Tag: நோக்கர்

  • எருமையின் மீது ஆனைச்சாத்தன்

    எருமையின் மீது ஆனைச்சாத்தன்

    நிறைய இரட்டைவால் குருவிகளைப் பார்த்திருக்கிறேன். கால்நடைகள் மீது அமர்ந்து வந்ததைப் பார்த்த நினைவு இல்லை என நண்பர் ஐயப்பன் கிருஷ்ணன், நோக்கர் (Facebook) உரையாடல் ஒன்றில் கூறியிருந்தார். இதோ, எருமையின் மீது இரட்டைவால் குருவி அமர்ந்து வருவதைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Q&A: பெயருக்கு முன்பு அடைமொழிகளை இடுவது எப்படி?

    Q&A: பெயருக்கு முன்பு அடைமொழிகளை இடுவது எப்படி?

    அண்ணாகண்ணன்

    நோக்கர் உறுப்பினர் கதீப் மாமூனா லெப்பை அவர்களின் கேள்விக்கு எனது பதில் இங்கே.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மொழியறிஞர்களின் கவனத்திற்கு

    மொழியறிஞர்களின் கவனத்திற்கு

    அண்ணாகண்ணன்

    முகநூலில் நோக்கர் என்ற மொழி ஆய்வுக் குழுவை நான் நடத்தி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்தக் குழுவில், மொழியைப் பயன்படுத்தும்போது நிகழும் பிழைகளைச் சுட்டிக் காட்டித் திருத்தங்களைப் பரிந்துரைக்கிறோம். சிறப்பான மொழிப் பயன்பாடுகளைப் பாராட்டுகிறோம். அண்மையில் தினகரன் நாளிதழில் வெண்ணை உருண்டை கல் என இருந்த தலைப்பினை வெண்ணெய் உருண்டைக் கல் எனத் திருத்தப் பரிந்துரைத்தேன். அதன் மீது நண்பர்கள் கருத்துரை வழங்கியிருந்தார்கள்.  வெண்ணெய் உருண்டைக் கல் எனப் பிரித்து எழுதக் கூடாது, வெண்ணெயுருண்டைக்கல் எனச் சேர்த்து எழுத வேண்டும் என்று வலியுறுத்திய அன்பர்களுக்கு எனது பதிலை இங்கே தொகுத்து வழங்குகிறேன்:

    நாம் பண்டிதர் கண்ணோட்டத்திலிருந்து, இலக்கணத்தை நிலைநாட்ட நோக்கரை நடத்தவில்லை. அனைவருக்கும் எளிதில் புரியும்படியாக, சரியாக எழுத வேண்டும் என்பதற்காகவே நடத்துகிறோம். அவ்வாறு அது இல்லையெனில், எழுதியவரும் அதை ஏற்றுப் பதிப்பித்தவருமே முதல் பொறுப்பாளிகள். இதை அவர்களின் தோல்வியாகவே நான் மதிப்பிடுவேன்.

    சரியாகப் பொருள் உணர்த்துவதற்காகவே இலக்கணம். அதை இயன்ற வரை எளிமைப்படுத்தியே எடுத்துச் செல்ல வேண்டும். இல்லாவிடில், இலக்கணமே கடினமானது என மக்கள் கருதுவர். அது தமிழுக்கே கேடாக முடியும்.

    யாப்பில் சீர்கள் அமைந்திருப்பதால் எல்லாப் பெரிய சொற்களும் இயல்பாகவே வகையுளிக்கு ஆட்பட்டிருக்கும். எனவே பிரித்துப் பிரித்தே படிப்பார்கள். அது சீரான மூச்சு ஓட்டத்திற்கும் உதவும்.

    உரைநடைக்கு என வரும்போது தேவைக்கு ஏற்ப, பிரித்தே எழுத வேண்டும், படிக்க வேண்டும். சேர்த்துப் படிப்பதற்கு மூச்சை அதிகம் இழுக்க வேண்டும். இது, வாசகரை எளிதில் சோர்வடையச் செய்யும். மொழியை அறிவியல் அடிப்படையில் அணுக வேண்டும். எந்திரத்தனமாக இலக்கணத்தைத் திணிக்கக் கூடாது.

    அடிப்படையில் இலக்கணம், மிகுந்த நெகிழ்வுத்தன்மை உடையது. இலக்கணத்தின் ஒவ்வொரு விதியும் ஒவ்வொரு தேவைக்காகவே உருவாக்கப்பெற்றவை. எல்லா விதிகளும் எல்லா இடங்களுக்கும் பொருந்தா. தமிழில் உரைநடைக்கு எனத் தனித்த விதிகள் உருவாகவில்லை. செய்யுள் இலக்கணத்தை அடியொற்றியே இது தீர்மானிக்கப் பெறுகிறது. காலந்தோறும் எழும் தேவைகளுக்கு ஏற்ப, இதை இற்றைப்படுத்த வேண்டும்.

    புதிய புதிய திசைச்சொற்களை, ஒலிக்குறிப்புகளை, நீண்ட சொற்களை அணுகுவதற்குப் பண்டித நோக்கை விட, பாமர நோக்கு வேண்டும். அவர்கள் கோணத்திலிருந்து, அவர்கள் இடத்திலிருந்து அதைப் பார்க்க வேண்டும், பயன்படுத்த வேண்டும். அவர்கள் அறிந்த இடத்திலிருந்தே, அறிந்த ஒலியிலிருந்தே, புதிய சொற்கள் பிறக்க வேண்டும். இது தொடர் சங்கிலி போன்றது. இந்தத் தொடர்பைத் துண்டித்துப் புதிய இடத்திலிருந்து தொடங்குவோர், தீவாகச் சுருங்கிவிடுவர். மொழியைச் செம்மையுறச் செய்ய விரும்புவோர், மைய நீரோட்டத்திலிருந்து விலகவே கூடாது.

    ஒரு விதியையோ, சொல்லையோ, நெறிமுறையையோ வழங்குவோர், தாம் முதலில் சொல்லிப் பார்த்து, தம் சுற்றத்தில் சிலரிடம் சொல்வதற்குக் கேட்டுக்கொண்டு, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அதன் பிறகே ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும். சந்தையில் ஒரு புதிய பொருளை அறிமுகப்படுத்த, எவ்வளவு மெனக்கெடுவார்களோ, அந்த அளவுக்கும் மேலே இதில் மெனக்கெட வேண்டும்.

    மேலும், ஒரு விதி அல்லது சொல் பரந்தேற்பு பெறும் முன்னர், அது குறித்து வைக்கப்படும் அனைத்துக் கருத்துகளும் பரிந்துரைகளே. அவை தீர்மானங்கள் அல்ல. நான் சொல்கிறேன், நீ பின்பற்று என அதிகாரத்துடன் இதைச் சொல்லக் கூடாது. உனக்கு இதுகூடத் தெரியவில்லையே என்ற ஏளனமும் கூடாது. இவையனைத்தும் மொழிப் பயனாளரை நம்மிடமிருந்து மேலும் மேலும் விலக்கி வைத்துவிடும். இந்தத் தெளிவு இருந்தால், நமது அணுகுமுறையில் பெரிய மாற்றம் உண்டாகும்.

    மொழியில் நமது பரிந்துரையை ஒருவர் கேட்பது, ஒரு மேசையில் பேச்சுவார்த்தைக்குச் சமநிலையில் உள்ள இருவர் கூடுவது போன்றது. அங்கே இருவருக்கும் ஒத்திசைவு பிறக்க வேண்டும். பயனாளரின் அனைத்து வினாக்களுக்கும் விடை கிடைக்க வேண்டும். ஒவ்வொரு சிக்கலையும் நுணுக்கமாகக் கேட்டு, அதைத் தீர்க்க முயல வேண்டும். அதன் பிறகே ஏற்பு என்ற நிலை உருவாகும். இந்தப் பொறுமையும் அணுக்கமும் தாமுறவாக்கலும் இல்லாவிட்டால், மொழி மேலும் மேலும் சிக்கலுக்கு உள்ளாகும். இந்தச் சிக்கலுக்கு மொழியறிஞரின் இயல்பே அடிப்படைக் காரணம். பயனாளரை அதட்டி, மிரட்டி, விரட்டியவர் அவரே.

    மொழிக்கு அதைப் பயன்படுத்துபவரே முதன்மைத் தேவை. மொழியறிஞர் இங்கே உதவியாளர் மட்டுமே. தாமே மொழியை ஆக்கியவர், தாமே சொல்லை ஆக்கியவர், தாமே இலக்கணம் கற்றவர், தாமே பிஸ்தா என்ற எண்ணத்தை மொழியறிஞர் அறவே விட்டொழிக்க வேண்டும். தாயுள்ளம் கொண்ட தொண்டரின் மனநிலைக்கு அவர் வர வேண்டும். அப்போதுதான், அந்தச் செயலில் இருந்தே பிறர் ஊக்கம் பெறுவர். அப்போதுதான் பிறருக்கும் பற்றுதல் பிறக்கும். அலங்கார நடையும் அலட்டலும் புகழ் வேட்கையும் மமதையும் அவருக்கு மட்டுமின்றி, மொழிக்கும் பெரும் பின்னடைவைத் தந்துவிடும். ஏனெனில் அவர் அந்த மொழியின் பிரதிநிதியாகத் தம்மைக் காட்டிக்கொள்வதால், அவரது பெருமையும் சிறுமையும் அந்த மொழியையும் பாதிக்கும்.

    இவற்றைக் கவனத்தில் கொள்வது, மொழியறிஞர்களுக்கு நலம் பயக்கும்.

    Share
  • அஞ்சலி: இராமச்சந்திரன் காளஹஸ்தி

    அஞ்சலி: இராமச்சந்திரன் காளஹஸ்தி

    அண்ணாகண்ணன்

    நோக்கர் என்ற குழுமத்தை 2018 பிப்ரவரி 24 அன்று முகநூலில் (Facebook) தொடங்கினேன். மொழிச் சூழலில் உள்ள பிழைகளைச் சுட்டிக் காட்டித் திருத்துவதும், குறை-நிறைகளை விவாதித்துப் பரிந்துரைகள் வழங்குவதும் இந்தக் குழுமத்தின் முதன்மையான பணிகள். இதில் என்னுடன் இணைந்து பணியாற்றிய இராமச்சந்திரன் காளஹஸ்தி அவர்கள், 27.11.2019 அன்று தமது 57ஆவது வயதில் மறைந்தார். அவருடனான என் அனுபவங்கள் சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்.

    சென்னை, குரோம்பேட்டையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்த நண்பர் இராமச்சந்திரன், இன்னும் சில மாதங்களில் பணி ஓய்வு பெற இருந்தார். அதற்குள் உலகிலிருந்தே ஓய்வு பெற்றது, ஆறாத் துயரளிக்கிறது.

    ஓய்வு பெற்றதும் இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் எனப் பேசிக்கொண்டிருப்பார். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அடிக்கடி சென்று உதவுபவர். பலருக்கும் தேடிச் சென்று உதவியவர். இனிய பண்பாளர். செய்யும் பணியை அக்கறையுடனும் நேசித்தும் செய்தவர்.

    செல்லும் இடங்களில் எல்லாம் எங்கே எந்தப் பலகையில், சுவரில், பதாகையில் பிழை கண்டாலும், உடனே படமெடுத்து, நோக்கரில் பகிர்ந்து வந்தார். அவரது தாய்மொழி தெலுங்கு என்றபோதும், தமிழில் நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றிருந்தார்.

    இராமச்சந்திரன் காளஹஸ்தியிடம் நான் வியந்த இன்னோர் இயல்பு, அவரது அர்ப்பணிப்பு. முகநூலில் ஏழு ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் அவருடன் சற்று நெருங்கிப் பழகினேன்.

    நோக்கரைத் தொடங்கிய பிறகு, எல்லோரையும் அழைப்பது போல் இவரையும் அழைத்தேன். இந்தக் குழுவின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட இவர், தாமாகவே கண்ணில் படும் பிழைகளை எல்லாம் படம் எடுத்துச் சுட்டிக் காட்டினார். நான் பல நேரங்களில் இணையத்தின் வழியாக இ-பேப்பர்களைப் படித்துச் சுட்டிக் காட்டுவேன். இவரோ, தாம் செல்லும் இடங்களில் காணும் பிழைகளை நேரடியாகக் களத்திலிருந்து படம் எடுத்துப் பதிந்தார். நானும் இப்படி எடுத்துப் போடுவது உண்டு என்றாலும், இதில் எல்லோரையும் வென்று இவர் முன்னணியில் நின்றார்.

    இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, ஒரு பிழை தென்பட்டால், வாகனத்தை நிறுத்தி, உரிய கோணம் பார்த்துப் படம் எடுக்க வேண்டும். கடைக்காரர் அல்லது பக்கத்தில் இருப்பவர் எதற்காக எடுக்கிறீர்கள் என்று கேட்பார்கள். அவர்களுக்கும் விளக்கம் சொல்ல வேண்டும். பிறகு உரிய இடத்திற்குச் சென்ற பிறகு, உட்கார்ந்து அதில் உள்ள பிழையைச் சுழிக்க வேண்டும். அதன் பிறகு நோக்கரில் பகிர வேண்டும். இவ்வளவையும் இவர் தானாகவே, யாரும் சொல்லாமலே செய்து வந்தார்.

    அவருடைய பங்களிப்புகளைப் பார்த்த பிறகு, அவரை ஒரு நாள் அழைத்து, நீங்கள் நோக்கரின் நிர்வாகியாக இருந்து செய்யுங்கள் என்றேன். இன்னும், என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள் என்றார். இப்போது செய்வதையே தொடருங்கள் என்றேன்.

    அடுத்து, இதில் உள்ள பெரும்பாலான இடுகைகளுக்கு அவர் விருப்பக் குறி அல்லது இதயக் குறி இடுவார். பதிவுகளுக்கு மட்டுமின்றி, அதில் உள்ள முக்கிய பின்னூட்டங்களுக்கும் இதே போல் சளைக்காமல் விருப்பக் குறி இடுவார்.

    சில நாள்களில் நான் வேலைப் பளு காரணமாக ஏதும் இட முடியாத நிலையில், என்னிடமிருந்து பதிவு ஏதும் வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டு, நான் ஏதும் சொல்லாமலே, தாம் எடுத்து வந்த படங்களைப் பகிர்ந்து, குழுமத்தில் உரையாடலைத் தொடர்ந்து ஊக்குவித்து வந்தார்.

    நோக்கரை இன்ஸ்டாகிராமுக்கு எடுத்துச் செல்ல வேண்டும், யுடியுப் அலைவரிசை தொடங்க வேண்டும், நோக்கர் இணையத்தளத்தை உருவாக்க வேண்டும், சிறந்த விளம்பர வாசகங்களுக்குப் பரிசளிக்க வேண்டும்…. என நான் எதைச் சொன்னாலும் செய்துவிடலாம், நான் ஓய்வு பெற்றதும் எடுத்துச் செய்கிறேன் என்பார். மேலும், எந்தப் புதிய யோசனையை அவரிடம் சொன்னாலும் செய்துவிடலாம் நண்பரே என உற்சாகமாகச் சொல்லுவார். இந்தத் தொண்டுள்ளம் மிக அரியது.

    அவருடைய நண்பர்கள் பலரை எனக்கும் பலருக்கு நோக்கரையும் அறிமுகம் செய்வித்தார். நோக்கரின் தொடக்கக் காலத்தில் அதில் அவரது தொடர்பிலிருந்து 100க்கும் மேலானவர்களை இணைத்தார்.

    பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று நேரடிப் பயிற்சிகள் அளிக்கலாம். போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கலாம் என்றார்.

    ஒரு நல்ல முயற்சிக்குத் தாமாக முன்வந்து தோள்கொடுக்கும் இராமச்சந்திரன் போன்றோர், இன்றைய சுயநலம் மிகுந்த உலகில் மிக அரிதானவர்கள்.

    நோக்கரில் மட்டுமின்றி மத்யமர், சீர், வாசிப்போம் உள்ளிட்ட பல குழுமங்களில் துடிப்பாக இயங்கி வந்தார். அவரது மறைவு, தமிழுக்கும் நண்பர்களுக்கும் பேரிழப்பு. இராமச்சந்திரன், நம் நினைவுகளில் என்றென்றும் வாழ்வார். களப்பணியில் சூரரின் நினைவைப் போற்றுவோம்.

    Share