சேக்கிழார் பா நயம் – 23
-திருச்சி புலவர் இரா,இராமமூர்த்தி
சடையனார் மாதினியர் மைந்தராகத் தோன்றி, நரசிங்க முனையரையர் வளர்ப்பு மகனாகத் திகழ்ந்த சுந்தரர் மணப்பருவம் அடைந்தார். அவர்தம் பெற்றோர் விருப்பத்தின் வண்ணம் புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் திருமகளை மணம் பேசினர். அவ்வாறே திருமண ஏற்பாடுகளை அரசரும் செய்தார்!
முன்பே திருக்கயிலையில் சுந்தரர் இறைவனுக்கு மலர்கள் பறிக்க நந்தவனம் வந்தபோது, அங்கு வந்த அம்மையின் தோழியர் இருவர்பால் மனம்போக்கினார்! அதனால் அவர்களை இறைவன் தென்திசையில் பிறந்து, இல்லற இன்பம் துய்த்து, பின்னர் கைலை வந்தடையுமாறு அருள் புரிந்தார்! திருக்கயிலை மலை வாழ்வை இழந்து , மானுடராகி , மையல் வலைப்பட்டு மயங்காமல் தடுத்தாட் கொள்ள வேண்டும் என்று சுந்தரர் இறைவனை வேண்டினார்! அப்போது அங்கே இறைவன் ‘’அவ்வாறே தடுத்தாள்வோம்!’’ என்று திருவாய் மலர்ந்தார்! வேதங்கள் ஒலிக்கின்ற கயிலைமலையில் செப்பியருளிய வாக்குறுதியைக் காக்க சுந்தரரரைத் தடுத்து வழிவழியாக அடிமைகொண்டு வாழ்விப்பதற்காக சிவபிரான் சுந்தரர் திருமணம் நிகழ்ந்த ஊருக்கு வந்தருளினார்! அவ்வாறு அவர் மணம்வந்த புத்தூருக்கு எழுந்தருளிய தண்மையைச் சேக்கிழார் பெருமான் பாடுகிறார்.
எப்போதும் வேதத்தின் ஓசையே ஒலித்துக் கொண்டிருக்கும் சூழலை உடையது திருக்கயிலைமலை! இதனைத் திருஞானசம்பந்தர் ,
தாதார் கொன்றை தயங்கும் முடியர் முயங்கு மடவாளை
போதார் பாகம் ஆக வைத்த புனிதர் பனி மல்கும்
மூதார் உலகில் முனிவர் உடனாய் அறம்நான்கு அருள்செய்த
காதார் குழையர் வேதத் திரளர் கயிலை மலையாரே!
என்றும் ,
‘’சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய்
கற்றவர்கள் சொல் தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே!’’
என்றும்,
‘’ஏதம் இல பூதமொடு கோதை துணை ஆதி முதல் வேத விகிர்தன்
கீதமொடு நீதிபல ஓதிமற வாதுபயில் நாதன் நகர்தான்
தாதுபொதி போதுவிட ஊதுசிறை மீதுதுளி கூந்தல் நலிய
காதல்மிகு சோதிகிளர் மாதுமயில் கோதுகயி லாயமலையே!’’
என்றும்,
‘’நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என்செய்தாய்
கலைகள் ஆயவல் லான்கயி லாயநல்
மலையன் மாமயி லாடுது றையரன்
தலையின் மேலும் மனத்துளும் தங்கவே!’’
என்றும் திருமுறைகள் பாடுகின்றன! இத்தகைய வேதவொலி எப்போதும், எங்கும் கயிலை மலையில் கேட்கின்றது! இதனைக் கேட்டுக்கொண்டே இருக்கும் சிவபிரான் அதனையே மீண்டும் கூறுகிறார்! அதனைத் தென்திசைத் தமிழ் மொழியில் ஈசன் வழங்கி மகிழவே, தம் கண்ணாடிப் பிரதிபலிப்பாகிய ஆலால சுந்தரரை அனுப்பினார்! அவரைத் தடுத்தாட்கொண்ட போது,
‘’அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுக என்கிறார், தூமறை பாடும் வாயார்!’’
என்று பணித்தார். இதனையே இங்கு சேக்கிழார் ,
‘’ஆலுமறை சூழ்க்கயிலை யின்கண்அருள் செய்த
சாலுமொழி யால்வழி தடுத்தடிமை கொள்வான்!’’
என்று பாடுகிறார்! அன்று கையிலை மலையின்கண் சுந்தரரைத் தடுத்து ஆட்கொள்வதாக அருள்செய்த மொழியே சாலும் மொழி! அவ்வாறே சுந்தரர் மையல் மானுடமாய் மயங்கி , இறைநெறி நீங்கித் திருமணம் செய்துகொள்ள முயன்றபோது அவரைத்தடுத்து வழி வழியாய் அடிமை கொண்டார்! இதனைத் ‘’தடுத்து வழியடிமை அடிமை கொள்வான்!’’ எனப் பாடினார்! கொள்வான் என்பது கொள்ளும்பொருட்டு, என்ற வான் ஈற்று வினையெச்சமாகவும், கொள்பவனாகிய சிவபெருமான் என்ற வினையால் அணையும் பெயராகவும் விளங்குகிறது! வினைகருதி அணைபவன் தானே சிவபெருமான்?
அத்தகைய வாக்குத் தவறாத சிவபிரானை அடுத்த அடிகளில் உலகிற்கே அறிமுகம் செய்கிறார்! சிவபிரானை நாம் கண்டு அளந்தறிவோம் என்று திருமாலும் , பிரமனும் முன்வந்தனர்! அப்போது சிவபெருமான் அக்கினி வடிவில் அண்ணாமலையாராக மேலும் கீழும் வளர்ந்தார்! திருமால் சிவபெருமான் திருவடியைக் காணக் கீழ் நோக்கிப் பன்றி வடிவில் தோண்டித்தோண்டிச் சென்றார்; பிரமனோ அவர் முடியைக் காண, அன்னப் பறவை வடிவில் மேலே மேலே பறந்து சென்றார்! ‘’மாலறியா நான்முகனும் காணாமலை ‘’ என்று மாணிக்க வாசகர் பாடினார்! அவரை நம் சேக்கிழார் ,
‘’மேலுற எழுந்து மிகு கீழுற அகழ்ந்து
மாலும் இருவர்க்கும் அரியார் , ஒருவர் வந்தார்!’’
என்று பாடுகிறார்! படைப்புக் கடவுளான பிரமனும், காக்கும் கடவுளான திருமாலும் இறைவனின் அடி,முடி தேடி மயங்கினர்! இதனை, ‘’மாலும் இருவர்க்கு ‘’ என்கிறார் சேக்கிழார்! மாலும் என்பதற்கு மயக்கம் கொள்ளும் என்பது பொருள்! அவர்களாலேயே அறிந்துகொள்ளுதற்கு அரியவரான ஒருவர்! என்று சேக்கிழார் கூறியதன் நுட்பம் உணர்ந்து மகிழ்தற்கு உரியது! அவர் உருவத்தாலும் பெரியவர் மட்டுமல்ல; காலத்தாலும் முதியவர்! எந்தக் காலத்திலும் இறுதி இல்லாத சிவபெருமானின் காலத்தை மிக எளிதாக அப்பர் சுவாமிகள்,
‘’நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறு இல்லாதவன் ஈசன் ஒருவனே !’’
என்று பாடித் தலைக்கட்டுவார்! அத்தகைய நீளாயுளும் பேருருவமும் படைத்த ஈசனை யாவராலும் அளக்கவியலாது.இதனைத் திருமூலர்,
‘’ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
ஆர் அறிவார் இந்த அகலமும் நீளமும்
பேர் அறியாத பெரும் சுடர் ஒன்றதின்
வேர் அறியாமை விளம்புகின்றேனே!’’
என்று வியந்து போற்றுகிறார்! இவ்வாறெல்லாம் அளவிட இயலாத பெருமை உடையவன் ஈசன் என்று சேக்கிழார் கூறுவதன் காரணம் அடுத்த நிகழ்வுகளில் புலப்படும்! ஆம், யாருக்கும் அவர் பெருமை புலப்படாத நிலையில், ஓர் ஓலையைக் காட்டிச் சுந்தரர் திருமணத்தைத் தடுத்த செயலால் சிவபெரு மானின் ‘அகடித கடனா’ சாமர்த்தியத்தையும் புரிந்து கொள்ள வியலாமல் புத்தூர் அந்தணர்களே திகைக்கின்றனர்! இவர்களைத் திகைக்க வைத்த ஈசனின் அருள் விளையாடலை அடுத்து நாம் காணப் போகிறோம். இப்போது சேக்கிழாரின் பெரிய புராணப் பாடலை முழுமையாகக் கற்றறிவோம்!
ஆலுமறை சூழ்க்கயிலை யின்கணருள் செய்த
சாலுமொழி யால்வழி தடுத்தடிமை கொள்வான்
மேலுற வெழுந்துமிகு கீழுற வகழ்ந்து
மாலுமிரு வர்க்குமரி யாரொருவர் வந்தார்!
இப்பாடலில் ஒருவர் என்ற சொல், ஒப்பற்றவர் என்ற பொருளில் அமைந்து இறைவனின் நிகரற்ற சிறப்பை எடுத்துக் காட்டுகிறது!