அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

முரளிதரன் வித்யாதரன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.02.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – 199

 1. காப்பாயே கடல் தாயே

  துள்ளி வரும் வெள்ளலையே தூங்கா
  கடல் தாயின் வெண்புனல் குருதி நீதானோ
  விடிவெள்ளிதனை விளக்காக்கி மடிவலையில்
  மீன்பிடிக்கும் மீனவர்க்கு துணை நீயாமோ

  திரைகடலின் உயிர் துடிப்பே கரை என்ற
  சிறைக்குள்ளே உன்னை கட்டி வைத்தது யாரோ
  விரைந்து வரும் உன் வேகம்
  கரையவளின் கை அணைப்பில் அடங்குவதென்ன மாயம்

  எங்கும் திறந்தே கிடக்கும் நெடுங்கரையிக்கு
  பொங்கிவரும் வெண்ணுரையால் போர்த்த
  புத்தம் புத்தம் புது போர்வை நித்தமும் நெய்யும்
  ஓய்விலா இயற்கை நெசவாளன் நீ

  உப்புக் காற்றோடு ஊடல் கொண்டால் நீ
  தப்பு தப்பான உயரத்தில் தாவிவருகிறாய்
  இப்புவியின் நிலப்பரப்பை இடைவிடாது தாலாட்டும் நீ
  அவ்வப்போது ஆழிப் பேரலையாகி எங்களை அழவைகின்றாய்

  எம்மாந்தர் மனம்போலே ஒரு நிலை இல்லாமல்
  எழும் வீழும் உன் எழில்கண்டு களிப்பு றும் வேளையிலே
  எச்சரிக்கை ஏதும் இல்லாமல் எமை அள்ளி செல்லும்
  எமானாக பொங்கிவரும் அழிப்பது ஏனோ

  வெப்பம் தின்று குளிரூட்டும் நீ எங்கள்
  தப்பு தவற்றை பொருத்தருள கூடாதோ
  இப்புவியின் சூழல் காக்க இன்னும் ஓர்வாய்பப்பு
  எப்படியாயினும் தந்திட வேண்டும் கடல் தாயே காப்பாயே
  யாழ். பாஸ்கரன்
  ஓலப்பாளையம்
  கரூர்- 639136
  9789739679
  basgee@gmail.com
  noyyal.blogspot.in

 2. தொடரட்டும் அழகு…

  கடலில் அலைகள் ஓய்வதில்லை
  காணும் அழகும் குறைவதில்லை,
  உடையாய் உலகை மறைத்திருக்கும்
  உவரி தனக்கும் வரும்கோபம்,
  அடங்கி யிருக்கும் அலைக்கரத்தால்
  அடித்தே நொறுக்கிடும் அகிலத்தையே,
  தொடர்க கடலே உனதழகை
  தொடர வேண்டாம் அவலங்களே…!

  செண்பக ஜெகதீசன்…

 3. கொந்தளிக்கும் அலைகடல்..
  ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
  -ஆ. செந்தில் குமார்.

  பரப்புரை செயவேண்டியதைப்
  பெட்டிக்குள் அடைத்தும்..
  பெட்டிச் செய்திகளைப்
  பெரிதுப் படுத்தியும்..
  பதிவிடும் ஊடகங்கள்..!!

  ஆயிரம் நல்லவை
  அவனியில் நிறைந்திருந்தும்..
  அந்தவொரு அவசியமற்றதைப்பற்றி
  அதிகமாய் அங்கலாய்க்கும்..
  அறிவில் குறைபாடுள்ள சமுதாயம்..!!

  சமூக ஊடகங்களில்
  சறுக்கிவிழுகின்ற தலைமுறை..
  சிறுத்துப்போன உள்ளங்கள்..
  சமுதாயத்தைச் சீரழிக்கும்
  சிற்றின்ப விளம்பரங்கள்..!!

  பொருள் தேடலில்
  பொலிவிழந்த வாழ்க்கை..
  பணத்தைக் கொண்டாடும் உலகில்
  பதவிச்சண்டைகள் பெருத்து..
  பண்பு பரிதவிக்கும் அவலம்..!!

  இவற்றையெல்லாம் நினைந்து..
  இன்னலுற்றது சிலரின்
  இதயங்கள் மட்டுமல்ல..
  சிலநேரங்களில் அலைகடலும் ஆழிப்பேரலையாய்..
  சீற்றங்கொண்டு கொந்தளிக்கிறது..!!

 4. கடலுக்கு வந்த காதல்

  அமைதியாய் பகலெல்லாம் ஓயாமல் அலைபாய
  அந்தி சாய்ந்ததும் நீ பொங்கி எழுந்தது ஏனோ
  அழகான வெண்ணிலா வானில் உலா வர
  ஆனந்தத்தில் பொங்கி எழுந்தாயோ
  விண்மீன்கள் சூழ வந்த வெண்ணிலவை காண
  கரையில் வந்து நின்ற மானுடர்களின்
  கால்களை கழுவி அழைத்தாயோ
  தொடர்ந்து வரும் அலையாய்
  கரையில் விழுந்து சப்தம் எழுப்பி
  கவனத்தை ஈர்க்க முயன்றாயோ
  வந்து நின்ற வெண்ணிலவை கண்டு
  நிலை கொள்ள இயலாமல்
  நித்தம் அலைகளாய் இயங்கினாயோ
  காதல் வந்து நெஞ்சுக்குள் நிலவை வைத்திட
  ஆழ்கடல் அமைதியாய் மாறியதோ
  கலங்காது இருந்த கரையை ஓயாமல் அலையடித்து
  வன்முறை செய்வது ஏனோ
  இரவென்று உறங்க முயன்ற கரையை அலையடித்த எழுப்பி
  உன் காதல் கதையை சொல்ல முயன்றாயோ
  விடியல் வந்து இரவை விரட்டிட
  விலகி சென்ற வெண்ணிலவை கண்டு
  நெஞ்சில் புயல் ஒன்று உருவானதோ
  அமைதியாய் பாயும் அலையும்
  பொங்கி சீற்றத்துடன் பாய்ந்து
  தன் இயலாமையை வெளிப்படுத்தியதோ
  இரவெல்லாம் உறங்காமல் வெண்ணிலவை எண்ணி ஓடிட
  உனக்கும் மன அழுத்தம் வந்ததோ
  சற்றே ஓய்வெடு அமைதியாய் அலை வீசிடு
  சூரியன் மேற்கில் சென்று ஒளியும் வரை
  மீண்டும் உன் அருகில் வந்து உதித்திடுவாள்
  உன் ஆசை வெண்ணிலவு

 5.  ஓயப்போவதில்லை என்று ஆா்ப்பறித்தாலும்
  விடப்போவதில்லை என்று மோதினாலும்
  பாா்ப்பவா்க்குத்தான் வியப்பு
  காற்றுக்கில்லை!
  காதலிப்பது கரையும் நீரூம் மட்டுமல்ல
  காற்றும்தான்!
  உண்மைபோல
  காற்றும் உறுதியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *