நாகேஸ்வரி அண்ணாமலை

இந்து மதத்தில் பிறந்ததால் மட்டுமே (இந்து மதச் சம்பிரதாயங்கள் எதையும் நான் பின்பற்றுவதில்லை) இந்து என்று கணிக்கப்படும் நான் ஏன் போப் பிரான்சிஸ் பற்றி ஒரு புத்தகம் எழுதினேன் என்று பலர் வியக்கிறார்கள். நான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டேனோ என்றும் பலர் நினைக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஒரு விளக்கம் தரக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் போப் பிரான்சிஸ் பற்றி எழுதியது, நான் இதுவரை அறிந்திராத ஒரு மதத் தலைவர் அவர் என்பதால்.

நான் இதுவரை அறிந்திருந்த மதத் தலைவர்கள் (நான் யாரையும் நேரில் சந்தித்ததில்லை) யாரும் இவரைப் போல் பரந்த மனப்பான்மையோடு இருப்பவர்களாகவோ, ஏழைகள், வறியவர்கள், சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்கள் மீது அன்பும் பரிவும் காட்டுபவர்களாகவோ, குற்றம் புரிந்தவர்களையும் மன்னித்துச் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களாகவோ, தன் மதம்தான் பெரியது என்று கூறாதவர்களாகவோ, எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எல்லோரும் கடவுளின் குழந்தைகள் என்று எண்ணுபவர்களாகவோ, மதத்திற்கு அப்பாற்பட்டு உலக அமைதியிலும் பூமியின் சுற்றுச் சூழலிலும் அக்கறை செலுத்தி அடிக்கடி அறிவுரை கூறுபவர்களாகவோ இருக்கவில்லை. அவர்பால் நான் ஈர்க்கப்பட்டதற்கு இவருடைய இந்தக் குணங்களே முக்கிய காரணங்கள்.

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றாகிய அபுதாபிக்கு விஜயம் செய்திருக்கும் முதல் போப், போப் பிரான்சிஸ். 2016-இல் இவரை வாடிகனில் சந்தித்த அபு தாபியின் இளவரசர் அபு தாபிக்கு வரும்படி இவரை அழைத்திருக்கிறார். அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரான்சிஸும் இதுவரை எந்தப் போப்பும் விஜயம் செய்திராத, இஸ்லாம் மதத்தின் பிறப்பிடமான அரேபிய தீபகற்பகத்திற்கு வந்திருக்கிறார். அபு தாபி அரசில் சகிப்புத்தன்மைக்கு ஒரு துறை இருக்கிறதாம்! இந்த நாட்டின் இளவரசர் போப்பை தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைத்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. உலகில் வன்முறை ஒழிந்து அமைதி நிலவ வேண்டும் என்று விரும்பும் போப் பிரான்சிஸ், அவருடைய அழைப்பை ஏற்று அங்கு போவதற்கு ஒத்துக்கொண்டதிலும் எந்த ஆச்சரியமும் இல்லை.

கிளம்புவதற்கு முன்னால் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் இருந்தவர்களிடம் போப், “ஏமனில் நிலவும் நிலைமை என்னை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது. அங்கு குழந்தைகள் உணவின்றிக் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுடைய கூக்குரல் கடவுளுக்குக் கேட்கிறது. சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரும் ஏமன் மக்களின் துயரத்தைப் போக்கப் பாடுபட வேண்டும்” என்று கூறினார்.

ஐக்கிய அரபு நாடுகள் உருவாவதற்கு முன்பே 1965-இல் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் அபு தாபியில் கட்டப்பட்டது. அதன் பிறகு வேறு எந்தத் தேவாலயமும் கட்டப்பட்டதாகத் தெரியவில்லை. ஏமனில் ஹௌதி போராளிகளை அழிப்பதற்கு சௌதி அரேபியா உதவுவதோடு அபு தாபியும் சௌதி அரேபியாவின் கூட்டாளியாக இருக்கிறது. வாடிகனைச் சேர்ந்தவர்கள் போப் ஏற்கனவே விஜயம் செய்துள்ள ஆறு முஸ்லீம் நாடுகளில் மிகவும் ராஜ தந்திரமாக நடந்துகொண்டார் என்றும் இப்போது அபு தாபியிலும் பொது இடங்களிலாவது வெளிப்படையாக எதையும் கூற மாட்டார் என்றும் கூறினர்.

