(Peer Reviewed) நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம்

1

முனைவா் பு.பிரபுராம்
முதுமுனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை,
காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்

           நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம்

யசோதர காவியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சண்டமாரி (நாட்டார் தெய்வம்) வழிபாட்டு மரபுகளையும் சமண தத்துவங்களையும் ஒப்பிட்டு ஆராய்வது, இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். “நிறுவன மயமாக்கப்பட்ட சமயமான சமணம் தன் தத்துவத்தின் துணைகொண்டு நாட்டார் தெய்வ வழிபாட்டைக் கீழ்நிலைக்குத் தள்ளி, நாட்டாரைச் சமணச் சார்புடையோராக மாற்றியது” என்ற கருதுகோள் இவ்வாய்வில் கையாளப்பட்டுள்ளது. இக்கட்டுரைக்கான முதன்மைச் சான்றாதாரம், யசோதர காவியம். இக்காவியம், ஐந்து சருக்கங்களில் மொத்தம் 330 பாடல்களைக் கொண்டுள்ளது.


சண்டமாரி வழிபாடு

ஓதயநாட்டு இராசபுரத்து அரசனான மாரிதத்தன், அவந்திநாட்டு உஞ்சயினியின் அரசனான யசோதரன், அவன் தாய் சந்திரமதி ஆகிய அரச மரபினரும் பொதுமக்களும் சண்டமாரிக்கு உயிர்ப் பலியிட்டு விழா எடுத்த காட்சிகள் யசோதர காவியத்தில் உள்ளன. அக்காட்சிகளிலுள்ள கதையாடல்கள், சண்டமாரி வழிபாட்டில் நிகழ்த்தப்படும் சடங்குகளையும் அவ்வழிபாடு குறித்த நம்பிக்கைகளையும் அளிக்கின்றன.

ஆண்டுதோறும் வேனிற்காலத்திலும் ஐப்பசித் திங்களிலும் காளிதேவிக்கு விழா எடுக்கும் வழக்கம் மக்களிடையே இருந்தது. அவ்வாறு விழா நிகழ்த்தப்படாவிடின், தேவியானவள் மனம்திரிந்து வெகுளுவாள், துன்பத்தைச் செய்கின்ற நோய்கள் பலவற்றையும் உண்டுபண்ணுவாள், உயிரைக் கொள்ளுதற்குரிய தீங்குகள் பலவற்றையும் செய்வாள், மேலும் பல தீங்குகளும் வந்தடையும் என்பது போன்ற நம்பிக்கைகளை மக்கள் கொண்டிருந்தனா்.

 

          “என்றும் இப்பரு வத்தினோ டைப்பசிச்

           சென்று தேவி சிறப்பது செய்துமஃ

           தொன்றும் ஓரல மாயினம் ஒன்றலா

           நன்ற லாதன நங்களை வந்துறும்” (யசோ.15)

          “நோவு செய்திடும் நோய்பல ஆக்கிடும்

           ஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும்

           தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல்

           காவன் மன்ன! கடிதெழு கென்றனா்” (யசோ. 16)

ஐப்பசி மாதத்துப் பூா்ணிமைக்கு முன்னதாகிய அட்டமிக்குப் பின்வரும் நாள்களுள் குற்றமில்லாது நிலவும் செவ்வாய்க்கிழமையில் உயிர்ப்பலியிட்டு காளிதேவியின் வீரகண்டையணிந்த திருவடியில் வீழ்ந்து வணங்கினால், அவள் அப்பலியேற்று, பலியிடுவோர்பால் விருப்பமுற்று அவா்க்குத் தீங்கு வராது காப்பாள் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவி வந்தது.

                      “ஐப்பசி மதிய முன்ன ரட்டமி பக்கப் பின்னா்

                    மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னிற்

                    கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியிற் காளாய்

                    மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு மென்றாள்”             

                                                                                                                                                             (யசோ.136)

மேலும், மக்கள் காளிதேவி கோவிலை வலம்வந்து தங்கள் இடா்களைய வேண்டுமென்று வணங்கும் முறைமையைக் கொண்டிருந்தனா். அத்துடன் மயில், கோழி, பன்றி, ஆடு, எருமை முதலிய விலங்கினங்களில் இரட்டைகளையும்(Animal Sacrifice) மனிதருள் இரட்டையரையும்(Human Sacrifice) பலியிட்டு வணங்கும் சடங்கு சண்டமாரிக்கு உகந்ததாகக் கருதப்பட்டது.

            “மாவ லோன்வலங் கொண்டு வணங்கினன்

           தேவி யெம்மிடா் சிந்துக என்றரோ” (யசோ.19)

          “மன்னன் ஆணையின் மாமயில் வாரணம்

           துன்னு சூரகம் ஆடெரு மைத்தொகை

           இன்ன சாதி விலங்கி லிரட்டைகள்

           பின்னி வந்து பிறங்கின கண்டனன்” (யசோ. 20)

          “யானிவ் வாளினின் மக்களி ரட்டையை

           ஈன மில்பலி யாக இயற்றினால்

           ஏனை மானுயா் தாமிவ் விலங்கினில்

           ஆன பூசனை யாற்றுதல் ஆறெனா” (யசோ. 21)       

இவ்வாறு ஆண்டுதோறும் மக்களால் கொண்டாடப்படும் தெய்வம், சண்டமாரி. மனிதப் பலி, விலங்குப் பலி ஆகிய பலிகளை ஏற்று அருள்தரும் நாட்டார் தெய்வமாக அவள் விளங்கினாள். சண்டமாரிக்கு விழா எடுப்பின் தீமையகன்று, நன்மை வந்துசேரும் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டிருந்தனா்.

சண்டமாரி ஒரு துருத்தேவதை

          நாட்டார் தெய்வமான சண்டமாரியின் உருவச் சிலையைப் பாவத்தின் (தீவினையின்) வடிவம் என்று காவிய ஆசிரியா் கற்பிதம் செய்கிறார்.

                     “பாவ மூா்த்தி படிவ மிருந்தவத்

                    தேவி மாடம்…” (யசோ. 19)

மேலும் சண்டமாரி மிகுந்த கோபமுடையவள், நடுநிலைமை இல்லாதவள், அவள் மெய்ப்பொருள்களைக் கேட்டறிந்த கேள்வியறிவும் நுண்ணிய நூல்களைக் கற்ற கல்வியறிவும் இல்லாத கீழ்மக்கள் வழிபடும் துருத்தேவதை(கொடிய தெய்வம்) என்றும் பதிவு செய்கிறார்.

                   “சண்டகோபி தகவிலள் தத்துவம்

                    கொண்ட கேள்வியுங் கூரறி வுமிலாத்

                    தொண்டா் கொண்டு தொழுந்துருத் தேவதை

                    சண்ட மாரி தனதிட மெய்தினான்” (யசோ. 18)

காவிய ஆசிரியா் சண்டமாரியின் பண்பினைக் கொடியதெனக் கூறுவதோடு, அத்தெய்வத்தை வழிபடும் தொண்டா்களை கல்வியறிவும் கேள்வியறிவுமற்றோர் என்றும் கற்பிதம் செய்கிறார்.

காளி வழிபாடு தீது என்ற சித்திரிப்பு

ஓதயநாட்டு மக்களின் விழாவயா்வு குறித்த அவாவிற்கிணங்கி மாரிதத்தன் (அரசன்) நகரின் தென்திசைக்கண் உள்ள காளிதேவி கோயிலைச் சென்றடைந்தான். அவன் சென்ற செய்தியைச் சித்திரிக்கும் காவிய ஆசிரியா், “காளிக்கு விழா எடுக்கலாம் என்று நகரமாந்தா் கூறியவுடன் அருளறமாகிய நன்னெறிக்கண் சென்று அறிவு தெளியாதவனாதலால் இச்செயல்(விழா) தீது என்று கூறாமல் இது நல்லதே என்று நகர மாந்தரிடம் மாரிதத்தன் உரைத்தான்” என்கிறார்.

