(Peer Reviewed) காப்பியங்களில் சமணம் கட்டமைக்கும் பெண்கள் நிலை

2

முனைவர் பெ.சுமதி
உதவிப் பேராசிரியர்,
ஒப்பிலக்கியத் துறை,
தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக் கழகம்,
மதுரை -21.

காப்பியங்களில் சமணம் கட்டமைக்கும் பெண்கள் நிலை

முன்னுரை

தமிழ் மொழி, உலகம் போற்றும் தொல் மொழியாம். இவற்றில் எழுந்த இலக்கியங்களும் இலக்கணங்களும் செம்மொழி அந்தஸ்துடன் இன்று, பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இங்குப் பல்வேறு மதங்கள் உள்ள நிலையில், சமண மதமும் பல்வேறு மன்னர்களாலும் பின்தொடரப்பட்டு கைவிடப்பட்ட மதங்களில் ஒன்றாகும். தென்னிந்தியாவில் சமண மதம் வேரூன்றி இருந்த சமயத்தில் தமிழ் இலக்கியங்களில் அற நூல்களும் இலக்கணங்களும் தோன்றி, நம் மொழிக்குச் சிறப்பினைப் பெற்றுத் தந்தன.

சமயக் காழ்ப்புணர்வால் சமண மதம் ஒட்டுமொத்தமான வீழ்ச்சிக்கு உட்பட்டது என்பது, நல்ல இலக்கிய நூல்களுக்கு இழப்பேயாம். இந்திய மதங்களில் நிறுவன தெய்வ வழிபாட்டுக் கடவுளர் முறையில் பெண் கடவுளர்களுக்கு உரிய முக்கியத்துவம் இருந்தாலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும், புறந்தள்ளப்படுதலும் காலம் காலமாகவே இருந்துகொண்டு தான் இருக்கின்றது. அது மதத்தாலும் இருந்திருக்கின்றது. அதற்குச் சமணமும் விதிவிலக்கு இல்லை என்ற கோணத்தில் ஆராய்வதை இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சமணம் – பொருள்

சங்கம் மருவிய காலம், அற இலக்கியக் காலமாகக் கருதப்படுகின்றது. தமிழ் இலக்கியத்திற்குச் சமணர்கள் ஆற்றிய பங்களிப்பே இதற்குக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

“சமணர் (ஸ்ர்மணர்) என்றால் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவு பூண்டோரே வீடு பெறுவர் என்று இந்த மதம் சாற்றுகிறது. எனவே, துறவு எனப் பொருள்படும் சமணம் என்னும் பெயர் இந்த மதத்திற்குச் சிறப்புப் பெயராக வழங்கப்படுகிறது. புலன்களையும் கர்மங்களையும் ஜயித்தவர் (வென்றவர்) ஆகலின் தீர்த்தங்கரர்க்கு ஜினர் என்னும் பெயர் உண்டு. ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் எனப்பட்டது. சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு.” (மயிலை.சீனி வேங்கடசாமி.1954.1)

சிறு உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்று நினைக்கின்ற சமணர்கள், கடுமையான துறவு வாழ்க்கை மேற்கொண்டவர்கள். சமணர் என்றால் துறவிகள் என்றும் ஐம்புலன்களையும், உலகப் பற்றையும் வெறுத்தவர்கள் என்றும் கூறுவதிலிருந்து சமணத்தின் பொருளை அறிந்துகொள்ள முடிகின்றது.

சமண சமயத் தத்துவம்

சமண சமயத்தின் தத்துவமாக, “உயிர், உயரல்லது, புண்ணியம், பாவம், ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்பனவாம். இவற்றை முறையே ஜீவன், அஜீவன், புண்ணியம், பாவம், ஆஸ்ரவம் ஸம்வரை, நிர் ஜரை, பந்தம், மோக்ஷம் என்றும் கூறுவர்.” (மயிலை.சீனி வேங்கடசாமி.1954.9)

மேற்கூறிய ஒன்பது பொருள்களும் சமண சமயத்தின் தத்துவமாகக் கூறப்படுகின்றன. சமணப் பெண் துறவிகள், சமண சமயத்தில் பெண் பிறப்பு இழிவாகக் கருதப்பட்டது என்பதை, “பெண்பிறவி தாழ்ந்த பிறவி என்பதும், பாவம் செய்தவர் பெண்ணாகப் பிறக்கிறார் என்பதும் சமண சமயக் கொள்கை. பெண்ணாகப் பிறந்தவர், வீடுபேறு (மோட்சம்) அடைய முடியாது என்பதும் சமண மதத் துணிபு ஆகும்.

அவர்களுள், சுவேதாம்பர சமணர், பெண் பிறவிக்குச் சற்று உரிமை கொடுக்கின்றனர். இல்லறத்தை நீக்கித் துறவு பூண்டு, மனத்தை அடக்கி, உடம்பை வருத்தித் துன்பங்களைப் பொறுக்கும் ஆற்றல் பெண் மகளிர்க்கு இல்லாதபடியினால், அவர்கள் பெண் பிறப்பில் வீடுபேறடைய முடியாதென்றும், ஆனால், அவரும் துறவு பூண்டு மனவுறுதியோடு முயல்வார்களாயின் வீடுபேறடையக் கூடும் என்றும் சுவேதாம்பரச் சமணர் கூறுகின்றனர்.

ஆனால், திகம்பர் சமணர், பெண் பிறவியில் வீடுபேறடைய முடியாதென்றும், பெண்கள் ஆணாகப் பிறந்து, துறவு பூண்டு நோற்றால் தான் வீடுபேறடைய முடியும் என்றும் கூறுகின்றனர். ஒருவன் யாரையேனும் வஞ்சனை செய்தால், அவன் அடுத்த பிறப்பில் பெண்ணாகப் பிறப்பான் என்பது சமண சமயக் கொள்கை”(மயிலை.சீனி
வேங்கடசாமி.1954.185) என்று கூறப்படுகின்து.

ஒரு பெண், பெண்ணாகப் பிறந்த காரணத்தினாலே வீடு பேற்றை அடைய முடியாது என்பதும் ஆணாகப் பிறந்தால் வீடு பேற்றை அடைய முடியும் என்றும் கூறும் சமண சமயம், பெண் பிறப்பை வெறுத்த நிலையை அறிய முடிகின்றது. பெண் பிறப்பை வெறுப்பதற்குக் காரணம், பெண்கள் உலகப் பற்றை விட்டொழிக்க முடியாது என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. இல்லற வாழ்க்கையை நீங்கி, துறவு மேற்கொள்வது பெண்களுக்கு இயலாத செயல் என்பதால் பெண்களுக்குச் சமணத்தில் துறவுக்கு இடமில்லை என்பது குறிப்பிடப்படுகின்றது.

சமணர்களின் அறங்கள்

சமணர்கள், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகம் வந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கொள்கை, சங்க மருவிய காலத்தில் மக்களிடையே பரவுகின்றது, “கொலை, களவு, காமம், மது, மாமிசம் என்னும் பஞ்சமா பாதகங்களை ஒதுக்கி, உலகம், இளமை, யாக்கை முதலியவற்றின் நிலையாமையைப் போற்றி, தூய்மையாக வாழ்ந்த சமணர், போர், வேட்டை, காதல், கொள்ளை, மது, மாமிசம் என்று வாழ்ந்த தமிழ் மக்களை அற வழியில் இட்டுச் செல்ல, இயன்ற அளவு முயன்றிருப்பர். சங்க மருவிய காலச் சூழ்நிலை அவருக்குச் சாதகமாக அமைந்தது” (ஆ.வேலுப்பிள்ளை, 2011:31) என்று சமணர்களின் அறநெறிச் சிந்தனை கூறப்படுகின்றது.

மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் அறக் கருத்துகளை எடுத்துக் கூறுகின்ற இலக்கியங்கள், சமணர்களால் படைக்கப்படுகின்றன. சமுதாயத்தைக் கட்டமைப்பிற்குள் வைக்க விரும்பிய சமணர்கள், பெண்களின் பண்புகளை வரையறை செய்கின்றனர்.

“எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம், சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி, – அட்டதனை
உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய் – இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.”

(பாலசுந்தரம் பிள்ளை. (உ.ஆ), நாலடியார், 2007:363)

கணவன் சொல்லைக் கேட்காமல் எதிர்த்துப் பேசுகின்றவள் எமன் போன்றவள், காலையில் எழுந்தவுடன் சமையல் அறைக்குச் செல்லாதவள் போக்க முடியாத அரிய நோய், சமைத்த உணவைத் தன் கணவனுக்குப் படைக்காதவள் வீட்டிலேயே இருக்கும் பிசாசு, இந்த மூவரும், கொண்ட கணவனைக் கொல்லும் கருவிகள் ஆவார் என்று பெண்கள் பண்பைக் கட்டமைக்கின்றனர். கணவனுக்குக் கட்டுப்பட்டு வாழாத பெண்கள், கணவனைக் கொல்லும் கருவி போன்றவர்கள் என்று பெண்களின் இல்லற வாழ்க்கை கட்டமைக்கப்படுகின்றது.