ஆனால் போப் பிரான்சிஸோ, அபு தாபியில் நடந்த முதல் கூட்டத்தில், பல மதத் தலைவர்கள் கூடியிருந்த கூட்டத்தில், தன்னுடைய ராஜ தந்திரத்திலிருந்து கொஞ்சம் விலகி ஆணித்தரமாக அங்கு மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளைக் கண்டித்துப் பேசினார். சாதாரணமாக போப், அவர் விஜயம் செய்யும் நாடுகளின் அரசுகளை அங்கிருக்கும்போதே கண்டித்துப் பேசுவதில்லை. ஆனால் அபு தாபியில் சிறுபான்மையராக இருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னால் பிரான்சிஸும் எகிப்தைச் சேர்ந்த ஒரு பெரிய மசூதியின் இமாமும் “மனித நேய ஆவணத்தில்” (Document of Human Fraternity) கையெழுத்திட்டனர்.

பல நூற்றாண்டுகளாக விரோதிகளாக இருந்த முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் மதத்தின் பெயரால் வன்முறை, தீவிரவாதம், மதவெறி ஆகியவற்றை மக்களிடையே பரப்பி கடவுளின் பெயரால் அதை நியாயப்படுத்துவதை நிறுத்தும்படி கேட்டுக்கொள்ளும் ஒரு கொள்கை விளக்க அறிவிப்பைப் போல் இந்த ஆவணம் இருக்கிறது. பிற மதத்தவரின் வழிபாட்டுத் தலங்களை அழிப்பது, மதங்கள் போதிக்கும் அறிவுரைக்குப் புறம்பானது என்று பிரான்சிஸ் கூறினார். அகதிகளாக வருபவர்கள் எங்கிருந்து வந்தாலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது ஒவ்வொரு நாட்டின் கடமையென்றும் அகதிகள் வருவதைத் தடுக்கத் தடைகள் அமைப்பதையும் சுவர் கட்டுவதையும் கண்டிக்கும்படி எல்லா மதத் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

அபு தாபி மன்னரின் மாளிகைத் தோட்டத்தினூடே போப்பை அழைத்துச் சென்றபோது அவரைச் சுற்றிப் பெரிய பெரிய விலையுயர்ந்த கார்கள் வந்துகொண்டிருக்க, போப் பிரான்சிஸ் தன்னுடைய சாதாரண சிறிய காரில் பயணம் செய்தார். இவருடைய எளிமைக்கு இது ஓர் உதாரணம். போப் எந்த நாட்டிற்கு விஜயம் செய்தாலும் விலையுயர்ந்த கார்களைத் தவிர்த்துவிட்டுத் தன்னுடைய சிறிய காரில்தான் பயணிப்பார்.

இறுதியாக மதங்கள் தோன்றிய நாளிலிருந்தே மதத்தலைவர்களைச் சர்ச்சைக்குள்ளாக்கி வரும் ஒரு கேள்வியை பிரான்சிஸ் கேட்டார்: மதங்கள் மனித இனங்களைப் பிரிப்பதற்குப் பதில், மனிதர்களிடையே சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கு எப்படிப் பாடுபடலாம்?

அவருடைய பதில்: சகிப்புத் தன்மையோடு எல்லோரும் ஒரே மாதிரியாக மதிக்கப்பட வேண்டும், யாரும் யாருக்கும் மாஸ்டரும் இல்லை, அடிமையும் இல்லை என்னும் புரிதல் எல்லோருக்கும் வேண்டும். மேலும் இந்தப் புரிதல் இருந்தாலொழிய மனித இனத்திற்கு எதிர்காலம் இல்லை என்கிறார் போப் பிரான்சிஸ்.

இவரைப் போன்ற ஒரு மதத் தலைவரை யாரால் போற்றாமல் இருக்க முடியும்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.