                     “என்று கூறலும் ஏதமி தென்றிலன்

                    சென்று நல்லறத் திற்றெளி வின்மையால்

                    நன்றி தென்றனன் நன்னகரப்புறத்

                    தென்தி சைக்கண் சிறப்பொடு சென்றனன்” (யசோ.17)

இதன்வழி, காளி வழிபாடு தீது தரும் என்ற சித்திரிப்பினைக் அவா் வழங்குகிறார். மேலும், காளி வழிபாடு செய்வோர் நன்னெறிக்கண் சென்று அறிவு தெளியாதோர் என்றும் உரைக்கிறார்.

உயிர்ப்பலி வழிபாட்டைக் காட்டிலும் அருக நெறி உயா்ந்தது

ஓதய நாட்டு மக்கள் கொற்றவைக்கு விலங்குகளுள் இரட்டையைப் பலியிடக் கருதி நிற்க, அரசன் மாரிதத்தன் மக்களுள் உடலியற் குறையற்ற இரட்டையரைப் பலியிடக் கருதினான். அத்தகு இரட்டையரைக் கொணா்க என்று சண்டகருமனுக்கு ஆணையிட, அச்சண்டகருமன் சுதத்த முனிவரின் சங்கத்துள் துறவோராய் இணைந்திருந்து, பிச்சையேற்பதற்காய் நகா்க்குள் நுழைந்த இரட்டையராகிய அபயருசியையும் அபயமதியையும் பலிக்கெனக் கொணா்ந்து பலிபீடத்தின் முன் நிறுத்தினான். பலிக்கு முன் “தங்கட்கு இறைவனாகிய வேந்தன் நிலத்தின்மேல் நீண்டகாலம் வாழ்வானாக என்று வாழ்த்துக” என்று சூழ்ந்திருந்த தளபதி முதலாயினோர் அவ்விரட்டையரைப் பணித்தனா். வறிய புன்முறுவலுடன் பின்வருமாறு மன்னனை அவா்கள் வாழ்த்தத் தொடங்கினா்.

                     “மறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா

                    தறவியன் மனத்தை யாகி ஆருயிர்க் கருள்ப ரப்பிச்

                    சிறையென பிறவி போக்குந் திருவறம் மருவிச் சென்று

                    நிறைபுக ழுலகங் காத்து நீடுவாழ் கென்று நின்றார்” (யசோ.60)

உலகுயிர்களை வருத்தாமல் அருளறம் நிறைந்த மனமுடையனாய் எல்லா உயிர்களுக்கும் அருளைச் செய்து, உயிர்க்குச் சிறைபோல்வதாகிய பிறப்பினைக் கெடுக்கும் சினேந்திரன் கூறிய அறத்தைக் கடைப்பிடித்து ஒழுகி, அழியாப் புகழை நிறுவி, உலகத்தை இனிது காத்தளித்து, நெடிது வாழ்வாயாக என்று அபயருசியும் அபயமதியும் மன்னனை வாழ்த்தினா். பிறவியானது உயிர்க்குச் சிறைபோன்றது. அவ்வாறு மீண்டும் பிறத்தலை ஒழிக்க வேண்டுமாயின் சமண அறங்களைக் கடைப்பிடித்து ஒழுகவேண்டும் என்றும் பலி வழிபாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றும் இப்பகுதி வலியுறுத்துகிறது.

யசோதரனும் சந்திரமதியும் பலி வழிபாட்டால் விலங்கு கதியடைதல்

யசோதரன் தனக்குத் தீய நிமித்தங்கள் நிகழ்ந்ததாகத் தன் தாய் சந்திரமதியிடம் கூறுகிறான். உனக்குத் தெய்வமான காளிதேவிக்கு நீ உயிர்ப் பலியிட்டு வழிபடின், அத்தீயநிமித்தம் நீங்கி, நல்லவை நிகழும் என்று சந்திரமதி உபாயம் உரைக்கிறாள். யசோதரன் உயிர்க்கொலை செய்யின், மறுமையில் தேவ கதியடைவதற்கான தகுதி அகலும், இடா்பல விளையும் என்கிறான். ஆகவே காளிக்கான உயிர்ப்பலியிடலை மறுக்கிறான்.

                      “யானுயிர் வாழ்த லெண்ணி யெளியவா் தம்மைக் கொல்லின்

                    வானுய ரின்ப மேலால் வருநெறி திரியும்….” (யசோ.140)

                   “இன்றுயிர் கொன்ற பாவத் திடா்பல விளையு மேலால்” (யசோ. 141)

உயிரைக் கொல்லாது மாவால் கோழிசெய்து அதனைச் சண்டமாரிக்குப் பலியிடலாம் என்று சந்திரமதி பதில் உரைக்கிறாள். இவ்வுரையாடலில் யசோதரனின் மனவோட்டமாக ஒரு செய்தியைக் காவிய ஆசிரியா் பதிவு செய்கிறார். “உயிருடைய பொருளொன்றின் வடிவினைச் செய்து அதனைப் பலியிடுவதும் உயிர்க்கொலையேயாம் என்னும் ஓா் அருவருப்பினை யசோதரன் தன் மனத்தே கொண்டிருந்தான்” என்கிறார்.

            “உயிர்ப்பொருள் வடிவு கோற லுயிர்க்கொலை போலு மென்னும்

           பயிர்ப்புள முடைய னேனும் பற்றறத் துணிவில் மன்னன்

           செயிர்த்தவ ளுரைத்த செய்கை செய்தவற் கிசைந்த தென்றான்

           அயிர்ப்பதென் அறத்தின் திண்மை யறிவதற் கமைவி லாதான்” (யசோ.144)

இவ்வாறு, விலங்குயிர்களைப் பலியிடுவதற்குப் பதிலாக, மக்களால் பதிலீடாகக் கருதப்படும் பொருள்களைப் பலியிடுவதுகூட (Substitute for animal sacrifice) அருவருப்பான செயல் என்ற சித்திரிப்பினைச் சமணம் வழங்குகிறது.

பின்பு யசோதரன் விலங்குப் பலிக்குப் பதிலீடாகிய பாவனைப் பலிக்கு ஒப்புகிறான். சண்டமாரியை வணங்கிப் படைக்கப்பட்ட மாக்கோழியைத் தலையறிந்து அவன் பலியிட, அது கூவித் துடித்து வீழ்ந்து இறக்கிறது. இதனைக் கண்டு மனம்பொறாத யசோதரன், துறவுபூணும் எண்ணம் கொண்டான். ஆயின் யானைப் பாகனுடன் கள்ளவொழுக்கம் புரியும் யசோதரனின் மனைவி அமிர்தமதி, யசோதரனையும் அவன் தாய் சந்திரமதியையும் உணவில் விடம்கலந்து கொன்றுவிடுகிறாள். அவ்விருவரின் உயிர்களும் விலங்கு கதியை அடைகின்றன. யசோதரனின் மகன் யசோமதி, அவந்திநாட்டு உஞ்சயினிக்கு அரசனாகிறான்.

யசோதரன், விந்தமலைச் சாரலில் மயிலாகப் பிறக்கிறான். சந்திரமதி, உஞ்சயினி நகா்ப்புறத்துச் சேரியில் நாயாகப் பிறக்கிறாள். அம்மயிலும் நாயும் அரசனாகிய யசோமதியின் அடைக்கலமாக வளா்கின்றன. ஒருநாள் மயில், அட்டபங்கனைக் கண்டு, அவன் கண்களைக் குத்திவிட்டுப் போகிறது. அதனால் அமிர்தமதி அதனைக் கல்லெறிந்து வீழ்த்த, நாய் அம்மயிலை வாயால் கவ்விக் கொன்றுவிடுகிறது. அதுகண்ட அரசன் ஆராயாது, நாயைக் கொல்கிறான். பின் மயில் முள்ளம்பன்றியாகப் பிறந்துழலும்போது, நாய் கருநாகமாய் வரக்கண்டு அதைக் கொல்கிறது. அப்பன்றியைச் சிங்கம் என்று கருதிய கரடி, பாய்ந்து கொன்றுவிடுகிறது. பன்றி மீனாய்ப் பிறக்க, கருநாகம் முதலையாய்ப் பிறக்கிறது. அரண்மனையில் பணியாற்றும் கூனியை முதலை கொல்ல, முதலையை அரசன் கொன்றுவிடுகிறான். வலையிற்பட்டு மீன் மாள்கிறது. முதலை ஒரு பெண்ணாடாய்ப் பிறக்க, மீன் ஆணாடாய்ப் பிறந்து அப்பெண்ணாட்டைக் கூடுகிறது. அதனைக் கண்ட கிடாவொன்று ஆணாட்டை மோதிக் கொல்ல, அது பெண்ணாட்டின் கருவில் தங்கிப் பிறக்கிறது. வேட்டைக்குச் சென்ற யசோமதியால் தாயாடு கொல்லப்படுகிறது. தகா் மட்டும் புலைச்சேரியில் வளா்கிறது. அத்தகா் யசோமதியின் முன்னோர் சிரார்த்தத்திற்காகக் கொல்லப்படுகிறது. யசோதரனாகிய அந்த ஆடு, மீண்டும் ஆடாகப் பிறக்கிறது. சந்திரமதியாகிய ஆடு, எருமையாய்ப் பிறக்கிறது. எருமை அரசனின் மாவை முட்டிக் கொல்ல, அரசன் அவ்வெருமையைக் கொன்றுவிடுகிறான். அமிர்தமதியின் உணவிற்காகத் தகா் கொல்லப்படுகிறது. பின்பு யசோதரனும் சந்திரமதியும் நகா்மருங்கில் உள்ள பறைச்சேரியில் கோழிகளாகப் பிறக்கின்றனா். யசோமதி அக்கோழிகள் இரண்டையும் கண்டு விருப்பமுற்று அரண்மனைக்குக் கொணா்ந்து வளா்க்கிறான். இறுதியில் அக்கோழிகள் இரண்டும் யசோமதி எய்த அம்பினால் இறந்துபட்டு யசோமதியின் மனைவியான புட்பாவலியின் மணிவயிற்றில் அபயமதியாகவும் அபயருசியாகவும் பிறப்பெய்துகின்றன.

யசோதர மன்னனும் அவன் தாய் சந்திரமதியும் விலங்கு கதியில் பிறந்து அடைந்த இவ்வகைத் துன்பங்களுக்கு, முற்பிறப்பில் அவா்கள் மாவால் செய்யப்பட்ட கோழியொன்றைக் கொன்றதே காரணமாகும் என்று காவியம் கற்பிதம் செய்கிறது.

            “இன்னுமீ தைய கேட்க யசோமதி தந்தை யாய

           மன்னவ னன்னை யோடு மாவினற் கோழி தன்னைக்

           கொன்னவில் வாளிற் கொன்ற கொடுமையிற் கடிய துன்பம்

           பின்னவா் பிறவி தோறும் பெற்றன பேச லாமோ” (யசோ.250)

இவ்வாறு பலிவழிபாட்டால் மறுமையில் தேவ கதியடைவதற்கான தகுதி அகன்று, உயிர்க்குத் தீமை விளையும் என்ற தத்துவாத்தச் சிந்தனையைக் காவியம் வழங்குகிறது. விலங்குப் பலிக்குப் பதிலீடான பாவனைப் பலியால் யசோதரனும் சந்திரமதியும் மறுமையில் விலங்குகளாகப் பிறந்து பல்வேறு துன்பங்களை அடைந்தனா் என்றும் உரைக்கிறது. ஆகவே இத்தகு பலி வழிபாட்டுடன் இணைந்த நாட்டார் தெய்வ வழிபாட்டை விட்டகன்று, சமண நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற வேண்டுகோளைக் காவியம் விடுக்கிறது.

முடிவுகள்

  • தத்துவார்த்த அடிப்படையில் நாட்டார் தெய்வ வழிபாடு கீழானது என்று யசோதர காவியம் கற்பிதம் செய்கிறது. நாட்டார் தெய்வத்தின் உருவமானது பாவத்தின் வடிவம் என்ற மாயத் தோற்றத்தினை உருவாக்க, அக்காவியம் முயன்றுள்ளது.
  • நாட்டார் தெய்வத்திற்கு உயிர்ப்பலியிட்டு வழிபடல் பாவம் (தீவினை) என்ற கருத்தியலை மக்கள் மனத்தில் விதைப்பதற்காகவே யசோதர காவியம் படைக்கப்பட்டுள்ளது. அப்பாவத்தால் மறுமையில் உயிர்க்குத் தீய பலன் கிட்டும் என்றும் காவிய ஆசிரியா் எச்சரிக்கிறார். இத்தத்துவார்த்த அச்சுறுத்தலுக்கு அஞ்சியோர், நாட்டார் வழிபாட்டை விடுத்து, சமண சமயத்திற்கு மடைமாறிய காட்சிகள் பல, காவியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சான்றாக மாரிதத்தன், சண்டமாரி வழிபாட்டை விட்டகன்று சமண நெறியேற்றதைக் கூறலாம்.
  • மேலும், நாட்டார் தெய்வத்திற்கு உயிர்ப் பலியிடுதலைப் பாவம் (தீவினை) என்று கருதிய மக்கள், அதற்குப் பதிலீடாக (Substitute for animal sacrifice) உயிரற்ற பொருட்களைப் பாவனைப் பலியாக அளித்தனா். அதன்வழி, தங்கள் தெய்வ வழிபாட்டைத் தொடா்ந்தனா். அவ்வாறு நாட்டார் வழிபாட்டில் நிலைநின்ற மக்களையும் சமணம் தன்வழிக்குத் திருப்ப முயன்றுள்ளது. அதற்கு யசோதரனின் கதையைப் பக்கபலமாக அமைத்துக்கொண்டது.

முதன்மைச் சான்றாதாரம்

* யசோதர காவியம் மூலமும் உரையும் – ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (உரையாசிரியா்),  2009, சாரதா பதிப்பகம், சென்னை.

=======================================================

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

முதற்கண் முனைவர் பு.பிரபுராம் அவர்களை வாழ்த்தி, என் மதிப்பாய்வை வழங்குகிறேன்.

ஆய்வாளர் தன் ஆய்வுக் கருவாக, “நிறுவன மயமாக்கப்பட்ட சமயமான சமணம் தன் தத்துவத்தின் துணைகொண்டு நாட்டார் தெய்வ வழிபாட்டைக் கீழ்நிலைக்குத் தள்ளி, நாட்டாரைச் சமணச் சார்புடையோராக மாற்றியது” என்ற கருதுகோளை முன்வைக்கிறார். இக்கூற்று சற்று அதிகப்படியாகத் தோன்றுகிறது.

யசோதர காவியத்தின் ஆசிரியர், தான் நூல் ஆக்கியதற்கான காரணத்தைத் தொடக்கத்தில் கூறியதை (நூல் நுவல் பொருள் – பாடல் எண் – 4) இவ்வாய்வாளர் கவனத்தில் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. யசோதரம் ஆசிரியர் இப்பாட்டில், “வெவுரு செய்யும் வினைப்பய னிற்றேனத் தெரிவு றுப்பதுஞ் செப்புத லுற்றதே” என்று நூல் யாத்ததற்கான காரணத்தை தெரிவிக்கிறார். உயிர்களுக்கு வினைவரும் வழியை அடைப்பதையும், தீவினை இதுவென்று தெரிவித்து, நல்வினைப் பயனை அடைவிப்பதற்கும் வடநாட்டில் வழங்கிய இக்கதையைத் தமிழில் ஆக்கியிருக்கிறார். இதுவே இந்நூலின் நோக்கமாகவும், அந்நோக்கத்தின் ஊடே பயணிக்கும்போது, தீவினைக்குக் காரணமானவற்றை அகற்ற, கதைக்கு ஏற்றவாறு சில புனைவுகள் மூலம் கொல்லாமை அறம் சூழ மாந்தர்களைப் படைத்து தன் நூலின் நோக்கமான “பாவனையின் மூலம் செய்யும் செயலும் தீவினைக்கு வித்தாகும்” என்பதை அறிவுறுத்துகிறார்.

அப்படித்தான் மனித, மிருக பலியீடு என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிப்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமேயன்றி நாட்டார் மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்வதற்காக இந்நூல் எழுதியிருப்பது போன்று தன் ஆய்வைக் குறித்திருப்பது, சமண அறத்தையும், சமண இலக்கியங்களின் நோக்கத்தையும் ஆய்வாளர் எளிதில் உள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது.

இவ்வாய்வாளர் இக்கட்டுரையின் தலைப்பை “ சமணம் மறுக்கும் நாட்டார் வழிபாட்டு மரபு” என்று தலைப்பிட்டிருந்தால் நன்றாக அமையும். என் மதிப்பாய்வு, ஆய்வை குறைகூறும் நோக்கில் அமைந்ததன்று.

=======================================================

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “(Peer Reviewed) நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம்

  1. கட்டுரை ஆசிரியன் என்ற முறையில் ஆய்வறிஞர் கருத்துரைக்கு மறுமொழி இடவேண்டும் என்ற அவசியம் உள்ளது.
    1.சமணம் சார்ந்த இலக்கியங்களில் உள்ள விளிம்பு நிலையாக்கங்களை ஆய்ந்து உரைத்தால் பெரும்பான்மையான தமிழ் ஆய்வு அறிஞர்கள் ஏற்றுக் கொள்வது இல்லை. நீங்கள் சமணத்தை உள்வாங்கவில்லை என்ற பதில் மட்டுமே எனக்குக் கிடைக்கிறது. என் ஆய்வுரையை அவ்வறிஞர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை.
    2.கட்டுரையில் கையாளப்பட்ட கருதுகோள் நிறுவப்பட்டுள்ளது.
    3.சமணத்தை இட்டுக்கட்டிக் குறைகூறுவது என் நோக்கம் அல்ல.
    4.யசோதர காவியத்தில் நாட்டார் தெய்வமான சண்டமாரியின் உருவச்சிலை பாவத்தின் வடிவம் என்று சித்திரிக்கப்பட்டு விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
    5.அத்தெய்வத்தை வழிபடுவோர் கீழ்மக்களாகச் சித்திரிக்கப்படுகின்றனர்.
    6.பலி வழிபாட்டைக் காட்டுமிராண்டித்தனம் என்று ஆய்வறிஞரும் கற்பிதம் செய்கிறார். அவ்வாறெனில் பலிபூசை செய்வோர் காட்டுமிராண்டிகளா?
    7.கொலை தவிர், கொல்லாமையை விரும்பு என்று கூற, சமணத்திற்கு உரிமை உண்டு.
    ஆயின் பலி வழிபாட்டால் பாவம் விளையும் என்று கற்பிதம் செய்து நாட்டார் வழிபாட்டில் நிலைநிற்கும் மக்களைத் தன்பக்கம் திருப்புவது சரியான அணுகுமுறை ஆகாது. இதுவே என் ஆய்வு முடிவு.
    8.மேலும் இந்த நோக்கத்திற்காக நான் இந்த இலக்கியம் படைத்தேன் என்று
    ஆசிரியர் கூறுவதை அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கட்டாயம் இல்லை.
    9.சமணம் மறுக்கும் நாட்டார் வழிபாட்டு மரபு என்று தலைப்பிட்டு இருக்கலாம் என்று ஆய்வறிஞரே ஒப்புதல் அளிக்கிறார். சமணம் நாட்டார் வழிபாட்டை மறுத்து மக்களை மடைமாற்றம் செய்ததைத்தான் இக்கட்டுரை விவரிக்கிறது.
    10.பிறர் மார்க்கத்திற்கு இழிவு கற்பிப்பதன் மூலம் தன் மார்க்கத்தை உயர்த்திப் பிடிப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.