சிலப்பதிகாரம்

கண்ணகியின் முன்பிறவி பற்றி மதுராபுரித் தெய்வம் கண்ணகியிடம் கூறுகின்றது.

“கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள்
எம்முறு துயரம் செய்தோர் யாவதும்
தம்முறு துயரம் இற்று ஆகுக! என்றே
விழுவோள், இட்ட வழுஇல் சாபம்
பட்டனிர் ஆதலின் கட்டுரை கேள் நீ!”

(வ.த.இராமசுப்பிரமணியம் (உ.ஆ), சிலப்பதிகாரம், ம.கா.க.கா.2005:166-170)

இதில் கண்ணகி, தான் சாபம் பெற்ற நிகழ்வை அறிகின்றாள். கலிங்க நாட்டிலுள்ள சிங்கபுரத்தை வசு என்பவனும், கபில புரத்தைக் குமரன் என்பவனும் ஆட்சி செய்து வந்தனர். இருவருக்கும் அடிக்கடி போர் நிகழும். சிங்கபுரத்தைச் சேர்ந்த சங்கமன் என்ற வணிகன், தன் மனைவி நீலியுடன் கபிலபுரத்து வீதிகளில் பொருட்களை விற்றுக்கொண்டிருக்கிறான். உன் கணவனாகிய கோவலன், அப்பிறப்பில் பரதன் என்ற பெயரில் இருந்தான். சங்கமனைப் பார்த்த பரதன், இவன் எதிரி நாட்டு ஒற்றனாக இருக்கலாம் என்று கூறி, அரசனால் கொலைக் களத்தில் வெட்டப்படுகின்றான். இதை அறிந்த சங்கமனின் மனைவி நீலி, அழுது புலம்பி, பதினான்கு நாட்கள் அலைந்து திரிந்து, பின் மலையுச்சியில் ஏறி, விழுந்து உயிர் துறக்கின்றாள். அவள் உயிர் துறக்கும் போது தான் அடைந்த துன்பத்தைத் தனக்குத் துன்பத்தை உண்டாக்கியவனும் அடைவதாக என்று சாபம் கொடுத்தாள் என்று மதுராபுரித் தெய்வம் கூறுகின்றது.

முனிவர்களும் கற்புடைய பெண்களும் சாபம் கொடுக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்று கூறப்படுகின்றது. இங்கு நீலி என்பவள் சாபம் கொடுத்தாள் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். சாபம் கொடுத்தல் என்பது இவர்களுக்கு எளிமையான செயல். அதில் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள், பெண்கள். சாபம் கொடுப்பதற்கு முன்பு, சாபம் பெறக்கூடியவர்களிடம் எந்த விளக்கமும் கேட்கப்படுவதில்லை. சாபத்திற்கான விளக்கம் கேட்கப்படாமலேயே பெண்களுக்குச் சாபம் கொடுத்தல் என்பது, அவர்களின் உரிமைகளை அவர்கள் கேட்டுப் பெற்றுவிடக் கூடாது என்பதையே காட்டுகின்றது. கோவலன் செய்த தவறுக்கு அவன் சாபத்தை அனுபவிக்க வேண்டும். மாறாகக் கண்ணகியும் சேர்ந்து அனுபவிக்க வேண்டிய நிலையை எண்ணும் போது, கணவன் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக வாழ வேண்டிய கட்டாய நிலையை இளங்கோவடிகள் கண்ணகிக்கு உருவாக்கி இருக்கின்றார் என்பது உணர்த்தப்படுகின்றது.

சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணியில் விசயை துறவு மேற்கொள்ளப் போவதாகத் தன் மகன் சீவகனிடம் கூறுகின்றாள். இதை அறிந்த சீவகனும் இராசமாபுர மக்களும் பெருந்துன்பம் அடைகின்றனர். அந்த நிலையில் சுநந்தையுடன் விசயை தவம் மேற்கொள்வதற்காகப் பம்பை என்பவள் உபதேசம் செய்கின்ற இடத்தை அடைந்து,  பெண்பிறப்பை விட்டொழித்து, இந்திரர்களாய்ப் பிறந்தார்கள் என்பது, சமணத்தில் பெண்பிறப்பிற்கு மோட்சம் இல்லை என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது.

முடிவுரை

சமணர்கள் அறக் கருத்துக்களை சமுதாயத்திற்கு வலியுறுத்தினார்கள் என்று கூறப்படுகின்றது. ஆனால் சமணர்கள் ஆணுக்கு ஓர் அறம், பெண்ணுக்கு ஓர் அறம் என்று பாகுபடுத்தி, அறத்தை வலியுறுத்தியிருக்கின்றார்கள். குறிப்பாக ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியை சமணம் வலியுறுத்தியதாகக் காணப்படுகின்றது. பெண்பிறப்பு, சமணத்தில் இழிபிறப்பாகப் பார்க்கப்பட்டதோடு பெண்ணுக்கு மோட்சம் இல்லை என்ற கருத்தை வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.

துணை நூல்கள்

1. இராசாராம். துரை(உ.ஆ), சீவக சிந்தாமணி, முல்லை நிலையம், சென்னை, 2001
2. இராமசுப்பிரமணியம் வ.த(உ.ஆ), சிலப்பதிகாரம், திருமகள் நிலையம், சென்னை, 2005
3. பாலசுந்தரம் பிள்ளை.தி.சு.(உ.ஆ), நாலடியார், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், திருநெல்வேலி, 2007
4. சீனி வேங்கடசாமி. மயிலை, சமணமும் தமிழும், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், திருநெல்வேலி, 1954
5. வேலுப்பிள்ளை.ஆ., தமிழர் சமய வரலாறு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு-சென்னை: 2011

========================================================

ஆய்வறிஞர் கருத்துரை:

முதற்கண் முனைவர் பெ.சுமதி அவர்களை வாழ்த்தி, இந்த மதிப்பாய்வை வழங்குகிறேன்.

ஆய்வு என்பது நாம் எடுத்துக்கொண்ட பொருளைப் பல திறக்குகள் மூலம் அவற்றின் முழுப் பொருளையும் உணர்ந்து, ஆய்ந்து, காய்த்தல், உவத்தல் அகற்றி பின், அது இட்டுச் செல்லும் வழியைக் கண்டடைவதாகும். இதைச் சரியாகப் புரிந்து தன் ஆய்வுக் கட்டுரையை ஆக்கியிருக்கிறார். எனினும், இவர் சமண மெய்யியலை முழுதும் உள்வாங்கவில்லை என்பது சிற்சில இடங்களில் தெரிகிறது.

சமண மெய்யியல், “உயிர்” சார்ந்து அல்லது உயிரைச் சுற்றி எழுந்த மெய்யியல். அது சமணத்தின் தனித்துவமான மற்ற சமய மெய்யியல்களுக்கு அடித்தளமாகவும் அமைந்தது. சமண மெய்யியலின்படி உயிர் அருவமானது, நிறம் அற்றது, பாலினம் இல்லாதது. உயிர் தான் ஏற்ற உடம்பிற்கு ஏற்றவாறு சுருங்கி, விரியக்கூடியது, உயிர் தன் வினைத் துகள்களை முற்றாக விடும்போது மேல்நோக்கிச் செல்லக் கூடியது. இதில் கட்டுரையின் கருவிற்கு உகந்ததான உயிர்க்குப் பாலினம் இல்லை. அதாவது உயிரில், ஆண், பெண், அலி என்ற பாகுபாடு கிடையாது என்பதையும் விளங்கிக்கொண்டு தன் ஆய்வை மேற்கொண்டிருந்தால் இன்னும் சிறந்திருக்கும். சமண மெய்யியலின்படி, உயிரானது பற்றுகளிலிருந்து நீங்கி, நல்வினை, தீவினைகளை அகற்றி, வீடுபேறு பெறல் வேண்டும். ஆயின், பற்றுகள் நீங்க வேண்டுமானால் முற்றும் துறத்தல் என்பது இன்றியமையாதது. முற்றும் துறத்தல் அம்மணம். இது உயிர் ஏற்றுக்கொண்ட உருவம், பெண் உடலாகவிருந்தால் சாத்தியமில்லை என்பதால் சமணத்தில் பெண் உடலை ஏற்ற உயிர்களுக்கு வீடுபேறில்லை என்ற கருத்து உருவானது.

========================================================

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “(Peer Reviewed) காப்பியங்களில் சமணம் கட்டமைக்கும் பெண்கள் நிலை

  1. கட்டுரையாளர் தனது கருத்தைச் சிறப்பாக எடுத்துக்கூறியுள்ளாா். சமணம் சாா்ந்த சொல்லாராய்ச்சி அருமை.

  2. இதில் கட்டுரையாளரின் அறியாமையே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
    1) சமணம் பெண்களை இழிவாகக் கருதவில்லை. வீடுபேறு பெண் பிறவில் கிடைக்காது. அவ்வளவே!
    2) சமண சமய பெண் துறவி கவுந்தியடிகளுடன்தான் கோவலனும் கண்ணகியும் பயணிப்பர். ஆனால் சமணசமயத்தில் பெண்கள் துறவு மேற்கொள்ள முடியாதென்று தன் அறியாமையை கட்டுரையாளர் வெளிப்படுத்தி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *