Tag: சியாமளா ராஜசேகர்

  • இல்லறமே நல்லறம்

    -சியாமளா ராஜசேகர்

    இல்லறத்தை நல்லறமாய்ப் பேணி வாழ்ந்தால்
    ***இல்வாழ்வில் என்றென்றும் அமைதி தங்கும் !
    கல்லெறிந்தால் கலங்கிவிடும் குட்டை நீராய்க்
    ***கவலைகளை நினைத்திருந்தால் குழம்பும் நெஞ்சம் !
    பல்வேறு சங்கடங்கள் தொடர்ந்த போதும்
    ***பக்குவமாய்க் கலந்துபேசப் பறந்து போகும் !
    வெல்லுவழி புரிந்துகொள்ள மூத்தோர் கூற்றை
    ***விருப்போடு செவிகொடுத்துக் கேட்டல் நன்றே !!

    இருகைகள் தட்டினாற்தான் கேட்கும் சத்தம்
    ***இதையுணர்ந்து கொண்டாலே நீங்கும் பித்தம் !
    ஒருவருக்கொ ருவர்விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்
    ***ஒருபோதும் நிம்மதிக்கு மில்லை பஞ்சம் !
    செருக்கோடு தானென்று மார்தட் டாமல்
    ***சிறுபிணக்கை முளையினிலே கிள்ளல் வேண்டும் !
    வருந்துயரைத் துணிந்துயெதிர் நீச்சல் போட்டால்
    ***வாழ்க்கையெனும் படகுகரை யேறும் நன்றே !!

    பிறைநிலவை குறையென்று நீல வானம்
    ***பிரித்துவைத்தா தான்மகிழ்ச்சி இரவில் கொள்ளும் ?
    குறைகளையே எப்போதும் குத்திக் காட்ட
    ***குமைந்திருக்கும்‌ மென்மனமும் கனலைக் கக்கும் !
    நிறைகண்டால் பாராட்டும் உயர்ந்த வுள்ளம்
    ***நீடித்த மகிழ்விற்கு வித்தே யாகும் !
    உறவுகளை மதித்திருந்தால் மேன்மை பெற்றே
    ***உயர்ந்திடலாம் வாழ்வினிலே நாளும் நன்றே !!

    சியாமளா ராஜசேகர்
    இராயபுரம் , சென்னை – 600013
    அலைபேசி – 9840769555

    Share
  • ஆசுகவி விருந்து

    -சியாமளா ராஜசேகர்

    சென்ற வாரம் ( 23:03:2019) பைந்தமிழ்ச் சோலையில் வேறெங்கும் சுவைத்தறியா விருந்து சுடச்சுட பரிமாறப் பட்டது. அவ்விருந்தின் சுவை என்றும் நெஞ்சத்தை விட்டு  அகலாது. அப்படி என்ன விருந்து என்கிறீர்களா ? செந்தமிழ் விருந்து ! தமிழிலக்கிய வரலாற்றில் முதன்முறையாக ஒரு சாதனை விருந்து …..ஆசுகவி விருந்து ! ஒருமணி நேரத்தில் 100 பாடல்கள் அந்தாதியில் . நேரலையாக …!! அந்த அற்புதப் படையலைப்  பரிமாறியவர்கள் யார் தெரியுமா ?? பைந்தமிழ்ச் சோலை நிறுவனரும் , பைந்தமிழ்ப் பேராசானுமாகிய மரபு மாமணி பாவலர்  மா. வரதராசன் அவர்களுடன் பன்முகத்திறன் கொண்ட பைந்தமிழ்செம்மல் , ஆசுகவி விவேக் பாரதியும் ! இருவரும் இணைந்து சிந்தைக்கினிய விருந்தளித்தனர். இதில் மற்றொரு சிறப்பும் உள்ளது.
    ஆசானுடன் மாணாக்கன் இணைந்து களமிறங்கியது …பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

    இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சோலைக் குயில்கள் அனைவருமே உற்சாகத்தில் மிதந்தனர். விருந்து சுவைக்கப் பசியோடு காத்திருந்தனர். இளங்கன்று பயமறியாதே! சோலையின் இளங்குயிலும் “பார்க்கத்தானே போறீங்க இந்தக் கவிஞர்களோட ஆட்டத்த!!!” என்று சவால் விட்டது. வெண்டளையானியன்ற தாழிசை அந்தாதியில் ” இறைமை ” யைப் பாடுபொருளாகக் கொண்டு சரியாக  இரவு ஒன்பது மணிக்கு விருந்து சமைக்க கவிஞர்கள் இருவரும் தயாராய் இருக்க , பைந்தமிழ்ச் செம்மல் அழகர்  சண்முகம் அவர்கள் “உலகம்” என்ற முதற்சொல்லைச் சரியாக இரவு 8.55 மணிக்குக் கொடுத்தார். கம்பராமாயணத்தின் முதற்பாடலின் முதற்சொல்லைக் கொடுத்துப் பச்சைக் கொடிகாட்ட கவித்தேர் தமிழன்னையின் ஆசியோடு புறப்பட்டது.

    “உலகம் முழுமைக்கும் ஒன்றாய் விளங்கும்
    தலைவன் திருப்பாதந் தான்பெறுதல் எக்காலம் ?” என்று விவேக் தொடங்க

    “பெறுதலைத் தானீக்கிப் பேரானந்த தத்தில்
    உறுதலை யான்பெற் றுருப்படுவ தெக்காலம் ?” என்று பாவலர் தொடர

    களைகட்டத் தொடங்கியது பைந்தமிழ்ச் சோலை . 30 நொடிகளுக்கொரு பாடல் சோலையில் மலர்ந்து மணம் பரப்பியது. அதன்  நறுமணத்தை நுகர நூற்றுக்கணக்கானோர் சோலையில் கூடினர். எல்லோர் விழிகளும் இமைகொட்டாமல் அலைபேசியையும் . கணினியையுமே மொய்த்துக் கொண்டிருந்தன. என்ன வேகம் ! என்ன வேகம் ! . இடைவெளியின்றித் துள்ளி வந்தன பாக்கள் இருவரிடமிருந்தும் ! ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்று மெய்ப்பித்துக் கொண்டிருந்தனர் குருவும் சீடனும் !! சோலைக் கவிஞர்கள் நுட்பமாய் ஆய்ந்துகொண்டிருந்தனர் அவசரத்தில் எங்கேனும் பிழை தென்படுகின்றதா என்று ! ஆனால் ஏமாற்றம்தான் மிச்சம் .

    நேரம் செல்லச் செல்ல ஆட்டத்தைக் கண்டுகளிக்க , விருந்தைச் சுவைக்க மேலும் பலர் கூடினர். சோலையே திருவிழாக் கோலம் பூண்டது. சுவைஞர்களின் விழி சோர்ந்தபோதும் சமைக்கும் கவிஞர்களின் விரல்கள் சற்றும் சோர்ந்திடவில்லை. .

    சொல்லழகும், பொருளழகும் …அடடா ! அந்தச் சொக்கனே சொக்கியிருப்பான் இவர்தம் பாக்களில் ! புயலெனச் சுழன்று நிமிடத்திற்கு இரண்டு பாக்கள் பறந்து வந்தாலும் சித்தர்களின் வாக்கினைப் போல் தெள்ளத் தெளிவாய்த், தெவிட்டாத் தெள்ளமுதாய் அமைந்திருந்தது சிறப்பு !! உலகம் என்ற சொல்லில் தொடங்கி அதே சொற்கொண்டு முடித்து மண்டலவந்தாதியாய் அமைந்தது மற்றுமோர் சிறப்பு.

    காட்டாக சில பாடல்கள் தருகிறேன் ….. நான் சுவைத்த அற்புத விருந்தை எல்லோரும் சுவைக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் ….!!! இப்பாடல்களில் அமைந்துள்ள எதுகை, மோனை அழகும், கவித்துவமும் நெக்குருகச் செய்யும். ,முழுதும் இவ்வாறே அமையப்பெற்றுள்ளது.  இருப்பினும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் .என்பதுபோல் மும்மூன்று பாக்கள் கொடுத்துள்ளேன்.

    1. மேலிருக்கும் நாயகனின் மேன்மை நினைத்திந்தத்
    தோலிருக்கும் பொய்ச்சிறையைத் தூரவிடல் எக்காலம்?….. விவேக் பாரதி

    விடலாய் வினைமிகுத்து மேதினியில் பற்றுகுத்துப்
    படலாய்ப் பரமனைப் பாவுதலு மெக்காலம்? ….. பாவலர்

    2. இட்டாரைத் தேடி இருட்குழிக்குள் வீழாமல்
    பட்டாங்கில் ஈசனைப் பாடுவது மெக்காலம்…. பாவலர்

    பாடும் மொழியனைத்தும் பாரா இறைகொடுத்த
    கூடல் எனச்சொல்லிக் கும்பிடுதல் எக்காலம்?….. விவேக் பாரதி

    3. நீக்கலும் யாவையும் நீக்கலாச் சோதியன்
    நோக்கினில் வீழ்ந்து நுரைத்திருப்ப தெக்காலம்?….. பாவலர்

    நுரையாய் விழிமறைக்கும் நூதனக் காமம்
    விரைந்தோட என்னுள்ளம் வீச்சுறுதல் எக்காலம்? ….. விவேக் பாரதி

    வாழ்வின் நிலையாமையையும் , இறையருளின் மேன்மையையும் மிகச் சிறப்பாய்க் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்தததைப் பலரும் பாராட்டினார்கள் . இந்தச் சாதனை தமிழிலக்கிய உலக வரலாற்றில் பதிவாகிப் பலருக்கும் உந்துசக்தியாய் அமையும். இந்த மின்னல் வேக விளையாட்டில் இருவருமே மாபெரும் வெற்றியாளர்கள் ! இதுகுறித்து பைந்தமிழ்ச்சோலை நிறுவுனர் பாவலர் மா வரதராசன்,

    பத்திரக்கிரியாரின் மெய்ஞானப்புலம்பலை அடியொற்றி, அதேயாப்பில் ஆனால் அந்தாதியாக இச்சாதனையை யாம் செய்துமுடித்தோம். எவ்விதமோவெனின், ஒன்றரை மணிநேரத்தில் நூறுபாடல்களென, நாற்பது நொடிக்குள் ஒரு பாடல் என்ற வேகத்தில், வெண்ட டையோடும், அந்தாதியோடும், பேரின்பப் பொருளினின்றும் சற்றும் விலகாமல், பொருண்மைச்சிறப்புடனும் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. எம் சோலையாலன்றி வேறியார்க்கும் இச்சாதனை வய்க்குமோ என்பது ஐயமே.! எல்லாம்வல்ல பரம்பொருளும் எந்தமிழ்த்தாயின் அருளுமே இதற்கு அணியமாயிற்றென்பது கண்கூடு” என்கிறார்.

    இந்த வெற்றிக் கூட்டணி தம் ஆட்டத்தை இன்றோடு நிறுத்தவில்லை . வாராவாரம் சனிக்கிழமைகளில் தொடரவிருக்கிறது.

    இப்படிப்பட்ட அற்புத விருந்தைச் சுவைக்க …..”பைந்தமிழ்ச் சோலைக்கு” வாருங்கள் !!

    Share
  • படக் கவிதைப் போட்டி – 5இன் முடிவுகள்

    அண்ணாகண்ணன்

    தமிழக – கேரள எல்லையில், ராமக்கல்மேடு என்ற கிராமத்தில் உள்ள குறவன் – குறத்தி சிலையை அமுதா ஹரிஹரன் படம் எடுத்தார். அதை நமது படக் கவிதைப் போட்டிக்குச் சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்தார். இந்தப் பொருள் பொதிந்த படத்துக்கு வல்லமை அன்பர்கள், நயமான கவிதைகளைப் படைத்துள்ளனர்.

    Amutha Hariharan's photo of Kuravan Kurathi Statue

    சிலையாய் அமர்ந்துள்ள இணையர், எதிரே பசுமை போர்த்திய மலைத் தொடர், மேலே வெண் மேகம் தவழும் நீல வானம் என ஒரு வளமான காட்சி, திறமான படைப்புகளுக்குச் சரியான தீனி. இருவர் ஏன் சிலையாக அமர்ந்துள்ளனர் என்ற தேடல், விதவிதமான கற்பனைகளைத் தூண்டி விட்டுள்ளது. இதற்கு ஜெயபாரதனும் எஸ்.பழனிச்சாமியும் ஜெயஸ்ரீ ஷங்கரும் புனிதா கணேசனும் வடித்த பின்கதைகள் நன்று. இவை, காவியமாக விரித்துரைக்கும் வாய்ப்பினைக் கொண்டவை.

    ஊடும் பாவுமாக விரவிச் செல்லும் இந்த வண்ண வரிகளுள் சில, சட்டென்று என்னை ஈர்த்தன.

    கலை தவழும் மலை
    மலை தழுவும் முகில்
    இவற்றோடு
    காதல் தலைவி தலைவனாய்
    நீயும் நானும்!

    எனக் கிரேஸ் பிரதிபாவும்

    மெல்ல கேசம் வருடும்
    மேகக் காதலனின் காதில்
    கிசுகிசுக்கிறாளோ –
    மரகதப் பட்டுடுத்திய
    மலை மங்கை?

    எனத் தமிழ் முகிலும்

    அன்பு நிறைந்த ஏகாந்த பூமியிது
    ஆசைக் கண்கள் தாலாட்டிய பூமியிது
    காலச் சுழற்சி, காதல் மலர்ச்சி
    பிறவிகள் வேண்டும்

    என ஜெயஸ்ரீ ஷங்கரும்

    நீலவான் நிலத்தை நோக்க
    நிலம்நாணி வானை நோக்க
    காலனே நீயும் எம்மை
    கணக்கினில் கொள்ளும் முன்னம்
    ஞாலமே வியக்கும் வண்ணம்
    நாமிங்கு சிலைகள் ஆனோம்!

    என ஜெயராம சர்மாவும்

    கனிவுறு காதலில் கல்லானோம்
    இனியொரு பிறவியில் இணைவோமா?
    அந்த வானமும் இந்த பூமியும் போலே
    எந்த போழ்திலும் சேர்ந்தேயிருப்போமா?

    எனப் புனிதா கணேசனும்

    ஊனுயிராய் உலவிக் கலக்கும்
    ஊன்றுகோல்! அன்பு ஊற்று!
    உன்னதம்! காதல் இறைமை!
    இத்தேடல் பிரபஞ்ச மயக்கம்!
    இவ்வாடல் உலக இயக்கம்!

    எனப் பா.வானதி வேதா. இலங்காதிலகமும்

    நிலையா உலகில் நிலைபெறவே
    நினைவுச் சின்ன நிலையானார்,
    கலையே ஈதெனப் பார்த்தாலும்
    காதல் சிலையெனச் சேர்த்தாலும்,
    விலையெனச் சொல்ல ஏதுமில்லை
    வென்றே நிற்கும் காலத்தையே…!

    எனச் செண்பக ஜெகதீசனும்

    இவர்கள்
    எதுவும் இல்லாதிருந்தபோது
    எல்லாமும் பெற்றிருந்தனர்
    எல்லாமும் கிடைத்தபோது
    எதையோ இழந்து நிற்கின்றனர்!

    எனக் கொ.வை அரங்கநாதனும் தீட்டிய வரிகள், என் ரசனைக்கு விருந்து படைத்தன.

    எனினும் ஒரு முழுமையான கவிதை என்ற அளவில் பார்க்கிற போது, சங்கர் சுப்பிரமணியனின் இந்தக் கவிதை என்னைப் பெரிதும் கவர்ந்தது.

    இதுவரை
    அறிந்திராத மொழியும்
    தீண்டலில் கரையும்
    புரியாத உணர்வுகளும் என
    பக்கமிருப்பிலே
    தூரமாகி போகிறது
    நாம் காணும் உலகம்

    மின்னும் நட்சத்திரம்
    காற்றினில் தவழ்ந்து வந்து
    நம்மை தழுவும் இசை
    உருகும் பனி
    பச்சை புல்வெளி
    பார்த்த பரவசம் என
    மீளா கணங்களில்
    முன்னம் விரியுது
    இதுவரை நாம்
    பார்த்திராத உலகம்

    நாம் கற்சிலையான
    தருணத்திலும்
    தீராத நம் பேச்சினில்
    கிளர்ந்தெழும் உணர்வுகளால்
    கலைத்து போகிறது
    கடந்து போகும் மேகமும்
    சுற்றி வரும் சூரியனும்

    இதில் ஒற்றுப் பிழைகள், ஒருமை / பன்மைப் பிழை, தட்டுப் பிழை (கலைத்து / களைத்து), நிறுத்தற்குறியின்மை ஆகியன இருந்தும் இதன் கவித்துவம், தனித்துவமானது. கற்சிலையான பிறகும் தீராத பேச்சு எது? பேசுவது வாயா, விழியா, விரலா, மனமா, ஆன்மாவா என விரிப்பது ஒரு நிலை என்றால், அந்தப் பேச்சினால் கிளர்ந்தெழும் உணர்வுகள், சுற்றி வரும் சூரியனையும் கடந்த போகும் மேகத்தையும் களைப்படையச் செய்கின்றன எனில் அதன் விரிவும் தீவிரமும் சலியாத அன்பும் அலாதியான இன்பமும் சொல்லில் வடிக்க இயலாதவை. தகுதி மிக்க இந்தக் கவிதைக்காகச் சங்கர் சுப்பிரமணியன் அவர்களை இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறேன்.

    ஏற்க மறுத்தாரோ ஏங்கிட வைத்தாரோ
    தோற்க மனமின்றி தோழமையாய் – வீற்றிருப்பீர்
    கற்சிலையாய் குன்றின்மேல், காலங் கனிந்துவரும்
    வற்றிடா அன்பே மருந்து

    எனக் காதலை ஏற்கும் வரை கற்சிலையாய்க் காத்திருக்கும் இணையரைப் படைத்த சியாமளா ராஜசேகர் அவர்களை இந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறேன்.

    சங்கர் சுப்பிரமணியன், சியாமளா ராஜசேகர் ஆகியோருக்கு எனது பாராட்டுகள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    Share