்டு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட சங்க கால கல்வெட்டுகளில்  சமண  முனிவர்களுக்கு  அறப்  பள்ளிகள் அமைத்துக் கொடுத்ததை தொண்டூர், நெகனூர்பட்டி  கல்வெட்டுகள் வாயிலாகவும், சமண முனிவர்கள் வடக்கிருந்த நிகழ்வு, திருநாதர் குன்று, பறையன்பட்டு கல்வெட்டுகள் வாயிலாகவும் நம்மால் அறிய முடிகிறது.  இங்கு காணப்படும் குகைக் கல்வெட்டுகள் வாயிலாக அமைந்த அறப் பள்ளிகள் மூலம் கணிதம், வானியல், விஞ்ஞானம், உயிர் ஞானம், மொழியறிவு, மருத்துவம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.  மேலும் உணவு தானம், புகலிட தானம் அளித்த செய்திகளையும் அறிய முடிகிறது.

    சிறுகடம்பூர் திருநாதர் குன்று :

           செஞ்சிக் கோட்டையின் வடக்கே  சிங்கவரம் செல்லும் சாலையின் மேற்கே அமைந்துள்ளது திருநாதர் குன்று.  இப்பகுதி சிம்மபுரி என்றும் அழைக்கப்பட்டதாகும். சமண அறத்தைப் பரப்பிய 24 தீர்த்தங்கர்களின் திருமேனிகள் செதுக்கப்பட்டுள்ளன. அமர்ந்த நிலையில் இச் சிற்பங்களின்  தலையின் மேற்பகுதியில் முக்குடை காணப்படுகிறது. மதுரை கழுகுமலையில்  உள்ள சமணச் சிற்பங்கள்போல் இது காணப்படுவதாக  ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  இது 4-5ம் நூற்றாண்டு  காலத்தைச் சேர்ந்ததாகும். பாறையின் வலது பாகத்தில் ஒரு தீர்த்தங்கரர் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.  மலையின் நடுப்  பகுதியில்  ஒரு பெரிய பாறையில் பத்மாசனத்தில் ஒரு தீர்த்தங்கரரின் சிலையும், மேல் பகுதியில் கல்வெட்டுச் சான்றும் இருந்துள்ளது தெரிகிறது.

    மலைமீது மூன்று கல்வெட்டுகள் உள்ளன.  முதிர்ந்த நிலை பிராமி மொழியிலிருந்து வட்டெழுத்தாக தமிழ் வளர்ந்த, மாறுதல்  அடைகின்ற கால கட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு இங்குதான் முதன் முதலில் தென்படுகிறது என்கிறார் தொல்பொருள் ஆய்வாளர் திரு.வெங்கடேசன்.  இந்த திருநாதர் குன்றின் கல்வெட்டில்தான் ” ஐ ” எனும் தமிழ் எழுத்து பிறந்துள்ளது என்றும் வெங்கடேசன் கூறுகிறார்.  ஆகவே ஐ  பிறந்து தை பிறந்த மலையாகிறது.  தமிழுக்கு எழுத்து  தந்த மலையாகிறது.

    இங்குள்ள கல்வெட்டுகளில் சந்திரநந்தி ஆசிரியர் என்னும் சமணத் துறவி 57 நாட்கள் நோன்பிருந்து ( சல்லேகனை ) வீடுபேறு  பெற்றார் என்றும், இளைய பட்டாரகர் என்னும் சமணத் துறவி 30 நாட்கள் நோன்பிருந்து வீடுபேறு பெற்றார் என்றும், கோயில் விளக்கேற்ற 400 ஆடுகள் தானம் தரப்பட்டதாகவும் கல்வெட்டு கூறுகிறது.

    பறையன்பட்டு கல்வெட்டு :

    செஞ்சி, அவலூர்பேட்டை அருகே உள்ளது பறையன்பட்டு.  இங்கு கண்டெடுக்கப்பட்ட  கல்வெட்டில் வடக்கிருந்து வீடுபேறு பெற்ற நிகழ்வு  பொறிக்கப்பட்டுள்ளது.

    நமோத்து, பாணாட்டு வச்

           ச ணந்தி ஆசாரிய

           ர் மாணாக்கராராத னி

           நோற்று (மு)டித்த (நி)

           சீதிகை

    ” நமோத்து ” என்பது  நமோஸ்து என்ற சமஸ்கிருதச் சொல்லைக் குறிக்கிறது.  தமிழில் வணங்குகிறேன் என்று பொருள்.

    பாணாட்டைச் சேர்ந்த வச்சநந்தி என்ற சமண ஆசாரியரின் மாணாக்கர் சாகும்வரை உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்ததற்காக எடுக்கப் பெற்ற தவம் செய்யும் இருக்கை என்று பொருள்.  சமணத் துறவிகள் வடக்கிருந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பதற்காக இந்நிசீதிகைகள் ஏற்படுத்தபபடுவது இயல்பாகும்..

    இக் கல்வெட்டின் வாயிலாக  சமண முனிவர்களின் சமய மாண்பினை அறியலாம்.  பிற கல்வெட்டுகளில் சமணத் துறவிகளுக்குப் பிறர் செய்த கொடைகளை – பாளிய் – இருக்கை- அமைத்துக் கொடுத்ததை  மட்டுமே பேசுகிறது.  ஆனால் இக் கல்வெட்டில் சமண சமயத்தின் கொள்கை பேசப்படுகிறது.

    தொண்டூர் கல்வெட்டு :

         செஞ்சியின் கிழக்கே தொண்டூர் கிராமம்  உள்ளது.  இங்கு காணப்படும் சமணக் கல்வெட்டு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.  இங்குள்ள பஞ்சனார்படி என்ற மலைக் குன்றில்  தெற்கு வடக்காக 3 சமணப் படுக்கைகள் உள்ளன.  இங்கு கி.மு.2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இக் கல்வெட்டில் அகழ் ஊரைச் சேர்ந்த அறமோசி என்பவர் அமைத்துக் கொடுத்த சமணப் பள்ளி என உள்ளது.  இந்தக் கல்வெட்டுதான் நடுநாடு என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் மிகப் பழமையான கல்வெட்டு என்பது ஆய்வாளர்கள் கருத்து.

    மலையின் மேல் 2000 ஆண்டுகளுக்கும் முந்தைய வெள்ளை நிறத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் உள்ளது. பஞ்சனார்படி குகைத் தளத்தின் வெளியே தரைப் பாறையில் இரு வரிகளில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

    ” இளங்காயிபன் ஏவ

            அகழ் ஊரறம் மோசி செயித அதிடானம்

    என்பது இதன் வாசகம்.  அதிடானம் என்பது  புனித இருக்கையை குறிக்கும் சொல்லாகும்.  அகழூர் என்பது அகழ் ஊர் என இக் கல்வெட்டில் உள்ளது. இன்று  தொண்டூர் அருகில் அகலூர் என்ற ஊர் உள்ளது இதை மெய்ப்பிப்பதாக உள்ளது.  மேலும் அகழூரினர் ஒன்றாக இணைந்து இளங்காயிபன் என்பவர் பணிக்க அறம் செய்துள்ளனர்.  மோசி  என்பது ஒரு நபரின் பெயராகக் கொள்ளலாம்.

    ” திருந்து மொழி மோசி பாடிய ஆயும் ”    ( புறம் : 158 )

    புறநானூற்றுப் பாடலான இப் பாடலின் பொருள், திருந்திய சொல்லையுடைய மோசி என்னும் புலவனாற் பாடப்பட்ட ஆயும் என்பது பொருளாகும். இதில் உள்ள மோசி சங்க காலப் புலவர் பெயரை  சுட்டுவதால்,  கல்வெட்டில் உள்ள மோசி என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு நபரின் பெயர் என்பது உறுதிப்படுகிறது.

    நெகனூர்பட்டி கல்வெட்டு :    

    இக் கல்வெட்டு 3 – 4 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.  இக் கல்வெட்டும் சமணர் இருக்கை செய்வித்துக் கொடுத்ததை கூறுகிறது.

     பெரும் பொகய்

           செக்கந்தி தாயியரு

           செக்கந்தண்ணி  செ

           யிவித்த பள்ளி

    பெரும் பொகய் என்ற ஊரைச் சேர்ந்த சேக்கந்தி என்பவனின் தாயார் சேக்கந்தண்ணி செய்வித்த பள்ளி  ( சமணர் இருக்கை ) என்று கல்வெட்டு கூறுகிறது என்பது  பேராசிரியர் சு.ராஜவேலு அவர்களின் கருத்தாகும்.

    நெகனூர்பட்டி மேற்கே உள்ள அடுக்கண்கல் என்ற குன்றின் கீழ் அருகில் இயற்கையாக அமைந்துள்ள குகையின் கூரைப் பகுதியில் விளிம்பில் இக் கல்வெட்டு உள்ளது.  சேக்கந்தண்ணி என்பதை ” சேக்கந் அண்ணி ” என பிரித்துப் படிக்க வேண்டும். இவரை சமணப் பெண் துறவியாகக் கொள்ளலாம்.  சேக்கிழார் என்பதில்  சே குடிப் பெயராக இருப்பது போல சே குடிப் பெயராகக் கொள்ளலாம்.  சே என்பது காளை என்ற பொருளில் ,

    ” கயிறு இரு கதச் சேப் போல”    ( அகம் : 36 )

    என்று அகப்பாடலில் அகநாநூறு கூறுகிறது.

    கந்தி என்ற சொல்

    ” கறந்த பால் அணைய  கந்தி “ ( சீவகம் : 26 : 49 )

    கறந்திட்ட பால் போலுந் தூய தவப் பெண் என்று சீவக சிந்தாமணி கூறுகிறது. அதேபோல் சூடாமணி கந்தி, கௌந்தி என்ற சொற்களுக்கும் பெண் துறவி என்று பொருள் சொல்கிறது.  இதன் மூலம் சே என்பது  காளையையும், கந்தி என்பது துறவியையும் குறிப்பது உறுதிப்படுகிறது.

    தொகுப்புரை :

    • திருநாதர் குன்று, நெகனூர்பட்டி, தொண்டூர், பறையன்பட்டு போன்ற இடங்களில்கண்டெடுக்கப்பட்ட தொல் தமிழ்க் கல்வெட்டுகள் வழியாக சங்க  காலத்தில் செஞ்சி பகுதியானது சிறப்பு பெற்ற நிலையில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.  மேலும் செஞ்சியைச் சுற்றியுள்ள சுமார் 20  கிராமங்களில் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டால் செஞ்சியின் தொன்மையை அறியலாம் என்பது இதுவரை கிடைத்த கல்வெட்டுகள் மூலம் நம்மால் அறிய முடிகிறது.
    • செஞ்சி பகுதியில் வாழும் மக்கள் 13ம் நூற்றாண்டுக்குப் பின் சிறப்புபெற்ற செஞ்சிக் கோட்டை, ராஜா தேசிங்கு புகழ் இவற்றை ஒட்டியே பெருமிதம் கொள்வதால், சுமார் 2500 ஆண்டுக்கு முன்னரே சங்க காலச் சிறப்பு பெற்ற செஞ்சியின் தொன்மத்தை அறிய முற்படவில்லையோ என  ஐயம் கொள்வதாக உள்ளது.  சங்க கால ஆய்வுக்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து  எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இவ்வாய்வின் வழியாக எழுகிறது.
    • கி.மு.3ம் நூற்றாண்டில் பரவிய சமணமும், அதன் வழியாக கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் வாயிலாகவும் அக் கால சமண முனிவர்கள் தமதுசமயக்  கருத்துகளை பரப்புவதற்காக வரவில்லை என்பதும், மாறாக அவர்கள் அறப் பணிகளான மக்களின் ஒழுக்கம், கல்வி, ஞானம், உணவு, மற்றும் புகலிட தானங்களை செய்வித்ததை மட்டுமே தங்களின் தலையாய நோக்கமாக கொண்டிருந்ததை அறிய முடிகிறது.
    • கல்வெட்டுகளில் உள்ள பெயர்களும், அதற்கு சான்றாதாரமாக சங்கத்தமிழ்ப் பாடல்களில் சுட்டப்பட்டுள்ள பெயர்களையும் இணைத்து ஒப்புமைப்படுத்தும்போது இக் கல்வெட்டுகள் சங்க  காலத்திற்கு உரியது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
    • செஞ்சி பகுதியில் கிடைத்த தொல் தமிழ் கல்வெட்டுகளின் வழியாக சமண சமயத்தின் பரவலான போக்கினையும், சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட, செஞ்சிக்கு அருகில்உள்ள மேல்சித்தாமூரில் ஜினகஞ்சி மடம் என்ற சமணர்களுக்கான தலைமை பீடம்  செஞ்சி பகுதியின் தொன்மத்தை பறைசாற்றுவதை நம்மால் அறிய முடிகிறது.

    முடிவுரை :

           ஒரு இனத்தின்  நாகரிகம், பண்பாடு, ஒழுக்கம், வாழ்வியல்  முறைகள் ஆகியவற்றை அறிய வரலாற்றோடு கல்வெட்டுகள், தொல்லியல் ஆய்வுகள் வழியாகவே நிறுவப்பட்டு நம்மால் அறிய முடிகிறது.  செஞ்சி பகுதியில் கிடைத்த இக் கல்வெட்டுகளின் மூலம் சமண முனிவர்களின் மலைப் பள்ளிகள் மானிடருக்கு, இம்சை செய்யாமை, களவு செய்யாமை, பொய் சொல்லாமை, பிறன் மனை விழையாமை, மிகு பொருள் விரும்பாமை போன்ற வாழ்வியல் நெறிகளை விளக்கிக் கூறுவதை அறிய முடிகிறது.  இதன் வழியாக சங்க கால மக்களின் வாழ்வியல் அறங்களையும் இதன் வழியாக அறிய முடிகிறது. தொடர்ந்து  தற்கால மக்களும் மேற்கண்ட அறங்களை கடைபிடித்து ஒழுகினால் சமூகம் உய்வுறும் என்பது தெளிவு.  அதற்கு மேலதிக ஆய்வுகளும், தொல்லியல் கல்வெட்டு ஆய்வுகளும் அவசியம் என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும்.

    துணைநின்ற நூல்கள் :

    1. ரிஷபா – ஆதிபகவன் – ஸ்வாமி ஆர்.பி.பிரக்வாட் – தமிழில் சன்மதி –

    ஸ்ரீ ரத்னா ஹீரிபாய் இலக்கிய பிரசுரங்கள், 46, கோவிந்தப்ப நாய்க்கன்

    தெரு, சென்னை – 1.

    1. புறநானூறு மூலமும், உரையும் – புலியூர்க்கேசிகன் – சாரதா பதிப்பகம்,

    சென்னை – 14

    1. அகநானூறு – மூலமும், உரையும் – புலியூர்க்கேசிகன் – சாரதா பதிப்பகம்,

    சென்னை – 14

    1. சீவக சிந்தாமணி மூலமும், உரையும் – ஔவை சு.துரைசாமிப் பிள்ளை

    – திருநெல்வேலி தென்னிந்திய  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் –

    சென்னை – 18.

    1. களப்பிரர் கால கல்வெட்டுகள் – பேராசிரியர் மா.பவானி., கல்வெட்டியல்

    மற்றும் தொல்லியல் துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.

    குறிப்புதவிகள் :

    1. திரு.ஸ்ரீதர்., தமிழ் பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல்

    துறை.

    1. Thiru.Mahadevan., Early Tamil Epigraphy., – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

    சென்னை.

     

    Share